16 June 2024

நான் யார் என்று சில சமயங்களில் மறதி வந்துவிடுகிறது. எனக்கான பெயர் எதுவென்று சில சமயங்களில் ஞாபகத்திற்கு வருவனாங்குது! எனக்கான பூர்வீகம் எந்த ஊரில் இருக்கிறதெனவும், இத்தனை காலம் என்ன தொழிலில் இருந்தேன் எனவும், எனக்கு மனைவி, பிள்ளைகுட்டி உண்டா? என்று ஒரு பேரெழவும் தெரிய வருவதில்லை. என் பெயர் கவிநாயகம் என்று ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் நவநீதன் என்பவன் யாரென தெரியவில்லை. ஒருவேளை என் அம்மாவும் அப்பாவும் எனக்கு ஆளுக்கொரு பெயர் வைத்திருப்பார்களென நினைக்கிறேன். எப்படி யோசித்தாலும் அவர்கள் இருவரின் முக ஞாபகம் எனக்கு இல்லை. என் அப்பா பெரிய மீசை வைத்திருந்தவரா? இல்லை தன் மீசையை சரைத்துக்கொண்டவரா? கண்ணாடி அணிந்தவரா? தாடி வைத்தவரா? தெரியவில்லை. என் அம்மா ஒல்லிப்பிச்சானாக இருந்தவளா? இல்லை நூறுகிலோ எடையில் இருந்தவளா? என் அப்பாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவளா? ஒரு எழவும் ஞாபகத்தில் இல்லை

ஆனால் நான் எதோ ஒரு மருத்துவமனையில் கிடந்ததாக மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்த மருத்துவமனை எதோ மலையடிவாரத்தில் மரங்களின் ஆக்கிரப்பினுள் இருந்தது. அங்கே நிறைய வியாதியஸ்தர்கள் பச்சை வர்ண உடைகளோடு திரிந்தார்கள். நான் அங்கே நோயாளியாகவோ டாக்டராகவோ இருந்திருக்க வேண்டும். பின் எப்படி நான் மனிதர்கள் நடமாடும் பகுதிக்கு வந்து சேர்ந்தேன் என்று நிசமாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் வெளியில் நான் எத்தனை மாதங்களாக.. வாரங்களாக சுற்றுகிறேன் என்ற ஞாபகம் இல்லையென்றாலும் சற்று நிம்மதியாக இருக்கிறேன். நகர்ப்புறங்களின் பேரிரைச்சல் பிடிக்காமல் நான் குறுநகரங்களில் உலாத்தினேன். சில இடங்களில் என்னை திருடன் எனக்கூறி ராக்காலங்களில் மிதித்தார்கள். யாரு? எந்த ஊரு நீயி? என்றெல்லாம் கேட்டு காது காதாய் அப்பினார்கள். அது தெரியாமல் தானே நான் சுற்றி அலைகிறேன்! என் பேண்ட் பாக்கெட்டில் ஐடி புரூப் இருக்கிறதா? என்று காக்கி உடுப்பணிந்த அதிகாரி ஒருவர் தேடினார். அங்கென்ன மயிரா வைத்திருக்கிறேன் நான்? துண்டு சிகரெட்டுகள் நான்கு கிடக்கவே அதை அவர் வெளியில் எடுத்து தூர வீசினார். 

‘கொண்டு போயி உள்ளார போட்டு எலும்பை எண்ணுங்க சார்.. நடிக்கிறான். அவன் முழியைப்பாருங்க சார், ஒன்னாம் நெம்பர் கேப்மாரி இவன். இவன் தனியா வந்திருக்க வாய்ப்பில்லங்க சார். ஜோடி ஆளு இருப்பான். அவன் தப்பிச்சு ஓடியிருப்பான்.. இவன் வசமா மாட்டிக்கிட்டான்! நம்ம சிஸ்டமே செரியில்லங்க சார். ஆதார் கார்டோட எல்லாமையும் நாம இணைச்சுட்டோம். இவனை மாதிரி ஆளுங்களை நம்ம செல்போன்ல போட்டா எடுத்தம்னா அப்பிடியே இவன் பேருல இருந்து.. ஊரு வண்டவாளம் எல்லாமும் வர்றமாதிரி அரசாங்கம் பண்ணிடோனுமுங்க சார்! அப்ப இவன் பேரை மாத்தி சொன்னாக்கூட செல்போனு காட்டிக்குடுத்துருமுங்க சார்! நம்ம சிஸ்டமே செரியில்லங்க சார்!’ என்று கூட்டத்தில் என் டிக்கியில் ஒதை கொடுத்த கிழவாடியொருத்தன் அதிகாரியிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவனொரு பைத்தியாரப்பயலா இருந்தாலும் அருமையான திட்டம் தான் சொன்னான். என்னை யார் யாரோ தங்கள் அலைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அப்படி என் பெயரும் என்னைப் பற்றியான கண்ட கருமாந்திரங்களையும் அலைபேசி காட்டித் தந்திருந்தால் நான் என் மனைவி குழந்தைகளிடம் போய் மயிரே போச்சென கிடந்திருப்பேன். திடீரென என் பொண்டாட்டி பெயர் என்னவாக இருக்குமென யோசித்தேன். அமலாபாலாக இருந்தால் அம்சமாக இருக்கும். ஆமாம் அமலாபால் ஒரு கிரிக்கெட் வீராங்கனைதானே?

அந்த அதிகாரி தன் நான்கு சக்கர வாகனத்தில் அமரவைத்து எனைக் கூட்டிப்போனார். சரி எனக்கொரு அழகான பெயர் வைத்து பத்துப்பதினைஞ்சு பொண்ணுங்களை கற்பழித்தவன் மாட்டிக்கொண்டான் என தந்தி பேப்பருக்கு தகவல் சொன்னார் என்றால் என் உறவினர்களில் யாராவது அந்த பேப்பரைப் பார்த்து எனைத் தேடிவந்து, ‘கவிநாயகம்.. என்ன பாவத்தையடா செய்தாய்? நம் பரம்பரையின் ஒழுக்கம் பற்றி நீ அறிவாயா? பெண்கள் நம் கண்களடா.. பெண் தெய்வம் தான் நம் குலதெய்வமடா.. அந்த தெய்வங்களையா நீ சீரழித்தாய்? அதுவும் ஒன்றல்லவாமே.. பத்துப்பதினைந்தாமே!’

‘பிரம்மா ஓ பிரம்மா! இது தகுமா இது தகுமா? ஐயோ இது வரமா சாபமா? பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாள்’ வாயிற்குள் நான் சும்மாவுக்கேனும் பாடினேன். இந்தப்பாட்டு மட்டும் எப்படி எனக்குள் ஞாபகத்தில் இருக்கிறதென தெரியவில்லை தான். எனக்கு எது ஞாபகத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. என்னை அந்த அதிகாரி குறுநகரின் மருத்துவமனைக்குத்தான் கூட்டிப்போனார் முதலாக. அந்த மருத்துவமனை வாசலில் நான்கைந்து நாய்கள் சுகமான தூக்கத்தில் இருந்திருக்க வேண்டும். அதிகாரியின் வாகன சப்தம் கேட்டு அவைகள் எழுந்து சற்றுத்தூரம் போய் நின்று அமைதிகாத்தன. நாய்களுக்கு கூட அதிகாரியைப்பார்த்து குலைத்து வைக்ககூடாதென தெரிகிறது பாருங்கள்! 

மருத்துவமனைக்குள் எனைக்கூட்டிப்போன அதிகாரி என்னை ஒரு தாதியிடம் நிறுத்தி சில தகவல்களை அவளுக்குச் சொன்னார். அந்த தாதி ஊமை போலிருக்கிறது. மண்டையை அவள் ‘சரிங்க’ என்று சொல்லி ஆட்டும் போது அவளது கொண்டையும் ஆடியது. எனக்கு ஏனோ அந்த தாதியை கட்டிக்கொண்டு ஒரு முத்தம் தரவேண்டும் போல ஆசையாய் இருந்தது. இத்தனைக்கும் அவள் அழகான வடிவமான தாதியுமல்ல. சாமத்தில் டியூப்லைட் வெளிச்சத்தில் எல்லா பெண்களும் தாதிகள் தான். என் மண்டையிலிருந்து ரத்தம் வடிந்து உறைந்து போயிருந்தது. ஆக என் மண்டைக்கு கட்டுப்போட்டு விடுவாள். அதன்பிறகு அதிகாரி என்னை கூட்டிப்போய் சிறையிலடைப்பார். அவரிடம் கேட்டுப்பார்க்க வேண்டும் நான். என்னை கற்பழிப்பு வழக்கிலா உள்ளே தள்ளுகிறீர்கள் சார்? என்று. ஆமாம் என்று அவர் சொன்னாரெனில் அந்த பதினைந்தில் ஒன்று சேர்த்திக்கொள்ளச் சொல்லிவிட்டு இந்த தாதியையும் மருத்துவமனை படுக்கையில் கிடத்தி கிண்டிவிட வேண்டும். ஒன்னுக்கும் ஒரே தண்டனை தான்.. ஒம்போதுக்கும் ஒரே தண்டனை தான்.

தாதி என்னை அங்கிருந்த அறைக்குள் கூட்டிப்போய் ஒரு நாற்காலியில் அமரவைத்து எனக்கு வைத்தியம் பார்த்தாள். பார்த்து முடித்ததும் அங்கிருந்த வாஸ்பேசினில் கையை கழுவினாள். நான் என் பேண்டை தளர்த்தி கொஞ்சம் கீழிறக்கிவிட்டு நாற்காலியில் சைடாக அமர்ந்தேன். கையை கழுவிவிட்டு திரும்பியவள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். ‘ஊசி போடுங்க டாக்டரம்மா!’ என்று என் இடுப்பைப் பார்த்தேன். அவள் சிரித்தாள். ‘நீங்க சிரிச்சா வெண்ணிற ஆடை மூர்த்தி சிரிக்காப்ல இருக்குங்க’ என்றேன். ‘ஊசியெல்லாம் வேண்டியதில்லே.!’ என்றவள் என்னை அங்கேயே விட்டுவிட்டு அறைக்கதவைச் சாத்திவிட்டு போய்விட்டாள். பெயரைக் கேட்டிருக்கலாமென நினைத்தேன். இன்னொரு விசுக்கா இதே மருத்துவமனைக்கு நான் வந்தால் இவள் பெயரைச் சொல்லி.. ’இந்த மருத்துவமனையில் நான் கற்பழித்த டேஸ் எனக்கு வைத்தியம் பார்த்தவள். என் குடும்ப டாக்டர்!’ என்று சொல்லலாம்.

அறைக்குள் தலையில் கழன்று விழுவேன் என்பது போல ஒரு மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. எழுந்துபோய் ஒரு சிரிஞ் எடுத்து மருந்துக்குப்பியை உடைத்து ஒரு இஞ்சக்சன் போட்டுக்கொள்ளும் ஆசை எழுந்தது. எந்த நோவாக இருந்தாலும் ஒரு ஊசி போட்டு முடித்தால் தான் மனசுக்கு நிம்மதியாய் இருக்கும். ஊசிபோடாத ஒரு டாக்டரையோ நர்சையோ நான் மருந்துக்குக்கூட மதிக்க மாட்டேன். எனக்கான ஆதார் அட்டையை நான் எப்போதோ பசியால் வாடிய சமயத்தில் மென்று தின்று விட்டு பைப்படியில் திருகி தண்ணீர் குடித்துவிட்டேன். கொரனாவுக்கு தடுப்பு ஊசி போடனுமென்றால் ஆதார் அட்டை கொண்டு வரணும் என்றார்கள். வகுத்துக்குள்ளார இருக்கு.. ஸ்கேன் பண்ணி பார்த்துக்கங்கன்னு சொன்னேன். மேலயும் கீழயும் என்னைப் பார்த்தார்கள். காத்தால மூனு மணியில இருந்து வரிசீல நின்னு இப்பத்தான் வந்து சேர்ந்திருக்கேன்.. அட்டை கொணாந்தியா கொட்டெ கொணாந்தியான்னு இப்ப போயி கேக்குறீங்களே, இதெல்லாம் நாயமே இல்லீன்னேன்! அந்தச் சம்பவம் எந்த ஊர்ல நடந்துச்சுன்னு தான் ஞாவகத்துல இல்ல. அப்புறம் அவிங்கெல்லாம் எனக்கு ஊசி போட்டாங்களான்னும் தெரியில.

அதிகாரி ஒருவேளை லத்தியெடுத்துட்டு வந்து ரெண்டு சாத்து சாத்தி என் சொத்தையெல்லாம் அபகரிச்சிடுவாரோன்ற பயத்துல நடுக்கமா உட்கார்ந்திருந்தேன். நாற்காலியே ஆடுது கிடுக்கிடுன்னு. விசாரணையை ஒருவேளை ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போய் அவரு வெச்சிக்கிட்டாருன்னா தேவலை தான். இங்க வெச்சு சாத்தினாருன்னா லத்தியை பிடுங்கிக்குவேன் நானு. ‘இங்க பாருங்க சார்! ஐ ஆம் எஜுகேட்டட் ஃபெலோ. ஒரு மருத்துவமனையில் வச்சி சாத்துனீங்கன்னா என் படிப்புக்கே பங்கம் வந்துடும். அழகழகான தாதிங்கெல்லாம் பொறவுக்கு சிரிப்பாங்க! பொண்ணுங்க என்னைப்பார்த்து சிரிச்சாங்கன்னா எனக்கு தற்கொலை பண்ணிக்கலாம்னு தான் யோசனை வரும். ஆப்ரேசன் பண்ண வச்சிருக்கிற கத்திரியையோ, கத்தியையோ எடுத்து கழுத்துல குத்தீட்டு செத்துருவேன்! நானெல்லாம் கவரிமான் சாதி. ஒரு முடி போனாக்கூட செத்துவெச்சிருவேன் சார்!’ அப்படின்னு சொல்லிடனும்.

கொஞ்சம் நேரத்துல அந்த தாதி ஒரு கட்டைப்பையோட நானிருந்த அறைக்குள்ளார வந்தா. திடீருன்னு அவகிட்ட செண்ட்டு நாத்தம் அடிச்சுது. எங்கியோ போயி செண்ட்டு பாட்டிலைத் திருடி பிஸ் பிஸ்சுனு அடிச்சுட்டு வந்திருப்பாளாட்ட இருக்குது. இல்லீன்னா கட்டைப்பைக்குள்ளார செண்ட் பாட்டில்களை வெச்சிருக்கணும். இவ இடைப்பட்ட நேரத்துல நோயாளிங்க கிட்ட செண்ட் போடுற அருமை பெருமைகளைச் சொல்லி சைடா பாட்டில் வித்து பிழைக்கிறாள்னு நினைக்கிறேன். அப்பிடிக்கீது என்கிட்ட பாட்டில் வேணுமான்னு கேட்டாள்னா ஓல்டு மங்க் ஒரு கோட்டர் வேணா குடுன்னு சொல்லணும். எப்பிடியும் வெச்சிருப்பா இவ குடிக்கிறக்காச்சிம். ஒரு கட்டிங் போதும்னு சொல்லி குடிச்சுட்டு அப்புறம் கற்பழிக்கிற வேலையில நான் இறங்கிக்கலாம். 

ஆனா அவ கட்டைப்பைக்குள்ளார இருந்து எனக்கு பேண்ட் சர்ட் எடுத்துக்குடுத்தா! ‘அதா, பாத்ரூம்ல போயி நீங்க முகம் கை கால் கழுவீட்டு வந்து இந்த துணியை போட்டுக்கங்க!’ அப்பிடின்னு சொல்லிட்டு அவ பாட்டுக்கு வெளிய போயிட்டா மறுக்காவும். எனக்கெதுக்கு துணி மணி குடுக்குறாங்க? நல்லவேளை பச்சைக்கலர்ல இல்ல. பச்சைக்கலர் துணியின்னா மயிருன்னாக்கூட போடமாட்டேன் நானு. பாத்ரூமுக்குள்ள இருந்த பைப்பை திருகினேன். வெசையாவே தண்ணி வந்துச்சு. என்னோட சட்டை, பேண்ட்டை அவுத்து ஓரமாப் போட்டுட்டு ரெண்டு கையிலயும் தண்ணியை ஏந்தி ஏந்தி மூஞ்சி, ஒடம்பு, கைகாலுன்னு ஊத்தி தேய்ச்சிக்கிட்டேன். என்ன லாட்ஜ் நடத்துறாங்களோ! ஒரு டிசிப்ளின் இல்ல. ஒரு ஹமாம் சோப்பாச்சிம் உள்ளாங்கை சைசுல வெச்சிருந்தாங்கன்னா நல்லா சோப்பு போட்டு குளிச்சிருக்கலாம். கேனையனுக லாட்ஜ் நடத்துனா இப்பிடித்தான் ஒரு போசி கூட வச்சிருக்க மாட்டானுங்க! ரூம்ல போனு வச்சிருக்கானுங்களான்னு தெரியில. அஞ்சாம் நெம்பரை அழுத்தி ரூம்பாயை கூப்பிட்டு ஓல்டு மங்க் ஒரு பாட்டலும் சைடு டிஸ்ஸும் வாங்கிட்டு வரச் சொல்லணும். ஓல்டு மங்க் குடிச்சு ஒம்போது வருசத்துக்கிட்ட ஆயிப்போச்சாட்ட இருக்குது. 

எம்பட பழைய துணியை தூக்கீட்டு வந்து காலியாக்கிடந்த கட்டெப்பைக்குள்ள திணிச்சேன். அப்புறம் தாதி வெச்சுட்டு போன பேண்ட் சர்ட்டை எடுத்து போட்டுக்கிட்டேன். நல்லவேளை நான் பேண்ட் போடுறப்ப தாதி ரூமுக்குள்ளார வந்திருந்தாள்னா நெதானமில்லாம அவசரமா கற்பழிச்சிருப்பேன். இந்தப்பேண்ட்டும் சட்டையும் எவனோ லாட்ஜுல தொவைக்கிறதுக்கு சங்கடப்பட்டுட்டு அவுத்து வீசீட்டு போயிருப்பானாட்ட இருக்குது. அதை தாதி எடுத்துட்டு போயி வீட்டுல வெச்சு தொவைச்சு காயப்போட்டுட்டு அயர்ன் பண்ணி இங்க கொண்டாந்து வச்சிருக்கா. இவ காதலனுக்கு பெர்த்டே கிப்ட்டா குடுத்திருந்தாள்னா எனக்கு இப்ப துணி போச்சு. நல்லவேளை.

சீப்பு ஒன்னிருந்தா என்னோட தலைமுடியையும், தாடியையும் சீவி அழகு பண்ணியிருக்கலாம். இந்த ரூம்ல ஒன்னுமில்ல. ஒரு கண்ணாடி கூட இல்ல. என்ன லாட்ஜ் நடத்துறானுங்களோ கேனையனுங்க! அப்புறம் நானு தாதி வரட்டும்னு நாற்காலியில உக்காந்துட்டேன். சித்தகூரியத்துல மறுக்காவும் வந்தா. என்னெப்பார்த்து ஒரு மாதிரியா சிரிச்சா! ஒருவேளை இவ என்னை கற்பழிச்சுருவாளோன்னு பயம் ஆயிட்டுது எனக்கு. புதுசா பேண்ட் சர்ட்டெல்லாம் குடுத்துருக்கா.. கற்பழிக்கிறப்ப டர் டர்னு கிழிச்சிப்பிடுவாளே! அப்படி முயற்சி பண்ணினாள்னா கால்லயே உழுந்துறோனும். சாமி சாமியா இருப்பே அம்மிணி.. நியே குடுத்து நீயே கிழிச்சுப்போடாதேயாயா..ன்னு சொல்லி அழுவணும். கற்பழிக்க முடுவு பண்ணிட்டாங்கன்னா பாவ புண்ணியம் பாக்க மாட்டாங்களாமா லேடீஸ் எல்லோரும்.. என்ன கத்து கத்தினாலும் உடமாட்டாங்களாமா! கடவுளே.. இந்த தாதிக்கு நல்லபுத்தி குடு கடவுளே! இப்பத்தான் ரோட்டுல மண்டையெ ஒடச்சு, மிதிச்சு அனுப்பியுட்டானுங்க.. இவ எங்காச்சிம் கேனவாக்குல செவுத்துல தள்ளி இழுத்து அந்தச் செவுத்துக்கு என்னைத்தள்ளி.. மறுக்காவும் படாத எடத்துல பயங்கரமா அடிபட்டுருச்சுன்னா? என்னால மறுக்கா எப்பிடி கற்பு போன பொறவு ரோட்டுல மக்க மனுசங்களை நேரா பார்த்து நடக்க முடியும்? மானம் போன பின்னாடி உசுரை எப்பிடி வெச்சு வாழுறது? ரோட்டுல என்னை யாரு வேணாலும் அடிச்சு வச்சுட்டுப் போறாங்க! அதுல எல்லாம் மானம் போறக்கு சந்து கூட கெடையாது. ஆனா கற்பு? 

“சொக்கா போட்டுட்டு மைனர் மாதிரி இருக்கீங்க கவிநாயகம்!”

“ஆமாங்க டாக்டர். உங்க கிட்ட சீப்பு இருக்குமா? இல்லீன்னா மைகோதி வச்சிருப்பீங்களே!”

“மைகோதி?.. காலேஜ்ல படிச்சப்ப உங்ககூட லூட்டியா இருக்கும் கவிநாயகம். அதே கிண்டலும் கேலியும் இருக்கும் போல இன்னமும் உங்ககிட்ட!”

குழப்பமாயிருந்தது. அப்ப என் பேரு கவிநாயகம் தானா? எனக்கு ஒரே பேருதான் போல. இந்த தாதி பேரு என்னவா இருக்கும்? நாம கேட்டா நல்லாவா இருக்கும்? அப்ப அந்த அதிகாரி என்னை ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போய் விசாரணை செய்யலியா? ஊருக்குள்ள திருட வந்தவன்னு தானே என்னைப்போட்டு மிதிச்சாங்க அவிங்க! நான் அப்ப எதையுமே திருடலியா? திருடாமயே அப்புறம் என்ன மயிருக்கு என்னைப்போட்டு மிதிச்சு மண்டையை ஒடச்சாங்க? 

‘வாங்க வெளிய பேக்கரி ஒன்னு இருக்கு. போய் டீ சாப்பிட்டு வருவோம்’ என்றாள் தாதி. எனக்கும் டீ இந்த நேரத்தில் அவசியமாக இருந்தது. நான் போய் கட்டைப்பையை எடுக்க குனிந்த போது, ‘அது அங்கயே கெடக்கட்டும் கவிநாயகம்!’ என்றாள். சரி என்று அவள் பின்னால் நடந்தேன். இது எந்த ஊர் என்று இவளிடம் கேட்கலாமா? என்று நினைத்தேன். இவள் ஒருவேளை என்னை முன்பே எப்போவாவது கற்பழித்திருப்பாளோ! என்ற சந்தேகம் வந்தது. அப்படியிருந்திருந்தால் நான் தற்கொலை செய்திருப்பேனே. வாய்ப்பில்லை. அவள் பொறவுக்கே நான் மருத்துவமனையை விட்டு வெளிவந்தேன். 

புங்கை மரத்தடியில் கிடந்த நாய்களெல்லாம் அவளைக் கண்டு வாலை ஆட்டிக்கொண்டு எழுந்து மூளிமுறித்து பின்பாக அதே இடத்தில் கால் நீட்டிக்கொண்டன. சாலையைக்கடந்து எதிர்ப்புறமிருந்த பேக்கரிக்குள் நாங்கள் சென்றோம். ஒரு சேரில் அமர்ந்த நான் அவளிடம், அவளைத் தெரியாதவன் போல நடந்துகொள்ளக்கூடாதென நினைத்தேன். காலேஜ் படிப்பெல்லாம் படித்திருக்கிறாள். வட்ட வடிவ பன்களை இரண்டு தட்டில் கொண்டு வந்து ஒரு மலையாளத்தான் வைத்துப்போனான் டேபிளில். நல்லபசி தான் எனக்கு. நாகரீகம் கருதி அமைதி காத்தேன். அவள் பேக்கரிக்கடைக்காரனோடு நின்றபடி கதையடித்துக்கொண்டு இருந்தாள். நான் எழுந்து போய் அவனிடம் சீப்பு வேணும் என்றேன். அவன் பச்சை வர்ணத்தில் சின்ன சீப்பு எடுத்து நீட்டினான். யாருகிட்ட? வேற கலர்ல குடு! என்றேன். நீல வர்ணத்தில் அவன் கொடுக்க வாங்கிக்கொண்டு வந்ததும் என் தாடியை முதலில் சீவினேன். அடுத்து தலைமுடியை மேலே பார்த்தவாறு சீவி அழுத்தினேன். சீப்பை பேண்ட் பாக்கெட்டில் தள்ளிக்கொண்டு அவளைக் கூப்பிட எத்தனித்தேன். அவள் பெயர் எனக்கு தெரியவில்லையே!

டீ குடிக்கறதுக்கு வந்துட்டு மலையாளத்தான் கூட இவளுக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்குது? அவனென்னமோ மோகன்லால் கணக்கா ஒடம்பை குலுக்கி குலுக்கி பேசுறான்?  ஒருவழியா அவ பேச்சை நிப்பாட்டிட்டு வந்து எனக்கு எதிர்க்கே உட்கார்ந்தா. ’பன்னு சாப்பிடு கவிநாயகம்! அப்புறம் எப்டி போயிட்டிருக்குது வாழ்க்கை? பஸ் ஸ்டேண்டு கிட்ட தகராறுல உன்னை எல்லோரும் அடிச்சு வச்சுட்டாங்கன்னு இன்ஸ்பெக்டர் சொன்னாரு. இன்னமும் நீ இந்த அடிதடி பஞ்சாயத்தையெல்லாம் விடலியா கவிநாயகம்? நாம பார்த்து பத்து வருசமாச்சு தெரியுமா! கோபில நாம காலேஜ் படிச்சப்ப அப்படி சந்தோசமா இருந்தோம். ஆமா நீயி மஞ்சுளான்னு ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு இருந்தியே.. அவ அண்ணன் கூட ஒரு நாளு காலேஜ் வாசல்ல வச்சு உனக்கு பொது மாத்து போட்டானே.. ஞாபகம் இருக்கா? அவளை நான் மூனு வருசம் மிந்தி பெருந்துறையில பார்த்தேன். குண்டடிச்சுப்போயிட்டா. கல்யாணமாயி ரெண்டு பசங்களாம் கவிநாயகம்!’

என்ன சொல்கிறாள் இந்த தாதி? என்ன பதில் சொல்ல? கோபியில காலேஜ் படிச்சனா? மஞ்சுளா யாரு? ஆனா மனசுக்குள்ள மஞ்சுளான்னா பட்டாம்பூச்சி பறக்குறாப்ல இருக்குதே! இருக்கட்டும். அவளை கற்பழிச்சனான்னு தெரியிலியே.. அப்படி கற்பழிச்சிருந்தா அவ ரெண்டு பையன்களை பெத்திருக்க மாட்டாளே.. ம். யோசித்தபடியே நான் பன்னை மென்றேன். விக்கல் வந்தது. ‘மெதுவா தின்னு கவிநாயகம்!’ என்றவள் எனக்காக ஜக்கிலிருந்து டம்ளரில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தாள். நல்லபிள்ளை. வாங்கியதும் மடக் மடக்கென குடித்து வைத்தேன். டீ வந்தது. ஒரு டீ டம்ளரை எடுத்து அவள் டம்ளரில் முட்ட வைத்து சியர்ஸ் சொன்னேன். அவள் என்னை உற்றுப்பார்த்தாள். பார்த்துட்டுப் போச்சாறா!

’உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்ளா டாக்டர்?”

“ஆயிடுச்சு கவிநாயகம். அவரு திருப்பூர்ல கம்பெனி வச்சிருக்காரு. எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க. நான் தினமும் ஊத்துக்குளி ஆஸ்பிடலுக்கு வந்துட்டு போறேன். நைட் ஷிப்ட்டு பகல் ஷிப்டுன்னு மாறி மாறி.” என்றாள்.

“எனக்கு ஊத்துக்குளியில சாந்தாமணின்னு ஒரு ஃப்ரண்டு இருந்தா அப்போ!” என்றேன்.

“நான் தாண்டா கவிநாயகம் அவொ!” என்றாள். நான் அதிர்ந்தேன்.


 

எழுதியவர்

வா.மு.கோமு
வா.மு.கோமு
வா. மு. கோமு என்ற பெயரில் எழுதி வரும் வா.மு.கோமகன், ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்தஎழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர் என்றும், மனதில் நினைத்ததை எழுத்தில் சொல்லத் தயங்காத எழுத்தாளர் எனவும் பெயர் பெற்றவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது. 1991- ஆம் ஆண்டு முதல் ‘நடுகல்’ எனும் இலக்கியச் சிற்றிதழை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இவரது நூல்கள் :

அப்பச்சி வழி - நினைவோடை குறிப்பு,
அருக்காணிக்கு சொந்த ஊர் விஜயமங்கலம் - சிறுகதைகள் ,
அழுவாச்சி வருதுங்சாமி - சிறுகதைத் தொகுப்பு,
எட்றா வண்டிய -நாவல் ,
என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் - சிறுகதைகள்,
கள்ளி - நாவல் ,
கூப்பிடுவது எமனாக இருக்கலாம்,
சகுந்தலா வந்தாள் - நாவல்,
சயனம்- நாவல் ,
சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்- நாவல் ,
சேகுவேரா வந்திருந்தார் - சிறுகதைகள்,
கூப்பிடுவது எமனாக இருக்கலாம் ,
பக்கத்து வீட்டு குதிரை- சிறுகதைகள் ,
பிலோமி டீச்சர் - சிறுகதைகள் ,
மங்கலத்து தேவதைகள்- நாவல் ,
மண்பூதம் - சிறுகதைகள்,
மரப்பல்லி - நாவல் ,
நாயுருவி- நாவல்,
தவளைகள் குதிக்கும் வயிறு - சிறுகதைகள்,
தானாவதி - நாவல்,
ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி- நாவல் ,
வேற்றுக்கிரகவாசி - சிறுகதைகள்,
ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம் ,
மாஸ்டர், ஒரு சாதா டீ - சிறுகதைகள்,
லவ் யு டி - சிறுகதைகள்
காயாவனம்: சிறார் குறுநாவல்,
மாயத் தொப்பி - சிறார் கதைகள்.
Subscribe
Notify of
guest

4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
ஜெகநாதன் அன்பு
ஜெகநாதன் அன்பு
1 year ago

கோமுவிடம் இதைவிடவும் சிறப்பான கதை எதிர்பார்க்கிறோம்

வா.மு.கோமு
வா.மு.கோமு
1 year ago

அடுத்தமுறை சரிப்படுத்திடுவோம்.

Rasa sakthisivabalan
Rasa sakthisivabalan
1 year ago

மிகச்சிறப்பு sir ,…கடைசியில் என் கனவுக்கன்னி சாந்தமனியிடம் சரணடைந்துவிட்டீர்கள் இதைவிட வேறென்ன வேண்டும்

வா.மு.கோமு
வா.மு.கோமு
1 year ago

ஊத்துக்குளின்னாவே அவிங்க வந்துட்டாத்தான் நிம்மதிங்க!

You cannot copy content of this page
4
0
Would love your thoughts, please comment.x
()
x