10 May 2024

டிக்கடி வரும் இடம் என்றாலும் ஒவ்வொரு முறையும் இந்தப் பிரமாண்டமான நகரமத்தி என்னை ஒரு சிறுகுழந்தை போல வேடிக்கை பார்க்க வைத்துவிடுகிறது.

இந்த இடத்துக்கு புல் ரிங் என்று பெயர்- காளை வளையம். பரபரப்பான அங்காடிகள் இருக்கிற நகரத்தின் நட்ட நடுவில் காலை உயர்த்தியவாறு இருக்கிற காளை, பர்மிங்ஹாமின் வரலாற்றுச் சின்னம். இது ஒரு உண்மையான காளையை விட இரண்டு மடங்கு பெரிய வெண்கலக் காளை.

புதிதாக யார் இந்த நகரத்துக்கு வந்தாலும் காளை மாட்டுக்கு முன்னால் நின்றோ அதன் மீது ஏறியோ ஒரு போட்டோவெனும் எடுக்காமல் நகர்வதில்லை. குளிர்காலத்தில் முக்கியமாக கிறிஸ்மஸ் காலங்களில் மாட்டுக்குச் சிவப்புக் கம்பளிச் சட்டை, பனிக்குல்லாய் அணிவித்திருப்பார்கள். அது பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

இந்தக் காளை வளையத்தின் வரலாறு துயரார்ந்தது. இந்த வகையான புல் ரிங்குகள் பல தேசங்களில் இருந்திருக்கின்றன. இரும்பு வளையமொன்றுக்குள் முதலில் காளையை ஓட விடுவார்கள். பின்னர் பசி கொண்ட நாய்களைக் கூட்டமாக அவிழ்த்து காளையின் மேல் ஏவி விடுவார்கள். நாய்களின் மூர்க்கமான தாக்குதலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாது, காளை கடைசியில் பரிதாபமாக உயிர்விட்டு விடும். இதை சுற்றியிருந்து ஒரு பொழுது போக்காகக் கண்டு ரசிக்கிற குரூரமான வழமை மத்திய காலப் பகுதியில் இருந்திருக்கிறது.

அப்படியான ஒரு வளையம்தான் இந்த பர்மிங்ஹாம் புல்ரிங். அதன் பக்கத்திலேயே கசாப்புக் கடைகள் இருந்திருக்கின்றன. இப்படி ஓட விட்டு இறக்கிற மாட்டின் இறைச்சி சாப்பிடுவதற்கு மென்மையாகவும் சுவையாக இருக்கும் என்றுமொரு நம்பிக்கை. பின்னர் வந்த காலத்தில் இந்த வழக்கம் தடை செய்யப்பட்டுவிட்டது.

பர்மிங்ஹாம்- இந்த பெரு நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் நிறம் தோய்ந்த இழைகளைக் கொண்டு நெசவு செய்த அடர்ந்த கரை கொண்ட ஒரு பட்டுச்சேலை போல இந்த நகரமத்தி தோன்றுகிறது.

பழங்களும் காய்கறிகளும் நூலும், கண்கவர் துணிமணிகளும் கொண்ட பரபரப்பான வெளிச்சந்தை, வானவில் நிறங்களில் விசிறிக் கிடக்கிற மச்சம் மணக்கிற மீன் சந்தை, விலை உயர்ந்த வாசனைத் திரவியங்களும் ஆடை அணிகலன்களும் விற்கிற பேரங்காடிகள் கொண்ட உயர்ந்த கட்டடங்கள், உணவகங்கள், வித விதமான மனிதக் குரல்கள், முகங்கள், ஒரு பக்கம் குர்ஆனை ஒலிக்க வைத்து இஸ்லாத்தை கூறும் அழைப்பாளர்கள், மறுபுறம் இன்றே கிறிஸ்துவின் பக்கம் மீளுங்கள் என்று ஒலிவாங்கியில் நெகிழ்ந்து கூப்பிடுபவர்கள்.

நகர மத்தியைக் கடக்கிறபோது மசாலா பொருட்கள், வறுபடும் உயர்ரகக் கோப்பி, மயக்கும் வாசனைத் திரவியங்களின் கலவையான நறுமணம் காற்றில் அலைபாய்கிறது.

ஒரு காலத்தில் உலகின் பட்டறை என்றழைக்கப்பட்டது பர்மிங்ஹாம். இந்த நகரத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் சந்து பொந்துகளிலும் ,அதன் வரலாறு அழுத்தமாக எழுதப்பட்டிருக்கிறது.. – மையூற்றுப் பேனா முனையிலிருந்து நீராவி என்ஜின் வரை உற்பத்தி செய்து. மிகக் குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி கண்ட பட்டிணம். உருவாகிற புதிய தொழில்கள், வாய்ப்புக்கள் காரணமாகப் பலர் இங்கு இடம்பெயர்ந்தனர். வாழ்க்கையில் செழிப்பைத் தேடிப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களால், பர்மிங்ஹாம் ஒரு பன்முகக் கலாச்சாரப் பெருநகரமாக உருவானது இப்போது இது இங்கிலாந்திலேயே இரண்டாவது மிகப்பெரிய நகரம்.

காளை வளையத்தின் உற்சாகத் துடிப்பிலிருந்து நழுவி, பர்மிங்ஹாம் பொது நூலகத்தின் வாசலைக் கடந்து செல்கிறேன்.

நகரத்தின் பதட்டமும் பதகளிப்புமான சிறகடிப்புக்களுக்கு மத்தியில் ஒரு அமைதியின் சரணாலயம் அது. மென்மையான ஒலிகள் எனக்கு அவ்வளவு பிடிக்கும். மழையின் இதமான வர்ஷிப்பு தரும் சுகத்தை அவை தரும். நூலகங்களில் வாய்க்கு ஓய்வு கிடைப்பதால் காதுகளும் கண்களும் விரிந்து விடுகின்றன. மெல்லிய கிசுகிசுப்பாக எழுந்து அடங்கும் உரையாடல்கள், சிறு காற்றை வாங்கிப் படபடக்கும் புத்தகப் பக்கங்களின் கிறுக் கிறுக்கென்ற சப்தங்கள். நடக்கிற சப்பாத்துக் கால்கள் எழுப்புகின்ற வித்தியாசமான ஒலிகள், சுவர் ஏந்தியிருக்கின்ற மணிக்கூண்டு முட்களின் சிற்றொலி.

நூலகங்களில் மட்டும் சூரிய ஒளி வித்தியாசமாக விழுகிறது. உயரமான ஜன்னல்கள் வழியாக வடிகட்டப்பட்டு, புத்தகங்களின் வரிசைகளில். தயங்கி தயங்கி நடக்கிற அந்த ஒளிச் சிதறல்கள் ஆன்மாவை ஏதோவொரு தொலைவுக்கு அழைக்கும்.

நான் ஒளி மற்றும் நிழலின் விளையாட்டைப் பார்த்தவாறே அப்படியே உட்கார்ந்திருக்கிறேன். நூலகத்தில் உட்கார்ந்து வாசிப்பதற்கு புத்தகங்களை விடவும் இன்னும் அனேக விஷயங்கள் இருக்கின்றன.

நம்மைச் சூழவிருக்கும் மனிதர்களைப் போலவே நூலகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வாசனை இருக்கிறது. பழைய புத்தகங்களைப் புரட்டும் போது மேலெழும் தனித்துவமான நறுமணம், மெருகூட்டப்பட்ட மரத்தளபாடங்களின் வாசம், இங்குக் காலங் காலமாய் வந்து சென்ற எண்ணற்றவர்கள் விட்டுச் சென்ற அருவமான வாசனைகள்- இவையெல்லாம் கலந்து ஒரு பெயர் சொல்ல முடியாத  உணர்வைக் கொண்டு வருகின்றன.

இந்த நூலகத்தின் நறுமணம், மறக்காது எனக்குப் பேராதனைப் பல்கலைக் கழக நூலகத்தினைக் கொண்டுவந்துவிடுகிறது. அதன் மிகப் புராதனமான கதகதப்பான மணம் தரும் உணர்வு, ஜன்னல்கள் வழியாக வீசும் ஹன்தான மலையில் தவழ்ந்து வரும் மிருதுவான சாரல்காற்று, மட்டுமல்லாது கொத்து கொத்தாகப் பூத்திருக்கும் மஞ்சள் சரக்கொன்றைப் பூக்களையும் நினைவூட்டுகிறது. அதன் சுவர்களுக்கிடையே கழிந்த என் காலத்தை மீளக் கொண்டுவந்துவிடுகிறது இந்த நறுமணம்.

நூலகத்தின் அமைதியான இந்த உலகத்தில் யாருக்கும் தெரியாத ஒரு வாசல் திறந்திருக்கிறது. அதனூடே இன்னோர் உலகத்துக்கு நான் சென்றுவிடுகிறேன்.

எழுதப்பட்ட உலகங்களில் காலத்தின் எல்லைக் கோடு அழிந்து விடுகிறது. நான் கதைகளுக்குள் என்னை இழக்கும்போது, ​​கதை சொல்லிகளால் பின்னப்பட்ட கதைகளுக்குள் மட்டுமல்ல, என் சொந்த நினைவுகளின் தாழ்வாரங்களிலும் இறங்கி நடக்கத் தொடங்குகிறேன்.

இன்று எனக்கு எதை வாசிக்க வேண்டும் என்ற எந்த முன்னேற்பாடும் இல்லை. நினைவுகளில் அலைந்து திரிந்துகொண்டிருந்த என்னை மேசையில் கிடந்த பெரும் கல்யாணப் புகைப்பட ஆல்பம் போன்ற அந்தப் புத்தகம்  ஈர்த்தது. தடித்த வெண்ணிற அட்டையில் “குரோனிகல்ஸ் ஒஃப் விஷன்: கேமரூன் மெக்ல்ராயின் ஒடிஸி த்ரூ தி லென்ஸ்” என்ற பெயர் இருந்தது.

யாரோ வாசித்து விட்டு இடையில் வைத்திருக்க வேண்டும். அதை ஆர்வத்தோடு பூனைக்குட்டிபோலத் தூக்கி மேசையில் வாகாக வைத்துக் கொள்கிறேன். நல்ல கனமான அகன்ற புத்தகம். அதன் பக்கங்களைத் திறந்து பார்க்கப் பார்க்கக் கண்ணைக் கட்டி மனத்தைச் சுண்டுகிற வசீகரமான படங்கள் விரிகின்றன. மெக்ல்ராயின் புகைப்படங்கள் சொன்ன எண்ணற்ற கதைகளின் வழியாக ஒரு பயணத்தைத் தொடங்குகிறேன். ஒவ்வொரு படத்துக்குள்ளும் எண்ணற்ற கதைகள் தேங்கியிருந்தன.

புத்தகத்தின் பின்னட்டையில் புகைப்படக் கலைஞர் பற்றிய விபரம் இருந்தது. கேமரூன் மெக்ல்ராய் ஒரு அமெரிக்கப் புகைப்படக் கலைஞர். முகத்தைப் பாதி மறைத்த ஒரு ஆப்கான் விதவைப் பெண்ணின் புகைப்படம் செப்டெம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஊடகங்களில் சக்கைப் போடு போட்டது நினைவிருக்கிறது. அது யாரும் இலகுவில் மறக்கக் கூடிய புகைப்படமல்ல.

அந்தப் பெண்ணின் மனத்தை ஊடுருவிச் செல்லும் காந்தம் போன்ற ஆழ்கடல் பச்சைக் கண்கள் ஒரு முடிவற்ற கிணறு போல நம்மை உள்ளே கொண்டு செல்லக்கூடியது. கேமரூன் ஒரு போட்டோ ஜர்னலிஸ்ட் கூட.. அந்தக் காந்தக் கண் பெண்ணின் புகைப்படம், நேஷனல் ஜியோகிராஃபிக் சஞ்சிகை அட்டையில் வெளிவந்து கண்டிருக்கிறேன்.

அபாரமான புகைப்படங்கள். இந்த மனிதன் புகைப்படம் எடுத்திருக்கிற கோணங்களைப் பார்த்தால், நான் புகைப்படம் எடுப்பதற்கு முயற்சிக்கின்ற எல்லாப் பிரயத்தனங்களையும் தூக்கிக் கிடப்பில் போட வேண்டியிருக்கும் எனச் செல்லமாக என்னை நானே மனதுக்குள் குட்டிக் கொள்கிறேன்.

நீண்ட வழுவழுப்பான பக்கங்களைப் புரட்டிச் செல்கிறபோது ஒரு புகைப்படம் என் கவனத்தை ஈர்க்கிறது. அது ஒரு பாடசாலை வகுப்பறையில் எடுக்கப்பட்ட படம். அதன் வசீகரம் காலத்தின் எல்லாச் சாத்தியமின்மைகளையும் இடத்தின் எல்லைகளையும் மீறுகிறது.

நினைவில் முளைத்துக் கிடக்கும் என் ஊர் ,தொலைதூரத்திலிருந்து என்னை அணைத்துக் கொள்கிறது.

து ஒரு காலம்.

எங்கள் உயர்தரப் படிப்பின் முதல் ஆண்டு.

அப்போதெல்லாம் கேகாலை மாவட்டத்திலேயே பெயர் போன முஸ்லிம் பாடசாலை எங்களது. அதிகப் பேர் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிற கல்லூரி. அதனாலேயே வெளியூர்களிலிருந்து வந்து தங்கிப் படிக்கிற மாணவர்களும் இருந்தார்கள்

எங்களது வர்த்தக வகுப்பு. முழுதும் பெண்களைக் கொண்டது. ஆண்களுக்கு வேறாக வகுப்பு. புதிதாகக் கட்டப்பட்ட தனியான வகுப்பு எங்களது அல்லி ராச்சியம். ஒரு பக்கம் பாடசாலையும் மற்ற இரண்டு புறமும் வேலி. பின்னால் ஒடிச் செல்கிற மரங்கள் நிறைந்த வளவுகள், நல்ல காற்று பின்னி எடுக்கும்.

நாங்கள் சின்னக் காலத்தில் பார்த்த பாத்துன் ஆச்சியின் வீடும் கடையும் அந்தப் பக்கம் தான் இருந்தது. அவித்த வெரளிக்காய், உப்பில் ஊறிய லொவிக்கா,வடை, ஆப்பம் என்று ஆச்சி வீட்டுக்கும் வேலிக்கும் ஒடிக் கொண்டிருப்பது அப்படியே கண்ணுக்குள் தெரிகிறது. பிறகு அங்குக் கட்டடங்கள் எழும்பியதால் ஆச்சி வீடு மறைந்து விட்டது.

மழைக்காலங்களில் வகுப்புக்கு ஆசிரியர்கள் வரமாட்டார்கள் அல்லது சுணங்கி வருவார்கள். நாங்கள் கட்டில் கைகுத்தியவாறு சோவெனப் பெய்யும் மழையை ரசித்தவாறு கதைத்துக் கொண்டிருப்போம். குளிர்கிற நாட்களில் என் உள்ளங்கைகள் வெதுவெதுப்பாக இருக்கும். ரிஹானாவும் முன்சிபாவும் என் உள்ளங்கைகளை இழுத்து அவர்கள் கன்னத்தில் வைத்துக் கொள்வார்கள். மஸீனாவும் சாமிலாவும் மாறி மாறி நாகூர் ஹனீபாவின் பாட்டுக்கள் அல்லது புதிதாக வந்த திரைப்படப் பாடல்களைப் பாடுவார்கள்.

அது ஒரு புதன் கிழமையாக இருக்க வேண்டும்.

மதார் தீன் சேரின் வகுப்பு நடந்துகொண்டிருந்தது.

உதவி அதிபரோடு ஒரு வெள்ளைக்காரர் எல்லா வகுப்புகளையும் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு வருவதை நாங்கள் தூரத்திலிருந்தே கண்டுவிட்டோம்.

காக்கிச்சட்டை , களிசான், தோளில் கனத்துத் தொங்கும் பை, ஆங்கிலப் படமொன்றில் கண்ட வேட்டைக்காரனொன்றை ஞாபகப்படுத்தும் மீசை வைத்த அகன்ற சிவந்த முகம்.

எங்கள் வகுப்புக்குள் நுழைந்ததும் அவர், ஹலோ என்று கையைக் காட்டினார். என்ன நடக்கப் போகிறதென்று பார்ப்பதற்காக அமைதியின் தேவதைகளாய் கதிரைகளில் அமர்ந்து கொண்டோம். புகைப்படக்காரர் வகுப்புக்குக் குறுக்கிலும் நெடுக்கிலும் நடந்து பார்த்தார். வகுப்பைச் சுற்றிக் கட்டியிருந்த குட்டிச் சுவரிலிருந்து எட்டிப் பார்த்தார்.

அவரது முகத்தில் ஒரு திருப்தியான புன்னகை மலர்ந்தது.

அந்த வெள்ளைக்காரர் புகைப்படங்களை எடுப்பதற்கு முழுப்பாடசாலையிலும் எங்கள் வகுப்பு தெரிவு செய்யப்பட்ட அற்புதமான செய்தியை ஹனீபா சேர் அறிவித்தார்.

எங்களுக்கு ஆங்கிலம் புரியும். ஆனாலும் ஹனீபா சேர் வரிக்கு வரி மொழிபெயர்த்தார்.

அமெரிக்காவிலிருந்து வந்ததிருக்கும் அந்த வெள்ளைக்காரர் எங்களை விதவிதமாகப் படம்பிடிக்கப்போகிறார். அந்தப் படங்கள் உலகின் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களின் சுவர்களை அலங்கரிக்கப்போகின்றன.

விரைவில் எங்கள் எல்லோரது பெயரையும் உலகம் சொல்லப்போகின்றது என்று கொஞ்சம் கர்வமாகக் கூட இருந்தது. ஒரு புகைப்படத்தின் பின்னணியில் இருந்தாலும் சரி, வரலாற்றில் நம் பெயர்களைப் பொறிக்க இது ஓர் அருமையான வாய்ப்பு என்று சொல்ல முடியாத ஒரு குதூகலம் மனசுக்குள் கரை புரண்டது.

இந்தப் புகைப்படக்காரரின் எதிர்பாராத வருகையினால் சூழவிருந்த வகுப்புக்களின் வயிற்றெரிச்சலை நாங்கள் கொட்டிக்கொண்டோம். நல்ல வெளிச்சம், வகுப்பறை அமைப்பு, சுற்றுச் சூழல் காரணமாக அவர் எங்கள் வகுப்பைத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும். ஆனால் எங்கள் நினைப்பும் கர்வமும் வேறு. கால் நிலத்தில் படாது மிதந்துகொண்டிருந்தோம்.

வெள்ளைக்காரர் தன்னுடைய கமெராவை ஸ்டாண்டில் பொருத்தினார். பல லென்ஸ்களை மாற்றி மாற்றிச் செருகினார். பல்வேறு கோணங்களில் எங்களைப் புகைப்படம் எடுத்துத்தள்ளினார். அன்று முழு நாளும் வேறு பாடங்கள் எதுவும் எங்களுக்கு நடக்கவில்லை.

மதார் தீன் சேர் போன பிறகு கணக்கியல் பாடம் எடுக்க வந்த கதீஜா டீச்சர் இலேசான புன்முறுவலுடன் ஆசிரியர் மேசையில் புத்தகங்களை வைத்து விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு எழுந்து கேள்வி கேட்பது போன்ற நாங்கள் வழமையாக வகுப்பில் செய்யாத போஸ்களையும் புகைப்படக்காரர் கேட்டுக் கொண்டதன் படி செய்தோம்.

ஆசிரியரைக் கூர்ந்து அவதானித்தவாறு பென்ஸிலைக் கன்னத்தில் தட்டிக் கொண்டிருக்கும் படம். எனக்குப் பேனாவை கொப்பியில் ஒரு இடத்திலேயே அழுத்திக் கொண்டிருக்கச் சொன்னார். அப்போதெல்லாம் நான் மையூற்றுப் பேனா தான் பாவித்துக் கொண்டிருந்தேன். ஆழ்ந்த சிவப்பு நிற ஹீரோ பேனாவும் கருப்பு மையும் கொண்டு முத்து முத்தாக எழுதிய குறிப்பு ஏடுகளை நான் இன்னமும் வைத்திருக்கிறேன் அன்று அழுத்திப் பிடித்ததில். கொப்பியில் கருப்பு மை கசிந்து ஒரு சிறு குளம் உருவாகி விட்டது.

இடையில் டீச்சர் கரும்பலகையில் எழுதுவது போல புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது. கதீஜா டீச்சர் நல்ல அழகு, நீண்ட கூந்தலைப் பின்னி விட்டிருப்பார். நைலக்ஸ் சாரியைப் பாந்தமாக உடுத்து அதன் முந்தானையால் தோளைப் போர்த்தி மூடியிருப்பார்.

புகைப்படக்காரருக்கு என்ன தோன்றியதோ அவரை விட்டு விட்டு பக்கத்து வகுப்பிலிருந்து வெளியே வந்த மர்ஹானா டீச்சரை கரும்பலகையில் எழுத வைத்து விட்டார். மர்ஹானா டீச்சர் ஒ லெவல் வகுப்புக்குச் சமூகக் கல்வி பாடம் எடுப்பவர். முழங்கால் வரை நீண்ட கருப்பு பர்தா அணிந்திருப்பார். கதீஜா டீச்சர் எழுதிய கணக்குக்கு மர்ஹானா டீச்சர் போஸ் கொடுத்தார். கதீஜா டீச்சரின் முகம் அப்படியே இருண்டு விட்டது எனக்கு அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது.

அந்த வெள்ளைக்காரருக்கு கொஞ்சம் கருப்பு நிறமானவர்களைக் கூடுதலாகப் பிடித்ததென்று நினைக்கிறேன். காமிலா பேகத்தையும் முஜ்மிலாவையும் தனியாகப் புகைப்படம் எடுத்தார். எல்லோரையும் போலவே இருவரிடமும் புத்தகப்பைகள் இருந்தன. ஆனாலும் அவர்கள் கையில் புத்தகங்களை ஏந்திக் கொண்டு தூணில் சாய்ந்து கொண்டிருந்தார்கள். புகைப்படக்காரர் அப்படி இருக்கச் சொல்லியிருந்தார் என்று பிறகு காமிலா பேகம் சொன்னாள்.

அந்த நாள் முழுவதும் உற்சாகக் காற்று வீசியது. இடைவேளை மணியடித்தும் யாரும் அசையவில்லை. எல்லா நேரங்களிலும், நாங்கள் எங்கள் வெள்ளை சீருடைகளை அணிந்திருந்தோம். அயன் பண்ணிய சுருக்கு வைத்த வெள்ளைச் சட்டை. களிசான். மணிக்கட்டுக்குச் சற்று மேலே நிற்கிற பர்தா.

நாங்கள் பாடசாலையில் இருந்தவரை அந்த அற்புதமான நாளை அடிக்கடி மீட்டிப் பார்த்துக் கொள்வோம். அந்தப் புகைப்படங்கள் எங்கே என்ற கேள்விக்கு யாருக்கும் விடை தெரியவில்லை.

காலத்தின் அசுரச் சுழற்சியில் அந்த நாள் எங்களின் இளமைக் குதூகலத்துடன் சேர்ந்து மங்கிப்போவதாகத் தோன்றியது. நான் பாடசாலையிலிருந்து விலகிய பின் பொதுவேலைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். பின்னர் பல்கலைக்கழகம். பத்திரிகைத் துறை. சில கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றினேன்.

சில சமயங்களில் அந்த அற்புதமான நாள் நினைவுக்கு வரும். ஆனால் அந்தப் புகைப்படக்காரரின் பெயர் தெரியவில்லை. அதை நாங்கள் அப்போதிருந்த குதூகலத்தில் கேட்டு வைத்துக் கொள்ளவும் இல்லை. பல்கலைக்கழகம், நிறுவனங்கள், நூலகங்கள் எங்கு சென்றாலும் அந்த புகைப்படத்தை மனம் தேடும். ஆனால் எங்கும் காண முடியவில்லை. நாங்கள் மனமுவந்து இணங்கி எடுத்த புகைப்படங்கள், அந்தப் பேரெழில் தருணம் காற்றில் மறைந்து, நினைவுகளை மட்டுமே விட்டுச்சென்றது போல் ஆகிவிட்டது.

இந்த நூலகத்தின் ஆதிச் சுவர்களுக்குள், நேரம் ஒரு மந்தமான வேகத்தில் செல்கிறது.

ஒவ்வொரு இடமும் ஒரு கதையைக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது.

பாடசாலை வகுப்பறையில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம்;

வாழ் நாள் முழுதும் தேடிய அந்தப் புகைப்படம்.

இதோ இந்த கனத்த அட்டை கொண்ட புகைப்பட நூலில் A3 அளவு பிரமாண்டமாக இருந்தது . எமது வகுப்பறையில் நாம் இருந்து எடுத்த அதே படம்.

அன்று பாடசாலைக்கு வந்த புகைப்படக்காரர் வேறு யாருமல்ல, பிரபல அமெரிக்கப் புகைப்படக்கலைஞர் கேமரூன் மெக்ல்ராய். உடம்பு புல்லரிக்கிறது..

ஒரே ஒரு படம் தான் இருந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் நானும் இருக்கிறேன். மெல்லிய புன்னகை இழையோட அந்தப் புகைப்படத்தைத் தடவிப் பார்க்கிறேன்.

எத்துணை வருடத் தவம்.

எந்த ஜோடனைகளும் இன்றி இந்தப் படத்தில் இருக்கிற அப்பாவி முகங்களைப் பார்க்கிறேன்.

முன்னுக்கு இருக்கிற பர்ஸானா எப்போதும் கலகலவென்று பேசிக்கொண்டே இருப்பவள், இப்போது ஒரு பாடசாலை அதிபர். பக்கத்தில் இருக்கிற ரிம்ஸியா மகளிர் கல்லூரி ஒன்றில் அலுவலக உதவியாளர். முஜ்மிலா ஒரு கணக்காளர் இப்போது துபாயில் குடும்பத்தோடு இருக்கிறாள். அதீகாவும் நதாவும் அதே ஸ்கூலில் இப்போது டீச்சராகி விட்டார்கள். சாமிலா இதே ஊரில் ஒரு குடும்பத் தலைவி. மரீனா வீட்டில் நாலைந்து தையல் மிசின் போட்டு சின்ன ஒரு காமண்ட் தொழிற்சாலை நடத்துகிறாள். சீராஸ் வீட்டிலிருந்தவாறே அழகழகான கஸ்டமைஸ்ட் கேக் செய்பவள். ரிஹானாவுக்கு சின்ன வயதிலேயே காதல் திருமணம்.

பரீதாவை பற்றி சரியாக விவரம் தெரியவில்லை. பிடிக்காத திருமணத்திலிருந்து விடுதலையாகி வேறொரு நாட்டில் இருப்பதாகக் கேள்வி.

புகைப்படத்துக்கு அடியில் குறித்திருந்த எழுத்துக்களை வாசிக்கிறேன்.

ஒதுக்கப்பட்டிருக்கும் பெண்கள்- கேகாலையில் உள்ள ஒரு பாடசாலை – இதுதான் இந்தப் புகைப்படத்துக்கான தலைப்பு.

அவர் கொடுத்த தலைப்பு விதியின் கொடூரமான திருப்பமாகத் தோன்றியது.

எனக்கு திடீரெனத் தலையின் ஒரு பக்கத்தில் மின்னல் வெட்டுகிறதுபோல சுண்டியிழுக்கின்ற வலி.

கேகாலை எங்கள் கிராமத்திலிருந்து பத்துப் பன்னிரண்டு மைல்கள் தொலைவில் இருக்கிற நகரம். சிங்களவர்கள் செறிந்து வாழ்கின்ற இடம். எங்கள் ஊரின் அமைவிடம், மனிதர்கள், வாழ்க்கை முறைக்கும் கேகாலை நகரத்துக்கும் பெரிதாக எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்தப் புகைப்படத்தில் சித்தரிக்கப்படுகிற கதை எங்கள் வாழ்க்கையின் யதார்த்தத்திற்கு முற்றிலும் மாறுபட்டது.

ஒதுங்கியவர்களாகவோ அல்லது பின்தங்கியவர்களாகவோ எங்களை நாங்கள் நினைத்ததில்லை. ஆண்மையச் சமூகம் தருகிற அழுத்தங்களுக்கு எதிர் நீச்சல் போட்டு எங்கள் சொந்தப் பாதைகளைச் செதுக்க முயற்சிக்கின்ற சாதாரணமான இளையவர்களாக இருந்தோம்.

இந்தப் புகைப்படத்தில் பதிந்திருக்கும் எங்களின் இளமையான முகங்கள் இப்போது வாழ்க்கையனுபவங்களால் முதிர்ந்துள்ளன.

நான் தடிமனான புத்தகத்தை மூடிவிட்டு அதை அலமாரியில் திருப்பித் தரும்போது, ​​என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சினம் மனத்தை நிறைக்கும்போது வெளிப்படும் சிரிப்பு அது என்று தோன்றியது. கமெராவுக்காக உருவாக்கி அது வலிந்து கைப்பற்றிய அந்த மாயக் கணம் – நாங்கள் பகிர்ந்து கொண்ட இளமையின் வெகுளித்தனமும் தோழமையும் கொண்ட அந்த நாள்; வாழ்க்கையில் மறக்க முடியாத அற்புதமான ஒரு கனாத்துண்டு இப்போது உருமாறியது. எங்கிருந்தோ வந்த ஒருவர் எங்களைப் பொம்மைகளைப்போல இயக்கி உலகின் முன் வைத்த அவல தருணமாய் அது மனத்தைக் குத்தியது.

புகைப்படம் நம்முடைய யதார்த்தத்தைச் சொல்லாமலிருக்கலாம். அந்த படத்தை வேறு பெயரில் உலகம் நினைவில் வைத்திருக்கும். இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைக்க முடியவில்லை. புத்தகத்தை மீண்டும் எடுத்து அந்தப் பக்கத்தைக் கிழிக்க வேண்டும்போல் கை பரபரத்ததது. பிறகு மனம் அடங்கியது. ஒரு பக்கத்தைக் கிழிப்பதால் இத்தகைய புகைப்படங்கள் உருவாகும் வரலாற்றை மாற்ற முடியாது. சினத்துடன் வெறித்த ஆப்கான் பெண்ணொருத்தியின் ஆழ்கடல் பச்சைக் கண்களால் கூட அதைச் செய்ய முடியவில்லை.

நான் நூலகத்தை விட்டு வெளியேறி, பரபரப்பான காளை வளையத்தைக் கடந்து பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்துக்குச் செல்வதற்கான பஸ்ஸை நோக்கி நடக்கிறேன்.


 

எழுதியவர்

ஷமீலா யூசுப் அலி
பெண்களை மையமாக கொண்டு இயங்கும் பெம் ஏசியா ( FemAsia Magazine) இதழை இங்கிலாந்திலிருந்து நடத்தி வருகிறார் ஷமீலா யூசுப் அலி.

தன் எழுத்துக்கள் மூலம் சுயம், அடையாளம் போன்ற விடயங்களை ஆராய விரும்புவதாகவும், . கடந்த காலத்தையும் நினைவுகளையும் எல்லையற்ற படைப்பாற்றல் மற்றும் முடிவற்ற சாத்தியக் கூறுகளின் வெளியாக இனங்காண்பதாக கூறும் ஷமீலா யூசுப் அலி, தனது எழுத்துக்கள் மூலம் தன்னைச் சுற்றியுள்ள உலகின் அழகுக்கான மெச்சுதலுடன் வாழ்தலின் சாரத்தை வெளிக்கொணர முயல்வதாகவும் குறிப்பிடுகிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x