17 September 2024

1.

 

திக்கிட்டு விழித்தார் மூக்கையா. அவரது நெற்றியிலும் மார்பிலும் வியர்வைத்துளிகள் படர்ந்திருந்தன. கட்டிலுக்கடியில் துழாவி சொம்பை எடுத்து அண்ணாந்து மூன்று மிடறு தண்ணீர் குடித்தார். நள்ளிரவு மணி இரண்டைக் கடந்திருந்தது. நெற்றியிலிருந்த வியர்வையை இடது கை ஆள்காட்டி விரலால் மழித்துச் சுண்டினார். தான் கண்ட கனவை நினைத்து அவருக்குப் பெருமையாக இருந்தது. ஊருக்கு நடுவே மிகப்பெரியதொரு வீடு. அதன் முன்வாசலில் மூக்கையா நிற்கிறார். அவரது இடவலமாக வேலையாட்கள் வெள்ளைத் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு கைகட்டி நிற்கிறார்கள். தன் கழுத்தில் ஆடும் ரோஜாப்பூ மாலையிலிருந்து ஒன்றிரண்டு ரோஜா இதழ்கள் உதிர்ந்தபடி இருக்கின்றன. அந்த மாலையுடன் கேட்டிற்கு வெளியே நிற்கும் சிகப்பு நிறக் காரில் ஏறுகிறார். கார் மெல்ல ஊருக்குள் ஊர்ந்து செல்கிறது. தெருவின் இருமருங்கிலும் நிற்கும் ஊர்க்காரர்கள் அவருக்கு கையசைத்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்தக் கனவு இன்றுடன் ஏழாவது முறையாக வந்தபோது தான் படுத்திருக்கும் வேப்ப மரத்தடியிலிருந்து கிளைகளின் ஊடாக வானத்தைப் பார்த்தபோது, வானமெங்கும் மின்னும் நட்சத்திரங்கள் போல இந்த ஊரில் இனி நானொரு நட்சத்திரமாக மின்னப் போகிறேன் என அவருக்குத் தோன்றியது. தன் வெண்நிற மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டார்.

“ராகு கேது பெயர்ச்சில உங்களுக்கு விபரீத ராஜ யோகம் வருதா இல்லியான்னு மட்டும் பாருங்க மூக்கையா, அப்படி வரலன்னா நான் ஜோசியம் பாக்குறதையே விட்டுப்புடுதேன்”  குரங்கணி ஜோசியக்காரன் சொன்னதும், இந்தக் கனவும் அவரைத் தூங்க விடாமல் செய்தன.

“சக்கரவர்த்தியோகம் வரப்போவுது…வக்காலி இது தெரியாம என்னை இந்த கொசுக்கடில மாட்டுக்காடி கிட்ட படுக்கச் சொல்லுதா மருமவ…கூறுகெட்ட மவனும் பூம்பூம் மாடு மாரி மண்டைய மண்டைய ஆட்டிப்புட்டான். இந்த மூக்கையன் ராஜ்ஜியம் வரட்டும் பொறவு இருக்குல்லா இவியளுக்கு” தனக்குள் பேசிக்கொண்டே நார்க்கட்டிலில் இரண்டு முறை ஓங்கி அடித்தார். மூட்டைப்பூச்சிகள் ஓடியிருக்கும் என்றெண்ணியபடி மீண்டும் படுத்தவர் சிறிது நேரத்தில் உறங்கிப்போனார்.

தவளைப்புதூர் எனும் அந்த கிராமத்தில் வசிக்கும் மூக்கையாவுக்கு ஐம்பத்தி இரண்டு வயதாகிறது. பனைமரத்தில் கள் இறக்கும் வேலை பார்த்து வந்தவர் கடந்த சில வருடங்களாக வேலைக்குப் போகவில்லை. காரணம் அவரது குடிப்பழக்கம். சுருட்டை வாயில் கவ்விக்கொண்டே கண் சிமிட்டும் நேரத்தில் பனைமரத்தின் கொண்டைக்குப் போய்விடுவார். அவர் மரம் ஏறும் வேகமும் நேர்த்தியும் புதிதாய் பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யத்தை வரவழைக்கும்.

“மரம் ஏர்றதுல்ல நம்ம மூக்கையாவை மிஞ்ச முடியாதுல்லா…ஏ சரு சருன்னுட்டுலா ஏறிப்புடுதாரு”

“ஒத்தக் கைய வுட்டுப்புட்டு ஏறுதேன்னு மேலத்தெரு சண்முவத்துக்கிட்ட பந்தையம் கட்டியிருக்காரு…அந்த முட்டாக்கிறுக்கனும் ஒத்துக்கிட்டான்…அசால்டா ஏறி பத்து ருவாய தட்டிக்கிட்டு போயிட்டாருல்லாடே”

ஊருக்குள் மூக்கையாவின் மரம் ஏறும் திறமையை வியந்து பேசாதவர்களே இல்லை என்றபோதும், மூக்கையாவிடம் பணம் சேர்ந்தால் அவரது அழிச்சாட்டியம் தாங்காமல் புலம்பும் மக்களே அதிகம்.  தினமும் இருவேளை அவருக்குக் குடிக்க வேண்டும். குடித்ததும் ஆரம்பித்துவிடும் அவரது கொண்டாட்டம். அவிழ்கின்ற சாரத்தை ஒரு கையால் பிடித்துக்கொண்டு தள்ளாட்டத்துடன் நடப்பவர் பழைய பாடல்களை சத்தமாகப் பாடியபடி தெருவுக்குள் இறங்குவார். தெருவில் அவர் இறங்கியதும் தன் குட்டிகளுடன் வேறு தெருவுக்கு இடம்பெயர்ந்துவிடும் தெருநாய்களும் ஆடுகளும். அப்படி இடம்பெயராமல் அதே இடத்தில் படுத்துக்கிடந்தால் அதற்கு முன்பாக போய் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு பாட ஆரம்பித்துவிடுவார். அவை அலறி அடித்துக்கொண்டு “வந்துட்டாம்லா ஊத்தவாயி பாட்டுக்காரன்” என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிடும்.

“ரசன கெட்ட ஜென்மங்க…என்னமா பாடுதேன்…ஒக்காந்து கேட்கலாமுல்லா…கோவில் கொடை கச்சேரிக்கு மட்டும் சோத்தைக் கட்டிக்கிட்டு போயிடுதாவ…எம்பாட்டை நாயி நரி கூட கேக்க மாட்டேங்கு” என சலித்துக்கொண்டு வீடு வருவார். கிடைக்கும் பணத்தில் எல்லாம் குடித்துவிட்டு பாடித்திரிந்ததால் இவருக்கு பதிலாக வேறு ஒருவரை கள் இறக்க அமர்த்திக்கொண்டார்கள் ஊர்மக்கள்.  முழு நேரமும் வீட்டில் இருக்கும்படி ஆனபோதுதான் அவரது மகனுக்குத் திருமணம் முடிந்து வள்ளி மருமகளாக வந்தாள். வள்ளியிடம் மட்டும்தான் மூக்கையா பயப்படுவார். அவள் வந்த அன்றே சொல்லிவிட்டாள் குடித்துவிட்டு வந்தால் வீட்டில் சோறு கிடையாது. குடல் வெந்து செத்தாலும் சாவேன் இவ கையால சோத்த தொட மாட்டேன் என ஒரு வாரம் முரண்டு பிடித்துப்பார்த்தார் மூக்கையா. கடைசியில் சோறுதான் வென்றது.  அன்றிலிருந்து குடியை விட்டவர் மாடுகளை கவனிப்பதிலும் வீட்டைச் சுற்றி விழுகின்ற வேப்பஞ் சருகுகளை கூட்டிப் பெருக்குவதுமாக வாழ்வை ஓட்டி வந்தார். எப்பொழுதாவது தன் இறந்து போன மனைவி பாலம்மாள் ஞாபகம் வரும். அன்று மட்டும் மெளன விரதம் இருப்பார். அவர் வீட்டு மாடுகள் அன்று மட்டும் நிம்மதிப் பெருமூச்சு விடும்.

மூக்கையா வீட்டிலிருந்து நான்கு தெருக்கள் கடந்தால் கல்லறைத் தோட்டம் வந்துவிடும். அதன் அருகேயிருக்கும் தென்னந்தோப்பில்தான் மொச்சை வீடு இருந்தது. மொச்சையும் மூக்கையாவும் பள்ளிக்கூட காலம் முதல் நண்பர்கள். மொச்சை அந்தத் தென்னந்தோப்பை பராமரித்து வந்தார். தோப்பின் முதலாளி தூத்துக்குடியில் மில் வைத்திருந்தார். எப்பொழுதாவது தென்னந்தோப்புக்கு வருவார். தோப்பின் நடுவே தென்னையோலையால் வேயப்பட்ட குடிசையைப் போட்டிருந்தார் மொச்சை. அவரும் அவரது மனைவி கொடிமரமும் அதில்தான் வசித்தார்கள்.

கல்லறைத்தோட்டத்திலிருக்கும் கல்லறையொன்றின் மீது உட்கார்ந்திருந்தார் மொச்சை. அவருக்குப் பக்கத்தில் சிறியதொரு பொட்டலத்தில் காரச்சேவு இருந்தது. எதிரே இருக்கும் கல்லறையைப் பார்த்தார். அங்கே மூக்கையா சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தார்.

“என்ன மூக்கை ஏதோ சொல்லனுமினுட்டு வரச்சொன்ன…ஒண்ணுஞ்சொல்லாம வானத்த பார்த்துட்டு இருக்க?”   காரச்சேவைக் கொறித்துக்கொண்டே கேட்டார் மொச்சை.

“இப்ப கொஞ்ச நாளா ஒரே சொப்பனம் திரும்ப திரும்ப வருது பார்த்துக்க மொச்சை…அதான் யோசனையா இருக்கி”

“அப்படி என்ன சொப்பனத்த கண்டுபுட்ட..சொல்லு கேப்பம்” ஆர்வமானார் மொச்சை.

தான் கண்ட கனவை விவரித்துச் சொன்னார் மூக்கையா. அதோடு குரங்கணி ஜோசியக்காரன் சொன்னதையும் சேர்த்துச் சொன்னார்.

“அட்றா சக்கைனனா…மூக்கை ஒனக்கு மச்சம் எங்கயோ இத்தன நாளா ஒளிஞ்சி கெடந்திருக்கு போல அதான் இந்த வயசுல இப்படிக் கனவெல்லாம் வருது…எனக்கு என் கனவுலயும் எம்பொஞ்சாதி மூஞ்சிதான் வருது சை”  சொல்லிவிட்டு மிஞ்சியிருந்த காரச்சேவை எடுத்து மூக்கையாவிடம் நீட்டினார்.

அதிலிருந்து இரண்டு காரச்சேவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே தொடர்ந்தார் மூக்கையா.

 

“அதில்ல மொச்சை…ராஜயோகம் வருங்கான் ஜோசியக்காரன். அப்படீன்னா பணம் வருதுன்னுட்டுதான அர்த்தம்…எனக்கு கடன் கொடுக்கக்கூட ஊருக்குள்ள ஆள் இல்ல பொறவு எப்படி சல்லி வரும்…அதான் ஒண்ணும் வெளங்கமாட்டிக்கி” தலையைச் சொறிந்தபடியே சொன்னார்.

“ஏ அதுஞ் சரிதான்…இது வெளங்காப்பயலுவ ஊருடே…நேத்து ஒரு இளவட்டபயகிட்ட சிகரெட் ஒண்ணு கொடுங்கேன், கொள்ளி வைக்கிற வயசுல ஒமக்கு சிகரெட்டு கேட்குதாவேங்கான் பொடித்தாயோளி…இனி எவங்கிட்டயும் சிகரெட்டு கேட்கப்புடாதுன்னுட்டு தியேட்டர் பக்கம் போனேன்…அங்க நாலஞ்சு கட்டபீடி கெடந்துச்சு…பொறக்கி எடுத்துட்டு வந்து இழுத்தேன்…அப்புறந்தான் கோவம் கொறஞ்சுதுன்னா பார்த்துக்க…”

“ஆமா நீயும் நானும் கோவப்பட்டாமட்டும் இந்த ஊரு நம்மள மதிக்கவா போவுது…சல்லி இல்லன்னா ரோட்ல போற சுண்டெலிகூட  சூத்த தூக்கிக் காமிச்சி கிண்டலடிச்சுட்டுதான் போவும் மொச்சை”

“என்னமோ போப்பா…உன் சொப்பனம் பலிச்சுதுன்னா என்னை மறந்துராத…என் வெள்ளி அண்ணாக்கயித்த வித்து ஒங் கலியாணத்துக்கு மொய் எழுதினவன்லா இந்த மொச்சை” சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தார் மொச்சை.  மூக்கையாவுக்கும் சத்தம்போட்டு சிரிக்க வேண்டும் போலிருந்தது. மொச்சையுடன் சேர்ந்துகொண்டார். இருவரும் சிரிப்பதை சற்று தொலைவில் நின்ற கழுதையொன்று மிரட்சியுடன் பார்த்தது. கல்லறைக்குக் கீழே புதையுண்ட ஆத்மாக்கள் “சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணுங்கல கிறுக்குக் கூவைகளா” எனக் கத்தமுடியாமல் மருகிக்கிடந்தன.

 

 

2.

 

வளைப்புதூரிலிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற இரண்டாம் நம்பர் டவுண் பஸ்ஸிலிருந்து குன்னிமுத்து இறங்கிய போது இருட்டத் தொடங்கியிருந்தது. கறுப்பு பேண்ட்டும் வெள்ளை அரைக்கைச் சட்டையும் அணிந்திருந்தான். காலுக்கு தோல் செருப்பு. முகச்சவரம் செய்து பார்ப்பதற்கு படித்தவன் போலிருந்தவனை பேருந்து நிறுத்தத்தின் கல்பெஞ்சில் உட்கார்ந்திருந்த மொச்சை அதிசயமாகப் பார்த்தார். நம் ஊருக்குள் யார் இவன் பதினாறு வயதினிலே படத்தில் வரும் டாக்டரைப் போல இருக்கிறானே என்று நினைத்தபடி கண்களைச் சுருக்கிக் கொண்டு அவனது பேண்ட்டைப் பார்த்தார்.

“காலம் கெட்டுப்போச்சு…காத்தாட சாரமோ வேட்டியோ உடுத்தாம கொளாய் போட்டு லாந்தரானுவ பொடிப்பயலுவ” என பக்கத்தில் அமர்ந்திருக்கும் கன்னையாவிடம் சொன்னார்.

“ஆமா நீ சொல்றதும் சரிதான் மொச்சை” எனச் சொல்லிவிட்டு வேட்டி மடிப்பிலிருந்த பொடி மட்டையை எடுத்துப் பிரித்து கொஞ்சம் மூக்குப்பொடியை மூக்கில் வைத்து உறிஞ்சிக்கொண்டார்.

பேருந்திலிருந்து இறங்கிய குன்னிமுத்து இவர்கள் இருவரின் அருகில் வந்தான்.

“ஐயா இங்க சின்னச்சாமி ஐயா வீட்டுக்கு எப்படி போறதுங்க?”  கொண்டு வந்திருந்த பெட்டியை கீழே வைத்தபடி கேட்டான்.

“ஓ சின்னச்சாமி அண்ணாச்சி வூட்டுக்கு வந்திருக்கியளா…அந்தா தெரியுது பாருங்க ஒரு அடிபம்பு…அதுக்கு பக்கத்துல  பீச்சாங்கை பக்கமா ஒரு தெரு உள்ளார போவும் அதுல கடைசி வூடுதான் போங்க…கொஞ்சம் பாத்து போங்க அந்தத் தெருவுல ஒரு நாயி கெடக்கு”  சொல்லிவிட்டு தலைப்பாகையிலிருந்து கட்டைபீடி ஒன்றை எடுத்து பற்றவைத்து இழுத்தார் மொச்சை.

 

நாய் என்றதும் குன்னிமுத்துவுக்கு பயம் தொற்றிக்கொண்டது. வந்த நாளன்றே கடி வாங்க வேண்டுமா எனும் யோசனையில் நின்றிருந்தான்.

“என்ன தம்பி அப்படியே நிக்கிய…நாயின்னா பயமா..நான் வேணும்னா கூட வரட்டுமா?”  கட்டை பீடியை தூர எறிந்துவிட்டு கேட்டார் மொச்சை.

“ஆமாங்கையா…கொஞ்சம் வந்திங்கன்னா செளகரியமா இருக்கும்…” என்றவன் பெட்டியை எடுத்துக்கொண்டு நடக்க தயாரானான்.

“நாங்க இளவட்டமா லாந்தர காலத்துல ஆனையே வந்தாலும் அசரமாட்டோம்…நீங்க நாயிக்கெல்லாம் பயப்படுதிய” சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே எழுந்து அவனுக்கு முன்பாக நடக்க ஆரம்பித்தார் மொச்சை.

“ஆட்டுக்கடா முட்ட வந்துச்சுன்னு கட்டியிருந்த கோவணம் கழண்டது தெரியாம அம்மணமா ஓடுன பய இந்த மொச்சை…வக்காலி ஆனை வந்தாலும் அசரமாட்டாராம்லா” தனக்குள் பேசிச்சிரித்தபடி எதிர்புறமாய் நடந்தார் கண்னையா.

“சின்னச்சாமி அண்ணாச்சி சொக்கார பயலாடே நீ?”  தலைப்பாகையாக கட்டியிருக்கும் துண்டை அவிழ்த்து தோளில் போட்டபடி கேட்டார் மொச்சை.

“சொந்தமெல்லாம் இல்லங்கையா…இந்த ஊருக்கு வேலைக்கு வந்திருக்கேன்…ஊர்ப்பெரியவர் சின்னச்சாமி ஐயாதான் தங்கறதுக்கு வீடு ஏற்பாடு பண்ணுவாருன்னுட்டு சொன்னாங்க…அதான் அவரப் பாக்கப்போறேன்”  நாய் எதுவும் தென்படுகிறதா எனப் பார்த்தபடியே பதிலிட்டான் குன்னிமுத்து.

“தவளைப்புதூர்ல வேலையா” என்றவர் சட்டென்று நின்றுவிட்டார்.

“என்னாச்சுங்கையா?”

 

“ஏ இது ஒரு பொட்டக்காடு ஊருப்பு…குளம்னு ஒண்ணு இருக்கு பாத்துக்க அதுல வருசத்துல ரெண்டு மாசந்தான் தண்ணி நிக்கிம்…வயக்காடும் இல்ல வாழத்தோப்பும் இல்ல…ஏ நான் வேல செய்யுத தென்னந்தோப்பு கூட பேருதாம்ப்பு தென்னந்தோப்பு மொத்தமா பத்து தென்னைதான் நிக்கி…மத்த இடத்துல எல்லாம் வேம்புதான் நிக்கி…நீ இந்த ஊருல வேலைக்கு வந்தன்னுட்டு சொல்லுத…”

“ஆமாங்கையா ஒங்க தவளைப்புதூர்ல புதுசா கூட்டுறவு வங்கி ஆரம்பிச்சிருக்காங்கல்லா அதுலதான் எனக்கு வேலை”

“ஓ சந்தைக்குப் பக்கத்துல புதுசா ஏதோ போஸ்ட் ஆபீஸ் கணக்கா வந்திருக்குன்னுட்டு மூக்கையா சொன்னான்…அங்கதான் வேலையா அதுச்செரி…புள்ள இல்லாத வூட்டுல கெழவன் துள்ளி வெளாண்டானாம்…இங்க என்னத்துக்கு வங்கின்னுதான் வெளங்கலப்பு”  நடந்தபடியே கேட்டார் மொச்சை.

“ஐயா வங்கி இருக்கிறதுதான் உங்க ஊரு. ஆனா சுத்தி இருக்கற பத்து பதினைஞ்சு ஊர்க்காரகவுளுக்கும் இதுதான் பக்கத்துல இருக்கிற வங்கி. இத வுட்டா தூத்துக்குடிக்குத்தான் பஸ் ஏறணும்”

கட்டை பீடிக்கே இந்தூர்ல வழியக் காங்கல…இதுல வங்கி நொங்கின்னுட்டு என்னத்தையோ சொல்லுதாவ…என்று நினைத்துக்கொண்டு மேலும் கேள்விகள் கேட்காமல் மெளனமாக நடந்தார் மொச்சை.

சின்னச்சாமி ஐயாவின் வீட்டருகே அவனை விட்டுவிட்டு கிளம்பியவரைத் தடுத்தான் குன்னிமுத்து.

“ஐயா ஒரு நிமிசம் இருங்க” என்றவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து மஞ்சள் நிற சார்மினார் சிகரட் பாக்கெட்டை வெளியே எடுத்தான். அதைப் பிரித்து அதிலிருந்து ஐந்து சிகரெட்டுகளை மொச்சையிடம் கொடுத்து நன்றி சொல்லிவிட்டு சின்னச்சாமி ஐயாவின் வீட்டு கேட்டைத் திறந்துகொண்டு உள்நுழைந்தான்.

கையில் அவன் கொடுத்துச் சென்ற சிகரெட்டுகளை பார்த்தபடியே சில நிமிடம் நின்றிருந்தார் மொச்சை. முதல் முறையாக தன் வாழ்வில் சிகரெட்டைப் புகைக்கப் போகிறோம் என்கிற எண்ணம் ஆனந்தக் கண்ணீராய் வழியத் தொடங்கியபோது கொடிமரத்தின் முகம் ஞாபகத்துக்கு வந்தது.

“கட்டை பீடி இழுத்தே சாவப் போறீரு” என அவள் அடிக்கடி சொல்வது அவரது காதில் ஒலித்தது.

“சண்டாளி சந்தோஷமா அழுவக்கூட விட மாட்டைக்கா” என்றவர் தாய்க்கோழி தன் செட்டைக்குள் பாதுகாக்கும் குஞ்சுகள் போல அந்த ஐந்து சிகரெட்டையும் உள்ளங்கையில் தாங்கியபடி தன் வீடு நோக்கி நடந்தார்.

 

 

 3.

 

குன்னிமுத்து தங்கிக் கொள்வதற்கென ஊர் பள்ளிக்கூடத்தில் ஓர் அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தார் சின்னச்சாமி. அங்கிருந்து நடந்தே வங்கிக்குச் சென்று வருவான்.  அவன் கொடுத்த சிகரெட்டுகளைப் பற்றி மூக்கையாவிடம் பத்து நாட்கள் பேசினார் மொச்சை.

 

கல்லறை கரைந்துபோகும் அளவிற்கு கண்ணீர்விட்டு மூக்கையா மன்றாடிய பின்னரே சிகரெட் புராணத்தை நிறுத்தினார் மொச்சை.  குன்னிமுத்துவிடம் மூக்கையாவை அறிமுகம் செய்து வைத்தார் மொச்சை. வங்கி வேலை முடிந்ததும் நேராக கல்லறைத் தோட்டத்திற்கு வந்துவிடுவான் குன்னிமுத்து. இரண்டு கல்லறைகளுக்கு இடையே கோரப்பாயை விரித்து அதில் மூவரும் உட்கார்ந்து கொள்வார்கள். மூவரும் அங்கே சீட்டு விளையாடிக்கொண்டே ஊர் கதை பேசுவது வழக்கமானது. ஒவ்வொரு முறையும் குன்னிமுத்து கொடுக்கும் சிகரெட்டுக்காகவே மொச்சைக்கு எப்போது கல்லறைத் தோட்டத்திற்கு போவோம் என்றிருக்கும். வீட்டிலிருந்தால் கொடிமரத்தின் ஓயாத ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டியிருக்கும் என்பதும் காரணம்.

குன்னிமுத்துவுக்கும் பொழுதை போக்க வேண்டியதாக இருந்தது. தனிக்கட்டை என்பதால் மொச்சையுடனும் மூக்கையாவுடனும் சீட்டு விளையாடுவது தனிமையை போக்கியது.

“ஏ மூக்கை அந்தச் சொப்பனம் இன்னும் வருதா?”  சிகரெட் ஒன்றை பற்றவைத்துக்கொண்டே கேட்டார் மொச்சை.

“முந்தி வாரத்துல இரண்டு நாளு வரும்…இப்ப தெனமும் வந்துருது மொச்சை…ஆனா சல்லிதான் பைக்கு வர மாட்டைக்கு” சலித்துக்கொண்டார் மூக்கையா.

“என்ன சொப்பனம் மூக்கையாண்ணே?”  ஆர்வமுடன் கேட்ட குன்னிமுத்துவிடம் என்ன கனவு என்பதை விரிவாகச் சொன்னார் மூக்கையா.

“சல்லி இருந்தா எல்லா பிரச்சினையும் சரியாகிடும்ணே…அதான உலகம்”  என்று குன்னிமுத்து சொன்னவுடன் ஆமோதிப்பது போல இருவரும் தலையை ஆட்டினர்.

“எப்பதான் அந்த விபரீத ராஜ யோகம் வருமோ கடவுளுக்குதான் வெளிச்சம்” என்றபடி வானத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டார் மூக்கையா.  சிகரெட் முடியப்போகிறதே என்கிற கவலையில் சீட்டுக்கட்டை கலைத்துப் போட்டுக்கொண்டிருந்தார் மொச்சை.

“ஏண்ணே…எனக்கொரு யோசன…சரியா தப்பான்னுட்டு தெரியல…சொல்லட்டுமா?”  சற்று யோசனையுடனே கேட்டான் குன்னிமுத்து.

“இந்த உலகத்துல சரி தப்புன்னுட்டு எதுவுமே இல்லப்பு…ச்சும்மா சொல்லு கேப்பம்” என்றார் மூக்கையா.

“அரசியல்ல இருக்கறவனும், அடுத்துவன் வவுத்துல அடிச்சு திங்கறவனும் நல்லா சொகமா இருக்கான்…நாயா உழைக்கிறோம் ஆனா சல்லி இல்லாம இடுகாட்டுல கல்லறையோட கல்லறையா ஒக்காந்திருக்கோம்…இதான் வாழ்க்கையாண்ணே” அவன் சொல்லி முடித்தவுடன் சத்தமாக சிரித்தார் மூக்கையா.  மொச்சை அவனது பாக்கெட்டிலிருந்து அடுத்த சிகரெட் எப்போது வெளியே வரும் என்பதையே பார்த்துக்கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த உடைமரத்தில் காகமொன்று வந்து உட்கார்ந்து இவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தது. “தலைல பேண்டாதாம்ல நீங்க எல்லாம் பினாத்தாம வூட்ட பார்த்து போவிய செருக்குயுள்ளா” என்று அது நினைத்தாலும் நினைத்திருக்கலாம்.

 

“குன்னிமுத்து தம்பி…ஒனக்கென்ன ஒரு இருவத்தி அஞ்சு இல்ல இருவத்தி ஆறு வயசிருக்குமா? இன்னும் கல்யாணம் கூட ஆவல…அதுக்குள்ள சலிப்பு வந்த மாரி பேசுத…கால் கட்டு போட்ட பொறவு பாரு சல்லியும் இருக்காது மனசுல நிம்மதியும் இருக்காது…எம் பொஞ்சாதி போய் சேந்துட்டா…ஆனா சிறுக்கிமக சாவுறதுக்கு முந்தின நாளு வரை என்னை வறுக்காத நாளில்ல…அதுக்காக பொஞ்சாதிய வெறுக்கேன்னுட்டு நெனச்சுப்புடாத…இருந்தா நரகம் இல்லாட்டியும் நரகம்ங்கறதுதான் எம் பொழப்பு…இந்தா இருக்கான் பாரு மொச்சை…லட்ச ரூவா வேணுமா இல்ல ஒரு வாரம் இவன் பொஞ்சாதி ஊருக்கு போணுமானுட்டு கேட்டுப்பாரு…பொஞ்சாதி ஒரு நாள் ஆத்தாவூட்டுக்கு போனா போதும் சாமிம்பான். சரி நீ சல்லி பத்தி கேட்ட நான் எங்க கதய பத்தி சொல்லிக்கிட்டு கெடக்கேன்…நீ சொல்றதும் சரிதான் தம்பி…இன்னிக்கு உழைக்கறவனுக்கு எங்க சல்லி கைல நிக்கி…ஒருவேளை கொள்ள கிள்ள அடிச்சாத்தான் நிக்கிமோ என்னவோ” மூக்கையா கொள்ளை என்றதும் அதுவரை சிகரெட்டை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த மொச்சை சடக்கென்று தலையை உயர்த்தி மூக்கையாவைப் பார்த்தார். குன்னிமுத்தும் சீட்டாட்டத்தை நிறுத்திவிட்டு மூக்கையாவின் முகத்தை கூர்ந்து பார்த்தான்.

 

“ஏ என்னடே கொள்ளைன்னதும் ரெண்டு பேரும் புதுப்பொண்ண பாக்குற மாரில்லா என்னைய பாக்கிய” சொல்லிவிட்டு சிரிக்க முயன்றவர் இருவரின் மெளனத்தால் குழம்பியவராக சிரிக்காமல் இருவரையும் மாறி மாறி பார்த்தார்.

 

“மூக்கையாண்ணே ஒத்த வார்த்த சொன்னாலும் சும்மா நச்சுன்னுல்லா சொல்லிட்டிய” என்றான் குன்னிமுத்து.

“ஏ மூக்கை நீ சொன்னதுதாம்ல செரி…கொள்ளைதாம்ல அடிக்கணும்” என்றார் மொச்சை.

“கிறுக்குமூதி கணக்கா பேசாத மொச்சை…நம்ம வயசுக்கு இனி கொள்ளிதான் வைக்கணும்…கொள்ளை அடிக்க நாம என்ன இளவட்டமா?”  மொச்சையை அடக்கப் பார்த்தார் மூக்கையா.

“ஏ ஐம்பத்தி ரெண்டுதான் ஆவுது…அதுக்குள்ள கொள்ளிங்க…நீதான் குரங்கணி சோசியக்காரன் ராஜயோகம் வரும்ன்னு சொன்னான்ன, பொறவு தெனமும் சொப்பனம் வருதுன்னும் சொல்லுத…இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்…தெய்வம் கூரைய பொத்துக்கிட்டு குடுக்கும்னுட்டு நெனச்சியோ? கொள்ள அடிச்சாதான் சல்லி நிக்கும் பாத்துக்க”  மொச்சை சொன்னதும் மூக்கையா பதிலேதும் பேசாமல் மீசையை நீவி விட்டுக்கொண்டிருந்தார்.

 

குன்னிமுத்தும் ஆழ்ந்த யோசனையிலிருந்தான். மரத்திலிருந்த காகம் “ஒழுங்கா கொல்லைக்குப் போறதுக்கே வக்கில்லையாம்…இந்த மொகர கட்டைங்க கொள்ளை அடிக்கப்போவுதாம்” என்று நினைத்தபடி அங்கிருந்து பறந்து சென்றது.

 

சில நிமிடங்கள் நீடித்த மெளனத்தை குன்னிமுத்து உடைத்து அந்தத் திட்டத்தை சொல்லத் துவங்கினான். மொச்சை தன் வாய்க்குள் சென்று திரும்பிய கொசுவை கவனிக்காமல் குன்னிமுத்து விவரித்த திட்டத்தை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார். மூக்கையா புருவம் உயர குன்னிமுத்துவின் ஒவ்வொரு சொற்களையும் உள்வாங்கிக்கொண்டிருந்தார்.

கொள்ளைக்கான இடம் குறிக்கப்பட்டது. இனி அந்த இடத்தை நோட்டம் விடவேண்டும் என்றான் குன்னிமுத்து.

 

4.

தோப்பிலிருக்கும் பூவரச மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் வலது காலை இடது கால் மேல் வைத்து ஆட்டியபடியே படுத்திருந்தார் மொச்சை. அவரது மனம் முழுவதும் குன்னிமுத்து விவரித்த திட்டத்தின் மீதே குவிந்திருந்தது.  இந்த காலத்துப் பயலுவ என்னமா யோசிக்கானுவ…நாம இவனுவ வயசுல வெள்ளெலி அடிச்சு சுட்டுத் தின்னுப்புட்டு கவுந்து கெடந்தோமே என தன்னைத் தானே நொந்து கொண்டார். இந்தக் கொள்ளைத் திட்டம் நிறைவேறியதும் தனக்குக் கிடைக்கப் போகும் பங்கில் இந்தத் தோப்பையே வாங்கிவிடவேண்டும் என்பது அவரது எண்ணமாக ஆகியிருந்தது.

 

“செவிடங்காதுல சங்கு ஊதுனா கூட கேட்டுரும் போல…கழுதையா கெடந்து கத்துதேன் ஒம்ம காதுல ஏறல பாத்தியளா”  திடீரென்று கொடிமரத்தின் குரல் அருகில் கேட்டதும் படக்கென்று அதிர்ந்து எழுந்து கட்டிலில் உட்கார்ந்தார். பக்கத்தில் மீன் சட்டியுடன் நின்றிருந்தாள் கொடிமரம். இப்ப இவ மொகத்துல கொஞ்சம் அரிசியை அள்ளிப்போட்டா ரெண்டு வேள சோறா மாறிப்புடும் போலயே என மனதுக்குள் நினைத்துக்கொண்டார் மொச்சை. கொடிமரத்தின் முகம் கடும் சினத்தில் உறைந்திருந்தது. அவர் அருகில் வந்தவள் மீன்சட்டியை அவர் அருகே வைத்தாள்.

 

“மீன ஒழுங்கா கழுவி அரிஞ்சு வெய்யும்…நான் சந்தைக்கு போயிட்டு வாரேன்…அப்படி என்னதான் மல்லாந்து கெடந்து யோசிப்பியளோ மவராசரு கணக்கா”  சொல்லிவிட்டு அவள் போனதும்தான் மொச்சையின் இதயத்துடிப்பு இயல்புக்குத் திரும்பியது. மீன்சட்டிக்குள் கண்கள் விறைத்துக் கிடந்த சாளை மீன்களைப் பார்த்தார்.

 

“நல்ல வேள செத்துட்டிய…இல்லன்னா எம்பொஞ்சாதி ஒங்களையும் வசவு பாடிருவா” என்றபடி மீன்களைக் கழுவி சுத்தம் செய்து அரிவாள் முனையால் அரிந்தார்.  மீண்டும் மனம் அந்தக் கொள்ளைத் திட்டம் பக்கம் போனது. சல்லி மட்டும் கைக்கு வரட்டும் கொடிமரமா நானான்னுட்டு பார்த்துப்புடுதேன் என்று மெதுவாக முணுமுணுத்தவர் குடிசைக்குள் சென்று மீன்சட்டியை வைத்துவிட்டு மீண்டும் கட்டிலுக்கு வந்தபோது தோப்பில் வளர்க்கும் கோம்பை நாய் சத்தமாக குரைத்தது.

 

யாரைப் பார்த்து குரைக்கிறது என்கிற கேள்வியுடன் தோப்பின் முகப்புக்கு வந்தவர் குன்னிமுத்து நிற்பதைப் பார்த்தார்.

 

“ஏ வா குன்னி என்ன இந்தப் பக்கம்?”  கேட்டைத் திறந்து வெளியே வந்து கேட்டார் மொச்சை.

 

“அண்ணே ஒரு சோலியா இந்தப் பக்கம் வந்தேன் அதான் ஒங்கள ஒரு எட்டு பார்த்துபுட்டு போலாமின்னு வந்தேன்”

 

“ஓ செரி செரி…வா அந்த மரத்தடிக்குப் போவம்” என்றவர் முன்னால் நடக்க பின் தொடர்ந்தான் குன்னிமுத்து. பூவரச மரத்தடியில் கிடக்கும் கட்டிலில் அவனை உட்காரச் சொல்லிவிட்டு செவ்விளனி ஒன்றை சீவி அவனிடம் நீட்டினார்.  அதை இரு கைகளாலும் வாங்கிக்கொண்டவன் ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட்டு “வெக்க தாங்க மாட்டிக்கில்லாண்ணே” என்றான். சிரித்துக்கொண்டே “பொட்டக்காடுல்லாடே” என்றபடி அவன் அருகில் அமர்ந்தார்.

 

“சரிண்ணே நேரா விசயத்துக்கு வாரேன், அன்னிக்கு சொன்னம்லா அந்தக் கொள்ளையப் பத்தி…அடிக்கிற நேரம் வந்திருச்சு. நாளைக்கே நீங்க ரெண்டுபேரும் ஓணான்குழிக்கு கெளம்பிடுங்க வீரச்சங்கிலி வெளியூர் போயிருக்கறதா கேள்வி. இதுதான் சரியான சமயம். செரியா?” சொல்லிவிட்டு கைக்குட்டையை எடுத்து முகத்தில் வழிகின்ற வியர்வையைத் துடைத்துக்கொண்டான்.

 

“சரி தம்பி…நானும் மூக்கையாவும் நாளைக்கே கெளம்பிடுதோம். சல்லி சீக்கிரம் வந்தாத்தான் மனுசன் உசிரோடயே இருக்கமுடியும்” சலிப்புடன் பதிலிட்டார் மொச்சை.

 

அவன் கிளம்பிச் சென்றதும் அன்று குன்னிமுத்து சொன்ன கொள்ளைத் திட்டத்தைப் பற்றி யோசித்துப் பார்த்தார். தவளைப்புதூரிலிருந்து ஏழு கிலோ மீட்டர்கள் தொலைவிலிருக்கும் ஓணான்குழி எனும் சிற்றூரைச் சேர்ந்த வீரச்சங்கிலி ஊரில் பெரிய புள்ளி. அந்த வட்டாரத்திலேயே அதிகமான வாழைத்தோட்டங்களுக்கும் வயலுக்கும் சொந்தக்காரர். கூட்டுறவு வங்கி ஆரம்பித்தப்பின் அடிக்கடி வங்கிக்கு வந்து செல்லும் நபர்களில் முதன்மையானவர். அதுமட்டுமின்றி அதிகமான வைப்புத்தொகையை வங்கியில் வைத்திருப்பவர். குன்னிமுத்து காசாளராக இருப்பதால் அவரை நன்கு தெரிந்து வைத்திருந்தான். அவரது வீட்டைத் தான் கொள்ளை அடிக்க வேண்டும் என்று தன் திட்டத்தைச் சொன்னான். அவரிடம் அதிகமான பணம் இருந்தது மட்டுமல்ல காரணம். அவர் வங்கிக்கு வரும்போதெல்லாம் சிரித்துக்கொண்டே குன்னிமுத்து அவரிடம் கேட்பான் “அண்ணாச்சி நம்ம பேங்க்ல லாக்கர் வசதியும் இருக்கு…நகை, வீட்டுப் பத்திரம் எதுன்னாலும் வச்சிக்கிடலாம்…மேனேஜர்கிட்ட பேசுதியளா?”  அவர் அதற்கு அவசியமில்லை என்றும் வங்கி லாக்கரை விட பாதுகாப்பாக தன் வீட்டில் பழைய ஸ்டீல் லாக்கர் இருக்கிறது, வெள்ளைக்காரனிடம் தன் தாத்தா வாங்கிய அந்த லாக்கரில்தான் தன் குடும்ப நகைகளை வைப்பதாகவும் சொல்லியிருந்தார்.  அந்த நகைகளை திருடிவிட்டால் போதும் என்றான் குன்னிமுத்து. அவன் அன்று சொன்னது அனைத்தும் மொச்சையின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

 

மறுநாள் அந்தியில் மூக்கையாவும் மொச்சையும் சைக்கிளில் ஓணான்குழிக்குப் புறப்பட்டனர். ஓணான்குழியிலிருக்கும் வண்ணக்கிளி கோட்டையன் வீட்டிற்குப் போய் சேர்ந்தபோது முற்றத்தில் கட்டிலைப் போட்டு அதில் படுத்தபடி ரேடியோவில் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தார் வ.கோட்டையன். அவரும் இவர்களுடன் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்தவர். ஓணான்குழியில் வீட்டின் முன்பு சிறியதொரு ஹோட்டல் வைத்திருந்தார். ஒண்டிக்கட்டை.

 

இருவரையும் பார்த்ததும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

 

“ஏ என்னடே இந்த நேரத்துல வந்திருக்கிய…”  என்றவர் வேகமாக எழுந்து இருவரின் அருகே வந்தார்.

 

“என்ன கோட்டை…எப்படி இருக்க…ஹோட்டல் நல்லா போவுது போல…தொந்தி பெருத்துருச்சே” என்றார் மூக்கையா.

 

“தொந்தி பெருக்கறது இருக்கட்டும்டே…இந்த நேரத்துல என்னத்துக்கு இந்தப் பக்கம் ஒங்க காத்து வீசுது…அதச்சொல்லுங்க மொத…”

 

“ஒண்ணும் விசயமில்ல கோட்டை…எம் பொஞ்சாதி அவ அம்மைக்கு ஒடம்பு சரியில்லன்னுட்டு ஊருக்கு போயிருக்கா…அதான் ஒன்னிய பார்த்துபுட்டு ரெண்டு நாளு இருந்துட்டுப் போலாமுன்னு வந்தம்” என்றொரு பொய்யை அவிழ்த்துவிட்டார் மொச்சை.

 

“அதான பார்த்தன்…பொஞ்சாதி இல்லன்னாதான ஒங்களுக்கு என் நெனப்பு வரும்…கடைசியா போன அம்மன் கொடைக்கு வந்திய…சரி இருங்க சாப்பிட்டுக்கிட்டே பேசுவம்” என்றவர் ஹோட்டலுக்குள் போனார். திரும்புகையில் பரோட்டாவும் சால்னாவும் கொண்டு வந்தார்.

 

மூவரும் பேசிச் சிரித்தபடியே சாப்பிட்டு முடித்தார்கள்.   பழைய கதைகளை பேசியபடி இருந்தபோது திடீரென்று வண்ணக்கிளி பேச்சு வந்ததும் கோட்டையனுக்கு வார்த்தை வரவில்லை. அவரது மவுனம் மற்ற இருவருக்கும் தேவையில்லாமல் வண்ணக்கிளி பற்றி பேசிவிட்டோமோ எனத் தோன்றியதும் பேச்சை மடைமாற்றி வேறு ஏதேதோ பேசிக்கொண்டிருந்துவிட்டு உறங்கச் சென்றார்கள். மொச்சைக்கு வண்ணக்கிளியின் முகம் ஞாபகத்தில் எழுந்து வந்தது. மூவரும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி வெவ்வேறு வழிகளில் வாழ்வாதாரத்தை தேடிக்கொண்டு அலைந்தபோது திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைத்துதான் முதல் முதலாக வண்ணக்கிளியைப் பார்த்தார்கள்.

 

ஊரிலிருந்து பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு சென்றபோது கடலில் குளித்துவிட்டு நாழிக்கிணற்றில் குளிப்பதற்காக நின்றபோதுதான் குளித்துமுடித்து படியேறி எதிரில் வந்துகொண்டிருந்தாள் வண்ணக்கிளி.  தேவதைக் கதைகளை ஊரிலிருக்கும் சிறிய நூலகத்தின் புத்தகங்களில் மட்டுமே வாசித்திருந்த கோட்டையனுக்கு வண்ணக்கிளி தேவதையாகவே தோன்றினாள். காதில் ஆடும் லோலாக்கில் பதிந்த பார்வை அவளது செவ்விதழோரச் சிரிப்பில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. மூக்கையாவும் மொச்சையும் உலுக்கிய பின்பே நினைவு திரும்பியவன் நாழிக்கிணற்றில் குளிக்காமல் படியேறி அவள் பின்னால் ஓடினான். அவளோ பாதங்கள் வெண்மணலில் புதைய முன்னால் நடந்து கொண்டிருந்தாள். திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் அவள் ஏறிய பேருந்திலேயே ஏறினான் கோட்டையன். அவள் சன்னலோரம் அமர்ந்தபடி காற்றிலாடும் தன் முன்நெற்றி முடியை சரிசெய்து கொண்டிருப்பதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.  காலம் ஏன் இவ்வளது இரக்கமில்லாமல் இருக்கிறது? ஏன் இத்தனை வருடங்கள் இவளை என் கண்ணில் காட்டாமல் மறைத்து வைத்திருந்தது? என அவனுள் ஒவ்வொரு கேள்விகளாய் தளும்பிக்கொண்டிருந்தபோது பேருந்து குரும்பூரில் நின்றது. அவள் இறங்கியதைக் கண்டதும் தானும் பேருந்திலிருந்து குதித்தான். குரும்பூர் கிராமமும் நகரமும் அல்லாத சிற்றூர். வெளி நாட்டிற்கு வேலைக்குச் செல்லும் நபர்கள் அதிகம் வசித்த ஊர் என்பதால் வீடுகள் ஒவ்வொன்றும் பெரியதாக இருந்தன.

 

வண்ணக்கிளி ரோட்டிலிருந்து மேற்கு நோக்கிப் பிரிந்து செல்லும் தெருவுக்குள் நுழைந்து அங்கே மூன்றாவதாக இருக்கும் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் வரை பின் தொடர்ந்தான் கோட்டையன். அந்த வீடு பிரம்மாண்டமாக இருந்தது. வெகு நேரம் அவள் திரும்பி வருவாள் என்றெண்ணியபடி தெருவில் அங்குமிங்கும் நடந்தவனை உள்ளூர்க்கார இளவட்டங்கள் இருவர் வழிமறித்தனர்.

 

“எந்தூர்ல நீ…ரொம்ப நேரமா பாக்குதோம்…இங்கேயே லாந்துத…வண்ணக்கிளிய சைட் அடிக்கியோ?”  சாரத்தை மடித்துக்கட்டிக்கொண்டே கோட்டையனிடம் கேட்டவனுக்கு மனதால் நன்றி சொன்னான் முனியாண்டி.

 

“வண்ணக்கிளி! எவ்வளவு பொருத்தமா பேரு வெச்சிருக்கான் அவ அய்யன். கட்டுனா இவளதான் கட்டணும்”  மனதிற்குள் நினைத்துக்கொண்டே தன் முன் நின்றவனிடம் “அப்படி எல்லாம் இல்லண்ணே எங்க பாட்டி இந்தூருதான்…ரொம்ப வருசத்துக்கு மின்னாடி இங்க வந்தது…அதான் எடந்தெரியாம லாந்துதேன்” என்றவன் அவர்களிடம் ஏதோ சொல்லி சமாளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி ஊருக்கு வந்தவனை மூக்கையாவும் மொச்சையும் பிடித்துக்கொண்டார்கள்.

 

“யோல கிறுக்குமூதி…அறிவு மயிரு இருந்தா இப்படி ஓடியாருவியா? அப்படி என்னத்தம்ல அந்தப் புள்ளகிட்ட கண்டுகிட்ட?”  மொச்சையின் கேள்வியை கோட்டையன் பொருட்படுத்தவில்லை.

 

“அவ பேரு வண்ணக்கிளியாம்ல…எவ்ளோ அழகா இருக்கு…பேரு மட்டுமா அழகு ஆளும் எப்படி இருக்கான்னு பார்த்தியல்லா…சொக்கத்தங்கம் போலல்லா மின்னுதா…” என்றவன் சொன்னபோது அவள் நினைப்பிலிருந்து இன்னும் மீளவில்லை என்று தலையிலடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

 

அத்துடன் அது நின்றுவிடவில்லை. வண்ணக்கிளி பித்து கோட்டையனின் உயிரின் வேர் வரை படர்ந்து நின்றது. வீட்டிற்கு ஒரு பச்சைக்கிளியை வாங்கி வந்து வண்ணக்கிளி எனப் பெயரிட்டான். அந்தக் கிளியுடனே காலம் கழித்தவனுக்கு வண்ணக்கிளி திருமணமாகி வெளியூர் சென்றது பல மாதங்கள் கழித்தே தெரிய வந்தது. அன்றிலிருந்து இந்த ஐம்பத்தி இரண்டாம்  வயது வரை திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தான். தன் பெயரின் முன்னால் வண்ணக்கிளியைச் சேர்த்துக்கொண்டான்.

 

நினைவிலிருந்து மீண்ட மொச்சை, கயிற்றுக்கட்டிலில் தலைக்கு ஒரு கையைவைத்து குறட்டைவிட்டு உறங்கும் கோட்டையனைப் பார்த்தார். இளவட்டமா இருக்கும்போது எப்படி வச்சிருந்தான் உடம்பை…இப்ப தொந்தி விழுந்து ஆளே மாறிப்போயிட்டானே என அவருக்காக வருந்தியபடியே தன் பெருந்த தொப்பையை தடவிக்கொண்டே உறங்கிப் போனார்.

 

5.

 

றுநாள் அதிகாலையே எழுந்து ஹோட்டல் வேலைகளை கவனிக்கப் போய்விட்டார் வ.கோட்டையன். ஏழு மணிக்கு எழுந்த மொச்சை மூக்கையாவை உசுப்பினான்.

 

“ஏ மூக்கை சீக்கிரம் எந்தி…வீரச்சங்கிலி வூட்டப் பார்க்கப் போணுமில்லா” என்றவுடன் மூக்கையாவும் எழுந்து இருவரும் வீரச்சங்கிலி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

 

வீரச்சங்கிலியின் வீடு ஊரில் கடைக்கோடியில் இருந்தது. வீட்டைச் சுற்றிலும் ஏராளமான மரங்கள் இருந்தன. மாமரங்கள் மட்டுமே பத்துக்கு மேல் இருந்தன. அவை போக ஏழெட்டு வேம்பு, நான்கைந்து தென்னை, இரண்டு புளிய மரம், மூன்று பலா மரங்களும் இருந்தன. இதன் நடுவே ஆழ்ந்த அமைதியில் இருந்தது வீடு. காவலுக்கு நாய் இருக்கிறதா என்று நோட்டம் விட்டார் மொச்சை. நாய் இருப்பது போல் தெரியவில்லை என்றதும் நிம்மதியாய் இருந்தது. ஆனாலும் வீட்டின் தன்மை ஏதோ இனம்புரியாத பயத்தை இருவரின் மனதிற்குள்ளும் விதைத்தது.தெருவில் ஆட்கள் யாருமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக கோட்டைச் சுவருக்கு வெளியே ஆடுகள் படுத்திருந்தன. வீட்டின் பின்புறம் மிகப்பெரிய குளம் இருந்தது.

 

இந்த வீட்டிற்குள்தான் குன்னிமுத்து சொன்ன ஸ்டீல் லாக்கர் இருக்கிறது. அதை உடைத்து உள்ளிருக்கும் நகைகளை கொள்ளை அடித்துவிட்டால் வேலை முடிந்தது. ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார் மொச்சை.

 

“இவ்ளோ பெரிய வூட்டுல வீரச்சங்கிலிய தவிர வேற யாரு இருக்காவன்னுட்டு தெரியலையே மூக்கை…வேலைக்கு ஆள் வச்சிருந்தா இந்நேரம் தென்பட்டிருக்கணும். அப்படியுந் தெரியல. நீ என்ன சொல்லுத?”

 

“அதையேதான் நானும் யோச்சிக்கேன் மொச்சை. நாம வந்து அரை மணி நேரமாச்சும் இருக்கணும்…ஆனா இன்னும் ஒருத்தரையும் காணோம். எனக்கென்னவோ ராத்திரி உள்ள இறங்குறதுக்கு பதிலா வெள்ளனயே இறங்கலாம் பொலுக்கு…” வீட்டை நோட்டம் விட்டபடியே சொன்னார் மூக்கையா.

 

“அவசரப்பட்டுரக்கூடாது மூக்கை…குன்னிமுத்து தம்பி ராவுக்குதான் உள்ள இறங்கச் சொல்லியிருக்கு…நாளைக்கும் நோட்டம் விட வருவோம் பொறவு முடிவு செய்யிவோம்” என்றபடி புகையை மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் வெளியே விட்டார் மொச்சை.

 

வீட்டினுள் நிற்கும் புளிய மரத்திலிருந்து ஒரு ஜோடிக்கண்கள் இவர்களையே பார்த்துக்கொண்டிருப்பதை உணராமல் அங்கிருந்து கோட்டையன் வீடு நோக்கி நடந்தனர் இருவரும்.

 

 

6.

 

ன்று முழுவதும் யார் வீட்டினுள் செல்வது அந்த ஸ்டீல் லாக்கர் எந்த அறையில் இருக்கும் என்பது பற்றிய பேச்சாகவே இருந்தது இருவருக்கும். கடைசியில் இருவருமே உள்நுழைவது என முடிவானது. கோட்டையன் ஹோட்டலை மூடிவிட்டு இரவு வீடு திரும்பியதும் குளத்திற்கு குளிக்கப் போகலாம் என்று முடிவுசெய்து மூவரும் குளத்திற்கு வந்து சேர்ந்தனர்.

 

இரவுப் பூச்சிகளின் சத்தத்தாலும் தவளைகளின் சத்தத்தாலும் நிறைந்திருந்த இரவில் குளம் பார்ப்பதற்கு ரம்மியமாய் காட்சியளித்தது. அந்த நேரத்தில் யாரும் குளம் பக்கத்தில் வருவதில்லை என்பதால் இவர்கள் மட்டுமே அங்கே இருந்தார்கள். காற்று மிதமாய் வீசியது. படித்துறைக்கு வந்து சேர்ந்தபோது இரவு பதினோரு மணி ஆகியிருந்தது. படித்துறையிலிருந்து பார்த்தபோது வீரச்சங்கிலியின் வீட்டின் பின்புறப் பகுதி தெரிந்தது.  மூக்கையாவும், மொச்சையும் அந்த வீட்டையே பார்த்தபடி குளப்படிக்கட்டில் நின்றிருந்தனர்.

 

“ஏ என்ன வீரச்சங்கிலி அண்ணாச்சி வீட்டை அப்படி பாக்கிய…நீங்க பாக்குறது தெரிஞ்சா கண்ணை நோண்டிபுடுவாருல்லா அண்ணாச்சி” என்றபடி சட்டையையும் வேட்டியையும் கழற்றிவிட்டு பட்டாபட்டி ட்ரவுசருடன் நீருக்குள் இறங்கினார் கோட்டையன்.

 

“ஏன் வீட்டை பாக்குறது ஒரு குத்தமா…அப்படி என்ன பொல்லாத வீட கட்டிப்புட்டாராம் ஒங்க சங்கிலி அண்ணாச்சி” என்ற மொச்சை மீது தண்ணீரைத் தெளித்தார் கோட்டையன்.

 

“மொச்சை ஒங்க எல்லாத்துக்கும் வீரச்சங்கிலி அண்ணாச்சி ஊருக்குள்ள பெரிய புள்ளிங்கறது மட்டுந்தான் தெரியும்…அதுவும் உண்மைதான் சுத்துப்பத்து கிராமத்துல இருக்கற சல்லிய மொத்தமா சேத்தாக்கூட அவருகிட்ட இருக்கற சல்லிக்கு பக்கத்துல கூட வரமிடியாது பாத்துக்க…ஏ பரம்பரையா சொத்து இருக்கற குடும்பமில்லா…அவிய ஐயா பண்ணையாரு…அவிய தாத்தா வெள்ளைக்கார தொர கிட்ட வேலை பார்த்து சொத்து சேர்த்தவரு…இந்தா இருக்கே வீடு இது அவிய தாத்தா கெட்டுனதுதான்…இருவது முப்பது ரூமு இருக்கும்னுட்டு ஊர்ல பேசிக்கிடுதாவ…” சொல்லிவிட்டு இடைவெளிவிட்டார். அந்த வீட்டின் விஸ்தாரமான உருவத்தை நிலவொளியில் மூவரும் பார்த்தபடி நின்றிருந்தனர். பூமிக்குள்ளிருந்து முளைத்து வந்தது போல தோன்றமளித்தது நூற்றாண்டு கண்ட வீடு.

 

“இவ்வளவு பெரிய வீட்ல ஒத்தையாவா இருக்காரு வீரச்சங்கிலி?”  குளிர்ந்த குளத்து நீரை தொட்டுப் பார்த்தபடி படிக்கட்டில் உட்கார்ந்தவாறே கேட்டார் மூக்கையா.

 

“என்ன சொத்து இருந்து என்ன செய்ய…வீரச்சங்கிலி அண்ணாச்சி பெஞ்சாதி போன வருசம் போயி சேர்ந்துட்டாவ…அந்தா ஒரு குடிச தெரியுது பாருங்க..அதுல இருக்கிற சித்திரைக்கொடி கிழவி தான் முப்பது வருசமா அந்த வூட்டுக்குள்ளார போயி வருது…எப்பவாச்சும் தோட்டவேலை செய்ய ஆளுக போயி வருவாவ…மத்தநேரமெல்லாம் அண்ணாச்சியோட ஜீப்பு மட்டுந்தான் உள்ள போயிட்டு வரும்…ஊருக்குள்ள கோட்டிக்கார அண்ணாச்சின்னும் அவருக்கு ஒரு பேரு இருக்குல்லா”  நீரிலிருந்து வெளியே வந்து துண்டால் உடலைத் துடைத்தபடியே சொன்னார் கோட்டையன்.

 

“இத்தன வருசமா நாங்களும் ஒங்க ஊருக்கு வந்து போறோம்…இவர பத்தி தெரியாம போச்சே”  என்றார் மொச்சை.

 

“தெரிஞ்சு என்ன ஆவப் போவுது சொல்லு…நம்ம பொழப்பே இங்க நாறிகிட்டு கெடக்கு…இதுல பண்ணையாரு மாரி இருக்கற வீரச்சங்கிலி பத்தி தெரிஞ்சா என்ன தெரியாட்டி என்ன…செரி நேரமாச்சு வாங்க போவம்…வாடை காத்து உடம்புக்கு ஆவாது” என்றபடி வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார் கோட்டையன்.

 

அவரைத் தொடர்ந்து நடந்தார்கள் மற்ற இருவரும். அப்போது வீரச்சங்கிலி வீட்டிலிருந்த மரத்தில் பறவைகள் இறக்கைகளை அடித்து பெருங்கூச்சல் எழுப்பின. குளம் சலமனற்று கிடந்தது.

 

7.

 

ரவு உறங்க தாமதமானதால் மறுநாள் காலை தாமதமாகவே எழுந்தனர் மொச்சையும் மூக்கையாவும். வெயில் ஏறத் துவங்கியிருந்தது. கோட்டையன் ஹோட்டலில் இருந்தார். இன்றிரவு கொள்ளை அடிக்க வீரச்சங்கிலியின் வீட்டிற்குள் இறங்க வேண்டும். மூக்கையாவுக்கு படபடப்பாக இருந்தது. நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்.

 

“ஏ மூக்கை…குட்டி போட்ட பூனை மாரில்லா லாந்துத…நீயே காட்டிக்கொடுத்துடுவ பொலுக்கு” கிணற்றில் நீர் இறைத்தபடியே கேட்டார் மொச்சை.

 

“ஒரே படபடப்பா இருக்கு மொச்சை…நாம என்ன பரம்பரைக் கள்ளனுவளா…ஏதோ கெட்ட நேரம் களவாங்கணும்னுட்டு முடிவு பண்ணிட்டோம். ஆனாலும் உள்ளுக்க ஒதறலால்லா இருக்கி” மூக்கையாவின் பதற்றத்தைப் புரிந்து கொண்ட மொச்சை நீர் இறைப்பதை நிறுத்திவிட்டு மூக்கையாவின் அருகில் வந்தார்.

 

“மூக்கை…எனக்கும் பதட்டமாதான் இருக்கு…அதுக்காண்டி வந்த சோலிய முடிக்காம போவமுடியுமா…நீ பார்த்தல்லா அம்மாம் பெரிய வூட்ல ஒரு நாயிகூட இல்ல…நேரோ போவோம் லாக்கர ஒடைப்போம் நகையோட கம்பி நீட்டிருவோம்…என்ன செரியா?”

 

மொச்சையின் வார்த்தைகள் மனதை சற்று ஆற்றுப் படுத்தினாலும், எல்லாம் ஒழுங்காக முடியவேண்டுமே என்கிற பதைபதைப்பு மூக்கையாவின் முகத்தில் தென்பட்டது. தனக்குப் பிடித்தமான பழைய பாடலை சத்தமாக பாடிக்கொண்டே கிணற்றில் இறைத்த நீரில் குளித்து முடித்தார்.

 

நண்பகல் வேளை மிதமான காற்றுடன் பெய்ய ஆரம்பித்த மழை, நேரம் ஆக ஆக வலுவானது. அடித்துப் பெய்த மழையும் பலத்த காற்றும் சூறாவளி போல காட்சியளித்தன. வெகு நேரம் பெய்த பேய்மழை நின்றபோது இரவு ஏழு மணி ஆகியிருந்தது. காற்று அப்போதும் நிற்கவில்லை. தெருவெங்கும் ஒடிந்து கிடந்தன மரக்கிளைகள்.

 

“மழை வுட்டுருச்சி…இதுதான் சரியான நேரம்…வா கெளம்புவோம்” என்றபடி லாக்கரை உடைப்பதற்காக கொண்டு வந்திருந்த மஞ்சப்பையை எடுத்துக்கொண்டு முன்னால் நடந்தார் மொச்சை. அதற்குள் ஓர் உளியும், சுத்தியலும் சில கம்பிகளும் இருந்தன. மூக்கையா பின் தொடர்ந்தார். இந்நேரத்தில் எங்கே போகிறார்கள் என்று யோசித்தபடியே பரோட்டாவுக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தார் கோட்டையன்.

 

வீரச்சங்கிலியின் வீடிருக்கும் தெரு வழியே போகாமல் நேராக குளமிருக்கும் பக்கமாக சென்றார்கள். வீட்டின் பின்புறமிருக்கும் இரும்பு கேட்டின் அருகே நின்றபடி யாரும் இருக்கிறார்களா என சிறிது நேரம் நோட்டம் விட்டார்கள். யாருமில்லை என்பதை உறுதி செய்துகொண்டு கேட்டில் வேகமாக ஏறினார் மூக்கையா. பனைமரத்தையே சாதாரணமாக ஏறுபவர் என்பதால் கேட்டில் ஏறுவது எளிதாக இருந்தது. மொச்சை ஒருவாறு சமாளித்து ஏறி வீட்டிற்குள் குதித்தார். வெளியே இருந்து பார்த்ததை விடவும் மிகப் பிரமாண்டமாக இருந்தது வீடு. மெல்ல அடிமேல் அடிவைத்து இருவரும் வீட்டின் பின் கதவை நோக்கி நடந்தார்கள். கேட்டிலிருந்து பின்கதவு வரை தரையெங்கும் மாஞ்சருகுகள் உதிர்ந்து கிடந்தன. ஏராளமான மாம்பூக்களும் உதிர்ந்திருந்தன. அவற்றிலிருந்து எழுகின்ற வாசமும் செம்மண்வாசமும் கலந்து ஒருவித கிறக்கமான வாசனையை தருவித்தன. பலத்த காற்றினால் இலைகள் உதிர்ந்தபடியே இருந்தன. கூகையொன்று மாமரக் கிளையில் உட்கார்ந்திருந்தது. ஒளிரும் கண்களால் இவர்கள் இருவரையும் பார்த்தபடி அசைவற்றிருந்தது. மூக்கையா தான் வைத்திருந்த சிறிய டார்ச்சை அடித்துக்கொண்டே நடந்தார்.

 

இருவரும் பின்கதவை அடைந்தார்கள். அதுவொரு பழைய மரக்கதவு.  மொச்சை தன் மஞ்சப்பைக்குள்ளிருந்து சிறியதொரு கம்பியை எடுத்து வளைத்து சாவி துவாரத்தில் நுழைத்து திறக்க முயற்சித்தார். சில நிமிடங்களில் உட்பக்க தாழ்பாள் திறந்து கொண்டது. மெதுவாக கதவை உள்நோக்கி தள்ளியபோது அந்தக் கதவிலிருந்து எழுகின்ற க்றீச் ஒலி வினோதமாக இருந்தது. அதுவொரு பறவையின் கூக்குரல் போலிருந்தது. வீட்டிற்குள் நுழைந்து கதவை சாத்திவிட்டு திரும்பினார்கள். வீடெங்கும் அடர் இருள் படர்ந்திருந்தது.  வரிசையாக நிறைய அறைகள் இருப்பது புரிந்தது.

 

“ஏ மொச்சை…வீட்டுக்குள்ளயும் ஏதோ வாசம் வருது கவனிச்சியா?”  மெதுவாக மொச்சையின் காதருகே கிசுகிசுத்தார் மூக்கையா.

 

“ஆமா மூக்கை…என்னமா இருக்கி…என்ன வாசனையா இருக்கும்?”  மூக்கை உறிஞ்சியபடி கேட்டார் மொச்சை.

 

“அதான் தெரியமாட்டிக்கி…சந்தனமும் ஜவ்வாதும் கலந்தா இப்படித்தான் இருக்கும் பார்த்துக்க”

 

“சரி வாசன கெடக்கட்டும் வந்த வேலைய பாப்பம்…நீ இடது பக்கம் போ. நான் வலதுபக்கம் போறேன்…லாக்கர் தென்பட்டுச்சுன்னா குயிலுச்சத்தம் மூணு தடவ கொடுக்கணும் ஞாபகமிருக்கில்லா?”  கோட்டையனின் வீட்டில் லாக்கர் பற்றி பேசியதை நினைவூட்டினார் மொச்சை. யார் முதலில் லாக்கரைக் கண்டுபிடித்தாலும் உடனே மூன்று முறை குயிலைப் போல கூவ வேண்டும். இது இப்போது வந்த பழக்கமல்ல. சிறுவயது முதலே பழகிய பழக்கம். விளையாடுவதற்கு சிறுவர்கள் ஒன்றுகூடும் போது ஒவ்வொருவர் வீட்டின் முன்பும் நின்று மூன்று முறை கூவுவார்கள். வீட்டிற்குள்ளிருந்து பதிலுக்கு ஒரு முறை கூவும் சத்தம் வந்தால் விளையாட வருகிறேன் என்று அர்த்தம். இரண்டு முறை பதில்கூவல் கேட்டால் அப்பா வீட்டிலிருக்கிறார் விளையாட வந்தால் தோலை உரித்து மத்தளம் கட்டிவிடுவார் என்று அர்த்தம்.  அதையே இங்கும் பயன்படுத்த முடிவெடுத்திருந்தார்கள்.

 

“நல்லா ஞாபகமிருக்கி…சரி நீ உன் டார்ச்சை எடுத்துக்க…மறந்து போயிகூட லைட்ட போட்டுராத…வெளிய இருந்து பார்த்தாக்கூட லைட் இருந்தா தெரிஞ்சுரும்…பொறவு சங்குதான்…வக்காலி இன்னிக்கு நகையோடதான் வெளிய போறோம்” என்றபடி இடதுபுறமிருக்கும் அறைக்குள் நுழைந்தார் மூக்கையா.

 

தன் மஞ்சப்பைக்குள்ளிருந்து டார்ச்சை எடுத்துக் கொண்டு வலது புறமிருக்கும் அறைக்குள் நுழைந்தார் மொச்சை. அறை விசாலமாக இருந்தது. மிகப்பெரிய மேசையும் அதன் நடுவே பூங்கொத்து ஒன்றுமிருந்தன. மெல்ல அடிமேல் அடிவைத்து அறையெங்கும் பார்த்துக்கொண்டே வந்தார். ஏராளமான சட்டமிடப்பட்ட புகைப்படங்கள் அந்த அறையெங்கும் நிறைந்திருந்தன. நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி போன்ற அரசியல் தலைவர்களின் படங்களும் மாட்டப்படிருந்தன. அந்த அறையிலிருந்து அடுத்த அறைக்குள் நுழைந்த மொச்சை அங்கும் லாக்கர் தென்படாததால் அதற்கு அடுத்த சிறியதொரு அறைக்குள் நுழைந்தார். அந்த அறையில் ஏராளமான சாமிப்படங்கள் இருந்தன.

 

அப்போது மூன்றுமுறை குயில் கூவும் ஓசை கேட்பது போலிருந்தது.

 

“மூக்கை கெட்டிக்காரன்…லாக்கர கண்டுபிடிச்சுட்டான்” என்றபடியே சத்தம் கேட்ட அறையை நோக்கி வேகமாக நடந்தார். அந்த அறைக்குள் டார்ச்சை அடித்தபோது மூக்கையா அங்கே இல்லை.

 

“மூக்கை…ஏ மூக்கை…எங்க இருக்க?”  கேட்டுக்கொண்டே அறை முழுவதும் தேடியவர் எங்கும் மூக்கையாவைக் காணாததால் குழப்பமுற்று நின்றிருந்தபோது அவரது முதுகுக்குப் பின்னால் ஏதோ அரவம் கேட்டது. பயத்துடன் திரும்பி டார்ச்சை அடித்தார்.

 

அங்கே ஓர் இளம் பெண் நின்றிருந்தாள்.  திடுக்கிட்டு அலறியபடியே மூர்ச்சையானார் மொச்சை. மூர்ச்சையாகிக் கிடக்கும அவரை நெருங்கினாள் அந்தப் பெண்.

 

 8.

 

டதுபுற அறைக்குள் நுழைந்த மூக்கையா அந்த அறையின் தரைவிரிப்பில் கால் வைத்ததும் அப்படியே நின்றுவிட்டார். அரண்மனைகளில் மட்டுமே பட்டுத்துணியில் தரைவிரிப்புகள் இருப்பதாக கேள்விப்பட்டிருந்தவருக்கு வீரச்சங்கிலியின் வீட்டிலிருக்கும் தரைவிரிப்பு பெரியதொரு ஆச்சர்யத்தை தந்தது. சிறிது நேரம் அதில் உட்கார வேண்டும் போலத் தோன்றியது. வந்த வேலையை விட்டுவிட்டு உட்கார்ந்தால் பொடனியில் மொச்சை மிதிப்பானே என்கிற எண்ணம் வந்ததும் லாக்கரைத் தேடும் வேலையைத் தொடர்ந்தார். அந்த அறையில் மிகப்பெரியதொரு படுக்கை இருந்தது. அதன் அருகே ஆள் உயர கண்ணாடியும் சிறிய சோபா ஒன்றும் இருந்தன. லாக்கரைத் தவிர எல்லாம் இருக்கிறதே என நினைத்தவர் அடுத்த அறைக்குள் நுழைந்தார். அந்த அறையில் மாம்பழ வாசம் வந்தது. அறையின் மூலையில் சாக்குப்பைகள் விரித்து அதன் மேல் வரிசையாக நிறைய மாம்பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மூக்கையாவுக்கு எச்சில் ஊறியது. ஒரு பழத்தை எடுத்து கடிப்பதற்காக வாய்க்கு அருகில் கொண்டு சென்றபோதுதான் மொச்சையின் அலறல் சத்தம் கேட்டது. பழத்தை அப்படியே போட்டுவிட்டு சத்தம் வந்த திசை நோக்கி விரைந்தார்.

 

மூக்கையா வந்து பார்த்தபோது தரையில் கால் பரப்பி விழுந்து கிடந்தார் மொச்சை. ஓடிச்சென்று அவரை உலுக்கினார். மொச்சையிடம் அசைவில்லை. நெஞ்சில் காதை வைத்துக் கேட்டபோது இதயத்துடிப்பின் ஓசை கேட்டதும் நிம்மதியாக இருந்தது. மொச்சையின் தலையை எடுத்து மடியில் வைத்து கன்னத்தில் தட்டி நாடியை அங்குமிங்கும் அசைத்தார். மொச்சைக்கு விழிப்புத் தட்டிற்று. மிரட்சியுடன் மூக்கையாவைப் பார்த்தவர் சன்னமான குரலில் ஏதோ முனகினார். மூக்கையாவுக்கு புரியவில்லை.

 

“ஏ மொச்சை…இருட்டுக்குள்ள பார்த்து நடக்கணும்லா இல்லாட்டி இப்படித்தான் தடுமாறிக் கெடக்கணும்…எந்தி” என்றவர் மொச்சையைத்  தாங்கிப்பிடித்து உட்கார வைத்தார்.

 

“வெளிய போயிருவம்” மெதுவான குரலில் மூக்கையாவிடம் சொன்னார் மொச்சை.

 

“இன்னும் லாக்கர கண்டுபிடிக்கல…அதுக்குள்ளார வெளிய போனுங்க? கீழ உழுந்ததுல மூள கீள கலங்கிருச்சா?” மொச்சையின் முகத்தில் டார்ச் அடித்துக்கொண்டே கேட்டார் மூக்கையா. மொச்சைக்கு முகமெல்லாம் வியர்த்து வழிந்துகொண்டிருந்தது. எதையோ முணுமுணுத்தன உதடுகள். தடுமாறி எழுந்தவர் ஓட்டமும் நடையுமாய் பின்புறக் கதவை நோக்கி விரைந்தார்.

 

கதவைத் திறந்து கொண்டு வேகமாக பின்புற கேட்டிற்கு வந்தவருக்கு அந்த இளம்பெண்ணின் ஞாபகமும் இருளும் பயத்தை அதிகப்படுத்தின. திரும்பி மூக்கையா வருகிறாரா எனப் பார்க்கும் தைரியமும் இல்லை. கேட்டைத் திறந்தவர் வேகமாக ஓட ஆரம்பித்தார். குளக்கரை வழியே ஓடியவர் கோட்டையனின் வீட்டை அடைந்தபோது மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தவர் மூக்கையா வருகிறாரா எனத் தெருவையே பார்த்தபடி இருந்தார். சற்று நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மூக்கையா மொச்சையின் அருகில் உட்கார்ந்தார்.

 

“என்ன மொச்சை ஆச்சு உனக்கு? பேயடிச்ச மாரில்லா ஓடியார…வந்த காரியமே வெளங்காம போச்சே”

 

“பேயி அடிக்கல மூக்கை…ஆனா நா பேய பார்த்தேன்” சொல்லும்போதே மொச்சையின் முகத்தில் வியர்க்கத் துவங்கியது.

 

“என்னது பேய பாத்தியா…என்ன உளருத?”  மூக்கையாவால் நம்ப முடியவில்லை. மொச்சையின் முகத்தையே பார்த்தார். மொச்சையின் முகத்தில் அப்பியிருந்த பயம் அவர் சொல்வது உண்மையோ என நினைக்க வைத்தது.

 

“உளரல மூக்கை…தெரியாத பேய பார்த்தாலே கழிஞ்சிருவோம்…நான் பார்த்தது தெரிஞ்ச பேயி வேற”

 

“என்ன சொல்லுத…தெரிஞ்ச பேயா? கோட்டிக்காரன் மாரில்லா பேசுத…முனி இருக்குன்னு சொன்ன பனைல கூட ஆயிரந் தடவ ஏறி எறங்குனவன் நான்…பேயே இல்லைன்னு நம்பறவன்…நீ என்ன புதுசா தெரிஞ்ச பேயிங்க?”  வியப்புடன் கேட்டார் மூக்கையா.

 

“முழுசா கேளு மூக்கை…லாக்கர தேடி ஒவ்வொரு ரூமா போயிகிட்டு இருந்தேன்…அப்பதான் மூணுதடவ குயிலுச்சத்தம் கேட்டுச்சு…சரி நீதான் சத்தம் குடுத்தன்னு நெனச்சுக்கிட்டு சத்தம் வந்த ரூமுக்குப் போயி டார்ச்ச அடிச்சுப் பாக்கேன்…அங்கேதான் அந்த வயசுப்புள்ள நிக்கா…இல்ல இல்ல…அந்தப் பேயி நிக்கி…அது யாரு தெரியுமில்லா?” என்றவர் மேற்கொண்டு சொல்லாமல் நிறுத்தினார்.

 

“யாருன்னு சொல்லித்தொலை…எனக்கு இப்பவே மண்டை கிறுகிறுங்கு” ஆர்வம் தாங்காமல் கேட்டார் மூக்கையா.

 

“அது நம்ம கோட்டையன் ஒரு புள்ளைய காதலிச்சாம்லா…அவ தான்…வண்ணக்கிளி”  மொச்சை சொல்லி முடிக்கும் தருணம் படலையைத் திறந்துகொண்டு கோட்டையன் வீட்டிற்குள் நுழைந்தார். நேராக மொச்சையிடம் வந்தவர்,

 

“கடைசியா ஏதோ சொன்னியே அது என்ன மொச்சை” என்றார். கோட்டையனைச் சற்றும் எதிர்பார்க்காத இருவரும் எழுந்து நின்றார்கள். மொச்சையின் பார்வை பூமியைப் பார்த்தபடி இருந்தது.

 

“வண்ணக்கிளி”  என்றார் மொச்சை.

 

9.

 

ந்தப் பெயரைக் கேட்டதும் கோட்டையனின் கண்களிலிருந்து நீர் வடிந்தது. வேட்டியைத் தூக்கி கண்களைத் துடைத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார். வாழ்வு முழுவதும் ஆயிரமாயிரம் முறை மனதுக்குள் உச்சரித்து நெகிழ்ந்த பெயர்தான் என்றபோதும் செவி வழியே அந்தப் பெயரை பல வருடங்கள் கழித்து கேட்டபோது உடைந்துதான் போனார். கண்ணாடித்தொட்டியின் அடிப்பாகத்திலிருந்து மேல் நோக்கி நீந்தும் மீன்குஞ்சு போல வண்ணக்கிளியின் முகம் அவரது மனதின் ஆழத்திலிருந்து நீந்தி மேலே வந்தபோது குலுங்கி அழ ஆரம்பித்தார். மொச்சைக்கும் மூக்கையாவுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரின் இருபுறமும் உட்கார்ந்து தோளில் கைபோட்டுக்கொண்டு ஆறுதல்படுத்த முயன்றார்கள். ஆனால் அந்த முதிய கண்ணீரின் கனம் அதிகமானதாக இருந்தது. தன் வாழ்வையே அவளுக்கென ஒப்புக்கொடுத்து இன்று தனிமரமாக நிற்கிறோமே எனும் குற்றவுணர்வு மேலிட அழுகை அதிகமானது. சற்று நேரம் நீண்ட அழுகை மெதுவாக குறைந்து நின்றது. குனிந்து வேட்டி நுனியால் முகத்தை துடைத்துக்கொண்டு மொச்சையிடம் திரும்பினார்.

“வண்ணக்கிளிக்கு என்ன மொச்சை?”  கேட்டுவிட்டு மொச்சையின் பதிலுக்காக காத்திருந்தார். மொச்சையின் பார்வை அப்போதும் தரையில்தான் நிலைத்திருந்தது. தரையில் ஊர்ந்த ரயில்பூச்சியை தொடர்ந்தது அவரது பார்வை.

 

மெளனம் உடைத்து மூக்கையா நடந்தவை அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தார். அவர் சொல்லி முடித்தபோது கோட்டையனுக்கு புல்லரித்தது போலிருந்தது.

 

“களவாங்கப் போங்க இல்ல எக்கேடு கெட்டும் போங்க…வண்ணக்கிளிய நீ பாத்தியா இல்ல உளருதியா?”  மொச்சையை கூர்மையாக பார்த்துக்கொண்டே கேட்டார்.

 

“சத்தியமா அது வண்ணக்கிளிதான் கோட்டை…எனக்குத் தெரியாதா குரும்பூர்ல எத்தனவாட்டி பாத்திருக்கேன். அதே கூர்நாசி…நீ சொல்லுவியே காதுல லோலாக்கு…அதுகூட அப்படியே இருக்கி…நான் சொல்றத நம்பலன்னா நீயே போயி பாரு” சொல்லிவிட்டு தலைகவிழ்ந்து கொண்டார் மொச்சை.

 

“மொழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுதான் மொச்சை…வண்ணக்கிளியா இருந்தா இன்னிக்கு தேதிக்கு இப்ப அம்பது வயசுக்கு மேல இருக்கும்……மொச்சை என்னத்தையோ பார்த்துப்புட்டு உளருதான்…நீ கலங்காத கோட்டை”  என்றார் மூக்கையா.

 

எதுவும் பேசாமல் திண்ணையிலிருந்து எழுந்து வீட்டிற்குள் நுழைந்த கோட்டையன் பாயை எடுத்துப்போட்டு படுத்துக்கொண்டார். வண்ணக்கிளியும் அவர் அருகே படுத்திருந்து அவரது கண்களுக்குள் பார்ப்பது போலிருந்தது. பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாய் மனதில் விரிய ஆரம்பித்தன.

 

வண்ணக்கிளி திருமணம் முடித்து வெளியூர் சென்ற பின்பும் அவள் நினைவாகவே கிடந்த கோட்டையன் ஏழு வருடங்களுக்குப் பின் அவள் குதிரைநேரி எனும் கிராமத்தில் வசிப்பதாகக் கேள்விப்பட்டான். ஒரே ஒரு முறை அவளைப் பார்த்துவிட்டு மனதிலிருந்து அவள் நினைவை அழித்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டு குதிரைநேரிக்கு பஸ் ஏறினான். அப்போது குதிரைநேரி அம்மன்கோவில் கொடைவிழா நடந்த சமயம் என்பதால் ஊருக்குள் வெளியூர் ஆட்கள் அதிகமாக இருந்தனர். ஊரின் அனைத்து தெருவிலும் சன நடமாட்டம் அதிகமிருந்தது. ஒவ்வொரு தெருவாக சுற்றித் திரிந்தும் வண்ணக்கிளியின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சோர்ந்து போனவன் அன்றிரவு அம்மன்கோவிலுக்கு வெளியே நடந்துகொண்டிருந்த வில்லுப்பாட்டுக் கச்சேரிக்கு சென்றான். கூட்டத்தில் ஓர் ஆளாக அமர்ந்தவனுக்கு கச்சேரியில் மனம் லயிக்கவில்லை. பெண்கள் கூட்டத்தில் வண்ணக்கிளி தென்படுகிறாளா என்று தேடியபோதும் இருளில் முகங்கள் சரியாகத் தெரியவில்லை.  சற்று நேரத்தில் பெரும் மழை பெய்ய ஆரம்பித்ததால் கச்சேரி பாதியில் முடிந்தது. ஊர்மக்கள் கலைந்து சென்றனர். இந்த நள்ளிரவில் எங்கே செல்வது என யோசித்தபடி கால் போன போக்கில் நடந்துகொண்டிருந்தான் கோட்டையன்.

 

அந்த ஊரிலிருக்கும் பள்ளிக்கூடத்தில் இரவைக் கழிக்கலாம் என நுழைந்தபோது இவனைப்போலவே வெளியூர்வாசிகள் சிலரும் அங்கே படுத்திருந்தார்கள். இரவு முழுவதும் எவ்வளவு முயன்றும் உறக்கம் வரவில்லை. விடிந்ததும் இந்த ஊரைவிட்டுப் போய்விட வேண்டும் என்று நினைத்தபடியே கிடந்தவன் அதிகாலையில் எழுந்து வேப்பங்குச்சியை ஒடித்து பல்லைத் தேய்த்துக்கொண்டே ஆற்றை நோக்கி நடந்தான். கோவில் கொடைக்கு வந்திருந்த கரகாட்ட கோஷ்டி ஆற்றில் சிரித்துப் பேசி குளித்துக்கொண்டிருந்தார்கள். சூரியன் மெல்ல மேல் எழுந்து கொண்டிருந்தது. உடை களைந்து தண்ணீரில் இறங்கி அழுக்குத் தீர குளித்துவிட்டு வெளியே வந்து வேட்டியால் உடலைத் துடைத்துவிட்டு நீரைப் பிழிந்து வேட்டியை உதறி கட்டிக்கொண்டான். இன்னும் சற்று நேரத்தில் ஊருக்குப் போகவேண்டிய பஸ் வந்துவிடும் என்பதால் பஸ் ஸ்டாப்பை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.  தூரத்தில் மூன்று பெண்கள் இடுப்பில் குடத்துடன் ஆற்றுக்கு வந்து கொண்டிருந்தார்கள். பஸ்ஸை பிடிக்கும் அவசரத்தில் அவர்களை கவனிக்காமல் நேராக பஸ் ஸ்டாப் வந்தவன் அருகிலிருந்த பெட்டிக்கடையில் பீடிக்கட்டு ஒன்றை வாங்கினான். அப்போது பெட்டிக்கடையிலிருந்த ரேடியோவில் எம்.ஜி.ஆர் முதல் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார் என்கிற செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. “புரட்சித்தலைவர்னா சும்மாவாடே” என்றபடியே

பீடிக்கட்டிலிருந்து ஒரு பீடியை உருவி வாயில் கவ்விக்கொண்டு பற்றவைத்து ஒரு இழுப்பு இழுத்தான்.  பஸ் ஸ்டாப்பிலிருந்து இருநூறு அடிகள் தொலைவில் இருந்தது ஆறு. தன்னிச்சையாக ஆறு இருக்கும் பக்கமாக திரும்பியவன் துணுக்குற்றான். அங்கே பெண்கள் இருவர் ஆற்றோரம் கத்தியபடி அங்குமிங்கும் ஓடியபடி இருப்பது தெரிந்தது.

 

பீடியைத் தூர எறிந்துவிட்டு வேகமாக ஆற்றை நோக்கி ஓடியபோது அங்கே நீர் எடுக்க வந்த பெண்களில் ஒருத்தி ஆற்றுச் சுழலில் சிக்கி நீருக்குள் மூழ்கிவிட்டதாக மற்ற இருவரும் அழுதுகொண்டே சொன்னார்கள்.  கரகாட்ட கோஷ்டியும் கிளம்பியிருந்தார்கள். ஒரு கணம் யோசித்தவன் சடாரென்று நீருக்குள் பாய்ந்தான். சிறிது நேரத்தேடலுக்குப் பின் பெண்ணொருத்தியின் தலைமுடி தென்பட்டது. வேகமாக நீந்திச் சென்று முடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு கரைநோக்கி நீந்தினான். ஆறு ஆர்ப்பரித்தது. உடலின் வலு அனைத்தையும் ஒன்று திரட்டி கரையை நோக்கி நீந்தி அவளை தரையில் இழுத்துப் போட்டுவிட்டு அருகே தானும் விழுந்தான். மூச்சிரைத்தது. வலது கையில் அதிகம் வலியிருந்தது. அந்தப் பெண்ணின் தோழிகள் இருவரும் ஓடிவந்து அவளை எழுப்ப முயற்சித்தபோது ஒருசேர கத்தினார்கள்   “ஏட்டீ வண்ணக்கிளி…கண்ணைத் தொறந்து பாருளா”

 

கோட்டையனின் உடலும் உயிரும் ஒரே நேரத்தில் சிலிர்த்து இதயம் சில்லுகளாய் சிதறிப்போனது.

 

 

10.

 

ண்ணக்கிளி சடலமாகக் கிடந்தாள். ஐந்து நிமிடத்திற்கு முன்னால் வெளியே இழுத்திருந்தால் பிழைத்திருக்கலாம் எனப் பேசிக்கொண்டார்கள். வண்ணக்கிளியின் கணவன் தலையிலடித்துக் கொண்டு அழுது புரண்டான். இழவு வீட்டின் எதிரே இருக்கும் வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருந்தான் கோட்டையன். உயிராக நினைத்தப் பெண்ணை ஆறு காவு வாங்கிக்கொண்டதே எனும் ஆற்றாமையும் துக்கமும் அவனை நிலைகுலையச் செய்தன.  பாடையில் வண்ணக்கிளியை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றபோது கோட்டையனும் உடன் சென்றான். அவளது உடல் அடக்கம் செய்யப்பட்டு கடைசிக் காரியங்கள் முடிந்து அனைவரும் திரும்பிய பின்னும் இடுகாட்டின் மூலையில் வெகு நேரம் உட்கார்ந்திருந்தான். தன் வாழ்வின் வண்ணங்களை எல்லாம் வண்ணக்கிளி எடுத்துச் சென்றுவிட்டதைப் போல உணர்ந்தழுதவன் குதிரைநேரியிலிருந்து தன் ஊருக்கு வந்து  திருச்செந்தூர் ஹோட்டல் ஒன்றில் சில வருடம் சர்வராக வேலை செய்தான். கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்து சொந்தமாக வீட்டின் முன் ஹோட்டல் ஒன்றை திறந்தான். வண்ணக்கிளி ஹோட்டல் எனப் பெயரிட்டு வாழ்ந்து வந்தான்.

 

நினைவிலிருந்து மீண்ட கோட்டையனுக்கு உறக்கம் வரவில்லை. வண்ணக்கிளியின் ஆவிதான் மொச்சையின் கண்களுக்குத் தென்பட்டிருக்குமோ என்று நினைத்தபடியே புரண்டு கொண்டிருந்தார். தூரத்தில் நாயொன்றின் ஊளைச் சத்தம் கேட்டது. பின்னிரவில் உறங்கத் துவங்கிய கோட்டையனுக்கு வண்ணக்கிளியின் முகம் கனவில் தோன்றி மறைந்தது.

 

அதிகாலை எழுந்தவர் வீட்டை விட்டு வெளியே வந்தபோது திண்ணையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர் மூக்கையாவும் மொச்சையும்.  அவர்களை எழுப்பிவிடாமல் கொடியில் காய்கின்ற துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு குளத்தை நோக்கி நடந்தார். குளத்தில் நீர்க்காகங்களும், தாமரை இலைக் கோழிகளும் தென்பட்டன. விரால் அடிப்பான் பருந்தொன்று குளத்தின் நீருக்குள் தலை கீழாக நாலாபுறமும் நீரைச் சிதறியடித்து பாய்ந்து கால் விரல்களிடையே மீனை இடுக்கிக்கொண்டு எழுந்து உடலைச் சிலுப்பி நீரைச் சிதறியடித்து பறந்து சென்று குளக்கரை மரத்தில் அமர்ந்து பிடித்த மீனின் உடலைக் கொத்தி கிழித்து தின்றதைப் பார்த்தார் கோட்டையன்.

 

கனவில் வண்ணக்கிளியின் கண்கள் அழுது சிவந்திருந்தது போல தோன்றியது. அது ஏன் எனப் புரியாத குழப்பத்துடன் நடந்தவர் படித்துறைக்கு வந்தவுடன் அங்கிருந்து வீரச்சங்கிலியின் வீட்டைப் பார்த்தார். இந்த வீடு எதையோ மறைத்து வைத்திருக்கிறது இதற்கும் வண்ணக்கிளிக்கும் என்ன சம்பந்தம் என யோசித்தபடியே நின்றிருந்தார். குளத்தில் குளிப்பதற்காக ஊர்மக்கள் வரத்துவங்கியதும் தானும் குளத்திற்குள் இறங்கி கொஞ்ச தூரம் நீந்திச் சென்றார். அப்போதும் அவரது பார்வை வீரச்சங்கிலியின் வீட்டின் மீதே இருந்தது. வண்ணக்கிளி உன் ஆத்மா இந்த வீட்டிற்குள்தானா சுற்றுகிறது? இத்தனை வருடங்கள் கழித்து நேற்றிரவு என் கனவில் ஏன் வந்தாய்? என்ன நடக்கிறது என்னைச் சுற்றி? பல்வேறு கேள்விகள் அவருக்குள் குதியாட்டம் போட்டன.  குளித்து முடித்து வீடு திரும்பியபோது மொச்சையும், மூக்கையாவும் கிளம்பிக்கொண்டிருந்தனர்.

 

“ஏ வெள்ளன எங்க கிளம்பிட்டிய…?” புரியாதவராய் கேட்டார் கோட்டையன்.

 

“வந்த வேலையும் நடந்தபாடில்ல…இன்னிக்கு வீரச்சங்கிலியும் வந்திருவாரு…இனி வூட்டுக்குள்ள இறங்க மிடியாது பாத்துக்க…அதான் எங்க ஊருக்கு கெளம்புதோம்” சைக்கிள் ஸ்டாண்ட்டை எடுத்துவிட்டபடி சொன்னார் மொச்சை.

 

“ஓ அதான் கெளம்புதிய போல…நேத்து ராத்திரி எனக்கொரு சொப்பனம் வந்துச்சு…அதுல என் வண்ணக்கிளி அழுது கண்ணெல்லாம் சிவந்த மாரி இருந்துச்சு…நீ பார்த்தது அவ ஆவியாத்தான் இருக்கணும்…இன்னிக்கு வீரச்சங்கிலி வூட்டுக்கு நான் போவப்போறேன்…ஆவியா இருந்தாலும் அவள பாக்காம இங்க ஒக்காந்துகிட்டு என்ன செய்யப்போறேன்” சொல்லிவிட்டு கண்களோரம் துளிர்த்த கண்ணீரைத் துண்டால் துடைத்துக்கொண்டார். அவர் அப்படி கலங்கியதும் மொச்சைக்கும் மூக்கையாவுக்கும் ஊருக்குப் போக மனமில்லை. உனக்குத் துணையாக நாங்கள் இருவரும் வீரச்சங்கிலி வீட்டிற்கு வருகிறோம் என்றனர்.

 

வீரச்சங்கிலி ஊருக்குத் திரும்பிவிட்டார் என்பது உறுதியானது. அவர் வீட்டில் இருக்கும் போது எப்படி வீட்டிற்குள் நுழைவது என்பது மூவருக்கும் தெரியவில்லை. குழம்பிய மனநிலையில் இருந்தபோதுதான் கோட்டையனுக்கு காடைக்கறி ஞாபகத்துக்கு வந்தது. ஹோட்டலில் காடைக்கறி சமைக்கும் தினங்களில் தவறாமல் தனக்குக் கொடுத்துவிடச் சொல்வார் வீரச்சங்கிலி. பரோட்டாவும் காடை வறுவலும் அவருக்குப் பிடித்தமான உணவாக இருந்தது.  கோட்டையனுக்கு மனதில் திட்டமொன்று உருவாகியது. அதைச் சொன்னபோது மொச்சையும் மூக்கையாவும் மிகச்சரியான திட்டம் என குதூகலித்தார்கள்.

 

அக்கணமே சந்தைக்குக் கிளம்பினார் கோட்டையன். நான்கு காடைகளை வாங்கியவர் நேராக ஹோட்டலுக்கு வந்து காடை வறுவலை தயார் செய்தார்.  மொச்சை பக்கத்து ஊரிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்று அங்கே வேலை செய்யும் ஒண்டிமுத்துவிடம் கோட்டையன் சொல்லி அனுப்பிய மருந்தை வாங்கி வந்தார். காடை வறுவலில் அந்த மருந்தைக் கலந்து வாழை இலையில் பொட்டலமாகக் கட்டினார் கோட்டையன். அதனுடன் ஐந்து பரோட்டாக்களையும் கட்டிக்கொண்டு வீரச்சங்கிலி வீட்டிற்கு நடந்தார். அந்திநேரம் என்பதால் தெருவில் ஒவ்வொரு வீடாக விளக்கெரிய ஆரம்பித்தது.

மொச்சையும் மூக்கையாவும் குளக்கரை வழியாக வீரச்சங்கிலி வீட்டின் பின்புற இரும்பு கேட்டின் பக்கமாய் போய் நின்றுகொண்டனர். குளம் அமைதியாக நடப்பதை வேடிக்கைப் பார்ப்பது போலிருந்தது.

 

வீரச்சங்கிலியின் வீட்டு முகப்பின் முன் நின்று மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டார் கோட்டையன். மதில்சுவரின் இருபக்கமும் விளக்குகள் இருந்தன. மிகப்பெரிய அந்த கேட்டைத் தள்ளி உட்புறமாக திறந்துகொண்டு முன்வாசலுக்கு நடந்தார். முன்கதவை அடைந்து குரல் கொடுத்தார். சில நிமிடங்களுக்குப் பின் உள்ளிருந்து பதில் வந்தது. கதவைத் திறந்து வாசலுக்கு வந்தார் வீரச்சங்கிலி. வேட்டி மட்டும் கட்டியிருந்தார். கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியில் இருந்த புலிநக டாலர் தொப்புளை உரசியபடி இருந்தது. மார்பெங்கும் அடர்ந்திருந்த வெண்நிற முடியை இடதுகையால் சொறிந்துகொண்டே கோட்டையனைப் பார்த்தார்.

 

“என்ன கோட்டை…காடைவறுவலா?”

 

“ஆமாண்ணே…நல்ல குஞ்சுக்காடையா கிடைச்சுது…அதான் உங்களுக்கு பிடிக்கும்னுட்டு கொண்டுவந்தேன்” என்றவர் கையிலிருக்கும் பொட்டலத்தை அவரிடம் நீட்டினார்.

 

அதை வாங்கியவர் “இருடே இந்தா வாரேன்” என்றபடி வீட்டுக்குள் சென்று பணம் எடுத்துக்கொண்டு வந்து கோட்டையனிடம் கொடுத்தார்.

 

“சரிண்ணே நல்லா சூடா இருக்கு…சீக்கிரமா சாப்புடுங்க” என்றபடி பணத்தைப் பெற்றுக்கொண்டார்.

 

“இந்த வட்டாரத்துலேயே காடைவறுவலை ஒன்னை மிஞ்சி வைக்க ஆளு இல்லல்லா…இந்தா இப்பவே திங்கவேண்டியதான் வேறென்ன சோலி” என்றவர் வறுவல் இருந்த வாழையிலைப் பொட்டலைத்தைப் பிரித்து அதிலிருந்த காடையின் தொடைக்கறியைக் கடித்து மென்று விழுங்கினார். “ருசின்னா இதான்டே ருசி” என்றவர் அடுத்தத் துண்டை எடுக்க முயன்றபோது தலைசுற்றி கதவில் சாய்ந்தபடியே சரிந்து விழுந்தார். கோட்டையன் சுறுசுறுப்புடன் செயல்பட ஆரம்பித்தார். மயங்கிய வீரச்சங்கிலியை உட்புறமாக இழுத்துப் போட்டு கதவை சாத்தினார். அவரது வாயை துணியால் கட்டி, கைகளை பின்புறமாக வைத்து கொண்டு வந்திருந்த கயிற்றினால் இறுகக் கட்டினார்.

 

வீட்டின் வரவேற்பறை மிகப்பெரியதாக இருந்தது. வீரச்சங்கிலியின் தாத்தாவின் படமும் அப்பாவின் படமும் சட்டமிடப்பட்டு மாட்டப்பட்டிருந்தன. அந்த அறையைத் தாண்டியதும் வரிசையாக நான்கைந்து அறைகள் இருந்தன. அவற்றைக் கடந்து புறவாசல் கதவைத் திறந்து விசிலடித்தார். பின்புற கேட்டின் அருகே காத்திருந்த நண்பர்கள் இருவரும் கேட்டைத் திறந்துகொண்டு உள்நுழைந்து புறவாசற் கதவுப்பக்கமாக வந்தார்கள்.

 

“ஏ மொச்சை…வீரச்சங்கிலி மயங்கிக்கெடக்காரு…இன்னும் செத்த நேரத்துல முழிச்சுக்குவாரு…அதுக்குள்ள வண்ணக்கிளிய நீ பார்த்த ரூமுக்குப் போவணும்…எந்தப் பக்கமுனுட்டு நியாவம் இருக்கா?”

 

மொச்சை அன்று வண்ணக்கிளியைப் பார்த்த அறையைத் தேடிக்கொண்டு முன்னால் சென்றார். மற்ற இருவரும் பின்தொடர்ந்தார்கள்.  மொச்சை ஒரு அறையின் முன்னால் நின்றபடி இருவரிடமும் சைகை செய்தார்.

 

கோட்டையன் அந்த அறையின் கதவைத் திறக்க முயன்றபோது அது பூட்டப்பட்டிருப்பது தெரிந்தது. சாவி இல்லாமல் அந்தக் கதவைத் திறக்க முடியாது என்பதால் மூவரும் சாவியைத் தேட ஆரம்பித்தார்கள்.  அறைக்கு வெளியே இருந்த மர ஊஞ்சல் ஆடுவது போலிருந்தது. மொச்சையின் முகத்தில் பயம் படர ஆரம்பித்தது. அப்போது அங்கே இருந்த நெல்குதிருக்கு மேல் சாவி இருப்பதைக் கண்டு பிடித்தார் மூக்கையா. அவரிடமிருந்து சாவியை வாங்கிய கோட்டையன் கதவைத் திறந்து முதல் ஆளாய் உள்நுழைந்தார்.

 

“நீங்க போங்கடே நான் இங்கேயே நின்னுக்கிடுதேன்…வீரச்சங்கிலி முழிச்சிக்கிட்டாருன்னா குரல் கொடுக்கேன்” என்றபடி அறைக்கு வெளியே நின்றுகொண்டார் மொச்சை.

 

விசாலமான அந்த அறைக்குள் நுழைந்து லைட் சுவிட்சைப் போட்டார் கோட்டையன்.  மஞ்சள் நிற குண்டு பல்பின் ஒளி அறையெங்கும் படர்ந்தபோது அறையின் மூலையில் படுக்கை ஒன்று இருப்பது புலப்பட்டது. அதில் ஒரு பெண் சன்னல்பக்கமாய் திரும்பிப் படுத்திருந்தாள்.  கறுப்பு நிறத்தில் புடவை அணிந்திருந்தாள். அவளது நீண்ட கூந்தல் ஒரு சர்ப்பம் போல அவளருகே நீண்டு கிடந்தது.

 

மூக்கையாவுக்கு உடல் நடுங்க ஆரம்பித்து வியர்த்துக்கொட்டியது. நாக்கு வறண்டு வார்த்தைகள் வெளிவரவில்லை. கோட்டையனுக்கும் பயம் தொற்றிக்கொண்டது.  தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சன்னமான குரலில் “வண்ணக்கிளி” என்றார்.  அவளிடம் அசைவில்லை. இவ்வுலகின் களைப்பெல்லாம் மொத்தமாக சேர்ந்ததுபோல ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.

 

குரலைச் செருமிக்கொண்டு மீண்டும் “வண்ணக்கிளி” என்றபோது அவளிடம் அசைவு தென்பட்டது.  மெல்ல கண் திறந்தவள் சத்தம் வந்த திசைநோக்கி திரும்பினாள். அந்த மங்கிய வெளிச்சத்திலும் கோட்டையனுக்கு அவளது முகம் தெளிவாகத் தெரிந்தது. வண்ணக்கிளியை திருச்செந்தூரில் முதன் முதலாய் பார்த்தபோது அணிந்திருந்த அதே லோலாக்கு அவள் காதில் தொங்கியது. அவளது கண்கள் சிவந்திருந்தன.

 

அது வண்ணக்கிளிதான்.

 

 

11.

 

வீரச்சங்கிலி அரசியலில் பெரிய ஆளாக வேண்டும் என்று நினைத்திருந்தார். அவரிடமிருந்த அளவற்ற பணம் அதற்குத் துணை நிற்கும் என்று நண்பர்கள் சொன்னதை பெரிதும் நம்பியிருந்தார். அவரது தாத்தாவுக்கு நேருவிடம் நேரடிப்பழக்கம் இருந்தது. அப்பாவுக்கு இந்திராகாந்தியை நினைத்த நேரத்தில் சந்திக்கும் அனுமதியும் இருந்தது. அப்பேர்பட்ட குடும்பத்தில் வந்தவருக்கு ஒரு பிரச்சினை இருந்தது. வீரச்சங்கிலியால் தொடர்ந்து ஒரு வாக்கியத்தை முழுவதுமாக பேச முடியாது. திக்குவாய்ப் பிரச்சினை அவரைப் பாடாய் படுத்தியது. எவ்வளவோ வைத்தியங்கள் செய்து பார்த்தும் அப்பிரச்சினையை தீர்க்க இயலவில்லை.

 

கேரளத்தின் இடுக்கியிலிருந்து வந்த மலையாள மாந்த்ரீகன் அவரது திக்குவாய்ப் பிரச்சினையை வெகு சில நாட்களில் சரி செய்தான். அன்றிலிருந்து மாந்த்ரீகத்தின் மீது அதீத நம்பிக்கை வைக்கத் துவங்கினார் வீரச்சங்கிலி.  அரசியலில் ஜெயிப்பதற்காக பல விதமான பூஜைகளைச் செய்தான் அந்த மாந்த்ரீகன். அப்போதுதான் எதிர்பாராத விதமாக மலேரியாவில் இறந்து போனார் வீரச்சங்கிலியின் மனைவி மதுரநாயகி. திடீர் மரணம் தந்த அதிர்ச்சியில் உறைந்து போனார் வீரச்சங்கிலி. ஊருக்குள் மிடுக்காக மதுரநாயகியுடன் வலம் வந்தவரை அவளது இழப்பு பெரும் வலி கொள்ளச் செய்தது. கட்சி ஆட்கள் யாரையும் வரவேண்டாம் எனச் சொல்லிவிட்டார்.

 

வீட்டிற்குள் தனிமையில் அடைந்து கிடந்தவரிடம் எதிரிகள் யாரோ வைத்த செய்வினைதான் மதுரநாயகியின் உயிரை எடுத்தது என்றும் மதுரநாயகியின் ஆத்மா சாந்தியடையாமல் கதறித் திரிகிறது என்றும் நம்பவைத்தான் மாந்த்ரீகன்.அந்த ஆத்மாவை சாந்திப்படுத்துவதற்கும் அரசியலில் ஜெயிப்பதற்கும் ஒரே ஒருவழிதான் இருப்பதாகச் சொன்னான் மாந்த்ரீகன்.

 

மாந்த்ரீகன் சொன்ன வழியைக் கேட்டதும் முதலில் மறுத்தார் வீரச்சங்கிலி. மாந்த்ரீகன் கொஞ்சம் கொஞ்சமாக அவரது மனதை மாற்றினான். ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை அமாவாசையன்று நரபலி கொடுக்க வேண்டும் என்பதே அவன் சொன்ன வழி. குரங்கணி ஜோசியக்காரனிடம் அந்த நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகம் வந்தால் தெரிவிக்குமாறு சொல்லி வைத்திருந்தார் வீரச்சங்கிலி. சில மாதங்களில் அப்படியானதொரு ஜாதகம் வந்தபோது வீரச்சங்கிலியிடம் அந்த ஜாதகத்தைக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு போனான் குரங்கணி ஜோசியக்காரன்.

 

ஓர் இரவில் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு முன்பு நின்று வசிய மந்திரங்களை உச்சரிக்கத் துவங்கினான் மாந்த்ரீகன். சற்று நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்தவள் மாந்த்ரீகனின் பின்னால் நாய்க்குட்டிபோல நடந்தாள். நேராக வீரச்சங்கிலியின் வீட்டிற்குள் அவளை அழைத்து வந்து ஓர் அறையைக் காண்பித்து உள்ளே போ என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் உள்ளே நுழைந்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.

 

அமாவாசைக்கு இன்னும் இரு தினங்களே இருந்தபோதுதான் காடைவறுவலுடன் வீரச்சங்கிலியைச் சந்தித்தார் கோட்டையன்.

 

12.

 

ண்ணக்கிளி என்றதும் திரும்பிய பெண் மெதுவாக கட்டிலைவிட்டு இறங்கி கோட்டையனின் முன்னால் வந்து நின்றாள்.  மூக்கையா பேச்சுவராமல் கதவோரம் ஒடுங்கியிருந்தார். கோட்டையனுக்கும் பயத்தில் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. குனிந்து அவளுக்கு கால்கள் இருக்கிறதா எனப் பார்த்தார். பாதங்கள் நன்றாக தரையில் பாவியிருந்தது தெரிந்தபோதுதான் சற்று நிம்மதியாக இருந்தது. வண்ணக்கிளியின் ஆவி அல்ல இந்தப்பெண் என்பது அப்போதுதான் கோட்டையனுக்கு உறைக்கத்துவங்கியது.  சன்னமான குரலில் “நீ…வண்ணக்கிளி இல்லையா?” எனக் கேட்டார். அவள் உடனே பதிலிடவில்லை. அவளது பார்வையே புதுவிதமாக இருந்தது. மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தாள். வயிற்றில் கை வைத்து பசிக்கிறது என சைகை செய்தவள் கண்கள் செருக மயங்கிச் சரிந்தாள்.

 

மயக்கம் தெளிந்த வீரச்சங்கிலி தன் வாயும் கைகளும் கட்டப்பட்டு இருப்பதை உணர்ந்து கத்த முயன்றார். அவரிடம் அசைவு தெரிந்ததும் மொச்சை நண்பர்கள் இருக்கும் அறைக்குள் வேகமாக நுழைந்தார்.

 

“ஏ கோட்டை…வீரச்சங்கிலி முழிச்சிக்கிட்டாரு…சீக்கிரம் கெளம்பணும்”   என்றவர் மயங்கிக்கிடக்கும் பெண்ணைப் பார்த்ததும் விக்கித்து நின்றார்.

 

“என்ன மொச்சை அப்படியே நிக்க…பேயெல்லாம் இல்ல..அந்தா பாரு காலு இருக்கு” என்றார் மூக்கையா.

 

அவளைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார் கோட்டையன்.  புறவாசலைத் திறந்து பின்புற கேட்டின் வழியே குளக்கரைக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து வந்தனர் மற்ற இருவரும்.

 

குளக்கரையில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அங்கிருந்த மரத்தடியில் அவளை உட்கார வைத்தார். குளத்திலிருந்து நீர் அள்ளி வந்து அவளது முகத்தில் விசிறியடித்தார் கோட்டையன். அவள் மெல்ல மயக்கம் தெளிந்து கண்களைத் திறந்து பார்த்தாள்.

 

“ஏ அச்சு அசலா வண்ணக்கிளி மாரியேல்லா இருக்கா…” ஆச்சர்யமுடன் சொன்னார் மூக்கையா. மொச்சை வாயைத் திறந்தபடியே அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

 

“யாரும்மா நீ”  கோட்டையன் அவளது காதில் ஆடும் லோலாக்கைப் பார்த்துக்கொண்டே கேட்டார்.

 

“நான்…நான்..” என்றவள் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் விழித்தாள். மீண்டும் வயிற்றைப் பிடித்துக்கொண்டாள்.

 

“புள்ளைக்கு பசிக்குது பொலுக்கு…வாங்க நம்ம ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போயிருவம்” என்றபடி அவளைக் கூட்டிக்கொண்டு ஹோட்டல் நோக்கி நடந்தார் கோட்டையன்.  மூக்கையாவும் மொச்சையும் யாரும் பார்க்கிறார்களா என நோட்டம் விட்டபடி பின் தொடர்ந்தனர்.

 

அப்போது குளத்துக்கு நீர் எடுக்க எதிரில் வந்த கோட்டையனின் தெருக்காரி மூக்கம்மாள்,

 

“என்ன கோட்டை…வூட்டுக்கு சொக்காரக வந்துருக்காவளா?…ரெண்டு நாளா பாக்குதேன் ஆளையே பாக்கமுடியல”  புருவம் உயர எல்லோரையும் பார்த்துக்கொண்டே கேட்டாள்.

 

“ஆமா மூக்கம்ம…என் சினேகிதன் மூக்கையாவும் அவன் மவளுவும் வந்திருக்காவ…இதுவும் என் சினேகிதன் தான் பேரு மொச்சை…இந்தப் புள்ள குளத்தைப் பாக்கணும்னு சொல்லிச்சு…அதான் கூட்டியாந்தேன்”   திடீர் அப்பாவாகிப்போன மூக்கையா இதைச் சற்றும் எதிர்பார்க்காததால் சிரித்து மழுப்பினார்.

 

“ஊரு ஒலகத்துல இல்லாத கொளமா…இந்த காலத்துப் புள்ளைகளுக்கு என்னத்த பிடிக்கும்னுட்டே வெளங்கமாட்டிக்கி…” புலம்பியபடியே குளத்தை நோக்கி நடந்தாள் மூக்கம்மாள். அவள் போனதும் கோட்டையனின் காதில் மெல்ல கிசுகிசுத்தார் மொச்சை “என்ன கோட்டை…மூக்கச்சி ஒட்டு இன்னும் இருக்கு பொலுக்கு?”.  அவரை முறைத்துக்கொண்டே ஹோட்டல் நோக்கி நடந்தார் கோட்டையன்.

 

ஹோட்டலுக்கு வந்தவுடன் அவளை பெஞ்சில் உட்கார வைத்தார்கள்.

 

“செத்த நேரம் பொறுத்துக்கப்பு…பரோட்டா போட்டது இருக்கு..லேசா கல்லுல போட்டு எடுத்துத்தாரேன்…சூடா தின்னாத்தான் நல்லா இருக்கும்” சொல்லிவிட்டு பரோட்டாக்களை கல்லில் போட்டு சுடவைத்து அவளுக்குக் கொடுத்தார் கோட்டையன். அவள் வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.

 

சாப்பிட்டு முடித்து கைகழுவியதும் மீண்டும் அவளிடம் விசாரித்தார் கோட்டையன்.

 

“எப்பு ஒம்பேரு என்ன…எந்தூரு…நான் பேசுதது வெளங்குதா?” கூர்ந்து அவளது கண்களைப் பார்த்துக்கொண்டே கேட்டார்.

 

“நான்…நான்” என்றவள் அதற்கு மேல் எதுவும் நினைவுக்கு வராதவளாய் விழித்தாள்.

 

“கோட்டை…புள்ள ஒரு மாரில்லா முழிக்கா…நாங்கூட மொத பயத்துலதான் முழிக்கான்னுட்டு நெனச்சேன்…இது வேறமாரி இருக்கு…ஒங்க ஊர்லதான் நாட்டு வைத்தியர் இருக்காருல்லா..அவருகிட்ட கூட்டிட்டுப் போவம்…என்ன சொல்லுத?”  கோட்டையனின் காதோரம் மெதுவாய்ச் சொன்னார் மொச்சை. கோட்டையனுக்கும் அதுதான் சரியெனப்பட்டது. உடனே நாட்டு வைத்தியரின் வீட்டிற்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று விஷயத்தைச் சொன்னார்கள்.

 

வைத்தியர் அவளது நாடியைப் பிடித்துப் பார்த்தார். அவருக்குப் புரிந்துவிட்டது.

 

“கோட்டை…புள்ளைக்கி எவனோ வசியம் வெச்சிருக்கான்…அதான் அதுக்கு எதுவும் ஞாபகம் வரமாட்டைக்கி…இத என்னால எடுக்க மிடியாது…நேரா ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்காவுக்குப் போங்க…அங்க சலீம் பாயி இருப்பாரு…அவருகிட்ட நான் சொன்னேன்னுட்டு சொல்லுங்க சரி செஞ்சுப்புடுவாரு” என்றார் வைத்தியர்.

 

இரவாகிவிட்டதால் மறுநாள் காலை தர்காவுக்குப் போகலாம் என முடிவெடுத்து கோட்டையனின் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டினுள் அந்தப் பெண்ணை தூங்கச் சொல்லிவிட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்தார்கள்.

 

“வீரச்சங்கிலி என்ன வேல பாத்திருக்கான் பாத்தில்லா…பொட்டப்புள்ளய வசியம் பண்ணி தாலிகட்டப்பாத்திருக்கான் தாயிளி” கொதித்தார் மொச்சை.

 

“தாலி கட்டணும்னு நெனச்சிருந்தா எதுக்கு கட்டாம இன்னும் வச்சிருக்கணும்…இதுல வேற ஏதோ இருக்கு மொச்சை” திண்ணைக் கம்பத்தில் சாய்ந்து கொண்டு காலை நீட்டியபடியே சொன்னார் மூக்கையா.

 

“அதான் ஊருக்குள்ள ஒரு மலையாளத்தான் வந்து போனான் போல…இது அவன் வேலையாத்தான் இருக்கணும்…நாளைக்கு தெரிஞ்சிரும்..அதுக்குப் பெறவுதான இருக்கு பூச” கோட்டையனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஒரே இரவில் எவ்வளவோ நடந்துவிட்டதே எனப் பேசிக்கொண்டிருந்துவிட்டு பின்னிரவில் உறங்கிப்போனார்கள்.

 

13.

 

முடிந்தவரை சத்தம் எழுப்பிப் பார்த்தார் வீரச்சங்கிலி. பின்புறமாகக் கைகள் கட்டப்பட்டு வாயிலும் துணியால் கட்டியிருந்ததால் அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. அப்போது சமைப்பதற்காக வீட்டிற்குள் நுழைந்த சித்திரைக்கொடி கிழவிதான் வீரச்சங்கிலியைக் கண்டதும் அவரது கட்டுக்களை அவிழ்த்துவிட்டு குடிக்க தண்ணீர் கொடுத்தாள்.

 

வீரச்சங்கிலி கொதிப்படைந்து கோபத்தின் உச்சத்தில் இருந்தார். தன் மீசையை முறுக்கிக்கொண்டு அந்தப் பெண் இருக்கும் அறைக்குள் நுழைந்தார். அங்கே அவள் இல்லை என்பது தெரிந்தது அவரது கோபம் உச்சத்தில் ஏறியது. மாந்த்ரீகனுக்குப் போனைப் போட்டு வரச்சொன்னார்.

 

அக்னி நட்சத்திர வெயில் உக்கிரமாய் இருந்தது. ஆத்தங்கரை தர்காவுக்கு அந்தப் பெண்ணைக் கூட்டிச் சென்று சலீம் பாயிடம் காண்பித்தார்கள்.  சிறிது நேரத்தில் அவளை இயல்பு நிலைக்குத் திருப்பினார் சலீம் பாய்.

 

அவளுக்குத் தான் எங்கே இருக்கிறோம் யார் இவர்கள் என்கிற பயமும் குழப்பமும் அதிகமிருந்தன. அவளுக்கு சாப்பிடுவதற்கு தோசையும் பருப்பு வடையும் வாங்கிக்கொடுத்தார் கோட்டையன். ஆத்தங்கரை தர்காவிற்கு எதிரிலிருந்த ஆலமரத்தடி கல்பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தாள். மெதுவாக அவளிடம் பேச்சுக்கொடுத்தார் கோட்டையன்.

 

“யம்மா…நீ வண்ணக்கிளி மாதிரியே இருக்க…நீ யாரும்மா?”  அவர் கேட்டதும் அவள் முகத்தில் மாற்றம் ஏற்பட்டது. அவரை நிமிர்ந்து பார்த்தவள்,

 

“நீங்க யாரு…உங்களுக்கு எப்படி எங்க அம்மை பேரு தெரியும்?”  அவள் அப்படிச் சொன்னதும் கோடையனுக்கு உடம்பு சிலிர்த்துப்போனது. வண்ணக்கிளியின் மவளா இது? அச்சு அசலாக வண்ணக்கிளியைப் போலவே இருக்கிறாளே என்று வியந்தவர் தோளில் கிடந்த துண்டை எடுத்து தன் முகத்தில் வழியும் வியர்வையைத் துடைப்பது போல கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.

 

“நாங்கதாம்மா ஒன்னை வீரச்சங்கிலி வூட்டுல இருந்து கூட்டியாந்தோம்…ஒனக்கு வசியம் வெச்சி கூட்டிட்டுப் போயிட்டாரு வீரச்சங்கிலி…இப்பதான் சலிம் பாயிகிட்ட காமிச்சு உன் வசியத்தை எடுத்தோம்…இந்த மாரி வசியம் நரபலி கொடுக்கதான் வைப்பாகன்னுட்டு பாயி சொன்னாரு…இனி பயமில்ல…”  மொச்சை கடகடவென்று நடந்ததை விவரித்தார்.

 

அவள் ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள்.  கோட்டையன் சற்று தள்ளிப் போய் நின்றுகொண்டார். அவரது மனம் கலங்கி இருந்தது. மூக்கையா அவரிடம் வந்து தோள் தொட்டு “இதான் கோட்டை விதிங்கறது …எத்தனை வருசமா வண்ணக்கிளிய காப்பத்த முடியாம போச்சேன்னுட்டு தவிச்சிருக்க…இப்ப பார்த்தியா அவ மவ ஒன்னாலதான் இன்னிக்கு உசிரோட இருக்கா…இனியாவது சந்தோசமா இரி…செரியா?”  அவர் சொல்லியதும் கண்களைத் துடைத்துக்கொண்டு அந்தப் பெண்ணிடம் வந்தார்.

 

“ஓம்பேரு என்னம்மா?”

 

“தேன்சிட்டு”

 

“இவரு பேரு மொச்சை…உன்னைய கூட்டிட்டுப்போயி குதிரைநேரில ஒங்க வூட்டுல விட்டுருவாரு…நல்லபடியா போயிட்டுவாம்மா…செரியா?”

 

“சரிங்க ஐயா…ஒங்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்றதுன்னுட்டு தெரியல…எங்க அம்மை பேரு எங்க ஊரு பேரு எல்லாம் சரியாச் சொல்லுதிய…அப்படீன்னா நீங்க எங்களுக்குச் சொக்காரவியளாத்தான் இருக்கணும்…நீங்களும் எங்க வூட்டுக்கு வாங்க எங்க ஐயா ஒங்கள எல்லாம் பார்த்தா சந்தோசப்படுவாவ”  அவள் சொல்லி முடித்ததும் சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது. கோட்டையனுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.

 

மூக்கையாதான் மெளனத்தை உடைத்தார். “நிச்சயம் நாங்க வாரோம்ப்பு…நீ இன்னிக்கு மொச்சையோட ஊருக்கு போ…நாங்க இன்னும் ரெண்டு நாளு கழிச்சி வாரோம்” என்றவர் மொச்சையையும் தேன்சிட்டையும் பஸ்ஸில் ஏற்றிவிட்டார். அவள் கையசைத்து போவதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் கோட்டையன்.

 

மூக்கையாவும் கோட்டையனும் ஓணான்குழிக்குத் திரும்பியபோது பொழுது சாய்ந்திருந்தது. மூக்கையா திண்ணையில் படுத்துக்கொண்டார். கோட்டையன் வீட்டிற்குள் பாயை விரித்துப் போட்டு படுத்தார். அவர் மனதெங்கும் தேன்சிட்டை நரபலி கொடுக்க முயன்ற வீரச்சங்கிலியை நினைத்து கொதித்தபடி இருந்தது. உறக்கம் வராமல் புரண்டபடியே கிடந்தவர் திடீரென்று எழுந்தார். மீண்டும் அவர் படுக்கைக்கு வந்தபோது பின்னிரவைத் தாண்டியிருந்தது. அவரது உடலில் ஒருவித நடுக்கம் இருந்தது. வண்ணக்கிளியின் ஞாபகம் அவரைச் சுற்றிச் சுற்றி வந்தன.தேன்சிட்டுக்கு இனி எவ்வித ஆபத்தும் இல்லை என்பதை நினைத்ததும் மனம் சற்று நிம்மதியடைந்தது. களைப்பின் மிகுதியில் உறங்கிப் போனார்.

 

விடிந்தபோது தெருவெங்கும் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்றபடி பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார் மூக்கையா. என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவலில் கூட்டத்திலிருந்தவரிடம் விசாரித்தார்.

 

“யண்ணே விசயம் தெரியாதா…நேத்து ராத்திரி நம்ம பிரதம மந்திரி ராஜீவ் காந்திய குண்டு வச்சி கொன்னுப்புட்டாங்களாம்…அத கேட்ட அதிர்ச்சியில நம்ம வீரச்சங்கிலி ஐயா தூக்குப்போட்டுக்கிட்டாரு…பரம்பரையா காங்கிரசு கட்சிக்காரவிய…பாவம் அதான் துக்கம் தாங்காம தொங்கிட்டாருன்னுட்டு ஊருக்குள்ள பேசிக்கிடுதாவ”  என்றார் ஊர்க்காரர்.

 

“என்னது தூக்குல தொங்கிட்டாரா…அடக் கெரகமே”

 

“அவரு மட்டும் தொங்குனா பரவாயில்லண்ணே…கூட ஒரு மலையாளத்தானும்லா தொங்குதான்…அதான் ஏன்னே யாருக்கும் வெளங்கமாட்டைக்கி” சொல்லிவிட்டு நகர்ந்தார் ஊர்க்காரர்.

 

விஷயத்தைக் கேட்டதும் மூக்கையாவால் நம்பவே முடியவில்லை. ஓட்டமும் நடையுமாய் வீட்டிற்கு வந்தவர் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் கோட்டையனை உலுப்பினார். கண்களைக் கசக்கிக் கொண்டே எழுந்த கோட்டையனிடம் விஷயத்தைச் சொன்னார்.

 

“நம்ம புள்ளய நரபலி கொடுக்கணும்னு நெனைச்சாம்லா…இப்ப பார்த்தியா தொங்கிட்டான்…அவம்போனதோட இல்லாம அந்த மலையாளத்தானும் தூக்குல தொங்குதானாம்…இப்ப எல்லாம் தெய்வம் ஒரே நாள்ல கொன்னுப்புடுது”

 

“கொன்னது தெய்வமுன்னா நெனைக்க” என்று கேட்க நினைத்தவர் அதைக் கேட்டாமல் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார். கோட்டையன் ஏன் இப்படி விடாமல் சிரிக்கிறார் என்கிற குழப்பத்துடன் அவரைப் பார்த்தபடியே நின்றிருந்தார் மூக்கையா.

 

அதிகாலைச் சூரியனின் வெப்பக் கதிர்கள் அவரது சிரிப்பில் விழுந்து தெறித்துக் கொண்டிருந்தன. தூரத்தில் எங்கோ ஒரு பச்சைக்கிளியின் சத்தம் கோட்டையனுக்கு மட்டும் கேட்டது.

அது வண்ணக்கிளிதான்.


(முற்றும்)

எழுதியவர்

ராஜேஷ் வைரபாண்டியன்
ராஜேஷ் வைரபாண்டியன்
ராஜேஷ் வைரபாண்டியன் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாயர்புரம் எனும் ஊரின் அருகேயிருக்கும் நடுவைக்குறிச்சியை சேர்ந்தவர். நிலாரசிகன் என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை 2018 வரை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு சிறார் நாவல், ஒரு நாவல் எழுயிருக்கிறார்.
இவரது வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான சுஜாதா விருதும், பிரமிள் விருதும் பெற்றது. ஈர்ப்பு விதியை(Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறார். 361 டிகிரி, உதிரிகள் என இரு சிற்றிதழ்களின் ஆசிரியர்.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Renu
Renu
1 month ago

கதைகளின் வழி காட்சி படுத்துதலில் ராஜேஷ் வைர பாண்டியன் கை தேர்ந்தவர்.

வட்டார மொழி வழக்கும், கதா பாத்திர பெயர்களும் நாம் உச்சரிக்க இனிப்பவை.

நட்பு, காதல், பிரிவு, அமானுஷ்யம் , இடைஇடையே எள்ளல் என வாசிக்க சுவாரசியமானவை.

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x