முத்துராமன் ஓய்வெடுத்து கொள்ளலாம் என்பதை பற்றி எல்லோரும் பேசிகொண்டும் யோசித்துக்கொண்டும் இருந்தார்கள், முத்துராமனை தவிர. கதிர் இதை பற்றி கேள்விபட்டலும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. புதிதாக ஆரம்பித்த கிளினிக் நன்றாக போய்க் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்கள் கழித்து கதிரவன் படிப்பை முடித்து விட்டு ஊருக்கு திரும்பி வந்தான்.

கதிரவனின் அப்பா இறந்ததற்கு பின் முத்துராமன் தான் கதிருக்கு எல்லாமுமாக இருந்தான். கதிருக்கு பைக் ஓட்ட, நீச்சல் அடிக்க, மரம் ஏற, பள்ளியில் கொண்டுபோய் விட என எல்லாம் செய்தது முத்து தான். அப்பா இந்த ஊரில் முதன் முதலாக 35 வருடங்களுக்கு முன் தொழிலை ஆரம்பிக்கும்போது முத்துராமன் ஒரு தளபதியை போல் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு தனியாளாக செய்தார். தொழிலும் வேகமாக வளர்ந்தது கூடவே எதிரிகளும். பிரச்சினைகள் வரும்போது அதை சரியாக சட்ட ரீதியில் செயல்பட அப்பா யோசிப்பார். ஆனால், முத்துராமன் இதற்கு நேரெதிர் சண்டைகளுக்கு என்றே பிறந்தவர் போல அருவாளை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டார்.

முத்துராமனின் இடதுகை தோள்பட்டையிலும் தாடையிலும் ஆழமான வெட்டு விழுந்ததற்கான தழும்பு இப்போதும் இருக்கும். அப்பாவை பலமுறை காப்பாற்ற முயன்ற போது நடந்த பல சம்பவங்களின் நினைவு பரிசுகள் அவை. இந்த பிரச்சினைகள் எதுவும் கதிரவனுக்கு தெரியமால் இருவரும் பார்த்து கொண்டார்கள். ஆனால் அப்பா இறந்ததற்கு பின் கதிர் கேட்க முத்துராமன் எல்லாவற்றையும் சொல்ல நேர்ந்தது.

“அப்பா உன்ன எப்படியாச்சும் டாக்டர் ஆக்கிரனும்ன்னு அடிக்கடி சொல்லுவாரு” முத்துராமன் எங்கோ பார்த்து கொண்டே பேசினார் அவரது மனம் கனத்திருந்தது.

“அதான் இப்போ நான் டாக்டர் ஆகிட்டேன்ல அண்ணே” கதிர் எப்போதுமே முத்துராமனை அண்ணே என்றழைப்பது வழக்கம்.

கதிரவன் கல்லூரி படித்த ஐந்து வருடங்கள் தவிர மற்ற நாட்களில் அதிகமாக உடன் இருந்தது முத்து அண்ணன் தான். கிளினிக் ஆரம்பிக்கலாம் என கதிர் சொன்ன போதும் அதில் முழு மூச்சாய் ஈடுபட்டு வேலையை முடித்தது முத்து தான். இப்போது முத்துவுக்கு வயதாகிவிட்டது ஓய்வெடுத்து கொள்வது நல்லது என்று எல்லோரும் அரசல்புரசலாக பேச தொடங்கிவிட்டனர்.

முத்துராமன் இதை பற்றி கண்டுகொள்ளவில்லை எதுவாக இருந்தாலும் கதிர் சொல்லட்டும் என்று சொல்லிவிட்டு தனக்கு பின்னால் பேசுபவர்களுக்கு முற்றுபுள்ளி வைத்தார். மெதுவாக இந்த விஷயம் கதிர் காதுகளை வந்தடைந்தது.

அம்மா தான் முதலில் பேச்ச்செடுத்தார் “ஏன் கதிரு நீயே நம்ம மில்ல அப்டியே ஒரு பார்வ பாத்துக்கலாம்ல”

“ஏன் ம்மா அதான் முத்து அண்ணே இருக்கார்ல என்னய விட அவருக்கு அனுபவம் ஜாஸ்தி அவரே பாத்துகட்டும்”

“இன்னும் எத்தன நாளைக்கு அவரே அலைவாரு பாவம், அவருக்கும் வயசாகுதுல்ல”

“சரிம்மா.. பாக்கலாம்” கதிர் வார்த்தைக்கு சொல்லி வைத்தான்.

அடுத்த ஒரு வருடத்தில் சுற்றுவட்டாரத்தில் நம்பிகையான டாக்டராக மாறிவிட்டான் கதிர் போகும் இடமெல்லாம் அவனுக்கென்று ஒரு மரியாதை உருவானது. கோவில் திருவிழாவில் முதல் தடவயாக முத்துராமனை விடுத்து கதிருக்கு பரிவட்டம் கட்டினர். அன்று இரவே கோவிலுக்கு பின்னால் இதைப்பற்றி சலசலப்பு உண்டானது.

“என்ன தான் இருந்தாலும் கதிருக்கு பரிவட்டம் கட்டியிருக்க கூடாதுப்பா” பெரியவர் ஒருவர் வாயில் புகையிலையை மென்றவாறு சொன்னார்.

பதிலுக்கு கருப்பு கண்ணாடி அணிந்திருந்த ஒரு பெரியவர் சொன்னார்: “ஏன் என்ன தப்புங்குறேன்? கதிர் தம்பிக்கு என்ன கொற? அவர் என்ன இன்னும் சின்ன புள்ளையா? கல்யாணம் பண்ற வயசு வந்துருச்சு அதுக்கேத்த மாறி பொறுப்பு எடுத்துக்க வேணாமா?”

“என்னைய கேட்டா மில்ல பாத்துக்குற பொறுப்ப கூட அவருக்கிட்டயே கொடுத்துறலாம் என்னய்யா சொல்றிங்க?” கூட்டத்தில் யாரோ ஒருவர் கேட்டார். வெளிச்சம் குறைவு, அம்மாவாசை வேறு. முன்னால் இருந்த விறகு கட்டை கொடுத்த நெருப்பு வெளிச்சம் சொன்னது யாரென்று கண்டுபிடிக்க போதவில்லை.

“முத்து கிட்ட இதபத்தி நீ பேசித்தான் ஆகணும்” கதிரின் அம்மா கண்டிப்புடன் சொன்னார்.

“நான் போய் எப்படிம்மா அவருக்கிட்ட இதபத்தி? என்னால முடியாது. அண்ணே முன்னாடி போய் நின்னாலே இதபத்தி பேச தைரியம் வராது.” கதிர் மரியாதை கலந்த பயத்தை உணர்ந்தான்.

மருத்துவ பயிற்சி காரணமாக கதிர் மீண்டும் வெளியூருக்கு செல்ல வேண்டி இருந்தது. இந்த நேரத்தில் வீட்டில் எல்லோரும் முத்துராமன் விலகிகொள்வதை பற்றியே பேசிகொண்டிருந்தனர். கோபம் தலைக்கேறி முத்துராமன் வீட்டின் மத்தியில் எல்லோருக்கும் கேட்கும் படியாக கத்தி சொன்னார்.

“நான் உக்காருரத பத்தி யாரும் முடிவெடுக்க வேணாம். எனக்கு ஒன்னும் உடம்பு தளர்ந்து போய்டல. என் உடம்புல இன்னும் அதே பழைய தெம்பு இருக்கு. இன்னைக்கு கூட என்னால மூட்ட தூக்க முடியும் அப்படி மூட்ட தூக்கி தான் இந்த மில்ல நானும் கதிரோட அப்பனும் உருவாக்கி இருக்கோம். அப்படி நான் வெளிய போகணும்னா அத கதிர் தம்பி சொல்லட்டும், அவனுக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு. மத்த ஒரு பயலுக்கு கிடையாது ஆமா.”

முத்துராமன் சத்தம் போட்ட அன்று இரவே கதிரின் அம்மா அவனுக்கு போன் செய்தார்.

“நீ முத்து கிட்ட பேசுறியா இல்ல நான் பேசட்டுமா?”

“ம்மா.. இப்போ என்ன ஆச்சுன்னு ஏன் இப்படி அவசரபடுறீங்க?”

“இன்னும் என்ன டா ஆகணும்? முத்து வந்து நம்ம வீடு மத்தியில எல்லாருக்கும் கேக்குற மாறி கத்திட்டு போறான் “என்னைய வெளிய போன்னு சொல்றதுக்கு கதிருக்கு மட்டும் தான் உரிமை இருக்கு வேற யாருக்கும் இல்லன்னு” என்ன பெரிய இவருன்னு நெனப்பா அவருக்கு மனசுல? உங்க அப்பா உருவாக்குன மில்லு டா அது. அதுமட்டுமில்லாம தோட்டம் வயலு எல்லாமே இப்போ முத்து தானே பாதுக்குராரு. நீ இதுநாள் வரைக்கும் சின்ன பையனா இருந்த சரின்னு விட்டேன். இதுக்கு மேலையும் விட்ட சரிப்பட்டுவராது பாத்துக்கோ.”

“சரிம்மா.. நான் இப்போவே அண்ணேகிட்ட பேசுறேன்.” அம்மாவிடம் போன் பேசிவிட்டு முத்துராமனுக்கு போன் செய்தான்.
முத்துராமன் மில்லில் இருந்தார். அதே வெள்ள வேட்டி வெள்ள சட்டை தலையில் பாதி நரைத்து இருந்த முடி ஆனாலும் அடர்த்தியாக இருந்தது. போனை எடுத்தார்.

“அண்ணே நான் கதிர் பேசுறேன்..”

“என்ன தம்பி இந்த நேரத்துல்ல.. ஊருக்கு வந்துடிய்யா ஸ்டேஷன்னுக்கு ஆள் அனுப்பவா?”

“அதெல்லாம் இல்லன்னே நான் இன்னும் ஊர்லயே தான் இருக்கேன் நான் வர இன்னும் ஒரு வாரம் ஆகும்.. ஒரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட பேசணும் அதான்..”

“சொல்லு தம்பி என்ன?”

சிறிது அமைதிக்கு பின் கதிர் பேச தொடங்கினான் “இல்லன்னே.. அதுவந்து.. நீங்க மில்லுல இருந்து… சீக்கிரமா..” வார்த்தைகள் குழற ஆரம்பித்தன.

“என்ன தம்பி..? சொல்றது புரியல உடம்புக்கு எதாவதா?”

“அதெல்லாம் ஒன்னுமில்லன்னே..” மீண்டும் ஒரு நீண்ட அமைதி…

“தம்பி.. ஒன்னும் பிரச்சனயில்ல நீ ஊருக்கு வா நேர்ல பார்த்து சாவகாசமா பேசிக்கலாம்”

“சரிண்ணே..” கதிர் போனை வைத்துவிட்டான். இன்னும் பேசியிருந்தால் எதாவது உளறி இருப்பான்.

ஒரு வாரம் கழித்து கதிர் ஊருக்கு வந்தான். ரயில்வே ஸ்டேஷன்ல் முத்துராமன் காத்துக்கொண்டிருந்தார். கூடவே இன்னும் சில பேர் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் அப்பாவுடன் தொழில் தொடங்கிய காலத்தில் இருந்தே இருப்பவர்கள் நம்பிக்கையானவர்கள். முத்துராமன் கதிரை பார்த்தவுடன் கட்டியணைத்துக்கொண்டார்.

“ஒரு மாசம் தான் ஊர்ல இல்ல அதுக்குள்ள எப்படி இளச்சுட்ட பாரு அந்த ஊருல எல்லாம் ஒழுங்கா சாப்பாடு போடுவானுன்களா இல்லையா?” முத்துராமன் கதிரின் தோளில் கைபோட்டவாறு நடந்து வந்தார்.

ரயிலில் இருந்து இறங்கியதில் இருந்தே கதிருக்கு எல்லாம் வித்தியாசமாக இருந்தது. தன்னை அழைக்க ரயில் அருகில் முத்து அண்ணன் மட்டும் தான் நிற்கிறார், மற்ற எல்லோரும் தூரத்தில் அங்கு நின்று கொண்டிருந்தார்கள். வழக்கத்துக்கு மாறாக ஸ்டேஷன்ல் நிறைய கூட்டம், கதிருக்கு எதோ தவறாக பட்டது. என்னவென்று சுதாரிப்பதற்க்குள் யாரோ ஒருவன் அங்கிருந்த டீக்கடையின் மறைவில் இருந்து வெளி வந்து அவன் வைத்திருந்த கத்தியை எடுத்து முத்து அண்ணனை வெட்ட வீசினான். கதிர் சரியான நேரத்தில் முத்துவை விலக்கிவிட்டு தானும் விலகிக்கொள்ள கத்தியின் குறி தவறியது.

கண் இமைப்பதற்க்குள் நான்கு பேர் முத்துவையும் கதிரையும் சுற்றி வளைத்தனர்.

“தம்பி, எதுக்கும் பயப்படாத நான் பாத்துக்குறேன்” முத்துராமன் தன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்தார்.
நான்கு பேரும் ஒரே நேரத்தில் முத்துவை தாக்க அவர் தவறி கீழே விழுந்தார். சூழல் கைமீறி போவதை உணர்ந்த கதிர் கீழே கிடந்த முத்துராமனின் கத்தியை எடுத்தான். முதலில் ஒருவனை எட்டி உடைத்து விட்டு முத்துராமன் அருகில் சென்றான். அவரை தூக்கிவிட்டான்.

கதிர் தூரத்தில் இருந்த முத்துராமனின் ஆட்களை பார்த்து குரல் கொடுக்க அவர்களும் உள்ளே ஓடி வந்தார்கள். ஆனால் அவர்கள் ஓடி வருவதற்குள் முத்துராமனை ஒருவன் முதுகில் குத்த அவர் மயக்கமுற்று சரிந்தார். கதிர் அவன் கைகளை முறித்து கழுத்தில் தான் வைத்திருந்த கத்தியால் குத்தினான். அவன் அங்கேயே இறந்திருக்க கூடும்.

முத்துராமனை தூக்கி தோளில் போட்டுகொண்டு கதிர் காரை நோக்கி ஓடினான். கார் நேராக ஹாஸ்பிட்டல் சென்றது. அன்று இரவு முத்துராமன் கண் முழித்தார். கதிர் அந்த நாள் முழுக்க உடன் இருந்தான்.

“அண்ணே.. இப்போ பரவால்லயா?” கதிர் பக்கத்தில் நின்று கொன்டிருந்தான்.

“தம்பி அது வெங்கடேசன் ஆளுங்க தான் நான் பாத்துக்குறேன் அவனுங்கள”

“அண்ணே அதெல்லாம் ஒன்னும் வேணாம் நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்குறேன்”

“என்ன தம்பி பேசுற நீ.. போலீஸ்காரனுங்க என்ன பண்ணுவாங்கன்னு நெனைக்குற.. வெங்கடேசன் எப்படியும் அவங்களுக்கு பணம் கொடுத்துருவான்..”

“அண்ணே கம்ப்ளைன்ட்ல என் பேர தான் கொடுத்துருக்கேன். போலீஸ் வரப்போ நீங்க இங்க இருக்க வேணாம். உங்களுக்கும் வயசாகுதுல்ல.. வெளியூர்ல நம்ம வியாபாரத்த பாத்துகோங்க”

“என்ன கதிரு பயப்படுறியா? எத்தனமுறை கத்தியையும் வீச்சையும் பார்த்தவன் நானு.. உங்கப்பன காப்பாத்த தான் இந்த தோள்பட்டையிலும், தாடையிலும் இருக்குற தழும்பு எல்லாம்.. இன்னைக்கு உன்ன காப்பாத்த முதுகுல ஒரு வெட்டு அவ்வளவு தான்.”

“எங்க அப்பாவ நான் இழந்த மாறி உங்களையும் இழக்க விரும்பலன்னே நீங்க இங்க இருக்க வேணாம். வெளியூர் போய் நம்ம வியாபரத்த பாத்துகோங்க” கதிர் தன் மனதில் இருந்து பேசினான்.

“இல்ல தம்பி நான் என்ன சொல்லறேன்னா..” முத்து பேசி முடிப்பதற்குள் கதிர் பேசினான்.

“நீங்க கிளம்புங்கன்னே நான் பாத்துக்குறேன் எல்லாத்தையும்” கதிர் முத்துராமனின் கண்களை சந்தித்தான்.

“சரி தம்பி உனக்கு என்மேல நம்பிக்க .இல்லன்னா நான் கெளம்புறேன்.” முத்துராமன் உறுதியாய் சொன்னார்.

“அண்ணே.. நான் அப்படி சொல்லலன்னே உங்கள நம்பாம யார போய் நான் நம்புவேன்?”

“இல்ல தம்பி நான் போறேன்… அடுத்த வாரம்..” முத்துராமனின் கண்கள் கலங்கி இருந்தது.

ஒரு வாரத்தில் முத்துராமனின் உடல் ஓரளவு தேறியிருந்தது. குடும்பத்துடன் வெளியூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். ஊர் எல்லையை கடப்பதற்க்குள் அவர் வண்டியை யாரோ நான்கு பேர் சுற்றி வளைத்து முத்துராமனை கொலை செய்திருந்தனர்.
அடுத்த நாள் கதிரவனின் கார் அந்த வழியாக சென்றது.


 

எழுதியவர்

சந்தோஷ் ராகுல்
திருச்சி மாவட்டம் துறையூரைச் சார்ந்த சந்தோஷ் ராகுல் பி.டெக்., பட்டப்படிப்பு பயிலும் மாணவர்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x