27 April 2025
Varuna KS 25

லக இலக்கியத்துல எப்படியாவது நிலையான இடத்தைப் பிடிக்கணும். மனதிற்குள் சொல்லிக் கொண்டாலும் உரக்கச் சொல்வது போலவே தோன்றியது உலகநாதனுக்கு. அமர்ந்திருந்த வள்ளுவர் பூங்காவில் வேறு எவருக்கும் அது கேட்டது போலவே தெரியவில்லை. எந்த அலட்டலும் இல்லாமல் அவரவர் அவரவர் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தனர். வேட்டி அவிழக் காத்திருக்கும் அந்த வயதானவர் எப்படி அது குறித்த பிரக்ஞை துளியுமின்றி பெஞ்சில் சரிந்து உறங்கிக் கொண்டிருக்கிறாரோ, அதற்கும் சற்றும் சளைக்காத வகையில் தான் ஏனையோர் உலகு மீது கவனமின்றி இருந்தனர்.  ‘இந்த சன்னாசி நாய வேற காணோம்’ மனதிற்குள்ளேயே சலித்துக் கொண்டான். உலகுவின் உலகில் சன்னாசி தவிர்க்கவியலாத ஒரு (ஒரே) பிரஜை. 

சன்னாசிக்கு இலக்கியம் எனும் வார்த்தை மேலேயே தீராத மோகம். நினைப்பில் மிதக்கும் காதலியின் பெயருக்கே காமுறுகிறது போல இலக்கியம் எனும் சொல்லே அவனைக் கிளர்த்தும். எப்படி அவன் உலகநாதனிடம் சராணகதியானான் என்பது உலகுவுக்கே பிடிபடாத ரகசியம். சன்னாசியிடம் கேட்டால் கூட இதற்கு பதிலிருக்குமா என்பது ஐயமே. அரிசி மண்டிக்காரனாய் தலைதலைமுறையாய் வாழ்க்கை வாழும் உலகநாதனுக்கு இலக்கிய தாகம் ஏற்பட்டது எப்பொதென்று சொல்வதும் சிரமமானதே. அரிசிகளின் ரகங்கள் தவிர வேறொன்றும் தெரியாத ஒரு குடும்பத்தில், அச்சிடப்பட்ட காகிதம் என்பது சில்லறை விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு பொட்டலங்கள் போட மிக அவசியமான பொருள் என்பதைத் தாண்டி எழுத்து குறித்த எவ்விதப் புரிதலோ அலட்டலோ இல்லாத ஒரு பின்னணியில் இருந்து சுயம்புவாக தானெ எழுந்துவந்திருப்பதாக எண்ணிக் கொள்வான். சமயங்களில் இலக்கியத் தாய் தேவையின் நிமித்தமாய் தன்னைத் தேர்ந்து கொண்டதாகவும் கற்பனைகள் ஓடும். 

ஆங்கில இலக்கியம் படித்திருந்தது அவனுக்குத் தோதாகப் போயிற்று. இத்தனைக்கும் அது தவமிருந்து வாங்கிய வரமெல்லாம் இல்லை. இவன் பனிரெண்டாம் வகுப்பில் செய்திருந்த சாதனைக்கு வேறு எதுவும் கிடைக்காததால் ஆங்கிலத்தை அணைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இவனது ஐயா பூமிநாதன் தனது மகனின் பெயருக்குப் பின்னால் பட்டங்களைப் பறக்கவிட்டே தீருவதென்று விடாப்பிடியாக சேர்த்து விட்டதால், உலகநாதனெனும் அத்தனிப்பறவை இலக்கிய வானில் சிறகு விரிக்கத் துவங்கியது அல்லது அப்படியாக நினைத்துக் கொண்டது. அங்கும் தட்டுதடுமாறித்தான் ஒவ்வொரு பருவத் தேர்வுகளையும் கடக்க வேண்டியிருந்தது. சில முத்துகளை மீண்டும் மீண்டும் மூழ்கித் தேட வேண்டியிருந்ததேயொழிய பெரும்பாலான பாடங்களில் முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றுவிட்டான். ஆங்கில அறிமுகத்தையே, சரளமான பேச்சுவழக்கு ஆங்கிலத்தையே அறிவாக விளங்கிக் கொண்ட கூட்டத்திற்கு மத்தியில் உலகுக்கு அறிவாளி கிரீடம் அதுவாகவே ஏறி அமர்ந்து கொண்டது. ஓர் இளவரசனைப் போல அதனை சிரம் தாழ்ந்து ஏற்றுக் கொள்ளவேண்டியது மட்டுமே அவன் வேலையாக இருந்தது. 

மகன் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், கடைக்கு வருகிற யாராவது உலகு எங்காவது பொதுவிடத்தில் ஆங்கிலத்தில் பேசி ‘பொளந்து கட்டியதை’ தரிசிக்கிற பாக்கியம் வாய்த்த கதைகளை பகிர்ந்து கொள்வார்கள். அப்போதெல்லாம் மயிர்கள் நட்டுக் கொள்ள புளகாங்கிதத்தில், வழக்கமாக சில கிராம்களுக்கு மேலே கொசுறு போடாத, அவரது கைகள் கூடுதலாய் சில கைப்பிடி அரிசியை தராசில் தட்டும். அந்த உணர்வுப்பூர்வமான சிறு சறுக்கலை நுட்பமாய்க் கண்டுகொண்டவர்களின் வழியாகவே மகனது பராக்கிரமங்களை அடிக்கடி கேளவாய்த்தது பூமிநாதனுக்கு. சரி எல்லோரும் இன்புற்றிருப்பதுவும் நல்லது தானே.

இலக்கிய வாசனை அறவே அற்றுப் போன ஒரு வட்டாரத்திலிருந்து எப்படி சாரைசாரையாய் படைப்பாளிகள் மட்டும் வந்து கொண்டே இருக்கிறார்கள் என்பது குறித்து உலகுவும் சன்னாசியும் சிலிர்த்துக் கொள்வார்கள்.  “நீங்கதாண்ணே இந்த பாரம்பரியத்தோட அடுத்த மதிப்புக்குரிய வாரிசு” என்று சன்னாசி சொல்லும்போதெல்லாம் உலகுக்கு கால்கள் தரையில் பாவ மறுக்கும். குடிக்கும் போது இலக்கியம் பேசுவதில்லை என்பது அவர்கள் இருவருமே ஆலோசித்து எடுத்திருந்த முடிவாக இருந்தது. அது ஒன்று தான் அவர்களால் விளைந்த ஒரே இலக்கிய நன்மை என்று தோன்றுகிறது. அதனால் இலக்கியம் பேசுவதான பாவனையில் இலக்கியவாதிகள் குறித்த புறணிப் பேச்சு அவர்களிடையில் அறவே இருக்காது. அவர்கள் பேசுகிறவற்றில் இலக்கியமும் இருக்காது என்பது வேறு விசயம்.  ஒரு துறை குறித்து தாமறிந்த கலைச்சொற்களையெல்லாம் மாடியில் காயப்போடுகிற வடகம் போல பிழிந்து பிழிந்து நிறைத்தும் பேச்சின் உட்பொருள் வெற்றாக இருப்பதை ஒரு கலையாகவே வளர்த்தெடுக்கிறது போல இருக்கும் அவர்களது உரையாடல்களில் பங்குகொண்டால். (ஒட்டுக் கேட்டு ஓடியர்வகளின் பட்டியலே ஒரு தெரு நீளத்திற்கிருக்கும்.) 

இலக்கிய தாகம் வாட்டிய காலகட்டத்தில், அதாவது சரியாக இளநிலை ஆங்கில இலக்கியம் முடித்திருந்த காலகட்டத்தில், தாகம் தணிக்க ஊருக்குள் ஏதாவது இலக்கியக் கூட்டங்கள் நடக்கிறதாவென சலிக்கத் துவங்கியிருந்தான் உலகு. உழைப்பின் பயனாக இரு இடங்களில் மாதாந்திரக் கூட்டங்கள் நடைபெறுவதைக் கண்டுபிடித்தான். வார இறுதிகளில் நடைபெறுகிற அக்கூட்டங்களுக்கு தவறாமல் முதல் ஆளாக நிற்பான். தகவல்தொடர்பு வசதிகள் பெருகிய இக்காலகட்டத்தில் கலந்து கொள்கிற சக இலக்கிய ஆர்வலர்களிடம் தவறாமல் வாட்ஸாப் தொடர்பு எண்களை வாங்கிப் பதிந்து கொள்வதோடு அவர்களுக்கு தினசரி தன் மனதெனும் உறைகல்லில் சிந்தனைகளை உரசுகையில் தெறிக்கின்ற தீப்பொறிகளோடு காலை வணக்கங்களையும், மாலை வணக்கங்களையும் பகிரும் அளவுக்கு முன்னேறியிருந்தான். அக்கூட்டங்களின் ஒருக்கிணைப்பாளர்கள் நிர்வகிக்கிற புலனக்குழுங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டு அதே சிந்தனை முத்துகளைச் சிதறவிடுவான். 

அப்படியொரு கூட்டத்தில் தான் இந்த இலக்கியப்பறவைகள் இரண்டும் தத்தமது வாழ்நாள் இணையென ஒருவரையொருவர் கண்டுகொண்டனர். ஒப்பீட்டளவில் பார்த்தால் சன்னாசி கொஞ்சம் உண்மையிலேயே இலக்கியப் பரிச்சயம் கொண்டவனாக இருந்தான். குறைந்தபட்ச வாசிப்புப் பழக்கம் – துணை நூலகங்களின் தயவில் – அவனுக்கு இருந்தது, இவனிடம் இல்லாததும் உலகுவிடம் இருந்ததும் ஒன்று தான். அது பணம். பிழைப்பிற்கென இலக்கியத் தேடலென்ற தேனைத் தடவி உலகோடு ஒட்டிக் கொண்ட சிறு பூச்சி அவன். 

தகப்பனுக்கு ஓய்வு கொடுத்து கல்லாவில் மகன் அமர்ந்த நாள் தொட்டு, கடைக்கு வருவதை நிறுத்தியிருந்த பூமி, மகனைப் பிடித்தாட்டத்துவங்கிய இலக்கியப் பேயிடம் தன்னையும் மனமுவந்து ஒப்புவித்திருந்தார். மகனது இலட்சியத் தேடலுக்கு அணிலாக உதவிட, மீண்டும் கடையைப் பார்த்துக் கொள்ள செல்லத் துவங்கியிருந்தார். ராமன் உலகநாதனுக்கு அனுமனாக சன்னாசி வந்து சேர்ந்திருந்தான். 

தனது தீவிர சிந்தனைகளை பகிர்ந்து கொள்கிற சீடப்பிள்ளையாக மட்டுமல்லாமல், தனக்கு நிகராக பாவித்து ஆலோசனைகள் செய்கிற சகாவெனும் இடத்திலும் சன்னாசியை வைத்திருந்தான் உலகு. இக்கணத்தில் தனது தன்மானம் சார்ந்து ஒரு மிக முக்கிய முடிவெடுப்பதை முன்வைத்து தான் யோசித்திருக்கிற செயல்திட்டங்களை முன்வைத்து கலந்தாலோசிக்கவே அவனை வரச் சொல்லியிருந்தான். சன்னாசிக்கு சுட்டுப் போட்டாலும் சொன்ன நேரத்திற்கு வர முடியாது என்பதை நன்கு அறிந்தவனாகவே பதினோறு மணிக்கு என்பதற்கு பதிலாக பத்து மணிக்கு வருமாறு சொல்லி இருந்தான். பயல் இன்னும் வந்தபாடில்லை. 

 

காத்திருக்கும் பொறுமையின் கடைசிச் சொட்டு வடியக் காத்திருந்த ஒரு பொழுதில் ஒடிசலான தேகத்தோடு தனது முன்வழுக்கையைத் தடவியபடியே பூங்காவிற்குள் அவன் நுழைவதை வடக்கோடியில் கல் இருக்கையில் சாய்ந்தபடியிருந்த உலகநாதன் கண்டதும் ஒரு நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றினான். அதனை மொழிபெயர்க்க முயன்றால் நிச்சயம் மிக மோசமான கெட்ட வார்த்தைகளாக மட்டுமே அது இருக்குமென்பதால் விட்டுவிடலாம். உலகுக்குத் தெரியும், தானிருக்கும் இடத்தை அடையாளங்கண்டுகொண்டு தன்னை நெருங்குவதற்குள் தாமத்திற்கான காரணத்தை ஒரு கதையாகவே தயாரித்து விடுவான் என. நினைத்தபடியே சன்னாசி ‘அண்ணே…’ என தனது வழக்கமான இழுவையில் துவங்கி நிஜம் போலதொரு கதையைச் சொன்னான். நல்ல கதைசொல்லி அவன். சமர்த்தன். இவன் சொல்கிற காரணக் கதைகளின் சுவாரசியத்திற்காகவே இவனது சோம்பேறித்தனத்தையும், கொள்கைப்பிடிப்பான ‘நேரந்தவறுதலையும்’ சகித்துக் கொள்வான் உலகு.  

இருப்பினும் இன்று கடைமைகள் கண் முன் நிற்பதால் சன்னாசியின் சுவாரசியப் பொய்களை ரசிக்க நேரமில்லை. பொய் திரிக்க வாய் திறந்தவனை அப்படியே மூடும் விதமாக “வாப்பா சீக்கிரம். நெறைய சோலி கெடக்கு” என்று நறுக்கென்று துவங்கினான் உலகு. சன்னாசிக்கே இது கொஞ்சம் ஆச்சரியம் தான். ஆனாலும் இப்படி அண்ணன் சொல்கிறாரென்றால் ஏதோ மிக முக்கிய பணியாகத் தான் இருக்குமெனும் புரிதலில் அவனது முகம் மிக தீவிரமான பாவனையைத் தேர்ந்து கொண்டது. முதல் பிரசவத்திற்காக உள்ளிருக்கும் மனைவிக்காக காத்திருக்கிற கணவனின் முகத்தை ஒத்திருந்த தீவிரமது. எப்படியும் இலக்கியம் தொடர்பான பிரசவமாகத்தான் இருக்குமென்பதால் சூழலுக்கேற்ற பாவனையாகவே அது ஒத்துப் போயிற்று. 

 “சூழ்நிலை நெருக்கடிகளால சில முக்கிய முடிவுகள எடுத்தே ஆகணும்டா தம்பி. அது தான் ஒரு ரெண்டு நாளா யோசிச்சத பேசறதுக்கு வரச் சொன்னேன். இப்ப நாம் போய்கிட்டு இருக்கிற இலக்கிய கூட்டகளுக்கு ஒரு மாற்று குரல் தேவைப்படுதுன்னு தோணுது”. அந்த ‘மாற்றுக் குரல்’ என்பது என்ன என்ற குழப்பம் தெளிவாக சன்னாசியின் நெற்றியின் மடிப்புகளில் தெரிந்தது. 

உண்மையில் நடந்தது இது தான். நம் உரைகல் சிந்தனைத்தெறிப்புச் சித்தர் உலகநாதர் வாட்ஸாப் குழுவில் உதிர்த்திருந்த சில தனிப்பட்ட முத்துகளைப் பகிர வேண்டாமென்றும், பொதுவான இலக்கியம் சார்ந்து பேச்சுகள் இருக்க வேண்டுமென்பதே குழு உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான விதியென்றும், அதனை பின்பற்றி பதிவுகளைப் பகிருமாறும் இரண்டு முறை வேண்டுகோள் வைக்கப்பட்டது. இருந்தும் உலகுவின் இலக்கியத் தேடலை இச்சிறு நிபந்தனை மதகுகளென்ன செய்துவிட முடியும்! மூன்றாவது முறை, அடுத்து இதுபோல் பகிர்வுகள் தொடர்ந்தால் குழுவில் இருந்து நீக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்படவும் சில நாட்கள் தியான நிலைக்கு உலகநாதர் சென்றார். ஆனால் அவர் செய்த இன்னொரு வேலை எச்சரிக்கையை உடனடியாக அமலாக்கம் செய்ய வழி செய்தது. குழுவில் தானே பகிரக்கூடாது என்று விதியிருக்கிறது. உறுப்பினர்களுக்கு அது சென்றடையக்கூடாது என்பதில்லையே. குழு உறுப்பினர்களின் எண்களை மிக எளிதாக அங்கேயே திரட்டி பதிந்து கொண்டவன், அவர்களுக்கு பிராட்கேஸ்ட் வசதியைப் பயன்படுத்தி தனிப்பட்ட விதத்தில் சிந்தனை முத்துகளை பகிரத் துவங்கியதும்தான் வந்தது வினை. முற்பகலுக்குள் குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கு பத்துக்கும் பேற்பட்ட குழு உறுப்பினர்கள் புகாரளிக்க மதியமே குழுவில் இருந்து நீங்கப்பட்டான். புகாரளித்தவர்கள் இவனது எண்ணை பிளாக் செய்யாமலா இருப்பார்கள்? சிறப்பாக செய்திருந்தனர். இது எதுவுமே பொத்தான்கள் மட்டுமே உள்ள பழங்கால நோக்கியாவைப் பயன்படுத்துகிற சன்னாசிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. 

உலகு தனது குரல் இலக்கிய பிரபஞ்சத்தில் உரக்க ஒலிக்க வேண்டுமெனில் தனக்கான களம் ஒன்று தேவையென உணர்ந்தான். அடுத்தடுத்த நாட்களில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, இதோ தனது சகாவிடம் பகிருமளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது.   ‘ஜீ ஹுசூர்’ என்பது போன்ற அவனது அதே பழக்கமான தொனியில் “நீங்க அவசரமா வரச் சொன்னப்பவே நெனச்சேண்ணே ஏதோ விசயம் பெருசுன்னு” என்றான். உலகு பேசத்துவங்கும் முன்பு உரிமையோடு தனது சட்டைப் பையில் எடுத்து வைத்திருந்த ஐநூறை சன்னாசியின் சட்டைப் பைக்கும் அதில் சிரித்தபடியிருந்த காந்தியின் சிரிப்பை அவனது இதழ்களுக்கும் இடம் மாற்றியிருந்தான்.  ‘அப்படியே ஆகட்டும் ஷா ஹென் ஷா’ நிலைக்கு சன்னாசியை இது உடனடியாகக் கொண்டுவந்திருந்தது. 

“டேய் நாம இப்போ போறோமே இலக்கிய கூட்டங்க, அதப்பத்தி என்ன நினைக்கிற? ஓ மனசுக்கு நெறைவா இருக்கா?” கேள்வியாகவே துவங்கினான். 

அவனது எதிர்பார்ப்பை முன்னிட்டே தனது பதில்களை தகவமைத்துக் கொள்ளப் பழகிவிட்ட சன்னாசி என்ன பதில் சொல்வது என குழம்பிப் போய், “ஏண்ணே அதுவும் பிரச்சனையா?” என்று பொதுவான எதிர்கேள்வியோடேயே முடித்துக் கொண்டான். 

“பிரச்சனைனு ஒண்ணு இருந்தா தான் யோசிக்கணுமா? நாம் புழங்குற இலக்கியம் காலந்தோறும் மாறணும்டா. மெருகேறணும். அப்போதானே வாசகன் உயிர்ப்போட இருக்க முடியும். ஆனா நாம போற கூட்டங்கள்ல அது நடக்கலடா. அரச்ச மாவையே அரைக்கிறாங்க. நீ என்ன சொல்ற?” 

இப்படி தொக்கி நிற்கிற கேள்விகளுக்கு ஏற்ற பதிலளிக்க மிக நன்றாகவே பயின்றிருந்த அவன் “எனக்கும் அதே மாதிரி மனசுல பட்டுச்சுண்ணே. ஒரு வேள நமக்கு மட்டும்தான் தோணுது போலன்னு நெனச்சுக்கிட்டு கெடந்தா, பாருங்க, நீங்க ரொம்ப சரியா படக்குன்னு சொல்லிப்புட்டீங்க” மெலிதான ஆச்சரியம் தடவிய குரலில் சொன்னான். 

இயல்பாக வருகிற பெருமித உணர்வு முகத்திலமற “ஆமாண்டா. நாமளும் எத்தனை நாளைக்குத் தான் இப்படி பூங்காவுலயே உக்காந்து இலக்கியம் பேசுறது. நாமளே முன்ன இருந்து ஒரு களத்த உருவாக்கணும். அதுல ஆரோக்கியமான இலக்கிய உரையாடல துவக்கணும். நான் முடிவு பண்ணீட்டேண்டா. நாமளே ஒரு அமைப்ப துவக்கி பணி செய்யத் துவங்கணும்” என்றான். 

மிகச் சரியான யோசனையென்றும் இது காலத்தின் தேவை என்றும் உலகுவால் இந்த ஊரின் இலக்கிய வட்டம் இன்னும் செழித்தோங்கப் போவதாகவும் பொங்கினான் சன்னாசி. “சரிடா சரிடா! உனக்கே தெரியும் என்னைவிட இலக்கிய பரிச்சயம் உனக்குத்தான் அதிகம். நிறைய (இலக்கிய) தாகமிருக்குற மான் நானு. அதனால நாம சேர்ந்து தான் இந்த முன்னெடுப்பச் செய்ய வேண்டியிருக்கும்” என்ற உலகுவிடம் இருக்கிற மிக முக்கியமான நல்ல குணம் இப்படி யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வது. என்ன! இது இவர்களிருவரும் தனியாக இருக்கையில் மட்டுமே நிகழ வாய்க்கிற சம்பவம். 

“இத நீங்க சொல்லணுமாணே?” குரலிலேயே குதூகலம் பொங்கியது சன்னாசிக்கு. அவன் ஒரு விசுவாசமான அடிப்பொடி. தன்னை எதிலுமே, எதற்குமே முன்னிறுத்திக் கொள்ளாதவன். அண்ணே அமைப்புன்னா முதல்ல அதுக்கு ஒரு பேரு, இலச்சினை, எல்லாம் தயார் செய்யணும். அப்புறம் கூட்டம் நடத்த ஒரு நல்ல இடம் அவசியம்” என்று யோசனையாய் ஒரு இடைவெளி விட்டான். 

“அதுக்கென்னடா! திரௌபதியம்மன் கோயில் கெழக்காம இருக்குற மல்லிகை வீதியிலதா நமக்கு ஒரு சின்ன மண்டி இருக்குதே. அது இப்ப பொழங்காமத் தான கெடக்கு. ஆட்கள் வந்து போறதுக்கு வசதியான இடமாருக்கும். போக சுத்தம் பண்ணிப் பாத்தா ஒரு பெரிய ஹால் தோரணையில தான் இருக்கும். அதனாலயே அந்த இடம் வசதிப்படாம தான நம்ம யாவாரத்துக்காக இடத்தையே மாத்துனம். அது போதும்ல?!” 

முகம் பிரகாசிக்க “அப்பறமென்ன! நம்ம இடம்னா கவலையே இல்லையே. எடமும் ரொம்ப மெயின்லயே இருந்தாலும் கொஞ்சம் உள்ளடங்குனாப்ல வெளிச்சத்தம் பெருசா கேக்காத மாதிரி… கூட்டம் நடத்த ரொம்ப ரொம்ப தோதான இடம்ணே! கவலைய விடுங்க. இந்த பேரு, இலச்சினை எல்லாம் நம்ம சத்துக்குள்ள இருக்குற விசயங்க” தனது சட்டைக் காலரை சற்றே தூக்கிவிட்டுக் கொண்டு சொன்னான், “நீங்க அதப் பத்தியெல்லாம் கவலையே படாதீங்க. பக்காவா ரெண்டு மூணு நான் ரெடி பண்ணி வைக்கிறேன். நீங்க பாத்து எதை முடிவு செய்றீங்களோ அதையே வச்சுப்புடுவோம். அமைப்புக்கு புரவலர் நீங்க தான. அப்ப இது மாதிரி முடிவுகளையெல்லாம் நீங்க தான எடுக்கணும். என்ன நான் சொல்றது?!” என்றான் பவ்யமாக. 

பெருஞ்சிரிப்புடன் “அதுக்கென்னடா தம்பி செஞ்சுட்டா போச்சு” என தொடைகளைத் தட்டியபடியே கால் மாற்றிப் போட்டுக் கொண்டு அந்த பூங்காவின் கல்லிருக்கையில் அவன் அமர்ந்திருந்த தோரணை அச்சு அசப்பில் ஒரு ஆண்டையின் தோரணை. கர்வமும், மகிழ்ச்சியும் சமவிகிதத்தில் பெருகி வழிந்தது அப்போதைய அவன் முகத்தில். தனது அப்பா மகனது புகழுக்கென தன் சக்திக்கு உட்பட்ட விலையை நிச்சயம் மறுக்காமல் கொடுப்பார் என்று அவனுக்குத் தெரியும். பணம் தான் பத்தும் செய்யுமே. அப்புறம் பதினொன்றாவதாக இலக்கியம் செய்யாதா எனும் நினைப்பு அவனது மனதிற்குள் மின்னி மறைந்தது. 

மறுநாளே மண்டியைச் சுத்தப்படுத்த ஆட்களை அனுப்பி விட்டான். தொய்வில்லாமல் முடிக்க வேண்டுமென்ற முனைப்பில் தானே முன்னின்று எல்லாவற்றையும் கண்காணித்தான். வேலைகள் மும்முரமாய் நடப்பதை அவ்வப்போது சன்னாசியிடம் அலைபேசியில் பகிர்ந்து கொண்டான். பூமி மகனது அடுத்த கட்ட வளர்ச்சி ஏதோ பெரிதாய் இருக்கும் போல என்று எண்ணி எண்ணி பூரித்துக் கொண்டிருந்தார். மகனின் பாய்ச்சலைக் காண கொடுத்து வைக்கவில்லையே என செத்துப் போன தனது மனைவியை நினைத்து விழியோரம் கொஞ்சம் கசிந்துருகவும் செய்தார். 

சன்னாசி சொன்னவைகளைச் செய்ய மேற்படி செலவுகளுக்கு சுளையாக மூவாயிரம் கொடுக்கப்பட்டிருந்ததால் அவனும் கர்ம சிரத்தையாய் தன் பங்கு வேலைகளில் மும்முரமாக இறங்கியிருந்தான். பிரக்ஞை, சருகுகள், சிந்தனைவெளி என மூன்று பெயர்களை யோசித்து வைத்திருந்தான். இலச்சினை அமைப்பின் பெயரை ஒட்டியே இருந்தால்தான் நன்றாயிருக்கும் என்பதால், அது குறித்து பிறகு முடிவெடுத்துக் கொள்ள உத்தேசித்திருந்தான். டிசைன் செய்கிற வேலையெல்லாம் செய்யத் தெரிந்தவை பட்டியலில் இருக்கிறபடியால் பிளக்ஸ் அடிக்க மட்டுமே செலவு செய்ய வேண்டி வருமென்றும், அதற்குக் கூட மொத்தமாக ஆயிரத்தைத் தாண்டாது என்றும் ஒரு கணக்கு வைத்திருந்தான். எண்ணூறுக்குள் முடிக்க முடிந்தால் மீதம் இருநூறுக்குள் கொஞ்சம் நோட்டீசுகள் கூட அடித்து அண்ணனை அசத்திவிடலாமென்றும் இன்னொரு மனக்கணக்கு ஒன்றும் இருந்தது. 

மறுநாளே அவனை தோதிருக்கும்போது குமரப்பா பிரிண்டர்ஸ் அலுவலக அறைக்கு உலகுவை வரச் சொல்லவும், உலகுக்கே ஆச்சரியமளித்தது சன்னாசியின் வேகம். உடனடியாகச் சென்றான். பெயர் பட்டியலில் இருந்த மூன்று பெயர்களில் அவன் பார்த்த மாத்திரத்தில் சிந்தனைவெளி எனும் பெயர் பிடித்துப்போனது. பட்டியலில் முதலாவது என்னவென்றே தெரியாததும், இரண்டாவது என்னவெனப் புரிந்த போதிலும் என்ன காரணத்திற்காக இது ஒரு இலக்கிய அமைப்பிற்கான பெயராக பொருத்தமாயிருக்கக்கூடுமென பிடிபடாததும் மட்டுமே காரணம் என்பதைத் தவிர வேறு சிறப்புக் காரணங்கள் எதுவுமிருக்கவில்லை. மறுக்காது ஆமோதித்தல் அடிப்பொடிகளுக்கு அழகெனும் இலக்கணத்திலிருந்து வழுவாத சன்னாசி அதையே சிலாகித்து வழிமொழிந்தான். 

ஓரிரு நாளில் இலச்சினையும் தயாராகி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்க, வள்ளுவர் பூங்காவில் அதே கல்லிருக்கையில், இருவரும் நண்பகல் அப்பியிருந்த வியர்வை பிசுபிசுப்போடும், தீவிரமான முகங்களோடும் மௌனமாய் அமர்ந்திருந்தனர்.  ‘என்னத்தைப் பேச’ என்ற மனநிலையில் அவனும், ‘அண்ணன் என்ன மனசுக்குள்ள நினைச்சிகிட்டு இருக்காரோ… அவரே பேசட்டும்’ என இவனும் இருக்க நிமிடங்கள் கரைந்து கொண்டேயிருந்தன.  வழியின்றி, “தேதிய பின்னாடி பாத்துகுடுவோம். மொதல்ல நிகழ்வை எப்படி வடிவமைக்கிறதுன்னு முடிவு பண்ணிக்குவோமா?” உலகுவே துவங்க, “ஆமாண்ணே அது தாம்ணே சரியா இருக்கும்” என்று சொல்லிவிட்டு அமைதியானான். அவனது முகபாவனை இப்போது கவனிக்கிறவனின் ஜாடையில் இருந்ததே ஒழிய சொல்பவனின் ஜாடை சுத்தமாக அதில் இல்லை.

 தர்மசங்கடமாய்ப் போனது உலகுக்கு. “தம்பி! அண்ணே படிச்சது ஆங்கில இலக்கியம்கிறதால தமிழ் இலக்கியவட்டம் பத்தி அவ்வளவா பரிச்சயம் இல்ல பாத்துக்க. நீதான நெறய கூட்டங்களுக்கு போகுற ஆளு. அதனால நீயே யோசன சொல்லு” என ஒருவாறாக சமாளித்து வைத்தான். வழமைபோல இதையும் நம்புவதைத் தவிர சன்னாசிக்கு கதியில்லை. 

“அண்ணே! பொதுவா இலக்கிய கூட்டங்கள்ல ஆட்கள் எண்ணிக்கைய எதிர்பார்க்கவே கூடாது. அதுவும் மொதமொதலா நடத்தப்போறோம் நாம. அதனால வாறவங்க ஒரு பத்து பேரு இருந்தாலே அதிசயம் தான். நாம் ஏதாச்சும் ஒரு நல்ல படைப்ப எடுத்துகிட்டு அதுக்கு திறனாய்வுக் கூட்டம் மாதிரி நடத்துனா நல்லா இருக்கும்னு தோணுதுணே!” என்றான் சுருக்கமாக.

“சரிடா! நான் ஆங்கில படைப்புகள தொடருர அளவுக்கு தமிழ் படைப்புலக தொடர்றது இல்ல (!) அதுனால… அதையும் நீயே முடிவு செய்யே.”

இவனுக்கோ எல்லாம் தனது பொறுப்பில் விடப்படுகிறது என்ற புளகாங்கிதம். “அண்ணே போன வருசம் ஞான ரசிகன் எழுதின ‘விடிவெள்ளி’ நாவல் பரவலா கவனம் பெற்றுச்சு. நம்ம ஊர்ல அதுக்குன்னு ஒரு நிகழ்வு நடக்கவே இல்ல. அதையே கூட எடுத்துக்கலாம். விவாதிக்க விசயங்கள் நெறஞ்ச கனமான படைப்புணே அது.” 

 “அப்பொறமென்ன அதையே வச்சுக்குவோம். ஆகவேண்டியதப் பாரு.” உலகுவின் மனதிற்குள் என்ன படைப்பு என்பதிலெல்லாம் கவனமே இல்லை. உண்மையில் அவன் இந்த நிகழ்வையே தன்னைப் புறக்கணித்த இலக்கியவட்ட குழுக்களுக்கு பதிலடி தருகிற முனைப்பாக மட்டுமே முன்னெடுத்துக் கொண்டிருந்தான். இலக்கியத்தின் பெயரைச் சொல்லி இவனை அண்டிப் பிழைக்கிற சன்னாசிக்கும் அது தெரியாமலிருக்காது; என்ன, காட்டிக் கொள்ள மாட்டான். தனது பழைய அலைபேசியொன்றை சன்னாசிக்கு கொடுத்து, “தம்பி இனி நாம் அப்பப்போ பேச வேண்டியது வரும்ல. அதனால இந்த போன வச்சுக்கோ. கவலப்படாத நானே ரீசார்ஜ் பண்ணிட்டே. இந்தா வச்சுக்கோ” என இன்ப அதிர்ச்சியெல்லாம் கொடுத்தான். சன்னாசி ‘சே மனுசன் எவ்வளவு தீவிரமா இருக்காரு’ என அதை மொழிபெயர்த்துக் கொண்டு சிலாகிக்கும் பாவனையில் மெய்சிலிர்த்தான். 

நடத்துகிற கூட்டத்திற்கென எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் படைப்பை நாம் அவசியம் வாசித்திருக்க வேண்டும் என்றும் அப்போது தான் அதனை முன்வைத்து நாம் உரை நிகழ்த்த ஏதுவாக இருக்கும் என சொல்லப்பட்டிருந்ததால், அன்றைக்கே அந்த நாவலை ஆன்லைனில் ஆர்டர் செய்ய அதுவும் நாலாவது நாளில் வந்து சேர்ந்துவிட்டது. இந்த இடைவெளியில் சன்னாசியோ சிறப்பாக நிகழ்வுக்கான அழைப்பிதழ் ஒன்றை தயாரித்து, ஐம்பது நோட்டீசுகளையும் தயார் செய்துவிட்டிருந்தான். 

இலக்கிய ஆர்வத்தை ஒரு அலப்பறையாக மட்டுமெ தூக்கிக் கொண்டு திரிகிற உலக உருண்டு பிரண்டும் படைப்பின் முதல் அத்தியாயத்திற்கு மேல் நகர முடியவில்லை. பகல் முழுவதும், குட்டியைக் கவ்வியபடியே அலைகிற தாய்பூனையென புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டே அலைந்தது தான் மிச்சம். படைப்பு உண்மையிலேயே மிக அடர்த்தியாக இருந்தது. 

இரவு உணவுக்குப் பிறகு அவனை அழைத்து, “ தம்பி! நானே கூட்டத்தை ஒருங்கிணைச்சுபிட்டு நானே பேசிகிட்டு இருந்தா நல்லாவா இருக்கும். அதனால ஒரு முடிவு பண்ணியிருக்கேன். வரவேற்புரைய நான் பாத்துக்கிறேன். நீ தான் நூல் அறிமுக உரை நிகழ்த்தணும் பாத்துக்க.” புல்லரித்துப் போனான் சன்னாசி. 

அன்று இரவே தனக்கு மிகப் பரிச்சயமான பணியைத் துவங்கினார் கண் துஞ்சாத இலக்கிய ஆர்வலர் உலகநாதன். சன்னாசி தனக்கு புலனத்தில் அனுப்பியிருந்த நிகழ்வின் அழைப்பிதழை வாசகர்களுக்கு அனுப்புகிற அற்புதப் பணி அது. ஒரு வகையில் அவனை இதர புலனக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் குழுவிலிருந்து நீக்கியிருந்தது நல்லதாய் போயிற்று. அதனால் தானே ஒவ்வொருவருக்கும் – தனிப்பட்டும் பிளாக் செய்திருந்தவர்கள் நீங்கலாகத்தான் – தனியாக அழைப்பிதழை அனுப்ப முடிந்தது. மறுதினம் இருவரும் சந்திக்கையில் அண்ணன் சோர்வாக இருப்பதாக தம்பி வருத்தப்பட அண்ணன், “விடுடா தம்பி. நாம எடுத்து செய்யுறோம். வேற யாரு வேலை செய்வா. நேத்தைக்கு மட்டும் அறுவத்தி மூணு பேருக்கு தனிப்பட்ட முறையில அழைப்பிதழ அனுப்பியிருக்கேன்” பெருமிதம் அப்பிய குரலில் இவன் சொன்னதை ஆச்சரியம் அப்பிய குரலில் “அண்ண்ண்ணே” எனத் தம்பி புல்லரித்தார்.

அச்சிடப்பட்ட நோட்டீசை முதன்முதலாக தனது தந்தையிடம் தான் கொடுத்தான் உலகு. உச்சி குளிர்ந்து போனார் பூமி. தனது சகாக்களுக்கு தருவதற்கென ஒரு பத்து நோட்டீசுகளாவது வேண்டுமென கேட்டு வாங்கி கொண்டார்.  ‘யாவரத்துல சொரத்தையில்லாம இருந்தாக்கூட ஏதோ ஒரு விதத்துல’ மகன் பெயரெடுப்பதாக நாளெல்லாம் ஆனந்தத்தில் அலைந்தார். பெருமிதத்தின் உச்சியில் மகனிடம் கூட்டத்திற்கு வருகிறவர்களுக்கு தனது செலவில் இரவு உணவு ஏற்பாடு செய்வதாகவும் வாக்குக் கொடுத்தார். 

நூல் திறனாய்வுக் கூட்டத்திற்கென சிறப்பு அழைப்பாளராக தான் செல்லும் கூட்டங்கள் வழியாக அறிமுகமாகியிருந்த கதைப் பித்தன் என்கிற கந்தராஜை ஏற்பாடு செய்திருந்தான் சன்னாசி. அவனுக்கும் தெரியும் அண்ணன் முதல் டுபாக்கூர் என்றால் கதைப் பித்தன் இரண்டாம் டுபாக்கூர் என. ஒருவேளை ஜாடிக்கேற்ற மூடியென நினைத்தானோ என்னவோ!

சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு முதல் ஆளாக வந்து காத்திருந்தவர் கதைப் பித்தன் தான். உண்மையில் அது தான் அவர் பேசப்போகிற முதல் கூட்டமென சன்னாசிக்குக் கூட தெரிந்திருக்கவில்லை. இரண்டாவதாக வந்து சேர்ந்தவர் பூமிதான். பட்டு வேட்டி சகிதமாய் ஏதோ தனது மகனது மணவிழாவிற்கு வந்திருப்பது போல உற்சாக பொங்கிட முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். அவரது அன்புத் தொல்லையில் பேரில் ஆறு நண்பர்கள் வந்து சேர்ந்திருந்தனர்.  ஒரு தேர்ந்த வியாபாரியின் சாமர்த்தியத்தோடு இரவு உணவு உண்டென்ற தகவலை மெலிதாக கசியவிட்டிருந்தார்.  சம்பிரதாயமான இந்திய நேரப்படி துல்லியமாக ஐந்து நாற்பத்தியெட்டுக்கு துவங்கியது அந்த ஐந்து மணி நிகழ்வு. 

கூட்டத்துக்கு தன்னோடு சேர்த்து இருபத்தியோரு பேர் வந்திருப்பதைக் கண்டு ஒருபுறம் ஆனந்தமாய் இருந்தாலும், தான் வரவேண்டுமென நினைத்திருந்த அந்த புலனக் குழுக்களைச் சேர்ந்த ஒரு நபர் கூட வராதிருப்பது குறித்து மனதிற்குள் கறுவிக் கொண்டான். வரவேற்புரை கூட சும்மா ஒப்பேற்றிவிட்டு அமர்ந்து கொண்டான். ஆறேகால் வாக்கில் அக்குழுக்களில் இருந்து அறிமுகமான ஒரு மனிதர் உள்ளே நுழைந்து தோய்ந்திருந்த உலகுவின் முகத்திரியில் ஒளியேற்றினார். வந்த மாத்திரத்தில் உலகுவைக் கண்டு சற்றே துணுக்குற்றாலும், தான் வந்தது இலக்கியத்திற்காகத் தானே என நினைத்துக் கொண்டார் போலும். அமர்ந்து கொண்டார். 

சன்னாசியையே நூல் அறிமுகம் செய்யப் பணித்திருந்தபடியால் வரவேற்புரைக்கு அடுத்ததாகவே அவனது உரைதான் இருந்தது. நூல் அறிமுகமாக மட்டுமின்றி அதனை ஒரு வாசகர் பார்வையாகவும் சேர்த்தளித்தான். அதைத் தொடர்ந்து வந்திருந்த சிறப்பு அழைப்பாளரான கதைப் பித்தன் குறித்த ஒரு சிறு அறிமுகத்தையும் செய்து வைத்தான். அது அறிமுகமா அல்லது முகத்துதியா என்று கேட்பவர் யூகிப்பதற்கு இடைவெளியே தராமல் பாய்ந்து மேடையை தன்வசமாக்கினார் கதைப் பித்தன். அவர் துவங்கிய ஐந்தே நிமிடங்களில் சுதாரித்துக் கொண்ட அந்த நபர் நழுவிவிட்டார். உலகுவின் முகத்தில் சுடர்ந்து கொண்டிருந்த ஜோதி அணைந்தது. சரி போய் தொலையட்டும். எதிரிலேயே ஒரு சிறு கூட்டம் நம்மையும் சேர்த்துத்தான் பார்த்தபடி இருக்கிறது என்று உணர்ந்து கொண்டவனாக கவனிக்கத் துவங்கினான். 

எவ்வளவோ முயன்றும் அவர் பேசுவதிலிருந்து எதையும் பொருள் கொள்ளவோ விளங்கிக் கொள்ளவோ முடியவில்லை உலகுக்கு. கூட்டத்தினருக்கு புரிகிறதா என்ற ஐயமெல்லாம் அவனுக்கு இல்லவே இல்லை. அவர்கள் இலக்கியத்தை முன்னிட்டு வராதவர்கள் என்கிற புரிதல் இருந்தது. பூமியோ முதல்வரிசையில் ‘தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தந்தையின் பாவனையில்’ கண்ணாலேயே தளுதளுத்தபடி இருந்தார். சற்றே ஓரக்கண்ணால் சன்னாசியை நோட்டம் விட்டான் உலகு. அவனோ மீண்டும் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைக் கேட்டு பீதியடைந்தவன் போல கலக்கத்தில் அமர்ந்திருந்தான். உலகுவுக்கோ தனக்கு மட்டும் புரியவில்லை என வருந்த வேண்டிய அவசியமில்லை என்கிற செய்தி சற்றே ஆறுதலளித்தது. 

புரியாத விடயங்களை நீண்ட நேரமாக கேட்க நேர்ந்ததில் கூட்டத்தில் பலரும் நெளியத் துவங்கிய தருணத்தில் மிகச் சரியாக அறையின் பின்பகுதியில் பாத்திரங்களை நகர்த்துகிற ஒலியும் அதைத் தொடர்ந்து உணவின் மனமும் வீசி வாசகர்களை (!) புத்துணர்வு கொள்ளச் செய்தது. இவர்களுக்குப் புரியாதது ஒரு பக்கம் இருக்கட்டும் உரை நிகழ்த்தியவருக்கேனும் உரை புரிந்ததா என்பது விடுவிக்கப்படாத புதிராகவே இருந்து ஒரு வழியாக முடிந்தது. சமூக வலைதள தகவல் பகிர்வுக்கு வசதியாக வளைத்து வளைத்து சன்னாசி நிகழ்வின் தருணங்களை உலகுவின் அலைபேசியில் ஒளிப்படங்களாக சுட்டுத் தள்ளியிருந்தான். 

சாப்பிடும் போது காதருகே வந்து “அண்ணே! இந்த தடவ உரை அவ்வளவா சிறப்பா இல்ல. அடுத்த தடவை இன்னும் நல்லா ஆளா பாத்துருவோம்ணே” என காதில் கிசுகிசுக்க, “அதுக்கென்ன தம்பி நல்லபடியா தடங்கல் இல்லாம முடிஞ்சதே சந்தோசம். நமக்கே இது ஒரு கற்றல் தான” என விட்டுக் கொடுக்காமல் சமாளித்தான். 

முதல் கூட்ட அறிக்கையை ஒளிப்படங்களோடு இணைத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றும் களப்பணியை அன்றைய இரவை தகனமாக்கி செவ்வனே செய்து முடித்தார் நம் இலக்கியக் காதலர். மறுநாள் வள்ளுவர் பூங்காவில் சன்னாசியின் வரவிற்குக் காத்திருந்தான். அன்று வேட்டி அவிழக் காத்திருந்த அதே பெரியவர் இன்றும் கண்ணெதிரில் தூங்கிவழிந்தபடி அமர்ந்திருப்பதை மீண்டும் கண்டதும் மனதில் சலிப்பூறியது. வீம்பாக நானும் நடத்திக் காட்டுகிறேன் பார் என்று அரற்றிய மனம் நேற்று முதல் ஆசுவாசப்பட்டிருந்தது. ஆனால் முந்தைய இரவில் பகிர்ந்திருந்த பதிவிற்கு, சன்னாசியின் இதயக்குறியைத் தவிர, சுத்தமாக எதிர்வினையே இல்லாதது யதார்த்தத்தை தெள்ளத்தெளிவாக மௌனத்தால் எழுதி வைத்திருந்தது. இத்தனைக்கும் அவன் இரவு முதலே அலைபேசியில் இணையத் தொடர்பை துண்டிக்கவே இல்லை. சற்றைக்கெல்லாம் அலைபேசி சிணுங்கவும் கிளர்ச்சியாகி திறக்க முகநூலிலிருந்து வந்திருந்த அறிவிப்பு என்றதும் உற்சாகமானான். திறந்து பார்க்க பதிவு கண்ணில் நீர்த்துளி தெறிக்கச் சிரிக்கிற இமோஜியொன்றை விருப்பக்குறியென பெற்றிருந்தது. பெயரைப் பார்த்தால் ‘செந்தமிழன்’ என்று இருந்தது. ஆள் இவனது நட்புப் பட்டியலில் இல்லை. மனது சுண்டி இழுபட்டது. ஒரே ஒரு இமொஜி தன்னை உடைக்க இயலுமென அவன் நினைத்திருக்கவில்லை. எதிர்கொள்ளும் போது தானே வாழ்வின் இரக்கமின்மையும், கறார்தன்மையும் புரிகிறது. முகம் இறுகி கல்லிருக்கையில் கல்லெனவே அமர்ந்திருந்தான். 

சிறிது நேரத்தில் வந்த சன்னாசியின் நடையும் தளர்ந்திருந்தது. அவனும் முகநூலைப் பார்த்திருக்கிறான் என யூகித்தான். வந்தவன் எதுவும் பேசாமல் இருக்கையில் அருகமர்ந்தான். துக்க வீட்டிலிருப்பவர்கள் போல இறுக்கமான முகத்தோடு எதுவும் பேசாதிருந்தனர். (அநேகமாய் அது இலக்கியத்தின் இழவாக இருக்கக் கூடும் என்று நீங்கள் தயைகூர்ந்து நினைத்துவிடாதீர்கள். தோழர்கள் ஏற்கனவே நொடிந்து போயிருக்கிறார்கள்.) 

“எவனோ பொறாம புடிச்ச பயன்ணே. நல்லது நடக்குறத பாக்கப் பொறுக்காத பொறம்போக்கு… விட்டுத்தள்ளுங்க” என்றான் முகத்தைத் திருப்பாமல் ஆறுதல் சொல்கிற முகமாய். 

உள்ளுக்குள் ஏதோ உடைவு ஏற்பட்டவனின் முகமாய் தெளிந்திருந்தது உலகநாதனின் முகம். “இல்லடா தம்பி! எனக்கு உண்மையிலேயே இலக்கிய ஆர்வம் இல்ல. அத ஒரு அறிவு பகட்டா தான் ஹேண்டில் பண்றேன்”அகத்தின் தெளிவு குரலில் தொனித்தது. 

வியப்பில் விழிகள் விரிய எப்படி எதிர்வினையாற்றுவது எனக் குழப்பமாய் திரும்பிப் பார்த்தான். “மனசு விட்டமாரி பேசுறீங்கன்ணே! உங்களுக்கு ஆர்வம் இருக்கு. இல்லாட்டி உங்க கைக்காசப் போட்டு செய்யணும்னு செய்வீங்களா? ஒண்ணு சொல்லவா? நீங்களே ஒரு புஸ்தகம் எழுதிட்டீங்கன்னா எழுத்தாளர்ங்கிற அடையாளம் வந்துடும். அப்பத்தான் இவனுக மத்தியில உங்க மேல ஒரு கவனம் குவியும். அப்புறம் பாப்பீங்க இன்னைக்கு சிரிக்கிற பயலுகளும் கொழஞ்சுகிட்டு வாரத.” பணவரவின் ருசி ஒரு முறையோடு நின்றுவிடுமோ என்ற ஏக்கம் பேச்சிலோ முகபாவத்திலோ தெரியாவண்ணம் சாமர்த்தியமாய் பார்த்துக் கொண்டான் சன்னாசி.

தோள்களுக்கேறிய வேதாளத்தை மீண்டும் மரத்திலேற்றிய விக்ரமாதித்யனாய் சன்னாசி பிரகாசமாய் அமர்ந்திருக்க, இது பற்றி அதுவரை கற்பனை கூட செய்திராத உலகுவின் கனவோ இன்னும் ஊதிப் பெருகியது. எழுத்தாளர் உலகநாதன் எனும் பெயரை மனதிற்குள் உச்சரிக்கையிலேயே சிறகுகள் முளைத்தது. அவனது முகமாற்றத்தை கச்சிதமாய் அளந்திருந்த சன்னாசி “யோசிச்சுப் பாருங்கன்ணே! நாளைக்கி இதே நேரம் சந்திப்போம்.” மேலும் பேசி கனிய வைப்பதாய் நினைத்து வெம்ப வைத்துவிடக் கூடாதெனும் சாம்ர்த்தியம் அவனிடமிருந்தது. 

இன்னொரு முறை அந்த இளிக்கிற இமோஜி விருப்பக்குறியை எடுத்து வெறித்துப் பார்த்தான் உலகு. 

இரவு படுக்கையில் எழுத்தாளர் கனவாய் உருமாறியிருந்த இலக்கியக் மோகம் தன்னை அலைக்கழிப்பதை உணர்ந்தான்.  ‘படைப்புங்கிறது புள்ள பெக்குற மாதிரின்ணே. அது ஒரு சொகமான சுமை’ என சன்னாசிப் பய அடிக்கடி சொல்லுவானே அது இதுதானா என தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான். 

மறுநாள் வள்ளுவர் பூங்காவில் வள்ளுவரை விடவும் ஒளி பொருந்திய கண்ணினனாய் பால் வெளுப்பில் வேட்டியும் அடர்பழுப்பு கைத்தறி சட்டையுமாய் இளவலின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார் அண்ணன். முந்தைய நாளில் உலகுவிடமிருந்து மாலையிலோ இரவிலோ எப்படியும் அழைப்பு வருமென எதிர்பார்த்திருந்த சன்னாசி, அப்படியேதும் வராத காரணத்தால் ஒரு வேளை வித்தை பலிக்கவில்லையோ என சற்றே கலங்கியிருந்தான். ஆனால் பூங்காவின் நுழைவாயிலேயே அண்ணனின் ஆகிருதி தரிசனமாகவும் முழுத்தெம்பு மீண்டு வந்தது. 

“அண்ண்ணே! ஆளே ஒரு தினுசா மாறியிருக்கீங்க… என்ன சங்கதி?” உற்சாகம் பீறிட்டது குரலில். 

“ஒரு சமூகத்துல நடக்குற விசயங்கள் என்னைக்கு ஒரு தனி மனிதனை தொந்தரவு செஞ்சு அவனோட இரவுகள களவாட ஆரம்பிக்குதோ அங்க தான் ஒரு கலைஞன் பிறக்குறான். என் இரவுகள் இனி என் கையில் இல்லை தம்பி” வருவித்துக் கொண்ட அடிக்குரலில் கரங்களை விரித்தபடி அங்கு ஒரு இலக்கிய மீட்பர் எழுந்தருளியிருந்தார். 

சன்னாசியே இந்த உருமாற்றம் கண்டு விக்கித்துப் போனான் ஒரு கணம். “நான் தான் சொன்னேன்ல. மாற்றம்கிறது மின்னல் மாதிரின்ணே. ஒரு கணத்தில வெட்டி வெளிச்சமாக்கி எல்லாத்தையும் மாத்திப்புடும்.”

 “அப்புறம் இன்னொரு முக்கியமான முடிவு அதிகாலையில உதிச்சது தம்பி. அடையாளமே ஒரு சுமை தான் இல்லையா! அதனால் இப்போது உள்ளுக்குள்ள உறங்கிக்கிட்டு இருக்க அந்த படைப்பாளிக்கு ஒரு பேர் இருக்கணும். இந்த உலகநாதன் இல்ல அவன். அவன் வேறு ஆள் இல்லையா?” சற்றே இடைவெளி விட்டான். ஒரே இரவில் எதிர்வினைகளுக்கு பேச்சினூடே இடந்தருமளவுக்கு அசுர வளர்ச்சி கண்டிருந்தார் அண்ணன். 

“என்னைய உதாசீனப்படுத்தின பயலுக எல்லாரும் ஒவ்வொரு நிமிசமும் நினைக்கிற மாதிரி இருக்கணும்னு சிந்தனை செஞ்சு ஒரு பேர முடிவு பண்ணியிருக்கேன்….” சன்னாசியின் ஆர்வத்தை ஆழம் பார்க்க விடப்பட்ட இடைவெளி அது. எதிர்வினை எதிர்பார்த்தபடி இருந்ததால், “நிமிடன்… சமூகத்தின் மனதை எழுதிக் காட்டி அதனோடு உரையாட வருகிறவனின் பெயர் நிமிடன்!” நாடக வசன பாணியில் அழுந்தந்திருத்தமாய் முடித்தான். 

யாசிக்க வந்திருந்தவனுக்கு வரமே கிட்டியதால் சத்தியமாக ஆச்சரியத்தில் உறைந்து போயிருந்தான் சன்னாசி. தமிழன்னை சற்று முன் ஈன்றிருந்த அத்தலைமகனை ஆரத்தழுவிக் கொண்டான். அன்றைய இரவு அரிசிக் கணக்கைத் தவிர வேறு எதையுமே நெடுங்காலமாய் எழுதியிராத அந்த ஆணின் கரத்தில் வீற்றிருந்த எழுதுகோல் வெற்றுக் காகிதத்தின் மீது விழிகள் பதித்திருந்தது. பூமி இன்னும் பல கூட்டங்களுக்கும், சில புத்தகங்களுக்கும் தாராளமாய் தாக்குப் பிடிப்பார்.


 

எழுதியவர்

வருணன்
இயற்பெயர் லா.மா.ஜோ அந்தோணி. தூத்துக்குடியில் வசிக்கிறார். இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் இவர்; சினிமா மற்றும் இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சினிமா சார்ந்த கட்டுரைகள் படச்சுருள், வாசகசாலை இணைய இதழ், புரவி, பேசாமொழி இணைய இதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதைகளும் அவ்வப்போது இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன.

இவரது ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ என்ற சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதி வாசகசாலை பதிப்பக வெளியீடாக 2020இல் வெளிவந்துள்ளது.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x