
அழைப்பிதழ் மேற்கத்திய பாணியில் இருக்கிறது. அதன் ஓரங்களில் கௌபாய் தொப்பிகள் அணிந்த கார்ட்டூன் சிறுமிகள் காட்டுக் குதிரைக் குட்டிகளின் கூட்டத்தைத் துரத்துகின்றனர். குதிரைக் குட்டிகள் சிறுமிகளின் உயரமே இருக்கின்றன. அவை வண்ணத்துப்பூச்சிகளைப் போல பிரகாசமாக, கொழுத்து, குட்டையான வட்டமான நுனி கொண்ட யூனிகார்ன் கொம்புகளுடனும், சிறிய பஞ்சு போன்ற இறக்கைகளுடனும் காணப்படுகின்றன. அழைப்பிதழின் கீழ்ப்பகுதியில், புதிதாகப் பிடிக்கப்பட்ட குதிரைக் குட்டிகள் தொழுவத்தில் சுற்றித்திரிகின்றன. சிறுமிகள் ஒரு இளஞ்சிவப்பு-வெள்ளை நிறக் குதிரைக் குட்டியைக் கயிற்றால் பிடித்துள்ளனர். அதன் கண்களும் வாயும் ஆச்சரியத்தால் வட்டமான ’ஓ’ வடிவத்தில் உள்ளன. அதன் தலைக்கு மேலே ஒரு ஆச்சரியக்குறி உள்ளது.
சிறுமிகள் வளைந்த கத்திகளைக் கொண்டு அதன் கொம்பை வெட்டுகின்றனர். அதன் இறக்கைகள் ஏற்கனவே அகற்றப்பட்டு, தொழுவத்தின் அருகே குவியலாகக் கிடக்கிறது.
நீயும் உன் குதிரையும் _________ [குதிரை சன்னியின் பெயர் இங்கே புடைத்த எழுத்துக்களில் கையால் எழுதப்பட்டுள்ளது] மற்றமைச் சிறுமிகளுடனான ’வெட்டியெடுக்கும்’ விழாவிற்கு அழைக்கப்படுகிறீர்கள்! எங்களுக்கு உன்னைப் பிடித்து, உன் குதிரையும் ஒழுங்காக நடந்து கொண்டால், நீ எங்களுடன் நேரம் செலவிட அனுமதிப்போம்.
சன்னி பார்பராவின் தோளுக்குப் பின்னால் இருந்து இதனை வாசித்தபடி, “புதிய நண்பர்களைப் பெற ஆர்வம் தாங்க முடியவில்லை!” என்று குதூகலிக்கிறாள். ரோஜா வாசனையுள்ள மூச்சு பார்பராவின் கூந்தலூடே ஊடுருவிச் செல்கிறது. அவர்கள் சன்னியின் இளஞ்சிவப்பு நிற லாயத்திற்கு அருகில் உள்ள பின்புறத் தோட்டத்தில் இருக்கிறார்கள். பார்பரா கேட்கிறாள், “நீ எதை வைத்துக்கொள்ள விரும்புகிறாய் என்று முடிவு செய்துவிட்டாயா?”. சன்னி காற்றில் குதித்து, சுழன்று பின்னர் கால்களை மடக்கி மிதக்கையில் அவளது சிறிய இறகுகள் மங்கலாகத் தெரிகின்றன. “ஓ, நிச்சயமாக பேசும் திறன் தான்! பறப்பது நன்றாகத் தான் இருக்கும், பேசுவது அதனினும் சிறப்பு!” அவள் புல்லில் குதிக்கிறாள். “எந்தக் குதிரைக்குட்டியாவது தனது கொம்பை வைத்துக் கொள்ள விரும்புமா தெரியவில்லை! அதனால் ஒரு பயனுமில்லை!”
குதிரைகள் தோன்றிய காலம் முதல் இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. எல்லாக் குதிரைக்குட்டிகளுக்கும் இறக்கைகள் உண்டு. எல்லாக் குதிரைக்குட்டிகளுக்கும் கொம்புகள் உண்டு. எல்லாக் குதிரைக்குட்டிகளாலும் பேச முடியும். பின்னர் அவை ‘வெட்டியெடுக்கும்’ விழாவிற்குச் செல்கின்றன, அங்கு அவை மூன்றில் இரண்டை விட்டுக்கொடுக்கின்றன. ஏனெனில் ஒரு சிறுமி, மற்றமைச் சிறுமிகளுடன் ஒத்துப்போக வேண்டுமெனில் அவ்வாறு நடந்தாக வேண்டும். ”வெட்டியெடுக்கும்’ விழாவிற்குப் பிறகு தனது கொம்பு அல்லது இறக்கைகளைக் கொண்ட எந்தக் குதிரையையும் பார்பரா பார்த்ததில்லை.
மற்றமைச் சிறுமிகளின் குதிரைகள் வகுப்பறை இடைவேளைக்குச் சற்று முன் ஜன்னல்களில் எட்டிப் பார்ப்பதையும், பள்ளி முடிந்த பின் பேருந்து நிறுத்தத்தில் கூட்டமாக நிற்பதையும் பார்பரா பார்க்கிறாள். அவை குழந்தை இளஞ்சிவப்பு, வெளிர் நீலம் கலந்த ஊதா (லாவெண்டர்) மற்றும் குவளை மலர் மஞ்சள் ஆகிய நிறங்களில், சுருள் சுருளான பிடரி மயிர்களுடனும், தரையைத் தொடும் அளவு நீண்டு சுருண்ட வால்களுடனும் இருக்கின்றன. பள்ளி, செலோ இசை, பாலே நடன வகுப்புகள், கால்பந்துப் பயிற்சி, விளையாட்டுக் குழு நிகழ்வுகள் மற்றும் பல் நிபுணர் சந்திப்பு ஆகியவை இல்லாத நாட்கள் அனைத்தையும் மற்றமைச் சிறுமிகள் தங்கள் குதிரைகளுடனே செலவிடுகிறார்கள்.
விழா முதன்மைச் சிறுமியின் வீட்டில் நடைபெறுகிறது. அவளது அம்மா குழந்தை மருத்துவராகவும், அப்பா இதய மருத்துவராகவும் உள்ளார்கள். அவளது சிறிய பண்ணையில், பெரிய மரங்களின் நிழலில் உள்ள புல்வெளிகளில் குதிரைகள் விளையாடுகின்றன. சன்னி பதற்றத்துடன் அவர்களை நோக்கி நடக்கிறாள். மற்ற குதிரைகள் அமைதியாக தங்கள் மென்மையான மூக்குகளால் அவளது கொம்பையும் இறக்கைகளையும் தொடுகின்றன. பின்னர் அனைத்துக் குதிரைகளும் மேய்ச்சல் நிலத்தின் அடுத்துள்ள உள்ள மலைவேம்பாலான களஞ்சியத்தை நோக்கி ஓடுகின்றன. அங்கே வைக்கோல் பொதி நிறைந்து கிடக்கிறது.
முதன்மைச் சிறுமி வேலி அருகே வந்து பார்பராவைச் சந்திக்கிறாள். அவள் பார்பராவை வரவேற்கும் முகமண் எதுவும் கூறாமல், “இதுதான் உன் குதிரையா?” என்று கேட்கிறாள். “இது எனது ஸ்டார்பிளாசம் அளவுக்கு அழகாக இல்லை” என்கிறாள்.
பார்பரா தற்காப்புப் பாணியில் “இவள் அழகானவளே!” என்று கூறிய பின் தன் தவறான அணுகுமுறையை உணர்ந்து, “உன்னுடைய குதிரை மிகவும் அழகாக இருக்கிறது!” என்று கூடுதலாகச் சொல்கிறாள். முதன்மைச் சிறுமியின் குதிரை உண்மையிலேயே அழகானதுதான். அதன் வால் ஊதா நிறத்தின் எல்லா சாயல்களிலும், நட்சத்திரங்களால் மின்னுகிறது. ஆனால் சன்னியின் வால் பால் வெண்மையாகவும், தேன் நிற ஒளியுடனும் பிரகாசிக்கிறது, இது வரை தான் பார்த்த குதிரைகளிலேயே சன்னி தான் அழகானவள் என்பதை பார்பரா அறிவாள்.
”வரவேற்பறையில் ராக் பேண்ட் விளையாட்டு இருக்கிறது. மற்றமைச் சிறுமிகள் மாடியில் குழுவாக பொழுதுபோக்கிக் கொண்டிருக்கின்றனர். அம்மா இனிப்பு ரொட்டிகள் வாங்கி வந்துள்ளார். கோக் ஜீரோவும், டயட் ரெட் புல்லும், டயட் லெமனேடு பானமும் உள்ளன” முதன்மைச் சிறுமி அவளிடன் கூறியவாறே நடந்து செல்கிறாள்.
“நீ எங்கே செல்கிறாய்?” என்று கேட்கிறாள் பார்பரா.
“நான் வெளியே இருக்கிறேன்,” என்கிறாள் முதன்மைச் சிறுமி. பார்பரா கிரிஸ்டல் லைட் பானம் ஒன்றையும், உலர் திராட்சை-ஓட்ஸ் கலந்து செய்த இனிப்பு ரொட்டிகள் மூன்றையும் எடுத்துக்கொண்டு அவளைப் பின்தொடர்கிறாள். வெளியே இருக்கும் ‘இரண்டாம் சிறுமி’, ‘இணங்கிப்போகும் சிறுமி’, ‘அனைவருக்கும் பிடித்த சிறுமி’ என மற்றமைச் சிறுமிகள் அனைவரும் ஒலிபெருக்கிகளில் இணைக்கப்பட்ட ஐபாட்டில் இசை கேட்டுக்கொண்டும், வீ டென்னிஸ் விளையாடிக்கொண்டும், குதிரைகள் தங்களுக்குள் விளையாடும், ’ஒளிந்து கண்டுபிடித்தல்’, ‘நம்மில் யார் அழகானவள்’, ‘இதுதான் சிறந்த விளையாட்டு’ ஆகியவற்றை பார்த்துக்கொண்டும் இருக்கிறார்கள். பார்பரா சரியான தருணம் என்று நினைக்கும் போது மட்டுமே பேசக் கூடியவள்.
அவளுக்கான நேரம் வருகிறது. மற்றமைச் சிறுமிகளும் அவர்களின் அமைதியான குதிரைகளும் பார்பரா மற்றும் சன்னியைச் சுற்றி வட்டமாக நிற்கின்றனர். பார்பராவுக்குக் காய்ச்சல் அடிப்பது போல இருக்கிறது.
முதன்மைச் சிறுமி பார்பராவிடம் கேட்கிறாள், “உன் குதிரை எதைத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்?”
சன்னி பயந்து காணப்பட்டாலும், நேரடியாக அவளுக்குப் பதிலளிக்கிறாள். “நான் பறப்பதை விட, என் கொம்பால் குத்துவதை விட, பேசுவதையே விரும்புகிறேன்.”
முதன்மைச் சிறுமி பார்பராவிடம் கூறுகிறாள், “இதைத்தான் குதிரைகள் எப்போதும் சொல்கின்றன.” அவள் பார்பராவிடம் ஒரு பெண்ணின் கை நீளமுள்ள கத்தியை கொடுக்கிறாள்.
“நானா? வேறு யாரோ பெரியவர்கள் இதைச் செய்வார்கள் என்று நினைத்தேன்” என்கிறாள் பார்பரா.
முதன்மைச் சிறுமி கூறுகிறாள், “ஒவ்வொருவரும் தங்கள் குதிரைக்காக அவர்களே செய்கிறார்கள். எனது ஸ்டார் பிளாசமுக்கு நான் தான் செய்தேன்.”
சன்னி அமைதியாக ஒரு இறக்கையை நீட்டுகிறாள்.
உண்மையில் குதிரையை வெட்டுவது போலவே இல்லை. பிளாஸ்டிக் போல மென்மையாகவும் எளிதாகவும் இறக்கை வெட்டப்படுகிறது. இரத்தத்தின் வாசனை சந்தையில் கிடைக்கும் பஞ்சு மிட்டாய் போல இருக்கிறது. இறக்கை இருந்த இடத்தில் பளபளப்பான, தசை நடுக்கத்துடனான நீள்வட்டம் தெரிகிறது, பார்பரா ரோஜா சுவையுள்ள டர்கிஷ் டிலைட் இனிப்பை பாதியாக வெட்டி, தூவப்பட்ட சர்க்கரைக்குக் கீழே உள்ள இளஞ்சிவப்பு நிறத்தைப் பார்ப்பது போல உணர்ந்தாள். அவள் ‘இதுவும் அழகாகத் தான் இருக்கிறது,’ என்று நினைத்தபடி இறக்கையைத் தூக்கி எறிகிறாள்.
சன்னி நடுங்கிக் கொண்டிருக்கிறாள். அவளது கண்கள் இறுக்கமாக மூடப்பட்டுள்ளன. பார்பரா இரண்டாவது இறக்கையை வெட்டி முதலாவதின் அருகே போட்டாள்.
குதிரையின் குளம்புகளை வெட்டுவது போல, கொம்பை வெட்டுவது கடினமாக இருக்கிறது. பார்பராவின் கை சறுக்குகிறது, அவள் சன்னியின் மீது வெட்டுகிறாள். பஞ்சு மிட்டாய் போன்ற இரத்தம் வெளிவருகிறது. பின்னர் கொம்பு புல்லில் இறக்கைகளுக்கு அருகில் கிடக்கிறது.
சன்னி தளர்ந்து முழங்காலில் அமர்ந்து விடுகிறாள். பார்பரா கத்தியை கீழே எறிந்துவிட்டு அழுது விக்கித்தபடி அவள் அருகில் அமர்கிறாள். அவள் தனது புறங்கையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு மேலே சுற்றியிருக்கும் கூட்டத்தைப் பார்க்கிறாள்.
ஸ்டார்பிளாசம் மூக்கால் கத்தியைத் தொட்டு, தனது ஊதா நிறக் குளம்பால் பார்பராவை நோக்கித் தள்ளுகிறது. முதன்மைச் சிறுமி கூறுகிறாள், “இப்போது குரல். நீ அவளது குரலை அகற்ற வேண்டும்.”
“ஆனால் நான் ஏற்கனவே அவளது இறக்கைகளையும் கொம்பையும் வெட்டிவிட்டேனே!” பார்பரா சன்னியின் கழுத்தைச் சுற்றி கைகளால் அணைத்துக்கொண்டு பாதுகாக்கிறாள். “மூன்றில் இரண்டு என்று தானே சொன்னாய்!”
“ஆம், அது தான் வெட்டியெடுக்கும் விழா,” முதன்மைச் சிறுமி கூறுகிறாள். “நீ எங்களில் ஒருவராக இருக்க செய்ய வேண்டியது அது. ஆனால் குதிரைகளும் தங்களுக்குரிய நண்பர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. அதற்கும் ஒரு விலை உண்டே!”.
ஸ்டார்பிளாசம் தனது ஊதா நிற பிடரி மயிரை உதறுகிறது. முதன்முறையாக, பார்பரா அதன் தொண்டையில் புன்னகை வடிவில் ஒரு வடு இருப்பதைக் காண்கிறாள். எல்லாக் குதிரைகளுக்கும் அப்படி ஒரு வடு உள்ளது.
“நான் செய்ய மாட்டேன்!” என்று பார்பரா அவர்கள் அனைவரிடமும் கூறுகிறாள். சளியும் கண்ணீரும் முகத்தில் படியும் வரை அவள் அழுகிறாள். ஆனாலும் தான் எப்படியும் இதைச் செய்துதான் ஆக வேண்டும் என்பது அவளுக்குத் தெரியும். அழுது முடிந்ததும், அவள் கத்தியை எடுத்தபடி நிமிர்ந்தாள்.
சன்னி நடுங்கும் கால்களுடன் அவள் அருகில் எழுந்து நிற்கிறாள். கொம்பும் இறக்கைகளும் இல்லாமல் அவள் மிகவும் சிறியதாகத் தெரிகிறாள். பார்பராவின் கைகள் வழுக்குகின்றன, ஆனால் அவள் தனது பிடியை இறுக்குகிறாள்.
“இல்லை, இது மட்டும் வேண்டாம்!” என்று சன்னி திடீரென்று மறுக்கிறாள்.
சன்னி திரும்பி ஓடுகிறாள். உண்மையான குதிரையைப் போலவே வேகமாகவும் அழகாகவும் வேலியை நோக்கி தாவிச் செல்கிறாள். ஆனால் மற்ற குதிரைகள் நிறைய இருக்கின்றன. அவை பெரியவையாகவும் உள்ளன. சன்னிக்குப் பறக்க இறக்கைகளோ போராட கொம்போ இல்லை. அவள் வேலியைத் தாண்டி அப்பாலுள்ள காட்டிற்குள் பாய்வதற்கு முன்பே அவர்கள் அவளைக் கீழே இழுக்கின்றனர். சன்னி கதறுகிறாள். பின்னர் குதிரைகளின் நெருக்கமான வட்டத்திலிருந்து குளம்புகளின் ஓசை தவிர, வேறு எதுவும் கேட்கவில்லை.
மற்றமைச் சிறுமிகள் உறைந்து போய் நிற்கின்றனர். அவர்களின் வெற்று முகங்கள் குதிரைகளை நோக்கித் திரும்பியுள்ளன.
குதிரைகள் தங்கள் வட்டத்தை விட்டு வெளியேறி, தாவிக் குதித்து ஓடுகின்றன. பஞ்சு மிட்டாய் போன்ற இரத்தத்தின் தெளிப்பும், ஒளி மங்கி விழும் சன்னியின் ஒளிரும் பிடரி மயிரின் சுருள் தவிர அங்கே அவள் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.
மௌனத்தை விலக்கியபடி முதன்மைச் சிறுமி கேட்கிறாள், “இனிப்புகள் சாப்பிடலாமா?”. அவளது குரல் வலுவற்றுப் போலியாக ஒலிக்கிறது. மற்றமைச் சிறுமிகளும் அதே செயற்கையான குரல்களில் பேசியபடி வீட்டிற்குள் கூட்டமாகச் செல்கின்றனர். அங்கே அவர்கள் ஒரு விளையாட்டைத் துவங்குகிறார்கள், இன்னும் அதிகமாக டயட் கோக் குடிக்கின்றனர்.
பார்பரா தடுமாறியபடி அவர்களைப் பின்தொடர்ந்து வரவேற்பறைக்குள் வருகிறாள். “நீங்கள் என்ன விளையாடுகிறீர்கள்?” என்று அவள் தயக்கத்துடன் கேட்கிறாள். “நீ ஏன் இங்கே வருகிறாய்?” என்று கேட்கும் முதன்மைச் சிறுமி அவளை அப்போது தான் முதன்முறையாகப் பார்ப்பது போன்ற பாவனையில், “நீ எங்களில் ஒருத்தியல்ல” என்கிறாள்.
மற்றமைச் சிறுமிகள் ஆமோதிக்கிறார்கள், ”உன்னிடம் குதிரை இல்லை”.
- கிஜ் ஜான்சன்
தமிழில்: பாலகுமார் விஜயராமன்
ஆசிரியர் குறிப்பு:
கிஜ் ஜான்சன் அமெரிக்காவின் முன்னணி கற்பனை இலக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். 1960ஆம் ஆண்டு அயோவாவில் பிறந்த இவர், தற்போது கான்சாஸ் பல்கலைக்கழகத்தில் படைப்பாக்க எழுத்துத் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மூன்று நாவல்களும் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ள இவர், நெபுலா, ஹூகோ, உலக கற்பனை விருது உள்ளிட்ட பல முக்கிய இலக்கிய விருதுகளை வென்றுள்ளார். பதிப்புத்துறையில் பரந்த அனுபவம் கொண்ட ஜான்சன், டார் புக்ஸ், டார்க் ஹார்ஸ் காமிக்ஸ் போன்ற நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். அறிவியல் புனைகதை, கற்பனை இலக்கியம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வரும் இவர், தனது படைப்புகளில் நுட்பமான கதையாடல், ஆழமான கருத்துக்கள், மற்றும் வித்தியாசமான கற்பனைத் திறனுக்காக அறியப்படுகிறார். ஜான்சனின் படைப்புகள் வாசகர்களை சிந்திக்க வைப்பதோடு, மனித உணர்வுகளின் நுணுக்கங்களையும் அழகாக வெளிப்படுத்துகின்றன.
கிஜ் ஜான்சனின் “பொனீஸ்” சிறுகதை முதன்முதலில் 2010ஆம் ஆண்டு டார் டாட் காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த குறுங்கதை வளரிளம் பெண்களுக்குண்டான நட்பு, சமூக அழுத்தம், அங்கீகாரம் ஆகியவற்றை மறைபொருட்களாகப் பேசுகிறது. இக்கதை பல விமர்சனங்களையும் விருதுகளையும் பெற்றது. இதன் அதிர்ச்சியூட்டும் முடிவும், குழந்தைகளின் உலகில் காட்டப்படும் கொடூரமும் வாசகர்களை பெரிதும் பாதித்தது. தனது எளிமையான மேற்பரப்பிற்குக் கீழே ஆழமான கருத்துக்களைக் கொண்டுள்ள இக்கதை, குழந்தைகள் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளும் அழுத்தத்தையும், அதற்கான விலையையும் அழுத்தமாக எடுத்துரைக்கிறது.
எழுதியவர்

- மதுரையைச் சார்ந்த பாலகுமார் விஜயராமன் தற்போது வசிப்பது ஓசூர். தொலைத் தொடர்பு துறையில் பொறியாளராக பணியாற்றுகிறார். இதுவரை எழுதிய நூல்கள் புறாக்காரர் வீடு என்கிற சிறுகதைத் தொகுப்பு, சேவல் களம் என்கிற நாவல் மற்றும் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களான கடவுளின் பறவைகள் (உலக சிறுகதைகள் தொகுப்பு), சார்லஸ் புக்கோவ்ஸ்கி வின் அஞ்சல் நிலையம் (நாவல்), ஆலன் கின்ஸ்பெர்க் யின் Howl மற்றும் கவிதைகள் (கவிதை தொகுப்பு) தனது மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பிற்காக வாசகசாலை இலக்கிய அமைப்பின் விருதும் பெற்று இருக்கிறார்.
இதுவரை.
கதைகள் சிறப்பிதழ் 202523 January 2025குதிரைக் குட்டிகள்
கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023என் சாதி என் மக்கள்