எத்தனை இரவுகள், எத்தனை பகல்களாக நடந்து கொண்டிருக்கிறோம் என்றே தெரியவில்லை. பழுத்துக் காய்ந்த சரகுகளினூடாக நடந்து நடந்து வனத்தை அளந்து கொண்டே செல்கிறோம். இயற்கையின் கருவறைக்குள்ளான ஒரு பயணம் போல அது இருக்கிறது. திசையறியோம். எங்கும் கிளர்ந்து எங்களை மூடுகிற இலை பச்சையையும், அடிமரங்களின் பழுப்பேறிய நிறங்களையும் தவிர வேறொன்றும் கண்களில் விழவில்லை. கிளைகளின் பிரம்மாண்டங்களுக்கு இடையிடையே எப்போதாவது வானின் நீலம் கண் சிமிட்டுகிறது. சிறு சிமிட்டல் தான். நீலத்தை கண்களுக்குள் பத்திரப்படுத்துவதற்குள் மீண்டும் பச்சை வானமாகி விடும். வனத்தின் அடர்த்தி சில இடங்களில் குறைந்தும் சில இடங்களில் மிகுந்தும் இருக்கிறபடியால், அடர்வனத்துள் செல்லச் செல்ல இரவு பகல் குறித்த பிரக்ஞை நழுவுகிறது. இருட்டென்பதே இரவென்று பழக்கப்பட்ட அன்றாட லயத்தின் அனுபவங்கள் இங்கே செல்லுபடியாகவில்லை. வனத்தின் அடர்த்தி எல்லாவற்றின் மீதும் ஒரு கருப்புப் போர்வையைப் போட்டு மூடியிருக்கிறது.
நாங்கள் சிறு கூட்டமாய் கிளம்பினோம். அவ்வப்போது அங்கொருவர் இங்கொருவராய் ஆட்கள் பயண வழியில் ஒட்டிக் கொண்டார்கள். ஒவ்வொரு புதியவரும் இணைகையில் அவர்களை சந்தேகத்தின் உளி கொண்டு செதுக்கினோம். எங்களுக்கு வேறு தேர்வே இருக்கவில்லை. எந்நேரமும் வெடித்துவிடும் சாத்தியமுள்ள சோப்புக் குமிழிக்கு ஒப்பாக எங்கள் உயிர் இருக்கையில் வேறு வழி ஏதும் எங்களிடம் இல்லை. நம்பிக்கை வெறும் வார்த்தையாக மட்டுமே எங்களிடையே எஞ்சியிருக்கிறது. சுற்றியிருந்த இருளைப் போலவே எங்கள் ஒவ்வொருவரின் மீதும் பயம் ஓர் அரூப மேகமாய் கவிந்திருந்தது. ஒருவர் மீதமின்றி சகலரும் பயந்திருந்தோம். காய்ந்த சருகுகளின் சலசலப்பு குதிரைகளின் குளம்படிகளினால் வருவதாக பீதியுற்றோம். கண்களில் அப்பியிருக்கும் வனத்தின் பச்சைக்கு அப்பால் எங்கோ எங்களைத் தேடி அக்குதிரைகளில் மீது வாட்களோடு வீரர்கள் வந்து கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டோம். கோபாவேசம் மின்னும் அவர்களது கண்களில் எங்கள் உயிரின் இறுதிச் சொட்டு மிதப்பதாக எண்ணி நடுங்கினோம். நடந்து ஓய்ந்த கால்கள் இனி அடியெடுத்து வைக்க முடியாது எனும் நிலையில் உடல் தளர மரக்கிளைகளினூடே அயரும் தருணங்களில் வீரர்கள் எங்களைச் சுற்றி வளைப்பதாகவும், எங்களைப் பிடித்ததில் களிகூர்ந்து எங்காளமிடும் அவர்கள் வெடிச்சிரிப்பின் விளைவாக அவர்கள் கண்கள் பளபளக்க எங்களுயிரின் அக்கடைசிச் சொட்டு, அவர்களின் கண்ணீராய்த் ததும்புவதாகவும், உருண்டு திரண்டு அவர்களின் கன்னங்கள் வழியே வழியக் காத்திருப்பதாகவும் வருகின்ற துர்க்கனவுகளால் உறக்கம் என்பது அலைகிற உடலுக்கான ஓய்வு மட்டுமே எனச் சுருங்கி விட்டது. அரற்றியலையும் மனதிற்கு விடுதலையோ, மரணமோ, இரண்டில் ஏதோ ஒன்று தான் ஓய்வளிக்க முடியும்.
சம்பிரதாய அறிமுகங்களே எங்கள் குழுவிற்குள் இது வரையிலும் நடக்கவேயில்லை. சம்பிரதாய அறிமுகங்கள் நடைபெறுகிற அளவிற்கு எங்கள் சூழலில் தென்றலொன்றும் வீசிக் கொண்டிருக்கவில்லை என்பதும் ஒரு காரணம். உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒற்றை நோக்கம் எங்களைப் பிணைத்தது. எங்கள் கருத்துகளையும் சுதந்திரத்தையும் பேண வேண்டியது அவசியமென நாங்கள் உறுதியாகவும் நின்றோம். (சொல்லப் போனால் இந்த இரண்டும் ஒன்றின் வேறு வேறு வடிவம் தான். சொல்லாடல் மட்டுமே மாறுகிறது என்பது எங்கள் மத்தியில் பரவலாக இருக்கும் பார்வை. அதனால் தான் வனத்தில் பதுங்கித் திரியும் வாழ்க்கையைத் தேர்ந்து கொண்டுள்ளோம்.) தவிரவும் எங்களுக்குள் இன்னொரு பொது அம்சமும் இருந்தது. உள்ளவர்களுள் பலரும் மன்னரின் ஆட்சியை ஏதோ ஒரு வகையில் விமர்சித்தவர்கள் என்பதே அது.
மிக மெதுவாகப் பேசிப் பேசியே பழக்கப்பட்டுவிட்ட நாவுகளும், குரல்வளைகளும் அப்படியே பழகி விட்டன போலும். எங்கள் பேச்சு வனத்தில் கூட குசுகுசுப்பாகத் தான் வெளிப்பட்டது. அதுவும் ஒரு வகையில் வசதியாகவே போயிற்று. கிடைக்கிற பழங்களையும், கிழங்குகளையும் புசித்துப்படி உயிர் பசையின் ஈரம் காயாமல் பார்த்துக் கொண்டோம். அவ்வப்போது அமரும் இளைப்பாறல்களில் அருகமர்ந்திருப்பவரிடம் நடக்கும் ரகசிய உரையாடல்கள் வழியாகவே ஏறத்தாழ அனைவருமே ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொண்டோம். பல கூட்டுப் பறவைகள் நாங்கள் என்பது சில நாட்களுக்குள்ளாகவே விளங்கிற்று. சுந்தர் ஜெயின் எனும் தாவரவியல் அறிஞனே இப்போதெங்களுக்கு உணவுகளின் தேர்வில் உதவுகிறான். அதன் வழியே எங்கள் உயிரைக் காத்து வருகிறான். குழுவில் சிலர் அசைவர்கள். அவ்வப்போது நடக்கும் சிறு வேட்டைகளின் பலனை நெருப்பூட்டிச் சமைத்துண்பதும் உண்டு. குழுவிலுள்ள சைவர்களுக்கு அதில் புகார்கள் எழுந்ததே இல்லை. அன்று மட்டும் தனித்தனியாக உண்டு கொள்வோம். வேறுபாடு அவ்வளவே. அசைவனாய் இருந்த போதிலும் யாசின் மட்டும் இறைச்சி, அது எவ்விலங்கினுடையதானாலும், உண்ண மறுத்து விட்டார். தனது அனுபவ குகைக்குள் ஞாபகச் சிலந்தி அப்படியொரு நிரந்தரத் தடையைப் பின்னியிருக்க வேண்டுமென நினைத்தபடி எங்களுக்குள்ளாக அவருக்கென பரிதாபப்பட்டுக் கொள்வோம்.
ஒரு வகையில் சிரிப்பு வரும். தமது நிலையே மிகப் பரிதாபத்திற்குரியதாய் இருக்கிற போது சக மனிதரைக் கண்டு பரிதாபப்படுவது வேடிக்கை தானே! ஆனால் அது மனிதம் ததும்பும் வேடிக்கை. அதனாலேயே அதனை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆனால் மனிதத்தின் மீதான நம்பிக்கையால், அதற்கென குரல் கொடுத்தது தான் எங்களுடைய இந்த வனவாசத்திற்கு மறைமுகக் காரணமாயிற்று என்பதையும் நாங்கள் அறிவோம். அடக்குபவன், அடக்கப்படுபவன் – எப்பக்கத்தை நாம் தேர்ந்து கொள்கிறோமோ நாம் அவராவோம் எனும் எளிய புரிதலை வரலாறு எங்களுக்கு வழங்கியே இருந்தது. இருப்பினும் நாங்கள் எங்கள் இதயங்களை இரும்பு உலைகளில் செய்து கொள்ளாததால், துரத்தப்படுபவர்களாய்த் திரிவதைத் தேர்ந்தோம்.
மன்னனைப் பற்றி நாங்கள் அறியாதவற்றை அறிந்து கொள்ளவும், அதுவரையில் அறிந்தவற்றுள் இருக்கிற உண்மைகளும் பொய்களும் எங்களுக்கு பிடிபடத் துவங்கியது சாரதி எங்களுடன் தேர்ந்து கொண்ட பிறகு தான். எங்கள் மன்னர் பேரரசராகும் முன்னே, குறுநில மன்னராய் இருந்த காலம்தொட்டே அவருடன் நெருக்கமாக இருந்தவர் அவர். மன்னரை மன்னராக்கியதில் பெரும் பங்கு தேசத்தின் பெருவணிகர்களுக்கு உண்டு என்று நாங்கள் முன்னமே அறிந்த செய்தியில், அவர்களது பங்கு எத்தகையது எனும் உண்மைகளை இன்னும் தெளிவாகச் சாரதியின் வாயிலாகவே நாங்கள் தெரிந்து கொண்டோம். இப்போதும் கூட மன்னர் விரும்பிச் செல்லும் அயல் தேச நட்புறவுப் பயண ஏற்பாடுகளில், பல்லக்குகளின் பராமரிப்பிற்கும் பல்லக்குத் தூக்கிகளின் தினப்படிகளுக்கும் உதவிகள் வணிகர்கள் பார்த்துக் கொள்ள அவர்களின் வணிகம் பெருக்குகிற வழிகளின் தடைகளை அகற்றி அதனை எளிதாக்குவதைத் தனது பங்களிப்பாக மன்னர் கவனித்துக் கொள்கிறார். அச்செயல்பாடுகளை நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்திச் செய்வதாகத் தோற்றங் கொள்ளச் செய்வதனை அதீத இலாவகத்தோடு கையாள்வதில் மன்னரின் சூட்சுமங்களில் அடைந்திருக்கும் நிபுணத்துவம் ஆச்சரியப்படத் தக்க வகையில் மிகச் சிறப்பாக மெருகேறியுள்ளது.
பேரரசின் அரியாசனத்தை தனக்கானதாக்கிக் கொள்ள அவரது மெனக்கெடல்கள் பல காலத் தயாரிப்பின் பலனே. சட்டென எல்லாம் நிகழ்வது புனைவுகளில் மட்டும் தானே. குறுநில மன்னராக இருந்த காலத்தில் தனது நாட்டில் நிகழ்ந்த நேர்மறையான செய்திகளை மட்டுமே தண்டோராக்காரர்கள் மூலமாக மக்களறியுமாறு பார்த்துக் கொள்வதில் துவங்கி, மிக நுணுக்கமாகப் பார்த்துப் பார்த்து தனது அரியாசனத்திற்கான பாதையை அமைத்துக் கொண்டார். அக்காலகட்டத்தில் அவரது ஆளுகைக்குட்பட்ட தேசத்தில் நிகழ்ந்த கொத்துக் கொத்தான கொலைகள் குறித்தும், நிர்வாகக் குறைபாடுகள் குறித்தும் இவர் பேரரசராய் முடிசூடிய ஆரம்ப நாட்களில் பரவலாக எழுந்த விமர்சனங்களைத் தேர்ந்த சாதுர்யத்துடன் கையாண்டார். தன் மீது அம்புகள் ஒரு பக்கம் எய்யப்பட்ட போதிலும், அவை எதுவுமே மக்களின் கவனத்தையும் நம்பிக்கையையும் குலைத்து விடாமல் பார்த்துக் கொண்டார். எந்தப் புயலிலும் தாக்குப் பிடித்துக் கரையேறும் தோணியாக அவர் இருக்கிறார். தன்னை நோக்கி வருகிற அம்புகளைக் கூடத் துடுப்புகளாக்கும் மந்திரம் கற்ற வித்தைக்காரரவர். கரையைக் கடக்க மறுக்கும் புயல்களை, முற்றிலும் எதிர்பாரா திசையில் தானேயொரு புயலை உருவாக்குவதன் மூலமாக, திசை திருப்பும் ராஜ தந்திரத்தைக் கரைத்துக் குடித்த சமர்த்தரவர்.
சாம்ராஜ்ஜியம் விரிவடைந்தது அவரது பெருவணிக நண்பர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டும் செய்தியாக விளங்கியது என்பதை எப்படிச் சொல்ல வேண்டிய அவசியமில்லையோ, போலவே, மன்னர் தனது நண்பர்களுக்கு இன்னுமதிகமாய் உதவிக்கரம் நீட்டினார் என்பதையும் குறிப்பிடத் தேவையில்லை. சொல்லாமலேயே புரியக் கூடியவற்றைச் சொல்லப் புரியவைக்க வேண்டிய அவசியமே அற்றுப் போகின்றது.
நாடெங்கிலும் உள்ள தண்டோராக்காரர்கள் பலரும் மக்கள் மத்தியில் மன்னரின் பராக்கிரமங்களை எடுத்துச் சொல்வதைத் தமது முழுநேரத் தொழிலாகவே மாற்றிக் கொண்டனர். எனினும் மக்கள் மத்தியில் மன்னரின் எதிரிகள் தொடர்ந்து அவருக்கெதிரான பிரச்சாரங்களையும், விமர்சனங்களையும் வைத்தபடியே இருந்தனர். அவைகளை முடக்காமல் அனுமதிப்பதன் வழியாக நாட்டில் சனநாயகம் தழைத்திருப்பதாகக் காட்டிக் கொள்ளும் வசதியை அவர் உணர்ந்தே இருந்தார். செல்லுமிடங்களில் எல்லாம் தான் முடியாட்சியின் வரலாற்றில் தோன்றிய முதல் சனநாயக மன்னன் என்று பறைசாற்றிக் கொள்வதை அவர் எப்போதும் மறப்பதில்லை. அரசவையில் சில வேண்டாத கேள்விகளும் விவாதங்களும் எழும் போது எந்தக் கேள்விக்குப் பதில் தருவது எந்தக் கேள்வியை மௌனமாகக் கடந்து விடுவது என்பதிலும் நிபுணர் பேரரசர். அரசவையையே விரும்பாத அதிசய மன்னராக அவரிருக்கிறார். மக்களிடையே விழாக்களின் போது வீர முழக்கங்கள் இடுவதே அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதை எமது நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் அறிவோம்.
கருத்துகள் சுதந்திரமாக வெளியிடத் தடையில்லாத போது நாம் ஏன் இப்படி காடோடிகளாய் அலைந்து கொண்டிருக்கிறோம் என்று ஒரு பகலில் மித்ர தாஸ் அப்பாவியாய்க் கேட்க எங்கள் சூழலின் இக்கட்டையும் இறுக்கத்தையும் தாண்டி ஏறத்தாழ எல்லோருமே மனம் விட்டுச் சிரித்தோம். மக்கள் எப்போதும் சுதந்திரமாகத் தனது ஆட்சியில் வாழ்வதாக நம்பிக் கொண்டிருப்பதே தனது ஆகப் பெரிய பலமென மன்னர் அடிக்கடி சொல்வாரென சாரதியின் உபயத்தில் நாங்கள் தெரிந்து கொண்டது இவ்விடத்தில் இயல்பாகவே நினைவிற்கு வந்தது. மன்னரின் இக்கூற்றிற்குச் சான்று பகர்வதாகவே விழாக்கள்தோறும் அவர் கடலெனத் திரண்டிருக்கும் ஜனத்திரளுக்கு மத்தியில் நரம்புகள் புடைக்கப் பேசும் உணர்ச்சிப் பெருக்கு மிக்க உரைகள் அமைகின்றன. மன்னருக்கு மித்ர தாஸ் போன்ற அப்பாவிகளை எப்போதும் மிகவும் பிடிக்கும். அவரைப் போல நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் ஆகிவிட்டால் எப்படி இருக்குமென்பது மன்னரின் நித்திரைகளில் வந்து போகும் சுகக் கனவுகளுள் முக்கியமானதாம்.
தனக்கெதிரான விமர்சனங்களைக் கையாள்வதில் மிக நுட்பமான ஒரு வழிமுறையைக் கையாண்டு வருகிறார் மன்னர். அது தேசமெங்குமுள்ள அவரது ஆதரவாளர்களாலும், ஆராதகர்களாலும் அன்றாடமும் செப்பனிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆட்சியை முன்வைத்து எழும் விமர்சனங்கள் அத்தனையும் மன்னரைக் குறித்த விமர்சனங்கள் என்ற கணக்கின் கீழே தான் வருமென்பதாகப் பரப்புரைகள் செய்தனர் மன்னரின் விசுவாசிகள். நாடாளும் மன்னனை விமர்சித்தல் ராஜதுரோகமன்றோ? இதனைப் பொறுப்பதும் ஆகுமோ? இப்பரப்புரைகளின் சூறைக் காற்றில் சிதறிய நெல்மணிகள் நாங்களும், எம்மைப் போன்றோரும் தான். இப்போது காடளந்து திரிகின்றோம்.
விமர்சனங்களைக் கையாள்வதில் இதனையே முழுமையான செயல் வடிவமென நாங்கள் நினைத்திருந்த காலகட்டத்தில்- தான் வெறுப்பவர்களுக்கும் ஆச்சரியப் பரிசுகள் அளிக்கும் அளவிற்கு நல்லவரான – மன்னர் அது வெறும் முதல் படிநிலை மட்டுமே என்று எங்களுக்கு விரைவிலேயே உணர்த்தி விட்டார். ராஜ துரோகிகளாக இருந்த எங்களைப் போன்றவர்களுக்கு மிக விரைவிலேயே தேசத் துரோகிகளாகப் பதவி உயர்வு கிடைத்தது. எம்மக்களுக்காக, அவர்களது உரிமைகளுக்காகக் குரலெழுப்பினோமோ அம்மக்களே எங்களை மக்கள் நல விரோதிகள் என்றும் மிகச் சாதாரண விசயங்களையும் சுயலாபத்திற்காய் நாங்கள் அரசியலாக்குவதாகவும் பழிக்கத் துவங்கினர். இது ஒன்றும் எங்களுக்கு மட்டும் நிகழ்வதல்ல என்பதும் காலந்தோறும் எம் போன்றோருக்கு நடந்ததே எங்களுக்கும் நடக்கிறது என்பதும் எங்களுக்கு சந்தேகத்திற்கிடமின்றி முன்கூட்டியே தெரிந்திருந்ததால், அதனால் பெரிய விரக்தியோ அங்கலாய்ப்போ எங்களுக்குள் இல்லமாலேயே இருந்தது. அவ்வப்போது மனவாட்டம் மேலிடுகையில் பெருமூச்செறிவதை தவிர்க்கத்தான் முடியவில்லை. அப்போதெல்லாம், சரி, நாமும் மனிதர்கள் தானே என சமாதனம் சொல்லிக் கொள்வதும் வாடிக்கையாகிப் போனது.
பேரரசராய் அரியணையை அலங்கரித்த சில நாட்களுக்குள்ளாகவே மன்னர் மௌனம் சாதிப்பதை ஒரு தேர்ந்த கலையாகவே வளர்த்தெடுத்து விட்டார். தனது அரசுக்குக்கெதிராக எழுகிற எங்களுடையதைப் போன்ற நியாயமான விமர்சனக் குரல்களைக் கூட நைச்சியமாக, அதே வேளையில் மறைமுகமாய் நசுக்கிவிட்டு தனது ஆளுகையில் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றனர் பாருங்கள் என்று மக்கள் கூடும் விழாக்களில் வீர உரையாற்றிக் கொண்டிருக்கிறார். இலக்கின்றி நாங்கள் இங்கே அலைந்து கொண்டிருப்பது எங்களது ஓட்டத்திற்கு உயிரைக் காத்துக் கொள்வது காரணமென்பது எவ்வளவு உண்மையோ, மக்களின் குரல் மௌனிக்கக் கூடாது என்ற காரணமும் அதே அளவிற்கு உண்மையானது.
உண்மையில் இலக்கின்றி மட்டுமல்ல திசையின்றி அலைந்த நாட்களே அதிகம். சூரியனோ இலை அடர்ந்த மரக் குடைகளுக்கிடையில் அவ்வப்போதே கண்சிமிட்டுகிறது. அவ்வயமங்களில் மட்டுமே சூரியன் எங்கள் திசை காட்டியானது. திசைகாட்டியை வைத்திருக்கும் ஒரு நண்பர் எங்களுடன் இணைந்து கொண்டதின் பிறகே திசைகள் அறிந்தோம். இன்னும் பெயரறியாத அந்த நண்பர் திசைகளை மட்டுமல்ல எவ்வழி செல்லலாம் என்பனபோன்ற யோசனைகளை தர்க்கரீதியில் முன்வைப்பதிலும் தேர்ந்தவாராய் இருக்கிறார். வந்த சில நாட்களுக்குள்ளாகவே குழுவில் அனைவரும் அவரது ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கத் துவங்கி விட்டோம்.
இப்போது எங்கள் தலையாய எதிர்பார்ப்பு வனம் மீளலே. மக்களுக்கான குரல்கள் மக்களூடே தான் இருக்க வேண்டுமே ஒழிய இப்படி வனவெளிகளில் வெற்று எதிரொலிப்பாக வீணாகக் கூடாது என்ற எண்ணம் எங்களிடையே மேலோங்கியே இருந்தது. இருப்பினும் முதலில் சற்றேனும் பாதுகாப்பான திசையில் பயணப்பட்டு வாழிடங்களை அடைய வேண்டும். ஆனால் எவ்வழி எம் வழி? குழப்பங்கள் மட்டுமே, நீடித்த சிந்தனைகளின் முடிவில் மிச்சமிருந்தன. பிடிகளற்ற அத்தருணத்தில் தான் ’திசைகாட்டி’ எங்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். வடக்கே செல்லாமா என்றால், வேண்டாம் அங்கே பெரும்பான்மையோர் மன்னர் மந்திர வார்த்தைகளில் சொக்கிக் கிடக்கின்றனர்; அவர் சொற்களால் கட்டும் மாளிகைகளுக்குள் தமக்கான இடம் ஒதுக்கப்படுமென நம்பித் திளைக்கின்றனர் என்றும், அதனால் நமது குரல் எடுபடாதென்று சொன்னார். சரியென்றே தோன்றியது. சரி, வடமேற்கிலாவது, என்றோம். வேண்டவே வேண்டாம் என்று அலறியே விட்டார். மன்னரும் அதற்கு முன் அரியணைகளை இரு தேசங்களிலும் அலங்கரித்தவர்கள் சிரத்தையாய் விரோதத்தை கலைநயத்தோடு விதைத்திருக்கின்றனர். தோன்றிய போதெல்லாம் அல்லது தேவையெழும் போதெல்லாம் இருபுறமும் அறுவடை தான் என்று எங்களுக்கு நினைவுறுத்தினார். யாசின் மறுப்பேதுமின்றி அதனை மௌனமாய் ஆதரிக்கவே செய்தார். எங்களுள் யதார்த்தத்ததை மறுப்பார் எவர்?
எத்திசை நோக்கினும் அங்கொரு இடரோ, தடையோ இருக்கக் கண்டு மலைத்த எங்களை அவரே தேற்றினார். மக்களுடன் தொடர்பு கொள்ளத்தக்க தூரத்தில் வனத்தினுள்ளேயே நாம் தங்கி விடலாமா என்ற யோசனையை முன்வைத்தார். முதலில் எங்களுக்குள் எழுந்தது கருத்து வேறுபாடல்ல; மாறாய் அதனை ஏற்றுக் கொள்வதில் இருந்த தயங்கங்களே. ஆற்றின் ஓட்டத்தில் ஆடும் பரிசலாய் முடிவெடுக்க இயலாமல் அலைக்கழித்தன மனங்கள். இத்தனை நாட்களில் வனம் எங்களுக்கு பழகி விட்டது போலும். வனத்தின் மிருகங்களெல்லாம் நகர் புகுந்தபின் வனம் அமைதியானதோ என ஆச்சரியமூட்டுமளவிற்கு வனத்துடனான எங்கள் உறவு ஆழமாகிப்போனது. இத்தனை நாட்களில். கொடிகளோடு படர்ந்தும், மரங்களோடு வளர்ந்தும், புதர்களோடு மண்டியும், புற்களோடு விரிந்தும் நாங்கள் கானகத்தோடு இயைந்து போயிருந்தோம். பின்னிரவுகளில், நட்சத்திரங்களுக்கிடையில் நிலைகுத்திய பார்வைகளோடும், கேள்விகள் மட்டுமே மண்டிய மனங்களோடு கிடந்த எங்களுக்குள் சிந்தனையின் தொடர் ஓட்டத்தின் முடிவில் அவர் சொல்வது சரியென்றே படத்துவங்கியது. அதனை அருகிலிருப்பவரிடம் குசுகுசுத்தே எங்கள் அனைவரின் எண்ணங்களும் அதுவாகவே உள்ளதென அன்றைய விடியலுக்குள் புரிந்து கொண்டிருந்தோம். திசைகாட்டியோ புன்முறுவலுடன் ஒரு பறவையை மடியில் கிடத்தி வாஞ்சையாய் தடவியபடி கொஞ்சிக் கொண்டிருந்தார். அப்பறவையின் ஒரு காலில் கட்டப்பட்டிருந்த காகிதச் சுருளை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. ஒளி பொருந்திய அப்பறவையின் கண்மணிகள் நாலாபுறமும் சுழன்று கொண்டே இருந்தது.
AI-generated art is used in this Story.
எழுதியவர்
-
இயற்பெயர் லா.மா.ஜோ அந்தோணி. தூத்துக்குடியில் வசிக்கிறார். இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் இவர்; சினிமா மற்றும் இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சினிமா சார்ந்த கட்டுரைகள் படச்சுருள், வாசகசாலை இணைய இதழ், புரவி, பேசாமொழி இணைய இதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதைகளும் அவ்வப்போது இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன.
இவரது ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ என்ற சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதி வாசகசாலை பதிப்பக வெளியீடாக 2020இல் வெளிவந்துள்ளது.
இதுவரை.
- கலை11 November 2024நகைச்சுவைக்கு என்னதான் ஆயிற்று?
- குறுநாவல்29 July 2024அனந்திப்பூ
- கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023புறப்பாடு
அழகான மொழிநடையில் அமைந்திருக்கிறது கதை. முடிவும் திருப்பம் மனதின் கனத்தைக் கூட்டுகிறது.