அவர்கள் இருவரையும் நான் பார்த்த இடம் தான் சுவாரசியமான ஒன்று. நான் அவர்களைப் பார்த்த அதே பொழுதில் தாங்களும் அவர்களை ஒன்றாக. ஒரே நேரத்தில் மேலும் கீழுமாக உற்றுப் பார்த்த வயதான பிராமணக் கிழடுகள் இருவர் தங்களுக்குள் ,’ ஆமாண்டியம்மா, கலி முத்திடுத்து , யாரைன்னு நாம குறை சொல்றது, கொஞ்சங் கூட கூச்ச நாச்சம் இல்லாம எப்படி எல்லாம் பண்றதுகள் பாரு, சுத்தி இவ்வளவு பேர் இருக்கமேன்னு நினைச்சாவது பார்க்கலாமோல்லியோ, யாரும் மனுஷாளாவே அவா கண்ணுக்கு தெரியலை பாருடி, இவா அக்கிரமத்த மனுஷாளா கேக்க முடியும், அந்த பகவான் தான் கேக்கணும். பகவான் கல்கி அவதாரமெடுத்து வருவார்டியம்மா வருவார் வெள்ளைக் குதிரையிலே இவாளயெல்லாம் வண்ணமா கேள்வி கேட்க, தண்டிக்க, வாளெடுத்து வதம் பண்ண’, பக்கத்தில் அமர்ந்திருந்த நடுத்தர வயதுப் பெண்மணி இந்தப் புலம்பலைக் கேட்டு அலட்சியமாக உச்சுக் கொட்டினார்.
வதம் பண்ணறதுக்காக புதுசா ஒருத்தன் அவதாரமெடுத்து வரனுமா என்ன, இருவது வருஷமா தெனந்தெனம் தான் கொஞ்சம் கொஞ்சமா வதம் பண்ணிட்டே இருக்கானே, வீட்டிலே ஒருத்தன் புருஷன்ற பேர்ல என்பதாய் இருந்தது அவர் உச்சுக் கொட்டிய த்வனி. சரியாக வாராத தலைமயிரும், வெளிர் ஊதா நிற ஜாக்கெட்டில் தையல் பிரிந்த இடத்தில் கருப்பு நிற நூலில் போடப்பட்ட தையல் அலட்சியமாக வெளித் தெரிந்த விதமும், நைந்து போன ஹவாய் செருப்பும் எவ்வளவோ பாத்தாச்சு இதென்ன புதுசு என்பதின் நியாயத்தினை பறை சாற்றிக் கொண்டு இருந்தது.
அதனைக் கேட்ட இன்னொரு கிழடு செத்த நாழி சும்மா வர்றயா வாய வச்சுண்டு, அடுத்தவா விஷயத்துல நோக்கென்ன அவசியமா இப்ப மூக்க நொழைக்க வேண்டிருக்கு , செத்த அமைதியா இருடீம்மா, என்று மற்றவளை தன்னால் முடிந்த வரை சமாதானம் செய்து அடக்கினாள். அப்படியும் முதல் கிழடு விடாமல் வாய்க்குள்ளேயே சத்தம் வராமல் முணுமுணுத்தவாறு இருந்தது. இரண்டாம் கிழடும் கிட்டத்தட்ட அருவருப்பான பார்வையினை அவர்கள் இருவரின் மீது வீசிக் கொண்டு தான் அமைதி காத்தது.
ஆமாம் தானே, பின் காலம் காலமாகத் தன்னுடைய சொந்த விருப்பங்களையும், வேட்கைகளையும், சின்னச் சின்ன ஆசைகளையும் கூட அடக்கிக் கொண்டு அமைதியாய் வாழ்ந்து மடிந்து வரும் இனமல்லவா பெண் இனம்.
அப்பேர்ப்பட்ட எல்லைகள் கொண்ட இடத்தினைச் சேர்ந்த ஒருத்தி தன் சுயவிருப்பத்தைத் தேடிக் கண்டறிந்து, தானும் அந்தத் துணை மீது அதே ஆசையைச் செலுத்தும் துணிவினைக் கொண்டால், தன் மீது ஈர்ப்பு கொண்டு தன்னை நாடும் ஒருவரை அங்கீகரிக்க, அன்பு செலுத்தத் தைரியம் கொள்ளும் ஒருத்தியைத் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விமர்சனம் செய்து, அலர் தூற்றி, பேச்சால் குத்திக் கிழித்து, காயப்படுத்திக் கேவலப்படுத்தும் போக்கு தானே காலங்காலமாகச் சமூகத்தின் முடை நாற்றமடிக்கும் வழக்கமாக இருந்து வருகிறது. இதனைப் பெரும்பாலும் இரக்கமற்ற செய்பவர்களும் பெண்கள் தானே.
அவர்கள் இருவர், அவள் ஐந்தடி ஓர் அங்குல உயரத்தில் சிக்கென்று கச்சிதமாக இருந்தாள். சிட்டாட்டம் பொண்ணு என்று பொருத்தமாக அவளைச் சொல்லி விடலாம். கைக்கு அடக்கமான பொம்மை போல, கருகருவென்று நெளி நெளியான கூந்தல். இந்தக் காலத்திலும் நீளத்தைக் குறைக்காமல் இடுப்பு வரையில் நீண்டு இருந்தது. அக்கூந்தலும் எண்ணை வைக்காமல் பரபரவென காற்றில் பறந்து கொண்டு இல்லை.
மலையாளிகள் எண்ணை வைத்துப் பின் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் கொள்வதைப் போல் இந்தப் பெண்ணும் ஊற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஏன் இவளே கூட மலையாளியாக இருக்கலாம். அவளுக்கு வெண்பட்டு போன்ற மென்மையான சருமம். அச்சருமத்தைப் பார்த்தாலும் அவள் கேரளத்தைச் சேர்ந்தவள் என்றே தோன்றுகிறது.
கேரளத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். அவள் கண்கள் மிக அழகானவை. அவற்றைப் பற்றி இப்போது வர்ணிக்காமல் இருப்பதற்கான காரணத்தினைப் பின்னர் பார்க்கலாம். ராணி பிங்க்கில் குறைவான வெள்ளை நிற நூல் கொண்டு எம்பிராய்டரி செய்யப்பட்ட குர்த்தி அணிந்திருந்தாள். மார்புப்பகுதியில் செய்யப்பட்டிருந்த வேலைப்பாட்டில் வெள்ளை நிற முத்துகளும் கோர்க்கப்பட்டிருந்தன. கீழே தூய வெள்ளை நிற லெக்கிங்ஸ் அணிந்திருந்தாள். மின்னல் அடிக்கும் சலவை சோப் அல்லது சலவை சோப் தூள் விளம்பரத்தில் தூய பளீரென்ற வெண்மையைக் காட்ட இந்த லெக்கிங்ஸைக் காட்டி விடலாம். கையில் இரு வெண்ணிற முத்துக்கள் ஒட்டப்பட்டிருந்த வளையல்களும், காதில் அழகாய், அம்சமாய் அசைந்தாடும் வெள்ளி ஜிமிக்கிகளும் போட்டிருந்தாள். அந்த வளையல்களின் தேர்வும், ஜிமிக்கியின் தேர்வும் அவளுடையது என்றால் அவளைச் சிறந்த இரசனைக்கு சொந்தக்காரி என்று நாம் மிகச் சுலபமாய்ச் சொல்லி விடலாம். அப்படி இன்றி அவள் துணையின் தேர்வாய் இருந்தால் அவளை இந்த உலகின் மிக மிகச் சில எண்ணிக்கையிலே வாழும் அரிய வகை உயிரியான அதிர்ஷ்டக்காரப் பெண்களில் ஒருத்தியாய் அறிவித்து விடலாம்.
மற்றொரு கையில் வெள்ளி நிற ஸ்டெயினலெஸ் ஸ்டீல் வாட்ச். அதன் டயல் முத்து வெண்மையில் இருந்தது. கணுக்காலில் தொற்றிக் கொண்டு இருந்த அதிகமாய் சலங்கை இல்லாத அவ்வளவாய் ஓசை எழுப்பாத கொலுசுகள் அவ்விடத்திற்குச் சிக்கென்று அழகாய்ப் பொருந்தின. காலில் வெள்ளி நிற வார் கொண்ட வெட்ஜஸ் அணிந்திருந்தாள். மொத்தத்தில் பெண்மையின் உச்சம் அவள் அழகு.
ஏன் அவளின் மிக அழகான கரிய கண்களைப் பற்றி முன்பே சொல்லவில்லை என்றால் அவ்விழிகள் ஒரு விநாடியாவது அவள் கூட துணையாய் இருந்த அந்தக் குரங்கை விட்டு விட்டு அடுத்தவரைப் பார்த்தால் தானே அதை யாராவது வர்ணிக்கலாம்.
பெண்மை மிளிர மிளிர அப்படி ஒரு அழகு. ம்ம் என்ன சொல்லிப் புரிய வைப்பது அந்த அழகினை. கூட யார் இருக்கிறார்கள், நம்மை அவ்விடத்தில் யார் கவனிக்கிறார்கள் என்பதை எல்லாம் சுற்றுப்புறச் சூழல் மறந்து தெரியாமல் கால் வைத்து விட்ட ஒரு நபரைத் தனக்குள் முழுமையாக உள்ளிழுத்துக் கொள்ளும் ஒரு புதைமணல் போல நம்மை மெல்ல மெல்ல உள்ளிழுத்துக் கொள்ளும்படியான அழகு அது. அழகி அவள்.
அவள் தன் துணையை ஏறிட்டுப் பார்ப்பதற்குள் மிக மிக அழகாக வெட்கப்படுகிறாள். துணை வேறெங்கோ பார்க்கையில் மலர மலர அதன் முகம் பார்க்கிறாள். ஒரு திருக்குறளை நினைவுபடுத்தியது அக்காட்சி.
வழக்கமாகக் காதலில் இருப்பவர்களைக் கூர்ந்து கவனித்தால் ஒன்று தெரியும். அவர்கள் எல்லை மீறக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அதனை மீற முயன்று கொண்டே இருப்பார்கள், மீறிக் கொண்டும் இருப்பார்கள். சுற்றி உள்ளவர்கள் குறித்த பிரக்ஞை அவர்களுக்குக் குறைவாகவே இருக்கும் அல்லது அறவே இராது. இவர்களும் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களுக்கான தனி அறையும், கூட்டம் அம்மும் இந்தப் பொது இடமும் இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதைப் போல் இருந்தது அவர்களின் உடல்மொழியும் நடவடிக்கைகளும். அவர்களின் அழகிய தனி உலகம் அது.
அந்தப் பிரக்ஞை தேவை இல்லாதது தான். குறுகிய காலமான இந்த வாழ்க்கையில், மிகக் குறுகிய காலமான, இன்னும் சொல்லப் போனால் ஒரு மின்னல் வெட்டுக்கு ஈடானது அவ்வழகிய காதல் காலம். இந்தக் காலத்தினைக் காதலுக்கு முழு மனதுடன் எழுதி வைத்து விட வேண்டும். அதனை விடுத்து அடுத்தவர் குறித்த பிரக்ஞையில் அவ்வழகிய காலத்தினை வீணாக்காதவர்களே புத்திசாலிகள்.
சரி இப்போதவள் துணையினைப் பார்ப்போம். கருப்பு ஷர்ட், கருப்பு ஜீன்ஸ், காதுகளுக்கு மேல் இருபுறமும் மண்டை தெரியுமளவு ஒட்ட வெட்டிய தலைமுடி. தலை அலங்கார நிபுணர் மிஷின் போட்டுத் தான் இவ்வளவு ஒட்ட வெட்டியிருக்க வேண்டும். ஒரு சிலுப்பலில் அது அழகாகத் துள்ளி விழும் அளவு மேலே இருந்த சிகை இருந்தது. காதில் இன்றைய நவீனக் கால நாகரீகத்திற்கு ஏற்றபடி குட்டி வெள்ளி வளையம். மணிக்கட்டிலிருந்து இரண்டு இஞ்ச் கீழே கொச கொசவென ஒரு டாட்டூ. பார்ப்பவர்களுக்கு என்னவென்று தெளிவாய்த் தெரியக் கூடாதெனப் புரியாத வகையில் இடப்பட்டிருந்தது. ஏதோ குறியீடு போல. வலது கையில் ஒரு வெள்ளிக் காப்பு, அல்லது வெள்ளி போன்ற ஒரு காப்பு. இடது கையில் கருப்பு நிறத்திலான ஒரு ஸ்மார்ட் வாட்ச். காலில் கருப்பு நிற ஃபார்மல் ஷூக்கள்.
யார் அருகில் யார் அமர்வது என்று யார் வகுப்பது, யாரும் வகுக்கலாமா, அரசியல் சட்டம் இதற்கு ஏதாவது அடிப்படை அளிக்கிறதா தெரியவில்லை ? யார் யார் எங்கு எப்படி நடந்து கொள்வது என்பதற்கு ஏதாவது வழிகாட்டும் நெறிமுறைகள் இருக்கின்றனவா? அப்படி ஏதேனும் ஒழுங்கிற்கான விதிகள் இருந்தாலும் இவர்கள் அதனை மதித்து நடக்கப் போவதில்லை என்பது உறுதி.
கூட்டத்தினைப் பயன்படுத்தி இட்டுக் கொண்ட முத்தங்களும், பின்புறத் தடவல்களும், மிக நெருங்கி நின்ற விதமும் துளிகூட ஆபாசமாக இல்லை. அழகாய் மட்டுமே இருந்தது.
அவர்கள் இருவரையும் நான் பார்த்த இடம் ஒரு ட்ரெயின் கம்பார்ட்மென்ட். நான் எப்போதும் பெண்கள் கோச்சில் தான் ஏறுவேன். அப்போதும் அதில் தான் ஏறி இருந்தேன் . இரு பெண்களுக்கிடையேயான காதல் அவர்களின் நெருக்கம், கொஞ்சல்கள் சிறிதும் முகம் சுளிக்க வைக்காமல் இவ்வளவு அழகாக இருக்கும் என அந்தக் கோச்சில் ஏறி அவர்களைக் காணும் நொடி வரையில் நான் எண்ணிக் கூட பார்த்ததில்லை.
எழுதியவர்
-
குளித்தலையில் பிறந்தவர். தஞ்சையப் பூர்வீகமாகக் கொண்டவர். பூர்வீகத்தைக் கிள்ளித் துளி வாயில் போட்டுக்கொள்வதை இனிய சடங்காக மேற்கொள்பவர். பிரபஞ்சத்தின் நடு மையத்தில் எண்ண விதைகளைத் தூவி விட்டு கனிகளாக கதைகள் விழுமெனக் கை நீட்டிக் காத்திருப்பவர்.
இவர் எழுதிய ’வைன் என்பது குறியீடல்ல’, ‘நீயேதான் நிதானன்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி இருக்கின்றன.
தற்போது சென்னையில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இதுவரை.
- சிறுகதை29 July 2024டபிள்யு (W)
- சிறுகதை20 February 2024கனவுக்கலைப்பு
- கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023செயற்கை நட்சத்திரங்கள்
- சிறுகதை9 June 2023இடைதூரம்
கடைசிவரை அது ……….. ஜோடி என்பது தெரியாமலேயே கதை நகர்ந்துள்ளது. அருமை அருமை. வாழ்த்துகள்