
கண்களில் கருணையைத் தாங்கியபடி இருக்குமவள் சிரிக்கிறாளா அல்லது தன்னுடைய பலவீனத்தைப் படித்துவிட்ட கர்வத்தில், அதன் அலையின் அளவை உணர்ந்துகொண்டு மௌனமாக இருக்கிறாளா என்ற சந்தேகத்தை மூர்த்திக்கு கொடுத்தபடியே இருந்தது அவளின் அமைதி.
“சனியனே நீ எவ்வளவு பெரிய மயிரா வேணா இரு.. ஆனா நீயென் காலுக்கு கீழ தான்”
கதவை வேகமாகச் சாற்றி வீட்டை விட்டு வெளியே போகிறான்.
அவள் கண்களில் இருந்து கிளம்புகிற நீர்க்கோடுகள் வாசலைக் கடந்து, பிறர் வாய்களைக் கடந்து, அவளை அவளே நேசிக்கத் தொடங்கிய அவளுடைய திறமையின் பெருமைக்கான காலத்தின் முதல் விதையைத் தேடி நீண்டு செல்கிறது. அவளது நீர்க்கோடுகள் அச்சிறிய விதையைக் கண்டெடுக்கும் போது, அதைக் கையிலெடுத்தவள் கண்ணில் வற்றாத அதே ஈரத்தோடு, தான் இருக்கும் இடத்திற்கு கொண்டு வருகிறாள். தன் திருமணத்தின் போது நவதானியங்களை வளர்த்து திருமணமேடையில் வைப்பதற்காகச் சுண்ணாம்பு அடித்து அதன் வனப்பினை இன்னும் இழக்காத ஏழு குட்டி மண்பானைகளுக்குள்ளே சிறு மண் இட்டு தன் திறமையை விதைக்கிறாள்.
நீண்டு நீண்டு ஆரம்பித்த அவள் திறமையின் பயணத்திற்கான முதல் விதை ஒரு நாள் செடியென எட்டிப் பார்க்கிறது. மனைமாட்சி என்று அச்செடிக்கு பெயர் வைக்கிறாள். அந்தப் பெயர் வைத்ததில் இருந்து வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் உள்ள அத்தனை குறளும் ஜெசியின் நினைவில் வந்து வந்து மோத..
“இந்த உலகம் ஆண்களுக்கானது” என்று உதடு பிரித்து அவள் பேசியது, திருமணமாகி அவள் மூர்த்தியின் வீட்டிற்கு போன இந்த இரண்டாவது மாதத்தில்தான்.
மூர்த்தியிடம் இனி பேசுவதில் பலனில்லை என்பதை நிறைய கண்ணீரும், கோரிக்கைகளும் எடுபடாது போன 20 வது நாளிலிருந்து தெரிந்துகொண்ட ஜெசி தன்னை மௌனத்திற்குள் பூட்டிக்கொண்டாள். எந்த சாவிகளும் அவளைத் தேடவில்லை என்பது ஒரு வகை விடுபடலாகவே ஜெசி நினைக்கத் தொடங்கியிருந்தாள். ஆனாலும் காரணமற்று வருகிற கண்ணீர் மட்டும், நம்பிக்கையாகப் பேசி இந்த வாழ்க்கைக்குள் தன்னை இழுத்து வந்த மூர்த்தியின் மீது கோபமாக மாறி ஒரு காட்டாற்றின் வெள்ளமென நிற்காது அவளுக்குள் உருளத் தொடங்கியது.
“நடக்கிறதை எல்லாம் இத்தனை நாளா பார்த்திட்டு தான் இருக்கேன்… நீங்க யாரு கூட வேணும்னாலும் இருங்க இல்லை பேசுங்க. எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.. ஆனா கல்யாணத்துக்கு என்னோட அம்மா போட்ட நகையை மட்டும் என்கிட்ட கொடுத்திடுங்க?”
முதல் முறை மூர்த்தியின் முகம் பார்த்துப் பேசுகிற ஜெசியை நேர்கொள்ள திராணியற்றவனாய், நகைகளை மூர்த்தி திருப்பிக் கொடுக்கவும் , ஜெசி அந்த நகைகளை வாங்கிக் கொண்டவள், அங்கிருந்து கிளம்பத் தயாரானாள்.
“எங்க கிளம்புற. வீட்டை விட்டு நீ வெளிய போயிட்டா.. எல்லாம் சரியாகிடுமா? ஏழு வருஷமா இதே ஏரியால நாங்க எவ்வளவு கௌரவமா இருக்கிறோம்னு தெரியுமா? இப்போ பொட்டிப் படுக்கையோடு கிளம்பிப் போயி.. என்ன பதிலுக்கு பழி வாங்க நினைக்கிற அதானே”
மூர்த்தியின் வார்த்தைகளுக்குப் பதில் சொல்ல மனமற்று, தன் அம்மாவின் முகமாய் மூர்த்தியின் முகமும் இருப்பதை நினைத்து ஜெசி சிரித்தாள். தன்னறைக்குள் ஒன்றாகவும் வெளியில் வேறொன்றாகவும் இருக்கிற மூர்த்தியை என்ன செய்வது என்று தெரியாமல், ஜெசியால் அங்கிருந்து வெளியேறவும் முடியாமல், குடும்பப் பஞ்சாயத்துக்குப் பின், பேசிப் பேசி அதே வீட்டில் இன்னொரு படுக்கையறையைத் தனக்கானதாக ஜெசி மாற்றிக்கொண்டுவிட்டாள். பெரிய ஆசுவாசத்தோடு தான் வளர்த்த செடியை தன் புதிய அறையில் இருக்கிற பால்கனிக்கு மாற்றிக் கொண்டாள். செடியை அங்கு வைத்ததுமே அந்த ஏழு சிறிய மண்பானையும் அளவில் பெரிய அதே நேரத்தில் அந்த பால்கனிக்கு அடக்கமான தொட்டியில் தன்னை உருமாற்றியதை ஜெசி வியப்போடு பார்த்தாள்.
மூர்த்திக்கு மோகம் கொள்ள ஒருத்தி இருக்கிறாள் என்று தெரிந்ததும், திருமணமான மறுநாளே அவனை விட்டு விலகியவளுக்கு போக்கிடம் என்பது அந்த குட்டிப் பானைக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த சிறு உயிர் மட்டும்தான். ஒரு குட்டிச் செடியே தன்னை உருமாற்றத் தொடங்கும்போது.. ‘தான்’ என்ற சுயகேள்வி எழ, அவள் அந்த பசுந்தளிரோடு பேச ஆரம்பிக்கிறாள். மனைமாட்சி வளர ஆரம்பிக்கிறது. மூர்த்தியின் மீது பற்றிக்கொண்டிருந்த ஏமாற்றத்தின் கைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஜெசியிடம் இருந்து விலகுவதை மனைமாட்சிக்கும் சொல்லி வைத்திருந்தாள்.
நிராகரிப்பை மீறி நிலைப்பதற்கான காரணத்தை எல்லா உயிரும் கைக்கொண்டு தானே ஆகவேண்டும் என்பதை ஜெசி தன் அம்மாவிடம் முதன்முதலில் மூர்த்தியின் நடவடிக்கையைப் பற்றி சொன்னபோது, மற்ற பிள்ளைகளைக் காரணம் சொல்லி மூர்த்தியோடே ஒண்டிக்கொள்ளச் சொல்லிவிட்டாள். “ஆம்பளைங்க அப்படி இப்படி தான் இருப்பாங்க.. அனுசரிச்சுப் போ” என்ற குரல் ஜெசியை திறக்க முடியாத இருளுக்கு எடுத்துப் போய்க் கொண்டே இருந்தது. தகப்பன் இல்லாத அந்த வெற்றிடத்தை முழுதாய் உணரத் தொடங்கியவள், அந்த தொட்டிக்குள் வளரும் செடியின் வளர்ச்சிக்கு வளைந்து கொடுக்கப் பழகினாள்.
வளைதலில் மனைமாட்சிக்கு வாழ்விடம் வசப்பட்டது. அதன் வேர்கள் அசுர வேகத்தில் தன்னைப் பரப்பிக்கொள்ளத் துடித்ததையெல்லாம் பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறாள். அந்தச் செடியிலிருந்து முளைக்கும் ஒவ்வோர் இலைக்கும் தன்னை நேசித்த மனிதர்களின் பெயரை வைக்க ஆரம்பித்தாள். முதல் இலைக்கு தன் அப்பாவின் பெயரான கருணாகரன், இரண்டாம் இலைக்கு தன்னை எட்டாம் வகுப்பில் இருந்தே நேசித்த பாலாவின் பெயர், மூன்றாம் இலைக்கு தன்னுடைய தோழி மகேஷ்வரி என வளரும் ஒவ்வொரு இலைக்கும் தன்னைப் பிடித்தவர்களின் பெயரை வைக்கத் தொடங்கினாள். இப்படி இலைகள் பெயர்களாக.. பெயர்களே இலைகளாக அவளுக்குள் வளரத் தொடங்கியதில், தன்னைச் சுத்திகரிக்கும் ஒரு வேலையை ஜெசி கைக்கொள்ள தொடங்கிவிட்டாள்.
ஆம் பால்கனியில் கட்டுக்கடங்காது வளர்க்கிற மனைமாட்சியைப் பக்கத்துவீட்டுப் பெண் பார்த்துப் பிடித்துப்போய் தனக்கும் இந்த செடி வேண்டும் என்றபோது மறுக்காமல் மனைமாட்சியின் ஒரு பாகத்தை ஓடித்துக் கொடுத்தாள். மனைமாட்சியின் முதல் இலைக்குப் பக்கத்து வீட்டு பெண் ஜெசி என்று பெயர் வைக்க, ஜெசி இன்னொரு மனைக்குள் விதையானாள். ஜெசி அந்த செடியை ஓடித்துக் கொடுத்த பிறகு, செடியின் வளர்ச்சியில் வேகம் கூடியது.
இப்படி பால்கனியவே நிறைச்சிட்ட, பின்ன நான் இங்க எப்படி உட்கார்ந்து உன் கூட பேசுறது” என்று சொல்லிவிட்டுத் தூங்கப் போன ஜெசிக்கு மறுநாள் காலையில் ஆச்சரியம் காத்திருந்தது. உட்காருவதற்கான இடத்தை மனைமாட்சியே அதன் இலைகளைக் கொண்டு கிளைகளை வளைத்து ஒரு நாற்காலியாக்கி வைத்திருந்தது. ஆச்சரியம் தாங்காதவளாய், பக்கத்துவீட்டுப் பெண்ணின் பால்கனி மனைமாட்சியை எட்டிப் பார்க்கிறாள்.
“கண்ணகி… உன் மனைமாட்சி எப்படி டி இருக்கு?” என்ற ஜெசியின் குரலுக்கு..
“இருக்கு இருக்கு. மாதவி வீட்டுக்கு போயிட்டு அப்போ அப்போ வந்துட்டுப் போன கோவலன், இனி இங்க வரவே போறது இல்லைன்னு தெரியும்போது என்னோட நெஞ்சுக்குள்ள ஒண்ணு உருண்டுச்சே.. கனமா ஒண்ணு அது என்னடி.. ஆங்.. துக்கம்.. அப்படி இருக்கு என் மனைமாட்சி”
“அச்சோ. அப்போ இன்னொரு இலை கூட உன்னோட மனைமாட்சில இன்னும் வளரலயா ?”
“எங்க, உன்கிட்ட இருந்திருந்தா.. இந்நேரம் நீ 108 வது பேரை உன்னோட மனைமாட்சிக்கு வச்சிருப்ப.. தேவையில்லாம நான் உன் மனைமாட்சிய வேஸ்ட் பண்ணிட்டேன்”
கண்ணகி கண்ணீர் சிந்த.. பால்கனியிலிருந்து ஜெசியிடம் பேசுகிறவளை முதலில் சமாதானம் செய்தது கண்ணகியின் வீட்டில் வளர்கிற மனைமாட்சி.. அவளது கண்ணீர்த்துளி அந்த குட்டிப் பானைக்குள் விழும்போது மனைமாட்சி உயிர்க்கத் தொடங்கியதை கண்ணகி கவனித்து ஜெசியிடம் சொல்ல.. இருவரும் அவரவர் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது மூர்த்திக்கு அவன் குணத்தை ஒத்த அதே போன்ற ஆண்களின் வேறு வேறு பெயர் என்பது தெளிவாகி இருந்தது இருவருக்கும்.
ஜெசி,கண்ணகி என்ற இருவர் நால்வராக.. பின் நால்வர் ஏழு பேராக.. மூர்த்தியைப் போல ஏழு முகங்களுக்கான மனைமாட்சி அந்த அப்பார்ட்மெண்ட்டின் தட்பவெட்பத்தையே மாற்றும் அளவிற்கு வேகமாக வளரத் தொடங்கியது. ஏழு குடும்பங்கள் இருக்கிற அந்த குடியிருப்பு ஒரு அடர்வனமாக மாறுவதைத் தூரத்திலிருந்து பார்க்கிற கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பது போல அவர்களுக்குள் கதைகள், கிளைக் கதைகள், பெயர்கள், பிழைத்திருத்தல் என பால்கனி வழியே ஜெசி, கண்ணகி, பூங்குழலி, நல்லதங்காள், குச்சானி, மூத்தாள், இசக்கி என்று ஏழு பேரும் கதை பேசுதலின் வழியே.. ஒவ்வொருவர் பால்கனிச் செடியிலும் ஒவ்வொரு பெயர் நீண்டுகொண்டே போனது.
ஒருமுறை கண்ணகிதான் ஒடித்தாலும் வேகமாக வளர்கிற இந்த மனைமாட்சியை மற்ற பெண்களுக்குச் சந்தைப்படுத்த யோசனை சொன்னாள். அதுமட்டுமின்றி அந்தச் செடி தங்கள் வீட்டிற்கு வந்தப் பிறகு, பிடித்தவர்களின் கரங்கள் தங்கள் மீது எப்போதும் இருப்பதை போன்று உணர்வதாக ஆறு பெண்களும் மாறாமல் சொன்னதை ஜெசி ஆச்சரியம் போலக் கேட்டுக்கொண்டாள். அதன் அடிப்படையிலே மனைமாட்சியைச் சந்தைப்படுத்த யோசிக்கத் தொடங்கினாள். ஜெசியை மணந்தவன், மாதவி வீட்டிலே தங்கிவிட்ட கோவலன். மூர்த்தி திரும்பி வரப் போவதில்லை. பசலை நோய் பீடிக்கத் தெரிந்துகொண்ட காமம் என்று ஜெசிக்கு எதுவும் இல்லை. அது ஜெசிக்கு பலமாகவும் இருந்தது.
மற்ற ஆறு தோழிகள் உதவியோடு You tube வழியாக தெரிந்துகொண்ட தகவல்களின்படி.. மற்ற ஆறு பெண்களின் ஒத்துழைப்பும், விசாரிப்புகளின் வழியாகவும் வீட்டில் இருந்து E-COMMERCE என்னும் வைப்பின் வழியாக மனைமாட்சியை amazon, flip kart, meesho, zepto, instamart போன்ற தளங்களில் சந்தைப்படுத்துவதற்கான எல்லா வேலைகளையும் தொடங்கி, GSTக்கான சர்டிபிகேட் முதலாக எல்லாம் கொடுத்து, பேக்கிங் மெடீரியல், கொரியர் அனுப்பவதற்கான ஆட்கள் முதலாக எல்லாம் தயாராக, மனைமாட்சியை சந்தைப்படுத்த வேண்டி அதற்கான சரியான key word ஆக.. ஆண்களுக்கு இந்தச் செடிகள் கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதும் தெரிந்தாலும் மனைமாட்சியின் வளர்ச்சி ஆண்களுக்குப் புலப்படப் போவதில்லை என்பதும் தகவலாக, செடிக்கான விளம்பரக் காலத்தில் கொடுக்க கண்ணகிதான் இந்த யோசனையைச் சொன்னாள்.
முதல்நாள் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வந்த மனைமாட்சிக்கு ஒரு பார்வையாளர்கள் கூட அந்த தளங்களில் வரவில்லை. இருந்தாலும் பொதுச் சந்தைக்குள் மனைமாட்சியை வைக்க முடிந்த சாதனையை நினைத்து அன்றைய நாள் இரவு, ஏழு பெண்களும் நன்றாகத் தூங்கிப் போனதை, மறுநாள் விடியலில் அந்த ஏழு பேரும் செடிகளோடு பேசும்போது தெரிந்துகொண்டனர்.
அடுத்தநாள் இந்தச் செடி பற்றிய தேடல் தொடங்கி இருப்பதும், எல்லா நாடுகளில் இருந்தும் மனைமாட்சிக்கான பெண் பார்வையாளர்களை அந்த செடி பெற்று இருப்பது. தெரியவந்த போது அந்த ஏழு பெண்களும் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க, அவர்களின் மனைமாட்சியும் அவர்கள் சந்தோஷத்தில் சேர்ந்துகொண்டது. மூன்றாவது நாளில், மனைமாட்சிக்கு முதல் ஆன்லைன் ஆர்டர் சூர்ப்பனகை என்ற பெயரில் வந்ததும், ஏழு பேருக்கும் கட்டுக்கடங்காத சந்தோஷம். ஆர்டரைப் பேக் பண்ணி, டிஸ்பாட்ச் செய்து அது சூர்ப்பனகையின் கரங்களை அடையும்வரை, ஏழு பெண்களின் காலமும் ஒரு கல்லைப் போலவே உறைந்திருந்தது.
சூர்ப்பனகையைப் போய் சேர்ந்த மனைமாட்சி எப்படி இருக்கிறது என்றும் அதில் ஓர் இலையாவது துளிர்த்ததா என்றும் கேள்விகள் எழ, ஒரு காலை சாப விமோட்சனத்திற்கானது என்பதை அந்த ஏழு பெண்களும் உணர்ந்தனர்.
சூர்ப்பனகை மனைமாட்சிக்கு 5 ஸ்டார் நட்சத்திரக் குறிகள் இட்டு தான் ஆர்டர் செய்த ஆன்லைன் தளத்தில் மனைமாட்சிக்கு ரீவ்யூ எழுதி இருந்தாள். அது “என் மனைமாட்சியில் இப்போது எட்டாவது இலை துளிர்த்திருக்கிறது. அதன் பெயர் வித்யுத்.. நான் என் செடியிலிருந்து ஒரு பகுதியை எடுத்து என் பாட்டி தடாகைக்குக் கொடுத்திருக்கிறேன். நன்றி பெண்களே. இன்னும் வளர்க உங்கள் மனைமாட்சி “ என்று எழுதிய கமெண்ட்டின் கீழ் நிறைய பெண்கள் தங்களுக்கும் மனைமாட்சி வேண்டும் என்றும் பேசத் தொடங்கியதின் விளைவாக, மனைமாட்சி இப்போது பெரிய பெரிய நகரங்களில் தன் கிளைகளைத் தொடங்கி இருக்கிறது.
எழுதியவர்

- மதுரை மாநகரத்தைச் சார்ந்தவர் ரேவா. இதுவரை 'கவனிக்க மறந்த சொல், எனும் கவிதைத் தொகுப்பு நூலும், ' அலை விளையாட்டு' தலைப்பிலான நூலும் இவரின் எழுத்தாக்கத்தில் வெளியாகிய நூல்களாகும்.
இதுவரை.
கதைகள் சிறப்பிதழ் 202523 January 20255 ஸ்டார் ரேட்டிங்க்
மற்றுமொரு பரிணாமத்தை கண்டிருக்கும் ரேவாவிற்கு வாழ்த்துக்கள்
Thank you so much
வாழ்த்துகள் ரேவா …. பெரிய தொடக்கம். மகிழ்ச்சி … கவிஞர் டூ கதையாசிரியர்.
Thank you so much
Great work
Thank u 🙂