24 February 2025 2:28:56 PM
Mubeen KS 25

மோகனுக்கு வித்யாவின் பிறந்தநாளுக்கு ஏதாவது புதிய பரிசு கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. அவளைக் காதலிக்கத் தொடங்கியது முதல் அவள் நினைத்துப் பார்க்காத பரிசைக் கொடுத்து அசத்த வேண்டும் என எண்ணியிருக்கிறான். அவளுக்கு மாய வித்தைகளைப் பார்ப்பதில் பெரும் ஆர்வம் இருக்கிறது என்று அவன் நன்கு அறிவான். அவர்கள் இருந்த ஊருக்கு அந்த வாரம் வெளிநாட்டிலிருந்து ஒரு மாய வித்தை நிபுணர் வருவதாக விளம்பரம் வந்திருந்தது. வித்யாவின் பிறந்தநாளன்றும் மாலையில் அவர் ஒரு காட்சியை நடத்த இருக்கிறார் என்று தெரிந்தது. உடனடியாக மோகன் அதற்கு இரு நுழைவுச் சீட்டுகளை வாங்கிவிட்டான். மிக விலை உயர்ந்த நுழைவுச் சீட்டுகள் என்றாலும் வித்யாவின் பிறந்தநாளுக்கு எது வேண்டுமானாலும் பரிசாகத் தருவதற்கு மோகன் ஆயத்தமாக இருந்தான். 

வித்யாவை அவன் காதலிக்கத் தொடங்கியதே இது போன்ற ஒரு மாய வித்தைக் காட்சியில்தான். அந்த மாய வித்தை நடத்துபவர் ஓர் இளம் பெண்ணை மேடைக்கு வரும் படி அழைத்தவுடன் வித்யா எழுந்து சென்றாள். அவளை ஒரு பூனையாக மாற்றி அதன் பின் ஒரு பூனையாகவும் எலியாகவும் மாற்றி அதன் பின் அவை இரண்டையும் கார்ட்டூன்களாக மாற்றி அதன் பின் அவற்றை ஒரு கவிதையில் வரும் பூனை, எலி பாத்திரங்களாக மாற்றி மீண்டும் அவளைத் தன் சுயரூபத்துக்குத் திரும்பி வரும்படி செய்து காட்டினார் மாய வித்தைக்காரர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மோகனுக்குப் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வித்யா மேடை ஏறியவுடனேயே அவளை அவனுக்குப் பிடித்துவிட்டது. மாய வித்தைக்காரர் அவளை இப்படி பலவாறாக மாற்றிக் காட்டியது அவனுக்குள் கோபத்தைக் ஏற்படுத்தியிருந்தது. அவள் மீண்டும் தன் சுய ரூபத்தை அடையும் வரை அவனுக்குத் திக்திக்கென்றிருந்தது. அவளை நேரடியாகப் பார்த்துப் பேசவேண்டும் என முடிவெடுத்தான். காட்சி முடியும் வரை காத்திருந்து அவள் வெளியே வரும் போது பேசலாம் என நினைத்துக் கொண்டு அவளைப் பின்தொடர்ந்தான். அவள் அந்த மாய வித்தை நிபுணரைப் பார்க்கச் சென்றுவிட்டாள். அவரிடம் அவள் கையெழுத்தை வாங்கிக் கொண்டு அவரைப் பாராட்டிப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து மோகனுக்கு ஆற்றாமையாக இருந்தது. ஒரு வழியாக அவள் புறப்பட்டாள். உடனடியாக அவளிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

‘இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப துணிச்சல்ங்க,’ என்று எடுத்த எடுப்பிலேயே சொன்னான்.

அவள் சிரித்தாள்.

‘எதுக்குங்க இப்படி ரிஸ்க் எடுக்கறீங்க?’

‘அது எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனாலதான்,’ என்றாள்.

‘உங்க பேரு என்னங்க?

’வித்யா.’

’நான் மோகன்,’ என்று கூறி தன் விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தான்.

அவள் அதைத் தன் கைப்பையில் வைத்துக் கொண்டாள். 

’நீங்க எப்படிப் போறீங்க?’ என்றான்.

‘நான் ஆட்டோ இல்லைன்னா டாக்ஸி பிடிக்கணும்.’

‘இல்லை வாங்க நான் உங்களைக் கொண்டு போய் விட்டுடறேன்.’

அவள் உடன் நடந்தாள். அவனுக்கு அதுவே மிகவும் பெருமையாக இருந்தது. 

அந்தக் காட்சிக்கு வந்திருந்தவர்கள் அவர்கள் இருவரையும் பார்த்து லேசாகப் புன்னகைத்தார்கள்.  

அவளைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு அவள் இடத்தை நோக்கிப் பறந்தான் மோகன். 

‘நீங்க வேல செய்யறீங்களா?’

‘ஆமா. ஐடி கம்பெனில.’

‘நானும். நீங்க என் விசிட்டிங் கார்டைப் பார்த்திருப்பீங்க.’

‘ம்.’

‘எனக்குன்னு சொந்தம் யாருமில்ல. ஒரு பெரிய வளாகத்துல மூன்று படுக்கை அறை உள்ள வீடு சொந்தமா இருக்குது. நகரத்துக்கு வெளியே ஒரு பண்ணை வீடு இருக்குது.’

‘நான் உங்க சொத்துப் பட்டியல கேக்கலையே.’

‘இல்ல எனக்கு என்னைப் பத்திச் சொல்லத் தோணுச்சு.’ என்று சொல்லிவிட்டு அவளுடைய காட்டமான பதிலை நினைத்து நொந்து போனான். இருந்தாலும் முயற்சியைக் கைவிடக் கூடாது என்று எண்ணினான்.

‘நீங்க தனியாவா இருக்கீங்க?’

‘ஆமா.’

அதற்குள் அவள் இருக்கும் இடம் வந்துவிட்டது. அவள் இறங்கிக் கொண்டாள்.

‘உங்க வீட்டுக்குக் கூப்பிட மாட்டீங்களா?

‘நான் என்கூட வேலை செய்யறவங்களோட இருக்கேன். அதனால நாங்க யாரையும் கூப்பிடறதில்ல.’

‘என் நம்பருக்கு எப்பவேணும்னாலும் கால் பண்ணுங்க. உங்க நம்பரையாவது கொடுங்க.’

தந்தாள். நேராக வீடு வந்து சேர்ந்தான். வித்யா ஏன் தன்னிடம் நெருக்கமாகவே பழகவில்லை என்று நினைத்து குமைந்தான். அவளிடம் பேசவேண்டும் என்றே தோன்றியது. அடுத்த நாள் வரைக் காத்திருக்கலாம் என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.

காலையில் எழுந்து அலுவலகம் கிளம்பவே சரியாக இருந்தது. அலுவலகம் வந்து வேலையில் மூழ்கிய பின் சிறிது அவகாசம் கிடைத்த போதுதான் மீண்டும் வித்யாவின் நினைவு எட்டிப் பார்த்தது. அவளிடம் பேசலாம் என்று நினைத்தான்.

அவளுடைய அலைபேசிக்குத் தொடர்பு கொண்டான். எடுத்தாள்.

‘எப்படி இருக்கீங்க?’

‘நல்லா இருக்கேன்.’

‘இன்னைக்கு ஏதாவது வெளியில போற நிகழ்ச்சி இருக்கா?’

‘இல்லை.’

‘அடுத்த வாரம் ஒரு சபால வெளிநாட்டிலருந்து ஒருத்தர் இசைக் கச்சேரி பண்றாரு. அதுக்கு வர்ரீங்களா?’

‘சரி.’

‘ரொம்ப தேங்ஸ்.’

அடுத்த வாரம் அவள் இடத்திற்கே சென்று அவளை அழைத்துக் கொண்டு அந்த இசைக் கச்சேரிக்குப் போனார்கள். எல்லோரும் அவர்கள் இருவரையும் பார்த்தார்கள். அவர்களுக்கும் அது புரிந்தது. இடைவேளையில் அவளை அழைத்துக் கொண்டு தேநீர் குடிக்கப் போனான். அவளிடம் நேரடியாகச் சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தான்.

‘என்னங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’

அவள் அமைதியாக அவனைப் பார்த்தாள்.

’எனக்கு ஒரு வாரம் யோசிக்க நேரம் கொடுங்க,’ என்றாள்.

அவனுக்கு அதுவே பெரிய சாதனையாக இருந்தது. 

ஒரு வாரம் கழிந்தது. அவள் இசைவு தெரிவித்தாள். அவனுக்கு வானத்தில் மிதப்பது போல் இருந்தது.

இருவரும் பல இடங்களுக்கும் போய் ஊர் சுற்றினார்கள். பல திரைப்படங்களுக்கும் போனார்கள். இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டைகளும் வந்தன. ஆனாலும் இணக்கமானார்கள்.

அப்படியே சில மாதங்கள் ஓடிவிட்டன. அவளுடைய பிறந்தநாள் வரவிருப்பது தெரிந்தது. அவள் விரும்பும் பரிசுப் பொருள் ஒன்றைப் பற்றி தீவிரமாக யோசித்துப் பார்த்தான். அப்போதுதான் அந்த மாய வித்தை நிபுணரின் காட்சிகள் குறித்த விளம்பரத்தைப் பார்த்தான். வித்யாவுடன் பேசினான். அவளை அழைத்தான். அவள் வந்தவுடன் அவன் கொடுக்கவிருக்கும் பரிசை ஊகிக்கச் சொன்னான். அவள் எத்தனையோ பரிசுப் பொருள்களைச் சொன்னாலும் அவன் கொடுக்கவிருந்த பரிசைக் குறித்து ஊகிக்க முடியவில்லை. அவள் பிடிவாதமாக அதைப் பற்றி அப்போதே அவன் சொல்லியாகவேண்டும் என்று அடம்பிடித்தாள். அவனும் அவளிடம் சிறிது போக்குக் காட்டிவிட்டு அவள் பிறந்தநாளன்று மாய வித்தை காட்சிக்குப் போகவிருப்பதைச் சொன்னான். அவள் குதூகலித்தாள். அவனுக்கு அவள் விரும்பும் பொருள் எதுவாக இருக்கும் என்று நினைத்து இப்படி ஒரு பரிசைக் கொடுத்திருப்பதை நினைத்து அவளுக்குப் பெருமையாக இருந்தது. 

பிறந்தநாளன்று அவன் வாங்கித் தந்த கறுப்பு நிற உடையை உடுத்திக் கொண்டு வித்யா அந்த மாய வித்தை காட்சிக்குப் புறப்பட்டாள். அவர்கள் இருவரும் அணிந்திருந்த உடையும் அவர்களின் நெருக்கமும் மிகவும் அதிசயமாக அங்கிருந்தவர்கள் பார்த்தார்கள். அந்த மாய வித்தை காட்சி தொடங்கியது. சில வித்தைகள் மிகவும் அற்புதமாக இருந்தன. இடைவேளை வந்தது. அவளை அழைத்துக் கொண்டு தேநீர் அருந்தப் போனான். 

‘வித்யா நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா?’

‘ஓ. சரி. எப்போ?

‘ம். சீக்கிரம். அதற்கு முன்னாடி ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.’

’என்னது?
‘அதைச் சொல்லமாட்டேன்.’

‘சொல்லாட்டி உங்களோட பேசவே மாட்டேன்.’

‘அட என்ன இப்படி பிடிவாதம் பிடிக்கற.’

‘அது என்னதுன்னு இப்பவே எனக்குத் தெரிஞ்சாகணும்.’

’எனக்கு ஆஸ்டிரேலியாவுல இருக்கற என் கம்பெனி கிளைய பாத்துக்கச் சொல்லி அங்க அனுப்பறாங்க. அங்க மூணு வருஷத்துக்கு மேல இருக்கணும். அதனால நாம கல்யாணம் பண்ணிகிட்டு அங்கப் போயிடலாம்.’

‘ஓ எனக்கு ஆஸ்டிரேலியா ரொம்பப் பிடிச்ச இடம்தான். போலாம்.’ 

மாய வித்தையின் அடுத்த காட்சியைக் காணச் சென்றார்கள். கறுப்பு உடை அணிந்த இளம்பெண் ஒருவர் மேடைக்கு வர அந்த நிபுணர் அழைத்தார். வித்யா எழுந்தாள். மோகன் வேண்டாம் என்ற அவள் கையை இழுத்தான். அவள் அதை உதறிவிட்டு மேடைக்குப் போய்விட்டாள். மோகனுக்குப் பதற்றம் தொற்றிக் கொண்டது. 

மாய வித்தை நிபுணர் வித்யாவை ஒரு வெள்ளை நாற்காலியில் அமர வைத்தார். அவள் வாழ்க்கையில் அடுத்த சில நாட்களில் நடக்கவிருப்பதை இப்போது காட்சியாகக் காணலாம் என்றார். மோகனுக்கு இது பெரும் தலைவலியாக இருந்தது. 

காட்சி தொடங்கியது. வித்யா மோகனை மணந்து கொண்டு ஆஸ்டிரேலியாவுக்குச் செல்கிறாள். இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். வித்யா அங்குச் சட்டென்று ஓர் இளைஞனைச் சந்திக்கிறாள். அவளுக்கு அவன் மீது பெரும் நாட்டம் ஏற்பட்டுவிடுகிறது. அவள் மணமுறிவை நாடுகிறாள். அந்த இளைஞனுடன் சென்றுவிடுகிறாள். மணமுடைந்த அவள் கணவன் மோகன் ஆஸ்டிரேலியாவிலிருந்து திரும்பிவிடுகிறான். வித்யா அந்த இளைஞனுடன் சில நாட்கள் இருந்துவிட்டு ஒரு வயதானவரைத் திருமணம் செய்து கொள்கிறாள். அவர் விரைவில் இறந்து போவதால் அவளுக்கு அவருடைய அத்தனைச் சொத்துகளும் வந்து சேர்கின்றன. அவருடைய பெரிய தொழில் சாம்ராஜ்யத்திற்கு அதிபதி ஆகிறாள். பல நாடுகளுக்கும் செல்கிறாள். இந்தியாவில் அவளுடைய நிறுவனம் அவளுடைய முன்னாள் கணவன் வேலை செய்து கொண்டிருக்கும் நிறுவனத்தை வாங்கிவிடுகிறது. அதற்காக இந்தியாவுக்கு வந்து அந்த நிறுவன வேலைகளைப் பார்க்கிறாள். அங்கிருந்த தன் பழைய கணவனைச் சந்தித்து உற்சாகமாக உரையாடுகிறாள். அவன் நொறுங்கிப் போயிருப்பதை அவள் புரிந்து கொள்ளவே இல்லை. அவன் அவளிடம் தன் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறான். அவள் அதைப் பொருட்படுத்தாமல் வேறொரு நபரை அந்தப் பதவிக்கு நியமிக்கிறாள். அவன் ஆஸ்டிரேலியாவில் அவள் கைவிட்ட அந்த இளைஞன். அவனிடமும் உற்சாகமாகப் பேசிவிட்டு அவள் வேறு பல வேலைகளைப் பார்க்கப் போகிறாள். அவனும் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடுகிறான். ஆண்களால் பெண்களை ஏற்க முடிவதில்லை என்று எண்ணி அதையும் உதாசினப்படுத்திவிடுகிறாள். வேறு நாட்டில் அவளுடைய நிறுவனத்தைப் பார்க்கக் கிளம்பிச் செல்கிறாள். அங்கு ஒரு நடிகனைச் சந்திக்கிறாள். அவனிடம் மயங்குகிறாள். அவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். அவன் பல பெண்களிடம் உறவில் உள்ளவன் என்பது பிறகுதான் அவளுக்குத் தெரிய வருகிறது. அது அவளுக்கு உறுத்துகிறது. அதனால் அவனை விட்டு விலகுகிறாள். அவனுக்காக ஏராளமான செல்வத்தைச் செலவழித்தை எண்ணி நொந்து போகிறாள். அவளால் தன் துயரத்திலிருந்து விடுபட முடியாமல் இருக்கிறது. வேறு நாட்டுக்குச் செல்கிறாள். அங்கு ஒரு நூலகத்தில் சென்று அமர்ந்து சற்று ஆசுவாசம் அடைய எண்ணுகிறாள். அவள் ஒரு நூலை எடுத்துப் புரட்டுகிறாள். அதில் அவள் ஒரு மாய வித்தை நிபுணரால் பூனையாகவும் எலியாகவும் மாற்றப்பட்ட இலக்கியம் இருக்கிறது. அது அவளை ஆர்வப்படுத்துகிறது. மாய வித்தை கற்று ஒரு புதிய ஆணைப் படைத்து அவனுடன் வாழ்ந்தால் என்ன என்று நினைக்கிறாள். பல மாய வித்தை நூல்களை வாசிக்கிறாள். அதில் ஒரு நூல் மிகவும் நுட்பமான பல தகவல்களைச் சொல்கிறது. அது அவளைப் பெரிதும் ஈடுபாடு கொள்ள வைக்கிறது. அந்த நூலில் சொன்னபடி தன் வாழ்வை மாற்றிக் கொள்ள பாடுபடுகிறாள். ஒரு தேர்ந்த மாய வித்தை நிபுணராகிறாள். தனக்கு விருப்பமான ஆண்கள், பெண்கள் எல்லோருடைய வாழ்வையும் அவளுடைய மாய வித்தையைக் கொண்டு மாற்றி அமைக்கிறாள். சில கணவர்கள் மனைவிகளைப் பிரிகிறார்கள். சில மனைவிமார்கள் புதிய கணவர்களைத் தேடிச் செல்கிறார்கள். அது எப்படி நடந்தது என்று புரியாமல் அவர்கள் இயல்பாக இருக்கிறார்கள். அது அவளுக்குப் பெரும் உற்சாகத்தைத் தருகிறது. தொடர்ந்து இந்த மாய வித்தை விளையாட்டில் மட்டுமே அவள் ஈடுபடுவது என்று முடிவு செய்கிறாள். அப்படி ஒரு மாய வித்தை விளையாட்டில் தன் வாழ்வையும் ஒரு மாய வித்தை நிபுணர் மாற்றிவிட்டதைக் கண்டு கோபமுற்று அந்தக் காட்சியிலிருந்து வெளியேறுகிறாள். அத்துடன் காட்சி முடிந்தது. 

மோகனுக்குத் தலை சுற்றியது. வித்யாவுக்கு நடந்தவை அனைத்தும் உண்மை போல் அவனுக்குள் தோன்றியது. வித்யாவுக்குள் இத்தனை ஆசைகளும் ஏக்கங்களும் உள்ளன என்றால் அவளுடன் வாழ்வது தனக்கு நிம்மதியைத் தராது என்று முடிவெடுத்தான். அந்தக் காட்சி மிகவும் அற்புதமாக இருந்ததாக எல்லோரும் எழுந்து நின்று நிபுணரைப் பாராட்டினார்கள். வித்யாவும் மிகவும் மகிழ்ச்சியுடன் மோகனைத் தேடி ஓடி வந்தாள். அவன் வெளியே அமைதியாக நின்றிருந்தான்.

‘என்ன எப்படி இருந்துச்சு?’ என்றாள்.

அவன் அமைதியாக இருந்தான். 

‘பிடிக்கலையா?’

அவன் தலையாட்டினான்.

அவர்கள் இருவரும் நடந்தார்கள். அவளை ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றான். 

‘வித்யா என்னை மன்னிச்சிரு.’

‘என்னாச்சு?’

‘என்னால உன் கூட வாழ முடியாது.’

‘ஏன்?’

’அந்த மாய வித்தைக் காட்சி உன் வாழ்க்கைல நடக்கப் போறதைக் காட்டினது போல உண்மையா நடக்காதுன்னு என்னால நம்ப முடியல.’

‘அட அதெல்லாம் பொய்.’

‘இல்லை நீ அதுல மூழ்கி இருந்தப்போ அது பொய்யாத் தெரியல.’

’அதனால என்ன செய்ய உத்தேசம்?’

‘நாம பிரிஞ்சிடலாம். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ’

அவள் உடைந்து போனாள். அமைதியாக அமர்ந்திருந்தாள். பின் எழுந்து நடந்து போய்விட்டாள்.


 

எழுதியவர்

முபீன் சாதிகா
முபீன் சாதிகா
தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்திருக்கிறார்.

'அன்பின் ஆறாமொழி,' மற்றும் 'உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. '
உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் இவரது நேர்காணல் நூலாக வந்திருக்கிறது.
இவருடைய படைப்புலகம் பற்றிய நூலும் வெளிவந்திருக்கிறது. 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து இவர் தொகுத்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த இவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்று நூலாக வெளிவந்திருகிறது. சமீபத்தில் ‘நூறு புராணங்களின் வாசல்” என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

இவர் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பல தேசிய சர்வதேச இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உலக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவருடைய ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் இவரது கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

பல்வேறு தேசிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பெண்ணியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் கட்டுரை வாசித்திருக்கிறார். தமிழகத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக போபால், டெல்லி போன்ற இடங்களில் சாகித்ய அகாடமி நடத்திய பல்வேறு கட்டுரை வாசிப்புகளிலும் கவிதை வாசிப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

மலேஷிய கவிஞர்களுடன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழகத்திலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சாகித்ய அகாடமிக்காவும் பிற பதிப்பகங்களுக்காகவும் மொழிபெயர்க்கிறார்.

தொலைக்காட்சி சேனல்களில் தயாரிப்பாளராகவும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். செய்தி வாசிப்புக்கான பயிற்சிப் பள்ளி நடத்துகிறார்.ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளது. நூல் அட்டைப் படங்களுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

குறியியல் குறித்து இவர் மொழிபெயர்த்த நூல் விரைவில் வெளி வருகிறது. இலக்கிய வீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான ’மேலும்’ விமர்சன விருதைப் பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest


0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x