21 November 2024
Sb8

தோ பாருங்க தம்பீ… அம்மா என்னடா இப்டி சொல்றாங்களேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க…. என்னவோ, எம் மனசுக்கு சரியாப்படல. அதான், நீங்க தப்பா எடுத்துக்கிட்டாலும் பரவால்லன்னு போன் பண்ணிட்டேன். அப்பறம் உங்க பாடு…”, என்ற பலமான பீடிகையுடன் தொடங்கிய பக்கத்துவீட்டு அம்மா, சரியாக நாற்பத்து இரண்டு நிமிடங்கள் பேசினார். என்னால், அவரது பேச்சை இரசிக்கவும் முடியவில்லை, இடைமறித்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முடியவில்லை. ஒரு மரியாதை கருதி, அவர் பேசுவதையெல்லாம் பல்லைக் கடித்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன். நான் படுகின்றபாட்டை இரசித்துக் கொண்டே புன்முறுவலுடன் ஆட்டுக்குழம்பிற்கான மசாலாவைத் தயார் செய்து கொண்டிருந்தாள் அம்மு. பக்கத்துவீட்டு அம்மா படுத்துவது போதாதென்று, அம்மு உரித்த சிறுவெங்காயங்களும் வேறு எனது கண்களைக் கசக்கிப் பிழிந்துகொண்டிருந்தன. ஆனால், அந்த எரிச்சலிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக ‘சிட் ஔட்’ டிற்கும் செல்ல முடியாத இடியாப்பச் சிக்கல் எனக்கு! நாங்கள் பேசுவது மட்டும் கீழ்வீட்டாரின் காதுகளில் விழுந்துவிட்டால் அவ்வளவுதான்! விஷயம் விபரீதமாகிவிடும்!! ஒலியளவை எத்தனை குறைத்தாலும் அதையும் மீறி எனது அலைபேசிக்கும் வெளியே எட்டிக் குதித்து உரையாற்றிக் கொண்டிருந்தார் பக்கத்துவீட்டு அம்மா.

இத்தனைக்கும் இந்த வீட்டிற்கு நாங்கள் குடிவந்த புதிதில், கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் வரையிலும் எங்களுடன் அவர் பேசியதேயில்லை. அவ்வப்பொழுது பின்வாசல் வழியாகத் தொரட்டியுடன் வேளிப்பட்டுக் கொல்லையில் நின்றிருக்கும் முருங்கை மரத்தில் இலைகளையோ, காய்களையோ இணுங்குவார். வீட்டின் அல்லையில் நிற்கும் நான்கு தென்னைகளில் காய்த்துத் தொங்கும் குலைகளையும் அண்ணாந்து அண்ணாந்து நோட்டம் விடுவார். ஆனால், காம்பௌண்டின் இந்தப் பக்கம் நிற்கும் அம்முவையோ, என்னையோ, குழந்தைகளையோ ஏறெடுத்தும் பார்க்கமாட்டார். நாங்கள் யாரும் அவரது கண்களில் பட்டதாகக்கூடக் காட்டிக்கொள்ள மாட்டார். எவரும் தனது கண்களில் படவேயில்லை எனும் பாவனையிலேயே முகத்தை வைத்துக்கொண்டு கதவை இழுத்துச் சாத்திக்கொள்வார்! எங்களை விடுங்கள். நாங்களாவதும் முதல் தளத்தில் குடியிருக்கிறோம். எப்போதாவதும் தான் கீழே தென்படுவோம். ஆனால், தரைத்தளத்தில் குடியிருக்கும் சூர்யகுமார் சாரும் அவரது மனைவியும்? அடிக்கடி கண்களில் படக்கூடிய அவர்களிடமும் கூட அதே பாவனைதான்! அதே பாராமுகம் தான்!!


கர்ப்புறத்தில் இதெல்லாம் சகஜம்தான் என்றாலும், சங்கடப்படாமலும் இருக்கமுடியவில்லை. இந்த ஊருக்கு நாங்கள் புதியவர்கள். எனது அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களைத் தவிர வேறு ஒருவரையும் எங்களுக்குத் தெரியவும் தெரியாது. காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்குக் கிளம்பும் நான், மாலை ஐந்துமணியளவில் தான் பள்ளிக்கூடத்திலிருக்கும் இளனையும், இனியனையும் அழைத்துக் கொண்டு மீண்டும் வீடுவந்து சேர்வேன்.  அதுவரையிலும், அம்முமட்டும் தனியளாக வீட்டிலிருக்க வேண்டும். ஊருக்கு வந்த புதிதிலேயே, “இது விழுப்புரம் இல்ல சார்; எமபுரம்!” என்றெல்லாம் பயமுறுத்தியிருந்தார் எங்கள் அலுவலகத்தின் தூய்மைப் பணியாள அம்மையாரொருவர். “அடிக்கடி இங்க கொலைவிழும் ஸார்! நீங்களே பாத்திருப்பீங்களே டீவீல? மோசமான விஷயத்துக்காக இந்த ஊரு ஸேதீல வராத நாளே கெடியாது! தங்க சரட்டுல தாலியப் போட்னு போனாலே கழுத்த உத்து உத்துப் பாப்பான்வ சார் காவாலிப்பயலுவ!”, என்ற அவரது சொற்களை அடிக்கடி திகிலுடன் நினைத்துக் கொள்வேன்.

இவ்வளவு தூரம் அஞ்சுவதற்கு நாங்களொன்றும் ஆளரவமற்ற நடுக்காட்டிற்குக் குடி வந்திருக்கவில்லை. புறநகரில், மிகவும் வேகமாக வளர்ந்துவரும் பகுதியொன்றிற்குத்தான் வந்திருந்தோம். எல்லாமே சுற்றுச்சுவற்றுடன் கூடிய தனித்தனி வீடுகள். அரசு ஊழியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி வேறு! ஆனால் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வது என்பது அரிய நிகழ்வாகத்தான் இருந்தது. எங்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் நான்கு வீடுகளை விட்டுத்தள்ளுங்கள்.‌ அவர்களெல்லாம் சொந்தவீட்டுக்காரர்கள்.‌ஆனால், எங்களைப் போலவே தொலைவிலிருந்து பணிநிமித்தமாக இந்த ஊருக்கு மாற்றலில் வந்து கீழ்வீட்டில் குடியிருக்கிறார்களே சூர்யகுமார் சாரும், அவரது மனைவியும்? அவர்களாவதும் அவ்வப்பொழுது எங்களுடன் பேசலாமல்லவா? ஆனால் பேசுவதில்லை! அலுவலகநேரம் போக மற்ற நேரங்களில் எல்லாம், சூர்யகுமார் சார்தான் தனது சொந்த ஊருக்குப் பணியிடமாறுதல் அருளுமாறு மண்டியிட்டுக் கண்களை மூடி தேவகுமாரனிடம் மன்றாடிக் கொண்டியிருந்தார் என்றால், அவரது மனைவியாரோ, கூடுதலாகத் தங்களுக்கொரு மகவையும் அருளும்படி, நாள்முச்சூடும் இயேசுபிரானிடம் மன்றாடிக் கொண்டேயிருந்தார். “அவசரத்துக்கு ஒரு கருவேப்லாந்தழையோ, பச்சை மொளகாயோ கேக்கறதுக்குக் கூட நமக்கு இங்க ஒரு ஆள் இல்லைங்க”, என்று அம்மு அவ்வப்பொழுது குறைபட்டுக் கொள்வதுண்டு.

அப்படிப்பட்ட சலிப்பான நாட்களொன்றில் தான் பக்கத்துவீட்டம்மா எங்களிடம் தாமாகவே முன்வந்து பேசினார். அந்த வரலாற்றுத் தருணத்திற்குக் காரணமாக அமைந்து போனது, எங்கள் வீட்டிற்கும், எங்களது இன்னொரு பக்கத்து வீட்டுக்காரரான காயத்திரிடீச்சர் என்னும் அம்மையாரது வீட்டிற்குமான எல்லைப் பிரச்சினை. எல்லாமே காம்பௌண்ட் வைத்த வீடுகள் என்பதால், எல்லைத் தகராறு வருவதற்கு வாய்ப்பில்லைதானே? ஆனாலும் வந்து தொலைத்தது!

நாங்கள் குடியிருந்த வீட்டைச் சுற்றியிருந்த நான்கு திசை வீடுகளுமே எங்கள் வீட்டிற்கு முதுகைக் காட்டும்படியாகத்தான் கட்டப்பட்டிருந்தன.‌ ‘அப்புறம் எப்படி உங்கள் வீட்டைவிட்டுத் தெருவுக்கு வருவீர்கள்?’, என்று கேட்கிறீர்களா? ஆமாம், அதுதான், அந்தப் பாதைதான் பிரச்சினைக்குரிய வாகா எல்லையாக விளங்கியது. எங்கள் வீட்டைத் தெருவுடன் இணைக்கும் கார்போகும் அளவிற்கான பாதையானது, மேற்படி காயத்திரியார் வீட்டுச் சுற்றுச்சுவற்றின் நெடிய முதுகுப் பகுதிக்கும், பக்கத்துவீட்டு அம்மாவீட்டுச் சுற்றுச் சுவற்றின் நெடிய பக்கவாட்டுப் பகுதிக்கும் இடையில் அமைந்திருந்தது.

ஏதோ உடல்நலக் குறைவால் அன்றைக்கு அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்தேன்.‌ உணவருந்திவிட்டு நல்ல உறக்கத்திலிருந்த பின்மதிய வேளை. “யாரது வீட்ல?” “வீட்ல யாரு”, என்ற அதட்டலான‌ விசாரிப்பு தொடர்ந்து கேட்கவே, ‘திக்’ கென விழித்துக் கொண்டேன். அம்முவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். ஜன்னல் வழியாகப் பார்த்தேன். கீழ்வீட்டு ஜன்னலைப் பார்த்தபடி அந்த அம்மையார், “யார் வீட்ல? வெளிய வாங்க”, என்று அதட்டலாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

“அவங்க ஊருக்குப் போயிருக்காங்க. நீங்க யாரு?” என்றேன். குழப்பத்துடன் அண்ணாந்து பார்த்தவர், சற்றும் அசராமல், “மொதல்ல கீழ வாங்க”, என்றார் அதிகாரத்துடன். ‘இதென்னடா வம்பாக இருக்கிறது? அம்மு கூட இத்தனை உரிமையுடன் நம்மை அதட்டியதில்லையே? யாரிந்த ஏழ்ரை?’ என்று எண்ணிக்கொண்டே படியிறங்கினேன். தலையைக் கண்டதுதான் தாமதம், தனது வீட்டைக் கைகாட்டி, “நான் அந்தவீடு. இனிமேல் காரையெல்லாம் இங்க நிறுத்தக்கூடாது”, என்றார். கார், எங்கள் வளாகத்திற்குள், எங்கள் வீட்டிற்கும் அவர் வீட்டுச் சுற்றுச்சுவற்றுக்கும் இடையில்தான் நின்றுகொண்டிருந்தது. ‘இதிலென்ன பிரச்சினை?’ என்ற குழப்பத்துடன், “கார் எங்க காம்பௌண்ட்குள்ளதான நிக்குது?” என்றேன்.

“இங்க பாருங்க. இனிமே, காரை இங்க நிறுத்தவேண்டாம்ன்னா வேண்டாம். இந்த ஏரியால திருட்டுபயம் ஜாஸ்த்தி. கார் இங்க நின்னா எங்க வீட்டுக்குள்ள ஈசியாத் திருடன் வந்துடுவான்” என்றார். எனக்குத் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. “வர்ற திருடன், கார்மேல ஏறி உங்க காம்பௌண்டுக்குள்ள குதிச்சுருவான்னு பயப்படறீங்களா?”, என்று கேட்டேன் மெல்லிய சிரிப்புடன். அவரது முகம் சட்டென்று சிவந்துவிட்டது.

“தோ பாருங்க. அதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத பேச்சு. காரை இங்க நிறுத்தவேணாம்னா நிறுத்தவேணாம். அவ்வளவுதான்!” என்றார். நானும் பொறுமையிழந்துவிட்டேன் என்றாலும், அதிகமாக எதையும் பேசிவிடவும் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன்,

“அப்ப, கார் ஓனர்கிட்டத்தான் நீங்க பேசிக்கணும்” என்று கீழ்வீட்டைக் கைகாட்டினேன்.

“ஓ! கார் உங்களோடது இல்லையா? பரவால்ல. ஆனா, காரை மட்டும் இல்ல. டூவீலரையும் கூட (காருக்குப் பின்புறத்தில் இருபதடி தள்ளியிருந்த எங்கள் வீட்டு வடபுறச் சுற்றுச்சுவற்றிலிருந்து, தெற்காக அறுபதடி நீண்டு தெருவுடன் எங்களது வீட்டை இணைக்கும் கேட் வரையிலான பாதையைச் சுட்டிக் காட்டி) இங்க எங்கயும் நிறுத்தக்கூடாது. எதை நிறுத்தறதா இருந்தாலும் உங்க வீட்டுக்கு முன்னாடி‌நிறுத்திக்கோங்க”, என்றார்.

ஆக, இது நான் தலையிட்டுத் தீரப் போகும் பிரச்சினை இல்லை. வீட்டு உரிமையாளருடைய பிரச்சினை என்று மண்டைக்குள் மணியடிக்கவும், “சரி” எனும் பாவனையில் தலையாட்டினேன். எனது தலையாட்டலில் மனம்நிறைந்து நாலெட்டு கேட்டைப் பார்த்து நடந்தவர், சட்டென்று திரும்பி வேகமாக அருகே வந்து ஸ்நேக பாவத்துடன் முகத்தை வைத்துக்கொண்டு,

“இங்க பாருங்க. நாங்கள்லாம் ப்ராமின்ஸ். யாரோட வம்புதும்புக்கும் போகமாட்டோம்.‌ இனிமே இந்தப் பாதைல வெஹிகில் எதையும் நிறுத்தாதீங்க ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு பதிலெதையும் எதிர்பாராதவராகச் சாரைப்பாம்பைப் போல சரசரவென்று வந்தவழியே திரும்பிப் போய்விட்டார். எனக்குத்தான் இரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. “அப்படியென்றால், மற்றவர்கள் மட்டும் வம்புச்சண்டைக்கென்று அலைந்துகொண்டிருக்கிறோமா என்ன?”

“இருடி மகளே” என்று, வீட்டிற்குள் நுழைந்ததும், வீட்டின் உரிமையாளருக்கு அழைப்பு விடுத்தேன். உள்ளூர்க்காரர்தான் என்றாலும், முப்பதாண்டுகளாகக் குடும்பத்துடன் மும்பையில் வசித்துவருபவர். நல்ல பிசினஸ்மேன். சொந்த ஊரில் நிறையச் சொத்துக்களை வாங்கிப் போட்டிருந்தார். அவற்றின் நிமித்தமாகவும், கோவில், திருவிழா, நல்லதுகெட்டது போன்ற வழக்கமான காரணங்களுக்காகவும் அவ்வப்போது தமிழ்நாட்டிற்கு வந்துபோய்க் கொண்டிருந்தார்.

வழக்கமான நலமறிதல்களுக்குப் பின், நடந்தவற்றைக் கூறினேன். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவர், “சார், அந்தம்மா எப்பவுமே இப்டிதான் சார் பண்ணிட்ருக்காங்க. நம்ம வீட்டுக்கு யார் வாடகைக்கு வந்தாலும் அவங்களோட ஏதாவதும் சண்டை வளத்து நாலுமாசத்துக்கும் மேல தங்கவுடாம தெருத்தியடிச்சிடறாங்க சார். ரெண்டு வருஷமா வீடு சும்மாவேதான் சார் கெடந்துச்சு இந்தம்மாவால. இப்பத்தான் நீங்கள்லாம் குடிவந்தீங்க. எல்லாம் நல்லபடியாப் போயிட்ருந்தது. தோ, மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்க” என்று புலம்பினார்.

“அவங்களுக்கு என்னதானாம் சார் பிரச்சினை?”,

“பிரச்சினை என்ன சார் பிரச்சினை? அவங்க அவங்க காம்பௌண்டுக்குள்ள இருக்காங்க. நாம நம்ம காம்பௌண்டுக்குள்ள இருக்கோம். அக்கம்பக்கத்துல இருக்கறவங்க முட்டை பொரிச்சா ஸ்மெல் வருது, கருவாடு வறுத்தா ஸ்மெல் வருது, கவிச்சி சமைச்சா வாமிட் வருது”, ன்னா சரியாவா சார் இருக்கு?”, என்றார்.

விஷயம் புரிந்தது. நாங்கள்தான் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு அசைவம் சமைத்துக் கொண்டிருந்தோம் என்றால், கீழ்வீட்டிலோ, ஏழுநாட்களுக்கும் ‘கமகம’ வென்று கருவாடு பொரித்துக் கொண்டிருந்தார்கள். அட்டகாசமான இராமேஸ்வரம் கருவாடுகள் வேறு!

“கவலைப்படாதீங்க சார். இனிமேல் பொறுமையா இருக்க முடியாது. எங்கவீட்ல இப்ப ஊருக்குத்தான் வந்திருக்காங்க.‌ அவங்க வந்து பேசிப்பாங்க” என்று வீட்டு உரிமையாளர் சொன்னபடியே, அடுத்தநாள் அதிகாலையில், அவரது மனைவியாரும், இன்னும் சில பெண்களும் வந்திறங்கினார்கள். “கொஞ்சநேரம், நாங்க அவங்ககிட்டப் பேசிட்டுப் போற வரைக்கும் நீங்க யாரும் வெளீல வராதீங்க”, என்று எங்கள் இருவீட்டாரிடமும் வேண்டுகோள் வைத்துவிட்டு, காயத்திரியார் வீட்டிற்குச் சென்றார்கள். சற்றுநேரத்தில், அவர்கள் ஆற்றிய உரை எட்டுத்திக்கிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. ஓனரம்மாவும் மீறின உரையாளராக இருந்தார். மரியாதையான சொற்களில் தொடங்கிய அவரது உரைவீச்சு ஒருமையில் உயர்ந்து வசைகளாக உச்சம்தொட்டது. என்னிடத்தில் சங்குபோல் முழங்கிய காயத்திரியார் பூனைபோல பேசத்தொடங்கி, முயலைப்போலப் பதுங்கிக் கொண்டார். வெற்றிக்கொடி நாட்டிய களிப்பில், “இனிமே பிரச்னை எதும் வராது. மீறி எதுனா பண்ணான்னா போன் பண்ணுங்க சார். வந்து வகுந்தர்றேன்”, என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் ஓனரம்மா. அவரது ஆம்னி தெருக்கோடியை அடைந்திருக்கும். கொல்லைப்புறக் கதவைப் படாரென்று திறந்துகொண்டு வெளிப்பட்டார் பக்கத்துவீட்டுக்காரம்மா. காயத்திரியார் வீட்டைக் கைகாட்டியவாறே,

“என்னப்பா பிரச்னை பண்ணா அவ?” என்று வினவினார்.

அம்மு மூச்சுவிடாமல் அனைத்தையும் ஒப்பித்தாள். கண்களைச் சுருக்கிக்கொண்டு அனைத்தையும் கவனமாகக் கேட்டுமுடித்தவர், “நல்லா வேணும். அசிங்கப்பட்டாளா இப்ப! தேவையா இது இவளுக்கு? இப்டியேதாம்ப்பா எல்லார்கிட்டயும் பாப்பாரத்திமிரக் காட்றது! நல்லாப் பேசுவா. புடிப்பா.ஆனா, சட்னு ஒருநாள் புத்தியக் கட்டிருவா. எத்தன கெஞ்சினாலும் நம்ம வீட்டுக்குள்ற மட்டும் காலெடுத்து வச்சறமாட்டாளே! இத்தனைக்கும் அவ வீடுகட்டின போது இந்த ஏரியாலயே எங்கவீடு ஒன்டிதான் இருந்துது. எல்லா உதவியும் நாங்கதான் பண்ணோம். ஆறுமாசமா எங்க ஊட்டுக்கார்ரு என்னமோ இவரு ஊடுகட்றாப்ல அவ புருசனோட கம்பி வாங்கப்போறதென்ன! கல்லு வாங்கப் போறதென்ன!! ஜல்லிவாங்கப் போறதென்ன! மணலு வாங்கப் போறதென்ன!! ஆனா கிரகப்பிரவேசத்துல காட்டிட்டாப்பா புத்திய!”

‘எப்படா வாய்ப்புக் கிடைக்கும்?’ என்று காத்திருந்தவரைப் போல மூச்சுவிடாமல் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டே போனார். “அவ ஆளுங்களை மட்டும் கூப்ட்டு தடபுடலா கிரகப்பிரவேஷம் பண்ணிட்டு, அடுத்தநாளு, “வாங்க, வந்து வெத்தலை பாக்கு வாங்கிட்டு வந்துருவீங்களாம்”, ன்னு குங்குமச் சிமிழோட நிக்கறாப்பா வாசல்ல! எனக்கு அப்டியே பத்திக்கிட்டு வந்துச்சு. “வர்றேன் போடி”, ன்னு சொல்லிட்டுப் படார்ன்னு கதவை அறைஞ்சு சாத்துனவ தான்! இன்னிக்கு வரைக்கும் அவ மூஞ்சுலயே முழிக்கறதில்ல! நாம எந்தவிதத்துலப்பா குறைஞ்சு போய்ட்டோம்? மொதநாளு இவ ஆளுகளுக்கு விருந்தாம். அடுத்தநாளு நம்மளமேரி மத்தவங்களுக்காம்! இவகூட வேலைபாக்கற ஸ்கூல் டீச்சர்ஸெல்லாம் இது தெரியாம அடுத்தநாளு வந்து எறங்கறாங்கப்பா இம்மாம் இம்மாம்பெரிய கிஃப்டு பாக்சோட!”

அன்றிலிருந்து எங்களுடன் நட்பாகிப் போனார் பக்கத்துவீட்டம்மா. தொடக்கத்தில் சிரிப்பையும், பேச்சையும் மட்டுமே பகிர்ந்து கொண்டிருந்த நாங்கள், போகப் போக உணவையும் பகிர்ந்துகொள்வது சாதாரணமானது. சாம்பார் வைப்பதிலும், காரக்குழம்பு வைப்பதிலும், கொழுக்கட்டை பிடிப்பதிலும் கில்லாடியாக இருந்தார் அவர். உணவைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கிய ஆரம்பநாட்களில் ஒருநாள் அம்மு சொன்னாள், “கொடியில இருக்கற முகப்பைப் பாக்கற சாக்குல இன்னைக்கு டக்குன்னு தாலியை முழுசா எடுத்துப் பாத்துட்டாங்கங்க”

“பாத்துட்டு?”

“அப்பவே நெனச்சேன். நீங்க வெள்ளாளக் கவுண்டராத்தான் இருக்கணும்ன்னு. அவங்கதான் இந்த மாதிரி தாலி போட்ருப்பாங்க. அப்றம் எங்க அப்பா ஊரும் சேலந்தான? இந்த மனுஷனக் கட்டிக்கறவரை சேலத்துலதான வேலையும் பாத்துட்ருந்தேன்? இருந்தாலும் உங்க சார் வேற சாமியெல்லாம் கும்பட்றதில்லையா? வீட்ல பெரியார், அண்ணா படத்தோட அம்பேத்கார் படத்தையும் வேற மாட்டியிருந்துச்சா? அதான் கொஞ்சம் சந்தேகப்பட்டுட்டேன்”, னு கொஞ்சங்கூடக் கூச்சநாச்சமே இல்லாம பேசினாங்கங்க”, என்றாள்.

“அதுக்கு நீ என்ன சொன்ன? நாம என்ன ஜாதின்னு சொல்லிட்டியா?”

“ஐயே! இப்பத்தான் பேச்சுத்தொணைக்காவதும் ஒரு ஜீவன் கெடைச்சிருக்குது! அதை ஏன் நாங் கெடுத்துக்கப் போறேன்?”

“பயங்கரமான ஆளுதான்டி. எங்க, அவங்கவீட்டு மெய்டோட ஜாதின்னு சொல்லி  இல்ட்ரீட் பண்ணிடுவாங்களோன்னு பயப்பட்ற ஹஹஹா”

“ஆமா.‌ அதுக்கென்னவாம்? ஜாதிபாத்துப் பழகுறது அவுங்க பிரச்சினைன்னா, அதுக்கு நான் என்னத்தப் பண்ணமுடியும்?”

எனது அன்பு மனைவியின் அறிவையும், பக்கத்துவீட்டுக்காரம்மாவின் அறியாமையையும் எண்ணிச் சிரித்துக் கொண்டே உறங்கிப் போனேன்.


காலம்பற‌ கோலம்போட பாப்பா வெளீல வந்தப்பயே எல்லாத்தையும் அதுகிட்ட எடுத்துச் சொல்லிப் புரியவச்சுட்டேன். ஆனா, நீங்க கேக்க மாட்டீங்களே? ன்னு அது தயங்கினுச்சு. அதான், தப்பா எடுத்துக்கிட்டாலும் பரவால்லன்னு உங்களுக்கு நானே ஃபோன் போட்டுட்டேன்…. என்ன கேக்குதுங்ளா தம்பி?”

“ம்.. சொல்லுங்க”

“அதாந் தம்பி. உங்க கீழ்வீட்டுக்குக் குடித்தனம் வந்திருக்காங்கள்ல? அதுல ஒருத்தர் மூஞ்சுகூட சரியில்ல. எல்லாம் மேற்படி ஆளுங்க ஜாடை தம்பி. கவுண்டர்ன்னு சொல்லிக்கிட்டாலும் இந்த ஊர் வன்னியருங்க உங்கள மாதிரி வெள்ளையால்லாம் இருக்க மாட்டாங்கங்க… நல்லாத் ‘தொட்டுப் பொட்டு வச்சுக்கலாம்’ங்கற நெறத்துலதான் இருப்பாங்க. ஆனாலும், அது கொஞ்சம் வேறவிதமான நல்ல கறுப்பு தம்பீ… அழகாருக்கும். இந்த மாதிரி ஒரு ப்ரௌன் கலந்த கறுப்பு வராது. இப்டி ப்ரௌன் கலந்த கறுப்பா இருந்தாலே சந்தேகம் வேண்டாம். மேற்படி ஆளுங்கதான். அப்பியரன்ஸ் மட்டும்னு இல்ல. பேச்சும் சரியில்ல. ரொம்ப லோக்கலா வேற  இருக்காங்க… பாக்கற‌ பார்வையும்கூட சரியில்ல… என்ன தம்பீ? நாம் பேசறது கேக்குதுங்ளா?”

“கேட்டுக்கிட்டுத்தாங்க இருக்கேன்”

“முன்னமே பலதடவை பாப்பாகிட்ட சொல்லியிருக்கேன், இதுக்கும் முன்னாடி இருந்தாங்கள்ல அல்லேலூயா கோஷ்டி? அவங்ககிட்டக்கூட பழக்கவழக்கம் வச்சுக்க வேண்டாம்ன்னு. உங்களமீறி அது என்ன பண்ணும் பாவம்? அவங்க சமைச்ச பிரியாணியையெல்லாம் நாம சாப்ட்றது நல்லால்ல தம்பி. நாமளும் படிச்சவங்கதான். நானும் பேங்க்ல கேஷியரா இருந்து ரிட்டயரான‌ பென்ஷனர்தான். ஜாதியில்ல பேதமில்லன்னு படிச்சு வளந்தவதான். ஆனாலும் செலதெல்லாம் விட்ற முடியாது தம்பீ… தோ, அந்தப் பாப்பாத்தி இருக்காள்ல? காயத்ரி? அவ கூட எலிமெண்ட்ரி ஸ்கூல் டீச்சர்தான். ஸ்கூல் புள்ளைங்களுக்கு “சாதிகள் இல்லையடி பாப்பா’ ன்னு  பாரதியார் பாட்டெல்லாம் பாடிக்காட்டாமயா இருப்பா? ஆனா, எத்தனை கெத்தா தன்னோட ஸ்டேட்டசை மெய்ன்டெய்ன் பண்ணிக்கறா? அவகிட்டருந்து, நாம, சில நல்ல விஷயங்களக் கத்துக்கிட்டுத்தான் தம்பி ஆகணும். என்ன தம்பீ நாம் பேசறதக் கேட்டுட்டுத்தானே இருக்கீங்க?”

*கேட்டுட்டுத்தான் இருக்கேன்”

“அதாந் தம்பி. மக்க மனுஷாள்கிட்ட நாம வேற்றுமை பாக்க வேண்டாம். யாரையும் இல்ட்ரீட் பண்ண வேண்டாம். முகத்தப் பாத்தா சிரிப்போம். பழகுவோம். நாலு வார்த்தை நல்லதாப் பேசுவோம். யார் வேண்டாங்கறா? நாளைக்கு என்னத்த வழிச்சுக் கட்டிட்டுப் போகப் போறோம் சொல்லுங்க? ஆனா, அந்த அல்லேலூயா கோஷ்டி, அதாங்க அந்த சூர்யகுமார் ஜோடி. அவங்ககிட்டருந்து அவங்க சமைச்சத வாங்கி சாப்ட்றது, உங்க பாத்தரத்துல அவங்களுக்கு ஈட்டபுள்ஸ் தர்றதுன்னு இருந்த மாதிரி இவங்ககிட்ட வேணாம் தம்பி. அது நமக்கு நல்லதில்ல. நீங்க ஆம்பளப்புள்ள. பெரியாரு, சமத்துவம் அது இதுன்னு எதவேணாலும் பேசுவீங்க.‌ ஆனா, பாப்பா? பொண்ணு இல்லையா? அது அப்டியிருந்தாக் குடும்பத்துக்கு ஆகாது தம்பி. நீங்களும் ரண்டு ஆம்பளப் புள்ளைங்களை வச்சிருக்கீங்க. நாளைக்கு அதுங்க நல்ல பழக்கவழக்கத்தோட வளரணும் இல்லீங்ளா? என்ன தம்பீ… லைன்ல இருக்கீங்ளா?”

“இருக்கேன். சொல்லுங்க”

“அதான் தம்பி. பால் காய்ச்சிட்டோம்ன்னு சொல்லி, குடுத்தனம் வந்துருக்கறவரோட அம்மா வந்து ஒரு பெரிய சொம்பு நெறையப் பாலைக் கொண்டுவந்து குடுத்துட்டுப் போனாங்க. நான் கையால கூடத் தொடல. அப்டி வச்சுட்டுப் போங்கன்னுட்டேன். என்னவோ தெரீல இன்னைக்குப் பாத்து இன்னமும் எங்க வேலைக்காரப் பொண்ணு வேற வரல. வந்தான்னா அவள எடுத்துட்டுப் போகச் சொல்லிடுவேன். நீங்க இப்பத்தான் எழுந்தீங்கன்னு பாப்பா சொல்லுச்சு. எப்படியும் நீங்க கிளம்பி அவங்க வீட்டுக்குப் போக லேட்டாகும். அதனால, பால அவங்களே கொண்டுவந்து தந்தாலும் தந்துருவாங்க. அதையெல்லாம் குடிச்சுறாதீங்க தம்பீ… என்னமோ மனசு கேக்கல. ஈரோடும் சேலத்துக்குப் பக்கத்துல தானே? நம்ம ஊருப் புள்ளைங்க நீங்க. நீங்க நல்லாருக்கணும்ன்னு தான் உரிமையெடுத்து சொல்லிட்டேன். தப்பா எடுத்துக்கிட்டீங்ளா தம்பீ?”

“இல்லைங்க. அதெல்லாம் ஒன்னும்  இல்ல”

“அதான். சொல்றமாதிரி சொன்னாப் புரிஞ்சுப்பீங்கன்னு எனக்குத் தெரியும். சரி தம்பி. நான் வேற ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டேன். ஞாயித்துக்கெழமை? உங்களுக்கு வேற கடைக்குப் போற வேலையெல்லாம் இருக்கும். சிக்கனா மட்டனா தம்பி?”

“மட்டன்தாங்க”

“ஓகே. ஓகே. நானும் இந்த மனுஷனுக்கு ஓட்ஸ் கஞ்சி வைக்கணும். வச்சர்றேன் தம்பி”

கடுப்புடன் கையிலிருந்த காப்பி டம்ளரை சிங்க்கில் போட்டேன்.

“நீங்க வேற? அவங்க சொன்னாச் சொல்லிட்டுப் போறாங்க. நீங்க ஏன் கோவப்பட்டு ஒடம்பக் கெடுத்துக்கறீங்க?”

“கீழ்வீட்லருந்து பால் கொண்டுவந்து கொடுத்தாங்ளா?”

“இப்பக் குடிச்சோமே காப்பி? அதுல போட்டதுதான்” அம்மு கண்ணடித்தாள்.


பையைத் தூக்கிக்கொண்டு கறிக்கடைக்குப் போவதற்காகக் கீழே இறங்கியதும் இராஜவேல் பிடித்துக் கொண்டார். “சார், பால்காய்ச்சறதுக்குத்தான் வரல. மதியம் லஞ்சுக்காவதும் குடும்பத்தோட வந்துருங்க சார். சன்டே அன்னைக்குப் ப்யூர் வெஜ் சாப்பாடு போடறாங்கன்னு வராம இருந்துக்காதீங்க. இன்னைக்கு நான்வெஜ் சமைக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க. அடுத்த சன்டே பிரியாணி விருந்து போட்றலாம் சார்”

அதற்குள், அவரது மனைவியாரும் வந்துவிட்டார். அண்மையில்தான் இருவருக்கும் திருமணம் நடந்திருந்ததால், வாடகை வீட்டிற்குப் பால் காய்ச்சுவதையே புதுமனை புகுவிழா அளவிற்கு நடத்திக் கொண்டிருந்தார்கள். வீடு முழுக்க‌ ஜனம்.

“சரிங்க மேம். சரிங் சார். சரிங் சார். கண்டிப்பா வந்தர்றோம். வந்தர்றோம்” என்று விடைபெற்றுக் கொண்டேன். கேட்டைத் திறந்துவைத்துவிட்டு வந்து வண்டியை எடுப்பதுதான் வழக்கம் என்பதால், கேட்டைத் திறக்கப் போனேன். அதற்குள் கேட்டைத் திறந்துகொண்டு ஐம்பது ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் எதிரில் வந்தார். என்னைக் கண்டதும், “நீங்க?” என்றார் குறுகுறுப்பான பார்வையுடன்.

“மேல்வீட்ல…”

“ஓ! சொன்னாங்க சொன்னாங்க. சொந்த ஊரு?”

“பவானிங்க”

“பவானியில எங்க?”

“பவானி வந்திருக்கீங்களா? பவானி நல்லாத் தெரியுங்ளா?” ‘அட! நம்ம ஊர் ஆள்போல?’ என்ற எண்ணத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்டேன்.

“நான் லாரி ட்ரைவரு. லோடு ஏத்திட்டு பவானி, அந்தியூர், குமாரபாளையம், கோபி, ஈரோடெல்லாம் வந்திருக்கேன். அந்த ஏரியால்லாம் ஓரளவு நல்லாவே தெரியும்”

“ஓ!வ்வ்வ். ஓகே. ஓகேங்க” எனது ஆர்வமெல்லாம் சட்டென்று வடிந்துவிட்டது.

“பவானீல எங்கன்னு சொன்னீங்க?”

“குருப்பநாய்க்கன் பாளையம்”

உடனடியாக அவரது முகத்தில் பளிச்சிட்ட பல்ப், எனது முகத்தை உற்றுப் பார்த்துவிட்டுச் சட்டென்று அணைந்து போனது. இருந்தாலும் ஏதோவொரு நம்பிக்கையில்,

“அது வன்னியர் ஏரியா இல்ல?” என்றார்.

“ஆமாங்க. அவங்கதான் அங்க நெறைய இருப்பாங்க” என்றேன்.

“சரி. நான் தான் இராஜவேலோட அப்பா” என்று சொல்லிப் புன்னகைத்துவிட்டு என்னைக் கடந்து சென்றுவிட்டார்.


சாம்பார் வைப்பதில் விழுப்புரத்தினருக்கென்று ஒரு நிபுணத்துவம் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.‌ அதிலும் மாங்காய் முருங்கைக்காய் சாம்பார் என்றால் சொல்லவே வேண்டாம். அட்டகாசமாகச் சமைத்திருந்தார் இராஜவேலுசாரின் அம்மா. அப்பளம், வடை, பாயசம் என்று தடபுடலாகத்தான் இருந்தது விருந்து. இளனும், இனியனும் கூட நன்றாகச் சாப்பிட்டார்கள். மிகுந்த அன்புடன் எங்களை கவனித்துக் கொண்டார்கள் இராஜவேலுசாரின் குடும்பத்தினர். விடைபெற்றுக் கொண்டு மெத்தைப் படியில் ஏறிக்கொண்டிருந்தோம். அலைபேசி பாடியது. பக்கத்துவீட்டம்மா! அழைப்பைத் துண்டித்துவிட்டேன். மறுபடியும் அழைப்பு.

“ஹலோ”

“தம்பீ… விருந்தெல்லாம் பலமா? கீழ்வீட்ல சாப்டுட்டு நீங்க நாலுபேரும் மேல போறத ஜன்னல் வழியாப் பாத்துட்டுத்தான் கூப்ட்டேன். ஹஹஹா… அப்பவும் அம்மா காலைல ஒரு இக்கு வச்சே பேசிட்டிருந்தேன் கவனிச்சீங்ளா?”

இக்கு வைத்துப் பேசினாரா? நினைவைப் படுவேகமாக ஒரு சுற்றுச் சுழலவிட்டேன். அப்படியொன்றும் இக்குவைத்துப் பேசவில்லையே?!

“எனக்கு  அப்பவும் ஒரு டவுட்டு இருந்துக்கிட்டே இருந்துச்சு பாத்துக்கங்க. சைனஸ் பிரச்சினையால காலம்பற கொஞ்சம் தலைவலி வேற சேந்துக்குச்சா, அதனால, கண்ணு  கொஞ்சம் ஏமாத்திடுச்சு தம்பீ”

எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

“கொஞ்சம் முன்னதான் கீழ்வீட்டுக்கு வந்திருக்கறவங்களோட ஒறவுக்காரப் பொண்ணு ஒன்னுகிட்ட நைசாப் பேச்சுக்குடுத்துப் பாத்தேன். வன்னியருங்கதானாம் தம்பீ! அரகண்டநல்லூர்க்காரங்களாம். காலம்பற… உங்ககிட்ட போன் பேசின அப்பறமும் மனசுக்குள்ள என்னவோ குறுகுறுத்துக்கிட்டே இருந்துச்சு தம்பீ. இப்பத் தெளிவாய்டுச்சு.‌ நல்லவேளை தம்பீ… இன்னக்கி எங்க வேலைக்காரப் பொண்ணு வரல.‌ உங்க கீழ்வீட்டுக்காரங்க கொடுத்த பாலை ப்ரிஜ்ஜூல பத்திரப்படுத்திட்டேன். சாயங்காலம் நீங்க நாலுபேரும் கண்டிசனா நம்ம வீட்டுக்கு வந்தறணும். அம்மா போடற ஃபில்டர் காப்பியப் பத்தித்தான் உங்களுக்கே நல்லாத் தெரியுமே ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹா?”

“அப்பாடா! சாயங்காலம் எனக்குக் காப்பி டம்ளர் கழுவற வேலை மிச்சம்” என்று சொல்லிவிட்டு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள் அம்மு.


 

எழுதியவர்

சத்தியப்பெருமாள் பாலுசாமி
சத்தியப்பெருமாள் பாலுசாமி
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த இவர், திராவிடக் கொள்கையில் மிகுந்த பற்றுள்ளவர். சென்ற ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் போது நடுகல் பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்ட இவரது சிறுகதைத் தொகுப்பான 'கிளிக்கன்னி' யும், கட்டுரைத் தொகுப்பான 'பஞ்சுர்ளியும்' மிகுந்த வரவேற்பைப் பெற்றன. சென்னைப் புத்தகத் திருவிழாவை ஒட்டி, நடுகல் பதிப்பகம்‌ மூலமாக வெளியிடப்பட்ட 'கொடுங்கோளூர் கண்ணகி ஏன் தெறி பாடுகின்றாள்?' ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்றது.
Subscribe
Notify of
guest

4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
சுந்தர்
சுந்தர்
10 months ago

அட்டகாசம். அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார். சிறப்பு.

Maduraiveeran
Maduraiveeran
10 months ago

வீட்டைச் சுற்றி நடக்கக்கூடிய நிகழ்வுகளையும் உரையாடல்களையும் சுவாரசியம் குறையாமல் உள்ளபடியே கதையாக எழுதி இருப்பது மிகச் சிறப்பு. ஒவ்வொரு உறவு தொடங்குவதற்கு முன்பு பல கதைகளை சுமந்து தான் இருக்கிறது என்பதை அழுத்தமாக உணர்ந்து கொள்ளும் விதமாக இக்கதை இருந்தது தோழர். மேலும் இது போன்ற கதைகள் படைக்க என்னுடைய எதிர்பார்ப்புகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சுவையான இந்த பில்டர் காபிக்கு மிக்க நன்றி💐💐💐

Last edited 10 months ago by Maduraiveeran
Suresh Durairajan
Suresh Durairajan
10 months ago

மிக நல்ல கதை, நல்ல எழுத்து நடை, வெகுகாலத்திற்கு முன்னால் வாசித்த விமலாதித்த மாமல்லனின் இலை என்ற சிறுகதை ஏனோ ஞாபகத்திற்கு வந்தது… அதுவும் இதுபோல் பக்கத்துவீட்டு காரர்களின் அட்டகாசங்காகதான் இருக்கும்… மிகவும் ரசித்தேன்.. .

ரவிச்சந்திரன் kumarasamy
ரவிச்சந்திரன் kumarasamy
10 months ago

பில்டர் காபி, கண்காணிப்பு வளயத்துக்குள் சிக்கித் தவிக்கும் சாதியம் குறித்த சொல்லாடல் சிறப்பு சார்.

You cannot copy content of this page
4
0
Would love your thoughts, please comment.x
()
x