ஆழ்ந்த சிவப்புத் துப்பட்டா ரூமாவின் மடியில் மென்மையாகப் படர்ந்திருந்தது. மெல்லிய ஜன்னல் கம்பிகளூடாக விழுகின்ற மங்கலான பிற்பகல் வெளிச்சம் அந்தச் சிவப்பை இனியில்லை என்றொரு மாய வர்ணமாக்கி விடுகிறது. கம்பி விரிசல்களூடு காற்று நழுவும் ஒவ்வொரு முறையும் கண்ணாடி மரச் சாளரங்கள் கிரீச் என்கின்றன. பழைய மரத்தளபாட வாசனை, மண் சட்டியில் இறைச்சிக்கறி வேகிற சுகந்தம் முன் முன்றலிலுள்ள மல்லிகைக் கொடி வாசம் எல்லாம் சேர்ந்து அவளுக்குள் நிரம்புகின்றன. ரூமாவின் நீண்ட விரல் நுனிகள் துப்பட்டாவின் தங்க எம்பிராய்டரியை நிரடிக் கொண்டிருந்தன. எல்லாம் தெளிவாக விளங்குகிற ஒரு காலத்துணுக்குக்கு அவள் மீளச் சென்று விடலாம் என்பதுபோல துப்பட்டாவில் நெய்யப்பட்டிருக்கிற மென்மையான ரோசா இழைகளில் மெதுவாக மேய்ந்து கொண்டிருக்கின்றன அவளுடைய நகங்கள்.
துபாயின் தெய்ரா பஸாரின் சந்தடியும் சலசலப்பும் அவள் நினைவில் முகிழ்க்கின்றன. வர்ணங்களின் ஆயிரத்தொரு கலவைகளால் நிரம்பி வழியும் நெரிசலான ஸ்டோல்கள், விற்பனையாளர்களின் காட்டுக் கூச்சல்களோடு நெருங்கிப் பிதுங்கி தாளலயமாக நகரும் மனிதர்கள், சரசரக்கிற உடைகள், கை வளையல்கள், தங்க நகைகளின் கிணுகிணுப்பு. மனத்தை மயக்குகின்ற பஹூரின் நறுமணப் புகையோடு ஏலக்காய், கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை வாசனைகளும் கலந்து மேலெழுகின்றன. அந்தச் சந்தடி மிக்க சந்தை அவளுக்கு எப்போதும் உயிர்ப்பூட்டுகிற ஒன்று. தெய்ராச் சந்தைக்கென்று தனியா ஓர் ஆன்மா இருக்கிறது என்று நினைத்துக்கொள்வாள். குரல்களும் உடல்களும் இடைவிடாது அசைகிற பெருங்கடலுக்கிடையே அவள் கண்ணில் சிக்கியது அந்தத் துப்பட்டா.
ஒரு சிறிய மர மேசையில் அழகாக விரிக்கப்பட்டிருந்த அடர் சிவப்பு நிறத் துப்பட்டா. சூரிய ஒளியில் அதன் தங்க எம்பிராய்டரி மின்னுகிறது.
துப்பட்டா அவளிடம் ரகசியம் பேசியது. அவளை வாவென்று கூப்பிட்டது.
வெறும் முந்தானை துணி என்பதற்கு அப்பால் அதில் சொல்ல முடியாத ஏதோவொன்று இருந்தது. அது யாஸ்மீனுக்கு என்று மனது தீர்மானமாகச் சொல்கிறது. அவளது சற்றுக் கருத்த நிறத்துக்கும் திருத்தமான முகவாக்குக்கும் இது பாந்தமாய் இருக்கும்.
யாஸ்மீன் ஒரு காலத்தில் அவளுக்கு எல்லாமாக இருந்தாள்.
ரூமாவை விட பதினைந்து வருடம் பெரியவள். ஆனாலும் தோழி போல இறங்கிப் பழகுவாள். இருவருக்குமிடையில் பகிர்ந்து கொண்ட இரகசியங்கள் இருந்தன. ஏராளமாய் வாசிப்பார்கள், விவாதிப்பார்கள். அதனாலேயே தங்களைச் சுற்றியிருக்கிற உலகத்தைப் பற்றிய சொந்தப் புரிதலில் உள்ள இடைவெளிகளை இருவரும் பரஸ்பரம் நிரப்பிக் கொள்வார்கள். ஒரே தொண்டியக்கத்தில் சேர்ந்து இயங்கியதில் இருவருக்கும் அதிகம் நெருங்கிப் பழகச் சந்தர்ப்பம் வாய்த்தது. ஒரு காலம் தான் அதீதமாய் நேசித்தத் தோழிக்கு இந்தப் பரிசு மிகப் பொருத்தமாக இருக்கும் என்று ரூமா நினைத்தாள்.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
ரூமா இப்போது மாக்குரணவில் உள்ள தனது குழந்தைப் பருவ வீட்டில் தன் பால்யகாலத்தின் சிறிய அறையில் அமர்ந்திருந்தாள். காலம் அப்படியே தெருமுக்கில் உறைந்து போயிருந்தது.
ஒரு பிரம்மாண்டமான பறவையின் இறகு போன்ற துப்பட்டா மடியில் கனத்தது. ஒரு போதும் இனி இதனைப் பரிசாகக் கொடுக்க முடியாது என்று அவளுக்குத் தோன்றுகிறது.
அவளுக்கும் யாஸ்மீனுக்கும் இடையில் சொல்லப்படாத எல்லாமும் இறுகிய மெளனமும் பெரும் சுவராய் உயர்ந்து வளர்ந்திருந்தன.
தடவிக் கொண்டிருந்த துப்பட்டாவைத் தன் மடியில் தளரவிட்டாள். அவள் மனம் கிசுகிசுக்கள் முதலில் புகையத் தொடங்கிய நாளுக்குத் திரும்பியது.
‘ரூமா, நீங்க நல்லாக் கொழுத்துப் பெய்த்துட்டே.’
யாஸ்மீன் சொல்லி வெகு நேரத்துக்குப் பின்னரும் கண்ணுக்குத் தெரியாத திரைபோல அந்த வார்த்தைகள் காற்றில் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த வார்த்தைகளின் எதிரொலியை ரூமாவால் இப்போதும் உணர முடிந்தது. அவள் மாக்குரணவுக்குத் வந்ததிலிருந்து வலிந்து ஒரு புன்னகையை அணிய வேண்டியிருந்தது. அந்த வார்த்தைகள் அந்தச் சிரிப்பை நூறு கத்திகளால் அறுத்துப் போட்டன. அவள் விரல்களை அந்தத் துப்பட்டா இருந்த துணிப்பையைச் சுற்றி இறுக்கினாள். அது அவள் நிலைகுலைந்து விடாமல் இருப்பதற்கான ஒரு பிரயத்தனம்.
அந்த வார்த்தைகளை யாஸ்மீன் சாதாரணமாகச் சொன்னது போல இருந்தாலும் அதற்குக் கீழே உள்ள ஏளனம் கூர்மையாகவும் தெளிவாகவும் இருந்தது. அவளது பார்வை ரூமாவில் ஏறி இறங்கிய விதம் அது பொறாமையா அல்லது அருவருப்பா என்று அவளுக்குப் புரியவில்லை.
ரூமா பதிலுக்குச் சிரித்தாள். விரல்களில் துணி நழுவுவது போல மெல்லிய, உடையக்கூடிய ஒரு புன்னகை அது. அவள் ஏதோ முணுமுணுத்தாள், நீண்ட வேலை நாட்கள் பற்றி, தூக்கமில்லாத இரவுகளைப் பற்றியெல்லாம் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் உள்ளே யாஸ்மீனின் வார்த்தைகள் ஆழமாகப் புதைந்து அவளைச் சுற்றிப் படர்ந்திருந்த மற்ற கிசுகிசுக்களுடனும் சேர்ந்து அவளை வதைக்கத்தொடங்கியிருந்தது.
ஊர் மாறிவிட்டது. அல்லது அது மாறவில்லை. ஒருவேளை ஊர் எப்போதும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ரூமாதான் அதைக் உணர முடியாத அளவு ஏமாளியாக இருந்திருக்க வேண்டும். ரூமாவின் மேல் கவியும் ஒவ்வொரு பார்வையும் சிறிது நீண்டு நெடித்தது. பூதக்கண்ணாடியின் கீழ் ஒரு சிறு பூச்சியை பார்ப்பதைப் போல அவளை ஆராய்கிறது. அவள் ஊரிலிருந்தபோது புன்னகையுடன் கைலாகு கொடுத்து நின்று பேசிய தொண்டியக்கப் பெண்கள் இப்போது அவளைக் காணாதது போல நழுவிச் செல்கிறார்கள். அவளை பெரிதாகத் தெரியாத ஆண்கள்கூட அவளைப் பற்றிய நம்ப முடியாத கருத்துக்களை வாந்தியெடுத்திருந்தார்கள்.
ரூமாவுக்கு ஊரை நிரம்பப் பிடிக்கும். மனசின் மிக நெருக்கத்தில் வேர்விட்டிருந்த ஊர் இப்போது வெகு தூரம் போய்விட்டிருந்தது. உறவு,நெருக்கத்தையும் தூரத்தையும்ஏற்படுத்துகிறது,தீர்மானிக்கிறது.
‘ரூமா, என்ன கத, செல்றதெல்லாம் உண்மையா?’
ஆபியா மாமியிடமிருந்து கேள்வி வந்தது.
அவள் மாமியை பல ஆண்டுகளாகப் பார்த்ததேயில்லை. அந்தச் சிறிய காரை உதிர்ந்து போன தொழும் பள்ளி தக்கியாவின் அருகே மாமி நின்றிருந்தாள். வெள்ளையடிக்கப்பட்ட சுவர்கள் இப்போது கறை படிந்திருக்கின்றன. அந்தத் தக்கியாவும் ஊரைப் போலவே முதுமையடைந்து, விரிசல் அடைந்து, சீர்குலைந்து போய்விட்டது. ஆனால் மழையிலும் வெயிலிலும் தாக்குப்பிடித்து இன்னும் அப்படியே நின்று கொண்டிருக்கிறது.
அந்தக் கேள்வியைக் கேட்டபோது மாமியின் கண்கள் சின்னதாகி அவளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தன. உதடுகள் ஒரு பக்கமாய் கோணியிருந்தன.
எந்த உண்மை? ரூமாவின் மனம் ஒரு பறவைபோல் படபடத்தது. வதந்திகளில் எந்தப் பகுதியைப் பற்றி மாமி கேட்கிறா?
அவள் முகநூல் பதிவுகளைப் பற்றியா? அவள் பேசுவதாக அவர்கள் கூறுகிற ஆண்களைப் பற்றியா? அல்லது வேறு ஏதாவது ரூமாவுக்கே தெரியாத வதந்தியா?
அவளுக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவளுடைய எண்ணங்கள் மழைக்காற்றில் அலைகிற இலைகள்போல சிதறியிருந்தன. சரியான வார்த்தைகளை சரியான முறையில் சொல்ல வேண்டும் ஆனால் அவர்கள் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருப்பதை அவள் எப்படி மீண்டும் விளக்க முடியும்? கட்டமைத்து உருவாக்கப்பட்ட தோற்றப்பாடுகளை, மாற்றும் பிரயத்தனம் அதிகம் பிரயோசனம் தருவதில்லை.
அவள் துபாயில் இருக்கும்போதுதான் முதல் செய்தி வந்தது. ‘ஃபேஸ்புக்கில் என்ன செய்கிறாய் ரூமா?’ அவளுடைய பெரியம்மா மகள் கேட்டாள். கேட்ட தொனி எரிச்சலூட்டியது. கொஞ்சம் குழப்பமாகவிருந்தது. அவளது இடுகைகளை ஸ்க்ரோல் செய்து இந்தக் கதைகளுக்கு என்ன காரணம் என்று யோசித்தாள்.
அவளது இடுகைகள் எப்போதும் போலவே இருந்தன. அவள் தன் மாணவர்களோடு எடுத்த ஒளிப்படங்கள், கல்வி பற்றிய கட்டுரைகளுக்கான இணைப்புகள், கேமராவைப் பார்த்து சிரிக்கும் அவளது அழகான சுயமிகள், லேசாகச் சுற்றிய துப்பட்டாவோடு பின்னால் ஒளிரும் துபாயின் கட்டடங்கள்.
அவள் என்ன தவறு செய்தாள்?
அவள் துபாயில் ஒரு பள்ளிக் கூடத்தில் ஆங்கிலம் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தாள்.
ஊரிலிருந்த போது அவளுக்கென்று நிறைய தோழிகள் உறவு வட்டம் இருந்தது. துபாய் வாழ்க்கை அவளுக்கு முழுசாக ஒட்டவில்லை. ஆனால் உதறவும் முடியவில்லை. தன் வாழ்க்கையின் சில துணுக்குகளை, தன் மனம் தேடும் சில விடயங்களை ஃபேஸ்புக்கில் பகிர்வதை அவள் விரும்பினாள். அதற்கு வரும் பின்னூட்டங்கள் அவளை உற்சாகப்படுத்தின. கல்வியோ கவிதைகளோ அதை தன் கருத்துக்களோடு இயைகின்றவர்களோடு பேசவும் பகிரவும் விவாதிக்கவும் அவளுக்குப் பிடித்திருந்தது. அவளைப் பொறுத்தளவில் அது மிகச் சுதந்திரமான வெளி. அதற்குள்ளிருக்கும் உள் அரசியல் கண்காணிப்புகள் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.
ராஷீத் அவளை எப்போதும் புரிந்துகொண்டான். அவன் அவளது இடுகைகளை ஒருபோதும் கேள்வி கேட்கவில்லை. அவளுடைய நோக்கங்களைச் சந்தேகிக்கவுமில்லை. சில இடுகைகளை உருவாக்க அவனும் அவளுக்கு உதவினான்.
ஆனால் மாக்குரணவில் அவர்கள் வேறு ஒன்றைக் கண்டார்கள். இரவு விழித்துக் கேள்வித்தாள்களைத் திருத்துகிற ஓர் ஆசிரியையோ அல்லது வார இறுதி நாட்களில் சமூக நிகழ்வுகளில் ஆர்வத்தோடு கலந்து கொள்கிற ஒரு பெண்ணையோ அவர்கள் பார்க்கவில்லை.
ஒரு புதிய ஒரு நகரத்தில் தனக்கென ஒரு வாழ்க்கையைக் குருவி கூடு கட்டுவது போல கட்டியெழுப்புகிற பெண்ணை அவர்கள் பார்க்கவில்லை. அளவுக்கு அதிகமாக மாறிவிட்ட, அளவுக்கு அதிகம் தைரியமான, அளவுக்கு அதிகம் தொலைவில், அளவுக்கு அதிகம் சுதந்திரமாக உள்ள ஒரு பெண்ணைத்தான் அவர்கள் பார்த்தார்கள்.
‘நீங்க எப்பவும் மனிசர்களோடு நல்லாப் பழகுற, உங்க வெளிய உள்ள அழகு போலவே மனசும் மிச்சம் அழகு ரூமா’ யாஸ்மீன் ஒருமுறை கூறியது ரூமாவுக்கு நினைவுக்கு வந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் தொண்டியக்கத்தில் ஒன்றாக வேலை செய்தபோது கூறிய வார்த்தைகள் அவை. யாஸ்மீன் எப்போதும் வெளிப்படையாகப் பாராட்டுவாள். அதனாலேயே ரூமாவுக்கு அவளை அதிகம் பிடிக்கும்.
மாக்குரணவில் தங்கள் வாழ்க்கையை நிர்வகித்தச் சொல்லப்படாத விதிகளின் நுட்பமான வலைகளைத் தாண்டி வளர்ந்த நட்பது. ரூமா எப்போதும் அவளை மரியாதையோடு பார்த்தாள்.
ஆனால் இப்போது, அந்த யாஸ்மின் அப்படியே காணாமல் போய்விட்டாள். அவள் இடத்தில் ரூமாவால் அடையாளமே காண முடியாத வேறொரு பெண் நின்றிருந்தாள். அவளுடைய முகத்தில் ஒரு சிறு புன்னகை இருந்தது. ஆனால் அதில் ஈரம் இல்லை, உணர்ச்சி இல்லை. அவளுடைய கண்கள் ரூமாவுக்கு வெகு தொலைவில் இருந்தன.
பாடசாலை வாயிலடியில் நேர்த்தியாக அயர்ன் பண்ணிய அபாயா அழகாகச் சுற்றிய துப்பட்டாவில் யாஸ்மீன் நிமிர்ந்து நிற்பதைப் பார்த்ததுமே ரூமாவுக்குப் புரிந்து விட்டது. அவளால் மற்றவர்களின் முகங்களை நுணுக்கமாக வாசிக்க முடியும். நீண்ட நாட்களின் பின்னரான சந்திப்பு. ரூமா காலத்தின் இடைவெளியை பேரன்பில் நிரப்புகிற ஓர் அணைப்பை விரும்பினாள். அது சாத்தியமில்லை.. கையைக் கொடுத்து ஸலாம் கொடுத்ததில் கூட முழுமனசு இல்லை.
‘ஸ்டாப்ஃல அதைப் பற்றிப் பேசினாங்க.’ ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துகொள்வதுபோல் குரல் தாழ்த்தினாள் யாஸ்மீன்.
‘அவங்க உங்கட ஃபேஸ்புக் பத்தி… ஃபோடோஸ் மத்தது வேற செய்திகளைப் பத்திப் பேசினாங்க.’ அவள் பின்னர் கொஞ்சம் தாமதித்தாள். அவள் பார்வை படபடத்தது, தொடரலாமா வேண்டாமா என்று நினைத்திருப்பாள் போல.
’நான் ஒண்டுமே பேசல்ல, பேசாம அமைதியாக இருந்த.’
அதுதான் நான் உனக்குச் செய்த மெத்தப் பெரிய உபகாரம் என்ற வார்த்தை மட்டும்தான் அவள் சொல்லவில்லை.
ஒரு காலத்தில் யாஸ்மீனின் வாழ்வின் பிரத்தியேகமான பல பக்கங்களை ரூமாவிடம் பகிர்ந்திருப்பது அவளுக்குச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது.
‘அமைதியாக இருந்த.’ அந்த வார்த்தைஅவளைச் சுட்டது. பேசவேண்டிய நேரம், கதைக்காத அமைதி வதைக்கக் கூடியது.
அது அவளுடைய எண்ணங்களின் சுவர்களில் எம்பிக் குதித்து அவள் மனசுக்குள் ஒரு கனத்த கல்போல விழுந்தது.
ஊர் ரூமாவின் பெயரைக் கிழித்துச் சுருட்டி வீசியபோது யாஸ்மீன் வெறுமனே நின்றுகொண்டிருந்தாள். கிசுகிசுக்கள் காட்டுத்தீபோல பரவின.
‘எனக்காக யாஸ்மீன் எதுவும் செய்யவில்லை.’ சொல்ல முடியாத வலி பரவியது.
‘ஒருமுறை ரெப்யூடேஷனை இழந்திட்டா அதை உங்களால திருப்பி எடுக்க ஏலா ரூமா.’
அது எல்லாவற்றுக்குமான விளக்கம். மௌனத்துக்கான நியாயம்.
ரூமா தலையசைத்தாள், அவள் தொண்டை கட்டிக் கொண்டது. ஒரு சிறிய ஆறுதல்தான் அப்போது அவளுக்குத் தேவைப்பட்டது.
ஆனால் யாஸ்மீன் அப்படி எதையும் அவளுக்குக் கொடுக்கவில்லை.
வதந்திகளைப் பற்றி ரூமா சொன்னபோது ராஷித் சிரித்தான். ‘அவங்க பேசட்டும்’ என்று அவன் அவளை தன் கைகளுக்குள் இழுத்து அணைத்துக்கொண்டான். அவனுடைய நம்பிக்கையே அவளுக்கு அப்போது போதுமானதாக இருந்தது.
ஆனால் இங்கே, மாக்குரணவில் ராஷீத்தின் வார்த்தைகள் அர்த்தமிழந்த வெற்றுச் சொற்களாகியிருந்தன.
ஊர் தராசு எப்போதும் பெண்களுக்கு வேறொரு மாதிரிதானே தாழும்?
ஒரு காலத்தில் அவள் மிகவும் நம்பியிருந்த தோழி அவளைக் கைவிட்டுவிட்டாள்.
ரூமா படிகளில் மெதுவாக இறங்கி பாடசாலை வாயிலை விட்டு வெளியேறும்போது சூரியன் மறைந்து கொண்டிருந்தது. ஊரில் இருண்மையின் நிழல்கள் படிந்துகொண்டிருந்தன. தொலைதூரத்தில் சிறுவர்களின் விளையாட்டுச் சிரிப்பொலிகள் அந்திக் காற்றோடு மிதந்து வந்தன.
சிவப்பு துப்பட்டா அவள் கையிலுள்ள துணிப்பையில் பத்திரமாக இருந்தது.
தனது பால்யத்தின் வீட்டில் கதகதப்பான அறையில் ரூமா ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தாள்.
துப்பட்டாவைக் கவனமாக மடித்தாள், அவளது விரல்கள் தங்க இழைகளை கடைசியாக ஒரு தடவை தடவின. அறையின் கவிழ்ந்திருக்கிற நிசப்தம் தாங்க முடியாமல் இருந்தது.
வெளியே அந்தி சாய்கிறது. ஊர் விரைவில் இருட்டாகிவிடும்.
ரூமா எழுந்தாள்.
எழுதியவர்
-
பெண்களை மையமாக கொண்டு இயங்கும் பெம் ஏசியா ( FemAsia Magazine) இதழை இங்கிலாந்திலிருந்து நடத்தி வருகிறார் ஷமீலா யூசுப் அலி.
தன் எழுத்துக்கள் மூலம் சுயம், அடையாளம் போன்ற விடயங்களை ஆராய விரும்புவதாகவும், . கடந்த காலத்தையும் நினைவுகளையும் எல்லையற்ற படைப்பாற்றல் மற்றும் முடிவற்ற சாத்தியக் கூறுகளின் வெளியாக இனங்காண்பதாக கூறும் ஷமீலா யூசுப் அலி, தனது எழுத்துக்கள் மூலம் தன்னைச் சுற்றியுள்ள உலகின் அழகுக்கான மெச்சுதலுடன் வாழ்தலின் சாரத்தை வெளிக்கொணர முயல்வதாகவும் குறிப்பிடுகிறார்.
இதுவரை.
- சிறுகதை11 November 2024தங்க இழைகளுடன் ஒரு சிவப்புத் துப்பட்டா
- கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023காளை வளையமும் கடல் பச்சைக் கண்களும்
நட்பென நினைத்து
வந்து தொடர்பறுந்து போனபின் கொண்டு வந்த பரிசு கனமாகும் கணம்….மிக நேர்த்தியான விவரிப்பு