8 December 2024
dharupathi

1

பெயர்: தோபதி மெஜென், வயது இருபத்தேழு. கணவன் துல்னா மஜீ (இறந்துவிட்டான்), வசிப்பிடம் சேராகான், பங்க்ராஜார், உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று தகவல் தெரிவித்தாலோ பிடிக்க உதவி செய்தாலோ நூறு ரூபாய் வெகுமதி…

பதக்கம்பெற்ற சீருடையணிந்த இருவரிடையே நடக்கும் உரையாடல்.

முதல் பதக்கம்: என்னது, ஆதிவாசிக்கு தோபதி என்று பெயரா? நான் கொண்டுவந்த பெயர்ப் பட்டியலில் அது இல்லையே! பட்டியலில் இல்லாத பெயரோடு எப்படி ஒருவர் இருக்கமுடியும்.

இரண்டாம் பதக்கம் : திரௌபதி மெஜென். அவள் அம்மா பகுளியில் இருக்கும் சூர்ஜா சாஹூவுக்கு (கொல்லப்பட்டவர்) நெல் இடித்துக் கொடுத்த வருடத்தில் பிறந்தவள். பெயரை வைத்தது சூர்ஜா சாஹூவின் மனைவி.

முதல்: இந்த ஆபிசர்களுக்கு ஆங்கிலத்தில் நீளமாக எழுதுவதைத் தவிர வேறு எதுவும் பிடிக்காதுபோல. அவளைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார்கள்?

இரண்டாம்: மிகவும் மோசமானவள். நீண்ட நாட்களாக நிறைய விஷயங்களுக்காகத் தேடப்படுபவள்.

கோப்பு: துல்னாவும் தோபதியும் அறுவடைக் காலத்தில் பீர்பம், பர்த்வான், முர்ஷிதாபாத், பங்குரா போன்ற ஊர்களில் மாறி மாறி வேலைசெய்தார்கள்.

1971-ஆம் ஆண்டில் நடந்த ‘ஆபரேஷன் பகுளி’யின்போது மூன்று கிராமங்களைச் சுற்றிவளைத்து தானியங்கித் துப்பாக்கிகளால் துளைத்தெடுத்தபோது நிலத்தில் படுத்துக்கொண்டு இறந்துபோனவர்களைப் போல நடித்தார்கள். உண்மையில் அவர்கள்தான் முக்கியக் குற்றவாளிகள். வறட்சியின்போது சூர்ஜா ஸாஹூவையும் அவர் மகனையும் கொன்றதோடு உயர்சாதியினரின் கிணறுகளையும் குழாய் கிணறுகளையும் ஆக்கிரமித்தார்கள். அந்த மூன்று இளைஞர்களையும் காவல்துறையிடம் ஒப்படைக்க மறுத்தார்கள். எல்லாவற்றையும் தூண்டிவிடுவதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள். காலையில் சடலங்களை எண்ணும் போது இந்தத் தம்பதியரின் உடல்களைக் காணவில்லை. பகுளியைக் கட்டமைத்த கேப்டன் அர்ஜன் சிங்கின் இரத்தச் சர்க்கரை அளவு சடாரென அதிகமாகி மனஉளைச்சல், பதட்டம், உளச்சோர்வு போன்றவற்றால் சர்க்கரை நோய் ஏற்படலாம் என்பதை மீண்டும் உறுதிசெய்தது. சர்க்கரை நோய்க்கு பன்னிரெண்டு கணவர்கள் ¾ அவற்றில் ஒன்று மனஉளைச்சல்.

துல்னாவும் தோபதியும் ஆதிகாலத்து இருளுக்குள் புகுந்து தலைமறைவாக வாழத் துவங்கினார்கள். ஆயுதமேந்திய தேடுதல் வேட்டையின்மூலம் சிறப்புப் படையினர் அந்த இருளைத் துளைக்க முற்பட்டபோது மேற்கு வங்கத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் வாழ்ந்து வந்த சந்தால் பழங்குடியினரை அவர்களுடைய விருப்பத்தையும் மீறிப் படைத்தவனைப் பார்க்க அனுப்பிவைத்தார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி எல்லா மனிதர்களும் சாதி இன வேறுபாடின்றி புனிதமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இருந்தாலும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.

இதற்கு இரண்டு காரணங்கள்: (1) தலைமறைவாக வாழும் தம்பதியரின் ஒளிந்துகொள்ளும் திறமை; (2) சிறப்புப் படையினருக்கு சந்தால்கள் மட்டுமல்ல ஆஸ்திரோ-ஆசிய முண்டா இனங்களைச் சேர்ந்த எல்லாப் பழங்குடியினரும் ஒன்றுபோலத் தெரிவது.

உண்மையில், பங்க்ராஜார் காவல்துறையின் அதிகார எல்லைக்குக் கீழ் வரும் (இந்தியாவில் ஒரு புழு கூடக் குறிப்பிட்ட காவல்நிலையத்தின் அதிகார எல்லைக்குக் கீழ் வரும்) மோசமான பெயரெடுத்த ஜார்கனி காட்டிலும் அதன் தென்கிழக்கு தென்மேற்கு மூலைகளிலும் நடந்த மயிர்க்கூச்செரியும் நிகழ்வுகளைப் பற்றியும் காவல்நிலையங்களைத் தாக்கித் துப்பாக்கிகளைக் கைப்பற்றுபவர்களைப் பற்றியும் சாட்சிகளின் பதிவுகளில் பல விவரங்களைப் பார்க்கலாம். (துப்பாக்கிகளைப் பிடுங்குபவர்களுக்கு படிப்பறிவு இல்லாததால் ‘துப்பாக்கிகளைத் தாருங்கள்’ என்பதற்குப் பதிலாக ‘குண்டுகளைத் தாருங்கள்’ என்றும் கேட்டார்கள்.) தானியத் தரகர்கள், நிலக்கிழார்கள், வட்டிக்குப் பணம் கொடுக்கும் கடன்காரர்கள், சட்ட அலுவலர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரையும் கொன்றார்கள். இந்த நிகழ்வுக்கு முன்னால் கறுப்பு நிறத் தோல் கொண்ட ஒரு தம்பதியர் காவல்துறையினரின் எச்சரிக்கை ஒலிப்பானைப் போல ஊளையிட்டனர்.

சமாரேய் ஹிஜூலெனக்கோ மர் கோகோப்பே

 

மற்றும்

 

ஹென்றே ரம்பரா கீச்சே கீச்சே ரம்பரா கீச்சே கீச்சே

எனச் சந்தால்களுக்குக் கூடப் புரியாத காட்டுமிராண்டி மொழியொன்றில் ஆரவாரத்தோடு பாடினார்கள்.

இதிலிருந்தே அர்ஜன் சிங்கின் சர்க்கரை நோய்க்கு இவர்கள்தான் காரணமென்பது தெளிவாகத் தெரிகிறது.

அரசாங்கத்தின் செயல்முறை சங்க்யா தத்துவத்தின் ஆண் கோட்பாட்டைப் போலவும் அன்டோனியோனியின் ஆரம்பகட்டப் படங்களைப் போலவும் தெளிவற்று இருந்தது. ‘ஆபரேஷன் ஜார்கனி’யின் பொறுப்பை மீண்டும் அர்ஜன் சிங்கிடமே கொடுத்தார்கள். மேலே சொல்லப்பட்ட ஊளையிட்டபடியே நடனமாடும் தம்பதியர்தான் தப்பிச் சென்ற சடலங்கள் என்பதைப் புலனாய்வுத் துறையின் மூலம் தெரிந்துகொண்டதும் கொஞ்ச நேரம் சோம்பையைப்போல உணர்வற்று இருந்தார். பிறகு கறுப்பு நிறத் தோலைக் கொண்ட மனிதர்களைப் பற்றிய பொருளற்ற அச்சத்தைக்கொண்டார். இறந்துபோய் சவப் பையில் கட்டிவைக்கப்பட்ட கறுப்பு நிற மனிதர்களைப் பார்த்தாலும் “அவர்கள் என்னைக் கொல்லப் பார்க்கிறார்கள்” என்றபடியே மயங்கிவிழுவார். நிறைய தண்ணீரைக் குடித்து அதை உடலில் இருந்து வெளியேற்றவும் செய்வார். சீருடையோ புனிதநூல்களோ அவருடைய உளச்சோர்வைத் தீர்க்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு, உரிய காலத்துக்கு முன்னால் கட்டாயமாக வழங்கப்பட்ட பணி ஓய்வு என்ற நிழலில் இருந்தவரைத்தான் வங்காளத்தின் மூத்த போர் மற்றும் தீவிர இடதுசாரி அரசியல் வல்லுநரான திரு. சேனாநாயக்கின் மேசையின் முன்னால் நிறுத்த முடிந்தது.

எதிர்த்தரப்பின் செயல்பாடுகளைப் பற்றியும் ஆற்றலைப் பற்றியும் அவர்களைவிடவும் சேனாநாயக்குக்கு நன்றாகத் தெரியும். அதனால் முதலில் சீக்கியர்களின் இராணுவத் திறமை குறித்த புகழுரை ஒன்றை நிகழ்த்தினார். பிறகு விளக்கம் சொன்னார்: துப்பாக்கியின் குழாய்களில் ஆற்றலிருப்பதை எதிர்த்தரப்பினரால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியுமா? அர்ஜன் சிங்கின் ஆற்றலும் துப்பாக்கியின் ஆணுறுப்பில் இருந்துதான் வெடிக்கிறது. இந்த நாளிலும் காலத்திலும் துப்பாக்கி இல்லாமல் சீக்கியர்களின் ஐந்து ‘க’ வரிசை விஷயங்களும் எதற்கும் உதவாது. இதுபோன்ற சொற்பொழிவை எல்லா இடத்திலும் நிகழ்த்துவார். இதன் விளைவாக போரிடும் படைகள் இராணுவத்தின் கையேட்டில் தங்களின் நம்பிக்கையை மீட்டெடுத்தன. அது எல்லோருக்குமான புத்தகமல்ல. பழைமையான ஆயுதங்களைக்கொண்டு நடத்தப்படும் கொரில்லாப் போர்முறைதான் மிகவும் இழிவான வெறுக்கத்தக்க முறை என அது குறிப்பிடுகிறது. அந்தப் போர்முறையைக் கடைப்பிடிக்கும் எவரையும் பார்த்த உடனே சுட்டுத்தள்ளுவது ஒவ்வொரு இராணுவ வீரனுக்கும் உள்ள புனிதமான கடமை. தோபதியும் துல்னாவும் அந்த போர் வகையைச் செய்யும் சண்டைக்காரர்கள். கோடரியும் வெட்டரிவாளும் வில்லும் அம்பும் கொண்டுதான் கொல்கிறார்கள். சொல்லப்போனால் கனவான்களை விடவும் சிறப்பாகப் போரிடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்கள். எல்லாக் கனவான்களும் துப்பாக்கியை வெடிக்கச் செய்வதில் திறமையுள்ளவர்களாக இருப்பதில்லை. துப்பாக்கியை நீட்டிப் பிடித்தாலே அதனுள் இருக்கும் ஆற்றல் வெளிப்பட்டுவிடும் என்று நினைக்கிறார்கள். துல்னாவும் தோபதியும் படிப்பறிவு இல்லாதவர்கள், அவர்களைப் போன்றவர்கள் பரம்பரை பரம்பரையாக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.

எதிர்த்தரப்பைச் சேர்ந்தவர்கள் சேனாநாயக்கை முக்கியத்துவம் கொண்டவராக நினைக்கவில்லை என்றாலும் அவரைச் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது என்பதை இங்கே சொல்லித்தான் ஆகவேண்டும். நடைமுறையில் எப்படி இருந்தாலும் கோட்பாட்டளவில் எதிர்த்தரப்பை மதிப்பவர். ‘இது வெறும் துப்பாக்கிகளுடன் விளையாடும் முரட்டுத்தனமான விளையாட்டு” என்ற மனப்பான்மையுடன் அணுகினால் அவர்களைப் புரிந்துகொள்ளவோ அழிக்கவோ முடியாது என்பதால் மதிக்கிறார்.

எதிரியை அழிக்கவேண்டுமென்றால் அவர்களாகவே மாறிவிடு. அவர்களில் ஒருவராக மாறி அவர்களைப் புரிந்துகொண்டார் (கோட்பாட்டளவில்). இதைப் பற்றியெல்லாம் எதிர்காலத்தில் எழுதவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். தன்னுடைய எழுத்தில் கனவான்களை இடித்துத் தரைமட்டமாக்கி அறுவடைத் தொழிலாளிகளின் நிலைமையை வெளிச்சம்போட்டுக் காட்டவேண்டும் என்று முடிவுசெய்திருக்கிறார். அவரின் இந்த உளவியல் செயல்பாடுகள் சிக்கலானவையாகத் தோன்றினாலும் உண்மையில் மிகவும் எளிமையான மனிதர். ஆமை இறைச்சியைத் தின்றுமுடித்ததும் அவருடைய மூன்றாம் தலைக்கட்டைச் சேர்ந்த பெரிய மாமாவைப் போலவே மகிழ்ச்சியோடு இருப்பார்.

அந்தப் பிரபலமான பழைய பாடலில் சொல்வதுபோலவே உலகம் கொஞ்சங்கொஞ்சமாக மாறும் என்பதும் அவருக்குத் தெரியும். ஒவ்வொரு உலகத்திலும் நன்மதிப்போடு வாழவேண்டுமென்றால் நற்சான்றைப் பெற்றிருக்கவேண்டும். தேவையென்றால் இந்த விஷயத்தை சரியான கோணத்தில் புரிந்துகொண்டது தான் மட்டுமே என்பதையும் எதிர்காலத்தில் எடுத்துக்காட்டுவார். தற்போது தான் செய்துகொண்டிருப்பதை எதிர்காலம் மறந்துவிடும் என்பதும் ஒவ்வொரு உலகத்துக்கும் ஏற்றவாறு நிறத்தை மாற்றிக்கொண்டால் அந்தக் குறிப்பிட்ட உலகத்தின் பிரதிநிதியாக மாறிவிட முடியும் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும். இன்று ‘சந்தேகத்தால் களைந்தெறியும்’ வழிமுறையைப் பின்பற்றி இளைஞர்களை ஒழித்துக்கட்டி வருகிறார். ஆனால் இரத்தத்தால் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடத்தையும் அது குறித்த நினைவுகளையும் மக்கள் விரைவில் மறந்துவிடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும். அதே நேரத்தில் ஷேக்ஸ்பியரைப்போல இந்த உலகத்தின் மரபுரிமைப் பேற்றை இளைஞர்களின் கையில் ஒப்படைக்கவேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார். ப்ராஸ்பெரோவும் அவர்தான்.

எப்படி இருந்தாலும் ஜீப்களில் கூட்டம் கூட்டமாக வந்த இளம் ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு காவல்நிலையமாகத் தாக்கி அந்தப் பகுதியில் அச்சத்தையும் படபடப்பையும் தோற்றுவித்துவிட்டு ஜார்கனி காட்டுக்குள்ளே போய் ஒளிந்துகொண்டார்கள் என்ற தகவல் வந்தது.

பகுளியில் இருந்து தப்பித்த பிறகு துல்னாவும் தோபதியும் கிட்டத்தட்ட எல்லா நிலவுடைமையாளர்களின் வீட்டிலும்  பணிபுரிந்தனர் என்பதால் கொலைகாரர்களிடம் அவர்களின் இலக்குகள் பற்றிய தகவல்களை இலகுவாகத் தெரிவிப்பதோடு தாங்களும் படைவீரர்கள்தான் என்று பெருமையாகப் பீற்றிக்கொள்ள முடிந்தது. இறுதியில் யாராலும் நுழைய முடியாத ஜார்கனி காட்டினை நிஜமான படைவீரர்கள் சூழ்ந்தார்கள். இராணுவம் உள்ளே நுழைந்து போர்க்களத்தைப் பிரித்தது. படைவீரர்கள் ஒளிந்திருந்து குடிநீருக்கு ஆதாரமான அருவிகளையும் ஊற்றுகளையும் காவல் காத்தனர். இன்னமும் காவல் செய்கின்றனர். இன்னமும் தேடுகின்றனர்.

அப்படி ஒரு தேடுதலின்போது, சந்தால் இனத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன் தட்டையான பாறையின் மீது குப்புறப் படுத்துக்கொண்டு தலையைக் கீழே தாழ்த்தி நீரருந்துவதைப் பார்த்தான் துக்கிராம் கராரி, இராணுவத்துக்குத் தகவல் தருபவன். படுத்துக்கொண்டிருந்த நிலையிலேயே அவனைச் சுட்டனர் படைவீரர்கள். அந்த .303 குண்டு அவனைத் தாக்கிக் கால்களைப் பரத்தியபடி தரையில் கிடக்கச் செய்தது, இரத்தம் நுரைத்தபடி வாய்வழியே வெளியேறச் செய்தது. “மா-ஹோ” என்று கர்ஜித்தப்படியே அவன் உடல் தளர்ந்துபோனது. அது துல்னா மஜீ என்பதில் சந்தேகமே இல்லை என்பதைப் பிறகுதான் தெரிந்துகொண்டனர்.

‘மா-ஹோ’ என்பதன் பொருள் என்ன? பழங்குடிகளின் மொழியில் வன்முறையைத் தூண்டும் கோஷமா? பலத்த ஆலோசனைக்குப் பின்னரும் பாதுகாப்புத் துறையால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. கல்கத்தாவில் இருந்து விமானத்தில் வரவழைக்கப்பட்ட இரண்டு பழங்குடி வல்லுனர்களும் ஹாஃபமன்-ஜென்னர், கோல்டன்-பாமெர் போன்ற தகுதிபெற்றவர்கள் தொகுத்த சிறிதும் பயனற்ற அகராதிகளைப் புரட்டிப்பார்த்துக் களைத்தனர். இறுதியில் எல்லாம் அறிந்தவரான சேனாநாயக் முகாமுக்கு தண்ணீர் கொண்டுவரும் சாம்ரூவைக் கூப்பிட்டார். அவன் இரண்டு வல்லுனர்களையும் பார்த்துக் கொக்கரித்தான். “காந்தி அரசரின் காலத்தில் போரிடத் துவங்கிய மால்டாவைச் சேர்ந்த சந்தால்கள் அதைச் சொல்வார்கள். அது ஒரு போர் முழக்கம். இங்கே “மா-ஹோ” என்று சொன்னது யார்? மால்டாவில் இருந்து யாராவது வந்தார்களா?” என்று பீடியால் காதைக் குடைந்தபடி கேட்டான்.

ஒருவழியாகப் பிரச்சனை தீர்ந்தது. பிறகு துல்னாவின் உடலைப் பாறையின்மேல் விட்டுவிட்டு மரங்களின்மீது ஏறிப் பச்சை இலைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டனர். கிரேக்கக் கடவுள் பான் பல உருவம் எடுத்து வந்ததைப் போல பச்சைக் கிளைகளை இறுகத் தழுவிக்கொண்டு காத்திருந்தவர்களின் மர்ம உறுப்புகளைப் பெரிய சிவப்பு எறும்புகள் கடிக்கத் துவங்கின. உடலை மீட்டுக்கொண்டு போக யாராவது வருகிறார்களா என்று பார்த்தனர். இது வேடர்கள் பின்பற்றும் வழிமுறை, படைவீரர்களுடையது அல்ல. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையின் மூலம் இந்த முரடர்களைத் தீர்த்துக்கட்ட முடியாது என்பது சேனாநாயக்குக்குத் தெரியும். சடலத்தைத் தூண்டிலாக வைத்து இரையைப் பிடிக்கவேண்டும் என்று தன்னுடைய ஆட்களிடம் சொன்னார். எல்லாம் வெளியேவந்துவிடும் என்று சொன்னார். நான் தோபதியின் பாடலின் பொருளை ஓரளவுக்குப் புரிந்துகொண்டுவிட்டேன் என்றார்.

அவருடைய கட்டளைப்படி நடந்தார்கள் படைவீரர்கள். ஆனால் துல்னாவின் சடலத்தை எடுத்துச்செல்ல யாரும் வரவில்லை. இரவு நேரத்தில் கைகலப்பு செய்யும் ஒலி கேட்ட திசையில் படைவீரர்கள் சுட்டனர். கீழே இறங்கிப் பார்த்தபோது சருகுகளுக்கு நடுவே புணர்ச்சியில் ஈடுபட்ட இரண்டு முள்ளெலிகளைச் சுட்டிருப்பதைத் தெரிந்துகொண்டனர். காட்டில் தகவல் சேகரிக்கும் துக்கிராம் துல்னாவைப் பிடிக்க உதவியதற்கான வெகுமதியைப் பெறுவதற்கு முன்னர் கவனக்குறைவினால் கழுத்தில் கத்தியால் குத்துப்பட்டான். துல்னாவின் சடலத்தைப் படைவீரர்கள் தூக்கியதும் தங்களின் விருந்து தடைப்பட்டுவிட்ட கோபத்தில் எறும்புகள் கடித்தன, அவர்கள் வலியில் துடித்தனர். சடலத்தை மீட்டுச்செல்ல யாரும் வரவில்லை என்பதை அறிந்த சேனாநாயக் பாசிசவாதத்துக்கு எதிரான புத்தகமான ‘தி டெபுடி’-யை ஓங்கித் தட்டி “என்னது?” என்று கத்தினார். அப்போது பழங்குடி வல்லுனர்களில் ஒருவர் ஒட்டுத்துணியில்லாமல் ஓடிய ஆர்க்கிமெடிஸ் போல வெளிப்படையான உற்சாகத்துடன் ஓடிவந்தார். “எழுந்திருங்கள் சார்! ‘ஹென்டே ரெம்ப்ரா’ வின் பொருளைக் கண்டுபிடித்துவிட்டேன். அது முண்டரி மொழி,” என்றார்.

இப்படியாக தோபதியைத் தேடும் பணி தொடர்ந்தது. ஜார்கனி காட்டுப் பகுதியில் ஆபரேஷன் தொடர்ந்தது, தொடரும். அரசாங்கத்தின் பின்புறத்தில் வந்த வலிமிகுந்த பிளவைக் கட்டி அது. எந்தக் களிம்பும் அதை ஆற்ற முடியாது. எந்த மூலிகையும் உடைக்கமுடியாது. முதல் கட்டத்தில் தப்பி ஓடுபவர்களுக்குக் காட்டின் நிலவமைப்பு தெரியாததால் எளிதில் பிடிபட்டனர். எதிர்ப்படும்போது என்ன செய்யவேண்டும் என்ற விதியின்படி வரி கட்டும் குடிமக்களின் செலவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதே விதியின்படி அவர்களுடைய கண், குடல், வயிறு, இதயம், மர்ம உறுப்பு போன்றவை நரி, வல்லூறு, கழுதைப்புலி, காட்டுப்பூனை, எறும்பு, புழு போன்றவற்றுக்கு உணவாகின. பிறகு அந்தத் தீண்டத்தகாதவர்கள் தங்களுடைய எலும்புக்கூட்டை நல்ல விலைக்கு விற்பதற்காக மகிழ்ச்சியுடன் போனார்கள்.

அடுத்த கட்டமான வெளிப்படையான போரில் அவர்கள் பிடிபடவில்லை. நம்பிக்கைக்குரிய தூதுவர் ஒருவரைக் கண்டுபிடித்துவிட்டார்கள் போல இருக்கிறது. பத்துக்கு ஒன்று அது தோபதிதான். தோபதி துல்னாவைத் தன் இரத்தத்தை விடவும் அதிகமாக நேசித்தாள். தப்பியோடுபவர்களை இப்போது அவள்தான் காப்பாற்றுகிறாள் என்பதில் சந்தேகமேயில்லை.

‘அவர்கள்’ என்பதும் அனுமானம்தான்.

ஏன்?

முதலில் போனவர்கள் எத்தனை பேர்?

அமைதி மட்டுமே பதிலாக இருந்தது. அது பற்றி நிறைய கதைகளும் நிறைய புத்தகங்களும் வெளிவந்துள்ளன. எல்லாவற்றையும் நம்பாமல் இருப்பதே சிறப்பானது.

ஆறு வருடம் நேருக்கு நேர் நடந்த போரில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்?

அமைதி மட்டுமே பதிலாக இருந்தது.

இந்த நேருக்கு நேர் நடந்த போருக்குப் பிறகு கிடைத்த எலும்புக்கூடுகளின் கைகள் ஏன் உடைந்தோ வெட்டுப்பட்டோ இருந்தன? கையில்லாத மனிதர்கள் சண்டையிட்டிருக்க முடியுமா? கழுத்தெலும்புகள் ஏன் தளர்ந்திருந்தன? கால்களும் நெஞ்சுக் கூடுகளும் ஏன் நொறுங்கி இருந்தன?

இரண்டு விடைகள் கிடைத்தன. அமைதி. குற்றம் தொனிக்கும் கண்கள். உங்களுக்கு வெட்கமாயில்லை! இதை ஏன் இப்போது பேசுகிறீர்கள்? என்ன நடக்கிறதோ அது நடக்கும்…

காட்டில் எத்தனை பேர் மீதமிருக்கிறார்கள்? அமைதி மட்டுமே பதிலாக இருந்தது.

ஒரு படைப்பிரிவா? வரிசெலுத்துபவரின் பணத்தில் இத்தனை பெரிய படைப்பிரிவை காட்டுப் பகுதியில் வைத்திருக்க ஆகும் செலவு நியாயமானதா?

விடை: இதை ஆட்சேபிக்கிறேன். காட்டுப் பகுதி என்பது தவறு. படைக்குத் தேவையான எல்லாமே தகுந்த மேற்பார்வையோடு வழங்கப்படுகிறது. மத வழக்கப்படி வழிபாட்டு வசதி செய்து தரப்படுகிறது. ‘விவித பாரதி’ கேட்கவும் ‘இது தான் வாழ்க்கை’ திரைப்படத்தில் சஞ்சீவ் குமாரும் பகவான் கிருஷ்ணரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்வதைப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இல்லை. அது காட்டுப் பகுதியல்ல.

எத்தனை பேர் மீதமிருக்கிறார்கள்.

அமைதி மட்டுமே பதிலாக இருந்தது.

எத்தனை பேர் மீதமிருக்கிறார்கள்? யாரேனும் இருக்கிறார்களா?

இதற்கான விடை நீளமானது.

பிரிவு: இன்னமும் சண்டை நடக்கிறது. கடன்காரர்கள், நிலவுடைமையாளர்கள், தானியத் தரகர்கள், அனாமதேய விபச்சார விடுதி உரிமையாளர்கள், முன்னாள் துப்புக்கொடுப்பவர்கள் எல்லோரும் இன்னமும் பீதியில் இருக்கிறார்கள். பசித்தவர்களும் அம்மணமானவர்களும் அடங்க மறுப்பவர்களாகவும் அடக்க முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். சில பகுதிகளில் அறுவடைப் பணியாளர்களுக்கு அதிகக் கூலி தரப்பட்டது. தப்பியோடுபவர்களுக்காக அனுதாபப்படும் கிராமங்கள் இன்னமும் அமைதியாகவும் எதிர்ப்புணர்வோடும் இருக்கின்றன. இந்த நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டுகின்றன…

இந்தச் சித்திரத்தில் தோபதி மெஜென் எங்கே பொருந்துகிறார்?

தப்பியோடுபவர்களோடு அவளுக்குத் தொடர்பிருக்கும். பயத்துக்கான காரணம் வேறு எங்கோ இருக்கிறது. எஞ்சி இருப்பவர்கள் காட்டின் ஆதி உலகத்தில் நீண்ட காலம் வசித்தவர்கள். ஏழை அறுவடைப் பணியாளர்களுக்கும் பழங்குடியினருக்கும் துணையாக இருக்கிறார்கள். புத்தகத்தில் இருந்து படிப்பறிவு பெறுவதை மறந்து விட்டிருப்பார்கள். ஒரு வேளை புத்தகத்தில் படித்ததை அவர்கள் வாழும் மண்ணில் போரிடவும் உயிர்வாழவும் தேவையான புதிய நுட்பங்களைக் கற்றுக்கொள்ளத் திசைதிருப்பி இருக்கிறார்களோ. வெளியார்ந்த புத்தக அறிவிலும் உள்ளார்ந்த உற்சாகத்திலும் மட்டுமே புகலிடம் தேடுபவர்களைச் சுட்டு ஒழித்துக் கட்டிவிடலாம். நடைமுறை அறிவோடு செயலாற்றுபவர்களை அத்தனை சுலபமாக கொன்றுவிட முடியாது.

எனவே ‘ஆபரேஷன் ஜார்கனி காட்டை’ நிறுத்த முடியாது. காரணம்: இராணுவக் கையேட்டில் உள்ள எச்சரிக்கை விதிகள்.


2

தோபதி மெஜென்னைப் பிடியுங்கள். மற்றவர்களிடம் இட்டுச் செல்வாள்.

இடுப்புப் பட்டியில் கொஞ்சம் சோற்றை முடிந்துகொண்டு மெல்ல முன்னேறிக்கொண்டு இருந்தாள் தோபதி.

மூஷாய் டுதுவின் மனைவி கொஞ்சம் சோறு சமைத்துக் கொடுத்திருந்தாள். அவ்வப்போது இப்படிச் செய்வாள். சோறு ஆறியதும் இடுப்புத் துணியில் முடிந்துகொண்டு மெல்ல நடப்பாள் தோபதி. நடக்க நடக்க தலையில் ஊரும் பேனை எடுத்து நசுக்கினாள். கொஞ்சம் மண்ணெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டால் பேனெல்லாம் செத்துவிடும். அப்புறம் சமையல் சோடாவைத் தலைக்குக் தேய்த்துத் குளிக்கலாம். ஆனால் இந்க வேசி மகன்கள் அருவியின் ஒவ்வொரு வளைவிலும் பொறி வைத்திருக்கிறார்கள். நீரில் மண்ணெண்ணெய் வாசம் வீசினால், மோப்பம் பிடித்துக்கொண்டு வந்துவிடுவார்கள்.

தோபதி!

அவள் பதில் சொல்லவில்லை. உண்மையான பெயரை யாராவது கூப்பிட்டால் பதில் சொல்வதில்லை. இன்றுதான் பஞ்சாயத்து அலுவலகத்தில் அவளைப் பிடித்துக் கொடுத்தால் கிடைக்கும் வெகுமதி பற்றிய அறிவிப்பைப் பார்த்தாள். மூஷாய் டுதுவின் மனைவி சொன்னாள். “என்ன பார்க்கிறாய்? யார் இந்த தோபதி மெஜென்? அவளைப் பிடித்துக் கொடுத்தால் பணம் தருவார்களாமே!”

“எத்தனை ரூபாய்?”

“இருநூறு”

அடக் கடவுளே!

“இந்த முறை பலத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எல்லாம் புதிய போலீஸ்காரர்கள்.” அலுவலகத்தில் இருந்து வெளியே வந்ததும் மூஷாயின் மனைவி சொன்னாள்.

ஹ்ம்ம்.

திரும்பவும் இங்கே வராதே.

ஏன்?

மூஷாயின் மனைவி நிலத்தைப் பார்த்தாள். “மறுபடியும் சாஹிப் வந்திருப்பதாக டுது சொல்கிறார். உன்னைப் பிடித்தால், எங்கள் கிராமம், எங்கள் குடிசைகள்…”

மறுபடியும் எரித்துவிடுவார்கள்.

ஆமாம். அப்புறம் துக்கிராம்…

சாஹிபுக்குத் தெரியுமா?

ஷோமாயும் புதனாவும் நமக்குத் துரோகம் செய்துவிட்டார்கள்.

இப்போது அவர்கள் எங்கே?

இரயிலில் தப்பித்து ஓடிவிட்டார்கள்.

தோபதி எதையோ நினைத்துக்கொண்டாள். பிறகு, “நீ வீட்டுக்குப் போ. என்ன நடக்குமென்பது தெரியவில்லை. என்னைப் பிடித்துவிட்டால் தெரியாது என்று சொல்லிவிடு.”

“நீ எங்காவது ஓடிப் போக முடியாதா?”

“இல்லை. எத்தனை முறை தப்பித்து ஓடமுடியும். நீயே சொல். என்னைப் பிடித்தால் என்ன செய்யமுடியும்? கொல்வார்கள். செய்யட்டுமே.”

“எங்களுக்குப் போவதற்கு வேறு இடமே இல்லை,” மூஷாயின் மனைவி சொன்னாள்.

“யாரையும் காட்டிக் கொடுக்கமாட்டேன்,” மெல்லிய குரலில் சொன்னாள் தோபதி.

தோபதிக்குத் தெரியும். அடிக்கடியும் நீண்ட காலமாகவும் கேட்டு வந்ததால் சித்திரவதை செய்வதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டு இருக்கிறாள். சித்திரவதையில் மனமும் உடம்பும் துவண்டு போனால், நாக்கைக் கடித்துத் துண்டித்துக்கொள்வாள். அந்தப் பையன் அப்படித்தான் செய்தான். அவனைப் பிடித்து விசாரணை செய்தார்கள். உங்களைப் பிடித்ததும் கைகளைப் பின்னால் கட்டிவிடுவார்கள். எலும்புகளை நொறுக்குவார்கள். உங்களின் பாலினம் மிகப் பெரிய காயமாக இருக்கும். காவல்துறையினரால் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார், அடையாளம் தெரியாத ஆண், வயது இருபத்தி இரண்டு….

இதையெல்லாம் யோசனை செய்துகொண்டே தோபதி நடக்கையில் யாரோ அழைத்தார்கள்.

தோபதி!

அவள் பதில் சொல்லவில்லை. அவளுடைய சொந்தப் பெயரைச் சொல்லி அழைத்தால் பதில் சொல்வதில்லை. இங்கே அவள் பெயர் உபி மெஜென். ஆனால் அழைப்பது யார்?

மனதில் எப்போதும் சந்தேக முட்கள் சுருண்டு கிடந்தன. “தோபதி” என்ற அழைப்பைக் கேட்டதும் முள்ளெலியின் முட்களைப் போலக் குத்திட்டு நின்றன. நடந்தபடியே தெரிந்தவர்களின் முகம் இருக்கும் படச்சுருளை மனதில் விரித்தாள். யாராக இருக்கும்? ஷோம்ராவாக இருக்காது, தப்பித்து ஓடும் முயற்சியில் இருக்கிறான். ஷோமாயும் புதனாவும் வேறு காரணத்துக்காக தப்பித்து ஓடுகிறார்கள். கோலோக்காக இருக்காது, பகுளியில் இருக்கிறான். ஒருவேளை பகுளியைச் சேர்ந்தவராக இருக்குமோ? பகுளிக்குப் பிறகு அவளும் துல்னாவும் பெயரை உபி மெஜென் என்றும் மதங் மஜீ என்றும் மாற்றிக் கொண்டார்கள். இங்கே மூஷாயையும் அவரது மனைவியையும் தவிர வேறு யாருக்கும் அவர்களுடைய உண்மையான பெயர் தெரியாது. இளைஞர்களில் முந்தைய குழுவைச் சேர்ந்த எல்லோருக்கும் தெரியாது.

அது ஒரு துன்பமான காலம். அதைப் பற்றி நினைக்கும்போது தோபதி குழம்பிப் போவாள். பகுளியில் ‘ஆபரேஷன் பகுளி’ நடந்தது. தன் இரண்டு வீட்டின் வளாகத்திலும் இரண்டு குழாய்க் கிணறுகளையும் மூன்று கிணறுகளையும் தோண்டும் வேலைக்காக பிட்டிபாபுவிடம் ஏற்பாடு செய்திருந்தான் சூர்ஜா சாஹூ. எங்கேயும் தண்ணீர் இல்லை, பீர்பம்மில் வறட்சி நீடித்தது. சூர்ஜா சாஹூவின் வீட்டிலோ, காகத்தின் கண்ணைப் போலத் தெளிவான தண்ணீர் அளவில்லாமல் சுரந்தது.

கால்வாய் வரியைக் கட்டிவிட்டுத் தண்ணீரை எடுத்துக்கொள். எல்லாம் பற்றி எரிகிறது.

வரிப்பணத்தைக் கொண்டு சாகுபடியை அதிகரித்தால் என்னுடைய இலாபம் என்னாகும்?

எல்லாமே தீயாக எரிகிறது.

வெளியே போ. உன்னுடைய பஞ்சாயத்து அபத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தண்ணீரைப் பாய்ச்சி நான் சாகுபடியை அதிகரிப்பேன். நிலத்தை குத்தகை எடுத்து வேலை செய்ததற்காகப் பாதி நெல் வேண்டும் என்று நீ கேட்பாய். இலவசமாக நெல் கிடைத்தால் யாருக்கும் மகிழ்ச்சி தானே. அப்படியென்றால் நெல் முழுவதையும் எனக்குத் தா, அல்லது பணத்தைக் கொடு. உனக்கு நல்லது செய்யப்போய் பாடம் கற்றுக்கொண்டேன்.

என்ன நல்லது செய்தாய்?

கிராமத்துக்குத் தண்ணீர் கொடுத்தேனே?

உன்னுடைய பங்காளி பகுண்லாலுக்குக் கொடுத்திருக்கிறாய்.

உனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லையா?

இல்லை. தீண்டத்தகாதவர்களுக்கு யாரும் தண்ணீர் தருவதில்லை.

அந்த இடத்தில்தான் சண்டை ஆரம்பித்தது. அப்படியொரு வறட்சியில், மனிதர்களின் பொறுமையில் தீப்பிடிக்கிறது. கிராமத்தைச் சேர்ந்த சதீஷூம் ஜுகலும் அந்த இளைஞனும், அவன் பெயர் ராணா தானே? நிலம் வைத்திருக்கும் கடன்காரர்கள் யாரும் ஒன்றையும் தர மாட்டார்கள், அவனைப் போட்டுத் தள்ளவேண்டும் என்றார்கள். இரவு நேரத்தில் சூர்ஜா சாஹூவின் வீட்டைச் சூழ்ந்தார்கள். சூர்ஜா சாஹூ துப்பாக்கியை நீட்டினான். மாடு கட்டும் கயிற்றால் அவனைக் கட்டிப்போட்டார்கள். அவனுடைய வெள்ளை முழி இப்படியும் அப்படியும் சுழன்றது. மீண்டும் மீண்டும் மூத்திரமும் வெளிக்கும் போனான்.

“சகோதரர்களே, முதல் அடியை நான் கொடுக்கிறேன். என் கொள்ளுத் தாத்தா இவனிடம் இருந்து கொஞ்சம் நெல்லைக் கடன் வாங்கியதால் கடனைத் தீர்ப்பதற்காக இன்று வரை கூலியே இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன்,” என்றான் துல்னா.

“என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவன் வாயில் எச்சில் ஊறும். கண்ணை நான் தோண்டுகிறேன்,” என்றாள் தோபதி.

சூர்ஜா சாஹூ. அப்புறம் ஷியூரியில் இருந்து வந்த தந்திச் செய்தி. சிறப்பு இரயில். இராணுவம். பகுளி வரை ஜீப் வரமுடியவில்லை. அணிவகுத்துச் செல்-அணிவகுத்துச் செல்-அணிவகுத்துச் செல். ஆணி பதிக்கப்பட்ட பூட்ஸூகள் சரளைக் கற்களின்மீது நடக்கும்போது எழுந்த சரக்-சரக்-சரக் ஒலி. சுற்றி வளையுங்கள். ஒலிபெருக்கியில் வரும் கட்டளைகள். ஜூகல் மண்டல், சதீஷ் மண்டல், ராணா என்கிற ப்ரபீர் என்கிற தீபக், துல்னா மஜீ-தோபதி மெஜென் எல்லோரும் சரணடையுங்கள்-சரணடையுங்கள்-சரணடையுங்கள். யாரும் சரணடையவில்லை சரணடையவில்லை. கிராமத்தை இடித்து-இடித்து-இடித்துத் தள்ளுங்கள். கோர்டிட்டை காற்றில் பரவச் செய்யுங்கள்-பட-பட-பட-பட. நாள் முழுவதும் பட-பட-பட. பற்றி எரியும் எரிபொருளை வீசுங்கள்.

பகுளி பற்றி எரிந்தது. இன்னுமின்னும் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும்… தீ… தீ… கால்வாய் வழியாகச் செல்லும் பாதையை மூடுங்கள். இரவுக்குள் எல்லாம் நடந்து முடிந்தது-முடிந்தது-முடிந்தது. தோபதியும் துல்னாவும் தவழ்ந்தபடியே பாதுகாப்பான இடத்துக்குத் தப்பித்துப் போனார்கள்.

பகுளிக்கு அடுத்து இருக்கும் பல்டாகுரிக்கு அவர்களால் சென்று சேர்ந்திருக்க முடியாது. பூபதியும் தபாவும் அழைத்துச் சென்றார்கள். பிறகு தோபதியும் துல்னாவும் ஜார்கனி பகுதியிலேயே வேலை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. துல்னா தோபதியிடம் விளக்கினான். “அன்பே, இதுதான் சிறந்த வழி. இப்படி வாழ்ந்தால் குடும்பமோ குழந்தையோ உருவாகாது. ஆனால் யாருக்குத் தெரியும்? நிலவுடைமையாளர்களும் கடன்காரர்களும் காவல்துறையினரும் ஒரு நாள் முற்றிலும் ஒழிக்கப்படலாம்.

அவளைப் பின்னால் இருந்து அழைத்தது யார்?

தோபதி நிற்காமல் நடந்து கொண்டேயிருந்தாள். கிராமங்கள் வயல்கள் புதர்கள் பாறைகள் – பொதுப்பணித்துறையின் அடையாளப் பலகைகள் – பின்னால் யாரோ ஓடும் சத்தம். ஓடிக்கொண்டிருந்தது ஒருவர் மட்டுமே. ஜார்கனி காடு இரண்டு மைல் தூரத்தில் இருந்தது. காட்டை அடைந்துவிட வேண்டும் என்பதைத் தவிர வேறு எண்ணமே அவளுக்கு இல்லை. காவல்துறை அவளை பிடிக்கும் அறிவிப்பை மீண்டும் வெளியிட்டிருக்கிறது என்பதை அவர்களிடம் சொல்லவேண்டும். அந்த வேசி மகன் சாஹிப் திரும்பவும் வந்திருக்கிறான் என்பதைச் சொல்லவேண்டும். ஒளிந்துகொள்ளும் இடத்தை மாற்றவேண்டும்.

கூடவே சண்டராவில் வயலில் வேலை செய்பவர்களுக்குக் கூலிகொடுக்கும் பிரச்சனையில் லக்கி பேராவையும் நரன் பேராவையும் சூர்ஜா சாஹூவைச் செய்தது போலவே செய்யவேண்டுமென்ற திட்டத்தை இரத்து செய்யவேண்டும். ஷோமாய்க்கும் புதனாவுக்கும் எல்லாம் தெரியும். பெரும் ஆபத்து தோபதியின்  விலா எலும்பிலேயே இருந்தது. ஒரு சந்தலாக ஷோமாய் புதனா இருவரும் செய்த நம்பிக்கைத் துரோகத்துக்கு நான் அவமானம்கொள்ளத் தேவையில்லை என்று இப்போது நினைத்தாள். தோபதியின் இரத்தம் சம்பாபூமியின் சுத்தமான கலப்படமற்ற கறுப்பு இரத்தம். சம்பா முதல் பகுளி வரையிலும் ஒரு கோடி நிலவுகள் உதயமாகியும் அஸ்தமனமாகியும் இருந்தன. அவர்களின் இரத்தம் மாசுபட்டிருக்கலாம். தன் முன்னோர்களை நினைத்துப் பெருமிதம் கொண்டாள் தோபதி. கறுப்புப் போர்க்கவசம் அணிந்து தங்கள் பெண்களின் இரத்தத்துக்குக் காவலாக இருந்தனர். ஷோமாயும் புதனாவும் கலப்பினத்தவர்கள். போரினால் ஏற்பட்ட விளைவு. ஷியன்டங்காவில் தங்கியிருந்த அமெரிக்க இராணுவ வீரர்கள் ராதாபூமிக்குத் தந்த கொடை. இல்லையென்றால் ஒரு காகம் இன்னொரு காகத்தைக் கொன்று தின்றாலும் ஒரு சந்தாலை இன்னொரு சந்தால் காட்டிக்கொடுப்பதில்லை.

அவள் பின்னால் காலடிச் சத்தம். காலடி குறிப்பிட்ட இடைவெளியைக் கடைப்பிடித்தது. இடுப்புப் பட்டியில் சோறு, இடையில் புகையிலை. அரிஜித், மாலினி, ஷாமு, மந்து – யாரும் புகைப்பிடிப்பதோ தேநீர் குடிப்பதோ இல்லை. புகையிலையும் சுண்ணாம்புத் தூளும். தேள் கடிக்குச் சிறந்த மருந்து. எதையும் எளிதாக கொடுத்துவிடக் கூடாது.

தோபதி இடதுபுறம் திரும்பினாள். முகாம் இந்தப் பக்கம்தான் இருக்கிறது. இரண்டு மைல்கள். இது காட்டுக்குப் போகும் பாதை இல்லை. ஆனால் காவல்துறையைச் சேர்ந்தவன் பின்னால் வரும்போது தோபதி காட்டுக்குள் நுழையமாட்டாள்.

என் உயிரின் மீது ஆணை. என் உயிரான துல்னாவின் மீதும் என் உயிரின் மீதும். எதையும் சொல்லக்கூடாது.

காலடிச் சத்தமும் இடதுபுறம் திரும்பியது. தோபதி இடையைத் தொட்டுப் பார்த்தாள். ஆறுதல் தரும் அரை நிலவு ஒன்று அவளுடைய உள்ளங்கையில் இருந்தது. குட்டிப் புல்லரிவாள். ஜார்கனியின் கொல்லர்கள் திறமைமிக்கக் கலைஞர்கள். ஒரு நூறு துக்கிராம்களுக்கான கூர்மையை அதில் இழைப்போம் உபி ¾ நல்லவேளையாக தோபதி கனவானில்லை. உண்மையில் புல்லரிவாள், கைக்கோடாரி, கத்தி ஆகியவை பற்றி அவர்கள்தான் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்களோ. வேலையை அமைதியாகச் செய்கிறார்கள். முகாமின் விளக்கு தூரத்தில் தெரிந்தது. தோபதி ஏன் இந்தப் பக்கம் போகிறாள்? கொஞ்சம் நில், மறுபடியும் திரும்புகிறதே. ஆஹ்! கண்ணை மூடிக்கொண்டு இரவு முழுவதும் சுற்றித் திரிந்தாலும் எங்கே இருக்கிறேன் என்பதைச் சொல்லிவிடுவேன். காட்டுக்குள் நுழைந்து அவனைத் தொலைத்துவிட மாட்டேன். அவனை முந்திச் செல்லமாட்டேன். காவல்துறையைச் சேர்ந்த ஓக்கும் ஓநாயே, உனக்குச் சாவென்றால் உயிர்நடுங்கும் பயம். உன்னால் இந்தக் காட்டுக்குள் ஓடமுடியாது. உன்னைச் சோர்ந்துபோகச் செய்வேன். உன்னைச் சாக்கடைக்குள் தள்ளி கதையை முடிப்பேன்.

ஒரு வார்த்தைகூடச் சொல்லக்கூடாது. பேருந்து நிலையத்தில் உட்கார்ந்து பீடி குடித்தபடி எத்தனை போலீஸ் வாகனத் தொடரணியும் எத்தனை ரேடியோ வேன்களும் வருகின்றன என்று புதிய முகாமை நோட்டமிட்டிருந்தாள் தோபதி. நான்கு பூசணி, ஏழு வெங்காயம், ஐம்பது பச்சைமிளகாய் என்பதைப் போலத் தெளிவான நேரான கணக்கு. இந்தத் தகவலை இப்போது மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. தோபதி மெஜென் பிடிப்பட்டதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். தப்பி ஓடுவார்கள். அரிஜித்தின் குரல். யாராவது பிடிபட்டால், மற்றவர்கள் தக்க நேரத்தில் புரிந்துகொண்டு மறைவிடத்தை மாற்றிவிடவேண்டும். தோழர் தோபதி தாமதமாக வந்தால் நாம் இருக்கமாட்டோம். எங்கே போயிருக்கிறோம் என்பதற்கான குறியீட்டை விட்டுச் செல்வோம். தோழர்களில் எவரும் அவள் பொருட்டு மற்றவர்கள் அழிந்துபோக இடம்தரக்கூடாது.

அரிஜித்தின் குரல். களகளவென நீர்பாயும் ஒலி. அடுத்த மறைவிடம் இருக்கும் திசையை கல்லின் கீழ் இருக்கும் மர அம்பின் தலை சுட்டிக்காட்டும்.

தோபதிக்கு இது பிடிக்கிறது, புரியவும் செய்கிறது. துல்னா இறந்துவிட்டான், ஆனால் அவனால் வேறு யாரும் உயிர் இழக்கவில்லை. ஒருவர் பிடிபட்டால் மற்றவர்களுக்குப் பிரச்சனை ஏற்படுவது முதலில் புரியவில்லை. இப்போது உருவாக்கியுள்ள கடுமையான விதிமுறை எளிதாகவும் தெளிவாகவும் இருக்கிறது. தோபதி திரும்பி வருகிறாள் – நல்லது; திரும்பி வரவில்லை – கெட்டது. மறைவிடத்தை மாற்றவேண்டும். எதிர்தரப்பின் கண்ணுக்குத் தெரியாத குறியீடாக இருக்கும். தெரிந்தாலும் அவர்களுக்குப் புரியாது.

பின்னால் மீண்டும் காலடிச் சத்தம். தோபதி மறுபடியும் திரும்பினாள். மூன்றரை மைல் நிலமும் பாறையுமான பாதைதான் காட்டுக்குள் நுழையச் சிறந்த வழி. அந்தப் பாதையைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டாள் தோபதி. முன்னால் கொஞ்சம் சமநிலமாக இருக்கிறது. அப்புறம் எல்லாமே பாறை. பாறைகள் நிறைந்த நிலப்பகுதியில் இராணுவம் முகாம் அமைத்திருக்க முடியாது. இந்தப் பகுதி அமைதியாக இருக்கிறது. ஒரு புதிர்ப்பாதையைப்போல இருக்கிறது. எல்லா புடைப்பும் பார்க்க ஒன்றுபோலவே இருக்கிறது. நல்லதுதான். அந்தக் காவல்துறை அதிகாரியை எரியும் ‘கட்டத்துக்கு’ இட்டுச் செல்வாள் தோபதி. சரண்டாவைச் சேர்ந்த பதித்பாபனை காளியின் பெயரைச் சொல்லி எரியும் ‘கட்டத்தில்’ பலி கொடுத்தார்கள்.

பிடியுங்கள்!

முதலில் ஒரு பாறைத் திட்டு எழுந்து நின்றது. அடுத்தது. இன்னுமொன்று. வயதான சேனாநாயக் ஒரே நேரத்தில் வெற்றிக்களிப்பும் மனச்சோர்வும் கொண்டவனாக இருந்தான்.

எதிரியை அழிக்கவேண்டுமென்றால் நீங்களும் அவனாகவே மாறிவிடவேண்டும். அவன் அதைத்தான் செய்தான். ஆறு வருடங்களுக்கு முன்னரே அவர்களின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாகக் கணிக்கமுடிந்தது. இப்போதும் செய்யமுடிந்தது. அதனால் இறுமாப்போடு இருந்தான். தொடர்ந்து இலக்கியத்தைப் படித்து வருவதால் ‘பர்ஸ்ட் ப்ளட்’-டை(முதல் இரத்தம்) படித்தான், அதில் அவனுடைய எண்ணத்துக்கும் செயலுக்குமான அங்கீகாரம் கிடைத்ததை உணர்ந்தான்.

தோபதியால் அவனை ஏமாற்ற முடியவில்லை என்பது குறித்து அவனுக்கு வருத்தம். இரண்டு காரணங்கள். மூளையின் செல்களில் தகவல்களைச் சேமித்துவைப்பதைப் பற்றி அவன் எழுதிய கட்டுரை ஆறு வருடத்துக்கு முன்னர் வெளியாகியிருந்தது. விவசாயக் கூலிகளின் கோணத்தில் இருந்து இந்தப் போராட்டத்தைத் தான் ஆதரிப்பதை அதில் நிறுவி இருந்தான். தோபதி ஒரு விவசாயக்கூலி. அனுபவமிக்க போராளி. தேடிப்பிடித்து அழி. தோபதி மெஜென் பிடிபடப்போகிறாள். அழிக்கப்படுவாள். வருத்தமாக இருக்கிறது.

நில்!

தோபதி சடாரென நின்றாள். பின்னால் கேட்ட காலடிச் சத்தம் முன்பக்கமாக நகர்ந்து வந்தது. தோபதியின் விலா எலும்புக்குக் கீழே கால்வாயின் அணை உடைகிறது. கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. சூர்ஜா சாஹூவின் தம்பி ரோடோனி சாஹூ. இரண்டு பாறைத் திட்டுகளும் முன்னால் நகர்ந்து வந்தன. ஷோமாயும் புதனாவும். அவர்கள் இரயிலில் தப்பித்து ஓடவில்லை.

அரிஜித்தின் குரல். வெற்றிபெற்றதைத் தெரிந்துகொள்வதைப் போலவே தோல்வியையும் ஒப்புக்கொண்டு அடுத்த கட்டத்துக்கான செயல்பாட்டைத் துவங்கவேண்டும்.

தோபதி கைகளை விரித்து வானத்தை அண்ணாந்து பார்க்கிறாள். காட்டை நோக்கித் திரும்பி மொத்த ஆற்றலையும் திரட்டி ஊளையிடுகிறாள்.

ஒன்று, இரண்டு, மூன்று தடவை. மூன்றாவது தடவையில் காட்டின் எல்லையில் இருந்த மரங்களில் உறங்கிக்கிடந்த பறவைகள் விழித்துக்கொண்டு இறக்கைகளைப் படபடத்தபடி திடீரென மேலே எழும்பின. அவள் குரலின் எதிரொலி வெகுதூரம் வரை கேட்டது.


3

தோபதி மெஜென்னை மாலை 6.53 மணிக்குப் பிடித்தார்கள். முகாமுக்கு கூட்டிச் செல்ல ஒரு மணி நேரமானது. விசாரணை நடத்த சரியாக இன்னும் ஒரு மணி நேரமானது. யாரும் அவளைத் தொடவில்லை. முகாமில் இருந்த கான்வாஸ் முக்காலியில் அவள் உட்கார அனுமதித்தார்கள். இரவு 8.57 மணிக்கு சேனாநாயக்கின் இரவு உணவு நேரத்தின்போது, “அவளைப் புணருங்கள். என்ன வேண்டுமோ செய்யுங்கள்,” என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்.

அதற்குப் பிறகு நூறு கோடி நிலவுகள் கடந்துபோயின. நூறு கோடி நிலவு வருடங்கள். ஒரு கோடி ஒளி ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணைத் திறந்த திரௌபதிக்கு ஆச்சரியமாக இருக்கிறது, வானையும் நிலவையும் பார்க்கமுடிகிறது. மூளைக்குள் இருக்கும் இரத்தம் தோய்ந்த ஆணிகள் மெல்ல இடமாறுகின்றன. அசைய முயற்சித்தபோது கைகளும் கால்களும் இன்னமும் நான்கு கம்பங்களில் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தாள். புட்டத்திலும் இடைக்குக் கீழேயும் ஏதோ கசகசப்பாக ஒட்டியது. அவளுடைய இரத்தம். வாயில் திணிக்கப்பட்ட துணி மட்டும் எடுக்கப்பட்டிருந்தது. நம்பமுடியாத அளவுக்குத் தாகம். “தண்ணீர்” என்று கேட்டுவிடக்கூடாது என்பதற்காகக் கீழுதட்டைக் கடித்துக்கொண்டாள். பெண்ணுறுப்பில் இரத்தம் வழிவதை உணர முடிந்தது.  எத்தனை பேர் புணர்ந்தார்கள்?

இழிவுபடுத்தி இருந்தார்கள், அவள் விழிகளின் ஓரத்தில் இருந்து ஒரு கண்ணீர்த் துளி வழிந்தது. கலங்கலான நிலவொளியில் ஒளியிழந்த கண்ணைத் தாழ்த்தி முலைகளைப் பார்த்தாள். தன்னை வன்புணர்வு செய்து உருக்குலைத்து இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டாள். முலைகள் கடித்துக் குதறப்பட்டிருந்தன, முலைக்காம்புகள் கிழிந்து தொங்கின. எத்தனை பேர்? நான்கு-ஐந்து-ஆறு-ஏழு-அதற்குப் பிறகு திரௌபதி மயக்கமடைந்தாள்.

கண்களைத் திருப்பி வெள்ளையாக ஏதோ கிடப்பதைப் பார்த்தாள். அவளுடைய ஆடை. வேறு எதுவும் இல்லை. திடீரென நம்பிக்கையை மிஞ்சிய நம்பிக்கை ஏற்பட்டது. ஒருவேளை அவளை விட்டுவிட்டுப் போய்விட்டார்களோ. நரி தின்னட்டும் என்று நினைத்தார்களோ. ஆனால், கால்கள் நிலத்தில் உராயும் ஓசை கேட்டது. தலையைத் திருப்பினாள். துப்பாக்கி முனையில் இருக்கும் கத்தியின் மேல் சாய்ந்தபடி காமம் பொங்கும் பார்வை பார்த்தான் காவலாளி. திரௌபதி கண்களை மூடிக் கொண்டாள். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மீண்டும் அவளை வன்புணரும் வேலை தொடங்கியது. நடந்துகொண்டே இருந்தது. நிலவு கொஞ்சம் வெளிச்சத்தைத் துப்பிவிட்டு உறங்கப்போனது. இருள் மட்டுமே இருந்தது. பலவந்தமாகக் கால்கள் அகட்டி வைக்கப்பட்ட சலனமற்ற உடல்.  அதன்மேலே சதைத் தண்டுகள் மேலேயும் கீழேயும் சுறுசுறுப்பாக நகர்ந்தன, மேலேயும் கீழேயும் நகர்ந்தன.

பொழுது விடிந்தது.

திரௌபதி மெஜென்னைக் கூடாரத்துக்கு இழுத்துவந்து வைக்கோலின்மீது எறிந்தனர். துண்டு ஆடை உடலின்மீது எறியப்பட்டது. காலை உணவுக்குப் பிறகு, நாளிதழைப் படித்து முடித்த பிறகு, ‘திரௌபதி மெஜென்னைப் பிடித்துவிட்டோம்’ என்ற ரேடியோ செய்தியை அனுப்பிய பிறகு, இன்ன பிறவும் செய்த பிறகு திரௌபதி மெஜென்னை அழைத்துவரச் சொல்லி உத்தரவிட்டார்கள். திடீரென பிரச்சனை ஏற்பட்டது.

“நகர்!” என்றதும் எழுந்து உட்கார்ந்தாள் திரௌபதி. “எங்கே போகச் சொல்கிறீர்கள்?” எனக் கேட்டாள்.

புரா சாஹிப்பின் கூடாரத்துக்கு.

கூடாரம் எங்கே?

அங்கே.

திரௌபதியின் சிவந்த கண்கள் கூடாரத்தின்மீது பதிந்தது. “வா, போகலாம்”, என்றாள்.

காவலாளி தண்ணீர் பானையை முன்னால் தள்ளினான்.

திரௌபதி எழுந்து நின்றாள். தண்ணீரை நிலத்தில் ஊற்றினாள்.

துணியைப் பல்லால் கிழித்தாள். வினோதமான நடவடிக்கைகளைப் பார்த்த காவலாளி அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றபடி புதிய உத்தரவுக்காக ஓடினான். அவனால் கைதியை போகவேண்டிய இடத்துக்கு இட்டுச் செல்லமுடியும். ஆனால் இன்னதென்று புரிந்துகொள்ளமுடியாத செய்கையைச் செய்தால் என்ன செய்வதென்று தெரியாது. அதனால் மேலதிகாரியிடம் கேட்கப் போனான்.

சிறைச்சாலையில் அபாய மணியை ஒலித்தது போன்ற அமளி ஏற்பட்டது.

சேனாநாயக் ஆச்சரியத்துடன் வெளியே வந்தான். உடம்பில் ஒட்டுத்துணியின்றி தன்னை நோக்கி வரும் திரௌபதியைப் பார்த்தான். பளீரென்று வீசிய சூரிய ஒளியில் தலையை உயர்த்திப்பிடித்து நடந்தாள். காவலாளிகள் பதட்டத்துடன் அவள் பின்னே வந்தார்கள்.

என்ன இது? கத்தத் துவங்கியவன் அப்படியே நிறுத்தினான்.

திரௌபதி அவன் முன்னே நிர்வாணமாக நின்றாள். தொடையிலும் பெண்ணுறுப்பு மயிரிலும் இரத்தம் காய்ந்து இறுகிப் போயிருந்தது. இரண்டு முலைகளும் இரண்டு புண்களைப்போல இருந்தன.

என்ன இது? என்று குரைக்கத் தயாரானான்.

திரௌபதி நெருங்கி வந்தாள். இடுப்பில் கையை வைத்துக்கொண்டு நின்றபடி சிரித்தாள். “நீ தேடி அலைந்த பொருள், தோபதி மெஜென். அவர்களிடம் என்னை வன்புணரச் சொன்னாயல்லவா, எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதை நீ பார்க்கவேண்டாமா?

இவளுடைய ஆடை எங்கே?

போட்டுக்கொள்ளமாட்டேன் என்கிறாள், சார். கிழித்து எறிகிறாள்.

திரௌபதியின் கருத்த உடல் இன்னும் பக்கத்தில் வருகிறது. யாராலும் வெற்றிகொள்ளமுடியாத சிரிப்பைச் சிரித்த திரௌபதியின் உடல் நடுங்கியது. என்ன நடக்கிறது என்று சேனாநாயக்குக்குப் புரியவில்லை. அவள் சிரித்தபோது சிதைந்துபோன உதட்டில் இருந்து இரத்தம் கசிந்தது. உள்ளங்கையால் இரத்தத்தைத் துடைத்தாள். அவளின் ஊளையைப் போலவே அச்சமூட்டும் வானைப் பிளக்கும் கூர்மையான குரலில் பேசினாள்.

ஆடையால் என்ன பிரயோசனம். நீ என்னை அம்மணமாக்கலாம், ஆனால் மறுபடியும் ஆடை உடுத்திவிடமுடியுமா? நீ ஓர் ஆண்மகனா?

சுற்றுமுற்றும் பார்த்தாள். பிறகு வாயிலிருந்த இரத்தம் தோய்ந்த கோழையை அவனுடைய வெள்ளை சஃபாரிச் சட்டையின்மீது உமிழ்ந்தாள். “இங்கே நான் பார்த்து வெட்கப்பட ஓர் ஆண்மகனும் இல்லை. நீ எனக்கு மீண்டும் ஆடை அணிவிக்க அனுமதிக்கமாட்டேன். வா, வந்து என்னைக் கொல், வா, வந்து என்னைக் கொல்.

உருத்தெரியாமல் சிதைந்த முலைகளால் சேனாநாயக்கை நெட்டித் தள்ளினாள் திரௌபதி. முதன்முறையாக ஆயுதம் ஏந்தாத இலக்கொன்றின் முன்னால் நிற்பதற்கு அச்சப்பட்டு நடுங்கினான் சேனாநாயக்.


வங்கமொழியில்: மஹாஸ்வேதா தேவி

தமிழில்: கார்குழலி

மஹாஸ்வேதா தேவி (Mahasweta Devi, 14 சனவரி 1926 — 28 சூலை 2016) வங்காள எழுத்தாளர் மற்றும் பீகார், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் முதலான பகுதிகளின் பழங்குடி மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். இவர் இலக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். ரமன் மெகசசே விருது, நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது, சாகித்ய அகாதமி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் முதலான பல விருதுகள் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கதைகள் பல திரையுருவம் பெற்றுள்ளன.

எழுதியவர்

கார்குழலி
கார்குழலி
கார்குழலி தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் எழுதும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய இதழ்களிலும் அச்சு இதழ்களிலும் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன.
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ramasubramanian
Ramasubramanian
1 year ago

மனம் நடுங்கும் முடிவு.அருமையான மொழிபெயர்ப்பு. இடையில் சில இடங்களில் கைபற்றி எளிதாக செல்ல சிறிது சிரமம் ஏற்பட்டது.என்.கவன சிதறலாக கூட இருக்கலாம். நன்றி

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x