ஒன்று
முன்பாக ஒரு காலத்தில் சொர்க்கபுரி என்கிற நாடொன்று தென்திசையில் இருந்தது. அந்த நாட்டை விசாகர் என்னும் பெயருடைய அரசன் அரசாண்டு வந்தான். சொர்க்கபுரி நாட்டைச்சுற்றிலுமே மலைகளும் குன்றுகளும் சூழ்ந்திருந்தமையால் வேறு நாட்டவர் அவ்வளவு சீக்கிரமாக படையெடுத்து வந்து போர் தொடுத்து சொர்க்கபுரியை சொந்தமாக்கிக்கொள்ள முடியாது. அப்படி வந்த பல சிற்றரசர்கள் புறமுதுகிட்டு ஓடிய வரலாறுகள் சிலவற்றை சொர்க்கபுரி தன்னகத்தே கொண்டுள்ளது.
சொர்க்கபுரி நாடு அன்று கோலாகலமாயிருந்தது. அரசன் விசாகருக்கு அன்று மணநாள் ஆகையால் நாட்டின் பிரஜைகள் எல்லோருமே அரண்மனையில் கூடியிருந்தார்கள். அரண்மனை வளாகங்களில் மூன்றுவேளையும் உணவு விருந்துகள் தடபுடலாக நடந்தவண்ணமிருந்தது. விசாகர் பக்கத்து நாடான சீத்தலேரி நாட்டின் அரசனான ராஜவர்மனின் மகள் லலிதாதேவியைத்தான் மணம் முடித்தான் அன்று.
நாட்டின் கோலாகலங்கள் ஏதுமறியாத நிலையில் சொர்க்கபுரி மலைப்பிரதேசங்களில் வாழும் மலைவாழ் குடும்பங்களும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்தன. அப்படி மலைப்பிரதேசத்தின் மத்தியப்பகுதியில் கருப்பணன், கருப்பாயி என்கிற தம்பதிகள் இருவர் குடிசையில் வாழ்ந்து வந்தனர்.
அவர்களுக்கு திருமணமாகி கடந்த பத்துவருடகாலமாகவே குழந்தைப்பாக்கியம் இன்றி தவித்து வந்தனர். கருப்பணன் காட்டில் உள்ள பெருமரங்களின் விறகுகளை வெட்டி பெரும் கட்டாகக்கட்டி சொர்க்கபுரி நாட்டின் எல்லைப்பகுதியில் வந்து விற்பனை செய்து செல்வான். அது அவனது அன்றாடப்பிழைப்பு.
அப்படி மலைப்பிரதேசங்களில் இருந்து பலர் விறகுகளை சுமந்துவந்து விற்பனை செய்து விட்டு தேவையான வீட்டு மளிகைச் சாமான்களை வாங்கிச்செல்வது வழக்கமான விசயம் தான். அவர்களுக்கு அரசன் ஒருவன் இந்த நாட்டை ஆண்டுவருகிறான் என்கிற விசயமெல்லாம் பெரிதாக ஒன்றும் தெரியாது.
இப்படியிருக்க அவனது திருமணம் பற்றிய செய்தியை கேட்டறிந்திருந்தாலும் அதற்கெல்லாம் சென்றுவர அவர்களுக்கு நேரமுமில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஒரு ஆண் ஒரு பெண்ணைக் கட்டிக்கொள்கிறான். அவ்வளவுதான்.
அன்றும் கருப்பணன் விறகுச்சுமையை தலையில் தாங்கியபடி நாட்டின் எல்லைப்புறத்திற்கு வந்தபொழுது அங்கே யாருமில்லை. எல்லாவீடுகளும் பூட்டப்பட்டிருக்க, அப்போதுதான் அவனுக்கு ஞாபகத்தில், அரசனின் திருமண நாளல்லவா இன்று! என்று வந்தது. மீண்டும் தலைச்சுமையோடு திரும்பிப்போகும் எண்ணமில்லாமல் மறுநாள் போய்க்கொள்ளலாமென அங்கேயே ஒருவீட்டின் திண்ணையில் சாய்ந்துவிட்டான்.
இப்படியிருக்க குடிசையில் இருந்த கருப்பாயி காலாற நடந்துபோய் பெரிய ஆலமரத்தின் அடியிலமர்ந்து பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். அவளுக்கு ஒரு ஆண்பிள்ளையும், பெண்பிள்ளையும் இருந்திருந்தால் இந்த நேரம் அவர்கள் ஓடியாடி மகிழ்வாய் சுற்றுவார்களே! என்ற சிந்தனை தான். இரவுக்காலக்கனவுகளில் அவள் பிள்ளைகள் என்ன மிரட்டினாலும் கேட்காமல் உயர்ந்த மரங்களில் ஏறுவதும், அந்த மரத்தின் கிளை வாதுகளிலேயே தொங்கியபடி வந்திறங்குவதுமாக இருந்தார்கள்.
கால்தவறி பெரியபிள்ளை மரத்திலிருந்து விழுந்தாலும் இவள் தான் பதறிக்கையோடு தூக்கிவிட ஓடிப்போய்ப்பார்த்தால் பெரியபிள்ளை வெறுமனே எழுந்து உடையிலிருந்த மண்ணைத் தட்டி விட்டுவிட்டு மீண்டும் ஓடிப்போய் அதே மரத்தில் ஏறுகிறானே!
பெரிய ஆலமரத்தின் கிளையில் சுகமான தூக்கத்திலிருந்த மகிழ்ச்சி பூதமானது அழுகைச் சபதம் கேட்டு திடீரென கண்விழித்துப்பார்த்தது. தன் முகத்தை கீழே திருப்பி அழுவது யாரென பார்த்தது. கருப்பாயியை இதற்கும் முன்பாக பல இடங்களில் மகிழ்ச்சி பூதம் பார்த்திருக்கிறது தான். அவளை எப்போதுமது பார்க்கும் போதெல்லாம் அவள் அழுது வடிந்த முகத்துடனேயேதான் இருப்பாள். அதனாலேயே மகிழ்ச்சி பூதம் அவளைக்கண்டாலும் ஒதுங்கிப்போய்விடுவதை வழக்கமாக வைத்திருந்தது.
இப்போது சோர்வாய் இருக்கவே அங்கிருந்து கிளம்பிச் செல்லாமல் அவள் என்னதான் சொல்லி புலம்பி அழுகிறாள்? என்று கேட்டது. அதைக் கேட்கக்கேட்க கருப்பாயிக்கி குழந்தை இல்லாக்குறை ஒன்றுதான் போலுள்ளதென தெரிந்து கொண்டது மகிழ்ச்சி பூதம். ஒருவாறு தன் உடலை வளைத்து நெளித்து சோம்பல் முறித்துக்கொண்ட மகிழ்ச்சி பூதமானது மரத்திலிருந்து பூவைப்போல கீழிறங்கி வந்து அவள் முன்பாக நின்றது.
தனக்கும் முன்னால் சிவந்த நிறத்தில் அழகான உடையணிந்து ஒயிலாய் நிற்கும் பூதத்தைக்கண்ட கருப்பாயி மிரண்டுபோய் அழுகையை நிப்பாட்டினாள். ’இன்று பூதம் என்னை எடுத்து லபக்கென விழுங்கிவிடும்! இன்றோடு என் வாழ்வு முடிந்தது!’ என்று மனதில் நினைத்தவள், அடுத்து என்ன நடக்குமோ என்று பயந்தாள். மகிழ்ச்சிபூதம் தன் மடியில் செறுகி வைத்திருந்த பட்டுத்துணியாலான சுருக்குப்பையை உருவியெடுத்து அதனுள் தன் கைவிரல்களை விட்டு எதையோ தேடியது!
அதன் விரல்கள் சுருக்குப்பையினுள் தேடுகையில் முகமானது பல சேஷ்டைகளை வெளிக்காட்டிற்று. ஒருமுறை குழப்பமாயும், மறுமுறை கோபமாயும் இருந்தது. கோபமாய் இருக்கையில் பூதத்தின் காதிலிருந்து சிவந்த நிறத்தில் புகை சிறிது குபீரென வெளிவந்தது.
பூதம் தன் சுருக்குப்பையில் வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பைத் தேடுகிறதென கருப்பாயி நினைத்தாள். திடீரென பூதம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது ஆலமரத்தடியில். ‘ரண்டக்க, ரண்டக்க, ரண்டக்க! ரண்டக்க!’ என்று பாடியபடியே புயல்மாதிரி சுழன்றது.
அச்சமயத்தில் அங்கே புயல்க்காற்று அடித்தாற்போலத்தான் கருப்பாயிக்கி தோன்றியது. விறகு சுமந்துபோன தன் கணவன் கருப்பணனை ஒருமுறை மனதில் நினைத்துக்கொண்டாள். அவன் திரும்ப வருகையில் குடிசையில் நானிருக்க மாட்டேன். நான் காணாமல் போய்விட்டதாய் காடெங்கிலும் தேடியலையப் போகிறான். எல்லாமும் இந்த பூதத்தால் நடக்கப்போகிறது!
சுழன்று முடித்த பூதம் திருப்தியான முகபாவனையோடு இவள் முன் அமைதியாய் நின்றது. அதன் கையில் இரண்டு வெள்ளரி விதைகள் இருந்தது. அதை தன் வலதுகரத்தின் நடுமையத்தில் வைத்தபடி இவளை எடுத்துக்கொள்ளச் சொல்லி நீட்டியது. என்ன ஏதென்று தெரியாமல் கருப்பாயி எப்படி அந்த விதைகளை எடுத்துக்கொள்வாள்?
ஆகவே, ‘என்ன இது வெள்ளரி விதைகள் போலுள்ளதே பூதமே! இதை எதற்கு என்னிடம் நீட்டுகிறாய்? இது வெள்ளரி விளையும் காலமுமல்லவே!’ என்று வினவினாள். அதைக்கேட்ட மகிழ்ச்சி பூதமானது, ‘ஆமாம்! ஆமாம்.. இது வெள்ளரி விளையும் காலமல்ல தான்!’ என்று சொல்லிவிட்டு சிரிக்கத்துவங்கிற்று.
“நான் வசித்துவரும் இந்த மலைப்பிரதேசத்தில் நான் பார்க்கும் மனிதர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள் பெண்ணே! இந்தப்பிரதேசத்தில் நான் பல்லாயிரம் வருடங்களாக வசித்து வருகிறேன். நான் இதுவரை எந்த மானிடரிடமும் பேசியதுமில்லை. நீ ஒருத்தி தான் நான் பார்க்கையிலெல்லாம் அழுது வீங்கிய முகத்துடன் இருந்தாய். மானிடர்கள் எல்லோருக்கும் கவலைகள் என்று பல இருக்கிறது. அதைப்பற்றிய கவலையெல்லாம் பூதங்களாகிய எங்களுக்கு இல்லை. சற்று முன்பாக நான் இந்த ஆலமரத்தில் சயனத்தில் இருந்தேன். உன் புலம்பல்களை முழுதாகக் கேட்டேன். உனக்கு பிள்ளைகள் தானே வேண்டும்?” என்று மகிழ்ச்சி பூதம் கேட்க, ‘ஆமாம்’ என்று கருப்பாயி தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.
“அப்படியானால் இந்த இருவிதைகளையும் நீ எடுத்துக்கொள். இவற்றை நீ பத்திரமாக உன் குடிசைக்கு கொண்டு சென்று கிழக்கு முகமாக நின்று இரண்டு விதைகளையும் விழுங்கிவிட்டு ஒரு சொப்பு தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு படுத்துக்கொள். விடிகாலையில் உனக்கு இருபிள்ளைகள் பிறந்திருப்பர். ஒரு பிள்ளையை நீ நாளை இதே ஆலமரத்திற்கு கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிட வேண்டும். அதிலும் தலைப்பிள்ளை தான் எனக்கு வேண்டும். இதற்குச் சம்மதித்தால் நீ சந்தோசமாக விதைகளை எடுத்துப்போ!” என்று மகிழ்ச்சி பூதம் சொல்லிற்று.
கருப்பாயி அதற்குச் சம்மதம் தெரிவித்து இரண்டு விதைகளையும் பூதத்தின் கைகளிலிருந்து எடுத்துக் கொண்டு தன் குடிசைக்குத் திரும்பினாள். மகிழ்ச்சி பூதம் சொன்னது போன்றே கிழக்கு முகமாக நின்று இருவிதைகளையும் விழுங்கியவள் ஒரு சொப்புத் தண்ணீரை குடித்துவிட்டு படுத்துக்கொண்டாள். படுத்த அடுத்த நொடியிலேயே அவளுக்கு எந்தவித சிந்தனைகளும் வராமல் தூங்க ஆரம்பித்துவிட்டாள்.
அடுத்த நாள் விடிகாலையில் எழுந்தவள் தான் எங்கிருக்கிறோம் என்பதையே மறந்தவளாக சிறிது நேரம் யோசித்தவாறே படுக்கையில் கிடந்தாள். அப்போது குழந்தை அழும் குரல் கேட்கவே அவளுக்கு முந்தின தினம் நடந்தவைகள் யாவும் நினைவுக்கு வந்துவிட்டது.
அவள் தன்னருகில் இரு ஆண்குழந்தைகள் கால்களை உதறிக்கொண்டு படுத்திருப்பதைக்கண்டு மகிழ்ச்சியாக எழுந்து அவைகளுக்கு பாலூட்ட ஆரம்பித்தாள். பின்பாக குடிசையின் நடுவாந்திரத்தில் ஒரு தொட்டில் கட்டி இரண்டாவது குழந்தையை அதனுள் படுக்க வைத்து தாலாட்டுப்பாடல் பாடினாள்.
அந்தக்குழந்தை சுகமான தூக்கத்தில் ஆழ்ந்து போனதும் முதல்க்குழந்தையை கைகளில் ஏந்திக்கொண்டு ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்தாள். பூதம் அன்று இரவு முழுதுமே ஆலமரத்திலேயேதான் தங்கியிருந்தது. தனது இருப்பிடத்திற்கு அது இரவில் செல்லவேயில்லை.
ஆலமரக்கிளையில் சுகமான நித்திரையில் இருந்த பூதமானது குழந்தையின் அழுகுரல் கேட்டு கண்விழித்தது. கீழே கருப்பாயி கையில் குழந்தையோடு நிற்பதைக்கண்டதும் மகிழ்ச்சியாய் மரத்திலிருந்து பூப்போல இறங்கிற்று.
குழந்தையை தன் கைகளுக்கு வாங்கிய மகிழ்ச்சி பூதமானது குழந்தையின் காதில்,’மகிழன்’ என்று ஒருமுறை கூப்பிட்டது. பின்பாக கருப்பாயியிடம் ‘சின்னவனுக்கு நீ குடிசைக்குச் சென்றதும் நெகிழன் என்று பெயர் வைத்து அழை’ என்று சொன்னது.
“அப்படியே செய்கிறேன் பூதமே! நீ தினமும் இந்த நேரத்திற்கு நான் வருகையில் குழந்தை மகிழனோடு இருப்பாயானால் அவனுக்கு பால் புகட்டிவிட்டுச் செல்ல வந்து போவேன்!” என்றாள். பூதம் அதைக்கேட்டு சிரித்தது. ‘சரி உன் ஆசைப்படியே!’ என்று சொல்லிவிட்டு மகிழனோடு அது அங்கிருந்து பறக்கத்துவங்கிற்று.
கருப்பாயிக்கு துக்கமாயும் இருந்தது. மகிழன் என்று பூதத்தால் பெயர் வைக்கப்பட்ட பெரிய குழந்தையின்மீது அளவு கடந்த பாசமுண்டாயிற்று. இருந்தும் பூதத்தால் தானே தனக்கு நெகிழன் என்ற சின்னவன் கிட்டினான்! என்று ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு அங்கிருந்து குடிசைக்குத் திரும்பினாள்.
திரும்பி வந்தவள் நேராக குடிசையின் படலைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள். தொட்டிலில் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. ‘நெகிழன்’ என்று அவள் கூப்பிட்டாள். தூங்கிக்கொண்டிருந்த குழந்தை கண்விழித்துப்பார்த்தது. குடிசையின் வெளியே ‘கருப்பாயி!’ என்று கணவனின் குரல் கேட்கவே, அப்போது தான் அவளுக்கு தனக்கொரு கணவன் இருக்கும் ஞாபகமே வந்து சேர்ந்தது.
பின்பாக ஒருஇரவு தங்கி மறுநாள் தான் கிளம்பி வந்த காரணம் பற்றி கருப்பணன் கருப்பாயிக்கி சொன்னான். கருப்பாயி பூதத்தின் கதையை அவனுக்குச் சொன்னாள். ஒருவழியாய் அவர்களுக்கு குழந்தை கிட்டிய மகிழ்ச்சியை அன்று முழுநாளும் குடிசையில் கொண்டாடினார்கள்.
அடுத்தநாள் காலை நேரத்தில் கருப்பாயி மகிழனுக்கு பால் ஊட்டுவதற்காக அவசரமாய் ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்தாள். அங்கே பூதம் தன் குழந்தையோடு வந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. சரி பூதம் தூங்கியிருக்கக்கூடுமென நினைத்து ஆலமரத்தடியிலேயே அவள் பூதத்திற்காக காத்திருந்தாள். நேரம் தான் போனதே தவிர பூதம் குழந்தையோடு வந்தபாடில்லை.
ஒருவேளை பூதம் மகிழனை சாப்பிட்டிருக்குமோ?! என்றெல்லாம் நினைத்துக் குழம்பினாள். பூதங்கள் அப்படித்தான் செய்யுமென முன்பாக கேள்விப்பட்டிருந்தாள் கருப்பாயி. அன்று மதியம் வரை காத்திருந்து பார்த்துவிட்டு குடிசைக்கு சோக முகமாய் திரும்பினாள் கருப்பாயி.
கருப்பணன் குழந்தைக்குக் காவலாய் விறகு வெட்டக்கூடச் செல்லாமல் தொட்டிலை ஆட்டிக்கொண்டு குடிசையினுள் அமர்ந்திருந்தான். அவனிடம் பூதமானது மகிழனோடு ஆலமரத்திற்கு வராத தகவலைச் சொன்னாள். ‘எதற்கும் நாளை சென்று பார்!’ என்று கருப்பணன் சொன்னான். ஆனால் ஒருவார காலமாக கருப்பாயி ஆலமரத்திற்குச் சென்று காத்திருந்து பார்த்துவிட்டு குடிசைக்குத் திரும்பினாள். பூதம் அதன்பிறகு எப்போதும் ஆலமரத்தின் பக்கமே வரவில்லை.
******
இரண்டு
மகிழன் மகிழ்ச்சி பூதத்தின் அழகான வீட்டில் வளர ஆரம்பித்திருந்தான். அவனுக்கு தினமும் ஒரு பெண் யானையும், கழுதையும் மகிழ்ச்சி பூதத்தின் வீட்டின் அருகாமையிலிருந்த தோட்டத்திற்கு வந்து பால் புகட்டிச்சென்றன.
மகிழனுக்கு வயது பத்து என்கிறபோதும் அவைகள் பழக்கப்பட்டவைகள் போல தோட்டத்திற்கு வந்து காத்திருந்து நின்று மகிழனுக்கு பால் புகட்டிச் சென்றன. மகிழன் இளவயது பிள்ளைகளுக்குண்டான குணநலன்களை அப்போது பெற்றிருந்தான்.
மகிழ்ச்சி பூதமானது விடிகாலையில் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றதென்றால் அது இருள் கவியும் நேரத்தில் தான் வீடு வந்து சேர்ந்தது. வந்ததுமே களைப்பில் அதன் படுக்கையில் விழுந்து குறட்டை போட ஆரம்பித்துவிடும். மகிழனுக்கு அந்தக்குறட்டைதான் தாலாட்டாய் இருக்கும். மகிழ்ச்சி பூதம் மகிழனை தன் சொந்தப்பிள்ளையாகவே கவனித்து வளர்த்தது.
மகிழனுக்கு பத்து வயதைத் தாண்டிய பிறகுதான் வீட்டினுள்ளிருந்த சமையல் அறைக்கதவையே திறந்தது பூதம். தினமும் மாலையில் இருள்விழும் நேரத்திற்கும் முன்பே வீட்டையடைந்த மகிழ்ச்சி பூதம் மகிழனுக்கும் தனக்கும் கறிவகைகளை சமைத்தது. கூடவே ஆட்டுக்கால் சூப்பும். இதனால் வாலிப வயதை நெருங்கிய மகிழன் திடகாத்திரமானவனாக மாறியிருந்தான்.
வயது இருபத்தியொன்று என்கிறபோது தான் மகிழனை வனமெங்கும் அழைத்துச்சென்ற மகிழ்ச்சி பூதம் கண்ணில் படும் விலங்குகளையெல்லாம் சுட்டிக்காட்டி இது பாம்பு, இது ஓணான், இது குரங்கு, இது மயில் என்று அவனுக்கு பாடம் கற்பித்துத்தர ஆரம்பித்தது. பின்பாக மகிழ்ச்சி பூதம் ஆறுமாதகாலம் வரை மகிழனை விட்டுப் பிரியாமல் கூடவே இருந்தது.
வனத்திலிருந்த எல்லா விலங்குகளின் பெயர்களையும் அறிந்துகொண்ட மகிழனுக்கு அடுத்ததாக அவைகளுடன் பேச்சுவார்த்தை எப்படி நிகழ்த்துவதென கற்றுக்கொடுத்தது மகிழ்ச்சி பூதம். மகிழனுக்கு அது கொஞ்சம் சிரமமாய் இருந்தாலும் நாட்கள் நகர நகர சீக்கிரமாய் புரிந்து கொண்டான்.
இத்தனைகாலம் தனக்கு பால்புகட்டிய யானையிடம் தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் அவன் தெரிவிக்க, யானையானது அவன் தலையில் தன் தும்பிக்கையை வைத்து ஆசீர்வதித்தது. இவன் என்ன பேசுகிறான் என்பதை விலங்குகள் அனைத்துமே புரிந்துகொண்டு அதன்படி நடக்கத்துவங்கின.
இந்த சமயத்தில்தான் மகிழ்ச்சி பூதத்தின் தங்கை இகழ்ச்சி பூதம் தன் அக்காவைத்தேடி அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். அவள் முதலாக அக்கா வீட்டின் தோட்டத்தில் பார்த்தது மகிழனைத்தான். அவனைப்பார்த்ததுமே இகழ்ச்சி பூதத்தின் நாவில் எச்சில் வழிய ஆரம்பித்துவிட்டது.
பெரிய அண்டாவில் சுடுநீரில் இவனை வேகவைத்து சாப்பிட்டால் அவ்வளவு அட்டகாசமாய் இருக்குமென கணக்குப்போட்டது. இகழ்ச்சி பூதம் தன் வாழ்நாளில் இப்படியான மனிதனை ருசிபார்த்ததேயில்லை. அந்த பூத்தத்திற்கு சிக்குபவர்கள் எல்லாருமே நோஞ்சான் மனிதர்கள் தான்.
வீட்டினுள் நுழைந்த இகழ்ச்சி பூதம் சமையலறையில் ஆட்டுக்கால் சூப்பு தயார் செய்து கொண்டிருந்த தன் அக்காளை ஓடிச்சென்று கட்டிக்கொண்டு மகிழ்ச்சியாய் ‘ரண்டக்க, ரண்டக்க, ரண்டக்க!’ என்று சப்தமிட்டு ஆடியது. மகிழ்ச்சி பூதத்திற்கும் வெகு காலம் கழிந்து தன் தங்கையை கண்ட மகிழ்ச்சி தான். அதுவும் அதனுடன் சேர்ந்து, ‘ரண்டக்க.. ரண்டக்க.. ரண்டக்க’ என்று கத்திக்கொண்டு சமையலறையிலேயே ஆட்டமாடியது.
பின்பாக தான் தயார் செய்திருந்த சூப்பை ஒரு பெரிய குண்டானில் ஊற்றி, ‘எப்படி இருக்கிறது என்று பார்த்துச்சொல்!’ என்று நீட்டியது. குண்டானை வாங்கி ஒரு மடக்கு குடித்துப்பார்த்த இகழ்ச்சி பூதம் நாக்கைச் சப்புக்கொட்டியபடி ‘ம்ம்ம்ம்!’ என்று அப்படியே ஐந்தாறு மடக்கில் குண்டானை காலி செய்து கீழே வைத்தது.
“மகிழ்ச்சி அக்காவே!, வெளியே ஒரு மனிதனை இப்போது பார்த்தேன். அவனை இன்றே நாம் சமைத்து உண்ணலாமா?” என்று இகழ்ச்சி பூதம் கேட்டது.
“இல்லையில்லையடி! அவன் என் மகன்” என்று ஆரம்பித்து நடந்த கதையின் சுருக்கத்தை தங்கைக்கு சொல்லி முடித்தது மகிழ்ச்சி பூதம். இதைக்கேட்ட இகழ்ச்சி பூதம் பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டது. ஒன்று சொன்னால் அடுத்த நிமிடமே சரியென்று சொல்லி செயலைச் செய்யும் அக்கா மகிழ்ச்சி பூதம் இப்படி தன் மகன் என்றெல்லாம் சொல்வது அதற்குப்பிடிக்கவில்லை தான்.
எங்கேயேனும் அக்கா மகிழ்ச்சி பூதம் வெளியில் கிளம்பிச் செல்லாமலா இருப்பாள்? அவள் வெளியில் கிளம்பிய மறுநொடியே அந்தப்பயலை கோழி அமுக்காக அமுக்கிக் கொண்டு வந்து அண்டாவில் திணித்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, மூனு கொதி வந்ததும் வெளியில் இழுத்து இலையில் போட்டு அவனை சாப்பிடத்தான் போகிறேன்! என்று மனதில் திட்டம் போட்டுக்கொண்டாள் இகழ்ச்சி பூதம்.
அன்று இரவு வீட்டினுள் அவர்கள் தூங்குகையில் இகழ்ச்சி பூதத்திற்கு மனித வாடையானது பசியை தூண்டிக்கொண்டேயிருந்தது. பசிக்காக மகிழ்ச்சி பூதம் சமையல்கட்டில் சமைத்து வைத்திருந்த கறிவகைகளை எவ்வளவுதான் தின்றாலும் பசியே அடங்க மறுத்தது. இதையறியாத மகிழனும், மகிழ்ச்சி பூதமும் குறட்டை விட்டபடி தூங்கினர்.
விடிந்ததுமே மகிழன் இரண்டு பெரிய மண்குடங்களைத் தூக்கிக்கொண்டு குளத்தில் தண்ணீர் பிடித்துவரக் கிளம்பினான். வீட்டைவிட்டு வெளியில் இறங்கியவன் எப்போதும் செல்லும் ஒற்றையடிப்பாதை வழியே குளத்தை நோக்கி நடையிட்டான். அவனைப் பின்தொடர்ந்து மரக்கிளைகளில் தொங்கியபடி குரங்கொன்று சரசரத்து வந்தது.
இதனால் நின்ற மகிழன் மரத்திலிருந்த குரங்கிடம், ‘நீ ஏன் வெட்டியாய் என் பின்னாலேயே இப்போது வந்துகொண்டிருக்கிறாய்? உனக்கு காலையில் வேறு வேலையெதுவும் இல்லையா? உன் வழியில் நீ போயேன்!’ என்றான். திருப்பி அது சொன்ன பதிலைப் புரிந்துகொண்ட மகிழன் தலையில் அடித்துக்கொண்டான்.
‘காட்டு மஸ்தான் குளத்துக்கு தண்ணீர் பிடிக்க கிளம்பிட்டாரு! துணைக்கி இருக்கிற ஒரேயொரு சிப்பாய் நான் தானே!’ என்று வேடிக்கைப்பேச்சு பேசியது குரங்கு. இதெல்லாம் சொன்னால் கேட்காது என்று உணர்ந்தவன் குடங்களோடு குளக்கரை வந்தடைந்தான்.
அந்தக்குளக்கரையில் ஞானதிருஷ்டியில் பின்னால் நடப்பவைகளைப்பற்றி முன்னால் சொல்லிப்பேசிக்கொள்ளும் இரண்டு தவளைகள் வாழ்ந்து வந்தன.
“வந்துட்டான்யா காட்டு மஸ்தான்” என்றது ஒன்று.
“ஆமா, இவன் நிசமாலுமே காட்டு மஸ்தான் தான். ஆனா இவனைப்பிடிச்சு அண்டாவுல கொதிநீர்ல போட்டு வேக வைச்சுத் திங்க பூதமொன்னு வந்து சேர்ந்துடுச்சே!” என்றது மற்றொன்று.
“அதை விரட்டறதுக்கு வாள் பயிற்சி தெரிஞ்சிருக்கணுமே இவனுக்கு! இவன் தான் போர்வாளை முன்னப்பின்ன பார்த்ததேயில்லையே! எப்படியோ காட்டு மஸ்தான் அந்த பூதத்தை வீட்டிலிருந்து துரத்திவிட வாள் பயிற்சி செஞ்சுதான் ஆகணும்!” என்றது.
குடங்களை குளத்து நீரில் அமிழ்த்தி நீர் நிரம்பியதும் வெளியில் எடுத்த மகிழன் தவளைகள் பேசியதை கேட்டு குழம்பினான். எதற்காக அண்டாவில் போட்டு என்னை சாப்பிடணும் அந்த இகழ்ச்சி பூதம்? மகிழ்ச்சி பூதத்தின் சொந்த தங்கையல்லவா அது.
சாப்பிடத்தான் வீட்டில் அத்தனை கறிவகைகள் இருக்கின்றனவே! எப்படியாயினும் சீக்கிரமாக வாள் பயிற்சி செய்து பழகித்தான் ஆகவேண்டும் நான், என்று நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தவன் இரண்டு குடங்களையும் கொண்டுபோய் சமையல் அறையில் வைத்தான்.
காலை உணவுக்கான காய்கறி வகைகளை மகிழ்ச்சி பூதம் தன் தோட்டத்திலிருந்து பறித்தெடுத்துக்கொண்டு வந்து அதை ஆய்ந்து கொண்டிருந்தது அப்போது. இகழ்ச்சி பூதம் மகிழனையே வைத்தகண் எடுக்காமல் பார்த்தது.
அன்று காலை உணவை முடித்துக்கொண்ட இகழ்ச்சி பூதமானது வனத்தை ஒரு சுற்று சுற்றிப்பார்த்து வருவதாக மகிழ்ச்சி பூதத்திடம் சொல்லிக்கொண்டு சென்றுவிட்டது. எப்போதடா கிளம்பும் இந்த பூதம்? எனக் காத்திருந்த மகிழன் மகிழ்ச்சி பூதத்திடம் சென்று நின்றான்.
“காய்கறிச்செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றும் வேலை உனக்கிருக்கிறதே! போக ஆட்டுப்பட்டியை திறந்துவிடு மகிழா!” என்றது மகிழ்ச்சி பூதம்.
“தாயே! எனக்கு வாள் பயிற்சி கற்றுக்கொள்ளவேண்டும்” என்றான்.
“அது நல்ல விசயம் தான். ஆனால் எனக்கு அது தெரியாதே மகிழா!”
“நீங்கள் இல்லாத சமயத்தில் எதிரிகள் என்று யார் வந்தாலும் நான் எப்படி அவர்களோடு போரிடுவேன்? எனக்கு எந்தப்பயிற்சியையும் நீங்கள் கற்றுத்தரவில்லையே தாயே!”
“நான் அதைப்பற்றி யோசிக்காமலேயே இருந்திருக்கிறேன் பார். என் புத்தியை ஆட்டுக்காலால் தான் அடித்துக்கொள்ள வேண்டும். சரி இப்போதே நாம் வாள்வீச்சுக்குரங்கானிடம் செல்வோம்” என்று உடனடியாக கட்டிலிலிருந்து எழுந்து கொண்டது மகிழ்ச்சி பூதம்.
வாள்வீச்சுக்குரங்கான் வனத்தின் ஆற்றங்கரைக்கு அருகே வாள்வீச்சுக்கென பயிற்சி மையம் வைத்து பலகாலமாக நடத்திவருகிறது. அதனிடம் ஆரம்ப காலங்களில் வாள்வீச்சுப்பயிற்சி கற்றுக்கொண்ட பல குரங்குகள் இன்றும் கற்றுக்கொண்ட வித்தையை மறக்காமல் ஆங்காங்கே வாள்வீச்சுப்போட்டியை வனத்தினுள் நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
பல காலம் முன்பாக சொர்க்கபுரி நாட்டின் பழைய வேந்தர் தன் படை பரிவாரங்களோடு வனம் வழியாக பிரயாணித்த சமயத்தில் விஷக்காய்ச்சல் கண்டு பல வீரர்கள் வனத்தினுள் மாண்டு போயினர். வாள்வீச்சுக்குரங்கான் அவர்களது வாட்களை எடுத்துப்போய் குகையில் பத்திரப்படுத்தி வந்தார்.
வெறுமனே அவைகளை பத்திரப்படுத்தி என்ன பயன்? என்று யோசித்த அவர் சொர்க்கபுரி நாட்டுக்குள் நுழைந்து அரண்மனை சென்று அங்கு போர்வீரர்களின் பயிற்சி முறைமைகளை கற்று வந்து தன் கூட்டத்தாருக்கு பயிற்சியை துவங்கியவர்.
அவர் வழியாக அவரது மகனான வாள்வீச்சுக்குரங்கான் அந்தக்கலையில் வனத்தில் பிரசித்தி பெற்றவனான். கற்ற கலையை மற்றோருக்கு இலவசமாகவே கற்றுக்கொடுப்பதற்காக ஆற்றங்கரையோரத்தில் பயிற்சி மையத்தை துவங்கி இப்போது சிலகாலமாகிற்று. இந்த விசயங்களைத் தெரிந்திருந்த மகிழ்ச்சி பூதமானது மகிழனை அங்கேதான் அழைத்து வந்திருந்தது.
விலங்குகளின் பாஷை புரிந்தவனான மகிழனுக்கு வாள்வீச்சுக்குரங்கானிடமிருந்து வாள்வீச்சைக் கற்றுக்கொள்வதில் சிரமம் எதுவுமிருக்கவில்லை. பதினைந்தே நாட்களில் மகிழனை சிறந்த வாள் வீரனாக மாற்றிக்காட்டி தன் நெஞ்சை பலமுறை கைகளால் தட்டி பெருமையடித்துக்கொண்டது வாள்வீச்சுக்குரங்கான்.
இறுதியாக அவனை மகிழ்ச்சி பூதத்தின் வீட்டுக்கு அனுப்பி வைக்கையில் அவன் நெற்றியில் திருநீரு இட்டு வாழ்த்திய பிறகு, தன் தந்தையார் பயன்படுத்திய வாளையே மகிழனின் கையில் கொடுத்து அனுப்பியது வாள்வீச்சுக்குரங்கான்.
இகழ்ச்சி பூதமானது அக்காவிடமிருந்து இந்தத் தகவலைக் கேட்டதிலிருந்து ஏக கோபத்தில் இருந்தது. அக்காவிடம் எதுவும் சொல்ல முடியாதே! சீக்கிரமாய் மகிழனை சமயம் கிட்டுகையில் வேகவைத்து சாப்பிட்டுவிட்டு இடத்தை காலி செய்யும் நோக்கத்தில் இருந்தது அது.
ஆனால் மகிழன் வீடு வந்து சேர பதினைந்து நாட்களாகிவிட்டது. அவன் வந்ததிலிருந்தே ஒரு வெறியோடு சமயத்திற்காக காத்திருந்தது இகழ்ச்சி பூதம். அது அவனின் இடைக்கச்சையில் எந்த நேரமும் உரையினுள் தொங்கிக்கொண்டிருக்கும் வாளை மறந்துவிட்டது.
அன்று விடிகாலையிலேயே எழுந்த மகிழ்ச்சி பூதம் தன் தங்கையிடம், ’மாலையில் தான் திரும்ப வருவேன்.. அதுவரை மகிழனுக்கு சமையல் வேலை செய்து அவனை பசியாற்றும் கடமை உனக்கிருக்கிறது. உனக்கும் உணவை தயாரித்துக்கொள். அவனுக்கு சமைக்கத்தெரியாது என்பதால் தான் உன்னிடம் சொல்லிப்போகிறேன்.’ என்று புறப்பட்டுப்போயிற்று.
இந்த இனிமையான சேதியை காதில் கேட்ட இகழ்ச்சி பூதம் மகிழ்ச்சியடைந்து அக்காவை வழியனுப்பி வைத்துவிட்டு தோட்டத்தின் பக்கமாகச் சென்றது. மகிழன் ஆட்டுப்பட்டியைத் திறந்து ஆடுகளை வனத்தினுள் விரட்டியபடி இருந்தான். அடுத்ததாக அவன் காய்கறித் தோட்டத்தில் விளைந்திருந்த காய்கறிகளை பறிப்பதற்காக பெரிய கூடை ஒன்றை தூக்கிக்கொண்டு வந்தான்.
அந்த சமயத்தில் தான் பல்லை இளித்துக்கொண்டு இகழ்ச்சி பூதம் அவன் முன்னால் வந்து நின்றது. அதன் வாயிலிருந்து ஜலநீர் ஆறாய் ஒழுகிற்று.
தவளைகள் பேசியதை கேட்டதிலிருந்தே இகழ்ச்சி பூதத்தின் மீது கண்ணாய் இருந்தவன் தானே மகிழன். பூதம் தன் முன்னால் நின்று இளிப்பதைக்கண்டதுமே உஷாரானான். ‘என்ன?’ என்றான்.
“இன்னிக்கி எனக்கு செம விருந்து கிடைக்கப்போகுதுடா பயலே! என் அக்கா கிளம்பிப் போயிட்டா! இதுக்காகத்தான் நான் இத்தனைநாள் இங்கே தவமாய் கிடந்தேன்!” என்றாள் இகழ்ச்சி பூதம்.
மகிழன் தன் கையிலிருந்த கூடையை இகழ்ச்சி பூதத்தின் மண்டையை நோக்கி வீசினான். அது சரியாக அவள் மண்டையில் போய் விழுந்ததுமே, ‘ஆவ்!’ என்று கத்தினாள்.
“பேசிட்டு இருக்கப்பவே கூடையை வீசுறியாடா பயலே, உன்னை என்ன செய்கிறேன் பார் இப்போது..” என்று பல்லைக்கடித்துக்கொண்டு, மாடு முட்ட வருவது போல வந்தாள் தலையைக் குனிந்து கொண்டே. மகிழன் ஒதுங்கிக்கொண்ட சமயம் அவன் கையில் வாள் இருந்தது. கீழே விழப்போன இகழ்ச்சி பூதத்தின் தலைமுடியை கொத்தாகப்பற்றி அதை வாளால் ஒரு வெட்டு வெட்டினான்.
அப்படியே அவன் வெட்டிய அவள் தலைமுடி கையிலிருக்க அதை தூரப்போட்டு விட்டு வாள்வீச்சுக்குரங்கான் சொல்லிக்கொடுத்த முறைப்படி மீண்டும் பாய்ந்து வந்த இகழ்ச்சி பூதத்தின் ஒரு கையை துண்டித்தான். அவனுக்கு இகழ்ச்சி பூதத்தை கொல்லும் எண்ணம் இல்லை.
கை துண்டிக்கப்பட்டாலும் மீண்டும் வெறியோடு இவனைத் தாக்க வந்த இகழ்ச்சி பூதத்தின் ஒரு காலை இம்முறை துண்டித்தான் மகிழன். அது மிரண்டு இவனைப்பார்த்து அழ ஆரம்பித்துவிட்டது. ‘நான் இங்கிருந்து போயிடறேன்.. என் கையையும், காலையும், முடியையும் எடுத்துக்கொண்டு!’ என்று சொல்லி அழவும், ‘போய்ச்சேர்!’ என்று சொன்ன மகிழன் தன் கூடையை எடுத்துக்கொண்டு தோட்டத்தினுள் நுழைந்தான்.
இகழ்ச்சி பூதம் அழுதுகொண்டே தன் கையையும், காலையும், தலைமுடியையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிப்போயிற்று.
மாலையில் வீடு திரும்பிய மகிழ்ச்சி பூதம் தன் தங்கை இகழ்ச்சி பூதத்தை எங்கே என இவனிடம் கேட்டது. நடந்த விசயங்களை இவன் சொல்லவும், ‘ஈனப்புத்திக்காரி அவள்! நல்ல பாடத்தை அவளுக்கு நீ கற்பித்தாய்! நீ வாள் பயிற்சி பழகியது நல்லதாய்ப் போயிற்று!’ என்றது. அன்று இரவு உணவை முடித்துக்கொண்டு வழக்கம்போல அவரவர் படுக்கையில் படுத்துறங்கினர் இருவரும்.
அடுத்த நாள் குளக்கரைக்கு மகிழன் இரண்டு மண்பானைகளோடு வருகையில் மீண்டும் தவளைகள் ஏதாவது பேசுமா? என்று ஆவல் மிகுதியில் காது கொடுத்தான். வழக்கம் போலவே எந்த நேரமும் எதிர்காலத்தில் நடப்பனவற்றையே பேசிக்கொள்ளும் தவளைகள் இரண்டும் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தன. மகிழன் அதைக் கேட்டுக்கொண்டே குளத்தில் குளிப்பதற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தான்.
“இந்தா நிக்கானே காட்டு மஸ்தான். இவனுக்கு இவனோட அம்மா அப்பா யார்னே தெரியாது”
“ஆமா.. இவனுக்கு ஒரு தம்பிகாரன் இருக்கிற விசயம் கூட தெரியாதே! பாவம்”
“அவன் பேருகூட நெகிழன் தானே? ஆமாம் நெகிழன். அவன் ஒரு திருட்டுப்பயல். சின்ன வயதிலிருந்தே திருடிக்கொண்டே திரிகிறான். போன வாரத்தில் கூட சொர்க்கபுரியில் ஒருவீட்டில் நகைகளை களவாடப்போய் கையும் களவுமாய் மாட்டிக்கொண்டான்”
“அப்புறம் என்னவாயிற்று?”
“என்னவாயிற்றா? வெளியே இழுத்து வந்து அவனை மரத்தில் கட்டிப்போட்டு சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள். அப்பன் கருப்பணன் முகத்திற்காக உன்னை அரண்மனை காவலர்களிடம் இழுத்துப்போய் விடாமல் காட்டுக்கே அனுப்பி வைக்கிறோம். இனிமேல் இந்தப்பக்கமாக நீ தட்டுப்படவே கூடாது என்று சொல்லி உதைத்து அனுப்பியிருக்கிறார்கள். அவனாவது திருந்துவதாவது!”
மகிழன் இந்த விசயங்களைக் கேட்டு அப்படியே குளிக்க மறந்து ஆணியடித்தது போல நின்றான்.
“நாம் பேசுவது அவனுக்குப் புரிகிறதோ? அப்படியே நிற்கிறானே?”
“மானிடப்பயல்களுக்கெல்லாம் நாம் பேசுவது எந்தக்காலத்திலும் புரியாது. இவன் தாயிடமிருந்து பூதம் குழந்தையாய் வாங்கிவந்த இடத்திலிருந்த ஆலமரத்தின் கதி தெரியுமா உனக்கு?”
“எனக்குத் தெரியாதே.. ஆலமரம் சாய்ந்துவிட்டதா?”
“இல்லை, ஆலமரம் சாயவெல்லாம் இல்லை. இன்று அந்த மரத்தை வெட்டிப்போக அரண்மனையிலிருந்து பணியாட்கள் வருகிறார்கள். அரண்மனையில் நான்கு தூண்கள், மற்றும் அரசர் படுத்திருக்கும் கட்டில் எல்லாமும் காலாவதியாவிட்டதாம். அதனால் நேற்று அவற்றை புதிதாகச் செய்ய மரங்கள் தேடி அரண்மனையிலிருந்து ஆட்கள் வனத்தில் அலைந்தார்கள். அப்போது அவர்கள் கண்ணில் பட்டது தான் அந்த ஆலமரம்!”
“சரி, ஆலமரம் தானே அது. வெட்டி எடுத்துப்போனால் போகட்டுமே!”
“அங்குதான் விசயமிருக்கிறது. இவனை வளர்த்த பூதத்தின் உயிரானது ஒரு வெள்ளரிக்காயினுள் இருக்கிறது. அந்த வெள்ளரிக்காயை அந்த மரத்தில்தான் பூதம் மறைத்து வைத்திருக்கிறது. மரத்தை வெட்டுகையில் என்ன நடக்கும்? வெள்ளரிக்காய் கீழே விழுந்து நொறுங்கிவிடும். பூதத்தின் உயிர் போய்விடும்”
மகிழனுக்கு பகீரென்றது. ‘தாயே!’ என்று முனகிக்கொண்டே குளத்தினுள் குதித்து நீச்சலிட்டவன் குளியலை அவசரமாய் முடித்துக்கொண்டு இரு பானைகளையும் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு அவசரமாய் நடந்து வந்தான். வந்து பார்க்கையில் மகிழ்ச்சி பூதம் வீட்டில் இல்லை. அது புறப்பட்டுப் போயிருக்கும்.
என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தான் மகிழன். அவனுக்கு பூதம் தினமும் எங்கே பிரயாணம் செய்து போகிறதென தெரியாது. போக வனத்தில் எங்கே ஆலமரம் இருக்கிறது என்றும் தெரியாது. என்ன செய்வான்? யாரிடமேனும் விசாரிக்கத்தான் வேண்டும். தன் சிப்பாய்க்குரங்கு எங்கே? எனத் தேடினான். எல்லாநாளும் இவனைத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் குரங்கு அன்று எந்த மரத்தின் கிளையிலுமில்லை.
குடங்களைக் கொண்டுபோய் சமையல் அறையில் வைத்துவிட்டு வீட்டின் கதவைச் சாத்திவிட்டு வெளியில் இறங்கினான் மகிழன். வனத்தில் நுழைந்தவன் ‘சிப்பாய்க்குரங்கே! நீ எங்கேயிருக்கிறாய்?’ என்று சப்தமிட்டுக்கொண்டே சென்றான்.
செம்பூத்து ஒன்று இவனது தகவலை மரங்களின் வழியாக ‘பூத் பூத் பூத்’தெனக்கத்திச் செலுத்திற்று. தகவலானது குரங்கிற்கு கிடைத்தபோது அது தன் கூட்டத்தாரோடு மாமரத்தில் அமர்ந்து மாங்கனியை சாப்பிட்டபடி இருந்தது. காட்டு மஸ்தான் தன்னைத்தேடும் தகவலை காதில் கேட்டதுமே மாம்பழத்தை வீசியெறிந்துவிட்டு தகவல் வந்த திசையில் மின்னலாய் மரங்களிலேயே பிரயாணப்பட்டது.
இறுதியாய் நடந்து சென்று கொண்டிருந்த மகிழனை அது கண்டுவிட்டது. ‘கீஈஈஈச்ச்ச்ச்’ என்று ஒலியெழுப்பியது அவனைக்கண்டதும் மகிழ்ச்சியில் குரங்கு. மகிழனும் குரங்கைக்கண்ட சந்தோசத்தில் ஒரு குட்டியாக்கரணமடித்தான் நிலத்தில். பி
ன்பாக தவளைகள் பேசிய தகவலை அவன் குரங்கிடம் சொன்னான். ’பெரிய ஆலமரம் இந்த வனத்தில் எங்கே இருக்கிறது? உனக்குத் தெரியுமா? என் தாயை காப்பாற்ற வேண்டுமானால் அந்த வெள்ளரிப்பழத்தை நாம் பத்திரமாக வீடு கொண்டு வந்து சேர்க்க வேண்டும்!’ என்றான்.
குரங்குக்கோ அப்படியொரு மரத்தை முன்பு பார்த்ததாக நினைவில் இல்லை. எல்லாப்பக்கமும் தான் மரங்கள் இருக்கின்றன பெரிது பெரிதாய். அவனை நோக்கி உதடு பிதுக்கி, கையை விரித்துக் காட்டியது குரங்கு. ’இருந்தாலும் நாம் இணைந்து அந்த மரத்தை தேடிப்போகலாம்! நான் உன் சிப்பாய்!’ என்று அவனுக்கும் முன்னால் நடக்கத் துவங்கிற்று. கால்கள் ஓய்ந்துபோகும் தூரம் அவர்கள் இருவரும் வனத்தில் நடந்தனர். அவர்களுக்கு அந்தப்பெரிய ஆலமரம் கண்ணில் படவேயில்லை.
கொஞ்சம் தூரத்தில் ஒரு குடிசையை வனத்தினுள் கண்ட இருவரும் மறைவாய் புதருக்குள் பம்மினார்கள். அங்கு பேச்சுச்சப்தம் கேட்டது. அதைத்தொடர்ந்து கோவணம் கட்டிய ஒருவன் முனகிக்கொண்டே குடிசையின் வாசல்புறத்திற்கு வந்து நின்றான். அவனைத் தொடர்ந்து கையில் பெரிய வடைச்சட்டி போல ஒன்றை தூக்கிக்கொண்டு வயதான தாயொருத்தி வந்து வாசலில் நின்றாள்.
வடைச்சட்டியிலிருந்து பச்சை வர்ணத்தில் கொழகொழப்பாக எடுத்து அந்த வாலிபனின் முதுகில் பூசிவிட்டபடி இருந்தாள் அந்தத் தாய். குரங்கு வாசலில் நின்றிருந்தவனை பார்த்ததும் இவனையும் பார்த்தது. மகிழன் குரங்கிடம், ‘இவன் என் தம்பி நெகிழன்! திருட்டுப்பயலாம். எங்கேயோ நாட்டில் திருடி சவுக்கடி பட்டு வந்திருக்கிறான். அதற்கு மருந்து போடுபவள் அவன் தாய். எனக்கும் தாய் அவள் தான் என்று தவளைகள் குளத்தில் பேசிக்கொண்டன காலையில்.’ என்றான். குரங்கு இவனை கட்டிக்கொண்டது.
“நமக்கு இவர்கள் முக்கியமல்ல குரங்கே! ஆலமரம் தான் முக்கியம்.. சரி நாம் இப்படிச் செல்வோம்” என்று புதரிலிருந்து எழுந்து திசை மாற்றி குடிசைப்பக்கம் போகாமல் நடந்தான் மகிழன். குரங்கும் பின்தொடர்ந்து சென்றது. கொஞ்சம் தூரத்திலேயே மரம் வெட்டும் பல கத்திகளின் சப்தம் இருவருக்கும் ’டொம் டொப்’ எனக்கேட்டது.
நிதானமாக இருவரும் சென்று தூரத்திலிருந்து அந்தக்காட்சியைக் கண்டார்கள். பெரிய ஆலமரம் நிலத்தில் சாய்ந்து கிடந்தது. அதன் கிளைகளை பலபேர் வெட்டி வீழ்த்தி ஓரமாய் இழுத்துப்போய் வீசிக்கொண்டிருந்தார்கள்.
“எப்படியேனும் நீ அங்கே சென்று வெள்ளரிப்பழம் கிட்டுமா என்று பார்த்துவர முடியுமா?” என்று குரங்கிடம் கேட்டான் மகிழன். ’இத்தனைபேர் அங்கிருக்க எப்படி நான் அங்கே சென்றுவர முடியும்? ஏற்கனவே எங்கள் மாமன், மனிதன் ஒருவனின் வலையில் சிக்கி தூக்கிப்போய்விட்டாராம். அவர் சொர்க்கபுரியில் மாமனுக்கு வித்தைகளை கற்றுத்தந்து வீதிகளில் பிச்சையெடுக்க வைத்துவிட்டாராம். மாமன் இன்றும் வீதியில் அந்த மனிதரோடு வாழைப்பழங்களுக்காக வேடிக்கை வித்தை காட்டிக்கொண்டு சுற்றுகிறாராம். நான் சென்றாலும் எனக்கும் அதே கதிதான் நடக்கும். கொஞ்சம் பொறுமை காப்போம்!’ என்று சொல்லிவிட்டு திரும்பி அதே இடத்தில் படுத்துக்கொண்டது குரங்கு.
மகிழனும் முதலாக இப்போதுதான் இத்தனை மனிதர்களை ஒரே இடத்தில் கூட்டமாய் பார்க்கிறான். அவனுக்கு அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் அழகாக இருப்பதாய் தோன்றியது. தனக்கு இடுப்பில் மட்டும் சுற்றியிருக்கும் மாட்டுத்தோலால் ஆன மறைப்பு மட்டும் தான். இவன் ஜடைபோல முடி வைத்திருந்தான். தாடியும் நீளமாய் வைத்திருந்தான். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் தலைமுடி குறைவாக இருந்தது. தாடியுமில்லை. அவர்களைப்பார்த்து தன் தாடியைத் தடவிக்கொண்டான் மகிழன்.
தன் இடையில் தொங்கும் உறையிலிருந்த வாளை எடுத்து தாடியைப்பிடித்து அறுத்து வீசினான். தலைமுடியையும் கொத்தாய்ப்பிடித்து அறுத்து வீசினான். ‘போதும், இதுக்கும் மேல் வெட்டி எறியாதே காட்டு மஸ்தான்! அசிங்கமாய் இருப்பாய்!’ என்று குரங்கு ஜாடையில் சொல்லவும், சரியென வாளை உறையினுள் தள்ளிக்கொண்டான்.
அங்கே மாட்டு வண்டிகள் இரண்டு மூன்று வந்து நின்றன. அவர்கள் ’ஐலேசா! ஐலேசா!’ சப்தம் போட்டுக்கொண்டே மரத்துண்டுகளைத் தூக்கி வண்டியில் ஏற்றினார்கள். கொஞ்சம் நேரத்தில் வண்டிகள் மரத்துண்டுகளை சுமந்துகொண்டு கிளம்பின. தொடர்ந்து மேலும் மாட்டு வண்டிகள் அந்த இடத்திற்கு வந்து மரத்துண்டுகளோடு கிளம்பிப்போயின. அவ்வளவு தான். ஆட்கள் அவர்களுக்குள்ளாக பேசிக்கொண்டு அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானார்கள்.
ஆட்கள் இடத்தை விட்டு அனைவரும் சென்ற பிறகாக இவர்கள் இருவரும் அந்த இடம் நோக்கி ஓட்டமாய் வந்தார்கள். இருவரும் ஆளுக்கொரு பக்கமாய் வெள்ளரிப்பழத்தை தேட ஆரம்பித்தார்கள். குரங்கு தான் அதை முதலில் கண்டு மகிழனை அருகில் அழைத்தது. மகிழன் அதனருகில் சென்று நசுங்கிச்சிதைந்துபோன வெள்ளரிப்பழத்தை நிலத்தில் கண்டான்.
******
மூன்று
மகிழன் மகிழ்ச்சி பூதத்தின் வீட்டில் ஒற்றை ஆளாகிப்போனான். தவளைகள் பேசிக்கொண்டபடியே வெள்ளரிப்பழம் நசுங்கியதால் மகிழ்ச்சி பூதம் இறந்திருக்கத்தான் வேண்டும். அது தன் வீட்டுக்கு இந்த ஒருவார காலமாகவே திரும்பி வரவேயில்லை.
மகிழன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை பச்சையாகவே பசிக்காக சாப்பிட ஆரம்பித்தான். சமயங்களில் குரங்கானது அவனுக்கு வாழைப்பழங்கள், மாம்பழங்கள் என்று கொண்டு வந்து கொடுத்தது.
மகிழ்ச்சி பூதம் இல்லையென்றாலும் தினமும் அவன் செய்யும் பணிகளை செய்துகொண்டுதான் இருந்தான். அவனுக்கு முகம் பார்க்கும் கண்ணாடியொன்றை குரங்கு கொண்டுவந்து கொடுத்தது. அது எங்கிருந்து குரங்குக்கு கிடைத்தது? என்று அறிந்துகொள்ள அவன் ஆசைப்பட்டான்.
அதுவோ, உன் தம்பியின் வீட்டிலிருந்து தூக்கி வந்தது, என்று விளக்கம் சொல்லிற்று. எந்த நேரமும் மகிழன் கையில் கண்ணாடியோடே திரிந்தான். கண்ணாடியில் ஓய்வான சமயங்களில் தன் முகத்தைக்கண்டு ஆச்சரியம் கொண்டான்.
இப்படியிருக்க அரண்மனையிலிருந்து சாமியார் ஒருவரிடம் குறிகேட்க இளவரசி இமயவல்லி பல்லக்கில் வனத்தினுள் வந்துசேர்ந்தாள் ஒருநாள். பல்லக்கை எட்டுப்பேர் தூக்கிவந்தனர். இரண்டு போர்வீரர்கள் பல்லக்கின் முன்பாகவும், இரண்டு பேர் பல்லக்கின் பின்பாகவும் குதிரையில் வந்தவர்கள் வனத்தில் மகிழ்ச்சி பூதத்தின் வீட்டைக்கண்டார்கள். இப்படி அழகான வீடொன்று வனத்தினுள் இருப்பதை அவர்கள் முதலாகக் கண்டார்கள்.
இளவரசி இமயவல்லிக்கு தகவல் சொன்னார்கள். சேடிப்பெண்ணோடு பல்லக்கினுள் அமர்ந்திருந்த இளவரசி பல்லக்கின் திரைச்சீலையை விலக்கி பூதத்தின் வீட்டைக்கண்டாள். ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் காலையில் கிளம்பலாமென யோசித்தவள் பல்லக்குத்தூக்கிகளிடம் பல்லக்கை இறக்குமாறு உத்திரவிட்டாள். பல்லக்கு இறக்கப்பட்டதும் முதலாக சேடிப்பெண் இறங்க பின்னால் இளவரசி இமயவல்லி இறங்கினாள்.
குதிரையிலிருந்த வீரர்கள் இறங்கி வீட்டை நோக்கிச் சென்று பூட்டப்படாத கதவைத்திறந்து ஏதேனும் ஆபத்து அங்குள்ளதா? என சோதித்தனர். அப்படி எந்த ஆபத்தும் இல்லாததால் இளவரசியை வரலாமென சைகை காட்டினார்கள். சேடிப்பெண் முன் செல்ல இமயவல்லி அவள் பின்னால் வீட்டின் அழகைக்கண்களால் ரசித்தபடி வந்தவள் காலில் முள் தைத்துவிட ‘ஆஆவ்!’ என்ற ஒலியோடு அந்த இடத்திலேயே அமர்ந்தாள்.
அது கருவேலம் முள். வலதுகாலின் குதியில் ஆழமாகவே அது தைத்துவிட்டது. வலி பொறுக்க மாட்டாமல் இளவரசி பற்களை கடித்துக்கொண்டாள். அவளது மிதியடிகளை பல்லக்கினுள்ளேயே விட்டுவிட்டு வந்தது அப்போதுதான் அவளுக்கு உறைத்தது. சேடிப்பெண் இளவரசியின் அருகில் அமர்ந்து அவள் காலிலுள்ள முள்ளைப்பிடிங்கிவிட எத்தனித்தாள். ஆனால் வலி பொறுக்கமாட்டாத இளவரசி அவள் கையைத் தட்டிவிட்டாள்.
பின்பாக தானே அதைப்பிடுங்க முயற்சித்தாள். ஆனாலும் கைதான் முள்ளின் மீதிருந்ததேயொழிய அதைப்பிடுங்கிவிட கைக்கு வேகம் வரவில்லை. குதிரைவீரன் இளவரசியின் அருகில் வந்து நின்று அனுமதி கேட்டான். இளவரசி சம்மதம் சொன்னதும் அவன் மகிழ்ந்தான்.
இளவரசியை முகத்தை திருப்பி ஏதேனும் ஒரு பச்சை மரத்தை பார்க்கும்படி சொல்லிவிட்டு அவள் காலிலிருந்த கருவேலம் முள்ளை வெடுக்கென முழுதாகவே இழுத்துவிட்டான். இளவரசியின் குதிங்காலில் இப்போது ரத்தம் கொடேர்ச்சென கொப்பளித்துக்கொண்டு பீறிட்டது.
சேடிப்பெண் தன் சேலையிலிருந்து நீளவாக்கில் துணியைக்கிழித்தாள். கிழித்த துணியைக்கொண்டு இளவரசியின் குதிங்காலில் மூன்று சுற்று சுற்றி கட்டுப்போட்டாள். பின்பாக இளவரசியை தன் தோளில் ஒரு கையைப் போடச்சொல்லி வீட்டை நோக்கி கூட்டிச் சென்றாள். இளவரசி இமயவல்லி தன் நேரத்தை நொந்துகொண்டே நொண்டி விளையாட்டில் கலந்து கொண்டவள் போல நொண்டியடித்துக்கொண்டே வீட்டினுள் சென்றாள்.
வீட்டினுள் தென்பட்ட படுக்கையில் நீட்டி விழுந்தாள் இளவரசி. அவளுக்கு அந்தப்படுக்கையானது அரண்மனையில் இருக்கும் தன் படுக்கையைக்காட்டிலும் சொகுசாக இருப்பதாகப்பட்டது. இந்த வனத்தில் இப்படியொரு கச்சிதமான வீடா? அதனுள் இப்படியொரு படுக்கையறையா? எல்லாமே ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.
வீட்டின் நிலைமையைப் பார்த்தால் இதை யாரோ இப்போதும் உபயோகப்படுத்திக்கொண்டிருப்பது தெரிந்தது. சேடிப்பெண் சமையலறைக்குள் நுழைந்து பார்த்துவிட்டு வந்தவள் இளவரசியிடம், ‘உணவு சமைப்பதற்கான எல்லா பாத்திரங்களும் சுத்தமாக கழுவி கமுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன இளவரசி. இங்கே யாரோ வசிக்கிறார்கள்’ என்றாள்.
வெளியில் வீரர்கள் பல்லக்கை வீட்டின் வாயிலில் வைத்துவிட்டு அமைதியாக வேப்பை மரத்தினடியில் ஓய்வெடுத்தனர். காலையில் இளவரசியை பல்லக்கில் தூக்கிக்கொண்டு கிளம்பியவர்கள் மதிய உணவுமின்றி எங்கும் நிற்காமல் பயணம் செய்து இந்த இடத்திற்கு வந்து சேர மாலையாகிவிட்டது.
சாமியாரிடம் முன்பு அரசருடன் இந்தப்பாதை வழியாக வந்தவர்கள் இருவர் தான். பல்லக்கின் முன்பாக குதிரையில் வந்த வீரர்கள் இருவரும் தான் அவர்கள். முன்னெப்போதோ வந்தமையால் அவர்களுக்கும் பாதை மாறிவிட்டது. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எல்லாமும் தெரிந்தவர்கள் போலத்தான் வந்தார்கள்.
நான்கு குதிரைகளையும் மரங்களில் கட்டியபிறகு வீரர்கள் தோட்டத்தை சுற்றிப்பார்க்க கிளம்பினார்கள். அங்கிருந்த காய்கறிகளைக் கண்டதுமே இரவு உணவின் சுவையின் சுகம் அவர்கள் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது. காய்கறிகளைப்பறித்தவர்கள் அதைக் கொண்டு வந்து சேடிப்பெண்ணிடம் கொடுத்தார்கள். இளவரசி வலியின் வேதனையில் கண்ணயர்ந்தாள். சேடிப்பெண் உணவு தயாரிக்கும் பணியில் இறங்கிவிட்டாள்.
மகிழன் குரங்குடன் இருள் விழும் நேரத்தில் வீட்டை நெருங்கினான். அங்கே சில வீரர்களும் குதிரைகளும் நின்றிருக்கவே இடையில் தொங்கிய வாளைத் தடவிக்கொண்டே வீட்டின் வாயிலுக்கு வந்தான். வீரர்கள் கண் அசந்து அரைத்தூக்கத்தில் இருந்தார்கள்.
இவனும் குரங்கும் வந்ததை அவர்கள் கவனிக்கவேயில்லை. வீட்டின் புகைக்கூண்டின் வழியே புகை குபுகுபுவென செல்வதைக்கண்ட மகிழன் வீட்டினுள் நுழைந்தான். முன்பாக சமையலறை சென்றவன் அங்கே சேடிப்பெண்ணைக்கண்டான். இவனைப்பார்த்ததுமே அவள் ‘வீல்’ என ஒலி எழுப்பி அலறினாள்.
அவள் போட்ட கூச்சலால் குரங்கு மிரண்டுபோய் மகிழனின் தோளின்மீது தொற்றிக்கொண்டு அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டது. ‘அமைதி அமைதி!’ என இரண்டு கைகளையும் சற்று மேல் தூக்கி அழுத்தி அழுத்திக்காட்டினான் மகிழன். அதற்குள் வீரர்கள் நால்வரும் உருவிய வாளுடன் வீட்டினுள் வந்து விட்டார்கள்.
சேடிப்பெண் போட்ட கூச்சலால் இளவரசி இமயவல்லியும் கண்விழித்து என்ன நடந்ததெனப்பார்க்க கட்டிலில் எழுந்தமர்ந்தாள். வீரர்கள் வாளை மகிழனின் கழுத்தை நோக்கி நீட்டிப்பிடித்தபடி நின்றார்கள். சேடிப்பெண்ணே அவர்களிடம் வாளை இறக்கச்சொல்லி சொன்னாள்.
“யார் நீங்க எல்லாரும்? எதற்காக என் வீட்டினுள் நுழைந்தீர்கள்? என்னையே வாள் நீட்டி மிரட்டுகிறீர்கள்?” என்று மகிழன் வீரர்களிடம் கேட்டான். அவனுக்கு பதிலெதையும் வீரர்கள் தராமல் வீட்டின் வெளியில் சென்று வாயிலில் நின்றார்கள். மகிழனுக்கு ஒன்றும் புரியவேயில்லை. சேடிப்பெண் தான் அவனுக்கு தகவல்களைச் சொன்னாள்.
மகிழன் இளவரசி படுத்திருந்த அறைக்குள் குரங்கோடு நுழைந்தான். இளவரசியின் அழகு அவனை ஒருகணம் அசைத்தே விட்டது. இருந்தும் அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன் அவளது குதிங்காலில் இருந்த கட்டைப்பார்த்தான். சேடிப்பெண் முள்ளைப் பிடிங்கிவிட்டதாக தகவல் சொன்னாள். மகிழன் எழுந்து வீட்டிலிருந்து வெளியேறி காட்டினுள் சென்றான். கொஞ்சம் நேரத்தில் மூன்றுவிதமான இலைகளுடன் வீடடைந்தான்.
இளவரசியின் அருகில் அமர்ந்தவன் அவளது காலில் இருந்த துணிக்கட்டை பிரித்தான். சேடிப்பெண்ணிடம் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை வாங்கி இமயவல்லியின் குதிங்காலை சுத்தமாய் கழுவினான். பின்பாக கொண்டு வந்திருந்த இலைகளை உள்ளங்கையிலிட்டு நன்றாய்க் கசக்கி வரும் சாறு முழுமையும் முள் தைத்த தடத்தில் பிழிந்து தேய்த்தான்.
வேறு துணி கிழித்துத்தரும்படி சேடிப்பெண்ணிடம் கேட்க, அவள் மீண்டும் தன் சேலையிலிருந்தே கிழித்துக்கொடுத்தாள். அதை வாங்கியவன் முள் தைத்த இடத்தில் கசங்கிய இலைகளை வைத்து துணி கொண்டு இரண்டு சுற்று சுற்றி இறுக்கிக்கட்டினான். ‘அவ்ளோ தான்!’ என்றான்.
அன்று இரவு இளவரசி மகிழனோடுதான் சேர்ந்து உணவு சாப்பிட்டாள். மகிழனைப்பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டாள். ஆனால் அவனுக்கு எந்த பதிலும் தெரியாது என்பது போல அவள் கேட்டதற்கெல்லாம் மண்டையை ஆட்டினான். நீண்ட நாட்களுக்குப்பிறகு சாப்பிடும் உணவாகையால் மகிழன் ரசித்து ருசித்து சாப்பிட்டான்.
அடுத்த நாள் காலையிலேயே கிளம்பிய இமயவல்லி தன் காலில் எந்த வலியுமின்றி இருப்பதை உணர்ந்தாள். கால்கட்டை அவிழ்த்து முள்தடத்தை தேடினாள். ஆனால் அது அங்கில்லை. அவளுக்கு அதுவும் ஆச்சரியம் தான்.
கிளம்பிய இளவரசி பல்லக்கில் அமரும் முன்பாக மகிழனுக்கு கையசைத்து விடைபெற்றாள். பல்லக்கு கிளம்பிப்போனதும் மகிழன் இளவரசி படுத்திருந்த தன் படுக்கையில் விழுந்து பலவாறு யோசித்துக்கொண்டு கிடந்தான்.
சொர்க்கபுரி நாட்டில் அரசர் விசாகருக்கு தீராத வியாதி என்றும், சீக்கிரமாக அவர் இறந்துவிடுவார் என்றும் தகவல் பரவிக்கொண்டிருந்தது பக்கத்து நாடுகளிலும். சொர்க்கபுரி வாழ் மக்கள் சோக மயமாகவே இருந்தனர். அரண்மனை வைத்தியர் தனக்குத் தெரிந்த அனைத்து வைத்தியங்களையும் அரசர் விசாகருக்கு செய்து பார்த்துவிட்டார். ஆனால் அவர் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உடலானது இளைத்துக்கொண்டே போயிற்று.
இதனால் மந்திரி மாயவர்மன் இப்போதைக்கு அரசரின் பணிகளை எல்லாம் தன் கையில் எடுத்துக்கொண்டான். தகவல் பக்கத்து நாடுகளுக்கெல்லாம் பரவி விட்டமையால் சீக்கிரமாக சொர்க்கபுரிமீது யாரேனும் போர்தொடுத்து விடலாமென்ற அச்சமும் மந்திரி மாயவர்மனிடம் இருந்தது.
ஆகவே தன் படைவீரர்களுடன் ரகசிய ஆலோசனைகள் பல செய்தான். அந்தச்சமயத்தில் தான் இளவரசி இமயவல்லியை சாமியாரிடம் அழைத்துச்சென்ற நான்கு குதிரை வீரர்களும் மந்திரி மாயவர்மனை நேரில் சந்தித்தார்கள்.
அவர்கள் மாயவர்மனிடம், ’மகிழன் என்கிற காட்டுவாசி இலைகளை வைத்து வித்தை மருத்துவம் செய்கிறான். அவனுக்கு நிச்சயமாக அரசரை குணமாக்கும் வைத்தியம் தெரிந்திருக்கும். அவனை அழைத்து வர நீங்கள் அனுமதித்தால் இன்றுபோய் நாளையே அவனை கூட்டி வருகிறோம்!’ என்று சொன்னார்கள்.
எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலையில் தவித்துக்கொண்டிருந்த மாயவர்மன் உடனே அவர்களிடம், ‘அப்படியே செய்யுங்கள்!’ என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான். அவர்களும் மகிழனைத்தேடி வனத்துக்குள் குதிரையில் சென்றார்கள்.
இளவரசி இமயவல்லியோ எந்த நேரமும் தன் தந்தையாரின் அருகிலேயே சோகமயமாக அமர்ந்திருந்தாள். அரசர் விசாகரிடமிருந்து பேச்சொலிகூட இப்போது குறைந்து போயிற்று. இமயவல்லிக்கு ஒரு திருமணத்தை முடித்து அதைக்கண்ணில் பாராமலேயே இவ்வுலக வாழ்வை விட்டு நீங்கி விடுவோமோ? என்ற கவலை அரசருக்கு இருந்தது.
அரண்மனை வைத்தியரை அவர் முழுதாக நம்பினார். அவர் தரும் கசப்பு மருந்துகளையெல்லாம் கண்களை மூடிக்கொண்டு குடித்தார். இருந்தும் தன் உடலில் என்னதான் நடக்கிறதென அவருக்கும் தெரியவில்லை.
மகிழனை குதிரை வீரர்கள் கயிற்றால் கட்டி அவனை நடக்கவைத்து வனத்திலிருந்து சொர்க்கபுரிக்குள் கூட்டி வந்தார்கள். நகர வீதியில் அவன் கைகள் கட்டப்பட்டிருக்க குதிரையின் பின்னே சோர்வாய் நடந்துவந்து கொண்டிருந்தான். அவனுக்கு உயர்ந்து நின்றிருந்த கட்டிடங்கள் பிரமிப்பாய் இருந்தன.
நகரவீதியில் சுற்றும் மனிதர்கள் அணிந்திருந்த உடைகள் கவனத்தை ஈர்த்தன. ஜனங்கள், மிகப்பெரிய கள்வனை கைது செய்து கூட்டிப்போவதாய் பேசிக்கொண்டார்கள். ஒருநாள் முழுதும் அவன் குதிரையின் பின்னால் நடந்தவண்ணமிருக்கிறான்.
முன்பாக இவன் வீட்டிற்கு வந்த வீரர்கள் உடனடியாக சொர்க்கபுரிக்கு இவனை கிளம்பச் சொன்னார்கள். இவன் மறுத்தான். பின்னர் தான், அவனை கைது செய்து அழைத்துப்போவதாய் அவர்களே சொல்லி அவனது இடையிலிருந்த வாளை உறையோடு கழற்றி அவன் வீட்டினுள்ளேயே விட்டெறிந்தார்கள். எதற்காக அவன் கைது செய்யப்படுகிறான் என்று அவனுக்கேகூட இப்போதுவரை தெரியவில்லை.
அரண்மனைக்குள் நுழைந்த வீரர்கள் அவனை நேராக மந்திரியின் அவைக்கு கூட்டிப்போய் நிறுத்தினார்கள். மந்திரி அவனைப்பார்த்ததுமே நெகிழன் என்று நினைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.
“இவனா? இவன் நாட்டின் எல்லைப்பகுதிகளில் திருடித்திரியும் கயவனாயிற்றே? இவனை முன்பு ஒருமுறை நான் எச்சரிகை செய்து அனுப்பினேன். மறுமுறை தவறு செய்வதாய் தெரிந்தால் நிச்சயம் சிறையில் அடைப்பேன் என்று சொல்லியிருந்தேன். இவன் தான் வைத்தியமும் பார்ப்பவனா? இவனை எதற்காக இப்படி கைகளை கட்டிக்கூட்டி வந்தீர்கள்?” என்றார்.
“நான் மகிழன். நீங்கள் சொல்லும் ஆளை எனக்குத் தெரியாது. தவிர உங்களை நான் இப்போது தான் முதன் முதலாகப் பார்க்கிறேன். நான் பிறந்தது வளர்ந்ததெல்லாம் வனத்தில் தான். என் தாயின் பெயர் மகிழ்ச்சி பூதம். அவள் இறந்துவிட்டாள். என்னைக்கூட்டி வந்தவர்களை நான் முன்பொருமுறை இளவரசியாருடன் என் வீட்டில் பார்த்திருக்கிறேன். இவர்கள் என்னை எதற்காக கைது செய்து இங்கே கூட்டி வந்தார்கள் என்று இப்போதுவரை சொல்லவே இல்லை. நீங்கள் யாரென்று கூட எனக்குத் தெரியாது.” என்றான் மகிழன்.
மந்திரி மாயவர்மன் அப்போது தான் அவனை நன்றாக உற்றுப்பார்த்தார். அவன் சொல்வதில் உண்மையிருப்பதை உணர்ந்தார். இவர் பார்த்தவன் இவனைப்போல திடகாத்திரமானவனல்ல. அவன் ஒல்லிப்பிச்சான் உடம்புக்காரன். முகஒற்றுமை மட்டுமே இருக்கிறது. இவன் பார்க்க காட்டுவாசி போலவேதான் இருக்கிறான். படைவீரர்கள் ஏதோ தவறு செய்திருக்கிறார்கள் என்பதை யூகித்தார்.
“நீ எதற்காக இங்கே வரவழைக்கப்பட்டிருக்கிறாய் என்பதை இவர்கள் உன்னிடம் கூறவேயில்லையா?” என்றார்.
“இல்லை!” என்றான் மகிழன்.
“முட்டாள் படைவீரர்கள். சரி என்னோடு வா!” என்றவர் அரசர் சயனித்திருக்கும் அறைக்குச் செல்லத் திரும்பினார். இவனோ அப்படியே நின்றான். தன் கைக்கட்டுக்களை ஒருமுறை பார்த்தான். மந்திரி மாயவர்மன் அதைக்கவனித்து, ‘இன்னும் என்ன பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள் முட்டாள்களே! அவனது கட்டை அவிழ்த்து விடுங்கள்!’ என்றார். படைவீரன் ஒருவன் மகிழனின் கைகட்டை அவிழ்த்தான்.
மந்திரி அரசரைக்காண வருகிறார் என்கிற தகவல் அரசர் அறைக்குச் சென்றதுமே சேடிப்பெண்ணும், இமயவல்லியும் அந்த அறையை விட்டு நீங்கினார்கள் உடனேயே. மந்திரி மாயவர்மன் மகிழனோடு அரசரின் அறைக்குள் நுழைந்தார். அரண்மனை வைத்தியர் பவ்யமாய் அரசரின் படுக்கையையொட்டி தலைமாட்டில் நின்றிருந்தார். மகிழன் படுக்கையில் எலும்பும் தோலுமாய் படுத்திருக்கும் மனிதரைப் பார்த்தான். கிட்டத்தட்ட அவர் சாவை நெருங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான்.
இதேபோல வனத்தில் ஒரு கரடி சாகும் தருவாயில்தான் குகையில் கிடந்தது ஞாபகத்தில் வந்தது. இவனுக்கு பாலூட்டிய யானை தான் அதற்கான வைத்திய இலைகளை இவனுக்கு காட்டித்தந்தது. அந்த இலைகளின் சாறைப்பிழிந்து மூன்றுவேளை கரடியின் வாயில் விட்டான் மகிழன். மூன்றாவது நாளில் கரடி புத்துணர்ச்சியோடு எழுந்து நின்றது. அந்தக்கரடி இன்னமும் இவனுக்கு மலைத்தேனை அவ்வப்போது இவன் வீட்டுக்கு கொண்டுவந்து கொடுத்துப்போகிறது.
“இவர் நம் அரசர் விசாகர். இவருக்கு இப்படியொரு வியாதி வந்து இப்போது இருபது நாட்களாகிவிட்டது. அரண்மனை வைத்தியரும் இவரைக்காப்பாற்ற பல முயற்சிகள் செய்துவிட்டார். ஆனாலும் நிலமை கவலைக்கிடமாவே இருக்கிறது. இவரை உன்னால் காப்பாற்ற முடியும் என்று வீரர்கள் சொன்னார்கள். அதனால் தான் உன்னை அழைத்துவரச் சொல்லி அவர்கள் அனுப்பினேன். உன்னால் இவருக்கு என்னவென்று பார்த்தால் சொல்ல முடிகிறதா? இவரை காப்பாற்ற உன்னால் முடியுமா?” என்றார் மந்திரி.
“இவர் இன்னும் பத்து நாட்கள் தான் உயிருடன் இருப்பார். அதுமட்டும் தான் எனக்குத் தெரியும்!” என்றான் மகிழன்.
“இல்லை, நீ அப்படிச் சொல்லக்கூடாது. வீரர்கள் உன்னை அழைத்துவந்த கோபத்தில் பேசுகிறாய் நீ!”
“எனக்கு யார்மீதும் அக்கறையுமில்லை, யார்மீதும் கோபமுமில்லை. எனக்கு இந்த வனத்திலுள்ள வீடுகள், மனிதர்கள், இந்த பெரிய வீடு, இங்கே படுத்திருக்கும் மனிதரை அரசர் என்று நீங்கள் சொல்வது எல்லாமே முதலாகவும், புதிதாகவும் இருக்கிறது. எனக்குத் தெரிந்ததெல்லாம் காடு. அதுமட்டும் தான் தெரியும்!”
“மந்திரியார் அவர்களே! இவனுக்கு பைத்திய நோய் இருக்கிறது. இவனால் எந்த வைத்தியமும் யாருக்கும் செய்ய முடியாது. முன்பாக நான் பல பைத்திய மனிதர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் இவனைப்போலத்தான் குழப்பமாய் பேசுவார்கள்.” என்றார் அரண்மனை வைத்தியர்.
“உன்னால் இவருக்கு வைத்தியம் செய்ய முடியாவிட்டால் சிறையில் அடைக்கப்படுவாய்! காலம் முழுக்க நீ சிறையில்தான் கிடக்கவேண்டி வரும்!” என்றார் மந்திரி.
“சிறை? அப்படி ஒன்றிருக்கிறதா?”
“பாருங்கள் மந்திரியாரே.. சிறை என்றால் கூட அவனுக்கு என்னவென்று தெரியவில்லை! இவனைப்போய் வைத்தியன் என்று நம்பி அழைத்து வந்திருக்கிறீர்கள். இவனை நாளை நமது மதம்பிடித்த யானையின் காலால் மிதிபட்டு சாகும்படி செய்துவிடுங்கள். அதுதான் இவனுக்கு சரியான முடிவு” என்றார் வைத்தியர்.
அப்பொழுதே மகிழன் அரண்மனைச் சிறையில் தனியறையில் அடைக்கப்பட்டான்.
******
நான்கு
மகிழன் அன்றைய இரவில் சிறையினுள் நிம்மதியாகவே தூங்கினான். விடிகாலையில் அவனைத்தேடி படைக்காவலர் தலைவர் வந்தார். அவருக்கு அவனைப்பார்க்கையில் சங்கடமாகவே இருந்தது. எத்தனையோ தவறுகளையும் தீங்குகளையும் செய்தவர்கள் சொர்க்கபுரி நாட்டில் பலவிதமான தண்டனைக்கு ஆட்பட்டு இறந்திருக்கிறார்கள். சிறைத்தண்டனை என்று சொர்க்கபுரி நாட்டில் யாரையும் அதிக நாட்கள் சிறையில் வைத்திருப்பதில்லை. தவறிழைத்தவர்களுக்கு இறப்பு ஒன்றுதான் முடிவு.
மகிழன் செய்த தவறு என்று படைக்காவலர் தலைவருக்கு ஒன்றையும் சொல்லமுடியவில்லை. இருந்தும் கடைசி முயற்சியாக அவனிடம் பேசிப்பார்ப்பது என்று விடிகாலையிலேயே அவனிருந்த சிறைக்கூடத்திற்கு வந்து சேர்ந்தார். மகிழன் அப்போதுதான் நிம்மதியான உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து அமர்ந்திருந்தான்.
”உனக்கு இன்று யானையின் காலால் சிரச்சேதம் உண்டாகும் என்று தெரியுமில்லையா?”
“ஆமாம், அப்படித்தான் அந்த வெள்ளைமுடிக்காரர் நேற்று சொல்லியிருந்தார்” என்றான் மகிழன்.
“அதுபற்றி உனக்கு பயமேதுமில்லையா? பேசாமல் அரசர் விசாகருக்கு வைத்தியம் பார்ப்பதாக சொல்லிவிட்டு நீ உன் இருப்பிடத்திற்கே சென்றுவிடலாமே?” என்றார் படைக்காவலர் தலைவர்.
“அப்படி என்னால் சொல்ல முடியாது. என்னிடம் வீரர்கள் நடந்துகொண்ட முறை தவறு. என்னை வைத்தியம் செய்யச்சொல்லி கூட்டிவரும் முறையா அது? நீங்களெல்லாம் யார் எனக்கு? உங்களைப்பற்றி என்ன தெரியும் எனக்கு? அதைப்பற்றித் தெரிந்துகொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். எனக்கு இருப்பிடம் காடு. நீங்களாக என்னை இதைச்செய் அதைச்செய் என்கிறீர்கள். நானாக விருப்பப்பட்டு செய்தால்தான் எதுவும்.”
“சரி உன்முடிவுப்படியே நீ நடந்துகொள். எதற்கும் உன்னிடம் பேசிப்பார்க்கலாமே என்று தான் வந்தேன் இங்கு. ஏற்கனவே பலர் அந்த யானையின் கால்களால் இறந்துபோயிருக்கிறார்கள். அது ரொம்பவும் கொடூரமான சாவாக இருக்கும்!” என்று சொன்ன படைக்காவலர் தலைவர் அந்த இடத்திலிருந்து அகன்றார்.
பின்பாக அவனுக்கு காலை உணவு சிறைக்கூடத்திற்கு வந்துசேர்ந்தது. மிக நிம்மதியாக உணவை உண்டு முடித்தான் மகிழன். பிறகாக அவனுக்கான மேலுடையும் கீழுடையும் புதியதாக வந்து சேர்ந்தது.
அதை அவனுக்கு அணிந்துகொள்ளத் தெரியவில்லை என்பதால் கொண்டுவந்த சிறைக்காவலனே அதை அணியும் முறையையும் அவனுக்கு கற்றுக்கொடுத்தான். அணிந்துகொண்ட மகிழன் அந்த உடை தனக்கு இடைஞ்சலாய் இருப்பதாய் உணர்ந்தான்.
முதலாக படைவீரர்களால் கைது செய்யப்பட்டு சொர்க்கபுரிக்குள் நுழைந்தபோது மனிதர்களின் ஆடை அணிகலன்களைப்பார்த்து ஆச்சரியம்தான் அடைந்தான் அவன். தானும் இதுபோல் அணிந்துகொண்டால் எப்படியிருக்கும்? என்றெல்லாம் யோசித்தான்.
இப்போது ஆடையானது அவனைத் தேடிவந்திருக்கிறது. ஆனாலும் அதை அணிந்தபிறகு இடைஞ்சலை உணர்ந்தான். ஆகவே மேலாடையை கழற்றி சிறைக்கூடத்தினுள்ளேயே போட்டுவிட்டு சிறைக்காவலனுடன் வெளிவந்தான்.
அவனது கைகள் இரண்டும் பின்புறமாக கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. சிறைக்கூடத்திற்கும் வெளியே பெரிய விஸ்தாரமான அரங்கொன்று இருந்தது. சொர்க்கபுரி நகரின் ஜனங்கள் காலைநேரத்திலேயே குற்றவாளி பெறும் தண்டனையைக்காண ஆரவாரமாய் பார்வையாளர் அரங்கில் அமர்ந்திருந்தார்கள்.
அரண்மனையில் அரசரின் அறையில் சேடிப்பெண்ணுடன் இருந்த இமயவல்லி அந்த ஆரவாரக் கூச்சலைக்கேட்டாள். இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் என்று அவளுக்குத் தெரியும். இருந்தும் இன்று அதிகாலையிலேயே ஏன் இப்படி ஒரு விசயம் நடக்கிறது? அந்தக்குற்றவாளி அவ்வளவு பெரிய தவறிழைத்தவனா? அரசுப்பணிகளை மந்திரி மாயவர்மன் ஏற்றுக்கொண்ட இந்த நாட்களில் இப்படியான சம்பவம் எதுவும் இதுவரை சொர்க்கபுரியில் நடக்கவில்லை.
சேடிப்பெண்ணை தந்தையின் அருகில் இருக்கச் சொல்லிவிட்டு இளவரசி இமயவல்லி அரண்மனையின் மேல் மாடத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் வழியே ஏற ஆரம்பித்தாள். மேல்மாடம் வந்தவள் அங்கிருந்தே சிறைக்கூடத்தையொட்டியிருந்த மாபெறும் அரங்கைப் பார்வையிட்டாள்.
கைக்கட்டோடு அரங்கின் மையத்தில் தனித்து நிற்கும் மகிழனை முதலாகப் பார்க்கையில் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. ’யாரோ குற்றவாளி போலுள்ளது’ என்று தான் நினைத்துப்பார்த்தவளுக்கு அவனை எங்கோ பார்த்த ஞாபகமும் வந்துவிட்டது. அவன் வனத்தில் இருந்த மகிழன் அல்லவா! ஐய்யய்யோ!
இவன் என்ன தவறு செய்தான் நாட்டுக்குள் வந்து?
மகிழனோ சுற்றிலும் ஆரவாரக்கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் ஜனங்களைப் பார்த்தான். எதற்காக இவர்கள் இப்படி கூச்சலிடுகிறார்கள்? அவன் தன் கைக்கட்டுக்களை அவிழ்ப்பதில் மும்மரமாய் இருந்தான். அவனுக்கும் நேர் எதிர்க்கே தூரத்தில் ஒரு பெரிய மரக்கதவு சாத்தப்பட்ட நிலையிலிருந்தது.
அதனருகே இருபுறமும் இரண்டு வாள் ஏந்தியிருந்த வீரர்கள் நின்றிருந்தார்கள். அரண்மனையின் உப்பரிகையிலிருந்து மந்திரியும், அமைச்சரும், வைத்தியரும் நின்றிருந்தார்கள். மந்திரி மாயவர்மன் கைகளை அசைத்து சைகை செய்தார்.
மகிழன் தன் கைக்கட்டுக்களை அவிழ்த்துவிட்டாலும் வெறுமனே அதை அப்படியே பிடித்துக்கொண்டு அமைதியாய் நின்றிருந்தான். பார்வையாளர்கள் கூட்டத்திலிருந்து, ‘அவனோட கண்கள்ல பயமே இல்லை! இவன் பயங்கரமான கொலைகாரனாய்த்தான் இருப்பான்!’ ’நம் அரசனை கொன்றுவிட சதி செய்தவன் இவன் தான்!’ ‘ஆளைப்பாருங்கள்.. சுவர்களையும், வேலிகளையும் அநாயசமாக எம்பித் தாவிப்போய்விடுவான்’ என்றெல்லாம் பேச்சாய்ப்பேசினார்கள்.
ஒருவனை யாரென்றே அறியாமல் அவனைப்பற்றிய பொய்யான செய்திகளை பேசுவதில் மனிதர்களுக்கு எந்தவித கூச்சமும் இருப்பதில்லை தான்.
முன்பாக பட்டத்து யானையாக இருந்த வயதான யானைதான் வேலன் என்கிற அந்த யானை. அதற்கு மதம் பிடித்துவிட்டதாக மற்றவர்கள் நம்ப வேண்டும் என்றே பல ஏமாற்று வேலைகளை செய்த அது இப்போது தனக்கான கொட்டடியில் நிம்மதியாக கட்டுக்கரும்பை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறது. வேலனுடைய பாகனுக்கு இப்போது வயதாகிவிட்டது என்றாலும் அவன் மட்டுமே யானையின் அருகில் செல்ல முடியும்.
வேறு யாரேனும் புதிய ஆள் தன்னருகில் வந்தால் பயங்கரமாய் பிளிரும். இதனால் மதம்பிடித்த யானை என்று அதை சங்கிலியில் கட்டிப்போட்டுவிட்டார்கள். வேலனுக்கு தன் காலில் இருக்கும் சங்கிலி பற்றியெல்லாம் கவலையில்லை. அது கட்டப்பட்டிருந்தது பெரிய அரசமரத்தின் அடியில்.
மனிதர்கள் மீது அது சில காலமாக வன்மத்தையே வைத்திருந்தது. தனக்கான இடம் இதுவல்ல என்று தெரிந்திருந்தது. அது வனத்தின் மீது ஆசை கொண்டிருந்தது. சுதந்திரத்தை கடைசி காலத்திலேனும் அனுபவிக்கும் நினைப்பை வைத்திருந்தது. மனிதனின் சிரசை மிதிப்பதில் அவ்வளவு வெறி அதற்கிருந்தது.
இன்று மக்களின் ஆரவாரத்தை காதால் கேட்டதிலிருந்து அது தன்னுள் வெறியை தக்கவைத்துக்கொண்டது. மக்கள் கைதட்டிப்பாராட்டுவதில் கிறக்கம் கொண்டிருந்தது வேலன் என்கிற அந்த யானை. தான் மிதிப்பது ஒரு குற்றவாளியின் சிரசை என்றெல்லாம் வேலனுக்குத் தெரியாது. அது அந்த இடத்தில் மாயவர்மனோ, இமயவல்லியோ யார் நின்றாலும் மிதிக்கும்.
வயதான பாகன் நிதானமாய் வந்து யானையின் பின்னங்காலில் இருந்த இரும்புச் சங்கிலியை விடுவித்தான். பின்பாக வயதான பாகன் அரங்கினுள் யானை நுழையும் கதவினை நோக்கி கையில் நீண்ட தடியுடன் சென்றான். அவனைப் பின்தொடர்ந்து வேலனும் சென்றது.
வேலனுக்குத்தெரியும். கதவு நீக்கப்பட்டதும் அதன்வழியே தான் பிளிறிக்கொண்டு மிதிபடப்போகும் இரையை நோக்கி ஓடவேண்டும். இரையானது ஒருசிலமுறை தப்பிக்க அங்கும் இங்கும் ஓடும். அப்போது வேலனுக்கு கோபம் மிகுதியாகும். எப்படியும் இரையை மிதிக்காமல் விடாது வேலன். பின்பாக வெற்றிக்களிப்புடன் அமைதியாக தன் இருப்பிடத்திற்கு திரும்பிவிடும்.
வேலன் அரங்கினுள் செல்வதற்கான கதவை உள்புறத்திலிருந்த இரு வீரர்களும் நீக்கினார்கள். வேலன் அரங்கத்தில் நுழையும் முன்பாகவே பெரிய பிளிறல் ஒன்றைப்போட்டது. பார்வையாளர்கள் மத்தியில் உடனடியாக அமைதி உருவானது. ஒரு சப்தமுமில்லை. ஆக்ரோசமான பிளிறலோடு வேலன் அரங்கினுள் ஓட்டமாய் நுழைந்தது.
அப்போதே அதன் நாசியில் வனத்தின் வாசம் குப்பென அடித்தது. இணைப்பெண்ணின் பால் வாசனை அதன் மூக்கைத்தாக்கிற்று. இருந்தும் அது நடுமையத்தில் நின்று கொண்டிருந்த மகிழனை நோக்கி பிளிறிக்கொண்டே ஓடியது. அவனை நெருங்க நெருங்க சகபெண் யானையொன்றின் வாசனையும், வனத்தின் மரங்கள் மற்றும் இலைகளின் வாசனையும் அதன் நாசியில் குப்பென குவிந்தது. மகிழன் அச்சமேதுமின்றி ஆணியடித்தது போல நின்ற இடத்திலேயே நின்று யானையை எதிர்க்கொண்டான்.
வேலன் மகிழனை நெருங்கிய சமயம் தன் பிளிறலை விட்டுவிட்டது. ஓட்டத்தின் வேகமும் குறைந்துவிட்டது. அவன் அருகில் நிதானமாய்ச் சென்ற வேலன் காட்டின் வாசனையையும், சக பெண்யானையின் வாசனையையும் நுகர்ந்தவாறு அவனைச்சுற்றிலும் நடையிட்டு அவனை தன் சின்ன வாலால் ஒரு தட்டுத்தட்டியது. பின்பாக அவன் எதிர்க்கே ஒரு காலை மடித்து மண்டியிட்டவாறு நின்று தும்பிக்கையை தூக்கிற்று.
உப்பரிகையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மந்திரியும், வைத்தியரும், அமைச்சரும், ‘இதென்ன நிஜமா? அங்கு என்ன நடக்கிறது?’ என்று பார்த்தார்கள். யானை பிளிறிக்கொண்டு அரங்கினுள் நுழைந்த போதே மாடத்தில் நின்றிருந்த இளவரசி இமயவல்லி தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
இப்போது திறந்து பார்க்கையில் யானையின் மீது மகிழன் அமர்ந்து அதன் காதில் எதுவோ குனிந்து அதனிடம் பேசுவது மாதிரி தெரிந்தது. வேலன் மகிழ்ச்சியாய் முழு அரங்கத்தையுமே ஒரு சுற்று சுற்றி வந்தது.
ஜனங்கள் எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். அவர்கள் இந்தமாதிரி இந்த அரங்கில் நடந்து கண்டதேயில்லை. அவனொரு மந்திரக்காரன் என்றார்கள். இளவரசி இமயவல்லி மாடத்திலிருந்து ஓட்டமாய் இறங்கினாள். மகிழனை சுமந்துகொண்டு வேலன் அரங்கினுள் நுழைந்த கதவு வழியாக வெளியேறிற்று.
தனது இருப்பிடமான அரசமரத்தடிக்கு அது சென்று நின்றது. பின்பாக ஒரு காலை மடித்து மண்டியிட மகிழன் கீழே இறங்கினான். யானையின் தும்பிக்கையை கட்டிக்கொண்டான். வேலனின் கண்களில் இருந்து கண்ணீர் வடியத் துவங்கியது.
“நான் காட்டுக்கு வர்றேன்! எனக்கு வயசாயிடுச்சு. எனக்கு இங்கிருக்க பிடிக்கலை!” என்று வேலன் யானை தன் மொழியில் மகிழனிடம் சொல்லிற்று. அதைப்புரிந்துகொண்ட மகிழன் யானையின் தும்பிக்கையைப் பிடித்திருந்த பிடியை இன்னும் இறுக்கினான். ‘கண்டிப்பா உன்னை நான் அங்க கூட்டிட்டு போறேன். அங்க நீ அருவியில குளிக்கலாம். எங்க வேணாலும் சுத்தலாம். எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். உன் சகோதர்களும், சகோதரிகளும் அங்க இருக்காங்க! அவங்களோட நீ சந்தோசமா இருக்கலாம்!’ என்று சொன்னான். வேலன் யானை அதைக்கேட்டு சந்தோசமும் துக்கமுமாய் ஒரு பிளிறலைப்போட்டது.
இளவரசி இமயவல்லி யானைக்கொட்டடிக்குத்தான் நேராக வந்து சேர்ந்திருந்தாள். மகிழன் யானையோடு உரையாடிக்கொண்டிருப்பதை கண்ணால் கண்டவளுக்கு, ‘என்ன மாதிரி மனிதன் இவன்? இதெல்லாம் நிஜமாகவே என் கண் முன்னால் தான் நடக்கிறதா?’ என்றே தோன்றியது.
இருந்தும் இது உண்மைதானே! இமயவல்லி மகிழனின் அருகில் வந்து நின்றாள். கிழவனான யானைப்பாகன் இளவரசிக்கு குனிந்து ஒரு வணக்கம் வைத்துவிட்டு ஒதுங்கி நின்றான்.
“இப்படியொரு தண்டனை பெற நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் இந்த நாட்டினுள் வந்து?’ எடுத்தவுடன் நேராகவே இமயவல்லி மகிழனிடம் கேட்டாள்.
“உங்கள் பெரிய வீட்டினுள் இருக்கும் மனிதர்கள் அதை உன்னிடம் சொல்லவில்லையா? என்னிடம் உன் வீரர்கள் அன்று உன்னை எதோ இளவரசி என்று சொன்னார்களே.. இளவரசிக்கு தெரியாமலா என்னை வனத்திலிருந்து ஒரு வயதான மனிதரை காப்பாற்ற வைத்தியம் செய்யச் சொல்லி சிறைப்பிடித்து, கையைக்கட்டி நடக்கவைத்தும், இழுத்தும் கூட்டி வந்தவர்கள் சொல்லவில்லையா? வெள்ளைமுடி நிரம்பிய மனிதர் ஒருவர் வயதானவரைக்காட்டி இந்த நாட்டின் அரசர் என்றார். அரசர் என்றால் எனக்கென்ன தெரியும்? எதற்காக அவர் அரசர்? என்னை பலவந்தமாக இழுத்து வந்ததோடு பலவந்தமாக வைத்தியம் செய்ய சொல்கிறார். மீறினால் யானையை வைத்து மிதித்துக்கொல்வேன் என்று சிறையில் அடைத்தார்.”
“இதுவெல்லாம் எனக்குத் தெரியாது. படுக்கையில் இருப்பவர் என் தந்தையார். அவருக்கு அரண்மனை வைத்தியர் போதிய சிகிச்சை அளித்தபடிதான் இருக்கிறார். நான் உங்களை அழைத்துவரச் சொல்லவேயில்லை. உங்கள் ஞாபகமும் என்னிடமில்லை. நடந்த விசயங்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்!”
“மன்னிப்புன்னா என்ன? இங்கே எல்லோரும் எனக்குத்தெரியாத பலவற்றைப்பற்றி பேசுகிறார்கள். சிறை, அரசர், மன்னிப்பு.. காட்டில் எவ்வளவோ விலங்கினங்களுடன் நான் பழகுகிறேன். அவைகள் எப்போது கோபப்படும், எப்போது மகிழ்வாய் இருக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அவைகள் இப்படித்தான் தாக்கி தனக்கான உணவை பெற்றுக்கொள்ளும் என்பது தெரியும். இங்கே மனிதர்களை என்னால் உணரவே முடியவில்லை. ஒருமனிதனை யானை மிதித்து கொல்லப்போவதைக்காண ஆயிரக்கணக்கானபேர் மகிழ்ச்சியாய் அமர்ந்திருக்கிறார்கள். இப்படி ஒரு சம்பவத்தை நான் வனத்தில் கண்டதேயில்லை.”
அப்போது அரண்மனை வைத்தியரும், மந்திரி மாயவர்மனும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இளவரசி இமயவல்லியின் அருகில் வந்து நின்றார்கள்.
“என் தந்தையைக் காப்பாற்ற இந்த மனிதரை அழைத்துவரச் சொன்னது நீங்களா?” என்று இமயவல்லி மாயவர்மனிடம் வினவினாள்.
“ஆமாம் இமயவல்லி, ஆனால் அழைத்துவரச் சென்றவர்களிடம் இவன் எப்படி நடந்துகொண்டான் என்றோ, அவர்கள் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்றோ எனக்குத் தெரியவில்லை. அரசரிடம் நான் இவனை அழைத்துச் சென்று நிறுத்தியபோது, இன்னும் பத்து நாட்களில் இறந்து போய்விடும் வயதான மனிதர் இவர், என்று இவன் சொன்னான். அழைத்துவந்த முறை சரியில்லை என்று இவன் பேசியதால் சிறையில் தள்ளவேண்டியதாயிற்று.”
“நீங்கள் ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறீர்கள்? என்னிடம் இதுபற்றி ஒருவார்த்தையேனும் சொன்னீர்களா? இந்த மனிதருக்கு காடு மட்டும் தான் தெரியும். இந்த நாடு அவருக்கானதல்ல. என் தந்தை இந்த நாட்டுக்கு அரசர் என்றால் இந்த மனிதர் வனத்திற்கு அரசர் போலத்தான். ஆனால் அவருக்கு அதுவும்கூட தெரியாது. சரி இப்போது என்ன முடிவு செய்து இங்கே வந்தீர்கள்? மீண்டும் இவரை கைது செய்து சிறையில் தள்ளவா?” என்றாள் இளவரசி இமயவல்லி மந்திரியிடம்.
“இல்லை இமயவல்லி, இவனை இவனிடத்திற்கே நாம் அனுப்பிவிடலாம்!”
“அனுப்பிவிடலாம். என் தந்தையாரை காப்பாற்றப்போவது யார்? வைத்தியராலும் முடியவில்லை. சரி நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள். நான் இவரிடம் பேசி சம்மதம் கேட்கிறேன்!”
“நாங்கள் கேட்டே முடியாது என்று சொல்லிவிட்டானே இமயவல்லி!”
“நீங்கள் உதவியாய் இவரிடம் கேட்கவேயில்லையே.. அதிகாரத்தை காட்டியிருக்கிறீர்கள். நான் பேசிக்கொள்கிறேன் நீங்கள் போங்கள்!” என்று இமயவல்லி சொல்லவும் இருவரும் அங்கிருந்து சென்றார்கள்.
“நீங்கள் என் குதிங்காலில் ஏறிய முள்ளுக்கு வைத்தியம் பார்த்தீர்கள். ஒரே இரவில் முள் குத்திய தடம் கூட எனக்கில்லை. நான் வைத்தியம் பார்த்துக்கொண்டது உங்கள் இடத்தில் உங்கள் இல்லத்தில். என் தந்தையாரை நான் உங்கள் இடத்திற்கே கூட்டிவந்து வைத்தியம் பார்க்கிறேன். ஆனால் அவ்வளவு தூரம் அவரை கூட்டிவருவது அவரது உடல்நிலைக்கு சரிப்படுமா என்று தெரியவில்லை. போக அவருக்கு என்ன வியாதி என்றே கூட அரண்மனை வைத்தியராலும் சொல்ல முடியவில்லை.”
“அவருக்கு என்ன வியாதி என்று என்னாலும் சொல்ல முடியாது. ஆனால் அதற்கு வைத்தியம் இருக்கிறது. நான் இங்கிருந்து என் இருப்பிடம் சென்று மூலிகைத்தலைகள் தேட ஒரு நாளை செலவளித்து மீண்டும் திரும்பி வர நான்கு நாட்கள் எடுத்துக்கொள்ளும். எனக்கு ஒரு குதிரை கொடுத்தாய் என்றால் ஒருநாள் முன்பாக நான் இங்கே திரும்பிவிட முடியும். உன் தந்தையாருக்கு மூன்று நாட்கள் நான் வைத்தியம் செய்ய வேண்டும்.”
“குதிரை தானே.. அதை எடுத்துக்கொள்ளலாம். நானும் உங்களுடன் வர விருப்பப்படுகிறேன்”
“பல்லக்கிலா?”
“குதிரையில் தான். எனக்கு குதிரையேற்றம் தெரியும்”
“நான் என்ன சொல்லப்போகிறேன்? இந்த யானைக்கு வயதாகிவிட்டது. இதற்கு இங்கிருக்க பிடிக்கவில்லை. இது காட்டினுள் வர ஆசைப்படுகிறது.”
“அப்படிச் சொல்லியதா உங்களிடம் அது?”
“அது சொன்னதைத்தான் நான் சொல்கிறேன் உன்னிடம்!”
“அப்படியானால் அதையும் நாம் கூட்டிப்போக வேண்டுமா?”
“ஆமாம்! அது நம் பின்னாலேயே வந்துவிடும்!” என்றபோது யானை தன் தும்பிக்கையை தூக்கி மகிழனின் தோளின்மீது வைத்துக்கொண்டது.
“இப்போது எதற்காக அது உங்களின் தோளில் தன் தும்பிக்கையை வைத்துக்கொண்டது?”
“அதற்கு ஆதரவாய் உன்னிடம் பேசியதற்காக! அது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை எங்கிருந்து படைவீரர்கள் கூட்டி வந்தார்களோ அங்கேயே இப்போது அனுப்பினாலும் போய்விடும்.”
“ஆச்சரியமாக இருக்கிறது எனக்கு! சரி வாருங்கள் நாம் குதிரைக்கொட்டடிக்குச் செல்வோம்” என்று இமயவல்லி முன்செல்ல மகிழனும் பின் தொடர்ந்தான். அவனுக்கும் பின்னால் வேலனும் வந்தது.
குதிரைக்கொட்டடியில் மகிழனுக்கான குதிரையை படைவீரன் ஒருவன் கூட்டிவந்து நிறுத்தினான். இளவரசிக்கான குதிரையை வேறொரு படைவீரன் கூட்டிவந்து நிறுத்தினான். மகிழன் தனக்கான குதிரையின் அருகில் சென்றவன் அதன் காதில் முனுமுனுத்தான். பின்பாக அதன் முதுகிலிருந்த சேணத்தையும், கடிவாளத்தையும் கழற்றி படைவீரனிடமே கொடுத்தான்.
“சேணமில்லாமல், கடிவாளமில்லாமல் எப்படி பிரயாணம் செய்வீர்கள் குதிரைமீது? இப்போதுதான் பிடித்துவந்த பழக்கப்படுத்தப்படாத குதிரை போல நிற்கிறதே?” என்றாள் இமயவல்லி.
“அவைகள் எல்லாமே குதிரைக்கு இடைஞ்சலான விசயங்கள். இப்போது பார்!’ என்ற மகிழன் குதிரைமீது தாவி ஏறி அமர்ந்தான். குதிரையின் பிடறி முடியைப் பற்றிக்கொள்ளவும் குதிரையானது கனைத்துக்கொண்டு கொட்டடியை சுற்றிலும் வேகமாக ஒரு ஓட்டம் ஓடிவந்து நின்றது.
பின்பாக இமயவல்லியும் தன் குதிரையில் ஏறிக்கொள்ள இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். வேலன் யானை அவர்களைப்பின் தொடர்ந்து ஓட்டமாய் மகிச்சியோடு கிளம்பிற்று வனம் நோக்கி!
******
ஐந்து
மகிழனும் இமயவல்லியும் அன்றைய மாலை இருள்விழும் நேரத்தில் வனத்திலுள்ள மகிழனின் இருப்பிடம் வந்து சேர்ந்திருந்தார்கள். பயணக்களைப்பில் இருவருமே இரவு உணவின்றி உறங்கிப்போனார்கள்.
விடிந்ததும் மகிழன் இரண்டு மண்பானைகளை தூக்கிக்கொண்டு வழக்கமாக தண்ணீருக்காகச் செல்லும் குளம் நோக்கி நடந்தான். இரண்டு நாட்களாய் மகிழனைக் காணாது தவித்த குரங்கானது அவனைக்கண்டதுமே மகிழ்ச்சியாய் மரத்திலிருந்து குதித்து இறங்கி அவனோடு குளக்கரைக்கு வந்தது. அன்றும் தவளைகள் பேசிக்கொண்டுதான் குளக்கரையில் அமர்ந்திருந்தன.
“காட்டு மஸ்தான் வந்துட்டான் பார்த்தியா?”என்றது ஒரு தவளை.
“அவன் எதுக்காக வந்திருக்கான்னு தெரியுமா? சொர்க்கபுரி நாட்டு ராஜாவுக்கு உடம்புக்கு முடியலையாம்.”
“அடடா! அவரு பிழைப்பாரா மாட்டாரா?”என்று கேட்டது.
“அவரை பிழைக்க வைக்கிறதுக்குத்தான் நம்ம காட்டு மஸ்தான் மூலிகைத்தலை தேடணும்னு இங்க வந்திருக்காரு!”
“மூலிகைத்தலையெல்லாம் நம்ம காட்டு மஸ்தானுக்கு கிடைக்குமா? இது இலையுதிர் காலமாச்சே! எல்லா இடங்கள்லயும் செடிகள் காய்ஞ்சு போயில்ல கிடக்கும்! சிரமம் தான்!”
“அப்பிடியில்ல! அருவி போற வழி இருக்குதில்லையா இந்த வனத்துல..”
“ஐயோ அது ரொம்ப தூரமாச்சே!”
“அங்க தானே ஈரமிருக்கும். ஈரமிருக்குற பகுதியில தான மூலிகைச் செடிகளும் உசுரை காப்பாத்தி வச்சுக்குட்டு நின்னுட்டு இருக்கும்! அங்க போனா நம்ம காட்டு மஸ்தானுக்கு மூலிகைத் தலைங்கெல்லாம் கிடைச்சிடும். ஆனா நாம பேசுறது தான் மஸ்தானுக்கு தெரியாதே! பாவம்.. காட்டுல அலையோ அலையின்னு அந்த இளவரசியையும் கூடவே கூட்டீட்டு சுத்தப்போறான்!” இப்படியாக தவளைகள் பேசிக்கொள்வதைக் கேட்ட மகிழன் மனதில் சந்தோசமடைந்தான். ஆக மூலிகைச் செடிகளைத் தேடி நம் அலைய வேண்டியதில்லை என்பதே ஒரு திருப்திதானே, என்று நினைத்தான்.
காலை உணவை இமயவல்லியே வீட்டின் சமையலறையில் நின்று சமைத்தாள். அவள் எப்படியெல்லாம் பொருள்களை சேர்த்து உணவை தயார் செய்கிறாள் என்பதை மகிழனும் அருகில் நின்று ஓரளவு கற்றுக்கொண்டான். குரங்கானது பெரிய வெங்காயத்தை தொழிக்கிறேன் என்று அமர்ந்து அதை தோல் தோலாய் பிய்த்து கண்ணீர் வடிய அமர்ந்திருந்தது வீட்டினுள்.
வெங்காயத்தை தொழிக்கையில் ஏன் கண்ணில் தண்ணீராய் கொட்டுகிறதென அதற்குத் தெரியவேயில்லை. ஒருகட்டத்தில் வெறுத்துப்போய் வெங்காயத்தை தூரமாய் வீசியது. மகிழன் அதைக்கண்டு சிரித்தான். குரங்கு அவனுக்கு பலிப்புக்காட்டிவிட்டு வெளியில் ஓடிப்போனது.
குரங்கு திரும்பி வருகையில் கைநிறைய மாம்பழங்களை கொண்டு வந்தது. அப்போது இமயவல்லியும் மகிழனும் தட்டில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது வெளியே கரடியின் சப்தம் கேட்டது. ஒருபெரிய சுரைக்குடுவை நிறைய மலைத்தேனை அது கொண்டு வந்திருந்தது.
நேராக வீட்டினுள் குனிந்தபடி வந்த கரடி இமயவல்லியைப் பார்த்ததும் திரும்பி ஓட முயற்சித்தது. பயப்பட வேண்டாம்! என்று மகிழன் சத்தமிட்டான். கரடி நின்ற இடத்திலேயே சுரைக்குடுவையை வைத்துவிட்டு வெளியேறிப் போய்விட்டது.
”புதுசா வீட்டுக்குள்ள உன்னைப் பார்த்ததும் அதுக்கு பயம் வந்துடுச்சு!”என்றான்.
“கரடி எப்படி உங்களுக்காக குடுவையில் தேன் கொண்டு வந்து கொடுத்துச் செல்கிறது? அதை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறீர்களா?” என்றாள் இமயவல்லி.
“அதை நான் எங்கே பழக்கப்படுத்தினேன்! உன் தந்தையாருக்கு இருக்கும் வியாதியானது இதற்கும் இருந்தது. இதனுடைய குகையில் இது இறக்கும் தருவாயில் இருப்பதாய் இந்தக்குரங்கு எனக்கு தகவல் சொல்லிற்று. பின்பாக இதனை நேரில் சென்று கண்ட நான் எனக்கு பாலூட்டிய யானையிடம் சென்று விசயத்தைச் சொன்னேன். யானை எனக்குக் காட்டிய செடிகளை நான் இந்தக் கரடிக்குப்பிழிந்து மூன்று நாட்கள் காலைநேரத்தில் கொடுத்தேன். கரடி பிழைத்து எழுந்துகொண்டது. அன்றிலிருந்து எப்போதேனும் ஒருமுறை இந்தக்கரடி இங்கே வந்து எனக்கு தேன் கொடுத்துவிட்டுப்போகும்!” என்றான் மகிழன்.
சாப்பிட்ட தட்டுக்களை எடுத்துப்போய் கழுவி வைத்தபின் இருவரும் மூலிகையைத் தேடி பிரயாணம் செய்ய ஆயத்தமாயினர். மகிழன் குதிரைகளுக்கு மாம்பழத்தை புகட்டினான். அவைகள் மாம்பழத்தை சுவைத்துவிட்டு கொட்டையை துப்பியது. பின்பாக இருவரும் குதிரையில் ஏறி அருவி செல்லுமிடம் நோக்கி பிரயாணித்தனர். மகிழனின் கழுத்தைக்கட்டிக்கொண்டு குரங்கு அமர்ந்திருந்தது.
மதியம் போல அவர்கள் அருவிக்கரையை அடைந்தார்கள். குதிரைகளை மேயவிட்டுவிட்டு மகிழன் மூலிகை இலைகள் தேடி கிளம்பினான். இமயவல்லியை அங்கேயே தங்கியிருக்கும்படி சொல்லிச் சென்றான். குரங்கானது அருவிக்கரை வந்தபிறகுதான் அவன் முதுகிலிருந்து இறங்கிற்று. பின்பாக அவனோடே அதுவும் சென்றது.
இமயவல்லி அங்கே யாருமில்லை என்ற நிம்மதியில் ஓடும் நீரில் இறங்கிக் குளித்து முடித்தாள். நனைந்திருந்த தலைமுடியை வெய்யிலில் காயவைத்து முடிச்சிட்டாள். மகிழனும், குரங்கும் திரும்பிவர ஒருமணி நேரத்திற்கும் மேலாயிற்று.
வருகையில் கொடிபோன்ற செடியொன்றை குரங்கானது தன் கழுத்தில் மாலையாய் அணிந்தபடி வந்தது. பார்க்க இமயவல்லிக்கு அது வேடிகையாய் இருந்தது. ஒருகணம் தன் அரண்மனை வாழ்க்கையை விட்டொழித்துவிட்டு வனத்திலேயே இவர்களோடு தங்கிவிடலாமா? என்றே யோசித்தாள். ஆனால் அவளால் முடியாது அது.
அடுத்த நாள் காலையில் சூரியன் கிளம்பிய சமயத்திலேயே அவர்கள் தங்கள் குதிரைகளில் சொர்க்கபுரி நோக்கி பிரயாணம் கிளம்பினார்கள். இருள்சூழும் நேரத்தில் அவர்கள் அரண்மனையை அடைந்தார்கள். மகிழனோடு குரங்கும் சொர்க்கபுரி வந்து சேர்ந்திருந்தது. அன்றைய இரவு குரங்கும் மகிழனும் அரசரின் அறையிலேயே தங்கினார்கள்.
விடிகாலையில் அவன் கொடுத்த இலைகளை சேடிப்பெண்ணொருத்தி அம்மியில் அரைத்து ஒரு டம்ளரில் நீர் கலந்து கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். மகிழன் அரசரை தூக்கி அமரவைத்து அவரது வாயில் மூலிகைத்தண்ணீரை புகட்டினான்.
அரண்மனை வைத்தியர் மகிழன் கொண்டுவந்திருந்த இலைகளை எடுத்து சோதித்தார். அவருக்கு அவைகள் என்ன என்றும், அவைகளின் பெயரும் கூடத் தெரியவில்லை. அவர் அந்த இலைகளையும் கொடியையும் அப்போதுதான் முதலாகப் பார்க்கிறார். மகிழனிடம் அவைகளின் பெயரென்ன? என்று விசாரித்தார்.
அவனும் தனக்கு அது தெரியாது! என்றே அவரிடம் சொன்னான். மூலிகைத்தண்ணீர் குடித்த இரண்டாம் நாளே அரசரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்ததை இமயவல்லி கண்டாள். தந்தையார் நிச்சயம் பிழைத்துக்கொள்வார் என நம்பினாள்.
அப்படித்தான் ஆயிற்று. நான்காம் நாள் அரசர் விசாகர் தனக்கிருந்த நோயை மறந்தவர் போல குளித்து முடித்து பட்டாடை அணிந்து தன் அறையில் நின்றிருந்தார். தன் உயிரைக்காப்பாற்றிய மகிழனைப்பார்த்து அடிக்கடி அவர் கைகூப்பி வணங்கினார்.
இதைக்கவனித்த இமயவல்லி தந்தையிடம் அவனைப்பற்றிய தகவல்களை சுருக்கமாய் சொன்னாள். ’வணக்கம் நீங்கள் வைத்தாலும் அவருக்கு திருப்பி வணக்கம் வைக்கத் தெரியாது!’ என்றாள்.
அரசர் பிழைத்துக்கொண்ட செய்தி நாடு முழுவதும் பரவிற்று. அரசரைக்காண அரண்மனை முன்பாக மக்கள் குவிந்தார்கள். அரண்மனை உப்பரிகையில் நின்று அரசர் அனைவருக்கும் மகிழ்ச்சியாய் கையசைத்து வணங்கினார்.
பின்பாக மகிழன் அங்கிருந்து கிளம்புவதாய் அரசரிடமும் இமயவல்லியிடமும் தெரிவித்தான். அரசர் விசாகர் இங்கேயே அரண்மனையில் தங்கிக்கொள்ளுமாறு அவனோடு மன்றாடினார். இமயவல்லியே அவருக்கு மீண்டும் விளக்கம் சொல்லவேண்டியாயிற்று. இமயவல்லிக்கும் மகிழனை அரண்மனையில் தங்கிக்கொள்ளச் சொல்ல விருப்பம் தான் என்றாலும் அது அவனால் முடியாது என்பதையும் உணர்ந்திருந்தாள்.
இறுதியாக மறுநாள் காலையில் அவன் புறப்பட்டான். குரங்கு அவன் தோளில் ஏறி அமர்ந்துகொண்டது. குரங்கு இப்போது புத்தாடை ஒன்றை அணிந்திருந்தது. அது மஞ்சள் வர்ணத்தில் ஜொலித்தது. குரங்கு அதை அடிக்கடி தடவித்தடவிப் பார்த்து மகிழ்ந்தது.
மகிழன் தான் பிரயாணித்து வந்த குதிரையை வனம் சேரும் வரை பயன்படுத்திவிட்டு திருப்பி அனுப்பிவிடுவதாக இமயவல்லியிடம் கூறினான். அரசர் மகிழனுக்கு பொன்னும் பொருளும் நிரம்பிய மூட்டையொன்றை பரிசாய்க் கொடுத்தார். அவனோ திருதிருவென விழித்தான். இமயவல்லிக்கு அவன் விழித்துப்பார்ப்பது வேடிக்கையாய் இருந்தது.
“அரசர் உங்களுக்கு மகிழ்ச்சியாய் தரும் பரிசுகள் இவை. உங்களுக்கு இவைகள் பயன்படாது என்று தெரியும். இருந்தும் இதை மறுக்காமல் நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்” என்றாள்.
அதனால் அவன் அரசரிடமிருந்து மூட்டையை வாங்கி குதிரையின் முதுகில் வைத்தான். பின்பாக விடைபெற்று அங்கிருந்து கிளம்பினான் மகிழன். அவன் நகர வீதியில் குதிரையில் செல்லுகையில் சாலையின் இருமருங்கிலும் நின்றிருந்த ஜனங்கள் அவனைக்கையெடுத்து கும்பிட்டு வழியனுப்பினார்கள்.
பிரதான சாலைகளைக்கடந்து எல்லையை நோக்கி குதிரை விரைகையில் குரங்கானது மகிழனின் தலையில் சின்னதாய் கொட்டிற்று. குதிரையை மட்டுப்படுத்தியவன், ’என்ன?’ என்று குரங்கிடம் கேட்டான். குதிரையைத் திருப்பி தாண்டி வந்த பக்கத்து சந்துப்பாதை நோக்கி குதிரையை செலுத்துமாறு குரங்கு ஜாடை சொல்லிற்று.
‘எதனால்?’ என்று புரியாமல் குரங்கு சொன்னது போன்றே குதிரையைத் திருப்பியவன் தாண்டி வந்திருந்த ஒரு சந்துப்பாதையில் குதிரையை செலுத்தினான். தூரத்தே வித்தைக்கார பெரியவர் ஒருவர் கையில் சட்டையணிந்த குரங்கொன்றை கயிற்றால் கட்டி அந்தக்கயிற்றைப் பிடித்தபடி சென்றுகொண்டிருந்தார்.
“உன் மாமனா அது? அதானே பார்த்தேன்!” என்ற மகிழன் அந்தப்பெரியவரைத் தாண்டிப்போய் குதிரையை நிறுத்தினான். மகிழனின் தோளில் இருந்து குதித்த குரங்கு, மாமா குரங்கை ஓடிப்போய் கட்டிக்கொண்டது. மாமா குரங்கும் இதனைக்கட்டிக்கொண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டது.
மகிழன் அந்தப்பெரியவருக்கு மூட்டையிலிருந்து சில பொற்காசுகளை அள்ளிக்கொடுத்தான். பெரியவர் கும்பிடு போட்டு வாங்கிக்கொண்டார். அங்கிருந்து கிளம்புகையில் இவன் தோளில் இருபுறமும் குரங்குகள் இரண்டு அமர்ந்திருந்தன.
மகிழன் நேராக வனத்தினுள் அரசவை பணியாட்கள் வெட்டிவீழ்த்திய ஆலமரத்தை நோக்கிச் செலுத்தினான். அந்த இடம் வந்ததுமே அவனது தம்பியையும் அம்மாவையும் கண்ட குடிசை இருந்த திக்கை நோக்கி குதிரையைச் செலுத்தினான் மகிழன்.
கொஞ்சம் தூரத்திலேயே குடிசை கண்ணுக்குப்பட அதன் வாசலில் போய் குதிரையை நிப்பாட்டி இறங்கினான். குடிசையின் கதவு அரைகுறையாய் சாத்தப்பட்டிருந்தது. உள்ளே பேச்சுக்குரல்கள் கேட்டது.
“டேய்! இனிமேல் நீ நகரத்துப்பக்கமே போகாதேடா! உன்னைப்பார்த்ததுமே அவர்கள் திருடத்தான் நீ வந்திருப்பதாய் நினைத்து உன்னை அடிக்கப்பார்ப்பார்கள்!”
“இல்லையம்மா! நான் இனி திருடப்போவதில்லை. என் தந்தையைப்போல விறகு வெட்டிக்கொண்டு போய் விற்பனை செய்யவும் என்னால் முடியாது. நகரத்தில் ஏதேனும் ஒரு தொழில் செய்து எளிதாகப் பிழைக்கலாம். வாள்கள், கேடயங்கள் செய்யும் பட்டறை போடலாம். சொந்தமாக தொழில் செய்யவோ நம்மிடம் எந்த வசதியுமில்லை. நான் என்ன தான் செய்வது? இங்கேயே இரு என்கிறாய்! அது முடியுமா அம்மா? கடைசிக்கு மந்திரியாரைச் சந்தித்து நம் நாட்டின் படைப்பிரிவிலேனும் நான் இணைந்துகொள்ளத்தான் போகிறேனம்மா!” என்று நெகிழன் பேசிக்கொண்டிருந்ததை மகிழன் வாசலில் நின்று கேட்டவண்னமிருந்தான்.
பின்பாக அரசர் கொடுத்த பரிசுப்பொருள்கள் அடங்கிய மூட்டையை குடிசைவீட்டின் திண்ணையில் வைத்துவிட்டு கதவை இரண்டு தட்டு தட்டிவிட்டு வந்து குதிரையில் ஏறினான் மகிழன்.
யாரோ கதவைத்தட்டுகிறார்களே? என்று நெகிழனும் அவன் அம்மாவும் கதவை நீக்கி வெளியில் வந்து பார்த்தார்கள். மகிழன் குதிரை வாசலைக்கடந்து வனத்தினுள் பிரயாணம் செய்யத்துவங்கியிருந்தது. நெகிழன் திண்ணையில் இருந்த மூட்டையைப்பிரித்தான் ஓடிப்போய்!
“அம்மா யாரம்மா அவரு? நம் திண்ணையில் எதற்காக மூட்டையை வைத்துவிட்டுச் செல்கிறார்?” என்றான்.
”அவன் உன் அண்ணன் மகிழன்!” என்றாள் தாய்.
வனத்தினுள் ஒருமணிநேரம் பிரயாணம் செய்த மகிழன் ஓய்வெடுப்பதற்காக பெரிய அரசமரத்தினடியில் குதிரையை நிறுத்தினான். சற்றுத்தொலைவில் யானைக்கூட்டத்தாரோடு இணைந்து சென்றுகொண்டிருந்த வேலன் யானை இவனைப்பார்த்து தும்பிக்கையை உயர்த்தி பிளிறியது. ‘போ போ, போயிட்டேயிரு! மகிழ்ச்சியாய் இரு!’ என்று மகிழன் வேலனைப்பார்த்து குரலிட்டான்.
குரங்கு மாமாவின் உடலில் இருந்த சட்டைத்துணியை பிய்த்து தூரமாய் எறிந்தது குரங்கு. பின்பாக மாமா குரங்கின் முன் நின்று, ’தன் உடலில் இருக்கும் சட்டைத்துணியை பிய்த்து எறி’ என்று சொல்லவும், மாமா குரங்கு இதன் சட்டைத்துணியையும் பிய்த்து எறிந்து மகிழ்ச்சியாய் குட்டியாக்கரணமிட்டது.
மகிழன் குதிரையின் அருகில் வந்தான். அதன் முகத்தை தடவிக்கொடுத்தவன், ‘இனி நீ நகருக்கே புறப்பட்டு சென்றுவிடு. நாங்கள் இங்கிருந்து போய்க்கொள்வோம்’ என்றான். குதிரை லேசாய்க் கனைத்தது. பின்பாக குரங்குகளோடு மகிழன் தன் வீட்டை நோக்கி வனத்தில் நடையிட்டான்.
குதிரை அவன் போவதையே சற்று நிமிடம் பார்த்தது. தான் திரும்பி நகருக்குச் செல்வதற்கான பாதையையும் ஒருமுறை பார்த்தது. முடிவெடுத்தது போல மகிழன் சென்ற பாதையிலேயே குதிரை அவனைத்தொடர்ந்து வனத்தினுள் சென்றது.
எழுதியவர்
-
வா. மு. கோமு என்ற பெயரில் எழுதி வரும் வா.மு.கோமகன், ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்தஎழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர் என்றும், மனதில் நினைத்ததை எழுத்தில் சொல்லத் தயங்காத எழுத்தாளர் எனவும் பெயர் பெற்றவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது. 1991- ஆம் ஆண்டு முதல் ‘நடுகல்’ எனும் இலக்கியச் சிற்றிதழை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இவரது நூல்கள் :
அப்பச்சி வழி - நினைவோடை குறிப்பு,
அருக்காணிக்கு சொந்த ஊர் விஜயமங்கலம் - சிறுகதைகள் ,
அழுவாச்சி வருதுங்சாமி - சிறுகதைத் தொகுப்பு,
எட்றா வண்டிய -நாவல் ,
என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் - சிறுகதைகள்,
கள்ளி - நாவல் ,
கூப்பிடுவது எமனாக இருக்கலாம்,
சகுந்தலா வந்தாள் - நாவல்,
சயனம்- நாவல் ,
சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்- நாவல் ,
சேகுவேரா வந்திருந்தார் - சிறுகதைகள்,
கூப்பிடுவது எமனாக இருக்கலாம் ,
பக்கத்து வீட்டு குதிரை- சிறுகதைகள் ,
பிலோமி டீச்சர் - சிறுகதைகள் ,
மங்கலத்து தேவதைகள்- நாவல் ,
மண்பூதம் - சிறுகதைகள்,
மரப்பல்லி - நாவல் ,
நாயுருவி- நாவல்,
தவளைகள் குதிக்கும் வயிறு - சிறுகதைகள்,
தானாவதி - நாவல்,
ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி- நாவல் ,
வேற்றுக்கிரகவாசி - சிறுகதைகள்,
ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம் ,
மாஸ்டர், ஒரு சாதா டீ - சிறுகதைகள்,
லவ் யு டி - சிறுகதைகள்
காயாவனம்: சிறார் குறுநாவல்,
மாயத் தொப்பி - சிறார் கதைகள்.
இதுவரை.
- சிறார் கதைகள்29 July 2024மகிழனும் இமயவல்லியும் | குறுநாவல்
- சிறார் இலக்கியம்18 January 2024மூக்குடைபட்ட கரடி
- கதைகள் சிறப்பிதழ் 2023 - II3 September 2023நான் முதலாளி ஆகணும்!
- சிறுகதை24 April 2023நானெல்லாம் கவரிமான் சாதி