19 September 2024

நீ சேத்து வச்சிருக்க ரூவா ஒரு பத்து பவுன் நகைக்கு தேறுமா?”

“ அவ்வளவு இருக்காது சித்தி.”

“வேலைக்கு போய் ஒரு வருஷத்த தாண்டியாச்சு.ஒனக்கான நகைநட்ட சீக்கிரம் உண்டு பண்ணிகிட பாரு. ஒன்ன தள்ளி விட்டுட்டா எங்களுக்கும் மூச்சு முட்டாம இருக்கும்ல. உன் அப்பன் சம்பாத்தியத்தில என்னத்த மிஞ்சி நிக்கும்ணுட்டு நான் சொல்லித்தான் உனக்கு தெரியணும்னு இல்ல.தேவையில்லாத செலவுகள கொறைச்சிட்டு காச பதுவிசா சேக்கபாரு” 

“ ஹாஸ்டல் ஃபீஸ்க்கும் கொடுத்து வீட்டுக்கும் அனுப்புறதுபோக இவ்வளவுதான் சேக்க முடியிது சித்தி”

“ பாத்துக்கோ. ரொம்பவும் நான் இறுக்கி சொல்ல முடியாது. அப்புறம் தப்பா போயிரும்”

“ ம்ம்..”

“ சரி நான் வக்கேன். நேரத்தோட படுத்து தூங்கு”

 சித்தி இப்படிப் பேசி இரவை முடித்து வைத்தாள். 

 மூளைக்குள் ஏதேதோ சுழல ஆரம்பித்திருந்த பிறகு உறக்கத்திற்கான வாய்ப்பு தூரம் போயிருந்தது. உறக்கம் வராமல் உருண்டு கொண்டிருந்தவள் வெளியே வந்து பால்கனியில் நின்றபடி  எதிரே தெரிந்த பிரமாண்டமான  நகைக் கடையின் பிம்பத்தை வெறித்துக் கொண்டிருந்தேன்.

*****

ண்ணிரெண்டாவது படிக்கும் தங்கை வள்ளிக்கு இப்போதே  நகை சேர்த்து வைத்துக்கொண்டிருக்கும் சித்தி, என் விஷயத்தில் இப்படி பேசுவதற்காகவெல்லாம்  சித்தியின் மீது எந்த வருத்தமும் பட்டுக் கொள்ள முடியவில்லை.

அம்மா இறந்த ஏழாவது மாதத்தில் சித்தியாக உள்ளே வந்தவள் இத்தனை வருடத்தில் அத்தனை பெரியக் கொடுமைக்காரியாக எதுவும் நடந்துக் கொண்டிருக்கவில்லை. வீட்டுக்குள் நுழையும்போது அம்மாவின் பெயரை அழைத்தபடியே வரும் அப்பாவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அப்படியான அப்பா இரண்டாவது கல்யாணத்திற்கு  எளிதில் சம்மதிக்க மாட்டார் என்றே நினைத்திருந்தேன். அப்பாவும் பிடிவாதமாக தான் இருந்தார். 

“ இன்னிக்கு உட்காரவா நாளைக்கு உட்காரவான்னு தளதளன்னு நிக்கிற பொட்ட புள்ளய வச்சுகிட்டு ஒத்த ஆம்பிளயா  எத்தன நாளு பாத்துகிடுவ. வளந்த பொம்பளபிள்ள எல்லாத்தையும் அப்பன்கிட்ட சொல்ல முடியாதுடே“

 அப்பாவை உட்கார வைத்து பேசியக் குரல்களின் அழுத்தம் அவரின் உறுதியை கலைத்திருந்தது.

சித்தி வந்த இரண்டாவது வருடத்தில் வள்ளி பிறந்தாள். வள்ளிப் பிறந்ததற்கு பின்னும்  சித்தி என்னை முழுவதுமாக ஒதுக்கிவைத்துவிடவில்லை என்பதே பெரும் ஆசுவாசந்தான் . வள்ளியை இரண்டு மூன்று படிகள் அதிகமாக நேசித்தாள்.அதில் என்ன தவறு இருக்கிறது.

 பள்ளி முடிந்து வந்து சாப்பிட அமரும்போது என் தட்டில் வேண்டியவற்றை போட்டு வைத்துவிட்டு தானே வள்ளியை கண்ணே மணியே என்று செல்லம் கொஞ்சியிருக்கிறாள். அம்மாவும் என்னை இப்படி கொஞ்சியிருக்கிறாள்தானே. வள்ளியின் அம்மா என்னை கொஞ்ச வேண்டுமென்று நினைப்பதெல்லாம் பேராசையில் சேர்த்தி ஆகிவிடுமல்லவா.

“ நெனச்ச வேலை கிடைச்சா தான் போவேன். அது வரைக்கும் முட்ட சொறிஞ்சிட்டு வீட்டுக்குள்ள கிடப்பேன்னு  சொன்னா இன்னிக்கு நாட்டுல பாதி பயலுகளுக்கு வேலையே இருக்காது. பேசுகாரு பாரு பேச்சு. “ 

“ இங்க பாரு குட்டி உங்க அப்பன் பேச்ச கேட்டுட்டு கிடந்தா இங்கனேயே இப்படி முடங்கி கிடக்க வேண்டியதான். அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். அதுக்குமேல வற்புறுத்திகிட்டு சித்திக்காரி வலுக்கட்டாயமா மூத்தாரு புள்ளய வேலைக்கு அனுப்பிட்டாங்கிற பேர வாங்கிட்டு  நிக்க முடியாது பாரு. “ 

அப்பாவிடம் வாதிட்டு முடித்துவிட்ட சித்தி என்னிடமும் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க நகர்ந்திருந்தாள். கல்யாணமாகி வந்த நாளிலிருந்து என்னை குட்டி என்கிற வார்த்தைக்கு மறு வார்த்தை சொல்லி சித்தி  அழைத்தது கிடையாது. ரொம்பவும் சலிப்பு முற்றிப்போய் பேசுகிற நாட்களில் மொட்டை கட்டையாக ஒன்றும் அழைக்காமல் பேசுவாள். இல்லையென்றால் குட்டி. ஆதங்கத்தில் சொல்லும் குட்டியில் ஒரு அழுத்தம் இருக்கும். சாதாரண நேரங்களில் வரும் குட்டி எந்த ஏற்றயிறக்கமும் இல்லாமல் தட்டையாக இருக்கும். அன்பின் ஏற்ற இறக்கங்களோடு அழைக்கப்படும் ‘குட்டி’கள் அம்மாவின்  சிதை தீயோடு கருகிப் போயிருந்தன. 

 சித்தியின் வார்த்தைக்காக மட்டுமே நான் இங்கு கிளம்பி வந்திருக்கவில்லை. எனக்கும் மனதின் ஏதோவொரு ஓரத்தில் சித்தி சொல்வது சரியென்றே தோன்றியது. கிடைத்திருக்கும் வேலையில் அமர்ந்துக் கொண்டு பிடித்த வேலை என்கிற அடுத்த அடியை எடுத்து வைத்து விட முடியுமென்று நம்பினேன். நகைக் கடை வேலை என்றாலும் ஃஸேல்ஸ் கேர்ள் வேலையாக இல்லாமல் டேட்டா கேண்ட்லிங் ஆப்ரேட்டராக தானே செல்கிறோம்.ஆசைப்பட்டபடி மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்காவிட்டாலும்  படித்திருந்த பி.எஸ்.சி கம்யூட்டர் சயின்ஸிற்கு தொடர்புடைய வேலைதானே என்கிற ஆசுவாசமிருந்தது. 

நானும் அப்பாவும் சென்னைக்குக் கிளம்பிய போது வள்ளியும் உடன் வரவேண்டுமென்று ஆசைப்பட்டாள். 

“ ஒத்த கொக்கிக்கு எதுக்குட்டி நாலு பேரு தண்டயம் போட்டுகிட்டு போகணும். போகவர பஸ் காசு சும்மாவா வருகு.எங்கூட கடையில ஒத்தாசையா நில்லு“ 

சித்தி வள்ளியின் ஆசையை  நிப்பாட்டி வைத்தாள். 

அவள் பேச்சிலும் நியாயமிருப்பதாகவே எனக்குத் தோன்றியது. மாவு அரைத்துக் கொண்டிருக்கும் நேரங்களில் கடைக்கு வந்துப்போகிற வாடிக்கையாளர்களுக்கு மாவு பொட்டலம் போட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும். ஒத்தாசைக்கு ஆள் இல்லாமல் முடியாது. ஒத்தையாளாக கடையை பார்த்துக் கொள்வது சித்திக்கு கடினந்தான்.

அப்பாவின் பால்ய சிநேகிதன் ஐய்யப்பன் மாமா சென்னைவாசியாக இருந்தது, முதல் நாள் நானும் அப்பாவும் இங்கு வந்து தங்கிக் கொள்வதற்கும் நான் தங்கிக் கொள்வதற்கான விடுதியை அமைத்துக் கொள்வதற்கும் உதவியாக இருந்தது. வேலை பார்க்கும் இடத்திற்கு பக்கத்திலேயே விடுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவரின் யோசனைதான். 

“ இங்கேறு எத்தன இடம் பாத்து பாத்து நீ அமத்தினாலும் ஒரு மாசத்துக்கு தான் நாக்கு ருசியெல்லாம். அப்புறம் எல்லாம் சலிச்சு போயிரும். திங்கள் இன்னது செவ்வாய் இன்னதுன்னு என்னத்தைய சாப்பிட போறோம்ன்னு முந்திக்குட்டியே தீர்மானமா தெரிஞ்சு போனபிறகு சலிப்பு தட்டலேனாதான் ஆச்சரியம்.  ரொம்ப நோண்டாமா இங்கேயே சேத்து விடுவோம். ரோட்ட கடந்து ரெண்டு எட்டு நடந்தா வேலை பார்க்க இடம் இருக்கது போறதுக்கும் வாறதுக்கும் எவ்வளவு பெரிய வசதிடே.அதவிட்டுட்டு ரொம்ப போட்டு மண்டய குழப்பிக்கிடாத.”

 எனது சாப்பாட்டை பற்றிய பெருங்கவலையோடு இன்னும் இன்னுமென விடுதிகளை துளாவ நினைத்த அப்பாவை ஐயப்பன் மாமா கட்டுப்படுத்திவிட்டார். 

பால்கனியில் நின்று பார்த்தபோது நான் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் கடையின்  கண்ணாடிச் சுவர்களின் உள்ளிருந்த மிகச்சன்னமான ஒளி  கண்களுக்கு துலங்கியது.இந்தப் பால்கனியில் நின்றுப் பார்ப்பது வேறு யாராகவோ இருக்கும் பட்சத்தில் அந்த ஒளி கண்ணுக்குத் தெரிவது கொஞ்சம் கடினந்தான்.அத்தனை மெல்லிய ஒளி. ஏற்கனவே விஷயம் தெரிந்திருந்தவள் என்பதால் மட்டுமே   சுலபத்தில்  கண்ணுக்குத் துலங்கியது. இன்னும் ஒருநாளில் வரப்போகிற அட்சயத் திருதியைக்காக கடை மும்முரமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. 

நான் வேலையில் சேர்ந்தப் பிறகு வருகிற இரண்டாவது அட்சயத் திருதியை .முதல் அட்சயத் திருதியை வேலைக்கு சேர்ந்திருந்த ஐந்தாவது மாதத்தில் வந்திருந்தது. அட்சயத் திருதியை என்றால் நகைக் கடையில் கூட்டம் அள்ளும் என்கிற பொத்தாம் பொதுவான கணக்கெல்லாம் வெளி மனிதர்களுக்கானது.  உள் இருப்பவர்களின் கணக்கு எந்த ஷெக்ஸனில் எவ்வளவு கூட்டம் குவியும் என்பதைப் பற்றியதாக இருக்கும். நகைகளை வாரி சுருட்டி வீட்டிற்குள் அடைத்து விடும்  ஆசை பெரும்பாலான மனிதர்களுக்கு பொதுவென்றாலும் அதனை சாத்தியப்படுத்துவது அவரவரின் கையிருப்பை பொறுத்தே என்கிற வாஸ்தவமும் உடனிருக்கிறது. 

‘ பொன்னை வைக்கிற இடத்தில பூவையாவது வை.’ என்கிற மனப்பாங்கில் தங்கத்தை எட்ட முடியாதவர்கள் வெள்ளியை தொட்டுக் கொள்ள வருவார்கள். அந்தக் கோட்டினை சற்று கடக்க முடிபவர்கள் மோதிரத்திற்கும் கம்மலுக்கும் முன்னேறுவார்கள். அடுத்த ரகம் வளையல்களை நோக்கி நடை போடுகிறவர்கள். இதையெல்லாம் மீறி கழுத்து அலங்கரிப்புகளை நோக்கி நகர்கிறவர்கள் வெகு குறைவானவர்களே. இத்தனை அவதானிப்புகளை உடன் வேலைப்பார்க்கும் சாந்தி அக்கா போன வருடம் வந்திருந்த அட்சயத் திருதியையின் போது விளக்கியபோது  கண்கள் விரிய கேட்டுக் கொண்டிருந்தேன். இந்தத் தீர்மானங்களை ஒட்டி  வழக்கமான நகை ஷெக்ஸன்களை இடம் மாற்றி அமைக்கும் வேலைதான் இந்த இரவில் நடந்துக் கொண்டிருக்கிறது. அதிகாலை இரண்டு மணி இருட்டுக்குள் யார் கண்ணுக்கும் புலப்படாமல் நகரத்திற்குள்ளிருக்கும் பிரச்சித்திபெற்ற நகைக் கடை  இத்தனை கணக்குகளோடு பரபரப்பாக தயாராகிக் கொண்டிருப்பதை அங்கிருந்து வரும் என்னைப் போன்றவர்களைத் தவிர வேறு யாரும் தெரிந்து வைத்திருக்க முடியாது.

“ அடுத்த வாரத்தில இருந்து நீயும் ஷெக்ஸன்ல நிக்க வேண்டியது வரும்ன்னு நினைக்கிறேன். சூப்பர்வைசர் பேசிகிட்டு இருந்தாரு.” 

 இடியாய் இறங்கிய இந்த  செய்தியை முதன்முதலில் எனது காதுகளில் கொண்டு சேர்த்தது சாந்தி அக்காதான். 

அவள் அப்படி சொன்னபிறகு அன்றைய மதியச்சாப்பாட்டை  மேற்கொண்டு உள்யிறக்கிக் கொள்ள முடியவில்லை. வேலைக்கு சேர்ந்திருந்த  மூன்று மாதங்களில்  பிடித்த மற்றொரு வேலையை தேடிக் கொள்வதற்கான எல்லா முயற்சிகளிலும் தோற்று போயிருந்தவள் இதனை கேட்டபிறகு இன்னும் நொடிந்துப் போனேன். ஒவ்வொரு முறையும் தோற்றுப் போவதை விடவும் கொடுமை அதனைப் பற்றி யாரிடமும் மனது விட்டு பகிர்ந்துக் கொள்ள முடியாமல் நிறுத்தி வைத்திருக்கும் வாழ்வின் கொடூரம்.சித்திக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. மாதம் சம்பளம் வரும் எல்லாமும் ஒரே வேலைதான் என்பது சித்தியின் கணக்கு. அப்பாவிடம் சொன்னால் காது கொடுத்துக் கேட்பார். ஆனால் கூடவே அவரின் வருத்தமும் அதிகரித்துக் கொள்ளும் என்பதால்  அவரிடமும் இப்படியான விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள முடிவதில்லை. வள்ளி விளையாட்டுப்பிள்ளை. அவளது உலகில் இவைகள் இல்லை. அறையில் உடன் தங்கியிருப்பவர்கள்  அறையை மட்டுமே பகிர்ந்துக் கொள்பவர்களாக  அமைந்திருந்தார்கள். பள்ளித் தோழி வனிதாவிடம் பகிர்ந்துக் கொள்ளலாம். அவளுக்கு பண்ணிரெண்டாவது முடித்த கையோடு திருமணம் முடிந்திருந்தது.  இப்போது இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அம்மாவாக இருக்கிறாள். அவளாக அழைத்தால் மட்டுமே பேசிக் கொள்ளமுடிகிற சந்தர்ப்பம். அவ்வப்போது குத்திய முற்கள் சதைக்குள்ளேயே மக்கிக் கெட்டுப் போனபிறகு என்றோ குத்தியிருந்த முள்ளின் வலியை நினைவுப்படுத்தி சொல்வது அர்த்தமற்றது என்பதால் அவள் அழைக்கிறபோது அன்றைய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதோடு நிறுத்திக் கொள்வேன். 

சாந்தி அக்கா நான் இனிமேல் ஸேல்ஸ் கேர்ல்லாக நிறுத்தபடப்போவதைப் பற்றிச் சொன்ன அன்று வனிதாவிடமிருந்து அழைப்பு வந்தால் கொட்டித் தீர்த்து விடலாம் என்றிருந்தது. அப்படி நடக்கவில்லை. 

“ நாளேலேயிருந்து நீயும் ஷெக்ஸன்ல நிக்கணும். ஆறு மணி வரைக்கும் போதும். அதுக்குமேல  என்ட்ரிய சரி பார்க்க டேட்டா ரூமுக்கு போயிடலாம். என்ட்ரி சரிபாக்க மூணு மணிநேரம் அளவான நேரமா இருக்கும்.”

 சாந்தி அக்கா என்னிடம் விஷயத்தைச் சொல்லியிருந்த அடுத்த வாரத்தின் ஒரு மாலையில்  சூப்பர்வைசர் நேரடியாக என்னிடமே வந்துச் சொல்லிப் போனார். அதற்கடுத்த நாளிலிருந்து  மோதிர ஷெக்ஸனில் ஒருத்தியாக நிறுத்தி வைக்கப்பட்டேன்.

விருப்பமே இல்லாமல் நின்றுக் கொண்டிருந்தாலும், அறைக்குள் ஒரு கணினியின் முன்பு வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவளுக்கு , வருகிற போகிற முகங்களின் பாவனைகளை பார்த்துக் கொண்டு நிற்பது புது அனுபவமாக இருந்தது.   ஒரு நகையைப் பார்த்தவுடன் , பூரிப்பில் விரியும் கண்களோடு கையில் எடுத்து பார்த்துக் கொண்டே உள்ளுக்குள் குறுங்கணக்கை ஓட்டிப் பார்த்து கையிலிருக்கும் நகையை வெறுத்து விட்ட பாவனையோடு எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அடுத்த நகைக்கு கை நகர்த்தி செல்லும் முகங்கள் என்னை நானே நிலைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவதாக இருந்தன. எதார்தத்தின் தோய்ந்த முகங்களுக்கு  வேறு வேறு பெயர்கள். 

கடந்த வருடத்தின் அட்சயத் திருதியையின் போது என்னை  வெள்ளி ஷெக்ஸனுக்கு மாற்றி விட்டிருந்தார்கள்.அந்த ஒரு நாளுக்கான மாறுதல் .வெள்ளி ஷெக்ஸனும் வழக்கமான இடத்திலிருந்து மாற்றி விடப்பட்டு பெருங்கூட்டத்தை சமாளிப்பதற்கு போதுமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கணக்குத் தப்பாமல் அந்த வருடமும் தங்கத்தை விடவும் அதிக லாபத்தை வெள்ளியே ஈட்டித் தந்தது. தங்கம்  சற்றே தலைகுனிந்து நின்றுக் கொண்டிருந்தது.  வெள்ளி ஷெக்ஸனில் நிறுத்தப்பட்டிருந்தவர்களுக்கு அந்த மாதத்திற்கான அட்சயத் திருதியை ஃபோனஸ் அதிகமாக வந்து சேர்ந்தது. அதனால் ஏற்பட்டிருந்த மன வருத்தத்தில் சாந்தி அக்கா என்னிடம் இரண்டு மூன்று நாட்களுக்கு  சரிவர பேசாமல் இருந்தாள். பின்பு மெல்லச் சரியாகிவிட்டது.

வனிதா இரண்டு வாரங்களுக்கு முன்பு அழைத்திருந்தபோது அவள் வீட்டில் புதிதாக வாங்கியிருந்த மீன் வளர்ப்பு தொட்டியையும் அதில் அவர்கள் போட்டிருந்த வண்ண விளக்குகளையும் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அவளது இரண்டாவது மகள்  சதா நேரமும் அதன் முன்னாலேயே இருக்கிறாளாம். அதனால் அவளுக்குச் சோறு ஊட்டும் வேலை தனக்கு இன்னும் எளிதாகியிருப்பதை  நிம்மதியோடு பகிர்ந்துக் கொண்டாள். 

வாங்க ஆசைப்பட்டு வாங்காமல் விட்டு வைத்திருந்த சின்ன சின்ன பொருட்களும் அவற்றை அந்தந்த கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வரிசையும் ஞாபகத்தில் வந்துப் போனது. எனது சிறிய விடுதி அறையில் இருக்கும் இடப்பற்றாக்குறையை கணக்கில் கொண்டு அவைகளை தவிர்த்து விட்டிருந்தேன். மனதிற்கு நெருக்காமானவற்றை எல்லாம் உள்ளே எடுத்து வர வாழ்வின் அறை தடை செய்யாமல் அனுமதித்து விட்டால் வாழ்க்கை எவ்வளவு திருப்தியாக அமைந்துவிடும்.படிப்பு வேலை என்று இறங்கியதற்கு பதிலாக நேரடியாக திருமணம் என்கிற படியில் கால் வைக்க நேர்ந்திருந்தாலாவது எனக்கென்று அலைந்துக் கொள்ள நான்கு அறைகளாவது மிஞ்சியிருக்குமோவென அன்று  தோன்றியது. என்ன முட்டாள்தனமான யோசனையென்று என்னை நானே நொந்துக் கொண்டேன். இப்படி  ஒற்றை கட்டிலே கதியென்று அதிலேயே அமர்ந்துச் சாப்பிட்டு, அதிலேயே புரண்டபடி மொபைலைத் துளாவி, அதிலேயே உறங்கிப் போகிறதும், குறித்த நேரத்திற்குள் தட்டைத் தூக்கி கொண்டு போய் ஏதோவொரு உணவை வாங்கி வந்து ருசி எப்படி இருந்தாலும் வயிற்றை ரொப்பிக் கொள்ள உள்திணித்துக் கொள்வதுமாக நகர்கிற வாழ்க்கை சலிப்பு மூட்டியது.

சலிப்புகள் சோர்வை தந்தாலும் மொத்தமாக ஓய்ந்து விட மனமில்லாதவளாய் அலைந்துக் கொண்டிருந்தேன். 

“ என்ன கனவு பலமா இருக்குபோல”

மதியச்சோற்றை பிசைந்தபடி அமர்ந்திருந்த என்னை சாந்தி அக்காவின் குரல் யோசனையிலிருந்து மீட்டது. 

“ அப்படிலாம் இல்லக்கா”

“ அட என்னன்னு சொல்லு. யோசனை பலமா இருந்திச்சே”

“ புதுசா ஒன்னு.. யில்லக்கா”

“ ரைட்டு. அப்ப..புடிச்ச வேலை, உனக்குன்னு ஒரு தனி ரூம் அதான”

“…”

நான் ஆமாம் என்பதாக தலையசைத்தேன். 

“ ம்ம்..”

“ நீயுந்தான் அப்பப்ப ஏதோ ஒரு இடத்துக்கு இன்டர்வியூ போயிட்டுதான் இருக்க. ஒன்னும் நல்லதா நடக்க மாட்டேங்குது. எதுக்கு இவ்வளவு பிடிவாதம்.”

“ புடிக்காத வேலைய எவ்வளவு நாள் தான்க்கா பாக்க முடியும்.”

“ உன்ன யாரு பாக்க சொன்னாங்க. ஒரு கல்யாணத்த பண்ணிக்கோ. வேலை புடிக்கலேனா விட்டிரு.”

“  பொண்ணுங்களுக்கு  வேலைய விடுறதுக்கு கல்யாணம் சரியான துருப்புச்சீட்டுலக்கா”

நான் விட்டேத்தியாக சிரித்தேன். 

“ இப்படியே பேசிகிட்டு இருக்காம புத்தியா பொழச்சுக்கோ. அவ்வளவுதான் சொல்ல முடியும்.”

கல்யாணம் அத்தனை பெரிய புத்திசாலித்தனமான தீர்வா என்று வாய் வரைக்கும் நெருங்கிய கேள்வியை உள்ளுக்குள்ளேயே விழுங்கிக் கொண்டேன். 

*****

க்கத்து கட்டிடத்திலிருந்து பால்கனி கைப்பிடிச்சுவரில் குதித்த  பூனையின் மியாவ் சத்தத்தில் நிகழ்நொடிக்கு மீண்டு வந்தேன். உறங்க முடியாமல்  நடு இரவில் இப்படி நின்றுக் கொண்டிருப்பது கண்களுக்கு அயர்ச்சியை உண்டு பண்ணியது. குனிந்து கையிலிருந்த மொபைலின் பொத்தானை அழுத்திப் பார்த்த போது நேரம் அதிகாலை நான்கைத் தொட்டிருந்தது. உறக்கம் பிடிக்காவிட்டாலும் சற்று நேரம் கண்களை மூடியபடி படுத்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் வேலை நேரத்தில் தாக்குப்பிடித்து நிற்பது சிரமம். மறுநாள் வரும் அட்சயத் திருதியைக்கு அதிகாலை ஐந்தரை மணிக்கே  வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கும். 

 பால்கனியிலிருந்து திரும்பி அறையை நோக்கி நடந்தேன். கண்ணாடி சுவருக்குள் தெரிந்துக் கொண்டிருந்த மெல்லிய ஒளி  இன்னும் மிச்சமிருந்தது.


 

எழுதியவர்

பத்மகுமாரி
பத்மகுமாரி
நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது சென்னையிலுள்ள ஐ. டி துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக இவர் எழுதும் சிறுகதைகள் பல்வேறு இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன. இவரின் சிறுகதைகள் ”நட்சத்திரம்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலாக வாசகசாலை பதிப்பகம் மூலம் வெளியாகி இருக்கிறது.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x