28 May 2024

பிரதிபா எப்போதும் பல சாகசங்களைச் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தாள். அவளுக்குக் குதிரை ஏற்றம் தெரியும் என்பதால் குதிரை சவாரி செய்து பல இடங்களுக்கும் சென்று வருவாள். பிரதிபா தன் பயணங்களை எப்போதும் எழுதி வைப்பாள். அவற்றை வெறும் பயண அனுபவங்களாக எழுத அவளுக்குப் பிடிப்பதில்லை. அதனால் பல சரித்திரப் புதினங்களையும் சாகச புதினங்களையும் வாசித்து அதில் வருவது போன்ற வர்ணனைகளுடன் தன் பயண அனுபவங்களை எழுத விரும்பினாள். 

அவளுக்குத் தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம் மிகவும் பிடித்துவிட்டது. அந்தக் கதையின் நாயகன் பிரதாப முதலி என்ற பெயர் தனது பெயர் போல் ஒலிப்பதாலும் அந்தப் புதினத்தில் அந்தப் பாத்திரம் செய்யும் சாகசங்கள் யாவும் இவள் செய்தது போலக் கற்பனை செய்து கொண்டும் அந்தப் புதினத்தை வாசித்தாள். அவளுடைய சாகசங்களும் அந்தப் புதினத்தில் வந்த சாகசங்களை ஒட்டி இருந்ததால் அதைத் திரும்ப எழுதுவது என முடிவு செய்தாள். அந்தப் புதினத்தை வாசித்ததை அப்படியே எழுதவேண்டும் என்பதே அவள் திட்டம். ‘என்னுடைய பெயரைச் சொல்ல எனக்கே சங்கோசமாக இருக்கிறது. ஏனென்றால் அந்த நாமத்துக்குத் தகுந்த குணம் என்னிடத்தில் இல்லை. மேலும் என்னுடைய பெயரை எழுதி நீட்டினால் காதவழி தூரம் நீளும்; இந்தப் புஸ்தகம் அந்தப் பெயருக்கே சரியாயிருக்கும். ஆகையால் என்னுடைய பெயரைச் சுருக்கி பிரதிபா முன்னி என்று எல்லோரும் என்னைக் கூப்பிடுவது வழக்கம்.’ இப்படி எழுதிவிட்டு அதைத் திரும்பத் திரும்ப வாசித்துப் பார்த்தாள். அவளுக்கு ஓரளவு திருப்தி ஏற்பட்டது. 

இனி தன் சாகசங்கள் எல்லாம் அந்தப் புதினத்தில் வருவது போலவே இருக்கவேண்டும் என ஆசைப்பட்டாள். ஏதாவது ஓர் அதிகாரப் பதவி கிடைத்தால் தன் சாகசங்களை நிகழ்த்தவும் அதை எழுதவும் அதை வாசிப்பவர்களுக்கு ஆர்வமூட்டும் படி இருக்கவும் உதவும் என ஏக்கப்பட்டாள். உடனே ஓர் அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலில் நின்று பணத்தை வாரி இறைத்து மேயர் ஆனாள். அலுவலகத்திற்குக் குதிரையில் சென்றாள். அன்றாட நடவடிக்கைகளைத் தனது சாகசத்திற்குரியவைகளாக மாற்றினாள். அவற்றைப் புதினமாக எழுதிவந்தாள். எல்லோரையும் விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படிச் செய்யப் பெரும்பாடுபட்டாள். 

ஒரு நாள் ஒரு பெண் தன்னைப் போலவே குதிரையில் சவாரி வருவதைப் பார்த்து அவளுடன் பேசத் தொடங்கினாள். அவள் பெயரும் பிரதிபா என்று அறிந்து மிகவும் மகிழ்ந்து போனாள். தான் எழுதும் புதினத்தின் கதாநாயகியை நேரில் கண்டது போல் புளங்காகிதம் அடைந்தாள். இருந்தாலும் தன் புதினத்தில் அந்தப் பாத்திரத்தை ஆணாகப் படைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என யோசித்தாள். தான் சந்தித்த தன் கதையின் நாயகி, ஆணாக இருந்திருந்தால் தான் திருமணம் செய்துகொள்ள ஏதுவாக இருந்திருக்கும் என நினைத்தாள். அப்படி எண்ணுவதே அவளுக்குக் குதூகலத்தையும் இன்பத்தையும் தந்தது. அந்தப் பெண்ணை வீட்டுக்கு அழைத்துப் பேசவேண்டும் என முடிவு செய்தாள். 

ஒரு நாள் அவளைத் தன் வீட்டுக்கு அழைத்தாள். அவள் குதிரையை விட்டு இறங்கி வீட்டுக்குள் வந்தவுடன் அவளிடம் பெரும் மாற்றம் இருப்பதைக் கவனித்தாள். அவள் தலைப்பாகை அணிந்திருந்தாள். அதைக் கழற்றச் சொன்னாள். அவள் திரும்பி நின்று தலைப்பாகையைக் கழற்றினாள். அவளுக்குக் குட்டை முடி இருந்தது. இவள் பக்கமாகத் திரும்பினாள். இவளுக்கு அதிர்ச்சியில் மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது. திரும்பியது அவளல்ல அவன். என் பெயர் பிரதாபன். என் சரித்திரத்தை எழுதி வருகிறேன். அதில் வந்த சாகச நாயகி நீதான். நீ என்னைத் திருமணம் செய்துகொள்வாயா என்றான். இவள் மகிழ்ச்சியில் பேச முடியாமல் மௌனமானாள்.

அதன் பிறகுதான் வந்தது வினை. அவள் தன் இலட்சிய நாயகனைக் கணவனாக அடைந்துவிட்டதான கற்பனையில் மிதந்தாள். உடனடியாக மேயர் பதவியை ராஜினாமா செய்தாள். திருமணம் முடிந்த இரவு, தன் இலக்கை எப்படி அடைந்தாள் என்பதை மிகவும் ஆர்வம் ஏற்படும் வகையில் கதையாக எழுதிக் கொண்டிருந்தாள். கதவு திறந்தது. அவன்தான் வருவான் என்ற உறுதியில் அவள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அவளுடைய கற்பனை உண்மையானது குறித்த பெருமிதத்தில் ஆழ்ந்து அதை எப்படியாவது அழகான கதையாக மாற்றிவிடும் துடிப்பில் எழுதிக் கொண்டிருந்தாள். சட்டென்று அவள் கை பாட்டுக்கு எழுதிக் கொண்டிருந்து. அவளுடைய கட்டுப்பாடில்லாமல் கை இயங்கிக் கொண்டிருந்தது. அவளுக்கு அதுவும் ஒரு புது அனுபவமாக இருந்தது. தன் கற்பனையின் ஒரு கூறு என்று எண்ணி பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். சில மணித்துளிகளுக்குப் பின்தான் அவளுக்கு அது அசாதாரணம் என்று உறைத்து தன் கையை நிறுத்தப் போராடினாள். முடியவில்லை.

தன் பின்புறத்தில் ஏதோ நிழலாடுவதைக் கவனித்தாள். திரும்பிப் பார்த்தாள். யாரும் இல்லை. கதவு திறந்திருந்தது. எழுந்து வந்து வெளியே எட்டிப் பார்த்தாள். அங்கும் யாரும் இல்லை. கதவு எப்படித் திறந்திருக்கும் என்று புரியாமல் விழித்தாள். உள்ளே திரும்பினாள். கதவு சட்டென்று தானாகவே சாத்திக் கொண்டது. முதல் முறையாக அவளுக்குப் பயம் வந்தது. காற்று வந்து அடைத்திருக்கும் என்று சமாதானப்படுத்திக் கொண்டாள். தன் கட்டிலில் வந்து அமர்ந்துகொண்டாள். இன்னும் ஏன் அவன் வரவில்லை என்று நினைத்தாள்.

கதை எழுதும் ஆர்வம் முற்றிலும் இல்லாமல் போயிருந்தது. தன் கைப்பேசியை எடுத்து அவனுடைய எண்ணுக்கு அழைத்தாள். மணி அடித்துக் கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை. அதை அருகில் வைத்துவிட்டு வேறு யாருக்காவது பேசலாமா என்று யோசித்தாள். கைபேசி அடித்தது. அவன்தான் பேசினான். ஏன் வரவில்லை என்றாள். இன்னும் சில நிமிடங்களில் வருவதாகச் சொன்னான். நிம்மதியானாள். ஆனாலும் அவளுக்குள் ஏதோ ஒரு சந்தேகம் நிழலாடியது. அப்படியே படுக்கையில் சாய்ந்தாள். தூங்கிப் போனாள்.

அடுத்த நாள் கண்விழித்த போது அவன் வந்தானா இல்லையா என்றே தெரியாமல் தான் தூங்கிப் போனது நினைவுக்கு வந்தது. எழுந்து பார்த்த போது அவன் வந்து போன சுவடே இல்லை. கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். அவன் ஒரு காணொலிச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தான். 

நான் பல முறை எண்ணிப் பார்த்தேன். நாம் இருவரும் நம் கதைகளில் வரும் கதாபாத்திரங்களாக இருக்கவே திருமணம் புரிந்துகொண்டோம். நமக்குள் மற்ற எந்தப் புரிதலும் இல்லை. ஒருவர் மீது மற்றொருவர் கதையின் புனைவைக் கொண்டு அதிகாரம் செலுத்த விரும்புகிறோம். அதைச் செயல்படுத்துவதில் இருக்கும் துடிப்பைக் கொண்டு நாட்களைக் கடத்த நினைக்கிறோம். இது வெறும் விளையாட்டு. இது நெடுநாள் நீடிக்காது. அதனால் இப்போதே நாம் பிரிந்துவிடுவோம். உன் கதைகளை நீ எழுது. என் கதைகளை நான் எழுதுகிறேன். நான் வெளிநாடு செல்கிறேன். என் முடிவை ஏற்பாய் என நம்புகிறேன்.

காணொலி முடிந்தது. இவளுக்கு அது பெரும் அதிர்ச்சியாக இல்லை. தன் கதை விளையாட்டில் ஒரு பகுதி போலவே இருந்தது. அடுத்த கட்டத்தைக் குறித்து சிறிது நேரம் கழித்து சிந்திக்கலாம் என நினைத்து வேலைகளில் மூழ்கினாள். இரவு திரும்பி வந்து தன் கணினியைத் திறந்து மீண்டும் விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடர்ந்தாள்.

தன் கதையில் வந்த ஒரு பாத்திரம் அவன். அவனைத் திருமணம் செய்ய நினைத்திருக்கக்கூடாது. இப்போது அவன் விலகிப் போனது சரியான முடிவுதான். ஆனால் கதைக்கு அது வேறொரு திசையைக் காட்டியிருக்கிறது. அவன் என்ன ஆகவேண்டும், எப்படி வாழவேண்டும் என இனி எழுத முடிவு செய்தாள்.

பனிபெய்து கொண்டிருந்த நகரத்தின் வீதி ஒன்றில் அவன் நடந்து கொண்டிருந்தான். அன்று வெளிச்சமே இல்லாமல் இருந்தது. அவனுக்கு இந்த ஊருக்கு வந்தது தொடக்கத்தில் பிடித்திருந்தாலும் பிறகு வெறுப்பாகிவிட்டது. மீண்டும் தன் ஊருக்கே திரும்பலாம் என்றால் தன் திருமண முறிவு குறித்துப் பலரும் பேசுவார்கள் என்பதால் அதைக் கைவிட வேண்டியிருந்தது. சில நாட்கள் இங்குப் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்துவிட்டு அதன் பின் திரும்பிச் சென்றுவிட வேண்டும் என நினைத்துக் கொண்டே நடந்தான். எதிரே ஒரு பெண் வருவதைக் கண்டு நகர்ந்தான். சட்டென்று திரும்பிப் பார்த்தான். அவளேதான். இங்கு ஏன் வந்திருக்கிறாள் என்று சிந்திக்கத் தொடங்கினான். அவள் இவனைக் கண்டுகொள்ளவில்லை. இவனைப் பார்க்காதது போல் அவள் சென்றுவிட்டாள். இவனுக்கு மனம் அலைபாய்ந்தது. தான் கதை எழுதுவதை நிறுத்திய பின்னும் இவள் தொடர்கிறாள் என்று எண்ணினான். 

அவள் நினைப்பிலிருந்து மீண்டு அலுவலகம் நோக்கிக் கிளம்பினான். கணினித் திரையில் தட்டச்சு செய்துகொண்டிருந்த போது இவனைக் காணத்தான் அவள் வந்திருக்கிறாள் என்று சட்டென்று தோன்றியது. இவனைக் காண வரப் போவதாகச் சொன்னால் இவன் ஏற்கமாட்டான் என்று இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறாள் என்று முடிவு செய்தான். அவள் பேச வந்தால் பேசக்கூடாது என்று நினைத்தான். அவளுடைய கதையில் போய் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக் கொண்டான். அவளை மறந்துவிடவேண்டும் என்ற தத்தளித்தான்.

அடுத்தநாள் அலுவலகம் கிளம்புவதற்கு வெளியில் வந்த போது அவள் அவன் இருப்பிடத்திற்கு நேராக நின்று கொண்டிருந்தாள். அவன் கவனிக்காமல் நடந்துபோனான். அவள் பின் தொடர்ந்துவந்தாள். அவன் வேகமாக நடந்தான். அவள் சிறிது தொலைவில் அங்கேயே நின்றுவிட்டாள். அவள் வருகிறாளா என்று பின்னால் திரும்பிப் பார்த்தான். அவள் தூரத்தில் நின்று கொண்டிருந்தாள். இவன் திரும்புவான் என்று எதிர்பார்த்திருந்தாள். இவன் திரும்பியவுடன் சிரித்தாள். இவன் விருட்டென்று தலையைத் திருப்பிக் கொண்டு வேகமாக அலுவலகம் வந்து சேர்ந்தான். அவளிடம் பேசிவிடுவது என்று நினைத்தான். அதுதான் சரியான நிலையாக இருக்கும் என்று தோன்றியது. மாலை வெளியே வந்தான். அவளைத் தேடினான். அவளை எங்கும் காணவில்லை. வீட்டுக்கு வந்தான். வீட்டருகில் அவள் நின்று கொண்டிருந்தாள். அவளை வீட்டுக்குள் அழைத்தான். 

எதற்காக இங்கு வந்திருக்கிறாள் என்று கேட்டான். அவனைக் காணத்தான் என்றாள். தான் இனி அவளுடன் வாழ விரும்பவில்லை என்றான். ஆனால் அவளால் அவனை மறக்க முடியவில்லை என்றாள். அதற்குத் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றான். அவள் தன் விருப்பத்தை ஏற்று அவனிடமிருந்து விலகிச் சென்று விடுமாறு பணிவுடன் சொன்னான். அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். பின் சட்டென்று எழுந்து வெளியே போய்விட்டாள். அவனுக்கு ஏமாற்றமாகிவிட்டது. தன் கருத்தை அவள் ஏற்கவில்லை எனப் புரிந்தது. அவளை விட்டு விலகியதில் நிம்மதியாக இருப்பதை ஏன் இப்போது குலைக்க வந்திருக்கிறாள் என்று கோபமாக வந்தது. 

மன அமைதி போனதால் அந்த நகரத்தை விட்டுக் கிளம்பி தன் ஊரை வந்தடைந்தான். அவள் இங்கு வரமாட்டாள் என்று நிம்மதியாகவும் தெம்பாகவும் இருந்தது. அம்மாவிடம் தனக்கு விருப்பமான உணவு வகைகளைச் செய்து தரச் சொல்லிவிட்டு தூங்கிப் போனான். எழுந்து பார்த்த போது அம்மா யாருடனோ பேசிக் கொண்டிருப்பது கேட்டது. யாராவது அவளுடைய தோழிகளாக இருப்பார்கள் என்று நினைத்து அங்கு போகவேண்டாம் என்று படுத்திருந்தான். ஆனால் குரல் மிகவும் அறிமுகமான ஒன்றாக இருப்பதால் பார்த்துவிட்டு வரலாம் என்று ஆவல் தோன்றியது.

முன்னறையில் அம்மா அவளுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவனுக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. இவள் ஏன் இப்படிப் பின் தொடர்கிறாள் என்று எண்ணி பெரும் கவலைக்கு உள்ளானான். நேராக அவளிடம் வந்தான். எதற்காக வந்திருக்கிறாள் என்று கேட்டான். அவனைப் பார்ப்பதற்காக வந்ததாகச் சொன்னாள். ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறாள் என்று கேட்டான். அவனுடன் வாழ்வதற்காக வரவில்லை என்றும் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமே தனக்குப் பிடித்திருக்கிறது என்றும் சொன்னாள். அந்தப் பதிலில் திருப்தி அடையாமல் மீண்டும் தன்னைப் பின் தொடரவேண்டாம் எனக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். அவள் சிரித்துக் கொண்டே வெளியே போனாள்.

அவனுக்கு அடுத்து என்ன செய்வாளோ என்று அச்சமாக இருந்தது. அம்மா சாப்பிடும் போது ஏன் அவளை அவன் வெறுக்கிறான் என்று கேட்டாள். அவள் உண்மையான பெண்ணா வெறும் கதாபாத்திரமா என்றே தனக்குத் தெரியவில்லை என்றும் அவளுடைய கதையில் வரும் கதாபாத்திரம் போல் தன்னை அவள் கையாள்கிறாள் என்றும் சொன்னான். அவனுக்கு ஏனோ மனநிலை சரியில்லை என்று எண்ணிக் கொண்டு அம்மா அமைதியாக இருந்துவிட்டாள்.

இரவு அவள் பற்றிய நினைவாகவே இருந்தது. அவள் உண்மையான பெண்ணா என்பதை எப்படி அறிவது என்ற கேள்வி எழுந்தது. அது தனக்குத் தேவையில்லாத ஆய்வு என்று நினைத்துக் கொண்டான். அப்போது அவளிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. தன்னைப் பற்றி அவன் நினைப்பது தனக்குப் புரிகிறது என்றும் தன்னை விட்டு அவனால் வாழ முடியாது என்றும் சொன்னாள். அவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டு அலைபேசியை அணைத்தான். 

வீட்டிலிருந்த குதிரையில் ஏறி மலை மீது பயணமானான். மேகங்கள் கவிந்திருந்து முகட்டிற்கு வந்து நின்றான். அந்த இடம் மிகவும் அமைதியாக இருந்தது. பின்னால் ஒரு குதிரை நடந்து வரும் ஒலி கேட்டது. அவள் வந்து கொண்டிருந்தாள். அவளை அமைதியாகப் பார்த்தான். தன்னை விட்டு அவன் எங்கும் போக முடியாது என்றாள். அவன் குதிரையில் ஏறி விரைவாக வீடு வந்து சேர்ந்தான். அம்மா யாரோ ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. அவளைப் பார்த்தவுடன் அவனுக்குப் பிடித்துவிட்டது. அவள் எதிரே அமர்ந்து பேசத் தொடங்கினான். 

சில நாட்களில் இருவரும் நெருங்கிவிட்டார்கள். அம்மா அவர்கள் திருமணம் செய்துகொள்ளச் சொன்னாள். அவனும் அதற்கு இணங்கினான். திருமணம் முடிந்து மீண்டும் பனி நிறைந்த அந்த நகரத்திற்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள். சில காலமாக அவள் தன்னைத் தொடர்வதில்லை என்று நினைத்து நிம்மதியானான். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் அவளது அறைக்குச் சென்றாள் அவள். அவன் சிறிது நேரம் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் ஊரிலிருந்த மலை மீதிருந்து குதித்து ஓர் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட செய்தி வந்தது. அது யாராக இருக்கும் என பெரும் ஆர்வம் அவனுக்குள் ஏற்பட்டது. அந்த இளம்பெண் பிரதிபா முன்னி என்ற பெயர் கொண்ட முன்னாள் மேயர் என்று செய்தி முடிந்தது. அவனுக்கு அதிர்ச்சியும் நிம்மதியும் ஒரே சமயத்தில் ஏற்பட்டன. உடனடியாக அவளது அறையில் நுழைந்தான். அவள் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்தவுடன் சிரித்தாள். அவனுக்குக் குழப்பமாக இருந்தது. அவள் எழுதியதைப் பறித்து வாசித்தான்:

’அவளிடமிருந்து தப்பி ஓட முடிவெடுத்த பிரதாபன் மறுமணம் முடிந்து கண்காணா இடத்திற்கு மனைவியை அழைத்து வந்து சேர்ந்தான். இனி அவள் பின்தொடரமாட்டாள் என்ற நம்பிக்கை அவனுக்குள் உறைந்திருந்தது. பிரதிபா முன்னி இறந்துவிட்டச் செய்தியை மனைவியுடன் பகிர்ந்து கொள்ள அவள் அறைக்குள் வந்தான். அவள் எழுதிக்கொண்டிருந்ததைப் பார்த்துக் குழப்பமானான். தன் மனைவியாக வந்திருப்பதும் அவள்தான் என்று சந்தேகம் கொண்டான். அவள் எழுதியிருப்பதை வேகமாகப் பறித்து வாசித்துப் பார்த்தான். பிரதிபா முன்னி இறந்ததைக் குறித்து அவளிடம் தான் சொல்லவந்தது அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று அச்சமும் குழப்பமும் அடைந்தான். அவனுக்குக் கண்கள் இருட்டின. கட்டிலில் படுத்து உறங்கிப் போனான்.’


AI-generated art is used in this Story.

எழுதியவர்

முபீன் சாதிகா
முபீன் சாதிகா
தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்திருக்கிறார்.

'அன்பின் ஆறாமொழி,' மற்றும் 'உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. '
உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் இவரது நேர்காணல் நூலாக வந்திருக்கிறது.
இவருடைய படைப்புலகம் பற்றிய நூலும் வெளிவந்திருக்கிறது. 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து இவர் தொகுத்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த இவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்று நூலாக வெளிவந்திருகிறது. சமீபத்தில் ‘நூறு புராணங்களின் வாசல்” என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

இவர் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பல தேசிய சர்வதேச இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உலக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவருடைய ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் இவரது கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

பல்வேறு தேசிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பெண்ணியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் கட்டுரை வாசித்திருக்கிறார். தமிழகத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக போபால், டெல்லி போன்ற இடங்களில் சாகித்ய அகாடமி நடத்திய பல்வேறு கட்டுரை வாசிப்புகளிலும் கவிதை வாசிப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

மலேஷிய கவிஞர்களுடன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழகத்திலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சாகித்ய அகாடமிக்காவும் பிற பதிப்பகங்களுக்காகவும் மொழிபெயர்க்கிறார்.

தொலைக்காட்சி சேனல்களில் தயாரிப்பாளராகவும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். செய்தி வாசிப்புக்கான பயிற்சிப் பள்ளி நடத்துகிறார்.ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளது. நூல் அட்டைப் படங்களுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

குறியியல் குறித்து இவர் மொழிபெயர்த்த நூல் விரைவில் வெளி வருகிறது. இலக்கிய வீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான ’மேலும்’ விமர்சன விருதைப் பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x