13 October 2024
na sivanesan7

ன் பெயரை எங்குமே ரேணுகா என சொல்லக்கூடாதென்ற கட்டுப்பாடு அவளுக்கு இருந்தது. வீட்டிலோ வெளியிலோ யார் விசாரித்தாலும் ரேணுகா ரகு என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்ல மட்டுமே அவள் பணிக்கப்பட்டிருந்த போதும் ரேணுகா சுப்ரமணியன் என தந்தைப் பெயரோடு சொல்வதுவும் அழைப்பதுவுமே அவளுக்கு பிடித்தமானது. அதைவிட அவளது அம்மா சொல்லும் பாபி என்ற பெயர் அவள் மனதுக்கு அவ்வளவு நெருக்கம். ஆனால் அப்படியான பெயர்களுக்கு இந்திய இறையாண்மைக்கு எதிரான வார்த்தைகள் போல ரகு தீவிரத் தடை விதித்திருந்தான்.

‘அதென்ன பாபின்னு அசிங்கமா? நீயென்ன நாய்க்குட்டியா..’ என அவன் கிண்டல் செய்ததிலிருந்து அந்த செல்லப்பெயர் மெல்ல வழக்கொழிந்துப் போனது.

ஏதேதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்ததில் போன் இருமுறை சிணுங்கியும் அவள் கவனிக்கவில்லை. மூன்றாவது முறை நினைவு வந்து அவசரமாக எடுத்தாள். அம்மா தான்.

“சொல்லும்மா..”

“ரேணு என்னால ஒண்ணும் முடியலடி. மூச்சு விட சிரமமா இருக்கு”

“மாத்திரை போட்டியா இல்லையா”

“போட்டும் கேட்கலம்மா..”

குரல் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்வதை உணர்ந்தாள். ரேணுகாவின் அம்மாவுக்கு தீவிரமான ஆஸ்துமா பிரச்சினை. பதினைந்து வயதிலிருந்து அதனோடு போராடிக் கொண்டிருக்கிறாள். ஸ்டீராய்டு மாத்திரைகள் ஒருகட்டத்தில் பலனளிக்காமல் போக தேவைப்படும்போதெல்லாம் இன்ஹேலரை உறிஞ்சி மூச்சிரைப்போடும் வறட்டு இருமலோடும் வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கிறாள்.

திருமணம் முடிவான நாளிலிருந்தே தன்னை ரகுவுக்கு பிடிக்காமல் போனதை மணமேடையில் அமர்ந்திருந்தவனின் பார்வை முன்வரிசையில் இருந்த தெற்றுப்பல் யுவதியை நோக்கியே பாய்ந்து கொண்டிருந்ததை வைத்து ஓரளவு அனுமானித்துவிட்டாள். முதல் இராத்திரியில் அவள் தன் காதலி என்பதையும் வீட்டிலிருப்போர் பேச்சை மீறி தன்னால் எதுவும் செய்யமுடியாமல் தான் இந்த கல்யாணத்துக்கு உறுதி அளித்ததையும் சொல்லி அவன் ஒப்பாரி வைத்தபோது அவள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. சந்தேகம் தீர்ந்துவிட்ட திருப்தி மட்டுமே அவளுக்குள் நிறைந்திருந்தது. அன்றைய இரவின் அவன் தொடுகை இயந்திரத்தனமான ஒப்பேற்றிக் கடமையை முடிக்கும் ஒன்றாக இருந்ததை அவள் நன்றாக உணர்ந்தாள். தனக்கு ஏன் தெற்றுப்பல் இல்லை, தான் ஏன் அவளைப் போல ரகுவுக்கு பிரியப்பட்டவளாக ஆகமுடியவில்லை என்றெல்லாம் ஒரு நாளும் அவள் கவலைப்பட்டதில்லை.

கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடுமென நினைத்தும் ரீத்து பிறந்த பிறகும் அவனின் இறந்தகாலத்தில் மிதக்கும் செயல்பாட்டில் யாதொரு மாற்றமுமில்லை. சொல்லப்போனால் அந்தப் பெண் மீதான ஈர்ப்பு அதிகரித்திருப்பதையும் அதன் காரணமாக அவளோடு தொடர்ந்து பழகிக் கொண்டிருப்பதையும் அறிந்து கொண்ட நாளிலிருந்து உறக்கம் தொலைந்துப் போனது.

அம்மாவைத் தவிர எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்திடாத அப்பா ஏற்படுத்தித் தந்த ஆண்கள் மீதான கதாநாயக பிம்பம் கணவனிடம் ஆட்டம் கண்டதில் அவளுக்கு பெரிய ஆச்சரியமில்லைதான். அதையெல்லாம் அவள் கடந்துவிட்டிருந்தாள். அவன் முதன்முதலாக விவாகரத்து விண்ணப்பத்தை நீட்டியபோது ஏற்பட்ட மிரட்சியும் பயமும் இப்போதில்லை.

அப்பா சர்க்கரை அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் அவன் அந்த செக் வைக்கத் தவறவில்லை.

‘இதுல ஒரு கையெழுத்து போட்டுட்டு அப்புறம் உங்க அப்பாவ பாக்கப் போலாம்’

‘இதுக்கும் அதுக்கும் என்னங்க சம்பந்தம்?’

விகாரத்தைப் போர்த்திய நளினமான சிரிப்பொன்று அவன் முகத்தில் உதித்தது. ‘பின்ன.. உன்ன மிரட்டி வற்புறுத்தியா வாங்க முடியும்? இந்த மாதிரி டைம்ல சாதிச்சிக்கிட்டா தான் உண்டு‌’ இப்படியெல்லாம் குரூரமாக அவன் சிந்திப்பது இத்தனை வருடங்களில் மாறவேயில்லை. ஆரம்ப வருடங்களில் அடித்தும் வெளியே தள்ளி கதவை சாத்தியும் நாள்முழுதும் இரசித்துக் கொண்டிருப்பான். இப்போதெல்லாம் எவ்வளவு அடித்தாலும் மரத்துப் போனதைப் போல நிற்கப் பழகிவிட்டதாலும், பொறுக்கமுடியாமல் எதிர்த்து ஓரிரு முறை பதிலுக்குத் தாக்கியதாலும், உளவியல்ரீதியாகத் துன்புறுத்தும் வேறு உத்திகளைக் கையாளத் தொடங்கிவிட்டான்.

மருத்துவமனையில் மாற்றிவிடக் கூட ஆளின்றி அம்மா தவித்துக் கொண்டிருக்கும் காட்சியை இவள் இங்கே சுவர்களுக்குப் பின்னால் அழுது கரைத்துக் கொண்டிருந்தாள்.
அப்போதுகூட அவள் எதிர்பார்க்கவில்லை
அப்பாவின் பிணத்தை வைத்தும் இவன் அதே அரசியலைச் செய்வானென்று. காரிய வீட்டுக்கு வருமாறு கையைப் பிடித்து இழுத்து அழுதாள். அப்போதும் அவன் அதே தூண்டிலின் முள்ளை தன் கோரச்சிரிப்பால் கூர்தீட்டிக் கொண்டிருந்தான். ரீத்துவின் நிலையை எடுத்துச் சொன்னபோது அதற்கும் ஒரு தொகையை செட்டில்மென்ட் செய்து விடுவதற்கான சகல வசதியையும் தெற்றுப்பல்காரி பெற்றிருப்பதாக வந்து விழுந்த இரக்கமற்ற சொற்கள் இன்று வரை அனலடித்துக் கொண்டிருக்கின்றன.

கடைசியாக அவளை அவன் பாவனையான காதலோடாவது நெருங்கி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன என்பதே அவளுக்கு மறந்துவிட்டிருந்தது.

எவ்வளவு துரத்தினாலும் துன்புறுத்தினாலும் அவளுக்கு வாசலைத் தாண்டத் தெரியாதென அவனுக்கும் தெரியும். தன்னைவிட்டுப் போகமாட்டாளென்ற நிலையில் தன் ஆற்றாமை ததும்பும் இயலாமையின் வடிகாலாக இல்லாளைப் பயன்படுத்திக் கொள்ளும் கணவன்களில் ஒருவனாக அவனும் மாறிவிட்டிருந்தான். தோற்றவனைப் பின்தொடர்ந்து தோல்வியை ஒப்புக்கொள்ளச் சொல்லி காயப்படுத்தும் எதிரியின் மனநிலையை அது ஒத்திருந்தது.

அம்மா ஆறாவது முறையாக அழைக்கிறாள்.

“டீ ரேணு முடியலடி.. ஆட்டோ புடிக்க கூட எழ முடியல. வரியா சீக்கிரம்..”

இப்போது இந்த போன்காலைக்கூட கவனித்துக் கொண்டிருப்பவனைக் கடந்து செல்ல பல கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். அந்த சாடிஸ்ட்தனமான சிரிப்பை பார்க்கையில் ‘போடா………..’ என சொல்லிவிட்டு வந்துவிடலாம் தான். அப்பாவின் விரல்பிடித்து நடந்த தடத்தில் இடையில் இவனிடம் கைமாற்றிவிட்டுப் போனதில் தான் பிரச்சினை. கையை வெடுக்கென இழுத்து ‘தனியே நடம்மா’ என்றவர் சொல்லியிருக்கலாம் தான். படித்த படிப்புக்கான பணியை பத்து வருடங்களுக்கு முன்பே தேடியிருக்கலாம் தான். யாரோ ஒருவரின் நிழலில் இருப்பதே நிம்மதியான வாழ்வென்று சொல்லிக் கொடுத்தவர்கள் மேல் அவ்வளவு கோபம் வருகிறது.

 

ரேணு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தபோது அம்மா கதவையெல்லாம் பூட்டிவிட்டு வாசலில் தயார் நிலையில் படுத்துக் கிடந்தாள்.

“ஏன்டி இவ்ளோ நேரம்?” என மூச்சிரைக்கக் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதிலில்லை. மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அம்மா தோளிலேயே சாய்ந்தபடி வந்தாள். முகத்தில் சிந்தும் நீர்த்துளிகளை இனங்கண்டு கைகளை சிரமப்படுத்தி உயர்த்தித் துடைத்துவிட்டாள்‌. முகத்தில் நெபுலைசரை வைத்துப் பிடித்து சுவாசம் சீரான பிறகே மனதுக்குள் இதம் பரவியது. நேராக வீட்டுக்குச் செல்லலாம் என அம்மா சொன்னபோது தான் ரேணுவுக்கு ஞாபகம் வந்தது.

“அம்மா கோவளம் பீச் போலாமா?”

அம்மா நிமிர்ந்து பார்த்தாள். எதுவும் பேசவில்லை. அவளது சிறுவயதிலிருந்தே அவர்களுக்கும் கோவளம் பீச்சுக்குமான பந்தம் வரையறைக்குட்படாதது. ஒவ்வொரு வெள்ளி மாலையும் அவள் பள்ளி முடிந்து வர தயாராக இருப்பார்கள். பீச் மீன் வறுவலின் வாசத்தோடும் ஈரமணலின் தொடுகையோடும் ஆயிரம் கேள்விகளை அவளுக்குள் எழுப்பிக் கொண்டிருக்கும்.

‘அப்பா கடல் ஏன் இவ்ளோ நீளமா கெடக்கு?’

‘அது உலகத்த சுத்தியிருக்குற பூமியோட தொப்புள்கொடிமா’

‘அப்பா இங்க இருக்குற காத்து மட்டும் ஏன் இவ்ளோ ஜில்லுனு இருக்கு?’

‘அது கடல்ல குளிச்சிட்டு வருதுமா’

அத்தனை கேள்விகளுக்கும் சளைக்காமல் தலைமுடியை கோதியபடி ஆவி பறக்கும் வேர்க்கடலைகளை ஊட்டிவிட்டபடியே பதில் சொல்வார். இன்னும் நிறைய கேட்கச் சொல்லி ஊக்கப்படுத்துவார். கேட்க கேட்கத் தான் அறிவு விசாலமாகுமென அடிக்கடி எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருக்கும் அப்பா ரகுவின் முன் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தும் அவ்வளவு பணிவாக கடன்காரனைப் போல் நின்றிருந்ததை மறக்க முடியவில்லை.

‘நீங்க வந்து… ரேணுகாவ எதுக்கெடுத்தாலும் ஊசி குத்துற மாதிரி குத்துறதும் விவாகரத்து தரச் சொல்லி வற்புறுத்துறதும் என்னங்க பழக்கம்?’

அவர் வாயிலிருந்து மிருதுவான தொனியில் வார்த்தைகள் வந்துவிழும்போது நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டான். ஏதோ செய்திடாத ஒரு குற்றத்தை தன் மேல் சுமத்திவிட்டதைப் போல் அவ்வளவு பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருப்பான்.ஆனால் இவர் பேசிவிட்டு நகர்ந்தபிறகு இவளிடம் தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிடுவான் எனத் தெரிந்து தன்னை தயார்படுத்திக் கொள்வாள். சமைத்து வைத்திருக்கும் அத்தனை உணவுகளையும் சிந்தாமல் சிதறாமல் எடுத்து வாஷ்பேசினில் கொட்டிவிட்டு வந்தமர்வான். அவள் முன்பாகவே காதலிக்கு போன் செய்துக் கெஞ்சுவான். ரீத்துவை பார்க்க வைத்தபடியே மது அருந்துவான். பிறரது மனங்களை வளைகோட்டுப் பாதையில் சிதறடிக்கும் அத்தனை வழிகளையும் தெரிந்து வைத்திருப்பான். இவையனைத்தையும் சுப்ரமணியனும் அறிவார்.

‘உங்களுக்கு அப்படி யார் கூடவோ தான் சகவாசம் இருக்குன்னா அவங்களையே கல்யாணம் பண்ணியிருக்கலாம். வீணா எம் பொண்ணோட வாழ்க்க..’

வார்த்தையை முடிக்க முடியாமல் தடுமாறியவரின் கண்களில் நீர் பொங்கியது இன்றும் நினைவிலிருக்கிறது. அதற்கு மேல் பேச முடியாது அந்த இடத்தை விட்டு அகன்ற அந்த நாள் தான் கடைசியாய் அவர் அங்கு வந்தது.

 

அம்மா தூரத்தில் அலைகளில் கால் நனைத்து ஒரு குழந்தையைப் போல விளையாடிக் கொண்டிருந்தாள். பாவம். தனிமையை சற்றும் விரும்பாத ஆனால் தனிமையே நிரந்தரமாகிவிட்ட அப்பிராணி அவள். அந்த அலைகளும் கூட அவள் விரட்ட நினைக்கும் தனிமையைப் போலத்தான் போக்கு காட்டி பின்வாங்கி பின் கால்களைச் சூழ்ந்து கவ்விக் கொள்கின்றன.

‘ஏன்டி இப்படி அழுத்தமா இருக்க? அங்க நடக்குற பிரச்சினை எதுவுமே அம்மாகிட்ட சொல்றது இல்ல?’ என அவள் அடிக்கடி கேட்கும்போதெல்லாம் உடைப்பெடுக்கும் மடைநீரென சொற்கள் வாய் வரை வந்து நிற்கும். ஆனால் ஏற்கனவே மூச்சுக்குத் திணறிக் கொண்டிருக்கும் அவள் மார்பின்மீது பெருஞ்சுமையை தூக்கி வைக்கக்கூடாதென அப்படியே விழுங்கிவிடுவாள்.

‘ரேணு.. வாரத்துக்கு ஒரு தடவையாச்சும் அம்மாவ வந்து பாத்துட்டுப் போகக் கூடாதா?’ என குழந்தையைப் போல போனில் ஏங்குபவள் ஒவ்வொரு முறை போகும்போதும் ரீத்துவை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு தன் கணவனோடு வாழ்வாங்கு வாழ்ந்தக் கதையை சொல்லி தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருப்பாள்.

சற்றுமுன் மூச்சு விடமுடியாமல் திணறிக் கொண்டிருந்த அம்மாவா இது?

“பாபி.. வாடி இங்க.. அங்கயே உட்கார்ந்துட்ட.. கால் நனைக்கலாம் வா..”

இவளும் தன் பங்குக்கு நுரை ததும்பும் நீரில் நின்று பாதம் சொரிந்து நழுவும் மணல் துகள்களை ஆராதிக்கத் தொடங்கினாள்.

“வீட்டுக்குப் போகலையாடி.. ரீத்து தனியா இருப்பாளே..”

அம்மாவின் கேள்வியில் கடமையுணர்ச்சிக்குள் தள்ளும் பொறுப்பை விட உடனே கிளம்பிவிடுவாளோ என்ற பரிதவிப்பும் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பாளா என்ற எதிர்பார்ப்புமே அதிகமிருந்ததை அவளால் உணர முடியாமலில்லை.

‘அம்மாவ பார்க்க போறேன்.. அவங்களுக்கு உடம்பு சரியில்ல..’ என்றபடி நின்று கொண்டிருந்தவளின் கண்களில் சூழ்ந்திருந்த வெறுமையைக் கண்டவனுக்கு இன்று பொழுதுபோகத் தேவையானது கிடைத்து விட்ட மகிழ்ச்சி.

‘தாராளமா போலாமே.. ஆனா அது நிரந்தரமா இருந்தா நல்லாருக்கும்னு தானே நான் சொல்லிட்டுருக்கேன்’ என்றவனின் முகத்தில் என்றென்றைக்குமான வெறுப்பு குடியேறியிருந்தது. ரேணுகா புறப்பட்டு தயார் நிலையில் நின்றிருப்பதைக் காணக் காண அவளை சீண்டி விளையாடும் தன் திமிருக்கு தீனி கிடைத்துவிட்ட திருப்தி‌. வழக்கமான தன் அஸ்திரத்தை தேடி மேசைகளில் துழாவினான். ‘எங்கே போயிற்று?’ பதட்டத்தோடு அங்குமிங்கும் ஓடியவனை ரேணுகாவின் குரல் தடுத்து நிறுத்தியது.

‘இதத் தானே தேடுறீங்க?’ என அவள் நீட்டிய படிவத்தை அவசரமாய் பிடுங்கிப் பார்த்தான்.

அவளே படிவத்தை நிரப்பியிருந்தாள். காரணம் என்ற கட்டத்தில் மனநோய் பீடித்தவனுடன் வாழ முடியாதென எழுதி கீழே ரேணுகா சுப்ரமணியன் என்று கையெழுத்திட்டிருந்தாள்.

ஒரு நிமிடம் அவனுக்கு நா எழவில்லை. எப்போதும் தன்னுடைய வதைமுகாமில் அவ்வப்போது சித்ரவதைக்கு உட்படுத்தப்படுவதற்காக மட்டும் உயிரை மிச்சம் விட்டு வைத்திருக்கும் ஒரு நோஞ்சான் கைதியாகவே வாழ்நாள் முழுமைக்கும் அவளை ஆளவேண்டுமென்ற தன் கணக்கு ஒரு நொடியில் பொய்த்துப் போனதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

அவன் பதிலுக்கோ சம்மதத்துக்கோ காத்திராதத் தோரணையோடு படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த ரீத்துவையும் பேக் செய்யப்பட்ட சூட்கேஸையும் எடுத்துக் கொண்டு வெளியேறியவளை திக்கித்தபடி பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை அவனுக்கு.

தூரத்து அலைகள் அமுங்குவதும் அப்படியே பம்முவதுபோல் கீழிறங்கி அருகில் வந்து விஸ்வரூபமெடுப்பதும் தன் வாழ்வை பிரதிபலிப்பது போலத்தான் இருக்கிறது. ரீத்து இந்நேரம் விழித்திருப்பாள். தன் நெருங்கியத் தோழியின் வீட்டில் அவளை விட்டுவிட்டு வந்திருக்கிறாள். அம்மாவின் இறுதிக்காலம் வரையிலும் கூட தான் ரகுவைப் பிரிந்துவிட்டதை அவள் அறியக்கூடாதென தெளிவாக தீர்மானித்திருந்தாள். அவனிடமும் ஒற்றை நிபந்தனையாக அதைத்தான் கூறிவிட்டு வந்திருக்கிறாள். அப்படி ஒருவேளை தெரிந்துப்போனால் அன்றே அம்மாவின் இறுதி நாளாகிவிடக் கூடுமென்ற பயம் அவளுக்குள் உறைந்திருக்கிறது. இனி வீடு தேட வேண்டும். தனக்கான பணியொன்றில் அமர வேண்டும். அம்மாவை இனி எப்போது வேண்டுமானாலும் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே அனைத்துக் கவலைகளையும் அவளுக்கு மறக்கச் செய்துவிட்டிருந்தது.

“சரிம்மா.. நான் கிளம்புறேன்.. அவர் வேறத் தேடுவாரு.. ரீத்துவும் அழ ஆரம்பிச்சுடுவா..” என்று மணலைத் தட்டிவிட்டு எழுந்து கொண்டாள்.

“சரிடா கண்ணு.. எனக்கு இங்கயே ஒரு ஆட்டோ பிடிச்சு விடு. நான் போய்க்குறேன் ” என்றவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அழும் தோரணையில் எச்சில் விழுங்கி வார்த்தைகளை தயார்நிலைக்குக் கொண்டுவந்தாள்.

“இங்க பாரு ரேணு.. ரகு முன்ன மாதிரியே தான் இருக்காரா.. கொஞ்சம் பொறுத்துப் போய்க்கோடா.. நீ அவரு தேடுவாருன்னு சொன்னதும் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? நீ நல்லா இருக்கணும்னு தான் அப்பா கஷ்டப்பட்டார். என்னை நினைச்சிலாம் கவலப்பட வேணாம். இப்படி அடிக்கடிலாம் இனி கூப்பிட மாட்டேன்…” என தழுதழுத்தவளை இமைக்காமல் மௌனமாய் பார்த்தாள்.

ஆட்டோ ஒன்றைப் பிடித்து அம்மாவை அதில் அமரவைத்துக் கையசைத்தாள். வளைவில் சென்று மறையும் வரை பார்த்திருந்துவிட்டு நகர்ந்தவளின் தொண்டைக்குழியில் அம்மாவிடம் சொல்லத் துடித்த வார்த்தைகள் அப்படியே தேங்கியிருந்தன.

‘தழும்புகளின் மீது ஈக்கள் அமர்வதில்லை அம்மா’.

 

எழுதியவர்

ந.சிவநேசன்
ந.சிவநேசன்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் ஆரியபாளையம் சிற்றூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர். இவரின் கவிதைகள் காலச்சுவடு, புரவி, வாசகசாலை, ஆனந்தவிகடன், கணையாழி, தி இந்து நாளிதழ், படைப்பு கல்வெட்டு, தகவு, காணிநிலம், கீற்று, நுட்பம் போன்ற பல்வேறு இதழ்களில் வெளியாகி வருகின்றன.
கவிதை, சிறுகதை போட்டிகளில் கலந்து பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

இவரின் கவிதைத் தொகுப்புகள் :
'கானங்களின் மென்சிறை' (படைப்பு பதிப்பகம் வெளியீடு),
‘ஃ வரைகிறது தேனீ’ (கடல் பதிப்பகம்),
‘ இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை’ ( வாசகசாலை பதிப்பகம்)
Subscribe
Notify of
guest

3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
முத்துராமராசா
முத்துராமராசா
1 year ago

அருமை, சிறப்பு , வாழ்த்துகள் தம்பி 💐

Anitha
Anitha
1 year ago

Good tragic story

You cannot copy content of this page
3
0
Would love your thoughts, please comment.x
()
x