16 April 2024

1.துப்பறிதல்

அவனும் அவளும் அலைபேசியில் வந்த தவறான இணைப்பின் மூலம் பழக்கமானவர்கள். அலைபேசி வழியாகப் பேசி நட்பை வளர்த்தனர். அவன் உளவுத் துறையில் வேலைப் பார்த்து வந்தான். அவளை நேரடியாகச் சந்திக்க முடியாமல் பணிச் சுமை அதிகம் இருந்தது. இதில் ஒரு தீவிரவாத கும்பலைச் சுற்றி வளைக்கவேண்டிய பொறுப்பு அவனிடம் கொடுக்கப்பட்டது. அதற்காக அவளுடைய ஊருக்கு அவனை இடமாற்றம் செய்திருந்தார்கள். அந்த ஊருக்கு வந்திருப்பதை அவன் யாருக்கும் சொல்லக்கூடாது என்பது பணியின் விதி. அவன் யாருடனும் பேசாமல் இருந்துவிட்டான். பணியின் காரணமாக இனி சில நாள்கள் தான் பேசப் போவதில்லை என அவளிடமும் கூறிவிட்டான். அவன் அடையாளத்தை யாரும் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக அவன் ஓர் அடுக்ககத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவன் வீட்டருகில் இருக்கும் யாருடனும் அவன் பேசக்கூடாது என்பது அவனுக்கு இடப்பட்ட உத்தரவு. அவன் காலையில் வீட்டை விட்டுக் கிளம்பி இரவு வந்தான். அருகில் இருப்பவர்கள் பற்றிய தகவலை ஒரு வாரம் அவன் சேகரிக்கவில்லை. மேலும் அவன் தோற்றத்தை மாற்றிக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அவன் இதுவரை எடுத்த புகைப்படங்களில் இல்லாத வகையில் தோற்றத்தை மாற்றிக் கொண்டிருந்தான். அவன் இருந்த வீட்டருகில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை ஒரு நாள் தெரிந்துகொண்டான். அவனுடன் அலைபேசியில் பேசும் பெண்ணின் பெயரில் ஒரு பெண் அங்கு இருந்தாள். அவளுடைய முகவரி அவனுக்குச் சரியாக நினைவில் இல்லை. மற்றொரு வீட்டில் நான்கு நண்பர்கள் இருப்பதாகத் தெரிந்தது. இன்னொரு வீட்டில் இரண்டு முதிய தம்பதிகள் இருந்தார்கள். மற்றபடி அந்த அடுக்ககத்தில் இருக்கும் பிறரின் குறிப்புகளைப் பார்த்தான். சந்தேகப்படும்படி வேறு யாரும் இருப்பது போல் அவனுக்குப்படவில்லை. இத்தனைப் பெரிய ஊரில் அந்தத் தீவிரவாத கும்பலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று அவனுக்கு மலைப்பாக இருந்தது. அந்த அடுக்ககத்தில் உள்ள புகைப்படக் கருவியில் பதிவான காணொலிகளைப் பார்த்தான். அவளைப் போலவே ஒரு பெண் இருப்பதைக் கண்டான். ஆனால் அவள்தானா என்பதை அவனால் உறுதிப்படுத்த முடியவில்லை. அவள் இருக்கும்  வீடு வேறோருவரின் பெயரில் இருந்தது. அதிகமாக யார் பற்றியும் விசாரிக்கக்கூடாது என அமைதியாக இருந்தான். அந்தக் காணொலியில் அந்தப் பெண் அந்த நான்கு நண்பர்கள் இருக்கும் வீட்டுக்குச் சென்று வெளியில் நின்று கொண்டே உணவு கொடுப்பதையும் பின் தன் வீட்டுக்குச் சென்றுவிடுவதையும் கண்டான். அந்தப் பெண் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுள் அதிகரித்தது. தன் பணிக்கு இந்த ஆவல் ஆகாது என்று தெரிந்தும் அதை அவனால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு நாள் அடுக்ககத்திற்கு வெளியே காத்திருந்தான். அவள் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டாள். அவளைப் பின் தொடர்ந்தான். அவள் அறியாமல் அவளைப் பின் தொடர்ந்து சென்றான். அவள் ஒரு வளைவில் சட்டென்று திரும்பி மறைந்துவிட்டாள். அவன் அந்தத் தெருவைச் சுற்றிப் பார்த்தான். அவள் வந்த வாகனம் தெருவின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அவள் அந்தத் தெருவில் ஏதோ ஓர் இடத்திற்கு வந்திருப்பது புரிந்து அந்த வாகனம் அருகே வந்து நின்றுகொண்டான். வெகு நேரம் அவள் வரவில்லை. பிறகு அவள் தூரத்தில் வேகமாக வருவதைப் பார்த்து சிறிது தொலைவு சென்று நின்றுகொண்டான். அவள் வாகனத்திற்கு வந்தவுடன் யாரோ அவளை அலைபேசியில் தொடர்புகொண்டார்கள். அவள் பேசுவதை உன்னிப்பாகக் கேட்டான். அவள் தன் தோழியிடம் பேசிக் கொண்டிருந்தாள். தன் வீட்டருகில் இருக்கும் நான்கு நண்பர்கள் தீவிரவாதிகள் என்று தான் தெரிந்துகொண்டதாகவும் அதை அவர்கள் புரிந்துகொண்டதால் தன் வீட்டுக்குச் செல்ல முடியாது எனவும் அவள் வீட்டுக்கு வர அனுமதிக்குமாறும் கூறிவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். அவன் நேராக அடுக்ககம் வந்தான். அந்த நான்கு பேரையும் கைது செய்தான். உடனடியாக ஊருக்குச் சென்று வழக்கம் போல் அவளுடன் பேசத் தொடங்கினான்.


2.சதுரங்கம்

அந்த நாட்டின் மன்னனுக்குச் சதுரங்கம் ஆடுவதில் அலாதிப் பிரியம். அவனுடைய சதுரங்க மேஜை ஒரு பெரிய அறையின் தரையில் இரும்புக் கட்டங்களால் ஆனது. அதன் மீது வைக்கப்படும் காய்கள் மிகப்பெரிய காந்தங்களால் ஆனவை. அவற்றை நகர்த்த அந்தத் தரைக்கு அடியில் சிறையில் இருக்கும் கைதிகள் மிகப்பெரிய காந்தங்களைத் தலையில் சுமந்து மேலே இருக்கும் காவலர்கள் சொல்படி நகரவேண்டும். மன்னன் காயை நகர்த்தும் போது காவலர்கள் கட்டளையிடுவார்கள். அப்போது தலையில் உள்ள காந்தத்தின் விசையால் அந்தத் தரை மீதிருக்கும் காந்தக்காயை நகர்த்த வேண்டும். சிறைக் கைதிகளைச் சித்திரவதைச் செய்ய இந்த உத்தி மன்னனுக்கு உகந்ததாக இருந்தது. பிரம்மாண்ட விளையாட்டை விளையாடும் போது கூடவே சிறைக் கைதிகளை வாட்டுவது அவனுக்குப் பெரிதும் உவப்பளிக்கக்கூடியதாக இருந்தது. அதனால்தான் அந்த மன்னனுக்குச் சதுரங்கத்தின் மீது ஏக ஆசை இருந்தது. தன் இளவரசனையும் அதே போல் விளையாடக் கற்றுக் கொடுத்தான். அவன் வேகமாக விளையாட விரும்புவான். அவன் வேகத்திற்குக் கீழே இருக்கும் கைதிகள் ஈடு கொடுக்காவிட்டால் சூடு மழை அவர்கள் உடலில் பொழியும். சிறைக் கைதிகள் சிலர் இதனால் இறந்தும் போயிருக்கிறார்கள். அது குறித்து மன்னனோ இளவரசனோ கண்டுகொண்டதில்லை. இளவரசனுக்கு அண்டை நாட்டு இளவரசியை மணமுடிக்க மன்னன் நினைத்தான். அவளும் நல்ல சதுரங்க ஆட்டக்காரி. இளவரசனுடன் விளையாட மன்னன் அவளை அழைத்தான். அவளுக்குச் சிறைக் கைதிகளை வைத்து காய்களை நகர்த்தி அவர்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்குவது தெரிந்திருந்தது. அவளை மணமுடிக்காவிட்டால் எதிரி நாட்டு அரசனின் பெரும் படையிடம் சரணடைய வேண்டியிருக்கும் என்பதால் மன்னன் இளவரசனின் திருமணத்தில் தீவிரமாக இருந்தான். அவள் திருமணம் புரிந்துகொள்ள ஒரே ஒரு கோரிக்கை வைத்தாள். தன்னுடன் விளையாடும் இளவரசன் தோற்றால் திருமணம் இல்லை. ஆனால் காய்களைத் தரைக்கு அடியில் மன்னன் நகர்த்தவேண்டும் என்று சொன்னாள். அதை ஏற்ற மன்னன் தூக்க முடியாத அந்தக் காந்தங்களைத் தூக்கிக் கொண்டு இளவரசனின் வேகமான நகர்த்தலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடினான். சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் சூடு வைக்கும் தண்டனையைப் பெற்று குற்றுயிரும் குலையுயிருமாகி இறந்து போனான். இளவரசன் அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தான். நாட்டையும் இழந்தான்.


3.சங்கேதம்

நீர் மூழ்கிக் கப்பலில் அவள் அந்தக் குளத்தில் பயணமானாள். அந்தப் படகு தண்ணீரைப் போல் நிறமில்லாமல் இருந்ததால் அந்தக் குளத்திலிருந்த மற்ற உயிரினங்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை. அவள் பாதாள லோகத்தை அடைந்தாள். அங்கிருந்தவர்கள் அவளை வரவேற்று அழைத்துச் சென்றார்கள். அந்தக் கிரகத்தைப் பல அரிய அபாயங்களிலிருந்து காக்கும் குழுவைச் சேர்ந்தவள் அவள் என்பதால் அவளிடம் ஒரு ரகசியக் குறிப்பை அவர்கள் அளித்தனர். அவள் குழுவில் இருப்பவர்கள் அதனை அறிந்து அந்த வழிகாட்டுதல் படி செயல்பட்டால் அந்தக் கிரகத்திற்கு வரக்கூடிய சிக்கல்களை எதிர்கொள்ளவும் மீளவும் வழி பிறக்கும் எனச் சொல்லிக் கொடுத்தனர். அதை எடுத்துக்கொண்டு வந்த வழியே திரும்பினாள். அவளுடைய குழுவிடம் அதைக் கொடுப்பதற்கு முன் அது என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினாள். அதில் இருக்கும் எழுத்துகளையும் வடிவங்களையும் கோர்த்தாள். சில அம்சங்கள் புரிவது போல்இருந்தது. சில புரியவில்லை. அதில் இருந்த வாசகத்தை எழுத முயற்சித்தாள். 

+O  ⮙🡩⭍ ◉ ⯋ 🡳… ♒ % ( ) என்று அதில் எழுதப்பட்டிருந்தது. 

+ என்பது நான்கு திசை. O என்பது கிரகம். என்பது புலனாகுதல். இது மலையாக இருக்கலாம். 🡩 இது அதன் உச்சி. இது மின்னல். இது என்னவென்று அவளுக்குப் புரியவில்லை. இது குழி அல்லது பள்ளத்தாக்கு. 🡳 இது அதன் மையம். … இது ஏதோ ஒரு சக்தியைக் குறிக்கலாம். இது நீர் நிலையாக இருக்கலாம். நீர் நிலையிலும் அந்தச் சக்தி இருப்பது போல் தெரிகிறது. % இது நூறு சதவீதமாக இருக்கும். ( ) இது பாதுகாப்பு என்பதைக் குறிக்கலாம். அந்தக் குறியீட்டு வாசகத்தைத் தன் குழுவுக்குக் கொண்டு போய்க் காட்டினாள். புரியாத இந்தக் குறி நிலத்தைக் குறிப்பதாகச் சொன்னார்கள். இந்தக் கிரகத்தைக் காக்க அதன் மையத்தில் இருக்கும் மலை மீது மின்னல் மின்னும் போது உருவாகும் விசையை ஈர்த்து நிலத்திற்குள் செலுத்தினால் அது பரவி நீருக்குள் சென்று இந்தக் கிரகத்தைப் பாதுகாக்கும் என்பதுதான் இந்தக் குறியீடுகளின் பொருள் எனப் புரிந்துகொண்டார்கள். ஆனால் அந்த விசையை ஈர்ப்பது எப்படி என்பது அவர்களுக்குப் புரியவில்லை. இந்தச் சின்னம் இரும்பு அல்லது செம்புக் கலனாக இருக்கலாம் என நினைத்தார்கள். உடனடியாக அந்தக் கிரகத்தின் மையத்திலிருந்த மலையின் உச்சிக்குப் பெரிய செம்புக் கலன்களைக் கொண்டு சென்று வைத்துவிட்டு வந்தார்கள். இரவு மின்னலுடன் மழை பொழிந்து நின்றது. அந்தக் கலன்களை எடுத்து வந்து அந்தக் கிரகத்தின் மையத்தில் புதைத்தார்கள். இது போல் நான்கு நாள்கள் செய்தார்கள். அந்தக் கிரகத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்த விண்கல் திசை மாறிச் சென்றது. அந்தக் கிரகத்தைப் பிடிக்க வந்த வேற்றுக்கிரகவாசிகள் திரும்பிச் சென்றார்கள்.


4.திருமணம்

அவள் சிறுவயதிலிருந்தே டென்னிஸ் விளையாடக் கற்றுக் கொண்டாள். அவளுக்குக் கற்றுக் கொடுத்த குரு அவள் ஆண்கள் விளையாடுவது போல் விளையாடுகிறாள் என்று கூறுவார். அவளுக்கு உலக அளவில் டென்னிஸ் விளையாட விருப்பம் இருந்ததால் வெளி நாட்டுக்குச் சென்று டென்னிஸ் பயிற்சி மேற்கொண்டாள். இளம் வயதிலேயே மிகவும் தேர்ச்சி பெற்ற டென்னிஸ்  வீராங்கனை ஆகிவிட்டாள். பெரிய க்ராண்ட் ஸ்லாம் போட்டியில் நுழைந்தாள். மூத்த டென்னிஸ் ஆட்டக்காரர்களே அவளுடன் விளையாடத் திணறினர். அப்போது ஒரு பெண், முதல் நிலை ஆட்டக்காரராக இருந்தார். அவருடன் அந்த க்ராண்ட் ஸ்லாம் போட்டியின் நான்காவது சுற்றில் விளையாடும் படி இருந்தது. அதில் கடுமையான போராட்டம் நடந்தது. இருவரும் விட்டுக் கொடுக்காமல் விளையாடினார்கள். அந்தப் பெண் தோல்வி அடைந்தார். அவரால் நம்பவே முடியவில்லை. ஓர் இளம் பெண் தன்னைத் தோற்கடிக்கக்கூடிய திறமை பெற்றவராக எப்படி வந்தார் என மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்தார். அவள் விளையாடிய காணொலியைத் திரும்பத் திரும்பப் பார்த்தார். அதில் ஏதோ ஒரு சந்தேகம் அவருக்குத் தோன்றியது. அவள் பெண்ணா என்பதைச் சோதிக்கவேண்டும் எனப் புகார் கொடுத்துவிட்டார். அவளிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் அவள் திருநங்கை என்பது தெரியவந்தது. திருநங்கையிடம் தோற்றதை ஏற்க முடியாது என அந்தப் பெண் டென்னிஸ் வீராங்கனை வழக்குத் தொடுத்தார். திருநங்கை பெண் மட்டும் அல்ல. அவர்களுக்குள் ஆணின் சக்தியும் இருக்கும், அதனால் அவர்கள் பெண்களுடன் விளையாடுவதை ஏற்க முடியாது. அவள் ஏமாற்றி பெண்களுடனான போட்டியில் கலந்துகொண்டுவிட்டாள் என அந்த வீராங்கனைத் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. திருநங்கை என்பதை முன்பே சொல்லவில்லை என்பது குற்றம் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. மேலும் திருநங்கைகளுக்கு என்று தனியாகப் போட்டி நடத்தவேண்டும் எனவும் ஆண்களுடன் அவர்களால் விளையாடி வெல்ல முடியாது, ஆனால் பெண்களுடன் அவர்களால் வெல்ல முடியும் என்பதால் அது சமநிலையான போட்டியாக இருக்காது எனவும் நீதிமன்றம் சொல்லிவிட்டது. அவள் செய்த குற்றத்திற்காக அந்த நாட்டு சட்டப்படி ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவளை வந்து சந்தித்த அவளுடைய தோழன் அவள் சிறைத் தண்டனை முடிந்து வெளியே வந்தவுடன் திருமணம் செய்துகொள்ளலாம் என்றான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளுக்கு நேர்ந்த அவமானத்தை அவனுடைய சொல் துடைத்துவிட்டது என்பது போல் எண்ணினாள். அவனுடைய மனப்பக்குவத்தை நினைத்து ஆறுதலாக உணர்ந்தாள்.


 

எழுதியவர்

முபீன் சாதிகா
முபீன் சாதிகா
தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்திருக்கிறார்.

'அன்பின் ஆறாமொழி,' மற்றும் 'உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. '
உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் இவரது நேர்காணல் நூலாக வந்திருக்கிறது.
இவருடைய படைப்புலகம் பற்றிய நூலும் வெளிவந்திருக்கிறது. 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து இவர் தொகுத்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த இவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்று நூலாக வெளிவந்திருகிறது. சமீபத்தில் ‘நூறு புராணங்களின் வாசல்” என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

இவர் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பல தேசிய சர்வதேச இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உலக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவருடைய ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் இவரது கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

பல்வேறு தேசிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பெண்ணியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் கட்டுரை வாசித்திருக்கிறார். தமிழகத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக போபால், டெல்லி போன்ற இடங்களில் சாகித்ய அகாடமி நடத்திய பல்வேறு கட்டுரை வாசிப்புகளிலும் கவிதை வாசிப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

மலேஷிய கவிஞர்களுடன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழகத்திலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சாகித்ய அகாடமிக்காவும் பிற பதிப்பகங்களுக்காகவும் மொழிபெயர்க்கிறார்.

தொலைக்காட்சி சேனல்களில் தயாரிப்பாளராகவும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். செய்தி வாசிப்புக்கான பயிற்சிப் பள்ளி நடத்துகிறார்.ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளது. நூல் அட்டைப் படங்களுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

குறியியல் குறித்து இவர் மொழிபெயர்த்த நூல் விரைவில் வெளி வருகிறது. இலக்கிய வீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான ’மேலும்’ விமர்சன விருதைப் பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x