17 September 2024

நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது. அவனுக்கு அறையை விட்டு வெளியே வரத் தோன்றவில்லை. படுக்கையிலிருந்து எழுந்து சன்னலை மட்டும் திறந்து வைத்தான். மாடியின் கிழக்குத் திசையில் அமைந்திருக்கும் அறை அது. அங்கிருந்து பார்த்தால் புறநகர ஆக்கிரமிப்புகள் இன்னும் சூழாத வயல்களை ஒட்டி வடக்கு தெற்காக ஓடும் வறண்ட சிற்றோடை நன்றாகத் தெரியும். அதன் இருபுறங்களிலும் இருக்கும் பெயர் தெரியாத காட்டு மரங்களும் புதர்ச்செடிகளும் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. அண்ணாந்து வானம் பார்த்தான். மழை வரும்போல கருமேகங்கள். அவனுக்கு வானம் பார்ப்பது பிடிக்கும். அடிக்கடி வானம் பார்ப்பான். சிறுவயதிலிருந்தே அந்தப் பழக்கம் மாறவில்லை. இரவில் பார்ப்பது சரி. பகலிலும் நட்ட நடு மதியத்தில் அண்ணாந்து பார்ப்பவனை பைத்தியக்காரன் என தலையில் அடித்தார்கள். தான் மட்டுமே கண்டறிந்த இரகசியத்தை அவர்கள் அங்கீகரித்தது போல அவன் அதை இரசித்தான்.

மழை எந்நேரமும் வந்துவிடும் என்ற உணர்வு நிம்மதியைத் தந்தது. குருவிகள் தூரத்து புளிய மரத்திலிருந்து பறப்பதும் அமர்வதுமாய் போக்கு காட்டிக் கொண்டிருந்தன. வெகு உயரத்தில் ஒரு பருந்து பறந்து கொண்டிருப்பது தெரிந்து உற்றுப் பார்த்தான். கொஞ்ச நேரம் பார்த்து அது நெகிழிப்பை எனப் புரிந்துகொண்டான். அவ்வளவு உயரத்துக்கு எப்படிப் போயிருக்கும் என யோசித்தான். பேய்க்காற்று. கறுப்பு நிறப்பை. யாராவது சிக்கன் வாங்கிய பையாயிருக்கும் என நினைத்துக்கொண்டான். ஏதோவொரு பெண் நாப்கின் கூட வாங்கியிருக்கலாம் எனவும் நினைத்தான்.

ஏன் சிக்கன், நாப்கின்களை கறுப்புப் பையிலேயே சுற்றித் தருகிறார்கள் என யோசித்தான். ‘என்னவோ மனுசங்க..’ அவனுக்கு சிரிப்பு வந்தது. வேறு ஏதாவது உயரத்தில் தெரிகிறதா எனப் பார்த்தான். ஏன் யாருமே வானம் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்? அவனுக்கு ஆதங்கமாக இருந்தது.

ஆத்தூருக்கு வடதிசையில் மழை பெய்து கொண்டிருந்தது கறுப்புத் துண்டை காயப்போட்டிருப்பது போலத் தெரிந்தது. நம் ஊருக்கு அதே மழை பெய்து விட்டு வருமா? இல்லை இது வேறு ஏரியா மழையா?

இங்கிருக்கும் மேகம் அந்த மேகத்திடம் பேசிக் கொண்டிருக்குமோ எனத் தோன்றியது. மீண்டும் சிரித்துக் கொண்டான். சிரிக்கும்போது அவனுக்கு கன்னத்தில் குழி விழும். ஆண்களுக்கு விழும் கன்னக்குழிகள் அரிதானவை என ஷீலா அடிக்கடி சொல்வாள். ஓடிப்போய் அவசரமாக கண்ணாடியை எடுப்பதற்குள் சிரிப்பு நின்றுவிட்டது. எதை நினைத்துச் சிரிப்பதெனத் தெரியவில்லை. வலுக்கட்டாயமாகச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு கண்ணாடியில் ஒருபக்கமாகப் பார்த்தான். அவ்வளவு உவப்பாகத் தோன்றவில்லை. கண்ணாடியை டேபிளில் வைக்கும்போது வாழப்பாடியில் வாங்கி வந்திருந்த பரோட்டா பொட்டலம் பார்வைக்கு வந்தது. பசி நேரம் கடந்துவிட்டிருந்தது. இந்த மழை நேரத்துக்கு அசைவம் நன்றாகயிருக்கும். குழம்புப் பொட்டலத்தைப் பார்த்தால் அசைவம் போலத் தோன்றியது. ஆனால் அதில் இறைச்சித் துண்டுகள் எதுவுமிருக்காது.

அசைவம் போன்ற அசைவம். வாழ்வு போன்ற வாழ்வு.

கீழ்வீட்டில் யாருமில்லை. வெளியே போயிருப்பவர்கள் எப்போது திரும்புவார்களெனத் தெரியாது. திரும்பினாலும் கவலையில்லை. இவன் தனிமையிலிருந்து திரும்பி முகத்தைக் காட்டிவிட்டு மீண்டும் தனிமைக்குள் வந்துவிடலாம். ஒரு பணியாளனாக இருப்பதற்காக அவன் வெட்கப்பட்டான். பள்ளித் தோழியிடம் முதல் முத்தம் வாங்கி அடைந்த வெட்கத்திலிருந்து இந்த வெட்கம் வேறாக இருந்தது. அவன் கேள்விப்பட்ட விதவிதமான வெட்கங்களைப் போலல்லாமல் இந்த வெட்கம் பயமாகவும் இனிமேல் அடைந்து விடக்கூடாதென நினைக்கிற ஒரு வெட்கமாகவும் இருக்கிறது. இப்போதைக்கு ஆறுதலாக ஓரிரு வார்த்தைகள் பேசுபவர்கள் கீழ்வீட்டுக்காரர்கள் தான். வீட்டு ஓனர் வெளிநாட்டில் செட்டிலாகியிருந்தார். சுற்றியிருக்கும் பெரும்பாலான குடியிருப்புகள் எந்நேரமும் கனத்த தனிமையையே ஏந்தியிருக்கின்றன. அவனுக்கு மீண்டும் ஷீலாவின் நினைவு வந்தது. ஊருக்குப் புறப்படும்போதெல்லாம் ஓடிவந்து காலைக் கட்டிக்கொண்டு அழும் குழந்தைகள் ஞாபகம் வந்தார்கள். இந்த வருடமும் மாற்றல் கிடைக்காது போலிருப்பதை அவன் இன்னும் ஷீலாவிடம் சொல்லவில்லை. சொல்லாமல் அவளை நம்பிக்கையோடு காக்க வைப்பதும் துயரமாக இருந்தது.

யோசனைகளின் அலைக்கழிப்பில் எழுந்து இந்தமுறை தென்திசை ஜன்னலைத் திறந்தான். பரவி அடுக்கப்பட்ட கட்டடங்களின் நெரிசல் வழி தான் தனக்கு வாய்த்தது. மூர்த்தி சார் வீட்டின் மீது கண்களை ஊன்றினான். கதவுகள் ஜன்னல்கள் இப்போதும் திறந்தே இருந்தன. மூர்த்தி சார் வாயிலின் முன்பிருந்த செம்பருத்திச் செடியில் எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தார். இன்னும் கொஞ்ச நேரத்தில் புறப்பட்டு விடுவாராயிருக்கும்.

அவருக்குச் சொந்த நிலம் சொந்த வீடாக இருப்பதை நினைத்து ஒரு சமயத்தில் பெருமூச்சு விட்டிருக்கிறான். அவனுக்கும் ஊரில் சொந்த வீடு இருக்கிறது. சொந்தங்களிலிருந்து மாதங்களில் பிறக்கும் ஒன்றாம் தேதிக்காக அவன் வலுக்கட்டாயமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கிறான். அவனது சொந்த வீட்டுக்கும் அவனது வலது காலுக்கும் இடையில் எண்ணற்ற ஒன்றாம் தேதிகள் சங்கிலியாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன.

மூர்த்தி சார் இப்போது வீட்டுக்குள் போய் விட்டிருந்தார். திரும்பத் துடைப்பதோடு வருவாரென எதிர்பார்த்தான். நினைத்தபடியே துடைப்பத்தை எடுத்துவந்து அவர் செம்பருத்திக்கு அடியில் கிடந்த வாடிய பூக்களைப் பெருக்கத் தொடங்கினார். அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவரது மனைவி மித்ராவை நினைத்துக் கொண்டான். அவர் இறந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்களை நெருங்கப் போகிறது.

அவன் இங்குக் குடிவந்த காலத்திலிருந்து இப்போது வரை அவர்கள் இருவர் மட்டுமே அந்த வீட்டில் வாழ்கிறார்கள். முற்றிலும் தனிமைக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து வசிப்பவர்கள் அருகில் யாருடனும் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை. மாதம் பிறந்தால் மளிகைக் கடைப் பையனையும் நாள் பிறந்தால் பால்காரனையும் தவிர அவர்கள் வீட்டை யாரும் தொட்டுச்சென்று அவன் பார்த்ததில்லை. நகரத்துவாசிகள் பெரும்பாலும் அப்படித்தான் என நினைத்தாலும் உறவுக்காரர்கள் என்று கூட யாரும் வராதது ஆச்சரியத்தைத் தந்தது.

ஒருமுறை அருகாமை வீட்டில் வசிப்பவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களைப் பற்றி பேச்சு வந்தது.

‘அவங்களுக்கு குழந்தைங்க இல்ல தம்பி. அவர் ஏதோ மத்திய துறைல இருந்து வாலண்டியர் ரிட்டையர்மென்ட் போல. தருமபுரி பக்கம் தோட்டம்லாம் இருந்துச்சாம். தனக்குப்பின்ன யாருங்குற கேள்வி வந்ததும் எல்லாத்தையும் வித்துட்டு இங்க வந்து இந்த இடத்தை வாங்கி செட்டிலாகிட்டாங்களாம். இதுக்கூட போஸ்ட் மாஸ்டர் ஒருநாள் பேசும்போது சொன்னார். நீயாவது பேசும்போது குழந்தைங்க பத்தி கேட்டுறாத. அவங்களுக்கு அப்படிக் கோவம் வரும். எதிர்ல ராஜன் வீட்டுக்காரம்மா இல்ல.. அவங்க ஒருமுறை கேட்டதுக்கு தான் வீட்டை விட்டு வெளியே போனு சொல்லிட்டாங்களாம். அதுல இருந்து தான் யாரும் அங்க எதுவும் வச்சிக்கிறதுல்ல’ என அந்த வீட்டு உரிமையாளினி சொல்லி முடித்தபோது இவன் அவர்களை தன்னுடன் பொருத்திப் பார்த்துக் கொண்டான். வீடும் பிள்ளைகளும் தான் வேறு வேறான இழப்புகள். மற்றபடி தனக்கும் அவர்களுக்குமான தனிமை ஏதோவொரு புள்ளியில் அவர்களை தன்னுடன் இணைப்பதாகக் கருதிக் கொண்டான்.

பணி நேரம் போக தேநீர் கலந்துகொண்டு வந்து தெற்கு ஜன்னலில் அமர்ந்து அவர்களை நோக்குவது அவனது வாடிக்கையாகிவிட்டது. அந்த வீடு கொஞ்சம் பழையதாக இருந்தாலும் இன்றைய மதிப்புக்கு நாற்பது லட்சத்துக்கும் மேல் போகுமெனத் தோன்றும். அறியாதவர்களுக்கு அது பழைய வீடாகத் தோன்றாத வண்ணம் அவர்கள் அவ்வீட்டைப் பராமரித்து வந்தார்கள். மித்ரா அந்த வீட்டை வாரந்தவறாமல் வெள்ளிக்கிழமையன்று கழுவிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அடிக்கடி வண்ணப்பூச்சு தொடங்கி ஜன்னலின் சட்டம் மாற்றுவது வரை அந்த வீட்டில் பராமரிப்புப் பணி நடந்துகொண்டே இருப்பதைச் சுற்றியிருப்பவர்கள் வியந்தார்கள். அவனுக்கும் அப்படித்தான் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் ஷீலாவிடம் இதைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளுமளவுக்குப் போய்விட்டிருந்தான்.

‘நாப்பது லட்சத்துக்கு மேல தேறும்னு சொல்றீங்க. வாரிசுனு சொல்லிக்கவும் யாரும் இல்ல. அப்படி அந்த வீட்ட அழகு பண்ணி என்ன பண்ணப் போறாங்க?’ என அவள் பதிலுக்கு உரைத்தாள்.

ஆமாம். இவர்களுக்குப் பின் யாரிடம் அந்த வீடு போகும்? என இவன் யோசனையில் ஆழ்வான். ஆனால் அவர்களிடம் அந்தக் கவலை துளியும் இருப்பது போலத் தெரியவில்லை. இருவரும் வீட்டின் முன்புறம் காலையும் மாலையும் வந்தமர்ந்து காபி அருந்தியபடி பேசி சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதெல்லாம் பொறாமையாக இருக்கும். மறுபுறம் இவர்கள் மீதும்கூட பொறாமை கொள்கிறோமே என அவனுக்கு அவனே வெட்கம் கொண்டபடி கிழக்குத் திசை ஜன்னலுக்கு நகர்ந்து விடுவான்.

வெறும் கவனித்தலோடு நின்றுபோன அவர்களுடனான அறிமுகம் பேச்சுவார்த்தை வரை போன நாள் நன்றாக நினைவிருக்கிறது.

ஒரு வேலையற்ற மதியப்பொழுதில் மூர்த்தி சார் அவன் அறைக்கு முன்பாக வந்து நின்றார். அவன் ஒன்றும் புரியாமல் பார்த்தபோது

‘உங்க போன்ல இருந்து ரீசார்ஜ் பண்ணிவிடுறீங்களா தம்பி? என் போன்ல சுத்திட்டே இருக்கு’ அவர் எந்தச் சலனமுமின்றி அதைக் கேட்டபோது உள்ளே வரச்சொல்லி அழைத்தான்.

‘பரவால்ல தம்பி. இருக்கட்டும்’

அக்கம்பக்கத்தில் ஏற்கனவே அவரைப் பற்றிச் சொல்லியிருந்ததில் அவன் மேற்கொண்டு வற்புறுத்தவில்லை.

அவன் ரீசார்ஜ் செய்து முடித்ததும் அவர் சரியாக ஐந்நூற்று எழுபத்தொன்பது ரூபாயைத் தந்துவிட்டு இவன் நிமிர்ந்து பார்க்கும் முன் படியில் இறங்கத் தொடங்கியிருந்தார்.

தன்னை அவர் அணுகியதைப் பற்றி யோசித்து

இவன் அவர்களை ஜன்னலின் வழி கவனிப்பதைப் போன்றே அவர்களும் இவனைக் கவனித்திருப்பார்களாயிருக்குமென நினைத்துக்கொண்டான். அதன்பிறகு அவ்வீட்டின் மங்களத்தன்மையின் மீது அவனது மதிப்பு கூடத் தொடங்கியது இரண்டாவது முறை ரீசார்ஜ் செய்ய அவனை அவர் அங்கு அழைத்தபோது தான்.

சுற்றியிருக்கும் காம்பவுண்டின் உள் ஓரத்தில் நந்தியாவட்டை, நிஷாகந்தி என வித்தியாசமான தாவரங்களைக் கண்டு வியந்தவனிடம் ‘மித்ரா பாட்டனில முனைவர் பட்டம்..’ என அவரே அறிமுகம் செய்து வைத்தார். மித்ரா மேடம் அவனை நோக்கிப் புன்னகைத்து வணக்கம் வைத்தது அவனது இருப்பை அந்த வீட்டில் கொஞ்சம் தளர்த்தியது.

அவர்கள் அதன்பிறகு சந்தித்துக் கொண்ட போதெல்லாம் அருகில் வசிப்பவர்கள் அவனது வெறித்த மனநிலையையும் தனிமையில் உழலும் பழக்கத்தையும் அவர்களோடு சேர்த்துப் பேசினார்கள். மூர்த்தியே ஒரு முறை ‘நீ ஏன்பா எப்பவுமே சோகமா இருக்க?’ என உரிமையோடு கேட்டார்.

ஒருமுறை ஊர்த்திருவிழாவுக்கு விடுப்பு கிடைக்காத விரக்தியில் அறைக்குள் கிடந்தவனை அவரது குறுஞ்செய்தி எழுப்பியது.

தூய ஆங்கிலத்தில் ‘மது அருந்தும் பழக்கம் உண்டா?’ எனக் கேட்டிருந்தார்.

அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் மது அருந்தும் போது அவர் நிறைய பேசுவார் என அவன் எதிர்பார்க்கவில்லை.

‘தம்பி.. ஒரு மனுசனை அதிகம் அவமானப்படுத்துறது எது தெரியுமா?’

அவரே சொல்லட்டுமென மௌனமாக இருந்தான்.

‘நீங்கலாம் வசவு, கேலி, துரோகம்னு நிறைய சொல்லுவீங்க. ப்ச்.. அதெல்லாம் கிடையாது. ஒருத்தன் உன்மேல காட்டுற பரிதாப உணர்ச்சி இருக்கு பாரு. அதுதான் கொடுமையானது. உலகத்துல எல்லாருக்கும் இருக்குறது ஏன்டா உனக்கு இல்ல.. அச்சோ பாவம்னு அவங்க சப்புகொட்டும்போது உடனே அந்த இடத்துல இருந்து இருந்த மேனிக்கே தொலைஞ்சிடலாம்னு தோணும். இல்லனா எனக்கு எல்லாம் தெரியும். நீ மூடிக்கிட்டு உன் வேலைய பாருடா மயிருனு ஓங்கி ஒரு அறை விடலாம்னு தோணும். ஆனா அந்த இடத்துல இது ரெண்டுமே நடக்காது’

அவர் நிமிர்ந்து ஆகாயத்தை வெறித்தார்.

‘மித்ராவுக்கும் எனக்குமான உறவு அவ்வளவு அற்புதமானது தம்பி. நீ சொல்லு பாக்கலாம். இல்லாத பணம் கிடையாது. நாங்க அங்க இங்க ட்ரீட்மென்ட் பாக்காமலா இருந்துருப்போம்.? எத்தனை கரிசனம்.. எத்தனை அறிவுரைகள்? ‘

அவர் மீண்டும் ஆகாயத்தை வெறித்தார். இந்த முறை விரக்தி கலந்த சிரிப்பும் அவரைச் சுற்றிப் பரவியிருந்தது.

‘தம்பி.. யோசனைக்கும் அறிவுரைக்கும் என்ன வித்தியாசம் சொல்லு பாக்கலாம்..’

அவனிடம் பதில் வராதது கண்டு அவரே தொடர்ந்தார்.

‘கேட்டா சொல்றது யோசனை.. கேட்காம சொல்றது அறிவுரை.. குழந்தைய தத்தெடுக்கிறதுல இருந்து கோயிலுக்கு நிலத்தை எழுதி வைக்கிறதுல இருந்து எத்தனை அறிவுரைகள் தெரியுமா? நாங்க நல்லாதான்டா இருக்கோம்.‌ நாங்க இந்த வாழ்க்கைக்கு பழகிக்கிட்டோம்னு எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டானுங்க. அதான் நாங்க தனியா வந்துட்டோம். தனியா ஆனா நல்லா இருக்கோம். இது உண்மையா இல்லையா சொல்லு’

அவன் இப்போது வாய் திறந்தான்.

‘ஆனா நம்ம மேல இருக்குற அக்கறைல தானே சார் அவங்க அப்படிப் பேசுறாங்க?’

அவர் இதற்காகக் கோபப்படுவாரோ என எதிர்பார்த்தான். ஆனால் அவர் தொடர்ந்து சாந்தமாகவே பேசினார்.

‘அது அப்படியில்ல தம்பி. தனக்கு எல்லாம் கிடைச்ச பரிபூரணம்னு ஒண்ணு இருக்குல்லையா? அது பொங்கிப் பெருகுறதால அவனுங்களுக்கு பொழுது போறதில்ல. இப்போ… அவனுக்கு பிரச்சினை நிறைய இருக்குற அன்னிக்கு வரச் சொல்லு பார்ப்போம். ஒரு பயலும் வரமாட்டான். அவனுடைய தேவைகள் பூர்த்தியடைஞ்ச பிறகு மத்தவங்க வாழ்க்கை கண்ணுக்குத் தெரியும். அப்போ தூக்கிகிட்டு வந்துடுவானுங்க. இன்னொரு விஷயம்.. நீ என்னைக் கேலி பண்ணா கூட ஒரு கோபத்த வரவைச்சி என் மனச உடனே துடைச்சிக்க முடியும். ஆனா இந்தப் பரிதாபம் இருக்கு பாரு.. அது என்னோட இல்லாமையை இன்னும் இருட்டுல நிறுத்திடுது’

அவர் முகம் அந்த இருளிலும் கோபத்தில் ஒளிர்வதைக் கவனித்தான். அவர் சொல்வது சரியா தவறா என முடிவெடுக்க முடியாமல் தடுமாறினான். அவனுக்கு இப்போது அவன் பிரச்சினைகள் கண்முன் வந்துப்போயின.

அவனுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்கள் பணம் கொடுத்து சொந்த ஊருக்குச் செல்வதை நினைத்துப் பார்த்தான். அவன் இன்னும் அதே அலுவலகத்தில் இருப்பதைப் பார்த்து உள்ளூர் பணியாளர்கள் ‘உச்’ கொட்டுவதை நினைத்துப் பார்த்தான். தாளாத இரவுகளில் ஷீலாவுடன் வீடியோ சாட் செய்வதை நினைத்துப் பார்த்தான்.

‘நீங்க சொல்றது தான் சார் சரி’ எனச் சொல்லிவிட்டு மீண்டும் மதுவை ஊற்றினான். அதன்பிறகு அவர்கள் சந்தித்துக் கொள்வது சீரான இடைவெளியில் தொடர்ந்தது. மித்ரா மேடம் அதிகம் அவனிடம் பேச மாட்டார். அதே புன்னகை. அதே வணக்கம்.

பிறிதொரு நாளில் பணி முடித்து வந்து பார்த்தபோது திடீரென அவர்கள் வீட்டைப் பூட்டியிருந்தார்கள். அவனது அழைப்பெதையும் அவர் எடுக்கவில்லை. என்னவாக இருக்கும் என மனது அடித்துக் கொண்டபோது மித்ராவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக மட்டும் அவர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

அந்த இரண்டு வாரங்களில் அவ்வீடு களையிழந்து இருண்டு கிடப்பதைக் கண்டு அவன் வியப்படைந்தான். தனக்கு மட்டும் தான் அப்படித்தோன்றுகிறதா என நினைத்து கீழ்வீட்டிலும் அதைக் கேட்டு உறுதி செய்து கொண்டான்.

அவர்கள் மீண்டும் திரும்பிவிட்ட தகவலெதுவும் தனக்கு அளிக்கப்படாத போதும் பழையபடி செம்பருத்தியின் இடம் சுத்தம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அவன் சட்டையை மாட்டிக்கொண்டு அன்று கீழிறங்கிப் போனான்.

வீடு மீண்டும் பழைய நிலைக்கு வந்து விட்டிருந்தது மனதை அமைதியாக்கியது. இரண்டொரு முறை அழைத்துப்பார்த்துவிட்டு முந்தைய உரிமையில் கதவைத் தள்ளித் திறந்து உள் நுழைந்தான். வராந்தாவைத் தாண்டிய உள்ளறையை எட்டிப்பார்த்தவன் அதிர்ந்தான். மித்ரா படுக்கையில் நிர்வாணமாகக் கிடந்தார். அவரது வதங்கிய உடலை டெட்டால் கலந்த நீரால் துடைத்துக் கொண்டிருந்த மூர்த்தி இவனது அரவம் கண்டு திகைத்துப்போனார். அவசரமாக மறைத்தபடி ஓடிவந்து ‘கெட் அவுட் ஃப்ரம் மை ஹவுஸ்’ எனக் கத்தினார்.

அவன் ஏற்கனவே அக்காட்சியின் தீவிரத்திலிருந்து மீளாமல் தடுமாறியிருந்ததில் அவரது உச்சகட்டக் கோபத்தில் நிலைதடுமாறி பின்னால் விழப்போய் அவசரமாக வெளியேறினான். தன்மீது தான் தவறென தலையில் ஓங்கியடித்துக் கொண்டான்.

‘யூ ஒன்லி ஐ பர்மிட் த ராட் இன் மை ஹவுஸ்’ என அவர் பின்னால் கத்தியது காதில் கூசியது.

அதன் பிறகான பத்தே நாட்களில் மித்ராவின் மரணம் நிகழ்ந்தது. அவர் அழாமல் வீம்பாக இருப்பதை நினைத்து வருந்தினான்.

இறுதிச் சடங்கில் சுற்றியிருந்தவர்களோடு ஒரு ஆளாக தானும் நிற்பது துயரமாக இருந்ததை வேறு வழியற்று அவன் சுமக்க நேர்ந்தது. மூர்த்தி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. மாநகராட்சியில் சொல்லி உடலை மின்மயானத்துக்குக் கொண்டு செல்லும்போது திரும்பிப் பார்த்தார். தான் உடன் வருவேன் என எதிர்பார்க்கிறாரோ என அவன் தயங்கியபடியே வீடு வந்து சேர்ந்தான்.

அதன்பிறகான இந்த ஏழு மாதங்களில் அவர்கள் சந்தித்துக் கொள்ளவேயில்லை. அவர் வழக்கம் போல திருநீறு பூசி வெளியில் அமர்ந்து திருப்பாவை பாடுவதை, மித்ரா மேடம் விட்டுச் சென்றிருந்த பணிகளை செவ்வனே செய்வதை ஜன்னலின் வழி பார்த்தபடி நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தான். சென்ற வாரத்தில் ஒருநாள் பக்கத்து வீட்டில் மூர்த்தி வீட்டை விற்கப் போவதாகவும் இரண்டொரு தரகர்கள் வந்து பார்த்துவிட்டுப் போயிருப்பதாகவும் பேசிக் கொண்டிருந்ததை அவனால் நம்பமுடியவில்லை.

ஆனால் இன்று காலை கீழ் வீட்டார் மூலம் அது ஊர்ஜிதமாகியிருந்தது. அதுவும் இன்றோடு வீட்டைக் காலி செய்யப் போகிறார் எனத் தெரிந்ததும் அவன் மனம் அலைமோதியது. தன்னிடம் வந்து சொல்வாரா என நினைத்துக் கொண்டிருந்தபோதே வாசலில் வந்து நின்றிருந்தார்.

அவன் இயல்பு மாறாமல் உள்ளே அழைத்தான். இருவருக்குமான தேநீரை அவன் தயார் செய்யும் வரை அவர் எதுவும் பேசவில்லை.

ஒரு மிடறு பருகியபின் ‘அன்னிக்கு நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு சாரி தம்பி’ என்றார்.

‘அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. நானா வந்து உங்ககிட்ட பேசியிருக்கணும். சாரி’

சிறிது மௌனத்துக்குப் பிறகு அவனே தொடர்ந்தான்.

‘ஏன் சார் வீட்ட விக்கிறீங்க?’

அவர் அறையைச் சுற்றி பார்வையை ஓட்டி கண்களை இயல்பாக்க முயற்சித்தார். நிறையத் தடுமாற்றங்களையும் பரிதவிப்பையும் அவர் அரிதாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

‘ரொம்ப நடிக்கிறனோனு தோணுது தம்பி. ரொம்ப ஏமாத்திக்கிறனோனும் தோணுது. ஒரு கட்டத்துக்கு மேல முடியல. அதான் சொந்தக்காரங்க ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தாங்க. வித்துடலாம்னு’

அவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

‘எனக்கு வடநாட்டு பக்கம் தூரமா ஒரு ஊருக்கு ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணித் தரீங்களா? காசி, டெல்லி.. எங்க கிடைச்சாலும் சரி. நாளைக்கு மத்தியானம் ராத்திரி.. எப்பனாலும் சரி’

அவன் போனில் டிரெயின் ஆப்பைத் திறந்தான். டிக்கெட் போடும் வரை அவர் அவனையே வெறித்துப் பார்ப்பதாகத் தோன்றியது. டிக்கெட் நகலை அவருக்கு அனுப்பிவிட்டுப் புன்னகைத்தான்.

‘அப்பப்போ தொடர்புல இருங்க சார்’

‘கண்டிப்பா தம்பி. சாயுங்காலம் தர்மபுரி போறேன். நாளைக்கு அங்கேயிருந்து ஜங்ஷன் போயிடுவேன்”

மழை கனத்துப் பெய்யத் தொடங்கியிருந்தது. சாப்பிட்டு முடித்த உணவுப் பொட்டலத்தை வீச வந்தவன் மீண்டும் அவர் வீட்டை நோக்கினான்.

இந்த மழையில் எப்படி ஊருக்குச் செல்வார் என யோசித்தபடியே படுக்கையில் விழுந்து உறங்கிப்போனான். சுற்றியிருந்த வீடுகளனைத்தும் மௌனமாக மழைக்குத் தன்னை நனையக் கொடுத்துக் கொண்டிருந்தன.

மறுநாள் கீழே இயல்புக்கு மாறாக பேசிக் கொள்ளும் சத்தம் அவனை முதலில் எழுப்பியது. கீழ்வீட்டுப் பெண்மணி பாதிப் படியில் நின்றபடி ‘தம்பி மூர்த்தி சார் தூக்கு போட்டுக்கிட்டாராம்’ எனச் சொல்லிவிட்டு ஓடினாள். அவன் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு போனைத் துழாவி எடுத்தான். மூர்த்தி அனுப்பியிருந்த குறுஞ்செய்திகள் நோட்டிபிகேஷனில் தெரிய அவசரமாகத் திறந்தான்.

முதல் மூன்று குறுஞ்செய்திகள் எழுதப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன‌. அடுத்த இரண்டு குறுஞ்செய்திகளைப் பார்த்தான்.

‘தம்பி இந்த வீடு எங்களுக்கு குழந்தை மாதிரி’

‘கதவு சும்மா தான் சாத்தியிருக்கேன்.மழை பேஞ்சதுல டைட்டா பிடிச்சிருக்கும். கதவ உடைச்சிடாதீங்க தம்பி’

அவன் ஓடிப்போய் தெற்கு ஜன்னலைத் திறந்துப் பார்த்தான்.

கூட்டம் கூடத் தொடங்கியிருந்தது.

அவர் வீட்டுச் சந்திலிருந்து இரண்டொருவர் ஓடி வந்தார்கள். யாரோ ஒருவர் கடப்பாரையை கையில் பிடித்தபடி கதவை நோக்கிச் சென்றார். அவன் ஜன்னலுக்கு வெளியே கைகளை நீட்டியபடி ‘கதவை உடைச்சிடாதீங்க’ என அலறினான்.


 

எழுதியவர்

ந.சிவநேசன்
ந.சிவநேசன்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் ஆரியபாளையம் சிற்றூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர். இவரின் கவிதைகள் காலச்சுவடு, புரவி, வாசகசாலை, ஆனந்தவிகடன், கணையாழி, தி இந்து நாளிதழ், படைப்பு கல்வெட்டு, தகவு, காணிநிலம், கீற்று, நுட்பம் போன்ற பல்வேறு இதழ்களில் வெளியாகி வருகின்றன.
கவிதை, சிறுகதை போட்டிகளில் கலந்து பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

இவரின் கவிதைத் தொகுப்புகள் :
'கானங்களின் மென்சிறை' (படைப்பு பதிப்பகம் வெளியீடு),
‘ஃ வரைகிறது தேனீ’ (கடல் பதிப்பகம்),
‘ இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை’ ( வாசகசாலை பதிப்பகம்)
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x