21 November 2024
devaseema10

ம்மாயியின் செல்லப்பெயர் பாப்பாத்தி என்கிற பாப்பா. ஏன் என்றால் பாப்பாத்திகளைப் போல அத்தகைய செக்கச் சிவந்த நிறம் அம்மாயிக்கு. சருமமும் மாசு மருவின்றி எலுமிச்சை நிறத்திலிருக்கும். தினமும் மஞ்சள் பூசி வேறு குளிப்பார். தாத்தாவின் நிறம் கருப்பு என்றே சொல்லிவிடக்கூடிய மாநிறம். இந்த நிறக் கலவைப் பிரச்சனையால் அம்மாயி பெற்று வளர்த்த ஆறு குழந்தைகளில் ஒன்று கூட அம்மாயியின் செக்கச் சிவந்த நிறத்தில் இல்லை.

அது மட்டுமில்லாது அம்மாயி அக்கிரஹாரத்தில் வளர்ந்தவர். தனக்காகக் கிராமத்தில் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருந்த சுப்பிரமணிய தேவருக்கு அவ்வூர் மிராசுதாரரான நாராயண ஐயர் எழுதி வைத்த வீட்டு மனையில் தான் வீடு கட்டி வாழ்ந்தார் சுப்பிரமணிய தேவர். அந்த மனை அக்கிரஹாரத்தில் தான் இருந்தது. அதனால் சுப்பிரமணிய தேவரின் இரண்டாவது மகளான அம்மாயி அக்கிரஹாரத்தில் வளர்ந்தார்.

அம்மாயியின் பேச்சிலும் அவ்வப்போது அவா, இவா எட்டிப் பார்க்கும். பெரும்பாலும் சோறு என்று சொல்ல மாட்டார் சாதம் என்று தான் சொல்லுவார். இந்த மொழி வேறுபாட்டின் காரணமாகவும் அவர் பாப்பாத்தி ஆகி இருக்கக் கூடும்.

அம்மாயி குங்குமப் பொட்டு தான் வைத்துக் கொள்வார். அரக்கு சிவப்பு நிறக் குங்குமம். ஆற அமரக் குளித்து விட்டு வந்து தன் மோதிர விரலால் தொட்டு முதலில் வெளிறிய சிவப்பில் உள்ள ‘ஆஷா’ வை சிறிய வட்டமாக இட்டுக் கொள்வார். பின் அதே விரலால் குங்குமத்தினைத் தொட்டு ஆஷாவின் மேல் அதே வடிவத்தில் இட்டுக் கொள்வார். எஞ்சிய குங்குமத்தில் பாதியை வகிட்டு முடிவில் வைத்துக் கொள்வார். கையில் ஒட்டியிருக்கும் மீதிக் குங்குமத்தை கழுத்தைக் கிள்ளினாற் போல வைத்துக் கொள்ளும் அம்மாயியின் செக்கச் சிவந்த நிறமும் அந்தக் குங்குமத்தின் நேர் எதிர் நிறமும் அப்படியே என் நினைவில் பதிந்து விட்டது. அம்மாயியை நான் நினைவு கூரும் போதெல்லாம் இந்தச் சித்திரம் தான் எனக்குள் வரும்.

அம்மாயியின் உண்மையான பெயர் நல்லி என்கிற நல்லதங்காள் என்கிற தங்கம் என்கிற தங்கம்மாள். பள்ளியில் வாத்திச்சி ஒரு நாள் ஏழு புள்ள பெத்த நல்ல தங்காளா எனக் கேலி பேசிச் சிரித்ததில் அம்மாயிக்கு நல்ல தங்காள் என்ற பெயரே பிடிக்காமல் ஆகி விட்டது. அம்மாயிக்கு அவரை நல்லி என்றோ தங்கம் என்றோ ஸ்டைலாக அழைப்பது தான் பிடிக்கும். அம்மாயியின் மாமியார் வீட்டில் அவரை அழைக்கும் பெயர் பாப்பா தான். பத்து வயதில் திருமணம் செய்து வீடு நுழைந்து தெருப்பிள்ளைகளுடன் பாண்டி ஆடி வளர்ந்தால் பாப்பாவாகத் தானே இருக்க முடியும். தாத்தாவின் கடையின் பெயர் கூட தங்கம் ஸ்டோர்ஸ் தான். ஊரில் உள்ள மூன்று தியேட்டர்களில் பெரிய தியேட்டரான சரஸ்வதியில் வரும் இடைவேளை விளம்பரங்களில் கூட தாத்தாவின் கடை தங்கம் ஸ்டோர்ஸ் என்று தான் பெயர் வரும். நாங்கள் லீவுக்கு ஊருக்கு வரும் தாத்தா அம்மாயியின் வாரிசுக் குழந்தைகள் பதினொரு பேரும் தங்கம் ஸ்டோர்ஸ் ஸ்லைடு வரும் போது உற்சாகத்தில் தறிகெட்டு கன்னா பின்னாவென கைதட்டி மகிழ்வோம். என்ன செய்வது நாங்கள் சின்னசாமி, தங்கத்தின் வாரிசுகள் தானே.

தாத்தா அம்மாயியை மணந்து கொண்ட கதை சுவாரஸ்யமானது. தாத்தாவுக்கு அப்போது வயது பதினேழு, அம்மாயி தனது பத்தாவது வயதில் வயதுக்கு வந்தவுடன் படிப்பு நிறுத்தப்பட்டு திருமணத்துக்குத் தயாராக வீட்டில் இருந்தார். வயது வித்தியாசம் அதிகம் என அம்மாயியின் அப்பா உணர்ந்ததன் காரணமாக பெண் கொடுக்கத் தயங்கி இருக்கிறார். தாத்தா விடாப்பிடியாகக் கேட்டுப் பார்த்தும் ஏதேதோ சாக்குகள் சொல்லி தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்திருக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தாத்தா வருங்கால மாமனார் எதை நம்புகிறார் எனத் தேடித் தேடி கண்டுபிடித்திருக்கிறார்.

அவர் ஊரில் எத்தனையோ பெருந்தெய்வங்கள் வீற்றிருந்த போதும், வருங்கால மாமனார் அருளுக்காக நம்பிக்கை கொண்டிருந்தது அவருடைய குலதெய்வமான வீரப்பூர் பொன்னர் சங்கர் மகாமுனி கோவிலில் பூப்போட்டுப் பார்ப்பதும் , உக்கிரமாக சாமி வந்து ஆடும் பூசாரி சொல்லும் குறியினைக் கேட்பதும் தான் என்பதை அறிந்த பின், தாத்தா பூசாரியைப் பிடித்து விட்டார். நூறு ரூபாய்க்கும் பீடிக்கும் பனங்கள்ளுக்கும் பொய் சாமியாடி திருமணத்தை அமோகமாக முடித்து வைத்து விட்டார். தங்கம் விலையே அப்போது பவுனுக்கு ஐம்பத்து நான்கு தானாம். பூசாரியைப் பிடித்தது தாத்தாவா இல்லை தாத்தாவின் அப்பாவா என்பது இன்று வரை யாருக்கும் தெரியாத குடும்ப இரகசியம்.

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கையில், அரைப் பரீட்சை நடக்கையில் ஒரு டிசம்பர் மாதத் தரையெல்லாம் குளிரும் இரவொன்றில் அம்மாயி சுமங்கலியாய் இந்தப் பூமியை விட்டு நீங்கினார்.

எனக்கும் அம்மாயிக்கும் பெரிதாய் சொல்லிக் கொள்ளுமளவு உறவில்லை. அம்மாயி பேத்தி உறவுமுறை குறித்து நான் எதுவும் சொல்லவில்லை. அது இரத்த சம்பந்தமானது. நான் சொல்வது அவரிடம் சில கேள்விகளுக்குப் பதில் அளித்ததை விடப் பெரியதாகப் பேசிய எந்த நினைவும் இல்லை. சில நேரம் என்னைக் குறித்து அம்மாயி பேசியதாக அம்மா கூறிய தகவல்களை எங்களிருவரின் தொடர்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அப்போது தான் எனக்குக் காது குத்திய புதிது. என் மாநிறத்துக்கு அவ்வளவாகப் பொருந்தாத மெரூன் வண்ண மிடி அணிந்திருந்தேன். அதற்குப் பொருத்தமென நான் நினைத்திருந்த, அப்போது ட்ரென்டிங்கில் இருந்த மெரூன் நிற நதியா கம்மலை அணிந்திருந்தேன். அம்மாயி அதைப் பார்த்து விட்டுத் தங்க ஜிமிக்கியைப் பிடிவாதமாக அணிந்து கொள்ளச் சொன்னார். அம்மா அவர் அம்மா பேச்சை அப்படியே கேட்கக் கூடியவர் என்பதால் என்னை ஜிமிக்கி அணிய வைத்து விட்டார். அடி வாங்கப் பயந்து நானும் அணிந்து கொண்டேன். கம்மலைப் பார்த்து எனக்கு நெட்டி முறித்த அம்மாயி நிறம் கம்மின்னாலும் உம்மக தான் முக லட்சணக்காரி என்றார். அப்பவே எனக்கு அறிவியல் அறிவு அதிகம் என்பதால் ஏன் உங்க மகள கருப்பா இருக்கிற மாப்பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தீங்க என மைண்ட் வாய்ஸில் தான் ஜோராக எதிர்க்கேள்வி எழுப்பினேன்.

அம்மாயியின் உணவு முறைகள், சமைக்கும் முறை, சாப்பிடும் முறை எதுவாக இருக்கட்டும் என் குழந்தை மனதின் ஆர்வத்தினைக் கிளறுவனவாகவே இருந்தன. அம்மாயிக்கு கறிக்குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். கறி என்றால் ஆட்டுக்கறி மட்டும் தான். ஏன் என்றால் தாத்தா ஆட்டுக்கறி மட்டுந்தான் சாப்பிடுவார்.

குழம்பு அம்மியில் மசாலா அரைத்து அம்மாயி தான் வைப்பார். கிட்டத்தட்ட கோவைப் பழ நிறத்தில் இருக்கும் குழம்பில் கொழும்பு மிதக்கும். சுடச்சுட வடித்த சாதத்தில் சுடச்சுட குழம்பில் மிதக்கும் கொழுப்பை மட்டும் கரண்டியால் மேலாக எடுத்து ஊற்றி பிசைந்து சாப்பிடுவார். இதைச் சாப்பிடுவதற்கு யாருக்காகவும் காத்திருக்க மாட்டார். இந்த அவரின் குணம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். தனது ஐம்பத்து ஆறாவது வயதில் அவர் ஹார்ட் அட்டாக்கில் பொட்டெனப் போனதற்கு இதுவும் ஒரு காரணமோ என என் வளர்ந்த மூளை தற்போது சிந்திக்கிறது.

அம்மாயி கறி வறுப்பார் பாருங்கள், அது ஒரு ஆர்ப்பாட்டமில்லாத குலதெய்வக் கொடைத் திருவிழா. நிறைய இடுபொருள்கள் எல்லாம் கிடையாது. சின்ன வெங்காயம், பட்டை கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்ப் பொடி இவ்வளவு தான். முக்காக்கிலோ கறிக்கு அரைக்கிலோ உருளைக் கிழங்கு சேர்த்து விறகடுப்பில் சமைப்பார் வறுவலை. கறியின் ருசி கிடக்கிறது ஒரு ஓரமாக, வறுத்த பிறகு இருப்புச்சட்டியில் சோற்றைப் போட்டு பிசைந்து உருண்டைகளாக்கி ஒவ்வொருவர் கையிலும் கொடுப்பார். பெறும் வரிசை அநேகமாக பேரப்பிள்ளைகள், மருமகன்கள், மருமகள்கள், மகள்கள், மகன்கள் என இருக்கும். ஆளுக்கு ஒரு உருண்டை தான் கச்சிதமாக வரும். தாத்தாவோ அம்மாயியோ அந்த உருண்டைகளை சாப்பிட்டு நாங்கள் யாரும் கண்டதில்லை. இப்போது இருக்கும் திருப்பதி லட்டு சைசில் இருக்கும் ஒவ்வொரு உருண்டையும்.

பிரியாணி திண்டுக்கல் ஸ்டைலில் செய்வார். பீஸ் அவ்வளவாக வேகாதது போல ப்ரவுன் கலரில் இருக்கும், ஆனால் வெந்திருக்கும், ருசி அவ்வளவாக இருக்காது. ஆனால் பிரியாணி சுவை தூக்கலாக இருக்கும். பிரியாணி செய்வதற்கு அவருக்கு ஒரே ஒரு கண்டிஷன் தான், அவருடைய நான்கு மாப்பிள்ளைகளும், இரண்டு மருமகள்களும் எல்லாப் பேரப்பிள்ளைகளும் வீட்டில் இருந்தாக வேண்டும்.

அம்மாயிக்கு மட்டும் தான் அந்த வீட்டில் பால் கொழுக்கட்டை செய்யத் தெரியும். அம்மாயி இறந்த பின் நான் வீட்டில் பால் கொழுக்கட்டை சாப்பிட்டதாக ஞாபகம் இல்லை.

அப்போது நான் கல்லூரிப் படிப்பினை முடித்து விட்டு ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அவ்வளவு நாட்களாக நான் அம்மாயி குறித்து பெரிதாகச் சிந்தித்ததில்லை. அம்மா எப்போதாவது அவர் அம்மா குறித்துப் பேசினால் உண்டு. வாழ்வில் ஒரு ஆளாக வேண்டிய நிர்ப்பந்தத்தில், அதற்கான கனவுகளைச் சுமந்து திரிந்து வாழ்ந்த நாட்கள் அவை.

பின் ஓரளவுக்கு ஸ்திரமான வேலையும் அதன் மூலம் நிலையான வருமானமும் கிடைத்த பிறகான ஒரு நாளின் வேலையில் களைத்த ஒரு நாளின் இரவில் தான் அந்தக் கனவு வந்தது. அம்மாயி என் கனவில் வந்த முதல் கனவு.

கனவில் எப்போதும் போல் அம்மாயி அவ்வளவு அழகாக இருந்தார். சற்றே குள்ளமாய் இருப்பதால் ஒரு குட்டி பொம்மையினைப் போன்ற தோற்றம். அம்மாயியை அந்த நிறச் சேலையில் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. அடர் சிவப்பில் இரண்டு விரற்கடை அகலத்தில் சரிகைக் கரையிட்ட பட்டுப்புடவை அணிந்திருந்தார். அதுவரை நான் கலந்து கொண்டிருந்த சில பிராமணத் திருமணங்களில் மணமக்கள் அணிந்திருந்த முகூர்த்தப் புடவை போலிருந்தது. அவர் எப்போதும் குங்குமம் வைப்பது போலவே நெற்றி வகிட்டில், நெற்றியில் மற்றும் அவர் சங்கு நிறக் கழுத்திலும் அதே அரக்கு நிறக் குங்குமம் வைத்திருந்தார். பெரிதாய் நகைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை. தாலி செயினும் ஒரு ஜோடி தங்க வளையல்களும், கல் வைத்த அன்னத் தோடும் அணிந்திருந்தார். என் சின்ன வயதில் தாத்தா வீடு வாடகைக்கு இருந்த படேபாய் வீடு அது. அங்கு புழக்கடையில் ஒரு திண்டு இருக்கும். அந்தத் திண்டில் இருந்து இருபது மீட்டர் தூரத்தில் எடுப்புக் கக்கூஸ் இருக்கும். அதைச்சுற்றி கூரை வேயப்பட்டிருக்கும். வலப்பக்கத்தில் முனிசிபல் அடி பம்பு இருக்கும். இடப்பக்கத்தில் அடுப்படி இருக்கும். திண்டில் அமர்ந்து கொண்டு எதிரில் பார்த்தால் அழகான பச்சை மற்றும் நீல நிற பீங்கான் தட்டுகள் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். அந்தத் தட்டுகளுக்கு எதிரில் அமர்ந்து கொண்டு தான் என்னை அருகில் அழைத்தார். நெருங்கிச் சென்றவளை அருகமர்த்திக் கொண்டு பாப்பா அம்மாவ நல்லாப் பார்த்துக்கோ, இனிமேல் அதுக்கு எல்லாமே நீ தான் என்றவரைக் குறித்து மனதிற்குள் சிந்திக்கிறேன், நான் ஏன் அம்மாவைப் பார்த்துக்கணும் அதுக்குத் தான் டேடி இருக்காங்களே என்று. அதற்குள் கனவு கலைந்து விட்டது.

கனவு குறித்து எவ்வளவு அலட்சியமாக இருந்தேன் என்றால், அம்மாவிடம் இதைப் பற்றி காலையில் சொல்லக் கூட இல்லை. அப்படியே மறந்து விட்டேன்.

எப்போது இந்த கனவு நினைவுக்கு வந்தது என்றால் இக்கனவு வந்த பிறகு சரியாக மூன்று மாதங்கள் கழித்து அப்பா ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். இறந்த போது அவருக்கு வயது வெறும் நாற்பத்தேழு தான். இன்னும் வேலையிலிருந்து ஓய்வு பெறவே பதினொரு ஆண்டுகள் மீதமிருந்தன. அப்பா ரொம்ப ஆரோக்கியமானவர். அவருக்கு இப்படி ஒன்று நிகழப் போவதாகத் தான் அம்மாயி அந்தக் கனவில் எச்சரித்து இருக்கிறார். அதுவும் சாவைத் தடுக்க இல்லை, உலகமறியாத அவரின் நாற்பத்தி ஒரு வயது மகளை முழு உலகறிந்த இருபத்தி இரண்டு வயதான அவர் பேத்தி பார்த்துக் கொள்ள வேண்டுமாம். என்ன ஒரு அநியாயம் .

ஆனால், அது தான் நடந்தது. அப்பாவின் அலுவலகத்திற்கு நடையாய் நடந்து, பணப்பயன்கள் பெற்று, அப்பாவின் வேலையினைக் கடும் போராட்டங்கள் மற்றும் காத்திருப்புக்குப் பின் தம்பிக்கு வாங்கிக் கொடுத்தது என் முயற்சிகளால் தான்.

இதற்குப் பிறகு ஒரு நாள் மூட நம்பிக்கைகளை அறவாக வெறுக்கும் அம்மாவிடம் தயங்கித் தயங்கி இந்தக் கனவினை குறித்துக் கூறினேன். அம்மா அவர் அம்மாவை நினைத்துக் கொண்டு அழுதார். அவரின் நினைவுகள் குறித்து தொடர்ந்து சில நாட்களுக்கு பேசியபடியே இருந்தார். கறி குழம்பு வைக்கும் நாட்களிலும், மாவிளக்குப் போடும் நாட்களிலும், பிரியாணி செய்யும் நாட்களிலும் அம்மாயி குறித்து எப்படியாவது வீட்டில் பேச்சு வந்து விடும்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது இரண்டாவது கனவு. அப்போது எனக்குத் திருமணமாகிப் பல வருடங்கள் கடந்து விட்டிருந்தன. இரண்டு குழந்தைகளும் பிறந்து விட்டிருந்தனர். ஒரு நாள் இரவு கடும் அலுவலக வேலை, வீட்டு வேலைகளுக்குப் பிறகு தூங்கிய இரவில் மறுபடி அம்மாயி வந்தார். அதே அடர் சிவப்பு புடவையும் அலங்காரமும். அதே படேபாய் வீட்டுத் திண்டு தான். என்னை அங்கு பக்கத்தில் போடப்பட்டிருந்த நீளமான மர பெஞ்சில் அமரச் சொன்னார். நான் இவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று கனவின் உள்ளேயே பயந்து கொண்டிருந்தேன்.

பாப்பா நல்லாப் பார்த்துக்கற, இன்னும் உறுதியா நீ தான் பார்த்துக்கணும் என்றார். அம்மாவுக்கு என்னவோ என்று உள்ளூர்ப் பதற ஆரம்பித்து விட்டேன்.

கனவிலிருந்து எழுகையில் வேர்த்து வடிந்து தான் எழுந்தேன். அம்மாவை டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று உறுதி பூண்டேன். அவ்வுறுதியின் படியே அழைத்தும் சென்றேன். வழக்கமான கோளாறுகள் தவிர்த்து வேறெதுவும் இல்லை என்று
குடும்ப மருத்துவர் கூறி விட்டார்.

ஓரளவு நிம்மதியுடன் நான் என் அன்றாடப் பணிகளைத் தொடர்ந்து கொண்டு இருந்தேன். அம்மாவுக்கு திடீரென அவ்வப்போது நெஞ்சு வலி ஆரம்பித்தது. அருகில் இருந்த இதயத்திற்கான சிறப்பு மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அவர் பல மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் ஆன்ஜியோ செய்ய வேண்டும் என்று விட்டார். செய்து முடித்த பின் என்னை அருகில் அழைத்து ப்ளாக் எண்பது சதவீதம் இருக்கு என்றார். எனக்கு அதிர்ச்சியில் உடனே என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் வயதிற்கும் உடல்நிலைக்கும் பைபாஸ் அறுவை சிகிச்சையும் கஷ்டம். பொட்டாட்டம் பார்த்துக்கோங்க. இருக்கிற வரை சந்தோஷமா இருக்கட்டும் என்று விட்டார்.

பின் அம்மாவை அப்பல்லோவில் சேர்த்து அவர் வயதும் உடல்நிலையும் அனுமதித்த அளவில் எல்லா சிகிச்சையும் சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக மேற்கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்தோம். அதிலிருந்து ஒரு வருடத்திற்குப் பின் அம்மா எங்களுடன் இல்லை. கடுமையான ஹார்ட் அட்டாக் வந்து மறைந்து போனார்.

பின்னான காலங்களில் அம்மாவைப் பெற்றவர் ஆயிற்றே என்பது கூட இல்லாமல் அம்மாயியின் மேல் அதன்பின் வெறுப்பு கலந்த பயம் தோன்ற ஆரம்பித்திருந்தது. அவர் என் கனவுகளில் வந்து விடவே கூடாதென்ற பிரார்த்தனைகளுடன் தான் தூங்கச் செல்ல ஆரம்பித்திருந்தேன். இந்தப் பயம் சில பல வருடங்கள் கூட தொடர்ந்தது எனலாம்.

மறதி தானே இயற்கை மனிதனுக்கு அளித்த மகத்தான கொடை. நாளடைவில் அம்மாயி வரும் கனவுகளை மறந்து விட்டு இயல்பாக வாழத் தொடங்கி இருந்தேன் சில காலம் வரை.

சமீபமாக ஒரு நாள் கனவில் அம்மாயியின் அடர் சிவப்பு நிறப் புடவை தூரத்திலிருந்து தெரிய ஆரம்பித்தது. நான் படேபாய் வீட்டு வாசலிலிருந்து பட்டாசாலையின் உள் காலை வைக்கிறேன். நிமிர்ந்து பார்த்தால் அது அம்மாயி தான் ஆனால் அம்மாயி இல்லை போலவும் தெரிந்தது. எப்படியோ அந்த முகம் முழுவதும் உருப்பெறுவதற்கு முன்னரே மனதுக்குள் போராடி கனவைக் கலைத்து விழித்து எழுந்து விட்டேன். இரண்டாவது கனவுக்குப் பின் இப்படிக் கனவைக் கலைத்து விழிக்கப் பழகியிருந்தேன்.

அம்மாயி வரும் கனவுகள் எதுவும் எனக்கு இனி வேண்டாம். நடப்பவை நடக்கிறபடி நடக்கட்டும். அப்படி நடக்கத்தான் போகிறது என்று இருக்கையில் அதனை அம்மாயி கனவில் வந்து ஏன் எனக்கு மட்டும் முன்கூட்டியே சொல்ல வேண்டும். நான் ஏன் என்ன ஏதென்று புரியாமல் அக்கனவின் நிஜம் தெரியும் வரை அலைக்கழிய வேண்டும். இதற்காக எனக்குத் தூக்கமே இல்லாமல் போனாலும் பரவாயில்லை என்று எந்தக் கனவுகள் வரத் தொடங்கும் போதே தூக்கத்திலிருந்து என்னை நானே உலுப்பி எழுப்பி விட்டுக் கொள்வேன்.

அந்த முழு உருப்பெறாத மூன்றாவது அம்மாயிக் கனவுக்கும் என் தூக்கத்திற்கும் தான் போட்டியே. சில வருடங்களாய் அம்மாயி வரும் கனவுக்குத் தொடர்ந்து கருக்கலைப்பு செய்வது தான் என் இப்போதைய வழக்கம்.

நான் நிறைவாகத் தூங்கி அது ஆகிறது எட்டு வருடங்கள்.. மூன்று மாதங்கள் மற்றும் ஏழு நாட்கள்..!


 

எழுதியவர்

தேவசீமா
தேவசீமா
குளித்தலையில் பிறந்தவர். தஞ்சையப் பூர்வீகமாகக் கொண்டவர். பூர்வீகத்தைக் கிள்ளித் துளி வாயில் போட்டுக்கொள்வதை இனிய சடங்காக மேற்கொள்பவர். பிரபஞ்சத்தின் நடு மையத்தில் எண்ண விதைகளைத் தூவி விட்டு கனிகளாக கதைகள் விழுமெனக் கை நீட்டிக் காத்திருப்பவர்.
இவர் எழுதிய ’வைன் என்பது குறியீடல்ல’, ‘நீயேதான் நிதானன்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்போது சென்னையில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Krupa Janakiraman
Krupa Janakiraman
3 months ago

கருவுறுதலையும் கனவு காணுதலையும் தொடர்புப் படுத்தியுள்ள தங்களின் படைப்பு மிகவும் அறிவார்த்தம் பொருந்தியது.

கருவுறுதலைத் தடை செய்து இன்புற வழிகள் உள்ளன.
ஆயினும், கனவு காணுதலைத் தடுத்து, உறக்கம் என்ற நிம்மதியையும் அத்தியாவசியத் தேவையையும் அடைய இயலாது. நாம் நினைக்க வேண்டாம் என்று நினைப்பவை தான் அதிகமாகக் கனவில் தோன்றும்.

இரு குழந்தைகளைப் பெற்ற இன்பத்துடன் கர்ப்பத்தடை செய்யலாம். அது பெற்ற குழந்தைகளை நன்கு பேணப் போகிறோம் என்ற நம்பிக்கையில் செய்வது.
ஆயினும், பெற்றோர் இருவரை இழந்த துன்பத்தால் கனவுக்கலைப்பு செய்வது வலி மிகுந்தது. அதுவும் நாம் உருகி உறவாடிய சொந்தத்தைக் கண்டு அஞ்சுவது வேதனையானது தான்.

ஆயினும், அம்மாயி எச்சரித்ததால் தாங்கள் தாயாரைக் கவனித்துக் கொண்டு தங்களது கடமையை நிறைவேற்றிய நிம்மதியுடன் ஆழ்ந்து உறங்குங்கள். அம்மாயி நிச்சயம் தங்களுக்கு நிம்மதி தருவார்.

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x