8 December 2024
padmakumari10

புனிதா சித்ராவோடு முன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். அவர்கள் விளையாட்டின் உரையாடல்கள் லதா நின்று கொண்டிருந்த அறை வரையிலும் கேட்டுக் கொண்டிருந்தது. ஆட்டம் எப்போது சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது என்பதை அவர்களின் குரல்களை வைத்துக் கணக்கிட்டுக் கொள்வாள் லதா.

இருவரும் விளையாட்டின் ஒவ்வொரு படிநிலைக்கும் வெவ்வேறு டெஸிபெல் வைத்திருப்பார்கள். முதலில் பாம்புக் கட்டம், பல்லாங்குழி என்று ஆரம்பிப்பார்கள். நேரம் போகப் பார்த்தால் எதையும் காணாது. நிராயுதபாணியாகக் களம் இறங்கியிருப்பார்கள்.அவர்களுக்கு அப்படி விளையாடவே அதிகம் பிடித்திருந்தது. எந்த உபகரணங்களையும் சார்ந்து கொள்ளாத விளையாட்டு. ஒருத்தி டீச்சரென்றால் இன்னொருத்தி மாணவியாக இருப்பாள். கூடவே கண்ணுக்குத் தெரியாத சில மாணவிகளும் சேர்ந்து கொள்வார்கள். டீச்சர் எந்தப்பொழுதில் அம்மாவாக மாறுவாள் என்பதை யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். அதே நொடியில் மாணவி அப்பாவாக மீசை முறுக்கி நின்று கொண்டிருப்பாள். யார் கண்ணுக்கும் புலப்பட்டுவிடாத குழந்தைகள் பிறந்து நடமாடிக் கொண்டிருப்பார்கள்.

“நீ அம்மா. நான் பிள்ள”

விளையாட்டு தீவிரமடைந்து கொண்டிருந்த பொழுதொன்றில் புனிதா சொன்னது.

“ அப்பா?”

சித்ராவின் முகத்தில் தீவிரம் படர்ந்திருந்தது.

“ அப்பா முக்கியம் கிடையாது. அம்மா தான் முக்கியம். அப்பா இருக்கலாம் இல்லாமலும் போகலாம்”

புனிதாவிடமிருந்து அதிவேகத்தில் தீர்க்கமான பதிலாக வந்து விழுந்தது.

அருகே துணி மடித்தபடி அமர்ந்திருந்த லதாவிற்கு பகீரென்றிருந்தது. அப்பாவை பற்றிய எந்தக் கேள்வியையும் புனிதா லதாவிடம் கேட்டதில்லை. அப்பா எப்படி இருப்பார் என்ன ஆனார் என்று எந்தக் கேள்வியையும் சித்ரா கேட்காமல் இருந்ததை குறித்து பெரும் நிம்மதியும், திடீரென்று கேட்கும் நாளில் அவளுக்கான பதில் என்னவாக இருக்க வேண்டுமென்ற ஒத்திகையையும் லதா அவ்வப்போது ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சேகரை பார்த்திருந்த முதல் கணத்திலேயே லதாவிற்குள் ஏதோவொன்று ஒட்டாமலேயே இருந்தது. மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா என்கிற சம்பிரதாயமான கேள்வி பக்கத்தில் நெருங்கும் முன்னமே துணைக்கு அமர்ந்திருந்த சுதாவிடம் சொல்லியும் விட்டாள்.

“ ஏண்டி , பாக்க நல்லா தான இருக்காரு” என்றாள் சுதா.

“ தெரிலடி. என்னவோ ஒட்டல”

லதாவிடமிருந்து ஒரு நொடி இடைவெளிவிட்டே பதில் வந்தது

“ கம் வேணா தரவா? சொல்லுறா பாரு, அது என்னத ஒட்டல” சுதா வெடுக்காகக் கேட்டாள்.

லதாவின் முகம் தாமரை மொட்டாகக் குவிந்திருந்தது.

“ உனக்கு புரியலடி. எனக்கு இது சரி வராதுன்னு பாத்த உடனே பட்டுன்னு தோணிச்சு.விளக்கிச் சொல்ல தெரில.எது ஒட்டும் ஒட்டாதுண்ணு மனசுக்கு பட்டுண்ணு தெரிஞ்சிரும். புத்திக்கு உரைக்கத் தான் நாளாகும்.”

லதா சொல்லி வாய்மூடுவதற்குள் லதாவின் பெரியப்பா வழி அண்ணனின் மனைவி அறைக்குள் வந்திருந்தாள்.

“ மாப்பிள்ளைய புடிச்சிருக்கா?”

“ நல்லா ஜோரா கலரா இருக்காரு. புடிக்காமல இருக்கும்”

கேள்வியோடு பதிலையும் கூடவே எடுத்து வைத்தாள்.

“ ம்ம்”

லதாவின் பார்வை தரையில் படர்ந்திருந்தது.

“ பொண்ணுக்கு மாப்பிள்ளைய புடிச்சிருக்குது. சொல்ல வெட்கப் படுறா”

மயினி காற்றாய்ப் பறந்து முன் அறையில் நின்று கொண்டிருந்தாள்.

அடுத்தடுத்த நிகழ்வுகள் ‘கீ’ கொடுத்த பொம்மையாய் நகரத் தொடங்கியிருந்தன.

கல்யாண மேடையில் சேகரும் ஏதோ நெருடலோடே விலகி உட்கார்ந்திருக்கிறான் என்பதை லதாவினால் உணர முடிந்திருந்தது.

“ மாப்பிள்ளைலா பொண்ணோட கூடுதலா வெட்கப்படுகாரு”

மறுவீடு விடுவதற்காக வந்திருந்த பொண்ணு வீட்டுக்காரர்கள் கேலி செய்து சிரித்துக் கொண்டார்கள்

இரண்டு வருடங்களுக்குப் பிறகு லதாவை சீமந்தம் முடித்து அனுப்பி வைத்தவன், குழந்தை பிறந்திருக்கும் செய்தியைச் சொல்லி அனுப்பியும் பார்க்க வரவேயில்லை. மாமியாரும் மாமனாரும் குழந்தையை வந்து பார்த்துவிட்டு மழுப்பலாகப் பேசிவிட்டுப் போனார்கள். மாதங்கள் சென்று லதாவின் வீட்டின் பக்கமிருந்து அழுத்தங்களை அதிகரித்தபோது “ உங்க பிள்ளைக்கு ஒழுங்கா குடும்பம் நடத்த தெரிஞ்சிருந்தா அவன் ஏன் இப்படி ஒட்டாம இருக்கான்.” நெருப்பு கங்குகளை வாரி இறைத்தாள் மாமியார்.

இரண்டு குடும்பத்துப் பெரியவர்களைக் கூட்டி நடத்தப்பட்ட எந்தப் பேச்சு வார்த்தைகளும் நிறைவான முடிவை எட்டாமல் மீண்டும் மீண்டுமென தொடர்ந்து கொண்டிருந்தது.சேகர் பெரும் மௌனம் சாதித்துக் கொண்டிருந்தான்.எதற்கும் கட்டுக்குள் வராமல் நீதிமன்றத்திற்குள் நுழைந்த வழக்கு இப்போது அப்போது என்று இழுத்தடித்து புனிதாவின் மூன்று வயதின்போது முடிவிற்கு வந்தது. லதாவின் வாழ்வில் இருந்த சேகரின் தடயங்களை அவள் அழித்துக் கொள்ளத் தீவிரமாக முயன்று கொண்டிருந்தபோதே அவனின் மறுகல்யாணத்தைப் பற்றிய பேச்சுக்கள் அவளது காதில் வந்து சேர்ந்திருந்தது.

அவளுக்கான மறு அத்தியாத்தை ஆரம்பிக்க நினைத்தவள் தனியாக வீடு பார்க்க ஆரம்பித்திருந்தாள். தனியாகப் போக என்ன அவசியம் வந்தது என்பதைப் பற்றி அம்மா கேட்டபோது, லதாவிடமிருந்து வந்த சுருக்கமான பதில் “அம்மா வீடே ஆனாலும் அளவு உண்டு” என்பது.

தன் செலவுகளைப் பார்த்துக் கொள்ள பேன்சி ஸ்டோர் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து கொண்டாள். மாதச் சம்பளமும் தினசரி பேட்டாவும் உண்டு. எப்போதும் சிரித்த முகமாக வாடிக்கையாளர்களின் முன் எந்தத் தொய்வையும் சலிப்பையும் காட்டிக் கொள்ளாமல் நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லப்பட்டிருந்தது. முகத்தில் உணர்வுகள் வெளிப்படாமல் நிற்க வேண்டுமென்பதைக் கேட்கும்போதே லதாவிற்கு மலைப்பாக இருந்தது. ஒன்றாவது படித்துக் கொண்டிருந்தபோது ஊரில் நடந்த பொங்கல் விழாவில் நடத்தப்பட்ட மாறுவேட போட்டியின்போது, போட்டுவிட்டிருந்த உதட்டுச் சாயம் கலைந்து விடக்கூடாதென்பதற்காகவே மேடையில் பேச வேண்டிய வசனங்களை விழுங்கிவிட்டு உதட்டை அசைக்காமல் அப்படியே நின்று கொண்டிருந்த தனது குட்டி உருவம் நினைவிற்குள் வந்த போனது. பேசும்படி கேட்டுக் கொண்டிருந்த எந்தக் குரல்களையும் சட்டை செய்துக் கொள்ளாமல் உதட்டுச் சாயம் மட்டுமே உயிரெனப் பொம்மையாக நின்று கொண்டிருந்த நாள் அது. இதுவும் கிட்டத்தட்ட அப்படித்தான். கூடுதல் நேரம் உதட்டுச் சாயத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போகும் மாறுவேடப் போட்டி.

வேலைக்குச் சேர்ந்திருந்த நாளாவது நாளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. உடன் வேலை பார்க்கும் லீலாவும் விடுமுறை எடுத்திருந்ததால் லதா தனியாகச் சிக்கிக் கொண்டாள். இயற்கை உபாதை கழிக்கப் போகக்கூட நேரமில்லாமல் நாள் நகர்ந்து கொண்டிருந்தது. அன்றைய நாளை சமாளித்து முடித்துவிட்டு வருவதே பெரும்பாடாகிப் போயிருந்தது.

வீட்டிற்குத் திரும்பும் வழியில் அம்மா வீட்டிலிருந்த புனிதாவை அழைத்து வரப்போனாள். பள்ளி முடிந்ததும் புனிதாவை அப்பா கூட்டி வந்துவிடுவார். சாப்பாடு கொடுப்பது, வீட்டுப்பாடம் முடிக்க வைப்பதை அம்மா பார்த்துக் கொள்வாள். சில நாட்கள் லதா கூப்பிடப் போகும் முன்பே புனிதா தூங்கிப்போயிருப்பாள். அப்படியான நேரங்களில் அப்பா புனிதாவை தூக்கிக் கொண்டு துணைக்கு வருவதாகச் சொன்னாலும் , பிடிவாதமாக மறுத்துவிட்டு லதாவே புனிதாவை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு தனியாகவே வீட்டுக்கு நடையைக் கட்டிவிடுவாள்.

கடந்த ஒருவாரமாகவே புனிதாவை கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வருகிற வழியில் வள்ளியம்மை வீட்டு மருமகன் மணி நின்று வேண்டுமென்றே வம்பு பேசிக்கொண்டிருக்கிறான்.லதாவின் திருமணத்திற்கு முன்பாக மணியை லதாவிற்கு பெண் கேட்டார்கள்.ஊதாரித்தனமாகச் சுற்றிக் கொண்டிருந்த மணியின் செயல்களைக் காரணம் காட்டி அப்பா பிடிவாதமாக மறுத்துவிட்டார். அதன்பிறகு அவன் வள்ளியம்மை வீட்டில் கல்லூரி படித்துக் கொண்டிருந்த மூத்த மகளை காதல் என்கிற பெயரில் வெளியூருக்கு இழுத்துப் போய் தாலிகட்டி அழைத்து வந்து நிறுத்தியதெல்லாம் ஊரே பரபரக்கும் பெருங்கதையாக நிகழ்ந்தது. இப்போது மாமியார் வீட்டிற்கு மனைவியோடு சேர்ந்து இளைப்பாற வந்திருக்கிறான். அப்பா மறுத்ததின் வன்மம் இன்னும் அவனுக்குள் மிச்சம் இருப்பதே அவனின் இந்தச் செயலுக்கான திரி. அப்பாவிடம் விசயத்தைச் சொல்லலாம். முன்பின் யோசிக்காமல் எகிறி விடுவார். விசயம் பெருசானால் ஊரில் உள்ளவர்களின் பார்வை அவரவர் புத்திக்கேற்ப பாதையைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்து விடும். வீசும் கற்கள் தன்மீதே திரும்புவதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளையும் வாழ்க்கை கச்சிதமாகச் செய்து வைத்திருப்பதை நொந்துக் கொண்டபடி அனைத்தையும் தனக்குள் புதைத்துக் கொண்டாள்.

மணி இன்றும் நின்று கொண்டிருப்பானா, இல்லை ஊருக்குத் திரும்பியிருப்பானா என்பதை யோசித்தபடியே லதா வந்து கொண்டிருந்தாள். அவன் நின்று கொண்டிருந்தான். அவளுக்குள் பதற்றம் கூடியது.

“ எத்தன மணிக்கு வரலாம்? ” வார்த்தைகள் எகத்தாளமாக வந்து விழுந்தன.

மணி அருகில் நின்று கொண்டிருந்தவனின் தோளில் இலேசாகத் தட்டியபடியே லதாவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டான்.

“ என்னட்டி நடநடக்க; விரசா வா “

மணி மீது காட்ட முடியாதிருந்த வெறுப்பை ரோட்டில் கிடக்கும் குட்டிக் கற்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக விளையாட்டாக உதைத்து விட்டபடி நடந்து கொண்டிருந்த புனிதாவிடம் தீர்த்துக் கொண்ட லதா , தன் அழுகையை ஆரம்பித்திருந்த புனிதாவை இடது கையில் இழுத்துப் பிடித்தபடி தன் முழு வேகத்தையும் இறக்கி நடந்தாள்.

வீட்டிற்கு வந்து சேர்ந்த பிறகும் புனிதா ரொம்ப நேரத்திற்கு அழுகையை நிப்பாட்டாமல் இருந்தாள். மடியில் போட்டுத் தட்டிக் கொடுத்து உறங்க வைக்க வேண்டியிருந்தது.

அடுத்த நாள் திரும்பி வரும் வழியில் மணி இல்லாமல் இருந்தான். அடுத்தடுத்த நாட்களும் இல்லாமல் போனபோது அவன் ஊருக்குப் போயிருக்கலாம் என்கிற அவளின் யூகம் உறுதியானதை நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

 

******

சித்ராவின் துரத்தலுக்குச் சிரித்தபடியே ஓடிவந்த புனிதா நிலைக் கண்ணாடியைத் துடைத்தபடி நின்று கொண்டிருந்த லதாவின் தொடை சீலையோடு சேர்த்து அவளைக் கட்டிக் கொண்டாள். என்ன என்று விசாரித்தபோது கண்களை இறுக்க மூடிக்கொண்டு முகத்தை மேல் தூக்கி உதட்டைக் குறும்பாகக் குவித்துக் காட்டினாள்.

“ இந்த லிப்ஸ்டிக்க போட சென்னத்துக்குப் பயந்து ஓடி வந்திட்டாத்தே “

பின்னாடியே துரத்தி வந்திருந்த சித்ரா, கையில் பிடித்திருந்ததைத் தூக்கி முன்னும்பின்னுமாக ஆட்டிக் காட்டினாள்

“ ஏங்குட்டி? போட்டுக்க வேண்டிதான. “

புனிதா இன்னும் இறுக்கமாக முகத்தை லதாவின் சீலைக்குள் புதைத்துக் கொண்டாள்

“ பிசுபிசுன்னு ஒட்டும். வேண்டாம்…” தாழ்ந்த குரலில் பதில் வந்தது.

“ இப்படித்தான் சொல்லுதா”

சித்ரா வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.

“ அத அத்தேட்ட தா”

சித்ராவின் கைகளிலிருந்த சாயப்பென்சிலை லதா வாங்கிக் கொண்டாள்.

“ அம்மா போட்டு விடட்டா”

புனிதாவின் தொடைப் பிடியைத் தளர்த்திக் கொண்டு, மண்டியிட்டு புனிதாவின் உயரத்திற்கு ஈடு செய்து நின்றபடியே அவளின் உதட்டுக்கு நேராக சாயப்பென்சிலை கொண்டு சென்ற லதா, தீடிரென்று எதையோ யோசித்தவளாக அப்படியே எழுந்து பின்வாசல் பக்கமாக நடையைக் கட்டினாள்.

பிள்ளைகளும் பின் தொடர்ந்தார்கள்.

“ உங்க ரெண்டு பேருக்குமே இது வேண்டாம்”

பின்வாசல் சுவர் முக்கில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியில் சாயப்பென்சிலை வீசிவிட்டுத் திரும்பினாள் லதா.


 

எழுதியவர்

பத்மகுமாரி
பத்மகுமாரி
நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது சென்னையிலுள்ள ஐ. டி துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக இவர் எழுதும் சிறுகதைகள் பல்வேறு இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன. இவரின் சிறுகதைகள் ”நட்சத்திரம்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலாக வாசகசாலை பதிப்பகம் மூலம் வெளியாகி இருக்கிறது.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x