
யானையின் தந்தம் முகத்தை உரசியது. முதலில் ஒன்றும் புரியவில்லை. குழப்பமாக இருந்தது. இது எப்படி நடக்க முடியும்? முதலிலொரு முரடான கையின் சொரசொரப்பு. பிறகு மென்மையான வருடல், இதமான ஒரு கொஞ்சல். நான் நிறைய வாக்குறுதிகளை அவனுக்கு கொடுத்துக்கொண்டிருந்தேன். பிரக்ஞையோடு இருந்தேனா? ஆனால், அவன் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனான். கண்ணோரங்களில் கண்ணீர்த்துளி திரண்டது. ஆரத் தழுவி நெற்றியில் தொடங்கி கழுத்து வரைக்கும் முத்தங்களை விதைத்தான். எங்கோ ஓர் ஓலம் காற்றின் முதுகில் தொற்றிக்கொண்டு வந்து என் தலைக்குள் புகுந்தது. மீண்டும் அசைவு ஏற்பட்டு எதுவுமே பார்வைக்குத் தட்டுப்படாமல் கும்மிருட்டாகிப் போனது. ஆனால் அசைவை மட்டும் உணர முடிந்தது. பின் முகத்தில் ஈரம் படரப் படர உரசி நக்குகிற சொரசொரப்பு. இது வேறு மாதிரியாக இருக்கிறது.
எனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது? நான் எங்கு இருக்கிறேன்? அந்த கும்மிருட்டிலும் எனக்குத் தெரிந்த முகங்கள், மனிதர்கள் என யாருமே புலனுக்குத் தட்டுப்படவில்லையே ஏன்? மண்புழு போல கேள்விகள் இரண்டு திசைக்கும் மனத்தை இழுத்துக்கொண்டு முறுகின. பதில் சொல்வார் இல்லவே இல்லை. திடீரென என்மீது ஒளி பரவி தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ள போகிறேனா என்பதையும் யோசித்தேன். கடந்த சில மாதங்களாகவே ஒவ்வொன்றும் அபத்தத்தின் முனைக்கு கொண்டு போய் நிறுத்தி வைக்கிறது. அதனுடைய விளைவாகவும் இந்த அனுபவம் இருக்கலாம். யாராவது கதவைத் தட்டி என்னைத் தேடி இங்கு வந்துவிட மாட்டீர்களா என்று இருந்தது.
பகீரதப் பசியில் ஆட்பட்டவளாக கிடைத்ததையெல்லாம் வாரிச் சுருட்டி தலைக்குள் திணித்துக்கொண்டிருந்தேன். ஒரு முழு வாழ்வையும் அள்ளி முழுங்கிவிட வேண்டும் என்கிற ஆவேசம் யோசனைக்குள் மூண்டது. இதுவரையிலான அனுபவத்தை மனம் நிமிண்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் எப்போது ஏற்பட்டது என்று சில நொடிகள் தயங்கினேன். பிடிபட்டுவிட்டது. முழுமையாக இப்படி இருளுக்குள் விழுந்து தொலைவதற்கு சற்று முன்னதாக இருந்த பொட்டளவு வெளிச்சப்பொழுது. அதைத்தான் துழாவித் தேடிக் கொண்டிருக்கிறேன். அவனோடான சந்திப்பாக அது இருந்திருக்கலாம். அல்லது அவளோடான வாக்குவாதத்தின் விளைவாகவும் இருக்கலாம். இதில் எது இது என்கிற முடிவை எப்படி எடுத்தேன்? ஏன் எடுத்தேன்? இந்தக் கேள்வி காதருகே ஈயாகச் சுற்றி தொந்தரவு செய்தது. எப்படியும் சிக்கலின் நுனியைப் பிடித்துவிட்டால் அடியைத் தொட்டுவிடலாம். பிறகு விறுவிறுவென கிளைகளைத் தாவிக் கடந்து உச்சியை அடைந்துவிட்டால் அனைத்தும் துலங்கிவிடும் என்று பைத்தியம் போல நம்பிக் கொண்டிருக்கிறேன்.
“மருந்து ஒரு குப்பியைத் தாண்டக்கூடாது.. ஒன்பது எம்.எல் அளவு. அதை ஐந்து வேளையாகப் பிரித்துக்கொடு. ரொம்ப பெரிய இடம் ஜாக்கிரதை”
“சரிங்க மேடம்”
இது கனவல்ல என்று இனி நான் நம்ப வேண்டுமா? இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள். ஒன்று முத்தின குரல். இன்னொன்று இளைய குரல். இரண்டுமே எனக்குக் கொஞ்சமும் பரிச்சயமற்ற குரல்கள். என்ன குப்பி? எதற்கு மருந்து? என் நினைவின் தாழ்வாரத்தில் மதி மயங்குகிறதே ஏன்? இல்லை இது கனவேதானா? வேறெதுவும் எனக்குத் தெரிந்திருக்கப் போவதில்லையா? அம்மாவும் இரண்டு தங்கைகளும் தம்பியும் மட்டும்தான் எனக்கு இரத்த உறவு. என் வாழ்நாளில் அப்பாவின் முகத்தைக்கூட பார்த்ததில்லை. அவர் செத்துப் போகவில்லை. எங்கோ போனவர் திரும்பி வரவில்லை. அடையாளமாக மட்டுமல்ல, நினைவாகக்கூட அவரைப் பற்றி அம்மா எங்களிடம் ஒரு வார்த்தை சொன்னதில்லை. எங்களுக்கான குடும்ப அந்தரங்கத்திற்குள்ளே ஒற்றைப் புகைப்படமாகக் கூட எஞ்சியிருக்காத அம்மனித முகம் இந்த இருட்டுக்குள் மட்டும் வெளிச்சம் போட்டு காட்டப்படுமா என்ன? துளி அளவுகூட பதிவாகாத ஓர் உறவை மூளையின் எந்த மடிப்புக்குள் புகுந்து தேடித் தொலைப்பது? சுத்த பைத்தியக்காரத்தனம் அல்லவா? ரமாவும் ரம்யாவும் ரஞ்சனும் அப்படியல்ல. நான் குடித்த எச்சில் பாலைக் குடித்தவர்கள். என் மட்டில் எனக்குப் பொறுப்புகள் உண்டு. மூத்தவள் என்கிற அதிகாரம் உண்டு. ஆனால்.. ஆனால்..
படபடவென்று யாரோ எதையோ இடிக்கிறார்களே ஏன்? திடீரென என்னுடைய பின்மண்டையில் வலிக்கிறதே ஏன்? இத்தனைக் கேள்விகள் முளைத்துக்கொண்டே இருப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லையா? வாயைத் திறந்து எதையும் பேச முடியவில்லை. அல்லது பேசுகிறேன். ஒருவேளை உள்ளுக்குள்ளேயே புலம்பிக்கொண்டிருக்கிறேனோ? இதற்கெல்லாம் ஒத்துக்கொள்ளும்படி லாஜிக் இருக்கிறதா? விடை காண முடியாத பள்ளத்தில் நானாகவே விழுந்து கிடக்கிறேனா? வேறு யாராவது தள்ளி விட்டார்களா? அப்படியென்றால் யார்? யாரையெல்லாம் எனக்குத் தெரியும்? அவனைத் தெரியும். அவனை நான் விரும்புகிறேன். அவனுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. முத்தமெல்லாம் கொடுத்தானே. ஆனால், அவனுக்கு அவளையும் பிடித்திருக்கிறது. அவளுக்கும் முத்தம் கொடுத்திருக்கிறான். ஒருவேளை அவளுக்குத்தான் என்னைப் பிடிக்கவில்லை என்று இப்போது நினைத்துக்கொள்ள வேண்டுமா? அப்படியென்றால் அதை அவள் என்னிடம் சொல்லியிருக்கலாமே? அவளுக்கு நானும்தானே நட்பு? அட.. யாருக்கு யார்மீது முதல் மையல் தொடங்கியிருந்தது என்பதைப் பற்றி பேசாமலேயே ஒரு முடிவுக்கு எப்படி வருவது? அதற்கு என்னைக் காயப்படுத்திவிட்டாளா? அல்லது காயப்படுத்திவிட்டானா? அல்லது இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்து என் காதலுக்கு காயடித்துவிட்டார்களா? எப்படியிருந்தாலும்..
இல்லை. அவனுக்கு என்னைத்தான் பிடிக்கும். அவனைத் தழுவிக்கொள்ளும்போது இதயத் துடிப்பின் வேகத்தை நன்கு உணர்ந்திருக்கிறேன். கழுத்தருகே காமம் மிகுந்து மோப்பம் பிடித்துக்கொண்டே இருப்பான். மனம் உன்மத்தம் ஏறி ஆகாயத்தில் வானவில் போல விரியும். அடிவயிறு குழைந்து நெகிழ மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டு இம்சிக்கும். ஆகாயத்தில் பறப்பது என்றால் அப்படித்தான் இருக்குமோ என்னவோ? உடலுறவு வைத்துக்கொள்ளும் அளவிற்கு உணர்ச்சிகள் தூண்டப்படும் தருணமாக அது இருந்தும் கட்டுப்படுத்த ரொம்பவே பிரயத்தனப்பட்டிருக்கிறேன். அச்சமயங்களில் முகம் தெரியாத அப்பாவின் நினைப்பை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து புத்திக்குள் நிறுத்தி வைத்துக்கொள்ள படாத பாடுபடுவேன். அதற்காவது அவர் பயன்படட்டுமே. அவ்விஷயத்தை ஒளித்து வைக்காமல் அம்மாவிடம் சொல்லிவிட்டேன். ‘அரிப்பெடுத்த நாய்’ என்று அம்மா என்னைத் திட்டவில்லை. திட்டமாட்டாள். இதுகூட புரியாமல் வரிசையாகப் பெற்றெடுத்திருக்க முடியாதல்லவா?
ரமா அமைதியாக இருந்தாள். ரம்யா பெரிய மனுஷி தோரணையில் எகிறி எகிறி வாய் பேசினாள். அவளை ஓங்கி ஓர் அறை விட்டேன். கடுகடுவென்று பற்களைக் கடித்து நறநறத்தாள். ரஞ்சன் எதுவும் பேசவில்லை. இதையெல்லாம் எங்களுக்குள்ளாகப் பேசிக்கொள்ளும்போது அவனும் உடன் இருக்கட்டும் என்று நினைத்திருந்தேன். தெரிந்துகொள்ளட்டும். மீசையெல்லாம் அடர்த்தியாகி கிருதாவும் தாடைகளில் படர்ந்துவிட்டது. மோவாயில் பூனைமயிர் கிளைவிடத் தொடங்கியிருக்கிறது. அவனுடைய தேவைக்கு ஒரு பெண்ணைச் சீண்ட வேண்டும் என்கிற பருவம் ஆல்மோஸ்ட் வந்த கணக்குத்தான். அப்படியாக ஒருத்தியைத் தீண்ட நேரும்போது அவன் தன்னைத் தானே அறிந்துகொள்ளும் ஒரு சந்தர்ப்பமாக அது இருக்கட்டும்.
யாரோ ஒரு பெண். யாரோ ஒரு பையன். இருவருக்கும் வீடு, குடும்பம் உறவுகள் என்று இருப்பதை பரஸ்பரம் மதித்தால்.. ஒரு சந்தர்ப்பத்தின் மோதலின்போது இரண்டு பக்கங்களும் இருக்கத்தானே செய்கிறது. ஒன்று பாதிப்பு. இன்னொன்று விளைவு. அப்படி சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களின் உணர்ச்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் தங்களைப் பொறுப்பாளர்களாகக் கருத வேண்டும். இரண்டு வகைமையையும் ஏற்றுக்கொண்டு விஷயத்தைக் கையாள வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். இங்கு அதை யார்த்தான் ஒத்துக்கொள்வார்கள்?
‘நீயென்ன பெரிய சீர்திருத்தப் புடுங்கியா?’ என்று என் தோழியொருத்தி விறைப்பாகக் கேட்டாள். ‘கடைசியில அசிங்கப்பட்டு நிக்கப் போற பாரு’ என்று ஜோசியமும் சொன்னாள். அவள் சொன்னதை ஒரேயடியாக மறுப்பதற்கில்லை. அதற்காக அப்படியே கிடக்க வேண்டுமா என்ன? என் சூழல் என்னை எனக்கு ஒத்துப்போகும் ஒரு பாணியில் யோசிக்க வைக்கும்தான். யோசிக்க வேண்டிய அவசியமும் கட்டாயமும் எனக்கு இருக்கிறது. ஒவ்வொருத்தரின் வலியும் வேதனையும் வெவ்வேறு தன்மையோடு இருப்பவை. ஆனால், உணர்வுநிலை பொது அம்சங்களைக் கொண்டிருக்கும் என்பது எனக்குப் பட்டறிவு. ஆகட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற நினைப்பு என்னை இப்போது எங்கே கொண்டு வந்து அடைத்து வைத்திருக்கிறது என்பதை மட்டும் இந்த நொடியில் நான் தெரிந்திருக்கவில்லை.
என் வீட்டைப் பொருத்தவரையில் நான் நடத்தியது என்பது வெறும் காதல் அறிவிப்பு மட்டுமே. ஆனால், என் உடலின் உரிமையை அவனுக்கு இதுவரை நான் கொடுக்கவில்லை. இருந்தாலுமே கூட, இது கற்பு நிலையைச் சொல்லி அழுது புலம்புகிற வழக்கமானத் துயர மண்ணாங்கட்டியும் கிடையாது அல்லவா? ஆனால்.. நான் சொல்லச் சொல்ல.. அம்மா மட்டும் வைத்த கண் எடுக்காமல் என்னை முறைத்தபடியே இருந்தாள். அதை அவள் செய்துதான் ஆக வேண்டும். நடுத்தர வர்க்கக் குடும்பத்தலைவியின் தலையெழுத்து. அப்படிப் பார்த்தால்.. இதுவோர் உணர்வுப் போராட்டம் அல்லவா? எல்லோருக்கும் நடப்பது இயல்புதானே? பிறகென்ன முறைப்பு? ரமாவோ ரம்யாவோ இதைப்போல தங்களைத் தயக்கமின்றி உள்ளது உள்ளபடியே குடும்பத்திற்குள்ளே வெளிப்படுத்திக்கொள்ள முடிய வேண்டும்.
பழகும் ஆட்கள் பர்சனலாக ஏற்றுக்கொள்கிறான்களோ ஏமாற்றுகிறான்களோ அல்லது நாம்தான் அவன்களை ஒதுக்கித் தள்ளுகிறோமோ.. எதுவாக இருந்தாலும் வீட்டுக்குள்ளே சபையைக் கூட்டி அறிவித்துவிடுவது நல்லது. பிறகு, நிம்மதியாக அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடலாம். ஊர் ஆயிரம் பேசும். அதற்கு தொள்ளாயிரம் வாய் இருக்கிறது. ஒவ்வொன்றையும் ஓடியோடி அடைத்துக்கொண்டிருக்க முடியுமா என்ன? அவசியமும் கிடையாது. உணர்ச்சிகர சந்தர்ப்பங்களில் சுயம் கெட்டு அசிங்கப்பட்டதை.. தலைகுனிவை.. அவமானத்தை.. வெளியே சொல்லிப் பகிர வழியில்லாமல்தான் இந்த கேடுகெட்ட மனம் விஷக் காளானால் மண்டி நஞ்சாகி தன்னைத் தானே தின்று கடைசியில் நம்மையே செரித்து குழிக்குள் சரித்து மண்ணைத் தள்ளி மூடிவிடுகிறது.
நோ!
படக்கென்று ஒரு வாசல் திறந்ததும் கண்களுக்குள் வெளிச்சம் பாய்ந்தது. வெளிச்சத்தை மறித்துக்கொண்டு ஊடுபாவிய நிழலுருவங்கள் தோன்றி தீயின் நடுவே எரிந்துகொண்டிருப்பதைப் போல அவற்றின் விளிம்புகள் அனல் கோடென அசைந்தபடியிருந்தன. அப்படியென்றால் என் கண்கள் கட்டப்படவில்லை. அசங்கிய கோட்டுருவங்கள் என்னை நெருங்கின. எதிரே உட்கார்ந்தன. பார்வை இன்னும் துல்லியமாகவில்லை. கதவு மூடும் சப்தம் கேட்டது. வாசல் வெளிச்சம் மறைந்தது. பட்டென்று விளக்கொளி எரிந்தது. பொன் மஞ்சள் நிறத்தில் என் முன்னே ஒரு மேஜை இருப்பதைப் பார்த்தேன். எதிர்ப்பக்கம் உட்கார்ந்தவர்கள் சிகப்பு நிறத்தில் ஒரு கோப்பைப் பிரித்தார்கள்.
“மிஸ் சத்யா.. எப்படி இருக்கிறீர்கள்?”
பரிச்சயமல்லாத ஓர் ஆண் குரல். சட்டென எரிச்சல் வந்தது.
“அசைய முடியல.. கட்டிப் போட்டிருக்காங்க? அவுத்து வுட சொல்லுங்க.. முதல்ல நீங்க யாரு?”
“அது முக்கியமல்ல.. நீங்கள் செய்த ஒரு காரியம்தான் இப்போதைக்கு ஹைலைட்..”
“லவ் பண்றது என்னோட ப்ரைவசி”
“அது சீந்தி உதறும் சளிக்கு சமமாம்..”
அந்த ஆள் சொன்னது எனக்கு தெளிவாகத்தான் கேட்டது. இதென்ன அவமானம்? யாரிவன்? யாரிவர்கள்? என் புத்தி பட்டென்று விழித்துக்கொண்டது. இது வேறு ஏதோ சமாச்சாரம். அட! இந்த பின்மண்டை மீண்டுமொருமுறை விண்னென்று வலியில் தெறித்தது.
இதுவரை பேசாமல் இருந்த மற்றவன் எழுந்து அருகில் வந்தான். இருவரும் கோட் சூட் அணிந்திருந்தார்கள். மஞ்சள் ஒளியில் அதன் அசலான நிறத்தை தெரிந்துகொள்ள முடியவில்லை. அவன் கையில் ஒரு கண்ணாடி டம்ளர் இருந்தது. அதில் தண்ணீர் இருந்தது. அதுவும் பொன்னிறத்தில் இருந்தது. என் வாயருகே டம்ளரின் விளிம்பு புகட்டப்பட்டது. கண்ணாடியின் சில்லிடலில் எந்தவித வாசனையும் மூக்கைத் தாக்கவில்லை. கடும் தாகமிருந்ததால் வாயைத் திறந்தேன். தண்ணீரும் புகட்டப்பட்டது. தொண்டைக்கு இதமாக இருந்தது. ஆனால், குடித்து முடித்ததும் தொண்டைக்குழியின் பாதையில் சின்ன நமைச்சல் ஏற்பட்டது.
“குட்.. இப்போது நீங்கள் குடித்தது என்னவென்று ஐடியா இருக்கிறதா?”
“தண்ணீதானே கொடுத்தீங்க?”
“அது வெறும் தண்ணீர் கிடையாது”
“அப்போ.?”
“சொல்கிறேன்.. அதற்கு முன்னால் ஒரு கேள்வி கேட்கவேண்டும். உங்களுக்கு.. க்ரீன் புக் பிடிக்குமா? ரெட் புக் பிடிக்குமா?”
இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தேன். இவர்கள் சாதாரண ஆட்கள் கிடையாது. இதயத்தின் துடிப்பு சட்டென்று அதிகரித்தது. குனிந்து கைகளைப் பார்த்தேன். அவை தோல் வார்ப்பட்டியால் விலங்கிடப்பட்டிருப்பது பார்வைக்குத் துல்லியமாகத் தெரிந்தது. பேதலித்திருந்த புத்தி தெளிகிறதா?
“யா..யார்.. நீங்க?”
“நீங்கள் செய்த காரியம் எங்கள் நிர்வாகத்தின் உயர்மட்டத்தை பெருங்கவலைக்கு உட்படுத்தியிருக்கிறது சத்யா மேடம்.. உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும் அல்லவா”
“சதுப்பு நிலம் பற்றி பேசறீங்க.. புரியுது.. நேரா பாயிண்டுக்கு வாங்க..”
“வாவ்.. உங்களின் இந்த திமிருக்கும் அறிவுக்கும் நான் விசிறி.. ஆனால் நிலைமை தற்சமயம் ரசிக்கும்படியாக இல்லை.. நான் என் கடமையை செய்தாக வேண்டும்..”
“என்னது அது?”
“ஒரு கையெழுத்து போட்டுவிட்டீர்களென்றால்.. போதும்.. காரியம் மிகவும் எளிது”
“முடியவே முடியாது.. சதுப்பு நிலத்தை மேலும் மேலும்.. காயப்படுத்தறதை பொறுத்துக்கவே முடியாது.. அங்கே பல அரியவகை உயிரினங்கள் இருக்கு.. வாட்டர் பாடியோட உயிர்நிலையில கை வைக்கிற செயல் அது.. குப்பையைக் கொட்டி நாசம் பண்ணி பண்ணி நைஸா.. சதுப்பை கெட்டியான நிலமா மாத்திக்கிட்டிருக்கறது எந்த விதத்திலயும் சரியில்ல.. இப்பவும் புது கட்டடங்கள் முளைக்குது.. எல்லாம் மல்டி நேஷனல் கம்பெனிகள்..”
“வளர்ச்சியைக் குறை சொன்னால்.. அது நாட்டின் நலன் மீது குறை சொல்வதாகுமென்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே சத்யா..மேடம்? நீங்கள் ஓர் இந்திய பிரஜை..”
“இதெல்லாம் சாக்கு.. இன்னொரு புது சாலையைப் போட்டு மகாபலிபுரம் சாலையை இணைப்பீங்க.. அதுவும் வளர்ச்சியா..?”
“வேறு வழி..?”
“ஆகாயத்துல கோட்டை கட்டுறீங்கல்ல.. அதுக்கு பதில் பாலத்தைக் கட்டுங்க.. யாரு வேணான்னா”
“கிரவுண்ட் லெவல் பாலிடிக்ஸ் பேசாதீர்கள்.. உங்களுக்கு அது செட் ஆகவில்லை.. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பொதுத்தேர்தலில் வாக்கு செலுத்துவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கு.. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.. அதுவரையில் கடுமையாக உழையுங்கள்.. நியாயமாக வரி கட்டுங்கள்.. எங்கள் வேலையை உங்களுக்காக செய்வதற்கு தொந்தரவு பண்ணாமல் எங்களுக்கு வழியை விடுங்கள்.. குறுக்கே மறித்தபடி நிற்காதீர்கள்.. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்பது நன்றாகவே நினைவில் இருக்கிறது.. ஸோ.. லேடீஸ் ஃபர்ஸ்ட்.. நீங்கள் நகர்ந்துவிடுங்கள் சத்யா மேடம்.. இயற்கையை எங்கள் கையில் விட்டுவிடுங்கள்.. நாங்கள் அதைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வோம்..”
“முடிவோட வந்திருக்கீங்க..”
“ஆமாம்.. நீங்கள் உங்கள்பாட்டிற்கு.. சர்வதேச அளவில் விஷயத்தைக் கொண்டு போக முயற்சி செய்வதெல்லாம் மிகவும் தப்பு இல்லையா”
“ஐ.யூ.ஸி.என்.. அதுக்காகத்தானே இருக்கு.. எங்கே போயி நின்னா ரெட் புக்குக்கு மதிப்பிருக்குன்னு ஒரு உதாரணம் செட் பண்ணேன்.. இப்போ வழிக்கு வந்தீங்கல்ல”
“இல்லையே.. அவ்வளவு தூரம் போக விடமாட்டோமல்லவா.. எல்லா இடத்திலேயும் ஆள் வைத்திருக்கிறோம் சத்யா மேடம்..”
சில வினாடிகள் அமைதியாக இருந்தேன். வயிற்றுக்குள் ஏதோ சங்கடம் தோன்றியது. எனக்கு அவன் கண்களை ஊடுருவிப் பார்க்க முடியவில்லை. அப்படியொரு லைட்டிங் அமைத்திருக்கிறார்கள். மீண்டும் கதவு திறந்தது. மூடியது. இப்போது வெண்ணிற விளக்கொளி எரிந்தது. மேலும் இருவர் வந்திருந்தார்கள். முழுமையாக வெள்ளை உடுப்பு அணிந்திருந்தார்கள். ஒரு கேமராவை என்னை நோக்கி கோணம் அமைத்து ட்ரைப்பாடில் பொருத்தி வைத்தார்கள். கட்டளைக்குக் காத்திருப்பதைப் போல அமைதியானார்கள். கருப்புநிறக் கண்ணாடி அணிந்திருந்த அவர்கள் இருவரின் முகமும் ஒன்றைப் போலவே இருந்தது. எதிரில் இருந்த நபர்கள் இருவரும் சாம்பல் நிறத்திலான கோட் சூட் அணிந்திருந்தார்கள். அவர்களும் கருப்புக் கண்ணாடியைக் கொண்டு கண்களை மறைத்துக்கொண்டிருந்தார்கள். எதையும் கிரகிக்க முடியவில்லை.
“ஒத்துழைக்க மறுத்தால்.. டார்ச்சர் பண்ணும்படியும் உத்தரவு இருக்கிறது சத்யா மேடம்..”
கொஞ்சமாகக் கிலி பிடித்து அடிவயிறு பிசைந்தது. என்ன ஆகிவிடும்? அதையும் பார்ப்போம் என்று தற்காலிகமாய் ஒரு தைரியம் முளைத்தது.
“ஸோ.. ரெக்கார்ட் பண்ணப் போறீங்களா?”
“நோ.. நோ.. அவசரப்பட மாட்டோம். முதலில் உடையோடு.. பிறகு கால் நிர்வாணம்.. அதன்பிறகு அரை நிர்வாணம்.. கடைசியாக முழு நிர்வாணம்வரை விசாரணையின் பாணியைக் கொண்டுபோக எங்களிடம் அனுமதியுள்ளது.. நான்காவது கட்டம் வரையில் போக விடமாட்டீர்களென்று எனக்கொரு நம்பிக்கை இருக்கிறது.. இவனிடம் பெட் கட்டியிருக்கிறேன். ஆனால், முதல்கட்ட விசாரணையை நிச்சயமாக பதிவு செய்துகொள்வோம்.. மற்றவை கணக்குக் காட்டுவதற்கென்று உங்களுக்குத் தெரியாதா..?”
அவன் கொஞ்சமும் நக்கலாகவோ, கிண்டலாகவோ, நமுட்டு சிரிப்புடனோ சொல்லவில்லை. முகத்தில் எவ்வித பாவனைகளும் இல்லாமல் அவனால் பேச முடிகிறது. நிச்சயம் சொன்னதைச் செய்துவிடுவார்கள் போலத்தான் தெரிந்தது. இப்போது முதல்முறையாக ஒரு குழப்பம் மண்டைக்குள் குட்டியூண்டாக முளைப்பதை உணர முடிந்தது. அம்மாவும் தங்கைகளும் தம்பியும் ஞாபகத்திற்கு வந்தார்கள். அவனும் அவளும் கூட மின்னல் போல வெட்டி மறைந்தார்கள். சுவிஸர்லாந்தில் இருக்கும் இயற்கைப் பாதுகாப்பிற்க்கான சர்வதேச கூட்டிணைவு அமைப்பு என்னைப் போன்ற தனி நபர்கள் முன்னெடுக்கும் சமூகப் பங்களிப்பை, அதன் பின்னணியை ஆராய்ந்து முக்கியத்துவப்படுத்தும்போது நாங்கள் ஒன்றிணைந்து பெருகி தனி சக்தியாகத் திரளும் சமயம் எங்களுக்கான அடையாளம் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும். அப்போது இதுபோன்ற லோக்கல் இடர்கள் வருவதுண்டு. ஆனால், இதுவரையில் இல்லாத புது ரகமாக இருப்பது திகைப்பை ஏற்படுத்துகிறது.
“அதிகம் யோசிக்காதீர்கள்.. சரி.. இங்கிருந்து ஆரம்பிக்கலாம்..”
அவன் பக்கவாட்டில் குனிந்து ஒரு தோல் பையை எடுத்து மேஜையில் வைத்தான். அதனுள்ளிருந்து பாலிதீன் பை ஒன்றை எடுத்தான். அது சீல் பண்ணப்பட்டிருந்தது. அதனுள்ளே ஒன்றரை அடி நீளத்திற்கு வாழைத்தண்டு பருமனில் மஞ்சள் கலந்த வெண்ணிறத்தில் ஒரு வஸ்து இருந்தது. அது என்னவென்று கணிக்க முடியவில்லை.
“உங்க பி.ஜி. அறையிலிருந்து கைப்பற்றினோம்.. இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்பது? எங்களை ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள் சத்யா மேடம்.. அல்லது.. அவ்வளவு கட்ஸ் இருக்கிறதா உங்களுக்கு..? என்னவென்று சொல்லுவது.. போங்கள்.. என் சர்வீஸில இதுபோன்ற துணிச்சல்கள்.. என்போன்ற ஆட்களுக்கே ஓவர் தெரியுமா..?”
“என்னது இது..?”
எனக்கு நிஜமாகவே அந்த வஸ்துவை அடையாளம் புரியவில்லை.
“ஓகே.. ஆறு மாதத்திற்கு முன்னே திருப்பூரில் நான்கு மாதம் தங்கியிருந்தீர்கள்.. அப்போது நிறைய ஆட்கள் உங்களைச் சந்தித்துவிட்டுப் போனார்கள். அந்நாட்களில் நீங்கள் அதிகமாகப் பயணம் செய்திருக்கிறீர்கள். அவ்வப்போது தெப்பக்காடு போயிருக்கிறீர்கள். எல்லாவற்றையும் முறையாக டிராக் செய்து எடுப்பதற்கு எங்களுக்கு ஆறு மாதங்கள் தேவைப்பட்டது. எங்களைப் பொறுத்தவரையில் இது.. ஆல்மோஸ்ட் ஒரு வருடம் இல்லையா.? ஸோ.. இப்போது.. இங்கே நாம்.. தகுந்த காரணத்தோடு உட்கார்ந்திருக்கிறோம் என்று நம்புகிறேன்..”
சொல்லிவிட்டு ஏறிட்டுப் பார்த்தான். இப்பவும் அவன் சிரிக்கவில்லை. கோடளவு புன்னகைக்காகக் கூட அவனுடைய உதடுகள் பிரியவில்லை. அவை பேசுவதற்கு மட்டுமே பயன்படுகின்றன. ஆனால், இவன் என்ன சொல்ல வருகிறான்.. அப்போ.. இது.. இது.. இந்த வஸ்து.. ஓ மை காட்..
“இது யானை தந்தம்.. உங்களின் அரிய பொக்கிஷம்.. சத்யா மேடம்..”
“நோ..!’
அவன் கைகளைத் தட்டினான். அது டிராமாவாக இருந்தது.
“மறுப்பதிலிருந்துதான் தொடங்கியாக வேண்டும்.. அனைத்தையும் சந்தேகப்படு.. இது எங்களுக்கான கோல்டன் ரூல்..”
“எனக்கும் யானை தந்தத்துக்கும் சம்பந்தமே இல்ல.. இது கொஞ்சம் கூட நியாயமே கிடையாது.. நான் ஒரு இயற்கை ஆர்வலர்.. என் மேல சர்வதேச குற்றம் சுமத்த இதுவா வழி..? ரொம்ப கேவலமா இருக்கு.. சை..”
“ஒன்று சொல்லட்டுமா?”
அவனைக் கடுப்புடன் பார்த்தேன்.
“அந்த சதுப்பு ஒரு அற்புதமான ஸ்பான்ஜ்.. பெரும்புயலை எதிர்கொள்ளும்.. கடும் மழைக்காலத்தில் தன் அடிமடியில் தேக்கி வைத்துக்கொள்ளும் தண்ணீரை.. வறட்சி காலத்தில் அப்படியே வார்த்து கொடுக்கும்.. நிலத்தடி நீரைக் கொஞ்சமாக உயர்த்தும்.. ஆனாலும்.. மனிதர்களுக்கு இடம் போதவில்லை.. உழைத்தால்தான் சோறு தின்ன முடியும்.. அயல்நாட்டிலிருந்து இங்கே வந்து வேலை வாய்ப்பையும் கொடுத்து சம்பளத்தையும் வாரி கொடுப்பவனுக்கும் இடம் கொடுக்கவேண்டும்.. கார் வாங்கிக்கொண்டு விரைவாக வீட்டுக்குப் போய்விட்டு விரைவாக.. வேலைக்கு வர வேண்டியவர்களுக்கு நல்ல சாலைகள் வேண்டும்.. அதைப் போடத்தான் வேண்டும்.. முதலைகள் பாம்புகள் வாழ முடியாமல்.. வெளியேறுவதை.. வீட்டிலிருந்து பல்லியை அடித்து துரத்துகிறோம் அல்லவா.. அப்படி எடுத்துக்கொள்ளுங்கள்.. இதெல்லாம் ஒரு சைக்கிள் பிராசஸ் மாதிரி.. ஒன்றும் பண்ண முடியாது.. கொஞ்சம் வேறு கோணத்தில் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால்.. பேசாமல் ஒத்துக்கொண்டு ஒதுங்கிவிடலாம்.. சதுப்பை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று உபயோகித்துக்கொள்வதால் சென்னை ஒன்றும் ஒரேயடியாக மூழ்கிப் போய் காணாமல் போய்விடாது.. நீங்கள் வங்காள விரிகுடா அளவிற்கு யோசித்து டென்ஷன் ஆகி.. பாருங்கள்.. இப்போ இந்த நிலைமை நன்றாகவா இருக்கிறது ம்ம்..?”
பதிவு செய்யப்பட ஒரு மென்பொருள் போல துல்லியமாகப் பேசி முடித்துவிட்டு அமைதியானான். அவன் பக்கமிருந்த சிகப்பு கோப்பை என் பக்கமாக நகர்த்தினான். பிரிண்ட் செய்யப்பட்ட காகிதங்கள் பக்க எண் போடப்பட்டு ஸ்டாப்ளர் அடித்திருந்தது. மொத்தம் நான்கு பக்கங்கள். பொறுமையாக வாசித்தேன். அதே ஐ.யூ.ஸி.என்-க்கு முகவரிப்படுத்தப்பட்ட தெளிவான ஒரு கடிதம். என்னுடைய முந்தைய புகாரை தகுந்த காரணங்கள் மற்றும் புள்ளிவிபரங்களோடு சுட்டிக்காட்டி தவறான புரிதலின் அடிப்படையில் திரும்பப் பெற்றுக்கொள்ளுவதற்கான மன்னிப்பு கடிதம்.
“பை த பை.. உங்கள் ரெட் புக்.. க்ரீன் புக் ரெக்கார்டை விட.. லவ் டைரி வரிகள் ரொம்பவே இன்ட்ரஸ்டிங்காக இருந்தது.. சமீபத்தில் இவ்வளவு அழுத்தமான ஒரு அந்தரங்க மன வெளிப்பாடுகளை நான் வாசித்ததில்லை..”
அவன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினான். அந்தக் கணம் நிஜமாகவே நிர்வாணப்படுத்தப்பட்டு உட்கார வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதாக நினைக்க வைத்தது. மெல்ல என்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு மனம் வடிந்துவிட்டிருந்தது. இன்னும் மேஜை மீதிருந்த யானை தந்தத்தையே வெறித்தேன். அதைச் சுட்டிக்காட்டிக் கொண்டே அவனிடம் கேட்டேன்.
“உங்க ஐடியை பாக்கணும்..”
“நோ நீட். நாங்கள் அரசாங்கம் அல்ல.. அதற்கும் மேலே.. ஆனால், நீங்கள் பெரிய சிக்கலில் இருப்பது உங்களுக்குப் புரிந்துவிட்டதுதானே..? அந்தச் சிக்கலுக்குள் உங்களைச் சார்ந்தவர்களும் வரக்கூடும்”
“தந்தம்?”
“அது ஏன் இப்போது இந்த மேஜையில் இருக்கிறதென்று நம் இருவருக்குமே தெரியும்.. டோண்ட் வொர்ரி.. அதில் கையெழுத்து மட்டும் போடுங்கள்..”
பேனாவைக் கையில் எடுத்தேன். கேமராவை ஏறிட்டுப் பார்த்தேன். அதை ஆன் செய்தார்கள். சிறு பொட்டாக அதிலொரு சிகப்புப் புள்ளி ஒளிர்ந்தது.
பிரிண்ட் அவுட்டின் நான்கு பக்கங்களிலும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டேன். கடைசி பக்கத்தில் என் பெயருக்கு மேலே கையெழுத்து இடும் முன் ஒரு கணம் யோசித்தேன். கிழித்துப் போட்டுவிட்டு பேனாவை முகத்தில் விசிறி அடித்துவிடலாமா? திட்டமிட்டு சிக்க வைத்திருக்கிறார்கள். சதுப்பு நிலப் பிரச்சனைக்கும் யானைத் தந்தத்திற்கும் சம்பந்தமே கிடையாது. அப்படியே எதிர் திசையில் ஜோடிக்கப்பட்டிருக்கிற குற்றம். அதற்காகக் கத்திக் கத்தியே மிச்ச வாழ்வில் தொண்டைத் தண்ணீர் வற்றிவிடும். சரி முதலில் இந்தப் பிடியிலிருந்து மீளலாம். அடுத்து வேறொரு பிரச்சனையில் சிக்காமல் எங்கே போவார்கள்? இப்போதைக்கு வெளியே போனதும் நண்பர்களுக்கும் அம்மாவுக்கும் நடந்ததை அப்படியே புரிய வைக்க வேண்டும் என்று மனம் உந்தியது.
கையெழுத்தைப் போட்டு முடித்து பெருமூச்சோடு அந்தக் கோப்பை அவன் பக்கம் நகர்த்தினேன். அதற்குள் அவன் யானை தந்தத்தை பழைய மாதிரி எடுத்து வைத்து பையை மூடியிருந்தான். கேமரா அணைக்கப்பட்டது. கேமரா ஆட்கள் முதலில் வெளியேறினார்கள். இவர்கள் எழுந்துகொண்டார்கள்.
“உங்களைப் பின்மண்டையில் தாக்கித்தான் தூக்கி வந்திருக்கிறார்கள் சத்யா மேடம்.. அதிலிருக்கும் வலி அடுத்த நாற்பதெட்டு மணி நேரத்திற்கு இருக்கும். கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் முழுமையாக நீங்கள் மயக்கநிலையிலிருந்து மீளவில்லை. ஆனால், உங்களின் ஒத்துழைப்பை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கைப் பூட்டப்பட்டிருக்கும் தோல் விலங்கிலிருந்து நாங்கள் புறப்பட்டதும் விடுவிக்கப்படுவீர்கள். மீண்டும் நாம் சந்திக்கப் போவதில்லை.. குட் பை”
“அந்தத் தண்ணீ..?”
இப்போதும் அவன் சிரிக்கவில்லை.
“குட்.. மேலோட்ட மனம் கடந்து அடிமனமும் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. உங்களின் ஞாபக சக்தி பாதிக்கப்படவில்லை. நீங்கள் குடித்தது.. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர்தான். அதை வடிக்கட்டி நன்கு காய்ச்சியெடுத்துப் பிறகு இயல்பான அறையின் சீதோஷ்ணநிலையைத் தொட்டதும் உங்களுக்குத் தரப்பட்டது..”
“ஏன்?”
“மண்ணின் மைந்தர்.. இயற்கை ஆர்வலர்.. பல்லுயிர்களின் சாரம் ஊறிய நீரை அருந்தட்டும் என்பது எங்களுக்கு வந்த கட்டளை..”
“உங்கள் இருவரின் பெயர் என்ன?”
“எண்கள் மட்டும்தான் தரப்பட்டுள்ளது சத்யா மேடம்.. இதற்கு மேல் பேச அனுமதியில்லை.. ஒத்துழைப்பிற்கு நன்றி..”
அவர்கள் போய்விட்டார்கள். வாசல் கதவு மூடிக் கொண்டது. அறையின் விளக்கொளி அணைக்கப்படவில்லை. நான் தனித்து உட்கார்ந்திருந்தேன். கண் பார்வை மங்கத் தொடங்கியது. நினைவுக் குழப்பங்கள் ஏற்பட ஆரம்பித்தபோது இமைகளைப் பிடித்து வலுவோடு கீழிழுத்து ஒரு தூக்கம் தம்முள் என்னைப் பூட்டி வைத்துக் கொண்டது.
எங்கோ காட்டிற்குள் ஒரு மரத்தின் கீழே படுத்துக் கிடக்கிறேன். அது எனக்குத் தெரிகிறது. அப்போது யானையின் தந்தம் என் முகத்தை உரசுகிறது. முதலில் ஒன்றும் புரியவில்லை. குழப்பமாக இருந்தது. இது எப்படி நடக்க முடியும்? பிறகு ஒரு முரடான கையின் சொரசொரப்பு என் முகத்தைத் தடவுகிறது.
அம்மாவும் ரமாவும் எங்கேயோ தொலைவிலிருந்து என்னைத் தொடர்ந்து கூப்பிட்டுக்கொண்டே இருக்கும் குரல் கேட்டது. சிரமப்பட்டு கண் திறந்தேன். அம்மாவும் ரமாவும் நின்றிருந்தார்கள். இவர்கள் எதற்கு பி.ஜிக்கு வந்தார்கள்? நகர முயன்றேன். முடியவில்லை. கைகள் இரண்டும் தோல் பட்டியால் கட்டிலின் பக்கவாட்டோடு சேர்த்துப் பிணைக்கப்பட்டிருந்தன. இது என் அறை இல்லையே? முழு வெண்மை நிறமா என் அறை? இல்லை.. இல்லவே இல்லை. அப்போ.. இது பி.ஜி இல்லையா?
“ஏய்ய்ய்…!”
அம்மாவும் ரமாவும் முகத்தில் அச்சம் படர ஓரடி பின்னகர்ந்தார்கள். பெண் மருத்துவர் ஒருவர் உள்ளே நுழைந்தார். கூடவே ஒரு நர்ஸ் வந்தாள். என்ன நடக்கிறது இங்கே?
“உங்க பொண்ணுக்கு மனக்குழப்பம் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுது.. நேத்து எங்க ஸ்டாஃப் ஒருத்தரை தாக்க ட்ரை பண்ணாங்க.. இது எங்க டீனோட முடிவு. அதான் கஃப் பண்ணியிருக்கோம். இப்படி இவங்க கத்துறதைப் பார்த்து பயப்படாதீங்க.. இந்தக் கண்டிஷன்ல எங்களுக்கு இது நார்மல்தான்.. உங்க விசிட்டிங் டைமை மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கச் சொல்லியிருக்காங்க. போகும்போது அவசியம் சீஃப் டாக்டரையும் பார்த்துட்டுப் போங்க”
கும்மிருட்டிற்குள்ளும் கேட்கும் அந்த முத்தின குரல் இதுதான்.
“அம்மா.. அம்மா.. வீட்டுக்குப் போயிறலாம்மா.. அவுத்து விடச் சொல்லும்மா.. ஏய் ரமா நீயாச்சும் சொல்லுடி.. யானை தந்தத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதும்மா.. அவுத்து விடச் சொல்லும்மா.. ப்ளீஸ்..”
அம்மா திருதிருவென்று முழித்தாள். ரமாவின் முகத்திலிருந்த அதிர்ச்சி குறையவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லையே. ஒத்துழைத்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டேனே.?அப்புறம் ஏன் இன்னும் அடைத்து வைத்திருக்கிறார்கள்? இது என்ன மனநல ஆஸ்பத்திரியா?
என்னுடைய எந்தக் கேள்விக்கும் பதில் வரப்போவதில்லை என்பது புரிந்துவிட்டது. உடலில் இருந்த ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டிக் கூட்டித் திமிறினேன். நர்ஸ் என்னுடைய கால்களை அழுத்திப் பிடித்துக்கொண்டாள். பிருஷ்டத்தில் ஊசி ஏற்றப்பட்டது. ஊசி குத்தப்பட்ட சொரணையே இல்லை.. அறையின் வெள்ளைநிற உட்கூரையைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே..
“2481.. இந்த நம்பரை நோட் பண்ணி வச்சிக்கோங்கம்மா.. உங்க பொண்ணோட அடையாள எண்.. இனி எல்லா ப்ரொஸீஜருக்கும் இதுதான் கீ நம்பர்..”
சொல்லிவிட்டு அவர்கள் போய்விட.. அம்மாவும் ரமாவும் கொஞ்சம் கொஞ்சமாக என் பார்வையில் மங்கிக்கொண்டே போனார்கள்..
அடர்ந்த காட்டை ஊடுருவி கம்பீரம் மிகுந்த உயரமான மரங்களின் உச்சி இலைகளை உரசிக்கொண்டு உடல் எடையற்று அந்தரத்தில் பறந்துகொண்டிருந்தேன்.. திடீரென கீழே பரந்து விரிந்த சதுப்பு நிலத்தினருகே யானைக்கூட்டம் ஒன்று வலசை போய்க் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அவற்றின் தந்தங்கள் ஒவ்வொன்றும் அபூர்வமானவை. ஒவ்வொன்றும் ஆறடி நீளத்திற்கு நீண்டு வளைந்து முளைத்திருந்தன. என்னை அவை ஈர்க்கவும் மெதுவாகத் தாழப் பறந்திறங்கி தந்தத்தின் தொட்டிலில் உடலைக் குறுக்கிப் படுத்துக்கொண்டேன்.. பக்கவாட்டு சதுப்பில் பச்சைநிறப் பட்டாடையென படர்ந்திருந்த அலையாத்தி தாவரங்கள் கூடவே துணை வந்தன. அவற்றின் தலையைக் கோதி வீசிய திடீர் காற்றுக்கு சிலிர்த்து அசைந்து என்னை வரவேற்றன. சிறகுதறி படபடவென பறந்த வெண்ணிற நாரைகளின் அலகுகளில் என்னுடைய அமைதி தொத்திக்கொண்டு வேறெங்கோ போயிற்று.
மூடிய இமைகளுக்குள்ளே உருளும் அர்த்தமில்லா காட்சித் தொகுப்புகளைச் சீண்டி உரசும் சொரசொரப்பின் மடிப்புக்குள்ளே நான் யார் என்கிற அடிமனத் தெளிவோடு.. மீள விரும்பாத ஆழத்திற்குள் அசைந்தசைந்து.. மெல்லத் தொலைந்து கொண்டிருந்தேன்.
இடம்பெயர்ந்து பெருகவிருக்கும் தருணத்தின் தொடக்கமென எண்ணம் நடுங்கியது.
எழுதியவர்

-
கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.
2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.
Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.
‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.
இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:
ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்
பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்
ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,
திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.
இதுவரை.
கதைகள் சிறப்பிதழ் 202523 January 2025அலையாத்தி
சிறுகதை20 February 2024நான்கு முனை சதுரம்
கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023ஆரண்ய வழி