8 December 2024
Devaseema 2KS2

ந்தியா காலத்துக்கென்று பிரத்தியேகமாக ஒரு வண்ணம் இருப்பதாக எப்போதும் எண்ணிக் கொள்வாள் கோதை. சில தினங்களுக்கென்று தனித்த வாசனை கூட ஞாபகத்தில் படிந்து விடுகிறது.

தான் ஆழ்ந்திருந்த யோசனையில் இன்னும் ஆழ்ந்தபடி நடந்த கோதை சமமாக இடப்பட்டிருந்த நடைபாதைக் கற்களில் துருத்திக் கொண்டிருந்த ஒற்றைக் கல்லை கவனத்தில் கொள்ளவில்லை. மற்ற விரல்களைக் காட்டிலும் சற்றே நீண்டிருக்கும் வலதுகால் பெருவிரல் அந்த ஒற்றைக் கல்லில் நச்சென்று இடித்தது. வலி மூளையைத் தாக்கியதும் தன் ஆழ்ந்த யோசனைக்கு அடிப்படையான, அதன் மூலம் விரல் இடித்ததற்குக் காரணமான, செல்வியை மனம் ஒரு கணம் கேவலமாகச் சபித்தது. “சனியன் பிடித்தவள்” சபித்தலுக்கு அப்பாற்பட்டுத் தொடர்ந்து செல்வி குறித்தே நினைத்துக் கொண்டிருந்தாள்.

எத்தனை முறை யோசித்தாலும் வெற்றிச்செல்வி ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது கோதையின் புத்திக்கு எட்டவே இல்லை . பத்து வருடங்களுக்கு முன்பாவது செல்விக்குத் திருமணமாகி இருக்கவில்லை. இப்போதோ மணமாகி விட்டிருந்தது மட்டுமல்லாமல் மூன்று குழந்தைகள் வேறு, பின் ஏன் இப்படி?

கோதைக்குத் தெரிந்த வரையில் தெரிந்து இந்தப் பத்து வருடங்களில் நான்காவது அல்லது ஐந்தாவது ஆணுடன் செல்வியின் பெயரை இணைத்துப் பேசுகிறார்கள். இதனைச் சரியான கோணத்தில் பார்த்தால் கோதைக்கு மட்டுமல்ல, வேறு யாருக்குமே இந்த வதந்திகளில் கவலைப்பட ஏதுமில்லை. ஆனாலும் அவள், கவிதா, வாகீசன், சேகர், கோபால், வெற்றிச்செல்வி ஆகிய அறுவரும் அலுவலகத்தில் ஒன்றாக வேலைக்குச் சேர்ந்தவர்கள். இளையவளான செல்வி அவர்களுக்கு ஒரு தங்கைத் தோழியாகவே பிரியமானவள். வேலைக்குச் சேர முதன்முதலில் வந்த போது அவள் அம்மாவுடன் வந்திருந்தாள். கவிதா “அது யாரு உன் அக்காவா?” என்று கேட்டாள். அதற்கு செல்வி “இல்லக்கா அம்மா, அம்மாக்கு பதினாலு வயசுல கல்யாணமாகி நான் பதினஞ்சு வயசுல பொறந்துட்டேனாம்” என்று அழகாக தெத்துப்பல் மினுங்கச் சிரித்தாள்.

செல்வி அவர்களுக்கு அறிமுகமான பொழுதில் அவளுக்கு இருபத்தி இரண்டு வயது. வேலைக்கான பயிற்சி கொஞ்சம் நெடியவே இருந்தது. அப்போது இவர்கள் ஆறு பேரில் மூன்று பேருக்குத் திருமணமாகி இருந்தது. மீதி மூவர் திருமணம் ஆகாமல் இருக்கும் பொழுதில் உற்பத்தியாகும் தொடர் சந்தோஷத்தில் குதூகலத்துடன் இருந்தனர். சம்சாரிகள் மூவரும் அவ்வப்போது சந்தோஷத்திலும் மிச்ச நேரத்தில் குடும்பக் கவலைகளிலும், சொச்ச நேரத்தில் ‘மகிழ்ச்சியாக இருக்கிறோமே இது சரியா?’ என்ற குற்ற உணர்விலுமே இருப்பர்.

அந்தச் சமயத்தில் தான் பத்து நாள் தொலை தூர ஊரொன்றில் “கள ஆய்வுடன் பயிற்சி” என்ற அறிவிப்பு வெளியானது. கிராமமுமல்ல, நகரமுமல்ல ஒரு நடுவாந்திரமான ஊர் அது. இரண்டு நல்ல லாட்ஜும், மூன்று சுமாரான உணவு விடுதிகளும், வயல் புழுதியும் வாகனப் புழுதியும், நாயக்கர் காலத்தில் நிர்மாணிக்கப் பட்ட சற்றே பெரியதொரு கோயிலும் கொண்டது.

அங்கு இவர்களது நிதி நிறுவனத்தின் கிளை இருந்தது. காலையில் கிளையில் ரிப்போர்ட்டிங் செய்து விட்டுக் கிளம்பினால் கள ஆய்வுக்கான அலைச்சல். இருந்த இரண்டு விடுதிகளில் நல்லா இருக்கும் என ஊர்க்காரர்கள் சிபாரிசு செய்த வெங்கடேஷ் லாட்ஜில் ஆறு பேரும் தங்கிக் கொண்டனர்.

ஆண்களுக்கு இரண்டாம் தளத்திலும் பெண்களுக்கு முதல் தளத்திலுமாக அறைகள் வழங்கப்பட்டன. கோதையும் கவிதாவும் ஒன்றாக ஒரு இரட்டை அறையில் தங்கினர். வெற்றிச்செல்வி இன்னொரு அறையில் இருந்தாள். “கூட யாராச்சும் இருந்தா எனக்குத் தூக்கமே வராதுக்கா” என்று சிரித்தாள்.

தங்கிய இரண்டாவது நாளில் அங்கு வந்து சேர்ந்தான் இராமமூர்த்தி. அவனைத் தன் காதலன் என்று வாயால் சொல்லாமல் தன் நடவடிக்கைகளால் சொன்னாள் செல்வி. தினசரி பயிற்சி முடிந்து அவர்கள் இரவு உணவுக்குச் செல்லும் போது அவனும் வந்து சேர்ந்து கொள்வான்.

கைப்பிடியளவு மணிகளைக் கோயில் கோபுரத்திலிருந்து தூக்கி எறிந்தால் எவ்வளவு தூரம் சிதறுமோ, அவ்வளவே பெரியதான ஊரில் அவர்கள் உணவு விடுதிகளுக்கு நடந்தே செல்வது தான் சுலபம். அவ்வாறு நடந்து செல்கையில் இவர்கள் ஐவரும் முன்னேயும், வெற்றிச்செல்வியும் ராமமூர்த்தியும் இவர்கள் பின்னேயும் நடப்பது வழக்கம்.

ராமமூர்த்தியால் செல்வியைத் தொடாமல் இருக்க முடியாது. அவள் நெற்றியில் விழும் முடிக்கற்றையை ஒதுக்கி விடுவதும், யாரும் பார்க்காத போது அவசரமாக முத்தமிடுவதும், செல்வியின் கைகளைக் கோர்த்துக் கொண்டு நடப்பதும், அவள் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சுவதுமாக ஏதாவது செய்து கொண்டு இருப்பான். லாட்ஜில் அவனும் செல்வியும் வெவ்வேறு தளங்களில் தங்கியிருந்தாலும் கிடைக்கும் நேரத்திலெல்லாம் அவர்கள் ஒரே அறையில் தான் இருந்தனர்.

ராமமூர்த்தி வெற்றிச்செல்வி திருமணத்தை இவர்கள் ஆவலாக எதிர் நோக்கியிருந்த போது; இவர்கள் செட்டிலேயே தாமதமாக குமார் வேலைக்குச் சேர்ந்தான். தனக்கு ஏற்கனவே ஆள் இருப்பதாக கண் சிமிட்டியபடியே ஒரு மதிய உணவு வேளையில் சொன்ன குமாருடன் ஊர் சுற்ற ஆரம்பித்தாள் செல்வி. ஒன்றாக அவனுடன் அலுவலகம் வருவது திரும்பச் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டாள். இது ஒன்றும் பெரிய விஷயமல்ல தான். அவள் அலுவலக வாசலில் ஏறி இறங்கியிருந்தால். தெருமுனையில் தான் ஏறுவதும் இறங்குவதும். இவ்வாறான செய்கை, அச்செயல் என்னவோ திருட்டுக்காரியம் என்பதான தோற்றத்தினைத் தந்தது.

நெருக்கமாகப் புகைப்படம் எடுத்துக் கொள்ளுமளவு பழகினார்கள் இருவரும். பின்னர் ஒரு நாள் குடும்பத்துடன் கோதை தியேட்டருக்குச் சென்ற போது இடைவேளையில் கையில் பாப்கார்னுடனும் உதட்டில் புன்னகையுடனும் கோதையை எதிர்கொண்டான் ராமமூர்த்தி. எவ்வளவோ மறுத்தும் கோதையின் குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தந்தான். குழந்தைகள் அழகாகப் புன்னகைத்தார்கள். அந்நேரத்தில் ரெஸ்ட் ரூமில் இருந்து ஈரத்தினைத் துடைத்துக் கொண்டே வெளிவந்து கொண்டிருந்த வெற்றிச்செல்வியும் அப்புன்னகையில் இணைந்து கொண்டாள். விநாடியில் மின்னல் போல ஓர் அருவருப்பு கோதையின் முகத்தில் மின்னி மறைந்தது. பின் சட்டென முகத்தினை இயல்பாக மாற்றிக் கொண்டாள். அவரவர் இருக்கைகளில் அமர்ந்து மிச்சப் படத்தைப் பார்த்து முடித்தனர்.

ஆறு மாசமிருக்கும் திடீரென்று ஒரு நாள் திருமணப் பத்திரிக்கையை நீட்டினாள் செல்வி. மாப்பிள்ளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் மேலாளர். பெயர் சுதர்ஷன். கோதை பத்திரிக்கையைப் படித்தவுடன் ஏதேனும் கேள்வி கேட்பாள் என்று எதிர்பார்த்தாளோ என்னவோ சிறிது நேரம் முகத்தினைப் பார்த்தபடியே இருந்தாள்.

“வாழ்த்துகள் மா, ‘என்ன எம்மொகத்தயே பாத்துட்டு இருக்க’ என்றாள் கோதை. செல்வி மெல்ல “அக்கா ஏன் ராமமூர்த்திய கல்யாணம் பண்ணலன்னு கேப்பீங்கன்னு நெனச்சேன்”

“‘அது உன் சொந்த விஷயம்மா, நீ ராமமூர்த்திய விட்டுட்டு சுதர்ஷன தேர்ந்தெடுத்துருக்கன்னா ஏதாவது காரணம் இருக்கும். இல்லாம இருக்குமா?” என்று புன்னகைத்தவாறு கடந்தாள். செல்வி விடாமல் “அவர் வீட்ல சம்மதிக்கலக்கா” என்றாள்.

கோதையின் மனதிலே அமைதியே உருவான ராமமூர்த்தியின் விதவைத்தாய் வந்து போனார். “அவென் சந்தோசமாருந்தா போதுந்தாயி” என்று அவர் நடுங்கும் குரலில் சொல்லியதும், சட்டென நிகழ்காலத்துக்கு வந்து “இவ பொய்யெல்லா கேட்டுக் கேட்டு, கேட்டக் கணக்கப் பாத்தா நாம புளுத்துருவோம், புளுவுனிச் சிறுக்கி” எனறெண்ணியபடி செல்வி மேலும் பேசுவதைத் தடுக்கும் பொருட்டு மறுபடி வாழ்த்து சொல்லி அவளை அனுப்பி வைத்தாள். பின் ஓய்வறைக்குச் சென்று தன்னை ஆசுவாசம் செய்து கொள்ளக் குழாயைத் திறந்து கொட்டிய தண்ணீரை ‘சளர்ப் சளர்ப்’ என ஓசையெழ தன் முகத்தில் அடித்துக் கொண்டாள்.

கோதைக்கு உள்ளூர ஒரு பயமிருந்தது, எங்கே இதையும் செல்வி காதல் திருமணம் என்று சொல்லிவிடுவாளோ என்று, நல்லவேளையாக அப்படி இல்லையாம், பெற்றோர் ஏற்பாடு செய்து வைத்த திருமணம் தானாம். ‘அப்பாடா’ எனப் பெருமூச்சு விட்டாள் கோதை.

அந்தத் திருமணத்திற்கு ராமமூர்த்தி வரவில்லை. ஆனால் குமார் வந்திருந்து சிரித்தபடி சிகப்பு நிற மொய் கவரில் கனமான மொய் செய்தான்.

செல்வி திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டிற்கு அருகிலுள்ள கிளைக்கு மாற்றலாகிப் போய் விட்டாள். அந்தக் கிளையில் வேலை பார்த்த சேகர் குழந்தையின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குத் தனியாக வந்திருந்த வெற்றிச்செல்வியின் கண்கள் யாரையோ தேடியபடி இருந்தன. யாரை என்பதற்கான விடை செல்வியுடைய கிளை மேலாளர் “அல்டாப்” என அனைவராலும் அழைக்கப்படும் விஷ்வா என்கிற விஷ்வக்சேனனை பார்த்தவுடன் அவள் வெளிப்படுத்திய உடல்மொழியில் தெளிவாகத் தெரிந்தது. அவனை அநாவசியமாகத் திரும்ப திரும்பத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் பார்க்கும் போது வெட்கம் போல ஏதோ ஒன்றைக் காட்ட முயன்று கொண்டிருந்தாள். உணவிற்கு பஃபே முறையில் ஏற்பாடு செய்திருந்தார் சேகர். எல்லோரும் வரிசையில் நின்றிருந்த போது வரிசையை ஊடறுத்துச் சென்று விஷ்வாவுடன் நின்று கொண்டாள் செல்வி. “இத ட்ரை பண்ணுங்கப்பா நல்லாருக்கும்” என குலாப் ஜாமூனை ஸ்பூனால் எடுத்து அவனுக்கு ஊட்டினாள். பின் பிரியாணியில் தன் தட்டில் இருந்த பீஸை அவனுக்கு மாற்றி விட்டு அவன் தட்டில் இருந்த லெக் பீஸை தான் எடுத்துக் கொண்டாள். சுற்றி இருந்தவர்களின் கேலிப்பார்வைகள் அவளைத் தீண்டவேயில்லை. விஷ்வா மிக இலேசாகச் சங்கடப்பட்டது போல் தான் தெரிந்தது.

அன்று தான் கோதைக்கு செல்வியின் அம்மாவின் வளர்ப்பு பற்றிய கேள்வி எழுந்தது. இப்படி எப்படிக் குற்ற உணர்வே இல்லாமல் பல ஆண்களுடன் ஒரே நேரத்தில் இவளால் பழக முடிகிறது. ஏதாவது வியாதியா இது? இதனை செல்வியின் தாய் தவறென்று சுட்டிக்காட்டாமலா வளர்த்திருப்பார். இல்லை தமிழ்நாட்டில் திருமணத்திற்கு முன்பு வழங்கப்படும் ‘புருஷன் வீட்டில் வாழப் போற பொண்ணே’ என விளித்து வழங்கப்படும் அறிவுரைகள் இவள் காதில் ஏறவில்லையா என்று தெரியவில்லை.

விஷ்வா உடனான உறவு அவன் மனைவி சென்னைக்கே மாற்றல் வாங்கி வரும்வரை தொடர்ந்தது. விஷ்வாவின் மனைவி இவர்களின் தொடர்பு தெரிந்த பின் தான் சென்னைக்கே வந்தாள் என்றும் பேச்சு எழுந்தது. விஷ்வா சமத்தாக மனைவியின் அலுவலகம் அருகே இருந்த கிளைக்கு இடம் மாற்றிக் கொண்டான். வீட்டையும் தான். அத்துடன் விஷ்வா செல்வி அத்தியாயம் ஒரு முடிவுக்கு வந்தது.

தொடர்கதையானது செல்வியின் போக்கு தான். இம்முறை சொட்டை சுந்தர் வர்கீஸ். அவர் ஒன்றும் ஏப்பச் சாப்பையான ஆள் இல்லை. நிறுவனத்தின் பொது மேலாள‌ர். அதாவது நிறுவனத்தினை மேம்படுத்த ஆலோசகராக மூன்று வருட ஒப்பந்தத்தில் வேலைக்குச் சேர்ந்தவர். கலிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மை பாடத்தில் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் முகேஷ் அம்பானியின் ஜூனியர். மனைவி மற்றும் குழந்தைகள் மும்பையில். அவர் சம்பளமே கால் கோடிக்கு மேல் என்று பேசிக் கொண்டார்கள்.

ஆரம்பத்தில் அவர் தனது பெர்சனல் செகரட்டரியாக இருந்த செல்வியிடம் கடுமையாக இருந்ததாகவும் போகப்போக மற்றவர்களைப் போல ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக ஆனதாகவும் பேச்சு எழுந்தது. ஏதோ ஒரு தொழில் சார்ந்த கூட்டத்திற்கு இருவரும் டார்ஜிலிங் வரை பயணப்பட்டதாகவும் செல்கையில் பாஸ் செகரட்டரி உறவினைப் போல் சென்றவர்கள் திரும்ப வருகையில் காதலர்கள் போல வந்தார்கள் என்றும் கேள்விப்பட்டோம்.

அந்தப் பயணத்திலிருந்து நிறுவனத்தில் அவள் பெற்றுள்ள இடம் வேறாக உயர்ந்து விட்டது. நிறுவனத்தின் பணியாளர்களின் அன்றாடங்களைப் பாதிக்கும் அளவு அவளுடைய தலையீடு அதிகமாக இருந்தது. சொல்லப் போனால் எங்களுடன் வேலைக்குச் சேர்ந்த வாகீசன் மதுரையிலிருந்து நெல்லை கிளைக்கு செல்வி பொது மேலாளரிடம் பரிந்துரைத்தால் மாறுதல் நிச்சயம் கிடைத்து விடும் தானே என்று கோதையிடம் அலைபேசியில் அரித்தெடுத்துக் கொண்டிருந்தார்.

கோதை அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டால் வாகீசனுக்கு தெரியவா போகிறது என்றெண்ணியபடியே தலையில் அடித்துக் கொண்டாள். பதிலும் பேசவில்லை. எப்படியோ செல்வியைப் பிடித்து நெல்லைக்கு இடம் மாறிக்கொண்டார் வாகீசன்.

இந்த நேரத்தில் தான் செல்வி இரண்டாம் முறை கர்ப்பமானாள். இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றாள். குழந்தைகளுக்கு யார் தகப்பன் என்ற கேள்வி மற்றவர்களுக்குத் தான் எழுந்தது. அந்த பாரத்தைச் சுமக்கத் தான் செல்வி வீட்டில் கட்டப்பட்ட பொலிகாளையாய் சுதர்ஷன் இருக்கிறானே. அவன் இவள் நடவடிக்கைகள் குறித்த எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் தான் இவளோடு குடும்பம் நடத்திக் கொண்டு இருந்தான் அல்லது அப்படி நடத்துவதாக வெளியே தெரிந்தது.

மகப்பேறு விடுப்புக்குப் பின் அலுவலகம் வந்த செல்விக்கு இரு ஆச்சரியங்களும் ஒரு ‘அப்பாடா தப்பிச்சோம்’ உம் காத்திருந்தது. முதல் ஆச்சரியம் அலுவலகத்தில் வர்கீஸ் இல்லை. இடமாற்றமா அல்லது வேலையிலிருந்தே தூக்கி விட்டதா நிர்வாகம் என்பது. இரண்டாவது ஆச்சரியம் போன வாரம் கூட தன்னை ஷாப்பிங் மால் காபி ஷாப்பில் சந்தித்த வர்கீஸ் எந்தத் தகவலும் சொல்லாமல் காணாமல் போனது.

அநேகமாய் வெற்றிச்செல்வியின் வாட்ஸப் பக்கம் சொட்டை சுந்தரின் மனைவியிடம் சிக்கியிருக்க வேண்டும். அந்த வட இந்தியப் பெண்மணி பொழப்பு மெனக்கெட்டு கணவர் பின்னாலேயே சென்னை வந்து அலுவலகத்திற்கும் வந்து விட்டார்.

வந்தவர் கேட்ட முதல் கேள்வி ‘கோன் ஹை யஹான் வெறிஷெல்வி’ ( யாரு இங்க வெற்றிசெல்வி’) இரண்டாவது ‘திகாவ் ஓ ரன்டி ரகேள் கோ’ (காமிங்க அந்த வேசி, வப்பாட்டிய) ‘ ஆஜ் மெய்ன் ச்சோடுங்கி நஹி உஸ்கோ “, ( அவளை இன்னிக்கு நான் விட மாட்டேன்) செல்வியின் ‘அப்பாடா தப்பிச்சோம்’ மொமண்ட் இது தான். இது சாத்தியமானது அவள் அப்போது மகப்பேறு விடுப்பில் இருந்ததால்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இரண்டு மாதங்கள் சும்மா இருந்தாள். பின்னர் திருமணம் ஆகாத வேலைக்குப் புதிதாய் சேர்ந்த சஞ்சயுடன் சுற்ற ஆரம்பித்து விட்டாள்.

“இவளுக்கு என்ன தான் வேண்டும்? ஆம்பள உடம்பா? எல்லாரும் என்னைத் தான் சுத்தி வராங்க அப்படிங்கிற பெருமையா? இரண்டு பொட்டை புள்ளைங்க பெத்துருக்காளே அதுகள பத்தி கொஞ்சமாச்சும் யோசிக்கிறாளா? இல்லை ஒத்தப் புள்ளயப் பெத்துட்டு இவ பசங்கள வளர்க்கறதே கதின்னு கெடக்குதே அந்த அம்மாவ பத்தி நெனைக்குறாளா? பாவி சிறுக்கி அரசல்புரசலா காதுல உழாமயா இருக்கும் இவ அடிக்கிற கூத்து கண்டுக்காம இவள நம்புறானே அந்த புருசனாயாவது ஒரு நொடி புத்தில யோசிக்கிறாளா பாரு?” எனக் கோதை தனக்குள் ஆத்து ஆத்துப் போனாள்.

ஆத்து ஆத்துப் போய் மட்டும் என்ன ஆகப்போகிறது. கோதை தலையில் இரண்டு முடி கூடுதலாக நரைத்தது தான் மிச்சம். சஞ்சய்க்கு திருமணம் ஆகும் வரையில் அவனுடன் சுற்றியவள் அவனுக்குத் திருமணம் ஆனவுடன் வேறு ஆளைப்பிடித்து விட்டாள்.

இம்முறை சிக்கியது அண்ணாமலை. தலைமை அலுவலகத்தின் பியூன். ப்யூனாக இருந்தாலும் ஆறடி உயரத்தில் ஆள் ஜம்மென்று இருப்பான். ஒரு ராயல் என்ஃபீல்ட் புல்லட் வைத்திருந்தான்.

“அவம் பொண்டாட்டி ஏறினாளோ இல்லையோ இவ ஏறி அந்த புல்லட் சீட்டை தேய் தேய்னு தேய்க்கிறாடி” என்று கிண்டல் பேசி சிரித்தார்கள் அனைவரும்.

இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, மிக முக்கியமான அலுவலகக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னைக் கிளையில் உள்ள அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டியது. கூட்ட நாளும் வந்தது. ஒன்பது மணிக்கே தொடங்க வேண்டிய கூட்டத்துக்குப் பத்து மணி ஆகியும் செல்வி வந்து சேரவில்லை. கோதையிடம் செல்விக்கு போன் செய்து ஏன் தாமதம் எனக் கேட்கச் சொன்னார் பொது நிர்வாகி.

கோதையும் உடனடியாக அவளை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றாள். முதல் இருமுறை அழைத்த போது செல்வி அழைப்பை ஏற்கவில்லை. மூன்றாவது அழைப்பினை ஏற்று அவள் பேசியது கோதைக்கு எதுவும் புரியவில்லை. அவள் அழுதபடி ஏதோ புலம்பினாள். அதில், ‘”அக்கா, அக்கா இவரு இவரு” மட்டும் தான் கோதைக்குப் புரிந்தது.

சுதர்ஷனுக்கு என்னமோ ஏதோ என்று பதறிப்போனாள் கோதை. “இரு, இரு அழாத மீட்டிங் முடியப் போகுது. சொல்லிட்டு வரேன். உனக்கு லீவ் சொல்லிட்றேன்” என்றவள், பொது நிர்வாகியிடம் தெரிவித்து விட்டு காவ்யாவுடன் செல்வி வீட்டுக்குப் புறப்பட்டாள்.

அரைகுறையாக அலுவலகத்துக்குக் கிளம்பிய தோற்றத்தில், சீராக வரைந்த ஓவியத்தில் யாரோ தண்ணீரைக் கொட்டி விட்டாற் போலிருந்தது அவள் கலைந்து கலங்கி அமர்ந்திருந்த தோற்றம். ‘என்னாச்சு செல்வி’ என்ற கோதையிடம் “அவர் மூணு நாளா வீட்டுக்கு வரலக்கா, ஆஃபிஸ் டூர்னு கிளம்பி போனாரு, இன்னிக்கு காலைல தான் இந்த லெட்டர் கிடைச்சது” என்றவாறு ஓர் இளம் நீல நிறக் குட்டி சதுரமாய் மடிக்கப்பட்ட பெரிய சதுர பேப்பரை நீட்டினாள்.

எந்த விளிப்புமின்றி தொடங்கி இருந்தது அது.

“இப்படி முடிந்திருக்க வேண்டியதில்லை இந்த உறவு, நீ என்ன செய்தாய் என்று உனக்கே தெரியும், அவரவர் நியாயம் அவரவர்க்கு, என்னுடையது எனக்கு, இங்கு செட்டிலான பின் குழந்தைகளை அழைத்துக் கொள்வேன். மாட்டேனோ என்று பயப்படத் தேவையில்லை. உன்னிடம் அவர்கள் குறிப்பாக மது, மாதவி (இரட்டையர்கள்) வளர்வதில் எனக்குச் சிறிதும் இஷ்டமில்லை.”

என்ன தான் வெற்றிச்செல்வியின் நடத்தை மோசமானதாக இருந்த போதிலும் சுதர்ஷன் அவளை இப்படி அம்போவென விட்டுச் சென்றிருக்க வேண்டாமெனத் தான் கோதைக்குத் தோன்றியது. பேசி சரி செய்திருக்கலாம் தானே என்ற எண்ணம் எழுந்ததை கோதையால் தடுக்க முடியவில்லை, அவள் அதனைத் தடுக்கவும் முயலவில்லை.

இவ்வளவு நிதானமாகத் திட்டமிட்டு பணியிட மாற்றம், கிளம்பும் வரை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், இறுதிக் கணம் வரை பொய் சொல்லி விலகிப் போயிருப்பது, இதெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சுதர்ஷன் செல்விக்கு இந்தப் பிரிவு மட்டுமின்றி இன்னும் ஏதோ ஒரு பெரிய தண்டனை கொடுக்கப் போகிறான் என்ற எண்ணம் கோதைக்கு எழுந்து கொண்டேயிருந்தது. அவளால் அந்தத் தண்டனை என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை.

மூன்று நாட்களுக்குப் பின் அந்தத் தண்டனைப் புதிருக்கு விளக்கத்தைச் செல்வி கொடுத்தாள். “அக்கா அம்மா சித்தி வீட்டுக்குப் போறேன்னு கிளம்பிப் போனாங்கல்ல. அங்க வரவேல்லன்னு சித்தி சொல்றாங்க. அம்மா மொபைல் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு. அம்மா வீட்ல எந்தப் பொருளுமே இல்லை. வீடே சாவு எடுத்து முடிச்ச வீடாட்டம் வெறிச்சோடிக் கெடக்கு, ஒரு பொருளுமில்லை” என்று அழுதாள்.

” அழாத செல்வி,அம்மா என்னிக்கு ஊருக்குப் போனாங்க?”

ஐந்து இல்ல ஆறு நாளாச்சு, இருங்கக்கா சரியா சொல்றேன், இவரு கிளம்பின அன்னிக்கு தான் அவங்களும் புறப்பட்டாங்க. டைம் தான் ஒரு அரைமணி நேரம் முன்னபின்ன”

சொல்லும்போதே செல்வி ஒரு கணம் திகைத்தாள், அவள் தலை மறுப்பாக இடம் வலத்தில் அசைந்தது. வாய் ‘இருக்காது, இருக்காது, இருக்காது, இருக்காது, இருக்காது, இருக்காகாகாகாதூ, இருக்காகாகாகாதூதூதூ’ தலையசைவின் வேகமும் சொற்களின் அளவினைப்போல அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

தாய் அறியாத சூல் இல்லை என்பது போல சூல் அறியாத தாயுமில்லை.

செல்வியின் உடல்மொழி, இழவு வீட்டில் அமர்ந்திருந்ததைப் போல் இருந்தது. ஒற்றைக் காலைக் குத்துக்காலிட்டு செயற்கை நட்சத்திரங்கள் மங்கலான ஃப்ளூரசன்ட் பச்சையில் மின்னும் கூரையை வெறித்துக் கொண்டிருந்தாள். அவ்வளவு நிராசையான கண்களைக் கோதை இதுவரை சந்தித்ததே இல்லை. இனிமேலும் காணப்போவதில்லை என்று தான் தோன்றியது.


 Art Courtesy : Pinterest

எழுதியவர்

தேவசீமா
தேவசீமா
குளித்தலையில் பிறந்தவர். தஞ்சையப் பூர்வீகமாகக் கொண்டவர். பூர்வீகத்தைக் கிள்ளித் துளி வாயில் போட்டுக்கொள்வதை இனிய சடங்காக மேற்கொள்பவர். பிரபஞ்சத்தின் நடு மையத்தில் எண்ண விதைகளைத் தூவி விட்டு கனிகளாக கதைகள் விழுமெனக் கை நீட்டிக் காத்திருப்பவர்.
இவர் எழுதிய ’வைன் என்பது குறியீடல்ல’, ‘நீயேதான் நிதானன்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்போது சென்னையில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Karthik Nilagiri
1 year ago

இந்த கதையை எப்படி எடுத்துக் கொள்வது தெரியவில்லை… வாழ்க்கை என்பதே அந்தந்த நேரத்து அவரவர் நியாயம் தானே…

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x