
நிசி.
மல்லிகைப்பூ மணம். கமுகம்பூ வாசம். மேளச்சத்தம். உடுக்கையொலி. வராந்தாவில் யாரோ வேகமாய் ஓடிப் போகும் சத்தம். அடிவயிறு கலங்கி போர்வைக்குள் கண்களை மெதுவாகத் திறந்தேன். மேலே மோட்டு ஒடுகளின் இடைவெளியில் சிறகுகளோடு ஏதோ ஒரு கருத்த உருவம் எட்டிப் பார்ப்பது போர்வையின் ஓட்டை வழியே தெரிந்தது . வீட்டு முற்றத்து முருங்கை மரத்தில் ஒரு கிளை முறியும் சத்தம். என் இடது கால் நடுங்கத் தொடங்கியது. சிறுநீர் முட்டிக்கொண்டு மூச்சிரைத்தது. அப்பா வராண்டாவின் இடது பக்க திண்ணையின் கீழ்தான் படுத்துக் கிடப்பார். அம்மாவும் அக்காவும் உள்ளே அரங்கில். நான் அரங்குக்கு வெளியே நடுக்கூடத்தில். அந்தக் கருத்த உருவம் அப்பாவை ஏதாவது செய்து விடுமா? காலையில் பார்க்கும்போது அப்பா குடல்கள் கிழிக்கப்பட்டு கோரமாக மரித்துப் போய் கிடப்பாரா? வராந்தாவில் அப்பாவின் முனகல் கேட்டதுபோலிருந்தது. ‘அப்பா’ அலறியபடியே எழுந்தேன். அமைதி மயான அமைதி. வீட்டில் எந்தவொரு சலனமுமில்லை. சாணி மெழுகிய தரையில் ஒலைப்பாயின் மீது அம்மா விரித்திருந்த கோணிச் சாக்கின் ஓரத்தில் இருட்டில் ஏதோ ஊர்ந்ததுபோல் இருந்தது.. அது நிச்சயம் கட்டு விரியன்தான். பயத்தில் வியர்த்து கொட்டியது. கரி படர்ந்த சிம்னி விளக்கு சிறிய சுடரோடு மூலையில் எரிந்துகொண்டிருந்தது,
——
அந்த வீடு அப்பா, ஆளூரில் வீராணி குளத்தைச் சுற்றியிருந்த தென்னந்தோப்பை விற்ற மீதி பணத்தில் வாங்கியது. யாரோ அப்பாவின் நண்பர் ஒருவர் மூலம் கல்லு கண்ட்ராக்கு பெஞ்சமினிடம் வாங்கிய வீடு. மொத்தம் ஐந்து சென்ட் இடம். கொஞ்சம் தள்ளி பக்கத்தில் அரசின் சத்துணவுத் திட்ட பால்வாடி கட்டடம். வீட்டைச் சுற்றி அரையடி மண்ணெழுப்பி அதன் மேல் கம்புகள் நட்டு தென்னை ஓலை வேலி போடப்பட்டிருந்தது. தெற்கு பார்த்த வீட்டின் வடமேற்கு மூலையில் இடுப்புயர அளவில் மண் சுவர் எழுப்ப பட்ட குண்டு கக்கூஸ். வீட்டின் முன்பக்கம் மூன்றடி தள்ளி பள்ளம். பள்ளம் தாண்டினால் அடுத்த வீட்டு சுற்றுச் சுவர். அந்த வீட்டின் முன் வாசல் கிழக்கு பார்த்து இருந்தது. கிழக்குப்புறம் அதாவது வீட்டின் இடப்பக்கம் காம்பவுண்ட் ஏதுமில்லாமல் இரண்டடிக்கு பொதுவழி. எல்லைக்கு அடையாளமாய் ஒரு வேலிக்கல். நான் அப்பாவோடு; அம்மாவும் அக்காவும் பார்ப்பதற்கு முன்னால் போய் வீட்டைப் பார்த்தேன். அப்பாவின் நண்பரும் உடன் வந்திருந்தார்.
பெஞ்சமின் பாறை உடைக்கும் தொழில் செய்யும் காண்ட்ராக்டர். வீட்டை ஒதுக்கும்போது பாறையடிக்கும் இரும்புக்கூடங்கள், தமருகள், கட்டை, நீள உளிகள், துருத்திப் பை, மிச்ச மீதி வெடி மருந்துகள் எல்லாம் ஒரு பையில் இருந்தன. அப்பா அவற்றை வராந்தாவின் வலப்பக்கத் திண்ணையின் மூலையில் வைத்தார். சாணி மெழுகிய மண் தரை. ஏறியதும் ஒரு வராந்தா இரண்டு பக்கமும் திண்ணை. வலப்பக்க திண்ணை ஒரு மேடை போல அமைந்திருந்தது. நுழைந்ததும் உள்ளே ஒரு பெரிய அறை அதைப் பிரித்து சுவரெழுப்பி கதவிட்டு ஒரு அரங்கு. அடுத்து அடுக்களை. இடதுபக்கம் தரையில் சமையல் மேடை. இரண்டு மண்ணடுப்புகள் வலதுபக்கம் பாத்திரம் கழுவும், இரவுகளில் சிறுநீர் போகும் அங்கனக்குழி. பின்பக்கம் கதவைத் திறந்தால் நடைக்கருகே ஒரு காட்டுக் கொன்னை. அவ்வளவுதான்.
எனக்கு வீடு பிடிக்கவேயில்லை. முக்கியமாக மண் தரை. குண்டு கக்கூஸ். எனக்கு மட்டுப்பாவு வீடுதான் இஷ்டம். அதைப்போல மொசைக் தரை. நான் முன்பக்கம் வராந்தாவுக்கு வந்தேன். அப்போதுதான் அந்த விநோதத்தைக் கவனித்தேன். வராந்தாவின் வலப்பக்க மேடையில் நேர் மேலே கீழே சதுரமும் மேலே முக்கோணமுமான ஒரு ஐந்கோண மாடம். எதிர்பக்கத் திண்ணையின் நடுப்பகுதி சுவரில் மாடத்துக்கு நேர் எதிரே கதவுகளற்ற ஒரு வாசல் . எனக்கு இந்த அமைப்பு புரியவேயில்லை. அப்பாவுக்குத் தெரிந்திருக்கும். அப்பா நண்பருடன் தீவிரமாக பத்திரம், பண விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தார்.
ஒருவழியாக விலை முடிந்து அந்த வீட்டுக்குக் குடி போனோம். நானும் அப்பாவும் அந்த ஆடி மாசத்தில் குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் அப்பா அங்கு வேலைபார்த்தபோது பரிச்சையமான ஆத்ம நிலையம் நர்சரி கார்டனில் நீல ஒட்டு மாங்காய், ஒட்டுப் பேரைக்காய் , வெள்ளரி மாங்காய், சப்போர்ட்டா, தெரளி, தைகளை வாங்கி முன்பக்கம் இருந்த பள்ளமான பகுதியில் சீரான இடம் விட்டு நட்டோம். நல்ல மண்பிடிப்பு. கன்றுகள் சட்டென வளர்ந்தன. இரண்டு மாதங்களில் மூட்டுக் கம்புகளைக் கட்டி விட்டோம்.
அப்பா எப்போதும் இடப்பக்கத் திண்ணையின் கீழ் படுத்துக் கொள்வார். அவருக்கு விடிகாலையில் முழிப்பு வந்துவிடும். காலையில் முற்றத்து சருகுகளை எரித்துக் கொண்டு குளிர் காய்ந்து கொண்டிருப்பார். வீட்டின் பெரிய பிரச்சனை கறையான். கொஞ்ச நேரம் அசையாமல் நின்றால் ஆட்கள் மேலேயே செதல் ஏறிவிடும். பக்கத்துக்கு விளையில் இருக்கும் கறையான் புற்றைத் தேடியா இல்லை அந்த மண்ணின் வாக்கா தெரியவில்லை. அடிக்கடி சுற்றுப் புறங்களில் பாம்புகள் நடமாட்டம். மஞ்சள் நிற சாரைப் பாம்பு, சாம்பல் நிற கண்ணாடி விரியன், கட்டு விரியன், எட்டடி விரியன், ஊசி போலிருக்கும் அணலி எல்லாம் பார்த்துவிட்டேன். நல்ல பாம்பு மட்டும் கண்ணில் படவில்லை. மாலை ஆனபிறகு அம்மாவும் அக்காவும் நானும் வெளியே இறங்குவதில்லை. இருட்டில் ஓலைச்சூட்டோ, மட்டை கம்போ இல்லாமலும் வெளியே கால் வைப்பதில்லை. அவசரத்துக்கு கக்கூஸ் போகவேண்டுமென்றால் மொத்த குடும்பமும் காவலுக்கு நிற்க வேண்டும். மற்றபடி குளியலுக்கு இருபது நிமிட நடையில் நின்னியா குளம். பள்ளிக்கு நடந்தே போய்விட்டு வருவேன். கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு வீடு பழக ஆரம்பித்தது. நான் வீட்டுக்கு பழக ஆரம்பித்தேன். பாம்பு பயம் மட்டும் அவ்வப்போது வந்துபோகும்.
——-
பெரும் எக்காளச் சத்தத்துக்குப் பின் வானத்தில் பேரமைதி. திடீரென ரத்த கல்மழையும் அக்கினியும் பொழிந்தது. பெரிய நட்சித்திரம் ஒன்று பெரும் ஓலத்தோடு விழுந்து மடிந்தது. அது விழுந்த இடமெங்கும் அக்கினியூற்று பீறிட்டது. பிறகு எங்கும் பெரும் வெள்ளை நிறப் புகை. புகை ஓய்ந்ததும் வெட்டுக்கிளிகள் பறக்கத் தொடங்கின. அவற்றின் சத்தம் சிங்கங்களின் கர்ஜனையைப் போல் இருந்தது. பிறகு ஏழு இடிகள் இடித்தன. தொடர்ந்து கல்மழை பொழிந்துகொண்டேயிருந்தது.
எப்போதும்போல அடிவயிறு முட்டியது. நான் இருட்டில் மெதுவாய் அங்கனக்குழிக்கு சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்து படுத்தேன். தூக்கம் வரவில்லை. தினசரி ஏழரை மணி வாக்கில் இரவுணவை முடித்துவிட்டு எட்டுமணிக்கு படுத்தால் காலையில் ஏழு மணிக்கு முழித்துவிடுவேன். இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து உறக்கம் சரியில்லை. பயங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். ஆனால் கனவுகள். பயங்கரமான கனவுகள். உண்மையைப் போன்ற கனவுகள்.
அக்கா கல்லூரியிலிருந்து வர ஐந்து மணி, அம்மாவும் அப்பாவும் வர சில நேரங்களில் ஆறு மணி ஆகிவிடும். வீட்டுச் சாவி வலப்பக்கத் திண்ணையின் மாடத்தில்தான் இருக்கும். நாலரைக்கு பள்ளி விட்டதும் பெரும்பாலும் நான் கிரவுண்டுக்கு போய்விடுவேன். ஒன்பதாம் வகுப்பு அண்ணன்கள் சிலர் விளையாட்டு பயிற்சிகளில் இருப்பார்கள். பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு என் எஸ்.எஸ் மாணவர்கள் சிலநேரம் புல் புடுங்குவதிலோ தூய்மைப் பணியிலோ ஈடுபட்டிருப்பார்கள். பரேட் சௌதான் ! பரேட் விஷ்ராம் ! பரேட் பாயே மூட் ! பரேட் தைனே மூட்! பார்த் பீச்சே மூட் ! சத்தம் மைதானத்தை நிறைக்கும் என்.சி. சி நாட்களில் பிரச்னை இல்லை, ஆறு மணிவரை ஓட்டிவிடுவேன். மற்ற நாட்களில் எப்படியாவது இரண்டு ரோடுகள் தள்ளியிருக்கும் உடன்பயிலும் ஆனந்த வீட்டில் நேரத்தைக் கடத்துவதுண்டு. அக்காவுக்கு என்னளவுக்கு பயமில்லை. எனக்கு முன் வந்தால் அவள் தனியே இருந்துவிடுவாள். பெரியவள்.
——
சுற்றிலும் தீ எரிந்துகொண்டிருக்கும் மேடை. அதில் அதே கருத்த உருவம். இப்போது அதன் கொம்புகள், பற்கள், சிறகுகள் எல்லாம் தெளிவாகத் தெரிகின்றன. அதன் கைகளில் பெஞ்சமின் கண்டிராக்கின் பெரிய கூடமும் தமரும். காலடியில் வேட்டிகட்டிய ஒரு உருவம் அலறிக்கொண்டிருந்தது. அப்பா. உள்ளங்கை அளவு நீளமான தமரை அவர் நடு நெஞ்சில் வைத்து கூடத்தால் ஓங்கி அடிக்க அந்த உருவத்தின் கைகள் உயர்ந்தன. நான் அவரைக் காப்பாற்ற மேடைமேல் ஏற முயற்சிக்கிறேன். தீயின் நாக்குகள் விடவில்லை. அதை மீறி நான் ஏற கருத்த உருவத்தின் நாக்கிலிருந்து தீ பீறிட்டுக் கொண்டு வந்தது.
——
அங்கு குடிபோன நான்காவது மாதத்தில் தேர்வு நாட்கள் வந்துவிட்டன. மதியம் வரைக்கும்தான் பள்ளிக்கூடம். அப்பாவும் அம்மாவும் வேலைக்கு, அக்கா கல்லூரிக்கு. எனக்கு வீட்டில் ஒற்றைக்கு இருக்க பயம். இரவுக் கனவுகளின் காட்சிகள் பகலிலும் துரத்திக் கொண்டேயிருந்தன. சாயந்தரம் என்றால் எப்படியாவது இரண்டு மணி நேரத்தைச் சமாளித்து விடலாம்.
ஒருநாள் மதியம் பரீட்சை முடிந்து வீட்டுக்குள் போக தைரியம் இல்லாமல் வெளியே அப்பாவும் நானும் நட்ட மரங்களை வேடிக்கைப் பார்த்து நின்றபோதுதான் காம்பவுண்டுக்கு அந்தப் பக்கம் இருந்து
‘என்னப்போ மாங்கா காய்ச்சிட்டா?’
சிரிப்போடு கேட்டது குரல். நான் பதிலுக்கு சிரித்துக் கொண்டு நின்றேன்.
‘அம்மையும் அப்பாவும் சாயங்காலம்தானே வருவாங்க. சாப்டியாப்போ?’
கனிவாய்க் கேட்டார், நான் ஆமென்று தலையசைத்தேன்.
அப்படித்தான் எதிர் வீட்டு தாத்தாவுடன் பழக்கம் ஆனது. தேர்வு நாள் மதியங்கள், அவரோடு கழிந்தன. அவர் வீட்டில் எனக்கு விளையாடுவதெற்கென்றே ஒரு சின்ன நாய். சாயங்காலம் வரை தாத்தாவோடும் நாயோடும் பொழுது போய்விடும். தாத்தாவுக்கு நிறைய விஷயங்கள் தெரியும் ‘அப்போ அப்போ’ என்று அவர் மரியாதையாக கூப்பிடுவது எனக்குப் பிடித்திருந்தது. பொதுவாக இங்கே வயதில் மூத்தவர்கள் எடுத்தவுடன் ‘லேய் பிலேய்’ என்பார்கள் எனக்கு அது அறவே ஒத்துக்கொள்ளாது.
பாம்புகள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது ஒருநாள் ‘’ கொம்பேறி மூக்கன் பாம்பு கேள்வி பட்டிருக்கியாப்போ. அதுக்க உண்மையான பேரு கொம்பேறி மூர்க்கன். ஆளு மூர்க்கன்தான் ஆனா அதுக்கு நம்மாளுவ சொல்லுத மாரி வெஷம் கெடையாது. நெறைய கதைகளு உண்டு அதப் பத்தி. அதில ஒண்ணு சொல்லேன் கேளு. இப்படித்தான் கொம்பேறி ஒண்ணு மரத்து மேல குருவியைப் பிடிக்கப் போய் கிணத்தில விழுந்திட்டு. அப்ப ஒருத்தன் கெணத்துக்குள்ள தண்ணி எடுக்க வாளியைப் போட்டான். வாளியப் பாத்த பாம்பு ஏறிவர. பயத்தில கயத்த வுட்டுட்டான். வுட்ட வேகத்தில துலா கல்லு போய் நிலக்கல்லுல அடிச்சு துலா முறிஞ்சிட்டு. பய துலாக்கல்லு தட்டி கீழ விழுந்து மயங்கிட்டான். பாம்பு பக்கத்தில உள்ள பனையில ஏறிருக்கு. இத ஒரு ஆளு பாத்திட்டாரு. மயங்கிக் கிடந்தவன் செத்துட்டான். அவன சுடுகாட்டில கொண்டு போய் எரிச்ச பிறகு பனைமரத்தில இருந்து பாம்பு இறங்கிப் போனத அதே ஆளு பாத்திருக்காரு. ஒரு ஆளை கொம்பேறி மூர்க்கன் கொத்திட்டு ஏதாவது மரத்துமேலயோ கொம்பு மேலேயோ ஏறிரும். பொறவு அந்த ஆளு செத்து அந்த ஆளுக்க உடம்பு சுடுகாட்டுல எரிஞ்சு அந்த பொக வானத்தில மறையாது வரைக்கும் கொம்பேறி மூர்க்கன் கீழே வராதுன்னு அவரு கதை கட்டி விட்டிட்டாரு. உண்மையில ஆளுவளக் கொல்லதுக்குள்ள வெஷம் கொம்பேறிக்கு கெடயாது.
எதிர் வீட்டு தாத்தா பாம்புகளைப் பற்றி மட்டும் இதைப்போல் பத்துகதைகளுக்கு மேல் சொல்லியிருப்பார்.
——
நான் வீட்டில் தனியே இருக்கிறேன். அடுப்பில் கருப்பட்டி காப்பி. ஊளையிட்டபடி ஒரு உருண்டைக் காற்று வீட்டினுள் நுழைகிறது. தாவித் தாவி ஒவ்வொரு அறையாய் புகுந்து வெளியேறுகிறது. அடுக்களையில் அந்த காற்றுப்பந்து நுழைகிறது. அதன் வாய் நெருப்பை விழுங்கிவிட்டு மீண்டும் வீடு முழுக்க அலைகிறது. வீடு தீப்பிடித்து ஒளிர்கிறது.
நடுநிசி.
வியர்த்துக் கொட்டிகொண்டிருந்தது பனையோலை விசறி அப்பா வைத்திருப்பார். பிளாஸ்டிக் விசறி அக்காவிடம் இருக்கும். நான் பாயில் எழுந்திருத்து போர்வையால் வியர்வையைத் துடைத்தேன். மூலையில் சிம்னி விளக்கு கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தது. மண்ணெண்ணெய் தீர்ந்துவிட்டிருக்கும். நேற்றுதான் அம்மா தரையை மெழுகியிருந்தாள் சாணி மணமும், ஈரமும் அசந்து தூங்க வைத்திருந்தது. இடையில் இந்தக் கனவு.
அடுத்த நாள் வகுப்பில் ஆனந்திடம் கனவுகளைச் சொன்னேன். அவன் ஆஞ்சநேயர் கோயிலில் தாயத்து மந்திரித்து கட்டச் சொன்னான். அவனது அக்காவுக்கு இதைபோல் கனவுத் தொல்லைகள் இருந்தபோது புலியூர்குறிச்சி ராமசாமி ஜோசியர் இந்தப் பரிகாரத்தைச் சொன்னாராம். இப்போது அவளுக்கு எந்த தொந்தரவும் இல்லையாம். எங்கள் வீட்டில் இதைச் சொன்னால் அப்பா தட்டிக் கழிப்பார். அம்மாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அக்கா ஒருவேளை நம்புவாள். ஆனால் அவளை என்னோடு தனியே விடமாட்டார்கள். சரியாகத் தூங்காமல் என் கண்களில் கருவளையம் படர ஆரம்பித்திருந்தது. வகுப்புகளில் தூங்கி விழும் என்னை ஆனந்த் வாத்தியார்களிடம் மாட்டாமல் காப்பாற்றினான்.
அன்று மதியம் சாப்பிட்டுவிட்டு ஆங்கிலப் பீரியடில் அமர்ந்திருக்கும்போது தலை கிர்ரென்றது. சட்டென குமட்டி வாந்தி. நம்பிராஜன் சார் பாடத்தை நிறுத்திவிட்டு ஓடிவந்து முதுகைத் தடவி விட்டார். கொஞ்சம் நிதானமானதும் உடன் ஆனந்தையும் சேர்த்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். ஆனந்த் வீட்டில் விட்டுவிட்டு போய்விட்டான். வீட்டுக்கு நடந்து வரும்வரை பெரிய பிரச்சனையில்லை. வராந்தாவில் கால்வைத்ததும் திரும்பவும் தலை சுற்றியது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி மீண்டும் வாந்தி. இந்த வாந்திக்கிடையில் ஒற்றைக்கிருக்கும் பயம் போய்விட்டது. மாடத்திலிருந்து சாவியை எடுத்து வீட்டைத் திறந்து அடுக்களைப் பானையிலிருந்து தண்ணி கோரி குடித்தேன். வயிற்றுக்குள் சில்லென்று பானைத் தண்ணி இறங்கியது. அடுப்பினருகிலிருந்த பலகையடுக்கில் பரணியிலிருந்து நாரங்காய் ஊறுகாய் எடுத்து வாயிலிட்டேன். குமட்டல் கொஞ்சம் குறைந்தது போல இருந்தது. அரை மணி நேரம் கழிந்திருக்கும் மீண்டும் குமட்டல். அடுக்களைக்குப் போய் ஒரு கல் உப்பை வாயில் வைத்து நுணைத்தேன். குமட்டல் நின்றது.
எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் தெரியாது. அக்காவும் அம்மாவும் சேர்ந்தே வந்தார்கள். அம்மா வந்து என் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு அடுக்களைக்குள் போய் விட்டாள். அக்கா அரங்குக்குள் சென்று துணி மாற்றிவிட்டு வந்தபோது நான் வராந்தா தூணைப் பிடித்தபடி மீண்டும் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தேன். சத்தம் கேட்டு அடுப்பில் ஈர விறகை ஊதி ஊதி கண்சிவந்தபடி அம்மாவும் தீமூட்டிக்குழலோடு ஓடி வந்தாள். அன்று இரவு முழுக்க வாந்தி. தலைச்சுற்றல். விடாமல் வாந்தி. அன்று எனக்கு தூக்கமும் இல்லாமல் கனவுகளும் இல்லாமல் கடந்தது. அம்மாவும் அக்காவும் உறங்கவில்லை. காலையில் வாந்தி நின்றுவிட்டது. அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் அதே தலைசுற்றல், வாந்தி, நம்பிராஜன் சார், முதுகு தடவல், ஆனந்த், வீடு, நாரங்காய் ஊறுகாய், உப்பு. இரவு தூக்கமில்லை. காலையில் வாந்தி இல்லை. அடுத்த நான்கு நாட்கள் தேர்வு விடுமுறை. இடையில் அப்பா சந்திரசேகரன் ஆஸ்பத்திரிக்கு ஒருமுறை கூட்டிப் போய் ஊசி போட்டும் குமட்டல் நிக்கவில்லை.
சரியாக நாலாவது நாள் அதே செவ்வாய்க் கிழமை. அன்று உள்ளூர் விடுமுறை. அம்மாவும் வீட்டிலிருந்தாள். மீண்டும் வாந்தி. என் தலையைக் கோதியபடியே அம்மா அவளோடு வேலை பார்க்கும் ஜான்சி ஆன்டி வீட்டிற்கு போய்விட்டு வருவதாய்ச் சொல்லி கவலையோடு கிளம்பினாள். அக்கா என்னைப் பாவமாய்ப் பார்த்தாள்.
—–
சித்திரங்கோடு காலனியில் புதிதாய் கூடும் ஜெபப்பெரைக்கு ஜான்ஸி ஆன்டி சாயங்காலம் அழைத்துப் போவதாய் சொல்லியிருந்தார்கள். குலசேகரம் பஸ்ஸில் அக்காவும் அம்மாவும் நானும் ஜான்ஸி ஆன்டி நால்வருமாகக் கிளம்பினோம். அம்மா வாந்தி பிடிக்க ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து வந்திருந்தாள் . அக்கா என் கையில் எலுமிச்சம்பழத்தைத் தந்தாள்.
அந்த ஜெபப்பெரை மற்ற வீடுகளைப் போலத தான் இருந்தது. சின்ன முகப்பறை நல்ல கூட்டம். இடமில்லாமல் வீட்டுக்கு வெளியே மக்கள் உட்கார்ந்திருந்தார்கள். முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் அதிதூதர் மிக்கேல் சம்மனசு சொரூபம் ஒன்றின் முன் தியானத்தில் அமர்ந்திருந்தார். வந்திருந்த மக்கள் அந்த சம்மனசு சொரூபம் இருந்த மேடைச் சுவரில் காசுகளை கையால் பதித்தார்கள். காசு அந்த சுவரில் ஒட்டிக்கொண்டது. எரியாத மெழுகுவர்த்திகள் சுவரில் ஒட்டிக் கொண்டன. நான் அரை மயக்கத்தில் தளர்வாக அதிசயக்க முடியாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன். எங்கள் முறை வந்ததும், அவர் என் தலையில் கைவைத்து ஜெபிக்கத் தொடங்கினார். ஏதேதோ வாய்க்குள்ளாக ஜெபித்துவிட்டு அம்மாவிடம் தீர்க்கமாகச் சொன்னார்.
‘’புதுசா குடிவந்திருக்கிற வீட்டுல பாய்ச்சி இருக்குதே. நீங்க ஜார்ஜியார் செல ஒண்ணு வீட்டில திருநிலைப்பாடு செய்யணும். மாறிக்கிட்டும். எல்லாம் மாறிக் கிட்டும். கிறிஸ்துக்க அருள் இருக்கதினால கெட்டது நடக்காம இருக்கு. தள்ளிப் போடாண்டாம். இந்த வெள்ளியாச்சைக்குள்ள நிலைநிற்றல் ஆக்கணும். ஒவத்திரவங்கள் மாறும். மாறிக்கிட்டும்‘’
ஜான்சி ஆன்டி தனியே சிலை கிடைக்கும் இடம், விலை விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு இணைந்துகொண்டார்.
அம்மா என்னை வெளியே விடவே பயந்தாள்.
அப்பா வந்ததும் அம்மாவும் அக்காவும் கூடிப் பேசினார்கள். காலையில் செல்லப்பன் கொத்தனாரை அழைத்துப் பேசி சாய்ந்தரத்துக்குள் சிலையைப் பிரதிஷ்டை செய்துவிடுவதாக அப்பா சொல்லிவிட்டார். அம்மா முகத்தில் பெரும் நிம்மதி. நான் எதிர் வீட்டு தாத்தாவிடம் இந்த சம்பவங்களைப் பற்றி கேட்டுவிடலாம் என்று மெதுவாய் அக்காவின் கண்ணில் படாமல் தப்பி ஒட்டு மாங்காய் கன்றின் இலைமறைவிலிருந்து காம்பவுண்ட் சுவரைத் தாண்டி குதித்தேன்.
—–
தாத்தா எந்த அதிர்ச்சியும் வெளிக்கட்டாமல் சொல்லத் தொடங்கினார்.
‘’ இந்த முடுக்கு போய் முடிய இடத்தில ஒரு வீடு இருக்கில்லாப்போ அதுக்கு பின்பக்கம் ரோடு போகுதுல்லா. அங்க ஒரு செக்கு மரம் இருக்கும் பாத்திருக்கியா. அதுக்கு நேர வலதுபக்கம் நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது ஒரு மாடன் கோயிலு இருந்துது. அந்த மாடன் கோயில்ல வருசத்துக்கு ஒரு தடவ கொட நடக்கும். செவ்வா வெள்ளி பூசையும் குடுப்பாவோ. கொடை சமயத்தில பாத்தேன்னா மாடங்கோயில் பூசாரி முழு ஆக்கிரோசத்தோடஓடுவாரு. அந்தக் கோயிலுக்கு நல்ல கூட்டம் வரும். பக்கத்தில ஒரு நாகராஜா பூடமும் உண்டு. பகல்ல அந்தப் பக்கம் போவே பயமாட்டிருக்கும். யாருக்காவது நேச்சை உண்டுன்னாக்கா பொங்காலை போடுவாவோ. எப்படியும் வாரத்துக்கு ரெண்டு மட்டம் சர்க்கரைப் பொங்கல் கிட்டும். ’’
தாத்தா பழைய நினைவுகளில் ஊறி நாக்கை ஒருமுறை சப்புக் கொட்டிக் கொண்டார்.
‘’இந்த பாய்ச்சின்னா என்ன ?‘’ நான் திடீர் ஞாபகம் வந்தவனாய் கேட்டேன்.
பறவைகூட்டம் எல்லாம் வலசை போவதுக்கு ஒரு பாதை இருக்கும் கேள்விப்பட்டிருக்கியா? யானைப்பாதை தெரியுமா? அதுக பலகாலமா போற போக்குவரத்து பாதை. அதுதான் பாச்சு. பாய்ச்சின்னும் சொல்லுவாவோ. மாடன் கோயில் பூசாரி போற பாத எதுன்னு நெனைக்க ? சற்று இடைவெளி விட்டு சொன்னார். இப்ப நீங்க இருக்க வீட்டுக்க வராந்தா. அது மாடனுக்கு பாச்சாக்கும். நேர இந்த வழியா வந்து அடுத்த விளையில ஒரு புத்து மண்ணு இருக்கும் அது வரைக்கும் போய் திரும்பி வரும். ரோடு போடுதக்குன்னு சொல்லி அந்த கோயில இடிச்சிட்டானுவோ. மாடனுக்கக் கூட வாதைகளும் உண்டு. அதுவ எங்க போவும்? ’’
ஒருகணம் என் அடிவயிறு கலங்கியது. பிறகு வருவதாய் சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்பினேன். எங்கோ மல்லிகைப்பூ மணம். கமுகம்பூ வாசம். மேளச்சத்தம் உக்கிரமாக ஒலித்தது.
—–
அப்பா மதிய வாக்கில் செல்லப்பன் கொத்தனாரோடு வந்தார், கொத்தனார் கையில் பெரிய சாக்குப் பொதி. அதில் இரண்டடி உயர சிலை. தலைக்கவசம் அணிந்து குதிரைமேல் ஒருவர் கீழே விழுந்து கிடக்கும் தீநாகத்தைக் கொல்கிறார். ஜார்ஜியார். புனித ஜார்ஜியார்.
‘ ஏற்கனவே இங்க ஒரு சொரூவம் இருந்திருக்குவே. தடம் கெடக்கு ’
செல்லப்பன் சொல்லிக்கொண்டே மிக லாவகமாக வலப்பக்க மாடத்தில் அந்த சிலையை சிமென்ட் பூச்சு கொண்டு உறுதியாக நிற்க வைத்தார்.
நாங்கள் மூவரும் அந்த சொரூபத்தின் முன் முழங்காலிட்டு ஜெபித்தோம். சற்று நேரத்தில் ஜான்சி ஆன்டியும் வந்து சேர்ந்துகொண்டார். மன்றாடும் குரலில் ஜான்சி ஆன்டி பாடல் ஒன்றைப் பாடி முடித்தார். அம்மாவும் அக்காவும் கூடப் பாடினார்கள். பாடல் முடிந்ததும். வீட்டாருக்காக நீண்ட ஜெபம் ஒன்றை செய்தார், குறிப்பாக எனக்காக என் உடல்நலனுக்காக அழுகை வெடிக்கும் குரலில் ஜெபித்தார்கள்.மூவரும் இறுதியாக.
புனித ஜார்ஜியாரே ரெட்சியும் ! மிக்கேல் சம்மனசே காத்தருளும் !
புனித ஜார்ஜியாரே ரெட்சியும் ! மிக்கேல் சம்மனசே காத்தருளும்
புனித ஜார்ஜியாரே ரெட்சியும் ! மிக்கேல் சம்மனசே காத்தருளும் !
மந்திரம் போல சொல்லிக்கொண்டேயிருந்தார்கள்.
அன்று வாந்தி குமட்டல் எதுவுமில்லை. நான் கொஞ்சம் தெம்பாய் உணர்ந்தேன்.
அன்று வெள்ளிக்கிழமை.
——
வானத்தில் ஒரு பெரிய சிவப்பு பாம்பு. ஏழு தலைகள். தலைகளில் கூந்தல்போல முடியும் பத்து கொம்புகளும் கொண்டிருந்த பெரும் பாம்பு. அதன் வால் அருகிலிருந்த நட்சத்திரங்களைத தாக்கி நட்சத்திரங்கள் சிதறித் தெறித்தன. திடீரென எக்காளச் சத்தம். குதிரையில் போர் கவசங்கள் கிரீடம் அணிந்த ஒருவர் கிழக்குத் திசையிலிருந்து தோன்றினார். அவரோடு ஆயுதம் தாங்கிய அவரது சேனை. பெரும்பாம்பு சேனையோடு சண்டையிட்டது. மோட்டு வளையில் இப்போது கருத்த உருவத்தைக் காணோம். ஏதோ உலோக ஆயுதங்கள் மோதிக் கொள்ளும் சத்தம். கைகள் சில்லிட்டன. ஒரு அலறல். இறக்கைகள் அடிக்கும் சத்தம். ஒரு நீண்ட மரண ஓலம். வெற்றியை அறிவிக்கும் எக்காளம்.
போர்வையின் ஓட்டை வழி நான் பார்த்துக்கொண்டேயிருக்க கூரை மேல் ஒரு வெள்ளைநிறக்குதிரை கனைத்துக் கொண்டே போனது. யாரோ தீனமாய் அழும் சத்தம்.
அன்று செவ்வாய்க் கிழமை.
——————-
எழுதியவர்

-
எழுத்து; காட்சி ஊடகம்; படைப்பிலக்கிய, சமூக, கோட்பாடு ஆய்வுகள்; மொழிபெயர்ப்பு எனப் பன்முகத் தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ஐந்து குறும்படங்கள், இரு ஆவணப் படங்கள் இவரது உருவாக்கத்தில் வெளிவந்துள்ளன. இளங்கலை மருந்தாளுனர் பட்டம் பெற்றவர்.
இவரது நூல்கள்:
கடந்தை கூடும் கேயாஸ் தியரியும் - சிறுகதைகள் ( என்.சி.பி.ஹெச் - 2012)
சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை - சிறுகதைகள் (காலச்சுவடு -2017)
யா.ஓ (மறைக்கப்பட்ட மார்க்கம்) -மறை புனைவு ( வெற்றிமொழி -2019)
இது கறுப்பர்களின் காலம் - மொழிபெயர்ப்புக் கவிதைகள் ( நீலம் -20121)
அம்பேத்கரின் கடிதங்கள் - மொழிபெயர்ப்பு - (காலச்சுவடு -2022)
.. என்றார் யா.ஓ - மறைபுனைவு ( யாவரும் -2022)
பிக்காஸோ ஓர் எருதை வரைகிறார் -மொழிபெயர்ப்புக் கவிதைகள் ( காலச்சுவடு- 2022)
( நன்றி : ஆசிரியர் குறிப்பு உதவி : காலச்சுவடு)
இதுவரை.
கதைகள் சிறப்பிதழ் 202523 January 2025பாச்சு
சிறுகதை18 January 2024ராதா -ராஜா
கதைகள் சிறப்பிதழ் 2023 - II3 September 2023யட்சனும் நானும்