
எப்போதிலிருந்து காய்கறிக் கூடையோடு மனோகரி இந்தத் தெருவுக்கு வந்து கொண்டிருக்கிறாள் என்பதை யோசித்தால் நினைவு அவ்வளவு துல்லியமாக ஒத்துழைப்பதில்லை. ஏனெனில் காலம் எல்லாவற்றையும் தனித்தன்மையோடு துலங்குவதில்லை. புலப்படாத சல்லடையொன்று ஞாபகங்களைச் சலித்து உமிகளாக்கிக் கீழே தள்ளிவிடுகிறது. மீந்து மேலே நினைவுகளாகத் தங்கிவிட்டவை தானியங்கள் தானா? அல்லது அதுவும் குப்பைகளா? இது போன்ற வினாக்களைக் குறித்து காலத்திற்கு ஒரு கவலையும் இல்லை. கொஞ்சம் யோசனையை நீட்டினால் அவள் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறாள். இன்னும் சரியாக நினைவுகூர வேண்டுமென்றால் அவள் முன்பு சிறிது காலம் கணவன் என்கிற ஒரு மனிதனோடு வந்து போயிருக்கிறாள் என்பதும் உறைக்கிறது. வியாபாரத்தில் அவ்வளவு சுத்தமானவள். குற்றங்குறை காணமுடியாது. அவள் சுமந்து வரும் கூடைகள் முன்னர் பெரியவையாக இருந்தன. பின்னர் அது அடுத்தடுத்தக் காலகட்டங்களில் மெல்ல மெல்ல சிறியனவாக மாறி விட்டிருக்கின்றன, அதற்கேற்றாற் போல காலத்தால் அவளின் ரூபம் ரொம்பவும் மாறி தான் போயிருக்கிறது.
நல்ல உருவமுடையவள். நாட்கள் செல்ல செல்ல பலவீனமாகி வருகிறாளோ என்று நினைக்கத் தோன்றவில்லை. ஏனெனில் வைராக்கியம் ஊடுபாவிக்கிடந்த அவளின் உடலமைப்பில் சுமடு சுமந்து அலைந்து உடம்பு இறுகியிருந்தது. அவள் சில கிழமைகளில் வியாபார அனுசரணைக்கேற்றபடி கனமான கூடையை தலையில் சுமந்தபடியே ஒன்றிரெண்டு சாக்குப் பைகளையும் கைகளில் இழுத்துத் தூக்கி வருகிறாள். அது ஒரு தாய் மிருகம் தனது குட்டியைக் கவ்வியபடி நிமிர்ந்து நடப்பதுபோல இருக்கும்.
ஒரு தெருவில்தான் எவ்வளவு காட்சிகள் மலர்ந்து கொண்டே இருக்கின்றன. நீண்ட நெடிய காலமாக இங்கு காலை,மாலை தவறாமல் வரும் பால்காரர், ஒரு மீன்காரி, வாரம் ஒருமுறை வருகிற ஒரு அவல்காரி, மாதம் அல்லது இரண்டு மாதத்துக்கொருமுறை பழைய பொருட்கள் எடுக்க வரும் ஒரு முதிய மனிதர், தர்மம் கேட்டு விடாப்பிடியாக எல்லா செவ்வாய்கிழமையும் வந்துவிடும் ஊனமுற்ற மனிதர் என ஏராளமான முகங்களை இந்த தெருவில் காணலாம். தெருவென்றால் சின்ன தெருவெல்லாம் கிடையாது இந்த கௌமாரியம்மன் தெரு. ஒரு முனையிலிருந்து இன்னொரு முனையை எளிதில் கண்டுவிடமுடியாது என்பது போல நீண்டு அதற்கேற்ற அகலத்துடன் இருக்கும்.
நாச்சியாளுக்கு நெஞ்சம் இரணமாகக் கிடந்தது. வட்டமானப் பொட்டைத் தவிர அவள் ஒரு அலங்காரமும் செய்திருக்கவில்லை. புடவையைக்கூட சும்மா சுற்றியிருந்தாள். அவளுக்கு இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு இன்றுதான் கால் ஊன்ற முடிந்தது. இடுப்பும் அடிவயிறுமாக பச்சப்புண்போலவும் உஷ்ணமேறிக் கொதிப்பது போலவுமிருந்தது. அவள் கொஞ்ச நேரம் அறையிலுள்ள நிலைக்கண்ணாடியில் தன்னைக் கூர்ந்து பார்ததாள். புளிச்செனத் துப்பினாள். தன் முகத்தின் மீதிருந்து எச்சில் ஒழுகிவருவதைப் பார்த்தபடி நின்றிருந்தாள். சட்டென்று கால்முட்டுக்குமேலே தொடை நரம்புகள் ஊசிக் கொண்டு குத்தி இழுத்ததுபோல வெடுக்கென்று வலித்தது. மெல்ல நகர்ந்தவள் அவஸ்தைகளோடு வாசலில் நின்று அதுவும் பக்கவாட்டுத் தூணில் சாய்ந்தபடி நின்று நீண்ட தெருவைப் பார்த்து மனதை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தாள். கெளமாரியம்மன் காற்று வீசிவருவதை சுவாசிப்பதில் ஒரு சுகமிருப்பதாகத் தோன்றியது. முழுக்க இழுத்து சுவாசித்தவளுக்கு அடிவயிறு காற்றால் நிரம்புவதுபோல இருந்தது. கூர்ந்து நோக்கியவளுக்கு தெருவின் கடைசி முனையிலிருந்த கௌமாரியம்மன் கோவிலும் அந்த தெருவும் மனிதர்களும் வண்டிமாடுபோல சுமடெடுத்து நடந்துவரும் மனோகரியும் மெல்ல மெல்ல நாச்சியாளுக்கு வலிநிவாரணிகளாக மாறியிருந்தன.
அவன் இடுப்பில் நாலைந்துமுறை மாறி மாறி மிதித்திருந்தான். அவன் கைகளிலிருந்தது எதுவென்று தெரியவில்லை அவன் மிதித்தலில் நிலைகுலைந்தத் தருணத்தில் வீசியடித்த அடியில் இடதுபக்க காதுக்கு மேலாக மண்புழு போல ஒரு கீறல். அந்தக் கீறலில் இருந்து வழிந்தோடிய குருதி. குருதிகண்டு பயந்தோடியிருப்பான் போல, இன்னும் அவன் வரவில்லை. தெருவைப் பார்க்கப் பார்க்க ஆறுதலாக இருக்கிறது. மனோகரி கழுத்து நரம்புகள் புடைக்க நடந்து வருகிறாள். பத்திருபது ஆண்டுகளாவது அவள் இப்படி நடப்பது இப்போது பட்டவர்த்தனமாகப் புரிகிறது. யாருக்காக நீ இப்படி நடக்கிறாய் எனக் கேட்டுவிடலாமா? எவ்வளவோ காலமாக இந்த மனோகரிபற்றி எதுவும் தெரியாதது குறித்து இன்று நாச்சியாளுக்கு கேள்விகளாகவே இருந்தது. தெருவில் எல்லோருக்கும் கதைகள் இருந்தன. செவ்வாய்க்கிழமை பிச்சைக்காரனுக்கு கூட ஒரு கதை சொல்லியிருந்தார்கள். அவன் பெரிய பணக்காரன் என்றும் குடும்பத்தினர் எல்லாம் செல்வச் செழிப்பில் இருக்கிறார்கள் என்றும் இவன் கொழுப்பெடுத்துப் பிச்சை எடுக்கிறான் என்று ஒரு கதை. வீட்டு வாசலில் நின்று அவன் எழுப்பும் ஈனசுவரமான குரலில் இந்த கதைகள் பரிதவித்துவிடுகின்றன.
மனோகரி கதைகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறாள். அவளிடம் காய்கறிகள் அல்லாது வேறு நடப்புகளைக் குறித்து யாதொரு கதையுமில்லை. அவளுக்கு குடும்பம் இருக்கிறதா? பிள்ளைகள் இருக்கிறார்களா? எதுவும் தெரிந்து கொள்ளவில்லை. அவசியத்துக்கான காய்கள் வாங்குவது, எப்போதாவது கீரை புதிதுபோல ஈர்க்கும் போது ஒன்றிரெண்டு கட்டுகள் வாங்கிக் கொள்வதல்லாது அவளிடம் ஒரு உறவுமில்லை. நாள் தவறாமல் இந்த தெருவில் புழங்கும் மனோகரிக்கு கதையில்லாதது அதிசயமானதுதான். நாச்சியாள் வலியோடு வாசலில் நின்று யோசித்தாள். மனுசிகளுக்கு கதையில்லாமல் இருக்குமா என்ன? அரசல்புரசலான கதைகள் என்பது வேறு அசல் கதை என்பது வேறு. சொந்தக்காலூன்றி வேலை செய்யும் பெண்கள் என்றால் அந்த கதைகளில் எப்போதும் அவளது நடத்தை தான் கச்சாப்பொருளாக இருக்கிறது. அப்படி தான் எத்தனை எத்தனை கதைகள் உலவுகின்றன.
சித்தாளு வேலைக்கு வந்த பூங்கோதை வஞ்சனையில்லாமல் எல்லோரோடும் படுத்திருக்கிறாள் என்று தெருவில் ஒரு கதையிருந்தது.
“கொழுப்பெடுத்த நாறப்பயலுக… நாய்மாதிரி நாக்கத் தொங்கப்போட்டுட்டு அலைவானுக…. எரிஞ்சி துரத்தினா… பொம்பளைக்கு பத்து கதை வைப்பான்… போடா மயிரேன்னு போயிர வேண்டியதுதான்… போக்கத்த ஆம்பள சண்டைபோட்டா ஆத்திரத்துல… நல்ல வீட்டுப் பொம்பளைக்கே நாப்பது புருஷன் கூட்டிப் பேசுவாய்ங்க… என்னய மாதிரி வேல சோலின்னு தெருவெறங்கி போறவளுக்கு எல்லாவனும் மாப்பிளைக் கூட்டி விடத்தான் செய்வான்… மயிருபோச்சின்னு போவலேன்னா… பொழைக்க முடியுமா…”
பூங்கோதை சொல்லிவிட்டு வெத்திலையை புளிச்செனப் துப்புகையில் பன்னீர் தெளித்தது போல எச்சில் பறக்கும். பூங்கோதை நடையில் ஒரு ஔித் தெறிப்புபோல இருப்பாள். பல ஆண்டுகளாகிவிட்டது. அதிசயம்போல இந்த தெருவில் நடமாடிக் கொண்டிருந்தவளைக் காணவில்லை. ஊர்மாறிப் போயிருப்பாள் அல்லது பிழைப்புக்காக இடம் பெயர்ந்திருப்பாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் தெருவில் நாலுநாள் பேச்சில் எல்லாம் கடந்துபோகும்.
நாச்சியாளுக்கு லேசாக தலைச்சுற்றுவதுபோல இருந்தது. அவள் தூணை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். தலையில் பயப்படும்படியான பெரிய காயமில்லை சரியாகிவிடும் என்று டாக்டர் அப்பாவிடம் சொல்லியிருந்தார். அப்பாவுக்கு அவனின் மீது முதலில் இருந்த ஆத்திரம் இப்போது இல்லை. குறைந்து வருகிறது. முதலில் அவன் ஓடிமறைந்த வேகத்தில் அப்பாவும் அக்கா பூரணியின் புருஷனும் அவனைக் கண்டந்துண்டமாக வெட்டணும் என்றனர்.
“பொம்பளகிட்ட வீரத்தைக் காட்டிருக்கான் பேடிப்பய…. தாலிகட்டிட்டா எல்லா சண்டியர்த்தனமும் பண்ணுவானா….”
பேச்சின் எல்லா வகைகளையும் நாச்சியா கேட்டும் பார்த்தும் வருகிறாள். மறுநாள் அப்பாவின் பேச்சு இப்படியானது.
“சரிம்மா…. எங்கிட்ட போன்பண்ணி அழுகுறான்… தப்பு நடந்திடுச்சு… புத்தி பெசகிடுச்சு மாமான்னு… கண்ணீர் வடிக்கிறியான்… என்ன பண்றது…”
எப்படியும் நாளை அல்லது அடுத்தநாளுக்குள் அவன் வீட்டுக்குள் வந்துவிடுவான். குற்ற உணர்வில் தவிப்பவன் போல முகமிருக்கும். சட்டையை உருவிப் போட்டுவிட்டு மினுமினுப்புடன் எழுந்து நிற்கும் சர்பம் போல அவன் மீண்டும் மிடுக்கானவனாக மாறி வார்த்தைகளில் விஷத்தைத் தெளிப்பான். நேற்றிரவு கடைசியாக பூரணியின் புருஷன் பேசியபோது
“இன்னொருவாட்டி எதாவது பிரச்சனைன்னா…. அவன் நல்லா பாடம் படிப்பான்…” என்றார்.
“பாடம் யாரு கத்துக் கொடுப்பா..” எனக் கேட்டு அவரையே பார்த்தபடி நின்றாள்.
அவரிடம் பதில் இல்லை. மௌனங்களுக்கு எண்ணிலடங்காத அர்த்தமிருக்கிறது. நாச்சியாள் மேலும் காற்றை இழுத்து சுவாசித்தாள். காற்றில் கௌமாரியம்மன் வாசனை பரவியிருந்தது. நாச்சியாளுக்கு ஒவ்வொன்றாக காட்சிகள் ஓடுகின்றன.
“பொட்டச்சிக்கு வாய்நீண்டா ஆம்புளைக்கு கை நீளத்தான் செய்யும்…” ஈரப்பதமற்ற அம்மாவின் வார்த்தைகள் ஒரு மாயச்சுழல் போல ஆக்கிரமிக்கிறது. அவன் அம்மாவும் அப்படித்தான் வார்த்தைகளால் உருவங்களை உடைக்கிறாள்.
“உம்பொண்டாட்டிக்கு… கால்ல விலங்கு போட்டு விடணும்டா…” சுவர்கள் அதை எதிரொலித்து மிரட்டுகின்றன.
“எம் மசுருல போட்டு விடு…” தெருப் பார்த்தபடி நின்ற நாச்சியா அனிச்சையாக மெல்ல முனகினாள். அங்கு யாருமேயில்லை. தலை தூக்கியபோது எப்போதும் உடனிருக்கும் காற்று அவளைக் குளிர்விப்பது போல அவளிடம் வந்தது.
ஒரு வாரம் பத்து நாட்களில் நாச்சியாள் இயல்புக்குத் திரும்பியிருந்தாள். அவளுக்கு காயங்கள் குணம்பெற்றிருந்தாலும் மனம் அவமானத்தால் குறுகிப் போயிருந்தது. நடுத்தர வயது கடந்து கம்பீரத்தின் முகமாக வலம் வரும் தன்னை உடனிருப்பவன் மூர்கத்தனமாகத் தாக்கிவிட்டு எதுவுமே நடக்காதது போல சுற்றி வருகிறான். அவனின் சகஜங்களிலோ, அதிகாரச் சரடுகளிலோ ஒன்றும் குறைந்து விடவில்லை. தெருவில் எப்போதோ கேட்ட பூங்கோதையின் சொற்கள் ஒரு காட்டாறு போல தன் முன்னால் ஓடுவதாக அவளுக்குத் தோன்றியது. அக்காட்சியில் மனம் லயித்த போதுதான் வாசலில் இன்று மனோகரி கூடையைத் தலையில் சுமந்தபடி நின்றிருப்பது மங்கலாகத் தெரிந்தது. சுரைக்காய் கொண்டு வந்திருப்பாள் என படியிறங்கி மெல்ல தெருவுக்கு வந்தவள் வழக்கத்தில் இல்லாமல் அவளிடம் பேச்சுக் கொடுத்தாள். மனோகரி அன்றே நாச்சியாளின் வித்தியாசத்தைக் கண்டு கொண்டு விட்டாள். வலி நிறைந்து அவள் நிற்பதைப் பார்த்த பின்னர் தான் சுரைக்காயை அவள் பரிந்துரைத்தாள். அடிவயிற்று வலிக்கும் இரத்தக்கட்டுகளின் கரைதலுக்கும் இன்னும் உள்அவயங்களின் நலனுக்கும் உகந்த காய்கறி என்பதை அவள் சொல்லியிருந்தாள்.
மனோகரி காய்கறியைத் துல்லியமாகச் சொல்வதிலிருந்து நாச்சியாவின் கதை தெருவில் பரவி அது மனோகரி வரைக்கும் வந்திருப்பது மனசுக்கு தெரிந்தது. கதைகள் இப்படித்தான் போலும். ஆண் கதைகளைவிட பெண்கதைகளுக்கு தனித்துவமான சிறகுகள் இருக்கின்றன. மனோகரியின் ஆறுதல் சாடைகள் மேலும் வலிக்கத்தான் செய்தது. பிறகு அவள் சகஜமாகப் பேசினாள். முன்பு அவள் இப்படியெல்லாம் பேசியதில்லை என்பதைவிட முன்பு அவளிடம் பேசிக் கேட்பதற்குக் காதுகளை சாய்த்து நாச்சியாள் நின்றதில்லை. காலம் ஒவ்வொன்றையும் அதனதன் கணங்களில் செய்து விடுகிறது.
மனோகரி அடுத்தடுத்த நாட்களில் அவளின் வருகையில் நாச்சியாளின் வீட்டில் நின்று நிதானமாகப் போகக்கூடியவளாக மாறியிருந்தாள். இதன்பிற்பாடுதான் மனோகரியின் பரிதாபமான கதை அல்லது கதைகள் நாச்சியாவின் காதுகளை வந்தடைந்தன.
மனோகரிக்கு இரண்டு பெரிய பெண்மக்கள் இருக்கிறார்கள். அவர்களை காய்கறி விற்கும் வருமானத்திலும் இடைவிடாத உழைப்பிலும் உயர்ந்த கல்வியில் சேர்த்திருப்பதையும் இரண்டு கால்களும் முறிந்து படுக்கையில் கிடக்கும் கணவனையும் மனம் கோணாமல் தனது உழைப்பிலேயே பராமரிக்கிறாள் என்றும் மனோகரி குறித்த உயர்ந்த கதைகள் வந்து சேர்ந்திருந்தன. கூடையில் காய்கறி சுமந்து வரும் சாதாரண மனோகரி நாச்சியாவுக்கு ஆச்சரியமூட்டும் மனுசியாகத் தோன்றினாள். அவளுக்கு திடீரென தெருவிலுள்ள எல்லோரின் கதைகளையும் எல்லோரும் என்றால் ஆடு, மாடு, நாய் முதலான உயிரிலிருந்து சுவருக்கும் திண்ணைகளுக்குமான கதைகளையும் கூட தேட வேண்டும் போல இருந்தது.
செவ்வாய்க் கிழமை பிச்சைக்காரன் முன்புபோல இல்லாமல் திடகாத்திரம் குறைந்தவனாக வருகிறான். இப்போது அவன் ஒரு ரூபாயையும் சலிப்புடன்தான் வாங்குகிறான். ஐந்து ரூபாய் போட்டால் அவன் முகம் கொஞ்சம் மலருகிறது. அவன் பணக்காரன் என்ற கதை உண்மையில் உண்மையானதா? அல்லது யாரேனும் இட்டுக்கட்டியதா? என்பதும் தெரியவில்லை. அவன் செவ்வாய்கிழமை அல்லாத பிறநாட்களில் வெவ்வேறு ஊர்களில் பிச்சை எடுக்கிறான் என்றும் ஒவ்வொரு நாளும் போதுமானளவுக்கு வரவு இல்லாமல் போகமாட்டான் என்பதை மனோகரி சொல்லியிருந்தாள். இதற்கிடையில் நாச்சியாளின் புருசன் மீண்டும் கையை சொடுக்கியபடி நடக்கிறான். அவன் இன்னொரு பாய்ச்சலுக்குத் தயாராகக்கூடும் என்பதைப் புரிந்திருந்தாள். நாச்சியாளுக்கு மகளை இங்கிருந்து கிளப்பி உயர் கல்வியில் சேர்த்துவிட வேண்டும் என்ற நினைப்பில் மூழ்கியிருந்தாள். எனினும் கண் முன் நடக்கும் காரியங்கள் எதுவும் அவள் கண்களிலிருந்து தப்பவில்லை.
இன்று அவள் செவ்வாய்கிழமை பிச்சைக்காரனுக்கு ஒரு புதிய இருபது ரூபாய் நோட்டை தட்டில் போட்டிருந்தாள். அவன் பிரகாசமாகியிருந்தான்.
“மவராசி நல்லாருப்ப….” அவன் நடை உசந்திருந்தது. மனோகரி இப்போது நிறைய பேசுகிறாள். அவளுடன் பேசுவதே நாச்சியாளுக்கு ஆசுவாசமளிப்பதாக இருந்தது. ஏதோவொன்று அவளுடன் தன்னை பிணைத்து விட்டதோ என நினைத்தாள். அவள் சுமையோடு தள்ளாடியபடியே வரும் காட்சி மனதிற்குள் வந்தது. கூடவே அவளது கால்களுடைந்த கணவனின் கதையும். மனோகரிக்கு தெருவில் காய்கறியோடு தள்ளிக் கொண்டு வர ஒரு வண்டி செய்து கொடுக்கலாமா…? என்று யோசித்ததோடு மட்டுமல்லாமல் அதன் செலவுகளை விசாரிக்கவும் செய்தாள். பத்திருபதினாயிரம் ரூபாய் வரை வரும் என்றார்கள். நாச்சியாள் அதனை மனோகரிக்காக செய்து கொடுக்க தீர்மானித்தாள். செவ்வாய்கிழமை தோறும் பிச்சைக்காரனுக்கு இருபது ரூபாய் என்பதையும் வழமையாக்கினாள். அதைப் பார்த்ததும் அவன் பொங்கினான்.
“என்ன திமிராடி… பிச்சக்காரனுக்கு இருபது ரூபா… போடுற..” எகிறியபடியே வந்தான்.
“பேசாம..போயிடு… இல்லாட்டி நூறு ரூபா போடப் போறேன்..” குரலில் இருந்த துணிவு அவளுக்கே வியப்பாக இருந்தது.
“காய்கறிகாரிக்கு வண்டி ஏற்பாடு பண்ணப்போறதா… பேச்சு இருக்கே…. சரியில்லடி..’ நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
நாச்சியாள் காதையும் வாயையும் பொத்திக் கொண்டு மாடிக்குப் போய்விட்டாள். ஆகாயத்தில் மேகம் அவளை நோக்கி வருவதைப்போல இருந்தது.
மனோகரி இன்று கொஞ்சம் பெரியக்கூடையை சுமந்தபடி தள்ளாட்டமாக நடந்து வந்தாள். காய்கறியின் அவசியம் இருக்கிறது இல்லை என்பதைக் கடந்து அவளிடம் தாராளமாக வாங்கிக் கொண்டே கொஞ்சம் பேசினாள். நாம் திடீரென ஒன்றின் மீது ஈடுபாடு கொள்ளும்போது அது நம்மை பல வடிவங்களில் நெருங்குகிறது. மனோகரியின் கதையை தேட நெருங்கியபோது யாரோ எவரோ தெரியாது எல்லோரும் காதுபட மனோகரியின் கதையைப் பேசுகிறார்கள். நேற்று வீட்டுக்கு வந்திருந்த பூரணிஅக்கா பேச்சினிடையே மனோகரியின் முழுப்பெயர் லலிதமனோகரி என்றாள். எவ்வளவு அழகான பெயர். நாச்சியாளுக்கு வியப்பாக இருந்தது. பூங்கோதையின் பெயரிலும் கூட அவளுக்கு அந்த வியப்பு இன்னும் மாறியிருக்கவில்லை. பூங்கோதை இப்போது பத்திருபது வேலையாட்களை வைத்து தனியாக கோலேச்சுவதாக ஆக்கர் எடுக்க வந்த அய்யம்பெருமாள் பேசிக்கொண்டார். கூடவே மனோகரியின் கணவனின் இரண்டு கால்களும் முறிந்த கதை என்று ஒன்றை அய்யம்பெருமாள் சொல்லியிருந்தார். பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் உயரமான கட்டிடப் பணியில் இருந்தபோது கீழே விழுந்ததில் கால்கள் இரண்டும் முறிந்துபோனதாக சொல்லியதை பூரணி மறுத்தாள். மனோகரியின் கணவன் கட்டிடவேலைக்குச் சென்றவனில்லை என்றும் அவன் இவளோடு காய்கறி வியாபாரந்தானே செய்தான் என்றும் பின்னர் அன்று மாலையே யாரோ சொன்னதாக மனோகரியின் கணவன் லாரி மோதியதில்தான் கால் முறிந்ததாக போனில் சொல்லியிருந்தாள்.
தெருவுக்குள் ஒரு மனிதனைப் பற்றியும் மனுசியைப் பற்றியும் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நிறைய கதைகளிருப்பதை நாச்சியாள் விநோதமாக யோசித்துக் கொண்டிருந்தாள். மனோகரி பற்றி மேலும் மேலும் கதைகள் வந்து கொண்டிருந்தன. நாச்சியாளுக்கு கதைபற்றிய கவலைகள் போய் உண்மையில் அவள் வியப்புக்குரியவளாகத் தெரிந்தாள். அவளிடம் எது கேட்டாலும் ஒரு அலட்டலுமிருக்காது.
“ம்ம் அப்படியே போகுது …” என்பாள்.
நாச்சியாள் ஒரு விருப்பத்தோடு மனோகரி வீட்டுக்கு எதிர்பாராமல் போய்வரலாம் என அக்கா பூரணியிடம் சொன்னதும் அவள் விரும்பவில்லை.
“நான் பெரிய வீட்டு மருமகன்னு…ரொம்ப அடைபட்டுப் போயிட்டேன்… அங்க நிக்காதே … சரிசமமா பேசாதே… சிரிக்காதே… அந்தஸ்த்து கௌரவம்னு … என்னய யாரெல்லாமோ சிறையில வச்சிட்டாப்புல…. நான் இப்போ எல்லார்ட்டயும் பேசுறேன்… கேட்கிறேன்… எனக்கு சந்தோஷமா இருக்கு…”
நாச்சியாள் பேசப் பேச பூரணி சம்மதித்துவிட்டாள். மனோகரியின் வீட்டை ரகசியமாக விசாரித்து வைத்துவிட்டு திடுதிப்பென போய் நிற்க வேண்டுமென நேரம் குறித்து வைத்திருந்தார்கள். திட்டமிட்டபடி அது சாத்தியமாயிற்று.
மனோகரியின் வீடு உண்மையில் ரொம்ப தூரத்திலிருந்தது. அவள் இங்கிருந்து கௌமாரியம்மன் தெருவுக்கு இந்த சுமைகளைச் சுமந்து எப்படி வருகிறாள் என்பதே நாச்சியாளுக்கு மலைப்பாக இருந்தது. ரொம்ப சாதரணமான வீடு இரண்டு அறையில் ஒன்றில் அவள் கணவன் படுக்கையிலிருந்தான். அவன் படுத்திருக்கும் அறையிலிருந்து சகித்துக் கொள்ளும்படியாக துர்நாற்றம் வந்து கொண்டிருந்தது. இன்னொரு அறையில் அவளின் இரண்டு மகள்களின் வாசம். மூத்தவள் காவல்துறையில் ஒரு தேர்வு எழுதியிருப்பதாகச் சொன்னாள். முன்பக்கம் சுமாரான அளவில் தனித்து இடமிருந்தது. அதில் ப்ளாஸ்டிக் சேரும் சில பொருட்களும் சிதறிக்கிடந்தன.
கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு கொண்டுபோயிருந்த பணத்தை வலுக்கட்டாயமாக அவளிடம் கொடுத்துவிட்டு விடைபெற்று வந்த அந்த இரவில் நாச்சியாளின் மனம் அவ்வளவு சாந்தமடைந்திருந்தது.
மறுநாள் அது ஒரு செவ்வாய்க்கிழமையும் கூட. ரொம்ப நேரமாக காத்திருந்தாள். செவ்வாய்கிழமை பிச்சைக்காரன் வரவில்லை. அவனுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. கடும் மழை வெயில் ஒன்றிலும் முடங்காதவனுக்கு இன்று என்னவானது? என்று யோசனையாக இருந்த போதுதான் மனோகரி வந்தாள்.
“குடிக்க கொஞ்சம் தண்ணி தா தாயி..’” அமர்ந்து பெருமூச்சு விட்டாள்.
இவ்வளவு காலத்தில் மனோகரி ஒருமுறை கூட தண்ணீர் கேட்டதில்லை. திண்ணையில் கூடையை வைத்துக் கொண்டு நடையில் அமர்ந்த லலிதமனோகரி சொன்னாள்.
“தாயி… என் வீட்டுக்காரனோட ரெண்டு காலையும் நாந்தா உலக்கையால அடிச்சி முறிச்சுப் போட்டிருக்கேன்…. பதினஞ்சி வருசமாச்சு… ” என்றபடி எழுந்தாள்.
“செத்த இந்த கூடைய தூக்கிவிடுத்தா… “
மனோகரி சும்மாடை தலையில் வைத்தபடி பார்த்தபோது பதிலொன்றும் சொல்லாமல் கூடையைத் தூக்கிவிட்ட நாச்சியாள் விக்கித்துப் போய் நின்றிருந்தாள். நடந்துபோகும் அவளைக் கூப்பிட மனோகரி என்று அழைத்தபோது கூடையோடு நின்றவள்,
“ஆத்தா எம்பேரு… மனோகரியில்ல… அது நானா சும்மா வச்சுக்கிட்டது. உண்மையான பேரு கௌமாரியம்மா…”
அவள் லேசாகப் புன்னகைத்துக் கொண்டு நடந்தாள். கோவிலுக்கு அருகில் அவள் கூடை மட்டும் மிதந்து செல்வது போலத் தோன்றியது. சட்டென்று திரும்பி தாராளமாகவே சிரித்தாள். அச்சிரிப்பு ஔித்தெறிப்பு போல இருந்தது.
எழுதியவர்

-
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர். வணிகவியலில் பட்டப்படிப்பும், உளவியலில் பட்டமேற்படிப்பும், மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பும் பெற்றவர். ஊடகவியலாளரான இவர் வார இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் கதை,கவிதை,கட்டுரை, நேர்காணல்கள் என எழுதி வருகிறார். அம்முராகவ் என்ற புனைப்பெயரில் ஆதிலா, ஒளவையின் கள் குடுவை என இரண்டு கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
சித்ரா சிவன் எனும் இயற்பெயரிலேயே
"பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை. உண்மை முனங்கினாலே போதும்." என்ற நேர்காணல் தொகுப்பும், "அத்தினி" எனும் நாவலும் வெளிவந்துள்ளது.
இவரது அத்தினி நாவல் 'ஸீரோடிகிரி இலக்கிய விருது' பெற்றுள்ளது.
இதுவரை.
கதைகள் சிறப்பிதழ் 202523 January 2025ஒளித்தெறிப்பு
உங்க கவிதைகளைப் போலவே, இந்த கதையும் இருக்கிறது. கதைகளால் ஆனது இவ்வுலகு. நமக்கு புகட்டப்படும் கல்வியில், வரலாறு பாடம் ஒரு கதையே. அதே போன்று மாரல் சயின்ஸ்.
நம்மை சுற்றி நடப்பைகள் தான் கதைகள். அதை உற்று நோக்கி கதைசொல்லியாக மாறுபவர்கள் எழுத்தாளர்களாக, இயக்குனர்களாக மாறுகிறார்கள். இந்த வகையில் சேராமல் கிராமங்களில் அமர்ந்து பேசும் போது காதிற்கு இனிமையாக சொல்பவர்களாக இருக்கிறார்கள்.
நம்முடன் புழங்கும் மனிதர்களிடையே நிறைய கதைகள் இருக்கும். அக்கதைகளே எழுத்தாக கொண்டு வந்து சில கதைகளை பரிசு பெறும் அளவு வளர்ந்து வரும் எனதருமை நாச்சியார் சித்ரா சிவன் இன்னும் இடைவெளி விடாமல் நிறைய எழுத வேண்டும் என மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.
லலித மனோகரிகளின் பலமே கௌமாரிகளாக இருப்பது தான். அபாரமான கதை அம்மு. வாழ்த்துகள்.