அது அக்ஞாத காலம் . எனக்குத் துணையாய் இரண்டு நண்பர்கள். இரண்டு எதிரிகள். பின்மதியம் ஆரண்யத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த என்னை தாகம் வாட்டியெடுத்தது. நீர்வேட்கை உச்சம் அடைந்து தொண்டை வறள ஆரம்பித்தபோது , முதலில் நண்பர்களில் ஒருவரை அனுப்பி எங்கேனும் நீர்நிலைகள் தென்படுகிறதா எனப் பார்த்துவரச் சொன்னேன். அவர் திரும்பி வரத் தாமதமாகவே அடுத்த நண்பரை அனுப்பினேன். அவரும் திரும்பவில்லை. ஒவ்வொருவராக எதிரிகளும் சென்று திரும்பவில்லை. நான் ஏற்றெடுத்த இந்த பணியை நான் நிறைவேற்ற வேண்டும். நான் உத்தேசித்த அதே நாளில் நான் அதை செய்து முடிப்பேன். அது அவர்களுக்காக மட்டுமல்ல நான் என்னைச் சோதித்துக் கொள்வதற்கான தருணம்.
அனுப்பிய யாரும் வரவில்லை. தங்கள் தேவைகளின் பொருட்டு வந்தவர்கள் எனினும் என்னால் அவர்களை கைவிட்டு முன்செல்ல இயலாது. என் அறம் அதற்கு ஒப்பாது. நான்
திருஷ்டியின் துணையோடு அவர்கள் கண்டடைந்த சுனையின் அருகில் வந்து சேர்ந்தேன்.
சுனையின் அருகிலிருந்த மருதமரக் கிளையில் அமர்ந்திருந்த கொக்கு என்னை வரவேற்றது.
‘’வாரும் உம் துணைகளைத் தேடி வந்தீரோ? ’’
ஒரு கொக்கு என்னை அறிந்திருக்க வாய்ப்பில்லை. சுற்றிலும் பார்த்தேன் நான் அனுப்பியிருந்த நால்வர் சுனையின் கரையில் முழு போதையில் மயங்கிக் கிடந்ததைக் கண்டேன். நிச்சயமாக இது கொக்காக இருக்க முடியாது. இந்தக் காட்டில் இந்த அசம வேளையில் உலவிக்கொண்டிருப்பது ஒரு துராத்மாவாகவோ ஒரு யட்சனாகவோத்தான் இருக்க முடியும் . என்னை அறிந்திருப்பதால் துர் ஆத்மாவாக இருக்க வழியில்லை.
‘’ஆம் யட்சனே என் உடனுறை ஆட்களை மீட்க என் செய்ய” நான் நேரடியாக தீர்வுக்குத் தாவினேன்.’’
‘’யட்சர்களுக்கு லௌகீக தேவைகள் ஏதுமில்லை.என் கேள்விகளுக்கு உம் பதில்கள் வேண்டும் .அது போதும்.’’
‘’தொடும் யட்சரே . இறுக்கிறேன்.’’
‘’நூற்றி இருப்பதாறு கேள்விகள் தொடுத்திடச் சொல்லி மரபு சொல்கிறது. என் செய்ய”
‘’ எனக்கு சலிக்கும்வரை பதிலிறுப்பேன். ‘’
‘’தொடுக்கட்டுமா’’
‘’ம்ம்.. ஆகட்டும் ‘’
யட்சன் கேட்கத் தொடங்கினான்
1) எது சூரியனை உதிக்கச் செய்கிறது?
சூரியன் உதிப்பதில்லை
2) யார் சூரியனுக்குத் துணையாக இருக்கிறார்?
பிரபஞ்சமே துணை
3) எது அதை மறையச் செய்கிறது?
மறைவதுமில்லை
4) எதில் அது நிலைபெற்றிருக்கிறது?
காலத்தில்
5) எதனால் ஒருவன் கற்றவனாகிறான்?
அறிந்தவற்றை அனிச்சையாக்கிக் கொள்ளும்போது
6) எதனால் ஒருவன் பெரிய மகத்தான ஒன்றை அடைகிறான்?
எளிமையானவற்றை சரியாக செய்யத் தொடங்கும்போது
7) இரண்டாவது ஒன்றை ஒருவன் எவ்வாறு கொள்ளலாம்?
ஆவல் மட்டும் இன்றி உழைப்பும் இருந்தால்
8) ஒருவன் புத்திக்கூர்மையை எவ்வாறு அடையலாம்?
எந்தவொன்றும் தீட்டிக் கொண்டேயிருக்க கூர்மை அடையும்
9) தெய்வீகம் எது?
அவரவர் செயலிலே தெய்வீகம் அடங்கியிருக்கிறது.
10) அறம் எது?
அடுத்தவரை இயன்றவரை இம்சிக்காதது
11) மனிதக் குணம் எது?
வலியுணர்வது
12) மறம் எது?”
அடுத்தவரை இயன்றவரை இம்சிப்பது
13) முதன்மையான மதிப்புடையது எது?
தேவையே முதன்மை. உழவருக்கு மழையே மதிப்புமிக்கது
14) செழிப்பை அடைய விரும்புவோருக்கு முதன்மையானது எது?
போதுமென்ற திருப்தி
15) யார் உயிரிருந்தும் உயிரற்றவனாக இருக்கிறான்?
எவனொருவன் கொடுப்பதில் மகிழ்வடையவில்லையோ அவன்
16) பெற்றுக்கொள்பவருக்கு ஏற்படும் முதல் உணர்வு நன்றியுணர்வுதானா?
முதன்மையாக பெறுபவர்களுக்கு ஏற்படுவது கூச்சவுணர்வு .
17) பூமியை விடக் கனமானது எது?
துக்கப்பட பாத்தியதை இல்லாதவனின் அழுகை
18) ஆகாயத்தைவிட உயர்ந்தது எது?
உயர்ந்ததை உள்ளுவதே உயர்வு
19) காற்றைவிட வேகமானது எது?
எதைவிடவும் வேகம் கூடியது மனம்
20) புற்களைவிட எண்ணிக்கையில் அதிகமானது எது?
புற்களை விட எண்ணிக்கையில் அதிகமானது தரப்புகள்
21) நிலமற்றவனுக்கு யார் நண்பன்?
வழியற்றவனுக்கு வழிப்போக்கனே நண்பன்.
22) நோயுற்றவனுக்கு யார் நண்பன்?
மருந்தும் மனமும் நோயுற்றவனுக்கு நண்பன்
23) சாகப்போகிறவனுக்கு யார் நண்பன்?
சமாதானமே சாகப்போகிறவனுக்கு நண்பன்
24) அனைத்து உயிர்களையும் சமமாய் பாவிப்பது யார்?
நெருப்பும் நீரும்
25) நித்திய கடமை என்பது யாது?
கவனிப்பதே நித்திய கடமை
26) அமிர்தம் என்பது என்ன?
தாகத்தில் நீர் ……பசியில் உணவு அமிர்தம்
27) இந்த மொத்த அண்டத்திலும் இருப்பது என்ன?
இருளும் ஒளியுமான ஆற்றல்
28) எவன் தனியாக உலவுகிறான்?
தன்னை உணர்ந்ந்தவன் தனியாக உலவுகிறான்
29) பிறந்தவன் எவன் மீண்டும் பிறக்கிறான்?
மீண்டும் வேறொன்றாய் பிறக்கிறோம் எல்லோரும்
30) குளிர்ச்சிக்கான தீர்வு என்ன?
முதலில் நடுக்கம் பிறகு நெருப்பு
31) அறத்தின் உயர்ந்த புகலிடம் எது?
சும்மாயிருப்பது
32) புகழுக்கு புகலிடம் எது?
நேடாமலிருப்பது
33) சொர்க்கத்திற்கு புகலிடம் எது?
மகிழ்வோடிருப்பது
34) மகிழ்ச்சிக்கு புகலிடம் எது?
சிரத்தையோடிருப்பது
35) மனிதனுடைய ஆன்மா எது?
உள்ளிருக்கும் நன்மெய்யே ஆன்மா
36) பாராட்டத்தக்க காரியங்கள் அனைத்திலும் எது சிறந்தது?
சிறிதிலும் சிறிது கேட்டல்
37) ஒருவனது உடைமைகள் அனைத்திலும் மிகவும் மதிப்புமிக்கது எது?
செயல்
38) லாபங்கள் அனைத்திலும் எது சிறந்தது?
கோபங்களின்றி வாழ்தல்
39) உலகத்தில் உயர்ந்த அறம் எது?
ஊறின்றி வாழ்தல்
40) பலனைக் கொடுக்கும் அறம் எது?
பலனுக்காய் செய்தால் அதன் பெயர் அறம் இல்லை
41) உலகத்தை மூடியிருப்பது எது?
உலகம் மகிழ்வானது துக்கம் அதை மூடியிருக்கிறது
42) வழி என்பது எது?
எது சமமோ அதுவே வழி.தேடலற்றோருக்கோ முன்சென்ற பெரியோர் வழி
43) நஞ்சு எது?
உதவி கோருகையில் உதிர்க்கப்படும் உபதேசம்
44) பொறுமை எது?
சிறுமைகளைச் சகிப்பது பொறுமை
45) அமைதி எது?
சலனமற்ற கண்கள் களங்கமற்ற உள்ளம்
46) கருணை எது?
எதிர்பார்ப்பின்றி செயல்படுவது
47) எளிமை என்று அழைக்கப்படுவது எது?
இருந்தும் இல்லாதிருப்பது
48) வெல்லப்படமுடியாத எதிரி யார்?
நம்மை உணராவிடில் நாமே
49) அறியாமை என்பது எது?
இன்பம் துன்பம் பிறப்பு இறப்பு போலும் எல்லா இரட்டைகளே சாஸ்வதம் என்பதை அறியாமை
50) கர்வம் என்பது எது?
தெரிவதும் அறிவதும் கர்வம்
51) நிலைமாறாஉறுதி என்பது எது?
அறிந்தவற்றுக்கு அர்ப்பணிப்பது
‘’யட்சா போதும் . ‘’
நான் தலையை ஒருமுறை குலுக்கி, சிலுப்பிக் கொண்டேன்.
‘’கேள்விகள் போதும். நாம் வேறு ஏதாவது பேசலாம்.’’ வழித்துணைகளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டேன். அவர்களது உடல்களில் சிறு அசைவும் மெல்லிய முனங்கலும் தென்பட்டது. இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் முழித்துக் கொள்வார்கள் . யட்சன் மீண்டும் கணைகளை தொடுத்தான்
நான் உங்களை அறிந்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் பல இன்னல்களுக்கு இடையில் நீங்கள் மீண்டும் மீண்டும் துளிர்த்து வந்திருக்கிறீர்கள் .
நீங்கள் இவ்வாழ்வில் இப்போது இதுவரையிலான தோல்வியுற்றிருக்கிறீர்களா இல்லை ஜெயித்து விட்டீர்களா?
தோல்வி வெற்றி என வாழ்வை போட்டியாக பார்த்து கொண்டிருக்கிறோம். பலரும் சொன்னதுதான். நாம் இங்கு இந்த உலகில் வந்து உதித்தபோதே நாம் பூர்வாங்க போட்டிகளில் வென்று விட்டோம்.
பின் அதன் பிறகு நம் வேலையென்ன?
நமக்குப் பிடித்தது என்னவென உணர்வது .
அதை எப்படி தெரிந்துகொள்வது ?
தெரிந்துகொள்வதல்ல உணர்ந்து கொள்வது
எப்படி உணர ?
எது நமக்கு மகிழ்வைத் தருகிறதோ அது.
அதன் பொருட்டு சிலர் பிறரை துன்புறுத்துகிறார்களே?
பிறரை துன்புறுத்துவதே சிலருக்கு மகிழ்வைத் தரலாம். ஆனால் அது நீடித்த நிலையான
மகிழ்சியல்ல. தற்காலிக உவகை. சிற்றின்பம் என்பர்.
பேரின்பமோ?
நான் சொல்லும் பேரின்பத்தில் மாயைகளுக்கோ, தத்துவங்களுக்கோ, சடங்காசாரங்களுக்கோ, ஏன் கடவுளுக்குக் கூட இடமில்லை. அது மிக எளிமையானது. யாரிடமும் தன்னை நிருபிக்காதது.
நீங்கள் பேரின்பத்தை கண்டு கொண்டீர்களா?
இங்கு பேரின்பத்தை மட்டுமல்ல. எந்த ஒரு தெளிவையும் திருப்தியையும் பெற்றுவிட்டாலும் அதையும் அந்த ஞானத்தையுமே வெளியே பறைசாற்ற வேண்டிய தேவை சிலருக்கு இருக்கிறது.
புரியவில்லை?
நான் ஞானமடைந்துவிட்டேன் என ஒரு ஞானி கூச்சலிட மாட்டான்.
உங்கள் எதிரி யார் நண்பன் யார்.
நான் போராடுவது மரணத்தோடோ தர்மத்தோடோ அல்ல காலத்தோடு. காலமே என் நண்பனும் எதிரியும் ஆனவன். அவனே சாஸ்வதமானவன்.
இப்போது யட்சன் தளர்ந்துவிட்டான்
‘’போதும். உம்மவரை நான் திருப்பித் தருகிறேன்.அழைத்துச் செல்லும்’’
யட்சனுக்கு கொடையளிக்கும் மகிழ்வைக் கொடுக்க விரும்பினேன்.
‘’அறிந்தவன் அறியாதவனாய் அறியத்தருவது அறியாமையல்ல யட்சா’’
ஐவரும் குடிலுக்குத் திரும்பினோம்
எழுதியவர்
-
எழுத்து; காட்சி ஊடகம்; படைப்பிலக்கிய, சமூக, கோட்பாடு ஆய்வுகள்; மொழிபெயர்ப்பு எனப் பன்முகத் தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ஐந்து குறும்படங்கள், இரு ஆவணப் படங்கள் இவரது உருவாக்கத்தில் வெளிவந்துள்ளன. இளங்கலை மருந்தாளுனர் பட்டம் பெற்றவர்.
இவரது நூல்கள்:
கடந்தை கூடும் கேயாஸ் தியரியும் - சிறுகதைகள் ( என்.சி.பி.ஹெச் - 2012)
சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை - சிறுகதைகள் (காலச்சுவடு -2017)
யா.ஓ (மறைக்கப்பட்ட மார்க்கம்) -மறை புனைவு ( வெற்றிமொழி -2019)
இது கறுப்பர்களின் காலம் - மொழிபெயர்ப்புக் கவிதைகள் ( நீலம் -20121)
அம்பேத்கரின் கடிதங்கள் - மொழிபெயர்ப்பு - (காலச்சுவடு -2022)
.. என்றார் யா.ஓ - மறைபுனைவு ( யாவரும் -2022)
பிக்காஸோ ஓர் எருதை வரைகிறார் -மொழிபெயர்ப்புக் கவிதைகள் ( காலச்சுவடு- 2022)
( நன்றி : ஆசிரியர் குறிப்பு உதவி : காலச்சுவடு)
இதுவரை.
- சிறுகதை18 January 2024ராதா -ராஜா
- கதைகள் சிறப்பிதழ் 2023 - II3 September 2023யட்சனும் நானும்
மாறுப்பட்ட வடிவத்தில் இருந்தாலும் கதை மிக ஆழம். அருமை சிவசங்கர்