3 December 2024
sathyaperuma baluswamy

 


தாரிணிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. மாராப்பைப் போல போட்டிருந்த ஈரிழைத்துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு குமுறியழுதாள். மொத்த உடலும் குலுங்கியது.

“யேய் அழுவாதடி. கேள்வியக் கேளு” – மரியத்தின் கண்களும் கலங்கியிருந்தன.

இருவருக்கும் எதிரில், ஆவிகளுடன் பேசும் ஊடகமான‌ அந்தப் பெண், குறிசொல்பவர்களுக்கேயான‌ சகலவிதமான அலங்காரங்களுடனும், தோரணைகளுடனும், கண்களை இறுகமூடி அமர்ந்திருந்தாள்.‌ அவளுக்குப் பின்னாலிருந்த சுவற்றை நிறைத்திருந்த சாமிபடங்களையெல்லாம், அப்போதுதான் இழுத்துவிடப்பட்ட கறுப்புத்திரையொன்று முழுவதுமாக மறைத்திருந்தது.

“அழுகாம கேளும்மா. உன்னோட செவ்வந்திதா வந்துட்டன்ல” – மூடியிருந்த கண்களை மெள்ளத்திறந்த அந்தப் பெண்ணின் முகத்தில் ஸ்நேகமான புன்னகையொன்று விரிந்து பரவியது.

மூக்கை உறிஞ்சிக்கொண்டாள் தாரிணி.

“எம்பட பேரு என்ன?”

அப்படித்தான் கேட்கச் சொல்லி அறிவுறுத்தியிருந்தாள் அந்தப்பெண். “கொஞ்சநேரம் நான் கண்ணை மூடி, தியானத்துல இருப்பேன். ஆவி எம்மேல எறங்குனதும், ஒடம்புல ஒரு ஒவச்சல் ஏற்பட்டு அடங்கும்.‌  அப்புடி அடங்கி‌ அமைதியானதுந்தான், கண்ணை முழிப்பேன். கண்ணைத் தொறந்ததும், மொதல்ல, எறங்கியிருக்கறது நீங்க வேண்டிக்கிட்ட ஆவிக்குரியவங்கதானான்னு கன்பார்ம் பண்டிக்கறதுக்காவச் செல கேள்விகளக் கேளுங்க. கன்பார்ம் ஆயிடுச்சுன்னா மத்த கேள்விகளக் கேக்கலாம்.‌ அதிகபட்சம் அஞ்சு கேள்விக. அதுக்கும் மேல கூடாது”.

“எம்பட பேரு என்ன?”

மறுபடியும் கண்களை இறுக மூடிக்கொண்டாள் அந்தப் பெண்.‌ சில விநாடிகள் அமைதியாகக் கழிந்தன.‌

“பூவு பிஞ்சாகி, பிஞ்சு காயாகி, காயி பழமான பேரு. அது கெளையோடிக் காய்க்கற‌ மரமுமில்ல; அது ஒத்தையாக் கனியிற காம்புமில்ல”

தாரிணிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஏமாற்றத்தின் அறிகுறிகள் அவளது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தன.‌ “என்னடீ சொல்றா இவ?” என்னும் பாவனையில், மரியத்தின் முகத்தை ஏறிட்டாள்.

மரியத்தின் கண்களிலிருந்து நீர்த்துளிகள் உருண்டோடின.‌ “வந்திருக்கறது நம்பு செவ்வந்தி தாண்டி.‌ பாரு உம்படபேரை எத்தனை கரைக்டாச் சொல்லிப்போட்டா!”

ஆனால், தாரிணிக்கு இன்னமும் பிடிபடவில்லை.

“பழம்ன்னாலே வாழைப்பழந்தானடீ? அதுதான கெளை பிரியாத மரத்துல, ஒத்தையாக் காய்க்காம கொத்தாக் காய்க்கற மரம்? அந்தக் கொத்துக்குப் பேரு தாரு தான? தாரு. தாருநீ. தாரிணி.‌ புரீதாடி இப்ப?”

விளக்கத்தைக் கேட்டதும் மறுபடியும் வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள் தாரிணி. ஆனால், இன்னமும் சந்தேகம் தீராதவளைப் போல,

“உனக்கு நெம்பப் புடிச்சது என்ன?” என்று கேட்டாள்.

சிறிதுநேர அமைதிக்குப் பின் பதில் வந்தது,

டீட்டி

அவ்வளவுதான்!

“ஐயோ, செவ்வந்தீ. செவ்வந்தீ… வந்துட்டியாளே? வந்துட்டியாளே எந்தங்கமே??  ஐயோ, ஏளே எங்களையெல்லாம் இப்புடிக் கதற உட்டுப்போட்டுத் திடுதிப்புன்னு செத்துப்போன? தேவுடியா!”

நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதாள் தாரிணி.‌ அவளை அமைதியாக இருக்கும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள் மரியம். “அமதியா இருடி. என்ன பண்ட்றது? சாவறதும் பொழைக்கறதும் நம்பு கையிலியா இருக்குது? கேளு. செவ்வந்திகிட்ட என்னென்னமோ கேக்கணுமுன்னு இத்தந்தூரம் வந்தயே? கேட்டுக்கடி தாரிணி”

“மொதல்ல “டீட்டி” வாங்கீட்டு வாங்கடீ. குடுச்சுக்கிட்டே பேசுவோம்” – அந்தப்பெண் இப்போது இறுக்கமெல்லாம் தளர்ந்தவளாக மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.

தெரியாத ஊரில் எங்கு போய் வாங்கி‌வருவது? அவர்களைப் புரிந்துகொண்டவளைப் போல அந்தப்பெண், வாசலைப் பார்த்துக் குரல் கொடுத்தாள், “சதீசே”

கழுத்து நீண்ட ஒல்லியான ஒரு இளைஞன் அறைக்குள் எட்டிப் பார்த்தான்.

“சதீசே, தா. ‌இவீகிட்டக் காச வாங்கீட்டுப்போயி, 1848, அஞ்சு கோட்ரும், கடிபண்டமும், நாலு கெளாசும் வாங்கீட்டு வா”

தாரிணியிடம் ரூபாய் நோட்டுக்களை வாங்கிக்கொண்டு அவன் கிளம்பியதும்,

“கேளுடி தாரிணி? என்ன கேக்கோணுமுன்னு நெனைக்கறயோ அதயெல்லாந் தயக்கமில்லாத கேளு”

“நீ எப்புடிடீ செவ்வந்தீ செத்துப் போன?”

இந்தக் கேள்வியைத்தான் தாரிணி கேட்பாள் என்பது மரியத்திற்கும் தெரியும். ஒருவேளை மரியம் கேட்பதாக இருந்தாலும், இதே கேள்வியைத்தான் முதலில் கேட்டிருப்பாள்.‌ இவர்கள் மட்டுமல்ல, இவர்களுடைய தோழியர் யார் கேட்டிருந்தாலும் கூட, இதே கேள்வியைத்தான் கேட்டிருப்பார்கள். வீட்டின் வாசலில் நின்றிருந்த செவ்வந்தி, ஈருருளி மோதியதால் நினைவிழந்து இறந்து போனாள் என்ற செய்தியை நம்புவதற்கு யாருமே தயாராக இல்லை.‌ அவளது குடும்பத்தினரே தான் அவளை அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்றே அனைவரும் சந்தேகப்பட்டார்கள். ‘செவ்வந்தி அடிபட்டு மயக்கத்தில் கிடக்கிறாள்’, என்ற செய்தி எட்டியதுமே மருத்துவமனைக்கு விரைந்த தாரிணியையும், அகோரத்தையும் பிடிபிடியென்று பிடித்துக்கொண்டாள் செவ்வந்தியின் மனைவி. இத்தனைக்கும் அவர்கள் இருவரும், ‘பந்தி சாட்’டில் தான் இருந்தார்கள். ஸ்டைலாகத் தாடி வேறு வளர்த்திருந்தார்கள். “சண்முகத்தோட பிரண்டுக நாங்க…” என்று  அறிமுகப்படுத்திக் கொண்டதுதான் தாமதம்.

“பேண்டு சரட்டுப் போட்ருந்தா மட்டும் ஆம்பளைகளாயிருவீங்களாடா பொட்டைமாறிகளா? ஆளையீம் பொச்சையிம் பாரு? இதுவரைக்கிங் கெடுத்துக் குட்டிச் செவுரு பண்டுனது போதாதாடா தெள்ளவேரிகளா? என்ன மசுத்துக்கடா இங்க ஏறீட்டு வாறவனுக? இன்னும் அரைக்கொறையா இருக்கற மானத்தீங்கெடுத்து ஏலத்துல ஏத்தோணுமுன்னு வந்தீங்ளாடா கேனக்கூதிகளா? மருகாதியாப் போயிருங்க. அந்தத் தலையேறியப் பாக்கறேன் கீக்கறன்னு எந்தப் பொட்டத்தாயோலிகளாச்சூ ஆசுப்பத்திரிப்பக்கொ வந்தீங்கொ??? செருப்புப் பிஞ்சு போயிருஞ் சாக்கரதை”

இருவரும் வெலவெலத்துப் போனார்கள்.‌ கை கால்கள் உதறலெடுத்துக் கொண்டன. தெரிந்தவர்கள் யாருடைய கண்களிலாவதும் பட்டுவிட்டோமா? என்று சுற்றும்முற்றும் ஒருதரம் நோட்டம் விட்டுக் கொண்டவர்கள், எச்சிலைக்கூட்டி விழுங்கிக்கொண்டு,

“சாமியா சாமியா இருப்பீங்க. ஒரேயொரு தடவை, ஒரேயொரு தடவைமட்டுந் தூரத்துல இருந்து சண்முகத்தப் பாத்துக்கறமே” – கையெடுத்துக் கும்பிட்டார்கள்.

“சொன்னாப் புரியாதாடா உங்குளுக்கு?…” என்று அதிகாரமாகக் குரலெழுப்பியபடியே மருத்துவமனைக்குள்ளிருந்து இரண்டு ஆண்கள் வேகமாக ஓடி வந்தார்கள்.‌ அவர்களில் ஒருவன் சண்முகத்தின் ஜாடையில் இருந்தான். தப்பித்தோம் பிழைத்தோம் என்று அந்த இடத்தைவிட்டு உடனடியாக அகன்றார்கள் தாரிணியும், அகோரமும்.

அதற்கப்புறம், ‘பந்தி’யைப் போலவே இருக்கிறார்கள் என்று தாங்கள் நம்பிய சிலரை அனுப்பிவைத்த முயற்சிகளும் கூட, தோல்வியிலேயே முடிந்தன. உற்றார், உறவினரைத்தவிர வேறு யாரையுமே சண்முகத்தைப் பார்ப்பதற்கு அவனது குடும்பத்தார் அனுமதிக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே அடிப்பதற்காகக் கையோங்கிக்கொண்டு வந்தார்கள்.

மூன்றுவார காலமாக ஆஸ்பத்திரியில் கிடந்தபொழுதும் சரி, செத்துப் பிணமாகி அரைநாள் வீட்டில் கிடந்த பொழுதும் சரி, மின்மயானத்தில் எரிந்து சாம்பலான அந்தப் பின்மதியத்திலும் சரி, செவ்வந்தியைத் தூரத்திலிருந்துகூடப் பார்க்கமுடியவில்லை அவர்களால்.

“அவீளக் குத்தஞ்சொல்ல என்னத்தீளே இருக்குது? கலியாண வயிசுல பயம் பிள்ளையெல்லா வெச்சுட்டு, இவ, இப்படிச் ‘ச்சோக்கேத்தீட்டு’ ஊரூராத் திரிஞ்சா? அவீமட்டு என்னத்தீளே பண்டுவாங்க?”, தங்களுக்குள் பேசிப்பேசி மாய்ந்துபோனார்கள் தோழியர்.

“அதுக்குன்னு இப்பிடியாளே பண்டுவாங்க சண்டாளிமக்கொ? பிள்ளக்கி மாப்பளை பாக்கப் போறம்ன்னு மீசையல்லா வளத்தீட்டு, ‘சச்சா பந்தி’யாட்டத்தான்ளே ஊருக்குப் போனா? கிருதாவல்லாம் வேற பெருசா வெச்சுட்டு இருந்தாளே ளேய்… ? ஐயோ…” – தாங்கிக்கொள்ளவே இயலாமல் நெஞ்சில் அறைந்துகொண்டு கேவினாள் தாரிணி.

“இவ்வளவுதான்ளே நம்பு பொழப்பு! இவ்வளவுதா நம்பு பொழப்பு!! பொட்டையாப் பொறந்துட்டாப் பொட்டைகளோட பொட்டையாப் போயிச் சேந்துக்கணும். அல்லாத, இப்பிடி ஆத்துலகொஞ்சஞ் சேத்துலகொஞ்சம்ன்னு ரட்டப்பொழப்புப் பொழச்சம்ன்னா இந்தக்கெதிதா! ளேய்… நம்புளுக்குன்னு நாம்பமட்டுந்தான்ளே இருக்கறொ. நாம்பல்லா அநாதிக்கும் அநாதீகளே… ஐயோ… இப்பிடி நாய அடிச்சுக் கொல்றாப்பல எங்களை அடிச்சுக் கொல்றாங்களே ஆண்டவனே…!” – பெருங்குரலில் ஓலமிட்டாள் பானுமதி.

“ஆண்டவனாவுது! மாண்டவனாவுது!! ஆரெல்லா எங்கு செவ்வந்திய அடிச்சுக் கொன்னாங்களோ… அவிய நா”,

‘பட்’டென்று கோமதியின் வாயைப் பொத்திக் கொண்டாள் தாரிணி. “வேண்டாங்குரூ… உங்கு வாயால அப்பிடிச் சொல்லீறாதீங்ககுரூ.‌.. செவ்வந்தி அவ பயம்மேல உசுரயே வெச்சிருந்தா குரூ… அவுனுக்கு ஒன்னுன்னா அவளால தாங்கிக்கவே முடியாது; தாங்கிக்கவே முடியாது… அவ ஆத்துமா துடிச்சுப்போயிரும்”

வாயைப் பொத்திய தாரிணியின் கைகளை வம்படியாக விலக்கிவிட்டு, ஆற்றாமையால் இரண்டு கைகளாலும் தரையை ஓங்கியறைந்து ‘ஓ’ என்று ஊளையிட்டு அழுதாள் கோமதி. முடிந்திருந்த அவளது திரிசடைகள் அவிழ்ந்து மண்ணில் விழுந்து புரண்டன. ‘சட்’ டென்று அவளைச் சூழ்ந்தமர்ந்து கட்டியணைத்து ஒப்பாரிவைக்கத் தொடங்கினார்கள் தோழியர் எல்லோரும்.

செவ்வந்திக்காகக் கூரைமேல் வைக்கப்பட்டிருந்த சோற்றைக் கரைந்தபடி கொத்திக் கொண்டிருந்தன காகங்கள்.

சாவதற்கு இரண்டு மாதங்களுக்கும் முன்பாக ஒருநாள், திடீரென்று அழைத்தாள் செவ்வந்தி, “ஒடனே கெளம்பிவா தாரிணி” அவளது அன்பு அப்படித்தான்.‌ நேரங்காலம் பார்க்காமல் ஒரு உத்தரவைப் போல, பறந்துவரும்.

“ஏஞ் செவ்வந்தி? என்ன வெளையாடறையா? தைப்பொங்கலன்னக்கி ‘வா’ ன்னு கூப்ட்டா எப்புடீளே வாறது?”

“பாவம், தலைப்பொங்கலு? அம்மா புதுப்பிரசனோட அப்பமூட்டுக்குப் போயி எறங்கறீங்களாக்கு? பொச்சமூடீட்டு வான்னா வாளே”

அவ்வளவுதான். அழைப்பைத் துண்டித்துவிட்டாள். அவள் கேட்பதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. பொங்கலுக்காகக் கம்பெனியிலும் ஒருவாரத்திற்கு விடுமுறை விட்டிருந்தார்கள். எந்நேரம் பார்த்தாலும் வீட்டிலேயும் அடைந்து கிடக்கமுடியாது. தலையைக் கண்டாலே ‘த்தூ’ ‘த்தூ’ என்று காறிக்காறித் துப்பிக்கொண்டிருக்கிறார் அப்பன். வழக்கத்தைப் போல, தன்னையொத்த தோழியருடன், தலைவியான‌ கோமதியின் வீட்டில் விடுமுறையைக் கழிக்கலாம் என்றால், அதிலும் மண் விழுந்திருந்தது. அவர்கள் எல்லோரும் ஒரு அழைப்பின் பேரில் சென்னைக்குப் போயிருந்தார்கள். ‘சரி’ என்று கிளம்பத் தயாரானாள் தாரிணி. செவ்வந்தியை அழைத்தாள்.

“ஏளே? ‘வா’ன்னு சொன்னா எங்கீன்னுளே வர்றது? கர்நாடகாவுல எங்கீன்னுளே உன்னய வந்து தொழாவறது? அட்ரசச் சொல்லுடி மொதல்ல”

“அதல்லா மரியத்துக்குத் தெரியிம். அவகிட்ட கான்டாக்ட் பண்டு. சாய்ங்காலத்துக்குள்ள ரண்டுபேரும் பத்தரமா  வந்து சேருங்க”

அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

தாமரைக்கரை வரைக்கும் முன்பே வந்திருக்கிறாளே ஒழிய, அதைத்தாண்டிப் பயணித்ததில்லை. ஆனால், போகப்போக, பாதை வசீகரமானதாக மாறிக்கொண்டேயிருந்தது. கர்கேகண்டியைக் கடந்து வெகுதூரம் வந்திருந்தார்கள். ‘யானை ஏதுவும் கண்களில் அகப்பட்டுவிடாதா?’ என்ற ஏக்கத்துடன், ஜன்னல் வழியாகக் தெரியும் காட்டையே பார்வையால் அளைந்து கொண்டிருந்தாள் தாரிணி.

“ஜன்னலுக்கு வெளீல, இப்பிடித் தலையநீட்டீட்டுக் கெடக்கறவொ? ஏள்ளே? கூடுதொறை வாசல்லதா நெதோம் பிச்சையெடுத்துட்ருக்குதே? ஆனையப் பாத்ததே இல்லையா நிய்யி? அங்க பாரு அந்த பந்திய. ‌எப்புடிக் கட்டுமஸ்தானா ‘ஸீஸா’ இருக்கறான்! அவனப் பாக்காத மலங்காட்டப் பாத்தூட்ருக்கறவொ?”  – முழங்கையால் அல்லையில் இடித்தாள் மரியம்.

பேருந்து சோதனைச் சாவடியில் நின்றிருந்தது. மரியம் காட்டிய திசையில், காவலனொருவன் காக்கி உடையில் அமர்ந்து என்னவோ எழுதிக்கொண்டிருந்தான்.

“போளே. நாம்பாக்காத ‘லிக்கமா’? இன்னக்கி நாம் பாத்தா, ஆனை லிக்கத்தத்தாம் பாப்பெ”

“ஆமாளே, உம்பட ஆசைக்கல்லா ஆனை லிக்கங்கோடப் பத்தாது! டயனோசருதா வந்து பொட்டியில ஏத்தோணும்”

மீண்டும் கிளம்பிக் கொஞ்சதூரம் சென்றதும், ஓடைக்கரட்டில் ஏறிய கட்டை வண்டியைப் போல குலுங்கு குலுங்கென்று குலுங்கியது பேருந்து.

“கர்னாடகாவுக்குள்ள வந்துட்டம்டி. இன்னுங் கொஞ்சந்தூரந்தா. செவ்வந்தி இருக்கற பஸ்டாப்பிங் வந்துரும்”

நிறுத்தத்தில் காத்திருந்த செவ்வந்தி, பேருந்திலிருந்து இறங்கிய இருவரையும் ஆவலுடன் கட்டியணைத்துக் கொண்டாள். கன்னங்களில் மாற்றிமாற்றி முத்தமிட்டாள். அந்த நாற்சந்தியில் தங்களைச் சுற்றிலும் ஒரு உலகம் இருக்கிறது என்பதையே மறந்தவளாய் கைகளைத் தட்டிக்கொண்டும், பலமாகச் சிரித்துக்கொண்டும், கெக்கலி போட்டுக்கொண்டும் உரையாடினாள்.

“இது ஸீஸான‌ ஊருடீ.‌ எல்லாருமே ஸீஸான ஜனங்க. ‘செவ்வந்தி’ ‘செவ்வந்தி’ ன்னு உசுரஉட்டுப் பழகுவாங்க. எனக்குத் தெரியாதவீளே இங்க யாருங்கெடையாது. என்னயத் தெரியாதவியளும் இந்தச் சுத்துவட்டாரத்துல ஒருத்தருமேயில்லடீ! பத்துவருசமா ஒவ்வொரு பொங்கலும்போதும் மூனுமாசமாச்சும் இங்கவந்து தங்கீறன்ல? கடை கேட்டாலும் நல்லா ‘டெப்பர்’ கெடைக்கும். நெறைய டீட்டிக்கடைக இருக்குது. யாரோ ஒருத்தரு பிரியப்பட்டு ஒரு பீராவுதும் வாங்கிக் குடுப்பாங்க. ‘துவா’ பண்ணாப் பத்து ருவாயாவுதுந் தராத உடமாண்டாங்க. ‘ச்சோக்’ வேற ஏத்தியிருக்கறனா? ‘தந்தா’வுக்கும் பஞ்சமில்ல. எல்லாமே ‘ஸீஸ்பந்திகடீ’ ஒவ்வொரு வருசமும் உன்னயக் கூப்டுட்ருக்கறென். நீதான் வந்ததேயில்ல. மரியத்தக் கேட்டுப்பாரு. போன வருசங்கூட வந்துருந்தா”

செவ்வந்தி நல்ல கறுப்புநிறம். கைகால்களிலும், மார்பிலும், முதுகிலும் புசுபுசுவென முடியடர்ந்திருக்கும். ஆறடி உயரம்.‌ அதற்கேற்ற‌ உடற்கட்டு. அறுபதை நெருங்குவதாலோ என்னவோ, தற்போதுதான், சிலகாலமாக ஒரு சிறிய தொய்வு தென்படுகிறது அவளது உடலிலும், நடையிலும். சொந்த ஊரில், ஆண் உடைகளில்தான் வலம்வருவாள். ஆனால் இங்கோ, தாடி மீசையை அழுந்தச் சிரைத்து, அடுக்கடுக்காக அரிதாரம் பூசி, தலையில் ‘விக்’ வைத்துக் கொண்டை போட்டிருந்தாள்.‌ பளீரடிக்கும் பிங்க் நிறத்தில் சேலை கட்டியிருந்தாள். ஆனால், அதன் நீளம் தான் அவளுக்குக் குறைவானதாக இருந்தது. முந்தானை முதுகைத் தாண்டிக் கீழே இறங்குவதற்குச் சிரமப்பட்டது. கிளிப்பச்சை நிறத்தில் இரவிக்கை அணிந்திருந்தாள். கைகளில் வளையல்கள். கால்களில் கொலுசு என்று, பெண்ணாகவே மாறியிருந்தாள்.

“’ச்சோக்’ ஏத்துனுயேளே முண்ட? இந்தக் கை ரண்டுக்குங் கொஞ்சம் ‘டர்ரு’ போட்ருந்தாத்தா என்ன? பாரு எப்புடிக் கண்றாவியாக் கரடிக் குட்டியாட்ட இருக்குதுன்னு” – செவ்வந்தியின் கையில் இருந்த சுருள்முடிக்கொத்தைப் பிடித்து இழுத்தாள் மரியம்.

“ஐயோ, உடளே, வலிக்கிது கருமம்” என்றபடியே தேநீர்க்கடை ஒன்றினுள் நுழைந்து உரிமையாக ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்துகொண்டாள் செவ்வந்தி, இவர்களும் இருக்கைகளில் அமர்ந்துகொண்டார்கள். புன்னகையுடன் அருகில் வந்த கடைக்காரப் பெண்மணி, “பிரண்ஸா செவுந்தி?” என்று வினவினாள்.

“ஆமா சரோஜா. நம்பு பொண்ணுகதா.‌ ஊர்லருந்து பொங்கலுக்கு வந்துருக்கறாளுக” என்றவள், முந்தானையை முன்னுக்கு இழுத்து, இரண்டு கைகளாலும் பற்றிவிரித்து விசிறியபடி, “ரொம்பப் புழுங்குது சரோஜா. ஃபேன் சுச்சக் கொஞ்சந் தட்டியுட்டுட்டு ஆளுக்கொரு டீயப் போடு. எனக்கு மட்டுஞ் சக்கரை கம்மியா”, என்றாள்.

மின்விசிறியைச் சுழலவிட்ட அந்தப்பெண், “பொண்ணுகங்கற செவுந்தி? ஆனா, ரண்டுப் பேருமே தாடி மீசையல்லா வெச்சிக்கறாங்கெ?” என்று கேட்டாள்.

“ஆமா சரோஜா. என்னையாட்டவே தாடி மீசை வச்ச பொண்ணுகதா இவுளுகளும் ஆனா சேவிங் பண்டிக்கில” என்று சொல்லிச் சிரிக்க, அந்தப் பெண்ணும் சிரித்துக் கொண்டே மூவருக்கும் தேநீர் தயாரித்துக் கொண்டுவந்து கொடுத்தாள். பருகிய மூவரது முகத்திலுமே மனநிறைவின் பாவங்கள் வெளிப்பட்டன. தேநீரைப் பருகிய மூவரிடமும், அதற்கான பணத்தை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்ட அந்தக் கடைக்காரப்பெண்,

“செவுந்தீ எங்க வீட்டுப் பொண்ணு மாதிரி. நீங்களும் அப்பிடித்தா. நம்ம அதிதிகளு. நாளக்கிக் காலீல மூனுப்பேரும் எங்க வீட்டுக்குச் சாப்புட வந்துருங்க. களி கிண்டி, கறிக்கொழம்பு வெச்சிருப்பேன்” என்று அழைப்புவிடுத்தாள்.

உடனே அவளது கன்னங்களைத் தடவி, தனது பொய்க்கன்னங்களில் நெட்டைமுறித்துக் கண்ணேறு கழித்துக்கொண்ட செவ்வந்தி,

“சரோஜான்னா சரோஜா தான். ஸீ…ஸூ” என்று பாராட்டிவிட்டு விடைபெற்றாள்.

மிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அமைந்த கிராமம் என்பதால், தமிழும், கன்னடமும் சரளமாகப் புழங்கின‌ அங்கே. பண்பாட்டு ரீதியாகப் பெரிய‌ வேறுபாடுகள் எதையும் பார்க்கமுடியவில்லை. மக்களும் கூட, மிகவும் அன்பாகவே பழகினார்கள். திருநங்கையர் என்பதால் பொதுவாகக் கிடைக்கக்கூடிய கேலியோ, கிண்டலோ, ஏளனமோ எதுவுமே அங்கே இருக்கவில்லை. பலநாள் பழகியவர்களைப் போல அன்பாகப் பேசினார்கள்; பரிவாக நடத்தினார்கள். சிலவேளைகளில், தாமாகவே முன்வந்து, மனமுவந்து உதவவும் செய்தார்கள். எல்லாமே தாரிணிக்கு வியப்பாக இருந்தன.

“இங்க எல்லாருமே ரொம்ப நல்ல மனுசங்க தாரிணி.‌ தலையக் கண்டுட்டாப் போதும், சின்னவங்கள்லருந்து பெரியவங்க வரைக்கும், “செவ்வந்திக்கா, செவ்வந்தீ” ன்னு உசுராக்கெடப்பாங்க. அதா, ஆனது ஆவட்டும் போங்கடான்னு வருசத்துல ஒரு மூனுமாசத்துக்கு இங்க வந்து ‘ச்சோக்’ ஏத்தீட்டு அக்கடான்னு இருந்துக்கறது. தங்கறதுக்கும் ஒரு பிரச்சனையுமில்ல. எப்ப வந்தாலும் இந்த வீட்லதாந் தங்கிக்குவேன்”

அதற்குள் அந்த வீட்டை அடைந்திருந்தார்கள். வாசல்கதவு சற்றே ஒஞ்சரித்து வைக்கப்பட்டிருந்தது. “கௌசீ கௌசீ” என்று குரல் கொடுத்தாள் செவ்வந்தி. நடுத்தரவயதுள்ள ஒரு பெண் வந்து கதவை அகலத் திறந்தாள்.

“சொன்னன்ல? நம்ம பிரண்சு கௌசீ. ஊர்லருந்து வந்துருக்கறாங்க” என்று இருவரையும் அவளுக்கு அறிமுகப்படுத்தினாள் செவ்வந்தி. நட்பான புன்னகையுடன், “வாங்க. உள்ள வாங்க” என்று வரவேற்றாள் கௌசி.

கூடத்தில், கைக்குழந்தையுடன் கட்டிலில் படுத்திருந்தாள் கௌசியின் இளையமகள். அவளும் நட்பாக இவர்களை வரவேற்றாள்.

“இவதான் கௌசியோட மூனாவது பொண்ணு. பிருந்தான்னு பேரு. பையம் பொறந்து பதனஞ்சுநாள்தா ஆவுது. புருசன் ஆந்தராவுல வேல செய்யறாரு. மாமனாரும், மருமகனும் ஒரே குவாரீல காண்ட்ராக்ட் எடுத்து கூட்டா பிஸ்னஸ் பண்டீட்ருக்கறாங்க. என்னக் கண்டுட்டாப் போதும்! “செவ்வந்திக்கா செவ்வந்திக்கா” ன்னு உசுர உட்டுக் கெடப்பாரு பிருந்தாமாப்பளை. கௌசி வீட்டுக்காரரும் செம ஜாலி டைப்பு. எப்ப வந்தாலும், ‘செலவுக்கு வச்சுக்க செவ்வந்தீன்னு’ பர்சுல எவ்வளவு இருக்குதோ, அப்புடியே எடுத்துக் குடுத்துருவாப்ல மனுசன்!”

அதற்குள், சமையலுக்கான‌ ஏற்பாடுகளில் இறங்கியிருந்தாள் கௌசி. அவளுக்கு உதவுவதற்காக ஓடிப்போனாள் செவ்வந்தி.

ன்றைக்குக் காணும் பொங்கல். தாரிணியும், மரியமும் கண்விழிக்கும் பொழுதே மணி எட்டாகியிருந்தது.‌ மலைகள் சூழ்ந்த இடம் என்பதால், குடித்திருந்த பானங்களையும், போர்த்தியிருந்த கம்பளியையும் மீறி இரவெல்லாம் கிள்ளிக்கொண்டேயிருந்தது குளிர். இவர்களுக்கும் முன்னமே எழுந்து, வாசல் தெளித்துக் கோலம் போட்டு, வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்து, பண்டபாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து, எல்லோரும் குளிப்பதற்கான வெந்நீரை விறகடுப்பில் ஏற்றிவிட்டுக் காலை உணவுக்கான தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள் செவ்வந்தி. இவர்கள், காலைக்கடனை முடித்துவந்ததும், சூடாகக் காப்பியைக் கொடுத்தாள் கௌசி.

“சீக்கிரமாக் குளிச்சிட்டுக் கெளம்புங்கடீ இவுளுகளே… மத்தியானத்துக்குள்ள மலைமேல இருக்கற‌ சர்ச்சு சொன்னன்ல? இன்னக்கி நெம்ப விசேசமா இருக்கும். அங்க போயிட்டு வந்து, அப்புடியே அதே ஆட்டாவுலயே ஊக்கியத்துக்குப் போறோம். போறவழீல ‘ஆரவல்லி சூரவல்லி கோட்டை’ இருக்குது. அதைப் பாக்கலாம்.‌ அடுத்தாப்பல இருக்கற ஊர்ல கம்பளா ரேஸ் நடக்கும். அதையும் பாத்துட்டு ஊக்கியத்துக்குப் போனம்ன்னா, நாஞ் சொன்னன்ல கல்பனா? அவவீட்டுக்குப் போலாம். நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவடீ… ‘டீட்டி’, கறிஞ்சோறுன்னு பிரமாதப்படுத்தீருவா. நைட்டு தங்கறதுக்கு அங்கயே மல்லீஸ்வரி வீடு இருக்குது. எப்பவுமே ‘ஜம்பு டீட்டீல’தா இருப்பா. தலையக்கண்டுட்டான்னாப் போதும்! கேஸூக் கேஸா எறக்கீருவா!!”

திட்டம் தீட்டுவதில் செவ்வந்தியை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. நேற்றைக்கும் இப்படித்தான். அருகே இருந்த ஒரு கிராமத்தின் கோவில் திருவிழாவிற்குக் கூட்டிச் சென்றாள். அத்தனை கூட்டத்திலும் அவளுக்குத் தெரிந்தவர்கள் நிறையப்பேர் இருந்தார்கள்.‌ வாஞ்சையாகப் பேசினார்கள். வம்படியாகத் தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்தார்கள்.‌ நிறைய இளைஞர்கள் சூழ்ந்து கொண்டு ஆசையாக வம்பளந்தார்கள். பார்களுக்குக் கூட்டிச்சென்று மது வாங்கிக் கொடுத்தார்கள். போதைக்களிப்பில் இவர்களுடன் சேர்ந்து தெருக்களில் குத்தாட்டம் போட்டார்கள். தாரிணிக்கு, தன்னைச்சுற்றி நடப்பதெல்லாம் நிஜம்தானா? என்ற சந்தேகம் இருந்துகொண்டேயிருந்தது. அத்தனை மகிழ்ச்சியாக இருந்தாள். ‌அடையாளம் தெரியாத ஊரொன்றில், மக்கள் அள்ளியள்ளிக் கொடுத்த அன்பையெல்லாம் ஆசைதீர அனுபவித்தாள். கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் ஒற்றை ஆளாய்த் திணறிக்கொண்டிருந்த கடைக்காரர் ஒருவருக்கு, செவ்வந்தியுடன் சேர்ந்து பனியாரம்சுட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உதவியதெல்லாம் மிகவும் புதிய அனுபவமாக இருந்தது அவளுக்கு.

க்கியத்தை அடையும் பொழுது மணி நாலுக்கும்மேல் ஆகியிருந்தது. இவர்கள் சென்ற நேரத்தில், கல்பனா, வீட்டில் இருக்கவில்லை. அவளது மகள்களும், மருமகனும் தான் இருந்தார்கள். மூவருமே அன்பாக உபசரித்தார்கள். சாப்பிட்டே ஆகவேண்டும் என்று வற்புறுத்திய கல்பனாவின் மூத்தமகள், “கொழம்பு, கறியெல்லா இருக்குதுங்க்கா. கொஞ்சமே கொஞ்சநேரம் பேசிட்டு இருங்க. சோத்தை மட்டும் வச்சர்றேன்”, என்று பரபரத்தாள். மதுபானம் வாங்குவதற்காக வண்டியைக் கிளம்பிக்கொண்டு போனான் அவள் கணவன்.

“எந்தங்கம். நீ சொன்னதே விருந்து சாப்ட்டாப்பல இருக்குது சாமி. நல்லா இருக்கணும்” என்று அவளுக்குக் கண்ணேறு கழித்துக் கன்னத்தோரம் நெட்டை முறித்துக்கொண்ட செவ்வந்தி,

“நீ சோறாக்கீட்ரு கண்ணு; தா, நாங்க பாலாம்மா வீட்டுவரைக்கும் போயிட்டு வந்தர்றோம். இல்லீன்னா, அவவேற ‘இத்தந்தூரம் வந்துட்டு எம்பட ஊட்டுக்கு வராத போய்ட்ட செவ்வந்தி?’ன்னு கோவச்சுக்குவா” என்று கிளம்பினாள்.‌ அவளைப் பின்தொடர்ந்தார்கள் தாரிணியும், மரியமும்.‌ நாலெட்டு வைத்தவள், ஏதோ தோன்றியவளாகத் தலையைத் திருப்பி, “மாமாவே சரக்கையெல்லாங் குடிச்சுப் போடப்போறாரு பிரியா. நாங்க வர்றவரைக்கும் பத்தரமாப் பாத்துக்க சாமீ”, என்று சத்தமாகச் சிரித்தாள்.

“கவலைப்படாம போய்ட்டு வாங்க செவ்வந்திக்கா. நாம் பாத்துக்கறேன்” என்று சொல்லிக் கண்ணடித்தாள் கல்பனாவின் இளைய மகள்.

க்கள், மருமக்கள், பேரன் பேத்திகள், சில உறவினர்கள் என்று வீடே கலகலப்பாக இருந்தது. செவ்வந்தியைக் கண்டதுமே முகம்மலர்ந்த சிரிப்புடன் வரவேற்றார் பாலாம்மா, “யேய்… பா செவ்வந்தீ பா பா பா. பாத்து ரொம்ப நாளு ஆயாச்சு! எப்புடி இருக்கற? நல்லா இருக்குறியா?”

“அதெல்லா உங்கு புண்ணியத்துல நல்லாருக்கறம் பாலாம்மா. இவுளுக ரண்டுபேரும் எம்பட ஸ்நேகிதிக.‌ ஊர்லருந்து என்னயப் பாக்க வந்திருக்கறாளுக”

“வாங்க வாங்க” என்று மலர்ந்த முகத்துடன் அவர்களையும் வரவேற்ற பாலாம்மா, மூவரையும் தன்னருகே வந்து அமருமாறு கேட்டுக்கொண்டார். அதற்குள் அங்கே ஒரு பாயைக் கொண்டுவந்து விரித்திருந்தாள் பாலாம்மாவின் மருமகள். பாலாம்மாவின் மகனான மாதேஸ் பரபரப்பாக வீட்டிற்குள் சென்று எதையோ எடுத்துக்கொண்டு வந்தான்.

“நாஞ் சொல்லுல? ‘பாலாம்மாவோட உபசரிப்பே தனிய்யா இருக்கும்’ன்னு?” தாரிணியிடமும், மரியத்திடமும் சிலாகிப்பாகச் சொல்லிச் சிரித்தாள் செவ்வந்தி. உண்மையிலேயே அவர்களிருவரும் ஆச்சரியத்தில் திகைத்துவிட்டார்கள். இடதுகையில் தாங்கியிருந்த அட்டைப்பெட்டிக்குள்ளிருந்து ‘கால் குப்பிகளை’ ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொருவர் முன்பாகவும் வைத்தான் மாதேஸ். ஒவ்வொருவர் முன்பாகவும் என்றால், செவ்வந்தி, தாரிணி, மரியம் முன்பாக மட்டுமல்லாமல், தனது தாயாரான பாலாம்மா உட்பட அங்கே இருந்த அத்தனை ஆண்கள், பெண்கள் அனைவர் முன்பாகவும் குப்பிகளை வைத்தான். அவனைத் தொடர்ந்த அவனது மனைவி, வறுத்தகறி நிறைந்த பாக்குமட்டைத் தொன்னைகளை ஒவ்வொருவர் முன்பாகவும் வைத்துக் கொண்டே சென்றாள்.

“நீங்களும் இன்னும் சாப்படலியா பாலாம்மா?” என்று செவ்வந்தி கேட்க,

“இல்ல செவ்வந்தி. காலீல சாப்பாடே லேட்டாதா சாப்ட்டோம். அதுனால இப்பத்தா சமைச்சு முடிச்சோம்” என்றார்.

அப்ப நாங்க, கரைக்ட்டான நேரத்துக்குத்தா வந்திருக்கறம்ன்னு சொல்லுங்க” என்று சொல்லிச் சிரித்தாள் செவ்வந்தி. அவள் முன்பாக வந்து சற்றே குனிந்த மாதேஸ், தணிந்த குரலில், “செவ்வந்திக்கா, மிக்சிங்க்கு இவுங்களுக்கும் தண்ணி போதுமா? இல்ல கூல்ட்ரிங்ஸ் எதாவது வாங்கிட்டுவரட்டுமா?” என்றான்.

“இவுளுகளை உட்டா ராவாவே ஊத்திக்குவாளுக சாமி. தண்ணியே போதுங் கண்ணூ” என்றாள்.

சற்றுநேரத்தில் எல்லோருமே மிகவும் களிப்பான மனநிலைக்கு வந்திருந்தார்கள். குத்துப்பாடல்களை அதிரவிட்டான் மாதேஸ். பொடிசுகள் கூடி ஆடத்தொடங்கின. எல்லோரும் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். கீழ்உதட்டை விரல்களால் இழுத்துப் பிடித்து அட்டகாசமாக சீட்டியடித்துக்கொண்டிருந்த செவ்வந்தி, சேலையைத் தூக்கிச் செருகிக்கொண்டு, ‘ஊம் சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா?’ என்று தானும் களத்தில் குதித்தாள். அவ்வளவுதான்! சந்தோஷ வெள்ளம் பொங்கிப் பெருக் கெடுத்துவிட்டது அங்கே. சிறிதுநேரத்தில், எல்லோருடைய வேண்டுகோளுக்கும் இணங்கி, தாங்களும் களத்தில் இறங்கினார்கள் தாரிணியும், மரியமும். அவர்களுக்காகவே, ‘நான் சூடான மோகினி’ யை அதிரவிட்டான் மாதேஸ்.

அப்போது தான், சிறிய தள்ளாட்டத்துடன் அங்கே வந்து சேர்ந்தார் ஒரு பெரியவர். நிலவுகால்களைப் பிடித்துக்கொண்டு சில விநாடிகள் நிலைப்படியிலேயே நின்றுகொண்டிருந்தவர், “தமிழுபாட்டு எதுக்குப் பாடுது? நம்ம பாட்டப் போடுடா மாதேஸூ” என்று கர்ச்சித்தார் கன்னடத்தில்.

“சும்மா இரேன் மாமா? இவங்கள்லாம் தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கற‌ நம்ம பிரண்ஸூ” என்று அவரை உடனடியாக அடக்கப் பார்த்தான் மாதேசும் கன்னடத்தில். ஆனால் அவர் அசரவில்லை. மிகவும் வெறுப்பான‌ ஒரு பார்வையை, ஒதுங்கி நின்றிருந்த மூவர் மீதும் படரவிட்டவர், “தமிழ்நாட்டுகாரங்களுக்கு இங்க எடமே கெடையாது. கெட் ஔட். வெளீல போங்க மொதல்ல” என்று உறுமியபடி நடையைக் கைகாட்டினார். உண்மையிலேயே மூவரும் செய்வதறியாது திகைத்துவிட்டார்கள். ‘குப்’பென்று வியர்த்து ஒழுகியது. அந்த இடமே அமைதியில் ஆழ்ந்தது. மாதேஸ் பாட்டை நிறுத்தியிருந்தான்.

“ம்… இப்பவே வெளீல போய்டுங்க” மிரட்டும் தொனியில் ஆணையிட்டார் அந்தப் பெரியவர். அவ்வளவு தான்! புயலைப் போல எழுந்துகொண்ட பாலாம்மா, அவரைப் பார்த்துக் கையை நீட்டிக்கொண்டு கத்தினார் கன்னடத்தில்,

“மொதல்ல நீ வெளீல போடா நாயே! மெய்யாலுமே நம்ம அம்மா வயித்துல பொறந்தவந்தானாடா நீ? வீட்டுக்கு வந்த விருந்தாளிங்கள வெளீல போகச் சொல்ற‌ நீயெல்லாம் மனுஷனாடா மொதல்ல? த்தூ…”

“வேண்டாம் பாலாம்மா..” – ஏதோ சொல்ல வாயெடுத்தவரிடம்,

“எச்சிக்குடிக்காகத்தான என்னோட வீடுதேடி வந்த? வந்தா வந்த வேலைய மட்டும் பாத்துட்டுப் போயிட்டே இரு. அதுக்கும்மேல எதாச்சும் நாட்டாம பண்ணப் பாத்தேன்னா? பாட்டில ஒடைச்சு நெஞ்சுல பாய்ச்சீருவேன் ஜாக்ரதை!”

அதற்குள், தனது தாய்மாமனான அவரை அணுகி இறுக்கமாக அணைத்துக்கொண்ட மாதேஸ், சமாதானமாக இருக்குமாறு அவரிடம் ஏதேதோ சொல்லி மன்றாடினான்.‌ வம்படியாக அமரவைத்துக் கோப்பையிலிருந்த மதுவை அவரது கைகளில் திணித்தான். அதைச் சலனமில்லாமல் வாங்கி, ஒரே மடக்கில் உள்ளே தள்ளிக்கொண்ட அவர், தனது முறுக்கு மீசையைப் பெருமிதமாகப் புறங்கையால் தடவிவிட்டுக்கொண்டே, “பாட்டைப் போட்றா மருமகனே… அவங்க ஆடட்டும்”, என்று புன்னகைத்தார். பாடல் மீண்டும் தொடங்கியது. சிறிது நேரத்தில் பழைய உற்சாகம் மீண்டது. இப்போது அந்த மனிதரும் களத்தில் இறங்கி மூவருடனும் குத்தாட்டம் போடலானார்.

நீ எப்புடித்தான்டீ செத்துப்போன? உண்மைய மறைக்காம சொல்லு”

“காலம் வந்துருச்சு செத்துப்போய்டேன். இதுல மறைக்கற அளவுக்கு வேற ஒரு மர்மமும் இல்லடி தாரிணி”

ஆனால் தாரிணி சமாதானமடையவில்லை. சிலநொடிகள் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், தொண்டையைச் செருமிக்கொண்டு மெல்லமாகக் கேட்டாள்,

“வீட்டோட இருக்கவே ரொம்பப் பயமாருக்குடி. நான் நிர்வாணம் பண்ணிக்கட்டுமா?  நிர்வாணம் பண்ணீட்டு நம்ம கோத்திகளோட கோத்தியாப் போயி இருந்துக்கட்டுமா?”

“விருப்பப்பட்டீன்னா தாராளமாப் பண்ணிக்கடீ. நீயாவதும் சந்தோஷமா இருடி”

ன்றரை இலட்சத்தை வாங்கிக்கொண்டு மூன்றையும் அகற்றிவிட்டு, அவள் ஆசைப்பட்டபடி பெண்ணுறுப்பைப் போலவே தோற்றமளிக்கும் வண்ணம் தைத்திருந்தார்கள் மருத்துவர்கள். பால்மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்த நாள்முதல், இந்த நாற்பது நாட்களாக, கூடவேயிருந்து அன்பாகக் கவனித்துக் கொள்கிறாள் மரியம். புண், ஓரளவுக்கு நன்றாகவே காய்ந்துவிட்டது. சிறுநீர் கழிப்பதிலிருந்த சிரமங்களும் கூட, படிப்படியாகக் குறைந்துகொண்டு வருகின்றன.‌ ‘பால் விழா’வுக்கான‌ நாள் குறிக்கப்பட்டு மற்ற ஊர் ஜமாத்காரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விழாவினை மிகவும் விமர்சையாகச் செய்துகொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருந்தாள் தாரிணி. ‘தேவையில்லாத ஆடம்பரச் செலவு எதற்கு? எதற்காகக் கடனாளியாகி நாளைக்குக் கஷ்டப்பட வேண்டும்? செலவை ஏற்றுக்கொண்டவர்கள் முன்பாக எதற்காக நாளைக்குக் கைகட்டி நிற்க வேண்டும்?’, என்று எண்ணிய தாரிணி, அனைத்து ஏற்பாடுகளையுமே சிக்கனமாகச் செய்யச் சொல்லியிருந்தாள். அழைப்பும் கூட, அலைபேசி வாயிலாக, மிகவும் நெருங்கியவர்களுக்கு மட்டுமே விடுக்கப்பட்டிருந்தது.  ஒரு சிறிய மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து, அனைத்துச் சடங்குகளையும் முறையாக ஆனால், சிக்கனமாகச் செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள். மாத்தா வழிபாடெல்லாம் முடிந்து, பால்குடத்தைத் தலையில் சுமந்து நடந்த தாரிணி, அதை, அதே மண்டபத்தின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த நீர்நிறைந்த பெரிய அண்டாவொன்றில் ஊற்றினாள். கற்பூரத்தை வெற்றிலையில் ஏற்றி அதில் மிதக்கவிட்டார்கள். இதுவே, முறையாக, விமர்சையாக, நள்ளிரவில் நடத்தப்படும் பழையபாணியிலான ‘மருதாணி விழா’வாக இருந்திருந்தால், யார் கண்ணிலும், குறிப்பாக ஆண்கள் எவருடைய கண்களிலும் பட்டுவிடாமல், மிகவும் எச்சரிக்கையுடன், தெருத்தெருவாக நடந்துசென்று, ஆற்றிலோ, குளத்திலோ, கிணற்றிலோ, கடலிலோ பாலை ஊற்றிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்துவருவார்கள். இப்போதோ, எல்லா ஊர்களிலும், எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும், எவனாவதும், வெட்டியாகவேணும் நடமாடிக்கொண்டுதா னிருக்கிறான். அவன்களைப் பார்த்து, ‘நேரங்காலத்துல வீட்டுக்குப் போய்த்தொலைங்கடா வெண்ணெய் வெட்டிகளா!’ என்று விரட்டியடிக்கவா முடியும்? உலைவாயைத்தான் மூடிக்கொள்ள வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம். அதனால்தான், மண்டபத்திற்குள்ளேயே அண்டாவில் உண்டுபண்ணியிருந்த கங்கையில், பாலை ஊற்றினாள் தாரிணி.

அடுத்து, மூன்று பேருக்குச் சாட்லா போடவேண்டும். சாட்லா என்றால், உடையை உயர்த்தித் தனது நிர்வாணத்தைக் காட்டிவிட்டு உள்ளங்கைகளைக் குவித்து மோதி, ‘டப்’ ‘டப்’ என்று ஒலி எழுப்புவது. நிர்வாணம் எனப்படும் பால்மாற்று அறுவை செய்துகொண்ட திருநங்கையர், நீர்நிலையில் பாலை ஊற்றிவிட்டுத் திரும்பும் வழியில், தங்களது நிர்வாணத்தை முதல்முறையாக மூன்று பேரிடம் காட்டவேண்டும். அதுதான் தொன்று தொட்ட வழக்கம். அதன்படி, முதலில் ஒரு பச்சை மரத்திற்கும், இரண்டாவதாக ஒரு கறுப்பு நாய்க்கும், அப்புறமாக ஒரு ஆணுக்கும் காட்டவேண்டும். ஆனால், அந்த ஆண், ஒரு ஆணாக இருந்தால் மட்டும் போதாது. அவன், சாதிகளிலேயே மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டும்!

முன்னேற்பாடாக, ஒரு தொட்டிச் செடியையும், கறுப்பு நாயையும் மண்டபத்திலேயே ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள் விழாக் குழுவினர்.  தூணில் கட்டப்பட்டு நெடுநேரமாக ‘வள்’ ‘வள்’ என்று குரைத்துக் கொண்டிருந்த அந்தக் கறுப்பு நாய்க்கு ‘சாட்லா’ காட்டினாள் தாரிணி. அது இன்னும் பயங்கரமாகக் குரைத்தது. ‘இத்தனை கஷ்டப்பட்டு நீ நிர்வாணமே பண்ணியிருக்கத் தேவையில்லடீ தாரிணி. சும்மா அந்த நாய்க்குச் சாட்லாப் போட்டிருந்தாவே போதும், செலவேயில்லாம நிர்வாணம் பண்ணிவுட்ருக்கும்’, கூட்டத்திலிருந்த எவளோ சத்தமாகச் சொல்லிச் சிரிக்க, கூடியிருந்த எல்லோரும் கேலியாகக் கைகொட்டிச் சிரித்தார்கள். தாரிணிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. நவண்டைக் கடித்தபடி, நாலெட்டு வைத்தவள், தலையை முழுவதுமாக மூடியிருந்த முந்தானை முக்காட்டிற்குள்ளிருந்து மரியத்திடம் கிசுகிசுத்தாள்,

“யார்கிட்டடீ?”

தாரிணிக்கு மட்டும் கேட்கும்படி அடிக்குரலில் பதில் சொன்னாள் மரியம்,

“’டக்’குன்னு திலும்பிப்பாக்காதடீ. அதா, அந்தத் தூணோரம் சள்ளொழுக்கீட்டுச் சேர்ல உக்கோந்திருக்கறான்ல? அவந்தான்!”

“அவன், அவந்தானடீ?”

“சாதி சர்ட்டிப்பிக்கேட்டையாடி கொண்டாந்து காட்ட முடியிம்? அல்லாம் நல்லா வெசாருச்சுட்டேன். சந்தேகமே வேண்டா. சமையல் வேலைக்கி வந்தவந்தான். கொஞ்சொ மசையன். நைசாப் பேசிக் கூட்டீட்டு வந்து உக்கார வெச்சுருக்கறேன். கிட்டப் போனதீஞ் ‘சட்’டுன்னு சாட்லாப் போட்ரு”

தாரிணி சாட்லாப் போட்டதும், வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டு  சிரிசிரியெனக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான் அந்த இளைஞன்.

“செத்துப் போயிருவம்ங்கற பயமில்லாம, எப்புடி லூசாட்டம் சிரிச்சிட்ருக்கறாம் பாரேன் இந்தக் கிறுக்கன்?” என்று, யாரோ யார் காதிலோ கிசுகிசுத்தார்கள்.

“அடிப்போடி இவளே! சாட்லாவப் பாத்தவன் செத்துப் போயிருவான்கறதெல்லாம் அந்தக்காலம். சாட்லாவப் பாத்தவன், சாட்லாப் போட்டவ ‘சப்ட்டி’ (பாலுறுப்பு) மேல நூறு ரூவாய வெச்சுட்டான்னா எல்லாத் தோசமும் பறந்துபோயிரும். இந்தா, அவங்கிட்டப் போயி இந்த நூறுருவாயக் குடுத்துட்டு, விசியத்தச் சொல்லிட்டுவா, பாவம் பொழச்சுப்போகட்டும்!”


குறிப்புகள் :

கோத்திபாஷை = திருநங்கையர் மொழி

  • டீட்டி = மதுபானம்
  • ஜம்பு டீட்டி = மிகுந்த போதை
  • டெப்பர் = காசு
  • பந்தி = ஆண்
  • பந்தி சாட் = ஆண் உடை
  • ச்சோக் ஏற்றுதல் = பெண்ணைப் போல் ஒப்பனை செய்து கொள்ளல்
  • தந்தா = தொழில்
  • டர் போடுவது = சவரம் செய்து கொள்வது
  • துவா = ஆசிர்வாதம்
  • ஸீஸூ = நல்லது
  • ஸீஸா = நல்லா
  • லிக்கம் = ஆண்குறி
  • பொட்டி = குதம்
  • சப்ட்டி = பாலுறுப்பு

 

எழுதியவர்

சத்தியப்பெருமாள் பாலுசாமி
சத்தியப்பெருமாள் பாலுசாமி
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த இவர், திராவிடக் கொள்கையில் மிகுந்த பற்றுள்ளவர். சென்ற ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் போது நடுகல் பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்ட இவரது சிறுகதைத் தொகுப்பான 'கிளிக்கன்னி' யும், கட்டுரைத் தொகுப்பான 'பஞ்சுர்ளியும்' மிகுந்த வரவேற்பைப் பெற்றன. சென்னைப் புத்தகத் திருவிழாவை ஒட்டி, நடுகல் பதிப்பகம்‌ மூலமாக வெளியிடப்பட்ட 'கொடுங்கோளூர் கண்ணகி ஏன் தெறி பாடுகின்றாள்?' ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்றது.
Subscribe
Notify of
guest

10 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
தேவா
1 year ago

சிறப்பு தோழர். எத்தனை தூரம் களத்தில் தகவல்களை திரட்டி அதை எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள் என்பது வியக்க வைக்கிறது ❤️
பெரும்பாலும் நமக்கு அந்நியமாக இருக்கக்கூடிய, நம் பார்வையில் இல்லாத ஒரு உலகத்தை அருகில் காட்டி பழக்கப்படுத்தியிருக்கிறது கதை. 💐

sasi
sasi
1 year ago

வாழ்த்துகள் தோழர் !
திரு நங்கையரின் வாழ்வியல் நடைமுறைகளை கொங்குவட்டார வழக்கில் பதிவு செய்திருப்பது சிறப்பு !

Maduraiveeran
Maduraiveeran
1 year ago

அருமையான கதை தோழர் நிச்சயம் யாருமே திரும்பி கூட பார்க்க நினைத்திடாத கோத்தியாக இருப்பவர்கள் வாழ்வியலை படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள். இதை கதையாக பார்க்க முடியாது கோரத்தியாக இருப்பார்கள் வாழ்வியலை அவர்கள் அருகிலேயே சென்று பார்த்த அனுபவத்தை ஏற்படுத்தியது. இதை படிக்கும் போது நீங்கள் எவ்வளவு தூரம் சென்று கள ஆய்வு செய்து எழுதி இருக்கிறீர்கள் என்பது அறிய முடிகிறது. மேலும் அறியப்படாத இதுபோன்ற மனிதர்களின் வாழ்வியல் பக்கங்களை இந்தச் சமூகம் அறியச் செய்யும் பணிகளை தொடர்ந்து செய்ய வாழ்த்துக்களையும், இந்தக் கதையின் மூலம் சிறந்த அனுபவத்தையும், நிறைய படிப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

க.ரகுநாதன்
க.ரகுநாதன்
1 year ago

மிகச் சிறப்பான கதை. திருநங்கையர் வாழ்வியலை நேரடியாக உடனிருந்து ஒரு சகோதரனைப் போல உணர்ந்து கொள்ள வாய்த்த சிறுகதை. எவ்வித நெருடல் இல்லாமல் திருநங்கையருக்குச் சிறப்புச் சேர்க்கும் கதை. வாழ்த்துக்கள் தோழர்.

Amoka
Amoka
1 year ago

ஒரு திருநங்கையாக இத படிக்கும் போது எங்க வாழ்க்கை எப்படி சுவாரசியமானது என்பதை திரும்பி பார்க்கிறேன். கதையில் வருவது போல திடீரென பல திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்தது எங்கள் வாழ்க்கை. ஆடல் பாடல் கிண்டல் கேளிக்கை இடமாற்றம் தற்காலிக சோகமென நிறைந்தது எங்கள் வாழ்க்கை. இதில் சில திருநங்கைள் அறியாமை மற்றும் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் பெண் திருமணத்தை தவிர்க்க முடியாமல் செவ்வந்தி போல மாட்டிக்கிட்டு வேதனை படுகிறார்கள். பல வாய்ப்புகள் நிறைந்த இந்த காலகட்டத்திலாவது திருநங்கைள் பெண் திருமணம் செய்யாமல் மனசுக்கு புடித்த நேர்மையான மது இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும். சனாதனத்திற்கு முற்றிலும் எதிரான சாதியை அறவே பொருட்படுத்தாத கட்டமைப்பை கொண்ட திருநங்கை சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு ‘சாட்லா’ போடும் மூடநம்பிக்கை இன்னும் இருப்பது எனக்கு ரொம்ப வேதனையளிக்கிறது. இனிவரும் அறிவார்ந்த திருநங்கைகளாவது இது போன்ற மூடநம்பிக்கைகளை மாற்றுவார்கள். சத்யா நீங்கள் உண்மையை அப்படியே எழுதி விட்டீர்கள் அதனால் பெருசாக விமர்சனம் இல்லை. நல்ல படைப்பு

You cannot copy content of this page
10
0
Would love your thoughts, please comment.x
()
x