8 December 2024
titus mohan

னைத்து தளங்களிலும் நமது தற்போதைய மாற்றங்களை முன்னேற்றங்கள் என்று நிச்சயம் சொல்ல முடியுமா? இல்லை ஏமாற்றங்கள் என்று உதறிவிடுவதுதான் நலமா? கரங்களை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருப்பது ஆரோக்கியம் தரும் விசயம் என்பது பொதுப்புத்தி. தற்போது கிருமிநாசினியால் அடிக்கடி கைகளைக் கழுவது கரோனாவைத் தொடர்ந்த மாற்றம். இது எப்பொழுதும் தொடருமானால் அதுவே நிச்சயம் முன்னேற்றம். எங்கும் எப்பொழுதும் தூய்மையைக் கடைபிடிப்பது அனைத்தையும்விட ஏற்றம். எல்லா திட்டங்களிலும் நீடித்த முன்னேற்றங்களே வலிமை. 

இலத்தீன் (progressus) வேர்களைக் கொண்ட முன்னேற்ற சொல்லாடலுக்கு வெற்றி‘, ‘முன்னோக்கி நகர்தல்என்று பொருள். முன்னேற்றம் என்பது முற்போக்கான வளர்ச்சியின் ஒரு திசை. இத்திசையானது கீழிருந்து மேல் நோக்கியும், குறைவிலிருந்து நிறைவு நோக்கியும், வீழ்ச்சியிலிருந்து எழுச்சி நோக்கியும் தனிமனித மற்றும் ஒட்டுமொத்த மானுட சமூகத்தை இயக்க வேண்டும். அதுதான் உண்மையான முன்னேற்றம். 

சொல்வேந்தர் சுகி சிவம்;, ‘முன்னேற்றம் என்பது முன்னோக்கி நகர்வது, இது கீழிருந்து உயரத்திற்கு ஒரே மாதிரியான மாற்றம், சமூகத்தின் சமூக, பொருள் மற்றும் விஞ்ஞான செயல்முறைகளை மேம்படுத்துவதையும் துரிதப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட செயல்கள் மற்றும் கண்டுபிடிப்புகளின் தொகுப்புஎன்கிறார். காட்டுமிராண்டித்தனத்திலிருந்து நாகரீகத்தின் உச்சத்திற்கு மனிதகுலம் வளர்ந்தது இவ்விதமே.

 

அதிவிரைவு மாற்றங்கள் 

இன்றைய ஊடக மாற்றங்களை ஊடுருவிப் பார்ப்போம். நவீனத்துவ வருகையால் நாம் புதுப்பிக்கப்பட்ட மாற்றமும் வளர்ச்சியும் கண்டுள்ளோம், மறுப்பதற்கில்லை. புறாவின் காதல் செய்திக்காய் மாதக்கணக்கில் காத்திருந்ததும், அஞ்சல் பெட்டியின் திறப்பிற்காய் வாரக்கணக்கில் தவமிருந்ததும் இன்றில்லை. 1971 – களில்; முதல் மின்னஞ்சல் பிறந்ததிலிருந்தே மாற்றங்கள் முளைவிட துவங்கியது. இன்று சமூக – தொழில்நுட்ப – கலாச்சார மாற்றங்கள் அதிவேகத்தில் உள்ளன. பரிணாம வளர்ச்சி தந்த படிப்படியான சீர்திருத்தம் என்பது கடந்து  நவீன கருவிகளின்  அதிவிரைவு வேகத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக முன்னேறுகிறது மற்றும் அதன் வளர்ச்சி விகிதத்திற்கு முதலில் வெளிச்சம் போட்டது மூரின் விதிதான் (Moore’s law). ஒவ்வொரு 18 அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களுக்கும், கணினி செயலாக்க வேகம் இரட்டிப்பாகும்என்கிறார் மூரி. உதாரணத்திற்கு, 2025 ஆம் ஆண்டளவில், 38.6 பில்லியன் ஸ்மார்ட் சாதனங்கள் தரவைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து பகிரும். வலைத்தள சேவைகளின் சந்தை 2025 இல் $77.8 பில்லியனை எட்டும். அனைத்து தொழில்நுட்ப செலவினங்களில் 70% கிளவுட் (Cloud) தீர்வுகளுக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 2029ஆம் ஆண்டில் மீண்டும் சூப்பர்சோனிக் விமானத்தை, அதாவது, ஒலியை விட வேகமாக பயணிக்கும் விமான பயணத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்திருக்கிறது. பொதுவாக பயணிகள் விமானங்கள் மணிக்கு 900 கிலோமீட்டர் வேகத்தில்தான் பறக்கும். ஆனால் சூப்பர்சோனிக் விமானங்கள் 60,000 அடி உயரத்தில் மணிக்கு 1,060 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். இப்படி அறிவின் முன்னேற்றம் தரும் வேகத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறோம். வேகமே பணமாக வளர்ச்சியாக மடைமாற்றமும் காண்கிறது. இவை நல்லது என்று கடந்து விடுவதல்ல. மாறாக, இவற்றால் இழந்து கொண்டிருக்கும் சின்னஞ்சிறு சந்தோசங்களை, எளியவற்றிலும் நிறைவு காணும் மனநிலைகளை, போட்டி உலகில் இழந்து நிற்கும் நிம்மதிகளை மீட்டெடுப்பது நம் இலக்காக வேண்டும். 

 

நின்று நிதானிப்பதும் அவசியம்

நின்று நிதானித்து ஆசுவாசமாய் காரியங்களை செய்து இதயத்திற்கு இதமாக, மனதிற்கு மகிழ்வாக, உறவிற்கு இணக்கமாக, பகைவரிடத்தும் பண்பாக, சிறியவற்றிலும் நிறைவாக, எளியவரிடத்தும் இனிமையாக  நடந்து கொள்ளும் பாக்கியம் வாய்க்காதா என்கிற ஏக்க பெருமூச்சு அவ்வப்போது வந்து போகிறது. மாற்ற வேண்டும், மாற வேண்டும் என்கிற முயற்சி எத்தணிப்பு நொடிப்பொழுது கனவாகவே மிஞ்சி நிற்கிறது. நம்மில் பலருக்கும் வாழ்வு இப்படித்தான் நகர்கிறது அல்லது நகர்த்திக் கொண்டிருக்கிறோம். 

அனைத்தும் விரல்நுனியில் கண்ணசைவு வேகத்தில் என்பது மகிழ்வே. அதேவேளையில் வாழ்வை வெறும் இயந்திரங்களோடு மட்டுமே கடக்கும் போக்கு நிச்சயம் கண்டிக்கத்தக்கது, களையெடுக்கப்பட வேண்டியது. தன் குழந்தையின் உடல் அசைவுகளை நேரடியாகப் பார்த்து ரசிப்பது என்பதைவிட வீடியோவாக்கி ரசிப்பதில்தான் கவனம் செல்கிறது. இங்ஙனமே அனைத்து சூழல்களிலும் செயல்படுகிறோம். பதிவுகள் எதிர்காலத்தில் நினைவூட்டிகளாக துணைபுரியும் என்பது உண்மைதான். ஆனால் எதிர்கால எண்ணத்திலே நிகழ்கால வண்ணங்களை தொலைப்பது சரியல்ல. பதிவிற்காக ஒன்றிரண்டு என்பதைத் தாண்டி பாசத்திற்காய் நேரடிக்காட்சிகள் கண்களை வருட அனுமதிப்போம். இயந்திர திரைகளைவிட நேரடி கண்திரைகளே உணர்வுகளோடு கலக்கும், மனதிற்கு மகிழ்வையும் நிறைவையும் தரும். நேரடி தொடுதல்கள் குறையும் சமூகத்தில் மறைமுக திருடல்கள் தொடரும். இதனால் நெருடல்கள் வாழ்வில் களைகட்டும்

பேஸ்புக்கை வனைந்ததன் பின்னணி குறித்து அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் கூறுகையில், ‘நம்முடைய விழிப்புணர்வையும் கவனத்தையும் முடிந்தவரை செலவழிப்பதுஎன்கிறார். எதற்காக செலவழிப்பது? என்கிற கேள்வி நம்முள் நிச்சயம் அடைகாக்க வேண்டும். கவனமும் விழிப்புணர்வும் இன்று காணாமற்போவதைக் காண்கிறோம். காமன் சென்ஸ் டாட் ஓஆர்ஜி ஆய்வு சொல்லுகிறது, ‘வாட்ஸ் அப் போன்ற சமூகவலைத்தளங்கள் நம் கவனத்தையும் ஆற்றலையும் அதிகம் உறிஞ்சுகிறது. குழந்தைகள் பேசக் கூட கற்றுக் கொள்ளாத இரண்டு வயதிற்கு உள்ளே ஸ்மார்ட் போன் போன்றவற்றை எவ்வாறு இயக்குவது என்பது தெரிகிறது‘. இது சாதனையா? வேதனையா? நாம் எந்த வகையான தலைமுறையை உருவாக்குகிறோம்? 2000 ஆண்டுகளில் ஒரு மனிதனின் கவனம் 12 வினாடிகள் என்று இருந்தது. தற்போது இதையும் விட குறைவாக கவனம் மற்றும் செறிவிழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும் திறனை இழந்து கொண்டிருக்கிறோம் இதனால் நீண்ட நேர கவனம் தேவைப்படும் பணிகள் நமக்கு கடினமாகத் தெரிகிறது.

 

கேட்கவும் கடைபிடிக்கவும் மறவோம்

  • ஒரே செயலில் எவ்வளவு நேரம் நம்மால் கவனம் சிதறாமல் தொடர்ந்து செயல்பட முடிகிறது. உதாரணத்திற்கு படிக்கத் துவங்கிய சில நொடிகளிலே கவனம் வேறு எங்கோ செல்கிறதா?
  • புதிய இடங்கள் அல்லது நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்கச் செல்கையில் அவ்விடம் அல்லது அக்காட்சிகளோடு இணைந்து கொள்வதில் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். ஸ்மாட் போன்களின் ஊடான பதிவுகள் இரண்டாம் பட்சம் என்கிற தெளிவு பெறலாமா?
  • ஊடகக் கருவிகள் ஒருபோதும் நேரடி மகிழ்வை நிறைவை தந்துவிடாது. மாறாக, நேரடி அனுபவங்களைத் தொலைத்து நிழல்களை இரசிக்கவே பெரும்பாலும் தீனி போடுகின்றன. இதனை உணர்ந்து கொண்டால்தானே நிழலுக்கு நேரம் ஒதுக்குவதை குறைக்க முடியும்? நிஜத்தில் வாழ நினைக்க முடியும்?
  • சின்ன ஒரு புன்முறுவல், இன்முகமாய் ஒரு நலம் விசாரிப்பு, சுமையைத் தூக்கி தலையில் வைக்க கடினப்படும் முன்பின் தெரியாதவருக்கும் ஒரு கைகொடுத்தல், பண்டிகைக்காலங்களில் வறியவர் ஒருவரை விருந்தினராய் அழைத்து அவரோடு உணவருந்துதல், நீண்ட காலமாக தொடர்பில் இல்லாத ஒருவரை அலைப்பேசியில் அழைத்து உறவாடுதல், பிறர் பற்றி குறை பாடுபவரிடம் நற்வார்த்தைகளைப் பகிர்தல், அனைத்திற்கும் மேலாய் நிகழ்காலத்தில் வாழ்தல் என எத்தனை எத்தனை சிறிய காரியங்களில் சிறப்புகள் மிகுந்திருக்கிறது. உணர்ந்து செயல்படுவோமா?

எழுதியவர்

ம.டைட்டஸ் மோகன்
ஆய்வு மாணவர், மிலான்நகர்.

குமரி மாவட்ட எழுத்தாளர். இதுவரை தன்னம்பிக்கை, இளையோர் முன்னேற்றம், அரசியல், ஆன்மீகம் சார்ந்த 42 நூல்களைப் படைத்துள்ளார். சில நூல்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார்.  தற்பொழுது இத்தாலியின் மிலான் நகரில் தனது முனைவர்பட்ட ஆய்வினை அறநெறி கோட்பாடுகளில் மேற்கொண்டுள்ளார்.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Nirmala
Nirmala
1 year ago

Hello Congratulations,very appropriate, appreciative reflections.Latest situation of mass media which affects all walks of life.Truth is the fact.Hope you are doing well.Advance Holy advent season.

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x