25 July 2024

ட்டோட்டில்  இடைவிடாது மழை விழுகிற சத்தம் கடுகு பொரிகிறது போலக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு வாரமாக இப்படித்தான், வானம் நிறுத்தாமல் பெய்கிறது. மூன்று நாள்களாக மின்சாரமும் தடை பட்டுக்கிடக்கிறது.

இதுவரை கணினியின் விசைப்பலகையை மென்மையாகத் தட்டுவதாக இசைத்துக் கொண்டிருந்த மழை, தூரத்தில்  மரம் முறிகிற ஓசையுடன் சடசடவென அதிர்ந்து ஒற்றை இடி முழக்கத்துடன் நின்று விட, அறைக்குள் திடுமெனப் பிரவேசித்த நிசப்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், நான் என் காதுகளை மூடிமூடித் திறக்கிறேன்.

சற்றைக்குள், திரும்பவும் மழை ஆரம்பிக்கிறது. இரவின் அந்தகாரம் ஒரு பறவையின் முட்டை போல என்னை அறைக்குள் பொதிந்திருக்க, லட்சம் அலகுகள் கொண்ட ராட்சச பறவையொன்று ஓட்டினைக் கொத்துவதாக மழை பெய்து கொண்டே  இருக்கிறது. நான் ஒரு உருப்பெறாத பறவையின் கருவைப்போல இவ்வறையினுள் நெளிந்து கொண்டிருக்கிறேன்.

நான் அதிதி… இது எங்களது புராதன வீடு. இங்கு நானும் எனது பாட்டியும் மட்டுமே வசித்துக் கொண்டிருந்தோம். இப்போதும் பாட்டி இங்குதான் என்னுடன் இருக்கிறார். ஆனால், இன்று காலையில் அவர் உறக்கத்திலிருந்து எழவே இல்லை. நான் அவரை எவ்வளவோ உலுக்கிப் பார்த்தேன். அவர் அதிகாலையில் துயிலிலேயே இறந்திருக்க வேண்டும்.

இவ்வீடு புறநகர்ப் பகுதியில் இருக்கிறது. இங்கு ஓர் உயிரற்ற சடலத்துடன் இரு கால்களும் செயலற்ற ஒரு இளம்பெண் வெள்ளநீரில் சிக்குண்டு இருக்கிறாள் என்பதை நான் எவ்விதம் இவ்வுலகிற்கு அறிவிப்பது?

இந்த இரவுக்கு, இதோ எஞ்சியிருக்கிற இந்த இரண்டு மெழுகுவர்த்திகளின் நீளம் மட்டுமே இருந்தாக வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு வாரமாகவே, மழை மாவட்டமெங்கும் பரவலாகப் பெய்து கொண்டிருப்பதை நாங்கள் தொலைக்காட்சி மூலமாக அறிந்தோம். பாலங்கள் நீரில் அடித்துக்கொண்டு போவதையும், வீடுகள், கடைகள் என்று வெள்ளநீர் புகுவதையும் பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தோம். அது எங்கள் பகுதிக்கு நேராது என்று எப்படி நம்பினோம் என்று தெரியவில்லை. எந்த விதமான முன்னேற்பாடுகளுமின்றி நாங்கள் இங்கு இப்போது அடைபட்டுவிட்டோம்.

இது அணைபிடிப்புப் பகுதியாக இருப்பதால் எந்நேரமும் வெள்ளநீர் சூழ்ந்து விடும் அபாயம் இங்குமுண்டு. ஏற்கனவே மக்களை மேடான பகுதிகளுக்குச் செல்லும்படி அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாட்டி இதுபற்றி  மிகவும் விசனம் கொண்டிருந்தார். ஆனால், மழை வெகுவிரைவில் நின்று விடும் என்று அவர் திடமாக நம்பினார்.

ஆனால், நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆயிற்று. மின்சாரம் தடைப்பட்டுவிட்டதால், வெளியுலகு பற்றி தெரியவில்லை. பகலெல்லாம் மீட்புப்பணி ஹெலிகாப்டர்கள் விர் விர்ரென்று தாழப்பறப்பதை அறிகிறேன். ஆனால் இந்தச் சக்கர நாற்காலியுடன் இத்தனை செங்குத்தான மரப்படிகளில்  ஏறிச்சென்று அவர்களுக்குத் தகவல் சொல்லுவது எப்படியென்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

பாட்டி என்னை இப்படி ஒரு இக்கட்டில் விட்டுச் செல்வோம் என்று கண்டிப்பாக யோசித்திருக்க மாட்டார். எல்லாம் விரைவில் சீராகிவிடும் என்று  நம்புவது அப்படியொன்றும் பெரிய குற்றமும் இல்லை. வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றால் ஒருவேளை நான் யார் கண்ணிலாவது படலாம். இந்த நாற்காலியிலிருந்து எக்கி திறக்க முடியாத அளவு உயரத்தில் இந்தப் பழங்கால வீட்டின்  நாதங்கி இருப்பதை ஏற்கனவே பார்த்துவிட்டேன்.

நாங்கள் நேற்று உறங்கச் செல்லுகிறபோது, இவ்வளவு நீர் எங்கள் வீட்டைச் சுற்றி இருந்திருக்கவில்லை. காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டது தவறாகப் போயிற்று. இப்போது, ஏதேனும் உதவிகள் வரும்வரையில் நானும், எனது பாட்டியைப் போலவே, விரைவில் எல்லாம் சீராகி விடும் என்று நம்ப ஆரம்பித்துவிட்டேன். உண்மையில் நானோ, பாட்டியோ இந்த பழகிய சுவர்களின் பாதுகாப்பான குமிழை விட்டு வெளியேறத் துளியும் விரும்பவில்லை…

பாட்டியின் உடல் சில்லிட்டிருப்பதைப் பார்த்த சில மணிநேரங்கள், செய்வதறியாது அந்த அறைக்குள்ளே எனது சக்கரநாற்காலியில் அமர்ந்தபடி சுற்றிச்சுற்றி வந்தேன்.

பாட்டி இறந்த துக்கத்தைவிடவும் அதிகாலையில் சங்கடம் தந்த அடிவயிற்றை அவளின் துணையின்றி எப்படிச் சமாளிப்பது என்கிற கவலைதான் என்னை முதலில் சூழ்ந்தது.

இயற்கை அழைப்புக்குச் செவி கொடுக்காமல் பல மணிநேரங்கள் கூட என்னால் இருக்க முடியும். எனது சிறுநீரகங்கள் சிறுவயது முதலே அவ்வாறு பழக்கப்பட்டிருக்கின்றன.

லாமார்க்கின் கோட்பாடு  சொல்கிறபடி, ‘ஒரு உறுப்பை பயன்படுத்தும்போது அது நன்கு வளர்ச்சியடைந்து வலிமை பெறுகின்றது’. அவ்வாறெனில், நெடுங்காலமாக இன்னொருவர் வந்து அழைத்துச் செல்லும்வரை காத்திருக்கப் பழகியிருக்கும் எனது சிறுநீரகங்கள் வயிற்றின் கொள்ளளவில் பாதியாவது உப்பியிருக்குமல்லவா? ஆனால் என் வயிறு குழிந்திருப்பதைப் பார்த்தால் வயிற்றிற்குள் அவயங்கள் இருக்கின்றனவா இல்லையா என்றே சந்தேகம் வருகிறது.

அதே கோட்பாட்டின் பிற்பகுதியில் இருக்கிற மற்றொரு விடயம் உண்மை என்பதால் கோட்பாட்டை மறுப்பதற்கில்லை. ‘ஒரு உறுப்பை, நீண்ட காலம் பயன்படுத்தாதபோது அது படிப்படியாக குன்றல் அடைகிறது.’ நான் குனிந்து என் கால்களைப் பார்த்துக் கொள்கிறேன்.

அணிந்திருந்த இரவாடையின் கீழ்ப்பகுதி ஜன்னல் வழி வந்த காற்றிலாட, என் சக்கர நாற்காலியில்  நான் என்னை ஒரு ஜீனியைப்போல உணர்கிறேன். விளக்கைத் தேய்க்க உள்ளிருந்து வெளிவரும் சர்வ வல்லமை பொருந்திய ஜீனி, அகண்டதோள்களுடன், இடுப்பிலிருந்து குறுகிக் கொண்டே வந்து விளக்கில் சிறைப்பட்டிருக்கிற ஜீனி!

சக்கரத்தைத் தேய்த்துக் கொண்டே கண்ணாடி முன்னின்று “ஆலம்பனா… இதோ உங்கள் அடிமை”, என்று ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்தில் பூதமாக வரும் அசோகன்  சொல்லுவாரல்லவா, அதுபோல சொல்லிப் பார்க்கிறேன். அந்தக் காட்சியில், அவருக்கு ஒரு விசித்திரமான தொங்கு மீசை இருக்கும். சுருள் சுருளாக இடுப்பு வரையில் கிடக்கிற என் மயிர் கற்றையில் இரண்டை எடுத்து மீசை போல வைத்துப் பார்க்கிறேன். சிரிப்பு வந்து விட்டது… பாட்டி இறந்திருக்கும் போது நான் இப்படிச் சிரிக்கலாமோ?

ஒருவர் பிறக்கும் போது தான் அழுது கொண்டு பிறக்கிறார். ஒருவேளை சிரித்துக் கொண்டே பிறந்தால் அழுது கொண்டே இறப்பது என்று இந்த  வட்டம் ஒரு முழுமை அடையுமல்லவா? குழந்தைகள் பிறக்கும் போது சிரித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். கண் கூட திறவாது, கலகலவென விடாமல் சிரிக்கிற ஒரு பச்சிளம் பிள்ளையை கற்பனைத்து பார்த்த எனக்கு மறுபடியும் சிரிப்பு வந்துவிட்டது. அடக்க மாட்டாமல் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.

நிறைந்திருந்த எனது நீர்ப்பை வயிற்றின் சுவரில் எங்கோ தலையை இடித்துக் கொண்டுவிட்டது என்று நினைக்கிறேன். வயிறு வலிக்கத் தொடங்கிவிட்டது. நான் கழிவறையைப் பார்க்கிறேன். கழிவறைக்குச் செல்லும் பாதை தான் ஒரு ஊனமுற்றவரது உலகின் கல்வாரி. நினைவு தெரிந்த நாள் முதலே நான் இந்தச் சிலுவையைச் சுமந்து கொண்டு இந்தப் பாதையில் எத்தனை லட்சம் முறை போய் வந்திருக்கிறேன்.

என்னால் முடிந்த அளவு என் உடல் பாரத்தை கைகளுக்குக் கொடுத்து நாற்காலியிலிருந்து கழிவறைக் கோப்பைக்கு தாவுகிறேன். ஒரு குரங்கு ஒரு கிளையிலிருந்து மற்றொன்றுக்குத் தாவுவது போல.. அந்த அதிர்வைத் தாங்க இயலாத நுனிக்கிளை போல எனது சக்கர நாற்காலி முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டிருக்கிறது.

ஏதோ பாரம் நீங்கினாற்போல இருக்கிறது. பாட்டியின் அறைக்குத் திரும்புகிறேன். முன்னதாக, அவரது உயிரற்ற உடலை அவரது கட்டிலில் பிணைத்து வைத்து விட்டேன். வீட்டினைச் சூழ்ந்திருக்கிற நீரின் அளவைப் பார்த்தால், இன்னும் சற்று நேரத்தில் எங்கள் வீட்டினுள்  வெள்ள நீர் புகுந்து விடும்.நீரில் பாட்டியின் சடலம் அங்குமிங்கும் புரண்டு கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டி அவளைக் கட்டிலோடு பிணைத்திருக்கிறேன்.

உண்மையில், பாட்டி உயிருடன் இருந்திருந்தால் இப்படிப் பிணைக்கப்படுவதை விரும்பி இருக்கவே மாட்டாள். உறங்கும்போதுகூட இரு கைகளையும் விரித்த வண்ணமாய் தான் இருப்பாள் பாட்டி. எந்தப் பந்தத்திற்குள்ளும் பிணைந்து கிடப்பது அவளுக்குப் பிடிக்காது. தனது மங்கைப் பருவத்தில் கணவனின் ஒழுக்கஹீனத்தை சகித்துக் கொண்டு வாழச் சம்மதியாது அந்த உறவைத் தூக்கி எறிந்து கைப்பிள்ளைக்காரியாக தெருவில் நின்ற பொழுதிலிருந்து அவள் யாரையும் சார்ந்து வாழவில்லை.

ஆனால், அவள் வளர்ப்பிலிருந்து வந்த என் அம்மா ஒரு ஒட்டுண்ணியைப்போலப் பாட்டியின் தலையில் சொகுசாக வாசம் செய்தாள். தனது திருமணத்திற்குப் பிறகு என் அப்பாவின் தலைக்கு இடம் மாறியிருந்தாள். அண்ணி வந்த பிறகு, அப்பாவின் தலைக்கும், அண்ணனின் தலைக்கும் என்று  தன் அதிகாரத்தின் எல்லையை விஸ்தரிக்க வேண்டி மாற்றி மாற்றி நகர்ந்து கொண்டிருக்கிறாள்.

ஒட்டுண்ணிகள் எல்லாக் காலத்திலும் எப்படியும் உயிர் பிழைத்துவிடும். அப்படிப் பார்த்தால் நானும் ஒரு ஒட்டுண்ணிதான். என் தேவைகளுக்காக அடுத்தவரை எப்போதும் சார்ந்திருக்கிறேன். ஆனால் எனக்கு இதில் துளியும் உடன்பாடு இல்லை. அளவு கடந்த கரிசனம் வரமாகக் கிடைக்கிற ஒரு சாபம். நான் அதிலிருந்து எப்போதும் விடுபடவே விரும்புகிறேன். இவர்கள் தரும் சலுகைகளின் புளித்த வாசனை எனக்கு ஒவ்வாமையைத் தருகிறது. நான் எனக்கான உணவை, நானே பயிரிட்டு அறுவடை செய்ய நினைக்கிறேன்.

நகரத்தில் வசிக்கும் என் குடும்பத்தை நீங்கி எந்த வசதிகளும் இல்லாத இந்தக் கிராமத்துக்கு வந்து பல வருடங்களாயிற்று. பள்ளிக் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி வகுப்புக்களை இணையத்தில் நடத்துகிறேன். என் தேவைக்கும் போக வங்கிக்கணக்கில் இருப்பு வைத்துள்ளேன்.

பெரும்பாலும் எனக்கு வெளியே சென்று வரப் பிடிப்பதில்லை. கடற்கரை எனக்கு மிகவும் பிடித்த இடம். ஆனால், என் சக்கரங்கள் என்னை அலைகளின் பக்கத்தில் செல்ல அனுமதியாது. சில சமயம் பாட்டி மட்டும் தனியாகக் கோவிலுக்கு, பூங்காவுக்கு என்று வெளியில் சென்று வருவார். அதுபற்றி எந்தக் குற்ற உணர்வும் கொள்ளமாட்டார். அதுவே எனக்கும் உவப்பானது. இங்கு நாங்கள் எங்கள் வாழ்வை அவரவர் தான் வாழ்கிறோம்.

வீட்டில் என்றால் இப்படி என்னை தம்முடன் வெளியில் அழைத்துச் செல்ல முடியாததைப்பற்றி விசனப்பட்டே அம்மா அந்த நேரத்தின் இனிமையைக் கெடுத்து விடுவாள். நான் அவர்களது மங்கல நேரத்தில் திடுமெனத்  தோன்றிவிட்ட தும்மலைப் போல இருக்கிறேன்.

எங்கிருந்தும் எப்போதும் வெளியேறிவிட வேண்டும் அல்லது வெளியேற்றி விடுவார்களோ என்கிற உணர்வே எனக்கு மேலோங்குகிறது. ஜன்னலின் விளிம்பில் முடிந்த மட்டும் எட்டிப்பார்த்தபொழுது, வாசலின் படிகளெல்லாம் நீரில் மூழ்கிவிட்டிருந்தது தெரிகிறது. எனக்குத் தெரிந்து விட்டது.. மழை ஏதோ ஒரு தீர்மானத்துடன் தான் இப்படிப் பேயாய் பெய்கிறது.

மனது கேட்காமல் மெழுகுவர்த்தியுடன் மறுபடியும் பாட்டியின் அறைக்குச் செல்கிறேன். அவளது இரவாடையை கால்களின் இடையில் இழுத்து ஒருசேர ஊக்கு குத்தி விடுகிறபோது எனக்கு கிளியோபாட்ராவின் நினைவு வந்து விட்டது. ஆக்டேவியனால் சிறை பிடித்துச் செல்லப்படுவோம் என்று தெரிந்ததும், அவமானத்துக்கு அஞ்சி தற்கொலைக்கு முடிவு செய்தவள் இறப்பின் பின்னும், தான் அதே கம்பீர அழகுடன் திகழ வேண்டுமென்று, தனது அரச உடையை அணிந்து தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டாள். பின்பு கொடிய நஞ்சுள்ள நாகங்களை தனது மார்பில் கடிக்கச் செய்து இறந்தாள் என்று படித்திருக்கிறேன். இறப்பை அவள் எதிர்கொண்ட விதம் எனக்கு பிரமிப்பாயிருக்கும்.

பாட்டியின் உடலை எவராவது கண்டடைகிற போது வெள்ளநீர் அவளது மாண்பை எக்காரணம் கொண்டும் கெடுத்திருக்கக்கூடாது. அவ்வுடல் உயிருடன் இருந்த போது எங்ஙனம் மிடுக்குடன் வாழ விரும்பியதோ இறந்த பிறகும் அவளுக்கு அதையே கிடைக்கச் செய்ய வேண்டும்.

காலின் அடியில் சிலீரென்கிறது. குனிந்து பார்க்கிறேன். வெள்ள நீர்தான்…. வீடு நுழைந்து விட்டது. அவ்வளவுதான். இன்னும் சற்றுநேரத்தில் தரை தாழ்ந்த இந்த வீடு முழுவதும் மூழ்கி விடும். ஒரு நெடிய பெருமூச்சை வெளிவிடுகிறேன். ஏனோ எனக்கு ஆசுவாசமாக இருக்கிறது. சமையலறை விளக்கைப் போட்டதும் இண்டு இடுக்குகளில் ஓடி ஒளியும் கரப்பான் பூச்சியைப் போல இனி எங்கும் நான் ஒளிய வேண்டியதில்லை. விசேஷ நாளில் காலுடைந்த நாற்காலியை ஒளித்து வைக்க இடம் தேடி அல்லாடுவது போல, என்னைத் தூக்கிக் கொண்டு அலையும் சிரமம் இனி யாருக்குமில்லை.

எனக்குப் பசிக்கிறது!

குளிர்பதனப் பெட்டியைத் திறந்து பார்த்தேன். மின்சாரம் தடைப்பட்டிருந்ததால், உள்ளிருந்து மீந்த உணவின் அழுகல் வாசனை வருகிறது. ஏதாவது மிஞ்சியிருக்குமா என்று தேடிய போது சில சாக்லேட் வில்லைகள் தட்டுப்படுகின்றன. மலைத் தொடர்களை வரிசையாக அடுக்கி வைத்தாற்போல இருக்கும் முக்கோண வடிவ டாப்ளரோன் சாக்லேட் பட்டைகள். ஈத்தனுக்கு மிகவும் பிடித்த வகை.

இதைப் பார்க்கும் போது அவனுக்கு ‘கேமெல்ஸ் டோ ‘ வின் நினைவு வந்து விடுமென்றான் ஒருமுறை. ஒட்டகத்தின் பாதத்திற்கும், ஒரு ஸ்விஸ் சாக்கலேட்டுக்கும் என்ன சம்மந்தம் என்றபோது, சாட்டில் ஒரு தலையிலடிக்கிற ஸ்மைலியை அனுப்பியிருந்தான்.

பின்,”நீ இங்கிலீஷ் மீடியம்ல தான படிச்ச?”என்றான்.

“கேமெல்’ஸ் டோ” என்றால் என்னவென்று கூகுள் செய்து பார்த்து விட்டு ” ச்சீ!” என்றேன்.

“நீ யோகா பாண்ட்ஸ் அணிவாயா, அதிதி?” என்று கேட்ட அவனுக்குப் பதில் சொல்லாமல் ஆஃப்லைன் வந்தேன். மறுநாளில் நான் எனது முகநூல் கணக்கை நிரந்தரமாக டெலிட் செய்திருந்தேன்.

ஈத்தன் இன்னும் என்னைத் தேடிக்கொண்டிருப்பான் என்று நான் நம்பவில்லை. அந்தச் சமயத்தில் அவன்  என்னுடன் மட்டும்தான் தொடர்பில் இருந்தான் என்றும் சொல்லுவதற்கில்லை. இரவில் விழித்துக் கிடக்கிறவருக்கு வானெல்லாம் வெள்ளி.

உலக இலக்கியம், வாரிசு அரசியல், பங்குச்சந்தை, நவீனக் கவிதைகள், படிமங்கள், குறியீடுகள், பொருளாதாரம், சினிமா, தொழில்நுட்பம், உணவு என்று சகலதிசையிலும் சுற்றியலைந்த எங்கள் பேச்சின் கச்சாப்பொருள் தீர்ந்து அப்போது நாங்கள் உடலின் துறைமுகத்தில் நாவாய்களாக நின்று கொண்டிருந்தோம்.

ஈத்தனுக்கு நான் என்னைப் பற்றி எல்லாம் சொல்லியிருக்கவில்லை. அவனுக்கு என்னை இடுப்பு வரையில்தான் தெரியும். என் இடுப்புக்குக் கீழே என்ன இருக்கிறது என்பதை ஒரு காலமும் இந்த உலகுக்கு நான் அறியத் தருவதாயில்லை. வீமன் பாரதப்போரில் துரியோதனனின் பலம் தொடையில்தான் என்பதை அறிந்து, போரின் அறமல்லாத செயலாக, தனது கதையால் இடுப்புக்குக் கீழே அடித்துத்தான் அவனை வீழ்த்தினான். இவ்வுலகும் என்னை அப்படித்தான் ஒவ்வொரு முறையும் இடுப்பின் கீழ் அடித்தே வீழ்த்தி விடுகிறது.

“டூ அனிமல்ஸ் ஷெட் ப்ளட் மேம்?”  பள்ளியில் மாதவிடாய் சுழற்சி பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்த உயிரியல் ஆசிரியை ஒரு நிமிடம் நிதானித்து விட்டுப் பின் அது பற்றி விரிவாக விளக்கினார்.

கேள்வியைக் கேட்ட சாகருக்கு, ஆசிரியரின் மேலோட்டமான பதிலில் திருப்தி இல்லை.. இடைவேளையில், எனது உதவிக்காக எப்போதும் என்னுடனே பள்ளி வரும் எனது பணியாளர் மீனாக்காவுடன் நான் கழிவறைக்குச் சென்று திரும்பிய போது, அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தவர்கள் சட்டென்று என்னை ஒரு சேர திரும்பிப் பார்த்தனர்.

“அவளுக்கும் பீரியட்ஸ் வருமாடி?” எங்கள் வகுப்புத் தோழி அமாண்டாவிடம் சாகர் விசாரித்துக் கொண்டிருந்தான். அமாண்டா நான் பார்ப்பதையறிந்து சங்கடமாய் நெளிந்து கொண்டிருந்தாள்.

“ப்ளக்” என்ற ஒலியுடன் மடியிலிருந்த கைப்பேசி நழுவி தண்ணீரில் விழுந்தது. மின்சாரமின்றி அது எப்போதோ உயிரை விட்டிருந்தது. நீர்மட்டம் முழங்கால் வரையில் உயர்ந்து விட்டதால் இனி என்னால் வீட்டிற்குள் நகர முடியாது. வெளியில் செல்லும் ஒரே வழியாக இருக்கும் இந்த மரப்படிகளைப் பார்த்தபடி இங்கேயே அமர்ந்து விடப் போகிறேன். ஒரு மேடை நாடகத்தைக் காண முன் வரிசையில் ஆர்வமாயிருக்கும் ரசிகனைப் போல எனக்குள் ஒரு இனிய பரபரப்பு எழுகிறது.

கடைசியாக, எனது இருப்பை யாருக்காவது அறிவித்து விட்டுச் செல்ல வேண்டுமென்கிற ஆசை எழுகிறது. தீவில் தனித்து விடப்பட்டவர் கண்ணாடி போத்தலில் தனது இறுதி வாக்கியத்தை எழுதி அனுப்புவது போல இக்கணம் நான் என்ன நினைக்கிறேன் என்று யாருக்காவது சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அதனால் என்ன பிரயோஜனம்? பாதி உடலால் நான் வாழ்கிற இந்த வாழ்வில் யாருக்கும் சொல்ல என்னிடம் எதுவும் இல்லை!

இப்போது, இங்கு என்னுடன் என் மீனாக்கா இருந்திருக்க வேண்டும். நான் பாட்டி வீட்டிற்குச் செல்கிறேன் என்று தெரிந்ததும் என்னுடன் வருவேன் என்று எவ்வளவு பிடிவாதம் பிடித்தாள் அவள். அப்போது, எங்கள் வீட்டில் வேலைக்கு என்று சில பணியாளர்கள் இருந்தார்கள். அவர்கள், வீட்டின் பின்பகுதியில் இருக்கிற குடியிருப்பிலிருந்து வருகிறவர்கள். அப்பாவும், அண்ணனும் ஒரே  வியாபாரத்தில் இருந்தமையால் அவர்களை வீட்டில் காண்பதே அரிது. அம்மா எனக்காகக் கோவில் கோவிலாகச் சென்று கொண்டே இருப்பாள். நான் நாளெல்லாம் ஒரு கடவுள் சிலை போல அவ்வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து வரைந்ததையே வரைந்து கொண்டிருப்பேன் அல்லது வாசித்ததையே வாசித்துக் கொண்டிருப்பேன். என்னைச் சுற்றி காட்சிகள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும்.

பாத்தியப்பட்டவர்கள் ஒருவரும் இல்லாத சமயத்தில், பணியாளர்கள் சுவர்க் கடிகாரத்தைப் போல சூழலுடன் ஒன்றியிருக்கும் என் இருப்பையும் மறந்து விடுவார்கள். வரவேற்பறை சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சித் தொடர்களை அலற விடுவார்கள். தங்கள் எல்லைக்கு அப்பாற்பட்ட இடங்களில் கூட ஊடாடுவார்கள். அவற்றை  நான் என் குடும்பத்தினரிடம் சொல்ல மாட்டேன் என்று அவர்கள் உறுதியாக நம்பினர். எனக்குச் செய்யும் உதவிக்கு என் அப்பா தரும் சம்பளப் பணத்தையும் மீறிய நன்றியை என்னிடமிருந்து எதிர்பார்த்தார்கள்.

தலைமை வேலைக்காரன் கணபதி ஒருநாள் என் அறைக்குள் நுழைந்தான்.

“என்ன பாப்பா பண்ணுற?”

“சும்மா வரையிறேன் கணபதிண்ணா”

“நகரு பாக்கலாம்…”

ஆர்ப்பரிக்கும் இரவுக்கடலை, பாதிவரைக்கும் நான் வரைந்திருந்த ஓவியத்தை தன்புறம் திருப்பி  சித்திரத்தை அவன் பார்வையிட்டபோது, அவனது முழங்கை என் மார்பில் பதிந்தது அனிச்சையன்று.

“நல்லாத்தான் வரஞ்சு இருக்க பாப்பா”

பாராட்டியபோது, அவனது கைகள் என் தோள்பட்டையின் மீது தேவைக்கும் அதிகமாகப் பதிகிறதை உணர்ந்தேன்.

“கைய எடுங்க கணபதிண்ணா..”

“இல்லன்னா,அப்பாகிட்ட சொல்லுவேன்”

நான் எப்போதும் போலவே அப்பாவிடம் எதையும் சொல்லவில்லை எனக் கண்டதும், கணபதி இம்முறை வேறொரு யுக்தியைத் தேர்ந்தெடுத்தான்.

எனது அடுத்திருந்த அறையில் வீட்டின் ஒரே பெண் பணியாளராகிய மீனாக்காவுடன் சரசம் செய்தான். நான் ஒலிகளால் அதனை உணரும்படி செய்வதில் அவன் கவனமாயிருந்தான். நான் அதன் பின் மீனாக்கா மீது வெறுப்பை உமிழ்ந்தேன். அவள் எனக்குப் பணிவிடைகள் செய்ய வரும்போதெல்லாம் கடுகடுத்தேன். அவள் மீது வீசுகிற சம்போகத்தின் வாடை என்னை ஓங்கரிக்கச் செய்தது.

மீனாக்கா என் ஒதுக்கத்தின் காரணம் புரியாமல் தவித்தாள். அதன் பின் நான் அலையாமல் அவள், என் அறைக்குத் தானாக வருவதில்லை. நான் அவளை இனிமேல் அழைக்காதிருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் என் தேவைகளுக்கு அவளைச் சார்ந்திருப்பது தவிர வேறு வழியென்ன?

நான் அப்பாவிடம் சொன்னால், அவர் மிகவும் வருந்துவார். கணபதியை பணியிலிருந்து நீக்குவார். அது தேவையற்ற ஒரு மாறுதல். இவ்வுலகம் கணபதிகளால் ஆனது என்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபமுமில்லை.

கணபதி என் மீது அத்துமீற முடியாததற்குப் பழி தீர்க்கும் முகமாகத்தான் இதனை நிகழ்த்திக் காட்டுகிறான் என்று நினைத்தேன். ஒருநாள், மீனாக்காவுடன் அவன் தன் சரச நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, அவனைத் தட்டிக்கேட்டு விடுவதென்று முடிவு செய்து துணிவைத் திரட்டியவளாய் அந்த அறைக் கதவை நெருங்கினேன். அப்போது, எதிர்த்திசையில் இருந்த தோட்டத்திலிருந்து மீனாக்கா வந்து கொண்டிருந்தாள். அவளது கைகளில் சில அன்றலர்ந்த மலர்கள் இருந்தன. மீனாக்கா அறையினுள் அல்லவா இருக்கிறாள்?

மீனாக்கா என்னைக் கேள்வியுடன் நோக்கி,” எதாவது வேணுமா பாப்பா? ” என்றாள்.

” இல்ல… சும்மா காத்துக்கு நிக்கறேன் அக்கா!”என்றேன்.

நெடுநாள் கழித்து அவளை மீண்டும் அக்கா என்றிருக்கிறேன். மீனாவின் கண்களில் இரண்டு சிறிய நீர்மணிகள் திரண்டன. எனது சுருள் கூந்தலை ஒதுக்கி விட்டு, தலையில் ஒரு கிரேந்தி பூவை சூடி விட்டாள். பின்பு கன்னம் தடவி நெட்டி முறித்தவள்” கடவுளுக்கு கண்ணே இல்லடி பாப்பா” என்றபடி பெருமூச்சு விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

நான் படிகளின் அருகில் ஒதுங்கி  சற்று நேரம் செய்வதறியாது நின்று கொண்டிருந்தேன். அறைக்கதவைத் திறந்து கணபதி வெளியில் வந்தான். அதன்பின், உள்ளிருந்து வெளிப்பட்டவளை இன்றுவரையில் என் வாயால் நான் அண்ணி என்று அழைக்கவேயில்லை!

கீழ்மையான செயல்களை ஒடுக்கப்பட்டவர்கள்தான் செய்வார்கள் என்ற முன்முடிவிற்கு அன்று நான் ஏன் வந்தேன் என்று என்னையே நான் பல சந்தர்ப்பங்களில் நொந்து கொண்டிருக்கிறேன்.

வெள்ளநீர் திபுதிபுவென்று உயர்ந்து இடுப்பு வரை மறைத்து விட்டது.நான்  வாலில் நூல் கட்டிய ஒரு தட்டாரப் பூச்சியைப்போல எனது சக்கர நாற்காலியிலிருந்து எழும்பும் வகையற்று நீரில் படபடத்துக்கொண்டிருக்கிறேன்.

“அண்ணா.. அந்த தும்பிய விட்டுரு அண்ணா. தும்பி பாவம்ண்ணா!”

“இருடி.. இந்த நூல கட்டிட்டு பறக்க விடறேன். எவ்ளோ கஷ்டப்பட்டு புடிச்சாந்துருக்கேன்!”

அண்ணன் ஒருபோதும் அவிழ்க்க முடியாத முடிச்சை அந்தத் தட்டாரப்பூச்சியின் வாலில்  போட்டான். அது மேல் நோக்கிப் பறக்கும் போதெல்லாம் சுண்டிச் சுண்டி இழுத்தான்.

“அண்ணா… விட்டுருண்ணா!

பாவம் அது!”

அண்ணனின் விளையாட்டு நேரம் முடியும் முன்னே அதன் சிறிய உயிர் பிரிந்திருந்தது.

காலையில் நான் பார்க்கும்போது அதன் உடலை எறும்புகள் தின்றிருக்க, இறக்கைகள் மட்டும் மீதமிருந்தன. எனக்கு அழுகையாய் வந்தது.

“As flies to the wanton boys,
Are we to the Gods
They kill us for their sport”

ஷேக்ஸ்பியரின் இந்த வரிகளை எனது ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் அடிக்கோடிட்ட பக்கத்தில், அந்த இறக்கைகளை வெகுநாள்களாகப் பத்திரமாக வைத்திருந்தேன்.

நீரினுள் எனக்குக் காட்சிகள் மச மசப்பாக தெரிகின்றன.. மரப்படிகளில் கண்ணைக் கூச வைக்கும் வெள்ளை ஒளி அலைகிறது.  நீண்ட கால்களுடன் ஒரு உருவம் அதில் இறங்கி வருகிறது. எனக்கு அயற்சியாக இருக்கிறது. நான் கண்களை மூடிக் கொள்கிறேன்.

“இங்க யாரோ இருக்காங்க சார்… சுருட்ட சுருட்டையா தலமுடி தெரியுது. இந்த பக்கம் கொஞ்சம் லைட்ட அடிங்க சார்!”

“அசைவு இருக்கா பாரு”

“இடுப்பளவு தண்ணிதானப்பா இருக்கு. முழுஆளு அதுக்குள்ள எப்புடி முங்கும். சின்ன புள்ளையா பாரு!”

“தூக்க வரல சார்… முடி எதுலயோ வசமா சிக்கியிருக்கு. வேணும்னே கட்டி வெச்ச மாதிரி இருக்கு சார்!”

“இந்தா… கட் பண்ணி தூக்குயா சீக்கிரம்!”

“சார்!”

“என்னய்யா? உசிர் இருக்கா…”

“சார்! கடல் கன்னி மாறி இருக்கு சார்…”


 

எழுதியவர்

ப்ரிம்யா கிராஸ்வின்
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தை சார்ந்தவர் ப்ரிம்யா கிராஸ்வின். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். இவரின் கவிதைகள், சிறுகதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி இருக்கிறது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “தப்பரும்பு” வாசகசாலை பதிப்பகத்தின் வெளியீடாக 2022-ஆம் ஆண்டு வெளியானது.
Subscribe
Notify of
guest

6 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sangeetha Enian
Sangeetha Enian
5 months ago

கதையின் கனம் தாளாமல் மனம் அமிழ்கிறது துக்கத்தில்.

Antony Vincent
Antony Vincent
5 months ago

படித்து முடித்ததும் மனம் இருக்கமாகிவிட்டது. மனிதர்கள் விவரிக்க முடியாதவர்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஜீனி கதாபாத்திரம் மிக ஆழமாக வேரூன்றி இருந்தது. வாழ்த்துகள்.💐

ramji yahoo
ramji yahoo
5 months ago

என்ன ஒரு அற்புதமான இலக்கியப் படைப்பு.
ரஷ்ய/ ஃ பிரெஞ்சு இலக்கியங்கள் மட்டும் தானா சோகங்கள் நிறைந்து இருக்கும்,
அதற்கு நிகராக/ அல்லது அவற்றையும் தாண்டிய யதார்த்த சோக நிகழ்வுகள்
கொண்ட படைப்பு இது .
——-
“”இங்கு ஒரு உயிரற்ற சடலத்துடன் , இரு கால்களும் செயலற்ற ஒரு இளம்பெண் வெள்ள நீரில் சிக்கி இருக்கிறாள்””
——————–
அதிலும், சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பெரு மழை , வெள்ளம் குறித்து யாரும் இதுவரை இலக்கியப் படைப்புகள் எழுத வில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஜெயமோகன் துவக்கி வைப்பார் என்று கணித்து இருந்தேன்.
ஆனால் ப்ரிம்யா டீச்சர் உள்ளது உள்ளபடியே எழுதி காட்சிகளாக நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.
——
ஒரே ஒரு சந்தேகம்- தட்டோட்டில் இடை விடாது மழை – அல்லது
தட்டோட்டியில் இடை விடாது மழை – எது சரி என்று தெரிய வில்லை

You cannot copy content of this page
6
0
Would love your thoughts, please comment.x
()
x