
இன்னும் பஸ் வரவில்லை. காத்திருப்பது கொஞ்சம் அலுப்பைத் தருகிற விடயமாக மாறிக்கொண்டுவந்தது.
நெடிய காத்திருப்புகள், அலுப்பூட்டுகின்ற இடங்கள், எதுவுமேயில்லாத விடயங்கள் எல்லாமே மிகுந்த ரசமாகத் தெரிகிற நிலாக் காலம் அது. வெளியுலகம் அதன் பாட்டில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் எங்கள் இருவருக்குமோ நேரம், தேன் நிறைந்த கோப்பைக்குள் ஏறமுடியாது தத்தளிக்கும் எறும்புபோல அப்படியே உறைந்திருந்தது.
திருமணமாகி இரு வருடங்கள் ஆகியிருந்தன. தோள் அழுத்தும் பெரும் பொறுப்புகளோ சுமைகளோ இல்லை. துணைவர் மருத்துவப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்துவிட்டு ஆரம்பப் பயிற்சியை எதிர்பார்த்திருந்தார். நான் முன்பள்ளிக் கல்வி சம்பந்தமான சில பயிற்சி நெறிகளை நடாத்திக் கொண்டிருந்தேன்.
ஒரே ஊர். இருவர் வீடுகளும் ஒரு பத்து நிமிடம் பொடி நடையாகப் போய் வரும் தூரத்தில் இருந்தன. தனி வீடு போக நிரம்ப ஆசைதான். ஆனால் அந்தளவுக்குப் பொருளாதாரப் பின்புலமோ வேறு வகை ஆதரவுகளோ அப்போதைய நிலைமையில் இருக்கவில்லை. இரு வீட்டிலும் மாறி மாறி இருந்துகொண்டிருந்தோம். எங்களுக்கென்று இரண்டு வீட்டிலும் ஒதுக்கித் தந்த அறைகள் இருந்தன. ஆனால் அங்கு முழுமையான பிரைவஸியையோ சுதந்திரத்தையோ எதிர்பார்க்க முடியாது. சிரிப்பும் கிசுகிசுப்பான உரையாடல்களும், எதிர்காலத்துக்கான சிறு கனாக்களும் ஆங்காரமும் கோபமும் கண்ணீரின் பிசுபிசுப்பும் எல்லாமே அறைச்சுவர்களில் உறைந்திருந்தன.
புத்தளத்தில் ஒரு மகளிர் கல்லூரியில் முன்பள்ளிக் கல்வி சார்ந்து ஒரு முழு நாள் ஒர் அமர்வை செய்து தருமாறு நிர்வாகம் கேட்டிருந்தது. 200 மாணவிகள் கலந்து கொண்ட அமர்வு தொடர்ந்து நடந்தது. இடையில் மதிய போசன இடைவேளை. பருப்பும், இறைச்சிக் கறியும், சுண்டலுமாக எளிமையான ஆனால் சுவை மிகுந்த உணவு. பிற்பகல் சுகாதாரம் சார்ந்த அமர்வை துணைவர் நடாத்தினார். மாலைத் தேனீரோடு சான்றிதழ் வழங்கும் வைபவம் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பாந்தமாக நடந்து முடிந்தது.
புத்தளத்தின் வெப்பத்துக்கென்று ஒரு சொந்த மொழி உண்டு. சூரியன் மறைந்து நீண்ட நேரமாகிறது. ஆனால் அதன் வெப்பம் காற்றில் இன்னுமே நீடித்திருந்தது. பூமி ஒரு சூளையாக மாறியிருந்தது. தண்ணீர் கொஞ்சம் கடினமான தண்ணீர். மண் செக்கச் செவேலெனச் சிவந்திருக்கும் மருதாணியிடும் நாளில் சிவக்கிற மணப்பெண்ணின் முகம்போல.
புத்தளம் என்றவுடன் அகதிப் பிரச்சினை நினைவுக்கு வந்து விடுகிறது.
1990 இல் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு லட்சம் முஸ்லிம்களை ‘வடக்கை விட்டு வெளியேறு அல்லது மரணத்தைச் சந்தி’ என்று 48 மணி நேரக் கெடு வைத்தார்கள். உடைமைகளையோ பெறுமதியான பொருட்களையோ கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. வெறும் 300 ரூபாய்க் காசுடன் உயிரைப் பிடித்துக் கொண்டு வெளியேறிய மக்கள் இலங்கை முழுவதும் விரவிச் சென்றார்கள். புத்தளம் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு இரண்டாவது வீடு.
புத்தளத்துக்கும் எனக்கும் மிக நெருங்கிய பந்தம் உண்டு. ஒரு தருணத்தில் இதே கல்லூரியில் நான் படிக்க வேண்டும் என்று புத்தளத்துக்கு முழுசாக வீடு மாற்றிக் கொண்டு வரக் கூட உம்மாவுக்கும் வாப்பாவுக்கும் ஒரு யோசனை இருந்தது. பல காரணங்களால் அது கை கூடவில்லை.
அஸருக்குப் பிறகு அந்தி சாய்ந்து கொண்டிருக்கிறது. இரவாகும் முன் ஊர் போய் சேர வேண்டும் என்ற உந்துதல் இருவருக்கும் இருந்தது.
புத்தளத்திலிருந்து குருணாகலைக்குச் சென்று அங்கிருந்து மாவனல்லைக்கு பஸ் எடுக்க வேண்டும்.
பஸ் பிரயாணங்களில் பொங்கி வழியும் வியர்வையைத் துடைத்தபடி கதைத்துக்கொண்டே பயணங்கள் நீளும். வீடு வந்து சேரும்போது என் ஹிஜாப் ஒரு புறம் நான் ஒரு புறமாக ஆகிவிடும். கைவிரல் நகக்கண்களில் கறுப்புப் படிந்திருக்கும். கதைகள் முடியாது நீளும். எங்கள் இருவருக்குமே கதைப்பது எப்போதுமே பிடித்தமான விடயம். வாப்பாவிடம் ஒரு கரவன் வேன் இருந்தது. திருமணத்துக்கு முன்னர் எல்லாப் பயணங்களும் அந்த வாகனத்தில்தான் சென்றிருக்கிறேன். நீண்ட காலம் இருந்ததால் அந்த வேன் ஒரு குடும்ப உறுப்பினர் போலாகியிருந்தது.
வேனின் இன்ஜின் எழுப்பும் ஓசையும், ஒவென்று முந்தானையை இழுக்கும் காற்று முகத்திலறைய செல்கிற சிறு பயணங்களும் ஜன்னல் இருக்கையைப் பிடித்து உட்காருவதற்கான முனைப்பும் நினைவில் முகிழ்க்கின்றன. என்னுடைய எண்ணற்ற வேன் பயணங்களில் ஆழ்ந்த அமைதியும், எதிர்காலம் குறித்தான கனவுகளும் துணையாயிருந்தன.
திருமணத்தின் பின்னர் அனேகமாக பஸ்ஸில்தான் பயணங்கள். எனக்கு நீண்ட இறக்கைகள் முளைத்தன. அது ஒரு வித்தியாசமான உணர்வு.
தேய்ந்துபோன இருக்கைகளில் அமர்ந்து கதைத்த முடிவற்ற உரையாடல்கள் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில் இன்னமும் ஒடிக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றும். அதனாலேயே என் வாழ்க்கையில் இலக்கை அடைவதைப் போலவே பயணிப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக மாறியது.
‘இப்போ குருணாகலைக்குப் பஸ் கிடைக்கிறது கஷ்டம்.’ கல்லூரி அதிபர் சொன்னார். இன்றிரவு இங்கு தங்கி நாளை சுபஹோடு போகலாமே.’ கெஞ்சாத குறை.
பவ்வியமாக அவர் வேண்டுகோளை மறுத்துவிட்டு, புத்தளம் பெரிய பஸ் தரிப்பிடத்துக்கு ஆட்டோ ஒன்றில் வந்து இறங்கி விட்டோம்.
அவ்வளவு வாகனங்கள் இல்லை. குருணாகலைக்கு எந்தப் பஸ்ஸும் இல்லை. கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்த பின்னர் எனக்கு கால் கடுக்கத் தொடங்கியது. புத்தளம்-ஆனமடுவ பஸ்ஸொன்றுதான் இருந்தது. ஆனமடுவ புத்தளத்திலிருந்து இருபத்தேழு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிங்களப் பெரும்பான்மை கொண்ட நகரம்.
ஒரு கதையின்படி துட்டுகெமுனு மன்னர் தன்னுடைய பெரும் பலம் பொருந்திய பத்து வீரர்களில் ஒருவனான நந்திமித்திரனுக்கு அளித்த விலைமதிப்பற்ற பரிசுகளில் இந்தப் பிரதேசமும் அடங்குகிறது. அவனது யானைப் படையோடு இங்கு குடியேறியமையால் சிங்களத்தில் அலி மடுவ என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் தமிழ் மொழியின் செல்வாக்கு இப்பகுதியில் அதிகரித்ததால் அலி மடுவா ஆனை மடமாக மாறி பின்னர் ஆனமடுவ என்ற தற்போதைய பெயராக மாறியது.
ஆனமடுவயிலிருந்து குருணாகலுக்கோ அல்லது ஊருக்கோ போய்ச் சேர்க்கிற இன்னொரு பஸ் கிடைக்கும் என்பது எங்களது எதிர்பார்ப்பாக இருந்தது. எப்படியாவது இரவுக்குள் ஊர் போய்ச் சேர வேண்டும்.
பஸ் எங்களைச் சுமந்து ஆனமடுவ நகரத்தில் இறக்கிவிட்டுச் சென்று விட்டது. அந்த பஸ் நிலையம் வெகு ஏகாந்தமாய் இருப்பது போலத் தோன்றியது. நான் கால் மாற்றி மாற்றி நின்று கொண்டிருந்தேன். எங்கள் நிழல்கள் நீண்டுகொண்டிருக்கும் இருளுடன் இணைந்து கொண்டிருந்தன.
எதிர்பார்த்தது போல எந்த வாகனமும் வரவில்லை. என் அலை பேசி எப்போதோ அணைந்திருந்தது. துணைவரின் அலைபேசியும் ‘கீக்’ என்று தனது கடைசி மூச்சை விடவும் அந்தப் பகுதி முழு இருளில் மூழ்கவும் சரியாக இருந்தது. நகர மத்திதான் என்றாலும் பாதை விளக்கு வெளிச்சம் கூட சரிவர இல்லாத இடமது.
தனிச் சிங்களப் பிரதேசம். கருப்பு அபாயா ஹிஜாபுடன் நான் அங்கு இருப்பது என்னை வேறாகக் காட்டியது. எனக்குள் பதட்டமும் அசெளகரியமான உணர்வுகளும் அதிகரித்துக்கொண்டிருந்தன.
இரவு செல்ல செல்ல அச்சத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. பஸ்ஸுக்குக் காத்திருந்த சிறு கூட்டத்தில் ஒவ்வொருவராக வருகிற வேறு வாகனங்களில் ஏறிச் சென்றார்கள். இப்போது கூட்டத்தில் பெண்கள் யாருமில்லை.அது மிகப் பெரியதொரு நிம்மதியின்மையை எனக்குள் தோற்றுவித்தது.
கண்ணெட்டும் தூரத்தில் சந்தியில் ஒரு குழுவுக்குள் சண்டை வெடித்தது. இருளில் கத்திகள் காற்றில் அச்சுறுத்தும் வகையில் மின்னின. இதுவரை நான் எங்குமே கேட்டிறாத சிங்கள தூஷண வார்த்தைகள், வாக்குவாதம் அடிதடி.
என்ன நடக்கிறது?
இன்று உயிரோடு வீடு போய்ச் சேருவோமா… என் சர்வாங்கமும் நடுங்கியது.
என்னுடைய பயத்தைச் சொல்லாது துணைவர் கண்களைப் பார்த்தேன். அவரது உடல்மொழியும் என்னைத் தேற்றப் போதுமானதாக இல்லை.
பஸ் நிலையத்தில் எங்களிருவரையும் இன்னோர் ஆளையும் தவிர இப்போது வேறு யாரும் இல்லை.
அந்த மனிதர் எங்களை அணுகி விசாரித்தார். சிங்களவர், சிறிய கண்கள், எதையும் அனுமானிக்க முடியாத ஒரு முகம். சாதாரண சர்ட் ட்ரெளசர் அணிந்திருந்தார். துணைவர் படித்தது சிங்களப் பாடசாலையில். எனக்கும் சாதாரணமாகச் சிங்களம் பேச வரும். யாழ்ப்பாணத்திலிருந்து விடுமுறையில் வந்த ஒரு இராணுவச் சிப்பாய் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
வடக்கில் யுத்தம் பயங்கரமாக நடந்துகொண்டிருந்த காலமது. பிரதான ஊடகங்களில் வெளிவராத போதும் தமிழ் மக்கள் மீதான இராணுவத்தின் அட்டூழியங்கள், பாடசாலைச் சிறுமிகள் மீதான வன்புணர்ச்சிகள் பற்றியெல்லாம் கசிகிற செய்திகளை நான் அறிந்திருந்தேன்.
உறுதியான ஆனால் மென்மையான தொனியில் பேசிய அவர் தான் ஒரு மரணச்சடங்கில் கலந்துகொண்டுவிட்டு வீட்டுக்குத் திரும்புவதாகச் சொன்னார்.
‘இன்று ஸ்ரைக் போகிறது. பஸ் ஓடாது. என் வீடு ஊருக்குள் உள்ளது. நீங்கள் பயப்பட வேண்டாம். எனது வீட்டிற்கு வந்து ஆறுதலாக யோசிக்கலாம். விரைவில் எனக்குத் தெரிந்த வாகனமொன்று இங்கு வரும்’ என்றார்.
அவரது வார்த்தைகள் தெம்பூட்டினாலும் அவரது இராணுவ அடையாளம் எனது அமைதியின்மையை அதிகரித்தது. சிறிது நேரத்தில் ஒரு லொறி ஒன்று வந்ததும் அந்த மனிதன் கைகாட்டி நிப்பாட்டினார். லொரி சாரதி தெரிந்தவராக இருந்திருக்க வேண்டும். முன் இருக்கையில் நானும் துணைவரும் ஏற பின்னால் பொருட்கள் அடைக்கும் களஞ்சியப் பகுதியில் அந்தச் சிப்பாய் ஏறிக்கொண்டார். இருளில் குன்று குழிகளில் விழுந்து வாகனம் சென்றது. யாருமேயற்ற இரவு. லொறிச் சாரதி சிங்களத்தில் மெதுவாகப் பேச்சுக் கொடுக்க முயற்சித்தான். அவன் சற்றுக் குடிபோதையில் இருப்பது போலவும் தெரிந்தது.
‘இவனை நம்பியா போகிறீர்கள், இவன் பொலீஸில் இருந்து பாய்ந்தவன். உங்களிடம் இராணுவச் சிப்பாய் என்று சொல்லி இருப்பானே, இவன் வீட்டுக்குப் போகாதீங்க, இவன் மோசமான ஆள்,’ என்று சொல்லத் தொடங்கவும் நான் பதட்டத்துடன் ஆயிரம் விடையில்லாத கேள்விகளோடு துணைவர் கண்களைப் பார்த்தேன்.
‘நான் உங்களை நிகவரட்டியில் உள்ள எனக்குத் தெரிந்த ஒரு முதலாளி வீட்டுக்கு கூட்டிச் செல்கிறேன். அவரும் உங்களை மாதிரியே முஸ்லிம்தான், அங்கு நீங்கள் நிம்மதியாகத் தங்கலாம் என்ன?’ என்று தொடர்ந்தான்.
‘என்ன செய்வோம், அப்டி போவோமா?’ என்று அடிக்குரலில் துணைவர் என்னைக் கேட்டார்.
‘இவன் யாரென்றே தெரியாது, எப்படி நம்பிப் போவது, யாரந்த முதலாளி, அந்தாள் எப்படிப்பட்டவர், இவன் சொல்வது உண்மையா?’ எனக்கு வெகு குழப்பமாக இருந்தது.
‘ நாங்க முதல் ஆளோடே போவோம், மனசுக்கு இப்ப அதான் படுகுது.’ துணைவரிடம் மெதுவாகச் சொன்னேன். மனத்துக்குள் இறைவனை துணைக்கழைத்து வேண்டிக்கொண்டேன்.
பத்து நிமிடங்களாகியிருக்கலாம். ஒரு சிறிய உள் பாதையூடாக லொறி நகர்ந்து சென்றது. வேறு வாகனங்களோ மனித வாசனையோ கண்ணெட்டும் தூரம் வரை இல்லை. தூரத்தில் நிலவு எங்களோடு ஒடிவந்துகொண்டிருந்தது. மிக சந்தோஷமான பொழுதுகளிலும் தொண்டை அடைக்கும் துக்கப் பொழுதுகளிலும் பல சமயங்களில் நிலவு என்னை அரவணைத்துத் தேற்றி இருக்கிறது. ஆனால் இப்போது அப்படி ஓர் ஆறுதலும் இல்லை.
‘இங்கே நிறுத்து.’
அழுத்தமாய்ச் சிப்பாயின் குரல் பின்னாலிருந்து வர லொறி நின்றது.
நாங்களும் இறங்கிக்கொண்டோம். நெடு நெடுவென்று ஆளுயரப் புதர்கள் வளர்ந்த சிறு காடு லொறியின் முன் விளக்கின் சிறு வெளிச்சத்தில் புலனாகியது.
எங்களைக் கூட்டி வந்த மனிதருக்குக் கடுமையான கோபம்.
சாரதிக்கு அருகில் சென்று கையை முறுக்கி ஓங்கியபடி, ‘நான் ஒரு சிப்பாய் என்பது உனக்குத் தெரியும்தானே?’ என்று கடுமையாகக் கேட்டார். ஒரு முறைக்கு மூன்று முறை கேட்பதும் சாரதி ‘ஓமொம்’ என்று பயந்து குளறுவதும் கேட்டது.
மறு வார்த்தையின்ன்றி லொறி கிளம்பிச் சென்றது. இருந்த கொஞ்ச வெளிச்சமும் இல்லாது போய் அந்தகாரம் சூழ்ந்தது.
எங்களிருவரிடமும் பேச்சு மூச்சில்லை. முதுகுப் பைகளில் மாற்றுடைகள் கனத்தன. ஒரு பெரிய ஒய்வும் ஒரு சிறு ஆசுவாசமும் தேவைப்பட்டது.
‘வாங்க’ என்று சிப்பாய் முன்னால் செல்கின்ற ஒற்றையடிப் பாதையில் நடக்க நாங்கள் மெல்ல அடியெடுத்து வைத்தோம்.
‘இந்த மனிதர் சொல் பேச்சுக் கேட்டு இங்கு வந்தது பெரும் பிசகு’ என்று அச்சமயத்தில் தோன்றியது. இதயம் தட தட என்று துடிக்கிற சப்தம் அந்த நிசப்தத்தில் இன்னும் தெளிவாகக் கேட்டது.
இருபக்கமும் தாறுமாறாக ஆளுயரத்திற்கு புதர்க்காடு. மையிருட்டு. இரவுப் பூச்சிகளின் ரீங்காரத்தைத் தவிர விரவிக் கிடக்கின்ற அச்சமூட்டும் நிசப்தம்.
மனத்தினுள் எண்ணங்கள் ஓடின. அன்றைய நிகழ்ச்சிக்குக் கொடுக்கப் பட்ட காசும் பையில் இருக்கிறது. போதாதற்கு நானும் காதிலும் கழுத்திலும் தங்க நகைகள் அணிந்திருக்கிறேன். எந்த நேரத்திலும் அந்தச் சிப்பாய் எங்களைத் திரும்பித் தாக்கலாம். அப்படி ஏதும் நடந்தால் உள்ள உடமைகளைக் கொடுத்து விட்டு உயிர் பிழைத்தால் போதும். யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
எனக்குத் திடீரெனக் குவேனி நினைவுக்கு வந்தாள்.
குவேனி — கடல் தாண்டி வந்த ஒரு மனிதனை நம்பி, தன் மக்கள், அதிகாரம், வாழ்க்கை என அனைத்தையும் இழந்த பெண். அவளை அரக்கி என்றுதான் எங்கள் பாடசாலை வரலாற்றுப் புத்தகங்கள் சொல்கின்றன. இந்தியாவிலிருந்து வந்த இளவரசன் விஜயன் தம்பபன்னியில்தான் தரையிறங்குகிறான். தம்பபன்னி புத்தளத்தின் பழைய பெயர். குவேனியோடு சேர்ந்து வாழ்ந்த பின்னர் தென்னிந்திய இளவரசியை மணம் செய்வதற்காக குவேனியையும் அவள் குழந்தைகளையும் விரட்டிவிடுகிறான். சிங்கள இனத்தின் வேர்கள் அங்குதான் ஆரம்பமாகின்றன.
குவேனியை அவள் சொந்தச் சமூகமும் ஏற்கவில்லை. அவள் கொலையுறுகிறாள்.
குவேனியின் கதை எனக்கு நம்பிக்கை எப்படி ஒரு கண் இமைக்கும் நேரத்தில் துரோகமாக மாறும் என்பதை நினைவுபடுத்தியது.
நாங்கள் குவேனியின் காட்டுக்குள் நடக்கிறோமா? நம்பிக்கைக்கும் எச்சரிக்கைக்கும் இடையிலான எல்லைகள் தெளிவற்று நீண்டு கொண்டிருந்தன. ஒரு ஆழ்ந்த இயலாமை உணர்வு என்னைச் சூழ்ந்தது.
கொஞ்ச நேரத்தில் தூரத்தில் மங்கலான வெளிச்சம் தெரிந்தது.
மனசுக்குள் சொல்ல முடியாத ஆறுதல். ‘அல்ஹம்துலில்லாஹ்’ உதடுகளில் தவழ்ந்தது.
பாதியாகக் கட்டப்பட்ட தனித்த சிறு வீட்டின் முன்றல் புலனாகிறது. சுற்றிலும் சிறு காடு. வேறு வீடுகள் இல்லை.
முன்னறையில் சின்னதொரு தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. ரூபவாஹினி சிங்கள டெலி டிராமா. வீட்டின் உட்சுவர்களுக்கு சாந்து பூசப்படவில்லை. நிலம் கூட கரடு முரடாகத்தான் இருக்கிறது. அவரது மனைவியாக இருக்க வேண்டும். நீண்ட சீத்தை கவுன் அணிந்த மெல்லிய பெண்மணி. பக்கவாட்டில் சிரிப்பது போல இருந்தது. ஆனால் பெரிதாக எதுவும் பேசவில்லை. இரவு நேரத்தில் என்ன இவர் இருவரைக் கூட்டி வந்திருக்கிறார் என்பதாக இருக்கலாம்.
சிறு பிள்ளைகள் இரண்டு. மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தார்கள்.
தகப்பனார் மெல்லச் சிரித்தார்.
பாத்ரூமுக்குச் சென்று முகத்தைக் குளிர்ந்த தண்ணீரால் அடித்துக் கழுவிக் கொண்டோம். குசினியைத் தாண்டித்தான் குளியலறை. டவலால் முகத்தைத் துடைத்துக் கொண்டு வரும்போது அந்த அக்கா நிலத்தில் கால் நீட்டி உட்கார்ந்துகொண்டு அரிவாள்மணையில் ஈரப்பலாக்காய் அரிந்து கொண்டிருந்தார். ஒரு நாம்பிலியில் தண்ணீர், அதில் ஈரப்பலக்காய் துண்டங்கள் மிதந்து கொண்டிருந்தன. சமையல் ஆகிக்கொண்டிருந்தது.
‘நீங்க கொஞ்சம் ஒய்வெடுங்க, சமையல் ஆனதும் கூப்பிடுகிறேன்,’ என்றார் அந்த ஐயா. (சிங்களத்தில் தமையனை ஐயா என்று கூப்பிடுவார்கள்)
வீட்டின் முன்புறத்தில் இருந்த அறையை எங்களுக்குத் தந்தார்கள். அந்த வீட்டிலிருந்த நல்ல அறை அதுதான்.
ஒரு சிறிய ஜன்னல். திறக்க, அதற்குள்ளால் நிலவு கசிகிறது. தூரத்தில் நாங்கள் நடந்துவந்த ஒற்றையடிப்பாதையும் சுற்றிச் சுவர் போல எழுந்திருந்த புதரும் நிலவின் பால் வெளிச்சத்தில் மிகுந்த ரம்யமாகத் தெரிந்தது.
அறை ரொம்பப் பெரியதுமல்ல சிறியதுமல்ல. ஒருவர் படுக்கக் கூடியதைவிடச் சற்று அகன்ற ஒரு கட்டில். கதவைப் பாதி சாத்தி விட்டு அப்படியே கட்டிலிலே உட்கார்ந்துவிட்டோம். புது இடம் என்பதையும் தாண்டி தூக்கம் கண்ணில் ஒரு மெல்லிய பூவிதழாய் இறங்கியது.
நேரம் கடந்திருக்க வேண்டும்.
கதவு தட்டும் சப்தத்தில் அதிர்ந்து எழுந்துகொண்டேன்.
ஒரு மரவையில் இரண்டு உயர்ந்த கண்ணாடிக் குவளைகளில் ததும்பும் தண்ணீரோடு அந்த ஐயா வாசலில் நின்றிருந்தார். சிங்களக் கலாச்சாரத்தில் சாப்பிட அழைக்கும் மரபு அது. அதைத் தொட்டுவிட்டுக் கையை எடுத்துவிடவேண்டும். அப்போது அது எனக்குத் தெரியவில்லை. நான் அப்படியே குவளையை வாங்கி நீரை அருந்தினேன்.
நானும் துணைவரும் சாப்பிட நிலத்தில் சப்பணமிட்டு அமர்ந்துகொண்டோம்.
சுட சுட சோறு.
ஈரப்பலாக்காய் பால் கறி
வாழைப்பூ சுண்டல்
அதுவரைக்கும் பேரச்சத்திலும், நம்பிக்கையின்மையிலும் எங்கோ ஓடிப்போயிருந்த பசி ஒடி வந்து உட்கார்ந்து கொள்கிறது. வயிறு கபகபவென எரிகிறது. அள்ளி அள்ளிப் போட்டார்கள்.
வேண்டாம் என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் சாப்பிட்டேன்.
பொழுது புலர்ந்தது. இரவுக்கு நேர் எதிரான காட்சி.
வயல் கண்ணெட்டாத்தூரம்வரை விரிந்து கிடக்கிறது. பெயர் சொல்ல முடியாப் பறவைகளின் பாடல். பச்சிலை வாசம் சுமந்து வருகின்ற குளிர் காற்று, மனதுக்கு இதமாகவும் நிறைவாகவும் இருந்தது. கஹட எனும் கசப்புத் தேனீர் வந்தது.
இராணுவச் சிப்பாய்கள் வரிசையாக நிற்கிற பெரியளவு குழுப் புகைப்படம் கருப்புச் சட்டமிடப்பட்டு வரவேற்பறையில் தொங்க விடப்பட்டிருந்து அப்போதுதான் கண்ணில் பட்டது. அதில் அந்த ஐயா தான் எங்கே நிற்கிறார் என்பதைப் பெருமிதத்தோடு காட்டினார். மிகச் சிறிதாக இருந்த அவர் உருவத்துக்கும் அங்குள்ள மற்ற உருவங்களுக்கும் எனக்குப் பெரிதாக வித்தியாசம் எதுவும் விளங்கவில்லை.
என்னிடம் அப்போது ஒரு ஒலிம்பஸ் டிஜிட்டல் கமெரா இருந்தது. எல்லாவற்றையும் படம் பிடித்துச் சேகரிக்கும் பைத்தியம் எனக்கு அப்போதே ஆரம்பம். வீட்டு முன்றலில் சில புகைப்படங்களை அவர்களோடும் குழந்தைகளோடும் எடுத்துக்கொண்டேன். நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. தொலைபேசி இலக்கங்களைப் பரிமாறிக்கொண்டோம்.
அன்றிரவின் மீட்பரான அந்த ஐயாவிடமும் அவர் குடும்பத்தினரிடமும் நன்றியோடு விடைபெற்று மீண்டும் ஆனமடுவ நகரத்துக்குச் சென்று பஸ் எடுத்தோம். இரவின் இருண்மையில் அச்சம் தந்த வீதிகள், மனிதர்கள், காட்சிகளில் சுள்ளென்ற சூரிய வெளிச்சத்தில் வித்தியாசமாக இருந்தன. ஒருவாறாக மாவனல்லை வந்து சேர்ந்தோம்.
வீடு வந்த ஆசுவாசத்தோடு கொஞ்சம் ஓய்வெடுக்க நினைக்கையில் காசை எங்கே வைத்தோம் என்ற நினைப்பு ’சுள்’ளென்றது. பையைத் துளாவினால் அந்தக் காசு இல்லை.
ஆனமடுவயில் தங்கியபோது அந்த அறையிலிருந்த சிறிய மேசையில் பணக்கவரை எடுத்து வைத்த நினைவு மங்கலாக வந்தது.
அது அப்போது எங்களுக்கு பெரிய காசு. துணைவர் தொழில் செய்ய ஆரம்பித்திருக்காத காலம்.
‘இருக்கட்டும், அவர்களுக்குத்தானே அது பயன்படப்போகிறது? நல்ல விஷயம்தானே?’ என்று துணைவர் என்னைத் தேற்றினார்.
பிற்பகலாகும்போது அங்கிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. வீடு சுத்தப்படுத்தும்போது பணத்தைக் கண்டெடுத்திருக்கிறார்கள். பின்னர் வங்கி இலக்கத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டார்கள். மாலையாகும் முன்னர் முழுக் காசையும் வைப்பிலிட்டுவிட்ட சேதி வங்கியிலிருந்து வந்துவிட்டது.
எழுதியவர்

-
பெண்களை மையமாக கொண்டு இயங்கும் பெம் ஏசியா ( FemAsia Magazine) இதழை இங்கிலாந்திலிருந்து நடத்தி வருகிறார் ஷமீலா யூசுப் அலி.
தன் எழுத்துக்கள் மூலம் சுயம், அடையாளம் போன்ற விடயங்களை ஆராய விரும்புவதாகவும், . கடந்த காலத்தையும் நினைவுகளையும் எல்லையற்ற படைப்பாற்றல் மற்றும் முடிவற்ற சாத்தியக் கூறுகளின் வெளியாக இனங்காண்பதாக கூறும் ஷமீலா யூசுப் அலி, தனது எழுத்துக்கள் மூலம் தன்னைச் சுற்றியுள்ள உலகின் அழகுக்கான மெச்சுதலுடன் வாழ்தலின் சாரத்தை வெளிக்கொணர முயல்வதாகவும் குறிப்பிடுகிறார்.
இதுவரை.
கதைகள் சிறப்பிதழ் 202523 January 2025ஆனமடுவயில் ஓர் இரவு
சிறுகதை11 November 2024தங்க இழைகளுடன் ஒரு சிவப்புத் துப்பட்டா
கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023காளை வளையமும் கடல் பச்சைக் கண்களும்