25 July 2024

-1-

முதலிரண்டு

மௌனிதா, பால்கனியில் முக்காலியை எடுத்துப்போட்டுக்கொண்டு உட்கார்ந்தபடி ஏழாவது மாடி உயரத்திலிருந்து கண்ணுக்குச் சிக்கிய போக்குவரத்துச் சாலையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சுஸி, சமையலறையில் கியாஸ் அடுப்பில் பிளாக் காபி கொதிப்பதை கவனத்தில் வைத்தபடியே அங்கிருந்து மௌனிதாவையும் ஒரு பார்வைப் பார்த்திருந்தாள்.

வாசனை நாசியைத் தொட்டதும் மௌனிதா திரும்பினாள்.

“தூளை ராவா போட்டு கொதிக்க விடாதன்னு சொன்னா கேக்கவே மாட்டேங்கற.. உனக்கெதுக்குடி இவ்ளோ அடம்?”

“ஓஹோ! அதுக்கும் தகுதியெல்லாம் இருக்குதா?”

“இல்லங்கறியா?”

இரண்டு கோப்பைகளோடு வந்த சுஸி, ஒன்றை மௌனிதாவிடம் கொடுத்தாள்.

“பாருடி.. உன்னோட பிரேக்-அப் காண்டுகளை இங்கே ஸ்டேண்ட்-அப் காமெடியாக்க ட்ரை பண்ணாத.. எங்களுக்கொன்னும் அவ்ளோ மோசமால்லாம் இல்ல..”

“லேடி பேர்ட் கேடிகள்..”

“இன்னா.. இன்னா.. நக்கலு?”

“பள்ளத்துல சைக்கிள் டயர் இறங்கி ஏறுறதுக்கும் காலு டொக்கு பள்ளத்துக்குள்ள சரிஞ்சி போயி நொண்டுறதுக்கும் வித்தியாசம் இருக்குங்கறே..”

“ஹஹ்ஹா.. ஹா.. சிரிச்சிட்டேன் போதுமா? இன்னொரு ஸ்பூன் தூளு ராவா எடுத்துட்டு வந்து உன் கப்புல கொட்டிடுவேன்.. ரொம்ப படிச்சி மண்டை கழண்டு ஆல்ரெடி செகண்ட் ஃப்ளோர்ல தொங்கிக்கிட்டு கிடக்குது.. இதுல தத்துவம் மயிரு..”

“பொறாமை..”

சுஸி நெருங்கிப் போய் அவளுடைய முன்னந்தலையில் மாடு முட்டுவதைப் போல இடதுகையால் ஒற்றைக் கொம்பை உருவாக்கியபடி லேசாக இடித்தாள்.

“காபியை மடியில சிந்தித் தொலைச்சிறாத எரும..”

மாட்டுக்கொம்பு சட்டென மொட்டு விரல்களாகக் குவிந்து மலரிதழ்களாகி மௌனிதாவின் கன்னத்தைத் தடவி முத்தம் கொஞ்சியது.

“லவ் யூ…டி லூஸூ..”

அவள் சிரித்தபடியே திரும்பி மீண்டும் தெருவைப் பார்த்தாள்.

“ஐடியாஸ் எல்லாம் அந்த ரோட்டுலதான் மேஞ்சிக்கிட்டு இருக்கா? எப்போ பாரு.. உர்ர்ன்னு..”

“என் மூஞ்சி அப்படியா இருக்குது சுஸி?”

திரும்பாமலேயே கேட்டாள். இதைக் கேட்கவேண்டிய அவசியமே இல்லை என்று தெரிந்திருந்தாலும் ஏன் கேட்கிறோம் என்பதையும் யோசித்தாள். சமீபத்தில் ஒருமுறை சுஸி தன்னுடைய மொபைல் காமிராவில் மௌனிதாவின் முகரையை க்ளிக் அடித்து வாட்ஸப் பண்ணியிருந்தாள். அவளுக்கோ அது பிடித்துத்தான் இருந்தது. சுஸியின் பார்வைக்கோணத்தில் தான் என்னவாக இருக்கிறோம் என்று மண்டைக்காய்ந்த நட்பின் தொடக்கக் காலங்களெல்லாம் முடிந்துபோய் எழுநூறு நாட்களைத் தாண்டிவிட்டது.

‘என் மூஞ்சி இப்பவும் அப்படியேவா இருக்குது?’ என்று மாற்றி கேட்க நினைக்கிறேனோ. அதில் உள்ள விருப்பத்தின் மீதான அக்கறை என்ன? ஆம். இப்படி பால்கனியில் உட்கார்ந்துகொண்டு சாலையை வேடிக்கைப் பார்க்கும்போது நான் என்னவாக இருக்கிறேன் என்பது எனக்கு மட்டுமே முக்கியம். இவர்களெல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்? எங்கிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள்?

இதே போன்றதொரு ஜனத்திரளில்தானே அவளும் எங்கோ சுற்றிக் கொண்டிருப்பாள். நான் அவளுடைய நினைவின் உறுத்தலாக இப்போதும் இருப்பேனா? கோந்து போல ஒட்டிக்கொண்டு உறவாடும் நிலைகள் மெல்ல நீர்த்துப் போவது எதனால்? நிலையாமை மட்டுமே காரணமாக இருக்க முடியுமா? அல்லது அதனையும் ஊடறுத்துப் பாய்கிற ஏதோவொரு உணர்வா? அப்படியான உணர்வுகளுக்குத் தீனிப் போடப்படுவது வெளியிலிருந்து மட்டுமல்லவே. முதலில் அவ்வித உணர்வுதான் என்ன? அவள் என்னைவிட பதினைந்து வருடம் சிறியவள் என்பதால் அனுகூலம் எடுத்துக்கொண்டேனா? என்னைத் தாயைப் போல பார்த்துக்கொண்டாளே அதனாலா? காதலியாக அணைத்துக்கொண்டாளே அதனாலா? சுயநலவாதியா நான்? அவளுடைய கண்ணின் ஒளிக்குள் ததும்பும் ஈரத்தின் தொடக்கம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது? என்னிடமிருந்து இல்லையா? அதன் வேர்க்கால் நுனியின் பதம் வேறெங்கோவா?

ஓர் ஆராய்ச்சி மாணவியை நான் பயன்படுத்திக்கொண்டேனா? பதினெட்டாம் நூற்றாண்டின் காமம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் காதல், இருபதாம் நூற்றாண்டின் இச்சை, இவற்றின் மீது படிந்துகொண்டு அல்லல்படுத்துகின்ற இருபத்தியோராம் நூற்றாண்டின் சந்தர்ப்பவாதம். இப்படியொரு நான்குமுனைச் சதுர தீஸிஸிற்கான நுணுக்கக் குறிப்புகளுக்குள் புத்தகப்புழு போல ஊர்ந்து போவதற்கான மனத்தை எப்படி ஒருத்தி தானாகவே இவ்வளவு பொறுமையோடு கட்டியெழுப்பியிருந்திருப்பாள்?

அவளுடனிருந்த பேய்த்தனமான ஒன்பது மாதங்களும் என்னை இந்த புவியீர்ப்பு சக்தியிலிருந்து இழுத்தெடுத்து இருளுக்குள் மிதக்கவிட்டவள் அவளே. என்னிடமிருந்து விலகிக்கொள்ளும்போது எந்தப் பக்குவத்தையும் அவள் பேணவில்லை. ஜஸ்ட் எ டிடாச்மெண்ட். எனது அழைப்புகளை ஏற்கவில்லை. பதில்களை அனுப்பவில்லை. அந்தமான் நிக்கோபார் வரையில் சிறிய பயணம் போய்விட்டு திரும்பியபோது அனைத்து உடமைகளையும் சுத்தமாகத் துடைத்தெடுத்துக்கொண்டு போய்விட்டாள். அந்தச் சம்பவம் நறுக்கென்று இருக்கிறது. படுக்கை விரிப்பில்கூட அவளுடைய துளி வாசம் இல்லை.

மேற்கொண்டு அங்கேயே கிடந்து உழலப் பிடிக்காமல் இங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். இங்கே வந்தே அடுத்த ஒன்பது மாதங்களும் கரைந்துவிட்டன. எத்தனை சிறிய மனிதப் புள்ளிகளாக திரிந்துகொண்டிருக்கிறோம். மிகப் பெரிய விஷயங்களை மண்டைக்குள் உற்பத்தி பண்ணிக்கொண்டு வெயில் மினுங்கும் ஹெல்மெட்களுடன் டூ வீலர் உயிரிகளாக, அறையிலிருந்து வெளிவர முடிகின்ற காஃப்காவின் பூச்சிகள்’

மௌனிதா பிளாக் காபியை சிப் பண்ணியபோது நாக்கு கசந்தது. சுஸி, சர்க்கரை போட மறந்துவிட்டிருக்கிறாள். அடுத்த சிப்பின் கசப்பிற்கு நாக்கின் சுவை மொட்டுக்கள் தயாராகியிருந்தன.

 

-2-

மாதங்கியின் ஆரஞ்ச் க்ரஷ்

மூனரை மணி வெயில் அப்படியொன்றும் காத்திரமாக இல்லை. ஆனால், அந்த ஃபிளாட்டின் கூடத்தில் வெப்பம் மிகுந்திருந்தது. அதற்குக் காரணம் மாதங்கிதான் என்று நளினி நம்புகிறாள். கற்பூரம் ஏற்றி நீட்டினால், ஒரேயடியில் அணைத்து ஊர்ஜிதப்படுத்திவிடுவாள். காதல், ரிலேஷன்ஷிப், சிச்சுவேஷன்ஷிப் என்று எங்கெங்கோ வளைந்து போய்க்கொண்டிருந்த வாக்குவாதம்தான் அதற்கான மூலக் காரணம்.

“ஒரு உடம்பை அனாட்டமி & பயலாஜிகல் வடிவாகவும் ஃபிஸிகல் & எஸ்தடிக்கலாகவும் பார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கோமா இல்லியா? அத நீ மறுப்பியா?”

மாதங்கியின் கேள்வி கூர்மையாக இருந்தது. நளினி கடுப்பில் கொச்சையாக ஒரு பதிலை அவளுக்குச் சொன்னாள்.

“பசியெடுத்தா சாப்பிட்டு முடிச்சிறணும். அதவிட்டுட்டு.. உக்காந்து ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கணுமா?”

“ரெண்டுக்குமே வேல்யூஸ் இருக்குன்னு சொல்லுறேன். காமத்தை கொச்சைப்படுத்தறதும் காதலை மட்டுமே தூக்கி உச்சாணிக்கொம்புல வைக்கிறதும் போங்காட்டம்னு எனக்குப் படுது.. ஐ ஸ்ட்ராங்லி டினை தட் நான்சென்ஸ்”

“அது உனக்குடி. நீயொரு அலப்பறை..”

“ப்ச்.. பர்சனலை எதுக்கு டச் பண்ணுற? அது இல்லையே பாயிண்ட். நாம ஒரு மரபணுத் தொடர்ச்சியில நின்னு பேசிக்கணும்ல? ஒருத்தரை பார்த்தா புடிக்கிறதும்.. பார்க்கப் பார்க்க புடிக்கிறதும்.. பார்த்தவொடனேயே புடிக்காம போறதும்.. அப்புறம் லேட்டா அதுவே புடிச்சு போறதும்.. எவ்ளோ காம்பினேஷன்ஸ் இருக்குது..! சாத்தியங்களைப் பத்தி பேசாமலேயே எஸ்கேப் ஆயிட்டிருந்தா எப்பிடி? அதுக்கு இணையா கொஞ்சம் ஓரமா தொட்டுக் காட்டுறதுக்கு.. என் பர்சனலை நீ தாரளாமா யூஸ் பண்ணிக்கோ.. எனக்கொரு பிரச்சனையும் கிடையாது. ஆனா, பர்சனலை தாக்குற ஐடியாவை மறைச்சி வச்சிக்கிட்டு ஒரு வாதத்தை திசை திருப்பி கொண்டுபோவாத.. ஐ டிஸ்-அக்ரீ..”

“லுக்.. மாது.. உன்கிட்ட ஈகோ இருக்கு.. அதை சுட்டிக்காட்டினா உனக்கெதுக்கு சுர்ருன்னு வருதுன்னு யோசிச்சிருக்கியா?”

“ஈகோன்னு மொட்டையா சொல்லாத.. இப்போ நீ சூப்பர் ஈகோவைத்தான் இங்கே குறிப்பிட்டு சொல்லுறேன்னு வச்சுக்கோயேன்.. நானொரு அடல்ட்.. நீயொரு அடல்ட்.. ரெண்டு பேருக்குமே சூப்பர் ஈகோ இருக்கு.. அதுல குறிப்பா எதை சொல்ல வர்றன்னு ஒரு தெளிவு இருந்தா ஓகே.. இல்லைன்னா இதுவும் ஒரு வீம்பு புடிச்ச தாக்குதல் தான?”

“உன்கிட்ட மனுஷன் பேசுவானா?”

“ஏய்.. இது சரியில்ல.. சூப்பர் ஈகோவிலயே ஆறு கூறுகள் இருக்குதுடி.. அதுல துல்லியமா எதைச் சொல்ல வர்றன்னு கேட்கிறேன்.. ஒரு டிபேட்.. டிஸ்கஷன்னு வந்தா.. பொறுமையா இருக்கறது முக்கியமில்லையா..”

“அந்த கூறு மயிர வச்சிக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்..”

“இதோ.. எங்கேயோ ஆரம்பிச்சி வேற எதையோ பேசிட்டிருக்கோம் பாரு.. அதேதான் வெளியலயும் நடக்கும்.. வெறும் அவுட்சைடரா இன்னொரு ஆளு நம்மளை ப்ரீ-ஜட்ஜ் பண்ணிக்கிறதுக்கு.. இப்படித்தான் நாமளே சிவப்பு கம்பளத்தை விரிச்சு வைப்போம்.. அது தேவையா?”

“இருந்துட்டு போவுது.. போ..”

“இது வீம்பு..”

“ஓ..! இது ப்ரீ-ஜட்ஜிங்ல வராதா…?”

மாதங்கி இடுப்பில் ஊன்றியிருந்த இடது கையைத் தளரவிட்டாள். வலது கையிலிருந்த கண்ணாடியிலான பீர் கோப்பையில் பாதி நிரம்பியிருந்த ஆரஞ்ச் க்ரஷ் அலுங்காமல் அப்படியே இருந்தது. அவளுடைய இந்தத் திடமான நிலைப்பாடு அவளுடைய நெருங்கிய நண்பர்களுக்கு, நலன்விரும்பிகளுக்குமே கூட பல சமயங்களில் அசௌகரியத்தைக் கொடுத்துவிடும். ஆரஞ்ச் க்ர்ஷை ஒரு மடக்கு குடித்தாள். இமைகளை மெதுவாக மூடி அதை ரசித்து விழுங்கினாள். அவளுடைய முகத்தில் அலையோடும் நிதானத்தைப் பார்க்கப் பார்க்க நளினிக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

“கிராதகி..”

நளினியின் ‘கிராதகி’ விளிப்பிற்கு மாதங்கியின் பிரியாத இதழ்க்கோடுகள் ஒரு புன்னகையை வளைத்தன. இன்னும் திறவாத இமை மேடுகளுக்குள்ளே புடைத்திருக்கும் கண்கள் இடவலமாக மெல்ல உருண்டபடி இருந்தன. நளினியோடு அறையை பகிர்ந்துகொள்ள நேர்ந்த இக்காலச் சூழல் மீது மாதங்கிக்கு எந்தப் புகார்களும் கிடையாது. தன்னுடைய அறையில், தான் உண்டு தன்னுடைய ஆராய்ச்சி உண்டு என்று கிடப்பாள். தன் பங்கிற்கு சமையல் செய்வது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, பாத்திரங்களை கழுவி எடுத்து ஒழுங்குப்படுத்தி வைப்பது, துவைத்த பெட்ஷீட்களை, தலையணை உறைகளை, இருவருக்குமான உள்ளாடைகளை என அத்தனையையும் பால்கனி கொடியில் காயப்போட்டு நேரத்திற்கு அவற்றை எடுத்து மடித்து வைப்பது, வாரத்திற்கு ஒருமுறை கழிவறையை சீர்ப்படுத்துவது என அனைத்து வேலைகளையும் சமமாகப் பகிர்ந்துகொள்கிறாள்.

கூடத்தில் இருக்கும் பெரிய டிவி திரையின் முன்பாக இருவருமாக சேர்ந்து உட்கார்ந்து கதையடித்துக்கொண்டே மிகச் சிலத் திரைப்படங்களை மட்டுமே பார்த்திருக்கிறார்கள். நளினியின் நண்பர்கள் ஜமா வந்தால் அவர்களிடமிருந்து ஒரு ஹாய் ஹலோவோடு விலகிக்கொள்வாள். அவளை ‘இன்ட்ரொவெர்ட்’ என்று நினைப்பவர்களும் உண்டு. நளினியின் பாய் ஃபிரண்டிடம் குறைவான உரிமைகளோடு உதவிகளைக் கேட்டு பெற்றிருக்கிறாள். அது, மாதங்கி நளினியின் நட்புக்கு கொடுக்கும் மரியாதை. ‘என்கிட்டேல்லாம் நல்லாத்தானே பேசுறா.. உன் நண்பர்கள் இவளைப் போயி இன்ட்ரொவெர்ட்னு எப்படி சொல்லுறாங்க?’ என்று அவன் நளினியிடம் கேட்டிருக்கிறான். ‘ம்.. அவளுக்கு என்கிட்டே மட்டும்தான் செட் ஆகும்..’ என்று பதில் சொன்னதாக மாதங்கிக்குத் தெரியும். கண்களைத் திறந்தாள்.

நளினி இவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடி சாப்பாட்டு மேஜையை ஒட்டியிருந்த நாற்காலியில் ஒரு கால்மடக்கி உட்கார்ந்திருந்தாள்.

“இரக்கமே இல்லாதவள்.. அதானேடி..? thanks for not denoting as a monster..”

“டீ.. உனக்கு ஏன் கோபமே வர மாட்டேங்குது..?”

“ஐ..! யாரு சொன்னா? அதெல்லாம் வரும்.. ஆனா இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் இதயத்தை தொந்தரவு பண்ணுறதில்ல..”

“புரொஃபசரை எதுக்கு அம்போன்னு விட்டுட்டன்னு கேட்டா மட்டும்.. பதிலா ஒரு வார்த்தை சொல்லுறதில்ல..”

இப்போது மாதங்கி, மிச்சமிருந்த மொத்த ஆரஞ்ச் க்ரஷையும் கடகடவென ஒரே மூச்சாக குடித்து முடித்தாள். நளினியை தீர்க்கமாக ஒரு பார்வைப் பார்த்தாள். கோணலாகச் சிரித்தாள்.

“லியனோர்டா டாவின்ஸி வெறும் மோனலிசாவை மட்டும் வரையலை.. அதுவொரு எஸ்தடிக்கல் வெளிப்பாடு.. பொணத்தோட மண்டையைத் திறந்து கபாலத்துக்குள்ள நம்ம மூளை எப்படி இருக்குனு பார்த்துப் பார்த்துப் பாகம் பிரிச்சும்.. மனுஷன் வரைஞ்சி வச்சிருக்கான். அது அனாட்டமி வெளிப்பாடு.. ரெண்டும்தான் இருக்கு.. ரெண்டுமே கணக்குல வந்தாகணும்.. இதைத்தான் சொல்ல வந்தேன்..”

“ச்சை.. ரொம்ப அவசியம்..”

“மரணத் தண்டனையால தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி அனாதை பொணமா கிடக்குறான். அன்னைக்கு சட்டத்தில மனித உடலராய்ச்சிக்கு தடை இருந்திருக்கு. பிணக்கிடங்கை காவல் காக்கிறவனுக்கு லஞ்சம் கொடுத்து அந்தப் பொணத்தை தன்னோட ஆராய்ச்சி கூடத்துக்கு ரகசியமா கொண்டு வந்து.. அப்புறமாத்தான் அதோட மண்டையோட்டை கழட்டி பார்த்திருக்காரு டாவின்ஸி.. அந்த செயலுக்கும் இந்த நூற்றாண்டுல சகலவிதமான மருத்துவ வசதிகளோடு இருக்கிற நமக்கும் சம்பந்தமில்லன்னு சொல்லிட முடியுமா? அந்தாளு ஃபாதர் ஆஃப் த மாடர்ன் அனாட்டமி.. இதை நான் சொல்லலை.. மெடிக்கல் கம்யூனிட்டி சொல்லுது..”

“உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….”

“என்ன?”

“நமக்கு ஒரு கம்பேனியனை தேடிக்கிறதுக்கு இவ்ளோ அறிவு வேணுமா?”

“இருந்தா என்ன தப்பு?”

“அப்படிலாம் வாழ முடியாதுடி.. ரொம்ப சிக்கல் பண்ணிக்கணுமான்னு எளிமையா கேட்கிறேன்.. அவ்ளோதான்”

மாதங்கி சிரித்தாள். அவளுக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டாள்.  கண்ணாடிக் கோப்பையை மேஜையில் வைத்தாள். நளினியின் குதிரைவால் குடுமியை ஹேர் பேண்டிலிருந்து விடுவித்தாள். குட்டைக்கூந்தல் விடுதலைப் பெற்றது. அவளுடைய புருவங்கள் இரண்டையும் தன்னுடைய கட்டை விரல்களால் மென்மையாக நீவி விட்டாள். நளினி காத்திருந்தாள். இதையெல்லாம் செய்கிறாள் என்றால் ஏதோ சொல்லப் போகிறாள் என்று அர்த்தம்.

“ஷேரிங் த பெட்ன்னா.. வெறும் செக்ஸூவல் இன்டர்கோர்ஸ் மட்டுமில்ல.. அதுக்கு முன்னாடியும் பின்னாடியும் பொழுதுகளோட இருக்கிற அன்றாட நடவடிக்கை.. நடத்தைகள் எல்லாம் இருக்குதுல்ல.. அதைப் பத்தித்தான் என்னோட யோசனை.. ஆராய்ச்சி எல்லாம்.. அதைத்தானே வாழ்க்கைன்னு சொல்லுறோம்..? அப்புறமும் சிக்கல்னு ஒன்னு எங்கிருந்தோ முளைச்சுக்கிட்டு வரும்தான்.. அதை உக்காந்து பொறுமையா நாமளே நுனி எது முனை எதுன்னு அவுக்கறதா? இல்ல யாருகிட்டயாவது தூக்கிட்டு போயி நின்னு அய்யா சாமி.. இந்தச் சிக்கலை எப்படியாவது அவுத்துக் கொடுங்கோன்னு நிக்கறதா?”

“கிராதகி..”

“தேங்ஸ்.. இப்போ நீ ரெடியாகு.. என்கூட வா.. ரெண்டு மணிநேரத்துல போயிட்டு வந்திரலாம்..”

“அடிப்பாவி.. நிஜமாத்தான் சொன்னியா? ஆர் யூ ஷ்யூர்?”

“ம்”

அடுத்த அரைமணியில் இரு சக்கர வாகனத்தில் பயணித்தபடி ஹெல்மெட் அணிந்த இரண்டு தலைகளும் நகரின் போக்குவரத்திற்குள் கலந்திருந்தன. இன்னும் சூரியன் மேற்கு வானில் நின்றுகொண்டு அழிச்சாட்டியமாக உஷ்ணத்தைக் கக்கிக்கொண்டிருந்தான்.

 

-3-

டாட்டூஸ் பை டார்வின்

ளினி, காத்திருப்பு இருக்கையிலிருந்தவாறு டாட்டூ ஸ்டூடியோவின் உள்வடிவமைப்பை நோட்டம் விட்டாள். சிமிண்ட் பூச்சு இல்லாத செங்கல் சுவர்களில் தந்தத்தின் நிறத்தில் வர்ணமடித்திருந்தார்கள். அகன்ற ஜன்னல் திறப்பை மூடியிருந்த வெண்ணிற திரைச்சீலையின் வழியே உள்ளே நுழைந்த சூரிய வெளிச்சம் பிரதிபலிப்பாக ஸ்டூடியோ முழுவதிலும் பரவியிருந்தது. மரத்தினாலான தரையில் காபி பொடி நிறத்தோடு கலந்திருந்த வெளிச்சம் பார்வைக்கு இதமாக இருந்தது. மெல்லிய இசை கசிந்த அறையில் தொழில் சார்ந்த சாதனங்கள் அததற்கென ஓரிடம் அமைக்கப்பட்டு சீராக இருந்தது. பக்கச்சுவரில் ஆணியில் மாட்டப்பட்டு கிட்டார் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அதனையடுத்து சற்று தள்ளி அரையடி அகலம் கொண்ட நாலடுக்கு அலமாரியில் டாட்டூவிற்கான வர்ண புட்டிகள் ஒழுங்கு வரிசையில் அடுக்கப்பட்டிருந்தன.

‘டாட்டூஸ் பை டார்வின்’ என்கிற ஒரு குறியீட்டு லோகோ பிரதான மேஜைக்குப் பின்பக்கச்சுவரில் பதிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த சிறிய சுழற்நாற்காலியில் லேசாக அசைந்தபடி அந்தப் பெண் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய சிகை அலங்காரம் வித்தியாசமாக இருந்தது. இடது மூக்கில் கருப்பு வளையம் அணிந்திருந்தவள் சூயிங்கம் மென்றபடி மொபைலை நோண்டிக் கொண்டிருந்தாள்.

சற்றுத் தள்ளியிருந்த உயரமான மேஜையில் மாதங்கி கால் நீட்டி படுத்திருந்தாள். அவளுடைய கருப்பு நிற டாப்ஸ் நெஞ்சு பகுதி வரையில் சுருட்டிவிடப்பட்டிருந்தது. வெண்ணிறம் பளீறிட்ட வயிற்று சருமம் தெரிந்தது. எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த நளினியின் முகத்தில் ஆச்சரியம் பரவியிருந்தது.

டாட்டூ வரைகிறவன் மாதங்கியை நோக்கி குனிந்திருந்தான். ‘ர்ர்ர்ர்’ என்ற இயந்திர சப்தம் விட்டுவிட்டு கேட்டது.

தொப்புளின் இடது பக்கவாட்டில் முப்பது டிகிரி சாய்கோணத்தில் சின்னஞ்சிறிய பூச்சி ஒன்றை அவன் நுணுக்கமாக வரைந்து கொண்டிருந்தான். அது அவளுடைய தொப்புள் குழியை நோக்கி நகர்வதைப் போன்ற பாவனையில் இருந்தது. மாதங்கிக்கு அவ்வப்போது ஏற்பட்ட கூச்சத்தால் முகத்தின் தசை சுருங்குவதும் விரிவதுமாகயிருந்தது.

பல நாட்களுக்கு முன்னேயே அவள் தனியாய் வந்து விசாரித்து எந்த டிஸைன் வேண்டும், டாட்டூவின் காயம் ஆறுவதற்கு எத்தனை நாட்கள் ஆகும், அதன் பிறகு பேண வேண்டிய விஷயங்கள் என்னென்ன என ஒன்றுவிடாமல் அத்தனையையும் தெரிந்துகொண்டு இந்தத் தேதியை முன்பதிவு செய்துவிட்டு இப்போது நளினியையும் துணைக்கு அழைத்து வந்திருக்கிறாள்.

மாதங்கியின் முடிவுகள், தீர்க்கம் நிறைந்த முரட்டுத்தனம் கலந்த ஒன்று. அதெல்லாம் வெளியிலிருந்து பார்க்கிறவர்களின் அபிப்பிராயம். அவளோ, காலுக்கு கீழே பூமியே இரண்டாக பிளந்தாலும் எந்தப் பக்கம் தாவிக் குதிப்பது என்பதில் குழப்பம் அற்றவள். அனைத்திற்கும் அவளிடம் ஒரு தியரி இருந்தது. அதனை அவள் நம்புகிறாள். சொந்த வாழ்வில் அதனைப் பரீட்சித்தும் பார்க்கிறாள். அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் குறித்து தன் வட்டத்திற்குள் பகிர்ந்துகொண்டு விவாதிக்கிறாள். மற்றவர்களுக்கு கடுப்பு ஏற்படும் விதத்தில் எப்போதும் படு கூலாக இருக்கிறாள்.

சூயிங்கம் பெண் நளினியைப் பார்த்தபடியே சிறிய வெண்ணிற முட்டையிட்டாள். அது பொட்டென்று வெடித்ததும் மீண்டும் சூயிங்கத்தை வாய்க்குள்ளே இழுத்துக்கொண்டு மெல்லத் தொடங்கினாள். நளினியும் இப்போது அவளையே பார்த்தபடியிருந்தவள் இதுவொரு தனி உலகம் என்று நினைத்துக்கொண்டாள்.

ருவரும் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். நளினி வண்டியை ஓட்டினாள்.

“அது என்னடி பூச்சியை டாட்டூவா போட்டிருக்க? அருவருப்பா இல்ல? பார்த்தாலே என்னமோ பண்ணுதுடி”

“என் கூட வந்ததால நீ பார்த்திருக்க. மத்தபடி அது என் உடம்போட ப்ரைவசியான இடம்.. ஊருக்கே காட்டப்போறதில்ல. பின்ன என்னவாம்?”

“உன் பார்ட்னரோட ரியாக்ஷன்.. எப்படியிருக்கும்?”

“ஆஹ்ஹா..! பூச்சிக்கேவா..?”

“ரொம்ப பண்ணாதன்ன.. எதுக்குப் பூச்சி?”

“அது.. காஃப்காவோட மெட்டாமார்ஃபஸிஸ்.. அதுல வர்ற கிரிகோர் மாதிரி நானும் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கப் போறதில்ல.. ஆனா, நானும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் பூச்சித்தான். But I’m a Kafka’s modern living bug..”

“நானும்தான் வேலைக்கு போறேன்.. சுயமா சம்பாதிக்கிறேன். வீட்டு உள்ளேயேவா முடங்கிக் கிடக்கிறேன்..? இதோ நினைச்சா வெளியே கிளம்பி வந்துட்டேன் பாரு.. சும்மா அடிச்சி வுடாத”

“பாயிண்ட்.. ஆனா லவ் பண்ணுறல்ல..? கல்யாணமும் பண்ணிக்குவ.. வீடுன்னா.. கட்டிடம்.. அறைன்னு மட்டும் நினைச்சிட்டியா. புவர் கேர்ள்.. குடும்பங்கறது கண்ணுக்குத் தெரியாத ஒரு அறை.. அதே.. ஒரு மெட்டாஃபர்..ய்யா”

“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது.. போடி..”

“ஒன்னு சொல்லுறேன் கேளு.. உலகம் பூரா உள்ள நகரங்கள்ல நடக்குற டி.வி கேம் ஷோவான இந்த பிக்-பாஸ் கான்செப்ட்டையே நான் காஃப்காவோட நவீன மெட்டாமார்ஃபஸிஸாதான் பாக்குறேன். எனக்கு அதுல மாற்று கருத்துகள் கிடையாது.. க்ளியரா இருக்கேன்..”

“அது ஒரு ஜாலி கேம் ஷோடி.. இஷ்டத்துக்கு உளறாத..”

“சரி.. அதை விடு அதுவுனக்கு புரிய வேணாம். ஆனா, மனுஷனுக்கு மன அழுத்தம் ஏற்படறது வேலைச் சுமையால மட்டுமில்லைங்கறதுதானே உலகின் ஒட்டுமொத்த சமூக நுண்ணரசியல்? அதுல.. வீடுங்கற அமைப்பின் உள்ளும் புறமுமா மண்டைக்குள்ள ஓவர்டைம் வேலைப் பாக்குறதுக்கு நம்மை நாமே ஒப்புக்கொடுத்திடறோம்.. வேற வழியே இல்லைங்கறது உன்னோட வாதம்.. அதானே..?”

“பின்ன என்னவாம்..?”

“தேர் இட் இஸ்.. அதுக்குள்ளே ரொம்ப சின்னதா ஒரு ஏரியா இருக்கு. நமக்கே நமக்கான.. நோ அல்லது யெஸ்ஸை எப்படி தேர்ந்தெடுத்துக்கலாம்ங்கற குட்டி ஏரியா. அந்த இடத்திலத்தான் அடல்ட் ஈகோவோட முக்கியமான பகுதியோட உருமாற்றத்துக்கான சந்தர்ப்பமும் இருக்குன்னு நம்புறேன்”

“என்னது அது?”

“என்னோட பொருளாதார சுதந்தரத்தை அடிப்படையா வச்சிக்கிட்டு என் தனிப்பட்ட உணர்வுகளுக்கான சந்தைப்பொருளா நானே உருமாறி என் ஒட்டுமொத்த உடம்பாவுமே இன்னொரு கைக்கு என்னை நான் பேரம் பேசிக்க விரும்பலைன்னு சொல்லுறேன்.. ஐ கான்ட் பி எ கஸ்டடி மெட்டீரியல் டு சம்படி. எனக்கு நான்தான் ஓனர். இந்த ஓட்டத்தின் வரிசையில.. வேலை.. ஊதியம்கறது ஜஸ்ட் ஒரு சேவைக் கணக்கு.. எப்படி சொல்லுறது..? ம்ம்… வாழ்வாதாரத்துக்காக லோல்படுறது.. ஓகே..? மத்தபடி.. பர்சனல் இஸ் ஸ்ட்ரிக்ட்லி பர்சனல். நான் என்ன சாப்பிடணும். எப்போ சாப்பிடணும். எப்போ தூங்கணும். எப்படித் தூங்கணும். என்ன டிரஸ் பண்ணிக்கணும். என்ன படம் பார்க்கணும். இருக்கறதா இல்ல சாவுறதான்னு ஒன்னு விடாம.. எல்லாமே.. என் தேர்வா இருக்கணும்.. காரணங்கள் எனக்கு ஏத்ததா இருக்கணும்.. மனு போட்டுக்கிட்டு லைன்லலாம் நிக்க முடியாது கேட்டியா..”

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. தலை சுத்துதுடி.. லெக்ச்சர கொஞ்சம் நிப்பாட்டு.. இல்லைன்னா நான் வண்டிய ஏதாவது லாரிக்கு அடியில பார்க் பண்ணிடப்போறேன்.. மொதல்ல வீட்டுக்குப் போயி சேருவோம்..”

“ஹோ….ய்ய்ய்!!”

ஏனோ மாதங்கி திடீரென சந்தோஷக் கூச்சலிட்டாள்.

 

-4-

கேடி பக் என்னும் பூச்சிகள்

மௌனிதா கட்டிலில் முதுகை சாய்த்து உட்கார்ந்தபடி மடியில் தலையணையொன்றை வைத்து அதன்மீது ஒரு ரைட்டிங் பேடை வைத்து அதில் கத்தையாக இருந்த காகிதங்களைப் புரட்டிப் புரட்டி அவ்வப்போது பென்சிலால் அடிக்கோடுகள் போட்டுக்கொண்டிருந்தாள்.

கூடத்தில் சார்ஜரில் இருந்த அவளுடைய மொபைலில் வாட்ஸப் மெசேஜ் ப்ளிங்க் என்றது. இரவு மணி பத்தரை. மாதங்கியிடமிருந்து ஒரு புகைப்படம் வந்திருந்தது. சுஸி மொபைலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

“பிசாசு.. ஒரு வருஷம் கழிச்சு என்னத்தையோ அனுப்பி வச்சிருக்கு பாரு..”

முதலில் மௌனிதாவிற்கு அவள் சொன்னது சரியாகப் புரியவில்லை. கொஞ்சம் தாமதித்து மண்டையில் உறைத்ததும் நம்ப முடியாமல் சுஸியை ஏறிட்டுப் பார்த்தாள்.

“எமோஷன் ஆயிடாத.. மத்தியானம் என்கிட்டே எப்படியிருந்தியோ அப்படியே இரு..”

“……………”

“ரெண்டும்.. சுத்த லூஸூங்க..”

அறைக்கதவை மூடிவிட்டுப் போனாள்.

வாட்ஸப்பை திறந்தபோது மாதங்கி ஆன்லைனில் இருந்தாள். புகைப்படத்தைத் திறந்ததும் தொப்புளுக்கு பக்கத்திலிருக்கும் டாட்டூ பூச்சியைப் பார்த்ததும் அவளுக்கு அடிவயிற்றில் கூசியது. அதிலிருந்து பார்வையைப் பிய்த்து எடுக்க முடியவில்லை.

“ஹாய் மௌ..!”

மௌனிதா, மாதங்கியின் சாட் விளிப்பிற்கு உடனே பதில் சொல்லவில்லை. ஒரு கணம் அமைதியாக இருந்தாள். உதடுகள் துடிப்பதைக் கட்டுப்படுத்திக்கொள்ள திணறினாள்.

“ஹல்லோ…? ஆர் யூ தேர்?”

“இன்னைக்குக்கூட உன்னை நினைச்சிட்டிருந்தேன்.. எப்படி இருக்க மாது?”

“ய்யா.. கோயிங் குட்.. டாட்டூ பார்த்தீங்களா?”

“ம்ம்.. ஒன்பது மாசத்துல கிரிகோராவே மாறிட்டியா?”

“இது சரிப்பட்டு வரலியே.. இருங்க.. வீடியோ கால்ல வர்றேன்..”

மௌனிதாவிற்கு நெஞ்சுக்குள்ளே பட்டாம்பூச்சியின் சிறகுகள் மெதுவாக வருடத் தொடங்கின. அடிவயிற்று அமிலம் சுறுசுறுவென உள்ளுக்குள்ளேயிருந்து கவ்வியிழுத்து சங்கடப்படுத்தியது.

வந்துவிட்டாள்.

“ஹாய்…! என்ன? உங்க ஃபிளாட்ல இல்லியா? சுஸி வீட்டுக்கு வந்திருக்கீங்களா?”

“ஆமா.. வந்து ஒன்பது மாசமாச்சு..”

“அடடா.. வுட்டா பிரசவ காலம்னு சொல்லிடுவீங்க போலிருக்கே.. எனக்கு வேற எதுவும் சொல்ல வேணாம்.. சரியா”

“நீ.. வந்த விஷயத்தை சொல்லு”

மௌனிதாவை சில நொடிகள் அவள் முழுமையாக உள்வாங்கிப் பார்த்தாள்.

“ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் கம் பேக்கா! தட்ஸ் குட்..”

மௌனிதா பதில் சொல்லாமல் சிரித்தாள். சுஸி தன்னை எடுத்த கேண்டிட் புகைப்படத்தை இவளுக்கு அனுப்பி வைக்கலாமா என்று யோசித்தாள். யோசனையை உடனே நிராகரித்தாள்.

“டாட்டூ போட்டுக்கிட்டதும் உங்களுக்கு காட்டணும்னு முடிவு பண்ணி வச்சிருந்தேன்.. இதுவொரு அஞ்சு மாச பிளான். உங்களை அம்போன்னு விட்டுட்டு அப்படியே நகர்ந்து வந்துட்ட மாதிரி டக்குன்னு எடுத்த முடிவும் இல்ல. நூற்றாண்டுகளைக் கடந்து தொப்புள்கொடி வாயிலை நோக்கி மனம் திரும்புது.. ஒற்றை சந்தர்ப்பவாதமாக.. இச்சையாக.. காதலாக.. காமமாக.. அப்படியே அந்த நான்கு முனை சதுரத்தை நேத்து நடு ராத்திரியில ஏதோ சத்தம் கேட்டு எழுந்தப்போ இதுவரையிலான முடிவுகளையே முழுமையா உணர்ந்தேன். தட்ஸ் எ மைண்ட் காலிங்.. அப்போ உங்களை நினைச்சுக்கிட்டேன்..”

“ம்..”

“நான் இப்போதைக்கு என்னோட ஆராய்ச்சிக்கு ஒரு pause பட்டனை அமுக்கிறலாம்னு தோனுது.. மௌ..”

“புரியலையே..”

“மும்பை போறேன்.. ஏதாவது புக் ஸ்டோர்.. இல்லைனா லைப்ரரில.. அந்த மாதிரி சிம்பிளா ஒரு வேலை செய்யணும்னு நினைக்கிறேன்..”

“பட்.. வொய்..!?”

“தேடல் பெருகுது.. நிறைய புதிய அனுபவங்கள் வேணும்”

“உன்னோட தீஸிஸ்.. உன்னை நல்ல இடத்துல பிளேஸ் பண்ணும் மாதும்மா.. இந்த முடிவு சுத்த ஹம்பக்.. பைத்தியமா நீ?!”

“ஹே..! மௌ.. ஸ்லோ டவுன்.. ஆராய்ச்சியை தற்காலிகமா நிறுத்தறேன்.. அவ்ளோதான்.. பேப்பர் வொர்க் மட்டுமே நிக்கப்போவுது. என்னோட அன்றாடத்துல அதுக்கான ஐடியா நிக்காது. நிறுத்தமாட்டேன். தட் யூ நோ.. ஒரு.. ஒருவருஷம் போதும்னு நினைக்கிறேன்.. எப்படியும் நான் உங்ககிட்ட திரும்பி வந்துதான ஆகணும்..”

“ஒரு புரபொசரா சொல்லுறேன்.. இது மடத்தனம்..”

“அப்படியா..”

அந்தக் குரல் தொனியிலும் முகபாவத்திலும் மௌனிதா சட்டென வடிந்தாள். மாதங்கியின் அனைத்து அபிலாசைகளும் இவளறிவாள். நீண்டகால இடைவெளி இருவருக்கும் நடுவே வேறொரு புதிய உலகத்தையே உருவாக்கி நிறுத்தியிருக்கிறது.

“என்ன கப்-சிப்னு ஆகிட்டீங்க..?”

“நமக்கான எந்த மதிப்புகளையுமே நாம் மட்டுமே வடிவமைச்சுக்க முடியும் இல்லியா?”

“சரியாச் சொன்னீங்க.. இன்னொரு ஃபோட்டோ அனுப்பறேன் பாருங்க.. அதுல ப்ரைவசி இல்ல.. ஆனா சீக்ரஸி இருக்கு..”

இன்னொரு புகைப்படம் வந்தது. இன்னொரு டாட்டூ! இடது புறங்கையின் ஆட்காட்டி மற்றும் கட்டைவிரல் இரண்டுக்குமான மேற்பக்க இடைவெளி வளைவில் போடப்பட்டிருந்த டாட்டூ. KD என்கிற ஆங்கில எழுத்துக்களுக்குக் கீழே அதே பூச்சி டாட்டூ இருந்தது. இரண்டு எழுத்துக்களையும் மீறிடாமல் அதற்கு கீழேயே அடங்கி இருக்கிற பூச்சி.

“இதென்ன.. தொப்புள் வழியா நுழைஞ்சு.. மேல கைக்கிட்ட.. வந்திருச்சா?”

வாய்விட்டுச் சிரித்தாள்.

“இப்படியெல்லாம் உங்களுக்குத்தான் தோனும்.. KDன்னா என்னன்னு கெஸ் பண்ணீங்களா?”

“ஊஹூம்.. K is Kafka.. D? டார்லிங்கா?”

“இல்ல.. K is correct. D means Darwin..”

“ஓ..! பரிணாம வளர்ச்சியை அடையாளப்படுத்தறியா?”

“இல்ல.. Humbug ங்கற வார்த்தையை தந்ததும் டார்வின் தானே..”

“வாழ்க்கையை ஹம்பக்னு குறிப்புணர்த்த நினைக்கறியா.. மாது?”

“ஏன் கூடாது..? ஆனா, நம்பிக்கை இழக்கறதுக்கு ஆயிரம் காரணங்கள் உருவாகிற மாதிரி.. அதை இழந்திடாம பத்திரப்படுத்திக்கிறதுக்கும் ஏதாவது ஒரு வழி இருந்தாகணும்ல.. ஆனா.. அது பத்தோடு பதினொன்னா இல்லாம.. ரொம்ப மதிப்பு மிக்கதா இருக்கணும்னு நினைக்கிறேன்.. அதை உருவாக்கியே தீருவேன்..”

“பேசாம.. நீ கதை எழுது.. நாவலிஸ்ட் ஆகிடு..”

“ஊஹூம்.. அதுக்கு நீங்கத்தான் லாயக்கு.. மண்டைக்குள்ளேயே விதவிதமா உருட்டிக்கிட்டு இருப்பீங்க.. எனக்கது செட் ஆகாது”

“சரி இனியாச்சும் டச்ல இரு..”

“நோ.. இப்போதைக்கு இது என்னோட கடைசி வாட்ஸப் கால்..”

மௌனிதாவிற்கு நெஞ்சில் சுருக்கென்று வலித்தது. சரியான அடம் பிடித்தவள். ஆனால், பேச்சிலும் நடந்துகொள்வதிலும் முன்னைக்காட்டிலும் பக்குவம் கூடியிருக்கிறது.

“பூச்சி டாட்டூவை ஒரு வாட்டி காட்டேன்..”

கொஞ்சநேரம் எதிர்ப்பக்கத்திலிருந்து மாதங்கி எந்த பதிலும் சொல்லவில்லை. மௌனிதாவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தாள். பிறகு மெதுவாகத் தலையை அசைத்து ஒப்புதல் செய்தாள். மொபைல் காமிராவை வயிற்றுப் பகுதி நோக்கித் திருப்பினாள்.

பூச்சி டாட்டூ தத்ரூபமாக இருந்தது. இயந்திரம் குத்திய ரணத்தால் பூச்சி லேசாகப் புடைத்திருந்தது. அதன் சிறிய கால்கள் மாதங்கியுடைய வயிற்றின் ஏற்ற இறக்க அசைவுகளில் உயிரோடு நெளிவதைப் போன்ற பிரமையைத் தந்தது. மௌனிதாவிற்கு அந்தப் பூச்சியின் கைகளைப் பற்றிக்கொண்டு மெதுவாக ஊர்ந்து.. ஊர்ந்து.. மாதங்கியின் தொப்புள்கொடி முடிச்சுக்குள்ளே நுழைந்து அப்படியே தொலைந்துபோய்விட வேண்டும் போலிருந்தது.


 

எழுதியவர்

கவிதைக்காரன் இளங்கோ
கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Deepapriya.H
Deepapriya.H
4 months ago

என்ன அற்புதமான கதை. வாழ்த்துகள் இளங்கோ சார்

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x