10 May 2024

“வெட்டப்பட்டு விழுந்த இளங்கோவின் வலது கை தனியாகத் துடித்துக் கொண்டிருந்தது.  மேஜையிலிருந்து விழுந்து உடைந்த குடுவையிலிருந்து சிந்திய நீல மை, தரையெங்கும் பரவியிருந்த அவனது இரத்தத்தோடு கலந்தது.”

நாவலின் இறுதி வரியை எழுதி முடித்தான் இளங்கோ.  நெஞ்சின் படபடப்பு இன்னும் அடங்கவில்லை. இவ்வளவு குறுகிய காலத்தில் தான் பெற்ற புகழ், அதிகமாக விற்பனையாகும் எழுத்துக்குச் சொந்தக்காரன் என்னும் சாதனை, இந்தியாவின் இளைய இலக்கிய முகம் என்ற பெருமை எல்லாம் இந்த நாவலுக்கு முன் ஒன்றுமில்லை என்று தோன்றியது. தனக்கு எழுதும் திறன் வாய்த்ததன் நோக்கம் நிறைவேறியதாக மனதிற்குள் தோன்றினாலும் நாவல் பேசியிருக்கும் அவலங்கள் தனது சமூகத்தில் இன்னும் மறைமுகமாகத் தொடர்ந்தபடியே இருப்பது அவனுக்கு உறுத்தலாகவே இருந்தது. ஆனால் அது குறித்த உரையாடல்கள் தொடங்குவதற்கு இந்த நாவல் ஒரு துவக்கப்புள்ளியாக அமையும் என்று இளங்கோ உறுதியாக நம்பினான். 

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நாவல் எழுதி, அது வெளியாகி ஒரு வாரத்திற்குள் அத்தனை பிரதிகளும் விற்றுத் தீர்ந்துவிடும் நிலையில், புகழின் உச்சத்தில் இருப்பவன் இளங்கோ. அவன் திரைக்கதை எழுதிய இரண்டு திரைப்படங்கள் வெளிவரக் காத்திருந்தன. அவனது கதைகளை சினிமாவாக எடுக்க பலர் முண்டியடிக்கிறார்கள் என்பன போன்ற செய்திகள் சமீப காலமாக உலாவிக் கொண்டிருந்தன. கடந்த மூன்று மாதங்களாக வழக்கமான தனது பாணியிலான பொழுதுபோக்கு நாவல் எதையும் எழுதாமல், முழுக்க முழுக்க இந்தப் படைப்பிலேயே கவனம் செலுத்தியிருந்தான். தனது சிறு வயதிலிருந்து இன்று வரை தான் நேரடியாகப் பார்த்த, தன் இனத்துக் குடும்பங்களில் நடக்கும் சமூக அவலங்களை அப்பட்டமாகத் தோலுறித்துக் காட்டும்படியாக நாவல் வந்திருப்பதில் அவனுக்குத் திருப்தி தான் என்றாலும், அவனது மன அலைச்சல் அடங்கவில்லை. தங்கள் குடும்பங்களில் இவ்வளவு காட்டு மிராண்டிகளாக, பிற்போக்குவாதிகளாக இருக்கும் தன் இனத்துப் பெரிய மனிதர்கள், பொது சமுதாயத்தில் முற்போக்கு பேசும் சீர்திருத்தவாதிகளாகவும், சமூக நீதியை வளத்த்தெடுத்தும் அரசியல் தலைவர்களாகவும், சட்டத்தை இயற்றும் நீதிமான்களாகவும் வீற்றிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது அவனுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. இவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் முதல் ஒளியாகத் தன் நாவல் அமையும் என்று நம்பிக்கையோடு இருந்தான். 

இளங்கோவின் இதுவரையான படைப்புகள் அவன் படித்த வெளி மாநில கல்லூரி வாழ்க்கை சார்ந்தவை. இன்றைய இளைஞர்களைக் கவரும்படியான நவீன கேளிக்கைகள் நிறைந்தவை. திரைப்படம் போல காட்சிப்பூர்வமான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட வணிக வகைமையைச் சேர்ந்தவை. அவை அவன் எதிர்பார்த்தது போலவே சிறந்த விற்பனைப் பொருளாக வெற்றி பெற்றிருந்தன. தொழில்துறையிலும், ஆன்மிகத்திலும், கட்சிகளை ஆட்சிப் பொறுப்பிலேற்றும் அதிகாரத்திலும் பெரும்பான்மை பலம் வாய்ந்த சமூகத்தைச் சேர்ந்தவன் இளங்கோ.  அவனது நேரடித் தொடர்போ, ஈடுபாடோ இல்லாவிட்டாலும் சமுதாயத்தில் அவனை இன்றைய இளைஞர்களின் முகமாக காட்சிப்படுத்தியதில் அவனது இனத்துப் பெரியவர்களின் அருளாசியும் உண்டு என்று பரவலாகப் பேசப்படுவதுண்டு. அத்தகைய பிம்பம் தனக்கு விழக்கூடாது என்பதற்காகவே குடும்பம் சார்ந்த கதைக் களங்களைத் தவிர்த்து, நவீன வாழ்க்கை சார்ந்த, குடும்பப் பின்புலங்களற்ற இளைஞர்களை மையமாக வைத்து இளங்கோ புனைவுகளை எழுதினான். ஆனாலும் அவனால் தன் மீது விழுந்த பிம்பத்தைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அதன் பெரும்பாரம் அவனை அழுத்த, அவன் உள்ளூரப் புழுங்கத் துவங்கினான். தன்னையறியாமல் தன்னைப் பீடித்திருக்கும் இந்த சங்கிலியை அறுத்தெறியவே அவன் இந்த நாவலை எழுதத் துணிந்தான். 

இன்றைக்கு நிதியமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதி, முன்னணி கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் கல்வித் தந்தை ஆகிய மூன்று பெரிய மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அவை எவ்வாறு அவர்கள் சமூக வாழ்க்கையோடு முரண்படுகின்றன என்பதையும் புனைவின் சாயலில் அப்பட்டமாக காட்சிப்படுத்துவதாக அமைந்திருந்தது இளங்கோவின் புதிய நாவல்.  அவன் வழக்கமாக எழுதும் புனைவின் அலங்காரங்கள் எவையுமின்றி உண்மைகளை முகத்தில் அறைவதைப் போல தோலுறித்துக் காட்டி இருந்தான். குடும்ப விழாகள் என்ற பெயரில் அவர்கள் நிகழ்த்தும் மூட நம்பிக்கைகளையும், பிற்போக்குத் தனங்களையும், அடக்குமுறைகளையும், அருவருக்க வைக்கும் சாதிப் பாசத்தையும் அவற்றால் சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகளையும், சட்ட ஒழுங்கு சீர்கேடுகளையும் உள்ளிருந்து சாட்சியம் கூறுவதாக அவனது நாவல் அமைந்திருந்தது.

நாவலை மீண்டுமொரு முறை மேலோட்டமாக வாசித்துமுடித்துவிட்டு நேரத்தைப் பார்த்தான். அதிகாலை நான்கு மணியாகி இருந்தது. ஒரு கணம், இது தனது கடைசிப் படைப்பாக இருக்குமோ என்று அவனுக்குத் தோன்றியது. நாளை நாவல் வரைவை சண்முகம் சாரிடம் வாசிக்கக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவனாய் படுக்கைக்குச் சென்றான். அவனுக்கு சுத்தமாக உறக்கம் வரவில்லை.

 “சேலையை ஃபேனில் மாட்டி சுருக்கிட்டாள் சீதாம்மாள். கனம் தாங்குகிறதா என்று ஒரு முறை தன் முழு பலத்தையும் சேர்த்து இழுத்துப் பார்த்தாள். நன்கு சோதித்து உறுதி செய்தவள் கௌரிக்காகக் காத்திருந்தாள். மயங்கிய நிலையில் இருந்த கௌரியை அவளது தம்பியும் மற்ற சொந்தக்காரர்களுமாகச் சேர்ந்து தூக்கிக் கொண்டு வந்தனர். சீதாம்மா தன் மகள் கௌரியின் கழுத்தில் சுருக்கிட்ட சேலையை மாட்டினாள். கௌரி தூக்கில் தொங்கவிடப்பட்டாள்”.

சிவப்பு மையால் அடிக்கோடிட்டிருந்த வரிகளை ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டிருந்தான் இளங்கோ. எதிரில் அமர்ந்திருந்த சண்முகத்தின் முகத்தில் எந்தச் சலனமும் இலை. அவர் பொறுமையாக இளங்கோவின் முகத்தைப் பார்த்தபடி இருந்தார். இதுவரை  இளங்கோ எழுதிய ஒன்பது நாவல்களையும் வெளியிட்ட பதிப்பாளர் அவர். பதிப்பாளர் என்பதைத் தாண்டி எழுத்தாளர் சண்முகம் இளங்கோவின் மானசீக குரு. அவர் எழுத்துக்களைப் படித்து வளர்ந்தவன் அவன், பிற்பாடு அவர் பதிப்பகம் துவங்கியப்போது அவர் பிரசுரத்தில் தன் படைப்பு வெளிவர வேண்டும் என்பதற்காகவே எழுதுவதில் தீவிர கவனம் செலுத்தத் துவங்கினான். இன்று அவரது பதிப்பகத்தின் செல்வாக்கு மிக்க எழுத்தாளனாக இளங்கோ உயர்ந்து நின்றான். இருந்தும் சண்முகத்தின் வார்த்தைகளுக்கும், அவனது படைப்புகள் குறித்த அவரது விமர்சனத்திற்கும் மிகந்த மதிப்பு கொடுப்பவன். அடிக்கோட்ட அனைத்து வரிகளையும் வாசித்து முடித்த இளங்கோ குழப்பத்தோடு அவனைப் பார்த்தான். சண்முகம் நிதானமாக ஆரம்பித்தார். 

”தம்பி, உன்னோட பல்ப் நல்லா போகுது, ஏன் இப்போ இப்படி ஒரு தீவிரத் தன்மைக்கு மாறின என்பது குறித்தோ, மாறியிருக்கும் உன் எழுத்து நடை சார்ந்தோ நான் பேச மாட்டேனு உனக்குத் தெரியும். இருந்தும், உன்னோட எந்தப் படைப்புக்கும் இதுவரை சொல்லாத சில விஷயங்களைச் சொல்லணும்னு விரும்புறேன். ரொம்ப வீரியமா இருக்க பகுதிகளை அடிக்கோடிட்டு இருக்கேன். அதன் தீவிரத்தன்மையை இலைமறை காயாக வேறு வடிவத்தில் நீ எழுதலாம்னு நினைக்கிறேன். அதை நீ ஏத்துக்குறயோ இல்லையோ, ஆனால் திறந்த மனசோட பரிசோதனை செஞ்சு பார்க்கணும். எப்படி இருந்தாலும் இறுதி முடிவு உன்னுடையது தான். அதற்காக கடைசி வரை நான் உன் கூட நிற்பேன். ஏனென்றால் உன் எழுத்துல உண்மை இருக்கு.”

“நிச்சயமா சார்”

“முதல்ல, புகழின் உச்சத்துல இருக்கும்போதே, பரிச்சயமில்லாத அடுத்த கட்டத்துக்கு நகரணும் என்று தோன்றின உன் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுக்குறேன். அதற்காக உன்னை நினைச்சுப் பெருமைப்படுறேன். நிஜ மனிதர்கள் சாயலில் வரும் கதாபாத்திரங்களோ, சமுதாயத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திய உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட புனைவு என்பதோ, அதன் பின்விளைவுகள் எப்படி இருக்குமோ என்பதெல்லாம் எனக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் நாவலின் அடிநாதமா இருக்குறது ஒரு  இனக்குழுவின் நம்பிக்கைகள் பின்னாடி இருக்க அபத்தமும் அசிங்கமும். அதைப் பட்டவர்த்தனமாகப் பேசுறதால இந்த படைப்பு ஏகப்பட்ட பிரச்சனைகளைக் கொண்டு வரலாம். பதிப்பாளனா எனக்கும் என் நிறுவனத்திற்கும் சில அச்சுறுத்தல்கள் வரலாம். ஆனால், அதற்கெல்லாம் பயந்த ஆள் நானில்லை என்பது உனக்கு நல்லாவே தெரியும். இருந்தும் உன் வெல்விஷராக உன்னிடம் சில கேள்விகள் கேட்க விரும்புறேன்.

“கேளுங்க சார்?”

“ஏன் உனக்கு இந்த நாவல் எழுதனும்னு தோணுச்சு?”

“நான் இதுவரை பெற்ற புகழ், வாங்கிய விருதுகள், கிடைத்த அங்கீகாரம் எல்லாம் ஒரு இறுக்கமான முகமூடியா என்னை மூச்சு முட்ட வைக்குது சார். அதிலிருந்து நான் வெளியே வரணும். கொஞ்சம் சுதந்திரமா சுவாசிக்கணும் சார், அதான்… “

”ஆனால், இந்த நாவல் இப்படியே வெளிவந்தால், இன்னிக்கு இருக்குற உன் நிம்மதி பறிபோகும். சொந்த சாதிக்காரனாலேயே கருங்காலியா முத்திரை குத்தப்படுவ!”

”தெரியும் சார். அப்படி யோசிச்சிட்டு இதை எழுதாம இருந்தால், என் எழுத்தே என்னைக் காறித் துப்பும். இதை எழுதாம, வேறு எதையுமே என் மனசு ஒப்ப என்னால எழுத முடியாதுன்னு தோணுது சார்”

”சரி, நான் அடிக்கோடிட்ட வரிகளை மட்டும் தனியா படிச்சுட்டு வரும்போது உனக்கு என்ன தோணுச்சு?”

“சரியான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கேன்னு தோணுது சார்!”

இளங்கோவின் பதிலைக் கேட்டதும், அந்த இறுக்கமான சூழ்நிலையையும் தாண்டி சண்முகம் சிரித்துவிட்டார். 

“சரி போ, அந்த கடைசி அத்தியாயத்துல நாயகன் தன் சொந்த ஆதிக்க சாதி வெறியர்களால் வெட்டி சாய்க்கப்படுறான் என்று எழுதி இருக்கேல்ல. அதை மட்டும் எடுத்துடு. மற்றதை அப்படியே பிரசுரிப்போம். என்ன வந்தாலும் பாத்துக்குவோம்!”

இளங்கோ அமைதியாக இருந்தான். சண்முகத்திற்கு புரிந்து போயிற்று. தேநீர் அருந்தலாம் என்று சொல்லி அவனை அழைத்துக் கொண்டு பதிப்பக வளாகத்தை விட்டு வெளியே வந்தார். குளிர் காற்றோடு சேர்ந்து சாரல் பரசலாக வீசிக் கொண்டிருந்தது. சண்முகம் இளங்கோவின் தோளில் கைபோட்டு அவனை அணைத்த மாதிரி நடந்து சென்றார். இளங்கோ சற்று குனிந்த பாவனையில் அவர் உயரத்திற்குத் தோதாகத் தன் தோளைக் கொடுத்தபடி கூட நடந்தான். 

“டேய் தம்பி, உன் நல்லதுக்குத் தான்டா சொல்றேன். நாம நினைக்குற அளவு ஐடியல் சொசைட்டி இல்லடா இது. எழுத்து வாழ்க்கை தாண்டி, லௌகீகத்திலும் நாம ஜெயிக்க வேண்டி இருக்கு. எழுத்தாளன் எப்பவும் ரெண்டு உலகத்துல வாழ்றவன். அந்தந்த உலகத்துக்கு அவன் உண்மையா இருந்தாப் போதும். ரெண்டையும் ஒரு அளவுக்கு மேல புனைய விடக்கூடாது. அப்புறம் ரெண்டும் கெட்டுப் போகும். உன் பெயர் நிற்கலாம். ஆனால் நீ நிற்க முடியாது. நீயும் நிற்கணும், உன் பெயரும் நிற்கணும்னு விரும்புறேன். ஒரு தகப்பனாக நான் சொல்றதைக் கேளுடா!”

”நீங்க கேட்டீங்களா சார்… உங்க ஆசான்கள் சொன்னதை நீங்க கேட்டீங்களா?”

சண்முகம் இளங்கோவை அணைத்தபடியே அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தார். உடல் குளிருக்கும், மனப்பதற்றத்திற்கும் அவரது அருகாமையும் அணைப்பும் அவனக்கு ஆதுரமாக இருந்தன.

”புதிய பின்னணியில் எழுத்தாளர் இளங்கோவின் புதிய நாவல். கதைக் களத்தில் மாற்றம்…”

செய்தித் தாளில் வந்த பெட்டிச் செய்தியை மறுபடியும் வாசித்தான் இளங்கோ. தான் எதிர்பார்த்த துவக்கம் நிகழ்ந்திருக்கிறது. இனி நாவல் என்ன விளைவுகளைக் கொண்டு வரப்போகிறதோ என்ற பரபரப்பு அவன் மனம் முழுவதும் நிரம்பி இருந்தது. அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருப்பது போல அமர்ந்திருந்தான். அவனது எழுத்து மேஜையில் நேற்று வெளியாகியிருந்த “என் சாதி என் மக்கள்” புதிய நாவலின் ஆசிரியர் பிரதிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேஜையின் விளிம்பை எட்டிப் பிடித்து, புதிய புத்தங்களை இழுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் அவனது மகள் பவானி. அதில் ஒரு புத்தகத்தை எடுத்து, “அப்பா ஃபோட்டோ பாரு!” என்று மகளுக்குக் காட்டிக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. வாசல் கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டது. ”இந்நேரத்துல யாரு…” என்றவாறு எழுந்திருக்கப் போன அவளைக் கையமர்த்தி, “இரு லதா, நான் போய்ப் பார்க்குறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே வந்தான் இளங்கோ.

கட்சிக் கரை வெள்ளை வேட்டி சட்டையில் பத்து பதினைந்து பேர் நின்றிருந்தார்கள். இளங்கோவிற்குத் திக்கென்று இருந்தது. வாசலை மறித்த மாதிரி நின்றபடி, “என்ன விஷயம், யாரு வேணும்?” என்று கேட்டான்,

“என்னங்க சார், வீட்டுக்கு வந்தவங்களை வெளியே நிக்க வச்சே பேசுறீங்க. உள்ளே வாங்க பேசலாம்.”

“இருக்கட்டுங்க. என்ன விஷயம்னு சொல்லுங்க?”

“எல்லாம் நல்ல விஷயம் தான். இந்த வருசம் நம்ம ஊருல நடக்குற குடும்ப விழாவுல உங்களை கௌரவிக்கலாம்னு இருக்கோம். அதான் முறையா அழைச்சுட்டுப் போக வந்தோம்.”

இளங்கோ ஆசுவாசமானான். “சரி…. உள்ளே வாங்க!”

வரவேற்பறையை நிறைத்து அமர்ந்தார்கள். உள்ளறையிலிருந்த பவானி, “என் சாதி என் மக்கள்” புத்தகம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு, மழலை நடை போட்டு இளங்கோவிடம் வந்தது. அவளை மடியில் தூக்கி அமர வைத்தபடி இளங்கோ பேசினான்.

“வீடு தேடி வந்து அழைச்சதுக்கு நன்றி. ஆனால் தப்பா எடுத்துக்காதீங்க. இந்த மாதிரி சாதி விழாக்களில் நான் கலந்து கொள்றதில்லை.”

“என்ன சார், இப்படி சொல்றீங்க. சொந்த பந்தம் விட்டுப் போயிடக் கூடாது. நம்ம பிள்ளை ஒன்னு இன்னிக்கு வளர்ந்து நிக்குது. அதுக்கு நம்ம தான் அரணா இருக்கணும்னு தான் இதெல்லாம். மத்தபடி வேத்தாளுக மாதிரி நாம என்ன கத்தி கம்புனா சுத்தப் போறோம். இப்போ நடக்குற விசேஷமே அறிவுத் திருவிழா தான். நம்ம வீட்டுப் பொடுசுகளுக்கு, ‘பாருங்க, உங்க அண்ணன், மாமா, சித்தபா எல்லாம் எப்படி வளர்ந்திருக்காங்க. நீங்களும் அது மாதிரி வளரணும்னு உற்சாகம் ஊட்டத் தான். அதுக்கு உங்களை மாதிரி படிச்சு, எழுதுற பிள்ளைக முன்னுதாரணமா வந்து நின்னாத் தானே தகும்!”

“இல்லங்க, மன்னிக்கணும்…”

“என்னை வேத்தாளா நினைக்காதீங்க. உங்க வீட்டம்மாவோட அப்பாவும் நானும் பங்காளி முறை தான். உங்க கல்யாணத்துக்கு எல்லாம் வந்திருந்தோம். அப்புறம் அடிக்கடி வந்து போக முடியல. நான் தான் சங்கத்துல பேசி நம்ம மாப்பிள்ளையைக் கண்டிப்பா கூப்பிடனும்னு சொல்லிக் கூட்டி வந்திருக்கேன்.”

தனது அப்பா பெயர் அடிபட்டதும் லதா உள்ளறையில் இருந்து வெளியே வந்து, அவர்களை வரவேற்றுவிட்டு, சமையல் கட்டுப் பக்கம் சென்றாள். 

இத்தகைய தொல்லைகளைத் தவிர்ப்பதற்காகவே இளங்கோ சொந்த பந்தங்களோடு நெருங்கிப் பழகுவதில்லை. இருந்தும் அவன் விரும்பாத இத்தகைய சாதிக்காரர்களின் நெருக்கம் எரிச்சலைத் தந்தது. ஏதேனும் கடும் சொற்கள் சொல்வதற்கு முன் அவர்கள் சென்றுவிட்டால் நல்லது என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. “என் சாதி என் மக்கள்” புத்தகம் நேற்று வெளியாகி இருக்கிறது. வரும் வாரத்தில் புத்தகம் பற்றிய செய்திகள் பரவத் தொடங்கும்போது, இவர்கள் தாமாகவே ஒதுங்கிக் கொள்வார்கள் அல்லது, இன்றைக்குப் புகழும் இதே வாய்கள் அன்று வந்து வசவு பொழிந்துவிட்டுச் செல்லலாம், என்ன நடந்தாலும் சமாளிக்கலாம் என நினைத்தவனாய் அமர்ந்திருந்தான் இளங்கோ.

லதா காபி டம்பளர்களுடன் வந்தாள். இளங்கோ மடியிலிருந்த அவள் மகள், புத்தக அட்டைப் படத்திலிருந்து அவனது புகைப்படத்தைக் காட்டி “அப்பா… அப்பா…” என்றாள்.

“பாப்பா…. உங்க அப்பாவா இது, எங்கே கொடு பார்க்கலாம்” என்று கையை நீட்டினார் வந்திருந்தவர். குழந்தை சமர்த்தாக புத்தகத்தை அவரிடம் கொடுத்தது.

எல்லோருக்கும் காபியைக் கொடுத்த லதா, “இதான் அவர் எழுதியிருக்க புதுப் புத்தகம். நேத்துக்குத் தான் வெளியாச்சு” என்று பெருமையாகக் கூறினாள்.

“அப்படியா, சந்தோஷம்மா, மாப்பிள்ளையும், நீயும், குழந்தையோட கண்டிப்பா விழாவுல கலந்துக்கணும்மா” என்று கூறிவிட்டு அந்தப் புத்தகத்தை அவளிடம் நீட்டினார்.

“பரவால்ல, நீங்க வச்சுக்கோங்க அந்தப் புத்தகத்தை. எங்களுக்கு நிறைய காப்பி வந்திருக்கு”

இளங்கோ மனதிற்குள் சிரித்துக் கொண்டான். இவள் வழியாகத்தான் குண்டு வெடிக்க வேண்டும் என்று இருக்கிறது போல. நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக இருந்தான்.

அவர், “இருக்கட்டும்மா… நான் என்னத்த புத்தமெல்லாம் படிச்சுக் கிழிச்சேன். நம்ம மாப்ள பெரிய எழுத்தாளரா இருக்காரே. அதுவே நமக்குப் பெருமை!” என்று புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தார். வந்தவர்கள் அனைவரும் கிளம்பிச் சென்றனர். இளங்கோ அந்த புத்தகத்தை வாங்கி மேஜையில் வைத்தான். 

அடுத்த ஒரு மாதத்தில் இளங்கோவின் பதற்றம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, “இதற்குத் தான் இவ்வளவு பயந்தோமா!” என்று ஒரு வெறுமை தோன்றியது.

மீண்டும் சண்முகம் சாரை சென்று சந்தித்தான்.

”என்ன சார் தப்பு நடந்துச்சு?”

“என்ன தப்பு?”

“நாம நினைச்ச மாதிரி புத்தகம் எந்த அதிர்வலைகளையும் ஏற்படுத்தலையே. அதன் முக்கியத்துவம் ஒரு செய்தித் தாளின் ஆறாம் பக்கத்துல வந்த ஒரு பெட்டிச் செய்தி மட்டும் தானா?”

”இங்க பாரு தம்பி, புத்தகத்தோட விற்பனையைப் பொறுத்தவரை எந்தக் குறைச்சலும் இல்ல. சொல்லப்போனா உன் முந்தையை புத்தகத்தை விட, 10 சதம் அதிகமாத் தான் வித்திருக்கு. அது சொல்ல வந்த சேதி யாருக்கும் இப்போ முக்கியமில்லாததா தோணியிருக்கலாம். வலிந்து இதைத் தான் நான் சொல்லி இருக்கேனு நீ போய் பிரகடனப் படுத்த வேண்டியதில்லை. ஒரு படைப்பு தன் இருப்புக்குத் தோதான இடத்தைத் தானே தேர்ந்து கொள்ளும். அதுல நீ செய்ய எதுவுமில்லை. உன் மனசை அழுத்திட்டு இருந்த பாரத்தை உண்மையா எழுத்தில் இறக்கி வைக்கணும்னு நினைச்ச. அதை எந்தவித சமரசமும் இல்லாம எழுதி வெளியிட்டு இருக்க. அதோட உன் வேலை முடிஞ்சு போச்சு. போய் புத்துணர்ச்சியோட அடுத்த படைப்பை எழுதத் துவங்கு!”

”தேசிய விருது வாங்கிய திரைக்கதை எழுத்தாளர் இந்த சாதியா… தன் சாதியைப் பற்றி அவர் இவ்வளவு கேவலமாக எழுதி இருக்கிறாரா…”

ரீல்ஸில் தன் அப்பா முகம் வருவதை ஆர்வமின்றிப் பார்த்தாள் பவானி. அந்த முப்பது விநாடிக் கானொளியில் வேறு முக்கியமான செய்தி எதுவுமில்லை. பைட்ஸ் மாதிரி விளம்பரம் கொடுத்து முழுக் கானொளியைக் காணச் சுட்டியை அழுத்தச் சொல்லியிருந்தார்கள். அப்படி என்ன பெரியதாகச் சொல்லி இருக்கப் போகிறார்கள்… அப்பாவின் எழுத்தில் துவங்கி, அவரது திரைக்கதையில் வந்த படத்தில் இரண்டு சீன் நடித்த ஏதாவது ஒரு துணை நடிகையின் பேட்டியில் போய் முடித்திருப்பார்கள் என்று நினைத்தவளாய் அதனை ஸ்க்ரோல் செய்துவிட்டுக் கடந்து சென்றாள். 

ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் இணையம் பற்றியெரியத் துவங்கியது. “என் சாதி என் மக்கள்” வெளியாகி இருபது ஆண்டுகளுக்குப் பின், அது பேசுபொருளாக மாறியது. அது தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களை அவமதிக்கின்ற புத்தகம், அதனை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் துவங்கியது. எங்கு பார்த்தாலும் பிரபல திரைக்கதை ஆசிரியரும், எழுத்தாளருமான இளங்கோ அவர்கள் குறித்தே விவாதம் நடந்து கொண்டிருந்தன. அவரது நூற்றுக் கணக்கான படைப்புகளில் இருந்து யாராவது ஏதாவது ஒரு துணுக்கை எடுத்து வைத்துக் கொண்டு அதற்குப் புதிய பொழிப்புரைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அரசியல் கட்சி பிரமுகர்கள், அவரை “இனத் துரோகி” என்று விளித்தனர். சமூக ஆர்வலர்கள் அவருக்கு அளிக்கப்பட்ட விருதுகளையும், பட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். பொதுமக்களின் பிரதிநிதிகள், அவர் பார்த்துக் கொண்டிருக்கும் அரசு வேலையைப் பறித்து விட்டு, அவரை நாடு கடத்த வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

நான்காவது நாளில் இணையத்தைத் தாண்டி விஷயம் காட்சி ஊடகங்களுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் பரவியது. அரசியல்கட்சிகள் தாங்கள் தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக,  அவரது கொடும்பாவி எரிப்பு, அவர் வீட்டில் கல் எறிதல், அவரது அலுவலகத்தை முற்றுகை இடுதல் என்று பாரம்பரியமான போராட்ட வழிகளைக் கையிலெடுத்தார்கள். விஷயம் சட்டமன்ற விவாதம் வரை சென்றது. ”என் சாதி என் மக்கள்” புத்தக விற்பனையை நிறுத்தி வைக்கும்படி வாய்வழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, கடைகளில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அவை தடைசெய்யப்பட்டன. ஆனால் அதுவே புத்தகத்துக்கு விளம்பரமாகி, விற்பனை மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியது. மலைக்க வைக்கும் அளவுக்கு புத்தக விற்பனை எகிறியது. முறையான அனுமதியின்றி, பெயர் தெரியாத பதிப்பகங்கள் கூட புத்தகத்தை மறுபதிப்பு செய்து லாபம் பார்த்தன. பி.டி.எஃப்.பாகவும், இ-புக்காகவும், ஆடியோ புக்காகவும் “என் சாதி என் மக்கள்” பரவியது. வாசிப்புப் பழக்கம் அறவே இல்லாதவர்கள் மத்தியிலும் புத்தகத்தின் பெயரும் அதன் மூலமான சர்ச்சைகளும் பேசு பொருளாகின.

பிரபல காட்சி ஊடகங்களும், செய்தி நிறுவனங்களும் எழுத்தாளர் இளங்கோவை நேர்காணல் செய்ய படாதபாடு பட்டனர். ”என் சாதி என் மக்கள்” புத்தகம் எழுதி இத்தனை வருடங்களுக்குப் பின்னர், தான் எந்த விளக்கமோ, சமாதானமோ தெரிவிக்க வேண்டியதில்லை என்று அவர் நம்பினார். ஆனால் இருபது ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த சமூகத்தின் அபத்தமும் அசிங்கமும் தொடர்ந்துகொண்டே தானே இருக்கின்றன. தான் நாவலில் சுட்டிய காட்டுமிராண்டித்தனங்கள் இப்போதும் தொடர்புடையதாக இருப்பதால் தானே அது குறித்த சர்ச்சைகளும் எழுகின்றன. இவை எக்காலத்திலும் காலாவதி ஆகாதா என்று வருந்தினார். 

ஒரு படைப்பு தனக்குத் தோதான இடத்தைத் தானே தேர்ந்து கொள்ளும்” என்று சண்முகம் சார் சொன்னது அவர் நினைவுக்கு வந்தது. “அது தேவையான நேரத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும் செய்யும்” என்பதையும் அவர் உணர்ந்தார். அவர் சோர்ந்து போயிருந்தார். நெருக்கடியின் வெம்மை அவரைத் தனிப்பட்ட முறையில் தீண்டத் துவங்கியது. அவர் வெளியே சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. அவர் சிலநாட்கள் தலைமறைவாக இருக்கும்படி அவரது நண்பர்கள் கூறிய ஆலோசனையை அவர் மறுத்தார். அச்சுறுத்தல் அதிகமாகி குடும்பத்தினர் பாதிக்கப்படுவர் என்ற நிலை வந்தபோது அவர் கலக்கமடைந்தார். பலத்த யோசனையோடு அவர் தன் அறையின் எழுத்து மேஜைக்கு முன் அமர்ந்திருந்தார். வாயிலில் தொடர்ந்து ஒலித்தபடி இருந்த அழைப்பு மணியின் சத்தம் அவரது சிந்தனையைக் கலைக்கவில்லை . மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த பவானி கதவைத் திறக்கச் சென்றாள். வெளியே பெரும்படை கையாயுதங்களை ஏந்தியபடி கூச்சலிட்டுக் கொண்டிருந்தது.

“குரங்குக் குப்பன் காலில் விழுந்து வணங்கினார் சூப்பர் சுப்பு… என்ன ஸ்டைல், என்ன வசீகரம்!”

ரண்டு வாரங்களுக்குப் பின், “என் சாதி என் மக்கள்” களேபரங்கள் நிகழ்ந்ததற்கான எந்தச் சுவடுமின்றி, உலகம் அடுத்தப் புதிய பிரச்சனைகளுக்குப் பின் செல்லத் துவங்கியது. அதற்குள் சரிசெய்யவியலாத பல பாதிப்புகளை அது ஏற்படுத்திவிட்டது. பலகோடி ஆண்டுகளாகத் தன்னையும் சுற்றி, சூரியனையும் சுற்றிச் சுற்றி வருவது பூமிக்கு அயற்சியாக இருந்தது.


AI-generated art is used in this Story.

எழுதியவர்

பாலகுமார் விஜயராமன்
மதுரையைச் சார்ந்த பாலகுமார் விஜயராமன் தற்போது வசிப்பது ஓசூர். தொலைத் தொடர்பு துறையில் பொறியாளராக பணியாற்றுகிறார். இதுவரை எழுதிய நூல்கள் புறாக்காரர் வீடு என்கிற சிறுகதைத் தொகுப்பு, சேவல் களம் என்கிற நாவல் மற்றும் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களான கடவுளின் பறவைகள் (உலக சிறுகதைகள் தொகுப்பு), சார்லஸ் புக்கோவ்ஸ்கி வின் அஞ்சல் நிலையம் (நாவல்), ஆலன் கின்ஸ்பெர்க் யின் Howl மற்றும் கவிதைகள் (கவிதை தொகுப்பு) தனது மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பிற்காக வாசகசாலை இலக்கிய அமைப்பின் விருதும் பெற்று இருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x