16 April 2024

சொல்லு ரைட்டரு.. என்ன பேட்டி எடுக்கப் போற?”

“இல்லீங்க.. உங்க நடன வாழ்க்கை பத்தி”

அவள் அலட்சியமாக சிரித்தாள்.
“அதான் ஏற்கனவே கிரேட் தில்ருபா ல எழுதிட்டியே. இன்னும் என்ன இருக்கு?”

“இல்லீங்க அதுல மேலோட்டமா தான் எழுதியிருக்கேன். இன்னும் டீப்பா எழுதலாம்னு..”

“இன்னும் டீப்பா… ” என கைகளை ஒரு மாதிரிச் செலுத்தி அவள் சிரித்தாள். நிறுத்திவிட்டு லேசாக ஆடிக்கொண்டிருந்த ஜன்னலைப் பார்த்தாள்.

“டீப்பா தெரிஞ்சி என்னத்த கிழிக்கப் போறியோ? ஆமா என் நம்பர் யார் குடுத்தாங்கனு சொன்ன? வரதராஜு தான? ” மீண்டும் சிரித்தாள்‌.

“அவன் ஒரு ஆளு..”

அவள் ஒரு வார்த்தைக்கு ஒருமுறை சிரித்துக் கொண்டே இருந்தாள். எதையும் சொல்லிவிடாத, இன்னும் கொஞ்சம் கெஞ்சவிடக்கூடிய வைராக்கியம் அதற்குள் ஒளிந்திருந்தது.

எனக்கு அடுத்து என்னப் பேசவென தயக்கமாக இருந்தது.

“இல்லங்க.இத ஒரு நாவலா எழுதலாம்னு இருக்கேன். அது மூலமா ஏதாச்சும் ரீச் கிடைச்சி உங்கள மாதிரி ஆடுறவங்க லைஃப்ல ஏதாச்சும் மாற்றம் வருமில்லையா?”

“மாற்றம் மயிருல வரும்” அவள் மீண்டும் சிரித்தாள். “நாவல்னா இந்த ராஜேஷ்குமார் கதைலாம் பஸ் ஸ்டாண்டுல தொங்குமே.? அந்த மாதிரியா?”

நான் தடுமாறிவிடக்கூடாத கவனத்துடன் “அது மாதிரியும் தான்ங்க.. இன்னும் கொஞ்சம் பெருசா.. லைப்ரரி புக்லாம் பெருசா எடுத்து படிப்போம்ல.. மொத்த மொத்தமா.. அந்த மாதிரி” என்றேன்.

“இந்த பாலகுமாரன் புத்தகம் மாதிரி. எனக்கும் தெரியும்பா. எங்கம்மா அழுவும் போதுலாம் பாலகுமாரன் படிச்சி தேத்திக்குவா.. சிலநேரம் படிச்சி இன்னும் அழுவா.. தெரியும். அப்பலாம் நானும் எடுத்தெடுத்து படிச்சிருக்கேன். கரெக்டா தான சொல்றேன்?”

நான் மையமாய் தலையாட்டி வைத்தேன்.

“சரி கேளு.. என்ன கேக்கப்போற? ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு என்ன கேக்கப் போறியோன்னு” எழுந்துப் போய் நைட்டியின் மீது துப்பட்டாவை போட்டு வந்து அமர்ந்தபோது தான் அவள் நெற்றியை கவனித்தேன். வெட்டுக்காயம். மேக்கப் பூச்சில் இத்தனை நாட்களும் அதை கவனிக்கவில்லை.

“போட்டோ கீட்டோ எடுத்தீன்னா இதெல்லாம் அலங்கோலமா தெரியும். இரு” என்றபடி
மேசையில் கிடந்தவற்றை ஒதுக்கி வைத்தாள். செய்தித்தாள்கள், அவளது மகள் விட்டுப்போன பள்ளிக்கூட நோட், டைரிக்கு நடுவே என்னுடைய கவிதை நூல்களும் கிடந்தன.

அதை நான் பார்ப்பது தெரிந்ததும் சிரித்தாள். “மூணுமே பொரட்டிப் பாத்தேன். அதுல எங்க பொழப்ப பத்தி ஒரு கவிதை எழுதியிருந்தியே..” நிறுத்தி யோசித்து “ஆங்.. கோயில் திருவிழாவில் அம்மனுக்கு புடவைசாத்தி தரிசித்த அதே கண்கள் தான் காத்திருக்கின்றன அன்றைய இரவில் நடனமாடும் பெண்களின் ஆடை விலகலுக்காய்.. அதத் திரும்பத் திரும்ப படிச்சேன். மீதிலாம் ரொம்ப சுமார்தான்.. என்னத்தையோ கவிதைனு கிறுக்கி வச்சிருக்க” என கண்களைப் பார்த்தாள்.

நான் “சரி.. ஆரம்பிக்கலாமா?” என்றேன். அவள் தலையாட்டியதும் கேட்கத் தொடங்கினேன்.

“அதான் நீங்க எப்படி இந்த தொழிலுக்கு வந்தீங்கன்னு சொல்லுங்க”

“நெனச்சேன். இததான் கேட்பன்னு. எல்லாரும் இதேதான் தூக்கிட்டு வர்றீங்க. போன வாரம் சீலநாயக்கன்பட்டிக்கு உள்ள என்னமோ ஒரு ஊரு.. அங்க டான்ஸ் ஆடப்போய் ஒருத்தன் பின்னாடியே வந்தான். சின்ன வயசுதான். ஊர் தலைவர் பையனாம். ரொம்ப கெஞ்சுனான்.விட்டுட்டு வந்துடுங்க.. கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அழுவுறான். என்னடா வம்பாப் போச்சுன்னு எனக்கும் ரொம்ப பிரியமாகிடுச்சு. என்னமோ ஒரு டாம் க்ரூஸ் படம் போய் உக்காந்தோம். சினிமா பாத்துட்டு ஏற்காடு போறதா ப்ளான். தியேட்டர் இருட்டுல கைய தொட்டதுக்கே பையன் வியர்த்துட்டான் பாவம். அடுத்து கேட்டான் பாரு.. எப்படிக்கா இந்த தொழிலுக்கு வந்தீங்கன்னு? செம கோவம் வந்துடுச்சு. பளார்னு ரெண்டு வச்சிட்டு வெளிய வந்துட்டேன்.”

நான் பின்னால் வேறு நாற்காலி இருக்கிறதா எனத் தேடினேன்.

“உன்னலாம் அப்படி பண்ண மாட்டேன். பயப்படாத.. என்னா சொல்றது? வந்துட்டேன் எப்படியோ. எல்லாம் ஜோதிகாவால வந்த வினை”
என சலித்துக் கொண்டதும் நான் எழுந்துப் போய் விடலாமா என யோசித்தேன்.

“என்ன பாக்குற? ஆக்டரஸ் ஜோதிகாவே தான். ஒண்ணும் பயந்துக்காத. அப்ப நைன்த் படிச்சிட்டு இருந்தேன். குஷி படம் வந்த டைம். எங்க பாத்தாலும் அதுல அந்த மழை பாட்டு தான். டியூஷன்ல.. இங்க தான் அஸ்தம்பட்டில ஒரு எடம். உனக்கு சொன்னா தெரியாது. அங்க சரஸ்வதி பூஜ அன்னிக்கு செம டான்ஸு. நாமளும் வீட்டுல இறுக்கமாவே கிடக்குறோமா? அந்த பாட்டுக்கு ஆடுனதும் ஓ னு ஒரே சத்தம். உனக்கு தான் தெரியுமே.. முதல் பாராட்டு என்ன பண்ணும்னு.. அப்படியே ஜோதிகா மாதிரி ஆடுறன்னு ஒரே கைகுலுக்கல்தான். அதுல ஒரு ஐயரு பையன்.. அவன் மேல எனக்கு ஒரு கண்ணு.. நல்லா கவனி. அவன் மேல எனக்கு. டியூஷன் முடிஞ்சிப் போறப்போ சந்துல செம இருட்டு. நிறுத்தி கிஸ் அடிச்சிட்டான். அப்படியே புதுரத்தம் பாயுது உடம்பு பூரா.. நீ ஜோதிகாவே தான்னு சொன்னான். அங்க ஆரம்பிச்சது எல்லாம். அப்புறம் 4 படத்துல குரூப் டான்ஸரா ஒர்க் பண்ணேன். நினைவைத் தேடும் பறவை, நான் அடிச்சா வெயிட்டு அப்புறம் இன்னும் ரெண்டு டப்பிங் படம். ஒன்று கூட ரிலீஸ் ஆகல” நிறுத்திவிட்டு நெற்றியைத் தேய்த்தாள்.

“போன்லயே ரெக்கார்ட் பண்ணிக்கிறியா?”

“ஆமாம்” என்றேன்.

கவலையுடன் “அதுல அந்த ஐயர் பையன் பேரு சொல்லிட்டேனா?” என்றாள்.

“ஆமா சொல்லிட்டீங்க..”

“சரி.. ஒண்ணுமில்ல. பையன் பேருலாம் கதைல போட்டுடாத. இல்லனா வேற பேரு போட்டுக்கோ. பாவம் அவன்.”

கொஞ்சம் உணர்வாகிவிட்டாள் போலத் தெரிந்தது.

“இப்ப ஒரு ஆறுமாசத்துக்கு முன்னாடி சென்னைல ஒரு ஹோட்டல் ப்ரோகிராம். அதுக்கு அவன் வந்துருந்தான். அவனுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சிடுச்சினு எனக்கு தெரிஞ்சிடுச்சு பாரு. அதுதான் பெரிய தப்பு. ஹாய் இவனே.. இந்த மாதிரி சேலத்துல நாம ஒரே டியூஷன். ஞாபகம் இருக்கானு கேட்டு கை குடுத்தேன். ஓ ஷிட் னு விலகி போய்ட்டான்” அத்தோடு நிறுத்திவிட்டு யோசனையில் ஆழ்ந்தாள். நான் வரட்டுமெனக் காத்திருந்தேன். ஆனால் உடனே திரும்பிவிட்டாள்.

கழுத்தைத் திருப்பி காதுக்குக் கீழே தொட்டுக் காட்டினாள்.

“ஓ ஷிட்னு சொல்லிட்டு ஓடுனான் பாரு. இந்த எடத்துல முத்தம் குடுத்தான் மொதல்ல. அப்புறம் தான் உதட்டுக்கு‌. இன்னிக்கு ஓ ஷிட்டாம். இதையும் எழுதுவியா?”

“எல்லாமே எழுதுவேன்ங்க. கொஞ்சம் ஆர்ட் கலந்து மாத்தி எழுதுவேன்”

“ம்ம்.. படிக்கத்தான போறேன். என்ன பண்ணப்போறியோ? காப்பி போடட்டுமா?”

அவள் அந்தப் பையனிடமிருந்து கொஞ்சம் மீளட்டுமென நினைத்தேன். “போடுங்க” என்றதும் எழுந்து சமையலறையாய் மாற்றியிருந்த சிறிய தடுப்புக்குள் சென்றாள்.

அவள் திரும்பி வரும்போது இரண்டு கோப்பைகளில் ஆவி பறக்க ப்ளாக் டீ இருந்தது. நான் சொல்ல நினைத்து தவிர்த்து விட்ட ப்ளாக் டீயை அவளே போட்டு வந்துத் தந்தது ஆசுவாசமாக இருந்தது.

இரண்டு சிப் அருந்திவிட்டு அவளே ஆரம்பித்தாள்.

“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி ரைட்டரு.. என் கூடவே கண்ணோடு காண்பதெல்லாம் பாட்டுக்கு ஆடுவா பாரு.. அவ பேர் மோகனா. அவளாம் புடிச்சே தான் ஆடுறதுக்கு வந்தா. காலேஜ் படிக்கும்போது ஈரோட்டுல ஒரு பையன லவ் பண்ணா. அவளது ரொம்ப கண்டிஷன் பண்ற குடும்பம். மருந்துலாம் குடிச்சுப் பாத்தும் வேலைக்கு ஆகல. அந்தப் பையன கொன்னுடுவோம்னு சொல்லி வேற ஒரு ஆடிட்டர் மாப்பிளைக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. அவ புருசன் ரொம்ப சாடிஸ்ட். வீட்டுக்கு பால் ஊத்த வர்றவன் அரை லிட்டர் ஊத்தின பிறகு கொஞ்சம் எக்ஸ்ட்ரா பால் மொண்டு ஊத்திருக்கான்‌. அதெப்படி உனக்கு மட்டும் ஸ்பெஷலா சேர்த்து ஊத்தலாம்? அவன வச்சிருக்கியானு தர்ம அடி. எல்லாப்பக்கமும் அணை கட்டுன மாதிரி அவளுக்கு லைஃப் இருட்டாப் போய்டுச்சு. ஒரு நாள் ராத்திரில வீட்ட விட்டுக் கிளம்புனவ நடந்தே பக்கத்து ஊருக்கு வந்துட்டா. இங்க தான் பனமரத்துப்பட்டி பக்கம் ஏதோ ஊரு. திருவிழால ஆடிட்டு இருந்த டான்ஸ் குரூப்பப் பாத்ததும் அவளுக்குள்ள என்னமோ ஒரு உணர்வு. அவ சின்ன வயசுலருந்தே என்ன மாதிரியே நல்லா டான்ஸ் ஆடுவாளாம். அந்தக் கூட்டத்துலயே புகுந்து ஒரு டான்ஸ் போட்டுருக்கா.. எல்லாம் ஒரு விடுபடுதல் மாதிரி. அந்த குரூப்லயே போய் சேர்ந்துக்குறேன்னு சொல்லி அவங்க கூடவே வண்டி ஏறிட்டா. இன்னிக்கு அஞ்சு வருஷம் ஆச்சு. இப்பவும் குரூப்ல அவள அடிச்சிக்க முடியாது.நெம்பர் ஒன் டான்ஸர் அவ தான். ஆனா ஒரு பய கிட்ட நெருங்க முடியாது. தொப்புள் கூட காட்டமாட்டா‌. நாங்களாம் பணத்துக்காக ஆடுறோம். தனக்கு நடந்த கஷ்டத்த ஆடித் தீர்க்கறதுக்காகவே ஸ்டேஜ் ஏறுனவ அவ மட்டும் தான். இந்த மாதிரி நிறைய விநோதமான கேஸுங்க இருக்கு எங்க சைடுல”

அவள் குடித்துவிட்டு கோப்பையை கீழே வைத்திருந்தாள். என் கையிலிருந்த தேநீர் ஆறிவிட்டிருந்தது.

“நான் பாரு.. என் கதைய சொல்றதுக்கு அவக் கதைய சொல்லிட்டுருக்கேன்”

“பரவால்லங்க.. அத உபக்கதைல சேர்த்துக்கலாம்”

“உபக்கதைனா?”

“கிளைக்கதை. நாவல்ல கிளைக்கதைகள் வச்சா நல்லாருக்கும். அதுல பயன்படுத்திக்கிறேன்”
நான் கடிகாரத்தில் நேரம் பார்த்தேன். மணி நான்கைத் தொட்டிருந்தது.

“இந்த வாரம் உங்களுக்கு ப்ரோகிராம் இல்லையா?”

“இருக்கே. ஆடி மாசம் முடியுற வரைக்குமே திருவிழா இருக்கும். செவ்வாய், புதன் ரெண்டு நாளும் தலைவாசல்ல நிகழ்ச்சி இருக்கு. வேற ஏதாவது கேட்கணுமா? இப்ப என் பொண்ணு வந்துட்டா அப்புறம் ப்ரீயா பேச முடியாது”

“ஆங்.. அதான் கேட்கலாம்னு இருந்தேன். உங்க குடும்பம் பத்தி சொல்லுங்க”

“என் குடும்பம்னா என் பொண்ணு தான். வேதா மந்திர்ல படிக்கிறா. ரொம்ப நல்லா படிப்பா. அதான் ஃபீஸ் கட்டி படிக்க வைக்கிறேன். அவகிட்ட சொல்லியிருக்கேன். இன்னும் ரெண்டு வருசம் மட்டும் தான் ஆடுவேன். அவ லைஃப்அ பாதிச்சிடக் கூடாதுல.ரொம்பலாம் ஆசையில்ல. காலேஜ் முடிச்சதும் ஏதாவது பெரிய கோச்சிங் க்ளாஸ்ல சேத்துவிட்டு ஒரு கவர்மென்ட் வேலைக்கு அனுப்பிடனும். அவளுக்கு இருக்குற திறமைக்கு குரூப் ஒன் பாஸ் பண்ணாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல. அதுதான் ஒரே லட்சியம்” அவள் இந்த முறை சிரித்தது மட்டும் தான் உண்மையாகத் தோன்றியது.

“உங்க கணவர் பத்தி எதுவுமே சொல்லலையே?”

“இருக்கான் ஒருத்தன்.. கணவர்ர்ர்னு” என இழுத்தாள். அதில் அதைக் கேட்டு என்ன செய்யப்போகிறாயென்ற அலட்சியம் இருந்தது.

நான் விடாமல் கேட்டேன். “வீட்ல இருந்து பாத்துக்குறாரா இல்ல ஏதாவது வேலைக்குப் போறாரா?”

“அவன் இருக்கான் ஜெயில்ல” அவள் சொன்ன விதம் கிண்டலுக்கு உரைப்பது போலில்லை.

“கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்”

அவள் முகத்தில் திடீரென மாற்றம் ஏற்படுவதைக் கவனித்தேன்.

“ப்ச் ரைட்டரு.. எனக்கு சொல்ற மூடு போய்டுச்சு. நீ போய்ட்டு இன்னொரு நாள் வர்ரீயா?”

நான் பதட்டமடைந்தேன்.

“இல்லங்க. நீங்க அவர பத்தி எதுவும் சொல்ல வேணாம். நீங்க டான்ஸ் ஆட போனப்ப நடந்த சுவாரஸ்யமான விஷயம் ஏதாவது இருந்தா சொல்லுங்க”

“அது இருக்கு நிறைய.. போன மாசம் கூட மங்கலம்னு ஒரு ஊருக்கு ப்ரோகிராமுக்கு போனோம். நல்ல காடு.திக்கு தெரியாத படுகிராமம். வண்டி மலை மேல முக்கி முக்கி ஏறுது. கோயில் முன்னாடி போய் நின்ன பின்னாடிதான் தெரிஞ்சது அது வேற ஊருனு. அங்கயும் அன்னிக்கு சரியான விசேஷமாட்டங்குது. கீழ் மங்கலம், மேல் மங்கலம்னு ரெண்டு ஊரு இருக்குனு எங்களுக்குத் தெரியல. இது கீழ் மங்கலம், மேல் மங்கலம் போகணும்னா மலைக்கு அந்த பக்கம் இருக்கு. அங்க போய் சேரவே ரெண்டு மணி நேரம் ஆகும்னு ஊர்க்காரங்க சொல்லவும் எங்களுக்கு பகீர்னு ஆகிடுச்சு. நல்ல இருட்டு வேற. பத்து மணி வரைக்கும் தான் பர்மிஷன் இருக்கு. ஒண்ணும் புரியாம பொழப்பு போச்சேனு நின்னோம். அந்த ஊரு பொண்டு பொடுசுங்க வந்து கைய புடுச்சி இழுக்குதுங்க. ரிக்கா டான்ஸு நாங்களாம் பாத்ததே இல்லக்கா.. எங்களுக்கு கொஞ்சம் ஆடிட்டு போங்க னு கெஞ்சி மாயுதுங்க. சரி இன்னிக்கு போனது போச்சு வாங்கன்னு ஊர்க்காரங்க கூட்டிட்டுப் போயி கோயில் திடல்ல உக்கார வச்சி பாக்கு மட்டையில கறிச்சோறு போட்டாங்க. கரண்டி நிரம்ப கெடாக்கறி அள்ளி வைக்க அப்படியொரு காட்டுருசிய இதுக்கு முன்னாடி நான் பாத்ததில்ல. வாய் வலிக்க வலிக்க தின்னு சலிச்சி உக்காந்தா வயிறு திம்முனு இருக்கு. புள்ளைங்க திரும்பவும் ஆடச்சொல்லி ரகளை. மேனகா தான் மொதல்ல எழுந்து நின்னா. தின்னது செரிக்கணும் வாங்கடினு அவதான் மொதல்ல ஆரம்பிச்சா. கோயில் குழாய்லயே பாட்ட போட்டு வாசல்லயே செம குத்து போட்டோம். ஊர்சனங்க முகத்துல அப்படியொரு சந்தோசம். நடுராத்திரி வரைக்கும் ஆடிக் களைச்சி எல்லா வண்டுங்களுக்கும் கைகுடுத்து பிரிய மனசில்லாம வீடு வந்து சேர்ந்தோம். அந்த மாதிரி நல்லதுமிருக்குது. சொல்ல முடியாத அளவுக்கு கெட்டதுமிருக்குது”

சொல்லி முடித்து பூரித்தவளின் முகத்தில் அந்த நாளின் நினைவடங்க நீண்ட நேரமானதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அற்புதமான காட்சி அது. மீண்டும் இயல்புக்குத் திரும்பியதும் அடுத்த கேள்வியை கேட்க நினைத்தபோது சரியாக கதவருகில் அரவம் கேட்டது. பள்ளிச் சீருடையில் உள்ளே நுழைந்தவள் அவளது மகளாக இருக்கக்கூடுமென நான் யூகித்தபோது அவளே சொன்னாள்.

“என் பொண்ணுதான்”

அவள் மகள் என் பக்கம் துளியும் திரும்பாமல் உள்ளறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள்.

“யார்கிட்டயும் பேச மாட்டா அவ. ரொம்ப சென்சிட்டிவ்” என்பதை அவள் பெருமையாகச் சொல்லும்போது போன் அடித்தது. எண்ணைப் பார்த்ததும் இடம் விலகித் தனியாகப் போய் பேசிவிட்டு வந்தாள். அவள் முகத்தில் சொல்ல முடியாதக் கலவரத்தின் நிழல் படிந்திருந்தது. நேராக உள்ளறைக்குப் போய் மகளிடம் ஏதோ பேசிய குரல் கலங்கலாக வெளியே கேட்டது. நான் ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தேன். அது பேசுவது போன்றுத் தெரியவில்லை. வாக்குவாதம் செய்வது போன்றத் தொனி அதிலிருப்பதாகப் பட்டது.

கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவளின் முகத்தில் இதற்கு முன்பிருந்த எள்ளலின் சாயல் முற்றிலுமாகக் காணாமல் போயிருந்தது.

“ரைட்டரு.. இன்னொரு நாள் இதப்பத்தி பேசிக்கலாம். எனக்கு ஒரு உதவி செய்யறியா?”

நான் என்ன என்பதுபோலப் பார்த்தேன்.

“என் தம்பி ரவுண்டானாகிட்ட நின்னுட்டு இருக்கான்‌. என் பொண்ண நீ கூட்டிட்டுப் போய் அவன்கிட்ட விட்டுட்டு போயிடுறியா? ப்ளீஸ்”

இதைச் சொல்வதற்கு எதற்கு இவ்வளவு கலவரம் என்பது போல நான் புரியாமல் அமர்ந்திருந்ததை அவள் உணர்ந்திருக்க வேண்டும்.

“உடனே போகணும்? கொஞ்சம் கிளம்புறியா? ” என அவள் கேட்டுக் கொண்டிருந்தபோதே அந்தப் பெண் அறையிலிருந்து வெளியே வந்தாள். அவள் முகம் நெருப்பை வாரி இறைத்தது போன்றக் கோபத்தைக் கொண்டிருந்தது அசாதாரணமானச் சூழலை அங்கு உண்டு பண்ணியிருந்தது.

“நான் போக மாட்டேன். அந்தாளு வரட்டும். அவனா நாமளான்னு பாத்துடலாம். மாமாவ வீட்டுக்கு போகச்சொல்லு. இப்படி யார் கூட வேணாலும் அனுப்புறத மொதல்ல நிறுத்து. நான் எங்கயும் போக முடியாது” அவள் முகத்தில் பிடிவாதத்தின் இறுக்கம் பரவி நிலைபெற்றிருப்பதை நாங்கள் இருவருமே உணர்ந்து கொண்டோம். அவள் மீண்டும் உள்ளறைக்குச் சென்று கதவை சாத்தித் தாளிட்டுக் கொண்டதும்; இவளது கண்களில் நீர் தளும்பியிருந்தது. அதை துடைக்கக்கூடத் தோன்றாமல் திரும்பி என்னைப் பார்த்தாள்.

நான் காரணம் புரியாத அவஸ்தையோடு அவ்வீட்டிலிருந்து வெளியேறுவதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன்.

நான் கேட்பதற்குள் அவளே ஆரம்பித்தாள்.

“அவ சொல்றது என் புருசனைத்தான்” என்று நிறுத்தி சன்னலில் தெரிந்த வானத்தைப் பார்த்தாள்.

“இத்தோட மூணு தடவ நான் ப்ரோகிராம் போன பின்னாடி அவன் அவ பக்கத்துல போய் படுத்துருக்கான்”

சொல்லி முடித்து என் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள் பரவுவதை அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் தடுமாறிய குரலில் கேட்டேன்.

“உங்க புருசன்னா?”

அவள் புரிந்து கொண்டதுபோல இரு கைகளையும் சேர்த்து சத்தியம் செய்தாள்.

“அது அவனோட பொண்ணுதான். அது அவனுக்கு நல்லாவே தெரியும்”

எனக்கு அடுத்து என்ன சொல்வதெனத் தெரியவில்லை. உள்ளறையில் அப்பெண் அழும் சத்தம் இப்போது சன்னமாகக் கேட்கத் தொடங்கியது.

“என்னங்க இது? கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு” அவை என் வாயிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகளாக எனக்குத் தோன்றவில்லை. ஆறுதலுரைக்கும் பொருட்டு ஏதோவொன்றை உளறிவிடக்கூடாதென்ற நிதானத்தை வளர்த்தும் என்னால் கடைபிடிக்க முடியவில்லை.

“இல்லங்க. அது வேறவங்களுக்குப் பொறந்ததாவே இருந்தாலும் இப்படிப் பண்ண யோசிக்கிறவன் மனுசனே இல்ல”

அவள் மேசையிலிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள். வரவழைத்துக் கொண்ட உறுதியோடு கண்கள் ஒளிர்ந்தன.

“நான் டான்ஸ் ஆடப்போறதால தான் இப்படி தகப்பனே மகளை தப்பா நினைக்கிறான்னு உள்ளுக்குள்ள தோணுதா ரைட்டரு?”

நான் எதுவும் சொல்லாமல் தடுமாறினேன். எந்த நேரமும் எழுந்து வெளியேறிவிட வேண்டுமென்ற பதட்டத்தை மறைத்துக் கொண்டு “அப்படிலாம் இல்ல..” என சம்பிரதாயமாகச் சொற்களை உதிர்த்தேன்.

“அப்படிப் பாத்தா என்னோட அம்மா வாரத்துக்கு மூணு கிழமை ஆஞ்சநேயரக் கும்பிடவா. வீட்டு வாசலத் தாண்டினது இல்ல. ஒரு ஆம்பளையப் பார்த்து தலைநிமிந்துப் பேசுனது இல்ல.ஆனா….” எனச் சொல்லிவிட்டு என்னைக் குத்துவது போலப் பார்த்தாள். என்னால் அவள் கண்களைப் பார்க்க முடியாமல் குனிந்து கொண்டேன். எனது உடல் கூசி ஒருவித சிலிர்ப்பு பரவுவது போலத் தோன்றியது.

அவள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரித்தாள். “இது ஒரு சங்கிலித் தொடர் மாதிரி இப்ப என் மகளுக்கும் நடக்குறது தான் ஆச்சரியமா இருக்கு”

சற்றுநேரம் அவ்வறையில் கனத்த அமைதி பரவியிருந்தது. உள்ளறையிலிருந்து வந்த விசும்பல் ஒலி நின்றிருந்தது. நான் இருக்கையிலிருந்து எழுந்ததும் அவளும் எழுந்து நின்றாள். அவள் கண்கள் மீண்டும் ஈரமாவதாகப்பட்டது.

“கிளம்பறியா? அப்படினா மீதிய போன்ல சொல்லட்டுமா?”

நான் தலையசைத்தேன். “இல்லங்க இதுவே போதும்‌”

அவள் நான் சொன்னதை நம்பாமல் சந்தேகத்துடன் பார்த்தாள். நான் மௌனமாகத் திரும்பி நடந்தேன். முதுகுத் தண்டில் அவள் கண்கள் நிலைத்திருப்பதாகப்பட்டதும் திரும்பி விடக்கூடாத உறுதியை வரவழைத்துக்கொண்டு நடந்தேன். வண்டியிலேறி அமர்ந்ததும் லேசான தூறல் ஆரம்பித்திருந்தது.


AI-generated art is used in this Story.

எழுதியவர்

ந.சிவநேசன்
ந.சிவநேசன்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் ஆரியபாளையம் சிற்றூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர். இவரின் கவிதைகள் காலச்சுவடு, புரவி, வாசகசாலை, ஆனந்தவிகடன், கணையாழி, தி இந்து நாளிதழ், படைப்பு கல்வெட்டு, தகவு, காணிநிலம், கீற்று, நுட்பம் போன்ற பல்வேறு இதழ்களில் வெளியாகி வருகின்றன.
கவிதை, சிறுகதை போட்டிகளில் கலந்து பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

இவரின் கவிதைத் தொகுப்புகள் :
'கானங்களின் மென்சிறை' (படைப்பு பதிப்பகம் வெளியீடு),
‘ஃ வரைகிறது தேனீ’ (கடல் பதிப்பகம்),
‘ இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை’ ( வாசகசாலை பதிப்பகம்)
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x