25 July 2024

லகின் மிகப்பெரிய வனங்களுக்குள்ளும் கூட மனிதன் உள்நுழைந்து தன் தேவைகளை வனங்களிலிருந்து ஏதேனும் வழிகளில் பெற்றுக்கொள்கிறான். வானுயர்ந்து நிற்கும் மரங்களை அடியோடு சாய்த்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருகிறான். வேட்டை என்று துப்பாக்கியும் கையுமாக வனங்களில் சுற்றுகிறான்.

அப்படியான மிகப்பெரிய வனம் தான் மயிலிறகு வனம். மயிலிறகு வனத்தில் வாழாத விலங்கினங்களே இல்லையென்று சொல்லலாம். ஊர்வன, பறப்பன, நடப்பன என அனைத்து உயிர்களின் காப்பிடமாக மயிலிறகு வனமிருந்தது.

வனம் என்றால் அதற்கு ஒரு ராஜா இருக்கத்தானே செய்வார். சிங்கம்தான் மயிலிறகு வனத்தின் ராஜா. ராஜா வனத்தில் பாறைக்கூட்டங்கள் நிரம்பிய பகுதியில் தன் சுற்றத்தாரோடு ஒரு குகையில் வசிக்கிறார். தினமும் மாலை நேரத்தில் மயிலிறகு வனத்தின் ஏனைய விலங்கினங்களை அவர் சந்திப்பது வழக்கம்.

பலபிரச்சனைகளைத் தன் மதியால் வென்று காட்டியவர் சிங்கராஜா. பலமுறை வேட்டைக்கு என்று துப்பாக்கியுடன் வந்து, மான்களை வேட்டையாடிய மனிதர்களை ராஜா தன் சுற்றத்தார்களோடு சேர்ந்து வனத்தை விட்டே விரட்டியடித்திருக்கிறார்.

மயிலிறகு வனத்தில் விலங்குகளின் ஒற்றுமையைக் கண்ட வேட்டைக்காரர்கள் வனத்தினுள் நுழைந்து வேட்டையாடுவதையே விட்டுவிட்டனர். வேட்டைக்காரர்கள் மயிலிறகு வனத்தில் நுழைந்து இப்போது வருடக்கணக்கிற்கும் மேலாயிற்று.

மயிலிறகு வனத்தில் ஏனைய விலங்குகள் பலவும் பலவற்றோடு நட்பு பாராட்டி வந்தன. அவற்றுள் சண்டைகளோ சச்சரவுகளோ எப்போதும் பெரிதாய் வருவதில்லை. மிகப்பெரிய சச்சரவு என்று வந்தால் சிங்க ராஜாவிடம் அந்தப்பிரச்சனையைக் கொண்டுபோய்விடுவார்கள். சிங்கராஜா தனது மந்திரியான குறுவால் நரியாரின் ஆலோசனையைக்கேட்டு அதனையே பிரச்சனையின் முடிவாகவும் சொல்லிவிடுவார்.

இப்படியிருக்கையில் மயிலிறகு வனத்தில் கரடியும் மல்பேரி ஆடொன்றும் ரொம்ப காலமாக நண்பர்களாக இருந்தன. கரடி தங்கியிருக்கும் வசிப்பிடமான குகையில் ஏராளமான இடவசதி இருந்தமையால் மல்பேரி ஆடும் அந்தக்குகையிலேயே தங்கியிருந்தது.

இருவருக்குமான நட்பு எப்போது ஆரம்பித்தது என்று இருவருக்குமே தெரியாது. அன்று விடிந்த பொழுதிலிருந்தே சோம்பேறித்தனமாய் இருப்பதாய் கரடி சொல்லிற்கு. மல்பேரி ஆடு தனக்கு அப்படியொன்றுமில்லை என்றும், எப்போதும் போலத்தான் சுறுசுறுப்பாய் இருக்கிறேன் என்று சொல்லிற்று. ஒரு பேச்சுக்காவது தன்னை திருப்திப்படுத்தும் வகையில், ’எனக்கும் அப்படித்தான் இருக்கிறது!’ என்று மல்பேரி ஆடு சொல்லியிருக்க வேண்டுமெனக் கரடி நினைத்தது.

“சரி நாம் விடிந்தபிறகும் இங்கே குகையில் படுத்திருப்பது சரியல்ல கரடி நண்பா! காலாற நாம் வெளியில் கிளம்புவோம். உன் சோம்பேறித்தனம் கூட நாம் வெளியில் செல்வதால் உன்னைவிட்டு நீங்கிவிடும் வாய்ப்பு இருக்குமல்லவா?” என்றது மல்பேரி ஆடு.

“அதுவும் சரிதான்! இங்கேயே கிடந்தால் இன்னும் அதிகமாகச் சோம்பேறித்தனம் என்னைப் பிடித்துக்கொள்ளும்” என்ற கரடி படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்து நின்று உடலை இப்படியும் அப்படியுமாக வளைத்து ஒரு உதறு உதறியது. பின்பாக தன்கழுத்தை இப்படியும் அப்படியுமாக ஆட்டி நெட்டை வரவழைத்தது.

“இப்போ கொஞ்சம் பரவாயில்லையா?”

“அப்படித்தான் நினைக்கிறேன். சரி நாம் கிளம்புவோம்” என்ற கரடி குகை வாயிலுக்கு வந்து ஒருநிமிடம் சுற்றிலும் பார்த்துவிட்டு, அப்படியே வனத்தினுள் சென்றது. காலைப்பனி சூரியனின் வெப்பத்தால் விலகிக்கொண்டிருந்தது அந்தச்சமயத்தில். உயர்ந்து நின்றிருந்த மரங்களிலிருந்து பறவைகளின் கீச்சொலிகள் கேட்ட படியிருந்தன.

கரடியும் மல்பேரி ஆடும் பலவிசயங்களைப் பேசிக்கொண்டே வனத்தினுளிருந்து இறங்கிக்கொண்டிருந்தன. கரடிக்குப் பசியெடுக்கத்துவங்கியிருந்தது. மல்பேரி ஆட்டுக்கும்கூட பசிதான் என்றாலும் நண்பனோடு பேசிக்கொண்டே நடக்கப் பசியை மறந்திருந்தது. போக இன்று என்னவோ பாதையை மாற்றி தென்திசையில் அல்லவா நண்பன் இறங்குகிறான்! ஒருவேளை அங்குப் பசியாற புதியவகை உணவுகூட இருக்கலாமே! என்று நினைத்துக்கொண்டே வந்தது. உணவைப்பற்றி நினைத்ததுமே அதற்கும் பசியாகிவிட்டது.

கொஞ்சம் தூரம் சென்ற கரடி திடீரென ஒரு பெரிய மரத்தின் அடிப்பாகத்தில் சீக்கிரமாய் மறைந்து நின்று முகத்தை மட்டும் நீட்டி தூரத்தே பார்த்தது. என்னவோ ஏதோ என்று மல்பேரி ஆடும் நண்பனின் பின்னால் மறைந்து கொண்டு குசுகுசுப்பாய் அதன் காதில், ‘என்ன நண்பா?’ என்றது.

“தூரத்தில் பார்.. மனித மிருகம் ஒன்று வந்துகொண்டிருக்கிறது!” என்றது கரடி. மல்பேரி ஆடு அப்படியொரு விலங்கினத்தைப்பற்றி காதால் கேட்டதுமில்லை கண்களால் பார்த்ததுமில்லையே! நிதானமாக மரத்தின் இந்தப்புறமாகத் தலையை நீட்டி தூரத்தே உன்னிப்பாய் பார்த்தது. நடுவயது மனித மிருகம் ஒன்று செவ்வாழைத்தாரை முதுகில் சுமந்தவண்ணம் வந்துகொண்டிருப்பதை அது கண்டது. அதற்கு ஆச்சரியமாய் இருந்தது. இரண்டு கால்களில் அல்லவா நடந்து வருகிறது அது. நான்கு கால்களில் அல்லவா நடக்கவேண்டும்! கரடி நண்பன்கூட நான்கு கால்களில் தானே நடக்கிறான்!

“அவன் முதுகில் இருக்கும் செவ்வாழை பழத்தைக்கண்டதும் எனக்கு நாவில் எச்சில் ஊறுகிறது நண்பா! சிறுகுடலைப் பெருங்குடல் தின்றுவிடும்போல இருக்கிறது. நீ எனக்கொரு உதவி செய்வாயா நண்பா?” என்று கரடியார் மல்பேரி ஆட்டிடம் கேட்டார்.

“என்னவென்று சொல் கரடி நண்பா!”

“இந்த இடம் நோக்கித்தான் அந்த மனிதமிருகம் வந்துகொண்டிருக்கிறது. அது வரும் பாதையில் நீ உடல்நிலை சரியில்லாதது போல கீழே படுத்துக்கொள். வயிறு வலிப்பது போல படுத்துக்கொண்டு நடி”

“அது ஏன் நான் வயிற்றுவலி இல்லாமலேயே கீழே படுத்து நடிக்க வேண்டும்? எனக்கு இரண்டு காலில் நடந்துவரும் அந்த மனித மிருகத்தைப்பார்த்தால் பயமாக இருக்கிறது”

“பயப்படாதே நண்பா! நமக்கு செவ்வாழைப்பழங்கள் நிரம்பிய தார் தேவையல்லவா.. நாம் இருவரும் அதை பங்கிட்டு சாப்பிடலாம். நான் சொல்வதைக்கேள்.. தாமதப்படுத்தவே கூடாது. நீ படுத்துக்கொண்டு நடிக்கத்துவங்கியதும் அந்த மனித மிருகம் தன் முதுகில் தூக்கிவரும் செவ்வாழைத்தாரை கீழே இறக்கி வைத்துவிட்டு உனக்கு என்னவானது என்று பார்க்க வரும். அருகில் அந்த மிருகம் வந்ததும் நீ எழுந்து ஓடத்துவங்கு. எப்போதும்போல மின்னலாய் ஓடாதே.. நிதானமாய் ஓடு. ஆனால் அதன் கைகளுக்குச் சிக்கிவிடாதே! அந்தச் சமயத்தில் நான் வாழைத்தாரை தூக்கிக்கொண்டு நம் குகைக்குச் செல்லும் பாதையில் செல்கிறேன். நீ அவனுக்குப் போக்கு காட்டிவிட்டு விரைவாய் வந்துவிடு. நாம் ஆளுக்குப் பாதிப் பாதி பழத்தை ஏதேனும் மரத்தடி நிழலில் அமர்ந்து சாப்பிடுவோம்! இதுதான் நம் காலை உணவுக்கான திட்டம்! போய் சீக்கிரமாக படு! அந்த மனித மிருகம் நெருங்கிவிட்டது!” என்று மல்பேரி ஆட்டை தள்ளாத குறையாய் நகர்த்திவிட்டது கரடி.

மல்பேரி ஆடும் திட்டத்தின் முதல்ப்பகுதியை செயல்படுத்த மனித மிருகம் வந்துகொண்டிருந்த பாதையில் படுத்து உடலை வில் போல வளைத்து நடிக்கத்துவங்கியது. ஒத்தையடிப்பாதையில் வந்துகொண்டிருந்த மனித மிருகம் ஆட்டைப்பார்த்ததும் நின்று விட்டது. அதன் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது.

பழம் என்ன பழம்? ஒரு முழு ஆடே இருக்கிறதே.. என்று ஆசைகொண்ட மனித மிருகம் வாழைத்தாரை இறக்கி வைத்துவிட்டு ஆட்டை நோக்கி விரைந்து வந்தது. மல்பேரி ஆடு தன் கண்ணை மனித மிருகத்தின்மீது தான் வைத்திருந்தது. அது அருகில் வரவும் திடீரென எழுந்து மிரண்டது போலப் பாதை மாற்றி நிதானமாய் ஓட்டமெடுத்தது.

மனித மிருகத்திற்கு ஒருநிமிடம் குழப்பமாய் இருந்தாலும் ’விடுவேனா உன்னை?’ என்று ஆட்டைத் துரத்த ஆரம்பித்தது. ஆடும் புதர் கண்ட பக்கமெல்லாம் வளைந்து நெளிந்து வட்டமடித்து ஓடியது. மனித மிருகமும் சளைக்காமல் ஆட்டை துரத்திற்று.

ஒருகட்டத்தில் மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்க இடுப்பைப்பிடித்துக்கொண்டு மனித மிருகம் சங்கிப்போய் ‘போய்த்தொலை ஆடே!’ என்று சொல்லிவிட்டு வந்த பாதையிலேயே திரும்பி வாழைத்தாரை இறக்கிவைத்த இடத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கே வாழைத்தாரும் இல்லை என்று கண்டுகொண்டதும் கோபமாய் கத்திக்கொண்டே மனிதமிருகம் சென்றது.

மல்பேரி ஆடு குகை செல்லும் பாதையில் கரடி நண்பனைக் கூப்பிட்டுக்கொண்டே சென்றது. ‘கரடி நண்பனே! நீ எங்கே இருக்கிறாய்? இதோ நான் வந்து கொண்டிருக்கிறேன்” என்று குரலிட்டபடி கரடி நண்பனை வனத்தினுள் தேடித்தேடிச் சலித்தது. எங்கே தான் போயிருப்பான் நண்பன்? ஒருவேளை குகைக்கே சென்றிருப்பானோ? என்றும் நினைத்தது. சேச்சே! குகைக்கு எப்போதுமே மாலை நேரத்தில் தானே இருவருமே செல்வோம். தேடிச்சலித்த மல்பேரி ஆடு ஒருகட்டத்தில் பசியால் சோர்ந்துபோய் கண்களில் புகைமூட்டம் சூழ ஒரு மரத்தினடியில் அமர்ந்துவிட்டது. தாகமாயிருக்கத் தண்ணீரேனும் குடித்தால் நல்லது என்றும் நினைத்தது ஆடு. அது அமர்ந்திருந்த மரத்தின் எதிர்மரத்தினடியில் ஏகப்பட்ட செவ்வாழைப்பழத்தின் தொப்பைகள் கிடக்க அப்போது கூட மரத்தின் மேலிருந்து பழத்தொப்பை பொத்தென வந்து விழுந்தது.

ஆடு அந்த மரத்தின்மீது உற்றுப்பார்த்தது. மேல் கிளையில் அமர்ந்து கால்களைத் தொங்கப்போட்டவாறு கரடி அமர்ந்திருந்தது. அதன் கையில் பழங்களில்லாத தார் மட்டுமே இருந்தது. அதையும் தூரமாய் மேலிருந்தே வீசிற்று.

பெருத்த ஏப்பம் ஒன்றை படீரென விட்ட கரடி, ‘வயிறுமுட்ட சாப்டுட்டேன்! அடேஞ்சாமி.. என்னா டேஸ்ட்டு பழம்.. சும்மா அப்பிடியே தேன் சாப்பிட்டா மாதிரியே இருந்துச்சே! இன்னொரு தார் இருந்திருந்தால் கூட தின்று முடித்திருப்பேன்.’ என்று சொல்லிவிட்டு தலையை மரத்திலேயே சாய்த்தது.

“கரடி நண்பா, என்ன இப்படிச் செய்துவிட்டாய்? இது நண்பனாகிய எனக்கு நீ செய்த துரோகமல்லவா!” என்று கேட்டது மல்பேரி ஆடு.

“பசி நண்பா பசி. பசி வந்தால் பத்தும் பறந்து போகும்னு சொலவடை இருக்கு தெரியுமா? உனக்குத்தரலாம்னு நினைச்சேன். ஆனா பசி அடங்கல எனக்கு. நீ ஆடு தானே.. கீழே பழத்தொப்பைகளை வீசியிருக்கிறேன் பார் உனக்கு.. சாப்பிடு. சொன்னது மாதிரி ஆளுக்குப் பாதிப் பாதி” என்றது மரத்திலிருந்த கரடி. ஆடு உள்ளுக்குள் குமைந்தது.

பசியால் வாடிய அது தொப்பைகளை மென்று விழுங்க ஆரம்பித்தது. பழத்தின் தொப்பை மெல்லுவதற்கு வாகாயும், சுவையாகவும் இருந்தது ஆட்டுக்கு. இருந்தாலும் இரண்டு பழங்களாவது சாப்பிட்டுப் பார்த்திருக்கலாம். நண்பன் ஏமாற்றி விட்டானே! கரடி மரத்தில் சாய்ந்தபடியே தூங்க ஆரம்பித்துவிட்டது. சின்னதாய் குறட்டைச்சத்தம் ஆட்டுக்குக் கேட்டது.

அந்த சமயத்தில் கட்டெருமைக்கூட்டமொன்று திமுதிமுவென அதன்வழியே ஒன்றையொன்று உரசிக்கொண்டும் தள்ளிக்கொண்டும் வேகமாய் மேற்கிலிருந்த்து வந்தன. மல்பேரி ஆடு தூரத்தில் வரும் அவைகளைக்கண்டு மிரண்டு வடக்கே துள்ளி ஓடியது. சற்றுத்தூரம் ஓடிச்சென்ற ஆடு முகத்தைத்திருப்பி பின்னால் என்ன நடக்கிறதென பார்த்தது.

எருமைக்கூட்டம் அப்படியே தெற்கு நோக்கி திமுதிமுவென ஓடின. அப்பாடா தப்பினோம்டா! என்று நிதானமாய் பழத்தொப்பைகள் கிடந்த மரத்தடிக்கே அது வந்து சேர்ந்தது. பார்த்தால் எருமைக்கூட்டத்தின் கால்களில் சிக்கி சின்னாபின்னமாய் பழத்தொப்பைகள் பிரயோசனமில்லாமல் போய்க்கிடந்தன. அடக்கொடுமையே! என்று நினைத்த ஆடு மேற்கு நோக்கி நடக்கத்துவங்கிற்று.

கொஞ்சம் பழத்தொப்பைகள் சாப்பிட்டிருந்ததால் அதற்கு அப்போதைக்குப் பசி அடங்கிப்போயிருந்தது. அப்போது தனித்த எருமையொன்று பின்னங்காலை நொண்டிக்கொண்டு இதனை நோக்கி வந்தது. ஆடு அதனைக்கண்டு தன் பாதையை மாற்றி வனத்தினுள் சென்றது. திடீரென அதன் மனதில் ராஜாவைப்பார்த்து தகவலைச் சொல்லிவிடலாமே என்று தோன்றவே விரைவாய் பாறைக்குகைப்பகுதியை நோக்கி ஓடியது.

சிங்க ராஜாவின் குகை குன்றின் மேல்பகுதியில் இருந்தது. அதனால் ஆடு இங்கிருந்தே ராஜாவைக் கூப்பிட்டது. ‘சிங்க ராஜாவே! நான் மல்பேரி ஆடு வந்திருக்கிறேன்.. உங்களுக்கு ஒரு தகவலை கொண்டுவந்திருக்கிறேன்!’ என்று கத்திற்று. அடுத்த நொடியே ராஜாவின் தலை பாறைக்குகை வாயிலில் தெரிந்தது. அதைத்தொடர்ந்து அதன் சுற்றத்தார்களின் தலையும் மந்திரி குறுவாலாரின் தலையும் தெரிந்தது ஆட்டுக்கு.

“காட்டெருமைக்கூட்டமொன்று இங்கிருந்து தெற்கு நோக்கி இப்போது ஓடியது சிங்கராஜாவே! அதில் பின்னங்காலில் அடிபட்ட எருமையொன்று கூட்டத்தாரோடு கலந்து ஓடமுடியாமல் நிதானமாக இப்போது தான் தனியே சென்று கொண்டிருக்கிறது. உங்களுக்கு அது சிறந்த உணவாக இருக்கும் சிங்கராகாவே! நான் பார்த்துவிட்டு இப்போது ஓட்டமாய் ஓடி வந்து உங்களுக்கு தகவலைச் சொல்கிறேன்! நானொரு புல்தின்னும் ஆடென உங்களுக்குத் தெரியுமென நினைக்கிறேன்!” என்றது.

”நல்ல தகவலை எனக்களித்தாய் ஆட்டுக்குட்டியே! இதோ நாங்கள் புறப்படுகிறோம். நீ எங்களுக்காகக் காத்திரு இங்கேயே நாங்கள் திரும்ப வந்து சேரும்வரை!” என்று சொல்லிய சிங்கராஜா தன் சுற்றத்தாரோடு பாறைக்குன்றிலிருந்து இறங்கி ஓடியது. மந்திரி குறுவால் நரியாரும் தீயாய் ஓடினார் அவர்களின் பின்னால்.

மல்பேரி ஆடு சிங்கராஜாவின் குகை நோக்கி பாறைமீது நிதானமாய் கால்களை வைத்து ஏறிச்சென்றது. குகையினுள் யாரும் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை. எல்லோரும் இரைக்காக சென்றிருந்தார்கள். குகையினுள் வீசும் கவிச்சி வாசம் ஆட்டுக்கு ஒவ்வாமையைக் கொடுத்ததால் குகையை விட்டுத்தள்ளி பாறையொன்றின் நிழலில் அது படுத்துக்கொண்டது.

இரையைத்தேடிச் சென்ற சிங்கராஜாவும் அவரது சுற்றத்தார்களும் பாறைக்குகைக்கு வந்துசேர  மதியத்திற்கும் மேலாகிவிட்டது. அலம்பல் சப்தம் கேட்டுத்தான் மல்பேரி ஆடு கண்விழித்துப்பார்த்து மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றது. சிங்கராஜாவும் அவரது சுற்றத்தார்களும் வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு வந்திருந்தார்கள்.

சிங்கராஜா மகிழ்ச்சியாய் இருந்தார். ஆட்டுக்குப் பரிசு வழங்கும்படி மந்திரி நரியாருக்கு உத்தரவிட்டார். மந்திரி நரியார் குகைக்குள் சென்று மரப்பெட்டுயொன்ற தூக்கிவந்தார். அதனை நீக்கி ஆட்டின் கழுத்தில் சரியாய் தங்கச்செயின் மாட்டினார்.

அடுத்ததாக ஆட்டின் கொம்பில் சின்னதாய் இரண்டு தங்கத்தாலான மணிகளை மாட்டினார். ஆட்டின் கால்களுக்கு வெள்ளியாலான கொலுசுகள் நான்கை அணிவித்தார். ‘காதை விட்டுட்டியே மந்திரியாரே! காதுகுத்தி கடுக்கன் போட்டு விடு!’ என்றார் சிங்கராஜா. ஆட்டுக்கும் அங்கே காதுகுத்து விழாவும் நடந்தேறியது. கடைசியாக மல்பேரி ஆட்டை சிங்க ராஜாவும் அவரது சுற்றத்தார்களும் வழியனுப்பி வைத்தனர்.

மல்பேரி ஆடு பாறைக்குன்றிலிருந்து இறங்குகையில் கால் கொலுசொலியும், கொம்பிலிருந்த மணிகளின் ஒலியும் கேட்க அவ்வளவு அழகாய் இருந்தது. கரடி நண்பனின் குகை நோக்கிக் கிளம்பிய ஆட்டினை இடையில் சந்தித்த விலங்குகள் அனைத்துமே நலம் விசாரித்து மணியைப்பற்றியும், கால்கொலுசு பற்றியும் விசாரித்தன.

ஆடு மகிழ்ச்சியாய் அரசரின் பரிசு இதுவென சொல்லிச்சென்றது. குகைவாயிலில் நின்றிருந்த கரடி ஆட்டு நண்பனைப்பார்த்து பொறாமை கொண்டது. தனக்கும் ராஜாவிடமிருந்து பரிசுகள் வேண்டுமென நினைத்தது. அதற்கான வழியென்ன? என்று மல்பேரி ஆட்டிடமே கேட்டது.

“சிங்கராஜா முன்பாகச் சென்று நான் கொட்டாவி போட்டேன்!” என்றது ஆடு.

“ஐயோ! அவர் முன்னால் யாரும் கொட்டாவியே போடக்கூடாதே.. காதைப்பிடித்துத்தூக்கி மூஞ்சிமீது கும்மாங்குத்து போட்டுவிடுவாரே! நீ பொய் சொல்கிறாய் நண்பா!” என்றது கரடி.

“நண்பனிடம் நான் எப்போதுமே பொய் சொல்லவே மாட்டேன் கரடி நண்பா! நீயும் நானும் என்ன இன்னைக்கி நேத்திலிருந்தா நண்பர்கள்?”

“ஆமாம் ரொம்ப காலமாக நண்பர்கள் தான். நீ ஒருமுறைகூட என்னிடம் பொய் சொன்னதேயில்லை. சரி என்னதான் செய்தாய் சிங்கராஜாவின் முன்னால் சென்று? எனக்கும் கால்களில் வெள்ளிக்கொலுசு இருந்தால் எவ்வளவு அழகாய் இருப்பேன் நான்! என் காதுகளிலும் கடுக்கன் இருந்தால் பார்க்கச் சிறப்பாய் இருப்பேன் அல்லவா!”

“ஆமாம் கரடி நண்பா!”

“சரி சீக்கிரம் சொல். மாலை நேரம் நெருங்குவதற்குள் நான் சிங்கராஜாவைச் சந்தித்து கொலுசுகளையும், காதுக்கடுக்கனையும் மாட்டிக்கொள்கிறேன். உனக்கிருப்பதுபோல் எனக்கும் கொம்புகள் இரண்டு இருந்திருந்தால் அதற்கும் மணிகள் கட்டியிருப்பேனே.. போச்சு!” என்றது.

“அதான் சொல்கிறேனே நண்பா, சிங்கராஜா முன்பாகச் சென்று நான் கொட்டாவிகள் வரிசையாகப் போட்டேன். நான் கொட்டாவியே போடக்கூடாது அவர் முன்னால் என்பதற்காகவே அவர் மந்திரியாரைக் கூப்பிட்டுப் பரிசுகளைக் கொடுத்து என்னை அனுப்பி வைத்துவிட்டார். அவ்வளவு தான் விசயம்!”

“அவ்வளவுதானா? இதோ இப்போதே நான் சிங்கராஜாவைச் சந்தித்து கொட்டாவிகள் பலவற்றைப்போட்டு பரிசுகள் வாங்கி வருகிறேன் பார்!” என்று சொல்லிக்கொண்டு மிகவிரைவாய் பாறைக்குகை நோக்கிச் சென்றது.

அங்குச் சென்றதுமே அது சிங்கராஜாவை அழைத்தது. வயிறு நிறைய உணவு சாப்பிட்ட களைப்பில் கிடந்த சிங்கராஜா, ‘யாரடா அது?’ என்று கேட்டபடியே வெளியே வந்தது. வாயிலில் நின்றிருந்த கரடியைப்பார்த்து ‘என்ன விசயம்?’ என்று கேட்டது. அதுதான் சமயமெனக் கரடி தொடர்ந்து ‘ஏவ்! ஏவ்! ஹாவ்! ஹாவ்!’ எனத் தொடர்ந்து சிங்கராஜாவின் முன்னால் கொட்டாவிகளை விட ஆரம்பித்தது.

பயங்கரக் கோபத்திற்கு ஆளான சிங்கராஜா கரடியின் காதைப்பலமாகப் பற்றி அதன் முகத்தில் நான்கைந்துக் குத்துகளை ஓங்கியோங்கி குத்தினார். ‘ஐயோ! எனக்கும் பரிசு கொடுப்பீர்கள் என்று நினைத்தல்லவா நான் ஓடி வந்தேன்! ஐயோ! என்னை விட்டுவிடுங்கள் சிங்கராஜாவே.. நான் ஓடிப்போய்விடுகிறேன் இங்கிருந்து!’ என்று கதறல் போடத்துவங்கிற்று. சிங்கராஜா ‘பிழைத்துப்போ கரடியே!’ என்று விட்டுவிட்டு தன் குகைக்குள் சென்றார்.

கரடி மூக்கு உடைபட்டு ரத்தம் சிந்திக்கொண்டே தன் குகைநோக்கி திரும்பியது. இது எதனால் நடந்தது? என்று தன்னையே அது கேட்டுக்கொண்டது. காலையில் ஆட்டு நண்பனை ஏமாற்றி செவ்வாழைப்பழம் முழுதையும் தின்றதால்தான் நடந்திருக்கிறது.. என அதற்காக வருத்தப்பட்டுக்கொண்டே சென்றது கரடி.


எழுதியவர்

வா.மு.கோமு
வா.மு.கோமு
வா. மு. கோமு என்ற பெயரில் எழுதி வரும் வா.மு.கோமகன், ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்தஎழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர் என்றும், மனதில் நினைத்ததை எழுத்தில் சொல்லத் தயங்காத எழுத்தாளர் எனவும் பெயர் பெற்றவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது. 1991- ஆம் ஆண்டு முதல் ‘நடுகல்’ எனும் இலக்கியச் சிற்றிதழை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இவரது நூல்கள் :

அப்பச்சி வழி - நினைவோடை குறிப்பு,
அருக்காணிக்கு சொந்த ஊர் விஜயமங்கலம் - சிறுகதைகள் ,
அழுவாச்சி வருதுங்சாமி - சிறுகதைத் தொகுப்பு,
எட்றா வண்டிய -நாவல் ,
என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் - சிறுகதைகள்,
கள்ளி - நாவல் ,
கூப்பிடுவது எமனாக இருக்கலாம்,
சகுந்தலா வந்தாள் - நாவல்,
சயனம்- நாவல் ,
சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்- நாவல் ,
சேகுவேரா வந்திருந்தார் - சிறுகதைகள்,
கூப்பிடுவது எமனாக இருக்கலாம் ,
பக்கத்து வீட்டு குதிரை- சிறுகதைகள் ,
பிலோமி டீச்சர் - சிறுகதைகள் ,
மங்கலத்து தேவதைகள்- நாவல் ,
மண்பூதம் - சிறுகதைகள்,
மரப்பல்லி - நாவல் ,
நாயுருவி- நாவல்,
தவளைகள் குதிக்கும் வயிறு - சிறுகதைகள்,
தானாவதி - நாவல்,
ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி- நாவல் ,
வேற்றுக்கிரகவாசி - சிறுகதைகள்,
ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம் ,
மாஸ்டர், ஒரு சாதா டீ - சிறுகதைகள்,
லவ் யு டி - சிறுகதைகள்
காயாவனம்: சிறார் குறுநாவல்,
மாயத் தொப்பி - சிறார் கதைகள்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x