28 April 2024

தீ திடுதிடுவெனப் பற்றி எரிகிறது. அப்பாவிடம் எந்தச் சலனமும் இல்லை. நெற்றிச் சுளித்து கண்களை மிக அதிகமாகச் சுருக்கி வெயிலுக்கு எதிர்வினைச் செய்த அப்பா தீயில் மௌனமாகப் படுத்திருக்கிறார். அமைதி உறைந்து போயிருந்த இதழ் எதுவும் சொல்வதற்கில்லை என்று சொல்லி மறைந்து கொண்டது. ஜ்வாலையின் அணுக்கம் நின்றிருந்த சில கால்களைத் தள்ளி நிற்க வைக்கிறது. போதுமென்பது போல் பின்வாங்கிய ஏனைய கால்கள் தங்களது வாகனங்களை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றன. மண்ணெண்ணெய், விறகு, வறட்டி மீறி ஊன் எரியும் நாற்றம் நாசி எட்டியது.

நான் திரும்பவில்லை விலகவும் இல்லை. ஈரவேட்டிக் கடந்து மேல் ஏறிய நெருப்பின் சூடு தேவையாயிருந்தது.. இது எனக்கு நானே கொடுத்துக் கொள்கின்ற தண்டனையா, பாவமன்னிப்பா ,எனக்கான தீயின் நாக்குகள்‌ எனை ருசிக்கக் காத்திருப்பது இந்த ஜ்வாலையின் ஒளியில் தெரிவதா எதுவென்று தெரியவில்லை. திரும்புவதற்கு மனம் வரவில்லை. இருப்பதினால் ஒன்றும் ஆகப்போவதுமில்லை. யாருடைய கரமோ கைப்பிடித்திழுத்து வண்டியில் அமர வைக்கிறது.

அப்பா இல்லாத வீடு.

முன்னறையில் அமர வைக்கப் பட்டேன். தம்பி முறையாகும் உறவுக்காரப் பையன் அப்பாவின் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைக் கையில் வைத்துக் கொண்டு “அம்மா கொடுத்தாங்கண்ணா. பெருசு பண்ணிட்டு வரணும் படத்துக்கு கீழ் பேர் எழுதி தோற்றம் மறைவு போடணும்ல, எழுதி வச்சிரு நாளைக்குச் சாயங்காலம் வேல முடிச்சு வரப்ப வாங்கிக்கறேன்” கையில் பேனாவையும் சிறிய பேப்பரையும் திணித்துவிட்டு போனான். பன்னிரண்டுக்குப் பத்து என்றோ ஆளுயரத்திற்கு என்றோ அவரவர் விருப்பத்திற்கேற்ப ஃபோட்டோவைப் பெரிது படுத்தி வைக்கும் முறை இன்றும் மாறாதிருக்கிறது. இப்பழக்கம், சென்றவர் இருக்கும்போது நாம் செய்யத் தவறிய குறைகளின் பள்ளங்களை நிரப்பிட எளிமையான ஒன்றாக இருக்கிறது. பிறகு, பிரிவின் கவலை, ஏக்கம், சுற்றத்தினரால் கட்டிப் போடப்பட்டு சருகாகிய இறந்தவரின் ஆசைகள் எல்லாம் அமாவாசை நாளினால் சமன் செய்யப்படுகிறது. காகத்திற்களிக்கும் ஒரு கவளத்தில் எல்லாமும் பூர்த்தியாகி விடுகிறது!!!

உள்ளங்கைக்குள் அப்பா சிரிக்காமல் நேர்க்கோட்டில் பார்த்துக் கொண்டிருந்தார். நேர்மையின் முழுமைத் தன்மையைத் தனக்குள் இருத்திக் கொண்டவர். ஏதோவொரு அசந்தர்ப்பத்தில் கொடுத்துவிட்ட கடனைக் கேட்டு வாங்கத் தெரியாது. கடனென்று எவரிடமும் வாங்கியதில்லை. கடன் வாங்குவது தவறான செயல் என்று உறுதியாக இருந்தவர். வங்கியிலும் கூட வாங்கியதில்லை. அவரைப் பொருத்தவரை தவணை முறையென்ற ஒன்றே சேமிப்புக்காகத்தான், பூடகமாகப் பேசுவது, காரிய சித்திக்காக வளவளப்பது எதுவும் தெரியாது. தெருக்கடைகளில் நின்று டீ குடிக்கும் ஆண்களில் அப்பாவைக் காண முடியாது. அவர் அலுவலகத்தில் மகிழ் நிகழ்வுகளில் பரிமாற்றம் செய்து கொள்ளும் தேநீரை மட்டும் அருந்திப் பழகியவர். அதிலும் அவரது பங்கான 25 கிராம் இனிப்பும் காரமும் வீட்டுக்கு வந்து விடும். உன்னிப்பான பார்வை கொண்டவர். கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

மார்பில் சாய்ந்து, கைகளைப் பிடித்து, தோள் பற்றி, கண்களைச் சந்தித்து கண்ணீர் கொட்டிய விழிகளின் ஈரமெல்லாம் இன்னும் கழுவப் படவில்லை. துயரின் துளிகள் வடியாமல் எங்கும் ஈரம் கோர்த்துக் கொண்டிருக்கிறது. பாரமாயிருக்கிறது.. காற்றாடத் தனிமையில் இருக்க வேண்டும். மனதின் விருப்பத்திற்குச் செவி சாய்ந்தது. மாடிக்குக் கால்கள் ஏறத்தொடங்கின. அப்பாவின் பாதங்கள் பல்லாயிரம் முறை படிந்த படிக்கட்டுகள். சிவப்பு சதுரங்களில் இறங்கியிருந்த மாலை வெயிலை மொட்டை மாடியுடன் பங்கு போட்டுக் கொண்டேன். மேற்கிலிருந்து வந்த காற்று ஈரத்தைப் போக்க முயன்றது.

நிற்கவும் நடக்கவுமாய் இருக்கின்றன என் கால்கள். அப்பாவிற்குத் தனியாக உடல் நலத்திற்கென்று வாக்கிங் போகும் பழக்கம் இல்லை. ஆனால் எதன் பொருட்டும் நடை, நடை ஓயாத நடை. எந்த வாகனமும் ஓட்டும் ஆர்வம் வந்ததாகத் தெரியவில்லை. உள்ளூரில் உள்ள எல்லா இடங்களுக்கும் சீரான நடையில் செல்வார். அதனாலோ என்னவோ உடல் ஒரே அளவில் சரியான எடையில் இருந்தது.

செருப்புச் சத்தம் கேட்க உள்நுழையும் அப்பா முன்பிருந்தார். வெறும் காலுடன் வீட்டிற்குள் நடக்கையிலும் தரையோடு பாதங்கள் உராயும் சத்தம் கேட்கும். சில வருடங்களாகப் பூனை போன்று மாறியதாக அம்மா சொன்னார். “ராசிப்படி அவங்களோட மிருகம் பூனைடா” அது எல்லாம் ஒன்றுமில்லை என்று வருத்தமாகக் கூறியிருக்கிறேன். ஆனால் நடந்தது வேறு. வெளியிலிருந்து உள்ளேயும், உள்ளிருந்து வெளியேயும் பூனையின் லாவகத்துடன் பார்ப்பார். சுற்றிலும் தோல் சுருங்கி உட்குழிந்து கொண்ட கண்களின் பயப்பார்வையை எந்த மகனும் சந்தித்திடக் கூடாது ஆண்டவா! துயரத்தில் மூழ்கடித்துச் செயல் மடிய வைக்கும் பார்வை.. சத்தமின்றி உள்நுழையவும் வெளிச்செல்லவும் பழக்கமாகியிருந்தார். மூப்பு இறப்பின் பயத்தைக் கொடுத்திருக்கும் என்று அவரவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டோம். பயந்த பூனையின் பார்வையைச் சந்திக்கும் நேரம் குற்ற உணர்ச்சி மண்டியது. மனம் குமைந்தது. ஏன் இப்படி?

பதினான்கு வருடங்களுக்கு முன்பு பதின்ம வயது தொடங்கிய மூன்று வருடத்தில் அப்போதுதான் பிள்ளைப் பருவ முகம் மாறத் தொடங்கியிருந்த தங்கை‌, உலகம் அறியாச் சிறுபிள்ளை, வீட்டிலிருந்து கிளம்பிய இரண்டு மணி நேரத்தில் விபத்தில் இறந்ததாகச் செய்தி வந்தது. எதுவுமே மனதில் ஏற்றிக் கொள்ள முடியாமல், சிந்தனைகள் எல்லாம் அறுபடத் திக்கற்றுக் கதறியபடி ஓடினோம். மருத்துவமனையில் வைத்திருந்த தங்கையைப் பார்க்கையில் உடனடியாக எழுப்பி கையோடு கூட்டிக் கொண்டு போய் விடலாம் போலிருந்தாள். தீவிர அமைதித்தன்மையின் உச்சமாகயிருந்தது முகம். சத்தம் போட்டு பலமுறை அழைத்தேன். ஆனால் அவள் இருந்தது சவக்கிடங்கு. முன்னிரவு வேளையில் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் போது “அய்யோ இருட்டுனா பயப்படுவானே நாம யாரும் இல்லாம எப்படி இருப்பா” என்று அம்மா கேட்டாள். அழுது தீர்க்க முடியாத வலி. வாய் ஓயாமல் சொல்லி அழுது துடித்துக் கொண்டிருந்தோம். அப்பா வாய்விட்டுச் சொல்லி அழவில்லை. அழுதார். வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். நீண்ட நாட்கள் வேலை வீடு என்று இயந்திரமாயிருந்தார். அவள் குறித்த பேச்சு வரும் போதெல்லாம் தவிர்க்க முயற்சி செய்து தோற்றோம். யாரேனும் பல துளிகள் கண்ணீர் சிந்தி விடுவோம். அப்பாவின் முகம் இருண்டு கிடக்கும். எல்லோரும் பேசிக்கொண்டு இருந்த அதே இடத்தில் நீண்ட நேரம் இறுகிப் போய் அமர்ந்து இருப்பார்.

வெளியே சென்றிருந்த அப்பாவை ஒரு நாள் யாரோ முகமறியாதவர் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனார். கடைவீதியில் மயங்கி விழுந்து விட்டாராம். யாருமற்று தெருவில் மயங்கி விழுந்திருக்கும் அப்பாவை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. சிந்தனை முடங்கி ஸ்தம்பித்துப் போனது மனது. வியாதியென்று ஒருநாளும் படுத்தவர் இல்லை. பணி ஓய்விற்குப் பிறகும் சுறுசுறுப்பு குறையாமல் இருந்தவர்.

எப்படி விழுந்திருப்பார், எவ்வளவு நேரம் அப்படியே இருந்திருப்பார், சுற்றிலும் மனிதர்கள் இருந்தார்களா, பிறகு கவனித்து வந்தார்களா.. அம்மாதான் தேற்றினார். “இல்லடா தம்பி உடனே எழுப்பி சுத்தி இருந்தவங்க பாத்துக்கிட்டாங்களாம்”

அம்மாவிடம் பேசிப்பேசி ஆறி கடினப்பட்டு மனதை இயல்பு நிலைக்குத் திருப்ப வேண்டியிருந்தது. அதன் பிறகான நாட்களில் நாம் சொல்வதை ஏற்காமல் அல்லது புரியாமல் முரணானவற்றைச் செய்ய ஆரம்பித்திருந்த அப்பாவிடம் எல்லோருடைய கேள்விகளும் ஏன் என்னாச்சு என முன்நிற்கையில் மலங்க விழித்துக் கொண்டிருந்தார்.

மருத்துவர்கள் டிமென்ஷியா என்றார்கள். வயது முதிர்வினால் ஏற்படுவது. தலைமை மருத்துவர் வாயிலில் நின்றுகொண்டு “எனக்கென்ன? ஏன் டாக்டர்கிட்ட வந்தோம்?” என்றார். மருத்துவமனையில் ஒரு குழு பேச்சுக் கொடுத்து ஆலோசித்தது. சிறு குழந்தைகளிடம் கேட்பது போல் பெயர் ஊர் உறவு என்று விசாரணை செய்தனர். சில நேரங்களில் பார்த்த வேலை, படிப்பு, பிறந்த ஊரும் மறந்தது. ஆனால் எல்லா நேரங்களிலும் அவரால் எப்பொழுதும் அம்மாவையும் எங்களையும் தெளிவாகக் கூற முடிந்தது. உலகம் அவ்வளவுதான். உடனடியாகக் குணப்படுத்தவியலாது. பசி தூக்கம் வரவில்லையென்றால் மாத்திரை கொடுக்கிறோம் என்றார்கள். இருக்கிறது என்று வெளியே வந்தோம். குணப்படுத்தவே இயலாதென்பதைத் தலைமை மருத்துவர் அழைத்து சுற்றிச்சுற்றிக் கூறினார். இணையத்தில் தேடித்தேடி வாசித்திருந்த தகவல்கள் அவர் கூறுவதைப் புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. இன்னும் தீவிரமாகாமல் பார்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம் என்றார்.

ஒரு நாள் சித்தப்பா வீடு தேடிவந்து “வயசான காலத்துல ஒரு இடத்துல உட்கார்ந்துருக்காம. எதுக்கு அங்கயும் இங்கயும் நடக்கணும்?. திரும்ப உழுந்து வாரி வைக்கணுமா?” சத்தமாக மிரட்டும் தொனியில் கத்தியபோது அப்பா ஷோஃபாவில் தலைகுனிந்து அமர்ந்து இருந்தார். பதிலெதுவும் பேசவில்லை. எதுவும் வேண்டுமா என்பதையும் அதிகாரமிக்க குரலில் உரத்துக் கேட்ட சித்தப்பா, தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்து நின்றபோது சுயமாகத் தொழில் அமைத்துக் கொள்ள அப்பா, கஞ்சன் என்ற பெயருடன் சிறுகச்சிறுகச் சேமித்து வைத்திருந்த பெரும் தொகையை எடுத்துக் கொடுத்தார். அதற்குப் பிறகும் சில முறைகள் பண உதவி செய்திருக்கிறார். எல்லாமும் பெரிய தொகை. பிரச்சினை வராமல் இருக்கும் பொருட்டு முன் யோசனையாகச் சொத்து சுக ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறார். அப்போதெல்லாம் சித்தப்பா குனிந்த தலை நிமிராமல், குரல் உயர்த்தாமல் மிக அமைதியாகப் பேசுவார். பணம் பெற்றுக் கொள்கையில் கூடுதலாக அலங்காரம் பண்ணிய வார்த்தைகளையும் உதிர்க்கத் தவறியதில்லை. அப்பா அப்போதும் தலைகுனிந்து மௌனமாகத்தான் இருந்தார் அவருக்குப் புரிந்திருக்கலாம்.

அண்ணன் பிறந்த போது அப்பா அவரது குறைந்த வருவாயிலும் விலை மதிப்பு மிக்க பட்டுச்சட்டை வாங்கிக் கொண்டு வந்தார் என்று அம்மா அடிக்கடிச் சொல்வார். வருடம் கடந்தும் நடக்க ஆரம்பிக்கவில்லையென மருத்துவம் பார்த்துக் கொண்டே குலதெய்வம் கோவிலுக்கு நேர்த்திக்கடன் வேண்டிக் கொண்டு வெள்ளியில் பாதச்சுவடு காணிக்கைச் செய்தாராம். சிறு பிராயத்தில் வேலைகள் எதுவும் கொடுத்தால், கூப்பிட்டால் உடனடியாகக் கேட்கும் பழக்கம் அண்ணனிடத்தில் இல்லை. சோம்பேறித்தனம் என்று அம்மா திட்டுவார். அப்பா எதுவும் சொல்ல மாட்டார் நீயே அந்த வேலையைச் செய் என்பதாகப் பதில் கூறிவிடுவார். இல்லையெனில் அவர் செய்வார். பண்டிகை நாட்களில் பிள்ளைகள் எல்லோருக்கும் பணம் கொடுப்பது அப்பாவின் வழக்கம். முதலில் அண்ணனுக்குத்தான் கொடுக்க வேண்டும் அதுதான் முறை என்று பிடிவாதமாகப் பின்பற்றிக் கொண்டிருந்தார். சொத்து பத்துகளிலும் அப்படித்தான் முதல் பங்கு அண்ணனுக்கு. பின்வந்த நாட்களில் அண்ணன், “இத்தனை வருஷத்துக்கு நானெல்லாம் உசுரோட இருந்து இம்சை தர மாட்டேன்” என்று கடைவாயில் முளைய விட்ட நஞ்சு பாய்ச்சிய கோரப்பற்களோடு கூறினான். அம்மாவின் முகம் மாறி சுருங்கிப் போனது. துளிர்த்த கண்ணீரை மறைத்துக் கொண்டாள். அப்பாவையும் அந்தப் பற்கள் கிழித்திருக்கும். அப்புறம் அண்ணன், அப்பாவிடம் உரத்துப் பேசத் தொடங்கியிருந்தான். வீட்டில் நடந்த விவாதமொன்றில் தனது கருத்து இதுவென அப்பா திரும்பத் திரும்பக் கூறுகையில். அண்ணன் முகத்தைச் சுளித்தவாறு கத்திப்‌பேசினான். மறுத்துப் பேசினான், அப்பாவைப் பேசவிடவில்லை. குரலின் முரட்டு உயரம் அப்பாவை என்ன செய்ததோ. அவன் அந்த இடத்தை விட்டுச் செல்லும்வரை காத்திருந்து, சென்ற பிறகு “சொல்றத புரிஞ்சிக்கிறதில்ல தனக்குத்தான் எல்லாம் தெரியும்னு குதிக்கிறது” என்றார். அவ்வளவுதான் கோப வார்த்தைகள்.

எவருடைய கணிதச் சந்தேகத்தையும் சட்டெனத் தீர்த்த அப்பாவினால், இருபது ரூபாய்க்கு ஆறு முறைகள் எண்ணிக் கணக்குப் பார்க்கும் நிலையும் வருமென்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. என்னால் கணக்குப் போட முடியவில்லை என்று சிரித்துக் கொண்டே கூறினார். சிரிப்பில் குழந்தைமையின் பாலொளி தெறித்தது. உயிரிகளின் இயல்பான கழிவு நீக்குதலும் சுத்தம் செய்தலைக் கூட முறையாகச் செய்யச் சிலபோழ்து நினைவின் நரம்புகள் ஒத்துழைக்க மறுத்துக் கொண்டிருந்தன.

தனக்கென வசதிகள் எதையும் விரும்பியவரில்லை. குறைத்துக் கொள்ளத்தான் தெரியும். அவசியமானவற்றைக் கூட அனுபவிக்க யோசித்து யோசித்து ஒரு, ஒரு ரூபாயாகச் சேர்த்து வங்கியில் பல கணக்குகளில் போட்டு வைத்தவர். பலனாய் உயர்ந்திருந்த தொகைகளைச்‌ சமீபக்காலங்களில் குப்பை கூளங்கள் கையாள்வது போன்று அண்ணன் கைகளிலோ அம்மாவின் கைகளிலோ திணித்தார். எண்ணிப் பார்க்கவில்லை. அப்பா மனதில் என்ன நினைத்துக் கொண்டிருந்திருப்பார், நினைவின் அடுக்குகள் சரிந்து நேராக்க முயன்று முடியவில்லையா., பார்வையில் ஏன் அந்த நடுக்கம், இனம் புரியாத பயத்திலேயே இருந்தாரா..

நான் சிறுவனாக இருந்த போது அத்தை, வழிமாறி ஊர் சுற்றிய கதையைக் கூறிக் கொண்டிருந்தார்.‌ போகும் போது போய்விட்டேன் வருகையில் வழி மறந்து போனது என்றதைக் கேட்டு அப்பா விழுந்து விழுந்து சிரித்தார். போகும் போதே வழியை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அத்தைக்கு அறிவுரை கூறினார். அப்பா ஒரு நாளும் ஒரு இடத்திற்கும் வழி தவறியதில்லை. புதிய இடமானாலும் சரி, சுற்றிக் கொண்டு போகும் வழியிலாவது‌ செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்று விடுவார். ஆனால் காலம் அவரை வீடு தவிரப் பக்கத்திலிருக்கும் கடை, அண்ணனின் வீட்டை மட்டுமே நினைவில் இருக்க வைத்தது. வேறு இடங்களுக்குச் சென்றால் வழி மறந்து போகும். தடுமாறுவார். எங்கும் போகாதீர்கள் என்று அனைவரும் அறிவுறுத்தினர். அப்படிச் சொல்கையில் எல்லாம் சொல்பவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு எங்கேயோ பார்த்தவாறு ஜீவனற்றக் குரலில் ‌’ம்ம்’ என்பார்.‌ இனி எந்தப் பாதையும் அவரிடம் கண்ணாமூச்சி விளையாடப் போவதில்லை இல்லையா….

காற்றின் வேகம் கொஞ்சம் மட்டுப் பட்டிருந்தது. இங்கிருந்து தெரு முழுவதும் தெரிகிறது. அப்பா அடிக்கடிப் போகும் கடை திருப்பம் கூடத் தெரிகிறது. இந்த வீதி முழுவதும் அப்பாவின் காலடித் தடங்கள் இலட்சோப இலட்ச முறைகளுக்கு மேல் பதிந்திருக்கிறது. அப்பாவிற்கு அகண்டு நீண்ட பாதங்கள் செருப்பு அளவு பத்து. சமீபத்தில் எடுத்த செருப்பு அநாதையாக ஸ்டாண்டில் இருந்தது. பழசை யாரோ எடுத்து இறுதி வண்டியில் வைத்து விட்டிருந்தனர். எங்கும் அவரது காலடிச் சுவடுகளே தெரிகின்றன. தரையை விட்டுத் தனியாகக் காலடிச் சுவடுகள் எழுந்து, எழுந்து பசுமையாக நிற்கின்றன. அசைகின்றன. தளர்கின்றன. உழைத்துத் தேய்ந்த பாதச் செடிகள். கண்களை மூடினேன். கசிந்த நீர் சுடுகின்றது.

ஃபோட்டோவிற்கு எழுதித் தர வேண்டும். பெயர் எழுதினேன். தோற்றம் சான்றிதழ்களில் இருக்கிறது. எங்கள் அனைவருக்கும் கூடத் தெரியும். மறைவு …?

மறதிகளுடன் போராடி காரணமின்றியோ காரணத்தினாலோ பயந்த பூனையின் பார்வையைக் கொண்டிருந்தாரே அப்போதா?

எவரிடமும் அழாத கண்ணீர் கெட்டித்துப் போய் இறுகிக் கொண்டு இருண்டு போக வைத்ததே தங்கையின் இறப்பு. அப்போதா? அதிகாரமாக உயர்ந்த சித்தப்பாவின் குரலில் ஒடுங்கிப் போய் தலை குனிந்திருந்தாரே அப்போதா? கழிந்த மலத்தை அம்மா சலிக்காது சுத்தம் செய்தபிறகு குற்ற உணர்வு மேவ முகம் மறைத்துக் கொள்ளத் தொடங்கினாரே அப்போதா?

கத்திப் பேசிய அண்ணனின் முன், பேச நினைத்ததைப் பேசாமல் மௌனித்து இருந்தாரே அப்போதா?

தன்னால் சிறு கணக்கும் தீர்க்கப் பட முடியவில்லை என்று வலியக் கொண்டு வந்த சிரிப்புடன் கூறினாரே அப்போதா?

பராமரிக்க வந்த செவிலியர்களிடம் விசாரணை செய்யவியலாமல் கடவுளின் பெயர்களைச் சத்தமிட்டு அழைத்தாரே அப்போதா? எங்கும் போகாதீர்கள் என்று எல்லோராலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதே அப்போதா? சுற்றியிருந்த பெரும்பாலான குரல்கள் அதிகாரம் அணிந்து உயர்ந்த பொழுதுகளிலா ?

மிதப்பட்டக் காற்றிலும் திடுதிடுவெனப் பற்றி எரிகிறது தீ. கடும் அனல் அடிக்கிறது.

அப்பா என்று செத்திருப்பார்? கையில் படபடத்துக் கொண்டிருந்த தாளில் தோற்றம் எழுதினேன். மறைவு எழுத வேண்டிய இடத்தில் கை தானாகக் கேள்விக் குறியை இட்டது. விழிகள் வெறிச்சிட்டன. திடுமென கேள்விக் குறி‌ அதன் இடத்திலிருந்து பெரிதாக எழுகிறது. திக்கென்றது. அனிச்சையாகத் தலையை பின்னுக்கிழுத்து கைகளை முன்னால் நீட்டி அமுக்கினேன். இது என்ன அழுந்தாமல் திமிறி எழுகிறது!? கண்கள் இருட்டிக் கொண்டு வருகிறது. அதன் கருஞ்சுழி வளைவினால் கழுத்தில் மாலை போன்று ஏறி வளைத்துக் கொண்டு மெது மெதுவாகக் கழுத்தை இறுக நெருக்கத் தொடங்குகிறது…


 

எழுதியவர்

அகராதி
அகராதி
இயற்பெயர்- கவிதா, தமிழ் இலக்கியம் படித்த இவரின் ஊர் திருச்சிராப்பள்ளி. எழுதவும் வாசிக்கவும் விரும்பும் இவரின் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்இணைய, அச்சிதழ்களில் வெளிவந்துள்ளன. வெட்கச்சலனம் எனும் கவிதை நூலும் வெளியாகி உள்ளது.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x