என்னுடைய மூடாக்கிட்ட சறுக்குவண்டி குலுங்கிக்கொண்டே காட்டின் எல்லைக்களைக் கடந்து, வெட்டவெளிச் சாலைப்பகுதிக்கு வந்தபோது, மங்கலான வண்ணத்திலிருந்த விரிந்துபரந்த அடிவானம் எங்களுக்கு முன்பு நீண்டு கிடந்தது. இசய்யா கோச் வண்டிப் பெட்டியின் மீது எழுந்து நின்று, தனது கழுத்தை முன்னால் நீட்டி வியப்புடன் கூறினான்—
“பிசாசே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்! அது ஏற்கெனவே தொடங்கிவிட்டது போலத் தெரிகிறது!”
“அப்படியா?”
“ஆமாம்; அது நகர்ந்துகொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.”
“அப்படியானால், உன்னால் முடிந்தவரை விரைவாக ஓட்டு, இழிந்தவனே!”
“கழுதை போன்ற காதுகளையும், சடை நாய் போன்ற தோலையும் கொண்ட அந்தக் கட்டுறுதியான மட்டக்குதிரை, சாட்டையின் ஒரு சொடுக்கில் முன்னோக்கிக் குதித்தது; பின்னர் ஒருவகையான காயம்பட்ட பார்வையுடன் அதன் பாதத்தைத் தரையில் உதைத்து, தலையை அசைத்து, திடீரென்று நின்றது.
“வா! நான் உன்னிடம் ஒரு தந்திரத்தைக் கையாளுகிறேன்” கடிவாளத்தை இழுத்துபிடித்த இசய்யா சத்தம் போட்டான்.
எழுத்தர் இசய்யா மியாகுனிகாஃப் ஏறத்தாழ நாற்பது வயதான, பார்ப்பதற்குப் பயமுறுத்தும் வகையில் அசிங்கமான ஒரு மனிதன். அவனுடைய இடது கன்னத்திலும் தாடைக்குக் கீழும் மணல் நிறத்தில் தாடி வளர்ந்திருந்தது; அதேவேளையில் அவனுடைய வலது கன்னத்தில் ஒரு பெரிய வீக்கம் இருந்தது, அது அவனுடைய ஒரு கண்ணை மூடியிருந்ததோடு, ஒரு வகையான சுருக்கம் விழுந்த பையைப்போல தோல்பட்டை வரை தொங்கிக்கொண்டிருந்தது. இசய்யா ஒரு மோசமான குடிகாரன், மேலும் ஒரு தத்துவவாதியைப் போலவும் அங்கதக் கவிஞனைப் போலவும் இருந்தான். அவனுடைய சகோதரரைப் பார்க்க அவன் என்னை அழைத்துச் சென்றான் அவனுடைய சகோதரர் என்னுடன் ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் சக ஆசிரியராகப் இருந்தார், ஆனால் அவர் இப்போது எலும்புறுக்கி நோயால் இறக்கும் தறுவாயில் இருந்தார். சாலை மோசமாக இருந்ததாலும், எங்களுடைய அருமையான குதிரை ஒரு கலப்பின விலங்காக இருந்ததாலும், ஐந்துமணி நேரப் பயணத்திற்குப் பிறகும் கூட, நாங்கள் இருபது மைல்கள் கூட கடந்திருக்கவில்லை. இசய்யா அதை அவனுடைய வாய்க்கு வந்த பெயரிலிலெல்லாம் அழைத்தான். “விகாரமான விலங்கே,” “குழவிக்கல்லே”, “ஆட்டுக்கல்லே” இன்னபிற பெயர்களில் அதை அழைத்தான். அந்த அடைமொழிகள் ஒவ்வொன்றும் அதன் உள்ளார்ந்த அல்லது வெளித்தெரியும் பண்புகளைக் குறிப்பதாகவே இருந்தன. அதே வழியில் மனிதர்களும் கூட அதேபோன்ற சிக்கலான பண்புகளுடன் இருப்பதை ஒருவர் காணமுடிகிறது, அதனால் எந்தப் பெயரை ஒருவர் பயன்படுத்தினாலும் ஒருவருக்கு அது பொருந்துவதைப் போல தெரிகிறது. ஒரே ஒரு சொல் “மனிதன்” என்பது மட்டும் அவர்களுக்குப் பொருந்தாதது மாதிரித் தெரிகிறது.
எங்களுக்கு மேலே ஒரு கனமான, சாம்பல்நிற, மேகமூட்டமான வானம் தொங்கிக் கொண்டிருந்தது. எங்களைச் சுற்றிலும் மிகப்பெரிய, பனி மூடிய வயல்கள் நீண்டிருந்தன, அவற்றில் பனியுருகிய பகுதிகள் ஆங்காங்கே கருப்புநிறப் புள்ளிகளாய்த் தெரிந்தன. எங்களுக்கு முன்னே, மூன்று மைல்கள் தொலைவில், வோல்கா நதி ஊடோடிய மலைத் தொடர்களின் நீல நிறக் குன்றுகள் தெரிந்தன. வானத்தின் தாழ்ந்த பகுதி தூரத்தில் தோன்றிய குன்றுகளை அழுத்திக்கொண்டிருந்தது போலக் காட்சியளித்தது. நதியே கூட, அடர்த்தியான புதர்களின் விளிம்பு ஓரங்களால் எங்கள் பார்வையிலிருந்து மறைந்திருந்தது. தெற்கிலிருந்து காற்று வீசிக்கொண்டிருந்தது, அது சிறு, சிறு குட்டைகளின் மேற்பரப்பில் நடுங்கிக் கொண்டிருந்த சிற்றலைகளின் மீது பரவிக்கொண்டிருந்தது; காற்று முழுதுவதும் மந்தமான, கனத்த ஈரப்பதமுள்ளதாகத் தோன்றியது; நீர் குதிரையின் குளம்படிகளின் கீழ் தெரித்தது. இயற்கை வசந்த காலத்தின் பிரகாசமான கதிரவனுக்காக காத்திருந்து சோர்ந்துபோனதைப் போலவும், இதமான சூரியக் கதிர்கள் நீண்ட நேரமாக இல்லாமல் போனதால் அது அதிருப்தியடைந்தது போலவும், அதனால் அது மனச் சோர்விலும் அழுத்தத்திலும் இருந்தது போலவும் இருந்தது, கண்ணுக்குத் தெரிந்த எல்லாவற்றிலும் ஒரு வகையான சோக உணர்வு தெரிந்தது.
“நதியின் வெள்ளப் பெருக்கு நம்மைத் தடுத்துநிறுத்திவிடும்!” கோச் வண்டிப் பெட்டியின் மேலும் கீழுமாகக் குதித்துக்கொண்டே இசய்யா கத்தினான். “நாம் அங்கு போய்ச் சேருவதற்குள் ஜேகப் இறந்துவிடுவார்; பின்னர் நமது பயணம் பயனற்றதாக, உடலுக்கு நோவைத் தருவதாக ஆகிவிடும். ஒருவேளை அவரை உயிருடன் பார்க்க முடிந்தாலும் கூட, அதனால் என்ன நன்மை விளையப் போகிறது? இறப்பின் தறுவாயில் உள்ள ஒருவரின் முன்பு நிற்பதற்கு யாரும் தம்மை நிர்பந்தித்துக்கொள்ளக் கூடாது; இறந்துகொண்டிருக்கும் நபரைத் தனியே விட்டுவிட வேண்டும், அதனால் அவருடைய சிந்தனைகள் அவருடைய ஆன்மாவின் தேவைகளைக் கருத்தில் கொள்வதிலிருந்து திசைதிருப்பப்படாமல் இருக்கும், அல்லது அவரது மனம் இதயத்தின் ஆழத்திலிருந்து அற்ப விடயங்களைச் சிந்திப்பதிலிருந்து மாறக்கூடும். உண்மையில், இறந்துகொண்டிருப்பவர் முன்பு, உயிருடன் இருக்கும் நாம் அற்பமானவர்களே தவிர வேறு யாருமல்ல, மேலும் இறந்துகொண்டிருப்பவருக்கு நம்மால் எந்தப் பயனும் இல்லை….நாம் அவர்களுக்கு அருகில் இருந்துவர வேண்டும் என்று நமது வழக்கம் கோருகிறது என்பது உண்மைதான்; ஆனால் நமது குதிகால்களிலிருக்கும் மூளைகளுக்குப் பதிலாக, நமது தலைகளிலிருக்கும் மூளைகளைப் பயன்படுத்துவோமானால், இந்தப் பழக்கம் உயிருடன் இருப்பவருக்கும் நல்லதல்ல, இறந்து கொண்டிருப்பவருக்கும் நல்லதல்ல, மாறாக அது மனதுக்கு ஒரு கூடுதல் சித்திரவதை தான் என்பதை விரைவாகக் கண்டுகொள்ள முடியும். வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் இறப்பைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது, அல்லது அது எங்கோ அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நினைவில் கொண்டுவரக் கூடாது; அப்படிச் செய்வது அவர்களுக்கு நல்லதல்ல, ஏனென்றால் அது அவர்களுடைய மகிழ்ச்சிகளை இருளில் ஆழ்த்திவிடுகிறது. ஹால்லோவா! மட்டியே! உனது கால்களை இன்னும் சுறுசுறுப்பாய் எடுத்து வை! உயிரோடிருப்பதைக் காட்டு!”
இசய்யா தனது சலிப்பூட்டும், அடர்த்தியான, கரகரப்பான குரலில் பேசினான், மேலும் கந்தலான கிராமப் போருடை போர்த்திய அவனுடைய அருவருப்பான மெலிந்த உருவம் கோச் பெட்டியின் மேல் முன்னும் பின்னுமாக மிகவும் ஆடிக்கொண்டே வந்தது. அவ்வப்போது, அவன் தனது இருக்கையிலிருந்து குதித்து, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆடிக்கொண்டே இருந்தான், பின்னர் தலையை மேலும் கீழுமாக ஆட்டிக் கொண்டான், அல்லது பின்புறமாகக் குலுக்கிக் கொண்டான். அவனது அகன்ற விளிம்புள்ள கருப்புத் தொப்பியை – மதகுரு பரிசளித்தது – கச்சை கொண்டு தாடையில் கட்டியிருந்தான், அந்தக் கச்சைகளின் தொங்கிக்கொண்டிருந்த பகுதிகள் காற்றில் அவன் முகத்தில் அடித்துக்கொண்டிருந்தன, அவன் தனது வினோதமான வடிவத்திலிருந்த தலையை உலுக்கிக்கொண்டு, குதித்து, சூளுரைத்துப் பின்னர் இருக்கையின் மீது திருகிக்கொண்டு அமர்ந்தான். நான் அவனைக் கவனித்தபோது, மிகவும் அற்பமான விடயங்களுக்கு மனிதர்கள் எந்த அளவுக்குத் தேவையற்ற வகையில் தொல்லைப்பட்டுக் கொள்கிறார்கள் என்று நினைத்தேன். பொதுவான சிறிய சிறிய தீங்குகள் என்னும் அற்பப் புழு நம்மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றால், நாம் நம்முடைய தீவிரமான துரதிர்ஷ்டம் என்னும் மாபெரும் பயங்கரப் பாம்பினை எளிதாக நசுக்கிவிடலாம்!
“அது போய்விட்டது!” இசய்யா வியப்புத் தெரிவித்தான்.
“உன்னால் அதைப் பார்க்க முடியுமா?”
“குதிரைகள் புதர்களின் அருகே நிற்பதை என்னால் பார்க்க முடிகிறது. அவற்றுடன் மனிதர்களும் இருக்கிறார்கள்!” இசய்யா ஒரு அவநம்பிக்கையைக் காட்டும் அங்க அசைவுடன் ஒருபக்கமாகத் துப்பினான்.
“அதன் பொருள் கடந்து செல்வதற்கு வாய்ப்பில்லை என்பதுதானே?”
“ஓ, எப்படியாவது நாம் கடந்து சென்றாக வேண்டும்! ஆம், பனி ஓடையில் உருகிச் சென்றதும், நாம் கடந்துசெல்ல வேண்டும்தான். ஆனால் அதுவரை நாம் என்ன செய்வது? அதுதான் இப்போது பிரச்சனை! நான் ஏற்கெனவே பசியுடன் இருக்கிறேன்; என்னால் பேசக்கூட முடியாத அளவுக்குப் பசியாக இருக்கிறேன்! நமக்கு சாப்பிட அதாவது கொண்டுவந்திருக்க வேண்டும் என்று உன்னிடம் சொன்னேன். ‘இதற்கு மேல் ஓட்ட முடியாது!’ சரி, இப்போது நானே விரட்டப்பட்டுவிட்டேன்!”
“உன்னைப் போலத்தான் எனக்கும் பசிக்கிறது! நீ உன்னுடன் சாப்பிட எதுவும் எடுத்துவரவில்லையா?”
“நான் ஏதாவது எடுத்துவர மறந்துவிட்டிருந்தால் என்ன?” இசய்யா குறுக்கிட்டுப் பதிலளித்தான்.
அவனது தோள்களுக்கு மேலே பார்த்து, பல இருக்கைகள் கொண்ட ஒரு மூடுவண்டியை, மூன்று குதிரைகள் பூட்டக்கூடிய இழுவையில், ஒரு ஜோடிக் குதிரைகள் இழுத்துவருவதைக் கண்டான். குதிரைகளின் தலைகள் எங்களைப் பார்த்துத் திரும்பின, அவற்றுக்குப் பக்கத்தில் பல மனிதர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்; அவர்களில் ஒருவர் சிவப்பு மீசையுடன், சிவப்புப் பட்டையுடன் கூடிய தொப்பியும், இரசியப் பிரபுக்குலத்தின் அடையாள வில்லையையும் அணிந்திருந்த ஓர் உயரமான இரசிய அதிகாரி; இன்னொருவர் ஒரு நீண்ட மென்மயிர்த்தோல் மேலங்கி அணிந்திருந்தார்.
“அவர்கள் நமது மாவட்ட நீதிபதி சூட்சாப்பும் அரவை ஆலை உரிமையாளர் மாமாயெப்பும்” இசய்யா மரியாதையைக் குறிக்கும் தொனியில் முணுமுணுத்தான் .பின்னர் குதிரையைப் பார்த்துச் சத்தமிட்டான், “ஊவா, எனது சேவையாளே!’
பின்னர், அவனது தொப்பியைத் தலைக்குப் பின்னால் தள்ளிவிட்டுக்கொண்டு, மூன்று சக்கர இழுவை வண்டிக்கு அருகில் நின்றிருந்த பருமனான வண்டிக்காரரரிடம் கேட்டான்: “நாம் மிகவும் தாமதமாக வந்துவிட்டோம் என்று தெரிகிறது, அப்படித்தானே!”
அந்த வண்டிக்காரன் இசய்யாவின் முட்டைவடிவத் தலையை சிடுசிடுப்புடன் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, பதில் அளிக்கும் விருப்பமில்லாமல் திரும்பிக்கொண்டான்.
“ஆமாம், நீங்கள் தாமதாகத்தான் வந்துள்ளீர்கள்,’ அந்த அரவை ஆலை உரிமையாளர் புன்னகையுடன் கூறினார். அவர் குள்ளமாகவும், திடகாத்திரமானவராகவும் இருந்தார்; மிகவும் சிவந்த முகத்துடனும், சூழ்ச்சியாகச் சிரிக்கும் கண்களுடனும் இருந்தார்.
மாவட்ட நீதிபதி அவரது வண்டியின் படிக்கட்டுக்கு அருகில் சாய்ந்துகொண்டு, சிகரெட் புகைத்துக்கொண்டு, மீசையை முறுக்கியவாறே தனது முழு புருவங்களுக்கு அடியிலிருந்து எங்களை ஆழ்ந்து நோக்கினார். அந்தக் குழுவில் வேறு இருவரும் — சுருட்டைத் தலையுடன் உயரமாக இருந்த மாமாயெப்பின் வண்டி ஓட்டுனர் மற்றும் வளைந்த காலுடன் பரிதாபமாகத் தோன்றிய ஒரு விவசாயியும் இருந்தனர். அந்த விவசாயி, இறுகப் போர்த்திய கிழிந்துபோன செம்மறியாட்டுத் தோல் மேலங்கியுடன் இருந்தார். அவரது உருவம் குனிந்து குனிந்து வணங்கி நிரந்தரமாக வளைந்து போனதுபோல இருந்தது. அது இந்தக் கணத்தில் எங்களுக்குச் சான்றாகத் தெரிந்தது. அவரது சிறிய, சுருங்கிய முகம் சிறிதளவாக நரைத்த தாடியால் மூடப்பட்டிருந்தது, அவரது கண்கள் அவரது சுருங்கிய முகத்துக்குள் ஏறத்தாழ மறைந்துவிட்டிருந்தன, அவரது மெலிந்த நீலநிற உதடுகள் புன்முறுவல் பூத்தவாறு இருந்தன, அந்தப் புன்முறுவல் ஒரே நேரத்தில் மரியாதையையும், ஏளனத்தையும், முட்டாள்தனத்தையும், சூழ்ச்சியையும் தெரிவிக்கக்கூடியதாக இருந்தது. அவர் தனது கால்களை உடலுக்கடியில் வைத்துக்கொண்டு, ஒரு மனிதக்குரங்கின் தோற்றத்தில் உட்கார்ந்திருந்தார்; அவரது தலையை அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் திருப்பியபோது, அவர் தனது கண்களைக் காட்டாமலே, பக்கப்பார்வையில் எங்களில் ஒவ்வொருவரையும் பார்த்தார். அவரது கந்தலாகிப் போயிருந்த செம்மறியாட்டுத் தோல் மேலங்கியின் கிழிசல்கள் வழியாக கம்பளிநார் கொத்துக்கொத்தாக நீட்டிக்கொண்டிருந்தது, ஒட்டுமொத்தமாக அவர் ஓர் ஒற்றைத் தோற்றத்தை – அவரை விழுங்கவிருந்த ஓர் அரக்கனின் இரும்புப் பற்களிலிருந்து தப்பிப்பதற்கு முன்பு பாதி மெல்லப்பட்ட நிலையில் இருந்ததைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினான்.
அந்த ஆற்றின் உயரமான கரைக்குப் பின்னால் நாங்கள் நின்றிருந்தோம், அது காற்றின் வீச்சுக்களிலிருந்து எங்களுக்கு பாதுகாப்பு அளித்துக்கொண்டிருந்தது, இருந்தாலும் அது ஆற்றை எங்கள் பார்வையிலிருந்து மறைத்துக்கொண்டிருந்தது.
“அந்தப் பக்கம் நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்க்கப்போகிறேன்,” என்று கூறிக்கொண்டே கரையின் மீது ஏறத்தொடங்கினான் இசய்யா.
மாவட்ட நீதிபதி சோர்வுற்ற அமைதியுடன் அவனைப் பின்தொடர்ந்தார்; இறுதியாக, வணிகரும் நானும், மகிழ்ச்சியற்றுத் தோன்றிய, தனது கைகளையும் கால்களையும் நகர்த்திக்கொண்டே வந்த விவசாயியுடன் பின்னால் சென்றோம். நாங்கள் அனைவரும் கரையின் உச்சியை அடைந்தபோது, அனைவரும் மீண்டும் கீழே அமர்ந்தோம், ஏராளமான காக்கைகளைப் போல இருட்டாகவும் மங்கலாகவும் இருந்தது. எங்களிடமிருந்து மூன்று அல்லது நான்கு கெஜ தூரத்தில், எங்களுக்குக் கீழே எட்டு அல்லது ஒன்பது கெஜ தூரத்தில், ஒரு அகன்ற நீலநிறக் கோடு போல ஆறு இருந்தது, அதன் மேற்பரப்பு சுருக்கம் சுருக்கமாகவும் ஆங்காங்கே உடைந்த பனியின் குவியல்களுடனும் இருந்தது.
இந்தச் சிறிய பனிக்குவியல்கள் ஒரு பார்க்கச் சகிக்காத சிரங்குப் புண்ணின் தோற்றத்தில் இருந்தன, அதன் இரகசிய நகர்வுகளின் கீழ் மறைந்திருந்த ஒரு வெல்லமுடியாத சக்தியுடன் எப்போதும் மெதுவாக முன்னோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. ஈரக்காற்றின் ஊடாக அரவும், சுரண்டும் சத்தம் கேட்டது.
“கிரீல்கா!” மாவட்ட நீதிபதி கத்தினார்.
மகிழ்ச்சியற்றுத் தோன்றிய விவசாயி குதித்தெழுந்தார், அவரது தொப்பியை அகற்றிவிட்டு, நீதிபதிக்கு முன்பு தாழ்ந்து பணிந்தார்; அதேநேரத்தில் தன் தலையைத் துண்டிப்பதற்கு தாமே முன்வரும் தோற்றத்தின் தன்னை வைத்துக்கொண்டார்.
“சரி, அது விரைவில் வந்துவிடுமா?”
“அது உங்கள் பெருமையை நீண்ட காலத்திற்குத் தக்கவைக்காது; அது நேரடியாகக் கோரும். பாருங்கள், உங்கள் பெருமை: இந்த வழியில்தான் அது வருகிறது. இந்த விகிதத்தில் அது சரியான நேரத்தில் சென்றடைவதற்கு உதவாது. அங்கே சிறிது உயரத்தில் ஒரு சிறிய நிலப்பகுதி இருக்கிறது; அது அதைத் தொட்டால் அனைத்தும் சரியாக இருக்கும். இது அனைத்தும் அந்தப் பெரிய பனிப் பாளத்தைச் சார்ந்திருக்கிறது. அது நிலப்பகுதியில் ஒரு பாதையில் பொருந்திக் கொள்ளுமானால், பின்னர் அனைத்தும் மேலே உயர்ந்துவிடும், ஏனென்றால் படகு குறுகிய பாதையில் நசுக்குண்டுவிடும், மேலும் அனைத்து இயக்கமும் நிறுத்தப்பட்டுவிடும்.”
“போதும்! நாக்கை அடக்கு!”
அந்த விவசாயி நாக்கைக் கடித்துக்கொண்டு, அமைதியானர்.
“பிசாசே அனைத்தையும் எடுத்துக்கொள்!” நீதிபதி கோபத்துடன் கத்தினார். “முட்டாளே, இந்தப் பக்கம் இரண்டு படகுகளை அனுப்பும்படி உன்னிடம் சொன்னேன், இல்லையா?”
“ஆமாம், மேதகு அய்யா, சொன்னீர்கள்,” தான் குற்றச்சாட்டுக்குத் தகுதியானவர்தான் என்ற எண்ணத்துடன் விவசாயி பதிலளித்தார்.
“சரி, அப்படியானால் நீ அதை ஏன் செய்யவில்லை?”
“எனக்கு நேரமில்லை, ஏனென்றால் அது திடீரென்று நடந்துவிட்டது.”
“முட்டாளே!” பதிலளித்த நீதிபதி, பின்னர் மாமாயெப் பக்கம் திரும்பி, “இந்த முட்டாள் கழுதைகளால் சாதாரண மொழியைக் கூடப் புரிந்துகொள்ள முடியவில்லை.”
“ஆம், அது உண்மைதான்; ஆனால் அவர்கள் விவசாயிகள் தானே,” நல்லெண்ணம் கொண்ட பாவனையில் ஏளனமாக மாமாயெப் கூறினார். “அவர்கள் அற்ப இனத்தவர் – மரமண்டைகள்; ஆனால் ஜெம்ஸ்டோவின் இந்தப் புதுப்பிக்கப்பட்ட ஆற்றல், இந்தப் பள்ளிகள் அதிகரிப்பு, இந்த அறிவொளி, இந்தக் கல்வி ஆகியவற்றை நம்புவோம்—–“
“பள்ளிக்கூடங்களா! ஓ, ஆமாம், உண்மைதான்! வாசிப்பு அறைகள், மந்திர விளக்குகள்! ஓர் அருமையான கதை! இதற்கெல்லாம் என்ன பொருள் என்று எனக்குத் தெரியும். ஆனால், உனக்கே தெரியும், நான் கல்விக்கு எதிரி அல்ல. ஒரு நல்ல சவுக்கடி, வேறு எதையும் விட விரைவாகவும் சிறப்பாகவும் கற்றுக்கொடுக்கிறது என்பது எனக்கு அனுபவத்தில் தெரியும். பிரம்புத் தடிகள் விவசாயிகளுக்கு செலவு வைக்காது, அதற்கு மாறாக கல்வி தோலை உரித்துவிடுகிறது, அவனுக்கு எந்த ஒரு தடியையும் விட அது கூடுதல் துன்பத்தை ஏற்படுத்துகிறது. தற்போதைய காலம் வரை கல்வி விவசாயிக்கு அழிவைத் தவிர வேறு எதையும் கொண்டுவரவில்லை. இது எனது கருத்து. இருப்பினும், அவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுவதை நான் ஆட்சேபிப்பதில்லை; சிறிது பொறுந்திருங்கள் என்று மட்டும் சொல்கிறேன்.”
“அதுதானே!” உடன்பாட்டைக் குறிக்கும் ஒரு தொனியில் அந்த வணிகர் வியப்புத் தெரிவித்தார். “சிறிது காத்திருப்பது உண்மையில் நல்லதுதான்; இப்போது விவசாயிக்கு கடினமான காலம். அறுவடை பொய்த்துப் போகிறது, நோயும் பிணியும், துரதிர்ஷ்டவசமான அவர்களுடைய குடிப்பழக்கமும், இவையெல்லாம் அவர்களுடைய வளமையைச் சீர்குலைக்கின்றன, இவற்றுக்கெல்லாம் மேலே, அவர்கள் பள்ளிகளையும் வாசிப்பு அறைகளையும் கட்டித் தள்ளுகிறார்கள்! இத்தகைய சூழ்நிலைகளில் விவசாயிக்கு என்ன செய்ய வேண்டும்? அவனுக்குச் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை, என்னை நம்புங்கள்.”
ஆமாம்; உங்களைவிட யாருக்கும் நன்றாகத் தெரியாது, நிட்ரிடா பாவ்லோவிச், இசய்யா குறிப்பிட்டான். அவனுடைய குரலின் தொனி உறுதியாக இருந்தது, ஆனால் விழிப்புணர்வுடன் கூடிய அடக்கத்துடன் இருந்தது, மேலும் அவன் பேசிவிட்டு, பயபக்தியுடன் பெருமூச்சுவிட்டான்.
“நான் அப்படித்தான் நினைக்க வேண்டும்! அவர்கள் மத்தியில் நான் பதினேழு வருடங்கள் இருந்துவரவில்லையா? கல்வியைப் பொருத்தவரை, எனது கருத்து இதுதான்: சரியான நேரத்தில் கல்வி அளிக்கப்பட்டால், சரிதான், அப்போது அது மக்களுக்குப் பயனளிக்கலாம். ஆனால் – இந்த வெளிப்படுத்தும் முறைக்கு மன்னிக்கவும் – எனக்கு வயிறு காலியாக இருந்தால், வழிப்பறியையும் திருட்டையும் தவிர வேறு எதையும் நான் கற்றுக்கொள்ள விரும்பாமல் போகலாம்.”
“இல்லை. உண்மையில், கல்வியால் எந்த நன்மையும் இல்லை,” ஒரு நல்ல இயல்புள்ள மரியாதையான வெளிப்பாட்டுடன் இசய்யா உரத்துத் தெரிவித்தான்.
மாமாயெப் கடைக்கண்ணால் அவனைப் பார்த்து, தனது உதடுகளைச் சுருக்கிக்கொண்டார்.
“உன்னிடத்தில் ஒரு விவசாயி, அந்தக் கிரீல்கா, இருக்கிறான்!” கத்திய நீதிபதி அவரது முகத்திலும் குரலிலும் ஏறத்தாழ பயபக்தியுடன் எங்களை நோக்கித் திரும்பினார். “தயவு செய்து, சிறிது இவனைப் பாருங்கள். இவன் ஒரு சாதாரண விவசாயிதான் – அவனொரு அரிய வகைப்பட்ட விலங்கு! கிரிகோரி நீராவிப் படகில் தீப்பற்றிய போது இந்த அழுக்குப்பிடித்த கந்தலுடைக்காரன், இந்த ஈ யாருடைய உதவியும் இல்லாமல் ஆறுபேரைக் காப்பாற்றினான். அப்போது இலையுதிர்காலத்தின் பிற்பகுதி; கொட்டிய மழையில் தோல் வரை நனைந்து, நான்கு மணிநேரம் இவன் உயிரைக்கொடுத்துப் போராடி அவர்களை மீட்டான். இவன் ஆறு உயிர்களைக் காப்பாற்றிவிட்டு, அமைதியாக மறைந்துவிட்டான்; அவர்கள் எல்லா இடங்களிலும் இவனைத் தேடினார்கள்; ஏனென்றால் அவர்கள் இவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்கள், இவனது துணிச்சலுக்காக இவனுக்கு ஒரு பதக்கம் கொடுக்க கொடுக்க விரும்பினார்கள்; கடைசியில் இவனைக் கண்டுபிடித்தார்கள், இருண்ட காடுகளுக்குள் சென்று மறைந்துகொண்டான். இவன் தன்னுடைய விவகாரங்களை எப்போதும் இவனே பார்த்துக்கொண்டான்; சிக்கனமாக இருந்துவருகிறான்; தன்னுடைய இளம் மருமகளைக் கல்லறைக்கு அனுப்பிவிட்டான்; இவனுடைய முதிய மனைவி சில நேரங்களில் இவனை விறகுக் கட்டையால் அடிப்பாள்; இவன் ஒரு குடிகாரன், அதேநேரத்தில் பயபக்தியுள்ளவன். இவன் திருச்சபை சேர்ந்திசையில் பாடுவான், இவன் நிறையத் தேனீக்களுடன் ஒரு தேனீக் கூடு வைத்திருக்கிறான்; இதற்கெல்லாம் கூடுதலாக இவன் ஒரு மிகப்பெரிய திருடன்! ஒருமுறை ஒரு சரக்குப் படகு இங்கு நின்றிருந்தது, இவன் திருடும்போது பிடிபட்டுவிட்டான்; மூன்று பைகள் நிறைய பிளம் பழங்களை எடுத்துக்கொண்டிருந்தான். இவன் எப்படிப்பட்ட ஆர்வமூட்டும் ஆளாக இருக்கிறான், பாருங்கள்!”
இந்தப் பேச்சு எங்கள் கவனத்தையெல்லாம் அந்தப் புத்திசாலி விவசாயி மீது திருப்பியது. அவன் கண்களைத் தாழ்த்திக்கொண்டு, தீவிரமாக மூக்கை உறிஞ்சிக்கொண்டு எங்கள் முன்பு நின்றான். அவனுடைய பார்வை மாவட்ட நீதிபதியின் அழகான காலணி மீது நிலைத்திருந்தது, அவனது வாயின் மூலையில் இரண்டு சிறிய சுருக்கங்கள் எதையோ தெரிவிக்கும் வகையில் இருந்தன, இருந்தாலும் அவனுடைய உதடுகள் உறுதியாக மூடியே இருந்தன, மேலும் அவனுடைய முகபாவம் வெறுமனே இருந்தது, எதையும் தெரிவிப்பதாக இல்லை.
“வாருங்கள், அவனைப் பரிசோதித்துப் பார்ப்போம். சொல்லு, கிரீல்கா வாசிப்பதற்குக் கற்றுக்கொள்வதிலிருந்து என்ன நன்மைகளைப் பெறமுடியும்?”
கிரீல்கா பெருமூச்சுவிட்டான், உதடுகளை அசைத்தான், ஆனால் அவற்றிலிருந்து எந்தச் சொல்லும் வரவில்லை.
“இப்போது வா, உன்னால் படிக்க முடியும்!” இன்னும் உத்தரவிடும் தொனியில் நீதிபதி தொடர்ந்தார். படிப்பதற்குக் கற்றுக்கொள்வது உனக்கு வாழ்வதை எளிதாக்குமா, இல்லையா என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும்.”
“அது சூழ்நிலைமைகளைப் பொருத்தது,” கிரீல்கா தனது தலையை இன்னும் கீழாகத் தனது மார்புக்குத் தாழ்த்திக்கொண்டு சொன்னான்.
“ஆனால் இதைவிடத் திட்டவட்டமாக அதைப் பற்றிச் சொல்லவேண்டும். நீ எழுதவும் படிக்கவும் முடியும், அதனால் அதன் மூலம் எந்த ஆதாயத்தைப் பெறமுடியும் என்று உறுதியாக உன்னால் சொல்லமுடியும்?”
“நன்மை, ஒருவேளை இருக்கலாம். ஆனால் அதற்கு மேலும் இருக்கிறது என்று நினைக்கிறேன்; அதாவது, அதைச் சரியான கருத்தில் கருதிப்பார்த்தால், எங்களுக்குக் கற்றுக்கொடுப்பவர்கள் அதன்மூலம் ஓர் ஆதாயத்தைப் பெறலாம்.”
“அதில் அவர்கள் என்ன ஆதாயத்தைப் பெறமுடியும்? “அவர்கள்” என்று யாரைச் சொல்கிறாய்?”
“நல்லது, நான் ஆசிரியர்களைச் சொல்கிறேன், அல்லது ஜெம்ஸ்டுவோ, அல்லது வேறு யாராவதாக இருக்கலாம்.”
“முட்டாள் பூச்சியே! ஆனால் நான் உன்னைப் பற்றிக் கேட்கிறேன்; ஏனென்றால் உனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தப் பயனும் இல்லையா?”
“அது உங்கள் விருப்பம் போல, மரியாதைக்குரிய அய்யா.”
“அதெப்படி, நான் விரும்புவது போல?”
“ஏன், உறுதியாக நீங்கள் விரும்புவது போலத்தான். பாருங்க நீங்கள் எங்கள் எஜமானர்கள்.”
“போய்த் தொலை!”
நீதிபதியின் மீசையின் நுனிகள் நடுங்கின, அவரது முகம் மிகவும் சிவந்துபோனது.
“சரி, பாருங்கள், அவன் எதுவும் சொல்லவில்லை, ஆனால் அவன் உங்களுக்குச் சரியாகப் பதில் சொல்லியிருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். இல்லை. கனவானே, விவசாயிக்கு ஆனா, ஆவன்னா கற்றுக்கொடுப்பதற்கு இன்னும் காலம் கனியவில்லை; அவன் முதலில் முழுமையாக ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். விவசாயி என்பவன் ஒரு குறும்புக்காரக் குழந்தையே தவிர வேறு ஒன்றுமில்லை; அப்படித்தான் அவன் இருக்கிறான். இருந்தபோதிலும், அவனை வைத்துத்தான் அடித்தளமே இடப்படுகிறது. உங்களுக்குப் புரிகிறதா? அவன்தான் அடித்தளம், அரசு என்னும் பிரமிடின் அடித்தளம். அந்த அடித்தளம் திடீரென்று குலுங்குமானால், அரசில் எப்படிப்பட்ட தீவிரமான குழப்பம் ஏற்படும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள் முடியவில்லையா?”
“அது முற்றிலும் உண்மைதான்,” மாமாயெப் பதிலிறுத்தார். “உறுதியாக, அடித்தளங்கள் பலமாக வைத்திருக்கப்பட வேண்டும்.”
எனக்கும் விவசாயிகளின் இலட்சியத்தில் ஆர்வமுண்டு என்பதால், நான், இந்தக் கட்டத்தில், உரையாடலில் சேர்ந்துகொண்டேன், மேலும் குறுகிய நேரத்தில் நாங்கள் நால்வரும் விவசாய வர்க்கத்தின் எதிர்காலம் பற்றி சூடாகவும் ஆர்வத்துடன் முடிவு செய்துகொண்டிருந்தோம். ஒவ்வொரு தனிநபரின் உண்மையான வேலை அவருடைய அண்டை வீட்டாரின் நடத்தைக்கான விதிகளை வகுப்பதாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது; மேலும் நாம் அனைவருமே தம்மை முன்னிறுத்திக்கொள்ளும் தன்முனைப்பாளர்கள் தாம் என்று அறிவிக்கும் அந்தப் போதகர்கள் தவறாக இருக்கிறார்கள்; ஏனென்றால் மனித இனத்தை மேம்படுத்துவதற்காக, நமது பிறர் நலன் கருதும் விருப்பங்களில், நமது சொந்தக் குறைபாடுகளை மறந்துவிடுகிறோம்; மேலும் இதுவே உலகின் பெரும்பகுதி தீமை நம்மிடமிருந்து மறைக்கப்படுகிறது என்பதற்கான காரணமாக இருக்கலாம். இவ்விதமாக, நாங்கள் வாதிடுவதைத் தொடர்ந்தோம், அதேநேரத்தில் எங்கள் கண்களின் முன்பே ஆறு அதன் பாம்பு போன்ற நெளிந்து செல்லும் போக்கில் அதன் குளிர்ந்த சாம்பல் நிறப் பனிப் படலங்களைக் கரைகளில் மோதவிட்டு ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது.
அதே முறையில் எங்கள் உரையாடலும் ஒரு கோபங்கொண்ட பாம்பைப் போல சுழன்று, சுழற்றிக் கொண்டிருந்தது, அதன் இரையைப் பற்றிக்கொள்ளும் முயற்சியில் ஒருமுறை இந்தப் பக்கம் படமெடுத்து ஆடியது, பின்னர் அந்தப் பக்கம் ஆடியது, இருந்தபோதிலும் இரை தொடர்ந்து தப்பித்துகொண்டே இருந்தது. மேலும் எங்கள் உரையாடல் அனைத்தின் இலட்சியமும் விவசாயிதான், அவன் அங்குதான் மணல்படர்ந்திருந்த ஆற்றங்கரையில், அமைதியாக அமர்ந்திருந்தான்; தூரம் ஒன்றும் அதிகமில்லை, அவன் முகத்திலும் எந்தப் பாவனையும் இல்லை – அவன் யார், அவன் தொழில் என்ன?
மாமாயெப் உரையாடலை மீண்டும் தொடர்ந்தார்.
“இல்லை, நீங்கள் சொல்வது போல அவ்வளவு ஒன்றும் முட்டாள் அல்ல; அவன் உண்மையில் மூடன் அல்ல; அவனை ஏமாற்றுவது அப்படி ஒன்றும் எளிதல்ல.”
மாவட்ட நீதிபதி தனது நிதானத்தை இழப்பவர் போலத் தெரிந்தார். “அவன் ஒரு முட்டாள் என்று நான் சொல்லவில்லை; அவன் ஒழுங்குக்கட்டுப்பாட்டை இழக்குமாறு ஆக்கப்பட்டிருக்கிறான் என்றுதான் சொல்கிறேன்!” “என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். அவனுக்கு அவன் மீதே கட்டுப்பாடில்லை. குழந்தைகள் மீது அதிகாரம் செலுத்துவது அவசியமாக இருப்பது போன்ற கட்டுப்பாடு இல்லை—அங்குதான் தீமையின் வேரே இருக்கிறது.”
“உரிய கருத்து வேறுபாடு அனைத்துடனும், அவனிடம் எந்தத் தவறும் இல்லை என்று சிந்திக்கக் கோருகிறேன்! நம் அனைவரையும் போல, அவன் கடவுளின் குழந்தைகளில் ஒருவன்; ஆனால், அதைக் குறிப்பிட்டதற்காக ஒருவேளை நான் மன்னிப்புக் கோர வேண்டியிருக்கலாம், அவன் அவனது உணர்வுகளால் சித்திரவதைப்படுகிறான். அதாவது, மோசமான அரசாங்கம் அவனிடமிருந்து எதிர்காலம் பற்றிய அனைத்து நம்பிக்கையையும் பறித்துவிட்டது.”
இசய்யா தான் எப்போதும் பெருமூச்சு விட்டுக்கொண்டு, அடக்கமான, மரியாதையான குரலில், சிரித்தமுகத்துடன், மென்மையாகப் பேசினான். யாரையும் நேராகப் பார்ப்பதற்கு அஞ்சியது போல, அவனது கண்கள் பாதி மூடியிருந்தன; அவனது தலையின் பக்கவாட்டில் இருந்த வீக்கம் சிரிப்பால் பொங்கி வழிந்து, பெரிய ஓசையுடன் வெடிக்கத் தயாராக இருந்தது போலவும், அப்படிச் செய்வதற்குத் துணிவு இல்லாதது போலவும் தெரிந்தது. “விவசாயிக்கு பசியைத் தவிர வேறு எதுவும் பொருட்டல்ல என்று எனது பங்குக்கு நான் வலியுறுத்துகிறேன். அவனுக்கு நல்ல உணவைக் கொடுங்கள், அவன் விரைவில் நாம் விரும்பும் அனைத்து வகையிலும் இருப்பான்.”
“அவன் பட்டினியிலிருக்கிறான் என்று நம்புகிறீர்களா! பிசாசின் பெயரில் கேட்கிறேன், உங்களை அப்படி நினைக்கச் செய்வது எது?” நீதிபதி எரிச்சலுடன் கேட்டார்.
“என்னைப் பொருத்தவரை, அது தெளிவாகத் தெரிகிறது.”
“நல்லதற்குச் சொல்கிறேன் என்னிடம் சொல்லுங்கள்! ஏன், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, பசி என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியாமல் இருந்தது. அப்போது அவனுக்கு நல்ல, சத்தான, எளிய உணவு கிடைத்தது –உம்! நான் மிகச் சரியாக அந்தப் பொருளில் கூறவில்லை. நான் கூறவந்தது என்னவென்றால் – நான் – நான் — நானே இப்போது பசியில் இருக்கிறேன். அவனுடைய முட்டாள்தனம் காரணமாக., பசி — பிசாசு அவனை ஆட்கொள்கிறது! இப்போது சொல்லுங்கள், அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எனக்காகக் காத்திருக்குமாறு, படகுகளை இங்கு அனுப்பிவைக்க நான் உத்தரவிட்டிருந்தேன். நல்லது, நான் இங்கு வருகிற போது, எதுவே நடக்காதது போல, கிரீல்கா உட்கார்ந்திருக்கிறான். இல்லை, உண்மையில், அவர்கள் அஞ்சத்தக்க அளவுக்கு முட்டாள்கள், நான் உங்களிடம் உறுதியாகச் சொல்கிறேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் உத்தரவுகளுக்குக் குறைந்தபட்ச மரியாதை அல்லது குறைந்தபட்சக் கீழ்ப்படிதல் கூட அவர்களிடம் இல்லை என்று சொல்லவந்தேன்.”
“நல்லது, நமக்குச் சாப்பிட ஏதாவது கிடைக்குமானால் நன்றாக இருக்கும்” சோகமான குரலில் மாமாயெப் கூறினார்.
“ஆம், உண்மையில் நன்றாகத் தானிருக்கும்!” இசைய்யா பெருமூச்சுவிட்டான்.
ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு எங்கள் வாதத்தையொட்டி ஒருவருக்கொருவர் எரிச்சலூட்டும் வகையில் நாய்களைப் போல உருமிக்கொண்டிருந்த நாங்கள் நான்கு பேரும் திடீரென்று அமைதியானோம், திடீரென்று பொதுவாக உணர்ந்த பசியின் பொதுவான வேதனையில் ஒன்றுபட்டோம். நாங்கள் அனைவரும் பாவப்பட்ட கிரீல்கா பக்கம் திரும்பினோம், எங்கள் கூர்மையான பார்வையால் அவன் குழப்பமடைந்து, அவனுடைய தொப்பியை இழுத்துவிட்டுக் கொண்டிருந்தான்.
“அந்தப் படகை வைத்துக்கொண்டு நீ என்னவெல்லாம் செய்தாய்—உம்?” இசய்யா அவனிடம் கண்டிக்கும் வகையில் கேட்டான்.
“சரி, படகு இங்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அதை உங்களால் தின்றிருக்க முடியாது,” முகத்தில் ஓர் இழிந்த பார்வையை வைத்துக்கொண்டு, கிரீல்கா பதிலளித்தான், அது எங்கள் அனைவரையும் அவனுக்கு எதிராகத் திரும்பச் செய்தது.
“ஆறு மணிநேரமாக உயிரைப் பிடித்துக்கொண்டு இங்கு நான் அமர்ந்திருக்கிறேன்!” மாமாயெப், தனது தங்கக் கைக்கடிகாரத்தை வெளியே எடுத்து, அதைப் பார்த்துக்கொண்டு, திடீரென்று கத்தினார்.
“இப்போது அங்கே பாருங்கள்! பனியில் நேரடியாக ஒரு தடை இருக்கும் என்று இந்த ஈனன் சொல்கிறான், அதற்கு முன்பாக அங்கே போய்விட முடியுமா என்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்,” மீசையை முறுக்கிக்கொண்டு, நீதிபதி கோபத்துடன் கேட்டார்.
கிரீல்காவுக்கு ஆற்றைக் கடக்கும் அளவுக்கு ஏதோ ஆற்றல் இருக்கிறது என்று ஏறத்தாழ நீதிபதி கற்பனை செய்துகொண்டுள்ளதாகவும், எங்கள் நீண்ட தாமதத்திற்கு முற்றிலும் அவனையே குற்றம் சாட்டுவதாகவும் தெரிந்தது.
அது எப்படி இருந்தாலும், நீதிபதியின் கேள்வி பாவப்பட்ட கிரீல்காவைத் தலையிடச் செய்தது. அவன் ஆற்றங்கரையின் விளிம்புவரை தவழ்ந்து சென்று, அவனது கண்களைக் கைகளால் மறைத்துக்கொண்டு, முகத்தில் ஒரு கலவரப் பார்வையுடன், தூரத்தைக் கூர்ந்து பார்க்க முயற்சி செய்தான். அவனது உதடுகள் அசைந்தன, அவன் வலிப்பு நோய் வந்தவன் போல ஒரு காலை உதறினான், அது அவன் ஒரு மந்திரத்தை உச்சரிப்பவனைப் போல, அல்லது செவிக்கு எட்டாத உத்தரவுகளை ஆற்றுக்குச் சொல்வது போல இருந்தது.
எப்போதையும் விடத் திடமான திரட்சியாக பனிக்கட்டி மெதுவாக கீழே நகர்ந்துகொண்டிருந்தது, சாம்பல் நீலநிறப் பனிக்கட்டிகள் உடைந்து, நொறுங்கி, ஒன்றுக்கொன்று மோதி கரகரவென்ற ஒலியை ஏற்படுத்தின, சிறுசிறு துண்டுகளாக பிளந்தன, சில நேரங்களில் அடியிலிருந்த சேற்று நீர் தெரிந்தது. பின்னர் மீண்டும் ஒருமுறை அதைப் பார்வையிலிருந்து மறைத்தன. சிரங்குகளும் புண்களும் மூடியிருந்த ஒரு பெரிய உடலில் பயங்கரமான ஒரு தோல் நோய் பரவியிருந்தது போல எங்களுக்கு முன்னால் ஆறு தோற்றமளித்தது; அதேவேளையில் அதன் மேல்பரப்பின் தோற்றத்தைக் குலைத்த அருவருப்பான செதில்களிலிருந்து சில கண்ணுக்குத் தெரியாத கரம் அதைத் தூய்மைப்படுத்துவதற்கு முயற்சி செய்துகொண்டிருப்பதாகத் தெரிந்தது. நாங்கள் விழிப்புடனிருந்து அதன் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கவும் அதன் ஆற்றல், அழகு அத்தனையுடனும் எங்களைக் கடந்து செல்வதாகவும், மேகங்களைக் கிழித்து, அதன் பிரகாசமான, மகிழ்ச்சியான பார்வையை பூமியை நோக்கிச் செலுத்திய சூரிய ஒளியில் அதன் அலைகள் இன்னும் ஒருமுறை தகதகவென்று மின்னிக்கொண்டு இருப்பதாகவும் எந்த நிமிடத்திலும் எங்களுக்குத் தெரிந்தது.
“அவர்கள் இப்போது இங்கு விரைவில் வந்துசேர்வார்கள் மரியாதைக்குரிய ஐயா!” கிரீல்கா உற்சாகமான குரலில் உரத்துத் தெரிவித்தான். “பனிக்கட்டி அங்கு உருகி மெலிந்து கொண்டிருக்கிறது, அவர்கள் இப்போது மேட்டு நிலத்தில் இருக்கிறார்கள்.”
அவன் தனது கையிலிருந்த தொப்பியை நீட்டி தூரத்தில் காட்டினான், இருப்பினும் அங்கு பனிக்கட்டியைத் தவிர வேறு எதையும் பார்க்கமுடியவில்லை.
“இங்கிருந்து ஒல்சாஃப் தூரத்திலிருக்கிறதா?”
“சரி ஐயா, மிகவும் அருகாமை வழியில், ஐந்து மைல்கள் தூரம் இருக்கும்.”
“உன்னிடம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன்? உருளைக் கிழங்குகள் அல்லது ரொட்டி?”
“ரொட்டியா? சரி, ஆமாம் ஐயா, என்னிடம் ஒரு சிறுதுண்டு ரொட்டி இருக்கிறது, ஆனால் உருளைக் கிழங்கைப் பொருத்தவரை – இல்லை – என்னிடம் எதுவும் இல்லை; இந்த ஆண்டு அவை விளையவில்லை.”
“நல்லது, உன்னிடம் ரொட்டி இருக்கிறதா?”
“ஆம், இதோ இங்கே இருக்கிறது, எனது சட்டைக்குள்.”
“சே! பிசாசே அதை ஏன் உன்னுடைய சட்டைக்குள் வைக்கிறாய்?”
“நல்லது, அவ்வளவு ஒன்றும் மிகுதியாக இல்லை— ஒன்று அல்லது இரண்டு பவுண்டுகள் இருக்கும்; அது அங்கு வெதுவெதுப்பாக இருக்கும்.”
“முட்டாளே! நான் என்னுடைய ஆளை ஒல்சாஃபுக்கு அனுப்பியிருந்தேன்; அவன் சிறிது பால் அல்லது வேறு ஏதாவதை வாங்கிவருவான்; ஆனால் இந்த முட்டாள், ‘மிக விரைவில், மிக விரைவில்,’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான். பிசாசு! இதெல்லாம் எப்படி எரிச்சலூட்டுகிறது!”
நீதிபதி கோபத்துடன் தனது மீசையை முறுக்குவதைத் தொடர்ந்தார், ஆனால் வணிகர் விவசாயியின் சட்டைப் பையின் திசையில் ஏக்கத்துடன் பார்வையைச் செலுத்தினார். விவசாயி தலையைத் தாழ்த்தி, மெதுவாகத் தனது சட்டையின் முன்பகுதியை நோக்கிக் கையைக் கொண்டுசென்றார். இதற்கிடையில் இசய்யா அவனுக்குச் சைகைகளைக் காட்டிக்கொண்டிருந்தான். அவன் அவற்றைக் கண்ணால் கண்டதும் சத்தமில்லாமல் எனது நண்பனின் அருகில் நகர்ந்து, அவனுடைய முகத்தை நீதிபதியின் முதுகுப்பக்கம் திருப்பி வைத்துக்கொண்டான்.
பனிக்கட்டி இன்னும் படிப்படியாக கரைந்துகொண்டே இருந்தது, மேலும் ஏற்கெனவே வெளுத்து, இரத்தமில்லாமல் போன முகத்தில் இருக்கும் சுருக்கங்களைப் போல, பனிப்பாளங்களுக்கிடையே விரிசல்கள் தெரிந்தன. இந்த சுருக்கங்களின் அசைவுகள் ஆற்றுக்குப் பல்வேறு பாவங்களை வெளிப்படுத்தும் தோற்றத்தை அளித்தன, அவை அனைத்தும் ஒன்றே போல குளிராகவும் ஆழ்ந்தும் தெரிந்தன, இருந்தாலும் சில நேரங்களில் வருத்தமாகவும் கேலிசெய்வது போலவும், அல்லது வலியால் உருக்குலைந்து போனதுபோலவும் தெரிந்தன. தலைக்கு மேலே கனத்த, ஈரமான மேகத் திரட்சிகள் கீழே பனிக்கட்டியின் நகர்வுகளை, மந்தமான விருப்புவெறுப்பற்ற வெளிப்பாட்டுடன் பார்த்துக்கொண்டிருந்தது போலத் தெரிந்தது. மணலுக்கு எதிரான பனிப்பாளங்களின் உராய்வு இப்போது அச்சத்தால் முணுமுணுப்பதுபோல ஒலித்தது, அதைக் கேட்டு விழித்துக்கொண்டவர்கள் ஒருவகையான சோர்ந்த உணர்வுடன் கவனித்துக் கொண்டிருந்தது போலத் தெரிந்தது.
“உன்னுடைய ரொட்டியில் எனக்கு ஒரு துண்டு கொடு,” இசய்யா தணிந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன்.
அதே கணத்தில் வணிகர் உறுமினார், நீதிபதி கோபத்துடன் உரத்த குரலில் கூவினார், “கிரீல்கா, அந்த ரொட்டியை இங்கே கொண்டுவா!” அந்த எளிய விவசாயி ஒரு கையால் தனது தொப்பியைக் கழட்டிக்கொண்டு, அதேநேரத்தில் இன்னொரு கையால் அவனுடைய சட்டையிலிருந்து ரொட்டியை வெளியே எடுத்து, பதினைந்தாம் லூயியின் காலத்திய ஒரு நீதிமன்றப் பணியாளைப் போல குனிந்து பணிந்து, அதை நீதிபதியிடம் கொடுத்தான். ரொட்டியைத் தனது கரங்களில் எடுத்து, அதை ஒரு வெறுப்புப் பார்வையுடன், கசந்த புன்முறுவலுடன் ஆராய்ந்த நீதிபதி எங்களை நோக்கித் திரும்பிக் கூறினார்:
“கனவான்களே, இந்த ரொட்டித் துண்டை எடுத்துக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஆசைப்படுகிறோம் என்பதைக் காண்கிறேன், அதற்கு நம் அனைவருக்கும் முழுநிறைவான சம உரிமை இருக்கிறது – அதாவது பசித்த மனிதர்களுக்கான உரிமை. நல்லது, சிறிதளவே உள்ள இந்த ரொட்டியை நாம் அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்வோம். உண்மையில், நாம் கேலிக்கிடமான நிலையில் இருக்கிறோம்! ஆனால் செய்வதற்கு வேறு என்ன இருக்கிறது? எனது அவசரத்தில் சாலையில் கிளம்புவதற்கு முன்பு மறந்துவிட்டேன்—பெற்றுக்கொள்ளுங்கள்—-“
அத்துடன் அவர் ஒரு துண்டு ரொட்டியை மாமாயெப்பிடம் கொடுத்தார். வணிகர் அதைக் கடைக் கண்ணால் பார்த்துவிட்டு, தனது தலையை ஒருபக்கமாக நிமிர்ந்து பார்த்து, ரொட்டியைக் கண்ணால் அளந்துபார்த்துவிட்டு, தனது பங்கினைப் பாய்ந்து பறித்துக்கொண்டார். இசய்யா மீதமிருந்ததை எடுத்து எனக்குரிய பங்கினைக் கொடுத்தான். மீண்டும் ஒருமுறை நாங்கள் அக்கம்பக்கமாக அமர்ந்தோம், இம்முறை அமைதியாக எங்கள் — அதை என்னவென்று சொல்வது? — மென்று தின்றோம். அதை விவரிப்பதற்கு நல்ல சொற்கள் இல்லாததால், நான் அதை ரொட்டி என்றுதான் சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன். அது களிமண்ணைப் போல ஆகியிருந்தது, அதில் வியர்வையில் ஊறிய செம்மறியாட்டுத் தோலின் வாசம் அடித்தது; அழுகிய முட்டைக்கோசின் ஊசிப்போன வாடை அடித்தது’ அதன் சுவையை விவரிக்க சொற்கள் இல்லை! இருப்பினும், ஆற்றின் குளிர்கால ஆடையான அழுக்கடைந்த சிதறுண்ட பனிக்கட்டிகள் மெதுவாக மிதந்து கடந்து சென்றதைக் கவனித்துக்கொண்டே, நான் அதைத் தின்றேன்.
“இப்போது இதைத்தான் அவர்கள் ரொட்டி என்று கூறுகிறார்கள்!” தனது கையிலிருந்த கசப்பான ரொட்டித் துண்டை வெறுப்புடன் பார்த்துக்கொண்டே எங்கள் நீதிபதி கூறினார். “இதுதான் இரசிய விவசாயியின் உணவு! வேறு நாடுகளின் விவசாயிகள் பாலாடைக்கட்டியையும், நல்ல கோதுமை ரொட்டியையும் உண்கிறார்கள், ஒயின் அருந்துகிறார்கள், ஆனால் இரசிய விவசாயி இதைத் தான் உண்கிறான். மரத்தூள், அனைத்து வகையான குப்பைக் கூளக் கழிவுப் பொருட்களும் இந்த ரொட்டியில் இருக்கின்றன; இதுதான் இந்த இருபதாம் நூற்றாண்டில் நமது விவசாயிகளின் உணவாக இருக்கிறது! இது ஏன் இப்படி இருக்கிறது என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்.”
அந்தக் கேள்வி வணிகரை நோக்கி கேட்கப்பட்டதாகத் தெரிந்தது, அவர் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு, பலவீனமாகப் பதிலளித்தார், “ஆமாம், இது ஒன்றும் மிகவும் நல்ல உணவல்ல – கவர்ச்சிகரமாகவும் இல்லை.!”
“ஆனால் நான் உங்களை ஏன் கேட்கிறேன் ஐயா?” நீதிபதி கேட்டார்.
“ஏன்? ஏனென்றால் நிலம் பலவீனமடைந்துவிட்டது என்று நான் கருதுகிறேன், நான் அப்படிச் சொல்லலாமானால்.”
“ஆஹா, முட்டாள்தனம், அப்படி எதுவுமில்லை! பலவீனமடைந்துவிட்ட நிலம் குறித்த இந்தப் பேச்செல்லாம் பயனற்றது; அது புள்ளிவிவரக்காரர்களின் கற்பனை தவிர வேறொன்றுமில்லை.”
இந்தக் கருத்தைக் கேட்ட கிரீல்கா ஆழமாகப் பெருமூச்சுவிட்டுக்கொண்டு, தொப்பியைத் தனது தலையில் வைத்து அழுத்தினான்.
“இப்போது நீ சொல்லு, எனது நல்லவனே, உனது நிலத்தில் விளைச்சல் எப்படி இருக்கிறது?” நீதிபதி கேட்டார்.
நல்லது, நிலத்தைச் சார்ந்திருக்கிறது, நிலம் வளமாக இருக்கும்போது விளைச்சல் தருகிறது — நீங்கள் விரும்புகிற அளவுக்கு —–“
“சொல்லு, இப்போது, கேட்பதற்குப் பதில் சொல், திசை திருப்பாதே. நேரடியாகப் பதில் சொல். உனது நிலம் உனக்கு நல்ல பயிர் விளைச்சல் தருகிறதா?”
“அப்படியானால் —- பிறகு —-“
“பொய் சொல்லாதே!”
“நல்ல கரங்கள் வேலை செய்தால், பின்னர் ஏன், நல்லது” “ஆஹா! இதைக் கேட்கிறாயா? நல்ல கரங்கள்! அதுதான் விடயம்! நிலத்தில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லை! ஏன்? நாம் பார்ப்பது என்ன? குடி, மெத்தனம், சோம்பேறித்தனம், மந்தம். விவசாயிகள் மீது எந்த அதிகாரமும் இல்லை. ஒரு வருடம் விளைச்சல் மோசமானால், சரி, பின்னர், ஜெம்ஸ்ட்வோ உடனே அவர்கள் உதவிக்கு வருவார், ‘இதோ உங்களுக்கு விதை இருக்கிறது, உங்கள் நிலத்தில் விதையுங்கள், நண்பரே. இதோ ரொட்டி இருக்கிறது; சாப்பிடுங்கள், எனது நல்ல நண்பரே!’ இப்போது நான் சொல்கிறேன், இது எல்லாம் தவறு! 1861 வரை நிலம் எப்படி நல்ல விளைச்சலைக் கொடுத்தது? ஏனென்றால் பயிர் விளைச்சல் நன்றாக இல்லையென்றால், விவசாயி அவரது எஜமானருக்கு முன்னால் கொண்டுவரப்பட்டார், எஜமானர் எப்படி விதைத்தாய்? எப்படி உழுதாய்? என்று கேட்டார். எஜமானர் சிறிது விதை கொடுத்தார், பயிர் விளைச்சல் நன்றாக இல்லையென்றால், விவசாயி முதுகைப் புண்ணாக்கிக் கொண்டு அதற்குப் பதிலளித்தார். அதற்குப் பிறகு பயிர் நன்றாக விளைந்தது. அதற்கு மாறாக, இப்போது அவன் ஜெம்ஸ்ட்வோவால் பாதுகாக்கப்படுகிறான், அவன் தனது உணர்வுகளைப் பயன்படுத்த அவனுக்குக் கற்பிப்பதற்கு எந்த எஜமானனும் இல்லை என்பதால் தான் அவன் வேலை செய்வதற்கான தன்னுடைய திறனை இழந்துவிட்டான்!”
“ஆமாம், அதேதான். தங்கள் பண்ணையடிமைகளை எப்படி வேலை செய்ய வைப்பது என்பது உரிமையாளர்களுக்கு நன்றாகத் தெரியும்!” மாமாயெப் உறுதியுடன் கூறினார். “அவர்கள் முஜிக்குகளிடமிருந்து அவர்கள் விரும்பியதைப் பெறமுடியும்!”
“இசைக் கலைஞர்கள், ஓவியர்கள், நடனக்காரர்கள், நடிகர்கள்!” நீதிபதி ஆர்வத்துடன் இடைமறித்தார்; “அவர்கள் விரும்பியது எதுவானாலும் அவர்களைச் செய்யவைத்தார்கள்!”
“அது உண்மைதான். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் கோமகனின் வீட்டுவேலையாள் அவன் கேட்ட ஒவ்வொன்றையும் அதேகுரலில் ஒலித்துக்காட்டும் வகையில் கற்பிக்கப்பட்டிருந்தான்.”
“ஆமாம், அது அப்படித்தான்.”
“உண்மையில், அவன் ஒவ்வொன்றையும் ஒலித்துக்காட்டக் கற்றுக்கொண்டான், மனிதர்கள் அல்லது விலங்குகளின் ஒலிகளை மட்டுமின்றி, மரம் அறுக்கும் ஒலி, கண்ணாடி உடையும் ஒலி, அல்லது வேறு எதையும் ஒலித்துக்காட்டப் பழகியிருந்தான். அவன் கண்னங்களை உப்பச் செய்து, எந்த ஒலியை எழுப்புமாறு உத்தரவிட்டாலும் ஒலித்துக்காட்டுவான். ‘கோமகன், ஃபியோட்கா, நரியைப் போல ஊளையிடு- பிடிப்பவன் போல் ஒலி எழுப்பு’ என்பார். ஃபியோட்கா அதைச் செய்வான். அப்படித்தான் அவர்களுக்கு அப்போது கற்றுக்கொடுக்கப்பட்டது. இப்போது அத்தகைய தந்திரங்களைச் செய்துகாட்டினால் நல்ல தொகையை ஈட்டலாம்!”
“படகுகள் வந்துகொண்டிருக்கின்றன!” இசய்யா சத்தமிட்டான்.
“கடைசியாக! கிரீல்கா, எனது குதிரைகள்! வேண்டாம், ஒருகணம் நில்; வண்டிக்காரனிடம் நானே சொல்கிறேன்.”
“சரி, நமது காத்திருத்தல் முடிவுக்கு வந்துவிட்டது,” ஒரு நிம்மதிப் புன்னகையுடன் மாமாயெப் கூறினார்.
“ஆமாம், முடிவுக்கு வந்துவிட்டது என்றுதான் கருதுகிறேன்.”
“வாழ்க்கையில் எப்போதும் இப்படித்தான்; ஒருவர் காத்திருப்பார்; காத்திருப்பார்; கடைசியில் ஒருவர் காத்திருந்தது வந்து சேர்கிறது. ஹா! ஹா! ஹா! இந்த உலகில் அனைத்து விடயங்களும் முடிவுக்கு வந்துவிடுகிறது.”
“அதுதான் எந்த வகையிலும் அதுதான் வசதி,” இசய்யா கூறினான்.
இரண்டு நீண்ட பொருட்கள் எதிர்க்கரையோரம் நகர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கமுடிந்தது.
“அவை அருகில் வந்துகொண்டிருக்கின்றன” அவற்றைக் கவனித்த கிரீல்கா கூறினான்.
நீதிபதி அவரது ஓரக்கண்ணால் அவனைக் கவனித்தார்.
“இன்னும் நீ வழக்கம்போல உன்விருப்பத்துக்கு நிறையக் குடித்துக்கொண்டுதான் இருக்கிறாயா?” அவர் விவசாயியிடம் கேட்டார்.
“வாய்ப்புக் கிடைத்தால், ஒரு குவளை குடிக்கிறேன்.”
“இன்னும் நீ காட்டில் விறகு திருடுகிறாயா?”
நான் ஏன் அதைச் செய்யப் போகிறேன்? ஐயா!”
“வா, உண்மையைச் சொல்!”
“நான் ஒருபோதும் மரத்தைத் திருடவில்லை”` மறுக்கும் வகையில் தலையை ஆட்டிக்கொண்டு கிரீல்கா பதிலளித்தான்.
“அப்படியானால் எதற்காக உன்னை நான் தண்டித்தேன்?”
“நீங்கள் என்னைத் தண்டித்தீர்கள் என்பது உண்மைதான்.”
“அப்படியானால், எதற்காக?”
“ஏனென்றால், மரியாதைக்குரிய ஐயா, பாருங்கள், எங்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கு நீங்கள் அமர்த்தப்பட்டுள்ளீர்கள்; எங்களைத் தண்டிக்க உங்களுக்கு உரிமை உண்டு.”
“ஆ! நீ ஒரு தந்திரமான போக்கிரி! உன்னைச் சிறை பிடித்தபோது, நீ படகுகளிலிருந்து பிளம் பழங்களைத் திருடினாயா? இல்லையா?”
“நான் ஒருமுறை அதற்கு முயற்சி செய்தேன், ஐயா.”
“அந்த ஒருமுறை நீ பிடிபட்டுவிட்டாய்! அப்படித்தானே? ஹா, ஹா, ஹா.”
“நாங்கள் அப்படிப்பட்ட வேலைக்குப் பழகவில்லை. அதனால்தான் நான் பிடிபட்டேன்.”
“சரி, நீ ஒரு சிறிது நன்றாக அதற்குப் பயிற்சி எடுத்திருந்திருக்கலாம்; இல்லையா? ஹா! ஹா! ஹா!”
“ஹே! ஹே! ஹே!” மாமாயெப் எதிரொலித்தார், வாய்விட்டுச் சிரிக்கவும் செய்தார்.
படகிலிருந்த விவசாயிகள் பெரிய இரும்புக் கொரட்டிகளைக் கொண்டு, படகின் வழியில் தடையாக இருந்த பனிக்கட்டியைத் தூரத் தள்ளிவிட்டார்கள்; அவர்கள் அருகில் வர, வர, ஒருவருக்கொருவர் சத்தமிட்டுக்கொள்வதைக் கேட்கமுடிந்தது; கிரீல்கா எழுந்து நின்று தனது கரங்களை வாய்க்குக்கொண்டு சென்று, அவர்களைப் பார்த்துச் சத்தமிட்டான், “பழைய வில்லோ மரங்களின் பக்கம் திருப்புங்கள்!”
பின்னர் அவன் ஆற்றங்கரையின் கீழே ஆற்றை நோக்கி விரைந்தான், அவனது அவசரத்தில் அவன் ஏறத்தாழத் தலைகுப்புற விழத்தெரிந்தான். நாங்கள் அவனைப் பின்பற்றி விரைந்து சென்றோம், விரைவில் நாங்கள் படகில் இருந்தோம்; இசய்யாவும் நானும் ஒரு படகில் சென்றோம், நீதிபதியும் மாமாயெப்பும் இன்னொன்றில் சென்றனர்.
“சரி, என் மக்களே! தனது தொப்பியை எடுத்துக்கொண்டு. சிலுவையிட்டுக்கொண்டு, நீதிபதி கூறினார்.
அவரது படகிலிருந்த இரண்டு ஆட்கள் தாங்களும் பயபக்தியுடன் சிலுவையிட்டுக் கொண்டார்கள், படகின் பக்கவாட்டில் அழுத்திக்கொண்டிருந்த பனிப் பாளங்களை மீண்டும் ஒருமுறை தள்ளிவிடத் தொடங்கினர்.
ஆனால் அந்தப் பனிப் பாளங்கள் கோபங்கொண்டு மோதுவதுபோல படகின் பக்கங்களில் தாக்குவதைத் தொடர்ந்தன; நீரின் மீது வீசியதால் காற்றுக் குளிராக அடித்தது. மாமாயெப்பின் முகம் வெளிறியது, நீதிபதி சுருங்கிப் பின்னிய புருவத்துடன் தீவிரக் கவலைதோய்ந்த பார்வையுடன் நீரின் போக்கைக் கவனித்தார், அது மிகப்பெரிய நீலச் சாம்பல் குவியலைப் போல படகுகளுக்கு எதிராக ஓடிக்கொண்டிருந்தது. பக்கவாட்டு மரப்பலகைகள் வழியாக கூர்மையான பற்கள் அரைத்துச் செல்வது போல ஓர் ஒலியுடன் படகின் அடிப்பகுதியுடன் உரசி பனிக்கட்டி சிறிய துண்டுகளாகச் சிதறியது.
காற்று ஈரமாகவும் முற்றிலும் இரைச்சலாகவும் இருந்தது; எங்கள் கண்கள் பதட்டத்துடன் குளிர்ந்த, அழுக்குப்படிந்த பனியின் மீது நிலைத்திருந்தது— அது மிகவும் சகதிவாய்ந்ததாக இருந்தாலும் உதவிக்கு வராததாக இருந்தது. எங்களைச் சுற்றிலும் பல்வேறு இரைச்சல்களின் ஊடாக, திடீரென்று கரையிலிருந்து சத்தமிட்ட ஒருவரின் தனித்து ஒலித்த குரலை நான் கேட்டேன், மேலும் அந்தக் குரல் வந்த திசையில் பார்வையிட்டேன், எங்களுக்குப் பின்னால் கரையில் தலையில் எதுவும் அணியாமல் கிரீல்கா நின்றுகொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவனுடைய தந்திரமான சாம்பல்நிறக் கண்களில் பளிச்சென்று ஒளிவீச, ஒரு வினோதமான, கரகரப்பான குரலில், “அந்தோணி மாமா, அஞ்சல் கட்டைக் கொண்டுவரச் செல்லும்போது, எனக்காகச் சிறிது ரொட்டியும் கொண்டுவர மறந்துவிடாதீர்கள்! படகுக்காக காத்திருந்த நேரத்தில் அந்தக் கனவான்கள் எனது ரொட்டியைச் சாப்பிட்டு விட்டார்கள், அதுதான் என்னிடம் கடைசியாக இருந்தது.”
தமிழில் : நிழல்வண்ணன்
மக்சீம் கார்க்கி குறிப்பு வாசிக்க
மாக்சிம் கார்க்கி – தமிழ் விக்கிப்பீடியா
எழுதியவர்
- நிழல் வண்ணன் எனும் புனைபெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் ந.இராதா கிருட்டிணன். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவர்; வழக்கறிஞராக பணிபுரிகிறார். கார்ல் மார்க்ஸ் வாழ்கை வரலாறு, ஸ்டாலின்: அரசியல் வாழ்க்கை வரலாறு, லெனின்: பாட்டாளி வர்க்கத் தலைவர் , மாவோவின் நெடும்பயணம் உள்ளிட்ட நூல்களோடு மார்க்சிய நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். மக்சீம் கார்க்கியின் சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார்.
இதுவரை.
- சிறுகதை-மொழிபெயர்ப்பு1 December 2023நிலுஷ்கா – மக்சிம் கார்க்கி
- கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023படகுக்காகக் காத்திருத்தல் – மக்சீம் கார்க்கி