17 September 2024

 

[ I ]

ரேவதி நேற்று தான் கேட்டது போலிருக்கிறது “ஏன் தாத்தா தம்பி லீவு முடிஞ்சும் இங்கயே இருக்கான்? அவன் வீட்டுக்கு இனிமே போகவே மாட்டானா?” பதினெட்டு வருடங்கள் பறந்து விட்டிருப்பதையே நினைத்துப் பார்த்துத்தான் மலைக்க வேண்டியிருந்தது. கையிலிருந்த தினசரி வெறும் பொருளாக மட்டும். சில விநாடிகள் காணும் எதிலும் அமர மறுத்து ஸ்தம்பித்தது மனம்.  ‘திடீரென ஏன் இந்த நினைப்பு வந்து தொலைக்கிறது!’ மூப்பின் காரணமாக நிறைய துழாவ வேண்டியிருக்கிறது ஒவ்வொன்றிற்கும். நினைத்த மாத்திரத்தில் மனதிற்குள் இருந்து முன் போல பதில்கள் எழுந்து வருவதில்லை. விரல்கள் விரித்துப் பிடித்திருந்த தினசரியின் பக்கத்தை, யோசிப்பிலிருந்து மீண்ட மனம், மீண்டும் காணத் துவங்கியதும் துலக்கமானது. ம்… இதோ இந்த செய்தி தான்; இதனை வாசித்ததும் தான் காலத்திற்கு சிறகு முளைத்து பின்னோக்கிப் பறக்கத் துவங்கி இருக்கிறது. நழுவ இருந்ததைப் பிடிக்க முடிந்ததில் சிறிதளவெனும் ஆசுவாசம் கொண்டார் தாத்தா. 

குமரன் வீட்டில் இல்லை. கல்லூரிக்குப் போயிருக்கும் அவன் வருவதற்குள் மாலை இரவிற்குள் நுழைந்திருக்கும். கண்காணிப்புக் கண்கள் அவசியப்படாத எந்தத் தொந்தரவும் தராத இளைஞன். என்ன நிதானமாக சாப்பிட்டுத் தொலைக்க மாட்டான். அது மட்டும் தான் அவஸ்தை. ஒரு வேளை இவன் தன்னிடம் வளராமல் அங்கேயே வளர்ந்திருந்தால் இப்போது இருக்கிறவனாகவே இருந்திருப்பானா? தாத்தாவிடம் ஆழமாக வெளிப்பட்ட ஒரு அயற்சிப் பெருமூச்சு மட்டுமிருந்தது, பதிலுக்கு பதிலாக. சமயங்களில் லீலா அதீதமாக பயந்து கற்பனை செய்து கொண்டு இம்முடிவை எடுத்தாளோ என்ற எண்ணம் வந்து போகும் அவருக்கு. ஆனால் தனது மகளின் இடத்திலிருந்து யோசிக்க முற்படும் முதற்கணமே அவர் விளங்கிக் கொள்வார். ஒரு வகையில் தனது மகளின் வாழ்க்கை இப்படியாகிப் போனதற்கு தானும் ஒரு முக்கியக் காரணம் எனும் நினைப்பு அவருள் நிலைத்துப் போயிற்று. இது சார்ந்த விடயங்களில் மனசு தோய்கிற பொழுதெல்லாம் ஒருவித ஆயாசம் எழுந்து அழுத்தும். இப்போதும் இலட்சத்தியோராவது முறையாக அழுத்தி அடங்குகிறது. சிலரது வாழ்க்கை நிரந்தரமாகவே நட்சத்திரங்களற்ற வானம் தான். அதனாலேயே குமரனின் மீது தனிப்பிரியமுண்டு. அந்த காலியான கோப்பையை தானன்றி வேறு யாராலும் நிரம்பிட முடியாது என்று அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

“என்ன தாத்ஸ் மதியம் ஒழுங்கா சாப்டீங்களா?” பல ஆண்டுகளாய் மாசிலாமணியின் தனிமையையும், தேவையற்ற சிந்தனைச் சரடுகளையும் ஒருசேர மீட்டெடுக்கிற அக்குரல் கேட்டது. அப்படியெனில் மணி ஐந்தரையைத் தாண்டியிருக்க வேண்டும். அதிசயம் போல ஒருநாளும் அலுவலகம் முடிந்து வருகிற அலுப்பை முகத்தில் சுமந்து வராதவள் ரேவதி. இன்றும் அப்படியே தான் வந்திருக்கிறாள். உள்ளே வந்தவள் கைப்பையை சோபாவில் எறிந்துவிட்டு உடுக்கை வடிவ மூங்கில் இருக்கையை காலால் நெட்டித் தள்ளிக் கொண்டே சன்னலோரம் அமர்ந்திருக்கும் தாத்தாவின் அருகே நகர்த்தி அதில் அமர்ந்து கொண்டாள். அவளிடம் பெரும்பாலும் புன்னகையை மட்டுமே முதல் வாக்கியமாய் பேசுகிற தாத்தா அப்போதும் அதையே செய்தார். அதில் தெரிகிற நுண்ணிய வேறுபாடுகளில் இருந்தே தனது கேள்விக்கான பதில்களை கோர்த்துக் கொள்ளுகிற நுட்பம் தெரிந்த அவளும் திருப்திகரமான ஒரு பதில் புன்னகை பூத்தாள். 

“அவன் இன்னும் வரலயா…? உங்களுக்கு எத்தன தடவ சொல்றது கொஞ்சம் கண்டிப்பா இருங்கன்னு. ரெண்டு மணிக்கே முடிஞ்சுருது காலேஜ். ஆனா தொர வீடு சேர்றதுக்குள்ள எட்டு தாண்டிடுது. உங்களத் தான் நான் திட்டுவேன்.”

“உனக்குத் தெரியாதா அவன் வேற எங்க போகப் போறான். மனோ வீட்டில தான் கெடப்பான். இல்லென்னா அவங்க ரெண்டு பேருமா சேர்ந்து எங்கயாவது போயிருப்பாங்க. இங்கன கெடந்தா உன்னப் பாக்க அங்க வருவான். அவ்வளவேதான். வேற எங்காவது போடான்னு சொன்னாக் கூட போகமாட்றானே!”

“சரி சரி… ரொம்ப சீரியசாகாதீங்க தாத்ஸ். டீ போடவா காபி போடவா” எழுந்து முடியை கொண்டையிட்டுக் கொண்டே கேட்டாள். 

“வழக்கம் போல உனக்கு என்ன போடுறியோ அதுவே எனக்கும்” தினசரியை மடித்தபடி சொன்னார் தாத்தா.

மனோவின் பைக் சத்தம் வீட்டின் முன்பு அமைதியாகுகையில் மணி ஏழேமுக்கால். இருவரும் நுழைந்ததும் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவின் இருபுறமும் அமர்ந்து கொண்டனர். “சாப்பிடுறீங்களா ரெண்டு பேரும்?” தொலைக்காட்சியில் இருந்து கண்களை எடுக்காமலே கேட்டார். “இல்ல தாத்தா கொஞ்சம் வேலை இருக்கு, கிளம்பணும்.” அடுத்த இரு நிமிடங்களில் மென்மையாய் அவர் தோளை இறுக்கி அணைத்துவிட்டு விடைபெற்றுக் கொண்டான் மனோ. வழியனுப்ப வாசல் சென்று திரும்பிய குமரன் தாத்தாவின் மடியில் படுத்துக் கொண்டான். தாத்தா வெறுமனே தலையை மட்டும் கோதத் துவங்கினார். அவர்கள் மிகக் குறைவாகவே பேசிக் கொண்டனர். இதயங்களுக்குள் இணைப்பும் இணக்கமும் ஏற்பட்டுவிட்ட பிறகு சொற்கள் அவசியமற்றுப் போய் விடுகின்றன. 

 

 

தாத்தாவின் மனம் மீண்டுமொருமுறை காலத்தின் பிடி தளர்ந்து பின்னால் நழுவியது. பார்த்துப் பார்த்து தனது மகளுக்குத் தேடிப்பிடித்து கட்டி வைத்தவன் கயவன் எனத் தெரியவந்த நாளில் நொறுங்கிப் போனவர் பின்னர் இக்கணம் வரை அதிலிருந்து மீள வழியில்லாமல் கம்பீரமிழந்து புழுங்கிக் கொண்டு தான் இருக்கிறார். லீலாவின் வாழ்வை தானே சூன்யமாக்கி விட்டோமெனும் குற்ற உணர்விலிருந்து அவரால் ஒரு போதும் வெளிவர இயலவில்லை. லீலாவே அவரால் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை என்று ஆறுதல் சொல்லிய போதிலும் இவரது மனம் அதை ஏற்க மறுத்தது. திருமணமாகி மிகச் சரியாக ஏழே மாதங்களில் – தேடிச் சலித்தெடுத்து தனது மகளுக்கு தான் பார்த்து வைத்த – மாப்பிள்ளை ஒரு பெண் போகி என்பது வெட்ட வெளிச்சமானது. ஊருக்காக வாழாத மனிதரென்பதால் லீலாவை அவனைப் பிரிந்து தன்னோடு வந்துவிடும்படியாக எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அவளோ தான் கர்ப்பவதியாக இருப்பதைக் காரணங்காட்டி வர இயலாதெனவும் இது தான் தனது வாழ்க்கை என்றான பின்பு அதிலிருந்து திரும்புதல் சாத்தியமற்றது என்றும் சொல்லி விட்டாள். 

அவள் சொல்லிய காரணத்தால் அயர்ந்து போனார். தான் பார்த்துப் பார்த்து செதுக்கிய ஒரே மகளின் ஆளுமை இறுதியில் இப்படி பிற்போக்காக சிந்திக்கிற சராசரி பெண்ணினுடையதாய் சுருங்கிப் போனதே என்று பெருவருத்தம் கொண்டார். அவ்வேதனை தொலைந்து போன அவளது வாழ்க்கை குறித்த வேதனைக்கு நிகராக அவரது மனதை அடைத்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்லத்தான் தனது மகள் அவளது கணவனுடன் இருப்பது கட்டுப்பெட்டித்தனமான காரணங்களுக்காக அல்ல என்பதை உணர்ந்து கொண்டார். லீலா தனது உடனிருப்பையே கணவனுக்கான வாழ்நாள் தண்டனையாக மாற்றியிருந்தாள். அவனால் உடைக்க இயலாத ஒரு விலங்கை நித்தமும் இரை தேடிக் கொண்டிருக்கிற அந்த விலங்கின் மனச்சான்றில் பூட்டி வைத்தாள். அலைதலும், அலைவது அவ்வப்போது கிடைத்தும் அதை போகிக்க முடியாத ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருந்தாள். ஒரு நாளும் தனது தவறுகள் மலிந்த வாழ்க்கையை நிம்மதியாக, சுதந்திரமான பிரக்ஞையுடன் வாழ இயலாத ஒன்றாக மாற்றி வைத்து அதற்கான காவல் பூதமாக தன்னையே மாற்றிக் கொண்டிருந்தாள். அது சரியா தவறா, அவன் செய்கிற தவறுகளுக்காக தனது வாழ்க்கையை அவள் ஏன் இப்படி பொசுக்கிக் கொள்ள வேண்டுமென நினைக்கும் போதெல்லாம், தன்னுடைய சுயதேர்வு இது என்பதை தெளிவாக்குவாள். இது ஏதோ ஒரு வகையில் அவரை சிறிதளவேனும் நிம்மதி கொள்ளச் செய்தது. 

ஒரு விடயத்தில் மிக உறுதியானதொரு முடிவை எடுத்தாள் லீலா. அது தனது குழந்தை ஆணோ, பெண்ணோ தன்னோடு தான் வசிக்கும் வீட்டில் வளரக் கூடாது என்பது. பிரசவித்தது ஆண் குழந்தை என்று தெரிந்ததும் அவளது உறுதி இரட்டிப்பானது. ஒரு போதும் தனது கணவனின் சாயல் தனது மகனுக்குள் படிந்துவிடக் கூடாது எனவும், அதை உறுதி செய்வதே இனி தன் வாழ்வின் இரண்டாவது முக்கிய பணி என்று நினைத்துக் கொண்டாள். தலைப்பிரசவத்திற்கு வீட்டிற்கு வந்தவள் மகனுக்கு ஒரு வயதாகும் வரையிலும் உடனிருந்து பின்னர் தனியளாகவே புறப்பட்டுச் சென்றாள். மகனைப் பார்ப்பது தனது அடிப்படை உரிமை என்ற கணவனின் கோரல்களை புறந்தள்ளினாள். தகப்பனின் வாசனை கூட மகனுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டாள். அதுவும் அத்தகப்பனுக்கு வாழ்நாள் தண்டனையானது. துவக்க காலங்களில் பிள்ளையைக் காண அவன் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு, தோற்றுத் தோற்று பின் ஒரு கட்டத்தில் முயல்வதையே கைவிட்டிருந்தான். வருடந்தோறும் அவள் மட்டும் கோடை விடுமுறையில் ஓரிரு வாரங்களாவது மகனுடன் வந்து தங்கிச் செல்வாள். பண்டிகைக் காலங்களிலும் வந்து போவாள். தனியராய் இருக்கிற தாத்தாவிற்கு உற்ற துணை தான்தான் என்று அச்சிறுவனை நம்பச் செய்திருந்தது இந்த ஏற்பாட்டை அவன் வேறு கோணங்களில் எதிர்கொண்டு சந்தேகிக்க இடங்கொடாமல் பார்த்துக் கொள்ள உதவியது. 

பால்யத்திலேயே தந்தையின் இல்லாமையை மிக எளிதாய் தாத்தாவைக் கொண்டு நிரப்பிக் கொள்ளப் பழகியிருந்தான் குமரகுரு. அவரது பெருக்கெடுத்தோடிய அன்பு அந்த மடைமாற்றத்தை எளிதாக்கியிருந்தது. இல்லாமையை உணரும் இடத்திலிருந்தானே ஏக்கம் ஊற்றெடுக்கிறது. தனது பேரன்பால் பேரனை நனைத்துக் கொண்டே இருந்ததால் அவனது கோப்பை ஒரு நாளும் காலியாகவே இல்லை. என்னதான் தனது மகள் ஏறத்தாழ ஒரு போராளி வாழ்க்கையைத் தேர்ந்து கொண்டாலும், ஒரு தகப்பனாக அவளது வாழ்க்கை பலரையும் போல ஒரு இயல்பான, அமைதி நிரம்பிய ஒரு வாழ்க்கையாக இருக்கவில்லையே என்ற அங்கலாய்ப்பில் இருந்து அவரால் தப்பித்துக் கொள்ள இயலவில்லை.  

திடீரென நீண்ட ஒரு கரம் அவரை இயல்பிற்குள் இழுத்து வந்தது. குமரன் நீர் வழிகிற அவரது கன்னங்களைத் துடைத்து விழிகளையும் துடைத்து விட்டான். மடியில் கிடத்தி தலைகோதிக் கிடக்கையில் தன்னையுமறியாமல் வழிந்திருந்த கண்ணீரின் இரு சொட்டுகள் அவன் மீது விழுந்திருந்ததை புரிந்து கொண்டார். அவன் விளக்கமென எதையும் கோரவில்லை. இதெல்லாம் எதோ அவ்வப்போது நிகழ்வதுதான் என்பது போலவே இருவரும் நடந்து கொண்டனர். தானொருமுறை கண்களையும் முகத்தையும் அழுந்தத் துடைத்துவிட்டு ஒரு புன்னகையை பிரதியிட்டுக் கொண்டார் தாத்தா.

மெல்ல மடியிலிருந்து எழுந்து கொண்ட அவனது வலது கரம் போகிற போக்கில் அவருடையதோடு கோர்த்துக் கொள்ள, மறுப்பின்றி எழுந்து அவனைத் தொடர்ந்தார். உணவு மேசையில் அவரை அமரச் செய்து உள்ளே சென்றான். இருப்பினும் அவன் பின்னாலேயே வந்த அவர் இரு தட்டுகளில் உணவிட அவன் இரண்டையும் எடுத்துக் கொண்டு முன்செல்ல அவர் தொடர்ந்தார். மௌனத்தில் மூழ்கிய அந்த வீட்டில் உண்டு முடித்த இரு ஜீவன்கள் நீந்திக் கொண்டிருந்தன. ஒரே அறையில் இருந்த இரு தனித்தனி படுக்கைகளில் படுத்துக் கொண்டனர். வயது வந்த பிள்ளை, தனியறையில் படுத்துக் கொள்ளுமாறு தாத்தா எவ்வளவோ சொல்லியும் மறுத்து இப்படி ஒரே அறையில் கிடக்கிறான். தன்னுடைய அறையை வெறுமனே படிப்பறையாக பயன்படுத்துகிறான். தான் தான் இவருக்கு தனிப்பெருந்துணை எனும் நினைப்பு மிக ஆழமாக மனதில் படிந்து விட்டதன் விளைவாகவே இவ்விதம் பேரன் நடந்து கொள்வதாய் தாத்தா உணர்ந்தார்.

 

[ II ]

 

விழிப்புத் தட்டியபோது தாத்தா குமரனின் காலியான படுக்கையைத் தான் கண்டார். காலையில் எழுந்து படிப்பதில் அவனுக்கு விருப்பம் அதிகம். அது தான் அவனியல்பு. கூடத்திற்கு வந்து சோபாவில் அமர்ந்த போது எதிரில் டீபாயில் அன்றைய தினசரி மடித்து வைக்கப்பட்டிருக்க அருகிலேயே ஒரு பிளாஸ்க்கும் அவரது நீலப் பூக்கோலமிட்ட வெள்ளைப் பீங்கான் கோப்பையும் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஒரு குறும்புன்னகை அவர் இதழோரம் எழுந்து மீண்டது. தினசரியைத் தொடாமல் தேநீர் மட்டும் அருந்திவிட்டு சமையலறைக்கு நகர்ந்தார். மதியத்திற்கு அரிசி ஊற வைக்கப்பட்டிருந்தது. காலைக்கு கொஞ்சம் சட்னி அரைக்கப்பட்டு ஒரு சிறு பாத்திரத்தில் மூடிவைக்கப்பட்டு சமையல் மேடையில் தயாராய் இருந்தது. அவர் பங்கிற்கு அரிசியை உலையிலிட்டு, மறுபக்கம் இட்லி ஊற்றி வைத்து அடுப்பிலேற்றிவிட்டு கூடத்திற்கு வந்தார். வீட்டிற்கு வெளியே தெற்குப் பகுதியில் விட்டின் முகப்பிலிருந்து பின்பகுதி வரை நீண்டிருந்த சிமெண்ட் தளத்தில் காலை நடை போடுவது அவரது அன்றாடம். அப்பகுதியில் ரேவதியின் வீட்டையும் இந்த வீட்டையும் பிரிக்கிற சுற்றுச் சுவரை ஒட்டினார் போல செம்பருத்தியும், நந்தியாவட்டையும் சிறு சிறு தொட்டிச் செடிகளும் வரிசை கட்டியிருக்கும். யாரோ கோலமிட வெண்புள்ளிகளைக் கிள்ளி வைத்திருப்பதைப் போல அத்தனை அழகாய் நந்தியாவட்டைகள் செடியினைச் சுற்றிலும் சிதறிக் கிடந்தன. நடைபோடும் முன்னர் அவற்றை கூட்டி செடிக்குள்ளேயே தள்ளி பாதையை சுத்தம் செய்துவிட்டுத் தான் நடையைத் துவங்குவார். பூக்களை மறந்தும் மிதிக்காத கவனம் அவருக்கு எப்போதும் இருந்தது. வீட்டைச் சுற்றிலும் நடைபாதை இருக்கிற போதிலும், தெற்குப் பக்கம் தான் அதிக இடமிருந்தது. மற்ற பக்கங்களில் இருவர் சேர்ந்து நடப்பதற்கான இடைவெளி தான் இருக்கும். அடுப்பில் வைத்திருக்கும் உலை குறித்த கவலையின்றி மெல்ல நடக்கத் துவங்கினார். அதனை குமரன் கவனித்துக் கொள்வான். 

மாடியில் முந்தைய நாள் காயப் போட்டிருந்த துணிகளை எடுக்க வந்த ரேவதி நடைபயிலும் தாத்தாவைப் பார்த்து மலர்ந்து புன்னகைத்து கையசைக்க அவரும் கையசைப்பால் மறுமொழிந்தார். இறங்கி வருகையில் சுற்றுச் சுவரை ஒட்டி வந்தவள் “இன்னைக்கு கீரைக் குழம்பும் அவரைக்காய் பொரியலும். ஓகே தானே?” என்றாள். இருபுறமும் தோள்களில் நிறைத்து தொங்கிக் கொண்டிருந்த காய்ந்த துணிகள் அவளது தோள்கள் ஏதோ ஜார் மன்னர்களின் உடையலங்காரத்தை ஒத்திருப்பதாக வடிவரீதியில் நினைவூட்டியது. ஆமோதிப்பாய் சைகை செய்த தாத்தா “காலைக்கு இட்லியும் தேங்காய் சட்டினியும்” என்றார். காற்றில் ஒரு ஹை ஃபைவ் அடித்து நகர்ந்தாள்.

இருவீடுகளுக்கும் பொதுவாக வேளைக்கு ஒன்றென ‘கூட்டு சமையல்’ துவங்கி வருடம் இரண்டாகிறது.   பிரசவத்திலேயே தாயை இழந்ததால் அப்பத்தாவிடம் வளர வேண்டியதாயிற்று ரேவதிக்கு. வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தந்தையும் வருடத்திற்கு ஒரு முறை தான் விடுமுறைக்கு வந்து போக முடிந்தது. அது கூட வருடந்தோறும் அல்ல எனும் நிலையில், இயல்பிலேயே பால்யம் தொட்டே அவளது துணைக்கு அழையா விருந்தாளியாக வந்து தங்கி கொண்டது தனிமை. அப்பத்தாவும் பேத்தியின் பேரில் பிரியமாகவே இருந்தாள். ஆனால் பணியில் இருக்கும் போதே மகன் எதிர்பாரா விபத்தில் பலியானது முதல் அந்த இணக்கம் அற்றுப் போனது. பிறக்கும் போதே தாயை விழுங்கியவள் இப்போது தந்தையையும் விழுங்கி விட்டதாக அவள் வார்த்தைச் சவுக்கைச் சொடுக்கத் துவங்கியது அப்போதிருந்துதான். ரேவதியின் தந்தை பணியிடத்தில் நன்மதிப்பை ஈட்டி வைத்திருந்தபடியால் அந்நிறுவனம் தங்களது ஊழியரின் இழப்பிற்கு ஈடாக குடும்பத்தின் பிறிதொரு நபருக்கு அவ்வேலைக்கு நிகரான வேலையைத் தர முன்வந்தது. ஆனாலும் ரேவதி பெண் என்பதால் அது சாத்தியப்படவில்லை. போக அவள் அப்போதுதான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். இருப்பினும் அம்முதலாளி தனது நல்ல ஊழியரின் குடும்பத்தை நிர்கதியாய் விட மனமில்லாதவராய், தனது தொடர்புகளை பயன்படுத்தி, இந்தியாவில் இவர்களது சொந்த ஊரிலேயே அவளது படிப்பு முடிந்தவுடன் அதற்கேற்ற ஒரு வேலையை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டார். கூடவே தனது நிறுவன நியதிகளின் படி பணியின் போது இறந்ததற்காக அவருக்கு தரப்பட வேண்டிய நஷ்ட ஈடு மற்றும் இதர பணப்பலன்கள் என சகலத்தையும் முழுமையாக குடும்பத்திடம் சேர்ப்பித்தது பேருதவியாகப் போனது. ரேவதி வேலைக்குச் செல்லுகிற காலம் கனியும் வரை அவர்களது வாழ்வாதராமாக அதுவே அவர்களைக் காத்தது. 

அப்பாத்தாவின் குத்தல் பேச்சுகளை காலம் தன் சல்லடையால் சலித்திருந்தது. அவளும் அமைதியானாள். இருவருடங்களுக்கு முன்பு மூப்பு அவளையும் அழைத்துச் சென்றுவிட அகத்தில் மட்டுமல்லாது புறத்திலும் முழுமையான தனிமரமானாள் ரேவதி. வேறு உறவு எனச் சொல்ல எவருமில்லாத நிலையில் திணிக்கப்பட்டுவிட்ட தனிமையை கரங்களில் ஏந்தியபடி என்ன செய்வதென்றே தெரியாமல் தத்தளித்தவளை தனது சிறகுகளுக்குள் ஒடுக்கிக் கொண்டார் தாத்தா. இந்த கூட்டுச் சமையல் யோசனை எல்லாம் கூட அவருடையதுதான். இரு பத்தாண்டுகளாய் கட்டிடங்களாக அவர்களின் வீடுகள் தான்   தனித்திருந்தனவே ஒழிய மனதளவில் ஒன்றாகவே இருந்தனர். அதனால் இந்த ஏற்பாடு ஒன்றும் புதிது போல தோன்றவில்லை. இருவரது வீட்டிலும் தங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளவென தனித்தனி கேரியர்கள் இருந்தன. அவை மாறி மாறி அவ்வீடுகளின் அன்பைச் சுமந்து அங்கும் இங்குமாய் சென்று வந்தன. 

நடை பயிற்சி முடிந்து உள்ளே சென்றவருக்கு குளியலறையில் நீர் விழுகிற சப்தம் கேட்டது. கூடவே மிக மெல்லிய குரலில் ஏதோ பாடலின் முணுமுணுப்பும். சமயலறையில் ரேவதிக்கான கேரியரில் கீழ் அடுக்கில் சாதம் வைக்கப்பட்டு மேல் அடுக்குகள் அருகிலும், இன்னொரு சிறிய பாக்ஸில் மூன்று இட்லிகளும் தயாராக வைக்கப்பட்டிருந்தன. மீதமிருந்த இட்லிகள் ஹாட் பாக்ஸில் காத்திருந்தன. கூடத்திலிருந்து சீழ்க்கையொலி கேட்டது. ரேவதியால் தன் வருகையினை ஒலியால் முன்னறிவிக்காமல் இருக்கவே இயலுவதில்லை. கையில் ஒரு வயர் கூடையில் சுமந்து வந்த தனது பங்களிப்பை சமையல் மேடையில் பரப்பினாள். அது சூட்டைத் தக்கவைக்கிற அடுக்குக் கேரியராக இருந்தது. குமரனுக்கான உணவை அவளே அவனுடைய கேரியரில் நிரப்பினாள். தனக்காக வைக்கப்பட்டிருந்ததையும் முழுமை செய்து கூடத்து டீபாயில் வைத்து விட்டு, தனக்கான இட்லிகளை எடுத்து உணவு மேசைக்கு வந்தாள். 

தலை துவட்டியபடி வெளிவந்த குமரன் அவளது உணவு நிரம்பிய வாயின் இடைவெளியினின்று வெளிப்பட்ட குழறலான “குல்மால்னிங் ளா” வை எதிர்கொண்டான். பதிலுக்கு பெரிய உணவுவிடுதியின் வாயிற்காப்பாளர்கள் குனிந்து வைக்கிற வணக்கத்தைப் போல செய்து அவளை பரிகாசம் செய்தான். 

“ஆரம்பிச்சுட்டிங்களா ரெண்டு பேரும் விடிஞ்சதுமே! குமரா வா சாப்பிட உக்காரு. நேரமாகுது.” தாத்தாவும் அவர்களுடனே அமர்ந்தார். அவர் குரலுக்கு இருந்த மதிப்பு அவனது உடல்மொழியில் வெளிப்பட்டது. மறுவார்த்தையின்றி அமர்ந்தவனிடம், “டேய் இன்னைக்கு கொஞ்சம் லேட்டாகிடுச்சு. என்னையை வழக்கமாக விட்ற இடத்துல விட்டுட்டுப் போயிருடா…” என்றாள். 

“வேணும்னா பஸ் ஸ்டாப்ல இறக்கி விடுறேன். அது போதாதா?”

“ஏய்! ஒழுங்கா விட்டுட்டுப் போ… ப்ளீஸ்டா…” குரல் உயர்ந்து பின் தணிந்தது. 

“வெளயாடாத ரே! என்னையவே இன்னைக்கு மனோ வந்து தான் கூட்டிட்டு போறது மாதிரிதான் பிளான். இதுல நான் எப்படி…”

 “ஐயோ! அப்டீலாம் சொல்லாதடா! ப்ளீஸ்… ப்ளீஸ்…” அவன் பேச்சை இடைவெட்டி நச்சரிக்கத் துவங்கினாள். 

“சரி… போய்த் தொல… ஆனா ரே! நான் சாப்பிற வேகம் உனக்குத் தெரியும். இன்னும் பத்து நிமிசத்துல முழுசா ரெடியாகி வந்தா சேந்து போகலாம். இல்லென்னா…” 

 “நிதானமா சாப்பிட்டுத் தொலன்னா கேக்குறியா. தாத்ஸ் நான் வாரேன். இல்லேன்னா இவே ஓடீறுவா” என்று கீச்சுக் குரலில் கத்திக் கொண்டே ஓடினாள். கவனமா வீட்டப் பூட்டிட்டு வாம்மா எனும் அவரது குரலுக்கு வாசலில் இருந்து ஒரு “ம்… சரி சரி…” பறந்து வந்தது. 

 

அவர்கள் சேர்ந்து போவதொன்றும் புதிதல்ல. குமரன் லைசன்ஸ் எடுக்காத பள்ளிச் சிறுவனாக இருந்தபோதே அவர்கள் பைக்கில் பறந்திருக்கிறார்கள். சென்ற முதல் தடவையே போக்குவரத்துக் காவலர்களிடம் வசமாக சிக்கியுமிருக்கிறார்கள். அன்று ரேவதியின் மிக நெருங்கிய தோழி மல்லிகாவின் திருமணம்.  ‘பத்தாப்பு படிக்கிற பையன வண்டி ஓட்ட விட்டுட்டு பின்னால உக்காந்து வர்றியே உனக்கேல்லா அறிவில்ல’ என்று அந்த காவல் ஆய்வாளர் வாயாற வாழ்த்தி ஓரமாய் நிற்க வைத்துவிட்டார். பிறகு திருமண அழைப்பிதழைக் காட்டவும் தான் இவர்கள் சொல்லிக் கொண்டிருப்பது தப்பித்தலுக்கான சாக்குப்போக்கு அல்ல என்று விளங்கிக் கொண்டவர், இருபது நிமிடங்களுக்குப் பின் மனமிளகி போக அனுமதித்தார். அது ஆயிற்று ஐந்து வருடம்.

 

மிதமான வேகத்தில் செல்வது தான் இப்பொதெல்லாம் குமரனுக்கு பிடித்திருந்தது. அவளோ நேரமானதைக் காரணங்காட்டி வேகமாகப் போகுமாறு கெஞ்சிக் கொண்டிருந்தாள். வலது காதோரம் சம்மணமிட்டு அமர்ந்திருந்த அவளுடைய கீச்சுக் குரலின் பிடுங்கல் தாங்காமல் ஒரே மூச்சில் முறுக்கினான். “வாசல் வர வேண்டாம்டா. சீனிவாசன் பேப்பர் மார்ட் திருப்பத்துல இறக்கிவிட்டா போதும்” என்றவள் முடிக்கும் முன்னரே வண்டி அங்கே நின்றது. 

“இல்ல… பரவால்ல… நான் வாசல் வர வந்து விடுறேன்னு சொல்லணும்டா.” 

“நான் மூத்தவங்க சொன்னா மறுத்துப் பேச மாட்டேன்.” 

“யாரு? நீயு? மனசாட்சிப்படி சொல்லு. என்னைய மூத்தவளா என்னைக்காச்சும் ஒரே ஒரு நாள் நடத்திருப்ப? அட! அப்படி நெனச்சாவது பாத்திருப்பியா?” இதைச் சொல்லிய மறு நொடியே “தாங்ஸ்டா. நீ போ உனக்கு லேட்டாகிடப் போகுது” என்றும் அவளே சொல்லி அவனை அனுப்பியும் விட்டாள்.

 

[ III ]

 

மல்லிகா ரேவதியின் பள்ளிக் காலத் தோழி. ஒன்பதாம் வகுப்பில் புதிதாய் அவள் வந்து சேர்ந்த முதல் நாளே இருவருக்குமிடையே நட்பு பூத்துவிட்டது. மொட்டுவிட்டு மலரவெல்லாம் பொறுமையில்லை. பொதுவான ஏதோ ஓர் அலைவரிசையில் இருவரும் ஒத்திசைந்தனர். இத்தனைக்கும் குணதுருவங்கள். அதிகம் பேசாத ரேவதியும், அபூர்வமாய் மட்டுமே அமைதியாக இருக்கிற மல்லிகாவும் கூடியே திரிவது சக மாணவிகளுக்கு அதிசயம் தான். அவர்கள் பிரிந்திருக்கிற தருணங்கள் என்றால் அதிகம் பேசி மல்லிகா வகுப்பு வாசலில் முட்டி போட்டிருக்கும் போது மட்டும் தான். ‘வெவரமானவடி நீயு! வகுப்பு நேரத்துல மட்டும் உன்னோட உயிர் தோழிய விட்டுபுட்டு மத்த எல்லா பிள்ளையள்டயும் பேசிவைக்கிற. அவளோட பேசுனா அவளும் முட்டி போடணும்ல! பாத்திங்களா வெவரத்த?’ எனும்படியாக அந்த நட்பை ஆசிரியைகளும் சிலாகிக்கிற அளவுக்கு அத்தனை நெருக்கமானது. கல்லூரி இறுதியாண்டில் அப்பாவின் இழப்பால் ஒரு புறம் துவண்டிருந்தவளை, அப்பத்தாவின் விடமூறிய சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லத் துவங்கிய போது அதற்கெல்லாம் முறிமருந்தாய் இருந்து அரண் போல் அவளை அரவணைத்துக் காத்தவள் மல்லி தான்.     

தொட்டுத் தொடரும் பாரம்பரியமென கோர்த்த கரங்களை விடுவித்துக் கொள்ளமலேயே கல்லூரிப் படிப்பை முடித்தது மட்டுமல்லாமல் இதோ ஒரே நிறுவனத்தில், ஒரே பிரிவில் அதுவும் அடுத்தடுத்த இருக்கையில். இறைவன் தங்களது நட்பை இவ்வாறாக ஆசிர்வதித்திருப்பதாக அடிக்கடி சொல்லிக் கொள்கிறார்கள் இருவருமே. வடிவான பெண்களாகவே இருவருமிருந்த போதிலும், மணமான பிறகு கொஞ்சம் பூசிய மல்லிகா பிரசவத்திற்குப் பிறகு பெண்ணுடலை மைதானமாக்கி சுரப்பிகள் விளையாடுகிற கணிக்கக் கடினமான விளையாட்டுகளை தன் மீதும் ஆடியதன் விளைவாக ரேவதிக்கு அக்கா போல ஆகிவிட்டாள். எப்போதேனும் வெறுப்பேற்ற மட்டுமெ அவளை அக்கா என்பாள் ரேவதி. மற்றபடி மல்லி. 

மல்லியின் கணவன் ஒரு பிரபல ஜெனரேட்டர் உற்பத்தி நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி. மாதத்தில் பாதி நாள் பயணங்களிலேயே கழித்தாக வேண்டிய மனிதன். மனைவி தான் அவனது நிரந்தரக் காதலி. நட்பான நாள் தொட்டு தனது வாழ்வின் அன்றாடங்களை ஒப்பிக்காமல் ஓயாத மல்லி அப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாள். இவள் காய்ச்சலென விடுமுறையில் இருந்தால் கூட தொலைபேசி அன்றைய நாளின் நிகழ்ந்தவை, நிகழ்பவை என சகலமும் கூறி கட்டி கடைப் பரப்பாவிட்டாள் மல்லி செத்து விடுவாள். பிறகு தான் நலம் விசாரிப்பெல்லாம். இப்போது அலுவலகத்தில் மல்லி ரேவதியுடன் மட்டும் தான் பேசிட முடியும். ஏனைய இருக்கைகள் தள்ளித்தள்ளி இருக்கும். அவளிடம் ஏற்பட்டுள்ள ஒரே மாற்றம் கிசுகிசுப்பாக மெல்லிய குரலில் பேசுவது மட்டுமே. ரேவதியின் இருக்கைக்கு வலப்புறம் அவளது இருக்கை என்கிறபடியால் சமீப வருடங்களில் அவளது வலதுகாதின் கேட்கும் திறன் மட்டும் சற்றே கூடியிருக்கிறது. 

தனது தோழியின் பேச்சுகளையும், பகிர்வுகளையும் ஒரு நாளும் தொந்தரவாக நினைத்ததே இல்லை ரேவதி. உரிமைகளை கொடுத்து எடுக்கத் தேவையற்ற நெருக்கம் அவர்களுக்குள் ஏற்பட்டு வருடங்களாகின்றன. மல்லியைப் பொருத்தவரை தனது வாழ்வில் நிகழ்கிற யாதொன்றையும் வரிசை மாறாமல் தன் தோழியிடம் பகிர வேண்டும். அது என்ன என்பதெல்லாம் அவளுக்கு பொருட்டே அல்ல. திருமணத்திற்குப் பிறகு அவளது பகிர்வில் இயல்பாகவே மல்லிக்கும் அவளது கணவனுக்கும் இடையேயான அந்தரங்கமும் இடம்பிடித்துவிட்டது. மல்லியைப் பொருத்தவரை அதுவும் தகவல். தனக்கு நடந்தது. அதனால் ரேவதியிடம் பகிர்ந்தே ஆகவேண்டும். பதின்வயது முதல் தனது தோழியின் பேச்சிகளோடேயே வாழ்ந்து வருகிறாள் ரேவதி. ஆனால் சமீப வருடங்களில் அவளது அந்தரங்கங்கள் குறித்த பேச்சுகளை எப்படி எதிர்கொள்வது என்கிற சிக்கல் தனக்கு மிகப்புதிது என்பதை அது ஆரம்பித்த மிக துவங்க நாட்களிலேயே உணர்ந்து கொண்டாள். எதையும் விலாவாரியாகவே பகிரும் வழக்கமுள்ள மல்லி இதையும் அதற்கு விதிவிலக்காக்குவதே இல்லை. 

திருமணம் முடிந்த முதல் வார முடிவில் தான் பேசினாள். அவளது மிக அதிகபட்ச மௌனத்தின் கால அளவு அந்த ஒரு வாரம் மட்டும் தான். வந்ததும் வரிசை மாறாமல் அந்த ஒரு வாரத்தையும் வார்த்தைகளாக்கி அதனை நிகர் செய்தாள். ரேவதி நெளியத் துவங்கிய முதல் நாள் அது தான். இந்த ஐந்து வருடங்களில் தோழியின் வாழ்வனுபவப் பகிர்வே, தானே இல்லற வாழ்வை வாழ்ந்ததற்கு நிகரான, ஒரு இரண்டாம் நிலை, அனுபவப் புரிதலை அவளுக்கு வழங்கியிருந்தது. அவ்வளவு விரிவாக இருக்கும் மல்லியின் உள்ளீடுகள். 

தோழியின் பகிர்வில் குடும்ப வாழ்க்கையில் யாதொருவரும் எதிர்கொள்கிற சகல சிக்கல்களும், சிடுக்குகளும், சவால்களும் வந்து போகும். கணவரின் குடும்ப உறுப்பினர்கள் குறித்த, மல்லியின் குடும்ப உறுப்பினர்கள் குறித்த அத்தனை கதையும் அதில் அடக்கம். அதையெல்லாம் கேட்பதில் சங்கடங்களே இல்லை. அவளது அந்தரங்கங்கள் குறித்து அவள் பேசத் துவங்குகிற போது தான் ரேவதி தன்னுள் சில ரசாயன மாற்றங்களை எதிர்கொள்வாள். மற்ற விடயங்களைப் போலல்லாமல் மனது அந்தரங்கத்தைக் கேட்பது குறித்து மட்டும் வேண்டாமெனும் விலகலை ஒரு புறம் தேர்ந்து கொண்டாலும் அது வெறுமனே பாவனை என்பது போல் மறுபுறம் இன்னும் இன்னுமென மிக ரகசியமாக ஏங்கித் தவிப்பது அவளுக்கே விசித்திரமாக இருக்கும். அதுநாள் வரை தான் உணராத ஏதொ ஒன்றுக்குள் உடலையும் மனதையும் இழுத்துச் செல்கின்றன அப்பேச்சுகள். மல்லி தன்னில் பாதி என்றாலும் இதனை அவளிடம் சொல்லத் தயங்கியே நாட்களைக் கடத்துகிறாள் ரேவதி. அந்தரங்கம் குறித்த அவளது பகிர்தல்களின் போது அணுவளவு தொனி மாற்றமும் இருக்காது குரலில். அவள் இவற்றை தன் வாழ்வில் தான் கடக்கிற அனுபவக்குறிப்பின் இன்னுமொரு செய்தியாக மட்டுமே பாவித்து, பழக்கத்தின் நிமித்தமாகவே தன்னிடம் பகிர்கிறாள் என்பதை ரேவதி உள்ளூற உணர்ந்து கொண்டதால், ஒரு வேளை அதற்கு மட்டும் தடை சொல்லும் தனது எதிர்வினைதான் அதற்கு அதுவரையல்லாத தனி வண்ணம் பூசக்கூடுமென்றும் நினைத்தாள்.  

இன்று நிச்சயம் கதைகள் இருக்குமெனவும் அறிவாள். ஒன்பது நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை தான் மல்லியின் மல்லன் வந்திருப்பான். பதின்வயது முதல் பழகிய தோழியை தன்னில் பாதியாய் கருதியே, தன்னிடமிருந்தே தன்னை எப்படி மறைப்பது என்பதை அறியாத பேதையாய் அத்தனையும் ஒப்பிக்கிறாள். வேலைக்கு இடையிடையே தொடர்ந்து கிசுகிசுப்பாய் சரச லீலைகளை விலாவாரியாக விவரித்துக் கொண்டபடியே இருந்தாள். சிறு வயது முதலே தொடர் பேச்சுக்காரியான மல்லிக்கு, அவ்வனுபவமே பேச்சில் ஒரு வசீகரத்தை கலந்திருந்தது. வகுப்பின் சக தோழியரே இவளது பேச்சில் சொக்கித் தான் உடன் வாயாடி மாட்டிக் கொள்வார்கள். பிறர் சொன்னால் பிசுபிசுத்துப் போகிற சாதாரண செய்திகள் கூட அவள் வாய் புகுந்து வருகையில் சுவாரசியத் தோரணங்களாய் மினுமினுக்கும். ரேவதியின் தீராத் தனிமையை அது தான் இட்டு நிறைத்தது. எப்படி ஒருவரால் இத்தனை நுணுக்கமாக விவரிக்க முடிகிறது என வியக்குமளவுக்கு இருக்கும் அவளுடைய வரிசை குலையாத ஞாபகச் சரடுகள். காட்டுவது போல கதை சொல்வாள். மாமனின் விரலூர்ந்த வழித்தடங்கள் முதல், களைத்துக் கிறக்கிய உச்சப் பறத்தல்கள் வரை எதுவும் மங்காத, மறைக்காத நுண்விவரணைகளாய் அவளிடமிருந்து பிரவாகிக்கும்.

கேட்டுக் கொண்டிருக்கிற ரேவதி தன் முகபாவனைகளை, உடல் மொழியை இயல்பில் நிறுத்துவதற்கே அத்தனை திண்டாடுவாள். அதிலும் எங்கே தன் தவிப்பறிந்தால் தோழி துவள்வாளோ என அவளும் அறியாமல் இயல்பு காத்தல் சக்திக்கு மீறிய சவாலாகவே மாறிக் வருகிறது.  எதிர்பார்த்தபடியே எழுதியதை வாசிப்பது போல அத்தனை துல்லியமாய் இன்றுமிருக்கிறது சரசக் கதை சொல்லல். பகிர்கையில் மல்லியின் முகத்தில் அவளையும் மீறி மின்னி மறையும் சிறு மின்னல்கள் மூக்குத்தி மின்னுகிற அவள் முகத்தை இன்னும் அழகாக்கும். அதற்கெனவே கேட்கத் தோன்றும் ரேவதிக்கு. தான் கால்நனைக்காத கடலில் அவள் குளித்த அழகை அவளது சொற்கள் வாயிலாகவே பார்ப்பதை தோழியின் மீதான பிரியமாகவே மொழிபெயர்த்துக் கொண்டாள். 

இன்று கேட்கக் கேட்க இயல்பிலிருப்பது இன்னும் சிரமாக இருந்தது. கடும் பிரயத்தனத்திற்கு தன்னையே உட்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது அதற்கு. பாதமும் உள்ளங்கையும் வழக்கத்தை விடவும் இன்னுமதிகமாய் குளிர்ந்து போயின. வாய் வரண்டு, நாவு உலர்ந்து மேலன்னத்தோடு ஒட்டிக் கொண்டது. காய்ந்து போய்விட்ட தொண்டையை ஈரமாக்க எச்சில் விழுங்குவதே கடும் சிரமத்திற்குரிய சாகசமாய் நிமிடங்களில் மாறியிருந்தது. அவளுக்கோ கதைக் கேட்டுக் கொண்டிருப்பதற்கான சமிக்ஞைகள் தொடர்ந்து காட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். வழக்கமான மெல்லிய குரலிலான ‘ம்’ கொட்டல்கள் கூட இன்று இயலாத காரியம் போலாகிவிட்டதால் தலையசைப்பாக அதை மாற்றியிருந்தாள். கதைகளைச் சொல்லி முடித்தும் பகிர்ந்த திருப்தியில் மல்லி வேலையில் மூழ்கிப் போனாள். இவளுக்குத் தான் ரோதனை ஆரம்பித்தது.

கண் முன்னே மேசையில் விரிந்து கிடக்கிற கோப்புகளின் பக்கங்கள், அதிலுள்ள எண்களும் வார்த்தைகளும், உருகி வழிவது போலிருந்தது. மல்லி பகிர்ந்த சொற்கள் காட்சிகளாய் உருமாறி மனத்திரையில் தணிக்கையின்றி ஓடத் துவங்கியது.  பிடறி வியர்த்து வழியத் துவங்கிய வியர்வை நடுமுதுகில் பயணித்தது. உடல் சூடாகி காய்ச்சல் வருவது போல காய்ந்தது. கால்கள் தளர்ந்து மெலிதான ஒரு நடுக்கம் பரவத் துவங்கியது. கைவிரல்களில் கூட அது விரைந்து தொற்றிக் கொண்டது. அவளது மேசையின் இடப்புறமிருந்த விசைப்பலகையின் மீது வழக்கமாய் துரிதகதியில் விளையாடும் விரல்கள் தயங்கித் தயங்கி தப்பின. அடிவயிற்றில் இனம்புரியாத ஒரு மாற்றம் உருவாகி, வேதனையா இன்பமா என இனங்காண இயலாத போதிலும் இரத்த நாளங்களின் வழியாக அது உடலெங்கும் விரவியது. எண்ண ஓட்டங்களை முன்னிட்டு யாவரும் இருக்கிற அறையில் தான் இருப்பதே அவளுக்கு ஒருவித கூச்ச உணர்வைக் கிளர்த்த மனம் ஒரு ரகசிய தனிமையை எதிர்நோக்க ஆரம்பித்தது. கீழே உள்ள உணவகத்திற்கு என்றால் தானும் வருவதாய்ச் சொல்வாள் என்பதால் கழிவறைக்குச் செல்வதாய் சொல்லிவிட்டு கிளம்பினாள். கால்கள் பின்னிக் கொள்ள சாதாரண நடையே சாகசமாகவும், அதனை எவருமறியா வண்ணம் நிகழ்த்த எத்தனிப்பது அதிசாகசமாகவும் ஆகிப்போனது. கழிவறை இருக்கையில் ஆடைகளை தளர்த்தாமல் அப்படியே அமர்ந்து கொண்டாள். உடலின் ஒவ்வொரு அங்குலமும் பரபரத்துக் கிடந்தது. ஆனால் எதற்காக? 

சில நிமிடங்களில் உடலின் அதிர்வுகள் கொஞ்சமாய்த் தளர்ந்து மட்டுப்படத் துவங்கியது. காற்றில் அலைக்கழிந்த சிறகென அந்தரத்தில் ஆடிக் கொண்டிருந்த மனம் தரையிறங்க ஆரம்பித்தது. கால்களின் தளர்வு மெல்ல சீராவது போல தோன்றியது. வெறுமனே தண்ணீரைத் திறந்துவிட்டாள். தூய்மையான கோப்பையில் சுழன்று சுழன்று சுழிந்துக் கொண்டு ஓடுகிற நீரின் ஓட்டத்தோடு மனதிலேறியிருந்த கசடுகள் கலந்தோடுவதாய் நினைத்தபடி அதையே வெறித்திருந்தன அவளது கண்கள். 

 

[ IV ]

 

பெருவிருப்பத்துடன் தேர்ந்து கொண்ட பாடப்பிரிவெனும் போதிலும், மனோவின் இன்மை குமரனை தனியனாகவே உணரச் செய்கிறது, அதே வளாகத்தில் அவன் ஆங்கில இலக்கிய பிரிவில் இருக்கிறான் எனும் போதிலும். வகுப்பின் பிற நண்பர்களுடன் நட்பு பாராட்டினாலும் அது வெறுமனே மரியாதை நிமித்தமானதாய் மட்டுமே இருந்தது. அவர்களுடனான அவனது பொதுப் பேச்சு மிக மேலோட்டமானது. இயற்பியல் குறித்த உரையாடல்கள் மட்டுமே அவ்வப்போது ஆழமாய்ச் செல்லும். படிக்கிற பையன் என்பதால் அவர்களும் அவனோடு நல்ல அனுசரனையாக நடந்து கொள்வார்கள். இவனது பாடக் குறிப்புகள் தான் தேர்வுகளுக்கு முந்தைய வாரம் ஒளிநகல்களாக பல்கிப் பெருகி யாவர் கையிலும் தவழுமென்பதும் அதற்கு இன்னொரு காரணமாக இருந்தது.  

அவர்களது வகுப்பிலேயே மிக வித்தியாசமான பேர்வழி யாரெனக் கேட்டால் சட்டென எல்லா உதடுகளும் உச்சரிக்கும் ஒரே பெயர் மதன். சந்தேகமே வேண்டாம். இருக்கிற அத்தனை பேரிடம் தனித்தனியாய் கேட்டாலும் இப்பதில் மாறாது.  அதில் சில உதடுகள் மன்மதன் என்று இன்னமும் விரித்துச் சொல்லி குறும்புப் புன்னகையும் செய்யும். மதன் இப்பாடப்பிரிவில் சேர்ந்ததே ஒரு இனிய விபத்து. கல்லூரியில் சேர விண்ணப்பப் படிவம் வாங்க வந்த நாளில் வந்திருந்த யுவதியொருத்தியின் அழகில் மயங்கி அருகில் நின்று படிவம் நிரப்பிய அவளுடனே படிக்க நப்பாசைப் பட்டு எழுதித் தொலைத்தது தான் இயற்பியல். சோகம் என்னவென்றால் அப்பெண் எழுதியது உளவியல். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த முதல் எழுத்தை மட்டும் பார்த்த இந்தச் சோம்பேறி மீதத்தை இட்டு நிரப்பிக் கொண்டதால் வந்து சேர்ந்த இடமிது. இதனை பெரும் சிரிப்பலைகளுக்கு மத்தியில் கல்லூரி உணவகத்தில் வைத்து அவனே சிலமுறை சொல்லியிருக்கிறான். 

அவன் சொல்லும் எல்லாவற்றிற்கும் அங்கு ரகசிய ரசிகர்கள் அதிகம். அவனது தோற்றத்தை எடுப்பானது எனச் சொல்வதைக் காட்டிலும் துறுதுறுப்பானது என்பதே பொருத்தமாயிருக்கும். பல பெண்களையும், ஆண்டிகளையும் கவர்ந்த சல்லாபக் கதைகளை, அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாது, சொல்லப்படும் சுவாரசியத்திற்காகவே கேட்கும் கூட்டம் தான் அங்கே பெருவாரியானது. ஓரிரு ஆர்வக்கோளாறுகள் மட்டுமே ‘கதை நேரம்’ முடிந்ததும், அவனை தனியே தள்ளிக் கொண்டு போய் தாங்களும் அந்த போகச் சங்கிலிக்குள் இணைந்து கொள்வது எப்படியென்று நச்சரிப்பார்கள். இதுநாள்வரையிலும் இதற்கென்றே தயாரித்தது போன்றதொரு பரவசமூட்டும் புன்னகை மட்டுமே பதிலாய் வந்திருக்கிறது அவனிடமிருந்து.  அப்படியும் நிர்பந்தித்தால் “நதிமூலம் ஆராயக்கூடாது மச்சான்” என்று அறிவுரை கூறி நழுவிடுவான். குமரன் படிப்பாளி என்பதால் முதலாமாண்டு முதலே அவனிடமிருந்து எட்டவே இருந்து கொண்டான். அருகருகே அவ்வப்போது வகுப்புகளில் அமர்ந்த போதிலும் கூட இவனிடம் பொதுப் பேச்சுகளைத் தாண்டி எதுவுமே பேசியதில்லை. 

பதின்வயதின் கடைசிப் படிக்கட்டில் இருந்து அப்போது தான் இறங்கியிருந்த குமரனுக்கும் உள்ளூற வயதிற்கேயுரிய குறுகுறுப்பு இருக்கத்தான் செய்தது. பழகிய கொஞ்ச நாட்களிலேயே உடன் பழகும் மனிதர்கள் இன்னார் இப்படித்தான் என்ற சித்திரம் வரையப்பட்ட ஒரு முகமூடியை ஒருவருக்கொருவர் மாட்டி விட்டுவிடுகிறார்கள். பிறகு பழகிப் புழங்குவதெல்லாம் அந்த முகமூடிகளுடன் மட்டும் தானே. இவனுக்கு இவர்கள் கூடி வரைந்து வைத்த ‘இவன் படிப்பாளி… வேறு எதற்கும் இவன் சரிப்பட்டு வரமாட்டான்’ எனும் சித்திர முகமூடி கழற்ற இயலாதபடி கச்சிதமாய் இந்த இரண்டாண்டுகளில் பொருந்திப் போயிற்று. போக விடுமுறைகள்தோறும் வந்து போகிற லீலாம்மா மனக்களிமண்ணை வேறு விதமாய் வனைந்து வைத்திருந்தாள். இப்போதும் கூட அவனது தந்தை குறித்து கேள்விகளோ, அவரல்லாத வெற்றிடத்தை நிறைக்க வேண்டுமென்ற ஏக்கமோ எழுவதில்லை. அதற்கும் மேலாக பால்யம் தொட்டே காமத்தின் மீதான ஒரு மெலிதான ஒவ்வாமை மனதின் மூலையில் அழுந்தப் படியவைக்கப்பட்டிருக்கிறது என்பதை வயது ஏற ஏற மெல்ல உணர்ந்து கொண்டான். காமத்தைப் பொறுத்தமட்டில் தனது நிலைப்பாடு என்றென்றைக்கும் திரிசங்கு தானோ என்று ஐயுறவும் தலைப்பட்டான். மதனின் பேச்சை கேட்க அவனைக் குழுமியிருக்கும் கூட்டத்தினின்று தள்ளியே இருக்கிறான் எனினும் பல காலமாகவே காதுகள் மட்டும் அங்குதான் அமர்ந்திருக்கின்றன.

மதனின் பேச்சுகளின் வழியே அவர்களிடையே பெண்ணானவள் ஒரு ரகசியக் குகை என்பதாயும், அதன் வாயிலைத் திறக்கிற மந்திரம் இவனைப் போன்ற சிலருக்கே தெரியுமென்றும், அத்தகையோரால் மட்டுமே உள்நுழைகிற ரகசிய வழிகளை கண்டறிந்து வெற்றியடைய இயலுமெனும் எண்ணமும் பிரம்மாண்டமாய் எழுந்திருந்தது. அது ஒரு தோற்ற மாயை என புரிந்து கொள்கிற வயதிற்கும், பக்குவத்திற்கும் வந்துசேர அவர்கள் ஒவ்வொரும் ஒவ்வொரு காலகட்டம் வரை பொறுத்திருக்கவேண்டும். ஆனால் தற்சமயம் இத்தகைய நம்பிக்கைகளை அவர்களின் வயதே நிர்வகிக்கிறது.தங்களுக்குள்ளேயே வளர்த்தெடுக்கிற பேச்சுகள் வழியாகவே பெண் குறித்த அத்தனை அனுமானங்களையும் உருவகித்துக் கொள்கிறார்கள். இந்த அனுமானங்களே அவள் ஒரு புதிர் வழி எனும் சித்திரத்தை வரைகிறது; அவளை ஆழங்காணவியலாத கடலென்றும், விழுந்தால் எழவே முடியாத புதைகுழி என்றும் நம்பிக்கைகளை விதைத்து வலுவூட்டுகிறது. அவனுள்ளும் ஒரு மரம் வேர்விட்டுக் கிளைக்கத் துவங்கியிருந்தது. 

கதை கேட்பில் மூழ்கியிருந்த கூட்டம் வகுப்பிற்கு ஆள் வருகிற அரவம் கேட்க ஒரே நொடியில் கலைந்து அடுத்த நொடியில் சீராகியிருந்தது. வகுப்பறைக்குள் நுழைந்தவர் பால்ராஜ் சார். இளநிலை இயற்பியல் துறையின் துறைத்தலைவர். கண்ட மாத்திரத்தில் மரியாதை அப்பிக் கொள்கிற தோற்றமும் ஆளுமையும் கொண்டவர். நிதானத்தை எடுத்துக்காட்டும் குரல் அதிர்ந்தோ கடிந்தோ பேசிக் கேட்ட நினைவிருக்காது எவருக்கும். காற்சட்டைகளுக்குள் கசங்கலின்றி டக் இன் செய்யப்பட்டு பட்டன்கள் இடப்பட்ட முழுக்கை சட்டையும், விளிம்புகளற்ற அவரது மூக்குக் கண்ணாடி அவரது கண்ணியத்தை இன்னும் பெருக்கிக் காட்டும். குமரனுக்கு அவர்தான் மானசீக இலட்சிய முன்மாதிரி. 

சில தினங்களுக்கு முன்னமே தான் தான் குவாண்டம் இயற்பியல் எடுக்கப் போவதாகச் சொல்லியிருந்தார். மேல்நிலை வகுப்புகளிலேயே லேசான அறிமுகம் குவாண்டம் இயற்பியல் குறித்து கிடைத்திருந்தபோதிலும், அது ஆர்வத் தணலை தூண்டிவிட்டு தூபமிட்டதே தவிர பற்றி எரியச் செய்யவில்லை. மூன்றாவது செமஸ்டரிலேயே பால்ராஜ் சார் இவர்களுக்கு ஒளியியல் பாடம் எடுத்திருக்கிறார். பொதுவாக கேள்விகளை எழுப்பி மாணவர்களையே சிந்திக்கத் தூண்டி அதன் வழியாக கருத்துகளை முன்வைத்து விளக்குவது அவரது பாணி என்பதால், இம்முறை அவர் என்ன செய்யப் போகிறார், எப்படி செய்யப் போகிறார் எனும் ஆர்வம் குமரனுக்கு அதிகமாகவே இருந்தது. அவரது வகுப்புகள், அவர்தம் உரைகளை நெருக்கமாகத் தொடரும் மாணவர்களுக்கு ஒருவித சுய கண்டுபிடிப்பு போலிருக்கும். ஆனால் குவாண்டம் இயற்பியல் திசையறியாத புதிய நிலம். ஒளியியல் போல் அல்ல. எனவே இவர் எவ்விதம் இதனைக் கையாளப் போகிறார் என்பதே சுவாரசியத்தைத் தூண்டியது. 

“யாருக்கேல்லாம் ஃபாண்டஸி பிடிக்கும்? சொல்லுங்க பாப்போம்” மாறாத மென்சிரிப்பு தவழும் முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் தெளிவான ஆங்கிலத்தில் கேள்வி மட்டும் வந்து விழுந்தது.  

பொதுவாக பாடத்தை விட்டு வகுப்பு நேரத்தில் நூலளவும் தாண்டாத கறார் ரகம் இவர். கடந்த இரண்டு ஆண்டுகளில் வகுப்பு நேரங்களில் அரை வரி கூட வெட்டிப் பேச்சு பேசாதவர். போதிக்கையில், பாடப்பகுதிக்கு தொடர்பற்ற எதுவுமே அவரைப் பொருத்தமட்டில் வெட்டிப் பேச்சு தான். அப்படிபட்டவரிடம் இருந்து இப்படியொரு கேள்வியை நிச்சயம் எவரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு சிலர் வழமை போல குமரன் இருக்கிற பக்கமாக தலையை லேசாகத் திருப்பினர். அவனே விழித்தபடி அமர்ந்திருப்பதைக் கண்ட அவர்களுக்கு மெலிதான ஒரு ஆச்சரியம்.

சில விநாடி மௌனத்திற்குப் பின் “சார்… புரியல… திடீர்னு இப்போ இந்தக் கேள்வி…” மெலிதாக குமரனின் குரல் வெளிவந்தது. வலது கரம் கேள்வி கேட்க அனுமதி கோருகிற பள்ளிச் சிறுவன் போல உயர்ந்திருந்தது.  

“ஓ… தொடர்பே இல்லாத கேள்வி போல இருக்கோ! நான் ஆங்கிலத் துறைக்கு மாறிட்டேனோன்னு சந்தேகம் வருதோ?” ஒரு மெலிதான சிரிப்பு. “இல்ல நான் கேட்டது அர்த்தமுள்ள, தொடர்புள்ள கேள்வி தான். சரி இப்படிக் கேட்போமே! ஃபேண்டஸி கதைகள் நம்மள்ள பலருக்கும் ஏன் பிடிக்குது?” அர்த்தமான மௌனம் அங்கு நிலவியது. மேடையில் நடுநாயகமாக நின்று கொண்டிருந்தவர் இருபுறமும் பார்வையை ஓட விட்டார், ‘ம்… சொல்லுங்க’ என்கிற முக பாவனையோடு.

இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த சுதாகர் மெல்ல எழுந்தான். “சார்! நிஜத்துல நடக்காத அல்ல நடக்கவே முடியாத விஷயங்க தானே பாண்டஸி. அதனாலயே அது சுவாரசியமா இருக்கும்ல சார். கனவு மாதிரி…” 

“குட்! ரொம்ப சரியா சொன்ன” வலது கரத்தை உறுதிமொழி எடுப்பது போல நீட்டி விரலை சொடக்கிட்டுச் சுண்டினார். அது அவர் பாராட்டுகிற விதம். அவன் பெருமிதத்தோடு அமர்ந்தான். 

“குவாண்டம் உலகம் ஏறக்குறைய முதன்முதலா உள்ள வருகிற எவருக்குமே ஒரு ஃபேண்டஸி உலகத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிற அனுபவத்தைத் தான் கொடுக்கும். நாம கடந்த ரெண்டு வருடங்களா படிச்ச இயற்பியல்ல எந்த சூழ்நிலையிலையும், எந்தக் காலத்துலயும் மாறாத விதிகள் மற்றும் கோட்பாடுகள் கூட குவாண்டம் உலகத்துல செயல்படாமல் போகலாம்”. மாணவர்கள் பலரது புருவங்களும் குழப்பம் கலந்த ஆச்சரியத்தால் உயர, அதை கவனித்தவர், “மாறவே மாறாதுன்னு பாடம் எடுத்த நானே இப்படிச் சொல்றது ஆச்சரியமா இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை. ஏன்னா நாம இதுவரை நம்மை சுத்தியிருக்க உலகத்தை அணுகுன விதம் வேற. இப்போ அதுல தான் பெரிய மாற்றம் வரப் போகுது. உலகம் குறித்த நம்ம பார்வை இதுவரைக்கும் ‘மேக்ரோ’ பார்வையா தான் இருந்தது. அப்படியே சுருங்கி குவாண்டம் உலகத்துக்குள்ள நாம் போகறப்போ அந்த பார்வை அப்படியே ‘மைக்ரோ’ பார்வையா மாறிடுது. மேக்ரோ உலகத்துல செல்லுபடியாகுற எல்லா விதிகளும் அப்படியே மைக்ரோ உலகத்துக்கும் பொருந்துறது கிடையாது.”

“சார்! புரியுது! குவாண்டம் ரெலம். ஆண்ட் மேன் அண்டு த வேஸ்ப் படத்துல பாத்துருக்கேன்.” உற்சாகமான குரல் வலப்பக்கம் இருந்த எபினேசரிடம் இருந்து வந்தது.   

கொஞ்சம் அகலமாகவே இதழ் விரித்து புன்னகைத்தார் அவர். “ம்… ஆமா. அதே தான்! ஆனா ஹாலிவுட் படங்கள்ல சுவாரசியத்துக்காக எல்லாத்தையுமே எக்ஸாஜரேட் செஞ்சு ஓவர் கிளாமரைஸ் பண்ணி வச்சுடறாங்க. அது தான் பிரச்சனை. நீங்களும் அதைப் பார்த்து கிளர்ச்சியாகி இது ஜாலியான பாடமா இருக்கும் என்ற நினைப்போட வர்றீங்க. ஆனா நாங்க பாடம் எடுக்க ஆரம்பிச்சா…” முடிக்காமல் மீண்டும் சிரித்தார். இந்த பேப்பர் செம கண்டம்டா. துவக்கத்துல இருந்தே படிக்கலேன்னா நிச்சயம் புட்டுக்கிடும்டா என்று சீனியர்கள் முன்னமே எச்சரித்து இருந்தார்கள் தான். 

“நாம இதுவரைக்கும் படிச்சு புரிஞ்சுக்கிட்டு உருவாக்கி வச்சிருக்க காமன் லாஜிக்க மட்டும் வச்சு குவாண்டம் உலகம் இயங்குற விதத்தை புரிஞ்சுக்க நெனச்சா அது குழப்பத்துல தான் போய் முடியும். ஏன்னா பல சமயங்கள்ல அங்க நடக்குற விசயங்கள் காமன் லாஜிக்குக்கு நேர் எதிரா நிகழும். அத ஏத்துக்க நம்ம மூளை திணறும். நமக்கு மட்டுமில்ல ஆனானப்பட்ட ஐன்ஸ்டைனுக்கே இது தான் நடந்தது. இது தான் குவாண்டம் இயற்பியல பலரும் ஒரு விதமான மேஜிக் போல பாக்குறதுக்கான அடிப்படைக் காரணம். நமக்கு ஒரு விஷயம் புரியாத வரையிலும் அது மேஜிக் தானே?” 

தொடர்ந்து அவர் சொல்லிய சில அடிப்படை செய்திகளே எளிதில் நம்ப இயலாததாக இருந்தன. குவாண்டம் இயற்பியலின் வரலாற்றுப் பின்புலத்தை அவர் எடுத்துச் சொல்லத் துவங்க, மாணவர்கள் பழக்கத்தால் குறிப்பேடுகளை விரித்து நோட்ஸ் எடுக்கத் துவங்கினர். இருந்த போதிலும் அவர் சொல்வதை உள்வாங்கிட மாணவகள் திணறுவதை, உள்வாங்கிய வெகு சிலரும் அதை புரிந்து ஏற்றுக் கொள்ள சிரமப்படுவதை சிறிது நேரத்திலேயே கண்டு கொண்டார். ஒரு பார்வையை வீசியே வகுப்பின் சூழலையும், நிலையையும் உணர்ந்து கொண்டு மாணவர்களின் மனதைப் படிக்கும் வித்தையறிந்தவர் அவர். அது வரையிலும் எழுதிய குறிப்புகள் கரும்பலகையை நிறைத்திருக்க, சாக்பீஸை மேசையில் போட்டார். கரங்களைத் தட்டிட வெண்தூசு சிறு மேகக் கூட்டம் போல பறந்து தணிந்தது. பேராசியர்களுக்கான மேடையில் இருந்து கீழிறங்கி முதல் பெஞ்சுக்கு முன்னால் மையமாக நின்று கொண்டார். 

“எனது தாத்தா நான் சிறு வயதாக இருக்கும் போது அடர்ந்த காடுகளுக்குள் மட்டுமே வளர்கிற ஒரு அதிசயப் பூவைப் பற்றி சொல்லி இருக்கிறார். அதன் பெயர் அனந்திப்பூ…” அவர் பெயரைச் சொல்லவும் வகுப்பு நேரம் முடிந்ததாக மணியொலிக்கவும் சரியாக இருந்தது. மாணவர்கள் ஒரு சேர எழுந்து கொள்ள, அவர் நாளை தொடரலாம் என சுருக்கமாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டார். 

அது தான் அன்றைய தினத்தின் இறுதி வகுப்பென்பதால் மாணவர்கள் குழுக்களாக பிரிந்து கலைந்தனர். குமரனுக்கு இருப்பு கொள்ளவில்லை. சிறு வயதிலிருந்தே இவனுக்கு இது வழக்கம். ஒன்றை சுவாரசியமாகத் தொடந்து கொண்டிருக்கிற போது அது சட்டென முடிந்துவிட்டால் மீளவும் அது தொடர்வது வரை மனது கிடந்து தவிக்கும். இந்த குணம் தான் சிறு வயது முதலே விளம்பரங்கள் நிறைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பக்கமே அவன் செல்லாமலிருக்கக் காரணமாகியது. வகுப்பு குறித்த யோசனையிலேயே மனோவிற்காக அன்றாடம் காத்திருக்கிற ஆங்கிலத் துறைக்கும் வாகன நிறுத்தகத்திற்கும் இடையில் இருக்கிற கல் இருக்கையில் காத்திருந்தான். மனோ பொதுவாகவே வகுப்புகள் முடிந்ததும் கிளம்புகிற ஆளே இல்லை. ஏது குறித்தாவது பேராசிரியர்களோடு சில நிமிடங்களாவது உரையாடிவிட்டுத் தான் வெளியே வருவான். சுழன்றடிக்கிற காற்றில் இலக்கற்று அலைவுறும் ஒரு சருகின் மீது குமரனின் பார்வை நிலைத்தது. இதோ நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இச்சருகின் பயணத்தடம் நான் ஒரு வேளை பாராதிருந்தால் இப்போதிருப்பதைவிட வேறு மாதிரி இருக்குமா என்ற கேள்வி மனதில் எழ அதனோடே சுழலலத் துவங்கியது மனம். எவ்வளவு நேரம் அதையே பார்த்திருந்தான் எனத் தெரியாத அளவுக்கு அதில் தொலைந்திருந்தவனை, மனோவின் தோள் பற்றல்தான் மீட்டது. 

“என்ன நண்பா பயங்கரமான சிந்தனை போலிருக்கே?” என்று வாகன நிறுத்தம் நோக்கி முன் செல்ல வைத்த மூன்றாம் அடியில் அச்சருகு அவனது காலில் மிதிபட்டு நீள்வாக்கில் உடைந்தது. அதுவரையிலும் கூட குமரனின் கண்கள் அதிலேயே தேங்கியிருந்தன. எழுந்து அவனை மௌனமாய்த் தொடர்ந்தான். இருவரும் தத்தமது வாகனங்களை உயிர்பித்து கிளம்பினர். பழக்கத்தால் தன் போக்கில் போனாலும் அவை இரண்டுமே மனோவின் வீட்டு வாயிலில் தான் நிற்கும். மனோவின் அப்பா அம்மா இருவருமே வங்கிப் பணியாளர்கள் என்பதால் பகல் வீடு இவர்களுக்கேயானது. பெரிய வீடென்றாலும் அவனது அறையில் அடைவது தான் இருவருக்குமே ஆனந்தம். குமரன் தனது உணவு கேரியரை பிரித்து தயராக இருக்க, அவன் சமையலறைக்குச் சென்று ஒரு தட்டில் தனக்கான உணவைக் கொண்டு வந்தான். பெரிதாக பேசிக் கொள்ளாமல் சாப்பிட தரையில் அமர்ந்தார்கள்.  “ஐ! அவரக்கா!” ஆசையாய் ஒரு வாய் போட்டுக் கொண்டே அமர்ந்தவன் உடனே எழுந்து கணினியை உயிர்ப்பித்து வாத்திய இசையொன்றை ஒலிக்கவிட்டான். மென்மையான இசையோடு உண்டு முடித்து, அன்றைய கதைத்தலைத் துவங்கினார்கள். 

கடந்த இரு வருடங்களில் இலக்கற்ற உரையாடல்களின் வழியாக அவர்களுக்குள் ஒரு அறிவுசார் நட்பும் செழித்திருந்தது. இந்த மதிய அரட்டைகள் தங்களை செழுமைப்படுத்துவதை இருவருமே உணர்ந்திருந்ததால் வேறு எதனை விட்டுக் கொடுத்தாலும் இதனை விட்டுக் கொடுக்க இருவருமே தயாரில்லை. வகுப்புகளுக்கு இணையாக இத்தருணங்களை முறைசாரா கற்றலுக்கான நேரமாக பாவித்தனர். அர்த்தமற்ற விடைலைத்தன பேச்சுகள் ஒப்பீட்டளவில் வெகு சொற்பமான நாட்கள் தான் தலை தூக்கும். இலக்கியத்தின் ஒளிவழி கண்டுகொண்ட சங்கதிகளை அவனும், இயற்பியலின் துணையோடு தெரிந்து கொண்ட ஆச்சரியங்களை இவனும் ஒருவருக்கொருவர் அடிக்கடி பகிர்ந்து கொள்வார்கள். மனோவும் பள்ளியில் இயற்பியல் படித்திருந்ததால் குமரன் சொல்வதை எளிதில் தொடர முடியும். பல சமயங்களில் மனோவின் பகிர்வுகளின் வழியாக இயற்பியல் எந்த அளவிற்கு பூடகமான விடயங்களை ஆய்ந்தறிகிறதோ அதற்கு இணையான செயல்பாடு இலக்கியத்திலும் நிகழ்கிறதாக உணர்வான் குமரன். 

“இன்னைக்கு என்ன அங்க எனக்கு வெயிட் பண்ணப்போ ஆழ்ந்த யோசன? நான் வந்தது கூடத் தெரியாம…?” அவர்களது உரையாடல் திரி இருவரில் ஒருவரது கேள்வியில் தான் எப்போதும் பற்றும்.

குமரன் வகுப்பில் பால்ராஜ் சார் அறிமுகப்படுத்திய குவாண்டம் இயற்பியலின் விநோதத் தன்மை குறித்து சொல்லியவற்றை சுருக்கமாகப் பகிர்ந்தான். அது ஆர்வத்தைக் கிளர்த்திட, ஓடிக் கொண்டிருந்த இசையை நிறுத்திவிட்டு இணையத்தில் யூடியூப் தளத்திற்குச் சென்று ‘viewing affects the event’ என்று குறி சொற்களைத் தட்ட, தொடர்பின்றி ஏதோ முடிவுகள் வந்து விழுந்தன. சில கணம் சிந்தனையோடியது இருவரின் முகங்களிலும். பின்னர் குமரன் இன்னும் கொஞ்சம் சேர்த்து ‘viewing affects the event quantum reality’ என உள்ளீட்டை மாற்றியமைக்க சரியான காணொளிகள் பட்டியலிடப்பட்டன. வெகு சொற்பமான எண்ணிக்கையிலேயே இருந்தவற்றுள் சிறியவற்றை தேர்ந்தெடுத்து பார்த்தார்கள். ஒரு காணொளி அவர்களுக்கு பனிரெண்டாம் வகுப்பிலேயே நன்கு அறிமுகமான யங் இரட்டைப் பிளவு சோதனை குறித்து பேசத் துவக்கியது இன்னும் ஆர்வத்தைத் தூண்டியது. 1801 ஆம் ஆண்டு ஒளியினுடைய குறுக்கீட்டு விளைவுப் பண்பை விளக்கிட தாமஸ் யங் செய்த புகழ்பெற்ற சோதனை அது. தங்களுக்கு நன்றாகப் புரிந்ததாக நினைத்திருந்த தகவல்களுக்குள் இன்னும் ரகசிய வெளிகள் ஆய்ந்துணர்ந்து புரிந்து கொள்ள மீதமிருப்பதை உணர்ந்ததும், அறிதலின் எல்லையின்மை அவர்களை ஒரு கணம் அசரடித்தது. 

அக்காணொளியில் ஒளியின் – ஒளி ஒரு துகளாகவும் அலையாகவும் இரு நிலைகளையும் அடுத்துக் கொள்ளுகிற – இருமைப் பண்பு குறித்து அறிந்த செய்திகளையே மீண்டும் தொகுத்துச் சொன்ன போதிலும், கண்காணிப்பின் கீழ் அதன் இயல்பு மாறுபடுகிறது என்ற ஆய்வாளர்கள் கண்டறிந்ததாக அறிந்திராத செய்தியையும் விளக்கியது. அது தான் பால்ராஜ் சார் சொல்லிய விடயமெனவும் யூகிக்க முடிந்தது. 

காணோளி முடிவுற்றதும், கொஞ்சம் யோசனையில் தோய்ந்தவனாய் அமர்ந்திருந்த மனோ எழுந்து தன் அறைக்குள் சென்று புத்தக அலமாரியைத் துழாவத் துவங்கினான். நாலைந்து நிமிடத்திற்குப் பிறகு வெளிவந்தவனின் கையில் ஒரு சிறு புத்தகம். ஸ்ரீநேசனின் ‘காலத்தின் முன் ஒரு செடி’ கவிதைத் தொகுதி அது. அதில் விரலிட்டுப் பிடித்து வந்திருந்த பக்கத்தைத் திருப்பி மெல்லிய சிரிப்புடன் குமரனிடம் நீட்டினான்.  ‘பந்து பற்றிய நினைவு’ என்ற அக்கவிதையை வாசித்து முடிக்கையில் மலர்ந்தது அவன் முகம். உதடுகள் அனிச்சையாய் ‘வாவ்!’ என்றன. இருவருமே அதனைக் கொஞ்ச நேரம் அசை போட்டபடி ஒருவித புல்லரிப்பில் அமர்ந்து விட்டம் பார்த்தனர். “சூப்பர்ல…!” ஏகமாய் முணுமுணுத்தார்கள். 

வெறும் பார்த்தல் எப்படி ஒரு நிகழ்வின் பண்புநலனை, குணாம்சத்தை பாதிக்க முடியும் என்பது நம்பவியலாத ஆச்சரியமாய் இருந்தது. வகுப்பின் இறுதியில் சார் சொல்லிய பூவிற்கும் இதற்கும் என்ன தொடர்பிருக்கக் கூடும் எனும் கேள்வி மனதைக் குடைந்தது. மனோ தான் இப்பெயரையே இப்போதுதான் முதன்முதலில் கேட்பதாகச் சொல்லி கூகிள் தேடுபோறியில் அப்பெயரைத் தமிழிலேயே தட்டச்ச, பொருத்தமான ஒரு தரவும் இல்லை என உடனடியாக பதில் வர, ஆச்சரியம் இரட்டிப்பானது. 

புதிர்தன்மை கொண்ட இக்கேள்விக்கு எப்படியாவது ஏற்புடைய ஒரு பதில் போன்ற ஏதாவதொன்றையேனும் கண்டடைய முயன்று இருவருமே களைத்தனர். அதற்கான விளக்கம் பேராசிரியரின் மூலம் அடுத்த வகுப்பிலேயே கிடைப்பதற்கான சாத்தியத்தை எண்ணி ஆசுவாசப்படுத்திக் கொண்டான். இருந்தபோதிலும் தேடுபொறியே உதட்டைப் பிதுக்கிவிட்ட இந்த ‘அனந்திப்பூ’ குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமென்ற உந்துதல் பன்மடங்காகி இருந்தது இருவருக்குமே. அதன் தொடர்பு குறித்து கூட பேராசிரியரே சொல்லட்டும். இப்போதைக்கு அப்பூவினைக் குறித்து மட்டுமாவது யாரிடம் விசாரிக்கலாம் எனும் யோசிப்பில் ஆழ்ந்தார்கள். 

“ஹேய்! உங்க சாரோட தாத்தா சொன்னதா தான இந்த பூவப் பத்தி பேசத் துவங்குனாருன்னு சொன்ன. கூகுளே இல்லேன்னு சொன்னா இது எங்கயுமே பதிவு செய்யப்படாத ஒரு தகவலா, வாய்மொழியா மட்டும் அந்த தலைமுறை ஆட்கள் மத்தியில புழங்குன செய்தியா இருக்க வாய்ப்பிருக்குல்ல…” உற்சாகக் குரலில் மனோ சொன்னதும், இருவரின் முகங்களும் பிரகாசமாயின. 

ஒரு சேர, “தாத்தா!” என்று கூவினர் இருவரும். முடிக்கும் முன்னரே இனிப்பைப் பார்த்ததும் தாவியோடும் மழலைகள் போல பரபரப்பாக கிளம்ப ஆயத்தமானார்கள். படபடவென வீட்டைப் பூட்டிவிட்டு குமரனின் பைக்கிலேயே விரைந்தனர். 

 

[ V ]

மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. தாத்தா அன்றைய தினசரியில் தொலைந்திருந்தார். என்ன தான் கண்ணாடி அணிந்தாலும், இப்போதெல்லாம் காலை நேரங்களில் வாசிப்பது அவ்வளவு உவப்பாக இருப்பதில்லை அவருக்கு. தலைப்புச் செய்திகளைத் தவிர ஏனையவற்றை வாசிக்க முற்படுவதே நெருடலாகி சிரமப்பட்டது பார்வை. எனவே ஒளி உச்சாணிக் கொம்பில் இருக்கிற நண்பகலையும், அது மேற்கு நோக்கி தலை சாய்க்கத் துவங்கும் மதியப் பொழுதுகளையும் வாசிப்பிற்கான நேரங்களாக மாற்றிக் கொண்டிருந்தார். உள்நுழைவே அதிரடியாய் தடால்புடால் என்றமைந்த இவர்களின் வருகையைப் பார்த்தது ஒரு நொடி மெலிதான பதற்றம் தொற்றிக் கொண்டது அவருக்கு.

அவரது எண்ண ஓட்டங்களை பிறந்ததிலிருந்தே பார்த்து வளர்ந்ததால், கேட்கும் முன்பே, இந்த அவசரம் நிரம்பிய வருகைக்கான காரண காரியத்தை சுருங்கச் சொல்லி முடித்தான் குமரன். அவரது பதட்ட பாவனை மாறி முகத்தில் இயல்பான நிறை அமைதி மீண்டும் குடிகொண்டது. “அட இதுக்குப் போயா இத்தன பரபரப்பு?” தினசரியை நீவி மடித்தபடி சத்தமாக சிரித்தார். அவர் இப்படிச் சிரிப்பது அபூர்வம். அதைக் கண்டதும் இவர்களிருவருக்குமே இனம்புரியாத மகிழ்ச்சி. சிரிப்பில் இணைந்து கொண்டனர். வந்த வேகத்தை மறந்து கொஞ்சம் நேரம் சிரிப்பால் நிறைந்தது, அமைதியில் தோய்ந்திருந்த அந்த வீடு. தாத்தாவிற்கு எதிரில் மூங்கில் கூடைச் சேரில் மனோ அமர்ந்திருக்க அவனது மடியில் கைகளூன்றியபடி மிக அருகில் தரையில் தாத்தாவின் காலடியில் அமர்ந்து கொண்டான் குமரன். இரு கரங்களாலும் ஒரு சேர இருவரையும் உருவி முத்தினார் தாத்தா. அவரது கண்கள் ‘இந்தக் காலத்தில இப்படியும் ரெண்டு பிள்ளைகள்’ என்று சொல்வது போலிருந்தது. 

கொஞ்சம் சிரித்து ஓய்ந்த பின், ஒதுங்கி நின்ற அமைதி கூடத்தை மறுபடியும் ஆக்கிரமித்தது.  “சரி… சிரிப்பெல்லாம் போதும்… உங்களுக்குத் தெரியுமா தாத்தா அந்தப் பூவப் பத்தி?” மனோ அவசரப்படுத்தினான். ஆமோதிப்பாய் குமரனும் தலையசைத்தான்.   

“என்ன அவசரம்? கேட்டுட்டு எங்க ஓடி எந்த கோட்டைய புடிக்கப் போறீங்களாம்?” அவருக்கேயுரிய நிதானத்திற்கு வந்திருந்தார். “வயசான கட்டையா நானு. இருங்க கொஞ்சம் யோசிக்கிறேன். நான் என்ன கையில வச்சு நீங்க விளையாடுற செல்ஃபோனா… தட்டுனதும் பதிலைச் சொல்ல…” முடிக்கும் முன்பே, சரி சரி என்பது போல கைகளைக் கட்டி வாய் பொத்தி இருவரும் நல்ல பிள்ளைகள் போல பகடி செய்து, சொல்லுமாறு வேண்டிக் கொண்டனர். 

மீண்டும் சிரித்து, கண்களை மெல்ல மூடியவர், இமைத் திறக்காமலே, “என்ன பேரு சொன்னீங்க அந்த பூவுக்கு?” என்றார். 

“அனந்திப்பூ தாத்தா.” 

“பேர எங்கயோ கேட்ட மாரி இருக்கு” என்று மெல்ல இருக்கையில் சாய்ந்தவர் கோர்த்த உள்ளங்கைகளை நெற்றியில் நிறைத்துக் கொண்டார். “ஆங்! ஆமா. இந்தப் பேர எங்க ஐயா சொல்லியிருக்காரு. அவரோட இளதாரி வயசுல யாரோ ஒரு பெரியவர் சொன்னதா அதப் பத்தி…”

திசையற்ற அந்தரத்தில் பிடிக்க ஒரு கயிறு கிடைத்தது போல அவர்கள் முகங்கள் பிரகாசமாகிட, தாத்தா தொடர்ந்தார். 

“ஐஞ்சுதலை நாகம் மாதிரி, கிட்டத்தட்ட இந்தப் பூவு. பாத்தவுங்க யாருமில்ல. ஆனா வாய்மொழியா கதைக்கிற திண்ணைப் பேச்சுகளுக்குள்ள அப்பப்போ உலவிக்கிட்டே இருக்கும். இதப் பத்தி சதா யாராச்சும் கேட்டுகிட்டே – இதோ உங்கள் மாதிரி – இருக்குறதுக்குக் காரணம் அதோட சிறப்பம்சம் தான். விநோதமான வக இந்த அனந்திப்பூக்க. பொதுவா பூக்கள பகல்ல பூக்குறது, ராத்திரியில பூக்குறது இப்படியெல்லாம் தானே வகைப்படுத்துவாங்க. அப்படிப் பாத்தா இது ராத்திரியில பூக்குற வகை. ஆனா வேறெந்தப் பூவுக்கும் இல்லாத விநோத குணமொண்ணு அனந்திப்பூவுக்கு மட்டும் தனித்துவமா இருக்கு. அது பாத்தா பூக்காத பூ! பாக்கும் முன்னாடியே பூத்திருந்தா பூவா தங்காத பூ!”

சற்றே இடைவெளி விட்டார் தாத்தா. அவர் சொல்வது இன்னதென்று பொருள் கொள்ள இருவருமே திணறுவது வெளிப்படையாக முகங்களில் தெரிந்தது. 

“பூத்துக் குலுங்குற மரம், செடி, கொடிகள பாத்தா மனுச மனசு லேசாகுதில்லையா. மனுசனுக்கு எப்பவுமே பூக்களப் பார்க்க ரொம்பப் பிடிக்கும் தானே? மலர்ந்து சிரிக்கிற கடவுளோட வாயில்லையா அதுக! ஆனா இந்த பூவுகிட்ட அது செல்லாது. இது வேறு யாராவது பாக்குற வரையிலும் தான் பூத்துக் கிடக்குமாம். மனுச சந்தடி என்ன மத்த காட்டு உசுருகளோட சந்தடி கூட இல்லாத ரொம்ப ரொம்ப அடர்த்தியான உள் காட்டுப் பகுதிகள்லதான் அனந்திப்பூ பூக்குமாம். புதர்வகத் தாவரமாம் இது. நம்ம வீட்டுல இருக்கே செவப்புச் செம்பருத்தி, அதப்போல வடிவத்துல – ஒரு பூவே ரெண்டு உள்ளங்கையையு நெறைக்கிற அளவுக்கு பெருசா – ரெண்டு மடங்கு இருக்குமாம்.” தாத்தா தனது சுருங்கங்கள் நிரம்பிய கரங்களை அவர்களிருவர் முன்பாகவும் நீட்டி, சொல்வதற்கேற்ப உள்ளங்கைகளை விரித்து மலர்த்திக் காட்டினார். 

“எண்ணிக்கையில அதிகமாவே இது தன்னோட புதர் முழுக்க மண்டிக் கிடக்குமாம். ஆறு இதழ்கள் கொண்ட இந்த பூவோட நெறம் மையத்துல தீ செகப்பாவும் வெளிப்பக்கம் போகப் போக அடர் மஞ்சள் கலந்ததாவும் இருக்குமாம். இலைகள் கூட வெளிர் பச்சையும் கொஞ்சம் மஞ்சளும் கலந்த நெறத்துல இருக்குறதால தூரத்துல இருந்து அனந்திப்பூ புதர்களப் பாத்தா, பொதரே முழுக்க எரிஞ்சு தகிக்கிற மாதிரி தெரியுமாம். அதனாலயே இந்தப் பூவுக்கு ‘வனத்தின் தணல்’னு பேரும் உண்டாம். அதோட அழகுல மயங்கி யாராவது பக்கத்துல பாக்க ஆசைபட்டு போனா பாத்துக்கிட்டு இருக்க அந்த கொஞ்ச நேரத்துலயே மெல்ல சுருங்கி வாடி வதங்கத் துவங்கிருமாம். கண்ணு முன்னாடி சரிஞ்சு விழுகுற கோட்டை போல அதனோட அழகு நிர்மூலமாயிடுமாம். இதுக்கும் மேல ஒரு ஆச்சரியம் என்னான்னா ஒரே பொதருல பூக்குற அந்த பூக்களே தங்கள ஒண்ணுக்கொண்ணு பாத்துக்காதாம். வேற வேற கோணத்துல திசைக்கொண்ணா தான் பூக்கவே செய்யுமாம். பாத்த மாத்திரத்துலயே வாடுற பூவ பறிச்சுக்கிட்டா வர முடியும்? மீறி கொண்டு வந்தா வந்து சேர்றதுக்குள்ள சூம்பி உருக்குலஞ்சு ஒண்ணுமில்லாம ஆகிடுமாம். இன்னொரு உயிரோட அருகாமைய மூளையே இல்லாத – அல்லது ஒரு வேள இருக்குமோ? – இந்த பூக்க எப்படி உணருதுங்கிறது தான் விசித்திரமே. 

“பறிச்சா தான பிரச்சனை. ஃபோட்டோ எடுக்கலாம்ல?” குமரனிடமிருந்து சட்டென வந்து விழுந்தது சரியான கேள்வியாகவே தோன்றியது மனோவுக்கும். 

“சரியா போச்சு போ! கேமரா இருந்தா மட்டும் போதுமா புகைப்படம் எடுக்கணும்னா? எதை எடுக்கபோறியோ அது இங்க தா இருக்குன்னு ஒரு தெளிவு இருக்கணுமா இல்லையா? ஒரு தொன்மக் கத சொல்றதப் போலத்தான் ஆளாளுக்கு அனந்திப்பூவப் பத்தி பேசிக்கிட்டாங்களே ஒழிய, அது பூக்குறதா சொல்ற ‘மிக மிக அடர்த்தியான உள் காட்டுப் பகுதி’ எந்தக் காடு அல்லது காடுகள்னு பேரச் சொல்லணுமே! அது தான் இல்லையே. அப்புறம் கேமராவத் தூக்கிக்கிட்டு எங்க போவியாம் படமெடுக்க?” தர்க்கப்பூர்வமாகவே தாத்தாவும் பதிலளித்தார். 

சொல்லியதை கேட்டுக் கொண்டிருந்த அவர்கள் இருவரும் பேச்சற்று அமர்ந்திருந்தார்கள். மூளைக்குள் சிறகடிக்கும் தீவிர சிந்தனையோட்டம் இயல்பாகவே மௌனத்தை அணிந்து கொள்கிறது. முதலில் என்ன சொல்கிறார் என்று புரியாமல் திணறியவர்கள் இப்போது புரிந்ததால் திணறுகிறார்கள். 

 “அப்படி ஒரு பூ இருந்தா எப்படி இருக்கும்?” முணங்கல் போல வார்த்தைகளாய் வெளிப்பட்டது மனோவின் மெல்லிய குரல். நம்புதலுக்கும் நம்பாமைக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தது அதன் தொனி. 

 “தாத்ஸ்” உரக்க ஒலித்து உள்நுழைந்த அந்த பழக்கமான குரல் மூவரின் சிந்தனைகளை அறுத்து ஊடுருவியது. தாத்தாவின் எதிரில் இவர்கள் இருந்த முகபாவனைகளை இன்னதென்று வகைப்படுத்த இயலாமல் கேள்வியாய் விழித்தன ரேவதியின் விழிகள். தாத்தாவை விநோதமாகப் பார்த்தாள். தொடர்பற்று எதற்கிடையிலோ தான் வந்திருப்பது மாத்திரம் விளங்கியது அவளுக்கு.  

அவளைக் கண்ட மாத்திரத்தில் அவர்கள் இருவரின் முக பாவனை பிரமிப்பின் சுருதி குறைந்து இயல்புநிலைக்கு வந்தது. தாத்தா “சும்மா பேசிகிட்டு இருந்தோம்மா. வா. பேச்சுல நேரம் போனதே தெரியல”. சுருக்கமான அவரது பேச்சு சகஜ நிலையின் சாயலை உடனே அக்கணத்திற்கு வழங்கியது. அவளும் இயல்பானாள். 

“உங்களுக்கும் சேத்து டீ போடவா?” என்றாள் மனோவையும், குமரனையும் பார்த்து. மனோ மறுப்பாய் தலையசைக்க, குமரன் கட்டை விரலுயர்த்தி ஆமோதித்தான். 

கொண்டையிட்டுக் கொண்டிருந்தவளைப் “யம்மா அள்ளி முடியுறவளே இந்த தாத்தன கணக்குல எடுக்க மறுந்திடாத” என்று சிரித்தார். 

“நீங்க நம்ம ஆளு தாத்ஸ். உங்கள விட்டுட்டு என்னைக்கு குடிச்சுருக்கேன்?” அணைத்துக் கொள்வதற்கு விரிப்பதைப் கரங்களை விரித்து காற்றில் அவரைத் தழுவிக்கொள்வதாய் பாவனை செய்தாள்.

“மகிழ்ச்சி!” என்றார் தாத்தா நாடகத்தனமாய். சொன்னது தான் தாமதம். நால்வரும் கலகலவென சிரித்தனர். 

சமையலறைக்குள் அவள் புகுந்ததும், பிற்பாடு அலைபேசியில் அழைப்பதாய் குமரனைப் பார்த்து விரல்களால் சைகை செய்துவிட்டு, அமர்ந்திருந்த தாத்தாவை மென்மையாக அணைத்துவிட்டு மனோ கிளம்பினான். தாத்தாவுக்கு அவனிடம் உள்ளதிலேயே நிரம்பப் பிடித்தது இப்படி அணைத்து விடைபெறுவது தான். ஆயிரம் வார்த்தைகளை ஒரு அணைப்பு பேசி விடுகிறது. அவன் விடைபெற எழும்போதே எப்போதும் அணைக்கப்பட வசதியாய் நாற்காலியில் முன்னகர்ந்து விடுவார். அவனும் தாத்தாவிற்கு இது மிகப் பிடித்தமானது என்று அறிந்தவனாய், எப்போதும் சொற்களற்ற இந்த அன்பின் கதகதப்பை அவருக்கு வழங்கி தானும் உடனெடுத்துச் செல்வான்.

கோப்பைகளுடன் வந்தவள் டீப்பாய் மீது அவற்றை வைத்துவிட்டு குமரன் எங்கே என கண்ணாலேயே அவரை வினவினாள். அவர் சொல்ல வாயெடுக்கும் முன்பே, உடைகள் மாற்றி தனது அறையிலிருந்து வெளிப்பட்டான். தாத்தா தனக்கொன்றை எடுத்ததும், அவள் அவனைப் பார்த்து, “எங்க?” என, “வழக்கம் போல” அவனது விரல்கள் வீட்டின் வெளிக்கதவின் திசையில் சுட்டியது. புன்னகைத்தபடி இரு கோப்பைகளையும் ஏந்திக் கொண்டு கதவிற்கு முன்பு அரை வட்டமாய் விரிந்திருந்த படிக்கட்டுகளில் நடுநாயகமாய் அமர, தொடர்ந்து வந்தவன் அவளுக்கு இடதுபுறமாய் அருகமர்ந்தான். மெல்லிய குரலில் பேசியபடியே தேநீரை பருகத் துவங்கினர். இருவரையும் பார்த்து ஒரு மென்சிரிப்போடு தன்னோடு பேச தொலைக்காட்சியை உயிர்ப்பித்தார் தாத்தா. 

 

[VI ]

எந்த இடம் அது என அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. இருள் போர்த்திய முன்பின் கண்டிராத ஒரு சமவெளிப்பகுதி, மென்புற்கள் நிரம்பியதாய்.வானம் சேலையென விரிந்து கிடக்க அதில் ஒட்டப்பட்ட வேலைப்பாடுகளென நீல நிறத்திலான நட்சத்திர மினுக்கல். விண்மீன்கள் வெள்ளை நிறமில்லையா?! பின் ஏன் ஆகாசக் கடல் நிறைக்கும் இந்த நீல மீன்கள்? தூரத்தில் புற்களை மேய்ந்தபடி அல்லது குனிந்து முகர்ந்தபடி எது அது…? ம்… குதிரை. தூரத்திலிருந்து காணும்போதே அத்தனை உயரமாய் அதன் ஆகிருதி. நிலவின் வெளிச்சம் கூட நீலபாரித்து அவ்வெளியெங்கும் நிறைத்திருக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் சந்தடியற்ற அதெ புல்வெளிப்பரப்பு தான் திசையெட்டிலும். ஒரு சிறு இருக்கை போன்ற உயரத்திலிருந்த ஒரு தட்டையான கற்பாறையின் மீது அமர்ந்திருக்கும் தன்னுணர்வு இப்போது தான் வாய்க்கிறது. இடமறியா அவ்விடத்திற்கு தான் வந்தது எப்படி என்றும் மனதைக் குடைகிறதொரு கேள்வி. மடியில் என்ன இது? மெல்லிய நிலவொளிக்கு கண்கள் பழகியதும் அது ஒரு பசும்புற்கட்டு எனத் தெரிகிறது. நீர்சத்து நிரம்பினவையென ஸ்பரிசித்தறிந்த விரல்கள் சொல்லின. மடிநிறைக்கிற ஒரு குளிர்ச்சி. அந்த அநாமதேய வெளியில் நானென்ன செய்து கொண்டிருக்கிறேன் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே தூரத்தில் மேய்ந்த குதிரை மெல்ல தலை நிமிர்த்திப் பார்க்கிறது. நீல நிலவின் ஒளியில் அதன் கண்கள் ஒளிர்கின்றன. ஆனால் ஒளிரும் விழிகள் இவ்வளவு தூரத்திலும் துல்லியமாய் தெரிவதெப்படி! 

ஆராவரமில்லாத ஒரு நடையில் அது நகரத் துவங்குகிறது. தூரம் தான் அதற்கு கருமை நிறத்தைப் பூசியிருந்தது போல. அதன் கால்கள் தூரத்தை விழுங்கி விழுங்கி நெருங்கி வர வர நிறம் மாறிக் கொண்டே வருகிறது – அடர் சிவப்பாய். சிவப்பு வண்ணத்தில் குதிரை! வசந்த காலப் பண்டிகை கொண்டாட்டத்தில் பலரும் சேர்ந்து பூசிவிட்ட செந்நிறப் பொடியால் சிவந்து எரியும் உடலைப் போல அதன் உருவம். அடர் கருப்பில் மினுக்கும் இரு கரு நிலவுகள் போல மிதந்து வருகின்ற கண்கள் அதன் ஒடுங்கிய முகத்தில். தன்னையே இலக்காக நிர்ணயித்து தீர்க்கமாய் அளந்து வைக்கிற அடிகளில் நிதானமாய் தன்னை நோக்கி முன்னேறுகின்றன அதன் கால்கள். அருகில் வரும்போதே அது வளர்ந்து கொண்டேயுமிருப்பது போல ஒரு பிரமை. நெருக்கம் அதன் பரிமாணத்தை இன்னும் பெருக்குகிறது. அதிசயமாய் பயமில்லை. மனது அமர்ந்திருக்கிற அப்பாறை போலவே சலனமற்று சமைந்திருக்கிறது. அந்த செங்குதிரையின் மீது ஏதோ பழகிய வாஞ்சை போல ஒன்று. அது தன்னை எதுவும் செய்யாது என எங்கிருந்தோ முளைத்திருக்கிற ஒரு நம்பிக்கை அசையாமல் அமர்த்தி இருக்கிறது அவளை அங்கேயே. அதன் மூச்சொலி துல்லியமாய் கேட்கிற அளவிற்கு தூரம் குறுகிவிட்டது. கழுத்தை மென்மையாய் ஆட்டியபடி அதே தீர்க்க நடை. அசையாமல் அமர்ந்திருக்கும் இரு கண்களை நடந்து முன்னேறுகிற இரு கண்கள் தீண்டுகின்றன. சிலிர்க்கிறது உடல். அவ்விரவிற்கு தொடர்பில்லாத ஒரு வெம்மை உடலின் நரம்புகளெங்கும் விரவுகிறது. அது இன்னும் நெருங்க நெருங்க நெஞ்சுக்கூட்டிற்குள் இதயம் அதிர்கிறது, பயத்தினால் அல்ல. அது சிரிப்பதாய்த் தோன்றுகிறது. குதிரைகள் சிரிக்குமா?! இதுவரை கண்டதில்லை; கேட்டதுமில்லை. ஆனால் கண்முன் இப்போது ஒரு மெல்லிய புன்னகை தவழ்கிறது அதன் முகத்தில். நேர்முன்னே வந்தது நின்றுவிட்டு உற்று நோக்குகிறது. தூரத்து நீல நட்சத்திரங்கள் எல்லாம் மறைந்து போய், அதன் கண்களில் மட்டும் இரு நிலவுகள் ஒளிர்கின்றன. நெருக்கமான மூச்சுக் காற்று தீர்க்கமாக முகத்தில் பட்டு கேசத்தைக் கலைக்கிறது. ஒவ்வொரு மூச்சிற்கு காற்றில் அலைந்து அடங்குகிறது மயிற்கற்றை. இந்நேரம் இத்தனை அருகாமைக்கு பயத்தில் மிரண்டு ஓடியிருக்க வேண்டும். ஆனால் அசைவு கூட இல்லை. குதிரை மெல்ல குனிகிறது, தன் ஆரவாரமான உயரத்தைத் தாழ்த்தியபடி. முகமறையும் அதன் மூச்சுக் காற்று சிறு சூறைகாற்றாய் வெளியேறுகிறது. இன்னும் சற்றே குனிந்து மடிமீது தலைசாய்த்திருக்கும் பசும்புற்களில் நிலைக்கிறது அதன் பார்வை. மீண்டும் தலை உயர்த்தி அதே வாஞ்சை நிரம்பியதொரு பார்வை. அதன் முகத்தை தொட்டுப் பார்க்க ஆசை மேலிட்டாலும் கரங்கள் எழவில்லை.  

மடியின் இருபுறத்திலும் நிரம்பி வழிந்து நிறைந்திருக்கும் அப்புற்களின் நுனியை பசித்திருக்கிற அதன் கண்கள் தீண்டி, பரபரக்காத வாய் பொருத்தி உண்ணத் துவங்குகிறது. அதன் மூச்சுக் காற்று மடி நிறைத்திருக்கும் புற்களுக்கிடையில் நுழைந்து சுழல இனம்புரியாத ஒரு உணர்வு, ராட்சத ராட்டினத்தில் கீழிறங்குகையில் வயிற்றிற்குள் பறக்கும் பட்டாம்பூச்சிகளை இப்போது கிளர்த்துகிறது. அவளுடலின் தசைகள் பறையாகி அதன் மீது மோதி அறைகிறது அந்த மூச்சு. குதிரை மடிப்புற்களை மேய மேய அசையும் அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு மணியில் மெல்லோசை சீராகக் கேட்டபடியே இருக்கிறது.நுனியை மேய்ந்து முடித்திட்ட குதிரை மையத்திற்கு நகர்கிறது. அதன் தேகத்தின் வண்ணம் உருகி தன் மீது வழியத் துவங்குவது போலவும் தானே ஒளிர்ந்து பின் எரியத் துவங்குவது போலவும் ஓர் உணர்வு. அதன் மூச்சுக்காற்று இன்னும் நெருக்கமாய், இன்னும் வெம்மையாய், இன்னும் அதிகமாய் தீரும் புற்களின் இடத்தை நிரப்புகின்றது. கால்கள் மெல்ல தளர்ந்து நடுங்கத் துவங்குவதாய் உணர்கிறாள். கண்கள் திறந்திருந்தும் காட்சிகள் தெரியும் போதும் எதுவும் தெளியாத ஒரு மோனத்திற்குள் தான் தொலைந்து கொண்டிருப்பதை அறிந்து புகைபோல நெளிந்து கலைகிற தனது பிரக்ஞையை இருத்திக் கொள்ள அவளெடுக்கிற முயற்சிகள் வீணாகின்றன. கீழிருக்கும் பாறையும், அது பிடித்திருக்கும் நிலமும் மறைந்து முடிவற்ற ஒரு கருஞ்சுழலுக்குள் தன் உடல் இழுபடுவது போல ஒரு உணர்வு. கால்களுக்கிடையில் இதுவரையிலும் உணராத ஒன்றை குதிரையின் மூச்சுக் காற்று உணர்த்தி, கிளர்த்தி பல்கிப் பெருகச் செய்கிறது. உடலே சுனையாகி வியர்வை அரும்பியோடுகிறது. தேகத்தின் ஒவ்வொரு இணுக்கும் வெம்மையில் கொதித்து தகிக்கிறது. புற்கள் தீர்ந்தும் நிமிர மறுக்கும் புரவி வேறெதையோ தேடுகிறது. தன்னை முழுவதுமாய் புசிக்கத் துடிப்பதாய் புற்கள் தீர்ந்த தன் மடி மீதான அதன் அலைதல். தானேயொரு மேகமாகி அதன் வெண்புகைக்குள் இருந்து நேராடியாக பிராவாகிக்கிற பேரருவியாய் கொட்டத் துவங்கி, அதரம் துடிக்க கண்கள் பனிக்க உடல் மொத்தமும் உருகி அருவியாய் மாறிக் கொண்டிருக்க, ஒரு சிறு பிரளயம் அடிவயிற்றில் துவங்கி மூளையை நோக்கி விரிகிறது. குனிந்த குதிரையின் முகம் நிமிர அதில் கள்ளம் தோய்ந்த ஒரு மந்தகாசம் மலர அதன் முகம் உருமாறி, ஒரு கணம் … அது யார்…?  மூச்சு நின்று, மார்புக் கூடு அடைத்துக் கொண்டு விம்மிப் புடைக்க சுவாசிக்கக் காற்றைத் தேடித் தவித்து ஆழமான கேவலோடு கண்கள் பிதுங்க விழித்துக் கொண்டாள். இருபுறமும் அதிர்ச்சியில் மீளாத கைகள் பிடி தேடி காற்றில் அளைந்தன. தொடையிடுக்கில் ஈரப்பிசிபிசுப்பை உணர, உடலின் அத்தனை வளைவுகளும் வியர்த்திருந்தது. தலையில் துவங்கி கழுத்தின் வழியே வழிந்து கொண்டிருந்த சுனை மார்புகளுக்கு மத்தியில் பாயத் துவங்கியது. அதிர அதிர அடங்காத இதயம் வெட்டப்பட்ட பிராணி போல துடித்துக் கொண்டேயிருக்கிறது. அந்த செங்குதிரையின் முகம் உருமாறி ஒரு கணம் குமரனாய் மின்னி… அதற்குள் கனவிலிருந்து தடுமாறி நினைவுக்குள் மீண்டுவிட்டாள். உடல் இதுவரை உணர்ந்திராத இலகுவோடு இறகு போலான எடையற்ற உணர்வும், இதுவரை அனுபவித்திராத ஒரு உடற்சோர்வும் ஒரு சேர ஆட்கொள்ள அயர்ந்து மீண்டும் உறக்கத்திற்குள் நுழைந்து கொண்டாள். நிர்மலமான இருளோடு கரம்கோர்த்து நகரத் துவங்கியது அவ்விரவு. 

 

வழக்கமான நேரத்திற்கு அடித்த அலைபேசியில் அலார மெல்லிசை ஏதோ கணிக்கவியலாத தொலைவிலிருந்து கேட்பது போலிருந்தது. கண்கள் எரிந்தன. எழும் போது சிந்தனை தான் முதலில் விழித்துக் கொள்கிறது. விழித்ததும் இடறித் துவர்ந்தது கழிந்திருந்த இரவில் வந்த கனவின் நினைவு. கண்டது கனவென்பது ஆறுதலாகத் தோன்றியது முதற்கணத்தில். ஆனால் அடுத்த நொடியே கனவென்பது அகத்தின் ஆடிப் பிரதிபலிப்புதானா எனும் சங்கடமான எண்ணம் கேள்வியாய் எழுந்தது. யன்னல் வழி எட்டிப் பார்த்த கிரணங்கள் எதையோ இடித்துரைப்பதாய் பட, பேரலையென எழுந்து வியாபித்த கழிவிரக்கத்தினுள் முற்றும் மூழ்கித் திணறினாள். ஆயாசமாக உணரச் செய்து படுக்கையிலேயே மீண்டும் வீழ்த்தியது அது. சோர்ந்து சரிந்திருந்த மனம் விடியலின் புத்துணர்வு ததும்பிக் கிடக்கிற உடலையும் தளர்த்தி, நினைவின் முடிவற்ற சுழல் பாதைக்குள் இழுத்துச் செல்லத் துவங்கியது. 

குமரனை லீலாம்மா இங்கு தாத்தாவின் வீட்டிற்கு கூட்டி வந்த முதல் நாள் என்றென்றைக்கும் மறக்காது. ஐந்தாம் வகுப்பு ஆண்டுத் தேர்வுகள் முடிந்திருந்த வார இறுதி அது. பிஞ்சு கைகளும், பிஞ்சுக் கால்களுமாய் பரிசுப்பொட்டலமென பொதிந்து வைக்கப்பட்டிருந்தான் அவன். மருத்துவமனையின் வாடையும், பச்சிளம் பால் மணமும் ஒரு சேரக் கலந்து வீசிய அந்த அறையில் அவனைக் கிடத்தியிருந்த மெத்தையின் முனையில் தரையில் குத்துக்காலிட்டபடி முகத்தை அவன் விரல்களுக்கு வெகு அருகில் வைத்துக் கொண்டிருந்தாள். குழந்தை அசையும் போதெல்லாம் அதன் பால் விரல்கள் தனது உதடுகளை மீட்டுவதை ஆனந்தித்து அனுபவித்தாள். உண்ணும், உறங்கும் நேரம் தவிர்த்து அங்கேயே கழிந்தது அக்கோடை விடுமுறை. அவளது ஒடித்துக் கொண்ட இடையில் அமர்ந்தபடியே வளர்ந்த குமரன், நடைபழகியது அவளது விரல் பற்றித்தான். ரயில் விளையாட்டு விளையாடியது அவளது பாவாடையைப் பிடித்துத்தான். ஒரு போதும் ஒருவரையொருவர் எந்த உறவு சொல்லியும் அழைத்துக் கொண்டதே இல்லை. அவனுக்கு அவள் வயதில் மூத்த தோழி. அவளுக்கு இவன் இளைய நண்பன். 

வளர வளர நடந்தது கடந்தது அத்தனையும் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கிடையில் வெளிச்சம் பாயாத மூலைகளே இல்லை. அத்தனை மகோன்னதமான ஒரு உறவினை தான் களங்கப்படுத்தி விட்டோமெனும் குற்றவுணர்வு அவளை வதைத்தது. பேசாமல் இன்று அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிடலாமா என்று கூட யோசித்தாள். ஆனால் மலையளவு ஆயாசத்தையும் வேலையின் மீதான தனது ஈடுபாடு மழுங்கடித்துவிடும் என்பதை அறிந்தவளாய் அன்றாடத்தின் சுழலுக்குள் பொருத்திக் கொள்வதே சாதுர்யமானதென முடிவு செய்தாள். கூடத்தில் குயில் கடிகாரம் மணி ஏழெனக் கூவிட, அவசரகதியில் தாமதமாகிவிட்ட அன்றைய நாளைத் துவங்கினாள். வெளியில் பால் பாக்கெட்டை எடுக்க வந்தவளை தாத்தாவின் புலர்காலைப் புன்னகை வரவேற்றது. அன்பில் கனிந்த அச்சிரிப்பு தெம்பளிக்க, பதில் புன்னகை வீசி கையசைத்தாள். 

“இன்னைக்கு உருளக்கிழங்கு பொடிமாசும் லெமன் சாதமும்.” 

“சூப்பர் தாத்ஸ். இங்க காலைக்கு தக்காளிச் சட்னி செஞ்சறேன். அங்க வந்து தோசை ஊத்திக்கலாம். சரியா?” 

அவர் ‘சிறப்பு’ என சைகையால் ஏற்பைத் தெரிவித்தார். வழக்கமான பரபரப்பிற்குள் அந்நாள் மூழ்கி வாய்க்கால் வழியோடும் கூழாங்கல்லென உருளத் துவங்கியது. 

“ஏன் லேட்டு ரே?” இயல்பாக கேட்ட குமரனை ஏறெடுக்க முயன்ற போது தான், அந்நாள் மீண்டும் இடறத் துவங்கியது. முன்னனுபவித்திராத ஒரு மன அவசத்திற்குள் அமிழ்ந்தெழுந்தாள்.

“எழுந்திருச்சதே லேட்டு டா. அதா…” இடைவெளியில்லாத இயல்பான விடைபோல அதனைத் தொனிக்கச் செய்யவே மெனக்கெட வேண்டியிருந்தது. உண்ணும் போதும் அவன் கண்களைத் தவிர்த்தாள். ஏனோ தாத்தாவின் கண்களையும். 

“நா கிளம்பீட்டே. நீயும் கிளம்பி தான இருக்க. கூடவேணா வர்றியா. போற வழியில விட்டுட்டுப் போயிடறேன்.” 

பார்வை ஒரு கணம் அவன் மீது பட்டு மீண்டும் தட்டிற்குச் சரிந்தது. “இல்லடா. இங்க கொஞ்சம் வேல இருக்கு. முடிச்சு வர்றதுன்னா உனக்கு நேராகிடும். நீ போ”. அவன் சரி உன் விருப்பம் என்பது போல வெறுமனே ஒரு தோள் குலுக்கலோடு நகர்ந்தான். இவர்கள் இருவருமே துருவித் துருவி எதையுமே கேட்கும் மனிதர்கள் அல்ல. மனதின் ஏற்ற இறங்கங்கள் சமயங்களில் – எத்தனை நேர்த்தியான ஒப்பனைகளையும் மீறி – முகத்தில் பிரதிபலிக்கும் தான். அக்கணமே அதன் காரணங்களை தோண்டிடத் தேவையில்லை. சிறுது நேரத்தில் அதுவே சரியாகிவிடும்; இல்லையெனில் பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனும் மனநிலை கொண்டவர்கள். அது அக்கறை எனும் பெயரில் அடுத்தவர் வாழ்வின் அந்தரங்கக் கதவுகளை உடைத்துத் திறக்க முற்படாத பக்குவம். அவர்களது இவ்வியல்பை இன்று மிகவும் அனுகூலமாக உணர்ந்தாள். கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது. 

பேருந்தில் பயணிக்கையில் மனம் தெரு பார்த்தலில் லயித்தது. முன் இருக்கை மழலையின் பொக்கை வாய்ப் புன்னகையில் கொஞ்சம் சுகித்துக் கரைந்து மீண்டாள். மல்லி இன்னும் வந்திருக்கவில்லை. வேலைக்குச் சேர்ந்த நாள் தொட்டு அவளுக்கு அவலுவலகப் பணி என்பது மாற்று யதார்த்தம். அன்றாட வாழ்க்கையில் இடர்கள் எவ்வளவு இருந்தாலும், பாரமாய் இதயத்தில் கல்லைக் கட்டி அமிழ்த்தினாலும், இங்கு வந்தால் அவள் இன்னொரு இணை பிரபஞ்சத்திற்குள் நுழைந்து விடுவாள். பணி நேரம் முடிந்து வளாகத்தை விட்டு வெளிவருகையில் தான் தன் இயல்பான உலகிற்கே மீள்வாள். சற்றைக்கெல்லாம் மல்லி வந்துவிட்டாள். அவளது வரவை நடைபாதையின் பரபரப்பே சொல்லி விடும். ‘ஏந்தா இப்படி டங்கு டங்குன்னு நடக்குறியோ! காலு வலிக்கலையா உனக்கு’ என்று எதிர் இருக்கை நசீமா அக்கா அடிக்கடி கேட்பாள். இப்போதும் விழிகளை விரித்து ரேவதியைப் பார்த்து அதே கேள்வியைத் தான் சைகையில் கேட்கிறாள். பதிலுக்கு வழக்கமாக நடப்பது தானே விட்டுத் தள்ளுங்கள் என்பதான பாவனையில் கையசைத்தாள். அன்றைய பொழுது இயல்பான இன்னுமொரு நாளாக அந்தி பார்த்தது அத்தனை இதமாக இருந்தது. வழமையின் லயத்தில் ஒரு சுகம் இருப்பதாகப் பட்டது அவளுக்கு.  

அன்றைய இரவு படுக்கையில் சாயவே அஞ்சிய மனதை நீண்டதொரு சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டாள். தனக்குத்தானே பல சுய வியாக்கியானங்களைக் பேசியும் கேட்டும் இறுதியாய் வந்தடைந்திருந்த புள்ளி ஏற்புடையதாகத் தோன்றியது. உள்ளுக்குள் நீண்ட காலமாகவே மெல்லக் கனன்று கொண்டிருந்த பொறியை மல்லியின் சொற்கள் நேற்றைய தினம் தீமூட்டிவிட்டன. நிஜத்தில் சுழன்ற அதன் வெக்கை கனவிற்குள்ளே கசிந்திருக்கிறது. இணைக்கு ஏங்குகிற கனாவுக்கு இட்டு நிரம்பிட ஒரு ஆண் முகம் தேவைப்பட்டிருக்கிறது. அது ஆள்மனதின் ஞாபகக் கிடங்கைத் துருவிப் பார்க்கையில் அதற்குக் கிடைத்த ஒரே முகம் அவனுடையது தான். மாற்றுக்குக் கூட பிறிதொரு முகம் கிடைக்காததால் இதையே இட்டு நிரப்பியிருக்கிறது. பரிசோதிக்கப்பட்ட உண்மைகளைக் காட்டிலும், நிகழ் கணத்தில் ஆறுதலின் குளுமையை வீசுகிற உண்மைகளையே மனது விரும்பிப் பற்றிக் கொள்கிறது. இப்போது கண்டடைந்த இவ்வுண்மை ஆழமாய் ஆராயாமல் அது தந்த ஆசுவாசத்தைப் இறுகப்பற்றிக் கொண்டு உறங்கத்திற்குள் கரைந்தாள். 

காலம் விடியலில் முகம் பார்த்து நிசியில் கண்ணயர்ந்து நாட்களைத் தின்றபடி துரிதகதியில் பறக்கத் துவங்கியது. நாட்கள் நகர்ந்தது போல மனங்களும், அவைதம் திடமும் மெல்ல அசைந்து நகரத் துவங்கியிருந்தது.

 

[VII ]

கொஞ்ச காலமாகவே மதனின் லீலைக் கதைகளின் மீதான ஈர்ப்பு கூடி வருவதை உணர்ந்து கொண்டபோது சஞ்சலப்படத் துவங்கியது குமரனின் மனம். லீலாம்மா வடிவமைத்து வைத்திருந்த காமத்தின் மீதான அசூயையுணர்வும், விலகல் தன்மையும் இவ்வளவு நாட்கள் உள்ளும் புறமும் ஒரே மாதிரியானதாக இருந்தது. அதன் உபயத்தால் பதின்மத்தில் பல கவனத்தைச் சிதறடிக்கிற எதிர்பாலின ஈர்ப்பு சார்ந்த சம்பவங்களால் அலைவுறாமல், குழப்பமற்றும் எளிதாகவும் அவற்றை தானாகவே கடந்திருக்கிறான். ஆனால் அகம் தற்போது கீறல் விழுந்து இரண்டாகப் பிளந்திட்ட கண்ணாடியாகக் கிடக்கிறது. காமத்தின் மீது வெறுப்பையும் ஈர்ப்பையும் ஒரு சேர அது பிரதிபலிப்பதை எதிர்கொள்ளத் தெரியாமல் தடுமாறுகிறான் இப்போதெல்லாம். படிப்பின் மீதான கவனமும் ஈர்ப்பும் தான் மடைமாற்றிக் காக்கிறது.  குவாண்டம் இயற்பியலைக் கற்கக் கற்க ஆலிஸின் அற்புத உலகைப் போல தனக்கும் கதவுகள் திறந்து கொள்வதாய் தோன்றியது. பால்ராஜ் சார் இவன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். 

இனம்புரியாத ஒரு குற்றவுணர்வு, இலைகள் கொரிக்கிற புழுக்களைப் போல, மனதின் சகல ஓரங்களையும் அரித்தபடியே இருக்கிறது. சல்லடையாகிக் கொண்டேயிருக்கிற மனதை ரேவதியின் வடிவமைக்கப்பட்ட விலகல்கள் மேலும் சஞ்சலப்படுத்தியது. எவ்வளவு காலம் தன்னோடு இருப்பவள். தனது வாழ்வில் அம்மாவிற்குப் பிறகு மலர்ந்திருக்கிற ஒரே பெண் அலர் அவள். குறிப்பான காரணங்களென ஏதுவுமே இல்லாதிருக்கையில் தீடீரென அவளது இந்த விலகலை எப்படி அர்த்தம் கொள்வதென யோசித்துக் களைத்தது மூளை. தனது சிந்தனையில் ஏறியிருக்கிற மாற்றங்கள் தன்னையும் மீறி புறத்தில் படர்ந்து தனது சாயையை மாற்றிக் கொண்டிருப்பதாகவும், நடைபழகியது முதல் உடனிருக்கிறவளுக்கு அது அப்பட்டமாய் தெரிந்திருக்கும் என்றும் அதன் விளைவாகவே இப்படி நடந்து கொள்வதாகவும் தானாகவே தர்கித்துக்கொண்டது மனம். எதிர்வாதம் புரியவோ, மறுத்துப் பேசவோ திராணியற்று ஒடுங்கியது பிளவுண்ட அகத்தின் மறுபக்கம். 

நிகழ்கிற எதுவாயினும், அது மலையோ துளியோ, மனோவிடம் பகிராமல் இருந்ததே இல்லை இதுவரை. ஆனால் தனக்கும் மூடி மறைக்க ஒன்று இருக்கிறது என இதன்வழி விளங்கிக் கொண்டான். நெருப்பில் பொசுங்கிச் சுருங்குகிற ஞெகிழிப் பையென சிறுத்துச் சுருங்கி உருவழியத் துவங்கியது அவனது சுயம். இவனது சின்னச்சின்ன மாற்றங்களையும் உணர்ந்து கொள்கிற மனோ, எதுவும் பிரச்சனையா எனக் கேட்டும், ஒன்றுமில்லையென மழுப்பலான பதிலால் அதனைக் கடந்துவிட்டான். மேலும் நிர்பந்திக்காமல் அவனும் விட்டுவிட்டான். லீலாம்மா இவ்வருடம் தீபாவளிக்கு வர இயலாமல் போனதால் கார்த்திகைக்கு வந்திருந்தார்கள். அவர்கள் இங்கு வரும்போதெல்லாம் தன்னையுமறியாமல் ரேவதியின் வீட்டிற்கு செல்வதை அறவே தவிர்த்திடுவது அவனது வழக்கம். தாத்தாவும், ஏன் ரேவதியுமே கூட, லீலாவின் மனோநிலையைப் அறிந்தவர்களாய் அதற்கு அனுசரணையாகவே நடந்து கொள்வார்கள். அதனால் தான் இத்தனை வருடங்கள் இலகுவாக இருந்து வருகிறது. அனைவரும் இணைந்து பேசுவதும் மகிழ்வதுமாகவெல்லாம் இருப்பார்கள். இவனுக்கென எதாவது வாங்கி வருகிற லீலாவும் மறவாமல் ரேவதிக்கும் ஏதேனும் வாங்கி வராமல் இருந்ததே இல்லை. இம்முறையும் வாடிக்கையில் எப்பிசகுமின்றி வந்துபோனாள் லீலாம்மா. 

பருவத் தேர்வுகள் மிக நெருக்கமாக இருந்ததால் தனது அறையிலேயே முடங்கி நாள் முழுவதும் தீவிரமாய் தயாரித்துக் கொண்டிருந்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரே மீண்டும் சகஜமாக தானிருக்கையிலேயே இங்கு வரத்துவங்கியிருப்பதும் புழங்குவதும் ரொம்பவே ஆறுதலளிப்பதாக இருந்தது. மனதில் ஏறியிருந்த பாரமொன்று கரைந்து காணமாலாகி எல்லாம் இயல்பிற்குத் திரும்பியதைப் போன்ற உணர்வு. அவனது அறைக் கதவு முழுதாய் மூடியிருந்ததே கிடையாது. தாத்தா இருந்தும் இல்லாதவர் போல தனது இருப்பை உணர்த்துகிற எதையுமே செய்யாதவர். தொலைக்காட்சி ஒலிகூட நெருடாத அளவிலேயே மெலிந்தே ஒலிக்கும். அதனால் சர்வ சுதந்திரமாய் அங்கு அவன் எந்நாளும் புழங்க முடிந்தது. இப்போதும் அவர் கூடத்தில் இல்லை. எங்காவது தோட்டத்தின் பக்கம் இருப்பார். 

அன்று ஞாயிறென்பதால் ரேவதிக்கு அலுவலகம் இல்லை. அவளது ஞாயிறுகள் இங்கு தான் பெரும்பாலும் கழியும். இன்றும் வந்திருந்தாள். படிக்கும் இவனைச் சில நொடிகள் பின்னால் அறைக் கதவைப் பற்றியபடி பார்த்துக் கொண்டிருந்தவள் மெல்ல நெருங்கினாள். யாரோ வருவதை உணர்ந்தவனாய் திரும்பிப் பார்த்து இவளைக் கண்டதும் புன்னகைத்தான். கரங்களைக் பிடறியில் கோர்த்து இருக்கையில் பின் சரிந்து சோம்பல் முறித்துக் கொஞ்சம் இளைப்பாறினான். நோட்டில் நெருங்கியடித்து ஏதேதோ சமன்பாடுகளாகக் கிறுக்கித் தள்ளப்பட்டிருந்தன. வாஞ்சையாய் அவன் தோள்களில் அமர்ந்தது அவளது வலக்கரம்.  ‘எப்படித்தான் இதையெல்லாம் படிக்கிறியோ? எனக்குப் பாத்தாலே தல சுத்துது’ என்றவளுக்கு, பற்கள் தெரிய ஒரு புன்னகையை பதிலாய்த் தந்தான். 

“டீ குடிக்கிறியா? போட்டுத் தரவா?” தோளில் தவழ்ந்த கரம் சிகையைக் கோதியது. அவள் எத்தனையோ நூறு முறைகள் செய்திருந்த அதே செய்கைதான். ஆனால் இன்று வேறு கைகள் போலவும், வேறு தொடுகை போலவும் இருந்தது இவனுக்கு. உடல் ரோமங்களுக்குள் ஒரு கிளர்ச்சி பரவிச் சுழன்று கால் விரல்கள் வழியே வெளியேறியது. ஒரு மெல்லிய நடுக்கம் தோள்களை லேசாக அதிரச் செய்தது. சன்னமாய் “ம்… சரி” என்று மட்டும் மறுமொழிந்தான். 

வழக்கமான இயல்போடு அவள் சமையலறைக்குள் சென்று சில நிமிடங்களில் ஆவி பறக்கிற கோப்பைகள் இரண்டை ஏந்தியபடி வந்தாள். அவன் புத்தக நோட்டுகளை மூடி வைத்து மேசையை காலியாக்க அதில் அவனுக்கான கோப்பை அமர்ந்தது. அருகில் இருந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு தேநீரை உறிஞ்சத் துவங்கினாள். 

“சூடாக் குடிடா. படிச்சுக் களச்சதுக்கு தெம்பா இருக்கும்.”

“ஆமா காலைல இருந்து படிச்சது களைப்பா தா இருக்கு. ஆனா ஜாலியா இருக்கு” சிரிந்தபடி அவன் விரல்கள் கோப்பையில் கைப்பிடியில் கோர்த்துக் கொண்டன. 

“ஆமாமா உனக்கா கசக்கும். எனக்குத் தான் போரடிக்குது. என்னைக்கு முடியுது எல்லா எக்ஸாமும்?” 

 “அடுத்த வியாழன் முடிஞ்சுரும் ரே. அப்பறம் அஞ்சு நாள் லீவு.”

“அப்ப இன்னும் பத்து நாளு தாக்குப் பிடிக்கணுமா! முடிஞ்சதும் நாம சினிமாக்குப் போகணும்டா… ரொம்ப நாளாச்சுல்ல.” 

“சரி போவோம். ஆமா! ரொம்ப நாள் ஆச்சுதான் போயி…”

காலிக் கோப்பைகளைக் கரங்களில் உருட்டியபடி இன்னும் சிறிது நேரம் பேச்சு நீண்டது. சூழலை உணர்ந்தவளாய் அவளே எழுந்து கொண்டபடி, “சரி சரி நீ படி… நான் இருந்தா எதாச்சும் தொணதொணத்துகிட்டே இருப்பேன். வர்றேன்.” 

கிளம்ப எத்தணித்தவள் அவனது இதழோரம் துளித் தேநீர் இருப்பதைக் கண்டு விரல் நீட்டி, “கழுத வயசாகுது இன்னும் வழியாம டீ குடிக்கத் துப்பில்ல இந்த படிப்பாளிக்கு” மீசையில் ஊசலாடிக் கொண்டிருந்த துளியைச் சுண்டி விட்டாள். கூடவே இதழையும் தீண்டித் துடைத்தது அத்தொடுகை. 

தண்டுவடத்தில் மெல்லிய சிலிர்ப்போடியது இவனுக்கு. அவளது வழக்கமான அதே தொடுகை, நூற்றுக்கணக்கான முறை தீண்டியிருந்த அதே விரல்கள். ஆனால் அதே ‘நான்’ இப்போது இல்லை என்று உணர்ந்தான். ரேவதிக்கோ உள்ளூற ஒரு பனிப்பாறையில் விரிசல் விட்டிருந்தது. அந்த விரல்கள் வெம்மையைக் கிளர்த்திக் கொண்டிருந்ததை அவளுடல் உணர இயல்புபோல, ஆனால் விரைந்து, மீட்டுக் கொண்டாள். அவள் தொட்டிருந்த இதழோரத்தில் இதம் என்று எழுதி விலகியிருந்தது அத்தீண்டல். காலிக் கோப்பையை எடுத்துக் கொண்டு அருகில் நின்று கொண்டிருந்தவளை புதிதான ஒரு கனிவோடு அணைத்துக் கொண்டது குமரனின் பார்வை. 

 “தாங்ஸ் ரே…” அமர்ந்த நிலையிலேயே நீண்ட அவனுடைய இடது உள்ளங்கை அவளது குவிந்த கன்னதை அதில் ஏந்திக் கொண்டது. நாவிரல்கள் கன்னத்தில் பதிந்திருக்க, கட்டைவிரல் அவளது இதழின் ஓரத்தில் வருடியது. அவனிதழில் அமர்ந்திருந்த இதத்தை இதழ் மாற்றி வைத்தது அவ்வருடல்.ஒரே நேரத்தில் ஒரு நந்தவனத்தின் அத்தனைப் மொட்டுகளும் அவிழ்ந்தன அவளுள். விக்கித்து உறைந்தது காலம் ஒரு கணம். கோப்பைகளை ஏந்தியிருந்த கைகளில் மெலிதான நடுக்கம் பரவியது. உடலின் நரம்புகள் ருத்ர வீணையின் தந்திகளாகி ஒரு விரல் அதனை மீட்டியிருந்தது.  மிக மெலிதாக ஒரு தலையசைப்பில் விடைபெற்றாள். 

உறங்கிவிட்ட குழந்தையின் விரல்களில் அகப்பட்டிருந்த பொம்மையின் கால்களென இயல்பிற்கு மீளவியலாமல் தவித்துக் கிடந்தது மனது. மேசையில் மூடிக் கிடந்த புத்தகத்தின் அட்டையில் வெறித்து நிலைத்திருந்த பார்வையை பிரித்து எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். காற்றும் வெயிலும் தோள் பற்றி சுற்றி வந்த ஞாயிறு வீதி வேறு துணையின்றி தனித்து வெறிச்சோடிக் கிடந்தது. வெறுமையைக் காணப் பிடிக்காமல் மீண்டும் கூடத்திற்கு வந்தான்.  சன்னலுக்கருகில் நின்றபடி விழுந்து சிதறிக் கிடந்த நந்தியாவட்டைப் பூக்களில் பதிந்தது பார்வை. நாய்குட்டியென உடனமர்ந்து கொண்டது மனமும். காலையில் நிச்சயம் தாத்தா கூட்டியிருப்பார். இவை அதன் பிறகு உதிர்ந்தவையாய் இருக்கும். பால் வெள்ளையும் நடுவில் இளமஞ்சளுமாய் பூக்கள் நிறைத்துக் கொண்டிருந்த மனதில் இருந்தார்போல ஒரு பறவையின் சிறகசைப்பு. பார்வையை சற்றே நிமிர்த்தினான். செம்பருத்திக்கும் நந்தியாவட்டைக்கும் இடையில் அங்கு வாயிலில் நிற்கிற தூணைப் பற்றியபடி அதன் மீது படர்ந்திருந்தாள் ரேவதி. சலனமற்றப் பார்வை எங்கோ ஆழத்தில் ஏதோ யோசனையில், எதைப் பார்க்கிறாள் என உத்தேசிக்க இயலாததாய் அந்தரத்தில் மிதந்தது. சில நொடிகளுக்குப் பிறகே தனது பார்வைப் புலத்திற்குள் இவன் நிற்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவளாய் செய்வதறியாது வெறுமனே டாடா சொன்னாள். குமரனும் பதிலுக்கு கை உயர்த்தினான். சட்டென ஓட்டுக்குள் சுருக்கிக் கொள்ளும் ஆமையென வீட்டிற்குள் மறைந்தாள். மனக்கடலில் ஆயிரம் அலைகள் புரள சரி தவறுகளுக்குள் சிக்கித் திணறுகிற நினைப்புடன் அங்கேயே சிறிது நேரம் நின்றிருந்தான். 

பின்பகுதியில் இருந்து வந்த தாத்தா, சன்னலோரம் இவன் நிற்பதைப் பார்த்து’ “இப்படி அப்பப்போ இடை இடைய கொஞ்சம் வெளிய வான்னு தான் சொல்றேன். இப்பவாவது கேட்டியே! வெளிய வர்றியா?” என்றார். புன்சிரிப்புடன் மேலும் கீழுமாக தலையசைத்தான். தாத்தாவிடம் ஓடிச் சென்று காலைச் சுற்றி குழைய தவித்தது மனம். அவருடைய இருப்பு முற்றிலும் இழந்துவிட்டதாய் இவன் சந்தேகித்திருந்த கபடமற்ற குழந்தைமை இன்னமும் இருப்பதாக நினைவூட்டி ஆற்றுப்படுத்தியது. தோழர்கள் போல தோள்களில் கைபோட்டபடி சிறிது நேரம் வீட்டைச் சுற்றி நடைபோட்டனர் இருவரும். காரணமின்றி மெலிதாய் சிரித்துக் கொண்டே இருப்பது எவ்வளவு அழகாயிருக்கிறது என நினைத்துக் கொண்டார்கள் போலும். இன்னும் சிரித்தார்கள்.  

 

[VIII ]

படிப்பிலேயே மூழ்கி தேர்வுகளிலேயே கழிந்தன அந்த பத்து நாட்களும். தேர்வு முடிந்த அன்று தொடர் படிப்பு தந்திருந்த ஆயாசம் அமிழ்த்திட மதியம் வந்ததுமே தூங்கிவிட்டான். பிரக்ஞையற்ற கனவுகளற்ற ஆழ் உறக்கம். இரவு ரேவதி வந்திருந்தாள். மறுநாள் அவள் அலுவலகம் விட்டு வந்ததும் மாலைக் காட்சிக்குப் போகலாம் என்று முடிவு செய்தார்கள். எப்போது போனாலும் மூவராகச் செல்வதே வழக்கம். தாத்தா படத்தேர்வுகளில் பெரிதாய் கவனங்கொள்வதில்லை. வெறுமனே உடன் வருவதோடு சரி. இவர்களிருவரும் தான் மல்லுக்கு நிற்பார்கள். இன்று அதிலொரு மாற்றம்; ஆச்சரியமும் கூட. ரேவதி பரிந்துரைத்த படத்தை துளி மறுப்பின்றி ஏற்றுக் கொண்டான் குமரன். அவளே புருவங்களுயர்த்தினாள், என்ன இது அதிசயம், என்பது போல். 

மாலை அவளின் வருகைக்கு முன்பே இவர்கள் தயாராக இருந்தார்கள். காலையிலேயே குமரன் முன்பதிவு செய்திருந்ததால் கிடைக்காதோ என்ற கவலையில்லை.  இவர்களைக் கண்டதும் “அஞ்சே நிமிஷம்… டக்குன்னு வந்தர்றேன்…” கைகளை உயர்த்தி அசைத்தபடியே வீட்டிற்குள் ஓடினாள். பாசிப்பயறு நிறத்திலொரு சல்வாரில் சொன்னபடி வந்து நின்றாள். 

“போலாமா? நான் ரெடி” 

“சொன்ன மாதிரியே அஞ்சே நிமிசத்துல வந்துட்டியே. பலே!”

“ரேவதின்னா யாரு! சும்மாவா!” துப்பட்டாவை சுழற்றி குமரனிடம் பழிப்புப் காட்டினாள். 

“சரி வா… நேரமாகுது” சொல்லியபடியே அவன் வண்டியில் ஏற தாத்தா பின்னால் அமர சட்டென கிளம்பிவிட்டான். 

“ஏய்… இருடா… வந்துட்டேன். ரெண்டு செக்கெண்டல என்ன தான் கிழிக்கப் போறியோ?” அங்கலாய்த்தபடி தன் வண்டியில் ஏறி விரட்டினாள். 

வெள்ளி மாலையென்பதால் நல்ல கூட்டம். இருக்கைகளைத் தேடி அமர்ந்தார்கள். எப்போதும் ரேவதியை நடுவில் இருத்தி இருபுறமும் இவர்கள் அமர்வது தான் வழக்கம். இன்று இடப்புறம் குமரன். தாத்தா அமர்ந்த விதமே அவர் அரைமணி நேரம் கூடத் தாக்குப் பிடிக்க மாட்டர் எனச் சொல்வது போலிருந்தது. பாதியில் உறங்கிவிட்டால் இடைவேளைக்கு முன் எழுப்ப மாட்டார்கள். அவருக்குப் படம் பிடிக்கிற பட்சத்தில் அவரே தொடர்ந்து பார்ப்பார் என்பதாக புரிதல்.  இருக்கையின் கைப்பிடிகள் யாருக்குச் சொந்தமெனும் சம்பிரதாயச் சண்டை முடியும் வரை தாத்தா இடைநுழையாமல் பொறுமை காத்தார். பார்த்துச் சலித்த நாடகத்தின் காட்சியைப் இன்னொருமுறை பார்ப்பது போலிருந்தது அவரது பாவனை. படம் துவங்கியதும் அமைதியாவார்கள் என்பதை அறிந்தவரென்பதால் அந்த அமைதி. 

திரை ஒளிர அரங்கம் முழுவதும் இருள் அமர்ந்தது. ஆங்காங்கே ஒளிர்ந்த அலைபேசிகளைத் தவிர வேறு தொந்தரவுகள் இல்லை. எப்போதும் வாயாடியபடியே தான் படம் பார்ப்பாள் ரேவதி.  ‘ஏண்டா கிளாஸ்ல உக்காந்திருக்க மாதிரி இவ்வளவு சீரியசா படம் பாக்குற’ என பதிலளிக்க மறுக்கும் குமரனையும் கடிந்து கொள்வாள். அப்படியான சமயங்களில் தாத்தாவை நச்சரிக்கத் துவங்குவாள். அவரும் பொறுமையாக கையாள்வார். இன்று வழக்கத்திற்கு மாறான அமைதி. ஒருவேளை படத்தில் லயித்திருப்பாள் என நினைத்துக் கொண்டார்.  

திரையில் ஒன்றும் மனத்திரையில் ஒன்றுமாய் இருவேறு படங்கள். முன்னது கண்களை மட்டும் நிறைத்திருக்க பின்னதே மனதை வியாபித்து சுகவாதையாக்கிக் கொண்டிருக்கிறது. உணர்ச்சிகளின் அலையாட்டத்தில் தான் தனியள் இல்லை என்பது மட்டுமே அவளிப்போது அறியாத ரகசியம். அவர்களது கரங்களுக்கு முன்னரே பரிச்சயமாகிக் கொண்டன குத்திட்ட ரோமங்கள். அரங்கின் குளிர் கதகதப்பினை வேண்டி நிற்க மெல்ல கரையத் துவங்கின இடைவெளிகள். இதற்கு மேலும் முன்னேறுவது நிரந்தர விலகலுக்கு அச்சாரமிட்டிடுமோ எனும் பயத்தில் ஒரு கரமும், மேலும் நெருங்க மனமின்றியே இடைவெளி இன்னுமிருக்கிறதோ எனும் குழப்பத்தில் மறு கரமும் தவித்துக் கொண்டிருந்தன. இந்த நினைப்புகளே முதுகு காட்டியபடி அந்த இடைவெளிக்குள் அமர்ந்திருந்தன. இடையில் மலங்க மலங்க விழித்தபடியே இருந்ததற்குப் பெயர் அன்போ, காமமோ, என்னவோ… அன்பிற்கு ஏங்கிச் சாகும் இரு உயிர்கள் பெயர்களிடுவதில் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. 

எத்தனையோ முறை இதே போல அமர்ந்து எத்தனையோ படங்களைப் பார்த்திருக்கிறார்கள். இன்றும் அமர்தல் அதுவே எனினும் அந்த நபர்கள் இவர்கள் அல்ல. இப்போதிருப்பது வேறு இருவர். காதலெனும் கற்பிதம் அற்பமென இருவருமே அறிந்திருந்தனர். 

புதியதாய் பிறந்திருந்த கரங்களிரண்டின் விரல்கள் அந்த இருளுக்குள் மெல்ல தம் இணையைக் கண்டு கொண்டன. குளிர் நிறைத்திருந்த அந்த அரங்கிற்குள் ஸ்பரிசத்தின் தோற்சூட்டை தனித்து உணர்ந்தன இரு தேகங்கள். கண்கள் தாத்தாவை பரிசோதித்து உறங்குவதை உறுதி செய்ததும், இருளிலும் பார்வை பழுதின்றி முன்னேறிய நகக்கண்கள் இணை சேர்ந்ததும் ஏககாலத்தில் நடந்தேறின. ஒருசேர இருவரும் எச்சில் விழுங்கினர். பக்கவாட்டில் இருவரின் கண்களும் திரும்பவேயில்லை, கரங்கள் பேசுகையில் பார்வைகளெதற்கு? பேச்சுக்கு இப்படி சொல்லிக் கொண்டாலும் ஏறெடுத்து எதிர்கொள்ள திராணியில்லை என்பதே நிதர்சனம். 

இருவரைத் தவிர்த்து எல்லாருக்காகவும் ஓடிக் கொண்டிருந்தது அந்தச் சினிமா. விரல்களின் இடைவெளிகள் விரல்களால் நிரம்பின. கோர்த்திட்ட கரங்களின் இடையில் உருவான கூட்டில் துடித்தபடியிருந்தது அவர்களின் உயிர்கள். 

மோகத்தீயென யார் சொன்னது? மொட்டில் மோகமொரு அமிலம். மனதைக் கலமாக்கி அதில் சேகரமாகுகிற கணம் தொட்டு சகல மூலைகளுக்கும் விரவி மீமெல்லமாய் அரிக்கத் துவங்கும். சொல்லிக் கொடுத்து வளர்த்திருந்த சுயத்தை சூழ்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும் கற்பிதங்கள், நாகரிகங்கள், புனிதங்கள் என எதிர்படுவதையெல்லாம் விழுங்கிச் செறித்து மனதை நிர்வாணமாக்கிய பின்னரே தீயாய் மலரும்.

கரங்களைக் கோர்த்திருந்த மோகம் இப்போது தோள்களுக்கு ஏறியிருந்தது. இடிபட்ட தோள்கள் நெரிபட்ட தசைகளின் மென்மையை உணர்ந்தன. குமரனின் இடது கால் அவனையும் மீறி நடுங்கி மெல்லுதறலுக்கு உட்பட்டது. அடுத்த இருக்கைக்காரர் நடுக்கம் குளிரினால் எனப் பொருள் கொள்ளுமளவிற்கு மென்மையான உதறலது. ரேவதி தன்னையுமறியாமல், இயக்கப்படுவது போல, கால்மேல் கால் போட்டு இறுக்கிக் கொண்டாள். இயக்கு விசையை இருவரும் அறிந்துணர்ந்த போதிலும் சொற்களாய் எதையும் சொல்லிக் கொள்ளவேயில்லை. உருகி வழிந்து கரைந்திருந்த நேரத்தை சட்டென ஒளிர்ந்த அரங்கின் விளங்குகள் அறிவிக்க துரிதகதியில் இருவரும் விலகினர். காற்றைப் பிடிக்க நேர்ந்த விரல்கள், மீண்டும் விரல்களையே யாசித்தன. இயல்பிற்கு வலிந்து மீண்டு நிதானித்து மென்மையாய் தாத்தாவை எழுப்பினாள். 

இமைகள் பிரிக்க சில நொடிகள் எடுத்துக் கொண்டவர் “என்ன படமோ! கொஞ்ச நேரத்திலயே தாலாட்டிருச்சு…” என சோம்பல் முறித்தார். 

 “ஆமால்ல தாத்ஸ். ஒரே போர்” அசட்டுத்தனமான பதிலென அவளுக்கே தோன்றியது. 

இடைவேளைகளின் போது எப்போதும் தாத்தா அவராக வெளியில் செல்வார். குமரனின் முதல் வேலை இவளுக்குத் துணையாக உடன் செல்வது தான். இவளைக் காத்திருந்து அழைத்து வந்தவனிடம் ஒரு ஓரமாய் லெமன் டீ பருகிக்கொண்டிருந்த தாத்தா சைகையால் தன் இருப்பை காட்டினார். பாப்கார்ன் பொட்டலமொன்றை அவன் வாங்கி வந்து அவளது கைகளில் திணித்தான். மூவரும் சுற்றி நின்று பொதுவாகக் கதைத்தபடியே சோளப்பொரிகளை எடுத்துக் கொரித்தபடி நின்றிருந்தார்கள். அது படம் பார்த்தலில் தவறாமல் நடைபெறும் ஒரு இணை சம்பிரதாயம். மூவரில் இருவர் கண்ணோடு கண் நோக்க நாணுவது மாத்திரமே வழமையினின்று பிறழ்ந்திருக்கும் அம்சம். 

இருள்சூழ் அரங்கில் மீண்டும் திரை ஒளிர்ந்தது. தாமதமாக வருகின்ற ஒரு சிலர் திரையின் ஊடாய் நிழலாய் கடந்த பின் முழுதாய் தன்னிலை மீண்டது அரங்கம். இருவருமே கொந்தளிப்பான மனநிலையில் தத்தளித்தும் துவங்கப் புள்ளிக்கே மறுபடியும் வந்து சேர்ந்திருந்தன தயக்கங்கள். ஈர்ப்பு இரக்கமற்றது; இடம் பொருள் ஏவலற்றது. வழியில் எதிர்படுகிற யாதொன்றையும் விழுங்கிக் தன்வயப்படுத்தி கரைத்துக் கொள்ளும் எரிமலைக்குழம்பது. தயக்கங்கள் எம்மாத்திரம்! கர அரவங்கள் பிணைந்தன. சூழும் சூறைக்காற்றில் நாணம் நாணலாய் மடிந்து மறைந்து கொள்ள, குமரன் கண்களை மூடிக் கொண்டான். முன்னைக்கும் இப்போது அவளின் விரல்களின் அழுத்தம் கூடியிருப்பதை உணர்ந்தான். கண்டவை கேட்டவை என ‘கண்டதும்’ மனதை மையமிட்டுச் சுழலத் துவங்கியது. புயலின் கண்ணில் அவளது தேகம். அகவெளியின் நாடக அரங்கில் தன்னை நோக்கி நடந்து வருகிறவளின் ஆடைகள் சரிந்து நெகிழ்ந்து நழுவ நழுவ அவளது பரிபூரணத்தின் கிரணங்கள் மெல்ல மெல்ல பரவத் துவங்குகிறது. இதுவரை எப்பெண்ணுடனும் பிணைத்து நினைத்திராத நிர்வாணத்தை அவள்மீது உடுத்திப் பார்க்கிறது நிகழ்கணம். தன்னையும் அறியாமல் விரல்களை இன்னும் இறுக்கிக் கொண்டான். அப்பரிபூரணத்தின் ஆகிருதி எல்லையற்ற பெருசுழலாய் தன்னை அச்சாக்கிச் சுழன்று தன்னுள்ளேயே சுழித்தோடுவது போன்ற தோற்றமாயைக்குள் மூழ்கிட மூச்சுத் திணறியது. எவ்வித ஈர்ப்புமின்றி உடைகளோடே பார்த்துப் பழகியிருந்த அவளின் வளைவுகளை அவைகளன்றி தாபத்தின் வண்ணம் குழைத்து வரையத் துவங்கியிருந்தது மனத்தூரிகை. 

இதுவரையிலும் கண்கள் கண்டிராத அவ்வனப்பை புகைபோல உருத்திரட்டி மனக்கண் காட்டியபோது செயலற்றவனாய் – அதன் முன் வேறேதும் செய்வதறியாது – மண்டியிட்டான். அசலுக்கு இரண்டே கண்களெனினும் கற்பனைக்கு நூறாயிரம் கண்கள். மூடியிருந்த இமைகள் திரைகளாக, அவன் கண்டு கொண்டிருக்கும் இத்தனிப்பெரும் மோக நாடகம் முன்னேப்போதும் உணர்ந்திராத ரசவாதத்தை அவனுள் நிகழ்த்திக் கொண்டிருந்தது. நெற்றிப் பொட்டிலும், புருவங்களின் விளிம்புகளிலும் பொறுபொறுவென ஒலித்தபடி ஏதோ ஒன்று மத்தாப்புகள் போல சிதறத்துவங்கியது. பிடறியில் ஏதோ அழுத்த பின்னால் அமிழ்த்த சரிந்து துவண்டது அவனுடல். 

பலத்த கரவொலிகளும், இடைவிடாத சீழ்க்கைகளும் செவிகளை நிறைத்து உலுப்ப, இமைகள் பிரிந்து அரங்கிற்குள் கால்பதித்தான். உச்சக் காட்சிக்கு ரசிகர்கள் ஆரவாரித்துக் கொண்டிருந்தனர். தானும் அப்படியான ஒரு நிலையிலிருந்து மீண்டிருப்பதாக தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். படம் முடிந்து திரை வீழ அனைவரும் எழுந்து ஒருவருபின் ஒருவராய் மெல்ல நகரத் துவங்கினர். தாத்தாவோடு ரேவதி முன்செல்ல அவர்களைத் தொடர்ந்தான் குமரன். அவருடன் எதையோ பேசியபடியே நடந்தவளின் கைவீசலில் வலையில் சிக்கிய மீனென மாட்டியது இவனது இடக்கரம். வெகு இயல்பாய் தன் கவிழ்ந்த பிறையிடையின் ஓரத்தில் அதனைப் பொருத்தி வைத்தாள். விரல்கள் உணர்ந்த மிருது அவளுடைய உடையினுடையது மட்டுமல்ல. இப்படியான நகர்வை அவன் எதிர்பார்க்கவில்லை. அவனளவில் அது அதிரடியான பாய்ச்சல். எதிர்கொள்ளத் திணறி கால்கள் சற்றே குழறின. 

 

[ IX ]

வீடுகளை நெருங்கவும், “தாத்தா இங்க மாவு இருக்கு. நான் இவன்கிட்ட உங்களுக்குக் குடுத்து விடுறேன். நாங்க இங்கயே செஞ்சு சாப்பிட்டுக்கவா?” என்றாள்.

அவளுடையது எப்போதும் கோரிக்கையாகவே தொனிக்கும். அதனாலேயே மறுக்க இயலாததாகி விடும் தாத்தாவுக்கும். “முதல்ல எனக்குக் கொடுத்துவிட்ருமா ரொம்ப பசிக்குது” என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தார்.  

கட்டைவிரலுயர்த்திச் சிரித்தாள். அவனை, ஏதோ ஒன்று, இத்தருணத்தையும் சூழலையும் மறுத்துப் பின்வாங்க நிர்பந்தித்தது. ஒரு கணம் லீலாம்மா மின்னி மறைந்தது போலிருந்தது. நீண்ட நேரத்திற்குப் பிறகு அவர்கள் விழிகள் சந்தித்துக் கொண்டன. அது மீற இயலாததொரு அழைப்பை விடுத்தது. மனம் சுட்டிய நேரெதிர் திசையில் கால்கள் எட்டு வைத்தன. 

பரபரப்பாக தாத்தாவிற்கு உணவு தயாரித்தவள் தானே சென்று கொடுத்தும் வந்தாள். இருவரும் அமர்ந்தனர். மாலையில் புறப்படுகையில் சார்த்தியிருந்த சன்னல் கதவுகள் இன்னும் திறக்கப்படாமலேயே இருந்தன.  கூடத்தில் வாசல் பார்த்திருக்கும் சன்னலை மட்டும் காற்று வர திறந்துவைத்தாள். பிரதேசமெங்கும் நிலவிய அமைதி அவ்வீட்டையும் நிறைத்திருந்தது. ஆனால் அதைவிடவும் அடர்வானதொரு அமைதி இருவருக்கும் மத்தியில் நெருக்கிப் பிடித்து அமர்ந்திருந்தது. மௌனம் எவ்வளவு பாரமானது எனச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது பொழுது. அடர்மௌனத்தை திறக்கும் சாவி உதிர்க்கப்படும் ஒற்றைச் சொல் என்ற போதும் யார் திறப்பததனை?

திறக்கப்பட்ட சன்னலில் அலைந்தபடியிருந்த திரைச்சீலையை வெறித்துக் கொண்டு அமர்ந்திருதவனின் அமைதியைக் கலைக்கவோ அல்லது தனை நோக்கித் திருப்பவோ கேட்டாள் “படம் பிடிச்சதா?” 

எதுவும் கேளாத தூரத்தில் அவனலைவதை நிலைத்த கண்கள் சொல்ல, மீண்டும் கொஞ்சம் உரத்து, “படம் பிடிச்சுச்சா?” என்றாள். அவன் நிமிர்ந்து சில விநாடிகள் அவளது கண்களை ஊடுறுவினான். 

“நீ படம் பார்த்தியா?”பதிலொன்றை எதிர்பார்த்தவளுக்கு, ஒரு எதிர் கேள்வி, அதுவும் இப்படியான கேள்வியை எப்படி எதிர்கொள்வதென்றே தெரியவில்லை; கேள்வியைப் போலவே அந்த கண்களையும்.

“சரி. ரெண்டு பேருமே பாக்கல. ஒத்துக்கிறேன்.” நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் அருகில் நெருங்கி நின்றாள். அவன் எழுந்து நடந்து அசைவாடிக் கொண்டிருந்த திரைசீலையை ஒதுக்கி கம்பிகளைப் பற்றிக் கொண்டு வீட்டின் முன்வாசலை பார்க்கத் துவங்கினான். வேண்டுமென்றே விலகுகிறானா? குழப்பத்தில் புழுங்கினாள். தான் செய்வதறியாது திணறுகிற சமயங்களில் எல்லாம் அவன் விரல்களால் தாளமிடுவான். இப்போது அவை குதிரைகளின் குளம்படி போல தடதடத்துக் கொண்டிருந்தன சன்னல் கிராதியில். உள்ளுக்குள் சமநிலையில் இருப்பதாக நடிக்க முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருந்தான். 

இதுவரை தன்னை நெருங்கி அறிந்திராத – உள்ளம்புணர்ந்துவிட்ட – இரு ஜீவன்களின் இடையை தன் அரூபக் கரங்களால் இறுக்கி அணைத்தபடியிருந்த காமம், அவர்கள் இருவரையும் கனன்று கொண்டிருக்கும் எரிமலை வாயின் முகப்பில் நிறுத்தியிருந்தது. எரியத் துவங்கியிருந்த அகநெருப்பை அணைக்கத் தெரியாது தவித்தனர் – அல்லது தவிர்க்க கடும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தனர். சொற்களாய் எதுவுமே பேசத் தோன்றவில்லை இவளுக்கு. கார்த்திகையில் கூட வியர்த்தது. அவனருகே சென்று அவனைப்போலவே சன்னலைப் பற்றியபடி நின்று கொண்டாள். இரு ஜோடி விழிகள் அருகிருக்கும் கரங்களைப் கண்டுகொண்டன. மெல்ல ஒரு காந்த விசை அவைகளுக்கிடையில் செயலாற்றியது போல கட்டுண்டு நகர்ந்து ஒன்றையொன்று நெருங்கின. ஒரு வார்த்தை சிந்தவில்லை. கனத்த மௌனம் அங்கு நிலவியதை கடிகாரத்தின் நொடிமுள்ளின் நகர்வு அதிர அதிரச் சொன்னது.

அவனை இன்னும் கொஞ்சம் நெருங்கி இடதுகரத்தினூடாக தன் கரத்தைக் கோர்த்துக் கொண்டு தோள் சாய்ந்தாள். வாழ்வில் முதன் முறை தனங்களை புஜங்கள் உணர்ந்தன. நாவரள பெரிதாக ஒரு மிடறு விழுங்கினான். சாவிகள் முடுக்கிய பொம்மைகளென திரும்பி ஒருவரையொருவர் எதிர் நின்றனர். இருவருக்கும் இடையில், அலைவுறுகிற மனம் போலவே, திரைச்சீலையும் காற்றில் இலக்கற்று படபடத்துக் கொண்டிருந்தது. பழகிய முகங்களில் பழகாத விழிகளை எதிர்கொள்ள திடமின்றி தயங்கித் தவித்தனர். இந்த விழிகள் வீசுகிற பார்வை புதிது. அவை பேசும் மொழி மிகப்புதிது. பார்வையை எதிர்கொள்ளத் திராணியற்றவளாய், தாளாது, அவனது தோள்களுக்கிடையில் தஞ்சமானாள். இது வரையிலும் இல்லாத இறுக்கத்தைப் பேசியது அவனது முதுகைச் சிறையெடுத்த அவளது பிடி. மதனின் கதைகளின் காட்சி ஒன்றுக்குள் தற்சமயம் தான் நின்று கொண்டிருப்பதை உணர்ந்திருந்தான் குமரன். தன்னையும் மீறி தனது கரங்கள் அவளது இடைசுற்றிக் கொண்டதை அத்தருணத்திலும் ஆச்சரியம் கலந்த பீதியுடன் தனக்கு வெளியிலிருந்து சாட்சி மாத்திரமாய்க் கண்டு கொண்டிருக்கிறான். நெடுங்கொடியில் பூத்திருக்கும் ஈரிதழ் மலர் தேடி எக்கினாள். இறுக மூடிக்கொண்டன விழிகள் நான்கும். அதரம் நனைய முத்தமெனும் ஓர் நெடுங்காலத்தைய ஈரக் கனவு உலரத் துவங்கியிருந்தது.

வெட்டி வைத்திருந்த அகழிகளை அனாயசமாகத் தாவிக்குதித்திருந்தது தாபம். மனங்களும் உடல்களும் நேர்கோட்டில் நின்றபடி இணையை வேண்டி நின்றன. தன்னிலை மறைய, சித்தம் உறைந்து சகல கட்டுமானங்களும் உதிர்ந்து பொடிந்து போகுமாறு ஆவேசமாய் தழுவியபடி பின் நகர்கையில் இடறி சோபாவில் அமர்ந்தான். இமைப்பொழுதில் கண்கள் வேறு தினுசில் மாறின. அவளை யாரோ போல வெறித்தன அக்கண்கள். சற்றுமுன் தாகம் குடிகொண்டிருந்த அதன் ஆழத்திலிருந்து விவரிக்கவியலா துன்பத்தின் வெளிப்பாடாய் ஒரு கேவல் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. மாற்றங்களைக் படிக்கத் திணறியவள் பறத்தல் துறந்த பறவையாய் சிறகொடுக்கி செய்வதறியாமல் திகைத்து உறைந்தாள். மெல்ல அவன் தாடையை உயர்த்திப் பிடித்து என்ன என்பது போல பார்வையால் வினவினாள். 

திக்பிரமை பிடித்தவன் போல வெளுறிக்கிடந்தது முகம். உள்ளதில் ஓடுவதை மொழிபெயர்க்கத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள். அவளையே உற்று நோக்கிய கண்கள் நிச்சயம் அவளைப் பார்க்கவில்லை. தனக்குள் எங்கோ சென்று நிலைக்கிறது என்று மட்டும் உணர்ந்தாள். மேற்கொண்டு எந்த நகர்வையும் முன்னெடுக்க முயலாமல் அசைவின்றி தன் விழிகளை மட்டும் பார்த்தபடி எங்கோ சூன்யத்திற்குள் தொலைந்திருந்தவனையே பார்த்தபடி நின்றிருந்தாள். அவனது முகத்தில் நொடிக்கொரு பாவனை மாறிக்கொண்டே இருந்தது. நீருக்குள் அமிழ்த்தப்பட்டவன் மூச்சிற்கு ஏங்கித் திணறுவது போல மார்புக்கூடு விம்மத் தொடங்க, இவளுக்கு உண்மையிலேயே பெரும் பயம் அப்பிக் கொண்டது. 

அவனது பெயர் சொல்லி அரற்றியபடி தோள்களைப் பற்றி இயல்பிற்கு மீட்கிற முயற்சியாய் உலுக்கத் துவங்கினாள். பிரக்ஞை மீள கதியின்றி வெறும் உடல் மட்டும் அசைந்தது. திடீரென சுயம் மீண்டவனாய் அவளைக் கூர்ந்தன கண்கள். உடல் நடுங்கிட, உதடுகள் துடித்திட அவளைப் பார்த்து “அனந்திப்பூ” என்று உயிராழத்திலிருந்து விசும்பலற்ற ஒற்றைக்கேவலாய் வெளிப்பட்டது. தன் மகவை பிரசவிப்பதற்கு முந்தைய கணத்தில் கர்ப்பிணியிடமிருந்து வெளிப்படுகிற கடைசி ஓலத்தைப் போல தொனித்தது அச்சொல். சகலமும் ஒடுங்கிப் போயிற்று ரேவதிக்கு. 

தப்பித்து ஓடுபவனுடைய உடல்மொழியையோடு கதவைத் திறந்து சடுதியில் வெளியேறினான். சிலை போல நெடுநேரம் சமைந்திருந்தாள். சிவப்புப் புரவியாய் வந்து அவனாய் மாறிய அந்த இரவின் வாதையை விட பன்மடங்கு சித்ரவதையாய் இருந்தது இந்த இரவைக் கடப்பதற்கு. இனி அங்கு சென்று இயல்பாய் புழங்க முடியுமா என்று சிந்தனை ஓடியது. மனம் ஒரு கூண்டு கண்டி அதில் தன்னையே ஏற்றிவிட்டு குறுக்குவிசாரணை செய்து பல நூறு முறை சலிக்கச் சலிக்கக் கொன்றது. அன்று போலவே இன்றும் அயர்ச்சி இறுதியில் வீறிட்டுக் கொண்டேயிருந்த மனதை அடித்துச் சாய்த்தது. விடியலின் வெளிச்சம் முகத்தில் படர விழித்துக் கொண்டவள் அப்படியே சோபாவிலேயே உறங்கிக் கிடந்திருந்ததை கண்டு கொண்டாள். தூக்கம் வெளியேறவும் கனத்த துக்கம் இட்டு நிரப்பிக் கொண்டது மனதை. 

மணி பத்தை நெருங்கியிருந்தது. இன்றைய முறைக்கு காலை உணவு அங்கு தான். செல்வதா வேண்டாமா என்ற மனபோராட்டத்தின் இறுதியில், வராமை தான் வித்தியாசமாய்த் தெரியும் என நினைத்தாள். தாத்தா இந்நேரம் வரையிலும் அலைபேசியில் அழைக்காமல் இருப்பதே ஆச்சரியம் தான். இதயத்தின் கனம் கால்களுக்கு இடம்மாறியதைப் போல சுணங்கினாள். அடுத்த வீடெனினும் இதுவரையிலும் அவள் மேற்கொண்ட நெடிய பயணம் இது தான் என்பதாக மயக்கம் தந்தது அந்நடை. 

தயக்கத்தை விழுங்கி உள்நுழைந்ததும் இயல்பு குலையாமல் தனது முதல் சொல்லாக தாத்தா புன்னகை பூத்ததெ ஆசுவாசமாய் இருந்தது அவளுக்கு.

“என்னம்மா. களைப்புல நல்லா தூங்கீட்டியா?”

வெறுமனே தலையசைத்தாள். அவளுக்கான காலையுணவு உணவு மேசையில் மூடியிடப்பட்டு தயாராய் இருந்தது. “எங்க தாத்தா… அவனக் காணோம்?” இயன்ற அளவுக்கு இயல்பாய் கேட்க முயன்றாள். 

“காலையில எட்டு எட்டரைக்கெல்லாம் புறப்புட்டு மனோ வீட்டுக்குப் போறதா சொல்லிட்டுக் கிளம்பிட்டானேமா.”

இவளது எதிர்வினையை எதிர்பாராமல் தொலைக்காட்சி ரிமோட்டை நோக்கி நீண்டது அவரது கை. அவர் அப்படித்தான். விநோதமாய் தெரியக் கூடாதென்பதற்காகவே மௌனமாய் உண்டு முடித்தாள். அவரிடம் கேட்க அவளுக்கு ஒரே ஒரு கேள்வி இருந்தது. மெலிதான குரலில் அவரை அழைத்தாள். 

“ம்…சாப்பிட்டு முடிச்சுட்டியா. டீவி பாக்குறியா இல்ல வீட்டுல எதும் வேல கெடக்கா?”

கொஞ்சம் நேரம் இங்கேயே இருக்கிறேன் என அறிவிப்பது போல, வழமையாய் அமருகிற மூங்கில் இருக்கையை நகர்த்திப்போட்டு அவருக்கருகில் அமர்ந்தாள். அவர் நிதானமாக டீவியை அணைத்துவிட்டு ரிமோட்டை டீபாயில் சுண்டினார். என்ன என்பது போல வினவின அவரது பார்வை. 

பொழுது போக்க கதைப்பது போன்ற பாவனையில் வெறுமனே அர்த்தமற்று சிறிது நேரம் எதையெதையோ பேசிக் கொண்டிருந்தவள் சற்றே நிதானித்து அவரிடம் “ஏன் தாத்தா, அனந்திப்பூனா என்ன? அப்படியொரு பூவிருக்கா?” என்றாள். 

பழுத்த சருகுப் புருவங்கள் உயர “இதென்னாடா இது இளசுகளுக்கெல்லா இருந்தாப்போல இதைப் பத்தியே விசாரிப்பு” ஆச்சரியங்காட்டி தொண்டையச் செருமிக் கொண்டார். அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது ஜன்னல் பக்கம் விழுந்த அவள் பார்வை விழக் காத்திருந்த ஒரு நந்தியாவட்டையின் மீது நிலைத்தது. ஒரு மென்காற்று கொய்து விடுவிக்க, காற்றில் சுழலும் காற்றாடியென அது வெகு நிதானமாய் சுழன்று கொண்டே கீழிறங்கத் துவங்கியது.  


 

எழுதியவர்

வருணன்
இயற்பெயர் லா.மா.ஜோ அந்தோணி. தூத்துக்குடியில் வசிக்கிறார். இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் இவர்; சினிமா மற்றும் இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சினிமா சார்ந்த கட்டுரைகள் படச்சுருள், வாசகசாலை இணைய இதழ், புரவி, பேசாமொழி இணைய இதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதைகளும் அவ்வப்போது இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன.

இவரது ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ என்ற சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதி வாசகசாலை பதிப்பக வெளியீடாக 2020இல் வெளிவந்துள்ளது.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Anto Judin
Anto Judin
1 month ago

அனந்திப் பூ

அருமையான குறுநாவல்.

உணர்வுகளை எழுத்தில் கொண்டு வந்து படிப்பவர்களை அந்த உணர்வு கொள்ள வைத்து வெற்றி பெற்றிருக்கிறார்.

வாழ்த்துகள்

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x