18 July 2024

ன் வாழ்க்கையில் நான் இங்கும் அங்குமாக பலவிடங்களில் இருந்திருந்தாலும் ஹனாய் நகரத்திற்கு சில முறைதான் போக வாய்த்தது. குழந்தை பிராயத்தில் ஒரு முறையும், போர்க்காலத்தில் ஒரு தடவையும், அதன்பின்னான வருடங்களில் ஓரிருமுறையும்தான் செல்ல அமைந்தது. இதனால்தான் எனக்கு அங்கிருந்த ஆமை ஏரி, மற்றும் நீள பியன் பாலத்தை தவிர்த்து , ஹாங் கோ  ரயிலடியையும் டிராம் வண்டி தடமான தண்டவாளங்கள் பதிந்த தெருக்கள் மட்டுமே நினைவிலிருந்தது. ஆனாலும் கூட நான் கண்களை மூடி என் ஞாபகங்களின் அடுக்குகளை துழாவும்போது என்னால் மங்கலான நினைவு சூழ்ந்த அந்நகர தெருக்களின் காட்சிகளை கற்பனையால் கொணர முடிந்தது.

இந்த தொலைதூர, அந்நிய நகரத்தோடு எனக்கு எந்த அன்னியோன்னியமும் இத்தனை வருடங்களில் இருந்ததில்லை என்ற போதிலும் எனது மனபோதத்தில் அது ஒரு அன்பு செலுத்தக்கூடிய இடமாக அமைதியாக பதிந்துவிட்டது.

இந்த அன்பானது சூன்யத்திலிருந்து உருவானது, போர்கால நினைவுகள் சூழ்ந்த என் இளமைக்காலம் குறைவான உணர்ச்சியாலும், சரியாக சொல்லப்போனால் மென் கிளர்ச்சியாலும்; பழைய சோக நினைவுகளாலும், திசையற்ற, நினைவுப்பொருள் போன்றது. இந்த இளமைக்காலம் கடந்து போனபின்பும் இதன் எதிரொலிகள் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. இது மழையின் சத்தத்தைப்போலவும், அறையின் உள் புகுந்து வெளிப்படும் காற்று போலவும்; அல்லது உதிரும் இலைகள் போலவும் மறக்கவே முடியாத நினைவுகளாக இருந்தது.

தற்போதைக்கு இருபது வருடங்கள் உருண்டோடிப்போயின. அன்றைய ஹனாய் நகரத்திற்கும் இன்றையதிற்கும், வானுக்கும் மண்ணுக்குமான வித்தியாசங்கள் இருக்கும்.

அன்றைய தினத்தில், நான் எனது படைக்குழும தலைவரை தலைநகரத்திற்கு வெளியே அமைந்திருந்த மிலிட்டரி தலைமையகத்திற்கு  வாகனத்தை செலுத்தி அழைத்து சென்றுகொண்டிருந்தேன். நகர் முற்றுகையால் சூழப்பட்டு வாழ்வா சாவா எனும் போராட்டத்திலிருந்ததை கண்டோம். பன்னிரண்டு நாட்கள் நடந்த ரத்தகளரியான சமரில் வெற்றியாளர் மற்றும் தோல்வியடைந்தவர் என்ற நிலை மாறிப்போனது. இது மாதிரியான சிக்கலான தருணத்தில் என் கிராமத்திற்கு போய்வர  விடுப்பை பணிந்து கேட்க இயலவில்லை; ஹனாயிலிருந்து வந்துள்ள என் நண்பர்களின் கடிதங்களை நகரத்தில் உள்ள அவர்களது வீடுகளில் கொடுத்துவிட்டு வருவதற்கு மட்டும் அனுமதி கேட்டேன். ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்தித்து கடிதத்தை கொடுத்து பின்பு அவர்கள் அளிக்கும் பதில் கடிதத்தையும் கொண்டு வந்தால் என் படைக்குழாமில் சிறிதளவு மகிழ்ச்சி ஏற்படுமே என நினைத்தேன். கிருஸ்துமஸ் தினத்தன்று நகரத்திற்குள் சென்றுவிட்டு நடுஇரவிற்குள் திரும்பவேண்டும் என்ற கட்டளையோடு அனுமதி கிடைத்தது.

ஒன்பது கடிதங்களோடு புறப்பட்ட நான், நகரின் சுற்றுப்புறத்தை பற்றிய அறிதல்  இல்லையென்றாலும் அதுகுறித்து சலனப்படவில்லை.முதல் கடிதத்தில் உள்ள விலாசத்தை கண்டுபிடித்து கொடுக்கும்போது மற்ற அனைத்து விலாசங்களையும் விசாரித்துக்கொள்ளலாம் என யோசித்தேன்.ஒவ்வொரு கடிதத்தையும் பூட்டிய வீட்டுக்கதவுகளடியில் தள்ளிவிட வேண்டியிருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.

அன்றைய தினத்தில் ஹனாய் நகரம் முழுவதுமே ஆளரவமற்று கைவிடப்பட்டதைப்போல இருந்தது.

கடைசி கடிதத்தையும் கொடுத்துமுடிக்கும்போது, வானம் கருமிருட்டாக இருந்தது.நீண்ட வெறிச்சோடிப்போன தெருக்கள் மழையால் நனைந்துஇருண்டிருந்தபோதும் மங்கலான தெருவிளக்கு வெளிச்சத்தில் நிழலாடியது.நான் வோங் நோக்கி செல்ல வழியை விசாரித்தேன். ராணுவ காக்கி மேலங்கியை அணிந்திருந்த ஒரு போராளி என்னை பரிவோடு கூட்டி சென்று வழி சொன்னான். ஒரு முச்சந்தி முனையில் நாங்கள் பிரிவதற்கு முன் சாலையோரமாக பதிக்கப்பட்டிருந்த டிராம் தண்டவாளங்களை காட்டி அதனோடேயே சென்றால் நான் தேடும் விலாசம் வரும் என சொல்லிச் சென்றான்.

மேலங்கி பொத்தான்களை போட்டுக்கொண்டு கழுத்து பட்டியை உயர்த்திவிட்டு தலைக்கவசத்தை அணிந்துகொண்டு மழை பொழியும் சாலைக்குள் புகுந்தேன். அன்றைய இரவு மிகுந்த குளிராயிருந்தது.

காட்டுகுவியல் போல இருண்டிருந்த நகரத்து வீடுகளினூடே தண்டவாளங்கள் நீண்டிருந்தன.உச்சபட்ச போர் நிகழும் போது நகரே ஆளரவமற்று கைவிடப்பட்டதைப் போலிருந்தது. மரத்துப்போன உடலோடு சலிக்காமல் முன்னேறி நடந்தேன். நீண்டுகொண்டே போன இருண்ட பாதையில் திறந்திருந்த ஒரு கடையோ அல்லது யாராவது பாதசாரியோ எவரும் தென்படவேயில்லை.

இரவில் வெளிப்பட்ட ஈரக்குளிர் காற்று எனது பசித்த வெறும் வயிறுவரை போய் நனைத்தது. எனது உடல் மூட்டுகள் இறுகி உடைந்துவிடுவதைப்போல வலித்தது. சாயங்காலத்திலிருந்தே தகித்துக்கொண்டிருந்த சுரம் எனது முதுகுத்தண்டு வரை போனது.என்னால் நடுக்கத்தை நிறுத்தமுடியவில்லை. எனது சித்தம் மந்தப்பட்டு போனது. எனது கால் முட்டிகள் நிற்க முடியாமல் தள்ளாடின. கொஞ்சம்தூரம் நடக்கும்போதே எனது காலடிகளை எண்ணத் தொடங்கிவிட்டேன். எங்கே போகிறேன் என பார்க்கத் தெரியாமல், சாலை நடுவில் கரும் மொத்தையாக நின்றிருந்த டிராம் வண்டிமீது போய் மோதவிருந்தேன்.

தடுமாறி நடைபாதைமேல் ஏறி ஒரு வீட்டின் வெளி விதானத்தின் கீழே தள்ளாடினேன். பற்கள் நடுங்க பனிக்கட்டிபோல குளிர்ந்த நான் வீட்டுக்கதவின்மேல் சாய்ந்து ஈர படிக்கட்டில் உட்கார்ந்தேன்.

எனது இதயம் மெதுவாக துடித்தது. முனகிக்கொண்டேயிருந்த எனக்கு பின்பு முனகக்கூட தெம்பில்லாமல் போனது. எனது உடல் நடுக்கம் மிக அதிகமானது. உடல்சூடும் ஜுரவேகத்தில் மிக உயர்ந்ததை உணர்ந்தபின் சாக்கிரதையாக இதை கடக்காவிட்டால் இதுவே என் முடிவாக இருக்கும் என மந்தமாக எனக்கே சொல்லிக்கொண்டேன். மற்ற போர்வீரர்கள் காட்டு நடுவே கடும் சுரத்தால் தொட்டிலில் படுத்தபடியே உயிர்விட, நான் உட்கார்ந்த படியே சாகக்கூடும். அதன்பின் யாரோ ஒருவரின் அந்த வீட்டு வாசலில் ஒரு கல்லாக உருமாறவும் கூடும்.

எனது தலைக்குமேலேயிருந்த தகரக்கூரை காற்றுமழையால் அதிர்ந்தது. சாரலால் நான் மேலும் நனைந்தேன். தலைசுற்றல் மயக்கத்தால் நான் தடுமாறி சுவாசித்தேன். நான் எப்படியாவது எனது சக்தியை திரட்டி எழுந்து நடையை தொடர வேண்டும் என நினைத்தாலும் எனது மனஉறுதி சுத்தமாக இல்லாமலாகி உடைந்த ஜாடியிலிருந்து ஓடும் தண்ணீர் போலாகியது.

அச்சமயம் எனக்கு பின்னால் கதவு லேசாக திறக்கப்பட்டது. அந்த சத்தம் கேட்டும் அதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

தன்னிலை மறந்த ஒரு மயக்கம், ஒரு நிம்மதியைப் போன்று என்னைச் சூழ்ந்து எனது உடலை மரக்கவைத்தது.

எவ்வளவு நேரம் போனதோ நானறியேன்.மெதுவாக என் கண்களை திறந்தேன். எனது நினைவு ஒளியின் விளிம்பில் ஓரமிட்டு நிலைத்தது.இன்னும் குழப்பமான மனநிலையில் இருந்தாலும் நான் ஏதோ ஒரு அறைக்குள் தான் இருக்கிறேன் எனவும் மேலும் ஜுரபிதற்றல் இல்லாமலும் இருப்பதை உணர்ந்தேன். அந்த அறையின் சுவர்கள் வெளிர் பசுமை நிறத்தில் இருந்தது, வெகுகாலத்திற்கு முன் தீற்றப்பட்டதால் சற்று வெளிறி தோற்றமளித்தது. மேல் விதானம் இருண்டிருந்தது. அறையில் கற்பூர வாசனை தூக்கலாயிருந்தது.

நான் மெதுவாக அசைந்து படுத்தேன்.

அதனால் கட்டில் முறுக்கொலி கொடுத்தது.

நான் போர்வையினுள்இருக்க தலைக்கு தாங்கலாக தலைகாணி வைக்கப்பட்டிருந்தது;

அறை அமைதியாகவும் ஈரமற்ற இளஞ்சூடாகவும் இருந்ததை நம்பவே முடியவில்லை.புரண்டு பார்த்தபோது மூலையில் இருந்த இரவு மேசைமீது வைக்கப்பட்டிருந்த ஒரு எண்ணை விளக்கு, அழுக்கு வண்ணத்தில் வெளிச்சத்தை கொடுத்துக்கொண்டிருப்பதை பார்த்தேன். அருகே ஒரு கடிகாரம் இயந்திரத்தனமாக நொடிகளை டிக்கிட்டு ஒலித்துக்கொண்டிருந்தது. நேரத்தை பற்றிய திடீர் உணர்வால் திடுக்கிட்டு; முணகினேன்.

“ஓ , சகோதரா…”யாரோ ஒருவரின் கை என் கன்னத்தை வருடிக்கொடுத்தது.மேலும் சன்னமான இதமளிக்கும் குரல் ஒன்று காதருகே கிசுகிசுத்தது,

“நீங்கள் தேறியுள்ளீர்கள். நான் உண்மையிலேயே பயந்து போனேன்…”

என் நெஞ்சம் உறைந்துபோனது, பின் கனவேகமாக துடிக்கலானது. நான் சங்கோஜப்பட்டேன். என்ன நிகழ்கிறது;  யார் இந்த பெண்மணி?

“நான்…” என இறுதியில் வாய்திறந்தேன், நாக்குழற தடுமாறி,

“நான் எங்கிருக்கிறேன்… இது எந்த இடம்?” என கேட்டேன்.

“இது எனது வீடு, சகோதரரே” அவளது மென்மையான கை என் நெற்றியை தொட்டது,

“நீங்கள் எனது விருந்தினர்”

நான் எனது வலுவையும் ஓர்மையையும் மறுபடி மீட்க முயன்றேன்.

நெடிய உட்சுவாசத்திற்கு பின் என் உபசரிப்பாளரை நோக்கி திரும்பினேன். அவள் கட்டிலின் விளிம்பில் அமர்ந்திருந்தாள், அவளது முகம் விளக்கின் பிரதிபலிப்பிற்கு அப்பாலிருந்தது. நான் அவளது தோள்களையும் தலை முடியையும் மட்டுமே காண முடிந்தது.

“உங்களுக்கு லேசாக இன்னும் அந்த சுரம் இருக்கிறது சகோதரரே, ஆனாலும் அதிர்ஷ்டவசமாக நீங்கள் தேறியுள்ளீர்கள். ஆரம்பத்தில் என்னை மிகவும் பயமுறுத்திவிட்டீர்கள். பயத்தில் நான் செத்தேபோனேன்.”

“நான் சிக்கலில் உள்ளேன்…” என திணறினேன்,

” நான் போயாக வேண்டும், போய் வருகைப்பதிவை பதியும் நேரம் தாண்டிவிட்டது…”

“ஓ,சகோதரா, நீங்கள் எங்கும் போகும் நிலையில் இல்லை, வெளியில் அடிக்கும் குளிரில் மீண்டும் போனீர்களானால் மறுபடியும் உடல்நலக்கேடுதான் பீடிக்கும். மேலும் உங்கள் உடைகளை காயவைக்க அடுப்படியில் தொங்க வைத்திருக்கிறேன். இப்பொழுது அதை நீங்கள் அணியமுடியாது. அவை இன்னும் கொஞ்சம் ஈரமாகத்தான் உள்ளன”

என்னது? உடனடியாக நிகழ்ந்ததை புரிந்துகொண்டேன். எனது தொடையையும் நெஞ்சையும் விரைந்து தொட்டுப்பார்த்துக்கொண்டேன். என் உடலை சுருங்கிபோகச்செய்ய முடியுமா என நினைத்து உடல் சிலிர்தேன்.

குளிர்கால போர்வைக்கு உள்ளே, நான் நிர்வாணமாயிருந்தேன்.

“அடுக்களையிலிருந்து சிறிது அரிசி கஞ்சி கொண்டுவரட்டுமா, சரிதானா?” என கேட்டபடியே சாவதானமாக அப்பெண்மணி கட்டிலில் இருந்து எழுந்தாள்.

“நீங்கள் அணிந்துகொள்ள மாற்று உடுப்புகள் உங்கள் தலையணைக்கு அருகே இருக்கிறது. அதுவும் ராணுவ சீறுடைகள்தாம்” என்றாள்.

விளக்கை எடுத்துக்கொள்ளாமல், வெளியேறி அறைக்கதவை தாண்டி இருளுள் மறைந்தாள். நான் போர்வையை எடுத்து வீசிவிட்டு படுக்கையிலிருந்து துள்ளியெழுந்தேன்.போர்வையின் உள்ளிருந்து மருந்து தைலத்தின் நெடி என் கண்களை கலங்க வைத்தது. விரைந்து சீருடைகளை தரித்துக்கொண்டேன். அவை புதியவைகளாகவும் கற்பூர மணத்தோடும் ஓரளவு எனது உடலளவிற்கு பொருந்தியும் இருந்தது. போர்வீரனின் உடைகளை அணிந்ததும் போன  எனது உடல் வலு திரும்பவும் வந்ததைப்போல உணர்ந்தேன்.இருந்த போதிலும் என் உடல் முழுக்க வலியையும் தலை கனத்தும் காதுகளில் ஒரு அதிர்வொலியையும் அனுபவித்தேன்.

சோர்வாக இருப்பினும் அந்த பெண்மணி கொணர்ந்த அரிசிக்கஞ்சியின் மணத்தை அறைக்குள்வரும் முன்பே உணர்ந்தேன். அவள் அறையின் மர தரைதளத்தில் மென்மையாக நடந்து வந்தாள். அவளது காலணிகள் மிகக்குறைந்த சத்தத்தையே ஏற்படுத்தின. உணவுத்தட்டை மேசைமேல் வைத்துவிட்டு எண்ணை விளக்கை மேலும் தூண்டிவிட்டாள்.

“மழை நின்றுவிட்டது” என சொல்லியபின் குறிப்பிட்ட காரணமின்றி பெருமூச்சு விட்டாள்.

அந்த அறையின் மங்கிய வெளிச்சத்தில் நான் அமைதியாக பார்த்தேன். இந்த உன்னதமான அன்னியள் ஒரு மாயா ஓவியம் போல் என் கண்களுக்கு தோன்றியது. புவனத்தில் இல்லாத மாயா தோற்றம்போல் அன்பானதாகவும் அழகானதாகவும் இருந்தது.அன்பானதும் அழகானதுவும், அவளது முகம், நயணங்கள், அதரங்கள்,

நான் உண்மையாகவே அவளை முழுதாக பார்க்க வாய்க்கவில்லை.

இந்த நகரத்தில் ஒரு நொடியின் பின்னங்களில் ஒரு தருணம் வாய்த்தும், மண்ணுக்கும் வின்சொர்க்கத்திற்கும் எதிர்வினையாற்ற நேரம் அமையவில்லை. உடலை சிலிர்த்துக்கொள்ளக்கூட முடியவில்லை.

எதுவோ பூதாகரமான, பயங்கரம் அமைதியை ஊடுருவியது. எங்கிருந்தோ வானத்தில் பறந்து வந்த ஒரே ஒரு உளவு விமானம் இடிபோல் முழங்கியபடியே நகரத்து வீட்டு கூரைகளின் மேல் தாழ்வாக பறந்து வேவு பார்த்தது.அறையினுள் எண்ணை விளக்குக்கூட மூச்சை பிடித்துக்கொண்டு இருப்பதைப்போலிருந்தது…

“அது போய்விட்டது என நினைக்கிறேன்” என நடுங்கியபடியே ரகஸ்யமாக சொன்னாள்.

முகத்தில் ஒரு வெளிறிய புன்னகையோடு, “அவர்கள் நம்மை பயமுறுத்த முயற்சிக்கிறார்கள்”என்றாள்.

“ஆம், தனியாக ஒரு ஒற்று விமானம் மட்டும் நம்மை வேவு பார்க்க, அச்சப்படவேண்டாம்…” என்றேன்.

அவளை தைரியப்படுத்தவும் பயப்பட ஒன்றுமில்லை என சொல்லவும் முயன்ற போது வான்வழி தாக்குதலுக்கான அபாய சங்கு நாரசமாக ஒலிக்க தொடங்கி எனது வாக்கியத்தை தடை செய்தது.

அதன் ஒலியை பல இரவுகளில் பல முறை கேட்டிருந்து அதன் ஊளைசத்தத்தை உணர்ந்திருந்த போதிலும் அப்போது அது என் நெஞ்சை அடைத்தது. இறப்பின் அறிவிப்பாக அது இப்போது கூவியதுபோல் இவ்வளவு அருகில் எப்போதும் கேட்டதில்லை.அதன் ஊளையும்  கூச்சலும்- உடனடித்தன்மையையும் கோபத்தையும், பித்தையும்- ஜனங்களுக்கு அறிவிப்பதைப் போலிருந்தது. அவர்களையும்

B-52 விமானங்கள்

B-52 விமானங்கள் வருகின்றன என கூக்குரலிட வைக்கிறது.

பொது அறிவிப்பு ஒலிபெருக்கி சத்தமாக

“B-52 விமானங்கள். ஹனாயிலிருந்து 90 கிலோமீட்டரில்.80 கிலோமீட்டரில்” என அறிவித்தது.

“அந்த அமெரிக்கர்கள், அவர்கள் வந்துகொண்டுள்ளார்கள், இப்போது வந்தது வேவு விமானம்” என்றேன்.

“ஆம். இது B-52 தான். இன்னும் ஓர் இரவை தாக்குப்பிடித்தாகனும் “என்றாள்.

“நாம் பாதுகாப்பிற்காக பதுங்கு குழிகளுக்கு போயாகவேண்டும்” என எனது பயத்தை மறைக்கமுடியாமல் கத்தினேன்.

“அவர்கள் நெருங்கி வந்துவிட்டனர். சீக்கிரம்! “என்றேன்.

“ஆனால் இப்போது உங்கள் உடல்நிலை எப்படியிருக்கிறது?” என அவள் குழந்தைத்தனமான ஆதூரத்துடன் பெருமூச்செறிந்தபடியே கேட்டாள்.

“வெளியே மிகுந்த குளிராயிருக்கே” என்றாள்.

அபாயத்தை பற்றிய என் உள்ளுணர்வு மிகவும் துல்லியமாகியது.வாய்உலர தொண்டை கட்டிக்கொள்ள என் இதயம் தாறுமாறாக இடிக்க தொடங்கியது.எனது உள்ளுணர்வு என்னை என்றும் ஏமாற்றியதேயில்லை.

“கொஞ்சமாவது சாப்பிடுங்க சகோதரா,அது சூடாக இருக்கும்போதே…”

“இல்லை!” என்றேன், கரகரப்பான குரலில்.

“சூடோ ஆறியதோ அது இப்போது முக்கியமல்ல,வான்வழி குண்டுகள் விழ தொடங்கப்போகிறது.பரந்துபட்ட குண்டு மழையை அவர்கள் நம்மேல் பொழியப்போகிறார்கள்” .

“எப்படி உங்களுக்கு தெரியும்?” என பயந்தபடியே கேட்டாள்.

“என்னால் உணர முடியும்! சீக்கிரம், பதுங்கு குழிக்கு போகலாம்” என சற்றேரக்குறைய கூச்சலிட்டேன்.

அவள் அறை விளக்கை ஊதியணைத்துவிட்டு என்னை கையைபிடித்து வெளியே அழைத்து சென்றாள். எனது மனஅழுத்தம் அவளுக்கும் தொற்றிக்கொண்டது. வாயில் மூச்சு விட்டபடியே தனது காலணிகள் தரைதளத்தில் சீரான ஓசை எழும்படி ஓடிக்கடந்து படிக்கட்டுகளில் இறங்கி, மழை ஈரமான நெடிய வராந்தாவை தாண்டி தெருவுக்கு வந்தோம்.

மழை நின்றிருந்தது.

வானம் சற்று தெளிந்திருந்தது.

காற்று துல்லியமாகவும் ஒளிபுகக்கூடியதாகவும் இருந்தது,

அதற்கு ஒரு அமானுஷ்ய தன்மையை கொடுத்தது.

கதவிற்கு அப்பால் தெருவின் நடுவே அந்த டிராம் வண்டி தரைதட்டிய கப்பல் போல சலிப்பாக அமர்ந்திருந்தது.

நடைபாதையின் ஓரமாக சிமெண்டால் அமைக்கப்பட்ட தனி மனித பதுங்கு குழி தனது கரிய வாயை பிளந்து காட்டியபடியே வரவேற்றது.

“நாம் பொது மனித பதுங்கு குழிக்கு போகலாம், சகோதரா”என தனது மூச்சொலிகளுக்கு இடையே சொன்னாள் அப்பெண்மணி.

“வட்ட வடிவ தனிமனித பதுங்கு குழிக்குள் போகவே எனக்கு பிடிக்காது, அதன் கீழே தேங்கிய நீர் இருக்கும். அழுக்கு பிடித்த இடம்” என்றாள்.

“இப்ப இது வேறயா!” என கடுப்பாக சொன்னேன்.

“தெருவுக்கு  கீழ்பக்கம் கொஞ்ச தூரத்துலதான், மேலும் நிறைய மனிதர்கள் அங்கிருப்பாங்க, பயமும் இருக்காது ”

தெருவிலிறங்கி காற்றை எதிர்த்து போனோம். முழு நகரமுமே மறைந்திருந்தது. சவக்களை நிறைந்த சூன்ய அமைதியில் நாங்கள் இருவர் மட்டுமே இந்த பயங்கரமான சூழலில் தனித்து விடப்பட்டிருந்தோம்.

நொடிகள் நொடித்துக்கொண்டே இருப்பினும் எங்களது தப்பித்தலுக்கான இருப்பிடம் காணக்கிடைக்கவேயில்லை. முச்சந்தி.அதன் பின் நாற்கர சாலை சந்திப்பு. ஆனாலும் பொது பதுங்கு குழியை காணமுடியவில்லை. சப்பாத்து அணியாமல் வீட்டுக்காலணியை அவள் அணிந்திருந்ததால் சரியாக ஓடவும் முடியவில்லை.

ஆனால், கடவுளே,

இனி ஓடினாலும் தப்பிக்க முடியாத நிலை.

தரைப்படை ஆயுதங்கள் வான்நோக்கி முழங்க தொடங்கிவிட்டன.

100 மில்லிமீட்டர் பீரங்கிகள் மொத்தமாக இணைசேர்ந்து சுடத்தொடங்கிய சத்தம் காதை பிளந்தது. கண்ணை பறிக்கும் ஒளியோடு தீப்பிழம்புகளை கக்கிக்கொண்டு வான் நோக்கி ஜோடி ஜோடியாக பீரங்கிகள் முழங்க மேலே மேகத்தை கிழித்துக்கொண்டு  செந்நிற வால்களை பின் விட்டபடி குண்டுகள் பறந்து சென்றன. தரைப்படை போர் வீரர்களின் துப்பாக்கிகளும் சடசடக்க, மேலே வானில் என்ன நடக்கப்போகிறது என எனக்கு புரிய ஆரம்பித்தது. காலாள் படைவீரனாக போர்களத்தில் நடந்த அழிவுகள் பற்றி எனக்கு துல்லியமாக தெரியும். இம்மாதிரி சூழலில் வாழ்வுக்கும் சாவுக்கும் இருக்கும் மிக மெல்லிய இடைவெளியை பற்றியும் அறிந்திருந்தேன்.

எங்கள் இருவருக்குமான எதிர்காலம் என்பது இல்லை என்பதை நான் தெரிந்துதான் வைத்திருந்தேன். வான்வழி குண்டுகள் தெருவில் விழப்போகிறது.

விதி எங்களை அந்த நீளமான தெரு நடுவே விட்டிருந்தது. இரு புறமும் வீடுகளற்று , உயரமான சுவர்கள் மட்டுமே ஆக இருந்த தெருவில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். தொலைதூர குண்டு வெடிப்பு பீரங்கி வெடிகளின் வெளிச்சத்தில் சுற்றிமுற்றும் பார்த்த வகையில் தெருவின் இருபுறமும் பதுங்கு குழிகள் ஏதும் இல்லை என்பதை கண்டுகொண்டேன். சாவுக்கான இயல்பான குவிமுனையம்.

இன்னும் சில வேகமான தப்படிகளை வைத்து ஓடுவதால் எந்த பெரிய வித்தியாசமும் நிகழ்ந்துவிடப்போவதில்லை.

“அவர்கள் குண்டு போடத்தொடங்கி விட்டார்கள்! ” என்றேன். அவளது கையை விரைந்து பிடித்துகொண்டு ஆயுத்தமானேன்.

“சகோதரா, இன்னும் சற்று தொலைவுதான்! ” என்றாள்.

“நமக்கு நேரமில்லை ” என மிக பொறுமையுடனும் அமானுஷ்யமான நிதானத்துடனும் சொன்னேன்.

“குண்டுகள் கீழே விழ வந்துகொண்டுள்ளன உடனடியாக கீழே விழுந்து படுத்துக்கொள். பயம் கொள்ள வேண்டாம்” என்றேன்.

சொன்னதைக்கேட்டு அவள் பணிந்து என் அருகே வந்து படுத்துக்கொண்டாள்.

இருவரும் செங்கல் சுவற்றருகே வீழ்ந்திருந்தோம். அவள் எனது எச்சரிக்கைகளை முழுதாக நம்பாமல் மிகவும் குழம்பிப் போயிருந்தாள்.

ஆனால் இன்னும் பத்து நொடிகளுக்குள் குண்டுமாரி பொழியத்தொடங்கிவிடும் என எனக்கு தெரியும்.B-52 ரக விமானங்கள் பூதகரமான டிராகன்களை போன்றவை, பயங்கரத்தை விதைப்பவை, என்பது எனக்கு தெரியாத விஷயமல்ல.தென் பகுதிகளில்  பகல்நேரங்களில் இவை தரைக்கு மிக அருகே மும்மூன்றான தொகுப்பாகவும் ஆறு ஆறான தொகுப்பாகவும் திமிராக தாழப்பறந்து மழையாக குண்டுகளை வீசியதை கண்டுள்ளேன். இந்த குண்டுமழை மலையின் ஒரு பகுதியையேவீழ்த்த கூடியதாகும், ஆற்றின் ஒரு பாகத்தையே புதைக்கக்கூடும், முழுக்காட்டையே அழிக்கக்கூடியது. ஆனால் இங்கு மழையாக இல்லை வானத்தின் ஒரு பகுதியே இடிந்து விழுவதைப்போல இருக்கப்போகிறது. மலைகளுக்கும் காடுகளுக்கும் பதிலாக வீடுகளும் தெருக்களும் சிதிலப்படப்போகின்றன. பெரும் வானத்தின் முன்னால் இந்நகரம் உள்ளங்கையளவில் சிறுத்துள்ளது. இவ்வளவு பெரும் பேரழிவில் மானுட உயிர் எவ்வளவு பலவீனமானது என நான் யோசிக்கலானேன்.

இறுக்கமான மனநிலையோடு காத்திருந்தேன்.

எதிர்பார்த்து காத்திருந்த போதிலும் நான் வெடிச்சத்தத்தை கேட்காதது போல இருந்து என்னை ஆச்சரியப்படுத்தி திடுக்கிட வைத்தது. எனது பார்வை இருண்டது. என் முன்பாக பூமி நடுங்கி துடிதுடித்தது. பார்வை குழம்பி வெளி மங்கலானது. எதுவோ எரிய ஆரம்பிக்க, எதுவோ என் முகத்தில் வந்து அறைந்தது. குண்டுவெடிப்பின் வெப்பத்தால் என் நுரையீரல்கள் காந்த தொடங்கின.

அவள் பாதுகாப்புக்காக என்னை நோக்கி உருண்டு அருகே வந்தாள்- அவளது குளிர்ந்த உடல் என்னுடலோடு அழுந்தியது. அசந்து வியர்த்துப்போன என் முகத்தில் அவளது சுவாசக்காற்று பட்டது. அவளது தலைமுடி கலைந்து விழுந்திருந்தது.

மறுபடியும் ஒரு தொடர் குண்டு வீச்சு, இது நாங்கள் பதுங்கியிருந்த மதிலுக்கு அந்த புறமாக வீசப்பட்டது.மண் கல் சிமெண்ட் கூரை ஓடுகள் வீட்டு பாகங்கள் என எல்லாம் கலந்து வெடித்து சிதறின. சொர்க்கபுரி கதறி கந்தலானது. தரையின் மேல்பாகம் முழுக்க வெடிப்பால் ஏற்பட்ட உஷ்ண அலைகள் தலைவிரித்தாடின.

இறந்து போ!

இறந்து போ!

இறந்.. து ..விடு.

நான் அவளை இறுக்கி கட்டிபிடித்துக்கொண்டேன்.

பல்லை கடித்தபடி எங்களுடைய எலும்புகளும் சதையும் உடைந்து கிழியும் கணத்தை எதிர்பார்த்திருந்தேன்.

குண்டுகள் தொடர்ந்து ஊளையிட்டபடியே காட்டுத்தனமாக விழுந்து வெடித்தபடியே இருந்தது ஒவ்வொரு வெடிப்பிற்கு பின்னரும் அனல் அலைக்கு பின்னரும் எங்களது உடல்கள் மேலும் ஒருவரோடு ஒருவராக பின்னிக்கொண்டது. வெடிகுண்டுகளால் ஏற்பட்ட சூழலின் அழுத்தம் எங்களுக்கு மயக்கத்தை வரவழைத்தது.

திடீரென சாக்காடு தனது கடிவாயை தளர்த்தி வாழ வழிவிட்டது. வானத்தில் கதவுகள் மூடப்பட்டது. அமைதி. கடைசி குண்டின் வெடிப்பிற்கு பிறகு பெரும் அமைதி.

நாங்களிருவரும் கட்டியணைத்தபடியே வீழ்ந்திருந்தோம். உயிர் பிழைத்ததை நம்பமுடியாமல் பக்கவாத நோயாளிகளைப்போல் அசைவின்றி கிடந்தோம். அப்படியே நீண்ட நேரம் கிடந்த பின் அவள் எனது பிடியிலிருந்து நெளிந்து விலகினாள்.

நான் அவள் எழுந்து நிற்பதற்கு உதவினேன். அவளது சட்டையின் தோள் பாகத்தில் கிழிசல், தலைமுடி கலைந்து அங்கோலம், கண்களில் பயம் என அலைக்கழிந்து தனது காலணிகளை அணிந்துகொள்ள தேடினாள், குதி உயர்ந்த அந்த காலணிகள் உபயோகப்பட ஏதுவாக இல்லை. அடர்ந்த கரும்புகை பக்கத்திலிருந்து எழுந்தது. வெடிமருந்தின் வாசனை காற்றில் கலந்து வந்தது.வானம் காயப்பட்ட புண் சிவப்பில் இருந்தது.

எனக்கு காதில் ஒலித்த ரீங்கார சப்தம் அடங்கிய பின்பாக, பக்கத்திலிருந்து இருந்து உதவிக்கூக்குரல்கள் எழ தொடங்கியதை கேட்க முடிந்தது. அந்த குடியிறுப்பு பகுதி முழுமையாக உயிர்த்து எழுந்து களேபரமாக முழக்கமிட்டது. ஒரு ஜனக்கூட்டம் மண்வெட்டி கடப்பாறை, நோயாளிகளுக்கான மஞ்சல் போன்றவற்றை எடுத்து வந்து உதவ தொடங்கினர்.

“அப்படியே அங்கு நின்று கொண்டிருக்க வேண்டாம்!” என யாரோ ஒருவர் கோபமாக சத்தமிட்டார். அவரது குரல் வலியால் கரகரத்தது.

“பொது ஜன பதுங்கு குழி குண்டடி பட்டு சிதைந்துள்ளது, கடவுளே, மக்கள், கண்முன்பாக இறந்துகொண்டிருக்கிறார்களே!”

“அடக்கடவுளே! அது பொது ஜன உறைவிடம். அங்கு நிறைய பேர் இருக்கிறார்களே…” என அந்த பெண்மணி தளதளத்தாள்.

“முதலில் நான் அவர்களுக்கு உதவவேண்டும், நீ முதலில் வீட்டுக்கு போ. நான் பின்னால் வருகிறேன்” என்றேன்.

என்கையோடு பிணைந்திருந்த அவளது கையை விடுத்து விட்டு அந்த கூட்டத்தை நோக்கி அவசரமாக ஓடினேன்.ஓடும்போதே திரும்பி அவளை நோக்கி கையசைத்து

”வீட்டிற்கு போ! அங்கு எனக்காக காத்திரு! “என கத்தினேன்.

குண்டுவெடிப்பால் சிதைந்த வீடுகளுக்குள் புகுந்து உதவ முற்படும் முன்பு நான் கடைசியாக ஒரு முறை திரும்பி பார்த்தேன். அந்த நரகத்தனமான இரவில் எனது காதலுக்குரிய மற்றும் மாயாவதாரமான அந்த உருவத்தை கடைசியாக தரிசித்தது அப்போதுதான்.

ஆனால் அது கடைசியான தரிசனமாக இருக்கவேண்டியதில்லை.

முதல் நாள் இரவில் தங்கிய அந்த வீட்டில் அந்த அறையிலேயே போய்  என் பெண்மணியை பார்க்கலாம்.

விடிந்துவிட்டது. சமர் முடிந்ததாக சமிக்ஞைகள் வந்ததால் நான் அந்த டிராம் தண்டவாளங்களை தொடர்ந்து அவளது வீடு நோக்கி போனேன்.

என்னை நோக்கி உருண்டு வந்த டிராம் வண்டிக்கு வழிவிட்டு ஒதுங்கும்போது முதலில் ஒன்றையும் நான் நினைக்கவில்லை. தெரு வெறுமையாக ஆளரவமற்றும் குளிராகவும் இருந்தது. அந்த பழைய துருபிடித்த வண்டி மணியோசையற்று முன் பாய்ந்து வந்தது; அதன் இரும்பு சக்கரங்கள் கீச்சொலி எழுப்பியபடியே உரசலால் தீப்பொறி பறக்க அதன் எஞ்சின் சத்தம் காதை கிழித்தது. அது என்னை கடக்கும்போதுதான், என் இதயமே சொடுக்கப்பட்டது போல உணர்ந்து திடுக்கிட்டேன்.

அந்த தெரு முடிவற்ற நேர்கோடாகவும் எந்த குறுக்கு சந்துகள் இல்லாமலும் இருந்தது. தெருவின் இரு புறமும் ஒரே மாதிரியான வீடுகள் நெருக்கியடித்துக் கொண்டு அமைந்திருந்தன: ஒரு இருண்மையான முன் மாடம் துருபிடித்த தகர கூரையால் வேயப்பட்டு மூன்று படிகள் முன்புறவாசல் கதவிற்கு முன் கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு சிமெண்ட் குழி இருந்தது. டிராம் வண்டிதான் எனக்கான ஒரே அடையாளம் என்பது தற்போது இல்லாமல் ஆகிப்போனதால் தெருவின் எந்தப்பக்கத்தில் அந்த வீடு இருந்தது என்பது மட்டும்தான் என்னால் உறுதியாக நினைக்க முடிந்தது. எல்லாமும் ஒன்றே போலிருந்தது.  ஒரே மாதிரியான மேடுபள்ளமான ஓர நடைபாதை, அதில் தேங்கிக்கிடக்கும் மழைநீர், ஒரேமாதிரியான சுவர்கள் ஒழுகும் கூரைகள்; ஒரே மாதிரியான இன மரங்கள், விளக்குக் கம்பங்கள்.

எனக்கு நேரமில்லாவிட்டாலும், எனது ஏமாற்றத்தை சகித்துக்கொண்டு அந்த தெருவின் மேற்புறமும் கீழ்புறமுமாக நடந்து பார்த்தேன். வீட்டிற்குள்ளேயும் வீட்டிலிருந்து வெளியே வருபவர்களையும் கூர்ந்து பார்த்தேன். இதற்குள் மற்றொரு டிராம் வண்டி கடகடத்து வந்த போது, நான் சலித்துப்போயிருந்தேன்.

சாம்பலும் வெடிமருந்து கரி படிந்த முகத்தோடும் உடல் முழுக்க கீறல் காயங்களோடும் கந்தலாடையில் காயமடைந்தோரின் ரத்ததுளிகளோடு, தண்டவாளத்தோடே நடந்து நகருக்கு வெளியில் முகாமிட்டிருந்த என் குழுமத்தை வந்தடைந்தேன்.

போர் முடிந்த பின், எப்போதாவது ஹனாயிற்கு போகும் போதெல்லாம் அந்த தெருவை போய் பார்ப்பேன். முதலிலிருந்து முடிவு வரை அந்த தெருவை நடந்தே சுற்றி வருவேன், எதையும் கண்டுபிடித்துவிடவோ அல்லது எங்கும் போய்விடவோ அல்ல என்ற போதும் நடப்பேன். கடைசியாக நான் ஹாங் கோ ரயில் நிலையத்திலிருந்து அங்கு போன போது என்னால் எனது பழைய தெருவை அடையாளம் காண முடியவில்லை. ஹனாய் டிராம்களை நிறுத்தி ஏறக்கட்டிவிட்டது. தெருக்கள் கவர்ச்சிகரமாக ஜொலிக்கின்றது வீடுகள் அனைத்தும் அழகாக இருக்கின்றன; வாழ்வு சந்தோஷமாக போகிறது…

இருபது வருடங்களுக்கு முன்பாக, நான் மிக இளைஞனாக இருந்த போது பார்த்த இந்த ஹனாய் நகரத்தையும் , அது பார்த்த சீரழிவுகளையும் இப்போதுள்ள மனிதர்களிடம் சொன்னால் நம்பாமல் போகக்கூடிய காலம் வந்தாலும் வரக்கூடும்.

* கதைத்தலைப்பு ஒரு நாடோடிக்கதையில்,தனது கத்தியை ஏரியில் நழுவவிட்ட இடத்தின் அடையாளமாக தனது படகின் ஓரத்தில் அடையாள சின்னமிட்ட மீனவனை குறிக்கிறது.

பௌ நின்

வியட்நாமிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில்- லின் தின்.

தமிழில்: விஜயராகவன்.

 

மூல ஆசிரியர் குறிப்பு :

18 அக்டோபர் 1952 ஆம் ஆண்டு  பிறந்த Hoàng Ấu Phương  எனும் Bao Ninh  வியட்நாமிய நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர் என பன்முக திறமையுள்ள எழுத்தாளர். இவரின் முதல்  நாவலான “Sorrow of War” மூலம் மிகவும் பிரபலமானவர்.

எழுதியவர்

விஜயராகவன்
திரு. மனோன்மணியின் 'புதிய எழுத்து' இதழில் , இசபெல்லா அலேண்டே , D.H லாரன்ஸ், சல்மான் ரஷ்டி, பாஷாவிஸ் சிங்கர் ஆகியோரின் சிறுகதைகளை முதலில் மொழியாக்கம் செய்துள்ளார். பின்பு காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக ரேமண்ட் கார்வரின் வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு" மொழிபெயர்ப்பு சிறுகதைத்
தொகுப்பில் விஜயராகவன் மொழிபெயர்த்த கதைகளும் வெளியாகின. இவரின் அனைத்து மொழியாக்க கதைகளையும் "தேரையின் வாய்" என்ற தலைப்பில் புதுநெல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
கோ.புண்னியவான்

மொழிபெயர்ப்பு கதையின் விறுவிறுப்பைக் குறைக்கவில்லை. நேர்த்தி.

கோ.புண்ணியவான்

மொழிபெயர்ப்பு கதையின் விறுவிறுப்பைக் குறைக்கவில்லை. நேர்த்தி.

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x