23 May 2025
Palaivana lanthar May 21

மூளைக்குள் பரவும் உஷ்ணத்தை எந்தக் காகமாவது கழுகாவது நரம்புகளோடு கொத்திப் பிய்த்தெடுத்து விடாதா என பல நாட்கள் வனாந்திரத்தில் அமர்ந்திருக்கிறேன். கனவுக்குள் சுழலும் இருள் என்னை ஆழ்க் கிணற்றுக்குள் அழைத்துச் செல்கிறது. தண்ணீர்ப் பெருகும் சப்தம் கேட்கிறேன். பிசுபிசுப்பான திரவம் எனக்குள் நுழைய அடிவயிற்றில் ரத்தம் பெருகி படுக்கை முழுவதும் வழிகிறது. நானொரு மீனைப்போல் சுருண்டுக் கிடக்கிறேன். இரவுகளுக்கு பற்கள் முளைத்து மென்றுத் தின்கின்றன.

எந்தக் காரணமும் இல்லாமல் மனம் பதைபதைப்பது அதிகமாகி வருகிறது. ஐந்து நொடிகள் மௌனத்தில் இதயம் வேகமாக துடிப்பதாகத் தோன்றும் போது மனம் கடந்து வந்த நிமிடங்களை ஸ்லோ மோஷனில் பின்னோக்கி நகரச் செய்து பரிசீலனை செய்கிறது..

வீட்டிலிருந்து வெளியேறும் போது சாதாரணமாகத்தான் இருந்தது,

பக்கத்து வீட்டு மாமி புடவையின் முந்தானை தெருவில் உராய்வதாக எச்சரித்த போதும்,

மளிகைக் கடைக்காரர் புதிய காபித்தூள் வந்துவிட்டதாக சொன்ன போதும்,

பூக்காரக்கா வழக்கமாக தரும் பூவைக் கொடுத்த போதும்,

ஆட்டோக்காரருக்கு ஓடிபி எண்ணை சொல்லும்போதுக் கூட சிரித்திருந்தேனே,

ஆட்டோவின் வலப்பக்க கண்ணாடியில் அரைகுறையாக முகத்தைப் பார்த்து கைப்பையிலுள்ள ஹேர்பின்னை உதட்டில் கடித்து பின்னலின் மேற்புறமாக பூவை வைத்துக் கொண்டவுடன் டிரைவர் திரும்பிப் பார்த்துவிடாமல் தனக்குள் சிரித்துக் கொண்டவுடன் நானும் மீண்டும் புன்னகைத்துக் கொண்டேனே,

அலுவலகத்திற்கு இரண்டு தெரு முன்பாகவுள்ள குட்டிச் சந்தினுள் நுழையும் போதுதான் அந்தக் குப்பைத் தொட்டியைக் கடந்து வர வேண்டியிருந்தது.. ஆம் அங்கிருந்து தான் மனம் தடுமாறத் தொடங்கியது அப்பாடா ஒருவழியாகக் கண்டுபிடித்துவிட்டேன்.

இறந்து கிடந்த நாயின் காம்புகளைச் சுற்றி ஏக்கத்துடன் இருந்த குட்டிகளின் முகமும் சப்தமும் தான் என்னை அலைக்கழித்திருக்கிறது. 

இவ்வாறாக கடந்து போகும் காட்சிகளால் சமீபகாலமாக நிறைய பாதிக்கப் படுகிறேன் இதற்கு என்ன அர்த்தம்? வயதாகிவிட்டதா அல்லது பூமியில் என் பொறுப்பு முடிந்து விடப் போகிறதா?

டீம் லீடர் மணிகண்டன் நான்கு முறை அழைத்தும் திரும்பிப் பார்க்காமல் இருந்ததைக் குறித்து பீட்சாவைக் கடித்தபடி பேசிக் கொள்கிறார்கள். போகட்டும் சில நாட்களுக்கு நான் ஊறுகாயென ஆகியிருக்கிறேன் அவ்வளவுதான்.

அம்மாவும் அப்பாவும் என் கல்லூரி இறுதியாண்டில் விபத்தில் பலியாகியிருந்ததையும் என்னை அரவணைத்துக் கொள்ள உறவினர்கள் முன்வராததையும், இவர்களிடம் பகிர்ந்து உச்சுக் கொட்டிக் கொள்வதில் என்ன மாற்றம் நேர்ந்துவிடப் போகிறது.. மனிதர்களின் மீதான் நம்பிக்கை அற்றுப்போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. யார் சிரித்தாலும் கோபமாக வருகிறது. எங்கே பார்த்தாலும் நான்கு நான்காய் மூன்று மூன்றாய் குழுமி அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, ஒருவரிடமும் வெளிப்படையான தன்மை இருக்கிறதா என்றால் ம்ஹும். நான் அந்த மந்தையிம் இணைந்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் யாரிடமாவது மனசைத் திறந்து பேச வேண்டும் போல தோணுகிறது. எனக்குள் இருக்கும் இறுக்கமே சமயத்தில் என்னைக் கொன்று விடுமோ எனத் தோன்றுகிறது,

கூகுள் வலைதளத்தில் தேடி அருகிலுள்ள நல்ல மனநிலை ஆலோசகர் ஒருவரிடம் பரிசோதித்துக்கொள்ள வார இறுதி நாளை ஒதுக்கிக் குறித்து வைத்தேன். அவரின் பார்வை என்னை மேயும்போது தடுமாற்றத்தில் இல்லாமல் தெளிவாக இருக்க ப்ராக்டிஸ் செய்து கொண்டேன் தோற்றம் தானே முன்முடிவுகளுக்கு காரணமாக இருக்கிறது. என்னை போல்ட் ஆக காட்டும் ஆடையும் கைக்கடிகாரம், கைப்பை, மெலிதான வாசனை திரவியம், சிறிய ஒப்பனையுடன் பத்து நிமிடங்கள் முன்னமாகவே போய்விட்டேன். 

வரவேற்பறையில் பணிப்பெண்கள் நால்வரைத் தவிர்த்து, ஆறு பேர் மட்டுமே காத்திருந்தோம். சதுரமான வரவேற்பரை நான்கு மூலையிலும் கண்ணாடிப் பூசாடியில் வாசனைத் தரும் பூக்களை வைத்திருந்தார்கள். உலகின் நான்கைந்து நாடுகளின் நேரத்தைக் காட்டும் மரப்பட்டையால் ஆன கடிகாரங்கள் அவ்விடத்தை மேலும் வசீகரித்தது. ஏசியின் குளிர் தரையைப் பனிப்பாறையைப் போல் உறையச் செய்திருந்தது. நான்கு அறைகளின் கதவுகளின் மீது நான்கு மனநிலை மருத்துவர்களின் பெயர்கள் தங்கமுலாம் பூசி எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாவற்றிற்கும் சேர்த்துதான் மொத்தமாக தங்கள் தலையில் பில் போடுவதை தெரிந்தும், இந்த இடத்தில்தான் மன ஆலோசனை செய்ய வேண்டும் என மக்கள் குவிந்து வருவதற்கு செய்யும் பிரயத்தன விளம்பரங்களை நினைத்துப் பார்த்தால் எரிச்சல் உருவானது. மனிதர்களின் மனதைப் படிக்கும் அல்லது சரிசெய்யும் மருத்துவத்திற்கு இது நல்ல மவுசுள்ள காலம். 

“அப்பாயின்மண்ட் நம்பர் பதினேழு நீங்கதானே”

“யெஸ்”

“வெரி சாரி ஃபார் இன்கன்வீனியன்ஸ் உங்களுக்கு அப்பாயின்மண்ட் போட்டிருந்த டாக்டர் வத்சலா மேம் அன் அவாய்டபிள் ரீசன்ல கிளம்பி போயிட்டாங்க.. இஃப் யு டோண்ட் மைண்ட் வேற டாக்டர் சேன்ஞ் பண்ணி தரட்டுமா? ஆர் வேற ஒரு நாள் பாக்கறிங்களா?”

“ஓஹ் அப்படியா.. கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருந்தா வந்திருக்கவே மாட்டேனே”

“சாரி மேம் ஜஸ்ட் இப்பதான் ஒரு கால் வந்தது அண்ட் உங்களை தான் நெக்ஸ்ட் பார்க்கறதா இருந்திச்சு பட்.. டக்குனு கிளம்பிட்டாங்க சம்திங் இம்பார்டண்ட் இல்லனா இப்டிலாம் போனதே இல்லை”

“ஹ்ம்ம் ஓகே வேற லேடி டாக்டர் இருந்தாங்கன்னா மாற்றிக் கொடுங்க பாத்துட்டே போயிடறேன் இன்னைக்கு விட்டா ஐ ஹேவ் நோ டைம்”

“ரியலி சாரி மேம்.. வீ ஹேவ் டூ டாக்டர்ஸ் ஒன்லி.. போத் ஆர் மேல்.. டாக்டர் குமரேசன் அண்ட் டாக்டர் மைக்கேல் ரெண்டு பேருமே ஃபாரின் போய் பிஜி பண்ணிட்டு வந்தவங்க எங்க க்ளையன்ட்ஸ் இவங்கதான் வேனுன்னு கேட்டு வெய்ட் பண்ணி பார்ப்பாங்க மேம் உங்களுக்கு ஓகேன்னா ஐ வில் அரேன்ஞ்”

”ஹ்ம்ம்ம் சரி ஓகே”

நான் ஏன் சட்டெனெ ஓகே சொன்னேனென யோசித்து முடிக்கும் முன்னே அழைக்கப்பட்டேன். கதவைத் திறந்தவுடன் அரேபிய நாட்டு பர்ஃப்யூம் ஒன்றினை நினைவுபடுத்தும் வாசனையுடன் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த மருத்துவன் மாஸ்க் அணிந்திருந்ததால் கண்களால் ஏறிட்டுப் பார்த்தான்

“எக்ஸ்க்யூஸ்மி”

“ப்ளீஸ் கம் அண்ட் டேக் யுவர் சீட்”

பரஸ்பர கேள்விகளுக்குப் பிறகு, எனது மருத்துவ கோப்புகளை நிதானமாக வாசிக்கத் தொடங்கிய போது என் கண்கள் அந்த அறையை அளந்தன. பேசாமல் மருத்துவம் படித்திருக்கலாமோ என ஏங்க வைக்கும் அறை. ஃபினாயில் வாசனை நிரம்பி வழிய நாற்பதைந்து நாட்கள் அரசு மருத்துவமனையில் இருந்தது நினைவைக் கீறியது. 

தொண்ணுற்றைந்து சதவீத நிர்வாணத்துடன் கூடிய ஓர் ஓவியத்தை தனது இருக்கைக்கு மேலே மாட்டியிருக்கிறான் என்றால் என்ன அர்த்தம்?, இங்கே வருபவரின் பார்வை அதை என்னவாகக் காண்கிறது என்ற கோணத்தில் அவருடைய மனதை அளக்கத் தொடங்குவதாக இருக்குமோ?, ச்சே இதெல்லாம் மேஜர் சுந்தராஜனே சினிமாவில் செய்து விடுவாரே. மற்ற இரண்டு பக்கமும் சுவர் உயர்ரக பூச்சில் வெற்றிடமாகப் பளபளத்தது. இன்னொரு பக்கத்தில் நீண்ட கௌச் மற்றும் சிறிய டேபிள் அதன் பக்கவாட்டில் ஒரு புத்தக அலமாரி தமிழ் ஆங்கில புத்தகங்களால் தலைப்பு வாரியாக அடுக்கப் பட்டிருந்தது. 

பார்வையை மீண்டும் டாக்டரின் டேபிளுக்கு கொண்டு வந்தேன். ஒரு கல்லூரி மாணவனின் டேபிளைப் போல் புத்தகங்கள், டைரி, பேனா, லேப்டாப், இரண்டு அலைபேசிகள், டிஸ்யூ பாக்ஸ், தாமிரத்தினால் செய்த சதுரங்கம் பாதி விளையாடிய நிலையில் இருந்தது. நான் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறேனா என்ற குழப்பத்துடன் டாக்டரின் முகத்தைப் பார்த்தேன். அவன் வெகு நேரமாக என்னையே கவனித்துக் கொண்டிருந்திருப்பது அப்போது தான் உறைத்தது. சிரத்தையாக சிரிக்க முயற்சித்து நிறுத்திக் கொண்டேன். 

“இந்த மெடிசின்ஸ் இன்னமும் எடுத்துக்கறிங்களா?”

“நோ.. யெஸ் ஐ மீன் யெஸ்”

“இட்ஸ் ஓகே.. ஹேவ் சம் வாட்டர்” என கூறிவிட்டு ஒரு பட்டனை அழுத்தினார்.

300 எம் எல் தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து கொடுத்துவிட்டு நகர்ந்தாள் (இதற்கும் சேர்த்து பில் போடுவார்களோ)

”இப்ப சொல்லுங்க.. நீங்க பார்த்த ப்ரீவியஸ் ட்ரீட்மண்ட் மூலமா உங்களுக்கு என்ன ப்ராப்ளம்னு என்னால ஓரளவுக்கு நல்லாவே புரிஞ்சுக்க முடியுது. பட் அது இப்ப என்னவா கன்வர்ட் ஆகியிருக்குன்னு நீங்க கொடுக்குற விளக்கங்களை வச்சுதான் முழுமையாக்கிக்க முடியும். சோ..” மாஸ்க்கை கழட்டியபடி தனது உள்ளங்கையை வீசி என்னைத் தொடங்கச் சொன்னான். 

இப்போது தான் டாக்டரின் முகத்தை நேருக்கு நேராகப் பார்க்கிறேன். இவன் எப்படி டாக்டர் ஆகினானென தோன்றும் முகம். ஷேவ் செய்த பிறகு பளிச்சென தெரியும் பச்சை நரம்பின் மீதான உஷ்ணம் என்னமோ செய்தது. வலதுப் புருவத்தில் கிடந்த வெட்டு செயற்கையாக உருவாக்கப் பட்டதா அல்லது வெறெதுவுமா? ஆறடிக்கு சற்றே குறைவாக இருப்பான் போலும் காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான். பனியில் பூத்த புற்களைப் போன்ற மீசையுடன் உதட்டின் ஓரமாக புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

சலனத்திலிருந்து விடுபட பெண்கள் முயற்சிக்கும் யுக்திகளில் ஒன்று செருமல்.. செருமிக் கொண்டேன். தண்ணீர் பாட்டிலை நோக்கி அவன் கை திசைகாட்டியது பொய் செருமலுக்கு தண்ணீர்த் தேவையில்லையென மறுத்து விட்டேன்.

“ரொம்பச் சரியா சொல்லத் தெரியலை சார்.. கொஞ்ச நாளாவே மைண்ட் டிஸ்டர்ப்டா இருக்கு தேவையில்லாம ஹார்ட் பீட் வேகமா அடிக்குது. எதுக்கெடுத்தாலும் கோபம் கோபமா வருது. யார்கிட்டயும் பேசப் பிடிக்கல. யாரையும் நம்ப பிடிக்கல. யார்கிட்டயும் எந்த ஹெல்ப்பும் கேட்க பிடிக்கல.. ஆஃபிஸ்ல என்னை எல்லோருமே உத்துப் பாக்குற மாதிரி ஃபீலாகுது, நல்லா கத்தி சண்டை போடனுன்னு தோனுது, என் கண்ணு முன்னாடி எந்த தப்பு நடந்தாலும் அதை தட்டிக் கேட்க முடியாத இயலாமை அதிகமான கோபமா வெறுப்பா வெளில வருது, மத்தவங்களைக் கேட்க முடியாம எனக்குள்ள நானே போட்டு புழுங்கிக்கறேன்.. சார் நான் என்ன செய்யறேன்னு எனக்கே புரியுது. ஆனா என்னால என்னை மாத்திக்க முடியல. ப்ளீஸ் ஹெல்ப் மீ டூ கம் அவுட் ஐயம் ஹெல்ப்லஸ்”

“ம்ம்.. ஓகே புரியுது அதுக்குத்தானே நாங்க இருக்கோம் டோண்ட் வர்ரி”

“டாக்டர் சார்! நான் தூங்கி ரொம்ப நாள் ஆகுது.. தூக்கம் வராம இல்ல. தூங்கினா எனக்கு ஏதோ நடந்திடுமோன்னு பயம். அதனாலயே அடிக்கடி எழுந்துப்பேன். நடுராத்திரி மூனு மணிக்கு காஃபியக் கைல வச்சுட்டு மொபல்ல எதையாவது பாத்துகிட்டே விடியுற வரைக்கும் முழிச்சிட்டே இருப்பேன். ஒரு நாள் ஒரே ஒரு நாள் எந்த பயமும் இல்லாம நிம்மதியா தூங்கி எழுந்திரிக்கனும் டாக்டர்”

“ஃபர்ஸ்ட் கால் மீ மைக்கேல் .. இந்த சாரு மோரு டாக்டரெல்லாம் வேணாம். நாம ஃப்ரண்ட்ஸ் மாதிரி பேசுனாத்தான் உங்களால இயல்பா பேச முடியும். அண்ட் என்னாலயும் ஈசியா ட்ரீட் பண்ண முடியும் ஓகேவா?”

“ம்ம் ஓகே”

“இந்தப் பதட்டம் இல்லன்னா பயம் பொதுவா எப்போலாம் வருது?. நைட்ஸ் மட்டுமா பகல்லயுமா? தெளிவா உங்களுக்குன்னு ஒரு ஐடியா இருந்திருக்கும் இல்ல. அதை எங்கூட ஷேர் பண்ண முடியுமா?”

“இல்ல அப்படிலாம் ஒன்னுமில்ல. ஹ்ம்.. எனக்கு சரியா சொல்லத் தெரியல, ஞாபகம் இல்லன்னு நினைக்கறேன்”

“நோ.. எங்கிட்ட சொல்லக் கூடாதுன்னு உங்களுக்கு நீங்களே போட்டுக்குற திரையத் தவிர வேறொன்னும் இல்ல.. அந்தத் திரையை நீங்க விலக்கினால் ஒழிய என்னால நெக்ஸ்ட் மூவ் போக முடியாது. ஸீ மிஸ் ம்ம் உங்களுக்கு தேவைப்பட்டா கொஞ்சம் டைம் எடுத்துட்டு அடுத்த சிட்டிங்க்கு கூட வாங்க நாம ஃப்ரீயா பேசலாம்”

“மை நேம் இஸ் பாப்பம்மாள். அதைச் சொல்லி அழைக்க உங்களை எது தடுக்குது மிஸ்டர் டாக்டர்?”

“ஓஹ் நோ.. அதெல்லாம் ஒன்னுமில்ல மிஸ் பாப்பம்மாள். சொல்லுங்க”

“எதைச் சொல்ல சொல்றிங்க மிஸ்டர் மைக்கேல்? இங்கே எல்லாத்தையும் ஒரு பெயருக்கு பின்னாடி இருக்கக் கூடிய அழிஞ்சே போகாத ப்ளாஸ்டிக் போல இருக்குற இந்தக் கேவலமான ராசிஸம் அதான் இனவெறி தானே தீர்மானிக்குது?..”

“ப்ளீஸ் காம் மிஸ் பாப்பம்மாள். எந்தக் காலத்துல இருக்கிங்க?. இன்னுமா இதெல்லாம் பாக்கறாங்க. ஓஹ் கம்மான்! எனக்கு உங்க பெயர் ஸ்பெல் பண்ண கொஞ்சம் வித்தியாசமா இருந்திச்சு. ஷார்ட்டா பாப்பான்னு கூப்பிட முடியுமா அதனாலத்தான் தயங்கினேன் மத்தபடி நோ இஸ்யூஸ்”

“ரியலி.. சரி அப்படியே இருக்கட்டும். கொஞ்ச நேரம் முன்னாடி என்ன சொன்னிங்க நாம நண்பர்கள் அப்படின்னு தானே?. வில் யூ ப்ரூவ் இட்?  அதுக்கப்புறமா நா முடிவு பண்றேன் இந்த ட்ரீட்மண்ட் தொடருனுமா வேணாமான்னு”

“ஆர் யூ ஜோகிங் இதெல்லாம் எப்படி ப்ரூவ் பண்ணுவாங்க? ரொம்ப எமோஷனலா யோசிக்காதிங்க. கேஷுவலா இருங்க ப்ளீஸ்”

“நோ மிஸ்டர் மைக்கேல். நான் முடிவு பண்ணிட்டேன், உங்களப் போல நிறைய பேரை பாத்தாச்சு. என்னை நானே பாத்துக்கறேன். உங்க வேலிட் டைமை வீணாக்க விரும்பல”

“வெய்ட் வெய்ட்.. இங்க என்ன நடக்குது.. நீங்க டாக்டரா நான் டாக்டரா?? முதல்ல ஒருத்தரப் பற்றி சரியாத் தெரியாம முன்முடிவுகள் எடுக்குறதை நிறுத்துங்க.. ரிலாக்ஸா பேசலாம் பாப்பம்மாள். ரொம்ப ரிலாக்ஸா முதல்லேந்து தொடங்கலாம் ஓகேயா?”

“நோ.. இதுக்கப்புறம் என்னால இங்க பேச முடியாது நான் கெளம்பறேன்”

“ப்ளீஸ் உட்காருங்க.. ஸீ பாப்பம்மாள், நான் ஒரு டாக்டர். நீங்க எங்கிட்ட கௌன்ஸிலிங் வந்திருக்கிங்க. அண்ட் நவ் வீ ஆர் ஃப்ரண்ட்ஸ் ஆல்சோ.. இந்தப் புள்ளியிலேந்து மட்டும் மறுபடி தொடங்கலாம்.. இங்க பாருங்க இந்த அறைக்குள் வந்த யாருமே இதுவரைக்கும் குறைந்த பட்ச நிவாரணமில்லாம போனதேயில்ல, நீங்க சட்டுனு கெளம்பினதும் ஐ ஃபீல் நாட் குட்.. ஒரு சான்ஸ் கொடுங்க மறுபடியும் ப்ளீஸ்.. வில் யூ”

நான் சற்றுமுன்பு வியந்து பார்த்த உருவம்; நெகிழ்ந்து உருகுவதையும் பார்த்தேன். எனக்கு மறுக்கத் தெரியாமல் “ம்ம்” என்றேன்.

“தேங்க் யூ பாப்பம்மாள்.. இப்ப நான் இப்படி தொடங்க நினைக்கிறேன்.. ஒவ்வொரு பிரச்சனைக்கும் தொடக்கப்புள்ளின்னு ஒன்று நிச்சயமா இருக்கும். அது சில சமயம் நம்ம ஆழ் மனசின் அடித்தட்டில் உறைந்து கிடக்கும்.. நான் பார்த்த பல பேருக்கு முதல்ல என்னான்னே ஞாபகம் இருக்காது. ஆனா நாங்க கேட்கக் கேட்க தோண்டியெடுத்து சொல்வாங்க”

“புரியுதுங்க.. உண்மையில் எனக்கு என்னோட பிரச்சனை மறந்து போயிருந்தா நான் இந்த அளவுக்கு டிஸ்டர்ப் ஆகியே இருக்க மாட்டேனே. கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் அதை நினைவுறுத்தனுன்னே இந்த தழும்பும் கூடவே இருக்குதே”

நெற்றி வகிடிலுள்ள தழும்பைக் காட்டினேன். அடர்த்தியான புருவங்கள் இரண்டும் முடிச்சு விழும் அளவிற்கு கூர்ந்துக் கவனித்தான். 

”எங்க ஊர்ல இன்னமும் தலைக்கு மேல தூக்கி வச்சுக் கொண்டாடற சாதிப் பெருமைய இருபது வருசங்களுக்கு முன்னாடியே தூக்கிப் போடத் துணிஞ்சேன், என்கூடப் படிச்ச பையனும் நானும் உயிருக்குயிராக் காதலிச்சோம் ஒன்னுந்தெரியாத வயசு.. புத்திக்குத் தெரிஞ்ச ஊர் நிலைப்பாடுக் கூட மனசுக்குத் தெரியல. அவனாகத்தான் என் பின்னாடி சுற்றிச் சுற்றி வந்தான், என்னன்னமோ பேசி என் மனசைக் கொஞ்சம் கொஞ்சமா அவன் பக்கம் திருப்பினான். ஒரு கட்டத்தில் என்னாலே மறுக்கவே முடியாம, சம்மதம் சொல்லிட்டேன். உள்ளுக்குள் ஊர்ப் பேச்சுக்கு பயமிருந்தாலும் ஆசையும் காதலும் புத்திக்கு எட்டாம பண்ணிடுச்சு. நாள் போகப்போக பயமும் போகி வெளிப்படையா சுத்தத் தொடங்கினோம். திருவிழா, கோயில், கடைவெளி, டியூசன் இப்படி எல்லா எடத்துலயும் சேர்ந்தே திரிஞ்சோம். எல்லோரும் எங்களப் பத்தி பேசிப் பேசி கடைசியா அந்தப் பையனோட குடும்பத்துக்கும் தெரிஞ்சிடுச்சு”

”ம்ம்..”

“என்ன வாழ்க்கை இது.. ச்சே ஒரு சக மனுஷன் மேல இன்னொரு மனுஷிக்கு இயல்பா வர அபிப்பிராயத்துக்கு பூட்டுப் போட இவங்கள்ளாம் யாருங்க? யோசிச்சுப் பாருங்க. ரெண்டு ஒடம்போட தேவை மட்டுமா காதல்? எனக்கு அவன் கொடுத்த மரியாதைதான் அவனை காதலிக்க தூண்டிச்சு. அதே மரியாதையும் மானமும் காதலிச்சதுக்காகவே போச்சுதுன்னா என்னங்க பண்றது?”

“ம்ம்.. புரியுது”

“லவ் பண்ணும் போது எங்க அம்மாக் கூட வீட்டு வேலைக்குப் போனதுல கொஞ்சம் பணம் சேர்த்து அவனுக்காக ஒரு மோதிரம் வாங்கி கிஃப்ட் பண்ணியிருந்தேன்…”

“ம்ம்”

“நாலு பேர வச்சு என்னை நாசமாக்கி தூக்கியெறிஞ்சுட்டுப் போயிட்டானுங்க.. ஹாஸ்பிடல்ல கண்ணு முழிக்காம கெடந்தப்ப அளவுக்கதிகமா கடன் வாங்கி உயிரக்கொடுத்து என்னப் பெத்தவங்க பொழைக்க வச்சாங்க. அப்படியே செத்துப் போயிருந்தாக் கூடத் தேவலன்னு தோனுச்சுது, ஆனா இந்த பாழாய்ப்போன சமூகத்துல இவனுங்களாம் வாழும்போது நாம ஏன் வாழக்கூடாதுன்னு ஒரு வேகம்.. பக்கத்துலயே வேற ஒரு ஊருக்குப் போயிட்டோம் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சேன்”

“ம்ம்”

“ஒருநாள் என் தோழி மூலமா நான் காதலிச்ச பையன் தற்கொலை செய்துகிட்டான்ங்கற தகவல் கெடச்சுது, நிச்சயமா என் மனசுல அப்ப அவன் மேல காதல் இல்லை. ஆனா கடைசியா அவன் முகத்தைப் பார்க்கனும்னு தோனுச்சுது. முகத்தை மறைச்சுகிட்டு இறுதியாத்திரைக்கு முன்னாடிப் போயிப் பார்த்தேன்”

“ம்ம்”

“அவன் முகம் ரொம்ப கருத்துப் போயி இருந்திச்சு, நான் ரசிச்ச முகமே அது இல்ல அதுமட்டுமில்ல”

“சொல்லுங்க”

“அவனோட கைல நான் போட்ட மோதிரத்தோட சேர்த்து விரலையும் வெட்டி எடுத்திருந்தாங்க”

“ம்ம்”

“அதுக்கப்புறம் அவனோட நினைப்பும் மரணமும், எனக்கு நடந்த அப்யூஸ் எல்லாமே சேர்ந்து எனக்குள்ள உருவாக்கின வலிகளை கடந்து வர ஸ்டில் ட்ரை பண்ணித் தோத்துப் போயிட்டே இருக்கேன்”

“அந்த நெற்றித் தழும்பு எப்படின்னு??”

“அது..”

“சொல்ல வேணாம்னா சொல்ல வேண்டாம்”

“அவன் எனக்கு பொட்டு வச்சான். நான் மோதிரம் போட்டேன். எங்களுக்குள்ள அதக் கல்யாணம்னு சொல்லிக் கிட்டோம். அதுக்கு கெடச்ச பரிசு”

“எப்படி..?”

“அது அவங்க வீட்டு நிலவறைக்குள்ள அடச்சு வச்சு சித்ரவதைப் பண்ணுனப்ப ஏற்பட்ட காயம். அந்த நிலவறைல ஒரு கருங்கல் இருக்கு. அதுல தான் கட்டி வச்சிருந்தாங்க யார் யாரோ வந்து.. கிழவனும் வந்தான் சின்னப் பையனும் வந்தான். நிச்சயமா நான் செத்துப் போயிருக்கனும் டாக்டர்”

கண்களில் உருண்டக் கண்ணீர் வெளியேறி விடாமல் கவனமாகக் கையாண்டு நிறுத்தி வைத்து நிமிர்ந்தேன். அவன் என் மிக அருகில் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தான்

“இல்ல நீங்க வாழனும் இன்னும் செம்மையா சந்தோசமா நிம்மதியா”

“எங்க டாக்டர் முடியுது. அதான் அந்த நினைப்பு என்னைத் தொரத்திக் கிட்டே வருதே”

“நானெல்லாம் வாழும் போது நீங்க தாராளமா வாழலாம் பாப்பூ”

“மைக்கேல்”

“ஆமா அதுக்கப்புறமா என்னை எனக்கே பிடிக்கல

வெளில போயிட்டேன்

பேரையும் மைக்கேல்னு மாத்திகிட்டேன்”.


 

எழுதியவர்

பாலைவன லாந்தர்
பாலைவன லாந்தர்
பாலைவன லாந்தரின் இயற்பெயர் நலிஜத். இவர் 18.08.1979- அன்று தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பிறந்தார்.

இலக்கிய செயல்பாடு:

பாலைவன லாந்தர், 2010- ஆம் ஆண்டு  கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவர் கவிதை, முதலில் 2015- ஆம் ஆண்டு கல்கி இதழில் வெளியானது. 2016- ஆம் ஆண்டு "உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்" என்ற   முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது.   சிறுகதைகளும் கட்டுரைகளும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். 

கவிதைத் தொகுப்புகள்;

உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள் - 2016 ( சால்ட் பதிப்பகம் ),
லாடம் -  2018 ( டிஸ்கவரி புக் பேலஸ் ),
ஓநாய் - 2021 ( யாவரும் பதிப்பகம் ),
பெருந்தச்சன் - 2023 ( யாவரும் பதிப்பகம் ),
World Class Sins (English Translation),
மீளி சிறுகதை தொகுப்பு (எதிர் பதிப்பகம்).

பெற்றுள்ள விருதுகள்:

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை
மீறல் விருது,
படைப்பு கவிதை விருது,
களம்புதிது கவிதை விருது.

பாலைவன லாந்தர் சமூகநல செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பெரு நோய்த்தொற்று கொரானா காலத்தில் இவர் தயாரித்த "ஊரடங்கு" என்ற விழிப்புணர்வு குறும்படம்   கவனம் பெற்றது

பாலைவன லாந்தர்,  ஜெர்மனியில் வாழும் நிம்மி சிவா என்னும் எழுத்தாளரோடு இணைந்து உலகெங்கிலும் உள்ள இருபது பெண் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து இவர் எழுதிய "மனமே யுத்தம் செய்" என்னும்  நெடு நீள விழிப்புணர்வு கவிதையை வாசிக்கச் செய்தார்.

LANTHAR ART ENTERTAINMENT - லாந்தர் ஆர்ட் எண்டர்டெய்ன்மெண்ட் என்னும் கலை இலக்கிய செயற்பாட்டிற்கான தளம் ஒன்றை உருவாக்கி தொடர் நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mithan Rajh ( Neelavanai Indra)

கண்ணாடியின் முன்னால் அமர்ந்து கொண்டு மனசாட்சியோடு உரையாடும் படலம் போன்றதா?! புறவயமான பார்வையோடு தொடர்கிற வாசகனை அகவயமாக நிறுத்த முற்படும் எழுத்தாளர். இந்தக் கதை தனக்கான முடிவை விரைவாக அடைந்துவிட்டதான ஒரு உணர்வு மேலிடுகிறது.

அன்புடன் நீலாவணை இந்திரா

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x