27 April 2024

சைக்கிளை வேகமாக மிதித்தான். கிட்டத்தட்ட சைக்கிள் செய்ன் அறுந்து விழுந்துவிடத் துடித்துக்கொண்டிருந்தது. எந்தப் புள்ளியிலும் நின்று விடக்கூடாத வேகத்தில் அவனுடைய கைகளும் பாதங்களும் அழுத்திப் பிடித்து சைக்கிளை முறுக்கியது. குண்டுங்குழியுமான பாதை நெளிந்து வளைந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு சூரியன் எட்டிப் பார்க்கிறான். சகதியாய் கிடந்த சாலை மெதுவாகக் காயத் தொடங்கி இருக்கிறது. சைக்கிளின் டயர்கள் மணலில் புதைந்து எழுந்து ஓடியது. உதட்டோரமாகச் சுழித்துக் கொண்டான். தன் வாழ்வை விட இப்பாதை பெரிய சவாலாக இல்லையென நம்பும் சுழிப்பில் மீசையைத் தாண்டி உதடுகள் சுருங்கின. காய்ந்த உதடுகளுக்குள் ஒரு சிகரட் துண்டை திணிக்க மனம் விரும்பியது. ஆனால் சைக்கிளை நிறுத்த வறட்டு துணிச்சல் இடம் தரவில்லை.

கூட்டிலிருந்து வெகுதூரம் இரைதேடச் செல்லும் பறவைக்கு மீண்டும் அதன் கூட்டுக்கு வழியறியும் திறனை எண்ணி பலநாள் வியந்திருக்கிறான். இன்று முற்றிலுமாக மனம் அதை வெறுத்தது. ஏன் மனிதன் அவனுடைய வீட்டிற்கே திரும்ப வேண்டுமெனத் தோன்றியது. அதே வீடு, அதே மனைவி, அதே கேள்விகள் சலிப்புத் தட்டாதா அதுவும் புரிந்துகொள்ள இயலாத கேள்விகளால் என்ன பயன்? எப்போதும் எதையாவது நிரூபித்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா என்ன?

உலகின் ஒட்டுமொத்த அடுக்குகளும் அவனுக்குத் தவறாகப்பட்டது. ஆணும் பெண்ணும் புணர்தல் தேவையா? பிள்ளைகள் பெற்றுக்கொள்ளவும் மனித இனத்தைப் பெருக்கவும் வேறு வழியே இல்லையா… உலகை அழித்து சொற்ப மனிதர்களுடன் மீண்டும் புதிய உலகைச் செய்ய வேண்டும். அவர்களுக்கு வயதே ஆகக்கூடாது. திடகாத்திரமான தோள்களுடன் செதுக்கி வைத்த அவயங்களைக் கொண்ட தேகத்துடனும் வாழ வேண்டும். அவர்களின் ஆசைப்படி தின்று உறங்கிக் குடித்து நுகர்ந்து புணர்ந்து கழித்து வாழ வேண்டும். நெடிய கூந்தலுடன் நீலக் கண்களைக் கொண்ட பெண்களால் சமபங்கு சமூகம் நிரம்பிக் கிடக்க வேண்டும். தனக்கான பெண்ணை போன்ற இன்னொரு பெண்ணை கண்டாலும் சலனப்படாமல் கடந்து போக வேண்டும்.

இதெல்லாம் நடக்காதெனத் தெரிந்தும் மனம் பேயாய் அலைந்து கற்பனைப் பிசாசை உருட்டி விளையாடுகிறது. இந்த சைக்கிளை அப்படியே நிறுத்தி விட்டு ஏன் கால்களாலேயே ஓடக்கூடாதெனத் தோன்றியது ஆனாலும் நிறுத்தவில்லை. சைக்கிள் தற்போது அவனுடைய மனைவியின் சாயலில் தெரிந்தது ஹேண்டில் பாரை கைகளாகப் பாவித்துக் கொண்டான் கால்களை அழுத்தி பெடல் சுற்றிக் கொண்டிருப்பதை வலுக்கட்டாயமாகப் புணர்வதாகக் கற்பனை செய்தான் அவனுக்குள் சுகமான காற்று வீசத் தொடங்கியது. நிஜத்தில் ஒவ்வொரு முறை அவனுக்கு அவள் வேண்டுமெனத் தோன்றிய கணங்களை யோசித்துப் பார்த்தான் அத்தனை முத்தங்களும் கசந்தன. பனைமரங்களில் மோதிய காற்று சலசலப்பை ஏற்படுத்தியது அந்தச் சப்தமும் சைக்கிள் மிதிக்கும் ஒலியும் காம நெருப்பில் வெடிக்கும் உடல்களைக் கண்முன் காட்டியது.

அவள் வேண்டுமெனத் தோன்றிய பொழுதிலிருந்து அடைந்து முடியும் வரை நூறு பொய்களைச் சொல்லியிருப்பான். நூறு வெற்று பேச்சுக்கள், நூறு ஒப்பந்தங்கள், நூறு சத்தியங்கள் இத்தனைக்கு மேலும் புதிதாக ஒரு பிரச்சனை புணர்ந்து முடியும் முன்னமே தொடங்கியிருக்கும். வாழ்வில் ஒரு முறைகூட உன்னதமான காமத்தை அடைந்துவிடாத வலியைத் தனது கால்களால் பெடலை அழுத்தி ஆற்றிக்கொண்டான்.

வீட்டினை, தெருவினை, ஊரினைக் கடந்த சைக்கிளிலிருந்து டகடக வென ஏதோ சப்தம் கேட்டது அமர்ந்த படியே குனிந்து பார்க்க முற்பட்டவன் தடுமாறியபடி பேலன்ஸ் செய்ய முயன்று குவித்து வைக்கப்பட்ட மணலில் மோதி இரண்டடி தள்ளி விழுந்தான் கண்ணுக்கெட்டிய தூரத்தில் கண்மாய் ஓடிக்கொண்டிருந்தது. முகம் முழுக்க ஈர மணல் புதைய திரும்பியெழ முயற்சிக்காமல் அப்படியே கிடந்தான் நாசித்துவாரத்தில் மணல் புகுந்து மூச்சிரைத்த பிறகே உதறி எழுந்தான்.  சைக்கிளைப் பார்த்தான் சோர்ந்து கிடந்த மனைவியின் உடல் நினைவுக்கு வந்தது பெண்களின் உடல் சட்டென மாறுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. மிகவும் சிறியதாக வளர்ந்த வயிற்றைத் தொந்தி என்று நண்பன் கேலி செய்ததற்காக இதே கம்மாய்க்குள் பத்து நாட்களாக அதிகாலைகளில் நீந்தி நீந்தி தொப்பையைக் குறைத்தான்.

அவளைக் காதலிக்கும் போது சிகரெட் வாசனை பிடித்திருப்பதாகச் சொன்னவள் கல்யாணத்திற்குப் பிறகு நாறித் தொலைகிறதென்றாள் முத்தங்கள் தூரமாகின. பெண்ணினமே போலித்தனத்தின் உச்சமெனக் கருதினான். நான்கு முறை கருத்தரித்தும் குழந்தை வளர்ச்சி இல்லையெனக் கலைந்து போயின. மருத்துவமனையில் கலைந்த பிண்டங்களை அவனிடம் காட்டிச் செல்லும் செவிலியிடம் இருக்கும் தாய்மை கூட அவளிடம் இல்லையென நம்பினான். அவளுடைய உணவுப் பழக்கங்கள் மாறின அதிகமாகத் தொலைக்காட்சித் தொடர்களை வெறித்தனமாகப் பார்த்தாள்.

காதலிக்கும் பெண்கள் தேவதைகளாக இருக்கிறார்கள், விட்டுக்கொடுத்துப் போகிறார்கள், மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். மடிமேல் தலையைக் கிடத்தி பூனையைத் தடவுவது போல் தடவிக்கொடுக்கிறார்கள். தாமாக முன்வந்து தேநீருக்கான தொகையைச் செலுத்துகிறார்கள், பாவங்களின் மன்னிப்பாக ஆசீர்வதிக்கிறார்கள் ஒருமுறையாவது என்று கேட்டு முடிக்குமுன் தாமாகத் தன்னை கிடத்தித் தருகிறார்கள்.

அவள்களுக்குள் உரிமைப்பட்ட பிறகு என்ன நேர்ந்து விடுகிறது கசாப்புக் கடைக்காரனின் கையிலுள்ள கத்தியைப்போல் நாக்கு மாறிவிட எப்படி முடிகிறது. கண்களை உருட்டி கேள்விகளால் துளைத்தெடுக்கும் உக்தியை எங்கிருந்து பெற்றார்கள்

“ நீ புரிஞ்சுக்கவே மாட்டல்ல “

“ உன்னால உன்னும் புடுங்க முடியாதுன்னு தெரியுதுல்ல அப்றமாட்டியும் எதுக்கு வழியுற”

“ நீ கெட்ட கேட்டுக்கு இதொன்னியுந்தான் கொறச்சல்”

“மூடிட்டுப் போ”

“ கிட்ட வந்தன்னா நா நாண்டுக்குவேன்”

“ என் வாழ்க்கையை வீணாக்கிட்டியே, ஏமாத்திட்டே, கொன்னுட்டே”

அறைக்குள் நான்கு சன்னல்கள் திறந்தே கிடந்த போதும் அவனுக்கு மூச்சு முட்டியது யாருடனும் பேசப் பிடிக்கவில்லை.

குழந்தைகள் கலைந்த விரக்தியில் பேசுகிறாளென சில காலங்கள் பொறுமையுடன் இருந்தவன் அவளுடைய பிறழ்வு செயல்களால் நாளுக்கு நாள் பெரிதாகப் பாதிக்கப்பட்டான். சிலிண்டரில் கேஸ் கசிய தூங்கிக்  கொண்டிருந்தவளை மயிரிழையில் காப்பாற்றினான். திறந்தே கிடந்த வீட்டிலிருந்தப் பொருட்கள் களவு போயின அக்கம்பக்கத்து மனிதர்கள் அவளைக் குறித்து புகார்கள் சொல்லத் தொடங்கினர்.

மருத்துவ கவுன்சிலரின் அறிவுரைப்படி அவளோடு மலைப் பிரதேசங்களுக்குச் சென்றது நினைவு வந்தது. புதியதாகத் துணிமணிகள் எடுத்துக் கொடுத்தான் இருவரும் அழகு நிலையத்திற்குச் சென்று முடியைத்திருத்தி முகத்திற்குச் சில பல திருத்தங்களை செய்து கொண்டனர். தங்களை தாங்களே தாங்கள் இல்லையென நம்பும் யுக்தியைக் கையாண்டனர் புதிய காமம் வேண்டி சென்றவர்களுக்கு பழைய உடல்கள் ஒத்துழைக்காமல் போனது.

அவனுக்கு அது ஒரு பிரச்சனையே இல்லாமல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் பூதமென வளரும் வேட்கையைத் தடுக்க முடியவில்லை. சாதாரணமாக ஒரு பெண்ணால் தன்னை திருப்தி படுத்த முடியவில்லை என்று முடிவு செய்த ஒவ்வொரு ஆணும் எளிதாக இன்னொரு பெண்ணை தேடிச் சென்று விடுவான் இவன் அப்படியுமில்லாமல் தனது மனைவியை வெறுக்கும் முகமாக அனைத்துப் பெண்களையும் வெறுத்தான். எல்லாப் பெண்களுமே அவனது பார்வையில் சந்தர்ப்பவாதிகளாகத் தெரிந்தார்கள்.

அப்பாவின் மரணத்திற்குப் பிறகு அம்மா வீட்டிற்குள்ளாகவே முடங்கிப்போனாள். மளிகைக் கடைக்குப் போவதிலிருந்து மருந்து வாங்கும் வரை எல்லா வேலைகளையும் அவனே செய்ய வேண்டியதாகி இருந்தது.

உள்ளேயே இருந்து அம்மா யானைபோல் வீங்கிப்போனாள். பேசுவதை நிறுத்தினாள், உணவோடு சண்டை போட்டாள் நோய் பெருகியது. அப்பாவை அதிகம் காதலித்ததாகக் கூறியிருந்தாள் அப்பாவின் எச்சில் உணவைத் தவிர எதுவும் ருசிக்கவில்லை என்றாள். படுக்கையில் அப்பாவின் வாசனையை உணர்வதாகச் சொன்னாள் படுக்கையைத் தவிர வேறெங்கும் வர மறுத்தாள். படுக்கையிலேயே கிடந்து தின்று கழித்து ஒருநாள் படுக்கையிலேயே மரித்தும் போனாள். அவனுக்குக் கோபமாக வந்தது. தன்னை நிர்க்கதியாக விட்டுச்சென்ற அம்மாவை மன்னிக்க முடியவில்லை இப்போது மனைவியும் சேர்ந்து கொண்டாள்.

வானத்தைப் பார்த்தான் ஈசல்கள் பறந்தன. போன வாரம் இங்கே வந்த போது இவை இங்கே பறக்கவில்லை. இந்த ஒரு வாரத்திற்குள் வானிலையில் ஏற்பட்ட பெரிய மாற்றம் அவனுடைய மனதின் இறுக்கத்திற்கும் காரணமாக அமைந்தது. மூன்று நாட்களாக விடாமல் பெய்த மழையில் ஊர் சிறிய தீவாக மாறியிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்மாய் நிறைந்திருக்கிறது. சைக்கிளில் அமர்ந்து கால்களால் அழுத்தி கண்மாய்க்குள் அப்படியே மூழ்கிவிடலாமா என்று யோசித்தான். ஆனால் நெடுங்காலத்திற்குப் பிறகு உறங்கிக் கிடக்கும் புதுப்பெண் போல் கிடந்த சைக்கிளைப் பார்த்தவுடன் முடிவைத் தள்ளிப்போட்டு வெறித்துக் கொண்டிருந்தான்.

நண்பனிடம் மதுக்கடை வாசலில் புலம்பிய தருணத்தில் உங்களில் யாருக்குக் குறை இருக்கிறதெனத் தெரிந்து கொள்ளுங்களென்ற உபன்யாசம் கிடைத்தது. அவளுடன் நகரின் பிரசித்தி பெற்ற மருத்துவர்களிடம் பரிசோதனை செய்து கொண்டான். இருவருக்குமே சமபங்காகத் தீர்ப்பு எழுதப்பட்டது. இருவருமே மனநிலை குழம்பி இருப்பதாகவும் தியான வகுப்புக்குச் செல்லவும் பச்சை உணவுகளோடு இரத்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுமாறும், நல்ல இசையையும் வாசனையையும் அனுபவித்து இரசிக்குமாறும் சொல்லப்பட்டது. அதற்குப் பிறகான நாட்களில் அவள் முழுவதுமாக மாறியிருந்தாள் அதுவும் எதிர்மறையாக.

கிழிந்த நைட்டியை நான்கு நாட்களாக அணிந்தாள், குளிக்க மறுத்தாள், வெந்தும் வேகாத உணவைச் சமைத்தாள், தெருமுனை வரை கேட்கும் தொலைக்காட்சி தொடர்களின் சப்தம் அவனுடைய மண்டைக்குள் ஈட்டியை இறக்கியது. வேண்டுமென்றே அடுக்களையில் பாத்திரங்கள் உருண்டன. பக்கத்து வீட்டிலிருந்து விளையாட வரும் சிறுவர்களைக்கூடச் சிடுசிடுவென பேசி விரட்டினாள். இவளையா காதலித்தோமென அவனுக்குள் போராட்டம் நடந்தது.

அவள் மீதுள்ள இரக்கம் வெறுப்பாக மாறியது.

அலைபேசி அழைத்தது.

“ என்னடா”

”சாவட்டும் மனுஷனே செத்துச் சுண்ணாம்பாப் போப்போறான் சனியனுங்க இருந்தா என்ன செத்தா என்ன?”

“………..”

“அப்டியே நீயும் தொலஞ்சி போயிடு திரும்பி வந்துடாத நாலு நாளக்கி அப்புறம் கார்ப்பரேசனே வந்து தூக்கிப் போட்டுடும் “

“…………..”

“ஆங் நாத்தந்தாங்காம அவனுகளே வருவானுக நீ போயி ஒம்பொழப்ப பார்டா”

“………”

“மவனே எதிர்ல இருந்தா தூக்கிப்போட்டு மிதிச்சுருவேன் பாத்துக்கோ போன்னா போய்த்தொலையேன் பரதேசி தேவயில்லாததெல்லாம் பேசிக்கிட்டு”

“…………”

“வரமுடியாதுடா என்ன பண்ணுவ “

“…….”

“ பண்ணுடா முதுகெலும்புல ஒரமிருந்தா பண்ணுடா செத்தப்பயலே”

போனைத் தூக்கி வீசினான் அது சைக்கிளில் பட்டுத் தெறித்தது சைக்கிள் வலியில் முணங்குவதாகத் தோன்றியது அவனையும் அறியாமல் உள்ளுக்குள் பிசைந்தது நகர்ந்து சைக்கிளின் அருகே சென்றான் சைக்கிளைத் தூக்கி மடியில் வைத்தான் ஹேண்டில் பாரின் ஓரத்தில் உடைந்திருந்த இரும்பு பைப் தொடையைக் கீறியது வேட்டி அவிழ்ந்து மணல் மேட்டில் கிடந்தது இரத்தம் கசிந்தபோது என்றோ மனைவி கடித்துக் காயப்படுத்தியது ஞாபகம் வந்தது சிறிதாக ஆசுவாசமானதை உணர்ந்தான் சைக்கிளை சரிப்படுத்த முயற்சித்தான் செய்ன் பதிய மறுத்தது.

“ப்ளீஸ் வாடி” என்றான்.

செய்ன் ஓரளவு உட்கார்ந்தது இரண்டு முனையை இழுத்துக் கட்ட முயற்சிக்கும்போது தன்னை பின்புறமாக அணைக்க முற்படும் அவளுடைய கைகள் நினைவுக்கு வந்தது. வெளிறிய வெள்ளரி போன்ற கைகளால் அவனுடைய கைகளைப் பிணைந்து சொடுக்கெடுக்க இழுப்பாள் பொய்யாக வலிப்பது போல் பாசாங்கு செய்வான் மருண்ட விழிகளால் ஐயோ வலிக்குதாவென கேட்பாள் அதே விழிகளால் கொடு, எடுவென நிறையப் பேசியிருக்கிறாள்.

அவளுடைய வீட்டில் தெரிய வந்தபோது ஊரே திரண்டு இவனை அடிக்க வந்தது. ஏதேதோ காரணங்கள் சொல்லி இவனைக் கோவிலுக்குள் மறைத்து வைத்தாள். கோவிலைத் தவிர எல்லா இடங்களிலும் தேடிக்களைத்துக் கலைந்து சென்றபின் அவனுடைய கையால் தாலி கட்டிக்கொண்டவள் முறைப்படி சட்டப்பூர்வமாகவும் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டாள் அந்த ஊரே வேண்டாமென இந்த ஊருக்கு வந்து வாழ்வைத் தொடங்கினார்கள்.

முதல் இரண்டு கருக்கலைப்பு தானாக நடந்தாலும் யாரோ சூனியம் வைத்திருக்கிறார்களெனப் பிதற்ற ஆரம்பித்தாள் ஊர் மொத்தமும் அவனைக் குத்திக் கொலை செய்யும் கனவோடு அலறியபடி எழுவாள் வாசலுக்கு வெளியே கத்தியோடு நிற்கிறார்களென அரற்றுவாள்.

நேற்றிரவு அரை நிர்வாணமாகப் புறவாசலைத் திறந்து கிணற்றின் மீதேறி நின்றபடி சப்தமாகச் சிரித்துக் கொண்டே இருந்தவளைக் கீழே இறக்கி வீட்டிற்குள் அழைத்துச் செல்வதற்குள் இவனுக்கு உயிர் போய்விட்டது. கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து இவன் மீது அடித்தாள் காதலிக்கும்போது பரிசாகக் கொடுத்த கண்ணாடி பொம்மையால் அவனுடைய தலையைத் தாக்கினாள். இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாதென காலையிலேயே மனநல மருத்துவமனையில் சேர்த்து விட்டிருந்தான்.

ஏற்கனவே இரண்டு முறை அழைத்துச் சென்றுவிட்டு மனமில்லாமல் திரும்ப அழைத்து வந்து விட்டிருந்தான். இம்முறை அவனுக்கு வேறு வழியில்லை முன்னமே மருத்துவர் பரிந்துரைப்படி தூக்க மாத்திரைகளைத் தேநீரில் கலந்து கொடுத்திருந்தான். அவளை விட்டுவிட்டு நீங்கி வரும்போது மனம் கல்லாய் கனத்தது.

அதிகமாக நேசித்தவளையே ஒருகட்டத்தில் கழுத்தை நெறித்து கொலை செய்யலாமா அல்லது இருவருமே தற்கொலை செய்து கொள்ளலாமா என்று எண்ண வைத்த விதியை நொந்தபடி சைக்கிளை மிதித்தான் வரும்போது இருந்த கோபம் வடிந்திருந்தது ஆனாலும் ஊருக்குள் போயாக வேண்டிய உந்துதலில் வேகமாக விரட்டினான்.

நான்கு நாள் மழைக்குப் பிறகு அவனுடைய கோழிப்பண்ணைக்குள் நுழைகின்றான் தூரத்திலேயே அழுகிய வாடை அடித்து குடலை புரட்டியது. மக்கள் கூட்டமாகக் கூடி அவனைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். சிலர் வழக்கம் போல் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தனர். இறக்கத் தளமாகப் பண்ணை அமைத்தால் கோழிகள் மேய்வதற்கு எளிதாக இருக்குமென பார்த்துப் பார்த்து அமைத்த பண்ணையில் தண்ணீர் வடியாமல் தேங்கிக் கிடந்தது. கார்ப்பரேசன் குப்பை வண்டியில் வந்த இரண்டு தூய்மைப் பணியாளர்கள் பாக்கெட்டிலிருந்து பிளீச்சிங் பவுடரை சரமாரியாகத் தூவிக் கொண்டிருந்தார்கள்.

பண்ணையின் கதவைத் திறந்து தண்ணீரில் நடந்து கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிலின் கதவிலுள்ள தாழ்ப்பாளைத் திறந்தான். உள்ளே அத்தனை கோழிகளும் செத்து மிதந்தன வெள்ளை வெளேறென்ற சிறகுகள் தண்ணீரில் ஊறிப்போய் குவிந்து கிடந்தன. ஆயிரக் கணக்கான கோழிகள் போரில் தோல்வியுற்ற வீரர்களைப்போல் மல்லாந்து கிடந்தன.

எப்போது இங்கே வந்தாலும் இவனது கால்களைச் சுற்றிக்கொண்டு கொக்க்க் கொக்க் கொக்க் கொக்கென சுற்றிவரும். அந்தச் சப்தமே அவனுக்கு ஆனந்தத்தைக் கொடுக்குமெனச் சொல்வான். குஞ்சுகள் வளரும் வரை விற்கமாட்டான். கோழிகள் நன்றாக வளர்ந்த பிறகே விற்பனைக்கு வைப்பான். காவலுக்கு இருந்த பையன் நேற்றிலிருந்து அலைபேசியில் அழைத்து இந்த அவலத்தைச் சொல்லியிருந்தான்.

மீண்டும் மீண்டும் கோழிகளைப் பார்த்தான். அரைக்கண்ணில் உலகைப் பார்த்தபடி செத்துக்கிடந்தன. ஒருவேளை தன்னைத் தான் தேடியிருக்குமென நினைத்தான். கை நிரம்பத் திணைகளை வீசும்போது அவைகளின் கண்களைக் கவனித்திருக்கிறான் அதில் ஒரு சேய்மை தெரிந்திருந்தது. இப்போது அது மாபெரும் குற்றவுணர்வைத் தரும் பார்வையாக உருமாறியிருக்கிறது. கொண்டையிலிருக்கும் சிவப்பு வெள்ளைக் கோழிகளுக்கு ரோஜா மலர்வளையம் வைத்தது போல் குவிந்திருந்தது. அவனுக்கு நாற்றம் குடலைப் பிடுங்கியது. கால்கள் முழுக்க கோழிகளின் உடல் நசுங்கிப் பூசியிருந்தது அங்கிருந்த வெளியேற முற்பட்டவனை ஒரு சப்தம் தடுத்து நிறுத்தியது.

இறந்த கோழிகளுக்குள்ளே இருந்து ஒரு கோழி தலையை நிமிர்த்தி கொக் கொக் கொக்கென கத்தியது. அவன் திகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். அது தனது ஈரத்தில் நனைந்த இறக்கையை உதறியபடி அவனை நோக்கி வேகமாக மிக வேகமாக ஓடிவந்து பறக்க எத்தனித்து கீழே விழுந்து மீண்டும் பறக்க எத்தனித்து கீழே விழுந்து அவனுடைய கால்களைக் கொத்தியது

அவனுடைய கால்களை மிகக்கூர்மையாகக் கொத்திக் கொத்தித் தின்றது. அவன் அசையாமல் அப்படியே உறைந்து நின்றான். கால்களில் நரம்புகள் அறுந்து ரத்தம் வழிந்தது. சிறிது நேரத்திலேயே கழுத்தை உதறியபடி உடலைத் தரையில் தேய்த்து இழுத்துக்கொண்டே செத்துப்போனது.

அசைவற்று நின்றவன் குனிந்து மரித்த கோழியைக் கையிலேந்திப் பார்த்தான் அரைக்கண் திறந்தபடி அவனுடைய மனைவியின் முகச்சாயலில் கிடந்தது.


எழுதியவர்

பாலைவன லாந்தர்
பாலைவன லாந்தர்
சென்னையில் வசிப்பவர், கவிஞர், இவரின் ஓநாய் எனும் கவிதைத் தொகுப்பை 2021 ஆம் ஆண்டு யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x