
பக்கவாட்டுத் தோற்றத்தில் சிவா இன்னும் நெருக்கமாகத் தெரிந்தான். மைதிலிக்கு அவனுடைய நிக்கோடின் படிந்த உதடுகள் மிகுந்த கவர்ச்சி அளிப்பதாக இருந்தது. கட்டி அணைத்துக் கொள்ளலாமென்ற உணர்வு மேலிட்டது. நிக்கோடின் இல்லாவிட்டால் இன்னும் அழகாக இருப்பானோ,, எத்தனை தைரியம் மிக்கவன்! பெண்ணுக்கு அவசியமான சமயங்களில் அச்சமின்றி செயல்படும் ஆணின் மீதான ஈடுபாடு, ஆண்டாண்டு காலத்துக்கும் மாறாது என்பதை அவளே உணர்வது புளகாங்கிதமாயிருந்தது. வெள்ளையும் கருப்புமாக முடிக்கற்றைகள் அக்கறையின்றிப் பறந்து கொண்டிருந்தன. குறுந்தாடி ஒழுங்குப்படுத்தாமலும் சீர்ப்படுத்திய மாதிரியிருந்தது. அவளுக்குத் தெரியும் இன்னும் இரண்டு நாட்களில் அவனுடனான நேர்காணலுக்கு பிரபல சேனல் தேதி வாங்கி வைத்திருக்கிறது. நாவலூரின் பெரிய வணிக வளாகத்தின் வெளியை ஒட்டிய மரநிழலில் இருவரும் நின்றிருந்தனர். அருகிருக்கும் உணவகத்தில் நண்பர்கள் சந்திப்பு நிகழ இருக்கிறது.
இரண்டு பேர் பேசும்போது எதிரிலிருப்பவருக்கு உந்துதல் குறையாமல் கேள்விகளைக் கேட்க வைப்பவன். பார்வையாளரை ஆர்வத்துடன் பேட்டியைக் கவனிக்க வைத்து விடுவான். அப்படிப் பார்க்க ஆரம்ப்பித்தவள்தான் மைதிலி. பின்பு தனியே வீடெடுத்து அவனுடன் தங்குமளவுக்கு நெருக்கமானாள்.
அவளுக்கு அவனை நேர்காணல் எடுக்கும் வாய்ப்பு வந்தது.
அவள் வேலை செய்யும் சேனலில் யாரோ எடுக்க வேண்டிய பேட்டி அது யு ட்யூப் சேனல்களில் இது சகஜம். திட்டமிட்டு இருக்கும் நேரம் குறைவு. திட்டமிடாமலேயே எத்தனையோ நேர்காணல்கள் அமைந்திருக்கின்றன. அரசியல் என்றால் சிறிய முன் தயாரிப்பாவது வேண்டும். வேறு யாராவது என்றால் பரவாயில்லை. சிவா பேட்டி என்றால் அனல் பறக்கும் கிரிக்கெட் கிரவுண்ட் போலதான் பேட்டியின் பெரும்பாலான நேரம் அமையும். இளம் தலைமுறையினருக்கு சிவா மீது கிரேஸ் இருந்தது. சமுதாயத்தில் நடக்கும் பொய் புரட்டு மிரட்டல் உருட்டல்களுக்கிடையே அரசியல் காரியங்களில் நம்பிக்கையற்று இருந்த அவர்களுக்கு அவற்றை வெளிச்சப்படுத்திய சிவா மீது விருப்பு வந்தது தர்க்கப்படி நியாயம் ஆனது.
மைதிலி அந்தப் பேட்டியின்போது அவனது சரமாரியான எதிர் கேள்விகளினால் கலங்கிப் போனாள். கேமராவின் முன் இருக்கிறோம் என்ற கட்டுப்பாட்டை மீறி இரு துளி கண்ணீர் சிந்திவிட்டது. பேட்டி முடிந்தப்பிறகு அழைத்துப் பேசினான். இனிமேல் எந்தப் பேட்டிக்கும் தயாராகாமல் வராதீர்கள் என்றான். பேட்டி எடுப்பதற்கான சில நுணுக்கங்களையும் அரசியல் குறித்து உடனடியாகத் தயாரித்துக்கொள்ள வேண்டிய அவுட்லைன் பார்வையையும் எடுத்துக் கூறினான். பயம் விலகி அரசியல் மீது இருந்த சிடுக்குப் பிடித்த தாத்பரிய மனநிலை விடைபெற்றது. சிவா கூறியதைக் கவனமாகக் கேட்டிருந்தாள் விளைவு அடுத்து மூன்றாம்நிலை அரசியல்வாதி ஒருவரை அவள் எடுத்தப் பேட்டி வைரல் ஆனது. பெரும்பாலோரிடையே பாராட்டுப் பெற்றது. அன்று இரவு நன்றி கூறுவதற்காக அலுவலகத்தில் எண் வாங்கி அவனுக்கு வாட்ஸப் செய்தாள். அவனது டிப்ஸ் தனக்குப் பெரிதும் உதவியதாகக் கூறினாள். குட் என்று சிரிப்பு ஸ்மைலி அனுப்பினான். இரண்டு மூன்று வாரம் கழித்து அவள் வேலைப் பார்த்த சேனலில் இருந்து விலகுவதாக அவனுக்குத் தெரிவிததாள். வேறு சேனலில் பரிந்துரைப்பதாகக் கூறினான். இடைப்பட்டக் காலத்தில் மைதிலியுடன் இணைத்து சிவாவை அலங்கோலப்படுத்தி மீம்ஸ் உருவாக்கினாராகள். சிவாவின் கர்ஜனையை நிறுத்துவதற்கு வழி தெரியாமல் இப்படி மீமஸ் டெம்ப்ளேட் உருவாக்கி அவனது பிரபலத்தன்மையைக் குறைக்க முனைந்தார்கள். ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் அவன் மீது இருந்த அபிமானம் போகவில்லை. அவளுக்கும் இதற்கு முன் சிவா அரசு அலுவலகத்தில் வேலையிலிருந்தப் போது அனைத்துப் புலன்களின்வழி உணரக்கூடிய வகையில் நடந்து கொண்டிருந்த ஊழல், ஏமாற்று வேலைகள் அவனை வேலை செய்யவிடாமல் தடுத்தது. அது வருமானவரி சம்பந்தப்பட்ட அலுவலகம். இதன் கிளை அலுவலகம் தேனாம்பேட்டையில் இயங்கி வந்தது. இவன் ஆலந்தூர் கிளையில் வேலை பார்த்தான். தேனாம்பேட்டை அலுவலகத்திற்கு கோப்புகளைக் கொண்டு போவதும் வருவதுமாக இருக்கையில் அவனுக்கு பலவும் தெரிய ஆரம்பித்தது. அரசு இயந்திரத்தை இயக்குவிக்கும் பொறுப்பாளர்களின் ஊழல்களை அறிந்து அதிர்ச்சியானான். சீனியர் ராமசாமி எவ்வளவோ முறை எடுத்துக் கூறினார்.
“நீ மட்டுந்தான் அதிசயமா, சுத்திப் பாரு எல்லாரும் அவங்கவங்க சம்பாத்தியத்தக் காப்பாத்திக்கவும் அதிகப்படுத்திககவும் மும்முரமா இருக்கைல உனக்கு மட்டும் என்ன இப்படி ஊர்ல கிடக்கற பஞ்சாயத்த எல்லாம் தலைல எடுத்துப் போட்டுக்கிட்டு திரிஞ்சு அடிபடணுமா” என்று, சிவா கேட்பதாயில்லை.
கேட்க முடியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என சதா அவன் மூளை தூண்டிக் கொண்டே இருந்தது. நேரடியாகச் செயலில் இறங்கினான். கண்முன் அப்பட்டமாக மாநில அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் அவன் அலுவலக மேலாளர் மிஷ்ரா உடன் இணைந்து நடத்திய ஊழல் அவனைத் தூங்கவிடாமல் செய்தது. ஏதேனும் செய்ய வேண்டுமென்று துருதுருத்தான். நீதிபோதனை வகுப்பில் பிச்சமூர்த்தி சார் கண்கள் துடிக்க நியாயத்துக்காக போராடிய வக்கீலின் கதையைக் கூறியபோது வகுப்பே அமைதியாய் இருந்தது. சிவா மட்டும் “அவர் ஒருத்தர்தான் அந்த ஊர்ல போராடினாரா சார்” என்றான்
“நீதி எந்த அளவுக்கு சத்தான குழந்தையோ அதே அளவுக்கு சவலைக் குழந்தை. நீங்களாம் உங்க வேலைல லஞ்சம் வாங்காம ஊழல் செய்யாம இருந்தீங்கனா ஆரோக்கியமான குழந்தையா நம்ம நாடே மாறிரும்”
என்றார். அந்த ஒரே வக்கீலாக சிவா தன்னைக் கற்பனை செய்து கொள்வான் இப்போதும்.. அதே அலுவலகத்தில் எல்லோரும் மூத்தவர்கள் சிவா மட்டுமே இளையவன். நேர் நின்று கேட்க, பேச தயக்கமாக இருந்தது என்றாலும் கேட்டான்.
“ஊர் போற போக்குல போயிர வேண்டிதான் தம்பி” என்றார் சீனியர் ஒருவர். யாருக்கும் தெரியாமல் மொட்டை பெட்டிஷன் போட்டான். அதன் எதிர்வினைக்காக நாடகளை எண்ணிக்கொண்டு இருந்தான். கிணற்றில் போட்டக் கல்லாக எந்த மாற்றமும் இல்லை எல்லாம் வழக்கம் போல நடந்து கொண்டிருந்தது. தொடர்ந்து சளைக்காமல் 27 கடிதங்கள் போட்டான், விளைவாக அவன் காது படவே “யாரோ பொழப்பத்துப் போய் இந்த லெட்டருக்கு காசு செலவு பண்ணிக்கிட்டு இருக்கான்” என்று பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றித் தெரிந்து கொண்டவுடன் முதல் வேலையாக அலுவலக ஊழல் குறித்துப் புகார் தயார் செய்தான். அனுப்புநர் முகவரி தேவைப்பட்டது. நண்பனின் முகவரியைக் கொடுத்துவிட்டு அவனிடம் தகவல் சொன்னான். கடிதம் வந்தால் வாங்கி வை என்றான். தொடர்ந்து மூன்று முறை அனுப்பியதில் அலுவலகம் உஷார் ஆனது. நடவடிக்கை என்று ஏதும் எடுக்காவிட்டாலும், விளக்கம் தேவைக்கேற்ப வந்து சேர்ந்தது. முகவரி கொடுத்த நண்பனுக்கு மிரட்டல் வந்தது.
யாருக்கும் தொல்லை இல்லாமல் தானே தனது செயல்களுக்கான விளைவுகளை எதிர் கொள்ள வேண்டும் என்று நினைத்தான். அவன் பெயரில் வலைதளப் பக்கம் ஆரம்பித்தான்.
அரசு அனுப்பிய விளக்கம் அவன் திரட்டியத் தகவல் எல்லாம் சேர்த்து வலைதளப் பக்கத்தில் கட்டுரைகளாகப் பதிவேற்றத் தொடங்கினான். எதிர் பாரத வகையில் வரவேற்பு பெற்றது. அவன் உள்ளத்தின் ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டாகவே பதிவேற்றினான். வந்த வரவேற்பு உற்சாகம் கொள்ளச்செய்தது. தொடர்ந்து இயங்கினான். நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவரவர் அலுவலகத்தில நடக்கும் முறைகேடுகளை அவனிடத்தில் கொண்டு சேர்த்தார்கள். அவர்களின் ரகசியம் காத்து செய்திகளை மட்டும் பதிவேற்றத் தொடங்கினான். புலனாய்வு பத்திரிகையில் இரண்டு இவன் கட்டுரையை வாங்கிப் பிரசுரித்தன..
உடன் வேலைப் பார்த்த பக்தவத்சலம் அவனிருக்கும் இடம் தேடி வந்து டீ குடிக்க அழைத்துப் போய் சொன்னார் “ வாசிச்சேன்டா வாசிச்சேன் எல்லாம் வாசிச்சேன்” மூன்றாவது வாசிச்சேன் சொல்லும் போது எங்கோ பார்த்து இழுத்துச் சொன்னார். பிறகு அவரது வழக்கமான கரகரவென்ற குரலில் கூறினார், “என்னடா இப்படி குச்சி எடுத்து அடிக்கிற மாதிரி பேசிருக்க. இதுலாம் புரையோடிப் போயிருக்கிற விஷயம் இங்க”
“அப்படியே விட்டுட்டா எப்படி ஸார்”
“அதுக்கு?”
புன்னகைத்தான்.
“வீட்டுக்கு வா ஒரு வாய் காஃபி குடிச்சிட்டு போவ”
இரண்டு நாட்கள் கழித்து சிவா தனது நண்பனை பார்க்கச் சென்றுவிட்டு அப்படியே வழியில் பக்தவத்சலம் வீட்டுக்குச் சென்றான். அவனைப் பார்த்தவுடன் பக்தவத்சலம் வா என்று அழைத்துச் சத்தமாக
“அடிக்க ஆரம்பிச்சுட்டியா?”
என்றார். அவரது மனைவியிடம்
“பாதகம் செய்யறவன ஸ்டிக் எடுத்து அடிக்கிறதுக்குனே பொறப்பெடுத்து இருக்கான்டி” என்று கூறினார். பக்தவத்சலத்தின் மறைமுக ஆதரவு அவனுக்கு ஊக்கத்தைக் கொடுத்தது.
அலுவலகப் பணியில் இருந்த போது அப்போதைய ஆளுங்கட்சி கைது செய்து சிறையலிடைத்தது இரண்டு நாட்கள் கழித்து விடுவிக்கப் பட்டான். மேலாளர் அழைத்து எச்சரிக்கை செய்தார். மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுத வற்புறுத்தினார். வேலை இல்லாமல் போகும் ஜாக்கிரதை என்று பாலிஷாக மிரட்டல் விடுத்து சிவாவை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அவன் வேலை வேண்டாமென கடிதம் கொடுத்து விட்டு வெளியே சென்றான். மேலாளர் ஸ்தம்பித்துப் போனார் பக்தவச்சலம்,
“நிஜமாவே நீ ஹீரோதான்டா! வேற ஏதாவது சர்வீஸ் கமிஷன் பரிட்சை எழுது உன் நாலேடாஜூக்கு ரெண்டு மாசம் ப்ரிப்பேர் பண்ணினா போதும் நல்ல வேலைல உட்கார்ந்துரலாம்” என்றார்.
“இல்ல ஸார் எந்த ஆஃபிஸா இருந்தாலும் இந்த பிரச்சினைய கொண்டு வந்து அங்க சேப்பாங்க இன்டர்வியூவே வராது”
பக்தவத்சலத்திற்கு முகம் விழுந்து போயிற்று. இந்தப் பையனின் இந்நிலைக்குத் தானும் காரணம். நாம் ஆகா ஓகோ என்றிருக்காவிட்டால் வேலையில் நீட்டித்திருப்பானே என்னும் குற்ற உணர்ச்சியில் அவனை நேராகப் பார்க்காமல் குனிந்தபடியிருந்தார். அதை யூகித்தவனாக சிவா,
“எனக்குச் சின்ன பிள்ளைல இருந்து போராட்ட குணம் இருக்கு ஸார். என்னோட முயற்சியினால கொஞ்சமாவது நல்லது நடந்தா சரி. வேற என்ன வேணும் நீங்க சப்போட்டா பேசலனாலும் இங்கதான் வந்து நின்னுருப்பேன்” என்றான்.
வலைதளப் பக்த்தில் திரட்டியத் தகவல்களை எழுதினான். அவனுக்கு நடந்த கஸ்டடி விசாரணைகளும் அதில் அடக்கம். பக்தவத்சலம் மீண்டும் தன்னைப் பார்க்க வந்த அன்று வலைதளப்பக்கத்திற்கு சிவா என்றிருந்ததை மாற்றி ஸ்டிக் சிவா என்று பெயர் வைத்தான். ஸ்டிக் சிவா பெயர் பரவலாக சென்றடையத் தொடங்கியது. அவன் பக்கத்தை சில ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் தொடரத்தொடங்கினர்.
வீடியோக்களின் காலம் வந்தப் பிறகு பேட்டி, பேச்சு, விளக்கம் என்று தொடர்ந்து இயங்கியதில் ஸ்டார் அந்தஸ்து பெற்றான். பிரபலமானான். அனைத்துக் கட்சியினருக்கும் அறிமுகமானான். திரை மறைவு அரசியலை மக்கள் திட்டங்களில் சுருட்டும் பணத்தை பட்டியலிட ஆரம்பித்தான். ஆளுங்கட்சிக்கு முக்கியத் தலைவலியாக மாறிப்போன அன்றே அவனது பாதுகாப்பு கவலைக்கிடமானது என்று அவன் குடும்பத்தார் பெரும் கவலை கொண்டனர். அவன் எல்லோரையும் விட்டுத் தனியே வசித்தான். அவர்கள் கூறியது போல மீராட்டல்களைச் சந்தித்தான் என்றாலும் மக்களின் ஆதரவு அவனை இயங்க வைத்தது. தேசிய கட்சியில் பணம் வாங்கிக் கொண்டு செயல்படுகிறான் என்றார்கள் எதிர் கட்சியிடம் வாங்குகிறான் என்றார்கள் இல்லையில்லை எல்லா கட்சியிடமும் வாங்குகிறான் என்றார்கள். அவனிடம் கேட்டால் எல்லாவற்றிற்கும் ஆமாம் என்று கூறி இப்போது நான் சொன்ன குற்றச்சாட்டு உண்மையா இல்லையா அதைப் பாருங்கள் என்றான். இத்தகையப் பதிலை அரசியல் விமர்சகர்கள் எதிர்த்தனர், சிலர் ரசித்தனர்.
நீண்ட தனிமை அவனையும் பிடித்துத் தின்னத் தொடங்கியிருந்த வேளையில் மைதிலியின் வரவு நடந்தது.தேவையாயிருந்தது. உண்மையாகச் சிலமுறை பொய்யாகச் சிலமுறை மறுத்தப் படியிருந்தவனுக்கு மைதிலியைத் நெருக்கமாகத் தனியே சந்திக்கையில் பேசசே வரவில்லை. அவளே கைகளைக் கோர்த்துக் கொண்டாள். சிவாவின் உடல் மெலிதாக நடுங்கியது. நாள்பட்டத் தனிமை பெண்கள் இல்லா உலகில் கொண்டிருந்த வீராப்பு அடி வாங்கியது. அலட்சிய உடல் பாவனைகள் குழைந்து பணிந்தது. நடுக்கத்தைப் போக்குவிக்க முயன்றான். மைதிலியே கட்டிலில் தள்ளி மேலே படர்ந்தாள். அவளைத் திருப்பி மேலே படர்ந்தவன் முகத்தைப் பார்க்க தலையைப் பின்னுக்கிழுத்தாள், தள்ளினாள் மஹூம் முடியவில்லை அப்படியே மேல் சாய்ந்து கழுத்தில் முகம் புதைத்துக் கவிழ்ந்து கிடந்தான். கோந்து போல் ஒட்டிக் கொண்டான். வாஞ்சையோடு அப்படியே தழுவிக்கொண்டாள். பெண் பிரம்மம்!
மைதிலிக்கு ஸ்டிக் சிவாவை நினைக்க மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் சேர்ந்து வெளியில் சென்று வந்தனர். படம் பிடித்து அவனால் கேள்விக்குள்ளானவர்கள் அவனது நேர்மைத் தன்மையைக் கேலிக்குள்ளாக்கி ஊடகங்கள் வாயிலாகப் பரப்பினர். அவர்கள் நினைத்த அளவு பரவவில்லை பரவியிருந்தால் மைதிலி உள்ளூர மகிழ்ந்திருப்பாள். இப்பொழுது ஒன்றாகத் தங்கும் அளவுக்கு நெருக்கமாகியிருக்கின்றனர். அவனது ஸ்டிக் சிவா இணையப் பக்கத்தை மைதிலி பார்த்துக் கொண்டாள். சிவா அந்த இணையப் பக்கத்தை மிகவும் நேசித்தான். அதுதான் அவனுக்கு அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. ஆளுங்கட்சி எதிர்கட்சித் என்று சில தலைவர்களும் பல தொண்டர்களும் அவனுடன் தொடர்பில் இருந்தனர்.
திரும்பவும் சிவாவை அதிரடியாகக் கைது செய்து போலிஸ் வேனில் ஏற்றியப்போது பொய்வழக்கு ஜோடிக்கின்றனர் என்று மைதிலி அழுதாள். அவளிடம் சில தகவல்களைக் கூறி தொடர்ந்து தனது ஸ்டிக் சிவா அக்கவுண்டை இயக்கி வருமாறு கூறினான். மைதிலி சில நண்பர்கள் உதவியுடன் இணைய பக்கத்தைத் தொடர்ந்து இயக்கினாள். சிறைக்குப் பார்க்கச் சென்ற நண்பர்களிடம் சிவா கேட்ட ஒரே கேள்வி ஸ்டிக் சிவா இணைய பக்கம் இயங்குகிறதா என்பதுதான். வழக்க நடைமுறைகள் முடித்து வெளியே வந்து சேரும் நாள் மைதிலி தனக்கும் அவனது பெற்றோருக்கும் மிரட்டல் வந்ததாகக் கூறினாள். அவளைத் தைரியப்படுத்தி விட்டு சிவா வழக்கம்போல் பேட்டி கட்டுரை என்றிருந்தான். ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் பக்தவத்சலம் சிவாவுக்காக அவரது நட்புத்தொடர்புகளைப் பயன்படுத்தி செய்திகள் வாங்கி வைத்திருந்தார். ஃபோன் செய்து,
“உனக்கு ஆபத்து இருக்குனு சொல்றாங்கடா கொஞ்ச நாள் வீடியோ பேட்டினு எதுவும் செய்யாம வெளியூர் போய் இரு” என்றார்.
“விடுங்க சார் இதுலாம் வழக்கம்தானே இன்னும் ரெண்டு நாள்ல உங்கள வந்து பாக்கறேன். நீங்க வச்ச பேரு எப்படி பிரபலமா இருக்கு பாத்திங்களா”
கடகடவென்று சிரித்தான். அவரின் அமைதியை உணர்ந்து மெல்லிய குரலில் உறுதியாக “நான்ங்கிறது ஸ்டிக் சிவா சார் நானே இல்லைனாலும் அந்த ஆன்லைன் பக்கமெல்லாம் உத்வேகத்தோட இயங்கணும் ஸார் “ என்றான்.
”வீட்டுக்கு பக்கத்துல இருக்கற காஃபி கடைக்கு வா பேசுவோம் “ என்று ஃபோனை கட் செய்தார்.
மைதிலி அவனின் மகிழ்ச்சிக்காக, அவனுக்கு ஐஸ் வைப்பதற்காக என்று ஸ்டிக் சிவா கணக்கை மேலும் மெருகேற்றிக் கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து சிவாவின் பெற்றோர் இருக்கும் அடையாறு வீட்டுக்கு சோதனை என்ற பெயரில் குழு ஒன்று வந்தது. அதன் பிறகு விசாரணை என்று சீருடையில்லாதக் குழு வந்தது. சிவா உடனே வீட்டுக்குச் சென்று அம்மா அப்பாவிடம் பயம் கொள்ள வேண்டாம் என்று ஆறுதல் வார்த்தைகளைக் கூறிவிட்டு வந்தான். பக்தவத்சலம் ‘நான் சொன்னேனேடா’ என்றார். அம்மா அழுதபடியிருந்தாள். ஒருவாறு அமைதிப் படுத்திவிட்டு வந்தான்.
அடுத்த நான்கு நாட்களில் ஏதோ ஒரு அலுவலகத்தில் இருந்து வருவதாகச் சொல்லிக் கொண்டு ஆண்களும் பெண்களுமாகத் திரண்டு வந்து சிவாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்த அவர்கள் பதிலுக்கு நியாயம் கேட்டவுடன் இதுதான் சமயமென்று வந்தவர்கள் ஏக வசனத்தில் பேச ஆரம்பித்து விட்டனர். அம்மா திக்கென்று நின்று விட்டாள். வெளிக் கதவைப் படாரென்று அடித்தனர். அவர்களில் சிலரின் கையில் ஆயுதங்களைக் கண்ட அம்மாவும் அப்பாவும் விதிர்த்துப் போயினர். செய்தி கேள்வியுற்று மைதிலி மிகவும் பயந்து போயிருந்தாள். யாரை எப்படிச் சமாதானம் செய்வதென்று சிவாவுக்குத் தெரியவில்லை. அவன் அம்மாவின் அரண்டு போன முகம் பார்த்து பிரமைப் பிடித்து நின்றான்.
அடுத்த நாள் ஸ்டிக் சிவா இணையச் செயல்பாடுகள் முழுவதுமாக நிறுத்தப் பட்டது என்ற செய்தி ஊடகங்களுக்கு வந்தது.
எழுதியவர்

-
இயற்பெயர்- கவிதா, தமிழ் இலக்கியம் படித்த இவரின் ஊர் திருச்சிராப்பள்ளி. எழுதவும் வாசிக்கவும் விரும்பும் இவரின் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் இணைய, அச்சிதழ்களில் வெளிவந்துள்ளன.
’வெட்கச்சலனம்’ எனும் கவிதைத் தொகுப்பு நூல் மற்றும்
‘வசுந்தரா தாஸ் குரல்’ எனும் சிறுகதைத் தொகுப்பு, ’மரக்குரல்’ குறுநாவல் தொகுப்பு நூல்களும் வெளியாகி உள்ளன.
இதுவரை.
சிறுகதை21 May 2025ஸ்டிக் சிவா
சிறுகதை29 July 2024ராஜலலிதம்
கதைகள் சிறப்பிதழ் 2023 - II3 September 2023வினா
சிறுகதை9 June 2023வலை
சமகால நடைமுறை எதார்த்தம். காதல் போன்ற ஈர்ப்பு பற்றிய விவரனைகள் கவித்துவமாக இருக்கிறது. மற்ற சம்பவங்கள் கண்முன்னே நாம் பார்ப்பவைதாம்.. அதில் சிவா எத்தனை உறுதியோடு எதிர்கிண்டு மேலே சென்றான் என்பதாக கதை ஒரு நேர்மறை முடிவோடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதே சூழலின் கண்ணெதிர் உதாரணமாக திரு சவுக்கு சங்கர் இருக்கிறார் ஆனால் தனது அம்மா இருக்கும் போது வீட்டில் மலத்தைக் கொட்டி உறுதிதை அசைத்தபோதும் பின்வாங்காமல் தொடர்கிறார் எனும்போது கதையின் ஸ்ட்க் சிவாவுக்குத் தொடக்கத்தில் இருந்த நாயகத்தன்மை நியாயப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நல்ல கதை சொல்லல் முறை. வாழ்த்துகள்.