1.

போலோ ஸ்போர்ட் பெர்பியூமைத் தேடிக்கொண்டிருந்தான் விக்ரம், அவனது அப்பார்ட்மெண்ட் இருக்கும் பதினெட்டாவது தளத்தில் ஆழ்ந்த அமைதி நிலவியது. அவனது படுக்கையின் அருகே இருக்கும் மேசையில் தான் எப்போதும் அந்த நீல நிற பெர்பியூம் இருக்கும். மணி இரவு பத்து. பதினொரு மணிக்கு நுங்கம்பாக்கத்தில் இருக்க வேண்டும் என்பதை நினைத்தவுடன் படபடப்புடன் பெர்பியூமைத் தேடினான். மேசையின் பின்புற இடுக்கில் விழுந்து கிடந்த பாட்டிலை எடுத்து இட வல மார்போரம் ஸ்ப்ரே செய்துவிட்டு கார் சாவியை எடுத்துக் கொண்டு பார்க்கிங் நோக்கிச் சென்றான். அவனது சிகப்பு நிற பி.எம்.டபிள்யூ காரில் ஏறியவுடன் போனை எடுத்து முகவரியை சரிபார்த்துக்கொண்டு வண்டியைக் கிளப்பினான். சென்னையின் இரவுச் சாலையில் பயணிப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். காரை நுங்கம்பாக்கத்திலுள்ள அந்த முகவரியின் முன்னிருக்கும் மரத்தடியில் நிறுத்திவிட்டு போனை எடுத்து அஞ்சனாவிற்கு டயல் செய்தான். மறுமுனையில் உள்ளே வரலாம் என்றவுடன், இறங்கிச் சென்று அந்த வீட்டின் கேட்டைத் திறந்துவைத்துவிட்டு மீண்டும் காரில் ஏறி வீட்டின் முன்பகுதியில் காரை நிறுத்தினான். திறந்திருந்த கேட்டை மூடிவிட்டு வீட்டு வாசற்படியில் ஏறும்போது வீட்டின் கதவு திறந்தது.

அஞ்சனா நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் விக்ரமிற்கு பெரும் அதிர்ச்சியாகிவிட்டது. உள்ளே அழைத்து சோபாவில் உட்காரச் சொன்னாள். இரு பத்து நிமிடத்தில் வருகிறேன் என்றவள் மாடிப் படியில் ஏறி முதல் தளத்திற்குச் சென்றாள். விக்ரம் அந்த விசாலமான வரவேற்பறையைக் கவனிக்கத் துவங்கினான். அந்த அறையின் சுவரில் அஞ்சனாவின் ஆளுயர ஒளிப்படம் தொங்கிக்கொண்டிருந்தது. அதில் அவள் புன்னகையுடன் நின்றிருந்தாள். அவள் கட்டியிருந்த பச்சை நிறப்புடவையும் முன்புறமாய் கிடந்த நீள் கூந்தலும் அவளது அழகை மேலும் அதிகமாக்கிக் காட்டுவதாக அவனுக்குத் தோன்றியது. போனை எடுத்து வாட்சப்பில் குமாருக்கு ஒரு நடுவிரல் எமோஜியை அனுப்பினான். பதிலுக்குக் கண்ணடிக்கும் எமோஜியை அனுப்பிவிட்டு என்ஜாய் என்று அனுப்பியிருந்தான் குமார். அஞ்சனா இன்னும் வரவில்லை. பத்து நிமிடத்தில் வருகிறேன் என்றவள் முப்பது நிமிடங்கள் கடந்த பின்னும் வரவில்லை என்பதால் விக்ரமுக்கு கோபம் வந்தது. ஆனாலும் பொறுத்துக்கொண்டான். போனில் ரீல்ஸ் பார்த்தபடி அமர்ந்திருந்தவனை அஞ்சனாவின் குரல் உசுப்பியது.

“ஐம் ரெடி, கம் டு அப்ஸ்டேர்ஸ்” முதல் தளத்திலிருந்து அவளது குரல் கேட்ட திசையை தலையுயர்த்திப் பார்த்தான். அங்கே இரவு உடையில் நின்றிருந்தாள் அஞ்சனா. அந்தப் புகைப்படத்திலிருப்பது போலவே கூந்தலை முன்பக்கமாக வழிய விட்டிருந்தாள். விக்ரம் சோபாவிலிருந்து எழுந்து மாடிப்படிகளில் ஏறி அவள் அருகே சென்றான்.

“சாக்ஸ் கழட்ட மாட்டியா…லீவ் யுவர் சாக்ஸ் நியர் த ஷு ரேக்” என்று வீட்டின் முன்வாசலை நோக்கி விரல்களை நீட்டினாள் அஞ்சனா. அவனுக்கு எரிச்சலாக வந்தது. சாக்ஸை கழற்றி இங்கிருந்தே எறிந்துவிடலாமா என்றுகூட யோசித்தான். அவள் கைகளை மார்புகள் மறையும்படி கட்டிக்கொண்டு அவனைக் கூர்ந்து பார்த்தபடி நின்றிருந்தாள். படிக்கட்டில் இறங்கி வீட்டின் முன் வாசற்கதவருகே இருக்கும் ஹூ ரேக்கின் அருகே சாக்ஸை கழற்றி வைத்துவிட்டு மீண்டும் மாடிப்படிகளில் ஏறினான் விக்ரம்.

“வாஷ் யுவர் ஹேண்ட்ஸ் தேர்” என்று மாடியிலிருக்கும் அறைக்கு பக்கத்திலிருந்த வாஷ் பேஷினைக் காண்பித்தாள். அவனுக்கு கோபம் அதிகமாகியது. மனதிற்குள் “சுத்தம் பாக்குறா சுத்தம்…இன்னிக்கு இவள என்ன செய்யறேன் பாரு” என்று கருவிக்கொண்டு வாஷ் பேஷினில் கைகளைக் கழுவிவிட்டு அவளை நோக்கித் திரும்பினான்.

“ஹேண்ட் வாஷ் யூஸ் பண்ணியா?” அவள் கேட்ட தொனியில் விக்ரம் தன் பொறுமையை இழந்தான்.

ஆனாலும் “ம்” என்று மட்டும் பதிலிட்டுவிட்டு நெற்றியில் விழும் முடியைக் கோதியபடி அவளெதிரே நின்றிருந்தான்.

“கம் வித் மீ” என்றவள் அருகிலிருந்த அறைக்குள் நுழைந்தாள். அவளைப் பின் தொடர்ந்த விக்ரம் அந்த அறையின் ஏசி காற்று முகத்தில் பட்டதும் அவனது கோபம் கொஞ்சம் குறைந்தது போல உணர்ந்தான். அந்தப் படுக்கையறை மிகப்பெரியதாக இருந்தது. அதன் நடுவே மிகப்பெரிய கட்டிலும் மெத்தையும் இருந்தன. ஊதா நிற வெல்வெட் படுக்கை விரிப்பும் அதிலிருந்த துலிப் பூக்களும் அஞ்சனா ஒரு ரசனைக்காரி என்பதை அவனுக்கு உணர்த்தின. படுக்கைக்கு நேர் எதிரே பெரியதொரு சோபாவும் அதன் முன் பிரம்பாலான டீபாயும் இருந்தன. அதில் உயர் ரக மது புட்டி ஒன்றும் ஒரு கண்ணாடித் தம்ளரும் ஒரு தண்ணீர் பாட்டிலும் இருந்தன. அறைக்குள் நுழைந்த அஞ்சனா அந்த சோபாவில் அமர்ந்து தன் கால்களை அந்த டீபாயின் மீது வைத்துக்கொண்டாள்.

விக்ரம் தன் டிஷர்டை கழற்ற முயன்றபோது சைகையால் கழற்றாதே என்றாள். அந்த மதுப்புட்டியிலிருந்து மதுவை ஊற்றிக் கொடு என்று சைகையிட்டாள். அவன் மதுப்புட்டியைத் திறந்து கண்ணாடித் தம்ளரில் அந்த விஸ்கியை ஊற்றி அவளிடம் நீட்டினான். அதைப் பெற்றுக்கொண்டவள் ஒரு மிடறு குடித்துவிட்டு அதை டிபாயில் வைத்துவிட்டு எழுந்தாள்.

“உனக்கென்னடா வயசு”

சட்டென்று டா என்றவுடன் அவனுக்கு மீண்டும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“கொஞ்சம் மரியாதையா பேசுங்க” சொல்லிவிட்டு சோபாவில் போய் உட்கார்ந்தான்.

“உன்னை நான் உட்கார சொல்லலையே விக்ரம்” என்றவள் சொல்லிவிட்டு சத்தமிட்டு சிரித்தாள்.

ஸாரி என்றவன் சோபாவிலிருந்து எழுந்தான்.

“இப்ப நான் என்ன செய்யனும்?”

“கேட்ட கேள்விக்கு பதில் மட்டும்தான் சொல்லனும், எதிர்க்கேள்வி எனக்குப் பிடிக்காது புரியுதா மேன்?”

“ம் சரி. என் வயசு இருபத்தெட்டு”

“எத்தனை வருஷமா இருபத்தெட்டு”

“போன மாசம் இருபத்தி ஏழாம் தேதியிலிருந்து”

“உன்னைப் பார்க்க முப்பத்தெட்டு வயசு மாதிரி இருக்கே”

“அதுக்கு நான் பொறுப்பாக முடியாது”

“ம் சரி, டிஷர்ட்டை கழற்றிட்டு நில்லு”

அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஓர் இரவிற்குப் பத்து லட்ச ரூபாய் என்றவுடன் யார் என்ன என்று விசாரிக்காமல் ஒத்துக்கொண்டான். அஞ்சனா என்கிற பெயரை குமார் சொன்னதும் நாற்பது வயதிற்குள் இருக்கும் என்றுதான் முதலில் நினைத்தான். ஆனால் அஞ்சனாவிற்கு அறுபது வயதிற்கு மேலிருக்கும் என்பதை வாசற்கதவை அவள் திறந்தபோதே உணர்ந்துகொண்டான். இந்தத் தொழிலில் எவ்வளவோ பார்த்திருக்கிறான், உடல் தேவைக்காக அழைப்பார்கள் ஆனால் இரவெல்லாம் அழுது தீர்ப்பார்கள் அல்லது கட்டிக்கொண்டு இரு வேறெதுவும் தேவையில்லை என்பார்கள். வயது ஒரு பொருட்டில்லை என மனம் சொன்னபோதும் அஞ்சனாவிற்கு இந்த வயதில், அதுவும் ஒரே ஒரு இரவுக்கு ஏன் ஒரு ஆண் தேவைப்படுகிறான் என்கிற கேள்வி அவனுக்குள் எழுந்தது.

“ரொம்ப யோசிக்காத…டிஷர்டை கழற்றச் சொல்லி அஞ்சு நிமிஷம் ஆச்சு” அவளது குரல் சற்று உயர்ந்திருந்தது.

டிஷர்டை கழற்றிவிட்டு வெற்று மேலுடம்புடன் நின்றிருந்தான். அவனது இடமார்பில் பெரியதொரு எருதின் டாட்டூ இருந்தது. அஞ்சனா அந்த டாட்டூவையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனுக்கு என்னவோ போலிருந்தது.ஏசியின் குளிர் காற்று மார்பில் பட்டவுடன் உடல் சிலிர்த்தது.

“என்ன பெர்பியூம் யூஸ் பண்ற?”

“போலோ ஸ்போர்ட்”

“அது நல்ல பெர்பியூமாச்சே…ஆனா உன் உடம்புல இருந்து வேற ஏதோ வாடை வருது…நாட்டு நாயோட வாடை மாதிரி” சொல்லிவிட்டு சிரித்தாள்.

அவனுக்கு உடல் கூசியது. மனதுக்குள் கெட்ட வார்த்தையால் திட்டித் தீர்த்தான்.

“என்ன மனசுக்குள்ள என்னைத் திட்டியிருப்பியே?” அஞ்சனா அப்படிக் கேட்டதும் என்ன பதிலிடுவது என யோசித்தபடி நின்றிருந்தான்.

“நாயோட வாடைன்னா திட்டாம என்ன செய்யறது?”

“அப்படி எல்லாம் திட்டலன்னு சொல்லுவன்னு நெனச்சேன். ஆனா நிஜம் சொல்லிட்ட. குட். சரி…அந்த சோபாவுல போய் உட்கார்”

“ரொம்ப குளிருது, ஏசிய கொஞ்ச நேரம் நிறுத்தறீங்களா?” வெற்று மார்புடன் சோபாவில் உட்கார்ந்தபடியே கேட்டான் விக்ரம்.

அஞ்சனா தன் அருகே கிடந்த ஏசி ரிமோட்டை எடுத்து ஏசியை நிறுத்தினாள். ஏசியின் சத்தம் நின்றதும் அந்த அறையில் ஆழ்ந்த அமைதி நிலவியது. விக்ரம் தன் எதிரே இருக்கும் படுக்கைக்குப் பின்புறமுள்ள சுவரை அப்போதுதான் கவனித்தான். அதில் மிகப்பெரியதொரு கழுமரத்தின் ஒளிப்படம் இருந்தது. இதற்கு முன் இப்படியொரு ஒளிப்படத்தைப் பார்த்ததில்லை. அந்தக் கழுமரத்தின் கூர்மையான பகுதி மட்டும் மிளிர்வது போலிருந்தது. கழுவில் ஏற்றிக் கொல்வதைப் பற்றி எப்போதோ படித்தது நினைவுக்கு வந்தது. பார்வை அந்தக் கழுமரத்திலிருந்து கீழிறங்கி படுக்கைக்கு நகன்ற போது அஞ்சனா கூர்மையான பார்வையுடன் அவனைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

“எதுக்கு அதிகமா பணம் குடுத்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா” மனதிற்குள் குடைந்துகொண்டிருந்த கேள்வியைக் கேட்டுவிட்டு அவளைப் பார்த்தபடி சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான்.

“நீ ஒரு கால்பாய். உனக்கு எதுக்குப் பணம் கொடுப்பார்கள்?”

“எதுக்கு கொடுத்தீங்கன்னு கேட்கல. எதுக்கு அதிகம்னுதான் கேட்டேன்”

அஞ்சனா எழுந்து சென்று அந்த அறையிலிருந்த பீரோவைத் திறந்தாள். அதற்குள்ளிருந்து உயர் ரக சிகரெட் ஒன்றை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.

“இல்லை பழக்கமில்லை”

“உனக்கு பழக்கமிருக்கான்னு கேட்டேனா? சிகரெட் கொடுத்தா மறுக்காம எடுத்துக்கணும், குமார் என் தேவைகள் பற்றி சொல்லலையா?”

விக்ரமுக்கு எப்பொழுது விடியும் என்றிருந்தது. நேராக குமார் வீட்டிற்கு போய் அவனுக்கு நான்கு அறைகள் கொடுக்க வேண்டும் போலிருந்தது. அவனைச் சொல்லி குற்றமில்லை, எனக்கு பத்து லட்சம் என்றால் அவனுக்கு ஒரு லட்சம் வாங்கியிருப்பான். பத்து ப்ரசன்ட்.

பிடிக்காத விஷயங்களைச் செய்வதற்கு விக்ரம் என்றுமே ஒத்துக்கொண்டதில்லை. ஆனால் குமார் போன்ற தரகர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு இழுத்த இழுப்புக்கெல்லாம் விக்ரம் வருவான் என்று கஸ்டமர்களிடம் சொல்லிடுவதுண்டு. போன மாதம் நீலாங்கரையில் ஒரு கஸ்டமர் வீட்டிற்குப் போயிருந்தான். அந்தப் பெண் தன் தேவை முடிந்ததும் இவன் காதில் கிசுகிசுத்தாள். துள்ளி எழுந்தவன், ஐம் நாட் எ கே, என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அந்த அறையை விட்டு வெளியேறி வரவேற்பறைக்கு வந்து தன் ஷூவை மாட்டிக்கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணின் கணவன் எதிரிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தபடி விக்ரமை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். வேகமாக வீட்டை விட்டு வெளியேறி காரில் ஏறியவுடன் குமாருக்கு போன் செய்தான். அதிகமாக அந்தப் பெண்ணிடம் பணம் வாங்கிக்கொண்டு விக்ரம் பை செக்‌ஷுவல் கை என்று குமார் அவளிடம் பொய் சொல்லியிருந்தது அப்போதுதான் விக்ரமுக்கு தெரிந்தது. உலகின் அனைத்து மொழிகளிலுமுள்ள கெட்ட வார்த்தைகளால் குமாரைத் திட்டித் தீர்த்தான் விக்ரம்.

“டேக் இட் யங் மேன்” அஞ்சனாவின் குரலில் இயல்புக்குத் திரும்பியவன் வேண்டா வெறுப்பாக சிகரெட்டை எடுத்துக்கொண்டான். கல்லூரியில் படிக்கும் போது ஒன்றிரண்டு முறை நண்பர்களின் வற்புறுத்தலில் சிகரெட் பிடித்தது ஞாபகத்திற்கு வந்தது. அஞ்சனா லைட்டரை நீட்டினாள். அதை வாங்கி சிகரெட்டைப் பற்றவைத்துவிட்டு டீபாயில் லைட்டரை வைத்தான்.

பாம்புக்குட்டிகளைப் போல நெளிந்தபடி இருந்தது சிகரெட்டின் புகை.

சிகரெட்டை இழுத்தவுடன் தொடர்ந்து இருமல் வந்தது. நான்கைந்து முறை இருமியவன் ஜீன்ஸ் பாக்கெட்டில் கையை விட்டு அதிலிருந்த டிஷ்யூவில் ஒன்றை எடுத்து வாயைத் துடைத்துக்கொண்டான். அஞ்சனாவுக்கு அவன் இருமியது பிடித்தது.

“இன்னும் இருமுவேன்னு நெனச்சேன்”

“ஏன் இருமிச் சாகணுமா நான்?” அவனது வார்த்தைகள் தடித்திருந்தன.

“இருமுனா செத்துற மாட்ட. ஹாவ் சம் வாட்டர்” என்றபடி டீபாயிலிருக்கும் தண்ணீர் பாட்டிலை நோக்கி விரலை நீட்டினாள் அஞ்சனா.

“நான் வந்த வேலையை ஆரம்பிக்கலாமா” அவனுக்கு சீக்கிரம் வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்கிற எண்ணம் மேலிடத் துவங்கியிருந்ததை அஞ்சனா உணர்ந்துகொண்டாள்.

“நீ வந்து ஒரு மணிநேரம் கூட ஆகல. ஏழு மணி நேரத்திற்கு உன்னை புக் பண்ணியிருக்கேன். காலைல ஆறு மணி வரைக்கும் நமக்கு டைம் இருக்கு” சொல்லிவிட்டு அவனது கண்களை உற்றுப் பார்த்தாள். அவனுக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை என்பதை அவனது கண்கள் காட்டிக்கொடுத்தன. அவளுக்கும் அதுதான் தேவையாய் இருந்தது.

“உன் பெயர் என்ன?”

“விக்ரம்” அவனுக்கு பேசுவதில் விருப்பமில்லை. சலிப்புடன் அவள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

“உன் நிஜப் பெயரைக் கேட்டேன்”

“எந்தப் பெயரைச் சொன்னா நம்புவீங்க?”

“ஒங்க அம்மா அப்பா வெச்ச பெயரை”

“அது உங்களுக்குத் தேவையில்லாதது” விக்ரம் சிகரெட்டை அணைத்துவிட்டு சோபாவிலிருந்து எழுந்தபடியே சொன்னான்.

“முதலில் உட்கார். என் அனுமதி இல்லாமல் நீ எழுந்திரிக்க முடியாது”

விக்ரமிற்கு புரிந்துவிட்டது. அஞ்சனா தன்னை டாமினேட் செய்ய விரும்புகிறாள். எத்தனையோ பெண்களிடம் சப்மிசிவாக இருந்திருக்கிறான். அவர்கள் படுக்கையில்தான் புலியாக இருப்பார்களே தவிர இவளைப் போல வார்த்தையால் அதிகாரம் செய்ததில்லை. சரி இது ஒரு புது ரகம் போல என நினைத்துக்கொண்டு மீண்டும் சோபாவில் உட்கார்ந்தான்.

“தரையில் உட்கார்” அவள் அப்படிச் சொன்னதும் எதுவும் பேசாமல் சோபாவிலிருந்து இறங்கி படுக்கையின் அருகே தரையில் உட்கார்ந்தான். இப்போது அவனிடம் கோபமும் எரிச்சலும் இல்லை இனி அவனை வார்த்தையால் குத்த முடியாது என்பதைப் புரிந்து கொண்ட அஞ்சனா அவனது தலை மீது தன் பாதத்தை வைத்தாள். இதைச் சற்றும் எதிர்பார்க்காதவன் சட்டென்று விலக, அவளது பாதம் அவனது மார்பில் உரசி கீழே போனது.

“உனக்கு கோபம் வரலையா?”

“உன் முடிய கொத்தா பிடிச்சு நாலு அறை கொடுக்கணும் போல இருக்குடி…ஓல்ட் பிட்ச்” மனசுக்குக்குள அவளைத் திட்டியவன் பதிலேதும் பேசாமல் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான்.

“என் பக்கத்தில் வந்து உட்கார்” சொல்லிவிட்டு ஒரு தலையணையை எடுத்து முதுகுக்குக் கொடுத்தபடி சுவரில் சாய்ந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டாள்.

விக்ரம் அவள் அருகே சென்று அமர்ந்தான். அப்போதுதான் அவளது உடலிலிருந்து எழுகின்ற வாசத்தை நுகர்ந்தான். அந்த நறுமணம் அவன் இதற்கு முன் எங்குமே நுகர்ந்ததில்லை. பெர்பியூம் வாசம் மாதிரியும் இல்லை. இது வேறு ஏதோவொன்று. அவளிடம் கேட்கலாம் என்று நினைத்தவன் கேட்டால் மட்டும் சொல்லிவிடவா போகிறாள் என்று நினைத்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

“எப்படி இந்தத் தொழிலுக்கு வந்த விக்ரம்?”

“ஐ நீட் மணி” இது அவன் சந்திக்கும் பெண்கள் அனைவரும் கேட்கும் கேள்வி என்பதால் சற்றும் யோசிக்காமல் தன் இடக்கை நகங்களைப் பார்த்தபடியே பதிலிட்டான்.

“ஏன் அதிகமா கொடுத்தேன்னு கேட்டல்ல. உன் போட்டோவை பார்த்தேன், உன் கண்கள் எனக்குப் பிடிச்சிருந்துச்சு. அதான் அதிகம் குடுத்தேன்” அவனது கண்களை கூர்ந்து பார்த்தபடியே சொன்னாள்.

“இதுமாதிரி நிறைய கேட்டாச்சு, எல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கும் அப்புறம் எல்லாம் முடிஞ்சதும் சீ சீக்கிரம் இடத்தை காலிபண்ணுடான்னு விரட்டுவாங்க…நான் பார்க்காததா” சலிப்புடன் பதிலிட்டுவிட்டு தொங்குகின்ற கழுவின் ஒளிப்படத்தில் பார்வையை நிறுத்தினான்.

அவள் சத்தமாகச் சிரித்தாள். எதற்காகச் சிரிக்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை. சிரித்துவிட்டுப் போகட்டும் என்பது போல உட்கார்ந்திருந்தான்.

“என் காலை மசாஜ் செய்துவிடு” சொல்லிவிட்டு கால்களை அவனது மடியில் எடுத்து வைத்தாள். கால் முட்டியிலிருந்து பாதம் வரை மெதுவாக அழுத்திவிட்டான். அவள் கண்கள் மூடியபடி படுத்திருந்தாள்.

2.

தினைந்தாவது வயதில்தான் அவள் முதன் முதலாக அந்த நகரத்தில் காலடி எடுத்துவைத்தாள். எல்லாம் புதியதாக இருந்தது. அவளை மணமுடித்து மும்பைக்கு அழைத்து வந்தவன் ரயில் நிலையத்தின் அருகேயிருந்த லாட்ஜில் விட்டுவிட்டு இன்னும் ஒரு மணி நேரத்தில் வருகிறேன் என்று போனவன் திரும்பவே இல்லை. பயணக் களைப்பில் அசந்து உறங்கியவள் இருமியபடியே எழுந்தாள். அந்த அறை முழுவதும் சிகரெட்டின் புகை மண்டிருந்தது. அவளது படுக்கையின் எதிரேயிருந்த நாற்காலியில் ஒரு கிழவன் உட்கார்ந்திருந்தான். அவள் விழித்தவுடன் சிகரெட்டைத் தூர எறிந்துவிட்டு அவள் மீது பாய்ந்து அவளது கன்னத்தில் படார் படார் என அறைந்தான். இதைச் சற்றும் எதிர்பார்க்காதவள் அவனைத் தள்ளிவிட்டு எழ முயன்ற போது இடுப்பிலிருந்து இரும்புக் கம்பியை எடுத்தவன் அவளது தலையில் ஓங்கி அடித்தான்.

மயக்கம் தெளிந்தபோது அவளால் தன்னுடலை அசைக்க முடியவில்லை. உடலெங்கும் வலி ஒரு பாறாங்கல்லைப் போல கனத்திருந்தது. அதன் பிறகு அவளது வாழ்வே மாறிப்போனது. மும்பையின் சிகப்பு விளக்குப் பகுதியில் தன்னைப் போலவே ஏராளமானோர் இருப்பதைப் பார்த்தபோது இனி இதுதான் வாழ்வு என நினைத்து தினம் தினம் உடைந்தழுதாள்.

அவளது முப்பத்தி எட்டாவது வயது வரை தினம் தினம் அவள் சந்தித்த விலங்குகளின் எண்ணிக்கை கணக்கிடமுடியாமல் போனது. அவளைச் சந்திக்கும் மனிதர்களின் வாடையைக் கொண்டே அவர்களுக்குப் பெயரிடுவாள். பன்றி, தெருநாய், சேற்றெருமை, கிழட்டு ஓநாய், நொண்டிச்சிறுத்தை என அவளது மிருகங்களின் பட்டியல் நீளமானது.

ஒவ்வொரு மிருகத்திற்கும் தன்னுடலைக் கொடுக்கும் கணங்களில் அந்த மிருகத்தின் வாடை தன் மீது ஒட்டிக்கொண்டு தன் கழுத்தை நெரிப்பது போலிருக்கும். அப்பொழுதெல்லாம் சன்னல் வழியே தெரியும் மும்பை நகரின் இரவுச்சாலையும் அதில் விரையும் வாகனங்களை எண்ணிக்கொண்டே அந்த மிருகங்களை மனதிற்குள் திட்டியபடியே கிடப்பாள். அது மட்டுமே அவளது மனதைத் திசைதிருப்புவதாக இருந்தது.

தன் இருபத்தி ஒன்பதாவது வயதில் அவள் சந்தித்த மிருகமொன்றிற்கு ஆட்டுக்குட்டி எனப் பெயரிட்டாள். அது வாடையால் வந்த பெயர் அல்ல. நண்பர்களால் அந்தப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக வந்த மிருகம் அது. நாற்பத்தி மூன்று வயதிலும் மரித்த தன் மனைவியின் நினைவால் வாழும் அந்த மிருகத்திடம் முதன் முதலாகத் தன் மனதைக் கொடுத்தாள். அந்த ஆட்டுக்குட்டிதான் அந்தச் சேற்றிலிருந்து அவளை மீட்டெடுத்து சென்னைக்கு அழைத்து வந்தது.

இனியொரு புதிய வாழ்வை வாழ நினைத்தவளின் எண்ணத்தில் சம்மட்டியால் அடித்தது வாழ்வு. அந்த ஆட்டுக்குட்டி சென்னையின் பிரபலப் பெண் புரோக்கர் என்பது தெரிந்ததும் உடைந்துபோனாள். அது ஆட்டுக்குட்டி அல்ல குள்ளநரி என்பது அப்போதுதான் அவளுக்கு விளங்கியது. அன்றிலிருந்து தன் முப்பத்து ஐந்தாவது வயது வரை அவளுடலை வெவ்வேறு மிருகங்கள் ருசித்தபடியே இருந்தன.

எதற்காக இந்தப் பிறப்பு, எதற்காக இந்த வாழ்வு என அவள் நொடிந்திருந்த நாளொன்றில் அவளைச் சந்தித்த முதிர்ந்த பெரும் பணம் படைத்தவர் அவளைத் தனதாக்கிக் கொள்ள விரும்பியதும் புரோக்கரிடம் பெரியதொரு தொகை கொடுத்ததும் அவள் இருப்பிடம் மாறியதும் ஒரே வாரத்தில் நிகழ்ந்தன. அவள் எதுவும் பேசாமல் அந்தப் பெரியவரின் பின் சென்றாள். முதன் முதலாகக் கட்டுக் கட்டாய் பணத்தைத் தொட்டுப் பார்த்தாள். அது அவளுக்குத் தந்த கிளர்ச்சியும் மகிழ்வும் அதுவரை அவள் அனுபவித்ததேயில்லை.

அந்தப் பெரியவருக்கு உறவென்று யாருமில்லை. அவர் சாகும் முன் அவரது சொத்து முழுவதையும் அவளுக்கே எழுதிவைத்தார். தன் ஐம்பதாவது வயதில் அவரை இழந்தபோது அவளுக்கு எவ்வளவு முயன்றும் கண்ணில் நீர் வரவில்லை. அவர் விட்டுச் சென்ற மிதமிஞ்சிய பணத்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு விலங்கைச் சந்திப்பதற்காகச் செலவிட்டு வந்தாள்.

3.

ன் காலை அழுத்திவிடும் விக்ரமின் கையில் வழிகின்ற வேர்வைத் துளிகளைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.

“ஏசியில கூட உனக்கு வேர்க்குதே?”

“இரண்டு மணி நேரமா அழுத்திவிடுகிறேனே அதான் வேர்க்குது” அவன் களைப்பாக இருக்கிறான் எனத் தெரிந்தது.

“மனசுக்குள்ள எத்தனை முறை என்னை ஓல்ட் பிட்சுன்னு திட்டின விக்ரம்?” என அவள் கேட்டதும் திடுக்கிட்டவன் எப்படி இவள் மிகச்சரியாகக் கணித்தாள் என்று நினைத்துக்கொண்டே நெற்றியில் வழிகின்ற வியர்வைத்துளிகளை இடது கையால் துடைத்தான்.

“அப்படி எல்லாம் திட்டல மேம்”

“ஏன் பொய் சொல்ற விக்ரம். உன் இடத்துல நானிருந்தா திட்டதான் செய்வேன். சரி படுக்கையிலிருந்து இறங்கு. அந்த சோபாவுக்கு கீழே ஒரு பாய் இருக்கும் அதில் படுத்துக்கொள், இப்போ நான் தூங்கணும்”

“தூங்கணுமா, அதுக்கு ஏன் என்னை வரச்சொன்னீங்க?” புலம்பியபடியே பாயை எடுத்து விரித்து அதில் படுத்துக்கொண்டான்.

சிறிது நேரத்தில் உறங்க ஆரம்பித்த விக்ரமின் கனவில் கழுமரத்தில் தன்னுடலை அஞ்சனா ஏற்றி தன்னுடலெங்கும் ரத்தம் கசிவதாக உணர்ந்து திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். அவனது இதயத்துடிப்பு அதிகமாகியது.

அப்போது அவள் உடலிலிருந்து கசிந்த வாடை மலைப்பாம்பின் வாடையை ஒத்திருந்தது. அது அவனது கழுத்தைச் சுற்றிக்கொண்டு மெதுவாய் நெரிக்கத் துவங்கியபோது அஞ்சனா நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள்.


 

எழுதியவர்

ராஜேஷ் வைரபாண்டியன்
ராஜேஷ் வைரபாண்டியன்
ராஜேஷ் வைரபாண்டியன் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாயர்புரம் எனும் ஊரின் அருகேயிருக்கும் நடுவைக்குறிச்சியை சேர்ந்தவர். நிலாரசிகன் என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை 2018 வரை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு சிறார் நாவல், ஒரு நாவல் எழுயிருக்கிறார்.
இவரது வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான சுஜாதா விருதும், பிரமிள் விருதும் பெற்றது. ஈர்ப்பு விதியை(Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறார். 361 டிகிரி, உதிரிகள் என இரு சிற்றிதழ்களின் ஆசிரியர்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x