
வழக்கமாக இதுபோன்ற இரவுகள் எங்களுக்கு அதிகம் வாய்க்காது. குறிப்பாக பௌர்ணமி ஒளிவீசும் மொட்டை மாடியில் மதுபாட்டில்களோடு அமர்ந்து கதை பேசியபடி துளியும் தூக்கமின்றி நகர்த்திச் செல்லும் இரவுகள் எப்போதாவது அரிதாகவே வாய்க்கும். வாய்ப்பை உருவாக்கித் தந்த மருது அண்ணன் கையில் தின்பண்டக் கவர்களோடு முதலில் மேலேற நான் வெப்பமானியின் அளவை பத்து மணி நிலவரப்படி குறித்துவிட்டு எழுந்தேன்.
அந்தோணிராஜ் தான் முதலில் ஆரம்பித்தான்.
“நான் சொல்வது கதையென்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் நூறு சதவீதம் சத்தியம்”
எனக்கு அந்தோணிராஜை இந்த அலுவலகத்துக்கு அவன் வந்த நாளிலிருந்து நன்றாகத் தெரியும். அவ்வளவாக பொய் பேசமாட்டான் என்ற நம்பிக்கை.
“அதெல்லாம் இல்லை.. நீ சொல்”
நாங்கள் மொத்தம் ஐந்து பேர் இரவு ஷிப்ட்டில் இருந்தோம். கடைசியாக உள்ளே வந்த மணியரசன் கீழே பார்த்துக் கூவி நாய்கள் காவலுக்கு இருப்பதை உறுதி செய்துவிட்டு வந்து அமர்ந்தார்.
அந்தோணிராஜ் இன்னும் டம்ளரைத் தொடவில்லை. அவன் சொல்வதை வைத்துக் குடித்துவிட்டு உளறுவதாக நாங்கள் சொல்லிவிடக் கூடாதென நினைக்கிறான் போலும்.
“அதற்காக நீ சொல்லி முடிக்கின்ற வரைக்கும் இப்படியே இருக்கப்போகிறாயா? சும்மா சாப்பிடு” என மருது அண்ணன் எடுத்து நீட்டினார். அவன் ஒரு சிறு தயக்கத்துக்குப் பிறகு ஒரே மடக்கில் அதை சாய்த்துக் கொண்டான்.
இந்தக் கதை ஏற்காட்டில் எனது சொந்த ஊரில் ஆரம்பிக்கிறது. அப்போது எனக்கு வயது ஒன்பது அல்லது பத்து இருக்கலாம். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன்பு நடந்தவற்றை மிகுந்த சிரமங்களுக்கிடையில் மீட்டு நினைவுகூறும் ஒரு வயதென வைத்துக் கொள்வோம். எனது அம்மா கூலி வேலைக்குப் போய் வந்தாள். அப்பா ஒரு எஸ்டேட்டில் வாட்ச்மேனாக இருந்தார். அன்று தேவையான உணவு அன்றே நிரம்பக் கிடைத்துவிட்டால் மகிழ்ந்து துள்ளும் ஒரு படுசாதாரணமான குடும்பம் எங்களுடையது. எனக்கு சித்தப்பா ஒருவர் இருந்தார். பெயர் ஜெபத்துரை. எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும். பந்தயம் கட்டி கோலி விளையாட, உயர்ந்த மரங்களில் ஏறி உடும்பு பிடித்து வர தேயிலைப் பயிர்களை நாசம் செய்ய வரும் காட்டெருமைகளை விரட்ட என எங்கு சென்றாலும் அவர் என்னை கூடவே அழைத்துச் செல்வார். மதுக்கடைக்குள் நுழையும் போதும் அதேதான். என்னை கடைக்கு வெளித்திண்ணையில் அமர்த்தி மிளகு தூவிய முட்டையை கையில் தந்துவிட்டு உள்ளே போவார். நான் ஒவ்வொரு வில்லையாக எடுத்துத் தின்று கொண்டு அமர்ந்திருப்பேன். மீண்டும் அந்தி சாயும் நேரம் நாங்கள் மிளகுக்கொடிகள் படர்ந்த மரங்களைத் தாண்டி வீட்டுக்கு வந்து சேர்வோம். மஞ்சக்குட்டை தான் எங்கள் ஊர். அப்படியொன்றும் நான் அவரை தாங்கிப் பிடிக்காத போதும் தோளின் மீது அவரது கனத்த வலது கையைப் போட்டு தள்ளாட்டத்துக்கு ஈடு கொடுத்து நடப்பேன். பார்க்கையில் ஒரு பெருத்த மனிதனும் பொடியனும் சேர்ந்து போதையில் வருவது போல வேடிக்கையாக இருக்கும். ஊரார் சிரிப்பதைப் பார்த்து எனது அம்மா இதை கடுமையாக எதிர்த்தார்.
அவருக்கு நான் என் சித்தப்பா போல ஆகிவிடுவேனோ என பயம்.
ஆனால் குடியை விட ஒரு அதிர்ச்சியான செய்தி அவர்களுக்கு காத்திருந்தது. அது என்னவென்றால் நாவலூரைச் சேர்ந்த கல்யாணியும் சித்தப்பாவும் காதலித்துக் கொண்டிருப்பது. முழுவதுமாக விஷயம் வெளியில் தெரிந்தால் ஊருக்குள் பெரும் கலவரம் உண்டாகிவிடும் என என் குடும்பத்தார் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதையெல்லாம் சித்தப்பா பொருட்படுத்தவே இல்லை.
இரண்டு ஊர்களுக்கும் இடையிலான எல்லை கடும் வனப்பகுதியைக் கொண்டது. காட்டெருமைகளும் கரடிகளும் வந்துவந்துப் போகும் அந்த இடத்தில் தான் அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள்.அப்படியானதொரு நாளில் தான் அவர் என்னையும் உடன் அழைத்துப் போனார். அரசல்புரசலாக அவளைத் திட்டி வீட்டார் பேசுகையில் கேள்விபட்டிருந்த நான் முதன்முறையாக கல்யாணியை நேரில் பார்த்தேன்.
அந்தோணிராஜ் பேச்சை நிறுத்திவிட்டு சட்டென வானத்தைப் பார்த்தான்.
பேரழகி.
அனிச்சையாக அச்சொற்கள் வந்து விழுந்தன.
கல்யாணி கருத்த தேகத்தை உடையவள். ஆனால் அவளது கண்கள் வேறொரு ரகமான சுண்டியிழுக்கும் கருமையைக் கொண்டிருந்தன. உதடுகளும் அப்படியே. சாமி சிலைகளில் வடித்திருக்கும் குவித்து வைத்தாற்போன்ற உதடுகள் அவை.
அந்த வயதில் அவ்வளவு அழகை நேரில் பார்த்ததும் ஓடிப்போய் மடியில் படுத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அதை அவள் உணர்ந்தவளாக என்னைப் பார்த்ததும் ஆச்சரியத்தோடு இழுத்து அணைத்துக்கொண்டாள்.
அவள் சேலையில் கால்நடைகளுக்கு குளிப்பாட்டினாலோ பலாச்சுளைகளை ஆய்ந்தெடுத்துக் கழுவிக்கொண்டாலோ ஒரு வாசம் வருமே அதை நான் நுகர்ந்து கட்டுண்டுக் கிடந்தேன். ஆனால் அது நீண்ட நேரத்துக்கு நீடிக்கவில்லை. சித்தப்பா என்னை இழுத்து அப்புறப்படுத்தினார். ‘நாங்கள் கிடுநடுங்கி மரத்துக்குப் போகிறோம். நீ இங்கேயே இருந்து யாராவது வருகிறார்களா எனப் பார்’ என்றதும் எனக்குள் பயம் கவ்வியது. கிடுநடுங்கி மரத்தைப் பற்றி பாட்டி நிறைய சொல்லியிருக்கிறாள். அந்த வகை மரத்துக்கு அருகில் சென்றால் நம் உடல் நடுங்குமாம். பேச நா எழாது திக்கித்துப் போய் விழுந்து விடுவோமாம். சிலர் மூர்ச்சையுற்று இறந்துமிருக்கிறார்கள்.
‘கதை தானே சொல் சொல்’ என மணியரசன் குறுக்கிட்டதும் அந்தோணிராஜ் சத்தியம் செய்வது போல கைகளை அடித்தான்.
இந்த ஈஸ்டருக்கு நான் ஏற்காடு போவேன். நீங்களும் தாராளமாக வாருங்கள். இப்போதும் நாவலூர் வனப்பகுதியில் கிடுநடுங்கி மரங்கள் உள்ளன. அது முற்றிலும் உண்மை
நாங்கள் அவனது கதை சொல்லும் போக்கை சந்தேகங்களைக் கொண்டு இடைமறிக்க விரும்பவில்லை. மீண்டும் தொடரச் சொன்னோம்.
அதன்பிறகான நாட்களில் நான் அங்கு சலசலக்கும் சிற்றோடையின் ஓரம் அமர்ந்து நீருக்குள் உருளும் கற்களை பார்த்துக் கொண்டிருப்பேன். சில நேரங்களில் தாயம் விளையாட ஏற்ற கற்களைப் பொறுக்கிக் கொண்டு போய் பாட்டியிடம் நீட்டுவேன். பள்ளி முடித்து வரும் வழியில் பொறுக்கியதென அவள் கேட்பதற்கு முன்பு முந்திக்கொள்வேன். ஓடையினோரம் தலைப்பிரட்டைகளை விழுங்கும் திரட்டி மீன்களை வேடிக்கை பார்ப்பேன். சற்று நேரம் கழித்து சித்தப்பாவும் கல்யாணியும் மரத்துக்குப் பின்புறமிருந்து வெளிவருவார்கள். அவர்களுக்கு எதுவும் ஆகாதது கண்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அப்படி வரும்போதெல்லாம் கல்யாணியின் முகம் பூரணமான அமைதியைக் கொண்டிருக்கும். மீப்பெரும் மகிழ்ச்சியை நாம் கொண்டாடி முடித்தப்பிறகு கொண்டிருப்போமே அந்த வகையான அமைதி. அல்லது அளப்பரிய மகிழ்வை உடனடியாக செலவழித்துத் தீர்த்துவிட மனமின்றி தேக்கி வைத்து சிறிதுசிறிதாக கசிய விடும்போது முகம் காட்டிக் கொடுக்குமே.. அந்த மாதிரியான அமைதியென்றும் சொல்லலாம். அவர்கள் ஏன் கிடுநடுங்கி மரத்தைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கான காரணம் அப்போது எனக்குப் புரியவில்லை. ஆனால் வயதாக ஆகத்தான் புரிந்தது. அவர்கள் கூடலின்போது அதையொரு போதை வஸ்துவைப் போல கையாண்டிருக்கிறார்கள். சித்தப்பா திரும்பி வரும் வழியில் சிற்றோடையில் திரட்டி மீன்களைப் பிடிப்பார். கல்யாணியும் அவரும் குத்துக்காலிட்டு அமர்ந்து அவற்றைச் சுடுவதைப் பார்க்கும்போதே பசியெடுக்கும். கல்யாணி மூன்று தடவை எனக்கு திரட்டி மீனின் தீய்ந்தக் கறியை முள் விலக்கி எடுத்து ஊட்டிவிட்டிருக்கிறாள். சித்தப்பா நான்கைந்து சுட்ட மீன்களை ஊணான் இலையில் மடித்து அவளிடம் தருவார். அவள் அதை வாங்கி மடியில் கட்டிக் கொள்வாள். உறவுக்கார
பிள்ளைகளுக்காயிருக்கும் என நான் நினைத்துக் கொள்வேன்.
ஒருகட்டத்தில் அவர்கள் சந்தித்துக் கொள்வது அதிகரித்தபோது எனது பாட்டி வனத்துச்சின்னப்பரிடம் போய் வேண்டுதல் வைத்தாள். எப்படியாவது சித்தப்பாவை கல்யாணியிடமிருந்து பிரித்துக் கொடுக்குமாறு விழுந்துக் கும்பிட்டாள். வேண்டுதல் வெளியே தெரியக்கூடாதென அவள் யாரிடமும் சொல்லாமல் என்னை மட்டும் உடன் அழைத்துப்போனாள். வனத்துச் சின்னப்பர் எங்களுக்கானவர் மட்டுமல்ல. சேர்வராயன் காடுகளின் காவலாளி அவர். விறகெடுக்கும் பெண் பிள்ளைகளை காட்டெருமை தாக்காமலிருக்க, கொடி பறிக்கையில் அரவம் தீண்டாமலிருக்க, யாரும் உச்சியிலேறி தற்கொலை செய்து கொள்ளாமலிருக்க.. ஏன்.. அப்படிக் குதித்து இறந்தவர்களின் சடலங்களைத் தேட கீழே இறங்குபவர்களும் கூட வனத்துச் சின்னப்பரை பயத்தோடு வணங்கிச் செல்வார்கள். நான் பாட்டியோடு என்று அவரிடம் சென்றேனோ அதற்கு அடுத்த நாளே சித்தப்பாவோடு மீண்டும் சென்றேன். கல்யாணியும் சித்தப்பாவும் ஒன்றாக விழுந்து வணங்கினார்கள். கல்யாணியின் கண்கள் கலங்கியிருந்தன. ‘எங்களைப் பிரித்துவிடாதே’ என மருகினாள். உண்மையில் வனத்துச்சின்னப்பர் நிறைய குழம்பியிருப்பார் என நினைக்கிறேன். ஆனால் அதன்பிறகு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து ஒருநாள் கல்யாணியின் ஊர்க்காரர்கள் மஞ்சக்குட்டைக்கு வந்திறங்கினார்கள். நிறைய பேசினார்கள். இனி கல்யாணியை சந்திக்கக் கூடாதென எழுதி வாங்கினார்கள். எழுதி வாங்கி சரி செய்துவிடக்கூடிய சமாச்சாரமா இதுவென ஊரே சிரித்தது. ஆனால் அதன்பிறகு கல்யாணி வருவதில்லை. சிலநாட்களிலேயே அவளை அதே ஊரைச் சேர்ந்த வேறொரு குறுவியாபாரிக்கு கட்டிவைத்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள். அதை முன்பே அறிந்திருந்ததைப் போல சித்தப்பா முகத்தில் எந்தச் சலனமும் எழவில்லை.
அதன்பிறகு ஒருநாள் சித்தப்பா அதே மலையுச்சிக்கு என்னை அழைத்துச் சென்றார். கல்யாணியை மறக்கமுடியாத துயரத்தில் ஆளே மாறிப்போயிருந்தார். தூரத்தில் தெரியும் அந்த கிடுநடுங்கி மரத்தை வெறித்துப் பார்த்தவாறு அவர் அமர்ந்திருந்தார். நான் உட்கார முடியாத அவஸ்தையோடு நெளிவதை அவர் கண்டுகொள்ளவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு பெருமூச்சுடன் எழுந்து அவர் என் கைகளைக் கூட பிடிக்காமல் யாரோ போல நடந்துக் கீழிறங்கினார். கல்யாணியின் கண்களை, அவளது கொஞ்சலை நுகரமுடியாத எனது சோகம் அந்த வயதில் திரட்டி மீன்களைத் தின்ன முடியாதக் கவலையாக சுருங்கிப் போக நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.
எப்படியோ தனது வேண்டுதல் பலித்துவிட்டதாக ஒருநாள் எனது பாட்டி வனத்துச்சின்னப்பருக்கு சேவலறுத்து விருந்து வைத்தாள்.
இந்த இடத்தில் நிறுத்திவிட்டு அந்தோணிராஜ் எங்களைப் பார்த்தான். அடுத்து நிரம்பிய டம்ளரை நீட்டிய போது அதை மறுத்தான். சற்று நேரம் மௌனமாக இருந்து எதையோ யோசித்துவிட்டுத் திரும்பி வந்தான்.
எங்கே விட்டேன்? ம் சேவலறுத்தோம் இல்லையா.. அதன்பிறகு வீடு திரும்பியபோது சித்தப்பா அங்கில்லை. அவர் எழுதிய கடிதம் மட்டுமே இருந்தது. தனக்கு வாழப் பிடிக்கவில்லை என்ற ஒரே ஒரு வரியை மட்டும் அதில் எழுதியிருந்தார். ஊரே பரபரப்பாகி எங்கெங்கோ தேடினோம். நாவலூரில் கல்யாணி வீடு வரை போய் பார்த்தார்கள். ஆனால் கல்யாணி அங்கேயே தான் இருந்தாள். அவளுக்கு நாங்கள் போனபிறகு தான் சித்தப்பா காணாமல் போன விவரமே தெரிந்தது. அவள் முகத்தில் எந்தச் சலனமுமில்லை. அதன்பிறகு மூன்று மாதங்களாகியும் சித்தப்பா வீடு திரும்பாத போதுதான் அந்தக் கடிதம் உண்மையென்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.
இருந்தாலும் எனது பாட்டிக்கும், தந்தைக்கும் ஒரு நம்பிக்கை இருந்துகொண்டே இருந்தது. சடலம் கிடைக்காத வரை நம்பிக்கை இருக்கத்தானே செய்யும். எனது பாட்டி பாதாளத்தில் இறங்கி பிணம் மீட்டு வருபவர்களிடம் சொல்லிப் புலம்பினாள். ஆனால் எந்தப் பயனுமில்லை. அதன்பிறகு எனது பால்யம் அவ்வளவு நலமாக இல்லை. அடிக்கடி உடல்நலம் கெட்டது. மனதும் வனத்தை நோக்கியப் பயணத்துக்காக எந்நேரமும் ஏங்கிச் சலித்தது. எல்லோரும் சித்தப்பாவை மறக்கத் தொடங்கிய ஒரு நாளில் கல்யாணி தற்கொலை செய்து கொண்டாள் என்ற செய்தி எங்களை வந்தடைந்தது. அவள் தூக்கிட்டுக் கொண்டதை அப்போது எல்லோரும் பரபரப்பாகப் பேசினார்கள். ஒரு சிலர் எனது சித்தப்பா தான் வந்து அழைத்துகொண்டுப் போனாரென சொல்லி பயத்தைக் கிளப்பினார்கள். ஆனால் இப்போது தான் சித்தப்பாவுடன் கல்யாணிக்கு இருந்தக் காதல் முழுமையடைந்ததாக எனக்குத் தோன்றியது.
நாங்கள் திரும்பவும் இடைமறித்தோம்.
‘கல்யாணிக்கு ஏன் ஜெபத்துரையைப் பிடித்தது? அதுவும் மரணம் வரை செல்லுமளவுக்கு?’
‘அவ்வளவு அழகாக இருப்பாராயிருக்கும்’ என்றார் மருது.
‘அப்படிக் கூறமுடியாது. உண்மையில் எனது சித்தப்பா அழகில்லை. கருத்த சற்றே வட்டமான உருவம். சிறுவயதிலிருந்தே முன்தள்ளும் தொப்பை. அவ்வளவு வடிவானவர் இல்லை’ என பலமாக மறுத்தான்.
‘அப்புறம் எப்படி இது நிகழ்ந்தது? அளப்பரிய அன்பாக உருவெடுத்தாலும் அதற்கொரு முதற்புள்ளி இருந்திருக்குமே? ‘ என்றேன் நான்.
பொறுங்கள். கதை இன்னும் முடியவில்லை. இந்தச் சம்பவமெல்லாம் நடந்து முடிந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் நான் எட்டாம் வகுப்பு படிக்கத் தொடங்கியிருந்தபோதுதான் ஒரு டிசம்பர் மாதத்திய பின்னிரவில் அந்தக் கனவு வந்தது. முகம் தெளிவில்லாத பூமிக்கு மேல் ஒரு அடி உயரத்தில் மிதந்து வரக்கூடிய ஒரு பெண் என்னை கண்களைப் பொத்திக் கடத்துகிறாள். வழக்கம் போல பேய்க்கனவுகளில் என்ன நேருமோ அதுவே எனக்கும் நடந்தது.
மணியரசன் அவராகவே சொன்னார். ‘தொண்டைக்குழிக்குள்ளேயே சொற்கள் சிக்கிக் கொள்ளும். குரலெடுத்து கத்த முடியாது. கை கால்களை அசைக்க முடியாது. இதெல்லாம் எல்லோருக்கும் நேர்வது தான்’
ஆமாம். ஆனால் அவள் மீதான பயம் அதை விடவும் கொடியது. என்னைக் கடத்திக் கொண்டு போய் வைத்தப்பிறகு கண்கட்டுகளை அவிழ்த்து விடுவாள். அது ஒரு கிணறு. பழங்காலத்தில் ஆயில் என்ஜின் மூலம் நீர் இறைப்பார்களே அப்படியான வெட்டுக்குழியைக் கொண்ட கிணறு அது. அந்தக் குழிக்குள் தான் என்னை அவள் எப்போதும் வைப்பாள்.
நாங்கள் கேள்விக்குறியோடு பார்த்தோம்.
ஆம். எப்போதும் தான். ஒரே கனவு திரும்பத்திரும்ப நிகழ்ந்தது. முதலிரண்டு கனவுக்குப் பிறகு நான் சுதாரித்துக் கொண்டேன். கூட்டமான இடத்தில் நல்ல பகலில் நான் இருக்கவேண்டுமென பிரார்த்தித்துக் கொண்டு படுத்தேன். ஆனால் அவ்வளவு கூட்டத்தையும் விலக்கிக்கொண்டு அவள் எனக்கு நேரெதிராக வந்தாள். என்னால் அவ்விடத்தை விட்டு விலக முடியவில்லை. ஒரே ஒரு நொடி. சுற்றியிருந்தவர்கள் அவர்கள் பாடுகளைப் பேசியபடி அவரவர் காரியங்களில் சிரத்தையாக இருக்கத் தொடங்கினார்கள். யாருக்கும் அவள் வருவது குறித்தோ நான் அலற முடியாமல் திக்கித்து நிற்பது குறித்தோ எந்தக் கவலையுமில்லை. ஏன் என் அம்மா, பாட்டி கூட. அவள் மிக நிதானமாக நெருங்கி வந்து எனக்கு பின்னால் சென்று கண்களைப் பொத்துவாள். அடுத்த கணம் நான் கிணற்றுக்குள் இருப்பேன். அந்த பதிமூன்று வயதில் அப்படியான கனவு எப்படியிருக்குமென நினைத்துப் பாருங்கள்.
நாங்கள் உண்மை தான் என்பதுபோல் ஆமோதித்துத் தலையசைத்தோம். நான் ஆர்வத்துடன் கேட்டேன்.
‘அவள் கல்யாணி தானே?’
அப்படி என்றால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவளாக இருக்கவும் கூடும். ஆனால் முகம் தெளிவற்று இருந்தது. அவள் என்னை அணைக்கும்போது ஒரு வாசம் வருமே.. அதை நான் நுகரத் துடித்தேன். ஆனால் எந்தக் கனவும் வாசத்தைக் காட்டிக் கொடுத்ததாக நினைவில்லை. ஆனால் அவள் அணிந்திருந்த உடைகள் லூயிஸ் துரையின் அரண்மனைப் பணிப்பெண்கள் அணிந்திருப்பது போன்றவையாக எனக்குத் தோன்றியதால் கல்யாணியாக இருக்கக் கூடுமென அதன் பிறகு நான் அனுமானித்தேன். ஏனென்றால் கல்யாணியின் வம்சாவளியினர் ஒரு காலத்தில் லூயிஸ் துரையின் அரண்மனையில் வேலை பார்த்தவர்கள். அவள் ஒருவேளை கல்யாணியாக இருக்கும் பட்சத்தில் அவளிடமிருந்து நான் ஏன் தப்பிக்கத் துடித்தேன் எனத் தெரியவில்லை. ஏனென்றால் அவளை எனக்கு அவ்வளவு பிடித்தது. இன்னும் சொல்லப்போனால் எனது சித்தப்பா அவளைக் கொஞ்சுவதை நான் கொஞ்சமாக வெறுத்தேன் என்றுகூடச் சொல்லலாம். கிடுநடுங்கி மரத்தை நோக்கி அவர்கள் செல்வதற்கு முன்பும் திரும்பி வந்தப்பின்பும் அவள் என்னை அணைக்க வேண்டுமென ஏங்கினேன். உண்மையில் மௌனத்தை மட்டும் உரக்கப்பேசும் ஊமைப்பாசம் அது. ஆனால் இந்தக் கனவில் வந்தவளிடம் நான் ஏன் தப்பிக்க நினைத்தேன். அவள் இறந்துப்போனவள் என்பதாலா எனத் தெரியவில்லை.
கனவின் ஒவ்வொரு முறையும் நான் கிணற்றிலிருந்து வெளியேறும் விதவிதமான உத்திகளைக் கையாள்வேன். பாறை இடுக்குகளில் நுழைந்து, படர்ந்திருக்கும் ஊணான் கொடிகளைப் பிடித்து என எப்படியாவது சிரமப்பட்டு நான் கிணற்றின் முகட்டை அடைவதற்குள் அவள் எங்கிருந்தேனும் வந்து விடுவாள். சில நேரம் அந்தக் கொடிகள் சடாரென அவளது நீளமான கூந்தலாக மாறியிருக்கும். சில நேரங்களில் நான் தப்பிக்க முயல்வதை இரசித்தபடி அவள் கிணற்றில் நீந்திக் கொண்டிருப்பாள். சில நேரம் நானே அவளாக மாறியிருப்பேன். அவள் சூழ்ந்துகொள்ளும் பயத்தில் பிடிநழுவி கிணற்றுக்குள் விழும்போதெல்லாம் ஓடையில் காண்கிற திரட்டி மீன்கள் என்னைச் சூழ்ந்து கொள்ளும். அத்தோடு கனவும் முடிந்துவிடும். ஓடைகளில் மட்டுமே வாழ்கிற திரட்டி மீன்கள் கிணற்று நீரிலும் உயிர்த்திருக்கிற இரகசியம் எனக்கு அந்தப் பேயை விட குழப்பமாக இருந்தது. சொன்னால் இதை நம்ப மாட்டீர்கள். இதே கனவு பதினேழு முறை எனக்குத் தோன்றியது.
அந்தோணிராஜ் நிறுத்திவிட்டு எங்கள் கண்களில் வியப்பைத் தேடினான்.
மருது அடுத்த ரவுண்டு மதுவை வாயில் கவிழ்த்துவிட்டுப் பேசினார்.
‘உண்மையில் பெண்கள் வித்தியாசமானவர்கள் இல்லையா? பெரிதும் அவர்கள் ஆண்களின் அழகை விரும்புவதில்லை’
‘அப்படிச் சொல்ல முடியாது சார். பெண்கள் ஆண்களின் அழகை விரும்புவதை எந்த ஆண் விரும்புகிறான்?’ என்றேன் நான்.
பதினேழு முறை வந்த ஒரே கனவைப் பற்றிய ஆச்சரியத்தை எங்களிடம் எதிர்பார்த்த அந்தோணிராஜின் கண்களில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது.
மணியரசன் அதை தேற்றும் விதத்தில் கேட்டார்.
‘அதெல்லாம் சரி. கடைசியில் அக்கிணற்றிலிருந்து தப்பினாயா இல்லையா?’
ஆம். அது நடந்தது என்னுடைய டிப்ளமோ வகுப்பின் இறுதியாண்டில். இந்த முறை கிணற்றை விட்டு முற்றிலுமாக வெளியேறியப் பிறகு தான் அவள் என்னைக் கண்டுபிடித்தாள். பின்னால் துரத்திக் கொண்டு வந்தாள். அவள் இந்தமுறை மிதக்கவில்லை. கால்கள் முட்களும் கூரான கற்களும் கீறி இரத்தமொழுக அவள் என்னைத் துரத்தி வந்தாள். உண்மையில் மிதந்து வந்திருந்தால் கூட அவ்வளவு பயமிருக்காது. நான் பயந்து தலைதெறிக்க ஓடி ஒரு ஆற்றில் இறங்கி கடக்க முயல்கிறேன். திடீரென நீர்பெருக்கு அதிகரிக்க அந்த ஆற்றின் தொலைவில் அடுத்தடுத்து சவப்பெட்டிகள் மிதந்து வருவதைப் பார்க்கிறேன். அவளிடமிருந்து தப்ப வேறு வழியற்று ஒரு சவப்பெட்டியைத் திறந்து அதற்குள் படுத்து மூடிக்கொள்கிறேன். அவளது இருப்பை நான் கடந்து செல்வதை படபடப்போடு உணர முடிகிறது. சற்று தூரம் சென்றதும் நிம்மதி பரவ எழுந்து கொள்ளலாமென மூடியைத் திறக்கிறேன். என்னால் முடியவில்லை. அது நன்றாக மூடப்பட்டிருக்கிறது. கத்துகிறேன். கை கால்களை உதறுகிறேன். அங்கேயே கனவு முடிந்திருந்தால் கூட அந்த மரண அவஸ்தையும் முடிந்திருக்கும். ஆனால் அக்கனவு தொடர்ந்து நிகழ்ந்தது. மூச்சிறைக்க வியர்த்துக் கத்திக் கொண்டிருந்த ஒரு நொடியில் மூடியை இரு கைகள் திறந்தன. அவர் ஒரு சாதுவைப் போலிருந்தார். என்னை முழுதாக எழுப்பி நீரில் நிற்க வைத்தார். ‘இங்கேயெல்லாம் நீ வரக்கூடாது தம்பி’ எனக் கூறி கரையில் ஏற்றிவிடுகிறார். சுற்றிலும் தேடுகிறேன். அவள் வருவதற்கான அறிகுறிகளற்ற சுகந்தமான சூழல் அங்கு நிலவத் தொடங்க நான் நடந்தபடியே திரும்பிப் பார்த்தேன். அந்தச் சாது மிதந்து வரும் எல்லா சவப்பெட்டிகளையும் எதையோ சோதிப்பது போல் பொறுமையாக திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தார். அவ்வளவு தான். அதோடு அந்தக் கனவு முடிந்தது.
அன்றோடு கடைசி. அதன்பிறகு அந்தக் கனவு எனக்கு வரவேயில்லை.
‘அடப் பார்றா.. ‘ என்றேன் நான் ஆச்சரியத்துடன்.
இந்தக் கனவின் அர்த்தம் எனக்குப் புரியவேயில்லை நண்பர்களே.யாருக்காவது புரிகிறதா எனச் சொல்லுங்கள் என்றான்.
‘உண்மையில் அக்கனவு உன் வாழ்வோடு சம்மந்தப்பட்டது நண்பா. அது உனக்கு எதையோ உணர்த்த விரும்பியிருக்கிறது.’
‘இதையே தான் என் அம்மாவும் சொன்னாள். உனக்கு நேர இருந்த மரணத்திலிருந்து உன்னை அந்த சாது காப்பாற்றியிருக்கிறார். அவர் நிச்சயம் வனத்துச் சின்னப்பராகத் தான் இருக்க வேண்டும்’ என்றாள்
‘உண்மையில் நல்ல பேய்க்கனவு தான் இது’ என்றபடியே மணியரசன் எழுந்து கொள்ள மருதுவும் தூங்கப் போவதாகச் சொல்லி உடன் எழுந்தார். நள்ளிரவு நிலவரப்படி ரீடிங் எடுக்குமாறு நான் சொன்னதற்கு தலையசைத்தவாறு அவர்கள் கீழே இறங்கிப் போனார்கள்.
அந்தோணிராஜ் தூரத்து நெடுஞ்சாலையில் நகரும் வாகனங்களின் விளக்கொளிகளைப் பார்த்தவாறு வடத்திசையில் திரும்பி அமர்ந்து கொண்டான்.
அவன் வேறு ஏதேனும் சொல்வானென ‘பிறகு என்ன ஆயிற்று? என்றேன் நான்.
இன்னும் ஒரு விஷயம் நண்பா. கனவு அத்தோடு முடிந்துப் போனது. ஏதோவொரு கண்டத்திலிருந்து நான் தப்பியதாக என் வீட்டார் நினைத்து நிம்மதியடைந்திருந்தார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் எனக்கு பணி கிடைத்த ஒரு வருடம் கழித்து விடுப்பில் மீண்டும் ஏற்காடு சென்றேன். அந்த தடவை எனக்கு காணாமல் போய்விட்ட சித்தப்பாவின் ஞாபகம் அதிகம் அலைகழித்தது. மீண்டும் காட்டுச்செடிகளை விலக்கிக் கொண்டு அவர்கள் சந்தித்துக் கொண்ட கிடுநடுங்கி மரத்தை நோக்கி நடக்க வேண்டும் போல நினைவு பரபரத்தது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாத ஒரு மதியத்தில் நான் அந்த உச்சியை நோக்கி நடக்கத் தொடங்கினேன். வழியெங்கும் பால்யத்து ஞாபகங்கள். நான் அமர்ந்துக் காத்திருக்கும் ஓடையில் திரட்டி மீன்கள் இன்னும் நீந்திக் கொண்டிருந்தன. அங்கிருந்து தென்திசையில் பார்த்தால் தூரத்தில் கிடுநடுங்கி மரம் தெரியும். ஆவலோடு முன்னேறிப் பார்த்தேன். யாரோ அம்மரத்தை வெட்டியிருந்தார்கள். வெறும் அடிக்கட்டை மட்டும் சாபம் போல அங்கே நின்றிருந்தது. இப்போது தைரியமாக அவர்கள் எப்போதும் மரத்தைக் கடந்து செல்லும் திசையில் நகர்ந்து சரிவை நோக்கி இறங்கினேன். அங்கே அந்தக் கிணறு இருந்தது. நான் கனவில் கண்ட அதே கிணறு.
நானும் சட்டெனத் திரும்பி நெடுஞ்சாலை வாகனங்களின் மீது பார்வையை வைத்தேன். உடல் சில்லிடுவது போலத் தோன்றியது.
மெல்லிய குரலில் ‘ம்.. அப்புறம்?’ என்றேன்.
என்னால் மறக்க முடியாத நிகழ்வு அது. மெல்லப் பின்வாங்கி சருகுகளைத் தள்ளிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். உடனடியாக விடுப்பை இரத்து செய்துவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டேன்.
என்னால் அதற்கு மேல் அங்கு அமரமுடியவில்லை. எழுந்து நின்று கிளம்புவதற்கு முன் இன்னும் மிச்சமிருந்தவற்றைக் கேட்டேன்.
‘அது சரி. கல்யாணிக்கு உன் சித்தப்பாவைப் பிடித்தக் காரணம் சொல்லவேயில்லையே?’ என்ற என்னுடைய கையைப் பிடித்து அவனும் எழுந்து நின்றான்.
‘சொன்னால் சிரிப்பாகக் கூட இருக்கும். ஆனால் அது உண்மை. ஒருமுறை என் சித்தப்பாவிடம் அவள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். சித்தப்பா தந்த முத்தங்களை அவள் அவரோடு கூடுவதை விட அவ்வளவு விரும்பியிருக்கிறாள்’
அவன் எந்தச் சலனமுமற்று என்னைப் பார்த்தான். நான் என்ன சொல்வதெனத் தெரியாமல் மௌனமாக இருந்தேன்.
‘முத்தங்கள் எடை மிகுந்தவை நண்பா. ஆண்கள் காமத்தின் விளிம்பில் இருக்கையில் முத்தங்களை தராசின் மறுமுனையில் வைக்க மறந்துவிடுகிறார்கள். சித்தப்பா அதன் எடையை சமமாக வைத்திருந்து பரிசளித்திருக்கலாம். கல்யாணி என் சித்தப்பாவின் முத்தங்களால் தன்னை பூரணமாய் நிரப்பிக் கொண்டாள். அதன் பிராயசித்தமாகத் தான் கனவுக்குள் புகுந்து காணாமல் போன என் சித்தப்பாவை நோக்கி என்னை அழைத்துச் சென்றாளோ என்னவோ?’
ஒரு இடைவெளி விட்டு பெருமூச்சுடன் தலைகுனிந்து கொண்டவன் மெல்லிய குரலில் சொன்னான்.
‘இப்போதும் கூட வருடத்துக்கு ஒருமுறை அக்கிணற்றுக்கு சென்று மலர் தூவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்’
அந்தோணிராஜ் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான். இன்னமும் இரவு மிச்சமிருப்பதை எண்ணி நான் கவலைப்பட்டேன்.
எழுதியவர்

-
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் ஆரியபாளையம் சிற்றூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர். இவரின் கவிதைகள் காலச்சுவடு, புரவி, வாசகசாலை, ஆனந்தவிகடன், கணையாழி, தி இந்து நாளிதழ், படைப்பு கல்வெட்டு, தகவு, காணிநிலம், கீற்று, நுட்பம் போன்ற பல்வேறு இதழ்களில் வெளியாகி வருகின்றன.
கவிதை, சிறுகதை போட்டிகளில் கலந்து பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.
இவரின் கவிதைத் தொகுப்புகள் :
'கானங்களின் மென்சிறை' (படைப்பு பதிப்பகம் வெளியீடு),
‘ஃ வரைகிறது தேனீ’ (கடல் பதிப்பகம்),
‘ இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை’ ( வாசகசாலை பதிப்பகம்)
இதுவரை.
கதைகள் சிறப்பிதழ் 202523 January 2025கல்யாணி
சிறுகதை18 January 2024தெற்கு ஜன்னல்
கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023உவர் நிலத்துப்பூ
சிறுகதை9 June 2023மெய்நிகர் பூ