16 April 2024

னக்கு என் வழியில் செல்ல முடியாமல் எல்லாப்பக்கமும் முட்டுக் கட்டையைப் போடுகிறார்கள் பலரும். இப்படித்தான் எல்லோருக்கும் நடக்கிறதாவெனவும் தெரியவில்லை. நான் ராமலிங்கம். “டே லிங்கா!” என்றே மற்றவர்கள் என்னை அழைக்கிறார்கள். சமவயதுடையவனைக்கூட என்னால் ’டேய்’ போட்டு கூப்பிட முடிவதில்லை. வளர்ப்பு அப்படி என்று வைத்துக்கொள்ளுங்கள்.

பெரிய படிப்பெல்லாம் நான் படிக்கவில்லை. உள்ளூர் பள்ளியில் எட்டாவது வரை இருந்ததால் அதை மட்டும் முடித்துக்கொண்ட சமயம் அப்பா உடல்நிலை மோசமாகிப் போய்ச் சேர்ந்துவிட்டார். பின்பாக அக்கா பரமேஸ்வரியை இருபது கிலோமீட்டர் தூரத்தில் தூரத்துச் சொந்தத்திற்குக் கட்டிக் கொடுத்தோம். அம்மா ஆஸ்துமா நோயாளி என்பதால் வீட்டில் படு சிரமம் தான் என்று வைத்துக்கொள்ளுங்களேன். நானும் அம்மாவும் மட்டும் தான்.

இப்படியிருக்க அக்கா பரமேஸ்வரி எனக்கொரு பெண் இருப்பதாகச் சொல்ல எந்த மறுப்பும் சொல்லாமல் சுமதியை கட்டிக்கொண்டேன். கல்யாணம் என்றால் சிறப்பாக மேளதாளம் முழங்க மண்டபத்தில் வைத்து நடந்து முடிந்த கல்யாணமல்ல எங்கள் இருவருடையதுமே! குலதெய்வக்கோவிலில் வைத்து அறிந்த தெரிந்த சனத்திற்கு மட்டும் அழைப்பு வைத்து செலவினம் என்று பெரிதாக இல்லாமல் தான் அக்கா பரமேஸ்வரியின் திருமணம் முடிந்தது. அதைப்பின்பற்றியே என்னுடைய திருமணமும் பொண்ணுப்பிள்ளை சுமதியின் குலதெய்வக் கோவிலில் நடந்து முடிந்துவிட்டது.

அக்காவைக் கட்டிக்கொடுக்கையில் பத்துப்பவுன் போட்டு கட்டிக்கொடுத்தோம். மச்சான் சொந்தமாக வீட்டின் அருகேயே குடோன் கட்டி இரண்டு தறிப்போட்டு அவரே ஓட்டிக்கொண்டிருக்கிறார். அக்கா போகும்போதே குடோனும் தறிகளிரண்டுமிருந்ததால் மிக நம்பிக்கையாய் பொண்ணு கொடுத்தோம். அம்மாவுக்கு அதில் பெரும் மகிழ்ச்சி தான். அக்கா இப்போது அந்தக்குடும்பத்தில் ஒருத்தியாக மாறிவிட்டிருந்தாள்.

கணவரை போனவுடனேயே முந்தானையில் முடிந்து கொண்டாள் போலிருக்கிறது. அவரும் என்னை போலவே வெள்ளந்தி தான். ஆனால் மாங்கு மாங்கென உழைப்பவர். என்னைப்போன்றே எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் அவரிடம் இல்லை. அக்காளுக்கு ஒரே பையன். சுப்பிரமணி என்று பெயரிட்டிருக்கிறாள். எட்டுவயதாகிறது. கான்வெண்ட் பள்ளிக்குப் படிக்கச்செல்கிறான். வேனுக்கு பணங்கட்டி, ஸ்கூலுக்கு பணங்கட்டி, துணிமணி தெச்சு.. என்று அவ்வப்போது அக்கா பரமேஸ்வரி ஊருக்கு வருகையில் அம்மாவிடம் புலம்புவாள்.

அம்மா எந்த வேலைக்கும் செல்லமுடியாததால் வீட்டோடே பாதுகாப்பாய் இருக்கிறது. என்னைக்கட்டிக்கொண்ட சுமதியும் அமைதியானவள் தான். வருகையில் ஏழு பவுன் நகையோடும், சாமான் செட்டுகளோடும் தான் வந்தாள். அவளுக்கு படிப்பு ஐந்தாவதோடு நின்று போனதை என்னிடம் சொல்லியிருக்கிறாள். சுமதி என்று அவள் கையெழுத்திடுகையில் கொஞ்சம் மேலே ஏறித்தான் செல்லும். அதெல்லாம் பிரச்சனையில்லைதான்.

சொந்த ஊரில் தறிக்குடோனுக்கு சென்றுவந்து கொண்டிருந்தவள் இங்கே வந்ததும் ரோட்டு வேலைக்கு எழுதிக்கொடுத்து சம்பளப்பணத்தை பேங்க்கில் சென்று வாங்கி வருமளவு வளர்ந்து விட்டாள். எனக்கோ பேங்க்கில் அக்கெளண்டே இல்லை. கூடிய சீக்கிரம் இதையெல்லாம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டுமென நினைத்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

எனக்கொரு மகன் இருக்கிறான். அவன் பெயர் முத்துச்சாமி. இந்தவருடம் தான் கான்வெண்ட் பள்ளியில் சேர்த்தியிருந்தேன். நானே தினமும் குறுநகருக்கு அச்சாபீஸ் செல்வதால் வேனுக்கு பணம் கட்டவில்லை. என் டிவிஎஸ் 50-ல் இருவரும் சென்றுவிடுவோம். மாலையில் நாலேகால் என்றானபோது அச்சகத்திலிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு போய் முத்துச்சாமியை கூட்டிவந்துவிடுவேன். பின்பாக மாலையில் பணி முடிந்து நான் கிளம்பும் வரை என்னோடே அச்சகத்தில் இருப்பான்.

குறுநகர் அச்சகத்தில் நான் முதலாக கம்பாசிடராகவும், மிஷின் மேனாகவும் தான் இருந்தேன். எல்லாம் இன்று ஏறக்கட்டியானபின் ஜெராக்ஸ் மிஷின்போல இப்போது வந்துவிட்டது. அச்சுத்தொழில் நச்சுத்தொழில் என்ற பழமொழி இருக்கிறது. நான் அச்சகத்தில் மிகச்சிறந்த பைண்டர். அச்சுக்கோர்க்கும் வேலையெல்லாம் முடிந்துபோய் கம்ப்யூட்டர் வந்துவிட்டது. அச்சக உரிமையாளர் அதற்கென ஒருவனை எட்டுவருடம் முன்பாக சேர்த்திக்கொண்டார். போக மிஷின்மேன் என்று ஒருவனையும் சேர்த்துவிட்டார். எனக்கு பைண்டிங் வேலையில் உதவி செய்ய ஒரு சிட்டாளை அச்சக உரிமையாளர் அப்போது சேர்த்தியிருந்தார்.

இப்போது அவனுக்கு மீசைகூட முளைத்துவிட்டது. கையில் கையகல போன் வைத்திருக்கிறான். என்னால் நகர்த்திச்செல்லக்கூட முடியாதபடியான பைக் வாங்கிவிட்டான். நான் இன்னும் பழைய டிவிஎஸ் 50 ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இதையெல்லாம் கணக்கிட்டுத்தான் என்னால் இனி தொடர்ந்து அச்சகத்தில் பைண்டராகவே வாரக்கூலி வாங்கிக்கொண்டு காலம் தள்ள முடியாதென போனவருடம் யோசித்து சுமதியிடம் தகவல் சொன்னேன்.

‘என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? அதெ மொதச் சொல்லுங்க!’ என்றாள் அவளும் ஆர்வமாய். குறுநகரில் ஒரு சின்னக்கடை ஒன்னு காலியாய் இருப்பதாயும், மாசம் எப்படியும் ஏழுநூறு ரூவாய் வாடகை தான் வருமெனவும், பஞ்சர் கடை போட்டு ஓனராய் அமர்ந்துவிடும் யோசனையில் இருப்பதையும் சொன்னேன். இப்பெல்லாம் ஒரு டிவிஎஸ்க்கு பஞ்சர் ஒட்டினால் ஒன்னுக்கு 50 ரூவா வாங்குறாங்க என்றும் சொன்னேன்.

அவளோ, ‘பஞ்சர் ஒட்டத்தெரிஞ்சா போதுமா? வண்டி வேலையும் செய்யத் தெரியனும்ல!’ என்றாள். வாஸ்தவம் தான். ஆனால் சித்திரமும் கைப்பழக்கம் தானே! என் டிவிஎஸ் பண்ணாத துன்பங்களா? திடீரென ஸ்டார்ட் ஆகாது. சாலையிலேயே ஓரங்கட்டி நிறுத்தி ஸ்பேனரை எடுத்து ப்ளக்கை கழற்றி ரெண்டு தேய்ப்பு, சாலையிலேயே தேய்த்து பின்பாக பெட்ரோல் டியூப்பிலிருந்து துளி பெட்ரோல் நனைத்துப்போட்டால் வண்டி ரெடி! கம்ப சூத்திரமா அது? அதற்காகவெல்லாம் பார்த்தால் கடைபோட்டு தனி ஓனராக அமரமுடியாதல்லவா!

கடைசியாக சுமதி,  ‘எவ்ளோ செலவாகும்.. பொருளெல்லாம் வாங்கி கடையில் வைத்து பூஜைபோட்டு ஆரம்பிக்க?’ என்றாள். ’எப்படியும் ஸ்பேனர் செட்டுக, சைக்கிள் டயர் டியூப்புக, டிவிஎஸ் டியூப்புக, ஒரு ரேக்குன்னு பத்தாயிரம் இருந்தா போதும்’, என்றேன். ‘காசு வச்சிருக்கீங்களா?’ என்றாள். ’அதான் உன் நகையில மூனு பவுனை எடுத்துக்கொண்டி பேங்க்குல வச்சு பணம் வாங்கிக்கலாம். அப்புறம் மீட்டுக்கலாம், என்றேன். ‘சரிதான்.. அது எப்போ?’ என்றாள்.

“எந்தக்காரியத்தையும் தள்ளிப் போட்டுட்டெல்லாம் இருக்க முடியாது சுமதி. அதிலயும் இது நல்ல காரியம். கடையை வாடகைக்கி தர்றவர் எனக்காக ஏழாயிரம் தான் அட்வான்ஸ் குடுன்னு கேட்கிறார். ரெண்டு நாள்ல படப்படன்னு வேலையை ஆரம்பிச்சிடனும் சுமதி”, என்றேன். அடுத்த நாளே காலையில் நான் தூங்கி விழிக்கையில் சுமதியையும் பையனையும் காணோம். அம்மாவைக் கேட்டால் தெரியலை என்றது. நேரம் ஆக ஆக நிலவரம் ஒன்றும் புரியவில்லை.

பக்கத்து வீட்டு சரோஜா தான் சாலைப்பணிக்கு கிளம்பிச் செல்கையில், ‘ராமலிங்கண்ணா, சுமதியக்கா பையனை தூக்கீட்டு அவிங்கூருக்கு போயிடுச்சு காத்தால அஞ்சி மணிக்கே! உங்களுக்குள்ள சண்டையாயிப் போச்சுங்களாண்ணா? காத்தால வேலைக்கி கெளம்புறப்ப தான் ஊட்டுக்காரனுக்கு நீ சொல்லோணும்னு வேற என்கிட்ட சொல்லுச்சுங்ணா!.. உடனே போயி கூட்டியாந்திடாதீங்க.. ரெண்டு நாளு கழிச்சி போயி சமாதானம் பண்டிக்கூட்டியாங்க!’ சொல்லிவிட்டுச் சென்றாள். நான் ரொம்ப நாள் கழித்து வெங்காயம் தக்காளி அரிந்து அன்று சமையல் செய்து முடித்துவிட்டு; அச்சகத்திற்கு வண்டியை எடுத்தேன். அதற்குள் ஓனர் வேறு கூப்பிட்டுக்கொண்டேயிருந்தார் என் அலைபேசிக்கு. அவருக்கு என்னவெனச் சொல்வது? ’பத்துமணிக்காட்ட வர்றனுங்க!’ என்று சொல்லி வைத்தேன்.

மூன்றாம் நாள் சுமதி அவளாகவே வீடு வந்து சேர்ந்தாள். கோபித்துக்கொண்டு சென்றால் போனவர்களுக்கே வரவும் வழி தெரியும்தானே என்று நான் அவளைக் கூட்டிவரப் போகவில்லை. வந்தவள் கழுத்தில் தாலிக்கொடிக்குப் பதிலாக மஞ்சள் கயிறு தான் தென்பட்டது. காதில் இருந்ததற்குப் பதிலாக வேறொன்று சிறியதாகத் தெரிந்தது. சரி இரவு நேரத்தில் அடித்துப்பிடுங்கிப்போய் விற்றேனும் கடையை வைத்து ஓனராய் அமர்ந்து விடுவேனென என் மாமியார் இவள் நகைகளைப் பத்திரமாய் வாங்கி பத்திரப்படுத்திவிட்டு, பிழைக்க மட்டும் பிள்ளையை அனுப்பி வைத்திருக்கிறார், என நினைத்தேன். இப்படியாக என் சைக்கிள் கடைக்கனவு வெறும் பகல் கனவாகப் போய்விட்டது.

இதோ மீண்டும் ஒருவருடம் கழித்து என் வீட்டினுள் என் மாமனார், மாமியார், சுமதியின் தாய்மாமன் எல்லோரும் வந்து அமர்ந்திருக்கிறார்கள். என்னை அமரவைத்து புத்திமதி சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். என் அம்மாவும், எதோ பிரச்சனைபோல! என்று நினைத்து அதுவும் வந்து என்னருகில் அமர்ந்துகொண்டது.

நான் வழக்கம்போல அச்சகம் என்னை விழுங்கிவிடும் என்கிற பயத்தில் இந்தமுறை மளிகைக்கடை ஒன்றை குறுநகரில் போடுவதாக சொல்லியிருந்தேன். அது ஒரு நல்ல திட்டம் என்றே எனக்கு மனதில் பட்டிருந்தது. காய்கறிகளைப் பெரிய மார்க்கெட்டிலிருந்து கொண்டு வருகிறோம். அன்றைய நிலவரப்படி காய்கறிகளை விற்பனை செய்கிறோம். இதுபோக மற்ற ஐட்டங்கள் அனைத்தையும் வேனில் வந்தே கடையில் கொடுத்துப் போய்விடுகிறார்கள்.

ஒரு சோப்பு விற்றால் கூட நறுக்கென பணம் கிடைக்கிறது. ஒரு ஊதுபத்தி பாக்கெட் விற்றால் கூட லாபம் இருக்கிறது. இதை விற்பனைக்கு வைத்து பார்ட்டிக்கு எடுத்து நீட்ட பெரிய உடல் உழைப்பும் இல்லை. ஸ்பேனர் போட்டு திருப்பி டைட் செய்ய வேண்டியதில்லை. இந்தமுறை சுமதி மகிழ்ச்சியாய் ஒப்புக்கொள்வாள் என்று பார்த்தால்.. பஞ்சாயத்து கூட்டிவிட்டாள்.

எனக்கும் மூத்தவர்களான அவர்கள் பேச்சு பெரிய படிப்பறிவை எனக்கு ஊட்டும் விதமாக இருந்தது. போக கையிருப்பை இழந்துட்டு எங்கு போய் நிற்பது? என்ற கேள்வியை அடிக்கடி எழுப்பினார்கள். என்னால் எந்த விளக்கமும் அவர்களுக்குச் சொல்ல முடியவில்லை. சொல்ல ஆரம்பிக்கும் சமயமெல்லாம் சுமதி சப்தம் பெரிதாக இருந்தது. மீண்டும் நான் தோல்வியடைந்தேன். மீண்டும் அச்சாபீசுக்கு அடுக்கு டிபனில் சாப்பாடு எடுத்துக்கொண்டு அடுத்த நாள் காலையில் சுப்பிரமணியோடு கிளம்பினேன்.

அன்று பதினொரு மணியளவில் அச்சக ஆட்கள் ரிலாக்ஸாக டீ சாப்பிடும் நேரத்தில் ஓனரும் கையில் டீ டம்ளரோடு வந்தார் என்னிடம். ’இந்த முப்பது பில் புக்கும், இருவது இன்வாய்ஸ் புக்கும், பத்து லெட்டர்பேடும் சாயந்திரம் டெலிவரி பண்ணனும் லிங்கா!’ என்றே பேசுபவர் வேறு பேச்சு பேசினார்.

“உனக்கெல்லாம் என்ன தெரியும்னு மளிகைகடை போடணுங்கறே? தக்காளி, கத்திரி, வெண்டைன்னு கடையில இறக்கீட்டு உட்கார்ந்துட்டீன்னா பூராவும் வித்து காசு சம்பாதிச்சிருவியாடா லிங்கா? விக்கலீன்னு அழுகிப்போச்சுன்னா போட்ட மொதல் பூராவும் போச்சேடா! ஊர்ல ஒருமளிகைக்கடையா இருக்குது? வீதிக்கு மூனு இருக்குது. நான் உன்னை வேண்டாம்னு சொல்லலடா லிங்கா.. இப்ப ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மளிகைக்கடையில் ரெகுலரா போய் பொருள் வாங்கி பழகிட்டாங்க! உன் கடைக்கி யாரு வருவா? எதோ பீடி சிகரெட் பொயிலை போடறவன் வேணா வருவான். பீடிக்கட்டுக்கு ரெண்டுரூவா கெடைக்கிம். பத்துக்கட்டு வித்தீன்னா இருவது ரூவா ஆச்சு. அதவச்சு வாடகை எப்பிடி குடுக்குறது?” ஓனரும் நிறுத்துவதாயில்லை.

இந்த சுமதி முனுக்முனுக்கென இருந்துகொண்டே பஞ்சாயத்து செய்கிறாளே! ஓனர் நெம்பர் வாங்கி பேசி வத்தி வைத்திருக்கிறாளே! ஒரு வீட்டுக்காரன் வாழ்க்கையில முன்னேற ஒரு ஐடியா பேசினால்.. இப்பிடி அவளோட தலையில இடிவிழுந்தாப்ல பண்ணுறாளே! ஓனர் கடைசியாக ஒன்று சொன்னார். ‘மறுக்கா நீ நாலு மாசங்கழிச்சி அச்சாபீசுக்கு வந்தா உன்னோட எடத்துல வேற பைண்டர் இருப்பாரு! நீ வந்தா அவரை ஊட்டுக்கு போவச் சொல்ல முடியாது!’

குழப்பமாய் அன்று மாலையில் பையனோடு வீடு வந்து சேர்ந்தேன். ஆறுமாதமாக சுமதியின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை மீண்டும் காணவில்லை. மாமியார் வாங்கிக்கொண்டு போய்விட்டார் போலிருக்கிறது. ஆனால் என் முடிவில் மாற்றமேயில்லை. நாளை குறுநகரில் ஏதேனுமொரு மளிகைக்கடையில் நான் வேலையாளாகச் சேர்ந்துகொள்ள முடிவெடுத்திருக்கிறேன். ஒருவருடமேனும் மளிகைக்கடை அனுபவம் எனக்கு வேண்டும். மறுவருடத்தில் நான் மளிகைக்கடை போட்டு ஓனராக கல்லாவில் அமர்ந்தே தீருவேன்!

எனக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்!


 

எழுதியவர்

வா.மு.கோமு
வா.மு.கோமு
வா. மு. கோமு என்ற பெயரில் எழுதி வரும் வா.மு.கோமகன், ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்தஎழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர் என்றும், மனதில் நினைத்ததை எழுத்தில் சொல்லத் தயங்காத எழுத்தாளர் எனவும் பெயர் பெற்றவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது. 1991- ஆம் ஆண்டு முதல் ‘நடுகல்’ எனும் இலக்கியச் சிற்றிதழை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இவரது நூல்கள் :

அப்பச்சி வழி - நினைவோடை குறிப்பு,
அருக்காணிக்கு சொந்த ஊர் விஜயமங்கலம் - சிறுகதைகள் ,
அழுவாச்சி வருதுங்சாமி - சிறுகதைத் தொகுப்பு,
எட்றா வண்டிய -நாவல் ,
என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் - சிறுகதைகள்,
கள்ளி - நாவல் ,
கூப்பிடுவது எமனாக இருக்கலாம்,
சகுந்தலா வந்தாள் - நாவல்,
சயனம்- நாவல் ,
சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்- நாவல் ,
சேகுவேரா வந்திருந்தார் - சிறுகதைகள்,
கூப்பிடுவது எமனாக இருக்கலாம் ,
பக்கத்து வீட்டு குதிரை- சிறுகதைகள் ,
பிலோமி டீச்சர் - சிறுகதைகள் ,
மங்கலத்து தேவதைகள்- நாவல் ,
மண்பூதம் - சிறுகதைகள்,
மரப்பல்லி - நாவல் ,
நாயுருவி- நாவல்,
தவளைகள் குதிக்கும் வயிறு - சிறுகதைகள்,
தானாவதி - நாவல்,
ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி- நாவல் ,
வேற்றுக்கிரகவாசி - சிறுகதைகள்,
ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம் ,
மாஸ்டர், ஒரு சாதா டீ - சிறுகதைகள்,
லவ் யு டி - சிறுகதைகள்
காயாவனம்: சிறார் குறுநாவல்,
மாயத் தொப்பி - சிறார் கதைகள்.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
முத்துவேலன்
முத்துவேலன்
7 months ago

கோமுவின் கதை இருக்கிறதே என வாசிக்க வந்தேன். நன்றாக இருக்கிறது. ஆனா ஒன்னுஞ் சொல்லனும் போதிய திருப்தி இல்ல. லிங்கத்துக்கு வாழ்த்துகள் சொல்லிட்டேன்னுங்க.

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x