8 December 2024
Aharathi11

“சரியாகப் பிடிக்குமாறு அவள் கைகளை எடுத்து  ஸ்டியரிங்கின் இடவலம் நேராக வைத்து இது இடம் மாறக் கூடாதென்றான். வேண்டுமென்றே நெருக்கமானத் திருப்பத்திற்கு அதே நிலையில் கைகளை எடுக்காமல் ஸ்டியரிஙை வளைத்தாள். இப்படிக் கைகளைப் பின்னிக் கொள்ளக் கூடாதென முறைத்தான். அடர்ந்து வளராத தாடை மயிர். உதட்டுக்கு ஒரு விரல் கீழே ஒழுங்குப் படுத்தப்படாத சிறிதளவு முடிகள் பட்டுக் குஞ்சம் பிசிரியது போல.. உதட்டுக்கு மேலே மெலிதான மீசை சிறிய சிரிப்பிற்கென்று படைக்கப் பட்டிருந்தது. தூய்மையான கொஞ்சம் வரிசை மாறிய கீழ்வரிசைப் பற்கள், மாறாத மேல்வரிசையின் நட்ட நடுவில் சிறிய இடைவெளி சிரிக்கையில் தெரிகிறது.

லலிதம்!

ஓட்டுநர் இருக்கையில் இருந்த வேறொருவருக்கு வழிநடத்திக் கொண்டிருக்கிறான். அவள் முறை முடிந்திருந்தது. பின் சீட்டிலிருந்து முன் நகர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சென்னையின் பரபரப்பான சாலை மீதிருந்தக் கவனத்திலிருந்து சிறிது விலகித் திரும்பிப்பார்த்தான். அனுமதியின்றி ஊடுருவிய விழிகள் சிரித்தன.

குரல் ஏறவும் இல்லை இறங்கவும் இல்லை. சீராக இருந்தது. பெரும்பாலான ஒல்லியான தேகம் கொண்டவர்கள் உறுதியான குரலைக் கொண்டிருப்பதைப் போலவே உறுதி. சிதறும் கரகரப்பில்லை. மேலோங்கவும் இல்லை கீழிறங்கவும் இல்லை. இவையினூடாகக் கம்பீரம் ராஜியம் கொண்டிருந்தது.  நீண்ட வாக்கியங்களைப் பேசுபவனாக இருந்தான். அல்லது சிறிய வாக்கியங்களும் அவன் பேசுகையில் நீள் வாக்கியங்களாகவே தோற்றம் கொண்டன. அவள் முறை வருகையில் தயக்கமேயின்றி தான் சொன்ன நீள் வாக்கியங்களைத் திரும்பச் சொல்லுமாறு பணித்தான். அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. தன்னைத் தானே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அவனையும் பார்த்துக் கொண்டிருக்க ஆவல் தோன்றியது. அப்படியே ஒப்புவிக்காமல் எது தேவையோ அதன் முக்கியப் புள்ளியை மட்டும் தொட்டுத் தெளிவாகக் கூறினாள். அவள் படித்து வாங்கியப் பட்டங்களின் வரிசை அவளது பெயரைவிட நான்கு மடங்கு நீளமானது என பெருமிதமாகச் சொல்வாள் அம்மா. அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. தான் சொன்னது போல் அப்படியே திரும்பச் சொல்லுமாறு கூறினான். கூறினாள்.

விரல்களில் ஒரு நூலளவு நகம் ஒட்டக் கத்தரிக்கப்படாமல் வெள்ளை நூலாகக் காட்சியளித்தது. அழுக்கில்லை. கொஞ்சம் மெலிந்தத் தோற்றம். உடைகளில் சில பொழுதுகளில் அக்கறையும் சில நாட்களில் அக்கறையின்மையும் தெரிந்தது. மூன்றாம் நாளில் அவளுக்குப் புரிந்து போனது. காரை ஓட்டிவிடலாம். இன்னும் பழகினால் துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். பழகப் பழக எளிமையாகும். அவன் கண்டு கொண்டான் கையாளும் கட்டுப்பாடும் கவனமும் கொண்டவள் ஓட்டி விடுவாளென. ஆனாலும் கண்டிக்கப்பட்டாள். தெரிந்ததைத் தெரியாமல் தவறவிட்டாள். வினாக்களுடன் முகம் பார்த்தான். தவிர்த்தாள். கிடார் கம்பியைச் சீண்டினாற்போல் ஸ்வரமின்றி ஸ்வரமாக உள்ளே ஒரு அதிர்வு.

தொடர்ந்து பேசுகையில் ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் நாலு சிட்டிகை மூச்சுக்காற்றை முற்றுப் புள்ளியாக இறைத்தான்.‌ மிகமெல்லிய அது வருடத்திற்குட்பட்ட குழந்தையின் வேக சுவாசம் போன்றிருந்தது. முற்றுப் புள்ளி உதடுகளில் மென் சிரிப்பாகப் படர்ந்தது. சில நேரங்களில் கண்டிப்பதாக ஆரம்பிக்கும் வாக்கியம் புன்னகையால் தன்னை நிரப்பிக் கொண்டது. லலிதம்! தனியானக் கண்டிப்பும் தொடர்ந்தது. முதல் வார்த்தையை இழுத்தும் இறுதி வார்த்தையை கூடுதல் மூச்சு விட்டும் பேசினான். வித்தியாசமான மேனரிசம். ஆனால் தளர்வோ களைப்போ இல்லை.

அவள் தனது கலை வாழ்வில் முன்னேறிக் கொண்டிருப்பவள். பலரது பாராட்டுகளையும் கவனத்தையும் பெறுபவள்.

கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவளைப் பேயாய் ஆட்டுவித்துக் கொண்டிருக்கும். படித்து, பயிற்சி எடுத்து, பார்த்து என்று எவ்வகையிலேனும் எப்போதும் கற்க வேண்டும். மிக நீண்ட நாட்களாக அவள் கற்றுக் கொள்ள வேண்டும் பட்டியலில் இருந்த நான்கு சக்கர வாகனம் இயக்குதல்  இப்போது செயலில்.‌.

பெரும்பாலான நாட்கள் சரியான நேரத்திற்கு அந்தச் சிரிப்பு மாறாமல் அதே சமயம் கம்பீரமாகவும் இருசக்கர வாகனத்தில் அலுவலகம் வந்து இறங்கினான் செங்குதிரையில் வரும் மன்னனைப் போல., மற்றைய நாட்களில் கணினி முன் அமர்ந்திருப்பான். ஒரு நாள் கொஞ்சம் முன்னதாக வந்தாள். அவன் கணினி முன் அமர்ந்திருந்தான். உள்ளே நுழைந்தவுடன் நிமிர்ந்து பார்த்தான். அப்புறம் கண் கணினி திரையைப் பார்க்க ஆரம்பித்தது. பார்வையை விலக்காமல் இளம்புன்னகை. தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தப் புன்னகை. பார்ப்பதை ரசித்துச் சொற்கள் இல்லாமல் உறவாடும் புன்னகை. பேசுவதை விடவும் இப்படிப் பேசாமல் பேசுவது அடர்த்தி மிகுந்தது. மூன்றாம் நபர் வந்தவுடன் சகஜமாகப் பேசினான். பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு குனிந்து செல்ஃபோனில் வராத செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தாள். கண் பார்வை மட்டும் கீழே,  கவனப்பார்வை முழுவதும் அவனிடம் குத்தகைக்குச் சென்றிருந்தது. பெயரைச் சொல்லி அழைத்தான்.

“ம்ம்ம்?”

“போலாமா?”

திடுக்கிட்டாள். மனதைப் படித்தக் கேள்வியாக வந்து நின்றது. முகமாற்றத்தைக் கண்டு அர்த்தமுடன் சிரிப்பை அடக்கிக் கொண்டு சிரித்தான். பயிற்சிக்குதான் ஐயா அப்படி அழைக்கிறார்.

கியரைப் பிடிக்கும் முறை சரியில்லை என்று அவள் கைகளுக்கு மேல் தன் கையை வைத்து மாற்றிக் காண்பித்தான். அவளுக்கு பள்ளிக்கால அன்பை மையம் கொண்ட  பிரசித்திப் பெற்ற தமிழ்த்திரைப்படம் நினைவுக்கு வந்து தொலைத்தது. அதில் நாயகி அப்படிச் செய்வாள்.

சாலையில் இடது புறத்திலிருந்து கொஞ்சமும் விலகாமல் பார்த்துக் கொண்டான். எதிரே லாரி வருகையில் பயந்து தடுமாறினாள். தொடர்ந்து ஸ்டியரிங்கை சரி செய்தான். அவனுடைய மணிக்கட்டைச் சுற்றிக் கொண்டிருந்த வெள்ளிச் சங்கிலியின் மிச்ச பாகம் அவளது இடது கையில் உரசி உரசிச் சென்றது. முத்தம் கொடுக்கத் தயாராகும்முன் கூந்தல் ஒதுக்கும் விரல்களின் முனைப்பு போலிருந்தது அதன் உரசல்.

“கோட்டுக்கு அந்த பக்கம் ஏன் போறிங்க இடது பக்கம் இழுத்துட்டு போறது ஃபீலாகுதா இல்லையாஹ்”

மாடோ மனிதரோ வாகனமோ இருபதடித் தொலைவில் இருக்கையிலேயே நாம் அதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்றான். வலது புறம் ஸ்டியரிஙை வளைக்கச் சொல்லி, ஒலி எழுப்பி, வேகத்தைக் குறைத்து என எதிர், பின், இட, வலம் பார்த்துச் செல்ல அறிவுறுத்தி அது தவறுகையில் திரும்பவும் செய்யக் கூடாதென்றான். குறுகிய வளைவில் விரைவாகத் திருப்பி கியர் மாற்றுகையில் தடுமாறி க்ளட்சை விட்டாள்.

“ஒரு வே..லையை செய்யும் போது எதுக்காக செய்யறோம்னு புரிஞ்சிக்கிங்கஹ்”

“ம்ம்”

“ஒரு செயல ஆரம்பிச்சோம்னா அது நடக்கறதுக்கான டைம் கொடுக்கணும், கொடுத்துட்டு அடுத்தத ஆரம்பிக்கணும்ஹ்”

“ம்ம்”

“ம்ம் ம்ம்னா புரிஞ்சதா புரியலியானு எனக்குத் தெரியாது வாய் திறந்து பதில் சொல்லணும்ஹ்”

“ம்ம். ஸ்ஸ்..” நாக்கைக் கடித்து “ஸாரி.. ஓகே”  என்றாள். மெலிதாகச் சிரித்தான்.

அவன் பேச்சும் சுவாசமும். விருட்ச நிழல் போல் மேலே விழுந்தது. நிழல் விரிந்தது. நிஜத்தைவிட நிழலின் வலிமை கூடுதல். தலையை இடவலம் அசைத்து சிந்தனையைத் தவிர்க்க நினைத்தாள். ஆனால் விரிந்த நிழலில் அடங்கி அணைந்து கொள்ளத்தான் முடிந்தது. விருட்சம் அசைந்து பூக்களை உதிர்த்தது.

குளிர் பார்வை அலங்கரிக்கப்பட்ட ஜமுக்காளம் போல் போர்த்தியது! அரைமணி நேர மதிய வகுப்புக்கு முதல் நாள் மாலையிலிருந்து தயாரானாள். நல் ஆசிரிய குணமாகச் சரியாகச் செய்ததை இன்னும் துல்லியமாக்கக் கண்டித்தான். ஒன்பதாம் வகுப்பு மாணவியின் உள் தன்மைக்கு மாறிப்போனாள். யுவர்ஸ் ஒபிடியன்ட்லி என்பதை எட்டாம் வகுப்பிவேயே ட்ரூலி, ஃபெய்த்ஃபுல்லி என்று மாற்றியவள் மாறினாள்..

“மனசுக்குள்ளேயே நிறைய பேசிக்குவிங்களா என்ன”

சாலையையோ அவனையோ கவனிக்காமல் யோசித்துக் கொண்டிருக்கும்போது  கேட்டான்.

“கவனிக்கலனு கேட்கறிங்களா”

“கவனிச்சதால கேட்கறேன்”

தலைக்கு மேல் இருக்கும் முன்பக்கக் கண்ணாடியில் அவளைப் பார்த்தான். பின் பக்கப் பாதி இருக்கையில் முன்பக்கம் நகர்ந்து அமர்ந்திருந்தாள். அவன் பதிலைக் கேட்டுப் புன்னகைத்தாள்.

“சரி சரி கவனிக்கிறேன்”

அவனும் நிழலுக்குள்ளே இருந்தான். நிழல் கனலாகும் போது தவித்தான். கிடார் கம்பி அவனுக்குப் பல புதிய ஸ்வரங்களைக் கூறியிருக்கும் போலிருக்கிறது. மனதைக் கட்டுப்படுத்த இயலாத நேரத்தில் மெலிதாகக் கோபப்பட்டான். இரண்டு முறை கொஞ்சம் அதிகமான கோபம் வெளிப்பட்டது. இனிப்புக் கரை மாதிரி சங்கடமாகத்தான் இருந்தது. அதற்காக இனிப்பை விட முடியுமா‌ கழுவினால் உடனே  போய்விடுவது போல சங்கடம் அந்தந்த நிமிடத்தில் மறைந்து இனிக்கத்தான் செய்கின்றது.

“அந்த சைக்கிளுக்கு இடம் கொடுக்கலனா எப்படிப் போகும்”

எப்பொழுதும் தோள் தொற்றிக் கொண்டிருக்கும் பிள்ளைப் போல உதட்டில் ஒட்டிக் கொண்டிருக்கும் மெல்லியச் சிரிப்பை மறையச் செய்து மீட்டெடுத்தான். பல நேரங்களில் வசவா கண்டிப்பா கடமையா என்று உறுதியாகக் கூற முடியாத வகையில் இருந்தது பேச்சு.

“இப்ப அந்த பஸ்ஸ போய் இடிக்கப் போறமா கிளட்ச் பிடிங்க லெஃப்ட் வாங்க”

குறுகிய சாலையில் எதிர் வந்து கொண்டிருக்கும் பேருந்தைக் கண்டு பயந்து கொண்டிருந்தவள் வேக வேகமாக இல்லையென்று மறுத்தாள். சிரித்தான். அவளுக்குச் சிரிப்பு வர நேரமாயிற்று.

“லெஃப்ட்ல சைக்கிள் வருது ஓரமா போலாம்”

“ரைட்டா?”

“ம்ம்ம்”

“ரைட், ரைட் இல்லியே”

“இப்ப ரைட்” முறைத்தான்.

தனிப்பார்வையை மிக நுட்பமாக அளித்தான்.  பேசாமல் பேசிக்கொள்பவை நாளுக்கு நாள் அதிகமானது.‌ பேசவில்லையென்றாலும்

கண்களின் பளிச்சிடல் சுற்றியுள்ளவர்களைச் சேர்ந்து விட்டது. இருவரையும் தனியாகக் கவனிக்க வைத்தது. ஆஃபிஸ் பெண் இருவரையும் சேர்த்துப் பார்த்துச் சிரித்தாள். நெருங்கிப் பேசாமலேயே பேசிக் கொண்டனர்.

வேகமாகச் செல்லும்போது ஸ்பீட் பிரேக்கரோ வழியில் தடங்கலோ யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றான்.

“கார் தெரியுதா”

“ம்ம்ம்”

“அத நோக்கி இவ்வளவு வேகமா போறிங்க இடிக்கணுமா, பத்து மீட்டர் தூரத்திலேயே முடிவு எடுத்துரணும் வேகத்தைக் குறைக்கஹ்ஹ்” பிறகும் மிக நீண்ட வாக்கியங்கள் இரண்டைக் கூறியே நாலு சிட்டிகை மூச்சுக் காற்றையளித்து அந்த அறிவுறுத்தலை முடித்தான். காரின் அமைப்பு முறையை விளக்குகையில் ஸ்விட்ச் போட்டால் மின்விசிறி சுழல்வது போல சாவியிட்டு பிரேக்கை விடுவித்தால்  வாகனம் ஓடும் என்று கூறி, ல்ஸ்விட்ச் போர்டின் உள்ளே என்ன இருக்கிறது என்றான்.

“கழட்டிப் பார்த்ததில்ல” என்றாள். பழைய்ய நகைச்சுவை என்று அழுத்திச் சொல்லி முறைத்துவிட்டு கார் இன்ஜினிலிருந்து சக்கரங்களுக்கு வரும் சக்தி குறித்த விளக்கத்தைத் தொடர்ந்தான்.

இடப்பக்க இருக்கையைப் பார்த்தாள். பற்களின் மைய இடைவெளித் தெரிய சிரித்துக் கொண்டிருந்தான். லலிதம்! பாட்டி அவளுக்குப் பிடித்த அழகான எதையும் ஒரு விநாடி கண்மூடி கனிந்து ‘லலிதம்’ என்று சிலாகிப்பாள். நான் பிறந்தப் போது அப்பாவிடம் “என்ன தீட்சண்யம், கலை பாத்தியாடா லலிதம்! லலிதம்!” என்று உச்சி முகர்ந்தாளாம், அப்பா சொல்லிக் கொண்டேயிருப்பார். வளர்ந்தப் பிறகும் பாட்டி சொல்லி பலமுறை கேட்டதுண்டு. எனக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது இப்போதுதான்..

“யோசிக்கவே மாட்டேங்கிறிங்கஹ்”

…..

“ம்ம்ம்? என்ன புரியுதா யோசிங்கஹ், ம்ம்ம் ஃபீல் பண்ணி சரியான இடத்துக்கு வண்டிய கொண்டு வாங்க”

கல்லூரியில் நெருங்கியத் தோழி அடிக்கடிக் கூறுவாள், “நீ ஒவ்வொன்னையும் மைனூட்டா யோசிக்கிற, நிறைய யோசிக்கற இப்படியே பண்ணாத” இதையே பேசும் பெரும்பாலானோரும்  கூறியிருக்கிறார்கள். அவை நினைவுக்கு வரவும்

எவ்வளவு கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் சிரித்து விட்டாள். அவனும் ஓரளவு உத்தேசித்துச் சிரித்தான்.

*

இத்தாலியின் கணினித் துறையில் உயர் பொறுப்பு வகிக்கும் நண்பன் ஊரிலிருந்து வந்து தனியே வண்ணக் காகிதத்தில் சுற்றியிருந்த வொயின் பாட்டிலை வெளியே எடுக்கையில் சொக்கிப் போனான். அந்தப் போத்தல் அவ்வளவு அழகாய் இருந்தது. அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. வொயின் பாட்டிலை பெண்களின் மார்பகங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கியதாகச் சொல்வார்கள். ஆனால் அவனுக்கோ வந்திருந்த பாட்டில், வாளிப்பாக நீண்டு வளர்ந்து மின்னும் பெண்ணின் கைகளைப் போன்று தெரிந்தது. மூடிக்கு அருகில் குறுகும் இடம் வளையல்கள் உரசும் குறுகிய மணிக்கட்டை நினைவுப் படுத்தியது. நண்பனிடம் கூறினான். நண்பன் சிரித்துக் கொண்டே கேட்டான்

“அப்ப அஞ்சஞ்சு விரல்களும் என்னடா!”

“போதை! பிரவாகமெடுக்க வைக்கும் போதை” கண்கள் மூடி மூச்சிழுத்து விட்டுக் கிறங்கி, தான் அன்று கூறியதை நினைத்தபடி  அவளுடையக் கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். கிளட்சையும் ஆக்ஸிலேட்டரையும் ஒரே நேரத்தில் இயக்கியதால் நின்று போன வாகனத்தை இயக்குகையில், அறிவுறுத்திவிட்டு வழக்கம் போல நீண்ட வாக்கியங்களில் விளக்கம் கூறினான். விளக்கங்களுக்கு ம்ம் என்றபடியே ஓட்டினாள். கவனித்துப் பார்த்தால் பச்சை நரம்புகள் தெரியும் மென்மையான கை கியர் மாற்றியதைப் பார்த்தான். சமீபத்தில் பெண்களின் கால்களையும் கைகளையும் வர்ணித்த  நண்பன்

“கை வளைச்சி நெளிச்சி கூப்பிட வேணாம் மச்சான். பாத்தோனயே பாத்தியானு அழகு காட்டணும்! ஒரு தடவையாவது பிடிச்சிரணும்னு தோன வைக்கணும்”  என்று கூறியிருந்தது வேறு நினைவிலாடியது.

கியருக்கும் ஸ்டியரிங்கிற்குமாய்  நகர்ந்து கொண்டிருக்கும் அவளின் கை கிளர்ச்சியூட்டியது. அசுரத் தவிப்பு! இரண்டு மூன்று முறை கவனத்தைத் திருப்பினான். தணியவில்லை. வியர்வை பொட்டுக்கள் கழுத்து, மேலுதட்டில் தோன்றத் தொடங்கின. ஏசி அளவைக் கூட்டினான். அவளின் கவனம் சாலையில் இருந்தது. இப்படி இரண்டு விசைகளையும் ஒரு சேர இயக்கினால் கார் நின்று போகும் போலிருக்கிறது என்று சொல்லியவாறு காரை நிறுத்தினாள். கனன்றதை எரிய விடாமல் தடுக்கும் பொருட்டோ என்னவோ கண்களில் சிக்கிக் கொண்டிருந்தக் கையைச் சட்டென லேசாகப் பிடித்து பிரேக்கின் கிளட்ச்சின் செயல்முறையைப் பேசினான். திடுக்கிட்டாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதி காத்தாள். இப்பெழுது விடுவியுங்கள் என்றான்.  விடுவித்தாள். அடுத்து மிக மிக இறுக்கமாகப் பிடித்து விடுவிக்கக் கூறினான். எல்கேஜி குழந்தைகளுக்கானப் பாடம்! சிரித்துவிட்டு முடியாதென்றாள்.  இப்படித்தான் காரின் செயல்பாடும் என விவரித்தான். பிடித்த இடத்தில் கை சிவந்திருந்தது.

*

அலைபேசி எண் வேண்டும் யார் முதலில் கேட்பது. அவனாகத் தருகிறானா என்று காத்திருந்தாள். அவனும் அப்படியே காத்திருந்தான். ஆனால் நடுவில் ஒருவர் மூலமாக எண் இருவரையும் சென்றடைந்திருந்தது. பேசினார்கள் இப்போது யார் உரையாடலை நிறுத்தி அழைப்பைத் துண்டிப்பது.. மனம் வரவில்லை. இருவரையும் சம்மந்தப்படுத்திக் கொள்ளாமலே இருவரும் பேசினார்கள். பொதுவானப் பேச்சு போதுமானதாக இல்லை. இருந்தும் தனித்த எதுவும் பேசிக் கொள்ளாமல் கவனமாக நிறுத்திக் கொண்டனர். அவனது பார்வை அவளுக்குள்ளே அலையலையாய் ஆசையையும் அன்பையும் பொங்க வைத்தது.

*

அன்று கொஞ்சம் முன்னதாகச் சென்றாள். ஆகாய நீலத்தில் புதிய ஆடை அவன் பார்க்கப் போகிறான் என்பது புதியதின் மகிழ்ச்சியை மும்மடங்காக்கியது. அவளை ஏற்றி வந்த வாகனம் அவளை விட்டுவிட்டுச் சென்றப் பிறகும் உள்ளே நுழையாமல் நின்றாள். நாணத்தில் சிறிது தயக்கமும் சேர்ந்து கொண்டது. அவனுடைய இரு சக்கர வாகனம் வலதுபுறம் நின்றிருந்தது. இன்றும் முன்னதாக வந்து விட்டான். கணினி முன் அமர்ந்து இருந்தான். அவன் எதிரே அவளுக்குப் பின்னர் அடுத்தப பகுதிவகுப்பில் கலந்து கொள்ளும் செம்பட்டை  முடிப்பெண் அமர்ந்திருந்தாள். அவள் வந்ததை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. செம்பட்டை முடிப்பெண்ணின் கவனப்பார்வை முழுவதும் அவனிடம் குத்தகைக்குச் சென்றிருந்தது.  பேசாமல் பேசும் சொற்களுக்கு அடர்த்தி அதிகமில்லையா! கணினியைப் பார்த்தவாறு அமர்ந்து இருக்கிறான். அவன் உதடுகளில் நிறைத்துக்கொண்டு பரவும் அதே இளம் புன்னகை..   லலிதம்?


 

எழுதியவர்

அகராதி
அகராதி
இயற்பெயர்- கவிதா, தமிழ் இலக்கியம் படித்த இவரின் ஊர் திருச்சிராப்பள்ளி. எழுதவும் வாசிக்கவும் விரும்பும் இவரின் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் இணைய, அச்சிதழ்களில் வெளிவந்துள்ளன.

’வெட்கச்சலனம்’ எனும் கவிதைத் தொகுப்பு நூல் மற்றும்
‘வசுந்தரா தாஸ் குரல்’ எனும் சிறுகதைத் தொகுப்பு, ’மரக்குரல்’ குறுநாவல் தொகுப்பு நூல்களும் வெளியாகி உள்ளன.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x