8 December 2024
palaivana laundher ks

ப்ளேடு கொஞ்சமாகத் துருவேறியிருப்பது தெரிந்தும் கன்னத்தில் சுருண்டுவிட்ட மயிர்களைக்களைய அழுத்தியது தவறுதான் வேறு வழியில்லை. இன்று சனிக்கிழமை பரபரப்பான நாள் விடுதிக்கு நிறைய ஆண்களும் பெண்களும் அலைமோதியபடி அவிழ்த்துவிடப்பட்ட மந்தைகளைப்போல் முந்தியடித்துக்கொண்டு வருவார்கள். சென்ற மாதம் ஒரு சனிக்கிழமையில் சோடியம் விளக்கொளியில் ஆடை நழுவுவதைக்கூடக் கவனிக்காத பெண்ணொருத்தி அவனது மேலதிகாரியிடம் மழிக்காத தாடியைக்குறித்து நுனிநாக்கில் ஆங்கிலக் குற்றச்சாட்டு உரை பொழிந்தாள். அவரும் தனது எக்கிக்கொண்ட தொப்பை மீது சத்தியமாக  விரைவில் மழிப்பை நடத்துவானென உறுதிசெய்தார்

கர்ணாவிற்கு நகர வாழ்க்கை புதிதில்லை. தென்மாவட்டத்தின் அறியப்படாத கிராமத்தின் பெயரைச் சொல்லும்போது ஏளனமாகப் பார்ப்பதை ஒருபோதும் பெரிதுபடுத்தியதில்லை. எந்த இடமாக இருந்தாலும் தனக்கென ஒதுக்கப்படுவது ஓர் ஒழுங்கற்ற அறைதானென அறிந்திருந்தான். வறுமை கர்ணாவை பாதிக்கவில்லை. நிலை தெரிந்து வளர்ந்திருந்தான். தேவைகளைச் சுருக்கிக்கொண்டான். அவனைச்சுற்றி அவசியமற்ற ஒரு குண்டூசிகூட இருக்காது.

ரத்த பிசுபிசுப்பை டவலால் துடைத்துக்கொண்டே குளியலறைக்குள் புகுந்தான். சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஆணியில் விழுந்துவிடுவேனென அச்சுறுத்திக்கொண்டிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான். ஏற்கனவே ஒருமுறை விழுந்து கீறல் விழுந்த கண்ணாடி அவனை நான்கு கோணத்தில் காட்டியது. நான்கிலும் ரத்தம் சிவப்பாக, பொட்டு வைத்தது போலிருந்தது. சிரித்தபடி மீசையின் வளர்ந்துவிட்ட ஒரு முடியைப் பற்களால் கடித்துயிழுத்தான். பக்கெட்டிலிருந்த தண்ணீரில் மேற்கூரையிலிருந்து விழுந்த சருகு அழுகிக்கிடந்தது. கைகளால் பக்கெட்டை அழுந்த தேய்த்து அலசி கவிழ்த்துவிட்டு குழாயினைத் திறந்து அடியில் பக்கெட்டை வைத்தான். ப்க்க் ப்ப்க்க்க் ப்ப்க்க்க் என்ற காற்று மட்டுமே வந்தது தண்ணீர் வரவில்லை. இது புதிதில்லை ஆனால் இன்று அதிகமான எரிச்சலாக இருக்கிறது

சென்னைக்கு வேலைக்கு வந்து இரண்டு வருடங்களாகிறது. எத்தனையோ நிறுவனங்களுக்கு ஏறியிறங்கி கால்கள் தேய்ந்துவிட்ட நிலையில் தெருவோரத் தேநீர்க்கடையில் பேசிக்கொண்டிருந்த இருவரின் உரையாடலில் குறிப்பிட்ட வணிகவளாகத்தின் ஓர் உயர்தர விடுதியில் உணவு மற்றும் ஆல்கஹால் சரக்குகள் பரிமாற ஆட்கள் எடுக்கிறார்களென அறிந்துகொண்டு சென்றான்

பிறப்பிலேயே அனாதையென அறியப்பட்டவனுக்குத் தனது பெயரைத் தனக்கு வைத்தது யாரெனக்கூடத் தெரியாது. பள்ளிக்கூடத்தில் சத்துணவுக்காக கல்வியைக் கற்றுக்கொண்டான். யாருடனும் நெருங்கிப் பழக தயங்கித் தயங்கியே கல்லூரிப் படிப்பு முடிந்தது. தன் காதுபட பெண்களைக் குறித்து சக மாணவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டாலும் அது குறித்து யோசிப்பதைக்கூடத் தவிர்த்தான். தனது சொந்த வருமானத்தில் வாழ்வை அமைத்துக்கொள்ளும் வரை எந்தச் சலனமும் ஏற்பட்டு விடக்கூடாதெனச் சிரத்தையுடன் நகர்ந்து வந்தான். கற்ற கல்விக்கு வேலை கிடைக்காததை எண்ணி பெரிதாக வருந்துவதைவிட முதலில் பெயருக்காவது ஒரு வேலை வேண்டுமென முடிவுசெய்துதான் இந்த வேலையை ஏற்றுக்கொண்டான். நாளடைவில் வேறு வேலை தேடக்கூட நேரமின்றி இந்த வேலை அவனை முழுமையாக ஆட்கொண்டது

தூக்கத்திலும் ‘’வெய்ட்டர்ர்ர்என்ற ஒலியே எதிரொலித்துக் கொண்டிருக்கும். மதுவருந்த அனுமதிக்கப்பட்ட விடுதியில் தளர்வான ஆடைகளோடு தன் ஆண் நண்பர்களின் மார்பில் உரசியபடி ஆல்கஹால் வாசனைப்பரவ உடலை அசைத்து கூந்தலை இங்குமங்கும் பறக்கவிட்டுக் கோணலாகச் சிரிக்கும்போது இதயம் ஒருமுறை அதிர்ந்து துடிக்கும். உலகத்தின் அழகில் பெண்களுக்கே பெரும்பான்மையை வழங்கிய இயற்கையை நொந்துக் கொள்வான். சத்தியமாக ஒவ்வொரு பெண்ணுக்கும் இயல்பான வாசனையுள்ளது அதுவும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு வாசனைகள். அதற்கு மேலும் அவர்கள் தெளித்துவரும் திரவியங்களில் மயங்காத முனிவர்கள் இன்னமும் பிறக்கவில்லை. சனிக்கிழமை அவர்களுக்கு உற்சவமென்றால் இவனுக்குப் பலிபீடம் போலத்தான். 

பக்கெட்டை காலால் எத்தியபடி துண்டை இடுப்பில் முடிச்சிட்டு கதவைத்திறந்து மாடிக்கு வந்தான். ஐந்தாவது மாடியில் மொட்டைமாடியென்று ஒதுக்கிவிட முடியாத அளவிற்கு சிமெண்ட்கூரை போர்த்திய ஒரு சிறிய அறையைக் கட்டியிருந்தார்கள். அதனோடு ஒட்டிய சிறிய கழிப்பறை. ஆயிரத்துமுன்னூறு ரூபாய் வாடகை. அவனுக்குத் தோதாக இருந்தது. இரண்டு வருடங்களாக மாடியும் அறையையும் விடுதியையும் தவிர்த்து அதிகமாகப் போனது கடற்கரைக்கு மட்டுமே. 

மாடியில் காய்ந்துகொண்டிருந்த கைலியை உருவி தனக்குப் போர்த்திக்கொண்டு கீழடுக்குக்கு வந்தான். முதல் தளத்தில் குடியிருக்கும் குடித்தனரின் காலிங்பெல்லை அழுத்தினான். தலையில் எண்ணெய் வழிய கையில் காபிக் கோப்பையுடன் அசைந்தபடி வந்தவருக்கு வழுக்கைத்தலையில் அதிகமாக எண்ணெய் தேய்ப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லையென யாரும் சொல்லவில்லை போலும். வாய் நிரம்பக் காபியைக் கவிழ்த்துக்கொண்டே

”யெஸ் கர்ணா.. என்னப்பா இன்னும் ஜாபுக்கு போலியா நீ” என்றார்

“சார் தண்ணி வரல்லயே” என்றான்

“ஓஹ் தண்ணி வரல்லியா காலைலயே மோட்டர் போட்டனே.. இந்த டாங்க் வேற சின்னதா இருக்குதா அடிக்கடி தீந்து போயிடுது போல.. நீ போப்பா உடனே போட்டுடறேன் ”

“ தேங்கஸ் சார்”

சொல்லிவிட்டு மீண்டும் மூச்சிரைக்க ஐந்தாம் மாடிக்கு ஏறி தண்ணீர் வரக்காத்திருந்தான். 

அப்போதுதான் அந்தச் சப்தம் வெகு வித்தியாசமாகக் கேட்டது. சப்தம் வந்த திசையை நோக்கி நகர்ந்தான். மொட்டை மாடியிலிருந்து தான் வருகிறதென அவதானித்துச் சென்றான். யாரோ இரும்புத் தகரத்தில் கீறுவது போல க்க்ரக்க் க்க்க்ரக் க்க்ரக்கென சப்தம் வந்த பக்கமாகத் தண்ணீர்த்தொட்டி மட்டும் தான் இருந்தது. அருகில் சென்று எட்டிப்பார்த்தான்.

தண்ணீர்த்தொட்டியின் இரும்பு மூடிக்குள் அந்த உருவம் நெளிந்து கொண்டிருந்தது. கர்ணா அருகில் சென்று உற்றுப் பார்த்தான். அது ஒரு குரங்கின் வடிவிலிருந்தது. ஆனால் சர்வ நிச்சயமாகக் குரங்கில்லை. வாலும் இல்லை. கழுகோ காக்கையோ தூக்கிவந்து போட்டிருக்க வேண்டும். சற்று முன்பு தண்ணீரைப் பரிசோதிக்க வந்தபோது இது இங்கேயிருக்கவில்லை. அப்படியெனில் சில நிமிடங்களுக்கு முன்பு தான் போட்டிருக்க வேண்டும். இத்தனை பெரிய உருவத்தை எப்படிக் கழுகால் தூக்கமுடியுமென நினைத்தான். பசி வந்தால் எதையும் அடையும் வேகம் வந்துவிடும் அப்படி எந்தக் கழுகுக்கோ பருந்துக்கோ வேகம் வந்து இத்தனை பெரிய உருவத்தைத் தூக்கிக்கொண்டு பறந்திருக்கிறது ஆனால் இந்த உருவம் திமிறியிருக்கக் கூடும் அதனால் இங்கே போட்டுவிட்டிருக்குமென முடிவுசெய்தான்.

அதன் உடலில் சிறிய கீறலைக் கவனித்தான். தனது முகத்திலுள்ள கீறலைப்போலவே ரத்தப்பொட்டு கசிந்திருந்தது. அதன் முகம் அத்தனை பாவமாகத் தோன்றியது.  அதன் உடல் அச்சத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது. டவலை உதறி குட்டியைக் குழந்தையைப்போல் பொதிந்து தனது அறைக்கு எடுத்துச்சென்றான். குளியலறையில் தண்ணீர் வரும் சப்தம் கேட்டது. சிறிய குடுவையில் தண்ணீரைப் பிடித்து அதன் காயங்களைத் துண்டில் நனைத்துத் துடைத்தெடுத்தான். தனது பாய்க்கு அருகிலேயே கிழிந்த கைலியை ஒரு படுக்கையைப்போல் தயாரித்து அதைப் பக்குவமாகப் படுக்க வைத்தான். 

”தனியொரு மனிதனுக்கு உணவில்லாத போது ஜகத்தினை அழித்திடுவோமென எழுதும்போது பாரதிக்கு யாராவது கடுங்காப்பியாவது போட்டுக்கொடுத்திருக்கலாம். மனுஷன் எழுதிட்டு போய்ட்டாரு இங்கன வயிறு பசிக்கும்போதெல்லாம் எவனையாவது தூக்கிப்போட்டு மிதிக்கனும்போல இருக்கு. இதுல நீவேற வந்து சேந்துருக்க உனக்கு என்ன தீனி கொடுக்கனும்னே தெரியல நா யார்கிட்ட போயி கேக்கறது”

“க்விங் க்விங் க்விங்”

“ அதுசரி என்னா பாஷை இது? நீ உண்மைலயே குரங்குதானா? உனக்கு வால் இல்லையே. இதுக்கப்புறம் தான் வளருமோ!! ஹா ஹா ஹா… ! எதாவது கெரகத்துலேந்து குதிச்சுட்டியா? ஏலியனா நீ.. ?இல்ல அவளோலாம் சீனில்ல. நீ எதோ மிக்சிங் போல.. ! ஹ்ம்ம் கழுகாரு தூக்கிட்டு போறவர உங்கம்மா என்ன பண்ணிட்டுருந்துச்சு? ஐயோ ஐயோ.. “ (முன்தலையில் உள்ளங்கையால் தட்டிக்கொண்டான்).

“உன் கண்ணு ரொம்ப அழகாயிருக்கு. அப்படியே மைபோட்ட பொண்ணுங்க போல. ஏய்ய் உங்கிட்ட தான் பேசிட்டுருக்கேன் கேட்கறியா.. ?”

தலையாட்டியபடி தாவித்தாவி அறையின் மூலைக்குச் சென்று ஒடுங்கிக் கொண்டது. அதன் ஒவ்வொரு செயல்பாடுகளும் அவனுக்கு ஆச்சரியத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தது. 

அந்தக் கண்கள் அவனை என்னவோ செய்தது. நொடிக்கொரு முறை அருகில் சென்று உற்றுப் பார்த்தான். ஒரு பூவைத் தொடுவதுபோல் முதுகில் வருடினான் நெளிந்து வளைந்தது. அறையின் பக்கவாட்டில் சிறிய அட்டவணையை வைத்து அடுக்களையாக மாற்றி இருந்தான். அதன் அருகிலேயே சிறிய அட்டைப்பெட்டியில் நான்கைந்து ப்ளாஸ்டிக் டப்பாக்களில் மளிகைப் பொருட்களைப் போட்டு வைத்து உபயோகித்திருந்தான். அதில் ஒவ்வொரு டப்பாவாக எடுத்துக் கவிழ்த்துப்பார்க்க நொறுக்கிய பிரிட்டானியா பிஸ்கட்டின் பாதித்துண்டு உடைந்த துகள்களாக உதிர்ந்தன. அதை கைகளில் அள்ளி அதன் அருகே கொண்டு ஒரு காகிதத்தில் வைத்துக்கொடுத்தான். 

முகர்ந்து ஒதுங்கிய பிறகு; சில நிமிடங்களில் மீண்டும் நக்கிச்சுவைத்தது. அதன் சுவை அதற்குப் பிடித்திருந்தது. தனது பிங்க் வண்ண நாக்கினை நீட்டி வழித்துச் சுவைத்துத் தின்றது. 

இப்போது அது அவனை நம்பத் தொடங்கியிருந்தது. அவனது கால்களினருகே வந்து முகத்தை நிமிர்த்திப் பார்த்தது. தூக்கச் சொல்கிறதென புரிந்துகொண்டு குனிந்து தூக்கினான். சடக்கென அவனது கழுத்தில் தாவிச் சென்று அமர்ந்துகொண்டது. அதன் கைகளால் கழுத்தை வளைத்துப் பிடிக்க முயன்று தோற்றுப்போய் மீண்டும் கைகளில் தஞ்சமடைந்தது. அந்த பிடிமானத்தனமான அணைப்பு கர்ணாவுக்கு பிடித்துப்போய் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

“என்ன என்னை ரொம்ப பிடித்திருக்கா ? ஹா ஹா.. எங்கிட்ட எது பிடிச்சிருக்கு? சொல்லு .. ! ஏய் அப்படிப்பாக்காதே ! என்னமா பாக்கறே நீ..!! உன் பார்வைக்கு கிறங்கடிக்கற சக்தியிருக்கு தெரியுமா?.. என் வாழ்க்கைலயே நான் பாத்த அழகான கண்கள் உன்னோடதுதான். நெஜமாத்தான் சொல்றேன் நம்பு ..”

அவனது முகத்தை நக்கத் தொடங்கியது. நெற்றி, கண்கள், மூக்கு, கன்னங்கள், மோவாய் எனக் கொஞ்சம் கொஞ்சமாக நக்கிச்சுவைத்தது. கர்ணா அனுமதித்ததை அது மகிழ்வாக ஏற்றுக்கொண்டது. கர்ணாவுக்கு அதன் அத்துமீறல்கள் பிடிக்கத்தொடங்கியிருந்தது.

“உன்ன சொக்கின்னு கூப்பிடவா” மறுப்பேதும் சொல்லாமல் மேலும் நக்கிக்கொண்டது.

“சொக்கி நீ யாரு எந்த உலகத்துலேந்து வந்திருக்கே இதுக்குமுன்னாடி உன்னப்போல எதையும் நான் பாத்ததேயில்ல தெரியுமா”

அது தனது உதட்டால் கர்ணாவின் உதட்டை நக்கியது.

“ நீ நிச்சயமா பொண்ணுதான். ஏன்னா என்னை இப்படி யாருமே  அணுஅணுவா ரசிச்சதுமில்ல, கொஞ்சியதுமில்ல”

அது தனது கைகளால் கர்ணாவை அணைத்துக்கொண்டது. கர்ணா சுவரின் ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்ட பாயினை விரித்துப் படுத்துக்கொண்டான். அவனது வலதுகரத்தில் சொக்கி குழந்தையைப்போல் சுருண்டுக் கொண்டது.

” ஏய் சொக்கி நீ வந்ததுலேந்து மனசு ரொம்ப லேசாயிருக்கு காலைலேந்து பாறாங்கல்ல தூக்கிவச்சாப்பல பாரமா இருந்துச்சு, என்னை நல்லா உத்துப்பாரேன் எங்கிட்ட என்ன குறை சொல்லு எந்த பொண்ணுங்களும் என்னைப்பாத்து சிநேகமா சிரிச்சது கூட இல்ல இவ்ளோ ஏன் என்பக்கத்துல நின்னு பேசுனாக்கூட அவங்க ஹேண்ட் பேகை புடுங்கிட்டு போயிடுவோனோன்னு கெட்டியா புடிச்சுப்பாங்க தெரியுமா”

அது அவனது கழுத்தில், பிடரியில் முத்தமிட்டு நக்கியது. கர்ணாவிற்கு அந்த ஸ்பரிசம் பிடித்திருந்தது. அவனது உடல் அதனை முழுமையாக அனுமதிக்கத் தொடங்கியிருந்தது.

“ சொக்கி என்ன உங்கூட கூட்டிட்டுப் போயிடேன் ப்ளீஸ்… ப்ளீஸ் என்னை எதாவது பண்ணு சொக்கி … இல்ல இனி நான் இங்க இருக்கமாட்டேன் எதாவது பண்ணு சொக்கி… இந்த மனுஷப்பயலுங்க வீடு வாடகை தண்ணி வேலை சாப்பாடு கரண்டுபில்லு எதுவும் எனக்கு வேணாம் .. நீ மட்டும் போதும் உன்னோட ஒலகத்துக்கு கூட்டிட்டுப்போயிடு ப்ளீஸ்”

கர்ணா நெஞ்சோடு இறுக்க முயன்றான்

அது தனது நகங்களால் கர்ணாவின் மார்பில் சட்டென கீறியது. அந்தச் சிறிய தாக்குதலை எதிர்பார்க்காமல் நிலைகுலைந்தவன் வெடுக்கென அதை கைகளிலிருந்து தூக்கியெறிந்தான். எதிர்புற சுவரில் மோதி பொத்தென விழுந்தது.

கர்ணா கிட்டத்தட்ட நடுங்கிப்போனான். 

இத்தனை நேரம் தனக்கு என்னவாயிற்றுவென கேட்டுக்கொண்டான். உடல் நடுங்கியது. உள்ளங்கையால் கழுத்தைத் தேய்த்தான். அதன் எச்சில் பிசுபிசுத்தது. சட்டையைக் கழற்றி மார்புப்பகுதியை பார்த்தான். இரத்தம் நிற்காமல் கசிந்துகொண்டிருந்தது. கொடியில் கிடந்த டவலால் அழுந்தத்தேத்தான். சில நொடிகள் நின்று மீண்டும் குபுக்கென வழிந்தது டவலால் அழுத்தி பின்பக்கமாக இழுத்துக்கட்டிக்கொண்டான். சற்று பரவாயில்லையென தோன்றியது. கோபமும் ஆத்திரமுமாகக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்து வழிந்தது. 

கர்ணாவிற்கு அப்போதுதான் தான் அந்த உயிரினத்தைத் தூக்கியெறிந்தது ஞாபகத்தில் உறைத்தது. மெதுவாகச் சுதாரித்து அதன் அருகில் சென்றான். அதன் முன் மண்டை நெளிந்திருந்தது. ஈயம் பூசப்படுவதற்கு முன்பாகப் பட்டறையில் செய்யப்பட்டிருக்கும் குவளையின் வாயைப்போல் திறந்துக்கிடந்தது. ஆனால் ரத்தமோ எலும்புகளோ தென்படவில்லை. அதை மெதுவாகத் தூக்கினான். சிறிது நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தவன் சட்டென மொட்டை மாடிக்குச்சென்று எட்டிப்பார்த்தான். கீழே வாகனங்கள் ஒன்றையொன்று முந்திக்கொண்டிருந்தது. தூரத்தில் தண்ணீர் லாரி அவனது வீட்டைக் கடக்க வளைந்து கொண்டிருந்தது. சரியாக குறிபார்த்து மேலிருந்து எறிந்தால் லாரியில் போட்டுவிடலாமென கைகளை வாகாக உயர்த்திப்பிடிக்கும் போது…

கண்களைத்திறந்து “ கர்ணா” என்றது

அன்றிரவு..,

“ மோட்டார்ல தண்ணி வரல்லனு சொல்லிட்டுப்போனவன் இப்படி மாடிலேந்து பாஞ்சு செத்துப்போவான்னு நினக்கலயே ஐயோ இந்தகாலத்து பசங்கள புரிஞ்சுக்கவே முடியலயே “ என்று போலிஸின் முன்பாக தலையைச் சாய்த்தபடி புலம்பிக் கொண்டிருந்தார்.


 

எழுதியவர்

பாலைவன லாந்தர்
பாலைவன லாந்தர்
சென்னையில் வசிப்பவர், கவிஞர், இவரின் ஓநாய் எனும் கவிதைத் தொகுப்பை 2021 ஆம் ஆண்டு யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x