1 March 2024

தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியிலிருக்கும் புதுக்கோட்டையில் செல்வம் டீ ஸ்டாலின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு பின் சீட்டில் உட்கார்ந்திருந்த சங்கிலியை நோக்கித் திரும்பினான் வீரய்யா. 

“ஒரு டீய குடிச்சுப்புட்டு போவோம்ல, எறங்கு”

“சரி அண்ணாச்சி” பவ்யமாக அவனிடம் பதில் சொல்லிவிட்டு பைக்கிலிருந்து கீழே இறங்கிச் சென்று டீ ஸ்டாலில் நிற்கும் பெரும் தொந்தி மாஸ்டரிடம் “அண்ணே ரெண்டு டீண்ணே” என்றான் சங்கிலி. அவரது தொப்பை வரை நீண்டிருந்த தங்கச் செயினில் கிடந்த டாலரைப் பார்த்தபடியே நின்றிருந்தான். ரேடியோவில் புதிய பாடல்கள் நிகழ்ச்சியில் கிழக்குச் சீமையிலே படத்திலிருந்து “ஆத்தங்கர மரமே” பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. 

சங்கிலியை ஏறிட்டுப் பார்க்காமல் பாய்லரைப் பார்த்தபடியே பாடலை முணுமுணுத்தபடி உடலை அசைத்துக்கொண்டே டீ போடுவதில் குறியாக இருந்த மாஸ்டர், “ஸ்ட்ராங்கா லைட்டா” என்றார்.

“ஸ்டார்ங்தாண்ணே” என்றபடி தன் தோளில் மாட்டியிருந்த வேட்டைத் துப்பாக்கியை கழற்றி பக்கவாட்டில் நிறுத்திப் பிடித்துக்கொண்டான் சங்கிலி. அப்போதுதான் மாஸ்டரின் கவனம் அவன் பக்கம் போனது.

“யாத்தாடி…என்ன டபுல் பேரல் மாரில்லா இருக்கி…வேட்டைக்கு கிளம்பிட்டியளா?”  டீயை ஆற்றிக் கொண்டே கேட்டார்.

“ஆமாண்ணே…வல்லநாடு வரைக்கும் போறோம், வெரசா டீய போடுங்க குடுச்சுப்புட்டு தெம்பா போனாத்தாம் மானு கீனு அம்புடும்”  சொல்லிவிட்டு சிரித்தான் சங்கிலி.

அதற்குள் பைக்கை ஸ்டாண்ட் போட்டுவிட்டு கடையின் அருகே வந்த வீரய்யா, வேட்டியை அவிழ்த்து மீண்டும் இறுக கட்டிக்கொண்டு நெட்டி முறித்தான். 

“நல்ல பனியால்லாடே இருக்கு” என்றவன் டீ ஸ்டாலிலிருந்த பாட்டில் ஒன்றைத் திறந்து அதற்குள்ளிருந்த உப்பு பிஸ்கட் இரண்டை எடுத்தான்.

“யோல சங்கிலி,இந்தா இந்த பிஸ்கட்ட கடிச்சுக்கிட்டே டீயக் குடி,  இனி நேரா மதியச் சாப்பாடுதான் பார்த்துக்க…பொறவு பத்து மணிக்கு வயிறு பசிக்குதுன்னு கேட்டன்னு வெய்யி…பச்சக்கறிய தின்னுலன்னுட்டு எம்பாட்டுக்கு போயிருவேன்”   சொல்லிவிட்டு சிரித்தபடியே பனிமூட்டமிருக்கும் அந்த அதிகாலைச் சாலையை பார்த்தபடியே டீயைக் குடித்தான்.

சங்கிலி டீயைக் குடித்தவுடன் இருவரும் வல்லநாடு மலையை நோக்கிப் பயணித்தனர். குளிர் அதிகமிருந்தது. வீரய்யாவின் உடலோடு ஒட்டிக்கொண்டு பீடியொன்றை பற்றவைத்து இழுத்தபடியே இருந்தான் சங்கிலி.

“காலங்காத்தாலயே இழுக்கணுமாக்கும். அப்படி என்னதாம்ல அந்த பீடியில இருக்கு…இழுத்து இழுத்தே சாவப் போறம்ல நீ”

“அதெல்லாம் சொன்னா நீங்க திட்டுவிய…ஒங்க ஒடம்பு வைரம் பாய்ஞ்ச கட்ட…பீடி இழுக்கவும் மாட்டிய…மான்கறி திங்கும்போதும் சாராயமோ கள்ளோ குடிக்காம திம்பிய…நமக்கெல்லாம் பீடி இல்லன்னா வெளிக்கு கூட வரமாட்டிக்கில்லா”

“எவந்தாம்ல சொன்னா கேக்கான், செத்து ஆவியா திரியும்போதுதான் பீடிய உடுவிய போல”  

எதிரே லாரிகள் வந்து கொண்டிருந்தன. லாரிகளின் ஹெட்லைட் வெளிச்சம் கண்களை கூசச் செய்தது. கவனமாக வண்டியை ஓட்டினான் வீரய்யா.

வல்லநாடு மலையடிவாரத்தை அடைந்தவுடன் வழக்கமாக வண்டியை நிறுத்தும் வேலி அருகே நிறுத்திவிட்டு மெதுவாக மலை ஏறத் துவங்கினான். அவனைப் பின் தொடர்ந்த சங்கிலியிடமிருந்து துப்பாக்கியை வாங்கி லோட் செய்து வைத்துக்கொண்டான். எங்கும் இருள் அடர்ந்திருந்தது.

வீரய்யாவுக்கு வல்லநாடு மலைப்பகுதி அத்துப்பிடி. அவனது பதினோரு வயதில அப்பாவுடன் வேட்டைக்கு வந்த நாள் முதலாய் பழக்கப்பட்ட புலம் அது.  இருளிலும் அவனுக்கு மட்டும் எப்படி பாதை இவ்வளவு துல்லியமாய் தெரிகிறது என்று வியந்தபடியே பின் தொடர்ந்தான் சங்கிலி. அரை மணி நேர நடைக்குப் பின் சட்டென்று நின்றவன் துப்பாக்கியை உயர்த்திப் பிடித்து எதையோ குறிபார்த்து சுட்டபோது பக்கத்தில் நின்ற மரத்திலிருந்து சத்தம் கேட்டு சிதறிப் பறந்தன பறவைகள்.

“யோல சங்கிலி…விழுந்துருச்சு…போயி எடுத்துட்டு வா” என்று அவன் காட்டிய திசையை நோக்கி சற்று பயத்துடனே முன்னேறினான் சங்கிலி. அவனது மனதில் எந்த விலங்காக இருக்கும் என்கிற குழப்பம் பெரும் கேள்வியாகி நின்றது. அதற்கு காரணம் இரு மாதங்களுக்கு முன்பு பாபநாசம் வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற போது வீரய்யா காட்டிய திசைக்கு ஓடிச்சென்று என்ன மிருகம் என்று குனிந்து பார்த்தபோது அதிர்ந்துவிட்டான். அதுவொரு சிறுத்தை. இன்று என்னவாக இருக்கும் என்று சிந்தித்தபடியே அவன் காட்டிய திசையில் சென்று வீழ்ந்து கிடக்கும் மிருகத்தை குனிந்து பார்த்தபோது சற்று ஆசுவாசமாக இருந்தது. அதுவொரு வெளிமான். அதன் பின்னங்கால்களைப் பிடித்திழுத்தபடி வீரய்யாவிடம் திரும்பினான்.

“நல்ல பருசால்லா இருக்கி”  என்றபடி அவனது காலடியில் அந்த மானைப் போட்டுவிட்டு மூச்சுவாங்கினான்.

குனிந்து அந்த மானைப் பார்த்தவன் பெருமூச்சுவிட்டபடி,

“மன்னிச்சுரு சொடலமாடா” என்று வானத்தைப் பார்த்து சொல்லிவிட்டு அமைதியாய் நின்றான்.

“எதுக்குண்ணே மன்னிப்பெல்லாம் கேக்குதிய…ஒண்ணும் வெளங்கலியே” மண்டையைச் சொறிந்தபடி கேட்டான் சங்கிலி.

“வா கிளம்புவோம்” வீரய்யாவின் குரல் உடைந்திருந்தது.

“இப்பதான வந்தோம்ணே…அதுக்குள்ள கெளம்புவோங்கிய…இன்னுஞ் செத்த நேரம்…” என்று இழுத்தவனை பார்வையால் அடக்கினான் வீரய்யா. அந்த இறந்த மானை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு அவனைப் பின் தொடர்ந்தான் சங்கிலி.

வீரய்யா ஆறடி ஏழு அங்குல உயரம். நிலக்கரி நிறம்.வலிமையான கரங்களும் அகன்ற மார்பும் முறுக்கி நிற்கும் மீசையும் பார்த்தால் எவருக்கும் ஒரு கணம் உடல் நடுங்கும். நெஞ்சை நிமிர்த்தியபடி அவன் நடந்து வருவது சமயத்தில் ஏதோ கரும்பூதம் வருவது போலிருக்கும். அவன் இப்போது தலைகுனிந்து பெரியதொரு தவறு செய்தது போல குறுகி நடந்து போவதைக் கண்டவுடன் சங்கிலி ஆச்சர்யப் பட்டுப் போனான்.

“இதுவரைக்கும் வேட்டைல அடிச்சுத் தின்ன உருப்படிகள சேர்த்தா இந்த வல்லநாட்டு மலையவிட ஒசரமா சேர்ந்துடும்…அதுக்கெல்லாம் கலங்காதவிய இந்த மானுக்கு இப்படி கலங்குதாவளே…”  என்று நினைத்தபடியே நடந்து கொண்டிருந்தான். 

அவர்கள் பைக் நிற்கும் இடமருகே வந்தபோது விடியத் துவங்கியிருந்தது. மானை ஒரு சாக்குப் பைக்குள் போட்டு  பைக்கின் பின்னாலிருந்த சிறிய கேரியரில் இறுக்கமாக கட்டிவைத்தான் சங்கிலி.

வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடி அருகே இருக்கும் மறவன்மடம் வரையிலும் வீரய்யா ஒரு வார்த்தை பேசவில்லை. அவனது வீட்டின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு சங்கிலியிடம் அந்த மானை ஓடக்கரையில் அடக்கம் செய்துவிட்டு வா என்றவன் அவனது பதிலுக்கு காத்திராமல் வீட்டின் பக்கவாட்டிலிருக்கும் மாடிப்படிகளில் வேகமாக ஏறி மாடியிலிருக்கும் அறைக்குள் சென்று துப்பாக்கியை வைத்தான். 

அங்கிருந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவனின் மனதை ஏதோ செய்தபடி இருந்தன அந்த வெளிமானின் விறைத்த கண்கள்.

“மான்கறி ருசி மாரி வேற எந்த இறைச்சியும் வராதும்பாவ…இன்னிக்கு அடக்கம் செய்யச் சொல்லுதாவ…கோவிலு இல்லாத ஊரும் பொம்பள இல்லாத வூடும் வெளங்குனமாரிதான்னு சும்மாவா சொன்னாவ…சம்பூர்ணம் அக்கா இருந்துருக்கணும்…அண்ணாச்சி அஞ்சு மானுல்லா இன்னிக்கு அடிச்சிருப்பாவ” புலம்பியடியே வீரய்யா மாடியேறியதும் சாக்குப்பையுடன் ஓடக்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் சங்கிலி.

***

ம்பூர்ணத்தை முதன் முதலாக ஏரல் ஆற்றங்கரையில்தான் வீரய்யா சந்தித்தான். ஆற்றில் குளித்துமுடித்து தோழிகள் சூழ சிரிப்பும் குறும்புமாய் நடந்துவந்த சம்பூர்ணத்தின் மேல் விழுந்துவிடாமல் தகித்தபடியிருந்தது வெயில். இடது புற தோளில் தொங்கிய ஈரத்துணிகளிலிருந்து பின்புறமாக சொட்டிய நீர் தரையெங்கும் பாம்பைப்போல நெளிந்து நெளிந்து கோடுகள் வரைந்தபடி அவளைப் பின் தொடர்ந்துகொண்டிருந்தது.  ஆறடிக்கும் சற்று அதிகமான உயரமும், மிடுக்காக அவள் நடந்து செல்வதும் தடாகத்தில் நீராடி உடைமாற்ற எழுந்து செல்லும் இளவரசி போலிருந்தது. 

அழகியைப் பார்த்தாலே மெய் மறந்து நின்றுவிடும் வீரய்யாவுக்கு, பேரழகியைப் பார்த்ததும் முதலில் ஏற்பட்டது பயம் தான். உடன் வந்த பள்ளித்தோழன் சங்குராசுவுக்கு புரிந்துவிட்டது.

“ஏ வீரய்யா என்னம்ல அப்படியே நிக்க?”  சம்பூர்ணம் கடந்து போவதையே பார்த்துக்கொண்டிருந்த வீரய்யா சங்குராசுவின் குரல் கேட்டு திரும்பினான்.

“உடம்பெல்லாம் ஒதறுது சங்கு…இந்தப் புள்ளய பாத்தியா…இது என்னம்ல வேற மாதிரி அழகா இருக்கா”

“ஓ அதான் சங்கதியா… அவ பேரு சம்பூர்ணமாம். தென்காசிதான் ஊராம். அவிய பாட்டி வீட்டுக்கு வந்திருக்கா. உனக்காவது தொடை நடுங்குது…நேத்து அவள பார்த்துபுட்டு நம்ம சொரிமுத்து நாலு பாட்டிலு பட்டைய அடிச்சாம்னா பாத்துக்க…வா ஆத்துல இறங்குவோம்…தாமிரவரணி தண்ணி பட்டாதான் ஒனக்கு ஒதறல் நிக்கும்” என்றபடி வீரய்யாவை இழுத்துக்கொண்டு நீருக்குள் இறங்கினான் சங்குராசு. 

வீரய்யாவின் கழுத்து வரை நீருக்குள் போன பின்பும்., பார்வை மட்டும் சம்பூர்ணம் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தது.  அவளது பாட்டி வீட்டின் அருகேயிருக்கும் மிகப்பெரிய மாந்தோப்பில்தான் வீரய்யா தோட்டவேலை செய்து வந்தான். மறுநாளே சம்பூர்ணத்தை சந்திக்கும் சூழல் உருவானது. தன் பாட்டி வீட்டு வேலியைப் பிரித்து அதன் வழியே மாந்தோப்பிற்குள் நுழைந்தவள் கிளிமூக்கு மாங்காயைப் பறிப்பதற்காக கற்களை வீசிக்கொண்டிருந்தாள். அவள் வீசிய கற்களிலொன்று செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த வீரய்யாவின் முன் வந்து விழுந்ததில் திடுக்கிட்டு திரும்பியவன் சம்பூர்ணத்தைக் கண்டு அதிர்ந்து போனான். 

எதுவும் நடந்துவிடாத பாவனையில் அவனருகே வந்தவள், அவனைக் கடந்து சென்று விழுந்த கல்லை எடுத்து மீண்டும் மாங்காயை நோக்கி குறிபார்த்தாள்.  அப்போது முயலொன்றை கவ்வியபடி ஓடி வந்த தோட்ட நாய் அவளைக் கண்டதும் பழகியவர் போல அவள் காலடியில் முயலைப் போட்டுவிட்டு பவ்யமாக அருகில் நின்றது. 

“மொசக்கறி சமைக்கத் தெரியுமா” அவள் இருமுறை கேட்டதும்தான் இயல்புக்குத் திரும்பினான் வீரய்யா.  ஆம் என தலையாட்டியவனிடம் முயலை கொடுத்துவிட்டு இன்று மாலை வருகிறேன் இருவரும் முயல்கறி தின்போம் எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.  

***

பாட்டி வீட்டிலிருந்த அந்த அறுபது நாட்களில் வீரய்யாவும் அவளும் சந்திக்காத நாட்களில்லை. அதன் பிறகு எல்லாம் வேக வேகமாக நிகழ்ந்தது.  சம்பூர்ணத்தை திருமணம் செய்துகொண்டு மறவன்மடத்திற்கு குடிபெயர்ந்தவன் அங்கே ஒரு மளிகைக் கடையைத் திறந்தான். பகலெல்லாம் கடையில் நிற்பவன் இரவானதும் நண்பர்களுடன் வேட்டைக்கு கிளம்பிவிடுவான். சம்பூர்ணத்திற்கு பிடிக்குமென விதவிதமான விலங்குகளை வேட்டையாடி வந்து சமைத்தும் தருவான்.

“இந்தத் துப்பாக்கியோட நீங்க கம்பீரமா நிக்கிற மாதிரி ஒரு போட்டோ புடிக்கணும்”   அடிக்கடி சொல்வாள் சம்பூர்ணம்.  

***

சாய்வு நாற்காலியில் கண்கள் மூடியபடி உட்கார்ந்திருந்த வீரய்யாவிற்கு சம்பூர்ணத்தின் முகமும் அவளது கன்னக் கதுப்பும் நினைவிலாடியபடி இருந்தன. 

“எம் புள்ளய சொமக்குற ஒன் மொகத்த எப்பவும் நான் பாத்துக்கிட்டே கெடக்கணும் சம்பூ”  அவளது கால்களை தன் மடியில் எடுத்து வைத்துக்கொண்டு பாதங்களை மென்மையாய் பிடித்துவிட்டபடி சொன்னான் வீரய்யா. 

“புள்ளய சொமந்தாத்தான் பாப்பியளாக்கும்… ஆத்தங்கரைல இருந்து வூடு போறவரை இந்த மொகத்ததான பாத்துக்கிட்டே தண்ணீல கெடந்திய” 

“பொறவு பாக்காம என்ன செய்வாவ…எறங்கி வந்த யட்சி மாரில்லா இருந்த”

வீரய்யாவுக்கு கண்களிலிருந்து நிற்காமல் வடிந்துகொண்டே இருந்தது கண்ணீர். சம்பூர்ணம் இல்லாத வீடும் வாழ்வும் சூன்யமாகி பல மாதங்கள் ஆகிவிட்டன.  காற்று மிதமாக வீசியது. நாற்காலியிலிருந்து எழுந்தவன் மாடிப்படிகளில் இறங்கி வீட்டின் முன்வாசலுக்கு வந்தான். தெரு அமைதியாய் கிடந்தது. அல்லது அதுவும் தன்னைப் போல் தனித்துக் கிடக்கிறதோ எனத் தோன்றியது.  வீட்டின் முன்புறமிருந்த வேப்ப மரத்தில் இரண்டு மைனாக்கள் அமர்ந்திருந்தன. அவை எழுப்பும் கீச்சொலிகளைக் கேட்டபடியே கண்கள் மூடி நின்ற வீரய்யாவின் மனதில் அந்தக் கொடூரமான நாள் நினைவிலாடியது.

வேட்டை முடிந்து வழக்கமாக வீடு திரும்பும் நேரம் அதிகாலையாகத்தானிருக்கும். அன்றிரவு வேட்டையில் அதிகம் விலங்குகள் கிடைக்காததால் பின்னிரவில் வீடு திரும்பிய வீரய்யா சம்பூர்ணத்தின் உறக்கம் கெட்டுவிடக்கூடாது என்பதால் சத்தமின்றி வீட்டு கேட்டைத் திறந்து பக்கவாட்டிலிருக்கும் ஷெட்டில் வண்டியை நிறுத்தினான். அங்கிருந்து வீட்டிற்குள் நுழைய யத்தனித்தபோது சம்பூர்ணம் அறையில் விளக்கெரிவது கண்டு குழம்பிப்போனான். மெதுவாக அவளது அறையின் சன்னல் பக்கம் வந்து நின்றபோது உள்ளிருந்து பேச்சொலி கேட்டது.

“இதக் கலச்சு வுட்டுரு சம்பூர்ணம், இது பொறந்துச்சுன்னா பொறவு நீ என்னைத் தேடமாட்ட”  அந்த ஆண்குரலைக் கேட்டதும் வீரய்யாவின் உடலெங்கும் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. 

“இப்ப வந்து கலச்சு விடச்சொல்லுத…முன்னமே யோசிச்சிருக்கணும். இனி கலைச்சா என் உசுருக்கே ஆபத்துய்யா…பெத்ததும் எங்கயாவது கொண்டுபோய் தொலைச்சுட்டு வந்துரலாம்…எனக்கு நீதான்யா முக்கியம்” சம்பூர்ணத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரய்யாவின் உசிரை அசைத்து, அறுத்துப் போட்டன. நிலைகுலைந்து நின்ற வீரய்யாவின் கண்களும் வியர்க்க ஆரம்பித்தன.

“சரி சீக்கிரம் விடிஞ்சிரும்…நா கெளம்புதேன்” அந்த ஆண்குரலின் வார்த்தைகளைக் கேட்டதும், ஓடிச்சென்று வைக்கோல் போரின் பின்புறம் ஒளிந்துகொண்டான் வீரய்யா.

முன்வாசற் கதவு திறந்து அந்த உருவம் வெளியேறியதும், அதே இடத்தில் விடியும் வரை உடைந்துபோய் உட்கார்ந்திருந்தான். விடிந்ததும் கிணத்தடிக்குச் சென்று முகம் கழுவிவிட்டு கதவைத் தட்டினான்.

“வந்துட்டிங்களா…என்ன இன்னிக்கு சாக்குப்பை சிறுசா இருக்கு?” என்றபடி அவனிடமிருந்த சாக்கை வாங்கிப் பிரித்துப் பார்த்தாள் சம்பூர்ணம். அவளது பார்வையை தவிர்த்துவிட்டு வீட்டிற்குள் சென்று நார்க்கட்டிலில் படுத்து கண்களை மூடிக்கொண்டான்.  அவள் மீதிருந்து எழுந்த நாற்றம் தன்னுடலை அழுத்துவது போலிருந்தது. துப்பாக்கியை எடுத்து அவள் நெற்றியில் வைத்து அழுத்த வேண்டும் எனத் தோன்றியபோது சுவரில் பூச்சியொன்றை கவ்விக்கொண்டு ஊர்ந்த பல்லியைப் பார்த்தான். அந்த சிறுபூச்சி பல்லியின் வாயில் துடித்தபடி இருந்தது. தன்னை நேசிக்கிறேன் எனச் சொல்லியவள் தனக்குச் செய்த துரோகம் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கோபமும் அழுகையும் இயலாமையும் மாறி மாறி அவனைத் துரத்தின. அசதியில் கண்கள் மூடியவனின் கனவில் சத்தமிட்டு சிரித்தபடியே நர்த்தனமிட்டாள் சம்பூர்ணம்.

***

தன் பின் வெகு நாட்கள் வேட்டைக்குப் போகாமல் இருந்த வீரய்யாவை வினோதமாக பார்த்தாள் சம்பூர்ணம். எப்போது வேட்டைக்குப் போவீர்கள் என அவள் கேட்கும்போதெல்லாம் அவன் பதிலேதும் சொல்லாமல் நகர்ந்துவிடுவது அவளுக்கு மனக்கலக்கத்தைக் கொடுத்தது. அதன் பிறகு அவளும் வேட்டையைப் பற்றி கேட்பதை நிறுத்திக்கொண்டாள். 

பிரசவ வலியால் அலறிக்கொண்டிருந்தாள் சம்பூர்ணம். அவளது குரல் அந்த அதிகாலையை கிழித்தபடி பக்கத்து அறையில் உறக்கத்திலிருந்த வீரய்யாவை எழுப்பியது. அவள் குரலைக் கேட்டவுடன் அவசரமாக எழுந்து அறை விளக்கைப் போட்டவன் ஓடிச்சென்று அவள் கையைப் பிடித்துக்கொண்டபடியே அருகிலிருந்த தொலைபேசியில் ரெக்ஸின் எண்ணைச் சுழற்றினான். மறுமுனையில் தூக்க கலக்கத்தில் “ஹலோ” என்றது ரெக்ஸின் குரல்.

“யோல ரெக்ஸு…சம்பூவுக்கு பிரசவ வலி வந்துருச்சு.. சீக்கிரம் ஆட்டோவ எடுத்துட்டு வால”  வீரய்யா கத்தியதில் மறுமுனையின் ரெக்ஸுக்கு தூக்கம் கலைந்தது. வீரய்யாவின் குரலைக் கேட்டதும் போனை வைத்துவிட்டு மீண்டும் உறங்கிப்போனான் ரெக்ஸ்.

வீரய்யாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சம்பூர்ணம் வலியால் துடித்தபடி இருந்தாள். வீரய்யாவின் வீடு ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமான வீடென்பதால் உதவிக்கு யாரும் வரவில்லை. 

சம்பூர்ணம் வலியால் துடித்தபோது பெயரொன்றை உச்சரித்தாள். அதுவரை அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற அவனது எண்ணத்தில் முதல் அடியாய் அந்தப் பெயர் இறங்கியது. வெறிகொண்டு உலவிய மிருகமொன்று அவனுக்குள்ளிருந்து வெளிக்குதித்தது. ஓடிச்சென்று துப்பாக்கியை எடுத்துவந்து அதன் கைப்பிடியால் அவளது மண்டையில் வேகமாக அடித்தான். இரத்தத்தில் மிதந்து அங்கிருந்து விடைபெற்றது சம்பூர்ணத்தின் உயிர்.

***

டக்கரை நோக்கி நடந்துகொண்டிருந்த சங்கிலியை வழிமறித்தான் சமுத்திரம். 

“ஏ சங்கிலி எங்க வெரசா போற?”  வெத்தலையை மடித்து வாயில் அதக்கியபடி கேட்டான் சமுத்திரம்.

“அத ஏம்ல கேக்க. நம்ம வீரய்யா அண்ணாச்சியோட வேட்டைக்கு போனம் பாத்துக்க. நல்லா பருசா ஒரு மானை சுட்டுப்புட்டாவ. செரி இன்னிக்கு மாங்கறி திம்பம்னுட்டு நெனச்சா இதக்கொண்டுபோயி பொதச்சுட்டு வான்னுட்டாவ…”

“ஏது மான பொதைக்கப் போறியா? ஏ அவருதான் ஒரு மாதிரின்னுட்டு ஊருக்கே தெரியும்லா…அவரு சொன்னாருன்னுட்டு நீ ஏம்ல மான பொதைக்கப் போற…பக்கத்துலதான் நம்ம முத்துராசு தோட்டம் இருக்கு…போனோம்னு வெய்யி…மான வறுத்து தின்னுட்டு கொஞ்சம் கள்ளும் குடிச்சிபுட்டு வரலாம்…என்னம்ல சொல்லுத?” 

சில நிமிடம் யோசித்தான் சங்கிலி. பின் சாக்குப்பையைத் திறந்து பார்த்தான். கொழுத்த மானின் உருவம் நாவில் எச்சிலை ஊறவைத்தது.

“அதுவுஞ் செரிதான்… வா போயி மாங்கறி திம்பம்” என்றபடி சமுத்திரத்துடன் முத்துராசு தோட்டத்தை நோக்கி நடந்தான்.

***

ம்பூர்ணத்தை முதன் முதலாக பார்த்த நாளிலிருந்து அவள் மீது பித்தாகக் கிடந்தான் வீரய்யா. நண்பர்கள் எடுத்துச் சொல்லியும் அவள் மீது அவனுக்கிருந்த பித்து குறையவே இல்லை. அவள் ஊரைவிட்டு போய் சில மாதங்களிலேயே அவளுக்கு திருமணம் ஆன செய்தி வந்தது. வீரய்யாவால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 

எப்போதும் அவள் நினைவில் கிடந்தவன் சம்பூர்ணத்தை திருமணம் செய்து கொண்டு வாழ்வது போன்றொன்று பிரமையை உருவாக்கிக்கொண்டான். அவள் இல்லாமல் அவளுடன் வாழ்ந்து கொண்டிருந்தான். 

பல மாதங்கள் கழித்து சம்பூர்ணம் தன் பாட்டி வீட்டிற்கு வந்திருப்பது தெரிந்து தோட்டத்திலிருந்து அவளது பாட்டி வீட்டை பார்த்தபடியே நின்றிருந்தான். நிறை மாத கர்ப்பிணியாக பெருந்த வயிறுடன் அவளது கணவனிடம் சிரித்து பேசியபடியே கொய்யா மரத்தடியில் நின்றிருந்தாள் சம்பூர்ணம். அந்தக் காட்சி கொடுத்த வலி அவனது உயிரின் வேரை அறுத்துப்போட்டது.

லைப்பாயை விரித்து அதில் வெளிமானை இழுத்துப் போட்டான் சமுத்திரம். கூர்மையான கத்தியால் அதன் வயிற்றைக் கிழித்தவன் சங்கிலியைப் பார்த்துக் கத்தினான்.

“ஏ சங்கிலி இங்க பாருல…இது செனை மானு”


 

எழுதியவர்

ராஜேஷ் வைரபாண்டியன்
ராஜேஷ் வைரபாண்டியன்
ராஜேஷ் வைரபாண்டியன் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாயர்புரம் எனும் ஊரின் அருகேயிருக்கும் நடுவைக்குறிச்சியை சேர்ந்தவர். நிலாரசிகன் என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை 2018 வரை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு சிறார் நாவல், ஒரு நாவல் எழுயிருக்கிறார்.
இவரது வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான சுஜாதா விருதும், பிரமிள் விருதும் பெற்றது. ஈர்ப்பு விதியை(Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறார். 361 டிகிரி, உதிரிகள் என இரு சிற்றிதழ்களின் ஆசிரியர்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x