3 December 2024
sivasankar sj9

டைசிவரைக்கும் காதுமட்டும் கேக்காமப் போயிரப்பிடாதுடா சாரங்கா.” ராதாபாட்டிக்கு கடந்த மாசியில் எண்பத்தைந்து வயது கடந்திருந்தது.

“சாரங்கா! நேக்கு நாளன்னிக்கு பேங்குக்குப் போணம். அந்த உன் பிரெண்டு இருக்கானே கணேஷன் அவன் ஆட்டோக்கு சொல்லிட்றியா’’

நானும் ராதா பாட்டியும் அறிமுகம் ஆகி நட்பானது ஒரு கடைத்தெருவில். அதுவொரு ஐந்து வருடம் இருக்கும். நிற்பதுவே நடப்பதுவே பாரதி படப்பாடல் கடையில் ஒலித்துக் கொண்டிருந்தது. வெறும் காட்சிப்பிழைதானோ வரிக்கு என்னையறியாமல் ஆஹா என்றேன். கையில் பையோடு அவள் அப்போது என்னைப் பார்த்து முகம் முழுக்க சிரித்தாள். அதே கடையில் பின்னொரு நாள், புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டைதான் ஆடினேன்… எஸ்பிபி முடித்து ஜானகி அம்மா இந்த வனம் எங்கிலும் ஒரு சுரம் ….என ஆரம்பிக்கும் இடத்தில் கண்களை மூடி லயித்துத் தலையாட்டிக் கொண்டே கடைத்தூணில் முட்டத் தெரிந்தேன். ராதா பாட்டி என்னைச் சட்டெனப் பிடித்துக்கொண்டாள். மொத்தக் கிராமமும் யூஎஸ், கனடா, யூரோப்பிலும் பெருநகரங்களிலும் புலம்பெயர்ந்திருக்க நான் ஈஎஸ்ஈ பரீக்ஷை தயாரிப்பின் அமைதி வேண்டி ஊருக்கு வந்திருந்தேன்.

‘எந்தத் தெருடா அம்பி’ என்றபடியே ராதா பாட்டி என்னோடு நடந்தாள்.

கிராமப்பகல்களின் தனிமை கொடூரமானது. நான் அதை இங்கு வந்த இரண்டே நாட்களில் மெதுவாய் உணரத் தொடங்கியிருந்தேன். நகரம் என்னவாகயிருந்தாலும் ஓர் அசைவைக் கொண்டிருக்கும். இங்கு பகல் மனநிலை ஏதோ தொண்ணூறு கடந்த தொண்டுக் கிழமாக நம்மை நினைக்க வைத்து விடுகிறது. சில நாட்களில் இந்த சகிக்க முடியாத அமைதி எழும்போதெல்லாம் ராதா பாட்டிக்கு அழைப்பேன். அவள் வழக்கம்போல உற்சாகமாக ஏதேனும் சினிமா ப்பாட்டைப்பற்றி பேசுவாள். பாட்டைப் பாடிக்காட்டுவாள். எனக்கு அவள் வயதும் நீள் தனிமையும் உறுத்தலாய் இருப்பவை. நான் சகஜமாக முயன்று அவளை தனியே விட்டு வரும்போதெல்லாம் குற்ற உணர்வுக்கு உள்ளாகிக் கொண்டேயிருப்பேன்.  எப்போதும் சிறு புன்னகையோடு வலம் வரும் ராதா பாட்டியைப் பார்க்கையிலெல்லாம் குறையொன்றுமில்லை பின்னணியில் ஒலிக்கும். நோய் குறித்து அவளிடம் புகார்களில்லை.

“உடம்பு ஒரு பருவத்திலிருந்து இன்னொரு பருவத்துக்கு போகுறச்ச வர்ற வலியும் வேதனையையும் நோய்னு நெனச்சுக்கப்பிடாது. திரேகத்தில மட்டும் இருந்தா அது தனியா தெரியும். அத வேணா நோய்ன்னு சொல்லிக்கலாம். அது ஈசியா குணப்படுத்திடலாம். ஆனா தேகம் மனசு உயிரணு எல்லாத்திலேயும் இந்த மாற்றம் தெரியும். அத புரிஞ்சுக்கணம். ஜாஸ்தி பேர் இதப் புரிஞ்சுக்காம கண்ட கண்ட மருந்த சாப்ட்டு கெடுத்துக்குறா’’

எப்போதேனும் வயதாவதைப் பற்றி யோசிக்கும்போது அவளிடம் எனக்கும் வயசாயிடுத்து இல்ல பாட்டி என்பேன். அவள் செல்லமாய் முறைத்துக்கொண்டு அப்போ நானெல்லாம் என்ன சொல்றதுடா பொய்சோகத்தோடு கேட்பாள்..

சமாதனப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு But age is just a number பாட்டி அசட்டையாகச் சொல்வேன்.

போடா There is no such thing as age மடக்குவாள்.

மரணத்தைப் பற்றியும் எங்களுக்குள் சர்ச்சைகள் வரும். தத்துவார்த்தமாய் பேசுவாள்.

“ஒரு நீளமான வழுக்குக் கயறுதான்டா மரணம். நம்மக்கூட அதில ஏறுறவா கூட வர்றாங்கோ சிலசமயம் கைவழுக்கிடுது, நமக்கு முன்னே போறவா பின்ன வர்றவா கைய விட்டுர்றத பாக்கிறோம்.ஆனா எல்லாரும் எங்கயோ எப்பவோ எப்படியோ பிடிய விட்டுடுறா. மனுஷா ஏறிகிட்டும் வழுக்கிக்கிட்டும்தான் இருப்பா..வழுக்குக் கயிறு காலக்கயிறு காலனுக்க கயிறு’’ ராதா பாட்டி சிரித்துக் கொள்வாள்.

ராதா பாட்டி கும்பகோணத்துக்காரி. தாத்தாவும் கும்பகோணம்தான். தாத்தா பி.டபிள்யூ.டியில் இஞ்சினியர். கலியாணத்துக்கு முன்னமே தாத்தாவுக்கு மாற்றலாகி இங்கு வந்துவிட்டார். அப்போது இங்கு நீர் மேலாண்மை தொடர்பான சானல்கள், பாலங்கள்,பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. பாட்டிக்கு கும்பகோணத்தை விட்டு வர விருப்பமேயில்லை. ஐயோ என்ன ஊருடா சுத்தி கோயில் சுத்தி குளம், மகாமஹ பூமிடா. ஊரின் ஸ்தல புராணத்தை ஆயிரம் முறை வேண்டுமானாலும் ஒப்பிக்க அவளுக்கு விருப்பம்தான். பிரம்மன் போன யுகத்தை பிரளயத்தால அழிச்சிண்டு இந்த யுகத்துக்கான மொத்த உயிர்களோட விதையையும் ஒரு கும்பத்தில போட்டு வச்சுண்டுட்றான். அதுவும் பிரளய வெள்ளத்துல மிதந்து வந்து நம்ம குடந்தையில நிக்குது. அப்புறம் சிவபெருமான் கிராதமூர்த்தி வடிவத்தில கும்பத்து மேல அம்பெய்றார். ஜீவராசிகளெல்லாம் வெளிய வந்து லோகெமெல்லாம் பரவி ஷேமமா வாழ்றா. ஒடஞ்ச கும்பம் இருக்கோன்னோ அது எல்லாம் சின்ன சின்னதா பன்னிரண்டு கோயிலாயிடுது. என்ன ஊரு. என்ன ஊரு. புண்ய ஸ்தலம்டா.பாட்டி கன்னத்திலிட்டுக் கொண்டே பலமுறை சொல்லிச் சொல்லித் தளும்புவாள். கும்பகோணம் பற்றிப் பேசினால் அவளுக்கு கால இட வர்த்தமான பேதம் எதுவும் தெரியாது.

பாட்டிக்கு பிள்ளைகள் இல்லை நெருங்கிய உறவுகள் எல்லாம் அங்கங்கே வேலை படிப்பு என உலகின் பல மூலைகளில் சிதறிக் கிடந்தார்கள். ராதாபாட்டி அவளுக்கான அன்றாடங்களில் திளைத்துக் கொண்டிருந்தாள். ‘கும்போணப்’ புராணத்தைத் தவிர அவளிடம் தேவையற்ற புலம்பல்களில்லை.

உண்மை என்னையும் அவளையும் இணைத்தது ராஜாதான்.

“ராகவேந்த்ரால ஆடல் கலையே தெய்வம் தந்ததுன்னு சாருகேசில க்ளாச்சிக்கா போட்டுட்டு அதே சாருகேசிய முந்தானை முடிச்சில சின்னஞ்சிறு கிளியேன்னு சோகமா வெப்பாரு பாரு ராஜா அந்த வெரைட்டி… அப்பா’’

‘’தென்றல் வந்து என்னைத்தொடுமும் சொர்க்கமே என்றாலும் ஒரே ராகம் தெரியுமோன்னா? ‘’

“ஆமா பாட்டி ஹம்சநாதம்’’

“லவந்திகான்னு ஒரு ராகம் யாரும் அதில பெருசா பாட்டுகள் போடுறதில்லை. ஆத்தாடி பாவாட காத்தாடன்னு ஒரு பாட்டு. அப்படியொரு சொகம். தர்மபத்தினில ஒரு பாட்டு வருமே ஆங் நான் தேடும் செவ்வந்தி பூவிது அதில வெஸ்டன் ம்யூசிக்கும் ஹிந்தோளமும் அப்படி ஒண்ணா மாறி குழையும். என்ன மனுஷண்டா?’’

“ராகத்தை விடு ஒவ்வொரு வரிக்கு நடுல சிலநாழி ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவிலயும் ஒரு ப்ளூட் பிட், வயலின் பிட்டு. அப்றம் கோரஸை சொல்ணம். நம்ம கூட பத்து இருபது பேர் சேர்ந்து பாட்டு கேட்டுண்டிருக்கற ஃபீல்.”

“வெறும் மியூசிக் மட்டுமில்ல. அவர் கொரலும் எனக்கு ரொம்ப இஷ்டம் . பிக்ஷை பாத்திரம் பாட்டு ரமண மாலைல கேட்டுண்டு பரதேசில கேக்கறப்போ ஏன் மதுபாலகிருஷ்ணன் இவ்ளோ கஷ்டப்படுறான்னு தோணித்து. ராஜா எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம , தாளம் ராகம் எல்லாத்தியும் மறந்துண்டு மனசில இருந்து பாட்றார். அதுதான் உண்மையான சங்கீதம்.. ”

ராதா பாட்டி மற்ற ராஜா ரசிகர்கள் போல பிற இசையமைப்பாளர்களைக் கேட்காமல் இருக்கமாட்டாள். எந்த மெலடி யார் போட்டாலும் ரசிப்பாள்.  “ரெஹ்மான் உழவன் பாட்டு கேட்டிருக்கியோன்னா கிளாஸ். அவனோட மாஸ்டர் பீஸ் அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவேதான்.’’

ரவீந்தர், சொந்தர்யன், பாலபாரதி, ஓவியன் போன்ற நான் கேள்விப்படாத இசையமைப்பளர்களை எனக்குச் சொன்னவள் அவள்தான்.

‘நெஞ்சத்தில் வெகு நாட்களாய் காதல் ஏக்கம் பூவே’ தினம்தோறும்னு ஒரு படத்து பாட்டு. கேட்டுப்பாரு.

“சில பேரு பாட்டு கேட்டுண்டே தூங்குவா. நேக்கு அப்டியில்ல பாட்டு கேட்டவுடனே முழிச்சுண்டுடுவேன். மனசு பாட்டுக்குள்ள போய்டும். அப்புறம் தூக்கமே வராது. அப்டி முழிச்சிண்டே இருந்த நாட்கள் எவ்ளோ இருக்கும் தெரியுமா சாரதி.’’

சாரதி சாரங்கபாணி சாருகேசி சாருவாகா அவளுக்குத் தோன்றுவது போலெல்லாம் என்னை அழைப்பாள். உணர்ச்சிப்பெருக்கில் சாரு.


நான் சென்னை வந்து ஆறுமாதம் இருக்கும். ஈஎஸ்ஈ எக்சாம் பிரிலிமினரி தேறியிருந்தேன். அடுத்த பரீக்ஷைக்கான கோச்சிங் சென்டரில் சேர்ந்து ஓய்வொழிச்சலில்லாமல் கடுமையாகப் படிக்கவேண்டியிருந்தது. அவ்வப்போது டீக்கடைகளில் ஒலிக்கும் இளையராஜாப் பாடல்கள் ராதா பாட்டியின் நினைவைக் கொண்டுவரும். பேச வேண்டும் என்று நினைத்து அதற்கான மனநிலை வாய்க்காத நாட்கள்.

அன்று ஒரு இரண்ய வேளையில் அலைபேசி அடித்தது. எதிர்முனையில் சீனு. நினைத்ததுதான்… ராதா பாட்டி.

நான் இருந்த நெருக்கடிகளில் கலந்துகொள்ள முடியாது . சீனுவிடம் அடுத்த நாள் பாட்டியை எடுக்கும்வரை ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை கேட்டுக்கொண்டேயிருந்தேன். திடீரென வாழ்க்கையில் இசையே இல்லாமல் ஆனதுபோல் ஒரு வெற்றிடம். பாட்டியோடு பேசிய பொழுதுகள் ஒவ்வொன்றாய்.

“நான் பாட்டு கேட்டுண்டு இருக்கச்ச நான் தனியாவே இல்ல. என்னைச்சுத்தி யார் யாரெல்லாம் இருப்பான்னு நெனைக்குற. மொத அரவட்டத்தில, பெர்குஷன்ஸ் தபலா, மிருதங்கம், ரிதம் பேட், ட்ரம்ஸ்… அப்புறமா ப்ளூட்டிஸ்டு ரெண்டு பேர், பேஸ் கிடார் ஒரு ரெண்டு, லீடு கிட்டார் ஒண்ணு, அப்புறம் மூணாவது அரவட்டத்தில பத்து வயலினிஸ்டு, ஒரு செல்லோ… கிழக்கு ஓரமா ஒரு வீணையும்… மேற்கு ஓரமா ஒரு நாகஸ்வரமும். அப்புறம் ஆர்கஸ்டிரா கண்டக்டர் யாருன்னு நெனக்ற சாட்சாத் ராஜா..”அவள் முகம் பால்போல பொங்கி பொங்கி பூரிக்கும்.

ஒருநாள் பழைய போட்டோ ஆல்பம் ஒன்றைக் காட்டினாள். கருப்பும் இல்லாமல் பிரவுனும் இல்லாமல் ஒரு பழைய செஃபியா வண்ணம். ஒவ்வொரு புகைப்படமும் அழகோ அழகு. கம்போசிங், எக்ஸ்போஷர் அத்தனை துல்லியம். அந்தக் கால உடைகள், நகைகள், சிகை அலங்காரம், கைக்கடிகாரத்தை போட்டோவுக்கு காட்டும் பழக்கம்,  எல்லாவற்றையும் கவனித்த நான் சில தம்பதிகள் படங்களில் மனைவிகள் கீழே அமர்ந்திருக்க ஆண்கள் நாற்காலியில் அமர்ந்திருக்கும் படங்களைப் பார்த்துவிட்டு பாட்டியை ஏறிட்டேன். “வேட்டைக்காரன் தான் வேட்டையாடின மிருகங்களை காலடியில வச்சு போட்டோ எடுப்பானில்ல இதுவும் அதுதாண்டா சாரங்கா’’ நான் சற்றும் எதிர்பாராமல் ராதா பாட்டியிடமிருந்து சீற்றலோடு வந்தன வார்த்தைகள்.

“அந்தகாலத்தில தபஸ் பண்ணவா பத்தி கேக்கிறச்ச எனக்குப் பெரிய பிரமிப்பா இருக்கும். பொதுவா அதுல ஆம்பிளகள் தான் ஜாஸ்தி. பொம்மனாட்டிகளுக்கு அது ஒருவேள முடியாதுன்னு தோணுது. தாத்தா ஷேமக்குறைவா இருக்கும்போது பாத்துன்னுருக்கேன் அவருக்கு மருந்து மட்டும் போரும். ஆனா எங்க அம்மா, என் நாத்தனார், என் ஓரகத்தி பொம்மனாட்டிகள் எல்லாருக்கும் மருந்து மட்டும் போறாது. ஆறுதலா ரெண்டு வார்த்த இல்லேன்னா ஒரு ஸ்பரிசம். சிவன் சக்தின்னு சொல்றாளே. சிவன் உடம்பாவே இருக்குறனால ஸ்பரிசம் தேவைப்படுறதில்லபோல. சக்திக்கு ஸ்பரிசம் தேவைப்படுது. பொம்மனாட்டிகளுக்கு மட்டுமே ஆனதோ இது.’’

“சங்கீதம் மொறையா கத்துக்கல ஆனா தெரியும். சங்கீதம்நா பாவம்தான் வேற ஒண்ணுமில்ல. மத்ததெல்லாம் வித்யாகர்வம். பாரு நேக்கு என்னவெல்லாம் தெரியுதுன்னு கடை பரப்புறது. அதில துளிகூட ஜீவன் இல்லை. அன்னக்கிளிலயிருந்தே ராஜா பாட்டு கேட்டுண்டிருக்கேன். அலுக்கிறதேயில்ல. அப்போல்லாம் ட்ரான்சிஸ்டர்தான் என் சிஸ்டர். பாட்டி சிரித்தாள். சாரதி.. ராஜாட்ட இருக்கிறது பாவம். அதுதான் சங்கீதம். பண்டிதனுக்கும் பாமரனுக்கும் அவர்கிட்ட இடம் இருக்கு. எல்லா உணர்வுக்கும் அவர்கிட்ட பாட்டு இருக்கு. என்னை கும்போணத்துக்கு அப்பப்போ தூக்கிண்டு போறது ராஜா பாட்டுதான். எல்லாத்தையும் விட அந்தப் பாட்டு என்னை ஸ்பர்சிக்கும்டா.. தோ நெத்தில, தலையில, மார்ல, சிலநேரம் கால்கூட அமுக்கி விடும்டா.. அமிர்தாஞ்சனம் மாத்ரி ஒரு தைல வாசனையோட நெஜம்மாவே ஸ்பர்சிக்கும்..”

கடைசியாய் அவளை விட்டும் பிரியும்போது தனிமை பற்றி மீண்டும் ஒரு உரையாடல் நடந்தது.

“வாழ்க்கையோட மொதல் பாதில சாவுறதப் பத்தி யோஜிக்கவே மாட்டோம். எதிர்காலம், கல்யாணம், கொழந்தைங்க, வீடு, ஊர்சுத்துறது இப்படியேதான் யோஜனைக இருக்கும். நம்ம கூட ஜாஸ்தி பேர் இருக்குற மாரி தெரியும். ஆனா ரெண்டாவது பாதில ஒருவிதத்தில சாவுக்கு காத்திண்டுருக்கற மாரி ஆயிடுது. இப்போ தனியா இருக்கிற தோணல. சாவுறப்போ தனியாத்தானே போணம்.” பேசிக்கொண்டேயிருந்த பாட்டியின் குரல் சட்டென உடைந்தது.

‘வயசாயிடுத்துன்னா கொசுகூட கடிக்கிறதில்லடா சாரங்கா’ ராதா பாட்டி கேவினாள்.

என்னையறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டேயிருந்தது. நான் அறையிலிருந்தபடியே மானசீகமாக ராதாப்பாட்டியின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.


(கடலூர் சீனு, சுகா அண்ணன் இருவருக்கும்)

எழுதியவர்

சிவசங்கர்.எஸ்.ஜே
எழுத்து; காட்சி ஊடகம்; படைப்பிலக்கிய, சமூக, கோட்பாடு ஆய்வுகள்; மொழிபெயர்ப்பு எனப் பன்முகத் தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ஐந்து குறும்படங்கள், இரு ஆவணப் படங்கள் இவரது உருவாக்கத்தில் வெளிவந்துள்ளன. இளங்கலை மருந்தாளுனர் பட்டம் பெற்றவர்.

இவரது நூல்கள்:

கடந்தை கூடும் கேயாஸ் தியரியும் - சிறுகதைகள் ( என்.சி.பி.ஹெச் - 2012)
சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை - சிறுகதைகள் (காலச்சுவடு -2017)
யா.ஓ (மறைக்கப்பட்ட மார்க்கம்) -மறை புனைவு ( வெற்றிமொழி -2019)
இது கறுப்பர்களின் காலம் - மொழிபெயர்ப்புக் கவிதைகள் ( நீலம் -20121)
அம்பேத்கரின் கடிதங்கள் - மொழிபெயர்ப்பு - (காலச்சுவடு -2022)
.. என்றார் யா.ஓ - மறைபுனைவு ( யாவரும் -2022)
பிக்காஸோ ஓர் எருதை வரைகிறார் -மொழிபெயர்ப்புக் கவிதைகள் ( காலச்சுவடு- 2022)

( நன்றி : ஆசிரியர் குறிப்பு உதவி : காலச்சுவடு)
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x