பேருந்து நிலையத்தின் காலைநேர பரபரப்புக்களை கவனித்தபடியே மருத்துவமனையின் மருந்துச்சீட்டுகள் அடங்கிய நீலநிற கோப்பை நெஞ்சோடு இறுக்கிச் சேர்த்தணைத்துக் கொண்டு முந்தானையை எடுத்து முகத்தை அழுத்தித் துடைக்கொண்டாள் பவதாரணி. அழுக்கடைந்த அந்தப் பேருந்து நிலையத்தின் இருக்கையிலிருந்து மெதுவாக எழுந்துவந்து பேருந்து வருவது தெரிகிறதா எனத் தலையை மட்டும் சாய்த்துக்கொண்டு கண்களைச் சிறிதாகக்குறுக்கிப்பார்த்தாள் .இந்த முறை மருத்துவரிடம் ஒரு மாதமாகத் தெளிவாகக் கண்கள் தெரியவில்லை எனவும் அடிக்கடி பசிக்கிறது எனவும் முடி அதிகமாகத் தலையிலிருந்து கொட்டுவதாகவும் மறக்காமல் சொல்லவேண்டிய விசயங்களோடு இதையும் சேர்த்து ஞாபகத்தில் இருத்திக்கொண்டாள் தாரணி. ஆனால் மருத்துவமனையில் நீண்ட காத்திருப்புக்குப்பின் மருத்துவரின் அறைக்குப்போனதுமே மிகச் சோர்வாகிவிடுவதால் ஏதோ ஒன்றை ஏனோதானோவெனச் சொல்லிவிட்டு மருந்துகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தால் போதுமென இருக்கும் எதுவுமே சொல்லத்தோன்றாது என நினைத்தவள் தூரத்தில் வரும் பேருந்தைக்கண்டதும் பேருந்தில் ஏறுவதற்குத் தோதாகத் தன்னை தயார் செய்துகொண்டாள்.முந்தானை மடிப்புக்களைச் சீராக்கி எங்கும் தொங்கிக்கொண்டிருக்காமல் இழுத்து நன்றாக இடுப்பில் சொருகிக்கொண்டாள். பேருந்து வந்ததும் தடுமாறாமல் ஏறுவதற்குக் கால்களை அகட்டி உள்பாவாடையின் இறுக்கத்தைத் தளர்த்தி நெகிழ்த்திக்கொண்டாள்.முன்பு மாதிரி இல்லை இப்பொழுதெல்லாம் பேருந்தில் ஏறுவதற்குப் பயமாகவும் சிரமமாகவும் இருக்கிறது.சற்று உயரமான படிகளுடைய பேருந்தில் கால் வைத்து உந்தி ஏறுவதற்குள் நடத்துநர் விசில் ஊதிவிட்டால் என்ன செய்வது என எண்ணிப் பயந்தே அதிகமாக மூச்சுவாங்குகிறது. எப்படியோ தடுமாறி பேருந்தில் ஏறி இருக்கைகளின் ஓரமாகச் சாய்ந்து நின்றுகொண்டாள்.
பேருந்து முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்னும் ஒருமணிநேரம் எப்படி நின்றுகொண்டு போகப்போகிறோம் என பவதாரிணிக்கு மலைப்பாக வந்தது. கைகளைத் தூக்கி பேருந்தின் மேற்புறக்கம்பிகளை அவளிருக்கும் உயரத்திற்கு எக்கி பிடிக்க முடியாமல் இருக்கையின் மேல் சாய்ந்துகொண்டு ஒருகையில் மருத்துவமனை கோப்புக்களை வைத்துக்கொண்டு தள்ளாடியவளைப் பார்த்து “இங்க கொஞ்சம் மெதுவா நகர்ந்து வந்து உட்காருங்க, நான் எழுந்திருச்சிக்கிறேன்” என ஆண் குரல் வந்த திசையில் நகர்ந்து வந்து அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள் பவதாரணி.
“நல்லா உட்கார்ந்துக்கப்பா நான் பாப்பாவ தூக்கி மடியில வச்சிக்கிறேன்” என்றபடி கண்களை அகலமாக விரித்து இவளைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தையைத் தூக்கி மடியில் அமரவைத்துக்கொண்டாள் அவள்.
“நான் அப்பாட்ட போகணும் நான் அப்பாவோடதான் இருப்பேன். நான் அப்பாட்ட போகணும்” எனத் திடீரென எழுந்துபோன அப்பாவை நோக்கி கைகளை நீட்டியபடி சிணுங்கத்தொடங்கிய குழந்தைக்கு கையிலிருந்த கைப்பையிலிருந்து இளஞ்சிவப்பு நிற மிட்டாயைக்கொடுத்தவுடன் அது மிட்டாயை வாங்கிப்பிரித்துக்கொண்டே சிணுங்கலை நிறுத்திவிட்டு சன்னல் வழியாக வீசும் காற்றில் முகத்தில் விரவும் கூந்தல் கற்றைகளுக்குக் கூச்சப்பட்டு விழிகளை மூடி மூடி திறந்தது. அந்தக் குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்த பவதாரிணியைப் பார்த்து புன்னகையோடு “இது எத்தனாவது மாசம்பா? கையில வளையல் நிறைய போட்ருக்கே வளைக்காப்பு முடிஞ்சிருச்சா? வயிறு பெருசா இருக்கே ஏழாவது மாசமா? ஒன்பதாவது மாசமா? தலைச்சன் புள்ளைக்கு ஏழுமாசத்துல வளைகாப்பு போட்ருவாங்க ஏன்னா மழைப்பிறப்பும் மழலைப்பிறப்பும் மகேசன் கூட அறியாத ரகசியமுன்னு சொல்லுவாங்க” என்றவளைப் பார்த்து “இது ஏழாவது மாசம் தான் போனவராம் தான் வளைகாப்பு போட்டாங்க. ஆனால் வயிறு பெருசாதான்கா இருக்கு ஏன்னு தெரியல” என்று கண்ணில் மிரட்சியோடு பதில் சொல்பவளைப் பார்த்து அவளைச் சகஜமாக்க சாதாரணமான தொனியில் பேச ஆரம்பித்தாள் அவள்.
“சிலருக்கு வயிறு பெருசாத்தான் இருக்கும் இது சாதாரணம் தான் இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது. என் பாப்பா வயித்துல இருந்தப்ப என்னைக்கூட எல்லாரும் இரட்டை புள்ளையான்னு கேட்டாங்க. இதுக்கெல்லாம் மிரளக்கூடாது. நல்லா சாப்பிடணும். சரிம்மா இந்தமாதிரி நேரத்துல நீ இப்படி பஸ்ல தனியா வரலாமா? ஏன் உன் புருஷன் என்ன பண்றாரு அவரு துணைக்கு கூட்டிட்டு வரலாம்ல? இல்லை உங்க வீட்ல ஓர்படியா மாமியா யாரையாவது கூட்டிட்டு வரலாம், இப்படிலாம் தனியா வரக்கூடாதுப்பா என்றவளின் கண்களைக் கூர்ந்து பார்த்தாள் பவதாரிணி அதில் உண்மையான அக்கறையும் அனுதாபமும் தெரிந்தது. சிலர் இப்படித்தான் நம்முடைய பலவீனங்களை தெரிந்துகொண்டு அவற்றைச் சொல்லியே நம்மை மேலும் பலவீனப்படுத்துவார்கள். அக்கறையாகப் பேசுவது போல நம்மைத் தூண்டி நமது கஷ்டங்களில் அவர்கள் குளிர்காய்வார்கள். இவள் அப்படித் தெரியவில்லை உண்மையான அக்கறையோடுதான் கேட்கிறாள் என புரிந்துக்கொண்டு “இல்லக்கா அவுங்க டவுன்ல்ல தான் வேலை பார்க்கிறாங்க ஆஸ்பத்திரிக்கு நேரா வந்துடுறேன்னு சொன்னாங்க” எனச் சொல்லிவிட்டு சீட்டில் நன்றாக சாய்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டாள். பேருந்து நகர நகர சன்னலிருந்து வீசிய காற்றும், ஒலித்த நல்ல பாடல்களும் அவளுக்குத் தூக்கத்தை வரவைத்தன. அப்படியொன்றும் அசந்தெல்லாம் நன்றாகத் தூங்கிவிடவில்லை. கண்களை மூடி மெலிதான விழிப்புக்கும் தூக்கத்துக்கும் இடையே ஊஞ்சல் போலச் சென்று மீண்டுகொண்டிருந்தாள்.திடீரெனப் பக்கத்திலிருந்த குழந்தை வேகமாக அழத்தொடங்கியது தூரத்தில் எங்கேயோ கேட்பது போலக் காதில் ஒலிக்கத்தொடங்கியது.
“அம்மா ! எனக்கு சாக்லேட் வேணும் அம்மா. அந்தப் பெரிய சாக்லேட் வேணும். அதை சாப்பிட்டாதான் நான் பெரிய புள்ளையாவேனாம். ஹெல்த்தியா இருப்பேனாம். நல்லா படிப்பேனாம் நாளைக்கு. ஸ்கூலுக்கு போனோம்ல்ல அப்ப ஷெர்லின் சொன்னா, எனக்கு அந்த வீட்டுல வரைஞ்சிருக்கிற சாக்லேட் வாங்கிக்கொடுங்க அம்மா” என அழுவது இவளுக்குக் காதில் விழுந்தாலும் தூக்கத்தினால் கண்களை இவள் திறக்கவே இல்லை.
வருண் இவள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்பொழுது இவளோடு டூயூசன் படித்தவன். இருவரின் குடும்பப் பொருளாதாரமும் நடுத்தரத்திற்குக் கீழே இருந்ததால் பேருந்தில் செல்லும்பொழுது சந்திக்கும் இடங்களிலெல்லாம் குடும்ப பிரச்சனைகளைப் பேசி மாறி மாறி ஒருவருக்கொருவர் ஏதாவது உதவிசெய்துகொண்டதோடு இருவருக்கும் நல்ல புரிதலோடு காதலும் வந்திருந்தது. இருவரும் பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரி பயிலும்பொழுது இவர்களது காதல் விசயம் தாரணி வீட்டிற்குத் தெரிந்து அவளது மாமா மகனுக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்ய இரவோடு இரவாக தாரணி கிளம்பி வருண் வீட்டிற்கு வந்துவிட்டாள். அத்தோடு தாரணி அப்பா அவளை வெறுத்து ஒதுக்கிவிட்டார். எத்தனைக்கு எத்தனை தாரணிமீது அன்பைப் பொழிந்தாரோ அத்தனை தூரம் அவளை மனதிலிருந்து தூர எறிந்துவிட்டார். அன்பும் வெறுப்பும் அருகருகிலேயே இருக்கும் புள்ளிகள்; இரண்டும் இடைப்பட்ட தூரம் மிகவும் குறைவு. எங்கு அதிக அன்பு பாராட்டப்படுகிறதோ அங்கு அதிகக் கோபமும் ஒருநாள் காட்டப்படும். இன்று வரை அவள் முகத்தில் கூட அவர் விழிக்கவில்லை. வருணுக்கு இரண்டு அண்ணன்கள். இருவருக்கும் திருமணமாகி கூட்டுக்குடும்பமாக ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்திருந்த வருண், அண்ணன்களின் தயவால் தான் வாழ்ந்துகொண்டிருந்தான். தாரணியின் இந்தத் திடீர் முடிவால் வருண் குடும்பத்துக்குள் பெருங்குழப்பம் வந்தது. வருணின் பெரிய அண்ணன் இவனை எப்படியாவது நன்றாகப் படிக்கவைத்துவிட்டால்,அவன் எதாவது நல்ல வேலை பார்த்து குடும்பத்தைச் சற்று கைதூக்கிவிடுவான் என எண்ணியிருந்தது நடக்காமல் போனது குறித்துக் குடும்பத்தில் அனைவருக்குமே தாரணி மீது இயல்பாகவே காழ்ப்புணர்வு ஏற்பட்டது.
வேண்டா வெறுப்பாக வேறு வழியில்லாமல் அவளை ஒரு கோவிலில் இருத்திவைத்து இருவருக்கும் திருமணம் முடித்துவைத்தனர். தேவையில்லாத ஒரு உடமையாகத்தான் அவளை வீட்டிலிருந்த அனைவரும் பார்த்தனர். அங்கு நிலவிய பொருளாதாரச் சூழலில் இருவரைப் படிக்கவைக்க வாய்ப்பில்லாததால் தாரணியின் படிப்பு பாதியில் நின்றுவிட்டது. அவளுக்குப் பெரிதாக உலக அனுபவங்களோ வேறு திறமைகளோ இல்லை. அவளுடைய வீட்டில், கல்லூரிக்குச் செல்வாள் படிப்பாள் உறங்குவாள். வீட்டிலுள்ள வேலைகளைக்கூடச் செய்யவிடாமல் அவளது அம்மா, தங்கம் போலத் தாங்கிப் பார்த்துக்கொள்வாள். தாரணி வீட்டில் நடுத்தரக்குடும்பமாக இருந்தாலும் அவளை வறுமை தெரியாது ஒரு இளவரசியைப்போலத்தான் செல்லமாக வளர்த்தார்கள். எங்கிருந்துதான் இந்தக் காதல் உணர்வு வருகிறது. உடலிலிருந்தா புத்தியிலிருந்தா எங்கிருந்தோ இந்த உணர்வு உடலுக்குள் புகுந்து அடியோடு சுயத்தை மாற்றிவிடுகிறது. எதோ ஓர் உந்துதலாலும் பிடிவாதத்தாலும் வருண்மேல் கொண்ட அன்பினாலும் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாலேயொழிய அதன் பின்பு வாழ்க்கையில் எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்க முடியுமோ அவ்வளவு கொடுமைகளையும் வேதனைகளையும் அனுபவித்துவிட்டாள்.பெற்றோர் எப்படித் தன்னை பொத்திப் பொத்தி வளர்த்தார்களோ அதற்கு மாறாக ஒருபிடி சோறுக்காக ஏங்கித் தவித்ததும் கேவலப்பட்டதும் ஆதரவு இல்லாமல் இந்த உலகத்தில் தனித்துவிடப்படுவது எவ்வளவு பெரிய தண்டனை எனவும் இந்த மூன்று வருடத்தில் தாரணி நன்கு உணர்ந்திருந்தாள். பிறந்த வீட்டு நினைவு வந்தவுடன் மூடிய இமைகளுக்குள் கருவிழிகள் அங்குமிங்கும் அலைபாய்ந்து கண்ணோரத்தில் நீர் துளிர்த்தது. படிப்பு முடித்தும் வருணுக்கும் பெரிதாக நல்ல சம்பளத்தில் எதுவும் வேலைக்கிடைக்கவில்லை.டவுனில் மொபைல்கடையில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கிடைத்து காலையில் ஏழுமணிக்கு வேலைக்குச் செல்பவன் இரவு ஒன்பது மணிக்குத்தான் வீடு வந்து சேருவான்.வீட்டில் யாருமே அவளோடு பேசுவதற்குத் தயாராக இல்லை.மாமியாரும் வீட்டிற்கு முன்னால் வீட்டோடு இணைந்து கட்டப்பட்டிருக்கும் சின்ன கட்டிடத்தில் சிறியபொருட்களை வைத்து சின்னதாக ஒரு பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்துகொண்டிருப்பார்.வருணின் அம்மா ரோசாவதி நல்ல மாதிரியாக தாரணியிடம் பேசிக்கொண்டிருப்பார். தாரணிக்கு ஏதாவது தின்பதற்கு வேண்டுமென்றால் அங்குச் சென்று உரிமையோடு எடுத்துக்கொள்வாள்.
வருணின் அண்ணிகள் இருவருக்குமே தாரணியை சுத்தமாகப் பிடிக்கவில்லை. பிடிப்பதற்குக் காரணங்களை அடுக்கிக்கொள்ளலாம் பிடிக்காமல் போவதற்கு என்ன காரணமென யாருக்குத் தெரியும்? அதுவும் தாரணிக்கு வீட்டு வேலைகள் எதுவுமே செய்து பழக்கம் இல்லை. அவ்வளவு பெரிய மாட்டுக்கொட்டகையைக் கூட்டி வாரி வழித்துப்போடவும் தெரியவில்லை. அத்தனை பேருக்கும் உலை வைத்து உப்புக்காரம் போட்டுச் சமைக்கவும் திறமை இல்லை. நிறையச் சின்னவெங்காயங்களை உரித்து டப்பா நிறையப் போட்டுவைப்பாள். தேங்காய்களை உடைத்துத் துருவி வைத்துவிடுவாள். வாசலில் வரும் தண்ணீர் பிடித்து வைப்பாள். வீடு முழுவதும் கூட்டிப்பெருக்குவாள். எதோ அவளது உணவுக்கு அவள் வேலை செய்துவிடுவதாக எண்ணிக்கொள்வாள். வேலைகளை முடித்துவிட்டு அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நாலுக்கு நாலடி ரூமில் சென்று ஒடுங்கிவிடுவாள். தாரணிக்கு பெரிய தவறு செய்துவிட்டோம் என தோன்றும் பொழுதெல்லாம் வருணின் கள்ளங்கபடமற்ற முகமும் தழுதழுத்த குரலும் நினைவில் வந்து அவளை அவனை நோக்கி அவளைத் தளும்பச்செய்யும்.
இதோடு தாரணி கர்ப்பமானது யாருக்குமே பெரிய மகிழ்ச்சியைத் தந்ததாக அவளுக்குத் தோன்றவில்லை. எல்லாருடைய பார்வையிலும் இளக்காரமும் ஏளனமும் இருப்பதாக தாரணிக்கு தோன்றியது. ஒரு முறை கிணற்றடியில் வாந்தியெடுத்து மயங்கிவிழுந்து யாருமே பார்க்காமல் தானே நெடுநேரம் கழித்து எழும்பிவந்தபோதுகூட வருணின் அண்ணிகள் “இதுக்காகத் தான இப்படி வயித்தத் தள்ளிட்டு நிக்கறதுக்குத்தான இவ இப்படி ஓடியாந்தா” எனச் சாடைமாடையாகப் பேசியது தெரிந்ததும் அந்த அறையை விட்டு வெளிக்காற்றைக்கூடச் சுவாசிக்காமல் அறையிலேயே முடங்க ஆரம்பித்தாள் தாரணி. அவளால் செய்துகொண்டிருந்த எளிய வேலைகளைக்கூட மசக்கையினால் செய்யமுடியாமல் போக, சாப்பிடுவதற்காக உட்காரும் பொழுதெல்லாம் “சாப்பிடமட்டும் இவுங்களுக்கு முடியும், வேலை செய்ய முடியாது. ஆவு ஆவுன்னு இப்படிப் பறத்துகிட்டு ஆம்பளைங்களுக்கு முன்னாடி சாப்பிட உட்காந்தா வீடு விளங்குமா?” என குத்திக் காட்டி வருணின் அண்ணிகள் பேசுவது தாரணிக்கு காதில் விழுந்ததும் அவள் சாப்பிடுவதைக் கூட குறைத்துக்கொண்டாள். யாருக்கும் தெரியாமல் பயந்து பயந்து வயிற்றுக்கு பத்தாமல் பசிக்காக எதோ ஒன்றை உண்ணத்தொடங்கினாள். அப்படியும் சோறு குறைஞ்சிட்டு, தொட்டுக்கொள்வது குறைஞ்சிட்டுன்னு பேசும்பொழுது அவளுக்கு உயிரே போய்விடும்போல இருந்தது.
குழந்தை வயிற்றில் வளர வளர தாரணிக்கு பசிக்க ஆரம்பிக்கும் பொழுதெல்லாம் மாமியார் கடையில் விற்கும் சாக்லேட்டுகளை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். குழந்தையைப் பற்றிய எந்தப் புரிதலும் அவளுக்கு இல்லை. அவளது பெற்றோரும் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவளுக்குப் பின் ஒரு தங்கை இருப்பதையும் அவளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்ய வேண்டுமெனவும் காரணம் சொன்னார்கள். கர்ப்பமாக இருக்கும்பொழுது என்ன சாப்பிடவேண்டும், எது சத்து, எது குழந்தைக்கு முக்கியம் என்று எதுவுமே அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. குழந்தையைப்பற்றி எதுவோ இரண்டாவது ஓர்ப்படியாளிடம் கேட்கப் போக அவள், ” மாசமா ஆறது எப்படீன்னு தெரியுது இது தெரியலையா?” என நக்கல் பேச இனி அவளிடமும் எதுவும் கேட்கக்கூடாது என தாரணி மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
அவளுக்குப் பசிக்க ஆரம்பிக்கும் பொழுதெல்லாம் வயிற்றுக்குள் குழந்தை முண்டிக்கொண்டு வயிற்றை உதைத்தது. புரட்டிப் புரட்டிப் பசி பசி என வயிறு அனத்தியது.இவளுக்கு அவளது அறையைவிட்டு அடுப்பாங்கரை செல்லவே கூச்சமாக, எதுவாவது சொல்லிவிடுவார்களோ எனப் பயமாக இருந்தது. மெதுவாக நடந்து மாமியார் கடைக்குச் சென்று சாக்லேட்டை எடுத்துவந்து சாப்பிட்டுக்கொண்டே வயிற்றிலிருக்கும் குழந்தையிடம் சொல்லுவாள் “செல்லக்குட்டி இதுல எல்லா சத்தும் இருக்கு இத நான் சாப்பிட்டா அந்தச் சத்து முழுக்க தொப்புள்கொடி வழியா உனக்கு வந்துடும், அதுனால உனக்கு சாப்பாடு கிடைக்காதுன்னு ஆகாதுல்ல, நீ நல்லா வளர்ந்துருவ. எல்லா விளம்பரத்துலையும் சொல்றாங்களே பிஸ்கட் சாக்லேட் சாப்பிட்டா நல்லது சத்துன்னு நீயும் வளர்ந்துருவே தான” எனச் சொல்லிக்கொண்டே உணவு சாப்பிடுவதைப் பிடிவாதமாக தாரணி தவிர்த்து வந்தாள். வருணிடம் சாக்லேட் கேட்கும்பொழுதும் அவளுக்குப் பிடிக்கும் என்பதற்காகக் கேட்கிறாள் என நினைத்தானே தவிர, சாப்பிடுவதைத் தவிர்த்து அவள் அதை உண்கிறாள் என அவனுக்கும் தெரியவில்லை. அதுவும் அதிகமாக இல்லை நான்கு சிறிய சாக்லேட்டுகள் அவளது ஒரு வேளை உணவைச் சரிசெய்வதாக அவள் நினைத்துக்கொண்டாள். சரியாக ஏழாவது மாதத்தில் வயிற்றுவலி வந்து மருத்துவமனைக்கு செல்லும்பொழுது தான் ஒருவாரம் முன்பே அந்தக்குழந்தை வயிற்றிலேயே இறந்திருந்தது தாரணிக்கு தெரியவந்தது.
தாரணிக்கு குழந்தை இறந்ததைவிட, அந்தக்குழந்தை வயிற்றில் இறந்ததுகூடத் தெரியாமல் திரிந்த தனது அறியாமையையும் இயலாமையையும் நினைத்து வெகுநாட்கள் அழுதுகொண்டே இருந்தாள். தனது வயிற்றில் பசியோடு அது முட்டிச்சென்ற சுவடுகளைத் தடவிக்கொண்டே இருப்பாள். போதிய வளர்ச்சி இல்லாமல் குழந்தை இறந்துவிட்டது என மருத்துவமனையில் கூறினார்கள். இப்பொழுது தாரணிக்கு இது இரண்டாவது குழந்தை. இந்தக் குழந்தை உருவானதிலிருந்தே தாரணி மிகுந்த பயத்தோடும் பாதுகாப்போடும் மருத்துவர் சொன்ன விசயங்களைச் சரியாகப் பின்பற்றி நேரத்திற்கு உணவு உண்டு வயிற்றையும் அதன் வழியாக அந்தக் குழந்தையும் தடவிக்கொண்டேயிருந்தாள். வளைகாப்பு போட்டபின்பு தான் கணக்கு, அந்தக்குழந்தை வளைகாப்பு போடும் முன்னே இறந்ததால், இந்தக்குழந்தை தான் தலைச்சன் பிள்ளை என எண்ணிக்கொண்டவள், நிதானித்து எதிரில் இருந்த குழந்தையைப் பார்த்து மெதுவாகச் சிரித்தாள்
“பாப்பா சாக்லேட் சாப்பிடக்கூடாது. எப்பாவாவது ஒண்ணே ஒண்ணு சாப்பிடலாம், நிறைய சாப்பிட்டா உடம்புக்கு கெடுதல், நீ நல்ல பாப்பால்ல அதெல்லாம் சும்மா அந்த வீட்ல காசு வாங்கிட்டு வரைஞ்சி வச்சிருக்காங்க அதைப்பார்த்து நீ வாங்கி சாப்பிட்டீன்னா பல்லெல்லாம் சொத்தையாகிடும். வயித்துல பூச்சி வந்துடும் வயிறு வலிக்கும் தெரியுமா” எனத் தாரணி சொன்ன உடனேயே, “அப்ப நீ சாக்லேட் சாப்பிட்டதால தான் உன் வயித்துல பூச்சி வந்து வயிறு பெருசாகிட்டா, அதான் ஊசிப்போட்டுக்க டாக்டர்ட்ட போறீயா”? என அந்தக்குழந்தை கேட்டதும் தாரணி, அடக்க முடியாமல் சிரிக்கத்தொடங்கினாள்.
“இந்த உலகத்துல எல்லாமே விளம்பரமா போயிட்டு தொட்ட தொண்ணூருக்கும் விளம்பரந்தான். மனுசன் பய பொறக்கறதுலேர்ந்து பாடையில போற வரைக்கும் விளம்பர உலகமா போயிட்டு இது பத்தாதுன்னு எங்கப்பார்த்தாலும் பேனருங், விளம்பரத்தட்டிங்க காதுகுத்து சடங்கு கருமாதி எல்லாத்துக்கும் ஆளுயர பேனரு. ரோட்ல போற வர்றவனுங்க அதைநோட்டம் விட்டுட்டு பராக்கு பார்த்துட்டு வந்து பஸ் மேல நேராவந்து வண்டிய விடுறானுங்க. இந்த ரோட்ல பேனர் வைக்கிறது விளம்பரம் எழுதறத விட்டாலே பாதி விபத்து குறைஞ்சிடும்.இங்க பாருங்க வர்ற வழியில உள்ள வீட்ல முழுக்க காசை தூக்கி எறிஞ்சிட்டு சுவத்துல சாக்லேட் கூல்டிரிங்ஸ் விளம்பரத்தை கலர்கலரா வரைஞ்சி வச்சிருக்கானுங்க.இதை புள்ளைங்க பார்த்தா மனசு பதிஞ்சி கேக்குந்தான? அவன் கடைக்காரன் பொருள விளம்பரப்படுத்தறான். வீடு கட்டுறவனுங்கு எங்க போகுது அறிவு இவ்வளவு கஷ்டப்பட்டு வீட கட்டி அதுல எவன் கடை விளம்பரத்தை வரையவோ காச வாங்கிக்கிட்டு சுவத்த விட்டற்றானுங்க, நம்ம வீட்டுக்குன்னு ஒரு அடையாளம் வேணாமா?
“எவன் பொருளையோ நம்ம வீட்டுல வரைஞ்சி வித்துகிட்டு இதெல்லாம் ஒரு பொழப்பா? அதுவும் எல்லாமே வீணாப்போன உயிருக்கு உலை வைக்கிற பொருட்கள். மனுசப் பயலுங்க தனக்கு வேணும்னா சாக்கடையில கூட அரிசியப் பொறுக்கித் திம்பானுங்க அவ்வளவு கேவலமானவனுங்க, ஏய்! யாருப்பா அங்க கடைசியா ஏறுனது, எங்க போகணும்? டிக்கெட் எடுத்துக்கோங்க, இனி வண்டி தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்ட்ல தான் நிக்கும், இடையில எங்கையும் நிக்காது அம்மா! அந்தக்காய்கறிக்கூடைய தள்ளி வைம்மா நட்ட நடுவுல நட்டுட்டுதான் வைப்பீயா?” என தானாகவே பேசியபடி செல்லும் கண்டக்டரை மூவரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“என்னடா சொன்னாங்க டாக்டரு ? ஸ்கேன் பண்ணிப்பார்க்கணும்ன்னு சொன்னாங்களே! பண்ணாங்களா? குழந்தை எப்படி இருக்குதாம் வளர்ச்சி நல்லா இருக்குதாமா ? என்னமோ அந்த மகமாயிதான் உங்க இரண்டு பேருக்கும் துணையா இருந்து இந்த புள்ளை நல்லபடியா பொறந்து பேரு விளங்க வைக்கணும்.திருவிழா சமயத்துல தான் வியாபாரம் நடக்கும் எதோ கடைய திறந்தா ஐஞ்சி பத்து கிடைக்குன்னு தான் இன்னைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட வராம கடைய திறந்தேன்.ஒரு பத்து ரூபாய் யாராவது சும்மா கொடுப்பாங்களா சொல்லு.எதோ பால்வாங்கற காசுக்காவது உதவும் ன்னு தான் இராப்பகலா கடையில உட்கார்ந்துருக்கேன் . இரண்டு பயலுவலும் பொண்டாட்டி பேச்சக்கேட்டுக்கிட்டு டவுனுக்கு தனியா வீடு பிடிச்சி போய்டானுவோ, புள்ளதாட்சிய வச்சிக்கிட்டு அல்லோலப்படுறேன் “என சொல்லிக்கொண்டே செல்பவளை இடைமறித்தான் வருண்”அம்மா புலம்பாதம்மா எதாவது சமைச்சீயா பசிக்குதும்மா .ஆஸ்பத்திரியில ஒரேக்கூட்டம் எல்லாம் வயித்த தள்ளிக்கிட்டு பார்க்க பாவமாவும் இருக்கு.சிரிப்பாவும் இருக்கும்மா . குழந்தை நல்ல வளர்ச்சியா ஆரோக்கியமா இருக்காம் .அடுத்த மாசம் முன் தேதியிலையே ஒருதடவை செக்கப்புக்கு வர சொன்னாங்க அண்ணனுங்க இரண்டு பேருக்கும் பயலுவதான் இருக்கானுங்க.எனக்கு உன்னை மாதிரி ஒரு பொம்பளை புள்ளை வேணும்”என்று சொல்லிவிட்டு ரோசாவதியோட கால்களை மெதுவாகப் பிடித்துவிட்டான் வருண்.
“அத்தை இந்தப்புள்ளை வயித்துல வந்ததுலேர்ந்து உங்க புள்ளை ஒரு ஆயிரம் தடவை இதை சொல்லிருப்பாரு. நானும் மேக்கப் க்ளாஸ்க்கு போயிட்டு தான இருக்கேன்.குழந்தை பொறந்ததும் உங்கள்ட்ட விட்டுட்டு நான் மேக்கப்புக்கு போனேனா ஒரு மேக்கப்புக்கு குறைஞ்சது எட்டாயிரம் கிடைக்கும் அப்பறம் இந்த பொட்டிக்கடையெல்லாம் வேணாம் நீங்க பாப்பாவ பார்த்துட்டு ரெஸ்டு எடுத்துங்க “என்பவளைப் பார்த்து ஆமோதித்து தலையை அசைத்துக்கொண்டே. “ சரி புளிச்சோறு கிளறி வச்சிருக்கேன் இரண்டு பேரும் போய் சாப்பிடுங்க , இதோ வியாபாரத்தை முடிச்சிட்டு வர்றேன் என்றபடி எதோ பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் வியாபாரம் பண்ண ஆரம்பித்தாள் ரோசாவதி.
“ வருண் நான் ஒண்ணு சொன்னாக்கேப்பீயா” எனக்கேட்டுக்கொண்டே வருணின் சட்டைபட்டனைத்திருகினாள் தாரணி.
“அது என்னாடி எங்க அம்மாவுக்கு முன்னாடி மட்டும் அவரு இவரு தனியா இருக்கப்ப வா, போன்னு கூப்பிடுவீயா? இரு எங்கம்மாவ கூப்பிடுறேன்”என விளையாட்டாக அவளிடம் வம்பளப்பவனைப்பார்த்து, ”வருண் விளையாடாத நான் சொல்றத சீரியஸா கேளு, எனக்கு என்ன வேணும் என்ன வேணும்ன்னு கேட்டீல்ல, எனக்கு ஒண்ணு வேணும். சொன்னா செய்யணும் மாட்டேன்னு சொல்லக்கூடாது. எதும் சால்ஜாப்பு சொல்லக்கூடாது. கேக்கவா? மாட்டேன்னு சொல்லமாட்டீல்ல நிறைமாச வயித்துபுள்ளைக்காரி கேக்குறேன் .நீ செய்யலேன்னா உன் புள்ளைக்கு காதுல சீழ் வடியும் பார்த்துக்க , எனச் சொல்லியபடி வருணின் கைகளை எடுத்து மேடிட்டிருந்த வயிற்றின் மேல் வைத்துக்கொண்டாள் தாரணி. வருண் தாரணி கர்ப்பமானதிலிருந்து அவளைத்தொடவே பயந்தான். அதுவும் பெரிதாகிக் கொண்டிருக்கும் வயிறும் ,பெரியமனுசிப்போல பேசும் அவளது பேச்சும் அவனுக்கு எதோ ஒரு சிறிய பயத்தை உண்டாக்கியிருந்தது.மெதுவாக அவளது வயிற்றிலிருந்து கரங்களை எடுத்துக்கொண்டு”என்ன வேணும் சொல்லுடி எப்படியாவது அதை வாங்கித்தர்றேன். நீ சந்தோஷமா இரு அது போதும் சொல்லு என்ன வேணும் “ என்பவனிடம்”சரி சத்தியம் பண்ணு நான் பெருசா எதுவும் கேக்கமாட்டேன் ஆனால் நான் கேட்டத நீ பண்ணனும் சத்தியம் பண்ணு “என்றபடி வயிற்றைத்தள்ளிக்கொண்டு கெஞ்சுபவளைப் பார்த்ததும் அப்படியே அவளை அணைத்துக்கொண்டு”சத்தியமா செய்யறேன் சொல்லு”என்றான் வருண் அவள் கண்களால் கெஞ்சிக்கொண்டு அப்படிக்கேட்கும் பொழுது முடியாது என்று எப்படிச் சொல்லமுடியும்? என நினைத்துக்கொண்டான் அவன்.
“வருண் நம்ம வீட்டு பக்கவாட்டு சுவத்துல செயற்கை கருத்தரிப்பு விளம்பரம் கறுப்பு கலர்ல்ல எழுதிருக்குல்ல அது வேணாம் எனக்குக் கறுப்பு கலரும் பிடிக்கல அந்த விளம்பரமும் பிடிக்கல அதை அழிச்சிட்டு எனக்குபிடிச்ச ரோஸ்கலர்ல்ல பெயிண்ட் அடிச்சிக்கொடு எனக்கு நம்ம வீட்டுல விளம்பரம் எழுதிருக்கிறது பிடிக்கல . நான் உன்கிட்ட எதுவும் கேட்டதே இல்லை அந்த விளம்பரத்தை அழிச்சிட்டு எனக்கு பிடிச்ச கலர் பெயிண்ட் அடிச்சுக்கொடு” என்பவளை கண்களை சுருக்கிக்கொண்டு விநோதமாகப்பார்த்தான் வருண்.”ஏய் நீ எதாவது திங்கிறதுக்கு கேட்பேன்னு நினைச்சேன். நீ என்னாடி இப்படிக் கேக்கிற? அது பெரியண்ணன் டவுன்ல இருக்கிற ஆஸ்பத்திரிக்காரன்ட்ட சொளையா பணத்தை வாங்கிகிட்டு, சுவத்தை குத்தகைக்கு விட்டிருக்காரு.அதெப்படி அழிக்க முடியும்.மொத்தமா பணம் வாங்கி செலவுப்பண்ணிருக்கோம். இப்ப விளம்பரம் எழுதக்கூடாதுன்னு அழிச்சா பணத்தை அவுங்களுக்கு மொத்தமா திருப்பி கொடுக்கணும்டி.இப்ப இருக்கிற கஷ்டத்துல உனக்கு மருத்துவச்செலவுக்கே எக்கச்சக்கமா ஆகுது .இதுல பணத்தை எப்படி நாம திருப்பிக்கொடுக்கிறது. குத்தகைக் காலம் முடியட்டும் அப்பறம் புதுசா ஒப்பந்தம் போடாதீங்கன்னு வேணா அண்ணன்ட்ட சொல்றேன் சரியா?” என்றான்.” “இன்னும் ஒப்பந்தம் காலம் எவ்வளவு நாளு இருக்கும்?எனக்கேட்டாள் தாரணி.
“அது சரியா தெரியலடி ஆனால் வருசக்கணக்கில தான் ஒப்பந்தம் இருக்கும்”என்பவனைப்பார்த்து, “இல்லை முடியாது என் குழந்தை இந்த விளம்பரம் எழுதுன வீட்ல பிறக்கக்கூடாது . போன வாரம் ஆஸ்பத்திரி போயிட்டுவரும்போது ஆட்டோ காரர்ட்ட வழி சொல்றப்ப அந்தக் குழந்தை விளம்பரம் எழுதுன வீடு தானம்மா? பெரிய கலெக்டர் வீட்டுக்கு வழி சொல்ற மாதிரி சொல்றேன்னு நக்கலா பேசுறாரு எல்லாரும் இந்தவிளம்பரம் எழுதுன வீடுன்னு அடையாளம் சொல்றாங்களே தவிர இது வருணோட வீடுன்னு யாரும் சொல்றதில்லை. காசுக்காக அடையாளத்தை இழந்து நிக்க முடியாது. அதுவும் இந்த விளம்பரம் இங்க எழுதியிருக்கிறது கறுப்பு கலர் எதுவும் எனக்கு பிடிக்கல பயமாருக்கு . எனக்கு மூடநம்பிக்கையெல்லாம் இல்லை வருண் நான் பெரிய சீர்திருத்தவாதியும் இல்லை .ஆனால் எனக்குப் பிறக்கிற குழந்தைக்கு இந்த வீடு ஒரு அடையாளமா இருக்கணும். உன் பேர சொல்லிதான் இந்த வீட்டை அடையாளம் காட்டணும். ஆமாம் இது சுயநலம் தான் என் குழந்தையோட அடையாளம் எனக்கு முக்கியம். நீ எப்படியாவது இந்த விளம்பரத்த அழிச்சிட்டு என்கிட்ட பேசு , இல்லைன்னா வேற வீட்டுக்கு வாடகைக்குப் போயிடுவோம்.அதுவும் இல்லேன்னா எங்க வீட்ல கொண்டுப்போய் விட்டுடு நான் அவுங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாவது அங்க இருந்துக்றேன் அதுவரைக்கும் எனகிட்டபேசாத “என அழுதுகொண்டே சொல்லிவிட்டு சடாரெனத்திரும்பாமல் எழுந்திருக்க முடியாமல் திணறிக்கொண்டு எழுந்து அமர்ந்து பின் திரும்பிப் படுத்துக்கொண்டாள் தாரணி.சடாரென திரும்பக்கூடாது வயிற்றில் பிள்ளைக்குத் தொப்புள் கொடி சுற்றிவிடும் அதனால் எழுந்தமர்ந்து பின் திரும்ப வேண்டும் என ரோசாவதி சொல்லியிருந்தாள்.
அழுதுகொண்டே தூங்கிப்போனவள் அவளறியாமல் கைகளை வருண்மேல் போட்டுக்கொண்டு அசந்து தூங்கினாள். அவளை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தவன் முகத்தில் விழுந்திருந்த முடிக்கற்றைகளை நகர்த்திவிட்டு நெற்றில் அழுத்தமாக இதழ் பதித்தான். தனக்காக வீட்டை விட்டுப் படிப்பைவிட்டு சுகங்களை விட்டு தன்னோடு வந்தவளை எண்ணிப் பெருமையாக இருந்தது. இந்தக்காலத்தில் அனைவரும் தான் காதலிக்கிறார்கள் எத்தனை காதல் திருமணத்தில் முடிந்து சுகதுக்கங்களில் கூடவே நிற்கிறது? அதுவும் தாரணியின் அழகுக்கு நல்ல வசதியான மாப்பிள்ளை எளிதாகக்கிடைத்திருக்கும் ஏன் அவளது அத்தை மகனே நல்ல சம்பளத்தில் நல்ல வேலையில் இருப்பவன். அவனை ஒதுக்கிவைத்து நல்ல வசதியான வாழ்க்கையை இழந்து தன்னை மணந்துகொண்டவள். இதுவரை எதுவும் அவனிடம் அழுதுகொண்டு இப்படிப் பிடிவாதமாகக் கேட்டதில்லை . அவனுக்காக எதையும் பொறுத்துக்கொள்வாள். ஏன் இந்த விசயத்தில் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாள், சரி அம்மாவிடம் போய் இதைப்பத்தி ஆலோசிப்போம் என நினைத்தவன் எழுந்து கடைக்குச்சென்றான்.
“என்னடா வருணு நல்லாதான உள்ளே போனீங்க! ஏன் மூஞ்சி இப்படி சொணக்கமா இருக்கு? என்று ரோசாவதி கேட்டது தான் தாமதம், தாரணி தன்னிடம் கேட்ட அனைத்தையும் அம்மாவிடம் கடகடவென ஒப்பித்துவிட்டு இப்பொழுது என்ன செய்வது என்பது போல அவளைப்பார்த்தான். ”ஆமாண்டா இந்தப் பொண்ணு கடைக்கு வந்தாலும் அந்த விளம்பரத்தையே தாண்டா வெறிக்க வெறிச்சுப் பாக்குது . பாவம் புள்ளைதாட்சி பொண்ணு முதல்ல ஒண்ணுதான் தங்காம போயிட்டு இதையாவது நல்லபடியா பெத்தெடுக்கணும் அதுக்குள்ள இந்தப்பொண்ணு ஏன் இப்படி மனசுல எதையாவது போட்டு பெணாத்திட்டு இருக்கு. சரி வருணு நீ உன் முதலாளிக்கிட்ட பிரசவத்துக்குபணம் கேட்ருக்கேன்னு சொன்னீயே, அதைவாங்கி டவுன்ல்ல விளம்பரக்காரனுக்கு குத்தகை பணத்தை கழிச்சிவிட்டுடு. நான் அடுத்த மாசம் சுய உதவிக்குழுல பணம் கேட்ருக்கேன் அதவச்சி நாம பிரசவ செலவ சமாளிச்சிக்கலாம். அதுவும் சாமி புண்ணியத்துல சுகப்பிரசவம் நடந்தா குறைச்ச செலவுல பிரசவம் முடிஞ்சிடும். அந்தப் பொண்ணுக்கு என்ன கலரு இஷ்டமோ அதை வாங்கி பெயிண்ட் அடிச்சி விட்டுருடா. உன்னை நம்பி வந்துட்டு. எந்தக் கஷ்டம் வந்தாலும் முகத்துல சொணக்கமே காட்டுனதுல்ல. மகராசி சிரிச்ச மூஞ்சா பொழுதானைக்கும் வீட்டைச் சுத்தி சுத்தி வருவா. போயி அவகிட்ட சொல்லு. வயித்துல புள்ளையவச்சிகிட்டு இதுமாதிரி கவலப்பட்டுட்டு கிடக்காம எந்திரிச்சி முகம் கழுவிட்டு விளக்கேத்தி சாமி கும்பிடச் சொல்லு அடுத்தவராம் பெயிண்ட் அடிச்சிரலாம்“ என்றவளை நெகிழ்ச்சியாகப் பார்த்தபடியே நகர்ந்தான் வருண். அப்பா இறந்ததற்குப் பின்னர் எந்தச் சூழலிலும் பணத்தை எளிதான விசயங்களுக்காக இழக்காத அம்மா, மருமகளுக்காக நல்ல வருமானத்தை விட்டுக்கொடுத்தது மிகப்பெரிய விசயமாகப்பட்டது. மருமகள்களிடம் அவ்வளவு சுமுகமான உறவை எப்பொழுதுமே பேணியதில்லை ரோசாவதி. ஆனால் அவளுக்குத் தன்மீது உள்ள அதிகப்பிரியம் தனது மனைவியின் மீதும் வந்ததுகுறித்து உள்ளுக்குள் எதுவோ இனிப்பாகப் பொங்கிக்கொண்டு வந்தது.
இன்று கடையில் கூட்டமே இல்லாததால் சீக்கிரமாகவே வருண் சாப்பாட்டுக்கூடையைப் பிரித்துவைத்துச் சாப்பிட அமர்ந்தான். கை சாப்பாட்டை அள்ளி வாயில். வைத்தாலும் மனம் ஏதேதோ சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தது. முதலாளியிடம் பிரசவத்திற்காகப் பணம் கேட்டதும் அவரும் அடுத்தவராம் தந்துவிடுவதாகச் சொல்லியிருந்தார். அதற்குள் நேற்று அந்த விளம்பரக்காரனைப் பார்த்துவிட்டு அந்த விளம்பரத்தை அழிக்கப்போகிறேன் என்று சொன்னதுமே முந்தைய குத்தகையைவிட இந்தவருடத்திற்கு அதிகப் பணம் தருவதாகவும் இன்னும் ஐந்து வருடங்கள் ஒப்பந்தம் போட்டுக்கொள்வதாகவும் ஒப்பந்தம் முடிவதற்குள் நிபந்தனையை மீறுவதால் ஒண்ணரை மடங்கு அதிகம் பணம் அதிகமாகத் திருப்பித்தரவேண்டும் எனச் சொல்லியிருந்தான். அது எவ்வளவாக இருந்தாலென்ன தூக்கி மூஞ்சியில் எறிந்துவிட வேண்டும். இப்பொழுது தாரணியை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான் வருணுக்கு முதல் கடமையாகப்பட்டது. அலைபேசியில் ”உனக்காகப் பொறந்தேனே, எனதழகா!” பாடல் ஒலித்து அழைத்தது. இந்தப் பாடலை, தாரணி தான் வருணுக்கு காலர்டியூனா வைத்துக் கொடுத்திருந்தாள். அலைப்பேசியை எடுத்து “சொல்லும்மா இப்பதான் சாப்பிட்டு இருக்கேன்” எனச் சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே, ”டேய் வருணு சீக்கிரம் பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டு வாடா. தாரணிக்கு பனிக்குடம் உடைஞ்சிட்டுன்னு நினைக்கிறேன். பக்கத்தூட்டு நர்ஸம்மா ஆப்பரேசனாதான் இருக்கும்னு சொல்லுது. நான் குமாரோட கார்ல தாரணியக்கூட்டிட்டு ஆஸ்பத்திரி வந்துடுறேன். நான் ஏற்பாடு செஞ்ச பணம் இன்னம் கையில வரல. போனவாரம் சீட்டுப்பணம் எடுத்தது இருபதாயிரம் இருக்கு. ஒரு லெட்சத்து மேல ஆகும்போலப்பா. உங்கண்ணன்களுக்கு போன் பண்ணேன் கைய விரிச்சிட்டானுங்க. முதலாளி கையில கால்ல விழுந்தாவது பணத்தை வாங்கிட்டு சீக்கிரம் ஆஸ்பத்திரி வந்துடு”என பதற்றமாகச் சொல்லிவிட்டு பதிலைக்கூட எதிர்பார்க்காமல் அலைப்பேசியை வைத்துவிட்டாள் ரோசாவதி.
கேரியர் அடுக்குகளை அப்படியே எடுத்து மூடக்கூட இல்லாமல் டிபன்பையில் எடுத்துப்போட்டவன், ஓடிச்சென்று முதலாளி அறையைப்பார்த்தவன் அங்கு முதலாளி இல்லாதது குறித்து பியூனிடம் விசாரித்த பொழுது, அவர் யாரிடமும் எதுவும் சொல்லாமல் நாளை தான் வருவேன் எனச்சொல்லிச்சென்றாக கூறினான். அலைபேசியை எடுத்து அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்தான். இருமுறை முழுதாக அழைப்பு சென்று இணைப்பு துண்டிக்கப்பட்டது. மூன்றாம் முறை அலைப்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக பதிவுசெய்யப்பட்டக்குரல் சொல்லிக்கொண்டிருக்க, வருணுக்கு தலைச்சுற்றியது. பக்கத்திலிருக்கும் சுவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். இப்படி ஆகுமென அவன் நினைத்தே பார்க்கவில்லை. எல்லாம் சரியாக இருப்பதாக, நடப்பதாகத்தான் அவன் நம்பிக்கொண்டிருந்தான். தாரணியின் தள்ளிய வயிறும் அதைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு படபடக்கும் அவளது சோர்வான விழிகளும் வருணுக்கு கண்முன்னே வந்து போயிற்று. கண்களிலிருந்து நீர் வழிய அப்படியே சுவரோரம் சரிந்து அமர்ந்து வாய்விட்டு அலறினான். கதறிக்கொண்டே நிமிர்ந்தவன் கைகளில் பிசுபிசுவென சுவரில் ஒட்டியிருந்த வர்ணப்பூச்சு காயாமல் ஒட்டியது.அதைச் சிறிது நேரம் அப்படியே பார்த்தவன் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக விளம்பரக்காரனின் வீட்டை நோக்கி விரைந்தான். அவனிடம் சுவரை மறு ஐந்து வருடத்திற்குக் குத்தகைக்கு விளம்பரம் வரைய ஒப்புக்கொண்டு பணத்தை வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்தவனுக்கு அப்போதைக்கு உயிர்பிழைத்தலே ஆசையைவிடப் பெரிதாகத் தோன்றியது. இல்லாதவர்கள் ஆசைகளோட மல்லுக்கட்டித் தோற்கப்பழகியவர்கள் என நினைத்துக்கொண்டே இருக்கையில் எதோ ஒரு பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்தத் திசைநோக்கி அவனுடைய கால்கள் தானாகவே ஓடின.
எழுதியவர்
-
வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவிலிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி இராமலிங்கம், இளங்கலை உயிர்ம வேதியியலில் பட்டம் பெற்றவர்.
பல்வேறு அச்சு / இணைய இதழ்களிலும் கவிதைகளை எழுதி வருபவர். ‘நெய்தல்நறுவீ’ எனும் இவரின் கவிதைத் தொகுப்பை கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இதுவரை.
- சிறுகதை11 November 2024விளம்பரம் எழுதிய வீடு
- கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023நெடுந்துணை
- சிறுகதை24 April 2023கைப்புண்
- சிறுகதை28 February 2023வாதை