16 June 2024

ன்னைப் பார்த்தவுடனே கௌசல்யா அதிர்ச்சியடைந்தவளாக நின்றுவிட்டாள். “சார்… நீங்களா… எப்படி எங்கள் வீட்டைக் கண்டுபிடித்தீர்கள்? நகரத்திலிருந்து எந்த வழியில் வந்தீர்கள்” என்று கேட்டாள்.

“உனது துன்பமெல்லாம் தீர்ந்தது கௌசல்யா. உனது வேலைக்கான உத்தரவு வந்துவிட்டது கௌசல்யா.”

“அப்படியா? உண்மையிலா? ரெகுலர் ஆர்டரா?”

“ஆமாம். இந்தா, நீயே பார்.” என்று ஆர்டரை அவளிடம் கொடுத்தேன்.

வாங்கிப் படித்தவள், “ஆபரேட்டர் வேலையே கொடுத்துவிட்டார்கள். இனி என் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும். முக்கியமா அந்த ஆஃபீசர்கள் தொல்லை, என்னை என்ன பாடெல்லாம் படுத்தி எடுத்தார்கள். அதுவும் அந்த எச்.ஆர். எச்சக்கலை… இப்போ அதெல்லாம் வேண்டாம். இது ஒரு இனிமையான தருணம். 48 நாள் உண்ணாநோன்பு முடித்து இன்றுதான் பெருவழிக் கோபுரம் போகிறேன். அந்தப் பெருவெளியின் கருணை இப்போதே தொடங்கிவிட்டது.”

“இப்போது நான் அந்த இடத்துக்குப் போக வேண்டும். அது ஒரு கோவில் இல்லை. இங்கே எல்லாரும் அதை, ‘பெருவெளி மையம்’னு சொல்றாங்க… நீங்களும் என்னுடன் வரவேண்டும். பெருவழி கோபுரத்தில் ஆண்களை மட்டுமே போகச் சொல்வார்கள். நான் யாரைக் கூட்டிக்கொண்டு போவது என்று திகைத்தபோது, நான் உங்களைத்தான் நினைத்தேன். கூப்பிடாம வந்துட்டமேன்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தேன். தகவல் அனுப்பி வரச்சொல்லலாமா என்று நினைத்தேன். மனதின் தகவல் எந்த ஊடகம் வழியிலாவது சென்று சேர்ந்துவிடும். அதுதான் நீங்க வந்துட்டீங்க.”

கௌசல்யாவின் முகம் ஒளிர்வதைக் கவனித்தேன். தாமிர நிறத்தில் ஆனந்தம் பூசிய அந்த முகம், காலத்தின் பிடிகளில் இருந்து விடுதலை அடைந்து சுடர்விடும் பெண்முகமாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் அவள் என்ன சொல்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை.

“அங்க போய்ப் பார்த்தால் கொஞ்சம் கொஞ்சம் புரியும். ஆனால் உங்களால், இல்லை, யாராலும் கற்பனை செய்ய முடியாத ஒரு இடம் பெருவழி மையம். உங்களுக்கு ஒரு புது அனுபவமா இருக்கும். நம்ம இருவருக்குமே நல்லது நடக்கும்.”

“சரி போகலாம்” என்றேன்.

“உங்களுக்கு அவசரமாகப் போக வேண்டியது இல்லையே.”

“அவசரமாகவா? எனக்கா… அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.”

“ஏன்னா, அங்க என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. எவ்வளவு நேரம் ஆகும்னு சொல்ல முடியாது. சமயங்களில் நள்ளிரவு வரை ஆகிவிடும். (அல்லது நூறு, இருநூறு ஆண்டுகள் கூட ஆகிவிடும் என்று என் காதில் விழுந்தது.) அப்படி ஆகிவிட்டால் நீங்கள் இரவு இங்கயே தங்கிவிட்டு காலையில் போகலாம்.”

“அது ஒன்னும் பிரச்னை இல்லை. நான் வந்த சமுத்திரக்கரை  வழியில், இரவில் போவது பெரிய கஷ்டம். காலையில் போவதுதான் உத்தமம்.”

“சமுத்திரக் கரையா? படகில் வந்தீர்களா?”

“இல்லை. கடற்கரையோர சதுப்புநிலம் வழியாக நடந்தே வந்துவிட்டேன்.”

“என்ன…” என்று ஆச்சர்யப்பட்டாள்.

கௌசல்யா வசிக்கும் வாலறிவன்விளைக்கும் நகருக்கும் இடையில்  கடற்கரையை ஒட்டி சதுப்புநிலக்காடுகள் இருந்தன. நகரிலிருந்து படகு ஏறி நேரே வாலறிவன்விளைக்கு செல்வதே மக்களின் வழக்கம்.

சதுப்புநிலம் என்பது ஒரு புண்ணாகிய நிலம். கடலாக முடியாமலும் விளைநிலமாக மாற முடியாமலும் பித்துப்பிடித்த நிலம். அந்த நிலத்தையும், தாவரங்களே காக்கின்றன. சதுப்புநிலக் காடுகளுக்கென்றே பிறந்த மரங்களும் செடிகொடிகளும் புற்களும் நம்ப முடியாத வகையில் உயரமாகவும் நீண்டும் அடர்த்தியாகவும் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டும் யாரும் புகுந்துவிட முடியாதவாறு ஏதோவொரு ரகசியத்தை மூடி வைத்திருப்பதாகவும் ஒரு அதிசயம் போலவும் இருந்தன. ஏதோவொரு கனவில் கண்டது போன்ற நீர்நிலைகள்; பச்சைப் பாம்புகளா தாவரக்கொடிகளா என வேறுபாடு அறிய முடியாத கொடிப்பின்னல்கள். அவரைக்கொடி போன்றே பின்னிப்பின்னி உருண்டுதிரண்டு மேலும் கீழும் தொங்கும், மூன்றடி நீளக் காய்கள் கொண்ட பேய் அவரை. ஆங்காங்கே தேங்கியிருக்கும் நீர்க்கிடங்குகளோ, அமைதி காப்பவை. மனிதர்களையும் விலங்குகளையும் உயிருடன் உள்ளிழுத்துக்கொள்ளும் புதைமணல் குழிகள் எவை, நீர்நிறை கிடங்குகள் எவை என்பதை நாம் எவரும் கண்டுபிடிக்கவே இயலாது. மண்ணும் நீரும் உலர் இலைகளும் சேர்ந்து சதுப்புநிலத்தை மஞ்சளும் பச்சையும் சாம்பல் நிறமும் என்று ஒரு மாயநிலமாக மாற்றியிருந்தன. இந்தப் பகுதியை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே நடமாட முடியும். இயற்கையே தனது புண்ணை ரகசியமாக மூடி வைத்திருக்கும் இடத்திற்கு நீ ஏன் போகிறாய் என்று பெரியவர்கள் தொடர்ந்து எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சதுப்புநிலம் முடிந்தது என்று நாம் நினைக்கும் இடத்திலிருந்து சுண்டைக்காய் காடு ஆரம்பிக்கிறது. சுண்டைக்காய் காடானது, வாலறிவன்விளை கிராமம் கண்ணுக்கு கண்ணாகப் பாதுகாக்கும் ஒரு அபூர்வக் காடு. நான் தற்செயலாக படகுத்துறையில் பார்த்த, சதுப்புநிலக் காட்டிலேயே குடிசை அமைத்து வசிக்கும் கொன்னன் என்னை அழைத்துப் போகிறேன் என்றதால் நானும் கிளம்பிவிட்டேன். சாதாரணமாக கொன்னன் கடற்கரைக்கோ நகரத்திற்கோ எங்கும் வருவதில்லை. பகலெல்லாம் அவரது உள்ளங்கை வடிவத்தில் இருக்கும் மிகச்சிறிய படகில் சதுப்புநிலத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருப்பார். இரவில் மீன்களைச் சுட்டு உப்புத்தூவி சாப்பிட்டுவிட்டு, அவரே தயாரித்த மதுவைக் குடித்துவிட்டு குடிசையில் தூங்கிவிடுவார். சுற்றுலா வரும் மக்களில் ஏதாவது ஒரு ஜோடியை மட்டும் தன் படகில் ஏற்றிக்கொண்டு பாடிக்கொண்டே அலைவார். காடு முழுவதும் பரவியிருக்கும் ஒற்றையடிப் பாதைகள் வழியாக அவர்களை அழைத்துப்போய் அதிசய மரங்களைக் காட்டுவார். அவர்கள் கொடுக்கும் பணம் எவ்வளவு என்றாலும் வாங்கி முடிந்து வைத்துக்கொள்வார். அன்று தன் பழுதான படகுக்கு பலகை வாங்க படகுத்துறைக்கு வந்திருக்கிறார். என்னை அறிந்த படக்குக்காரர் ஒருவர் கொன்னனிடம் கூறி அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்.

உண்மையில் கொன்னன் அழைத்துவந்த வழியில் சதுப்புநிலமே இல்லை. பெரிய உப்பங்கழிகளும் அதை ஓட்டிச் செல்லும் மண் சாலையின் இருபுறத்திலும் பெரிய பெரிய மருத மரங்களும் நிறைந்த மிக அழகான பாதை அது. தென் கிடாரத்துக்கும் வட கிடாரத்துக்கும் இடையில் மாயன் கப்பல்துறை கூட இருந்தது. பெருமாயனின் 119 எண் கொண்ட கப்பல், அங்கே சிதலமடைந்து கிடப்பதை நாம் இன்றும் காண முடியும். கொன்னனிடம், “இப்படி ஒரு பாதை இருக்கிறதா” என்று கேட்டேன். அவர்  வாய்விட்டு பலமாக சிரித்தார். “நிலமும் கடலும் ஆகாயமும் நாமா உண்டாக்கினோம்? அது அப்படித்தான். ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு கடல் உண்டு; ஒரு நிலம் உண்டு; ஒரு பாதை உண்டு. உங்களுக்கு இந்தப்பாதை கிடைத்திருக்கிறது. என்னால் கிடைத்தது என்று நான்  கூறமாட்டேன். ஏனெனில் நான் சதுப்புநிலவாசி. இங்கே ‘என்னால்’ என்ற சொல்லுக்குப் பொருளே இல்லை. ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டிருக்கும் மாயநிலம் இது.”

கௌசல்யா கிளம்பிவிட்டாள். “என் கூடவே வர வேண்டாம். நான் கிளம்பி, இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு என் பின்னாலேயே வாருங்கள்.” ஒரு வேண்டுகோள் போலவே கூறினாள். நான் கௌசல்யாவைப் பின்தொடர ஆயத்தமானேன்.

“நாம் போகும் இடம் மிக விநோதமானது என்பதால் நாம் பேசாமல் மௌனமாகப் போக வேண்டும். தியானம் கூட செய்யாமல் வெறும் மனதுடன் போக வேண்டும். பாதை என்றால் பாதை அல்ல. எப்படி இருந்தாலும் நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வர வேண்டும்.”

கௌசல்யா, ஒப்பனை எதுவும் இன்றி மிக எளிமையான உடையில் இருந்தாள். அவள் செல்லும் இடம் குறித்து எதையும் யூகிக்க முடியவில்லை. வழக்கமாக, தோளில் தொங்கும் கைப்பை கூட இல்லை. கையில் பூஜைப் பொருட்களோ அலைபேசியோ எதுவும் இல்லை. அவள் கூறியபடி, அவளுடைய மனம் மட்டுமல்ல, மொத்தமாகவே அவள்  வெறுமையாய் இருக்கிறாள். ‘வெறுமையிலிருந்து வெறுமை தோன்றியது’ என்று என் வாய் முணுமுணுத்தது.

வீட்டைத் தாண்டி, சற்றுத் தள்ளி, தெருவின் ஓரமாக விலகிச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் இறங்கினாள். நானும் அவளைப் போலவே கவனமாக பாதையில் இறங்கினேன். பாதை மெல்ல மெல்ல சிறிய ஓடையாக மாறியது. வறண்ட ஓடையில் வழக்கமாக இருக்கும் மிருதுமணல் இல்லை. போகப் போக இருபுறமும் பாறைகள் தாறுமாறான வடிவில் ஈட்டி போலக்கூட நீட்டிக்கொண்டிருக்கும் பள்ளத்தாக்காக மாறியது. கௌசல்யா எனக்கு முன்பாக மிக உயரத்தில் சென்றுகொண்டிருந்தாள். எனது பாதையோ கீழே கீழே போனது. ஒரு சிறிய பொம்மையைப்போலத் தெரிந்தாள். மிக உயரத்தில், இன்னும் உயர உயர மிதந்து சென்றாள். வானம் அவளுக்கு சொந்தமானது என்பதைப்போல அநாயசமாக மிதந்தாள். எனது பாதையும் அவளது பாதையும் எங்கே போய் இணையும் என்று தெரியவில்லை. ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டேன். கௌசல்யாவின் தாமிரக்கன்னம் ஒளிர்ந்தது. அதன் தகதகப்பிலிருந்து ஒரு இளம்நீல மலர் என்னை நோக்கி மிதந்து வந்தது. அது எனக்கு மிகமிக நெருக்கமானதாக, என் சுவாசம் வழியாக என் நெஞ்சை மிருதுவாகத் தொட்டது. இனி நான் அவளது அடிமை என்று மகிழ்ச்சியாக உணர்ந்தேன்; இல்லை, பேரானந்தம் பெற்ற துறவியாக மாறிக்கொண்டிருந்தேன்.

கண்ணைத் திறந்து, மூச்சை இழுத்துக்கொண்டு எனக்காக விரிந்து நீளும் பாதையில் நடந்துகொண்டே இருந்தேன். “வேறு எங்கேயும் பார்க்காதே. உனக்குக் கிடைக்கும் பாதையை விட்டுவிடாமல் நடந்துகொண்டே இரு.” என்று என் காதருகில் வந்து ஒரு  மெல்லிய குரல் முணுமுணுத்தது. மூச்சுக் காற்றும் முகத்தில்பட்டது. கூந்தல் வாசம் நாசிக்குள் நுழைந்தது. கௌசல்யாவே தான். எல்லாக் குழப்பங்களும் நீங்கியவனாக, எங்கும் பார்க்காமல் என் பாதையில் நடந்தேன். பள்ளத்தாக்கை ஒட்டிய காட்டிற்குள் என் பாதை நுழைந்தது. இப்போது எனக்கு முன்பு செல்பவள் ஒரு சிறிய புள்ளியாகத் தெரிந்தாள். நாங்கள் இருவரும் ஒரே பாதையில் இருக்கிறோம் என்பதை நிச்சயப்படுத்த இயலாமல் தடுமாறினேன்.

காடு, மாபெரும் உயிரிபோல அசைந்துகொண்டிருந்தது. ஒரு சமயம் பெரும்விலங்கு போலும் ஒரு சமயம் ஒரு பெண்தெய்வம் போலவும் ஒரு சமயம் பெரும்மழை போலவும் பெரும்புயல் போலவும் என்னென்னவோ ஆகிக்கொண்டிருந்தது. நல்லவேளையாக காற்றின் ஒலியுடன் பறவைகளின் கீசுகீசுப் பாடல்களும் கலந்து காதில் தித்தித்தது. புலப்படாத மோகினிகளின் முத்தங்களால் வாய் முழுவதும் எச்சில் நிறைந்தது. மறுமுத்தத்திற்குத் தேவையான அளவு ஊறித் திரண்ட எச்சிலை, விழுங்கி விழுங்கி என் மர்ம தாகம் நீங்கியது. ஆனால் இருபுறமும் இருந்த விருட்சங்கள் நிம்மதியிழந்து சுழன்று சுழன்று ஆடின. புராதன மரங்களின் விழுதுகள் பதினாறு திசைகளிலும் பரவின. எதையோ புரிந்துகொண்டவனாக, கௌசல்யாவைத் தவிர வேறு எதையும் பார்க்கக்கூடாதவனாக, கௌசல்யா என்ற புள்ளியை நோக்கி நான் முன்னேறிக்கொண்டே இருந்தேன்.

ங்கே, இந்தப்பக்கம் வாருங்கள். அப்படியே இடதுபுறம் திரும்புங்கள்.” திரும்பிவிட்டேன். இது கௌசல்யாவின் குரல் இல்லை. ஒடிசலான முதியவர் ஒருவர் அங்கே நின்றிருந்தார். அங்கே ஒரு கிணறு தெலாக்கல்லுடன் இருந்தது. இரும்புவாளி, தெலாக்கல் நிற்கும் பட்டியல் கல்லை ஒட்டிப்  பதிக்கப்பட்டிருந்த கருங்கல்மீது ஊன்றி நின்றதால், தன் இல்லாத கைகளை விரித்தவாறு தெலா ஆகாயத்தைத் துழாவி நின்றது. கயிறு இல்லாமல் ஏதோ ஒரு நீண்ட பிரம்பு – சதுப்புநிலங்களிலும் மலைக்காடுகளிலும் காணலாம் – தெலாக்கயிறாக இருந்தது. பெரும்பாலும் நந்தவனங்களிலும் வெற்றிலைக் கொடிக்கால்களிலும் உள்ள கிணறுகளில் இப்படித்தான் ஒரு பிரம்போ அகத்தி வரிச்சியோ, கயிற்றுக்குப் பதிலாக இருக்கும். வழுவழுப்போ சொரசொரப்போ இல்லாமல் பிடிக்க ஏதுவாகவும், தெலா கோட்டம் அடைந்து விலகிச் சென்றால் அணைந்து நேராகச் செலுத்தவும் மிக எளிதாக இருக்கும். எங்கள் உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் இருந்த நந்தவனத்தில் இப்படியொரு தெலாக்கிணறு இருந்தது.

“தம்பி, அப்படியே தண்ணீர் இறைத்து முங்கக் குளித்துவிட்டு ஈர உடைகளைப் பிழிந்து அணிந்துகொண்டு வாருங்கள்.” என்றார்கள். “தண்ணீரில் முழுவதுமாக திளைக்கத் திளைக்க நனைய வேண்டும். நீரின் புத்துணர்ச்சியால் உங்கள் உடலின் ஒவ்வொரு புள்ளியும் தூண்டப்பட்டு, பெருவெளி வழியைக் காண்பதற்கான உத்வேகத்தையும் உற்சாகத்தையும் நீங்கள் பெற வேண்டும்.” முதியவர் பேசியதும், ஏதோ அதிசயம் நிகழப்போவதாக எனக்குத் தோன்றியது. வாளியில் கொஞ்சமே இருந்த நீரைக் கொட்டிவிட்டு தெலாவைப் பிடித்து வாளியை மெல்ல கிணற்றுக்குள் தாழ்த்தினேன். காலியான வாளியை கிணற்றுக்குள் இறக்குகையில் நமது பலமும் பலமின்மையும் மட்டுமல்ல, நமது மனநிலையும் பரிசீலிக்கப்படுகிறது. எல்லா வகையிலும் சமநிலையை எட்டும்போது, தெலாவின் வாளி சரசரவென்று இறங்குவதும் ஏறுவதுமாக, தொட்டி நிறைகிறது. புதிய நீரின் குளிர்ச்சி சலசலக்கிறது. ஆழப் பாறைகளில் இருந்து பொங்கிவரும் ஊற்றுகளின் நன்னீரோட்ட சலசலப்பு தண்ணீருடன் எங்கெங்கும் பயணிக்கிறது. நீரை மொண்டு மொண்டு தலை வழியாக ஊற்றி ஊற்றி, இன்னும் இன்னும் என்று திளைக்கத் திளைக்க மூச்சுவாங்கி, போதும் என்று நிறுத்தினேன். துணிகளைப் பிழிந்து உலர்த்திக்கொண்டு எந்த அவசரமும் இல்லாதவனாக காற்றை உணர்ந்துகொண்டு நின்றேன். நீரால் உடலைக் கரைக்க முடியாதெனினும், மனம் கரைந்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் பின்னணி போல கடலின் அலைச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

“அப்படியே உடைகளை அணிந்துகொண்டு, வந்தவழியில் நடந்து பிரதான வாயில் வழியாக வாருங்கள். உங்கள் பெண் அங்கே படிகளில்தான் உட்கார்ந்திருக்கிறாள்.” இது வேறு ஒரு குரல். நல்ல திடகாத்திரமான முதிய பெண்மணியொருவர் சுற்றுச் சுவரிலிருந்த தேர்ச்சக்கர வடிவிலிருந்த சூரியசாளரம் வழியாகப் பேசினாள்.

உலர்ந்தும் உலராத உடைகளை அணிந்துகொண்டு வாசல் பக்கம் வந்தேன். உட்புறப் படிகளில் கௌசல்யா உட்கார்ந்திருக்கிறாள். கோவில்களில் ஏதாவதொரு வேண்டுகோளின் பிடிவாதத்துடன் வயணம் காப்பவர்கள் போல இருந்த சிலருடன் கௌசல்யாவும் இருந்தாள். பெருங்கோடை காலத்தில் இருக்கண்குடித் தாய் முன்னால், பெண்கள்  ஒரு சிறிய கூட்டமாக வயணம் காப்பதை நான் பார்த்திருக்கிறேன்.     கௌசல்யாவும் 48 நாட்கள் விரதம் இருந்ததாகக் கூறியிருந்தாள். எனது அம்மாவும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் விரதம் இருப்பாள். விரத வைராக்கியம் என்பது ஒரு உளவியல் சிகிச்சை. துயரங்களால் துவண்டுபோன பலவீனமான எளிய உள்ளங்களை, திடப்படுத்தும் பயிற்சி என்றே கருத வேண்டும் என்று அம்மா கூறியிருக்கிறாள். அம்மாவின்  அம்மாவான அம்மாயி, தானொரு சமணத்துறவி என்பதாகக் கூறியிருந்தாள். துவரங்குறிச்சிதான் அம்மாவின் பூர்வீகம். அவர்களுடைய குடும்பம் சமணம் சார்ந்ததாக இருந்தது. தினமும் வீடுகளில் மாலைப்பொழுதில் விளக்கேற்றும் வழக்கம் சமணர்கள் மூலமே பரவியது என்று அம்மா கூறியதை எங்கள் ஊரில் ஒருவரும் நம்பவில்லை. அதுபோல் உண்ணாநோன்பு என்பதும் சமணருக்குரியதாம். இந்தப் பெருவழி மையமும் ஒரு சமண அல்லது பௌத்த ஸ்தலம் போலவே  இருக்கிறது.

ஈர வேட்டியில் நிற்கும் என்னை, திகைத்துப் பார்த்தாள். கௌசல்யாவும் குளித்து ஈரப்புடவையில் ஏதோவொரு குகையில் பார்த்த ஓவியமாக, விவரிக்க முடியாத சாயலில் நின்றிருந்தாள். கௌசல்யாவின் கண்களில் பெரும் வித்தியாசம் தெரிந்தது. அலுவலகத்தில் பார்க்கும் கௌசல்யா இல்லை இவள். “சரி போகலாமா?” என்றாள். போகலாம் என்று அவள் பின்னால் நடந்தேன்.

கோபுரம் மிக அருகில் இருந்தது. பெருவெளி மையம் முழுவதும் மரங்களும் செடி கொடிகளும், மலர்வனமுமாக இருந்தது. தெலாக் கிணறில் சிந்தும் நீர் அங்கே வாயக்கால்களில் பாய்ந்துகொண்டிருந்தது. கோபுர வாசலில் நுழைந்ததும், கோவிலைத் தாங்கி நிற்கும் ஒரு எண்கோணக் கருங்கல் பீடம் இருந்தது. பீடத்தின் தென்மேற்கு மூலையிலிருந்து படிகள் உட்புறமாக உயர்ந்து சென்றன. கோபுரம் என்பது, மேலேறும் கிணறு என நினைத்துக்கொண்டேன். கருங்கல் பீடத்தில் படிகள் போக எஞ்சியிருந்த இடத்தில் பெண்கள் எல்லாரும் குழுமி இருந்தார்கள். கௌசல்யாவோ கடைசிப்படிக்கு அருகில் கருங்கல் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவள் அமர்ந்திருந்த விதம், இதுவரையிலும் கண்டிராத ஏதோவொரு புதிய சாயலில் இருந்தது. நான் எதற்கென்று தெரியாமலே மெல்ல புன்னகைத்தேன். கௌசல்யாவும் வழியனுப்பவது போன்றதொரு  புன்னகையை உடனே திருப்பி அனுப்பினாள். எல்லாம் நல்லவிதமாக நடக்கிறது என்று நிம்மதியாக இருந்தது.

படிகள் ஏறுவது ஒரு சுகானுபவமாக இருந்தது. ஏறும் சிரமமே தெரியாத அப்படியொரு குளுமையான, விசாலமான கருங்கற்படிகள் அவை. ஓரத்தில் பெரிய பெரிய ஜன்னல்கள் இருந்தன. ஜன்னல்கள் வழியாக மிக அருகில் இருக்கும் கடலைப் பார்க்க முடிந்தது. உற்றுக் கவனித்தால் அலைகளின் ஓயாத சத்தம் கேட்டது. மழைக்காற்று போல குளிர்ந்த காற்று கோபுரத்துள் ஏகத்துக்கும் நுழைந்து வெளியேறியது. படிகள் முடிய இருந்த இடத்தில் ஆகாயம் தெரிந்தது. “நீங்கள் பெருவழி முற்றத்துக்கு வந்துவிட்டீர்கள். சற்று நேரம் ஆகாயத்தையும் கடல் காற்றையும் அனுபவியுங்கள். நன்கு சுற்றிப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்த இடத்தில் உட்கார்ந்து பிடித்த காட்சிகளைப் பாருங்கள். மாறி மாறியும் உட்கார்ந்துகொள்ளலாம். பெருவழித் தியானம் என்பது, ஒரே இடத்தில் அமர்ந்து செய்வது இல்லை. விரும்பியதையெல்லாம் விரும்பியவாறு பார்த்துக்கொண்டிருப்பதுவும் தியானமே.”

கடற்கரையோரமாக இருந்த சதுப்புநிலக் காடுகள் தெரியும் இடத்தில் நான் உட்கார்ந்துகொண்டேன். வரும்போது பெரும் மர்மமாகவும் திகைப்பூட்டுவதாகவும் இருந்த சதுப்புநிலக்காடு பெரும் அன்பை அள்ளித்தரும் மௌனத்தில் இருந்தது. காடுகளை ஒட்டிய நீண்ட  அழகழகான கடற்கரை மணற்பரப்பில் சிறுவர்களும் சிறுமிகளும் பலவகையான விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தார்கள். பல சிறிய மரக்கலங்கள் கடலில் நின்றன. சிறிய படகுகளில் இருந்து வெங்காயம், மிளகு, வெள்ளைப்பூண்டு, வத்தல் மூடைகளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

ந்த சதுப்பு நிலத்தில்தான் கௌசல்யாவின் கணவர் குருநாதன் இறந்து கிடந்தார். குருநாதன் இளநிலைப் பொறியாளராக நேரடியாக நியமனம் பெற்றிருந்தார். நகருக்கு குடியேறயாமல் வாலறிவன்விளை கிராமத்திலிருந்து பெரிய பைக் ஒன்றில் தினமும் வந்துசென்றார். நகரத்திலிருந்து செல்லும் நெடுஞ்சாலை வழியாக ‘அலையாடி’ என்னும் ஊர் வழியாக சாலை மார்க்கமாக வாலறிவன்விளைக்கு சென்றுவிடலாம். 15 கிலோமீட்டர். பைக்கில் செல்ல 20 முதல் 25 நிமிடம் ஆகும். சுண்டைக்காய் காடு வழியாக ஒரு சிறிய சாலை இருந்தாலும் அதை யாரும் பயன்படுத்துவதில்லை. சுண்டைக்காய் காட்டிலிருந்து சதுப்புநிலம் செல்லாமலேயே காயல்கரை வழியாக அலையாடி சென்று நகரம் வந்துவிடலாம். பெற்றோரோடும் உடன் பிறந்த தம்பி தங்கைகளோடும் கிராமத்தில் வாழ்வது பெரிய கொடுப்பினை என்பார். எங்களுடையது, அடிக்கடி தொழில்நுட்பம் மாறிக்கொண்டிருக்கும் துறை என்பதால் குருநாதனைப் போன்ற இளம் பொறியாளருக்கு மிகப்பெரிய தேவை இருந்தது. புதியதொரு தொழில்நுட்பத்தை நிறுவுதல், அவற்றைப் பராமரித்தல், உடனுக்குடன் பழுது நீக்குதல் என்று எல்லா வேலைகளிலும் நல்ல பெயர் எடுத்திருந்தார். குடும்பம் ஒரு நிலையான தன்மையை அடைந்தவுடன் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு நெருங்கிய சொந்தக்காரப்பெண். பட்டப்படிப்பு வரை படித்திருந்தார். அது போதும் என்று எளிமையான முறையில் திருமணம் நடந்தது. அவர்களுடைய ஊர் வழக்கப்படி, தெரு முழுவதும் பந்தல் போட்டு, வீட்டு முற்றத்தில், பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து மாலை மாற்றிக்கொண்டு மாங்கல்யம் அணிந்து திருமணம். அலுவலகத்தில் இருந்து நெருங்கிய நண்பர்களை மட்டுமே அழைத்திருந்தார். திடீரென ஒருநாள் குருநாதன் சதுப்புநிலக் காட்டில் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. அவரது பைக் காயல்கரையில் கிடப்பதாகவும் கூறினார்கள்.

காலையில் வேலைக்குக் கிளம்பியவரை வழிமறித்து அரிவாளால் முகத்தில் வெட்டியிருக்கிறார்கள். பிறகும் வெறிகொண்டு ஏராளமான இடத்தில் வெட்டியிருக்கிறார்கள். வீழ்ந்தவரை சதுப்புநிலக்காடு வரையிலும் இழுத்துச் சென்றிருக்கிறார்கள். சதுப்புநிலத்தின் புதைமணற்குழியொன்றில் ஆழ்த்திவிடும் திட்டம் எதனாலோ நிறைவேறாமல் ஓடிவிட்டார்கள். ரத்தம், காயல் கரையிலிருந்து நெடுக திட்டுத்திட்டாக பெருகி உறைந்திருந்தது. குருநாதனைப் பொறுத்தவரை பகையென்று யாருமே இல்லை. பிறகு யார் அவரைக் கொலை செய்தார்கள்? எல்லாம் மர்மமாக இருந்தது. ‘அலையாடி’ ஊரில் இருந்த காவல்நிலையம் விரைந்து செயல்பட்டபோதும் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சதுப்புநிலக் காடுகளுக்குச் சொந்தமான கொன்னன்தான் இந்த செய்தியை ஊருக்குக் கொண்டுவந்தார். காவலர்கள் தங்கள் வழக்கப்படி கொன்னனையே சந்தேகப்பட்டார்கள். ஆனால் மோட்டிவ் எதுவும் இல்லை என்பதால், நல்லவேளையாக அவரை அடித்துத் துவைக்காமல் விட்டார்கள். மேலும் அந்தப் பகுதி மக்கள் எல்லாருமே கொன்னனை ஒரு காவல் தெய்வம் போலவே கருதுகின்றனர் என்பதையும் கணக்கில் கொண்டார்கள். குருநாதனின் அலுவலகத்தில்தான் கௌசல்யா, கருணை அடிப்படையிலான வேலைக்கு முயற்சி செய்தாள்.

விசாரணை என்ற பெயரில் அவளை பல மாதங்களாக இழுத்தடித்தார்கள். பட்டப்படிப்பு படித்தவளுக்கு கூட்டிப் பெருக்கும் ‘ஹவுஸ் கீப்பிங்’ என்னும் ‘டி’ பிரிவு வேலை தருகிறேன் என்றார்கள். பிறகு குடும்பத்துக்கு சொந்தமாக நிறைய சொத்து இருக்கிறது என்றார்கள். சளைக்காமல் அப்பீல் மேல் அப்பீலாக அனுப்பிக் கொண்டிருந்தாள். பேப்பர் எந்த அதிகாரியிடம் நிற்கிறதோ அந்த அதிகாரியை நேரில் சந்தித்து காலில் விழுந்து கெஞ்சினாள். மூன்றாவது முறை அப்பீல் மீதான விசாரணை அதிகாரியாக எனது நண்பர் சென்னையிலிருந்து வந்திருந்தார். விதிகளின்படி மனுதாரர் குடியிருக்கும் இடத்தில் நடத்தப்பட வேண்டிய விசாரணை, எந்தத் தலையீடும் இல்லாமல் வாலறிவன்விளையில் நடந்தது. ஊரே கூடிவிட்டதால் கௌசல்யா அடிபட்ட குருவியைப் போல ஒடுங்கியிருந்தாள்.

துறையிலுள்ள ஏதோவொரு பெரிய அதிகாரியின் தயவால் கௌசல்யாவுக்கு முதலில் தற்காலிக வேலை கிடைத்தது. தினமும் ஆறு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். தினமும் வேலை செய்தால் கணிசமான அளவுக்கு சம்பளம் கிடைக்கும். அதுவும் கௌசல்யாவுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவின் பொறுப்பாளர் நினைத்தால்தான் தினமும் வேலை கிடைக்கும். தற்காலிக ஊழியர்களுக்கான பணி ஒதுக்கீடு அட்டை, முதல்நாள் நான்கு மணிக்கு மனிதவளப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும். அதைப் பார்த்து, அதில் பெயர் இருந்தால் மட்டுமே மறுநாள் வேலைக்கு வரவேண்டும். அதையும் சமாளித்தாள். சிரமங்கள் உண்டாகும் ஒவ்வொரு முறையும் அவள் என்னிடம் வந்தாள். அலுவலகத்தில் பலரது கண்களும் ஐயத்துடனே எங்களைப் பரிசீலித்தன. எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொண்டோம். ஒரு ஆண்டுக்குப் பிறகு, அவளுக்கு முறையான வேலை கிடைத்திருக்கிறது.

பெருவெளிக் கோபுரத்தில் நான் மட்டுமே இருந்தேன். நெஞ்சில் எந்த இறுக்கமும் இல்லாமல் மனம் லகுவாகிக்கொண்டே வந்தது. காற்றின் பரசுத்தம் காரணமாக மூச்சுவிடுவது சுலபமாகியது. தெலாக்கிணற்று நீர் போல எல்லாம் தெள்ளத் தெளிவாக இருந்தது. திடீரென ஒரு குரல் ஒலித்தது.

“பெருவழிக்கோபுரம் உங்களை வரவேற்கிறது.”

“தூய மனிதர்கள் மட்டுமே இக் கோபுரத்தின் படிகளை மிதித்து ஏற முடியும். எனவேதான் உங்களை வரவேற்கிறோம்.”

“எனக்கு அப்படியொரு தகுதி இருக்கிறதா?” மனம் சிலிர்த்தது.

“இந்தக் கோபுரத்தின் உச்சி வெட்டவெளிக்கு வந்தவுடனே நீங்கள் கௌசல்யாவின் கணவராகும் தகுதியைப் பெற்றுவிட்டீர்கள். உங்களுக்கு சம்மதம் தானே.”

“……..”

அந்த நாளில், பெருவழிக் கோபுரத்தின் கருணையால் ஒரு அதிசயம் நடந்துவிட்டது. கௌசல்யாவின் கண்களுக்கு மட்டும் நீங்கள் குருநாதனாகவே காட்சி அளிப்பீர்கள். மற்றவர்களைப் பொறுத்தவரை நீங்கள், நீங்களே.”

“அது… அது…”

“இது கௌசல்யாவின் வேண்டுதல். அதற்காகத்தான் அவள் விரதம் இருந்தாள். பெருவழியின் எல்லா சோதனைகளையும் நீங்கள் இருவரும் கடந்து வந்துவிட்டீர்கள். இப்போதிருந்து நீங்கள் கௌசல்யாவின் கணவர்; உங்கள் மனைவியைக் காண நீங்கள் கீழே போகலாம். இதர விவரங்களை அவரே உங்களிடம் கூறுவார்.”

குரல், கடல் அலைகளுடன் கலந்து ஓங்கி ஒலித்தது. மெள்ள, கீழே இறங்கத் தொடங்கினேன்.

படிகளில் என்னைப் பார்த்தவுடன் கௌசல்யா ஓடி வந்தாள். என்னைப் பார்த்து திகைத்து நின்றாள். கீழே இறங்கி அவளருகில் செல்வதற்கு முன்பே, “மாமா..” என்று சத்தமிட்டு அழுதவள், என்னருகில்  விழுந்து சுருண்டுகொண்டாள். நான் குனிந்து, “கௌசல்யா, நான் உனக்கு மட்டும்தான் குருநாதன். பெருவழி என் உருவத்தை மாற்றிவிட்டது. மற்றவர்கள் முன்னால், நீ இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உனது உணர்வுகளை வேறு எவரும் புரிந்துகொள்ள முடியாது. இதை நாம் யாரிடமும் சொல்ல வேண்டியதும் இல்லை. இந்த உருமாற்றம் மிக அந்தரங்கமானது.”

நான் கூறியதை கௌசல்யா சட்டெனப் புரிந்து கொண்டாள். சுருண்டு கிடந்தவள், எழுந்து உட்கார்ந்து மெல்லப் புன்னகைத்தாள். என் கைகளைப் பிடித்துகொண்டு உற்சாகமாக எழுந்து நின்றாள். “புரிகிறது.” என்றாள். “நம் இருவருக்கும் இடையிலான அந்தரங்கம் குருநாதனையும் உள்ளடக்கியது. நீங்கள் முழுதுமாக என்னை ஆட்கொண்டுவிடும் ஒரு தினத்தில் உங்களுடைய உருமாற்றம் நீங்கிவிடும். அப்படித்தானே?” என்றாள். “நிச்சயமாக அப்படித்தான். அதை நோக்கிய நமது பயணம் வெற்றிபெறும் என்னும் நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது.”

பக்கத்தில் இருந்த பெண்கள் எல்லாரும் எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். “இப்போது நீங்கள் இருவரும் கணவன் மனைவி ஆகிவிட்டீர்கள்.” என்றாள் ஒருத்தி. “கிழக்கே பார்த்து நின்று இந்த மாலைகளை அணிந்து மாற்றிக் கொள்ளுங்கள்.” என்று முதியவள் இரண்டு மலர்மாலைகளை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டுவந்து கொடுத்தாள். இருவரும் மாலைகளை அணிந்து, மாற்றிக் கொண்டோம். எல்லாரும் மலர்களைத் தூவி குலவையிட்டு வாழ்த்தினார்கள்.


 

எழுதியவர்

சமயவேல்
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகிலுள்ள வெம்பூர் கிராமத்தில் பிறந்த சமயவேல் இந்திய ஒன்றிய அரசின் தபால் மற்றும் தொலைத் தொடர்பு துறையில் பொறியாளராக பணிபுரிந்து ஒய்வுப் பெற்றவர்.

தமிழிலக்கியத்தில் இதுவரை
காற்றின் பாடல் (1987),
அகாலம் (1994),
தெற்கிலிருந்து சில கவிதைகள் (தொகை நூல்),
அரைக்கணத்தின் புத்தகம் (2007),
மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் (2010),
பறவைகள் நிரம்பிய முன்னிரவு (2014),
இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? (2019),
சமகாலம் என்னும் நஞ்சு (2021) ,
ஆகிய கவிதைத் தொகுப்புகள் ;

இனி நான் டைகர் இல்லை (2011) சிறுகதைத் தொகுப்பு;

ஆண்பிரதியும் பெண்பிரதியும் (2017),
புனைவும் நினைவும்: வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம் (2018), ஆகிய கட்டுரைத் தொகுப்புகள் மற்றும்

அன்னா ஸ்விர் கவிதைகள் (2018),
குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள் (2019),
மரக்கறி (The Vegetarian), கொரிய நாவல்,
இலையுதிர்கால மலர் வாடுவதும் இல்லை வீழ்வதும் இல்லை (நவசீனக் கவிதைகள்) 2021, ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களை எழுதி உள்ளார்.

2021- ஆம் ஆண்டு முதல் 'தமிழ்வெளி' எனும் காலாண்டு இலக்கியச் சிற்றிதழின் ஆசிரியராகவும் உள்ளார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x